Digital Library
Home Books
பன்னிரு திருமுறைகள் (Panniru Thirumuraigal) are the twelve sacred books of Tamil Shaivism, which are considered the canonical scriptures of the Shaiva Siddhanta tradition. These texts were composed by various Nayanars (Shaiva saints) and are revered for their devotional and philosophical content.
சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. சைவ சமயம் தழைப்பதற்காக வந்த இந்த நூல்கள் பன்னிரு திருமுறைகள் எனப்படும். ராஜாராஜசோழன் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டு, தேவாரத் திருப்பதிகங்களை தேடி, அவை சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து, கரையானுக்கு இரையாகி வரும் செய்தி அறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தது தான். இதற்காக ராஜராஜ சோழனிடம், ஆலய தீட்சிதர்கள், தேவாரத்தைப் பாடித் தந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம் என்று வாதம் புரிந்தனர். மன்னன் நினைத்திருந்தால் அவர்களை சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணியிருக்கலாம். ஆனால் ராஜராஜன் தூய சிவபக்தன் . தஞ்சைப் பெரிய கோயில் கண்டவன். அதனால் அவன் தீட்சிதர்களிடம் எதிர் வாதம் செய்யாமல், மூவர் திருமேனியையும் சிலை வடிவில் கோயிலுக்கு எடுத்து வந்து நிறுத்தி, இதோ தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய தேவாரம்.
சமயக்குரவர்கள் எனப்படும் அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவரும் சேர்ந்து 276 சிவாலயங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் எனப்படும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியது - 44
ஞான சம்பந்தர், அப்பர் பாடியது - 52
ஞானசம்பந்தர், சுந்தரர் பாடியது - 13
அப்பர், சுந்தரர் பாடியது - 2
ஞான சம்பந்தர் மட்டும் பாடியது - 112
அப்பர் மட்டும் பாடியது - 28
சுந்தரர் மட்டும் பாடியது - 25
மூவரால் பாடல் பெற்ற தேவாரத் தலங்கள் - 276
விபரம்:
1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன. 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும் அடங்கியுள்ளன. 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 1026 பாடல்கள் உள்ளது. 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
இதில் திருவாசகம் 656 பாடல்களும், திருக்கோவையார் 400 பாடல்களுமாக மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. 9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷாத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. 10ம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகும். இதில் மொத்தம் 3047 பாடல்கள் உள்ளது. 11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. 12ம் திருமுறை சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் ஆகும். இதில் 4286 பாடல்கள் உள்ளது.
இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான். இதுவரை கிடைத்துள்ள பன்னிரு திருமுறைகள் 27 ஆசிரியர்களால் 76 நூல்களில் பாடப்பட்ட 18326 பாடல்களை கொண்டது. இந்த திருமுறைகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்குகளே. அவரே அடியவர்களுக்கு உள்ளிருந்து உணர்த்தியும், முதலடி எடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்திய அருள்வாக்குகள். அவை சிவபிரானின் அருளை அன்பர்களுக்கு அன்றும் தேடித்தந்தன; இன்றும் தரவல்லன. அதனாலேயே இவை அருட்பாக்கள் எனப்படும். இவற்றுள் சிவசக்தி யாகிய உயிர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், என்றும் அழியாத அமரத்துவம் பொருந்தி நிற்கிறது. மிகப்பெரிய சிவாலயங்களில் நடராஜரின் சன்னதிக்கு அருகில் இந்த பன்னிரு திருமுறைகள் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படும். பன்னிரு திருமுறைகளை படித்தாலோ, கேட்டாலோ முக்தி நிச்சயம்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |