இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஆறாம் திருமுறை

The Sixth Thirumurai is the sixth volume in the collection known as the Panniru Thirumurai, or "Twelve Thirumurais." It is an important text in Tamil Saiva literature, featuring hymns by the poet Manickavasagar.


திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும்,அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)


திருச்சிற்றம்பலம்

1. அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாமெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், கலையறிவால் ஆராய்ந்து அறிவதற்கு அரியவர்; தில்லை வாழ் அந்தணர்களின் சிந்தையில் விளங்குபவர்; சிறப்பின் மிக்கதாகிய வேதங்களின் உட்பொருளாகத் திகழ்பவர்; அணுவைப் போன்று நுண்மையாக இருப்பவர்; யாராலும் அறிந்து கொள்ள முடியாதவராகவும் தத்துவமாகிய மெய்ப்பொருளாகவும் விளங்குபவர்; தேனும் பாலும் போன்று இனிமையானவர்; அஞ்ஞானமாகிய இருளை நீக்கும் பேரொளியாக விளங்குபவர்; தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மற்றும் திருமால், நான்முகன், நெருப்பு, காற்று, ஒலிக்கும் கடல், உயர்ந்து மேவும் மலை என யாங்கும் கலந்து மேவும் பெரும் பொருளாக விரிந்து விளங்குபவர். பெரும்பற்றப் புலியூர் என்னும் பெருமையுடைய தில்லையில் வீற்றிருக்கும் அப் பெருமானை ஏத்திப் போற்றி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு ஏத்துதல் செய்து வழிபடுவது மனிதப் பிறவியை எடுத்ததற்கு உரிய உண்மையான பயனாகும். அவ்வாறு ஈசனைப் போற்றாது இருப்பது மனிதப் பிறவியை வீணாக்கும் நாள் என்பதாகும்.

2. கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றாøன் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளொல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாக் கலைகளையும் கற்று வல்லமையுடன் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; வலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; வறியவர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும் அருள்செய்து ஆதரவு அளிப்பவர்; திருவாரூரில் வீற்றிருப்பவர்; நிகரற்றவராக விளங்குபவர்; தேவர்களால் எல்லாக்காலங்களிலும் தொழப்படுபவர்; பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தில்லையில் வீற்றிருப்பவர். அப்பெருமானை வாழ்த்தி ஏத்தாத நாள் பிறவியின் பயனை அடைந்ததாகக் கொள்ளத்தக்கதன்று.

3. கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; ஒலிக்கும் கழல்கள் காலில் ஒலிக்க, நெருப்பைக் கையில் ஏந்திப் பெருமையுடைய தோள்களை வீசி நடனம் புரிவர்; வளரும் சந்திரனைச் சடையில் அணிந்து கங்கையானவள் ஏத்துமாறு நடனம் புரிபவர். அவர் பெரும்பற்றப்புலியூரில் விளங்குபவர். அப்பெருமானை தினந்தோறும் ஏத்தி வாழ்த்தவில்லையானால் பிறவியின் பயன் அடைந்ததாக ஆகாது.

4. அருந்தவர்களே தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், அரிய தவச்சீலர்களால் தொழுது ஏத்தப்பெறும் தலைவர்; தேவர்களுடைய பெருமான்; அரனாகவும் மூப்பு கொள்ளாத அருமருந்தாகவும் விளங்குபவர்; தேவர்களுக்கு அருள் புரிந்தவர்; கடலும், மலையும் மண்ணும் விண்ணும், விண்மீன்களாகவும், திரிகின்ற சுடர்களில் சூரியன் சந்திரன் ஆகிய இருவராகவும், பிறவுமாகவும் விளங்குகின்ற பெருந்தகையாவர். அவர், பெரும்பற்றப்புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பற்றிப் பேசாதநாள், பிறவியின் பயனை உணர்ந்து நோக்காத நாள் என்கின்றவாறு பயனற்ற நாளாகும்.

5. அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாருக்கும் கிடைத்தற்கரிய சிறப்புமிக்க துணையாகத்திகழ்பவர்; அடியவர்களுடைய துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாகுபவர்; இப்பெரிய உலகத்துள் உள்ளத்தில் தோன்றி தோன்றாத் துணையாய் விளங்குபவர்; புலன்களின் வழிச்செல்லாது, உலகப் பொருளின் மீது உள்ள நாட்டத்தை நீக்கியவர்களுக்குப் பெருந்துணையாய் விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபடாத நாள், பிறவியின் பேற்றினை அடையாத நாளாகும்.

6. கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பு போன்ற இனிய மொழி பேசும் உமாதேவியை உடனாகக் கொண்டவர்; வைரத்தின் குன்று போன்று வெண்மை திகழும் திருநீற்றுத் திருமேனியராகக் காட்சி தருபவர்; அரும்பு விளங்கும் கொன்றை மலரை மாலையாகத் தரித்துள்ளவர்; வேதமும் ஆறு அங்கங்களும் ஆகியவர்; வண்டுகள் ரீங்காரம் செய்து சூழும் பொழில்களையுடைய அழகிய திருவாரூரில் சோதிச் சுடராய்த் திகழ்பவர்; எத்தகைய தன்மையாலும் அசைவு கொள்ளாத விளக்கின் ஒளியாகுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் கைதொழுது ஏத்திப் போற்றித் துதிக்காத நாள், பிறவியன் பயனை அடையாத நாள் ஆகும்.

7. வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம்செய் அவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், ஏழு நரம்பின் வாயிலாக இசையாகவும் அத்தன்மையைக் கேட்டு மகிழ்கின்ற இனிய பயனாகவும் விளங்குபவர்; தேவர்களை அச்சுறுத்திய மூன்று அசுரர் புரங்களை மேரு மலையை வில்லாகக் கொண்டு அக்கினிக் கணை தொடுத்து எரித்தவர்; கடலில் தோன்றிய கொடிய நஞ்சினைக் கண்டத்தில் அடக்கித் தேவர்களைக் காத்தவர்; காமத்தின் வயப்படாத சிந்தையுடையவராகிய துறவியரின் உள்ளத்தில் மேவுபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் விளங்க, அப்பெருமானை ஏத்திவழி படாத நாள், பிறவியின் பயனைக் காணாத நாளாகும்.

8. காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் குணியான் தன்னை
அமரர்களுக் குறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர், எல்லாருக்கும், விரும்பும் நன்மைகளை வழங்கும் பாங்கில் திகழும் கச்சியில் விளங்கும் திருவேகம்பன் ஆவார்; வேற்றுமை இன்றி எல்லா அடியவர்களுக்கும் அன்புடன் அருள் புரிபவர்; தேவர்களாலும் அறியப்படாத பெருமையுடையவர்; பூவுலக மாந்தர்களும் தேவர்களும் பணிந்து, ஏத்தி நிற்கத் திருநடனம் புரிபவர்; பரஞ்சுடராய் பரம்பொருளாகி, எண்ணற்ற திருப் பெயர்களை உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் திகழ்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாத நாள், பிறவிப் பயனை அடையாத நாளாகும்.

9. முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைத்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்ற
குற்றலாம் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்பெற்றா
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : சிவபெருமான், இளமையுடைய சந்திரனைச் சூடி விளங்குபவர்; மூன்று உலகங்களும் தானாக விளங்கி மேவுபவர். யாவற்றுக்கும் தலைவராகியவர்; பகைத்து நின்ற முப்புரஅசுரர்களுடைய கோட்டைகளை எரித்தவர். ஒளியாகத் திகழ்பவர்; மரகதம் போன்ற எழில் வண்ணம் உடையவர்; தேனும், பாலும், இனிமை நலனை விளைவித்து, உடலுக்கு எழில் சேர்ப்பது போன்று, உயிருக்கு நல்லாக்கத்தையும் இனிமையையும் சேர்பவர், திருக்குற்றாலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அன்பின் மிக்கவர்; ஆங்குத் திருக்கூத்து நல்கி, மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை நல்குபவர்; பரஞானமும் உடையவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி புகழ்ந்து ஏத்தாத நான் பிறவியின் பேற்றை அடையாத நாள் ஆகும்.

10. காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

தெளிவுரை : கரிய ஒளி வண்ணமுடைய திருமாலும், தாமரைமலரில் உறையும் பிரமனும் காணமுடியாதவாறு, சிறப்பின்மிக்க ஒளிதிகழும் நெருப்பின் பிழம்பாய் விளங்கிய சிவபெருமான், சிந்தையில் தோன்றும் அஞ்ஞானத்தை நீக்கும் ஞான ஒளியாகுபவர், பூவுலகம், ஆகாயம், தேவர்உலகம் மற்றும் உள்ள ஏழுலகங்களைக் கடந்து அண்டங்களையும் கடந்த பேரொளியாக விளங்குபவர். அவர் பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் பேசிப் புகழாத நாள், பிறவிப் பேற்றின் பயனடையாத நாள் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

11. மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிழற் கொடுமுடியா குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார் பேய்க் கொள்ளம் பூதூர்த்
தங்குமிட மறியார் சால நாளார்
தருமபுரத் துள்ளார் தக்க மூரார்
பொங்குöண் ணீறணிப்து பூதஞ் செ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே

தெளிவுரை : சிவபெருமான், சந்திரன் நிலவும் மேகம் சூழ்ந்த மாட வீதிகளையுடைய மயிலாப்பூரில் விளங்குபவர்; திருமருகல் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்; கொங்கு நாட்டுத் தலமாகிய கொடுமுடியில் வீற்றிருப்பவர்; பஞ்ச சபைத்தலங்களுள் ஒன்றாகிய திருக்குற்றாலத்தில் விளங்குபவர்; குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம், தக்களூர் ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர். அப்பெருமான் திருவெண்ணீற்றுத் திருமேனியராகிப் பூதகணங்கள் சூழப் புலியூரில் திகழும் சிற்றம்பலத்தில் புக்கு வீற்றிருப்பவர் ஆவார்.

12. நாக மரைக்கசைத்த நம்ப ரிந்தாதள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்
பிரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் கட்டியுள்ளவர்; நனிபள்ளி, நல்லூர், ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; திருப்பாசூர், பரிதி நியமம் ஆகிய தலங்களில் விளங்குபவர்; வேதம் ஓதுதலும், வேள்வியும் ஓய்வின்றி மேவும் வீழிமிழலை என்னும் தலத்தில் விளங்குபவர்; மன்னுயிர்களுக்குப் போகத்தைத் தருபவராகவும் பொய்மை யற்ற உறுதிப் பொருளாகவும் விளங்குபவர். அப்பெருமான், புலியூர் எனப்படும் தில்லையில் திகழும் சிற்றம்பலத்தில் புக்கு வீற்றிருப்பவர் ஆவார்.

13. துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலும்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், ஞானத்தின் மேலானதாகிய துறவைக் காட்டுபவர்; தூய்மையுடைய சந்திரனையும் பாம்பையும் தரித்தவர்; மூன்று அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கி வீரம் புரிந்தவர்; வழிபடுவதற்குரிய மந்திரப் பொருளாகவும் அவற்றை விரித்தோதுகின்ற அரிய நூலாகவும் விளங்குபவர்; சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்குக் கல்லால மரத்தின் நிழலில் வீற்றிருந்து அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு அறப்பொருள்களை உபதேசம் செய்தவர்; மயானத்தில் நெருப்பைக் கையில் ஏந்திப் பூத கணங்கள் சூழ வீற்றிருப்பவர். அப்பெருமான் புலியூரில் மேவும் சிற்றம் பலத்தில் புக்கவர் ஆவார்.

14. வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேணு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய கச்சு அணிந்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; ஒளி மிகுந்த மழுப்படையைக் கையில் ஏந்தியவர்; மயானத்தில் திருநடனம் புரிபவர்; செழுமையுடைய குளிர்ந்த வயல் சூழ்ந்த திருவாஞ்சியம், திருநள்ளாறு ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர், கரிய வண்ணம் உடைய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி வைத்திருப்பவர்; மன்மதனை எரித்து அழித்த நெற்றிக் கண்ணை உடையவர்; போர்த் தன்மையுடைய இடபத்தின் மீது ஏறி அமர்ந்து பூதகணங்கள் சூழ விளங்குபவர். அப்பெருமான் புலியூர் எனப்பெறும் தில்லையில் சிற்றம்பலத்தில் புகுந்து விளங்கும் ஈசன் ஆவார்.

15. காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடுபிச்சை கொண்டு ழல்லும்
உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலட் டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.


தெளிவுரை : சிவபெருமான், கார்காலத்தில் மணம் கமழ மலர்கின்ற கொன்றை மலரை மாலையாகத் தரித்துள்ளவர்; கையில் கபாலத்தை யேந்தியவர்; பூத கணங்கள் பாடிப் போற்றி ஏத்த ஊர் தோறும் பிச்சையேற்றுத் திரிந்து உழல்பவர்; உத்தமப்பாங்குடன் விளங்குபவர்; சிறப்புமிக்க தேவர்களால் வணங்கப் பெறும் பெருமையுடைய திருக் கழலை யுடையவர்; திருவாரூரில் விளங்கும் திருமூலட்டானத்தில் புற்றிடங்கொண்டவராய் மேவுபவர். அப்பெருமான், பூத கணங்கள் சூழ்ந்து விளங்க இடப வாகனத்தில் வீற்றிருந்து புலியூரில் திகழும் சிற்றம்பலத்தில் புகுந்து விளங்குபவர் ஆவார்.

16. காதார் குழையினர் கட்டங் கத்தர்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், காதில் குழையணிந்து விளங்குபவர்; மழுப்படையுடையவர்; கயிலாய மலைக்கு உரியவர்; காரோணம் என்னும் பெயர் வழங்கப் பெறும் கோயிலில் வீற்றிருப்பவர்; தனக்கென்று தாயர் தந்தையர் என்று யாரும் இல்லாத அநாதியாகுபவர்; ஆதியும் இறுதியும் தாமாகவே திகழ்பவர்; மாதர்கள் மகிழுமாறு கொடிய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், சடைமுடிகள் தாழ்ந்து சரிந்து விளங்கவும் பூதகணங்கள் சூழவும் புலியூரில் மேவும் சிற்றம்பலத்தில் புக்கவர் ஆவார்.

17. இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார்மனத் தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : பூவுலகின்கண் பிறந்து பிராரத்த வினைமுடிந்து இறந்தவர்களுக்கும், யோகம் முதலான செயல்களில் மேவி நெடிது காலம் இறவாது விளங்குபவர்களுக்கும், தேவர்களுக்கும், பிறவி எடுக்கும் தன்மையில் வினையால் கட்டுண்டு இருப்பவர்க்கும், பிறவா நிலையடைந்து முத்திஇன்பத்தில் திளைப்பவர்களுக்கும், திருத்தொண்டர்களின் பெருமை பேசும் அன்பர்களுக்கும், அன்பராய் மருவி விளங்குபவர் சிவபெருமான். அவர், தன்னை நினையாது மறந்தவர்களின் மனத்தில் மருவுதல் செய்யாதவராகித் திருமறைக் காட்டில் விளங்குபவர். அவர், மழுவை ஏந்தியவராய்ப் பூத கணங்கள் சூழச் சடைமுடிகள் விரிந்து பரவப் பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தில்லையில் விளங்கும் சிற்றம்பலத்தில் புக்கவர் ஆவார்.

18. குலாவெண் தலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோடுகளைக் கோர்த்து மாலையாகக் கொள்பவர்; எலும்பினை ஆபரணமாகக் கொள்பவர்; கொன்றைமாலை தரித்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; கையில் மண்டை யோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டவர்; கையில் நெருப்பை ஏந்தி மயானத்தில் திகழ்பவர். அப்பெருமான், நிலவொளி நன்கு பரவும் மாடங்களை யுடையதும் வளம் மிக்க வயல்கள் சூழ உடையதும் ஆகிய நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அவர் கையில் கபாலம் கொண்டவராகிப் பூத கணங்கள் சூழப் பெரும்பற்றப்புலியூரில் என்னும் தில்லையில் மேவும் சிற்றம்பலத்தில் புக்கு விளங்குபவர் ஆவார்.

19. சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், இணைக்கப்பெற்ற துகிலைக் கோவணமாக உடையவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்புடையவர். வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவர், கையில் கபாலம் ஏந்தியவர்; அழகிய ஆரூரில் திகழ்பவர். அப்பெருமான் இனிமை செய்பவராகி என்னைக் கவர்ந்து என் வெண்மையான வளையலைக் கொண்டு சென்றார். அப்பெருமானைக் கண்டீர்களோ ! என வினவ, அவர் புலியூர்ச் சிற்றம்பலத்தில் புக்கனர் என்பதாயிற்று. அவர் பூத கணங்கள் சூழப்பொற் சோதியாய்த் திகழ்பவர் ஆவார். இது, அப்பரமனை யாரும் மறைத்து வைக்க இயலாது என்பது ஆயிற்று. இது அகத்துறைக் கண்ணும் அமைந்தது.

20. பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்க ளோதிஓர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நற்குணத்தினரால் பரவி ஏத்தப் படுபவர்; பக்தியுடன் பணிசெய்யும் தொண்டர்களின் துன்பங்களைக் களைபவர்; உயிர்கள் கொள்கின்ற ஏழு பிறவிகளிலும் ஆட்கொண்டு அருள்புரிபவர்; வேதங்களை ஓதுபவர்; வீணையைக் கையில் ஏந்தி விளங்குபவர்; இடபத்தின் மேலேறிக் கீதம் இசைப்பவர். அப்பெருமான், பூத கணங்கள் சூழ்ந்து விளங்கப் புலித்தோலை இடையில் கட்டிப் புலியூரில் திகழும் சிற்றம்பலத்தில் புகுந்தனர்.

21. பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

தெளிவுரை : சிவபெருமான் பட்டாடை உடுத்தி இருப்பவர்; தோலை ஆடையாகப் போர்த்தி விளங்குபவர்; பாம்பை அரையில் இறுகக் கட்டி விளங்குபவர்; பூதகணங்கள் சூழ்ந்து விளங்க நடனம் புரிபவர்; சிட்டராக விளங்கும் பெருமான் ஆவார். அவர் தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீயை ஏந்தி இருக்கக் கண்டணம். அவர், ஒளி திகழும் சூலத்தைக் கையில் ஏந்தியவர்; வெண்ணூல் அணிந்த திருமார்பினர்; வீணையை மீட்டுபவர்; வேதம் ஓதுபவர்; மழுப்படையை உடையவர்; நீல கண்டத்தினர். கபாலம் ஏந்தி விளங்கும் எமது பெருமானாகிய அவ்விறைவனைக் கண்டு தரிசிப்பீராக.

திருச்சிற்றம்பலம்

3. திருஅதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

22. வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
அதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் வில்வத்தை மாலையாகச் சூடி இருப்பவர்; வீரட்டம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருப்பவர்; வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; படம் கொண்ட அரவத்தை ஆபரணமாகத் தரித்துள்ளவர்; கருட வாகனத்தையுடைய திருமாலாகவும் பொன் வண்ணத்தராகிய பிரமனாகவும் விளங்குபவர்; யாவராலும் புகழப்படுபவர்; அறிவதற்கு அரியவராகவும் அன்பின் மிக்கவராகவும் விளங்குபவர்; பெருமை திகழும் மலையரசனாகிய இமாசல மன்னனின் மகளாகிய உமாதேவியாரை உடனாகக் கொண்டு விளங்குபவர்; திருவதிகையில் மேவும் தீர்த்தமாகத் திகழும் கெடில நதியாகி அருள்புரிபவர். அத்தகைய பெருமையுடைய இறைவனை முற்காலத்தில் அறியாமையால் இகழ்ந்தேனே ! அந்தோ !

23. வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை
வாரா வுலகருள வல்லான் தன்னை
எள்கவிடு பிச்சை யேற்பான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், வெள்ளிமலை போன்ற இடபத்தை வாகனமாக உடையவர்; மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய வில்லாற்றல் உடையவர்; நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர். பொன்னைத் தூள்செய்தாற் போன்று ஒளி திகழும் அழகிய சடைமுடியுடையவர்; தோளை வளைத்து வீசி ஆடும் தலைவர்; பிறவாமையாகிய நல்ல நெறியை அருளிச் செய்பவர்; பிறர் எள்ளி நகை செய்யும் வகையில் கபாலம் ஏந்திப் பிச்சையேற்பவர். அத்தகைய பெருமையுடைய ஈசனை முற்காலத்தில் நான் இகழ்ந்தேனே ! அந்தோ !

24. முந்தி யுலகம் படைத்தான் தன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
சொழுங்கெடில வீரட்டம் மேவி னானை
எந்தை பெருமானை யீசன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா உலகங்களையும் முதற்கண் படைத்து அருள் புரிந்தவர்; எஞ்ஞான்றும் மூவாத மூர்த்தியாய் விளங்குபவர்; வெண்மையான பிறைச் சந்திரனை அணிந்தவர்; தவயோகிகளுக்கு எல்லாச் சாதனைகளும் உண்டாகுமாறு செய்யும் அருள் தன்மையினர்; சிந்தையில் புகுந்து உரியவாறு அருளிச் செய்து தீர்வு புரிபவர்; தேனும்பாலும் போன்று இனிமையும் நற்பயனும் அளிப்பவர்; செழுமை விளங்கும் கெடில நதியின் கரையில் மேவும் வீரட்டானத்தில் மேவியவர். எந்தை பெருமானாகிய அப்பரமனை முற்காலத்தில் நான் இகழ்ந்தேனே ! அந்தோ !

25. மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் தன்னை
யதியரையை மங்கை யமர்ந்தான் தன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழல்சொல் வானை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மந்திரமாகவும் வேதத்தின் பொருளாகவும் விளங்குபவர்; சந்திரன், சூரியன், காற்று, நெருப்பு, ஆகாயம், அலைகடல் என ஆகுபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; இரு கந்தருவர்கள் குழைகளாகக் காதில் விளங்க, அவர்களால் ஏத்தித் தொழப்படுபவர். தேவேந்திரன் முதலான வானவர்களால் தொழுது ஏத்தித் தொழப்படுபவர். அத்தகைய பரமனை நான் முற்காலத்தில் ஏத்தி வணங்காது இகழ்ந்தேனே ! அந்தோ !

26. ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வேறுவியரா யிருந்தார் சொற்கேட்
டேழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பிறப்பில்லாதவர்; பிறரால் காண்பதற்கு அரியவர். உயர்ந்த கதிக்குச் செல்ல வேண்டும் என்னும் நெறியிலாதும், வினையின் தாக்கத்தால் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிவரும் என்னும் மெய்ம்மை ஓர்ந்து அறியாதும், மாசுஉடையவனாய் இருந்தேன். பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருவதிகைப் பெருமானுடைய இனிய திருவடியைச் சாராது, இருமைக்கும் பயனற்றவாறு இருக்கும் சமணர்களின் சொற்கேட்டு, முற்காலத்தில் நான் இகழ்ந்தேனே ! அந்தோ !

27. ஆறேற்க வல்ல சடையான் தன்னை
அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் தன்னை நிமலன் தன்னை
ஏறேற்க வேறுமா வல்லான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையை ஏற்று விளங்கும் சடையுடையவர்; மைபோன்று விளங்கும் கரிய நஞ்சைத் தேக்கிய கண்டத்தை உடையவர்; எப்பொருளையும் தமது கூறாக ஏற்கவும் எப்பொருளின் கண்ணும் அமர்ந்து தனது கூறாக விளங்கச்செய்யவும் விளங்குபவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; திருவெண்ணீற்றைத் திருமார்பில் பூசி விளங்குபவர்; தான் மலமற்றவராக விளங்கித் தன்பால் நாடும் அடியவர்களின் மும்மலங்களை நீக்குபவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனை முற்காலத்தில் அறியாமையால் நான் இகழ்ந்தனனே ! அந்தோ !

28. குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் தன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : மூர்க்கத் தன்மையுடைய சமணர்தம் சொற்கேட்டுத் திரிந்து உழன்று, அலைந்து, துயரில் மூழ்கினேன். எனவே கொன்றை மாலை தரித்து மேவும் சிவபெருமானை, உணர்வு ஒன்றி ஏத்தாதவனானேன். அப்பெருமான், தேவர்களால் தொழப்படுபவர்; எண்திசைக்கும் மூர்த்தியாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அறியாது நான் முன்னர் இகழ்ந்தனனே ! அந்தோ !

29. உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
யூத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக்கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பல்வநஞ் சுண்டான் தன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
ஏறிகெடில நாடர் பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தருளியவர்; கெடில நதியின் கரையில் மேவும் அதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய பெருமைகளை அறியாதவனாகிச் சமணர்பால் மேவி, முன்னர் இகழ்ந்தனனே !

30. நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் தன்னை
மறையானை மாசொன் றிலாதான் தன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக்
கட்டங்கம் ஏந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நிறைந்து விளங்கும் தன்மையடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; வேதமாக விளங்குபவர்; எத்தகைய குற்றமும் இல்லாத மாசிலா மணியாகத் திகழ்பவர்; தேவர்கள் ஏத்த அருள்புரிபவர்; கறை பொருந்திய கண்டத்தை உடையவர் காதில் குழையணிந்தவர்; கையில் மழுப்படையேந்தியவர்; என் இறைவனாகவும், பெருமானாகவும் திகழ்பவர், அப்பரமனை அறியாமையினால் முன்னர் இகழ்ந்தனனே !

31. தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் தன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி எங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : வினையின் காரணமாகப் பிறவிகொண்டு இருக்கத் தோத்திரப் பாடல்களால் ஏத்தியும் அதன்வழி மேவியும் விளங்குமாறு கருணைபுரிந்த சிவபெருமான், சோதிவடிவினராகி நின்று அருள்புரிந்தவர்; இடர்கள் யாவற்றையும் தீர்த்தவர்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இறைவனாகத் திகழ்பவர்; அவர், திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவராகி உயர்ந்த மேவியவர். அப்பரமனை அறியாமையால் முன்னவர் இகழ்ந்தனனே !

32. முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

தெளிவுரை : சமணர்கள் பொய்த் தன்மையினை மெய்ம்மையுடையதென நினைப்பவர்கள் ஆவர். அத்தகையவர்கள்தம் சொற்களைக் கேட்டு, இராவணனையும் மன்மதனையும் வருத்திய, கொன்றை மாலை தரித்த சிவபெருமானை ஏத்தாது அறியாமையால் இகழ்ந்தனனே !

திருச்சிற்றம்பலம்

4. திருஅதிகைவீரட்டம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

33. சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனைப் பெருமையுடைய கங்கையின் அலைகள் மோதுமாறு சடாமகுடத்தில் பொருந்தி வைத்தவர்; சாமவேதத்தை விரும்புபவர்; கந்தருவர்களின் இசையை விரும்புபவர்; கபாலத்தைக் கையில் ஏந்தி விளங்குபவர்; பொன் போன்ற அழகிய திருமேனியுடையவர்; உமாதேவி யாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; இடபவாகனத்தில் வீற்றிருப்பவர்; பரமயோகியாக விளங்குபவர்; ஐந்து தலையுடைய நாகத்தை இடையில் கட்டி விளங்குபவர். அப்பெருமான் திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

34. ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படஅரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், இடபத்தில் ஏறி ஏழுலகங்களிலும் திரிபவர்; தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர்; பிரம கபாலத்தை ஏந்திப் பலியேற்பவர்; அகன்ற திருமார்பில் அரவத்தை தரித்துள்ளவர்; செழும் பவளக்குன்ற போன்ற திருமேனியில் திருநீறுபூசி விளங்குபவர்; நெற்றில் ஒரு கண்ணுடையவர்; கங்கை தங்கிய சடைமுடியின் மீது பிறைச் சந்திரனைத் தரித்துள்ளவர். அப்பரமன், திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவரே.

35. முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், எண்ணற்ற பிரமர்களின் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவர்; முதலும் நடுவும் இறுதியும் ஆக விளங்குபவர்; பன்றியின் கொம்பை ஆபரணமாகப் பூண்டவர்; நாகத்தை அணிந்திருப்பவர்; உடம்பில் மேவும் தத்துவங்களாகுபவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களாகத் திகழ்பவர்; அண்டங்களுக்கு அப்பாலும் அதன் உள்ளும் விளங்குபவர். அப்பரமன் திருவதிகை வீரட்டானத்தில் உள்ளவரே.

36. செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்கும்மழுச் சூல மேந்தும்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவில் தனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், சிவந்த திருமேனியுடையவர்; கரிய கண்டத்தினர்; வெண்மையான பல்லையுடைய அரவத்தை அணிந்தவர்; மன்னுயிர்களின் வினைகளைத் தீர்ப்பவர்; குளிர்ந்த கொன்றைமாலையணிந்த சடை முடியுடையவர்; மழுவும் சூலமும் உடையவர்; முக்காலமும் ஆகுபவர்; கரும்புவில்லையுடைய மன்மதனை எரித்தவர்; பெரிய உயர்ந்த இடபத்தை உடையவர். அவர், திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

37. பாடுமே யொழியாமே நால்வே தம்மும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் பாடுபவர்; சடைமுடியின் மீது ஒளி விளங்கும் வெண் திங்களைச் சூடியவர்; அரையில் தோலாடை அணிந்து அதனைச் சுற்றிப் பாம்பைக் கட்டியவர்; உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; குடமுழவு, வீணை, தாளம் ஆகியவற்றைக் குறள் தன்மையுடைய பூதகணங்கள் முழக்க, ஐந்தொழில்களைப் புரியும் பெருமை மிக்க திருநடனம் புரிபவர், கையில் அனலை ஏந்தி விளங்குபவர். அப்பரமன் திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

38. ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்ச டைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க மோரம்பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை நினைத்து வழிபடும் அடியவர்களுடைய பிணியைத் தீர்த்தருள்பவர்; அடியவர்களுக்குப் பகைமையாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் (பொறாமை) ஆகியனவற்றை நீக்கிப் புனிதமாக்குபவர்; மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; கங்கையைச் சடைமுடியின் மேல் தரித்துள்ளவர்; ஏழு உலகமாகத் திகழ்பவர்; முப்புரங்களை ஓரம்பினால் எரித்துச் சாம்பலாக்கியவர்; பெருந்தவமாக விளங்குபவர். அப்பரமனே திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்.

39. குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தான்அ டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேஅட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், குழல், கொக்கரை, தாளம், மொந்தை ஆகியவற்றை முழக்கிக் குறட் பூதங்கள் பாடத் திருநடனம் புரிபவர்; ஞானசக்தியும் கிரியாசக்தியும் ஆகிய திருப்பாத விரல்கள் கொண்டு யாவற்றையும் இயக்குபவர்; அடியவர்களின் கனவில் தோன்றித் திருக்காட்சி நல்கி மகிழ்விப்பவர்; எழில் மிகந்த எட்டுத் தோள்களை வீசி நின்று ஆடுபவர்; மயானத்தில் நின்று, நள்ளிருளில், கையில் நெருப்பேந்தி ஆடுபவர். அப்பரமன் திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

40. மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுங் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குறைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்து, அதனைப் போர்த்திக் கொண்டவர்; நஞ்சுடைய நாகத்தை இடையில் கட்டி இருப்பவர்; பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாகத் திகழ்பவர். அப் பரமன் திருவதிகை வீரட்டநாதர் ஆவார்.

41. செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதன்
மணவாள் னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், செம்பொன் போன்று அழகிய சடையுடையவர்; இயற்கை மணம் திகழும் கூந்தலையுடைய உமாதேவியை விரும்பிய கூந்தலையுடைய உமாதேவியை விரும்பிய மணவாளர்; வலக்கரத்தில் மழுப்படையுடையவர்; அடியவர்களின் நம்பிக்கைக் குரியவர்; நான்கு மறைகளால் ஏத்தப்படுபவர்; எதற்கும் அஞ்சாத முப்புர அசுரர்களின் மூன்றுகோட்டைகளையும் எரித்து அழித்த அம்பினைக் கொண்டவர்; எல்லா அண்டங்களிலும் நிறைந்தவர். அப்பரமன், திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்.

42. எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையின் நீரலையால் நனையும் சந்திரனைத் திகழ்கின்ற சடைமுடியில் சூடி விளங்குபவர்; கம்பை யாற்றில் பெருக்கு எடுத்துவரப்பூசை யாற்றிய அன்னை காமாட்சி, அச் சிவலிங்கத்திருமேனியைத் தழுவக் குழைந்தவராய் விளங்கியவர்; திருமார்பில் வெண்ணூல் அணிந்தவர்; மணம் கமழும் சந்தனத்தைக் குழைத்துப் பூசியதிரு மார்பினர். சிவந்த திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர். அப் பரமன், திருவதிகை வீரட்டத் தானத்தில் வீற்றிருப்பவர்.

43. நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண்டனே
கொல்வேங்கை யதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலும் நான்முகனும் காணமுடியாதவாறு நெடிது ஓங்கிச் சோதியாகத் திகழ்ந்தவர்; தனக்கு உவமையாகக் கூறப்படுவதற்கு வேறு இல்லாதவாறு நிகரற்றவராய்த் திகழ்பவர்; இடபத்தைக் கொடியாக உடையவர்; நீலகண்டராக விளங்குபவர்; புலித் தோலை உடுத்தியவர்; கோவண ஆடையுடன் திகழ்பவர்; திருநீற்றுத் திருமேனியர்; புவலோகத்தில் சென்று பிச்சையேற்பவர்; முப்புரி நூல் அணிந்தவர்; அடியவர்களைத் தேவர்களாக்கி அருள் புரிபவர். அப்பரமன், திருவதிகை வீரட்டனாரே.

திருச்சிற்றம்பலம்

5. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

44. எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எல்லாம் சிவன் என்னுமாறு மேவி விளங்குபவர்; எரிகின்ற சுடராக விளங்குபவர்; மழுப்படையுடையவர்; கூற்றுவனை உதைத்து அழித்தவர்; திருவைந்தெழுத்தை ஓதாதவர்களுக்கு அரியவர்; திருவைந்தெழுத்தினை ஓதும் அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர்; முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை வில் கொண்டு போர் செய்து அழித்தவர்; வீரட்டத்தானத்தில் விழைவுடன் வீற்றிருப்பவர். தேவரீரைப் போற்றுதும்.

45. பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி
உள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாக மசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பாடலுக்கும், திருநடனம் புரிதலுக்கும் உரிய செம்மையாய் விளங்குபவர்; பல ஊழிகளைப் படைத்தவர்; மண்டையோட்டில் உணவை ஏற்று உண்டு மகிழ்ந்தவர்; நினைத்து ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தில் உறைபவர்; இடுகாட்டில் நடனம் புரிந்து மகிழ்பவர்; கரிய மேகம் போன்ற கண்டத்தை உடையவர்; ஆடுகின்ற நாகத்தை இடையில் கட்டி விளங்குபவர்; கெடிலநதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் ஆட்சி புரிபவர். தேவரீரைப் போற்றுதும்.

46. முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முல்லை மலரைச் சடை முடியில் சூடியவர்; திருமேனி முழுமையும் நீறு பூசி விளங்கும் மூர்த்தியானவர்; உயர்ந்த குணப் பாங்கு உடையவர்; ஏழிசையைத் தோற்றுவித்தவர்; மண்டையோட்டில் உணவு கொண்டவர்; அடியவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர்; தில்லைச் சிற்றம்பலத்தில் திகழ்பவர்; திருவீரட்டானத்தில் செல்வராய் விளங்குபவர். தேவரீரைப் போற்றுதும்.

47. சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், திருமார்பில் திருநீறுபூசியவர்; தவநெறிகளில் திகழ்பவர்; மனம் கசிந்து ஏத்தி வழிபடும் அடியவர்களின் வழிபாட்டை விரும்பி ஏற்பவர்; பாம்பு, சந்திரன், கங்கை ஆகியன தமது பகை தீரப் புரிந்து ஒரு சேரச் சடைமுடியில் விளங்குமாறு வைத்த பண்பாளர்; ஆம்பல் மலரை அணிந்தவர். அலையோங்கும் கெடில நதியின் கரையில் விளங்கும் வீரட்டானத்தில் ஆட்சி புரிபவர், தேவரீரைப் போற்றுதும்.

48. நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொறுபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
யிருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், திருநீறு அணிந்த திருமேனியுடையவர்; நீல மிடற்றினர்; ஒளிதிகழும் வெண்மழுவுடையவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாக உடையவர்; அரவத்தைக் கையில் கொண்டு விளங்குபவர்; கங்கையைச் சென்னியில் தரித்தவர்; அடியவர்களுக்கு அமுதமாக விளங்கி மகிழ்விப்பவர்; இடபவாகனத்தில் விழைந்து ஏறுபவர்; பெருமையுடைய கெடில நதிக்கரையில் உள்ள வீரட்டானத்தில் விளங்குபவர். தேவரீரைப் போற்றுதும்.

49. பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுரார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாக மரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பக்தியுடன் பாட உகந்து அருள்புரிபவர்; பழையாறையிலும் பட்டீச்சுரத்திலும் வீற்றிருப்பவர்; பற்றற்றவர்களுக்கு முத்திப்பேற்றை அருளிச் செய்பவர்; யானையை அழித்த அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; நாடுவதற்கு அரியவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; பசுவின் பஞ்சகவ்வியத்தை உகந்து பூசையாக ஏற்பவர்; கெடில நதிக்கரையில் உள்ள வீரட்டானத்தில் ஆட்சிபுரிபவர். தேவரீரைப் போற்றுதும்.

50. மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி
விண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் பூவுலகம் நன்கு திகழத் திருத்தாண்டவம் புரிந்தவர்; கடலும் வானமும் ஆகுபவர்; வான்தலத்தில் சிறப்புக் கொள்ளுமாறு அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; பண்ணின் இசை விளங்கப் புரிந்தவர்; உலகெலாம் பரவும் பரம்பொருளாகுபவர்; மன்மதனை எரித்தவர்; நீர்வளம் மேவும் கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் கபாலம் ஏந்தி விளங்குபவர். தேவரீரைப் போற்றுதும்.

51. வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொல்லாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவர்; விரிந்த சடை முடியின் மீது கங்கை தரித்து விளங்குபவர்; கபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்ற பெருமையுடையவர்; தொழுது ஏத்தும் அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர்; நஞ்சினைக் கண்டத்துள் ஒடுக்கி நீலகண்டப் பெருமானாய்க் காத்தவர்; நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் ஆகியவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் ஆட்சி புரிபவர். தேவரீரைப் போற்றும்.

52. சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றி யென்தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் சிந்தையாய் மேவி விளங்குபவர்; சீபருப்பதத்தில் வீற்றிருப்பவர்; உள்ளத் தாமரையில் வீற்றிருப்பவர்; புண்ணியனாகவும் புனிதனாகவும் திகழ்பவர்; சந்திப்பொழுதாய் விளங்குபவர்; யாவும் வல்ல சதுரர்; தத்துவங்களாகத் திகழ்பவர்; என் தந்தையாய் விளங்குபவர் அந்தி மேவும் செவ்வண்ணத் திருமேனியர்; கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் மேவும் அரனாய்த் திகழ்ந்து ஆட்சி புரிபவர். தேவரீரைப் போற்றுதும்.

53. முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முக்கண்ணுடையவர்; யாவர்க்கும் முதல்வர்; முருகவேளைத் தோற்றுவித்தவர்; தட்சிணா மூர்த்தியாகி விளங்கியவர்; அறத்தின் வடிவானவர்; தத்துவப் பொருளாய் விளங்குபவர்; என் தந்தையாகியவர்; திருமால், பிரமன் ஆகிய இருவரும் கைகளைத் கூப்பித் தொழுது போற்றச் சுடர் விளங்கும் சோதியாகத் திகழ்ந்தவர். வீரட்டானத்தில் மேவும் ஈசனே ! எத்தன்மையிலும் வேறு புகலிடம் இல்லாதவனாகிய நான், தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

6. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

54. அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கம்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : அலைகள் வீசுகின்ற அழகிய கெடில நதிக்கரையில் மேவும் திருவீரட்டானத்தில் வீற்றிருக்கின்ற எமது செல்வமாகிய சிவபெருமானுடைய திருவடியானது, அரவணையில் பள்ளி கொள்ளும் திருமாலால் சிந்தித்துப் போற்றப்படுவது; நான்குமறைகளை ஓதும் நான்முகன் தனது தலையில் சூடும் பாங்குடையது; முருகப்பெருமானால் கைதொழுது ஏத்தப்படுவது; சாரும் பக்தர்களுக்கு எல்லாம் அடைக்கலம் தருவது; பரவி ஏத்தும் அன்பர்களின் பாவத்தைத் தீர்த்தருளுவது. பதினெட்டு கணங்களும் போற்றிப்பாடிப் புகழப்படுவது. இத்தகைய பெருமையுடைய திருவடியை வணங்கி மகிழ்க என்பது குறிப்பு.

55. கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவ்வடி
கடுமுரணே றுர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.

தெளிவுரை : திருவதிகையில் மேவும் வீரட்டத்தானத்தில் எக்காலத்திலும் நீங்காது வீற்றிருக்கும் சிவபெருமான், கூற்றுவனைப் பாய்ந்து உதைத்து அழித்தவர்; இடபத்தில் ஏறி விளங்குபவர்; உலகில் காத்தல் தொழில் புரியும் திருமாலால் ஏத்தப் பெறுபவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பரமனுடைய திருவடியானது, கொடி வினையுடைய உயிர்களால் அணுகமுடியாதது; தமது குறைகளை உணர்ந்து சரணம் அடைந்தவர்களைத் துன்பத்தில் ஆழாதவாறு காப்பது; ஒலிக்கின்ற முழவம் தாளம் ஆகியவற்றுக்கு ஏற்பத் திருநடனம் புரிவது. இத்தகைய சிறப்புடைய திருவடியை வணங்கி மகிழ்வாயாக என்பது குறிப்பு.

56. வைதொழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவ்வடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்படி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவ்வடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : தெய்வத்தன்மையுடைய தீர்த்த மகிமை கொண்ட கெடில நதிபாயும் நாட்டுக்கு உரியவராகித் திருவதிகையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வனாகிய சிவபெருமானுடைய திருவடியானது, தீய சொற்களால் நிந்தனை செய்பவர்களுடைய காமம் பொய் முதலான ஆறு குற்றங்களையும் தீர்த்தருளலைப் புரியாதது; வஞ்சனைத் தன்மை முற்றும் நீங்கிய தன்மையுடையது; நாம் அனைவரும் கைதொழுது ஏத்தக் காட்சி தருவது; எண்கணக்கும் சொற்பொருளும் கடந்து விளங்குவது; நெய் முதலான பஞ்சகவ்வியத்தால் பூசித்து அபிடேகம் செய்யப்படுவது; வானைக் கடந்து நின்று பேரொளியாகத் திகழ்வது, அத்தகைய பெருமையுடைய திருவடியை வணங்கி மகிழ்வீராக என்பது குறிப்பு.

57. அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவ்வடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவ்வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவ்வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : கெடில நதிபாயும் நாட்டுக்கு உரியவராகித் திருவதிகையில் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடியானது, தாமரையை அரும்புவிக்கும் சூரியனை விஞ்சும் ஒளிமிக்கது; அளவிடுவதற்கு அரிய, அழகும் அருளும் உடையது; வண்டினங்கள் சூழும் மலர் போன்றது; தக்க யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காகச் சந்திரனைத் தேய்த்தது; மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை உதைத்து அழித்தது; பெருமைக்குரிய அன்பர்கள் கூடிப் போற்றித் துதிக்கும் திருவுடையது; தவறு செய்தவர்களை உணர்த்திக் குற்றங்களை உணரச் செய்வது. அத்தகைய பெருமை மிகும் திருவடியை ஏத்துவீராக என்பது குறிப்பு.

58. ஒருகாலத் தொன்றாகி நின்றவ்வடி
ஊழிதோ றூழி உயர்ந்தவ்வடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவ்வடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : திருவதிகையில் அழகிய கெடில நதிபாயும் நாட்டுக்கு உரியவராகி வீரட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வனாகிய சிவபெருமானுடைய தோறும் உயர்ந்து மேவுவது; கழலும் சிலம்பும் ஒலிக்க விளங்குவது; புகழ்மிக்க தன்மையுடையது; பூவுலகத்தார் பேரின்பம் கொண்டு ஏத்தப் பெறுவது; அன்பர்களால் மலர் கொண்டு ஏத்தப் பெறுவது.

59. திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவ்வடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவ்வடி
உருவிரண்டு மொன்றோடென் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவ்வடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடியானது, திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரையாக விளங்குவது; சிறந்த அடியவர்களுக்குத் தேனாகத் திகழ்ந்து இனிமை தருவது; தத்துவப் பொருளை உணர்ந்தவர்களுக்குப் பொன்னுரையாக விளங்குவது; புகழ்ந்தேத்துபவர்களுக்குப் புகழை அளிப்பது; சிவமும் சக்தியுமாக இரண்டாகவும் ஒன்றில் மற்றொன்று ஒன்றாததாகவும் உடையது. உருவத்தால் அமையாது அருவமாக விளங்குவது. இத்தகைய பெருமையுடைய திருவடியை ஏத்தி மகிழ்வீராக.

60. உரைமாலை யெல்லா முடையவ்வடி
உரையா லுணரப் படாதவ்வடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையி லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பா ரில்லாவடி
கரைமாக் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட் டானக் கபாலிய்யடி.

தெளிவுரை : கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடியானது, போற்றி உரைக்கும் உரைச் சொற்களாகவும் தோத்திரப் பாடல்களாகவும் உடையது; உரைக்கு அப்பால் உணர்வதற்கு அரியதாவது; உமாதேவியாரை எஞ்ஞான்றும் மகிழ்ந்திருக்குமாறு செய்யவல்லது; தேவர்கள் தோத்திரம் செய்து வணங்கும் தன்மையுடையது; மிகவும் நுண்மையாய் விளங்குவது; அளவிடுவதற்கு அரிய பெருமையும் விரிவும் உடையது. இத்தன்மையுடைய திருவடியை ஏத்தி மகிழ்க என்பது குறிப்பு.

61. நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடுவா யுலகநா டாயவ்வடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவ்வடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவ்வடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமும் ஆயவ்வடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

தெளிவுரை : கெடில நாட்டினராகிய வீரட்ட நாதரின் திருவடியானது, நறுமணம் கமழும் மலர் போன்றது. உலகம் முழுமையும் கலந்ததாகவுடையது; நடுநாயகமாகத் திகழ்வது; சூரியனும் சந்திரனும் ஆகிய விளங்குவது; பெரும் சோதியாக விளங்குவது; சந்திரனுடைய மாசினைத் தீர்த்து அருளியது; மந்திரமும் அதனை விதிக்கும் விதியாகவும் விளங்குவது. அத்தகைய பெருமையுடைய திருவடியை ஏத்தி மகிழ்வீராக என்பது குறிப்பு.

62. அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
யடியார்கட் காரமுத மாயவ்வடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவ்வடி
பற்றற்றார் பற்றும் பவளவ்வடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவ்வடி
தணிபாடு தண்கெடில நடான்னடி
தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.

தெளிவுரை : கெடில நாடனாகிய தகை சார்ந்த வீரட்டேசுவரின் திருவடியானது, அடியவர்கள் அல்லாதவர்களுக்குத் தொலைவு இன்றி அண்மையாகவும் விளங்குவது; அடியவர் பெருமக்களுக்கு அமுதல் போன்று இனிமை தருவது; பணிந்து ஏத்தும் பக்தர்களுக்குப் பாங்குடன் அருளவல்லது; மணியும் பொன்னும் என விளங்கும் மாண்புடையது; மருந்தாகி நின்று பிறவியாகிய பிணியைத் தீர்க்க வல்லது. இத்தகைய பெருமையுடைய திருவடியை வணங்கி மகிழ்க என்பது குறிப்பு.

63. அந்தா மரைப்போ தலர்ந்தவ்வடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவ்வடி
முந்தாகி முன்னே முளைத்தவ்வடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்திய்யடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் கடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி.

தெளிவுரை : அதிகைவீரட்டானத்தில் மேவும் சிவபெருமானுடைய திருவடியானது, நன்கு மலர்ந்த தாமரை மலர் போன்று விளங்குவது; இராவணனுடைய ஆற்றலை அழித்தது; முந்தி விளங்கிய திருவடி; பெருஞ்சோதித் தணலாய் உயர்ந்தது; உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு விளங்குவது; பவளத்தின் மலை போன்று விளங்குவது; சுடலையின் சாம்பல் எனத் திகழ்வது. இத்தன்மையுடைய ஈசனின் திருவடியை ஏத்துக என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

7. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

64. செல்வப் புனற்கெடலி வீரட்டமும்
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற்ற றம்பலமுந் தென்கூடலும்
தொன்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால் மேந்திக்
கட்டங்கத் தோறுறைவார் காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், செல்வம் கொழிக்கும் நீர்வளம் கொண்ட கெடில நதிக் கரையில் மேவும் வீரட்டானத்தில் உறைபவர். அவர், சிற்றேமம். திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி, திருநல்லூர், திருந்து தேவன்குடில திருமருகல், திருநாரையூர் ஆகிய திருத்தலங்களில் கபாலத்தைக் கையில் ஏந்தி வீற்றிருப்பவர்; தாளமும் மழுப்படையும் உடையவர். அவர் எம்மைக் காக்கும் தன்மையினர் ஆயினர்.

65. தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணாமலை
அறையணிநல் லூரும் அரநெ றிய்யும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், தீர்த்த மகிமையுடைய கெடில நதியின் கரையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். அவர், திருக்கோவலூர் வீரட்டம், திருவெண்ணெய் நல்லூர், திருவண்ணாமலை, அறையணி நல்லூர், திருவாரூர் அரநெறி ஆகிய தலங்களில் மேவுபவர். அப்பெருமானை ஏத்துவீராக. இன்னம்பர், கச்சித் திருவேகம்பம், திருக்கயிலாயம் ஆகிய தலங்களில் மேவுபவர். அப்பெருமானை ஏத்துவீராக. இன்னம்பர், கச்சித் திருவேகம்பம், திருக்கயிலாயம் ஆகிய தலங்களில் உறைபவர். அப்பரமன் நமக்குக் காப்பாக விளங்குபவர்.

66. சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்த நின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரி சூழ்
ஐயாற் றமுதர் பழனம் நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்
கழுக்குன்றம் தம்முடைய காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். அவர், திருப்பாதிரிப் புலியூர்; திருஆமாத்தூர், திருச் சோற்றுத்துறை, திருத்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு, திருப்பழனம், திருநல்லம், கானப்பேர், திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர். அப்பரமன் நமக்குக் காப்பாக விளங்குபவர்.

67. திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந திய்யும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுது காவிரி சூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதியின் கரையில் மேவும், அதிகை வீரட்டானம், திருவாரூர், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருவொற்றியூர், திருவோத்தூர், திருமாற்பேறு, திருமாந்துறை, மாநதி, அம்பர்மாகாளம், கேதாரம், மாமேரு, திருக்கடம்பந்துறை ஆகியவற்றில் வீற்றிருந்து காத்தல் புரிபவர்.

68. செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், நீர்வளம்மிக்க கெடிலநதிக் கரையில் மேவும் அதிகை வீரட்டானம், திரிபுராந்தகம், தேவீச்சரம், கோட்டுக்கா, குடமூக்கு, திருக்கோகரணம், திருக்கோலக்கா, திருப்பனங்காடு, திருப்பனையூர், திருப்பயற்றூர், திருப்பராய்ந்துறை, காளிங்கம் கணபதீச்சரம் (திருச்செங்காட்டங்குடி) ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர். அப்பரமன் நமக்குக் காப்பாவார்.

69. தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்ப தம்மும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வ் திரையு மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழிய்யும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதிக் கரையில் மேவும் வீரட்டானம், பிடவூர், பருப்பதம், திருப்பறியலூர், வீரட்டம், பாவநாசம், மணிமுத்தம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருவலஞ்சுழி, திருக்கழிப்பாலை ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர். அப்பரமன் நமக்குக் காப்பாக இருந்து அருளிச் செய்பவர்.

70. தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீகாழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரம்முங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானம், சீகாழி, திருவல்லம், திருவேட்டி, திருவேடகம், திருவூறல் (தக்கோலம்) திருஅம்பர் பெருஞ் திருக்கோயில், உறையூர் (மூக்கீச்சரம்), திருநறையூர்ச் சித்தீச்சரம், அரணநல்லூர், திருவிளமர், திருவெண்ணி, திருமீயச்சூர், திருவீழிமிழலை, கரபுரம் ஆகிய திருத்தலங்களில் வீற்றிருந்து நம்மைக் காத்தருள் புரிபவர்.

71. தெள்ளும் புனற்கெடலி வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கல்லூர்
எள்ளும் படையாள் இடைத்தானமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தது தெள்ளியா ருள்கி யேத்துஞூ
காரோணந் தம்முடைய காப்புக்களே.

தெளிவுரை : ஈசன், தெளிந்த நீர் விளங்கும் கெடில நதிக்கரையில் மேவும் அதிகை வீரட்டம், திண்டீச்சரம் (திண்டிவனம்), திருப்புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், நல்லேமம், கூடல், திருக்கோடிகா, திருக்குணங்கணின் முட்டம், அடியவர்கள் ஏத்தும் காரோணம் ஆகிய இடங்களில் வீற்றிருப்பவர். அப்பரமன் நம்மைக் காப்பவராவார்.

72. சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்
காரார் கமழ்கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக்களே.

தெளிவுரை : ஈசன், சிறப்புடைய கெடில நதிக்கரையில் மேவும் திருவதிகை வீரட்டானம், திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு, திருப்பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், திருப்பாசூர், திருநல்லம், திருநின்றியூர், நெடுங்களம், திருநெல்வெண்ணெய், திருநெல்வாயில், திருக்கடவூர் வீரட்டானம் ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர். அப்பெருமான் நம்மைக் காப்பவர் ஆவார்.

73. சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதிக்கரையில் மேவும் திருவதிகை வீரட்டானம், திருவாஞ்சியம், திருநள்ளாறு, அயோகந்தி, ஆன்பட்டி, திருஆக்கூர், ஆவூர்ப்பதீச்சுரம், திருஇடைச்சுரம், தலைச்சங்காடு, கரவீரம், கடம்பூர்க் கரக்கோயில், ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர். அப்பெருமான் நமக்குக் காப்பாக விளங்கி அருள்பவராவார்.

74. தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனார்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே,

தெளிவுரை : சிவபெருமான், தேன் போன்ற நீர்வளம் கொண்ட கெடில நதியின் கரையில் மேவும் திருவதிகை வீரட்டானம், திருச்செம்பொன்பள்ளி, திருப்பூவணம், திருமணஞ்சேரி, உஞ்சை மாகாளம், வாரணாசி (காசி) வெகுளீச்சரம், திருப்பருப்பதம், சோலைகள் சூழ்ந்த, இடமும், கானும் (மயானம்), மயில் கண்டு ஆடும் கருமாரியும், தமது இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப்பெருமான் நமக்குக் காப்பாக விளங்கி அருள்புரிபவர் ஆவார்.

75. திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவ்வடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பூரில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக்களே.

தெளிவுரை : சிவபெருமான், கெடில நதிக்கரையில் மேவும் அதிகை வீரட்டானம், திருஅளப்பூர், சித்தவடம், மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், திருச்சுழியில், பெண்ணாகடம், திருக்காளத்தி, திருக்கயிலாயம் ஆகிய தலங்களில் வீற்றிருந்து காத்தருள் புரிபவர்.

திருச்சிற்றம்பலம்

8. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

76.விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண்அவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், தனக்காக உணவு வைத்துச் சேமிக்காதவர்; பெருமையுடைய கச்சித் திருவேகம்பத்தில் விளங்குபவர். பிச்சையேற்று உண்பதன்றி வேறு வகையில் உணவு கொள்ளாத சதுரப்பாடு உடையவர்; மயானத்தில் விளங்குபவர் மாசு இல்லாத பெருமையுடைய பொன்தூண் போன்று விளங்குபவர். மாணிக்கக் குன்று போன்று செவ்விய திருமேனியுடையவர்; ஏழுலகங்களையும் தாங்கும் உறுதியான தூண் போன்றவர்; திருக்காளத்தி என்னும் தலத்தில் மேவும் சிவகணங்களின் தலைவர். அப்பெருமான், என்கண் விளங்குபவர்.

77. இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தில் யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், என்னுடைய வினையைத் தீர்க்கும் பரம்பொருளாகியவர்; ஏகம்பனாகக் கச்சியில் வீற்றிருப்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாகக் கொண்டு இருப்பவர்; எல்லாச் செயல்களையும் முன்னின்று வகுத்து இயக்குபவர்; மூன்று உலகங்களும் ஆகுபவர்; வேதங்கள் யாவினையும் விரித்து ஓதியவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; பசுபதியாகத் திகழ்பவர்; திருப்பராய்த்துறை, திருப்பழனம், திருப்பைஞ்ஞீலி ஆகிய திருத்தலத்தில் வீற்றிருப்பவர். நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர்; திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். அவர் என்கண் உள்ளவர் ஆவார்.

78.நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், காக்கும் தொழிலாற்றும் திருமாலாகவும், படைக்கும் தொழில் மேவும் நான்முகனாகவும், நான்கு வேதங்களாகவும் திகழ்பவர்; ஞானக் கடலைக் கடக்கும் நாவாய் போன்று விளங்குபவர்; முழுமையுடைய பரம்பொருளாகவும், புண்ணியப் பொருளாகிப் பழைமையுடைய பொருளாகவும் திகழ்பவர்; கங்கையைச் சடை முடியின் மீது தரித்து மேவும் புனிதர்; எல்லா இடங்களிலும் வியாபித்துச் சஞ்சரிப்பவர்; சந்திரனும் சூரியனும் ஆகி விளங்குபவர்; எல்லாப் பொருள்களுள்ளும் தாமே நின்று விளங்குபவர்; மெய்யுணர்வுடையவர்களுக்குக் காரணப்பொருளாய் விளங்கு பவர். அப்பெருமான் திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். கணங்களுக்குத் தலைவராகிய அவர், என்கண் உள்ளவராவர்.

79. செற்றான்காண் என்வினையைத் தீயாடிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்த செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்தும்
சொற்றான்காண் சோற்றுத் துறையும் ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண் அவனேன் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், என்னுடைய வினையை அழித்துப் பிறவி நோயைத் தீர்த்தவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர். திருவொற்றியூரில் மேவுபவர்; சிந்தை செய்யும் அன்பர்களுடைய மனத்தில் பொருந்தி விளங்குபவர்; கச்சியில் திகழும் ஏகம்பத்தில் வீற்றிருப்பவர்; உமாதேவியாரின் நாயகர்; தேவர்கள் போற்ற விளங்குபவர்; மன்மதன் தொடுத்த அம்பினைக் பயனற்றதாக்கி, அவனை நெற்றிக் கண்ணால் எரித்தவர். அப்பெருமான் திருக்காளத்தியில் வீற்றிருப்பவர்; கண நாதனாகிய அவர், எண்கண் உள்ளவர் ஆவார்.

80.மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தால் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், மனத்தில் விளங்குபவர்; உடலின் கண் மேன்மையானதாகிய தலையாய் விளங்குபவர்; வாக்காகத் திகழ்பவர். மனங்குளிர வாயாரப் பாடும் தொண்டர்களின் இனத்தில் நன்மைகளைப் புரிவிப்பவர். ஏழு அண்டங்களைக் கடந்தவர்; செம்பொன் போன்ற மலர்கள் திகழும் சோலைகளின் தன்மையாய்த் திகழ்பவர்; கொன்றை மலரில் விளங்குபவர்; அதன் தன்மையில் மேவும் பருமையாகத் திகழ்பவர். கயிலையின் உச்சியில் வீற்றிருப்பவர். காளத்தியில் திகழ்பவர். அப்பரமன், என்கண் உள்ளவர் ஆவார்

81. எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்பம் மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேல்கொண்டு நாகம்பூண்டு
நளிச்சரமொன் றேத்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருள்களுக்கும் முன்னே தோன்றியவர்; கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; தேவர்கள் எல்லாம் ஏத்தி வாழ்த்தும் பாங்கில் பொல்லாமையுடைய ஐம்புலன்களின் கொட்டத்தை அழித்தவர். கங்கையைச் சடைமுடியில் வைத்து மகிழ்ந்தவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டு, நாகத்தை ஆபரணமாகப் பூண்டு, மண்டையோட்டினைக் கையில் ஏந்தித் துவராடை அணிந்து, பிச்சை யேற்றவர். அப்பெருமான் திருக்காளத்தியில் வீற்றிருப்பவராகி, என்கண் உள்ளவர் ஆவார்.

82. கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்கண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயாடிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டத்தையுடையவர்; என் கண்ணுள் ஒளிர்பவர்; யாவற்றையும் கண்டு அருள்பவர்; கொன்றைமலர் சூடியவர்; எரியும் நெருப்பும், பவளமும் போன்ற சிவந்த வண்ணம் உடையவர்; கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். எண் திசைகளும் விளங்கி, யாவும் தானாகிய குணப்பாங்கு உடையவர்; திரிபுரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; என் சிந்தையுள் மேவி விளங்கித் தீவினைகளைத் தீர்ப்பவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். கபாலம் ஏந்திய அப்பெருமான் என்பால் உள்ளவர் ஆவர்.

83. இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான் காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், தாருகவனத்து முனிவர்களின் இல்லம் தோறும் சென்று பலியேற்றவர்; தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர்; அருச்சுனன் பால் வேடமாகச் சென்று திருவிளையாடல் புரிந்தவர்; வெண்ணூல்தரித்த அகன்ற திருமார்பு உடையவர்; வலிமையுடைய தோளும், மழுப்படையும் உடையவர்; உமாதேவியின் மணாவளர்; கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர். அப்பெருமான் திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். அவர் என்பால் உள்ளவர் ஆவார்.

84. தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், தேன் உண்ணும் வண்டு சூழும் கொன்றை மலரைத் தரித்து விளங்குபவர்; கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; ஞானப் பூங்கோதை என்னும் திருப்பெயர் தாங்கிய உமாதேவியாரைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர். உயிரை அறியும் ஞானமாக விளங்குபவர்; வானில் பரவி ஓங்கும் ஒளியாகி மேவி எல்லாவற்றையும் தமக்குள்ளே ஒடுக்கிக் கொண்டவர்; சோலைகள் நிறைந்த கானப்பேர்என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான் திருக்காளத்தியில் விளங்குகின்றவர். அவர், என்னிடம் மேவி இருப்பவர் ஆவார். இத்திருத்தலத்தில் மேவும் அம்பிகையின் திருநாமம், இத் திருப்பாட்டில் உணர்த்தப் பெற்றமை காண்க.

85. இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் தான்காண்
மறைக்காட் டுறையு மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் கபாலிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் கடவுளாவர்; ஏழு கடல்களும் ஆகுபவர்; சூழ்ந்து மேவும் மலைகளாகுபவர்; குற்றத்தையுடைய மன்னுயிர்களின் வழிபாடுகளை ஏற்று அருள் வழங்குபவர்; குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் வீற்றிருப்பவர்; தேவர்கள் பெருமானாகவும் வேதத்தின் பொருளாகவும் விளங்கும் நீலகண்டர்; கபாலத்தை ஏந்தித் திருக்காளத்தியில் விளங்குபவர். அப்பரமன் என்பால் உள்ளவர் ஆவார்.

86. உண்ணா வருநஞ்ச முண்டான் தான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயிந்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

தெளிவுரை : சிவபெருமான், உண்பதற்கு உரியதல்லாத நஞ்சினை உட்கொண்ட பரமன் ஆவார்; மகாசங்கர காலத்தில் பெருகி யோங்கும் ஊழித்தீ போன்று விளங்கும் செம்மையுடையவர்; அன்புடன் மகிழ்ந்து ஏத்தும் அடியவர்களுக்கு அருள்புரிபவர்; கண்ணாரக் கண்டு மகிழும் காட்சியை நல்குபவர்; திருக்காளத்தியில் விளங்கி அருள்புரிபவர். அப்பரமன் என்பால் மேவி விளங்குபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

9. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

87. வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிöச்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர்ஐய னாரே.

தெளிவுரை : இது அகத்துறையின்பால் அருளிச் செய்யப்பெற்றது. சிவபெருமான், பண்ணின் இசை விளங்கப்பாடி, என்னை ஈர்த்து, உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கை வளையலைக் கவர்ந்தவர்; திருவிழியால் என்னை நோக்கி, என் உள்ளத்தில் அடங்காத பேரன்பைப் பெருகச் செய்தவர் இடபத்தில் ஏறி அமர்ந்து, கபாலத்தைக் கையில் ஏந்தி, திருவெண்ணீற்றைக் குழையப்பூசித் தோலாடையுடுத்தித் திருமார்பில் வெண்ணூலைத் தரித்து விளங்குபவர். அப்பெருமான் அழகிய நாதராக ஆமாத்தூரில் வீற்றிருப்பவர். அவ்வண்ணல் திருவீதியுலா செல்கின்றார். காண்பீராக !

88. வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாம்முரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென் தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்ணீறு பூசிச் சடைமுடியின் மீது வெண்மாலை சூடிக் கையில் வீணையேந்திக் காந்தாரம் என்னும் பண்ணிசைத்துச் செல்லும்போது, நீலகண்டப் பெருமானே ! தேவரீருடைய ஊர் யாது ? என வினவினேன். அப்பெருமான் இரக்கம் உடையவர் போன்று, எனது இல்லம் புகுந்து நம்முடைய ஊரானது, குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரில், வண்டானது யாழின் ஒலியை முரலச் செய்யும் பாங்குடைய ஆமாத்தூர் என்று உரை செய்து ஏகினர்.

89. கட்டங்கத் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி யில்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படையைக் கையில் ஏந்தியவராகிக் கூடிய நடை பயிலும் இடபத்தில் ஏறிக் காபாலியாகத் திகழ்பவர். அப்பெருமான், என் மனத்திற்கு இசையவே பேசி இல்லம் புகுந்தனர். இடுகின்ற பலியைப் பெற்றுக் கொள்ளாதவராயினர். என் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தோற்றுவிக்குமாறு நோக்கிச் சென்றனர். அவர் ஆமாத்தூரில் மேவும் அழகிய நாதர் ஆவார்.

90. பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், விரும்பி ஏத்தும் பூதகணங்கள் சூழ்ந்திருக்கப் பாடலும் ஆடலும் கொண்டு விளங்குபவர்; நாகத்தை இடையில் கட்டியவர்; பிச்சை யேற்பதற்கு இசைந்த இயல்பினர்; நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; இமைத்தல் புரியாத மூன்று கண்களையுடையவர்; நான்கு வேதங்களும் ஆனவர்; திருநீற்றைக் குழைத்துப் பூசியவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர்; கங்கையைச் சடைமுடியில் தரித்தவர்; கையில் எரியும் நெருப்பினை ஏந்தியவர். அப்பெருமான், ஆமாத்தூரின் தலைவராக விளங்கும் அழகிய நாதர் ஆவார்.

91. உருளுடைய தேர்புரவி யோடும் யானை
யொன்றாலுங் குறைவில்லை யூர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர், குதிரை, யானை ஆகியவற்றுக்கு எத்தன்மையிலும் குறைவாகச் சொல்ல முடியாத வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; நீலகண்டத்தை யுடையவர்; செந்தீயின் வண்ணம் உடையவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் இறைவன் ஆவார். பொருட்செல்வத்தை உடையவர் எனவும் உடையவர் அல்லர் எனவும் பகரப்படுபவர்; புலித்தோலை உடுத்தியவர்; பூதகணங்கள் சூழ விளங்குபவர்; அருள் தன்மையுடன் திகழ்பவர்; மாலை தரித்த திருமார்பினர். அவர் ஆமாத்தூரில் தலைவராக மேவும் அழகிய நாதம் ஆவார்.

92. வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடி யெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆற்றல் மிகுந்த இடபத்தில் ஏறி விளங்கித் திருநீறு தரித்தவராகி வெண்மையான தோட்டினைக் காதில் அணிந்தவர்; கையில் வீணையேந்தி விளங்குபவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு திகழ்பவர்; காதில் அணிந்து மேவும் குழையானது ஆடுமாறு கொடுகொட்டி என்னும் கூத்தினை நயப்பவர்; பிரமகபாலம் ஏந்திப் பலியேற்பவர்; கங்கையைத் தரித்த சடைமுடியுடையவர். அவர், ஆமாத்தூரின் தலைவராக விளங்கும் அழகிய நாதம் ஆவார்.

93. கையோர் கபாலத்தர் மானின் தோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்பொரு பாகத் துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் கபாலம் கொண்டுள்ளவர்; மான் தோலை உடையவர்; யாவற்றையும் கருதுபவர்; திருநடனம் புரிபவர்; சிவந்த திருமேனியில் வெண்ணீறு பூசி விளங்குபவர்; திகழ்கின்ற சடைமுடியின் மீது சந்திரனைச் சூடியவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; திரிபுரங்களை எரித்தவர். அப்பெருமான் திருவீதியில் உலா வருகின்றார். அவர் ஆமாத்தூரின் தலைவராகிய அழகிய நாதர் ஆவார். அவரைக் கண்டு மகிழ்வீராக.

94. ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே யுணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூ ரினியறிந்தோம் ஏகம்பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், குறை ஏதும் இல்லாத வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவர்; உமது ஊர் ஒற்றியூர் ஆகும். ஆங்கு நிற்காது என் செய்வீர் ? நெற்றியின் விளங்கும் கண்ணுடையவராய் என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டீர் ! எக்காலத்திலும் இத்தகைய செயலையே புரிபவர் ஆயினீர ! தேவரீர் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவர். அன்றியும் அடிகளாகிய நீவிர் ஆமாத்தூரின் தலைவராய் மேவும் அழகிய நாதர் ஆவீர் !

95. கல்லலகு தாங்கொண்டு காளத்தியார்
கடிய விடையேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
யென்றாருக் கெதிரெழுந்தே னெங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தா னமோ
அல்லலே செய்தடிகள் போகின்ற றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கல்லலகு என்னும் தாளத்கைக் கொண்டு விளங்குபவர்; காளத்தியில் வீற்றிருப்பவர்; இடப வாகனத்தில் ஏறிப் பலரும் காண இல்லம் தோறும் புகுந்து பிச்சை இடுமின் என்று கேட்க நான் எழுவதன்முன் போகத் தொடங்கியவர்; உமது ஊர் எது ? திருத்துருத்தியா ! பழனமா ! நெய்த்தானமா என்று உள்ளத்தைக் கவர்ந்து சென்றனர். அவர் ஆமாத்தூரின் தலைவராகிய அழகிய நாதரே ஆவர்.

96. மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்
கொடுகொட்டி தாள முடையார் போலும்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளி குன்றாத வெண்மையின் பெருமை திகழும் திருநீற்றைத் திருமார்பில் பூசியுள்ளவர்; அழகின் ஒளி திகழும் திருவீழி மழலையுள் மேவும் மணாளர்; குவளை மலர் போன்ற விழியுடைய உமாதேவியின் நாயகர்; கொடுகட்டி என்னும் தாளத்திற்கு ஏற்ப ஆடுபவர்; செழுமையுடைய திருக்கயிலையில் வீற்றிருப்பவர்; அழகிய திருவதிகை வீரட்டானத்தில் மேவுபவர்; அன்புடையவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர். அவர், ஆமாத்தாரின் தலைவராய் விளங்கும் அழகிய நாதர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

10. திருப்பந்தணை நல்லூர் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

97. நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூராரே.

தெளிவுரை : சிவபெருமான், வருத்தத்தைத் தருகின்ற மலர் பொருந்திய சரீரம் இல்லாதவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; முப்புரிநூல் தரித்தவர்; ஆமையோட்டை அணியாகக் கொண்டவர்; பேய் தங்கும் மயானத்தில் நடனம் புரிபவர்; சடைமுடியின் மீது பிறைச் சந்திரனும் கங்கையும் சூடியவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; அந்தி வண்ணம் போன்ற சிவந்த திருமேனியுடையவராகிக் கையில் நெருப்பை ஏந்தியவர்; பாதம் முதற் கொண்டு அங்கம் முழுமையும் திருநீறு கொண்டு விளங்குபவர்; பைங்கண்ணுடைய இடபத்தை உடையவர்; அப்பெருமான் பலியேற்கும் பான்மையுடன் மேவிப் பந்தணை நல்லூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

98. காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், சுடுகாட்டில் கருதி மேவி நடனம் ஆடுபவர்; நஞ்சினை உண்டவர்; யானையின் தோலைத் திருமேனியில் போர்த்திருப்பவர்; மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டுள்ளவர்; திருவொற்றியூரில் வீற்றிருப்பவர்; பிறவிப்பிணியும் தீவினையும் தீர்ப்பவர்; நெற்றியில் கண்ணுடையவர்; பெருமையுடைய செயல்களைச் செய்பவர்; பிடவம், மொந்தை, குடமுழவு, கொடுகொட்டி இயக்கிப் பாடுதலும் ஆடுதலும் புரிபவர்; இடபவாகனத்தில் ஏறி இருந்து பலியேற்பவர். அவர், பந்தணை நல்லூரில் மேவும் பெருமான் ஆவார்.

99. பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற்றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணிசூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொழுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், பூதகணங்களைப் படையாகக் கொண்டவர், முப்புரி நூல் அணிந்தவர்; புலித்தோல் உடையினர்; இடபவாகனம் உடையவர்; வேதம் ஓதுபவர், சடைமுடியின் மீது சந்திரனைச் சூடியவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; தேவர் உலகத்தை ஆள்பவர்; வீரக்கழல் அணிந்தவர். அப்பெருமான் பலியேற்றவராகிப் பந்தணை நல்லூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

100. நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தங்கிய சடைமுடியின் மீது சந்திரனைச் சூடியவர்; அங்கையில் நெருப்பு ஏந்தியவர்; ஊர் எல்லாம் திரிந்து பலியேற்றவர்; பாம்பினை அணிந்தவர்; நஞ்சினை மிடற்றில் கொண்டுள்ளவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; மழுவும் மானும் ஏந்தியவர்; உலகில் பந்தணை நல்லூரில் மேவுபவர் ஆவார்.

101. தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதியானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், தொண்டர்கள் யாவரும் ஏத்தும் சோதி வடிவமாகுபவர்; அசைவு இல்லாத மணி போன்று ஒளி திகழும் முடியுடையவர்; தூயவெண்ணீறு தரித்தவர்; இண்டைமாலை அணிந்தவர்; சுடுகாட்டில் இரவு தோறும் நடனம் புரிபவர்; அண்டங்களுக்கு அப்பால் விளங்கும் ஆதியானவர்; ஆரழல் போன்று விளங்கி அடியவர்களுடைய பழவினைகளைத் தீர்ப்பவர். அப்பெருமான், பலியேற்பவராகிப் பந்தணை நல்லூரில் மேவுபவர் ஆவார்.

102. கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோர் டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தி உள்ளவர்; கானப்பேர் என்னும் தலத்தில் வீற்றிருந்து அடியவர்களின் மனத்தில் உறைபவர்; மான் தோலை உடையவர்; உமாதேவி கண்டு மகிழுமாறு திருநடனம் புரிபவர்; நாகத்தை அணியாகக் கொண்டவர்; நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் நவின்றவர். அப்பெருமான், படம் கொண்ட பாம்பினை அணிந்து பலிகொண்டு விளங்குபவராகிப் பந்தணை நல்லூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

103. முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், இளமையான சந்திரனைச் சடைமுடியில் சூடியவர்; மும்மூர்த்திகளாகிய பிரமா, திருமால், உருத்திரன் என, விளங்குபவர்; மேலுலகம், பூவுலகம், கீழ்உலகம் ஆகிய யாவும் ஏத்தும் முதற் பொருளாகத் திகழ்பவர்; வேதங்களைக் கற்றவர்களால் பரவி ஏத்தப்படுபவர்; குளிர்ச்சி மிக்க கங்கையை விருப்பத்துடன் சடைமுடியில் வைத்துள்ளவர்; உமாதேவியைத் தனது திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பால்போன்ற திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசித் திகழ்பவர்; ஊழிகள் தோறும் நிலைத்து மேவி மீண்டும் தோன்றும் உலகமாக விளங்குபவர். பக்தியுணர்வில்லாத முப்புர அசுரர்களுடைய கோட்டை மதில்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து பலியேற்றவராகிப் பந்தணை நல்லூரில், வீற்றிருப்பவர் ஆவார்.

104. கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதேன் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்ணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண்ணுடையவர்; இடுகாட்டில், ஊரின்கண்ணும் விளங்குபவர்; மழுப்படையுடையவர்; மலர்சூடி மேவிய தன்மையால் தேன் மணம் கமழும் சென்னியில் கங்கை தரித்த சடைமுடியுடையவர்; இத்தகைய பேர் உடையவர் எனச் சொல்லப்படுவதற்கு அரியவர்; பிறப்பும், இறப்பும் பிணியும் இல்லாதவர்; பூவுலகத்தவரும் தேவர்களும் மற்றும் அசுரர்கள் முதலானோராலும், வேத வல்லுநர்களாலும் வணங்கி ஏத்தப்படுபவர்; பண்ணிசை மேவும் பாலைப் பாடுபவர். இடப வாகனத்தில் விளங்கும் அப்பெருமான் பலியேற்றவராகிப் பந்தணை நல்லூரில் வீற்றிருப்பவராவார்.

105. ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார்நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு மிண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், இடபவாகனத்தில் ஏறி ஏழுலகங்களும் ஏத்துமாறு விளங்குபவர்; தேவர்களால் தொழப்படுபவர்; திருநீற்றினைப் பூசி விளங்கும் திருமேனியுடையவர்; நீல கண்டத்தை உண்டாக்கிய விடத்தை உட்கொண்டவர்; வேள்வியின் அவிர்பாகத்தை கொள்பவர்; கையில் நெருப்பேந்தியவர்; சென்னியில் கங்கை தரித்தவர்; பசுவின் பஞ்சகவ்வியத்தைப் பூசனையாகக் கொள்பவர்; ஐந்தலை நாகத்தை அரையில் கட்டியவர். அப்பெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் ஏறிப் பலி ஏற்பவராகிப் பந்தணை நல்லூரில் மேவுபவர் ஆவார்.

106. கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞானன மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்ணை நல்லூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; காரோணத்தில் அன்புடன் விரும்பி வீற்றிருப்பவர்; நல்லூரில் வீற்றிருப்பவர்; சிவஞானிகள் ஞானமாக விளங்குபவர்; நான்கு மறைகளும் ஆறு அங்கங்களும் ஓதியருளியவர்; வலிமையும் பேரொளியும் திகழும் கயிலை மலையின் மீது இருந்து, இராவணனுடைய தலைகள் நலிவுறுமாறு திருவிரலால் ஊன்றியவர்; பல ஊர்கள் சென்று திரிந்து பலியேற்றவர். அப்பெருமான் இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, பலியேற்பவராகிப் பந்தணைநல்லூரில் மேவுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

11. திருப்புன்கூரும் திருநீடூரும்

(அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
(அருள்மிகு அருட்சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

107. பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தனது இச்சையால், உருவம் அருவம் அருவ உருவம் ஆகியவற்றால் வெளிப்பட்டவர்; தம்மைப் பேணாதவர்கள்பால் வெளிப்படாதவர்; எப்பொருளினையும், துறத்தல் பாங்கு இன்றியும், அவற்றின் கட்டுக்குள் சாராதவராகவும் மேவுபவர்; சோதி வடிவாக விளங்குபவர்; தூய நெறியாகிய அறத்தின் தூய்மையாக விளங்குபவர்; எல்லாத் திசைகளும் தானேயாகி விளங்கி ஆள்பவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதம் ஆவர். அப்பெருமான், ஒளிவண்ணமாகத் திருநீடுரீல் விளங்குபவர். இத்தகைய அருள்வள்ளலாகிய சிவபெருமானை முன்னரே நினையாது, கீழ்மையுற்று இருந்தேனே ! என்னே ! இத்திருப்பாட்டில், திருப்புன்கூரில் வீற்றிருக்கும் ஈசனின் திருப்பெயரானது குறிப்பிட்டு ஓதப் பெற்றது, கருதுவதற்கு உரியதாம்.

108. பின்றானும் முன்றானு மானான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனேன் என்னே நான்நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், முற்காலமும் பிற்காலமும் ஆகியவர்; அன்புஉடைய அடியவர்கள்பால் பேரன்பு உடையவர்; நன்மை பெருகும் உறுதிப் பொருளை அறிந்த ஞானியர்பால் தானேயாகி மேவி, நல்வினையும் தீவினையும் ஆகி விளங்குபவர்; விண்ணை முட்டும் சோதி வடிவாக உயர்ந்தவர். அவர், திருப்புன்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதர். அப்பரமன், நீடூரில் நிலவி அருள் புரிபவர். அப்பெருமானை முன்னர் நினையாத கீழ்மையனாய் இருந்தனனே.

109. இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
öந்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஊனக்கண்ணுக்கும் அஞ்ஞானம் உடையவர்களுக்கும் வெளிப்படாதவர்; எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவர்; இனிமையாக ஏத்தி வழிபடாதவர்களுக்குத் துன்பம் விளைவிப்பவர்; எல்லாம் வல்லவர்; உறுதியுடன் சரணம் அடைந்தவர்களுக்கு அருள் வண்ணமாகுபவர்; அவ்வாறு இல்லாதவர்களுக்கு அரியவர்; அரியமுத்திப் பேற்றினைத் தந்தருள்பவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோகநாதனை ஆவார். அப்பெருமான் எக்காலத்திலும் நிலைத்து விளங்கும் நீடூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை முன்னர் நினைந்து ஏத்தாது இழிந்தவனாய் ஆனேனே.

110. கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிலையார் மணிமாட நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னுடைய அடியவர்களுக்குக் குருமூர்த்தமாக விளங்கி எல்லாக் கலைகளையும் கற்று அறியுமாறு அருள் புரிபவர்; கொடிய நரகத்துள் சாராது காத்தருள்பவர்; பலவிதமான திருவேடங்கள் கொண்டு திருத் தொண்டர்களுக்குப் பற்றாக விளங்கியும் உடனாக மேவியும், அருள் புரிபவர். முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோகநாதன் ஆவார்; அப்பெருமான் மணி மாடங்கள் விளங்கும் நீடூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை முன்னர் நினையாத கீழ்மையனாக இருந்தேனே !

111. நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தனது கரணங்களால் (புறக்கண்களால்) அன்றிச் சங்கற்பத்தால் எல்லாப் பொருள்களையும் நோக்கி அருள்புரிபவர்; தான் எத்தகைய நுண் தன்மையும் (அறிவின் வயத்தால்) மேவாது, தனது சங்கற்பத்தால் யாவற்றையும் நுண்மையுடன் நிறைந்து மேவுபவர்; தனது கரணத்தால் ஆக்காது, சங்கற்பத்தால் படைத்தலை ஆக்கலைப் புரிபவர்; தன்னை நினையாதவர்களுக்கு அரியவர்; கடல் நஞ்சு உண்டவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதர் ஆவார். அப்பெருமான் ஒளிதிகழும் நீடுரில் வீற்றிருப்பவர். அவரை நான், முன்னர் நினையாது இழிந்தவன் ஆனேனே.

112. பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை ஒளிதிகழும் மேனி யானைச்
சேறுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீணுலா மலர்க்கழனி நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யாரும் அணிய முடியாத பாம்பை ஆபரணமாகக் கொண்டவர்; யாரும் பூசுவதற்கு உரித்தாகாத சுடலைச் சாம்பலைப் பூசி விளங்குபவர்; முடை நாற்றம் கொண்ட பிரமகபாலத்தில் உண்பதற்குப் பெருமை கொள்ளாத பிச்சையாகக் கொண்ட உணவை உட்கொண்டவர்; யாராலும் புலன் வழியே காண்பதற்கு அரியவர்; ஒளி வடிவமாக விளங்குபவர்; செழுமையுடைய பவளக் குன்றுபோல விளங்குபவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதர். அப்பெருமான் கழனி வளம் மிகுந்த நீடூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை, நான் முன்னர் நினைத்து ஏத்தாது இழிந்தவன் ஆயினேனே.

113. உரையார் பொருளுக் குலப்பி லானை
யொழியாமே எவ்வுருவு மானான் தன்னைப்
புரையாய்க் கனமா யாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிரையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : சிவபெருமான், உரைக்கப்படும் பொருளுக்கெல்லாம் எல்லையற்றவராய் விரிந்து விளங்குபவர்; எல்லா வடிவமும் தானேயாகுபவர்; தன்னை யாரும் அளந்து கணிப்பதற்கு அரியவராகிப் பெருமையும், நுண்மையும், புதுமையும் பழமையும் ஆகிய விளங்குபவர்; கங்கையைச் சடைமுடியின் மீது தரித்தவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதர் ஆவார். அப்பெருமான் மணிமாடங்கள் விளங்கும் நீடூரில் வீற்றிருப்பவர். அவரை முன்னரே நினையாது இழிந்தவன் ஆகினேனே.

114. கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் கூடிச்சென்று முயன்றும் அறிய மாட்டாதவராகி மறைந்தும் ஓங்கியும் விளங்கி சிவபெருமானை யாரால் அறிவதற்கு இயலும். தேவர்களுக்கு எல்லாம் அறிவரிய பெருமையுடைய அப்பரமன் அடர்ந்து திகழும் சோலை விளங்கும் திருப்புன்கூரில் மேவும் சிவலோகநாதர் ஆவர். அப்பெருமான், நீரில் ஒலியானது எக்காலமும் மேவும் கழனிகளையுடைய நீடூரில் வீற்றிருப்பவர். அவரை நான் முன்னரே நினையாதவனாகி இழிந்தவன் ஆயினேனே.

115. கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : பொய்மையை மெய்போலப் பேசும் தன்மையுடைய சமணர்களிடமிருந்து வேடனின் வலையில் சிக்கிப் பின்னர் தப்பிப் பிழைத்த பறவை போன்று, உய்யப் பெற்றேன். வயல் சூழ்ந்த திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதரையும் நீடூரில் வீற்றிருக்கும் ஈசனையும் முன்னரே நினைந்து ஏத்தாது இழிந்தவன் ஆயினேனே !

116. இகழுமா றேங்ஙனே யேழை நெஞ்சே
யிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவ லோகனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், எப் பொருளையும் இகழ்தல் செய்யாது எல்லாவற்றிலும் ஒன்றி விளங்குபவர்; இராவணனைக் கயிலை மலையின் கீழ்த் துன்புறுமாறு அடர்த்தி, நல்ல வரங்களைத் தந்தருளியவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியுள்ளவர். அவர் திருப்புன்கூரில் மேவும் சிவலோக நாதர் ஆவார். அப்பெருமான் நீடூரில் வீற்றிருப்பவர். அவரை முன்னம் நினையாது நான் இழிந்தவன் ஆயினேனே.

திருச்சிற்றம்பலம்

12. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

117. ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : எலும்பின்மீது சதையாகிய ஊனை உடையாகக் கொண்டு ஒன்பது துவாரங்களை உடையது இந்த உடம்பு. இதன்மீது உரோமம் கூரையாக உள்ளது. இத்தகைய சரீரமானது தவிரப் பெற்று உயிரை நற்கதிக்குக் கொண்டு செல்பவர், தாவுகின்ற மானைக் கரத்தில் கொண்டு, மயில்கள் ஆடும் சோலையுடைய கழிப்பாலையில், கபாலம் ஏந்திய சிவபெருமான் ஆவார். அத்தகைய வழியில் நாமும் செல்வோம். இது உயிரானது ஈசனின் அருளால் திருவடிப்பேற்றை அடையும் பெருமையினை ஓதுதல் ஆயிற்று.

118. முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய்ப் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்ளின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; மகாசங்கார காலத்திற்கு முன்னரும், பின்னரும் என எக்காலமும் விளங்கி, மூன்று கண்கள் உடைய எந்தை; பிறைச்சந்திரனைச் சூடிய சடைமுடியில் பாம்பும் கங்கையும் பிணக்கம் இல்லாது உடன் விளங்குமாறு வைத்தவர்; கொடிய நஞ்சினைக் கண்டத்தில் அடங்குமாறு செய்தவர். அப்பெருமான் கழிப்பாலையில் மேவும் கபாலியாவார். அவர் மறை போன்ற வாய்மொழியால் யாக்கை மாயும் வழியை வகுத்திட அவ்வழிப்படி நாமும் செல்வோமாக.

119. நெறிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
யொருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வளியுண்டார் மாயக் கரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : சிவபெருமானை நாள்தோறும் உறுதியாகப் பற்றி நிற்பீராக. அப்பெருமான், உமா தேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அவர், அடியவர்கள் எல்லாரும் விரும்பி ஏத்த அடர்ந்த பொழிலும் மணங் கமழும் தாழையும் வேலியாக அமைந்த கழிப்பாலையில் மேவும் கபாலியார் ஆவார். அவரே காற்றாக மேவி விளங்குபவர். இத்தேகமானது நீங்கும் தன்மைக்கு உரிய வழி வகுத்தவர் அப்பெருமான். அவ்வழியே நாம் செல்வோமாக.

120. பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநூறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடும் ஆதிரையினார்தாம்
கடிநூறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழம் திருநீறு தரித்த திருமேனியுடையவர்; விபூதிப் பை யுடையவர்; புலித்தோல் உடையவர், சீற்றத்தால் பொங்குகின்ற தன்மையுடைய அரவத்தை அணிந்தவர்; முப்புரிநூல் அணிந்தவர்; தாமரை மலர்களால் ஏத்தி வழிபடப் படுபவர்; திருவாரூரில் ஆதிப் பொருளாக வீற்றிருப்பவர்; பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் கொள்பவர்; ஆதிரை என்னும் நாளுக்கு உரியவர். அப்பரமன் கழிப்பாலையில் மேவும் கபாலியாவர். அவர், இத்தூல சரீரம் நீங்கி உயிரானது நற்கதியைப் பெறும் தன்மையில் வழிவைத்தவர். நாம் அவ்வழியில் செல்வோமாக.

121.விண்ணனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : சிவபெருமான், வானமும், வானவர்கள் ஏத்தும் வேதமும் ஆனவர்; எண்ணும், எழுத்தும் ஏழுகடல்களும் ஆனவர்; இறைவனாகவும் அவ்விறைவனை ஏத்தும் இடங்களும், மேகமும் ஆகிக் கழிப்பாலையுள் உறையும் கபாலியவாõர். அழியக் கூடிய இச் சரீரத்திலிருந்து விடுபடுவதற்கு உரிய வழிவகுத்தவர் அப்பெருமான். அவ்வழியே நாம்செல்வோமாக. ஏழ்கடல்; உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்.

122. விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரான் எரிசுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதம் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு சுந்தார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : ஈசன்பால் விண்ணப்பம் செய்து ஏத்திப் பாடும் வித்தியாதரர்கள் ஏத்தச் சூரியனாகவும், அக்கினியாகவும், ஆகாயமாகவும், பண்ணிசைத்து ஏத்தும் பக்தர்களின் மனத்துள்ளேயும் விளங்குபவர் சிவபெருமுõன். அவர், பசுபதியாகவும் பாசுபத மூர்த்தியாகவும் திகழ்பவர்; கண்ணப்ப நாயனார் ஏத்தி வழிபட்டுத் தனது கண்ணை இடந்து அப்ப உகந்தவர். அப்பரமன், பிணியுடைய யாக்கையானது மாயும் தன்மையில் வண்ணம் திகழும் வழியை வகுத்தவர். அவ்வழியே நாம் செல்லுதும்.

123. பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : ஒரு காலத்தில் பிணமாகச் சொல்லப்படுகின்ற, ஓட்டைகளையுடைய இவ்வுடம்பை மெய்யென்று கருதுபவர்களே ! ஈசன், சூலப்படையுடையவர்; நீல கண்டம் உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; நிறைவுடைய எண்குணங்களையுடையவர்; கணம்புல்ல நாயனாரில் கருத்திற்கு உகந்து அருள் புரிந்தவர்; திருக்கச்சியில் வீற்றிருப்பவர்; கழிப்பாலையுள் மேவும் கபாலியார். நன்மணம் கொள்ளும் தன்மையில் இச் சரீரமானது நீங்கும் தன்மையில் அப்பெருமான் வகுத்த வழியில் செல்வோமாக.

124. இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : சிவபெருமான், தாமே இயல்பான தலைமையானவர்; எந்தை தந்தையாய் சிந்தையாய் மேவி உறைபவர்; மூர்த்தியும் தீர்த்தமும் தலமும் ஆகத் திகழ்பவர்; முக்கண்ணுடையவர்; சூலப்படையுடையவர்; கயல் பாயும் நீர்வளம் கொண்டும், தாழை சூழ்ந்து மேவும் கழிப்பாலயில் வீற்றிருக்கும் கபாலியார். அப்பெருமான், மயல் கொண்ட சரீரமானது நீங்கும் தன்மையில் வழி வகுத்தவர். அவ்வழியைச் சார்ந்து செல்லுதும்.

125. செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாம்
கற்றதோர் நூலினான் கயிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : பகையொழித்த மனத்தையுடையவாகிச் சிவமூர்த்தியாகிய ஈசனைச் சிந்தை செய்பவர்களுக்கு, உற்ற நோய் யாவற்றையும் களைந்து அருள் புரிபவர் அப்பெருமான். அவர், இவ்வுலகம் முழுமையும் அறியச் செய்பவர், யாவற்றையும் ஓதுவிப்பவர், வேதம் விரிந்து ஓத வல்லவர்; கலானின் பாசக் கயிற்றை அறுத்தவர். அப்பரமன், கபாலம் ஏந்தியவராய்க் கழிப்பாலையில் மேவி இத் தேகத்தினால் உண்டாகும். குற்றங்களைத் தீர்ககும் வழி வகுத்தவர். அவ்வழியில் நாம் செல்லுதும்.

126. பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பாலையார்
வருதலங்க மாயக் குரம்ப நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

தெளிவுரை : கயிலை மலையின்மீது தான் சென்ற புட்பக விமானம் தொடர்ந்து செல்லாமையைக் கண்ட இராவணன் அம் மலையை எடுக்கச் சிவ பெருமான், அவ்வரக்கனின் முடிகள் நையுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர். கழிப்பாலையில் மேவும் அப்பெருமான், புன்மையான இத்தேகம் நீங்க வழி வகுத்த தன்மையில் நாம் செல்வோமாக.

திருச்சிற்றம்பலம்

13. திருப்புறம்பயம் (அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

127. கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தம்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருஆலவாய் (மதுரை) கோட்டூர், கொடுங்கோளூர், குளிர்ச்சிமிக்க வளவி, திருக்கண்டியூர், திருமருகல், திருவொற்றியூர், திருப்பழனம், திருப்பாசூர், பழையாறு, பாற்குளம் ஆகிய தலங்களில் உறைபவர். அவர், திருநீறு அணிந்த திருமேனியுடையவராகிப் பூதகணங்கள் சூழப் புறம்பயம் நமது ஊர் என்று உரைத்தருளி என உள்ளத்தைக் கவர்ந்து சென்றனரே. இது அகத்துறையில் பாற்பட்டு ஈசனை நினைந்து ஏத்தும் பெற்றியினை ஓதுதலாயிற்று.

128. முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், முற்றிய யோகிய போன்று திருமேனி முழுமையும் திருவெண்ணீறு பூசியுள்ளவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சூடி முப்புரிநூல் அணிந்து விளங்பவர். அப்பரமனை எண்ணி, உறங்குவது போன்று பாசாங்கு செய்ய, அவர் என் கையில் அணிந்துள்ள வளையல்களை ஒவ்வொன்றாக எண்ணி மேவ, நான் பேரின்ப மயக்கத்தில் திளைத்தவளாகி, அப்பெருமானையன்றி வேறொரு துணை இல்லை என மகிழ்ந்தேன். அத்தன்மையில், பாம்பினை அணிந்த அவர், பூதகணங்கள் சூழத் தமது ஊர் புறம்பயம் என உரைத்துச் சென்றனரே. இது, அகத்துறையின்பால்பட்டு ஈசனை ஏத்தி மகிழ்தலாயிற்று.

129. ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர
ஐந்தயைமா சுணங்கொண்டம் பொற்றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபருமான், உலகத்தார்க்கு ஆகாத நஞ்சினைத் தான் உட்கொண்டு அருள் புரிந்தவர்; அந்தி வண்ணம் போன்ற சிவந்த திருமேனியுடையவர். ஐந்தலை நாகத்தைத் தோளின்மீது அணியாக விளங்கச் செய்பவர். திருவோடு ஏந்திப் பலியேற்பவர். அவர், பலியேற்க இல்லம் புகுந்து வினவியும் எதனையும் ஏற்கவில்லை. என் கண்ணுள் புகுந்து விளங்குபவர் ஆயினர். பின்னர் தமது ஊர் புறம்பயம் என்று உரை செய்து பூத கணங்கள் சூழப் போயினரே.

130. பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்
பன்முகில்போல் மேனிப் பவந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத்துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கேதையருந் தாமுமெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி, முகில் போன்ற கண்டம் உடையவராகித் திருநெய்த்தானம், திருச்சோற்றுத்துறை, பரிதி, நியமம், திருப்பாச்சிலாச் சிராமம், திருத்துருத்தி, திருநீடூர், திருக்கழுக்குன்றம், திருநாகைக் காரோணம் ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர். அவர் உமாதேவியாருடன் தாம் இருக்கின்ற ஊர் புறம்பயம் என உரைத்துப் போயினரே.

131. செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தலைமாலையைக் கையில் ஏந்திருப்பவர்; மண்டையோடுகளை மாலையாகக் கழுத்தில் தரித்துள்ளவர்; யானையின் தோலைப் போர்த்தியுள்ளவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; மானைக் கரத்தில் ஏந்தியவர்; தவத்தையுடைய தேவர்கள் அறுபதின்மர் மற்றும் ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்சியை அருளிச் செய்தவர்; அறநூல்களை ஓதியருளியவர். அப்பெருமான் புலித்தோலை உடுத்தியவராகி என்னுள்ளத்தைக் கவர்ந்து கொண்டு புறும்பயம் நம்மூர் என உரைத்தருளிப் போயினரே.

132. நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென்றெழுந்திருந்÷ன் சொல்லமாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினையுடைய கண்டத்தினர்; திருவெண்ணீறு தரித்தவர்; புலித்தோல் ஆடையின் மீது நாகத்தை அழுந்தக் கட்டியுள்ளவர்; பஞ்சு போன்ற மென்மையான விரல்களையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், தான் திருப்பராய்த்துறையில் இருப்பதாக உரைத்தருளினர். பவள வண்ணத்தினராகிய எழுந்திருக்கச் சடைமுடியின் மீது கங்கை தரித்த அவர், நம்மூர் புறம்பயம் என உறை செய்தவராய்ப் போயினரே.

133. மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே எனன்றோர் மழுலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறுகொண்டு
திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மான் ஏந்திய கையினர்; மழு ஏந்தியவர்; தான் திருமறைக் காட்டில் உள்ளவர் என்று கூறி இனிமையாகப் பேசியவர்; திருநீறு அணிந்தவராகி மகளிர்பால் சென்று இனிது நோக்கியவர். அவார், பாம்பினை இடையில் கட்டியவராகிப் பூத கணங்கள் சூழ விளங்கி, தமது ஊர் புறம்பயம் என உரைத்துப் போயினரே.

134. நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிறைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றமுந் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான் பல ஊர்கள் திரிந்து சென்று பலியேற்பவர்; மகளிர் அளிக்கும் பொருள்களுடன் நிறையும் கொள்ளை கொள்பவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து கொடுகொட்டி, கொக்கரை (சங்கு) ஆகியன முழக்குபவர், குடமூக்கில் வீற்றிருப்பவர்; திருநல்லூரில் உறைபவராகித் திருநறையூரில் உமாதேவியோடு வீற்றிருப்பவர்போலத் திருவேடம் தாங்கியவர். அவர், பூத கணங்கள் சூழப் போந்து தமது ஊர் புறம்பயம் என உரைத்து எனது உள்ளத்தைக் கவர்ந்து சென்றனரே.

135. விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் திருநீறு அணிந்தவர்; ஆமையோடும் வெண்தோடும் அணிகலனாகக் கொண்டவர்; இடக்கயில் வீணையேந்தியவர்; சடைமுடியில் கங்கையும், சந்திரனும் விளங்குமாறு செய்தவர்; செந்தீ வண்ணத் திருமேனியுடையவர்; உமாதேவியை ஒருபாகமாக உடையவர். மேன்மையான இடத்தில் நடனம் புரிபவர். அப்பெருமான் இடப வாகனத்தில் ஏறிஅமர்ந்து பூதகணங்கள் சூழ மேவித் தமது ஊர் புறம்பயம் என உரøத்தருளியவராகி, என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு சென்றனரே.

136. கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கினவி நாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

தெளிவுரை : தேவர்களின் மன்னனாகிய இந்திரன், குமரக்கடவுள், விநாயகர், பிரமன், திருமால் ஆகியவர்கள் போற்றி ஏத்த, ஈசன், இசைப் பாடல்களைப் பாடியும் எதற்கு ஏற்ப ஆடியும் பூத கணங்கள் சூழ்ந்து மேவ, அழகிய கொன்றை மலரைத் தரித்து விளங்குபவராகி வந்தனர். அவர் என்னுள்ளத்தைக் கவர்ந்து தமது ஊர் புறம்பயம் என உரை செய்தவராகிப் போயினரே.

திருச்சிற்றம்பலம்

14. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

137. நினைந்தருளும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்த்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களின் மனமானது அன்பின் வயத்ததாக இளகுமாறு செய்பவர்; தீய வினைகளைத் தீர்ப்பவர்; சினம் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர்; தேவர்களால் ஏத்தப் பெறுபவர். அப்பெருமான் தனது தேன் துளிர்க்கும் மலரன்ன திருவடியை என் தலையின் மேல் வைத்து தீக்கை செய்தார். அவர் நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார். நல்லூர் என்னும் திருத்தலப் பெயர்ச் சிறப்பும் அருளிச் செயலின் சிறப்பும் நல்ல தன்மையுடையது என்னும் கருத்து அமைய நல்லவாறே என உணர்ந்தருளிய நயமும் காண்க.

138. பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்நலந்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர்; புலித் தோலை உடுத்தியவர்; கங்கையைத் தரித்தவர்; மழுப்படையுடையவர்; காதில் குழையுடையவர்; சந்திரனைத் தரித்துள்ளவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; யானையின் தோலை உரித்தவர்; வெண்ணூல் அணிந்த திருமார்பினர்; அவர் நன்னலத்தைப் புரியும் திருவடியை என் தலைமீது வைத்து அருள் புரிந்தவர். அவர் நல்லூரில் மேவும் பெருமான் ஆவார்.

139. தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியில் கொன்றை மலரைச் சூடியவர்; எருக்க மாலை அணிந்தவர்; கங்கை, ஊமத்தமலர், பாம்பு ஆகியவற்ற உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; மேரு மலையை வில்லாகவும், மலைமகளைத் திருமேனியில் ஒரு பாகமாகவும் உடையவர். அப் பரமன் தனது திருவடியை என் தலைமேல் வைத்து அருளிய நல்லூர்ப் பெருமானே ஆவார்.

140. வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமேல் லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : ஈசன், வில் போன்ற புருவ எழில் கொண்ட கங்கையைச் சடையின்மீது வைத்தவர்; மேருவை வில்லாகக் கொண்டவர்; திருக்கயிலையைத் தனது ஊராகக் கொண்டவர்; கடவூரில் வீற்றிருப்பவர்; சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள்களை அறியுமாறு செய்தவர்; சுடலையின் சாம்பலைப் பூசியவர்; துறவின் நிலையை வைத்தவர். அப்பெருமான், திருவடியை என் தலையின் மீது சூட்டியருளிய நல்லூர்ப் பெருமான் ஆவார்.

141. விண்ணுரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழு மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஆகாயத்தில் திரிந்து கொடுமைகள் செய்த முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; தொழுகின்ற அடியவர்களின் வினையை அறுமாறு செய்பவர்; துறத்தலைப் புரியும் தன்மையில் பற்றறுப்பவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; நறுமணம் கமழும் இதயத் தாமரையில் விளங்குபவர்; நெருப்பும் வைத்திருப்பவர்; கங்கை தரித்தவர்; கயிலையில் திகழ்பவர்; திசைகள்தோறும் விளங்கித் தேவர்கள் தொழுது ஏத்துகின்ற திருவடியை எனது தலையின்மீது வைத்தவர். அவர் நல்லூரில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

142. உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தவர்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங்கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியும் வளவ வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், உலகத்தில் உயிரானது வினைக்கு ஏற்ப ஏழுவகையான பிறவிகளைக் கொள்ளுமாறு வைத்தவர்; உயிரைத் தோற்றம் செய்தவர்; உயிரானது ஏகுமாறு செல்லும் நற்கதியை வைத்தவர்; தேவர் கணங்களைப் படைத்தவர்; தேவர்களால் அறிய முடியாதவாறு முறைவும் படைத்தவர்; குறைந்த சந்திரனை வளருமாறு வைத்தவர்; சினம் காமம் முதலான ஆறு பகைகளும் சிறவாத நெறியைப் படைத்து, அதில் சிறக்குமாறு புரிபவர். அப்பெருமான் திருவடியை என் தலைமீது பதித்து அருள் புரிந்தவர். அவர் திருநல்லூரில் மேவும் ஈசன் ஆவார்.

143. மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : ஈசன், மாறுபாடு கொண்டு போர் செய்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; ஒளி திகழும் சடைமுடியின் மீது நாகத்தை வைத்துள்ளவர்; திருநீறு அணிந்த திருமேனியுடையவர்; கையில் நெருப்பு ஏந்தி ஆடுபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; திருக்கோயில்கள் தோறும் வீற்றிருப்பவர்; கங்கை தரித்தவர்; தேவர்கள் பக்தியுடன் பரவி ஏத்துமாறு புரிந்தவர். அவர் நறுமணம் கமழும் மலர்த் திருவடியை என் தலையின் மேல் வைத்தவர். அப்பெருமான் நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

144. குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளிவிடம் வைத்தார்எண்டோள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தாரிந்நாள்
நலங்கிளருத் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பூவுலகத்தில் மலைகளும் கடல்களும் விளங்குமாறு செய்தவர்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் அரவத்தை உடையவர்; திருவேடம் கொண்டு மேவுபவர்; நீலகண்டராகத் திகழ்பவர், எட்டுத்தோள்களை உடையவர். நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு (ஆகாயம்) என யாவும் கலந்து மேவுபவர்; இந்நாள், என்னை நினைந்து திருவடியை என் தலைமேல் வைத்தவர். அப்பெருமான் நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

145.சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல் வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சூரிய சந்திரர்களை வானில் திகழ வைத்தவர்; எண் திசைகளும் மேல், கீழ் என இரண்டும் ஆகப் பத்துத் திசைகளும் திகழப் புரிபவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; தவச்சீலமும், குருமுகமாக உணர்த்தப்படுகின்ற மறைபொருளும் நிலவுமாறு செய்பவர்; காலனைக் காலால் உதைத்து அழித்த பெருமையுடைய திருவடியுடையவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர். அவர், திருவடி மலரை என் தலைமேல் சூட்டியவர்; அப்பெருமானை திருநல்லூரில் மேவும் ஈசன் ஆவார்.

146. பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய்வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
ஆடுசுடலைப் பொடிவைத்தார் ஆகும்.
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சடைமுடியின்மீது, பாம்பு, சந்திரன், கங்கை, கொன்றை மலர் ஆகியனவற்றைக் கொண்டு விளங்குபவர்; பணிந்து ஏத்தும் வானவர்களுக்கு நற் பரிசாக இன்பத்தை வழங்குபவர். சுடலையின் சாம்பலை அணிபவர்; அழகிய திருக்கோலம் உடையவர். ஓம்புவதற்கு அரியதாகிய தீய வினைகளைத் தீர்ப்பவர்; உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், தேவர்களாலும் நம்மாலும் பரவப்படுபவர்.அவர், திருவடியை என் தலையின் மீது வைத்தருளியவர். அப்பரமன் நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

147. குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
ஒருவிரலா லறுவைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்.
பூகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந்த திருவடியென் தலைமேல் வைத்தவர்.
நல்லூரெம் பெருமானானர் நல்ல வாறே.

தெளிவுரை : சிவபெருமான் அலைவீசுகின்ற ஏழு கடல்களைப் படைத்தவர்; ஒளிதிகழும் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளும் முடியும் ஒரு விரலால் அழுத்தி நையுமாறு செய்தவர்; இறைவா என்று அவ்வரக்கன் ஏத்திப் புலம்ப அருள் தன்மையுடன் போர்வாசனை அளித்தவர்; புகழ் முதலான செல்வங்களைக் கொள்ளுமாறு செய்தவர். அப்பரமன் தனது திருவடியை என் தலை மேல் வைத்தவர். அவர் நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

15. திருக்கருகாவூர் (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

148. குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான் வண்ணங்களையுடைய சோலையாகவும், வயிரம் போன்ற உறுதித் தன்மையாகவும், கூறுகின்ற விண்மீன் என விளங்கும் நாளாகவும், அந்நாளுக்கு உரிய கிழமையாகவும், கோளாகவும் திகழ்பவர்; வாயினால் பருகாத அமுதமென உள்ளத்துள் மேவிப் பேரின்பத்தை அருளிச் செய்பவர்; பாலில் மறைந்தொளிரும் நெய்யாகவும், பழத்தின் சுவையாகவும் விளங்குபவர்; பாட்டில் மேவும் பண்ணாகத் திகழ்பவர்; உமாதேவியைத் திருமேனியில் கூறாக உடையவர்; நாவானது உரை செய்து ஏத்துமாறு உள்நின்று இயக்குபவர்; அப்பெருமான், உலகமெல்லாம் தோன்றுவதற்கு உரிய கருப்பொருளாகி, முன் விளங்கும் முதற்பொருளாகவும். அவர், அடியவர்களுக்குக் கண்போன்று மேவும் ஒண்பொருளாகக் கருகாவூரில் வீற்றிருக்கும் எந்தையாவார்.

149. வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் வித்தாகவும், முளையாகவும், வேராகவும் விளங்குபவர்; தமது சங்கல்பத்தின்படி எத்தகைய திருவடிவும் எடுக்கவல்லவர்; பத்தியுடன் ஏத்தும் அடியவர்களுக்கு நற்பாங்குடன் விளங்கி அருள் புரிபவர்; பால் போன்ற திருநீற்று வண்ணமாகத் திகழ்பவர்; மேலான சோதி வடிவானவர்; தேவர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து ஏத்தினாலும், அவர்களுக்குத் தோற்றம் நல்காதவராகி என் உள்ளத்தில் மேவுபவர். அப் பெருமான், காணற்கரிய ஒண்பொருளைக் காட்டும் கண்ணாக அடியேற்கு விளங்குபவராய்க் கருகாவூரில் வீற்றிருக்கும் எந்தையாகுபவர்.

150. பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், மலராகவும், மலரின் வண்ணமாக (நிறம்)வும், அதன் நறுமணமாகவும் விளங்குபவர்; யாவற்றுக்கும் தலைமையாகவும், உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; எல்லாச் சமயங்களுக்கும் முழுமுதல் தெய்வமாக, அவ்வத் திரு நாமங்களுடன் திகழ்பவர்; ஏத்தி வணங்காதவர்களுக்குத் துன்பங்களையும் ஏத்தி வணங்காதவர்களுக்குத் துன்பங்களையும் இடையூருகளையும் தருபவர்; என்னுடைய நெஞ்சுள் நிலிக் காத்தருள் புரிபவர்; காலன், சார்ந்து, வந்து உயிரைக் கவர்ந்து செல்லாத வண்ணம், தனது அடியவர்களைக் கண் போன்று காத்தருள்பவர். அப்பரமன், கருகாவூரில் வீற்றிருக்கும் எந்தையாவார்.

151. இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்ல லறுப்பானுமாம்
ஆகாச மூத்தியாம் ஆனே றேறும்
குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணுங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், காலப்பொழுதுகளின் இரவாகத் திகழ்பவர்; இரவில் நடனம் புரிபவர்; எட்டுத் திக்குக்களுக்கும் தலைவர்; என்னுடைய உள்ளத்துள் விளங்குபவர்; அரவத்தை ஆபரணமாகத் தரித்தவர்; அடியவர்களுடைய இடர்களைத் தீர்ப்பவர்; ஆகாயத்தில் மூர்த்தியாக விளங்குபவர்; இடபத்தில் வீற்றிருப்பவர்; குருவாக விளங்குபவர்; கூற்றுவனை உதைத்தவர்; ஏத்தி வழிபடாத வஞ்சகர்களுக்கு எக்காலத்திலும் தோற்றப்படாதவர்; அன்புடையவர்களுக்கு என்றும் எளிமையானவர். அவர் கண் போன்று விளங்கிக் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தந்தையே ஆவார்.

152. படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாளை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், உலகைப் படைக்கும் பிரமனாகவும், பூமியைக் குடைந்து சென்ற திருமாலாகவும் திகழ்பவர்; தனது பெருமையை ஏனையோர் முழுமையும் அறியாதவாறு மேவி விளங்குபவர்; பகைவர்களுடைய முப்புரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; சூலம், மழு, நாகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குபவர். இடபத்தை வாகனமாக உடையவர்; வஞ்சனையுடைய நெஞ்சினார்களுக்குப் புலனாகாதவர். அப்பெருமான், எனக்குக் கண் போன்று விளங்கிக் கருகாவூரில் வீற்றிருக்கும் எந்தையாவார்.

153. மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் செல்வம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் மூல மூர்த்தியாக விளங்குபவர்; யாவற்றுக்கும் முற்பட்ட காலத்தவர்; மூப்பில்லாதவர்; தன்னை அடைந்த அடியவர்களுடைய இடர்களைத் தீர்க்கும் செல்வர்; செம்மையுறு ஞாயிற்றின் சுடரும் சோதியும் ஆகுபவர்; திருமாலாகவும், உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்குபவராகவும் திகழ்பவர்; மன்றில் திரு நடனம் புரிபவர்; வானவர்களுக்குக் கால எல்லையாக விளங்குபவர்; மார்க்கண்டேய முனிவரைக் காத்தருளும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்து அழித்தவர். அவர் கண் போன்று விளங்கிக் கருகாவூரில் மேவும் எம் தந்தை ஆவார்.

154. அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளானுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் கட்டி விளங்குபவர்; ஆல் நிழலில் மேவி இருந்து அறப் பொருள்களை உரைத்தவர்; திருவாதிரை நாளுக்கு உரியவர்; கங்கை விளங்கும் சடைமுடியின் மீது சந்திரனைச் சூடியவர்; தீவினைகளைத் தீர்த்தருள்பவர்; என் சிந்தையில் குடிகொள்பவர்; போற்றி ஏத்தி வழிபடும் கர்ம பூமியாகிய இவ்வுலகில் மாந்தர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவர்; உமா தேவியாரைப் பாகம் கொண்டு விளங்குபவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர். அப் பெருமான் கருகாவூரில் வீற்றிருந்து கண் போன்று விளங்கும் என் தந்தை ஆவார்.

155. துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம்
கொடையானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், உடுக்கையாகவும் அதன் ஒலி முழக்கமாகவும் ஆனவர்; ஒருவர் உரைக்கும் சொல்லின் உண்மையையும் அதன் தகுதியையும் நன்கு அறிபவர்; நன்னெறியாக விளங்குபவர்; பாவங்களைத் தீர்ப்பவர்; பால் போன்ற வெண்மையான திருநீற்றைத் தரித்துள்ளவர்; பரஞ் சோதியாய்த் திகழ்பவர்; கொடிய தன்மையுடைய கூற்றுவனை உதைத்தவர்; ஏத்தித் துதியாத கீழோர்களுக்குக் கடுமையானவராகிக் காட்சிக்கும் அரியவர். அப் பெருமான், என் கண்போன்று விளங்கும் தந்தையாய்க் கருகாவூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

156. விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், வண்ணமிகு வடிவத்தையுமிழ்க்கும் சோதியானவர்; தேவர்களாலும் அறிய முடியாதவர்; தனது திருக்கரத்தால் யானையின் தோலை உரித்தவர்; பலவிதமான தாளங்களுக்கு ஏற்பத் திருநடனம் புரிபவர்; ஐம்பூதங்கள், இருசுடராகிய சூரிய சந்திரர், ஆன்மா என விளங்கும் அட்ட மூர்த்தியானவர்; எட்டுத் தோள்களை உடையவர்; என் உச்சியின் மேலாக விளங்கும் தலைவர்; அழகிய உருவத்தைக் கொண்டு, பிறரை மயங்கச் செய்து துன்புறுத்தும் முன்மதனை எரித்தவர். அப்பெருமான், கண் போன்று விளங்கிக் கருகாவூரில் வீற்றிருக்கும் என் தந்தை ஆவார்.

157. பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்ச்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியாத் தீமூட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தைனை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தா தானே

தெளிவுரை : சிவபெருமான், கருட வாகனத்தையுடைய திருமால் இடபமாக விளங்கி மேவ, அதனை வாகனமாகக் கொண்டவர்; திருமாலின் உள்ளத்தில் தியானப் பொருளாகத் திகழ்ந்து அருள் புரிபவர்; அசுரர்களின் கோட்டைகள் மூன்றினையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; தாமரை மலரில் விளங்கும் பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றினைக் கொய்தவர்; நீலகண்டம் உடையவர். அப்பரமன் கண் போன்று விளங்கிக் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தந்தை ஆவார்.

158. ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூர் ரெந்தை தானே.

தெளிவுரை : சிவபெருமான், பகைத்துச் சென்ற அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின்னர் அவனுடைய இசையைக் கேட்டு இன்னருளைப் புரிந்தவர். ஐந்து புலன்களை அறுத்தவர்; முத்தி உலகமாகத் திகழ்பவர்; காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் கண் போன்று விளங்கிக் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தந்தை ஆவார்.

திருச்சிற்றம்பலம்

16. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

159. சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தம் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமுருது மேவிய ஈசனாரே.

தெளிவுரை : சிவபெருமான், சூலப்படையுடையவர்; சந்திரனைச் சூடியவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; மந்திரச் சொல்லாகவும், தந்திரம் எனப்படும் ஆகம நூலாகவும் விளங்குபவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு நீலகண்ட ராகியவர்; ஆன்மாவைப் பற்றியுள்ள வினைகளைத் தீர்க்கும் விகிர்தர்; உமா தேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அவர் இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

160. காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை யீருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப் படுவார் போலும்
திசையணைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை தரித்தவர்; யானையின் தோலைப் போர்த்தியுள்ளவர்; உலகோரால் பரவிப் போற்றப்படுபவர்; எல்லையயற்ற ஊழிக்காலங்களையும் கடந்து விளங்குபவர்; யாவராலும் சிறப்புடன் வணங்கப்படுபவர்; எல்லாத் திசைகளிலும் வியாபித்து இருப்பவர். உமா தேவியைப் பாகம் கொண்டு விளங்குபவர்; அவர், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

161.வேதங்கள் வேள்வி யந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய் புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களையும் அதன் வழி மேவும் வேள்விகளையும் படைத்தவர்; போக பூமியாகிய விண்ணுலகமாகவும், கர்ம பூமியாகிய மண்ணுலகமாகவும் விளங்குபவர்; ஐம் பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்துமாகும் தொன்மையானவர்; புகழ் மிகுந்து வளரும் ஒளியாகித் திகழ்பவர்; யாவராலும் ஏத்தப்பெறும் திருவடிப் பெருமையுடையவர்; பக்தர்களுக்குப் பேரின்பத்தை அருளிச் செய்பவர்; தன்னை வணங்குபவர்களின் துன்பங்களைப் போக்குபவர். அப்பெருமான், இடைமருதில் மேவும் ஈசன் ஆவார்.

162. திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தம் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ண யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சலனமற்ற உறுதியான பண்பினர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; தக்கனது வேள்வியை அழித்தவர்; பெருமையுடைய வானில் விளங்குபவர்; பண்ணின் வழி அமைந்த பாடலும், அதற்குரிய ஆடலும் விளங்கும் திருப்பரங் குன்றத்தில் வீற்றிருப்பவர்; எட்டுக் குணங்களை உடையவராகி, அளவுக்கு அடங்காது எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவர். அப் பெருமான், இடைமருதில் மேவும் ஈசன் ஆவார்.

163. ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியான பாங்க ராகிப்
படுவெண் தலையிற் பலிகொள் வாரும்.
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்õல மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், குரங்குகள் மேவ மேகத்தை நோக்கும் சோலைகளும் உயர்ந்த பொழில்களும் உடைய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவர்; உமாதேவியாரை உடனாகக் கொண்டவர்; பிரமகபாலம் ஏந்திப் பலியேற்பவர்; அசுரர்களுடைய முப்புரங்களை எரித்தவர்; திருவாரூரில் கச்சித் திருவேகம்பத்திலும் மேவி விளங்குபவர்; யாவும் ஆகுபவர், அப்பெருமான், இடை மருதில் ஈசன் ஆவார்.

164. ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்.
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பதினாறு பேறுகளானவர்; பதினெட்டுக் கணங்களாக விளங்குபவர்; பன்னிரு ராசிகளாகத் திகழ்பவர்; செய்கின்ற வினைகளும் அதற்குரிய நற்செயல்களும் ஆகுபவர்; எல்லாத் திக்குகளாகவும் விளங்குபவர்; அழகிய கொன்றை மலர் அணிந்த சடை முடியுடையவர்; திருநடனம் புரிபவர்; தன்பால் அம்பு தொடுத்த மன்மதனை எரித்தவர்; அப்பெருமான், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

165. பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆத்ம தத்துவம் இருபத்தி நான்குடன், உயிர் எனவும், மற்றும் சுத்த தத்துவம் வித்தியா தத்துவம் எனத் தத்துவங்கள் முப்பத்தாறாக விளங்குபவர்; அறம் பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நிலையாகுபவர்; குண நாட்டமாகிய பேறு, இழப்பு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என ஆறாகி விளங்குபவர்; தெளிவாகிய ஞானம் பெருக்கும், கேட்டல், கேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல், சிந்தித்தல் என ஐந்தாகுபவர்; சமித்துக்களில் எருக்கும், நாயுருவி, அரசு, வன்னி, தருப்பை என ஐந்தாகுபவர்; திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; கதியெனப்படும் தேவகதி, மக்கட்கதி, விலங்கின் கதி, நரக கதி ஆகியவற்றுடன் பரகதியெனும் ஐந்து கதியாகுபவர்; ஒளி திகழும் இதயத் தாமரையில் இனிது விளங்குபவர். அப்பெருமான், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

166. தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டாம் போலும்
ஏலங் கமழ்குழலான் பாகம் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தோலாடை உடுத்திப் பொலிய விளங்குபவர்; அரவத்தை இடையில் கட்டிய சோதி வடிவானவர்; ஆலகால விடத்தை அமுதமாகக் கொண்டு உண்டு உகந்தவர்; அடியவர்களுக்குச் சுவை மிகுந்த இனிய அமுதமாக விளங்கிப் பேரின்பத்தை அளிப்பவர்; காலனை உதைத்து அழித்த திருக்கழலை உடையவர்; கயிலை மலையைத் தமது இடமாகக் கொண்டவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

167. பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றைமாலை தரித்தவர்; வேற்படை போன்ற விழியுடைய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; அந்தியில் மேவும் செவ்வானத்தின் வண்ணம் உடைய அழகர்; நீல கண்டம் உடையவர்; மண்ணுலகில் தோன்றும் பிறப்புக்கும் இறப்புக்கும் உரியவராகி இடரைத் தீர்ப்பவர். அப்பெருமான், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

168. கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை யேற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

தெளிவுரை : சிவபெருமான் கொன்றை மாலையும், வில்வ மாலையும் கங்கை திகழும் குளிர்ந்த சடையில் தரித்துள்ளவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; நெருப்பின் வடிவமானவர்; இராவணன், அலறி விழுமாறு கயிலை மலையைக் காலால் அழுத்தியவர்; கபாலம் ஏந்திப் பிச்சையேற்று உண்பவர். அப் பெருமான், இடை மருதில் மேவும் ஈசன் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

17. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

169. ஆறுசடைக் கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடைய ரம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதம்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; கையில் நெருப்பேந்தியவர்; அழகுமிகுந்தவர்; சூலம், மழு ஆகிய படைக் கலன்களை உடையவர். அழகிய தோளின் மீது திருவெண்ணீறு பூசி இடபத்தில் ஏறிப் பலி ஏற்பவர்; பூத கணங்கள் சூழ விளங்குபவர்; கோவணத்தை அணிந்துள்ளவர்; ஆலத்தைக் கண்டத்தில் கொண்டுள்ளவர்; யாவற்றுக்கும் இறுதியாகவும் நடுவாகவும் முதலுமாகவும் விளங்குபவர். அப்பெருமானை இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

170. மங்குல் மதிவைப்பவர் வான நாடர்
மடமா னடைமுடையர் மாத ராளைப்
பங்கின் மிகவைப்பவர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையார் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவ ரென்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், வானில் திகழும் சந்திரனைச் சடை முடயில் சூடியவர்; மேன்மையை விரும்புபவர்; மானை ஏந்தியவர்; பால் போன்ற திருவெண்ணீறு பூசியவர்; வெண்மையான மாலை அணிபவர்; உமா தேவியைப் பாகங் கொண்டவர்; அடியவர்களின் பாவங்களைப் போக்குபவர்; சங்குகளும் கடல் அலைகளும் பரவும் திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்; எல்லா இடங்களிலும் திரிந்து பலியேற்பவர்; என்னுள்ளத்துள் நீங்காது விளங்குபவர். அப்பெருமான், இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

171. ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், கல்லால் நிழலில் வீற்றிருப்பவர்; வானில் திகழ்பவர்; கயிலையின் உச்சியில் விளங்குபவர்; ஆணாகவும் விளங்குபவர்; பெண்ணாகவும் உள்ளவர்; கால அளவைக் கடந்து நிற்பவர்; நீல கண்டம் உடையவர்; கருதும் கருத்திற்கு அப்பாற்பட்டவராய் எல்லை கடந்து விரிபவர்; அறியாமையுடையவர்க்குச் சேய்மையில் உள்ளவர்; பலவகையான வடிவழகு உடையவர் இடபத்தை வாகனமாக உடையவர்; மழுப்படையுடையவர்; திருக்கோழம்பத்தில் வீற்றிருப்பவர்; நறுமணம் கமழும் திரு ஈங்கோய் மலையில் மேவுபவர். அப் பெருமான், இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

172. தேசர் திறம்நினைவார் சிந்தை சேரும்
செல்வர் திருவாரூர் சென்று முள்ளார்
வாச சலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேச ரடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கள் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளியுடையவர்; அருளிச் செயல்களை ஏத்திப் போற்றி வழிபடும் அடியவர் களின் சிந்தையில் திகழ்பவர்; திருவாரூரில் எக் காலத்திலும் விளங்குபவர்; வாச மலர் போன்ற திருமேனியில் மான்தோலைப் போர்த்தவர்; யானையின் தோலை உரித்தவர்; கண் புலனுக்குத் தோற்றம் கொள்ளாது மறைந்து விளங்குபவர்; நேயம் கொள்ளும் அன்பர்களுக்கு நல்லவர்; திருவடியை ஏத்தித் துதியாதவர்களுக்குக் கொடியாவர்; மழுப்படையுடையவர். அப்பெருமான், காவிரியைத் தீர்த்தமாகக் கொண்டு விளங்கும் இடை மருதினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

173. கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தம்நினைய கிற்பார் பாவம்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும்ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், வஞ்சனையுடைய மனத்தினார்க்குத் தோற்றம் பெறாதவர்; தன்னை ஏத்தும் அடியவர்களின் பாவத்தைத் தீர்ப்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டவர்; நான்கு வேதங்களையும் ஓதியவர்; முப்புரங்களை ஒரே சமயத்தில் எரித்துச் சாம்பலாக்கியவர்; நீண்ட சடைமுடியுடையவர்; பாய்ந்து செல்லும் இடபத்தின் மீது ஏறி எல்லா இடங்களிலும் ஐயம் ஏற்றவர்; எம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான் என்னுள்ளத்தில் நீங்காதவராகி இடை மருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர்.

174. கெடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியர் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், இடபக் கொடியுடையவர்; திருக்கூத்து ஆடுபவர்; கொன்றை மலரைச் சூடியவர்; அழகிய திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; விபூதிப் பை யுடையவர்; புலித்தோல் உடுத்தியவர்; அரவத்தை ஆபரணமாகக் கொண்டவர்; முப்புரி நூல் அணிந்தவர்; அடியவர்கள்பால் குடி கொள்பவர்; அந்தணர்கள் இயற்றும் வேள்வியின் ஆகுதியாகவும் மந்திரமாகவும் விளங்குபவர்; தேவர்கள் தொழுது போற்றுமாறு யானையில் தோலை உரித்தவர். அப்பெருமான், அனைவரும் ஏத்துகின்றவாறு இடை மருதினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

175. பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி யில்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளர்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், அம்பிகையின் எழில் வண்ணமாகிய பசுமை நிறம் உடையவர்; இளமையுடையவர்; தொன்மையானவர்; எல்லா வினைகளையும் நீக்கி ஆட்கொள்பவர்; இடையில் நாகத்தைக் கட்டியுள்ளவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; கபாலம் ஏந்திப் பலி கொள்பவர். பேரொளி திகழும் சடை முடியுடையவர்; ஏத்தி வழிபடும் திருத்தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து அருள் புரிபவர். அப்பரமன் இடை மருதினை எக்காலத்திலும் இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

176. காவார் சடைமுடியார் காரோ ணத்தர்
கயிலாயம் மன்னினார் பன்னு மின்சொல்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாகம் மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வார்
புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமயை ரெங்கும் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமானை, அடர்ந்து, சோலை போன்று விளங்கும் சடைமுடியுடையவர்; காரோணத்தில் திகழ்பவர்; கயிலையில் ஒளிர்பவர்; இனிய சொற்களால் யாக்கப்பெறும் பாடல்களின் பொருளுக்கு உரியவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவர்; நீர்வளம் உடைய திருப்புன்கூரில் வீற்றிருப்பவர்; நீர்வளம் உடைய திருப்புன்கூரில் வீற்றிருப்பவர்; முப் புரங்களை எரிப்பதற்காக மேருவை வில்லாகவும் அக்கினியை அம்பாகவும் கொண்டு விளங்குபவர். எல்லா இடங்களிலும் மேவும் அப்பெருமான், இடைமருதினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

177. புரிந்தார் நடத்தின்கட் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில்
பிரிந்தா ரகல்வாய் பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழி லோசை
யெவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநடனம் புரிந்தவர்; பூத கணங்களின் தலைவர்; திருவாரூரில் உறைபவர்; பேயுடன் பிரியாது மேவி இடுகாட்டில் ஆடுபவர்; எரியும் அனலை உகப்பவர்; ஏழு ஓசையாக விளங்குபவர்; எல்லாம் இறைவனே என ஏத்தும் அன்பர்கள்பால் விளங்குபவர்; தேவர்கள் தொழுது போற்றுமாறு விளங்கி அருள் புரிபவர். அவர் இடைமருதினை இடமாகக் கொண்டு இருப்பவர் ஆவார்.

178. விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழுபாடி எள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளஞ்ஞாண் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படையுடையவர்; நஞ்சைக் கண்டத்தில் தேக்கியவர்; திருவெண் காட்டில் விளங்குபவர்; மாலையணிந்த திருமார்பில் திருநீறு தரித்தவர்; திருமழபாடியில் வீற்றிருப்பவர்; மாகாளத்தில் விளங்குபவர்; இராவணனுடைய தோளும் முடியும் காலால் அடர்த்திப் பின்னர் அவ்வரக்கனுக்கு வரம் அருளிச் செய்தவர். அவர் இடை மருதினை இடமாகக் கொண்டு திகழ்பவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

18. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

179. வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பொழில் திகழும் பூவணத்தில் விளங்குகின்ற புனிதராகிய சிவபெருமானுக்கு, அழகிய சூலமானது விளங்கி மேவும், சடை முடியின் மீது இளமையான பிறைச் சந்திரன் விளங்கும்; கொன்றை மலர் மாலை தரிக்கவும் காதில் வெண்மையான குழையும் தோடும் விளங்கும்; எழில் திகழும் திருமுடியும், திருநீறு பூசிய திருமேனியும் நன்கு விளங்கும்.

180. ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பொழில் திகழும் பூவணத்தில் வீற்றிருக்கும் எம் புனிதராகிய சிவபெருமான், ஆணாகவும் உள்ளவர்; பெண் வடிவாகத் திகழ்பவர்; அடியவர்களுக்குச் சுவை மிகுந்த அமுதம் ஆகி, இன்பத்தில் திளைக்கச் செய்பவர்; உணவு பெறும் தன்மையில் ஊர்தோறும் திரிபவர்; ஒற்றைப் பிறைச் சந்திரனை உடையவர்; பக்தியுடன் ஏத்தாது பகைத்தவராகிய முப்புர அசுரர்களின் கோட்டைகளை மேருவை வில்லாகக் கொண்டு எரித்தவர்; மாண்டவர்களுடைய எலும்பை. அணியும் ஆபரணமாகக் கொண்டவர்.

181. கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பெல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பொழில் திகழும் பூவணத்தில் மேவும் எம்புனிதராகிய ஈசன், கல்லால மரத்தின் நிழலில் விளங்கி நின்று, சனகாதி முனிவர்களுக்கு நன்னெறிகளை உணர்த்தியவர்; நாகத்தையும் மானையும் கொண்டுள்ளவர்; இறைவனின் அடியவர்களை அணுகக் கூடாது என்று அறியாதவனாகி, மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை அடர்த்தி அழித்தவர். ஐவகை ஞான வேள்வியாகிய ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்பனவற்றால் ஏத்தும் அடியவர்பால் விளங்குபவர். அவர் எலும்பாபரணம் கொண்டு விளங்குபவர் ஆவார்.

182. படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையினொலி தோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்று
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பொழில் திகழும் பூவணத்தில் மேவும் புனிதராகிய சிவபெருமான் மழுப்படையும் மானும் உடையவர்; பன்னிரு கரங்களையுடைய முருகப் பெருமானை மைந்தராக உடையவர்; இடபத்தைக் கொடியாகவும் வாகனமாகவும் உடையவர்; நான்கு மறைகளின் ஓதப்பெறும் ஒலியாக விளங்குபவர்; திருவிழிகள் மூன்று உடையவர்; கோவண ஆடை உடையவர்; மண்டையோட்டினை மாலையாக அணிந்தவர்; பூதப் படைகள் சூழ விளங்குபவர்.

183. மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பொழில் திகழும் பூவணத்தில் மேவும் சிவபெருமான், அன்பின் மிக்க அடியவர்களுக்கு அருள் புரிபவர். சடை முடியில் சந்திரனைச் சூடியவர்; பலியேற்பவர்; கடல் நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவர்; ஆற்றல் மிக்க கங்கையைத் தரித்துள்ளவர்; விரித்து மேவும் சடைமுடியுடையவர்.

184. பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க என்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
பேராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் மேவும் சிவபெருமான், பூவுலகில் திகழ்பவர்; பல்வகையான நறுமண மலர்களைச் சூடி விளங்குபவர்; செந்தாமரை போன்ற சேவடியுடையவர்; இராவணனைக் கொன்ற இராமபிரானால் பூசிக்கப் பெற்றவர்; திருமாலுக்கு ஆழிப்படையை அருளிச் செய்தவர்.

185. தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்ம்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் மேவும் சிவபெருமான், அடியவர்களுக்கு அருள் புரிபவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பாம் கொண்டுள்ளவர; யானையின் தோலைப் போர்த்தியவர்; செஞ்சடையில் கங்கையும் பாம்பும் சந்திரனும் வைத்தவர்; பொன் போன்று ஒளிரும் திருமேனியுடையவர்.

186. செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதி பொலிந்து தோன்று
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் விளங்கும் சிவபெருமான், கழல் அணிந்த திருவடி தரிசனம் நல்குபவர்; முப்புரங்களை எரித்த வில்லுடையவர்; ஆகமத்தை உபதேசித்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; மறுபடியும் பிறவாத பேற்றினை அருள்பவர்; உமாதேவியாருடன் கங்கையுடனும் விளங்குபவர். அவர் பாம்பையும் சந்திரனையும் சடை முடியில் கொண்டு திகழ்பவராவார்.

187. அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமெனன் அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பேட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் மேவும் சிவபெருமான், உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்குபவர்; பன்றியின் கொம்பை ஆபரணமாக உடையவர்; அம்பிகை கண்டு மகிழுமாறு, திருநடனம் புரிபவர்; நவமணிகள் திகழும் வைகையின் அருள் திறமாய் விளங்குபவர்; செவ்வானம் போன்ற சோதி வடிவினர்; மலை போன்ற உறுதியான தோள்களை உடையவர்.

188. ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமுங்
குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனி னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் மேவும் சிவபெருமான், சண்டேசரின் பூசையை யேற்று மகிழ்ந்து தான் சூடிய மாலையை அளித்தருளியவர்; திருத்தொண்டர்களின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர்; வில்வமும் ஊமத்த மலரும் சடை முடியில் அணிந்து விளங்குபவர். அப்பெருமான் பூங்கணை கொண்டு தொடுத்த மன்மதனை எரித்தவர் ஆவார்.

189. ஆருருவ உள்குவார் உள்ளத் துள்மே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை
நெறுநெறன அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தெளிவுரை : பூவணத்தில் மேவும் சிவபெருமான், தன்னை வணங்கும் அன்பர்கள் நினைத்து ஏத்தும் வடிவத்தில் உள்ளிருந்து அருள் புரிபவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; இராவணனை மலையின் கீழ் நெரித்தவர்; அவர் போர்த்தன்மையுடைய கொடி வடிவத்தையுடைய கூற்றுவனை உதைத்தவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

19. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

190. முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலைமா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தானாகவே தோன்றி வெளிப்பட்ட பரம்பொருளாவர்; எல்லாப் பொருட்கும் முன்னே விளங்குபவர்; முதிர்ச்சி மிக்க சடைமுடியின்மேல் முகிழ்க்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; கொடியவர்களாகிய முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை மூன்றினையும், மேரு மலையை வில்லாகவும் வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும் கொண்டு, அக்கினி என்னும் சரத்தினால் தொடுத்துச் சாம்பலாக்கி அழித்தவர்; தூய முத்துப் போல் பல்லுடைய உமா தேவியோடு உடன் ஆடி மகிழ்ந்தவர்; தென் கூடல் திருஆலவாயில் வீற்றிருப்பவர். அப்பெருமான் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவியின் பேற்றினைப் பெற்றவனானேன்.

191. விண்ணுலகின் மேலோர்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச்ச
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணுலகில் விளங்கும் மேலோர்களாகிய தேவர்களின் தலைவர்; வானத்தில் திரிந்து கொடுமை புரிந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; பொழில் சூழ்ந்த திருப் பழனத்தில் உறைபவர்; பொன்னிறமாக விளங்கி ஒளிர்பவர்; பால் போன்ற திருவெண்ணீற்றை திருமேனியில் பூசி விளங்குபவர்; சடையுள் கங்கையைத் தரித்தவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பொருந்தி விளங்கச் செய்தவர். அப்பெருமான் கூடலில் மேவும் திரு ஆலவாயில் வீற்றிருப்பவர். அவருடைய இனிய திருவடியைச் சிந்தித்து ஏத்திப் பிறவியின் பேற்றை அடைந்தேன்.

192. நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திருளைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், சடையின்மீது கங்கையைத் தரித்தவர்; பால்போன்ற திருநீறு பூசி விளங்குபவர்; கூற்றுவனை உதைத்து அழித்தவர்; காற்றாகவும் ஒலியாகவும் மேகத்தில் தோன்றும் இடிகுரலாகவும் விளங்குபவர்; நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர். அவர் அழகிய கடலில் மேவும் திருவாலவாயில் வீற்றிருப்பவர். அப் பரமனின் இனிய திருவடியைச்
சிந்தித்து ஏத்திப் பிறவியின் பேற்றினை அடையப் பெற்றேன்.

193. வானமிது வெல்லா முடையான் தன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் தன்னைக்
கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை
யுணர்வாகி யடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், வானாகி விளங்குபவர்; அரவத்தை இடையில் கட்டியவர்; பேய்க் கூட்டம் சூழ மயானத்தில் மேவி நடம் புரிபவர்; உமா ÷திவயாரை உகந்து நோக்குபவர்; என்னைத் திருநோக்கம் செய்து ஊனத்தை நீக்கியவர்; அடியவனின் உள்ளத்தின் உணர்வாகி விளங்குபவர்; தேன் போன்று இனிக்கும் அமுதமானவர். அவர், அழகிய கூடலில் மேவும் திருவாலவாயில் வீற்றிருப்பவர். அப்பரமனின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவியின் பேற்றினை அடையப் பெற்றேன்.

194. ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை
யொற்றை வெண்பிறையானை யுமையோடென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மக்கள் மேவும் ஊர்தோறும் விளங்குபவர்; ஏழு உலகங்களும் ஆகுபவர்; ஒற்றைப் பிøச்சந்திரனைச் சூடியவர்; உமாதேவியாரை எக்காலத்திலும் நீங்காது கொண்டு விளங்குபவர்; ஏனையோருக்குக் காட்சிக்கு அரியவர்; சுடுகாட்டில் இருந்து பேய்க் கூட்டங்கள் சூழ ஆடல்புரிபவர்; தேவர்களுக்கு இனிய அமதத்தைக் கிடைக்கச் செய்தவர்; நான்முகனும் திருமாலும் வேதத்தால் ஏத்திப் போற்றுமாறு விளங்குபவர்; சிறப்புடைய கூடலில் மேவும் ஆலவாயில் விளங்குபவர்; அப்பெருமானின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறப்பின் பேற்றினைப் பெற்றேன்.

195. மூவளை மூர்த்தியை மூவா மேனி
யுடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் யாவரினும் மூத்த தன்மையுடையவர்; எக்காலத்திலும் மூப்பின் தன்மை அடையாது இளமை எழில் உடையவர்; மூன்று உலகங்களும் ஆகுபவர்; எல்லாவற்றிலும் தாமே விளங்கிப் பரவுபவர்; அடியவர்களுடைய பாவத்தைத் தீர்ப்பவர்; தன்னைக் கண்டு போற்றுவதற்கு அரியவராகிய உமா தேவியாரைத் தமது திருமேனியில் கொண்டு விளங்குபவர்; தேவரின் அச்சம் தீரக் கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு அமுதம் பெறுமாறு அருள் புரிந்தவர்; அழிகிய கூடலில் மேவும் திருவாலவாயில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவிப் பேற்றினைப் பெற்றேன்.

196. துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பந் துடைத்தாள் வல்லான் தன்னை
இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்ந்தான் தன்னை
மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும்
சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பற்றற்று மேவும் அடியவர்களின் தூய நெறியாக விளங்குபவர்; அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பவர்; இறந்தவர்களின் எலும்பை ஆபரணமாகப் பூண்டவர்; இரவில் மயானத்தில் ஆடுபவர்; ஈசனின் பெருமையை ஏத்தாது, பகைத்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; ஈசனையன்றி வேறு பற்றில்லாத அடியேற்கு என்றும் சிறப்புடன் விளங்குபவர். அவர், அழகிய கூடலில் விளங்கும் திருவாலவாயில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் இனிய திருவடியைச் சிந்தித்து, இப் பிறவியின் பேற்றினைப் பெற்றேன்.

197. வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைத் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்துநின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மனத்துள் தோன்றும் கருத்தாகவும் அதன் சொல்லாகவும் அதன் வழி மேவிச் செயல் முடிக்கும் கருத்தாகவும் இருப்பவர்; தூய பாங்குடையவர்; வெள்ளை இடபத்தை உடையவர்; சுடர் விட்டு ஒளிரும் சடை முடியின் மீது சந்திரனைச் சூடியவர்; உடன் விளங்கி நலம் புரியும் தாயாகத் திகழ்பவர்; தவ நெறியாய் விளங்குபவர்; தேவர்களாலும் உணர்வதற்கு அரியவர். அவர் அழகிய மதுரை ஆலவாயில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவியின் பேற்றைப் பெற்றேன்.

198. பகைச்சுடராய்ப் பார மறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றும்
திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இருளை நீக்கும் சுடர் போன்றவர்; பாவத்தைத் தீர்ப்பவர்; நஞ்சினைத் தான் உண்டு, தேவர்களுக்கு அமுதம் பெறுமாறு அருள் புரிந்தவர்; அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; நடு நிலை திரியாது அனைவருக்கும் அருள் புரிபவர்; பெருஞ் சோதி வடிவானவர்; தேவர்களின் தலைவராகுபவர். தேவர்களுக்கு அரியவர். அவர் அழகிய கூடலில் மேவும் ஆலவாயில் வீற்றிருப்பவர். அப்பரமனின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவியின் பேற்றைப் பெற்றேன்.

199. மலையானை மாமேரு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை யென்தலையி னுச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்கும்
துலையாக வொருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த
சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர்; பெருமையுடைய மேருமலை போன்று ஒளிர்பவர்; மென்மையான சடை முடியுடையவர்; தேவர்களின் தலைவர்; எனக்கு உச்சியாய் விளங்கிக் காத்தருள்பவர்; தனக்கு ஒப்பாக யாரும் இல்லாதவர்; மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். மேருமலையை வில்லாக உடையவர்; அவர் அழகிய கூடலில் மேவும் திருவாலவாயில் விளங்குபவர். அப்பெருமானின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவியின் பயனைப் பெற்றேன்.

200. தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய்தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தாந் தன்னை
ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை
யளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இராவணனின் பத்துத் தோளும் முடியும் நலியச் செய்தவர்; பின்னர் அவன் இசைக்கு இரங்கி அருள் புரிந்தவர்; பார்த்தனின் தவத்தினை ஏற்றுப் பாசுபதம் அருளியவர்; அன்பர்க்குப் பிரியமானவர்; அடியவனுக்கு அன்பர்; அளவற்ற ஊழிகளைக் கண்டு மேவுபவர்; பரிசுத்தமாக விளங்குபவர். அவர், அழகிய கூடலில் மேவும் திருவாலவாயில் வீற்றிருப்பவர். அப் பரமனின் இனிய திருவடியைச் சிந்தித்துப் பிறவிப் பயனைப் பெற்றேன்.

திருச்சிற்றம்பலம்

20. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

201. ஆதிக்கண் நான்முகத்தி லொன்று செனறு
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமையை மாதொருகூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் ஐந்து முகங்களில் ஒன்றைக் கொய்தவர்; திருவடியை வணங்கியேத்த அருள் புரிந்தவர்; உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டுள்ளவர்; திருமாலும் நான்முகனும் காண முடியாதவாறு உயர்ந்து ஓங்கியவர்; திருநள்ளாற்றில் விளங்குபவர். அப் பெருமானை நான் நினைத்து உய்ந்தனன்.

202. படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவொன் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மேன்மையான படைகளை உடையவர்; பாசுபத மதத்திற் கொள்ளப்படும் திருவேடம் கொண்டவர்; மன்மதனை எரித்தவர்; அடியவர்களுக்குப் பாவம் நேராதவாறு காக்கும் அரிய மருந்தாகுபவர்; தனது அடியவர்களை வா என அழைத்து அருள் புரிபவர்; சடை முடியுடையவர்; சந்திரனைத் தரித்தவர்; வெள்ளை இடபத்தை உடையவர்; அப்பெருமான், நம்பியாக நள்ளாற்றில் விளங்க, அடியேன் அவரை நினைந்து உய்ந்தனன்.

203. படஅரவ மொன்றுகொண்ட ரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
யமுதாக வுண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் ஆர்த்துக் கட்டியவர்; எல்லா இடங்களிலும் விரிந்த பரம் பொருளானவர்; திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருப்பவர்; வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகக் கொண்டு, கடையும்போது வெளிப்பட்ட நஞ்சை அமுதம் என உண்டவர்; ஆதிப் பொருளாக விளங்குபவர்; பூங்கொன்றை மாலை தரித்தவர்; மாணிக்கம் போன்று விளங்குபவர்; மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தவர். அப் பெருமான் திருநள்ளாற்றில் மேவி விளங்க, அடியேன் நினைந்து உய்யப் பெற்றேன். அமுதாக உண்டானை (1) அமுதமானது தேவர்களுக்குக் கிடைக்க வேண்டம் என்று தான் நஞ்சினை உண்டவர். (2) நஞ்சினை அமுதம் என உண்டவர்.

204. கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்ஐடு துதையப் பேசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படை ஏந்தியுள்ளவர்; நாக கங்கணமும் காதில் தோடும் உடையவர்; அங்கங்களைச் சுட்டு எரித்த மயானத்துச் சாம்பலைப் பூசிய அழகர்; அழகிய கரத்தில் சூலத்தைக் கொண்டுள்ளவர்; எலும்பு மாலை சூடியவர்; பூத கணங்கள் சூழ விளங்கி இடு காட்டில் நடனம் புரிபவர். அப் பெருமான் நள்ளாற்றில் விளங்க அடியேன் நினைந்து ஏத்தி உய்ந்தேன்.

205. உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பு மாலை அணிந்துள்ளவர்; உலகமெல்லாம் திரிபவர்; சிலந்திக்கும் பேறளித்துக் கோச்செங்கட் சோழராக அவதரிக்கப் புரிந்தவர்; திருச்சிராப்பள்ளியில் விளங்கும் சிவலோகநாதர்; கலந்த அன்புள்ளத்தினர்பால் பேரன்பு உடையவர்; திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவர்; கொன்றை மலர் தரித்துள்ளவர். அவர், திருநள்ளாற்றில் விளங்க அடியேன் நினைந்து ஏத்தி உய்ந்தனன்.

206. குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருநெறியில் நிற்கும் மாந்தராய்ப் பிறவி கொள்ளச் செய்து, பிறவித் துன்பத்தை நீக்குபவர்; உமா தேவியை இடப்பாகம் உடையவர்; புனித தீர்த்தமாக விளங்கி அடியவர்களின் மும்மலங்களை அறுப்பவர்; சந்திரனைச் சூடிய சடைமுடியுடையவர்; கருணை வயத்தராகி, அடியவர்களுக்கு அருள் புரிபவர். அவர் நள்ளாற்றில் விளங்க, அடியேன் நினைந்து ஏத்தி உய்ந்தனன்.

207. பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்த்க்கவ் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் கொன்றை மாலை உடையவர்; திருப்புறம்பயத்தில் விளங்குபவர்; திருப்புகலூரில் விளங்குபவர்; யானையின் தோலை உரித்தவர்; திருமறைக்காட்டிலும் திருவலி வலத்திலும் விளங்குபவர்; தேவர்கள் எல்லோரும் அஞ்சி ஓடுமாறு தக்கனது வேள்வியைச் சிதைத்து அவன் தலையைக் களைந்தவர்; மறையை விரித்து ஓதியனர். திருநள்ளாற்றில் அப்பெருமான் விளங்க, அடியேன் நினைந்து ஏத்தி உய்ந்தனன்.

208.சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; பவளத்தின் ஒளியாகுபவர்; முப்புரங்களை எரித்த வில்லையுடையவர்; யாவருக்கும் மேலானவர்; உமா தேவியாரைப் பாகமாக உடையவர்; கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு வேதப் பொருளை உபதேசித்தவர்; திருக்காளத்தியில் விளங்குபவர்; கயிலை மலையில் திகழ்பவர்; யாவர்க்கும் நல்லவராகிய நம்பியாவார். திருநள்ளாற்றில் விளங்கும் அப் பரமனை, அடியேன் நினைந்தேத்தி உய்ந்தனன்.

209. குன்றாத மாமுனிவர் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென்றி ருப்பார்க்கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : பதினாறு ஆண்டுகளை வாழ்நாளாகக் கொண்ட மார்க்கண்டேயரின் காலவரையறை அகலுமாறு காலனை அழித்த சிவபெருமான், முப்புர அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; அடியவர்களுக்கு வேண்டியன யாவும் தருபவர்; சிவ சிவ என்று ஏத்து திருவுடைய அன்பர்களுக்கு எல்லாக் காலங்களிலும் நன்மையே விளைவிக்கும் நம்பியாவார். அப்பெருமான் நள்ளாற்றில் விளங்க, அடியேன் நினைந்து உய்யப் பெற்றேன்.

210. இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபது தோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அரிய வரம் பெற்றுள்ளவன் என்று ஆணவமும் செருக்கும் கொண்ட இராவணனின் இருபது தோளும் நெரியுமாறு ஊன்றியவர்; அவனுடைய இனிய இசை கேட்டு இரக்கம் கொண்டு அருள் புரிந்தவர்; மறவாது ஏத்தும் பக்தர்களின் மனத்தில் சிறப்புடன் விளங்குபவர்; பெருமை மிக்க சந்திரன், கொன்றை மலர், வன்னிப் பத்திரம் ஊமத்தமலர் ஆகியவற்றைத் தரித்த தேன் மணம், கமழும் சிவந்த சடை முடியுடையவர்; திருநள்ளாற்றில் வீற்றிருப்பவர். அப் பரமனை அடியேன் நினைந்து ஏத்தி உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

21. திருஆக்கூர் (அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

211. முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : ஈசன், தாமரை, மலரை அணிந்துள்ளவர்; மூவுலகும் தாமேயாகுபவர்; தாமரை போன்று மலர்ந்த விழியுடையவர்; தாளம் இடுபவர்; அன்பர்களின் இதயத் தாமரையில் விளங்குபவர்; திருத் தொண்டர்களின் இனிய பணிகளை உகந்து ஏற்பவர்; தமது திருவடி மலரை அடியவர்களின் இதயத் தாமரையில் வைத்த அருள் புரிபவர். அப் பரமன் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசனார் ஆவார்.

212. ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : ஈசன், தாமாகவே யாவும் உணர்ந்தவராகி பிறரால் ஓதி உரைக்கப் பெறாதவர்; காதில் குழையணிந்தவர்; துன்பம் தரும் பிறவிப் பிணியிலிருந்து அடியவர்களைக் காத்தருள்பவர்; நான்கு வேதங்களுடன் ஆறு அங்கங்களையும் விரித்தவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கிக் கருமையுடைய மிடற்றையுடையவர்; தானே ஆதியாகவும் அதற்கு அளவாகவும் திகழ்பவர். அப்பரமன் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

213. மையார் மலர்க்கண்ணான் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீரேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன வெளியார் போலும்
ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவர்; நீலகண்டத்தையுடையவர்; சூலப்படை உடையவர்; எட்டுத் தோள்களும், கங்கையைச் சேர்த்த சடை முடியும் உடையவர்; கூரிய மழுப்படை யுடையவர்; சூரியனைப் போன்ற பேரொளியுடையவர்; ஐந்தலை நாகத்தை அரையில் கட்டியவர். அப்பரமன் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

214. வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கும் செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளிமிக்க மழுப்படையுடையவர்; நஞ்சினை உட்கொண்டவர்; திருநீறு பூசியவர்; முப்புரி நூல் சேர்ந்த திருமார்பினர்; கங்கை திகழும் சடைமுடியுடையவர்; நறுமணம் கமழும் கொன்றை மாலை சூடியவர்; கையில் மழுப்படையை ஏந்தியவர்; செம்பொற் கழலை அணிந்த திருவடியுடையவர். அப் பரமன் ஆக்கூரில் மேவும் தான் தோன்றீசர் ஆவார்.

215. ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழிந்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், புலித்தோலை உடையாகக் கொண்டு, பாம்பினை மாலையாக உடையவர்; மண்டையோட்டைப் பிச்சைப் பாத்திரமாக யேந்தியவர்; எலும்பு மாலை பூண்டவர்; கங்கையைச் சடையில் ஏற்றுள்ளவர்; ஐம்பூதமும் இருசுடரும் ஆகியவர். அப் பரமன், ஆக்கூரில் மேவும் தான் தோன்றீசர் ஆவார்.

216.மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலும் இறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யபப் னாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவர்; நாடும் கடலும் ஆனவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; தீவினை தீர்க்கும் நல்வினையாகுபவர்; எண்திசைகளும் ஆனவர். திருவாதிரை நாளுக்கு உரியவர். அப்பெருமான் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார். இத் திருப்பாட்டில் இத் திருத்தலத்தில் மேவும் அம்பிகையின் திருநாமம் ஓதப் பெறுவதாயிற்று.

217. மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்
குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாடல் உகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; மான்தோலை உடுத்தியவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; சடையின் மேல்பிறைச் சந்திரனைச் சூடியவர்; காலனைக் காலால் உதைத்தவர்; கயிலாயத்தைத் தம் இடமாகக் கொண்டவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை அபிடேகமாகக் கொள்பவர். அப்பரமன் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

218. கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன வொளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவர்; உண்ணுதற்கு உரியதாகாத நஞ்சை உண்டவர்; ஊழித்தீ போன்று பேரொளியானவர்; எண்ணிற்கு அடங்காத திருநாமம் கொண்டவர்; இடப வாகனத்தில் விளங்குபவர்; திருவண்ணாமலை திருவாரூர் ஆகிய தலங்களில் விளங்குபவர். அப்பெருமான் ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

219. கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழ மேவும் கொன்றை மலர் மாலை தரித்தவர்; திருமாலும் நான்முகனும் தேடியும் காணற்கு அரியவராக நின்ற நீலகண்டப் பெருமானாக விளங்குபவர்; நெருப்பு போன்ற சிவந்த திருமேனியுடையவர்; மாணிக்கம் போன்ற சுடர் விடும் எழில் வண்ணத்தைத் தனது வண்ணமாகக் கொண்டு விளங்குபவர்; அடியவர்களுக்குப் புகலிடமாகத் திகழ்பவர். அப் பெருமான் ஆக்கூரில் வீற்றிருக்கும் தான்தோன்றீசர் ஆவார்.

220. திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீயன்ன கனலார் போலும்
வையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

தெளிவுரை : பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும், தாமரைமேல் விளங்கும் பிரமனும் தேடிக் காணாதவராகிய சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும் கொண்டு அக்கினியை அம்பாகத் தொடுத்து மலை போன்ற முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர். அப்பரமன், ஆக்கூரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

22. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

221. பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், உலகத்தார் பரவிப் போற்றும் திருப்பழனம், திருப்பருப்பதம், திருப்பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; பவளக் குன்று போன்றவர்; திருமுடியில் சந்திரனைச் சூடியவர்; பல திருநாமங்களைக் கொண்டவர்; காட்சிக்கு அரியவர். அப் பெருமான், கடல் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் எல்லாக் காலங்களிலும் வீற்றிருக்கக் கண்டு தரிசிப்பீராக.

222. விண்ணோர் பெருமானை வீரட்டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களின் தலைவர், வீரட்டானத்தில் விளங்குபவர்; திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; பெண்ணாகவும் ஆணாகவும் அலியாகவும் விளங்குபவர்; தில்லை, திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய தலங்களில் விளங்குபவர்; பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர். அப்பரமன் நாகைக் காரோணத்தில் பூசிக்கப்படுபவர். அப் பரமன் நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும விளங்கி மேவத் தரிசிப்பீராக.

223. சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக் காட்டெந்தை சிவலோகனை
மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமந் தன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிறகுகளையுடைய வண்டுகள் இனிமை யாகப்பாடும் திருமறைக் காட்டில் மேவும் எந்தை சிவபெருமான் திருவாய்மூர், கீழ்வேளூர், திருவலிவலம், தேவூர், திருஒற்றியூர் ஆகிய தலங்களில் சிறப்புடன் விளங்குபவர். அப்பரமனைக் கடல் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் கண்டு தரிசிப்பீராக.

224. அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியும் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : அன்னம் திகழும் பொய்கை சூழ்ந்த அம்பர் பெருந்திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான், திருப்பாலாச்சிரமம், திருவானைக்கா ஆகிய தலங்களில் விளங்குபவர்; மூவுலகமும் தானேயாய் விளங்கும் மூர்த்தியாவர்; தனக்குரிய அடையாளமாகப் பன்மலர்களும் சூடியவர்; செஞ்சடையின்மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் காரோணத்தில் எஞ்ஞான்றும் வீற்றிருக்க கண்டு தரிசிப்பீராக.

225. நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் தன்னை
மடையிடைய வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டானைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், நற்குணப் பாங்குடைய இடபத்தை வாகனமாக உடையவர்; ஞானப் பெருங்கடலாகியவர்; நல்லூரில் வீற்றிருப்பவர்; மழுப்படை யுடையவர்; தான் ஒருவனாகத் திகழ்பவரானாலும் எல்லாமாகவும் விளங்கி மேவும் ஆற்றலால், பன்மையாம் சொல்லுக்கு உரியவராக விளங்குபவர்; திருமருகலில் திகழ்பவர்; நீல கண்டத்தையுடையவர். அப் பரமன் நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் விளங்கி மேவக் கண்டு தரிசிப்பீராக.

226. புலங்கள்பூந் தோறல்வாய் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கை
யவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், வயல்களில் தேன் மணம் கமழும் புகலியில் வீற்றிருக்கும் தலைவர்; பூம்புகார் (காவிரிப் பூம்பட்டின்த்துப் பல்லவனீச்சரம்) திருப்புன்கூர் ஆகிய தலங்களில் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; மண்டையோட்டு மாலையும், பாம்பும் அணிந்துள்ளவர்; அப் பரமன், நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் திகழக் கண்டு தரிசிப்பீராக.

227. பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோகனை
மன்மணியை வான்கடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், அழகு மல்கிய பொன் போன்ற கொன்றை மாலையுடையவர்; புண்ணிய மூர்த்தியாகியவர்; திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர்; சூலப்படையுடையவர்; பெருமையுடைய சிரப்பள்ளியில் உறையும் சிவலோகன். அவர், சுடலையில் மேவி யிருந்தும், இடபத்தில் ஏறியும் திகழ்பவர், வேதத்தில் வல்லவராகிய அப் பரமன், நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் வீற்றிருக்கக் கண்டு தரிசிப்பீராக.

228. வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் த்னன
எண்டிசையும் எரியாட வல்லான் தன்னை
யேகம்பம் மேயானை பெம்மான் தன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலத்தையும் மழுப்படையும் ஏந்தியுள்ளவர்; கோவண ஆடையுடையவர்; திருவெண்ணீற்றைப் பூசி விளங்குபவர்; யானையின் தோலைப் போர்த்தியவர்; புண்ணிய மூர்த்தியாய் விளங்கி எண் திசையும் நோக்குமாறு சுழன்று நெருப்பைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பரமன், தாழம்புதர்கள் விளங்கும் நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் வீற்றிருக்கக் கண்டு தரிசிப்பீராக.

229. சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னைத்
தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்குக் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்
பெறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருச்சோற்றுத் துறையுள் உறைபவர்; அடியவர்கள் நன்னெறியின்பால் செல்லுமாறு புரிந்து, நரகத்தில் புகாதவாறு காப்பவர்; மேரு மலையை வில்லாக உடையவர்; மீயச்சூரில் விளங்குபவர்; சனகாதி முனிவர்களுக்குக் கல்லால நிழலில் மேவி இருந்து வேதப் பொருளை உணர்த்தியவர்; தீமை புரிந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; பாம்பினை அழகிய மார்பில் ஆரமாகக் கொண்டு விளங்குபவர். அப் பரமன், உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் மேவி வீற்றிருக்கக் கண்டு தரிசிப்பீராக.

230. மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்
கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : நெஞ்சமே! சமண பௌத்த மதத்தினர் கூறும் உரைகள் மெய்ம்மையுடையனவல்ல. யானையின் தோலைப் போர்த்தி மேவும் எந்தை சிவபெருமானைப் பற்றாகக் கொண்டால், கடல் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் மேவி எஞ்ஞான்றும் வீற்றிருக்கும் அப் பெருமானைக் காணலாம்.

231. நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச்
செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக்
கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலும் நான்முகனும் தேடிச் சென்று திருவுருவத்தைக் காண முடியாதவாறு நெடிது ஓங்கியவர்; திருப்பாம்புரத்தில் மேவியவர்; பாம்பை அரையில் கட்டியவர்; பிரமகபாலம் ஏந்திப் பிச்சை கொள்பவர்; திருநின்றியூரில் விளங்குபவர். அப்பரமன், நறுமணம் கமழும் சோலை சூழ்ந்த நாகைக் காரோணத்தில் எஞ்ஞான்றும் விளங்கக் கண்டு தரிசிப்பீராக.

திருச்சிற்றம்பலம்

23. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

232. தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : உமாதேவியாரை உடனாகக் கொண்டு மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் சிவபெருமான், நன்கு தூண்டப் பெற்ற சுடர் விளக்கின் சோதியாக விளங்குபவர்; தேவர்கள் அணியும் ஒளிமிக்க சூளாமணி போன்றவர்; காண்பதற்கு அரிய கடவுளானவர்; பக்தியுடன் கருதி ஏத்தும் அன்பர்களுக்கு மிகவும் எளியவராக விளங்கித் தோன்றி மகிழ்விப்பவர்; வேண்டும் அடியவர்களுக்கு வேண்டும் அனைத்தையும் தந்தருள்பவர்; மெய்ந்நெறியாக விளங்குபவர். அவர், மாட்சிமையுடன் விரதம் மேவும் அன்பர்களின் மனத்தில் விளங்குபவர் ஆவார்.

233. கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்கும் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : உமாதேவியாரை உடனாகக் கொண்டு மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் சிவபெருமான், கையில் வீணை கொண்டு இசைப்பவர்; கபாலியாகத் திகழ்பவர்; திகழ்கின்ற சோதியாய் விளங்குபவர்; மெய்ஞ்ஞான விளக்கம் ஆகியவர்; மெய்யடியார்களின் உள்ளத்தில் விளங்குபவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; பராபரனாக விளங்குபவர்; திருப்பாசூரில் திகழ்பவர். அப் பரமன் கூரிய மழுப்படையுடையவராவார்.

234. சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், சிலந்திக்கு அருள் செய்து கோச்செங்கட்சோழனாகப் பிறக்கச் செய்தவர்; முப்புரங்களை எரித்தவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என ஐம் பூதங்கள் ஆனவர்; வடிவம் அற்றவர்; வடிவத்தில் மேவித் திருக்காட்சி நல்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; படைக்கும் தொழில் மேவும் நான்முகனும், காத்தல் தொழில் மேவும் திருமாலும் தானே என்னும் தன்மையில் மேவுபவர். அப் பரமன், தூய்மை விளங்கும் இடபத்தை வாகனமாக உடையவர் ஆவார். துக்க என்பது தொக்க என்பதன் மருஉ.

235. கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் உமாதேவியாரை உடனாகக் கொண்டு திருமறைக் காட்டில் மேவும் சிவபெருமான், சுடுகாட்டில் நடனம் புரிபவர்; காலனைக் காலால் அடர்த்தவர்; மான்தோல் தரித்தவர்; புலித்தோலை உடுத்திய புனிதர்; வெண்மையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவர். அவர் திருச்செந்தூரில் மேவும் முருகப் பெருமானின் தந்தையாவார்.


236. மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், ஒலி முழக்கம் உடைய நீராக விளங்குபவர்; தழல் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; யாவற்றுக்கும் முதற்பொருளாய் மேவுபவர்; பெருஞ் செல்வராகத் திகழ்பவர்; இனிய அடியவர்களுக்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர்; ஆரியமொழியாகிய வட சொல்லாகவும் தமிழ் மொழியாகிய தென் சொல்லாகவும் விளங்குபவர்; திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப் பரமன் களிறு போன்று வலிமையும் பெருமையும் உடையவர்.

237. ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; திரு அகத்தியான்பள்ளி, திருக்கோடிக்கரை, திருவாரூர் ஆகிய திருத்தலங்களில் விளங்குபவர்; நாடும் நற்பொருள் அனைத்தும் ஆகுபவர்; நன்மை திகழும் இப்பிறப்பும் வருபிறப்பும் ஆகுபவர். அவர், துன்பம் யாவையும் தீர்ப்பவர் ஆவார்.

238. வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் தேக்கியவர்; கயிலை மலைக்கு உரியவர்; தக்கனின் வேள்வியை அழித்தவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப் படுபவர்; திருப்பருப்பதம் என்னும் திருத்தலத்தில் விளங்குபவர். அவர், கடல் வண்ணம் உடைய திருமாலை ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர் ஆவார்.

239. அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், முத்திப் பேற்றை அளிக்கும் அமுதாகுபவர்; தேன் போன்று இனிமை பொழிபவர்; இம்மையில் நலன்களை அருள்பவர்; நெஞ்சில் இனிமை சேர்ப்பவர்; மெய்ம்மையுடைய ஞான விளக்கம் ஆகுபவர்; திருவெண்காட்டில் விளங்குபவர். அப்பரமன், அஞ்ஞானமாகிய மயக்கத்தைப் போக்கி வினைகளைத் தீர்க்கும் நல்ல மருந்தாவார்.

240. மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பாலவிருத் தனுமானான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், பிறவிப் பிணியைத் தீர்ப்பவர்; முத்தமிழும் நான்கு வேதங்களும் ஆகுபவர்; கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உணர்த்தியவர்; ஆதியும் அந்தமும் ஆவார்; பாலராகவும் விருத்தராகவும் ஆகியவர்; பவளக் குன்று போன்றவர். அப் பரமன், கொன்றை மாலை சூடியவராவார்.

241. அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவர்க்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

தெளிவுரை : மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான், நான்முகனும் திருமாலும் காணாதவாறு பெருஞ்சோதியாய் விளங்கியவர்; இராவணனைத் தனது சோதி வடிவாகிய திருவிரலால் ஊன்றி அடர்த்தவர்; அவ்வரக்கனுக்குப் பின்னர் அருள் செய்து பேரும் புகழும் பெரும் படைக்கலன்களும் வழங்கியவர். அப் பரமன், அடியவர்களின் கொடிய வினையைத் தீர்ப்பவராவார்.

திருச்சிற்றம்பலம்

24. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

242. கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மதம் கொண்ட யானையில் தோலை உரித்தவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கிய கரையுடையவராகிய நீலகண்டர்; நெற்றியில் கண்ணுடையவர்; அன்புக்குகந்த தலைவர்; ஆடுகின்ற அரவத்தைக் கையில் கொண்டுள்ளவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; சூலப் படையுடையவர்; எனது பெருமைக்கு உரியவர்; ஏழுலகமும் ஆகியவர்; சூரியனாக விளங்குபவர்; ஒளிமிக்க மழுப்படையுடையவர்; செவ்வானம் போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவர்; திருவாரூருக்கு உரியவர். அப் பரமன், என் சிந்தையாக விளங்கும் ஈசன் ஆவார்.

243. ஊனேறு படுதலைவி லுண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயாறன்காண்
அண்டன்காண் அண்டத்துக் காப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவானான்காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், ஊன் பொருந்திய மண்டையோட்டில் உணவு கொள்பவர்; ஓம் எனும் மொழியினர்; ஊழிக் காலத்தின் முதல்வனாகுபவர்; இடபத்தில் ஊர்ந்து செல்பவர்; திருவையாற்றில் விளங்குபவர்; அண்டங்களாகவும் அண்டங்களைக் கடந்தவராகவும் திகழ்பவர்; மானைக் கரத்தில் ஏந்தியவர்; ஒளி திகழும் நீல கண்டத்தை உடையவர்; பெருமை மிகுந்த தவமாகவும் தவத்தின் பயனாகவும் விளங்குபவர்; கொன்றை மலர் தரித்தவர்; திருவாரூருக்கு உரியவர். அப்பெருமான் என் சிந்தையே ஆவார்.

244. ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங்கண் மூன்றாக் கொண்டான் தான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், அக்கினியை அம்பாகக் கொண்டு மேரு மலையை வில்லாகத் தாங்கி முப்புரங்களை எரித்தவர்; வேதமாகிய இறைவன் ஆவர்; தூய சுடர் மேவும் சூலப்படையுடையவர்; சூரியனை வலக்கண்ணாகவும், சந்திரனை இடக் கண்ணாகவும். அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் உடையவர்; என்னை அடியவன் ஆகும் வண்ணத்தால் ஆட்கொண்டவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; அடியவர்களுக்கு இனிய அமுதம் போன்றவர்; நெருப்பின் வண்ணம் போன்று சிவந்த திருமேனியுடையவர்; நீலகண்டத்தையுடையவர். திருவாரூரில் மேவும் அப்பெருமான் என் சிந்தையாக விளங்குபவர் ஆவார்.

245. கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண் கொல்லைவெள் ளேற்றான்காண்
எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலு மேழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தேன் விளங்கும் மலர்சூடிக் குற்றாலத்தில் வீற்றிருப்பவர்; மழுப்படையுடையவர்; இடப வாகனம் கொண்டவர்; அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பவர்; ஏழு கடலும் மலையும் ஆகியவர்; நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவர்; பொற்றூண் போன்ற பேரொளியாய் உயர்ந்தவர்; செம்பவளக் குன்று போன்ற வண்ணம் உடையவர்; அரவும், மதியும் உடன் வைத்த முடியுடையவர். திருவாரூரில் விளங்கும் அப்பரமன் என் சிந்தையில் உள்ளவரே ஆவார்.

246. காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றியான் காண்
போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலாயத்தில் விளங்குபவர்; நீலகண்டம் உடையவர்; நெற்றயில் கண்ணுடையவர்; இடபக் கொடியுடையவர்; எண்குணங்களின் பாங்குடைய புண்ணியனர்; நீரை உறிஞ்சும் கனல் மேவும் சூலப்படையுயைடவர்; நின்மலனாகுபவர்; தனக்கு நிகர் யாரும் இல்லாதவர்; சீருடைய திருமாலைப் பாகமாக உடையவர், திருவாரூரில் மேவிய அப் பரமன் என் சிந்தையில் திகழ்பவர் ஆவார்.

247. பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிற்பிலிகாண் பெண்ணோடாணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலிகாண்
இறையுருவக் கனவளையான் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பானான் காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறைச் சந்திரனும் அரவமும் சடை முடியில் தரித்திருப்பவர்; பிறப்பில்லாதவர்; பெண்ணும் ஆணும் ஆகுபவர் நீலகண்டம் உடையவர்; திருவடியைத் தொழுது ஏத்தும் அடியவர்களின் பிறவிப்பிணியைத் தீர்ப்பவர்; உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; மண்ணுலகாகவும் மண்ணுலகத்தின் இயல்பாகவும் விளங்குபவர். திருவாரூரில் மேவும் அப்பரமன் என்சிந்தையில் திகழ்பவர் ஆவார்.

248. தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகத் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோடுகளை மாலையாகக் கொண்டு விளங்குபவர்; அன்புடையவர்கள்பால் மேவி தேவலோகத்திலும் பூவுலகத்திலும் கபாலம் ஏந்திப் பலியேற்றவர்; சலந்தராசூரனை அழிக்கும் தன்மையில் சக்கரப் படையைத் தோற்றுவித்தவர்; கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; ஐம்பூதங்களாகுபவர். வில்லேந்தி அம்பு தொடுப்பவர். திருவாரூரில் மேவும் அப் பரமன், என் சிந்தையில் திகழ்பவர் ஆவார்.

249. ஐயன்காண் குமரன்காண்ஆதி யான்காண்
அடல்மழுவான் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான் காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தலைவனாகவும், குமரனாகவும் ஆதியாகவும் விளங்குவர்; மழுப்படையுடையவர்; அளவற்ற பூதகணங்களைப் படையாக உடையவர்; மன்மதனை எரித்தவர்; வெம்மையுடையவர்; குளிர்ந்த கங்கையைச் செஞ்சடைமுடியில் தரித்தவர். திருவெண்ணீற்றுத் திருமேனியில் அருச்சுனருக்கு அருள் புரிந்தவர்; பல வண்ணங்களை உடையவர். திருவாரூரில் மேவும் அப்பரமன் என் சிந்தையில் விளங்குபவராவார்.

250. மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரை நீர்நஞ்சுண்டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கெடுங்குன்றன்காண் கொல்லை யேற்றினான் காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மலை மகளைத் தனது திருமேனியில் பாகம் கொண்டவர். மயானத்தில் விளங்குபவர்; சந்திரனைத் தரித்தவர்; கொன்றை மலர் மாலை சூடியவர்; என் இறைவர், பாற் கடலில் தோன்றிய நஞ்சினை உடையவர்; மூவிலை சூலப் படையுடையவர்; கொடுங் குன்றம் என்னும் தலத்தில் விளங்குபவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; வில்லேந்திச் சரம் தொடுக்க வல்லவர். திருவாரூரில் மேவும் அப்பரமன் என் சிந்தையில் வீற்றிருப்பவர் ஆவார்.

251. பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் கறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்ற தாதுக்களையுடைய கொன்றை மலரை மாலையாகத் தரித்துள்ளவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; திருவெண்ணீறு தரித்த திருமேனியுடையவர்; தனக்கு ஒப்பார் வேறு எவரும் இல்லாதவர்; வேதங்களை ஓதியவர்; அலைகளை வீசும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; எத் தன்மையாலும் குறைஅழித்தவர். எல்லாருக்கும் ஈசனாகத் திருவாரூரில் மேவும் அப்பரமன், எந் சிந்தையில் வீற்றிருப்பவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

25. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

252. உயிரா வணமிருந் துற்று நோக்கி
யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வமமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.

தெளிவுரை : அயிராவணம் என்னும் யானையை வாகனமாகக் கொண்டு தேவலோகத்தில் மேவிக் கொலுவீற்றிருந்து ஆட்சியைக் கொள்ளாது, இடபத்தை வாகனமாகக் கொண்டு திருவாரூரில் அருளாட்சி புரியும் அன்புக்குரிய தலைவனே ! உயிரை, நற்கதிக்கு ஆகும் வண்ணம், தேவரீரை உள்ளத்தில் பதித்து, ஒட்டி வாழ்கின்ற அடியவர்கள், தேவரீரின் அருட்பார்வை பெற்ற அருளாளர்களாவர். அவ்வாறு இல்லாதவர்கள், அத்தகைய பேற்றினை அடையாதவர்களே ஆவர். திருவாரூரில் மேவும் ஈசனைக் தரிசித்துள்ளவர் நற்கதி பெறுவார்கள் என்பது குறிப்பு.

253. எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூவி
முடியால் உறவணங்கி முற்றும் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

தெளிவுரை : நெஞ்சமே ! மகளிரும் மற்றும் இளைஞரும் நகை கொண்டு இகழும் முன்னர், வானவர்கள் போற்றி வணங்கும் ஈசனின் திருவடியை ஏத்துக. அப்பரமன், திருவாரூரில் பக்தர்கள் பூசித்து வணங்கும் பாங்கினில் வீற்றிருப்பவர் ஆவார்.

254. தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஒரூரா வுலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், தேரூர், மாவூர், திங்களூர் ஆகிய திருத்தலங்களில் திகழ்பவர்; சடைமுடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடியவர். ஒவ்வொரு ஊரில் உள்ளவர்களும் உமையாள் மணவாளனே என்று ஓதி வாழ்த்தி, ஆரூர் மேவும் பெருமானே என்று ஏத்துகின்றனர். பெருமானே ! தேவரீர் எங்குற்றீர் !

255. கோவணமோ தோலோ உடையாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வதுதான்
பூவணமோ புறம்பயமோஅன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள்சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீவண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா ளார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

தெளிவுரை : ஈசனுக்கு, உடையாவது, கோவணமோ ! அல்லது தோலாடையோ ! ஊர்ந்து செல்லும் வாகனமாவது, இடபமோ ! அல்லது யானையோ ! தலமாவது பூவணமோ ! அல்லது புறம்பயமோ ! அப் பெருமான், தீவண்ணம் போன்ற சிவந்த சடைமுடிமேல் சந்திரனைச் சூடியவர். நான்கு திசைகளுக்கும் உரிய அவர், பட்டயமாக வைத்து உள்ளவரோ ! அன்றி ஒற்றிவைத்த தன்மையோ ! அறியேன். அவர் ஊர் ஆரூர் ஆகும். இது அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட பாங்கினை எடுத்தோதுதலாம்.

256. ஏந்து மழுவாளர் இன்னம்பரார்
எரிபவள வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
வார்சடையார் வந்து வலஞ்சுழியார்
போந்தா ரடிகள் புரம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே றேறி
ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மாயமே.

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படை ஏந்தியவர்; பவளம் போன்ற வண்ணம் உடையவர்; உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு நீண்ட சடையுடையவராக, இடப வாகனத்தில் விளங்குபவர்; திரு இன்னம்பர், குடமூக்கு, திருவலஞ்சுழி, புறம்பயம், திருப்புகலூர் ஆகிய தலங்களில் உறைபவர். அப்பரமன் திருவாரூரில் விளங்குபவர். இது, அண்ணலாகிய ஈசன் செய்யும் அருட்பாங்ககேயாகும்.

257. கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்ககப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவாவண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங்கு கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.

தெளிவுரை : கருவுள் கிடந்து எலும்பு, நரம்பு, மூளை தசை, எனச் சேர்ந்து ஒன்றாகித் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட இவ்வுயிரானது, ஒரு காலத்தில் ஏகுதல் தன்மையதாகும். ஆயினும், ஈசனே ! நான் தேவரீரின் திருவடியை மறவேன். மீண்டும் பிறவியின் தன்மையடையுமாறாயினும் தேவரீரை மறவாதிருக்க நான் திருவாரூரில் மணவாளனே ! திருத்தெங்கூரில் விளங்கும் நாதனே ! கச்சித் திருவேகம்பப் பெருமானே ! என ஓதித் திகைத்தேன்.

258. முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

தெளிவுரை : நங்கே ஒருத்தி, முதற்கண் சிவநாமத்தைக் காதால் கேட்டாள்; பின்னர் மூர்த்தியாகிய அப்பெருமான் இருக்கும் அழகிய வண்ணத்தைக் கேட்டாள்; அதன் பிறகு அவ்விறைவன் விளங்கும் ஊரானது திருவாரூர் எனக் கேள்வியுற்றாள். அந்நிலையில், அவள் அப்பெருமானையே ஏத்தி நிற்கத் தலைப்பட்டுப் பிச்சியாகித் தன்னைச் சூழ்ந்த யாவற்றையும் துறந்தவளாகியும், தனது நிலையாகிய தன்மையும் மறந்தவராகித் தன்னுடைய பெயர் முதலான சுய உணர்வை இழந்தவளாகித் தலைவனாகிய ஈசன் திருவடியைத் தியானிப்பவளாகி மனம் ஒன்றினாள். இது உயிரானது ஈசன்பால் கலந்து மேவி நிற்கும் தலை அன்பினை, அகத் துறையின் வாயிலாக ஓதப்பெறுவதாயிற்று

259. ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
ஆவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

தெளிவுரை : திருவாரூரில் மேவும் பெருமானே ! தேவரீர் திருநடனம் புரிபவர்; தும்புரு நாரதர் முதலான முனிவர்களும் தேவர்களும் பரவுவாராயினர்; திருமாலும் நான்முகனும் தேடிட, உமாதேவியாரும் கங்கையாளும் உடனாகி விளங்குகின்றனர். அடியேன் குற்றேவல் செய்யத் தேவரீருக்குக் குறைதான் யாது உள்ளது ? குறையேதும் இல்லை என்பது குறிப்பு.

260. நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.

தெளிவுரை : தேவர்கள் பெருமானாகி ஆரூரில் விளங்கும் ஈசன ! கங்கையைச் செஞ்சடையில் தரித்த பெருமானே ! நெற்றிக் கண்ணுடையர் நாதனே !பிறைச் சந்திரனை உடையவரே ! தேவரீரைக் காணும் தன்மையில் திருமாலும் நான்முகனும் ஊர் ஊராய்த் தேடிக் கொண்டு திரிந்தும் காணாதவராகித் தேரோடும் வீதியில் நின்று ஆரூரா, ஆரூரா என உரைப்பவர்களாயினர்.

261. நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சோற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நல்லூரில் நடனம் புரிந்து, வெள்ளை இடபத்தின் மீது பழையாற்றில் பாய்ந்து ஏறிப் பல ஊர்களில் பலியேற்றுத் திரிந்து, சேற்றூரில் பலரும் காணத் தலையாலங்காட்டின் வழியாகப் பெருவேளூரின் திருக்கோயிலை விழைந்து, இரவில் பட்டீச்சரத்தில் மேவி, மணற்கால் என்னும் தலமும் தளிச்சாத்தங்குடியும் புகுந்து, நொடிப் பொழுதில் திருவாரூர் மேவினர்.

262. கருத்தத்திக் கதநாகங் கையி லேந்திக்
கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி
உமையவனை யச்சுறுத்தும் ஒளிகொள் மேனத்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந்
திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறி
யப்பனார் இருப்பவ மாரூ ராரே.

தெளிவுரை : சிவபெருமான், படங் கொண்ட நாகத்தைக் கையில் பற்றிக் கரிய மலைபோல் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; உமாதேவியார் ஏத்தும் ஒளிமிக்க திருமேனியுடையவர்; திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருவையாறு ஆகிய திருத்தலங்களில் மேவியவர். அப் பரமன், வெள்ளை இடபத்தில் ஏறி திருவாரூரில் வீற்றிருப்பவராவார்.

திருச்சிற்றம்பலம்

26. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

263. பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்புச் சிலைக்காம னுடல் அட்டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச்
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தனது திருமேனியில், பாதி பாகத்தில் உமாதேவியாரைக் கொண்டு விளங்குபவர்; இராவணனை மலைகீழ் நெரியுமாறு புரிந்து, தனது திருப்பாத மலரால் ஊன்றி அழுவித்தவர்; மன்மதனின் உடலை எரித்துச் சாம்பலாக்கியவர்; தக்கன் புரிந்த வேள்வியிற்பங்கேற்ற சந்திரனை ஒறுத்தவர்; அக்கினியின் கரத்தைத் துண்டித்தவர்; சூரியனின் பற்களை உதிர்த்தவர். அப்பரமன், திருவாரூரில் வீற்றிருக்க அடியேன் மறந்தவாறு தான் என்னேயோ !

264. வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல்நஞ்சு முண்டான் தன்னை
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலையை ஊன்றி இராவணனை அடர்த்த திருப்பாதத்தால் கூற்றுவனை அழித்தவர்; சுடராகவும் மின்னலைப் போன்றும் முத்தைப் போன்றும் ஒளிர்பவர்; ஒப்புவமையற்ற திருவுருவம் உடையவர்; எல்லாவற்றையும் தாமே உணர்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டவர்; அமுதுண்ட தேவர்கள் அழிந்தாலும் தான் எக்காலத்திலும் அழியாது விளங்குபவர். நெருப்பாகியவர். அவர் ஆரூரில் விளங்கி மேவக் கண்டும் அடியேன் மறப்பினை உற்றது என்னேயோ !

265. ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
யூழிதோ றூழி யுயர்ந்தான் தன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்புச் சிலைக்காம னுடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் தலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கனின் வேள்வியில் பங்கேற்ற பகன் என்பவனது கண்ணைக் கொண்டவர்; ஊழிக்காலந்தோறும் உயர்ந்து விளங்குபவர்; வருங்காலமும் செல்காலமும் ஆகுபவர்; மன்மதனை எரித்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; புள்ளரசனாகிய கருடனைக் காய்ந்தவர்; தீய வேள்வி செய்த எச்சனையும் தக்கனையும் அழித்தவர். அப்பெருமான் ஆரூரில் மேவி இருக்க, அடியேன் மறப்பினை உற்றது என்னேயோ !

266. மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்கும் பளிங்கு போன்ற சோதி வடிவானவர்; ஒப்புமையில்லாத ஒருவர்; உலகம் யாவினையும் காத்தும், படைத்தும் கரந்தும் விளங்குபவர்; என் மனத்தில் வீற்றிருப்பவர். யாவும் கடந்து மேவி ஆரூரில் விளங்கும் அப் பரமனை, அடியேன் கண்டு மறப்பினை உற்றவாறு என்னேயோ !

267. பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்திற் றுணிபொருளைச் சுடுதீ யாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கருமபைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : ஈசன், சரீரத்தில் தோன்றும் உணர்வாக விளங்குபவர்; அச் சரீரம் தோன்றுவதற்குக் காரணமானவர்; வேதத்தின் கருப்பொருளாகுபவர்; நீர், நெருப்பு, காற்று, நிலம், வான் என ஐம்பூதங்களாகுபவர்; தீமை பயவாதவாறு நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; முக்கண் உடையவர்; அண்டங்கடந்து மேவும் பேறுடையவர்களுக்கு வித்தாகுபவர். அப்பெருமான் ஆரூரில் விளங்கக் கண்டு அடியேன் மறப்பினை உற்றது என்னேயோ !

268. நீதியால் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியா யொன்றாகி யிரண்டாய் மூன்றாய்ப்
பரமாறு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியா யிருளாகிச் சுவைக ளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நெறிமுறையாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றின் இயக்கமாகவும், எல்லாப் பொருள்களிலும் பதியும் பற்றாகவும் பரசிவம் என்னும் ஏகமாகவும், சிவம் சக்தி என இரண்டாகவும், மும்மூர்த்தியாகவும், நுண்ணிய அணுவாகவும், இனிய பண்ணாகவும், சோதியாகவும் சோதியால் புலனாகாத காட்சியாகவும், ஆறு சுவைகளாகவும்; சுவையெல்லாம் கடந்த பொருளாகவும், முத்திப் பேறாகவும், அப்பேற்றின் ஆதியும் அந்தமும் ஆகவும், விளங்குபவர். அப் பெருமான் ஆரூரில் திகழக்கண்டு அடியேன் மறப்பினை உற்றது என்னே !

திருச்சிற்றம்பலம்

27. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

269. பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோ
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தேரை யடங்கச்செய்யும்
எம்மான்ற னடித்தொர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

தெளிவுரை : பொய்ம்மையாகிய மாயப் பெருங் கடலுள் புலம்பி நிற்கும் அரம்பையர்கான் ! உங்கள் செயல் புண்ணியம் தருமோ ! தீய வினையாகவே பெருகும் ! திருவுடையதாக ஏத்தப்படுவன அல்ல. மாயத்தன்மையுடையன. யான், வானவர்களின் தலைவனாகிய திருவாரூர் மேவும் ஈசனின் திருவடியைத் தொடர்பவன். இடர்ப்பட மாட்டேன். எனக்கு இடையூறு புரியும் நீங்கள் கெட்டழிவீர்கள்.

270. ஐம்பெருமா பூதங்கள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டிர்ஈண்டிங் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நல்லமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

தெளிவுரை : இவ்வுலகமானது ஐந்து பூதங்களால் ஆகியது. இவ்வுலகத்தை உமது வசம் ஆக்க வேண்டும் என்று நினைத்தீராயின் அது கூடாது. திருவாரூர் மேவும் பெருமான், தேவராகவும், ஊழிக் காலமாகவும் ஏழுலகமாகவும் உயர்ந்த அமிர்தமாகவும் விளங்குபவர், அமரர்தம் பெருமானாகிய அப் பரமனை நான் காண்டேன். உம்மால் (அரம்பையர்கள்) நான் தடைப் படுவேன் எனக் கருதாதீர்கள்.

271. சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே யடையேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின்களே.

தெளிவுரை : குற்றம் புரியும் அரம்பையர்காள் ! உமது வடிவத்தைக் காட்டியும் செழுமையான கண்ணால் பஞ்ச பூதங்களால் ஆகிய இவ்வுலகமானது உமது வயத்தது அல்ல. மூன்று சுடராகவும், அயன் அரிமூர்த்தியாகவும் விளங்குகின்ற, ஆரூரில் மேவும் சிவபெருமானின் திருவடியை நான் அடைவேன். உங்களால் (அரம்பையர்கள்) நான் இடர்ப்பட மாட்டேன் சொல்லுங்கள்.

272. உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தொன்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவைனை யெந்தை தன்னைத்
தலப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! சுவை, ஒளி, ஊறு, ஓசை, நறுமணம் என்னும் ஐந்து உணர்வுகளையுடைய ஐம்புலன்களையுடைய மாந்தர்கள் மயங்குமாறு செய்யும் உங்களுக்கு, இந்த உலகமே போதாது. நீவிர், உமது எழிலால் யாவரையும் மயங்குமாறு செய்பவர்கள். திருவாரூரில் மேவும் பொன்னுருவாயாகிய சிவபெருமான் புவிக்கு எழிலாகும் சிவக்கொழுந்து ஆவார். என் சிந்தையில் புகுந்த அப்பெருமான், என்னை இவ்வுலகில் தோற்றுவித்தவர். நான் அப்பரமனை அடைவேன். அவர் உங்களை ஒடுக்குவார். தருக்கித் திரியாதீர்கள்.

273. துப்பினைமுன் பற்றாறா விறலே மிக்க
சேராவுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செய் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! நுகர்ச்சிப் பொருளாகவும் வஞ்சனையாகவும் இருந்து ஒப்பனை செய்து உழன்று மேவும் நீவிர், என்னைக் கறைப்படுத்துவதற்கு இயலாது, என்னுடைய சேமிப்பாகிய, ஆரூரில் விளங்கும் பெருமான், வைகல் மாடக் கோயிலில் வீற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்களால் நான் அலைக்கப்பட்ட மாட்டேன். நீவிர் ஓடி அலையாதீர்கள்.

274. பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே புலோபமே பொறையே நீங்கள்
உங்களபெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணா
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யரூர்ச்
செல்னைச்சேர் வேன்நும்மாற் செலுத்துணேனே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! ஆணவம், பற்று, குரோதம், உலோபம் சுமை ஆகியவற்றுக்கு உரித்தாகி எல்லையற்றவாறு உலவும் நீங்கள் என்னைக் றைப்படுத்தல் அரிது. அயனும் மாலும் அதற்கு அப்பாலும் ஆகி அறியவொண்ணாச் செம்மை மேவும் கனகக் குன்றாகிய சிவபெருமான், திருவாரூரில் மேவும் செல்வன் ஆவார். யான் அவரைச் சேர்வேன். உம்மால் ஏவப் படுவேனல்லேன்.

275. இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பபேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! இடர் தரும் பாவம் எனவும், துன்பத்தை விளைவிக்கும் வேட்கை எனவும் வெறுப்பு எனவும், யாவரும் கொள்ளும் தன்மையில் உலகில் யாங்கணும் திரிபவர்களே ! உங்கள் நோக்கம் நிறைவுறாது. முப்புரங்களை எரித்துத் தேவர்களைக் காத்தருளிய ஈசன், ஆரூரில் வீற்றிருக்க யான் விரைவாகச் சென்றடைவேன். உங்களால் ஆட்படுத்தப்பட மாட்டேன். ஓடி அலையாதீர்கள்.

276. விரைந்தாலும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! ஏவல் கொள்ளுதலும், வறுமையும், செல்வப் பெருக்கும், புன்மையுடைய சினமும், உவகையும் வெறுப்பும் என உலகில் அரிப்புடையவராக உள்ளீர் ! யான் குறைப்படுத்தப்படமாட்டேன். தேவர்களின் வேண்டுகோளையேற்று நஞ்சினை உட்கொண்ட கற்பகமாகிய தற்பரம், திருவாரூரில் மேவும் பரஞ்சோதியாவார். நான் அப்பரமனைக் காண்பேன். உங்களுடைய குணத்தின் வழியில் நான் ஆட்படேன். எனவே நீங்கள் ஓடிப்பகட்டாக அலையாதீர்கள்.

277. மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

தெளிவுரை : அரம்பையர்காள் ! உடலில் உள்ள புலன்களாகிய பஞ்சேந்திரியங்கள், காக்கை போன்று கட்டுப்பாடு இன்றித் திரிவன. மயக்கம் தரும் நும்முடைய ஆணையை நடத்த யான் அதற்கு வயப்படுவேனல்லேன். மூவுலகும் நெடிது ஒங்கிய ஈசன் ஆரூரில் ஆட்சியாய் மேவி விளங்க, யான் விரைந்து சென்றடைவேன். உங்களால் இடர்பட மாட்டேன். எனவே ஓடித் திரிந்து அலையாதீர்.

278. சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இருக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

தெளிவுரை : அரம்மையர்காள் ! செல்வப் பெருக்கம் இருப்பினும் இல்லையெனிலும் இவ்வுலகில் செருக்குடன் மிகைகொண்டு நாள்தோறும் செயல் மேவுபவர்களாகிய உங்களுக்கு யான் அமையமாட்டேன். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய தருக்கிணை அடக்குமாறு அவன் உடலை நெரித்துப் பின்னர் அவன் இசை கேட்டு இரக்கம் கொண்டு அருள் புரிந்த சிவபெருமான் திருவடியில் யான் உள்ளவன்.எனக்கு இடர் செய்வீராயின் நீவிர் கெடுவீர்கள்.

திருச்சிற்றம்பலம்

28. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

279. நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையுங் கடதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலும்
கூற்றினையுங் குரைகழலால் உதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் திருவெண்ணீறு அணிபவர்; எலும்பாபரணம் உடையவர்; காற்றை விட வேகமாக இயங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கூற்றுவனை உதைத்த திருப்பாதம் உடையவர்; புலித்தோலாடை அணிந்த அழகர்; செஞ்சடையில் கங்கை தரித்தவர். அவர் திருவாரூர் திருமூலட்டானத்தில் விளங்குபவரே ஆவார.

280. பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலும்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும்
கபாலங்கட் டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பெரியதாகிய நாகத்தை அரையில் கட்டியவர்; அருச்சுனர்க்குப் பாசுபதஅத்திரம் அளித்தவர்; யானையின் தோலை உரித்தவர்; கபாலமும் மழுவும் ஏந்தியவர்; கொடியேந்தியவர்; மேருமலையை வில்லாக ஏந்தியவர்; நந்தி என்னும் திருப்பெயர் உடையவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர். அவர் ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்.

281. துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கோவண ஆடையும்; தோலுடையும் எலும்பு ஆபரணமும் உடையவர்; தூய்மையான திருமேனியுடைய செல்வர்; அன்பிற் பிணிக்கப்பட்ட அடியவரின் துயர் தீர்ப்பவர்; யாவர்க்கும் பெரியவர்; மாணிக்கத்தையுடைய நாகத்தை உடையவர்; வாசுகி என்னும் நாகத்தை நாணாகக் கொண்ட மேரு வில்லையுடையவர். அப்பெருமான் ஆரூர் வீதியில் நடை கொள்ளும் திருமூலட்டானர் ஆவார்.

282. ஓட்டகத்தே ஊணாக வுகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே யாட லுடையார் போலும்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோடு ஏந்தி பலியேற்று உணவு கொண்டு உகந்தவர்; நீண்டு உயர்ந்த அழற் பிழம்பு ஆனவர்; ஊர்தோறும் திரிந்தவர்; ஞானப் பெருங்கடலின் கரையாகுபவர்; சுடுகாட்டில் நடனம் புரிபவர்; சீகாமரம் முதலான பண்ணிசைப்பவர்; பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர். அப் பரமன் ஆரூரில் மேவும் மூலட்டானத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

283. ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலும்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பன்றியின் கொம்பை ஆபரணமாக உடையவர்; தேவர்களால் போற்றப்படுபவர்; கல்லால நிழலில் வீற்றிருப்பவர்; நஞ்சுண்டு கருமையடைந்த கண்டத்தையுடையவர்; சந்திரனைச் சடைமுடியில் கொண்டு விளங்குபவர்; கயிலை மலையால் வீற்றிருப்பவர்; எழுத்துக்களில் அகரமாக விளங்குபவர். அவர் ஆரூரில் மேவும் திருமூலட் டானத்தில் விளங்குபவர் ஆவார்.

284. காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்சு முண்டிருண்ட கண்டர் போலும்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தர் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மன்மதனை எரித்தவர்; நஞ்சினை உண்டு கரிய கண்டத்தைப் பெற்று நீலகண்டராக உள்ளவர்; சந்திரனைச் சிவந்த சடைமுடியில் சூடியவர்; சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் உள்ளவர். உலகத்தார் ஏத்தும் வேதமாக விளங்குபவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு திகழ்பவர்; கங்கை தரித்த சடை முடியுடையவர். அப் பரமன், ஆரூரில் மேவும் திருமூலட்டானத்தில் மேவுபவர் ஆவார்.

285. முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதிதான் கண்ட சிவனார் போலும்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியா ரடிமை யுகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியில் சந்திரனையும் பாம்பையும் சூடியவர்; மூவுலகமும் ஆனவர்; காலம் ஏந்திப் பலியேற்பவர்; உயிர்கள் செல்லும் கதியாக விளங்குபவர்; நீல கண்டம் உடையவர்; எலும்பு மாலை அணிந்தவர்; அடியவர்களின்பால் பேரன்பு உடையவர். அப் பெருமான், ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்.

286. இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைத்தார் போலுந்
தூத்தாய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநகாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தை யணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான் தேவர்களுக்கு இந்திரபதவியை ஈந்தவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; அழகிய திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; தூய திருமேனியுடையவர்; சிவ மந்திரத்தின் பாங்காகிய திருவைந்தெழுத்தை மனத்துள் இருத்தி அடியவர்கள் ஏத்தி நற்கதி பெறுமாறு புரிந்தவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு நாகத்தை நாணாக வளைத்தவர்; அழகின் தன்மையில் விளங்குமாறு நஞ்சினை உண்டவர். அப் பெருமான், ஆரூர் மேவும் திருமூலட்டானார் ஆவார்.

287. பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி பிறவி யிலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத் திறைய கறுத்தார் போலுங்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்களைத் தாங்கும் சரீரத்தைக் காக்கும் பிரமன் ஆவார்; பிறப்பு இறப்பு இல்லாதவர்; நெற்றியில் மூன்றாவது கண்ணுடையவர்; திருவெண்ணீற்றைத் திருமேனி முழுமையும் பூசி விளங்குபவர்; நீல கண்டம் உடையவர்; திருக் காளத்தி, திருநாகைக் காரோணம் ஆகிய தலங்களில் விளங்குபவர்; அண்டத்துக்கு அப்பாலும் விளங்குபவர். அப்பெருமான், ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்.

288. ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஒரு காலத்தில் ஏகப் பொருளாகப் பரசிவமாய் ஒன்றென விளங்கியவர்; பல ஊழிகளைக் கண்டு விளங்குபவர்; யாங்கணும் வெள்ளமானது பெருகி அழிக்காதவாறு சடைமுடியில் ஏற்றுக் காத்தவர்; பிறப்பு, இறப்பு, துன்பம் என ஏதும் இல்லாத செம்பொருளானவர்; உருகியேத்தாத நெஞ்சில் மேவாதவர்; உகந்து ஏத்தும் அடியவர் நெஞ்சுள் எக்காலத்திலும் நீங்காது நிறைந்து மேவி அருள் பொழிபவர்; அருகில் வந்து மேவி என்னை நோக்கி அஞ்சாதே என்று உரைப்பவர். அப்பெருமான் ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்.

289. நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்தலைகள் குறைத்தார்போலும்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சிவாகம நெறிகளை ஓதியருளிச் செய்தவர்; ஞானத் தலைவர்; மகாபிரளய காலத்தில் மாயும் எல்லாப் பொருள்களையும் தாமே ஏற்று விளங்குபவர்; இராவணனை நெரித்து அவனது வலிமையைக் குறைத்தவர்; திரிபுரங்களை எரித்தவர்; எல்லாத் திசைகளும் மற்றும் யாவுமாகவும் ஆனவர்; பரவி ஏத்தப்பெறும் பேர் ஆயிரம் உடையவர். அவர் ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

29. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

290. திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே ளயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய மணியாகவும், இனிமை தரும் தேனாகவும், பாலமுதாகவும் கரும்பின் சுவையாகவும், தெளிவுதரும் குருமணி யாகவும் விளங்குபவர்; குழல், மொந்தை, தாளம், வீணை, கொக்கரை முதலான வாத்தியங்களை இயக்குபவர்; செழுமணியாகவும், பவளமாகவும், பசும் பொன்னாகவும், முத்தாகவும் விளங்குபவர்; சீபருப்பதம் என்னும் தலத்தில் மேவிப் பாவத்தைத் தீர்ப்பவர். அப் பெருமான் திருவாரூரில் விளங்கி நிற்க அடியேன் அறியாது மறந்திருந்தேனே !

291. பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப்
பொங்குவெண் ணூலானைப் புனிதன் தன்னை
மின்னானை மின்னிடையான் பாகன் தன்னை
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை யுத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பொன்னார் மேனியர்; முப்புரி நூல் அணிந்த புனிதர்; மின் போன்ற ஒளி யுடையவர்; உமைபாகர்; யானையின் தோலைப் போர்த்தியவர்; யாவும் தன்வயமானவர்; தனக்கு ஒப்பில்லாதவர்; தழல் போன்று மேனியுடையவர்; ஆரூரில் மேவும் அன்புத் தலைவர். அப்பெருமானை அடியேன் மறந்து இருந்தேனே.

292. ஏற்றானை ஏழுலகு மானான் தன்னை
யேழ்கடலு மேழ்மலையு மானான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
கொடுமழுவாள் கொண்ட தோர்கையான் தன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்
கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத் உடையவர்; ஏழ் கடலும் மலையும் உலகமும் ஆகியவர்; கூற்றுவனுக்குக் கூற்றுவராய் இருப்பவர்; மழுப்படையுடையவர்; நீர், நெருப்பு, காற்று என்னும் பூதங்களாகுபவர்; சடையில் கங்கை தரித்தவர்; ஆரூரில் மேவும் அன்புத் தலைவர். அப் பெருமானை அடியேன் அறியாது மறந்திருந்தேனே !

293. முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை
மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மறுமையும் இம்மையு மானான் தன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவரின் கொடிய வினையைத் தீர்ப்பவர்; மூப்பு அடையாத திருமேனியும் மூன்று கண்ணும் உடையவர்; சந்திரனும் சூரியனும் ஆகியவர்; உயிர்களுக்கு இன்பத்தை விளைவிப்பவர்; காதில் குழையணிந்தவர்; மந்திரமும் வேதமும் ஆகியவர். இம்மையும் மறுமையும் ஆகியவர்; ஆரூரில் விளங்குகின்ற அழகர். அப்பெருமானை அடியேன் அறியாது மறந்திருந்தேனே !

294. பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகிய
நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பிறவியைக் கொள்ளும் நெறியாகவும் பெருமை என்னும் பாங்காகவும், மேவும் பிஞ்ஞகன், பக்தர்களின் உள்ளத்தில் மேவும் உறவாகவும் வேள்வியாகவும் விளங்குபவர்; மயானத்தின் இருளில் தனிமையாக நடனம் புரிபவர்; துறவின் நெறியாகவும் நறுமணமாகவும் எப்பொருட்கும் தோற்றமாகவும் விளங்குபவர். அப் பெருமான் நறுமணம் கமழும் தாமரை போன்ற பீடத்தில் வீற்றிருக்கும் அன்புத் தலைவர் ஆவார். அவரை அறியாது அடியேன் மறந்தவனாய் இருந்தேனே.

295. பழகியவல் வினைகள் பாற்று வானைப்
பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்கும்
குழகனைப் கோளவொன் றாட்டு வானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கொடிய வினைகளைத் தீர்த்தருள்பவர்; உயிர்களின் தலைவராகிக் காப்பவர்; பாவத்தைத் தீர்க்கும் அழகர்; நாகத்தைக் கையில் பற்றி ஆட்டுபவர்; கொடுகொட்டி என்னும் வாத்தியக் கருவியைக் கையில் கொண்டவர்; திருவிழாக்களை உடையவர்; வீரட்டத் தலங்களில் மேவியவர்; தேவர்களால் விரும்பி ஏத்தப்படுபவர். ஆரூரில் மேவும் அன்புத் தலைவராகிய அப்பரமனை அடியன் அறியாதவனாய் மறந்து இருந்தேனே !

296. சூளா மணிசேர் முடியான் தன்னைச்
சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் தன்னைக்
கொல்புலித்தோ லாடைக் குழகன் தன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
பம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சூளாமணியை முடியின் மேல் தரித்துள்ளவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; நாகத்தைக் கையில் பற்றியுள்ளவர்; புலித்தோலை ஆடையாகக் கொண்டவர்; நாள்தோறும் நினைத்து ஏத்தும் பக்தர்களின் மனத்தில் விளங்குபவர்; மூன்று கண்களை யுடையவர். அப்பெருமான் ஆரூரில் வீற்றிருக்க, அடியேன் அறியாதவனாகி மறந்து இருந்தேனே.

297. முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
கோளரவொன் றாட்டுங் குழகன் தன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
பரிதிபோல் திருமேனி யுடையான் தன்னை
அத்தனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், முத்தும் மணியும் மாணிக்கமும் ஆகி ஒளிர்பவர்; எக் காலத்திலும் புதிய தன்மையுடன் மேவும் கற்பகக் கொழுந்து ஆகுபவர்; வயிரம் போன்றவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து நாகத்தைக் கையில் பற்றி ஆட்டுபவர்; பக்தர்கள்பால் பேரண்பு பூண்டவர்; சூரியனைப் போன்ற ஒளி வடிவம் உடையவர். அப் பெருமான் ஆரூரில் வீற்றிருக்க அடியேன் அதனை அறியாது மறந்தவன் ஆகினேனே !

298. பையா டரவங்கை யேந்தி னானைப்
பரிதிபோல் திருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை
நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைக் கையில் பற்றியுள்ளவர்; சூரியனைப்போல் ஒளிரும் திருமேனியில் பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசிநெய் முதலாகிய பஞ்ச கவ்வியத்தைப் பூசனையாக ஏற்று மகிழும் நிமலர். நெற்றிக் கண்ணுடையவர், பவளத்தின் திரட்சிபோல் சிவந்த திருமேனியுடையவர்; சிவந்த சடை முடியில் வெண்மையான சந்திரனைச் சூடியவர்; திருவையாற்றில் விளங்குபவர். அப்பெருமானை அடியேன் அறியாதவனாகி மறந்து இருந்தேனே !

299. சீரார் முடிபத் துடையான் தன்னைத்
தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
ஆரானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பத்துத் தலையுடைய இராவணனுடைய எழிலைத் தனது திருவிரலால் சிதையுமாறு செய்து, பின்னர் பெருமையும் வழங்கியவர்; கங்கை, உமாதேவியாகிய பெண் தன்மை இரண்டுமாகவும் திருமாலாகிய ஆண் தன்மையாகவும் விளங்குபவர்; போர் புரிந்த முப்புர அசுரர்களை அழித்தவர்; புண்ணிய மூர்த்தியாக விளங்குபவர்; திருவெண்ணீறு தரித்து விளங்கி அடியவர்களுக்கு ஆரா அமுதமாக மேவி இனிமை தருபவர். ஆரூரில் வீற்றிருக்கும் அப்பரமனை அடியேன் அறியாதவனாகட மறந்திருந்தேனே !

திருச்சிற்றம்பலம்

30. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

300. எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன் காண்வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டான்ததெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், என்னைப் பற்றியுள்ள கொடிய வினையாகிய நோயைத் தீர்த்தவர்; ஏழ் கடலும் ஏழுலகமும் ஆனவர்; மணம் கமழும் கொன்றை மாலை அணிந்தவர்; வளர்கின்ற சந்திரனைச் சூடியவர்; தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, மூன்று அசுரர்களின் கோட்டைகளை அழித்தவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; பஞ்ச கவ்வியத்தால் அபிடேபிக்கப்படுபவர்; அப் பரமன், திருவாரூர் திருமூலட்டானத்தில் மேவும் செல்வன் ஆவார்.

301. அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கென்றை மாலை
குளிர்மமதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைத்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பை அரையில் கட்டி யுள்ளவர்; அடியவர்களுக்கு ஆரமுதமாக விளங்கி இனிமை பயப்பவர்; திருவையாற்றில் வீற்றிருப்பவர்; சென்னியில், கொக்கிறது, மயிற்பீலி, கொன்றை மாலை, குளிர்ச்சி பொருந்திய சந்திரன், அரவம் கங்கை ஆகியவற்றைச் சூடியவர்; அடர்த்தியான சடைமுடியுடையவர்; தொண்டர்கள் விழைந்து மேவும் தூய நெறியாகத் திகழ்பவர்; வானவர்கள் தோத்திரம் செய்ய விளங்குபவர்; அப்பெருமான், திக்கெலாம் புகழால் சிறக்க மேவும் திருவாரூரில் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் என் செல்வன் ஆவார்.

302. நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தரித்த சடை முடியுடையவர்; நெற்றியல் ஒரு கண்ணுடையவர்; உமைபாகர்; சந்திரனைச் சடையில் வைத்த மகாதேவர்; கார்மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; கல்லால் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்தவர். அப் பெருமான் திருவாரூரில் மேவும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வன் ஆவார்.

303. கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன்றுதை செய்தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கானகத்தில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; எக் காலத்திலும் புதியதாகவே விளங்கும் கற்பகத் தரு ஆனவர்; காலனை அழித்தவர்; பிரம கபாலம் ஏந்திப் பலியேற்பவர்; உத்தமனாக விளங்குபவர்; திருவொற்றியூர் என்னும் திருத் தலத்தில் வீற்றிருப்பவர்; இடப வாகனத்தில் எழுந்தருள்பவர்; தக்கனது யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பல்லை உதிர்த்தவர்; ஆதி மூர்த்தியாகியவர். அப்பரமன், திருவாரூரில் மேவும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வன் ஆவார்.

304. பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; பெண்ணுருவமும் ஆணுருவமும் ஆகுபவர்; மறப்பினையுடைய என் சிந்தையில் உள்ள மருளை நீக்கியவர்; வானவர்களும் அறிந்திராத நன்னெறியைத் தந்தருளியவர், அப் பெருமான், தேன் மணம் விளங்கும் பூ, தூபம், தீபம், சந்தனம் முதலான பூசைப் பொருள்களால் நாள்தோறும் தேவர்கள் பூசிக்கும் திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் மேவும் எம் செல்வன் ஆவார்.

305. சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அறிபொழில்சூழ் ஐயாற்றான்காண்
எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்களுக்கு இன்பத்தை விளைவிப்பவர்; சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றை அறுத்தவர்; பொழில் சூழ்ந்த திருவையாற்றில் மேவுபவர்; என்னுடைய வினையாகிய இடரைக் களையும் பெருமான் ஆவார். அவர் தேவர்கள் ஏத்தும் திருவாரூரில் மேவும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் செல்வன் ஆவார்.

306. நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நன்மையை அருளிச் செய்து தீமைகளை அகற்றுபவர்; நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவர்; சோதி வடிவாகவும் ஆதியாகவும் விளங்குபவர். இடபத்தை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டு விளங்குபவர்; திருக்கச்சியேகம்பத்தில் திகழ்பவர்; திருச்சோற்றுத் துறையில் உறைபவர்; அப்பெருமான், திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் மேவும் எம் செல்வம் ஆவார்.

307. பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்நலத்த நுண்ணிடையான் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல்மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான் பொன் போன்று விளங்கும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர்; திருப்புகலூர், திருப்பூவணம் ஆகிய தலத்தில் விளங்குபவர்; உமைபாகர்; வேதம் வல்லவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்பினர்; சூலப்படையுடையவர்; திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவர். அப்பெருமான், வயல்கள் சூழ்ந்து விளங்கும் திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் மேவும் எம் செல்வர் ஆவார்.

308. விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
பூத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண்
தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர்; நஞ்சினை உட்கொண்டு கரிய கண்டத்தை உற்றவர்; சூரியனும் சந்திரனும் ஒளி பெற்று விளங்கச் செய்பவர்; திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய தலங்களில் உறைபவர்; திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரியவரானவர். அப் பெருமான், திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வர் ஆவார்.

309.செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தொன்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண்
அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரித் தலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பெருமை மிக்க இடபத்தை உடையவர்; அழகிய திருவானைக்காவில் விளங்குபவர்; பகைமை கொண்டு போர் செய்த முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்தவர்; வஞ்சமனத்தவர்களிடம் அணுகாதவர்; மலையெடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர். அப் பெருமான், திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எம் செல்வர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

31. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

310. இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும்
கடல்விடம் துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்டிடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! இப்பிறவியின்கண் வினைவசத்தால் உண்டாகின்ற தீவினைகள் கெட வேண்டுமானால், கங்கை தரித்த சடைமுடியுடைய பெருமானே ! சுடர் திகழும் சோதியே ! தூய திருவெண்ணீற்றை யணிந்த பெருமானே ! நஞ்சுண்ட நீலகண்டனே ! மானைக் கரத்தில் ஏந்தி, இடப வாகனத்தில் விளங்கும் ஆரமுதே ! திருவாரூரில் மேவும் ஆதி மூர்த்தியே ! என்று மனங் கசித்து ஏத்துக.

311. செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆரூரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஈசனைத் தீய வினைகள் தீரும் வண்ணம் உறுதியுடன் சிந்தையில் பதித்துத் திருநீறு அணிந்த திருமேனியுடைய நாதனே ! தக்க யாகத்தில் பங்கேற்றுக் குற்றத்தைப் புரிந்த இந்திரனின் தோனை நெரித்த தலைவனே ! அடியவனை ஆளாகக் கொண்ட நாதனே ! ஆரூரில் மேவும் அரசே ! திருக்கச்சி யேகம்பப் பெருமானே ! எல்லாக் காலத்திலும் விளங்கி மகிழ்ச்சியை வேண்டியவாறு வழங்கும் கற்பகமே ! என்று கசிந்துருகி ஏத்துக.

312. நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! அழியும் தன்மையுடைய இப்பிறவியில் நிலைபெற்று உய்ய வேண்டும் என்று கருதுவாயானால், எம்பிரான் விளங்கும் சிவாலயத்தை நாள்தோறும் நாடிச் சென்று, புலர்வதன் முன்னர், திருஅலகினால் தூய்மை செய்தும் மெழுகியும் திருத்தொண்டு புரிவாயாக ! பூமாலைகள் புனைந்து ஏத்திப் புகழ்ப் பாடல்களைப் பாடுவாயாக ! தலை தாழ்த்தி அட்டாங்க வணக்கம் செய்து தன்னை மறந்த பக்திப் பெருக்கால் ஆடி மகிழ்வாயாக ! சங்கரா போற்றி, வெற்றியுடைய ஈசனே போற்றி என ஏத்தி, ஆரூரா என ஓதிக் கசிந்துருகித் தொழுவாயாக !

313. புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்
நெஞ்சமே யிதுகண்டாய் பெருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்
நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! நான் சொல்வதைக் கேள். வெண்ணூலைத் திருமார்பில் கொண்ட ஈசனே ! ஒண்சுடரே ! தேவர்களும் வேதங்களும், திருமால் நான்முகன் ஆகியோரும் ஏத்தும் தேவனே ! எண்ணரிய திருநாமங்களையுடைய நாதனே ! எழில் மிக்க ஆரூரில் மேவும் எம்மானே ! என்று ஏத்தி நிற்பாயாக. அதுவே புண்ணியமும் நன்னெறியும் ஆகும்.

314. இழைந்தநா ளெல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுள் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

தெளிவுரை : நெஞ்சமே ! பிராரத்த வினையால் அடைந்த இப்பிறவியானது முடிவுற்ற தன்மையில் உள்ள சஞ்சித வினையாலும் இப்பிறவியில் செய்யும் ஆகாமிய வினையாலும் மீண்டும் பிறவி எடுக்கும் தன்மையிலிருந்து மீள வேண்டுமானால், இரவும் பகலும் ஈசனை ஏத்துவாயாக. பிழை யாவும் பொறுத்தருள் செய்யும் பெருமானே ! பிஞ்ஞகனே ! நீலகண்டனே ! ஆரூர் மேவும் அழகனே ! அழகிய சடை கொண்ட கோவே ! என்று அழைத்து அடியேன் தேவரீரின் பாதுகாப்பில் உள்ளவன். காப்பீராக என்று கசிந்துருகி ஏத்துவாயாக.

315.நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
திருவாரு ராவென்றே சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! விடுவதற்கு அரியதாகிய பிறவித் துயர்களை நீக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். எனவே நாள்தோறும் இடபக்கொடியேந்திய ஈசனே! சிவலோக நாதனே ! நான்முகனும் திருமாலும் போற்றி செய்யும் தேவனே ! தீப்பிழம்பாய் நின்ற பரமனே ! செல்வம் பெருகும் திருவாரூரில் மேவும் பெருமானே ! எனச் சிந்திப்பாயாக.

316. பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றவரக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாபூ ராவென்றே போற்றா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! நம்மைப் பற்றியுள்ள பாவங்கள் தீரவும், பரகதிக்குச் செல்லும் நற்பரிசும், சுற்றியுள்ள வினை நீக்கமும் உண்டாக வேண்டுமானால், ஈசனை நோக்கி ஏத்துவாயாக ! உற்ற துணையும் தேவரீரே என்று போற்றுக. பாம்பை அரையில் கட்டி மேவும் ஆரூரா என்று போற்றுக.

317. மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்
அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! உய்வு பெறுவதற்கு உரிய வழியை உரைக்கின்றேன். சிவபெருமானைத் தேவரின் தலைவரே ! ஆரமுதே ! ஆதி மூர்த்தியே ! ஆரூரில் மேவும் ஐயனே ! என்று ஏத்துக. துதி செய்து மலர் கொண்டு தூவி வழிபடுக. வலம் வந்து திருத்தொண்டர்களை ஏத்துக. ஈசனை வாழ்த்திச் சந்திரனைத் தரிசித்த சடைமுடியுடைய நாதனே ! கால காலனே ! கற்பகமே ! என்று கசிந்துருகி நற்பாயாக.

318. பாசத்தைப பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமானே ஒளி விளக்கே ! பரஞ்சோதி ! பண்டரங்கம் என்னும் திருக்கூத்து ஆடும் பரமனே ! பாவத்தைத் தீர்ககும் நாதனே ! தேவர்களின் தேவனே ! எம் பெருமானே ! திருவாரூரில் மேவும் திருமூலட்டானனே ! என்று ஏத்துக. நித்தமும் ஈசனின் திருவடியைத் தொழுது வணங்குக. அவ்வாறு செய்தால் உலகப் பற்றானது கெட்டழிந்து நற்கதியுண்டாகும். உலகப் பற்றானது, துன்பத்தை விளைவிக்கும் தன்மையுடையதால் அதனை நீக்கும் உபாயமானது இவண் ஓதப் பெற்றது.

319. புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரு ரிடங்கொண்ட எந்தை யென்றும்
நலங்கொளடி யெல்தலைமேல் வைத்தா யென்றும்
நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஐம்புலன்களால் ஆட்கொள்ள பெற்று பொழுதைப் போக்கித் திரியாதே. சிவபெருமானை, கங்கை தரித்த சடைமுடியுடைய பெருமானே ! தக்கன் வேள்வியைத் தகர்த்த தலைவனே ! இராவணனின் முடியை நெரித்த இறைவனே ! ஆரூரில் மேவும் எந்தையே ! தேவரீரின் திருவடியைத் தலைமேல் வைத்து நலம்தரும் நாதனே ! என, நாள்தோறும் நவின்று ஏத்துக. அதுவே நன்மை தரும் வழியாகும்.

திருச்சிற்றம்பலம்

32. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

320. கற்றவர்களுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்ற போற்றி

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் மெய்ஞ்ஞானம் உடைய மகான்கள் மகிழ்ந்து சுவைக்கும் கனியாகுபவர்; கழலை ஏத்துபவர்களுக்கு நற்கதியாகுபவர்; உலகப்பொருள்கள்பால் பற்றற்ற அடியவர் பெருமக்களுக்கு ஆரமுதானவர்; அடியேனின் அல்லல்களை நீக்கி ஆட் கொண்டவர்; மற்றொருவரை ஒப்புமை கூற முடியாத தனிப்பெருமையுடையவர்; வானவர்களால் போற்றப்படுபவர்; முப்புர அசுரர்களின் மதிற்புரங்களை எரித்தவர். திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் விளங்குபவர். தேவரீரைப் போற்றுதும்.

321. வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகார் போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டும், யானையின் தோலை உரித்துப் போர்த்தும், நறும் கொன்றை மலரில் மாலை சூடியும் விளங்குபவர்; புலித்தோலாடை உடுத்தியும், தேவர்களின் தலைவராக விளங்கியும், கல்லால மரத்தின் நிழலில் விளங்கி அறங்களை உரைத்தும் அருளியவர். கனகக் குன்றுபோல் மேவும் சிவபெருமானே ! திருமூலட்டானத்தில் உறைபவரே ! தேவரீரைப் போற்றுதும்.

322. மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்லொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே! தேவரீர், உமாதேவியின் மணவாளர்; இளமையான இடபத்தை உடையவர்; நிலையாக என் நெஞ்சில் விளங்குபவர்; நெற்றிக் கண்ணுடையவர்; சூலப்படை ஏந்தியவர்; ஏழு கடல்களும் ஏழு பொழில்களும் ஆகியவர்; முப்புரங்களை வில்லால் அம்பு தொடுத்து எரித்தவர். திருமூலட்டானத்தில் மேவும் சிவபெருமானே ! தேவரீரைப் போற்றுதும்.

323. பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை யுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்ற போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பொன் போன்ற அழகிய திருமேனியுடையவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; சிறப்பின் மிக்க நான்கு வேதங்களும் ஆகியவர்; மானைக் கையில் ஏந்தியவர்; நினைத்து ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தில் மேவும் ஒண்பொருளாக விளங்குபவர்; உலகின் முழு முதல் ஆகுபவர்; சென்னியில் மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; திருமூலட்டானத்தில் திகழும் தேவரீரைப் போற்றுதும்.

324. நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; நற்றவமாக விளங்குபவர்; தக்கன் புரிந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பல்லை உகுத்தவர்; வெண்மையான பிறைச் சந்திரனைத் தரித்தவர்; மயானத்தில் மேவி இருளில் நின்று ஆடல் புரிபவர்; தூய்மையான திருவெண்ணீற்றைத் திருமேனியில் அணிந்தவர்; சிவந்த சடைமுடியுடையவர்; திருமூலட்டானத்தில் வீற்றிருப்பவர். தேவரீரின் திருப்பாதத்தைப் போற்றுதும்.

325. சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : சங்கரனே ! சதாசிவனே ! பொங்கி எழும் அரவத்தையுடைய பெருமானே ! புண்ணியனே ! நான் முகனும் திருமாலும் காணுதற்கு அரிய தீப்பிழம்பு ஆகிய ஈசனே ! திருவாரூரின் திருமூலட்டான நாதனே ! தேவரீருடைய திருப்பாதத்தைப் போற்றுதும்.

326. வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்தா கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர்; பிறைச் சந்திரனையும் பாம்பையும் உடையவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; விழைந்து ஏத்தும் அன்பர்களுக்கு மேலான பொருளாக விளங்கி ஆட்கொள்பவர்; நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவர்; செம் பொன்னாகவும் மரகதமாகவும் மாணிக்கமாகவும் விளங்கும் உயர்பொருளாய் ஒளிர்பவர். திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் தேவரீரைப் போற்றுதும்.

327. உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்õபர் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தாபோற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், ஒருமையுடன் நினைக்கும் சிறப்புடைய உள்ளக் கோயிலில் வீற்றிருப்பவர்; விரும்பி ஏத்தும் அடியவர்கள்பால் விளங்குபவர்; வாரி வழங்கும் வள்ளலாகவும், மணக் கோலத்தில் மேவும் மணாளராகவும், அருள்பவர்; தக்கன் ஆற்றிய வேள்வியில் பங்கேற்ற தேவேந்திரனின் தோளைத் துனித்தவர்; வெள்ளை இடபத்தையுடைய விகிர்தர்; தேவர்களிலும் மேலோராய் விளங்கும் பிரமன் திருமால் ஆகியவர்களுக்கும் மேலாக விளங்குபவர்; கங்கையைச் சடையில் தரித்தவர். திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் மேவும் தேவரீரைப் போற்றுதும்.

328. பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் சென்னியில் மலர்களைச் சூடிய புனதார்; தேவர்கள் போற்றுகின்ற பெரும் பொருளாவர்; தெய்வத் தன்மையுடையவர்களும் தெய்வமானவர்; திருமாலுக்குச் சக்கரப் படையளித்தவர்; மரணமானது என்னை அடையாதவாறு காத்து ஆட் கொண்டவர். வெண்மையாக திருவெண்ணீறு படிந்த சதுரர்; இடபக் கொடியேந்தியவர்; திருவாரூரில் மேவும் திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் தேவரீரைப் போற்றுதும்.

329. பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
யன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பிரமனின் ஒரு தலையைக் கொய்தவர், அர்த்த நாரியாக விளங்குபவர்; நான்கு கரங்களும் மூன்று கண்களும் உடையவர்; விரும்பி ஏத்தும் அன்பர்களுக்கு எளிமையானவர்; தேவர்களுக்கும் அரசர்; இராவணனுடைய இருபது தோளையும், தாளையும் சிரங்களையும் நெரித்தவர். திருமூலட்டானத்தில் மேவும் தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

33. திருவாரூர் அரநெறி (அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

330. பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத்
தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியில் லப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; காண்பதற்கு அரிய செழுஞ்சுடராகவும், பொற்குன்று போன்றும், கரும்பின் கட்டியும், தேனும் போன்றும், பெருமையும் இனிமையும் உடையவராகித் திருப்பூவணத்திலும், திருவலஞ்சுழியிலும் திருவாரூர் திருமூலட்டானத்திலும், எழுந்தருளி வீற்றிருப்பவர்; தேவர்களால் ஏத்தப் பெறும் அறநெறியில் விளங்கும் தந்தையாவர். அப் பரமனை அடியேன் அடைந்து வினை நீங்கப் பெற்றேன்.

331. கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை
விசனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கற்பகத் தருவாக விளங்கி, யாவற்றையும் வழங்குபவர்; சூரியனும் சந்திரனுமாக ஒளிர்பவர்; திருக்காளத்தியிலும் கயிலை மலையின் மேலும் எழுந்தருளியுள்ளவர்; கரும்பு வில்லேந்தித் தொழில் புரியும் மன்மதனை, நெற்றிக்கண் கொண்டு விழித்து நோக்கி எரித்தவர்; அருச்சுனனின் முன்னே வேடுவனாகத் தோன்றி அருள் புரிந்தவர்; திருவாரூரில் மேவும் திருமூலட்டானத்தில் விளங்குபவர்; சிந்தையில் விளங்கும் எமது பெருமானாவார். அற்புதமாகிய அருட் பாங்குடன் அறநெறியில் மேவும் எம் தந்தையாகிய அப்பரமனை அடியேன் அடைந்து என் வினையாகிய நோயைத் தீர்த்துக் கொண்டேன்.

332. பாதியொடு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றம் மேயான் தன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் தன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியானை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினை நோய்அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், உமா தேவியாரைத் தனது திருமேனியிலும் கங்கையை முடியின் மீதும் கொண்டு விளங்குபவர்; திருப்பாசூர், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ளவர்; வேத நாயகனாக விளங்கித் எழுந்தருளியுள்ளவர்; வேத நாயகனாக விளங்கித் தன்னுடைய அடியவர்களுக்கு எளியவராக திகழ்ந்து அருள் பொழிபவர்; மெய்ஞ்ஞான விளக்கமாகி நறுமணம் கமழும் பொழிலுடைய ஆரூர் மூலட்டானத்தில் புற்றிடங்கொண்ட ஈசனாய் விளங்குபவர்; யாவராலும் போற்றப்படும் ஆதி மூர்த்தியாகி அறநெறியில் மேவும் எம் தந்தையாவர். அப் பரமனை அடியேன் சென்றடைந்து வினைநோயைத் தீர்த்துக் கொண்டேன்.

333. நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நந்தி தேவரைத் தனது பணியைக் கொள்ளும் தன்மையில் ஏவல் கொண்டுள்ளவர்; திரு நாகேச்சுரத்தில் எழுந்தருளியுள்ளவர்; காலை மாலை ஆகிய சந்திகளில் மலரும் பூக்களைக் கொண்டு வானோர்கள் ஏத்தப்பெறும் நாயகர்; திருமாலுக்கு ஆழிப்படையளித்தவர்; குளிர்ந்து மேவும் சந்திரன் விளங்கும் பொழில் திகழ, ஆரூரில் மேவும் மூலட்டானத்தை இடமாகக் கொண்டவர்; தேவர்கள் போற்றுகின்ற அந்தணர் ஆவார். அப் பெருமான், அறநெறியில் வீற்றிருக்கும் அப்பன், அவரை அடைந்து அடியேன் அருவினை நோயை அறுக்கப் பெற்றேன்.

334. சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை
விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் தன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினை நோய்அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், சுடர் விடும் பவளம் போன்ற திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசி விளங்குபவர்; சோதிலிங்கத் திருமேனியுடையவர்; திருத்துஆங்கானைமாடம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவர்; இடுகாட்டினை இடமாகக் கொண்டவர்; முப்புரங்களை எரித்தவர்; ஆரூரில் மேவும் திருமூலட்டானத்தில் விளங்குபவர்; தன்னை மதிக்காத தக்கன் புரிந்த வேள்வியை அழித்தவர். அவர், அறநெறியில் மேவும் அப்பன் ஆவார். அப்பெருமானை அடியேன் அடைந்து வினை நோயை நீக்கிக் கொண்டேன்.

335. தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை
யுடைந்தேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தாய் போன்று எல்லாவுயிர்களையும் பேணிக் காப்பவர்; ஒப்புமை யற்றவர்; தில்லையில் திருநடனம் புரிபவர்; திருமால், நான்முகன் மற்றும் தேவர்கள் என யாவரும் ஏத்திப் போற்ற நஞ்சினை உட்கொண்டு ; எல்லாப் பொருள்களிலும் பொருந்தி அவையே தானாகி, மேவி விளங்குபவர்; ஆரூரில் விளங்கும் திருமூலட்டானத்தில் எழுந்தருளியுள்ளவர்; எம்பெருமானாகிய அப்பரமன், அரநெறியில் வீற்றிருக்கும் அப்பனாகி விளங்க அடியேன் சென்றடைந்து வினை நோயை நீக்கிக் கொண்டேன்.

336. பொருளியல்நற் சொற்பதங் ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னினானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை யிமையே ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நற்பொருளை விளக்கும் அருஞ் சொல்லாக விளங்குபவர்; திருப்புகலூர், திருப்புறம்பயம் என்னும் தலங்களில் எழுந்தருளியுள்ளவர்; மருட்சியுடையவர்களின் சிந்தையில் மேவித் தெளிவை உண்டாக்கும் ஞான மருந்தாகுபவர்; திருமறைக்காடு மற்றும் திருச்சாய்க்காடு என்னும் திருத்தலங்களில் உறைபவர்; ஆரூர் மூலட்டானத்தில் விளங்குபவர். தேவர்கள் போற்றும் அப்பரமன், அரநெறியில் மேவும் அப்பனர் ஆவார். அடியேன் அப்பெருமானை அடைந்து வினைநோயை நீக்கிக் கொண்டேன்.

337. காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுள்; நாகைக் காரோணம், திருக்கழிப்பாலை ஆகிய தலங்களில் உறைபவர்; உபமன்யு முனிவர் குழந்தைப் பருவத்தில் பால் வேண்டி அழுதிடப் பாற்கடலைத் தந்தருளியவர்; திருத்தொண்டாற்றும் அடியவர்களுக்கு இனிமையானவர்; திருவாரூர் திருமூலட்டானத்தில் வண்ணமும், அதன் தன்மையில் மேவும் விதையில் அவர் அரநெறியில் அப்பனாய் விளங்க, அடியேன் சென்றடைந்து வினையாகிய நோயைக் களையப் பெற்றேன்.

338. ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பானை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளீநீர் மண்ணா னானைப்
பொ --

தெளிவுரை : சிவபெருமான் தனக்கு உவமை கூறப்படுவதற்கு அரிதாகியவர். திருவோத்தூர் உறையூர் ஆகிய திருத்தலங்களில் உறைபவர்; சேமித்து வைத்த நிதியைப் போன்று துணையாகுபவர்; மாணிக்கம் போன்ற சுடர் வண்ணம் உடையவர். அவர் நிலமம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம் பூதங்கள் ஆகுபவர்.

339. பகலவன்தன் பல்லுகுத்த பிடிறன் தன்னைப்
பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை யிடர்செய் தானை
யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சூரியனின் பற்களை உகுத்தவர்; திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் உள்ளவர்; மாறுபட்டு நின்ற இராவணனை அடர்த்தவர்; பத்தியில்லாதவர் மனத்துள் தோன்றாதவர்; ஆரூரில் மேவும் திருமூலட்டானத்தில் மேனியவர். அப் பரமன், அறநெறியில் மேவும் அப்பன் ஆவார். அவரை அடைந்து அடியேன் வினைநோய் நீங்கப் பெற்றேன்.

திருச்சிற்றம்பலம்

34. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

340.ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நானோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நானோ
மானமறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னேர.
திருவாரூரில் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : சிவபெருமான் திருவாரூரில் கோயில் கொண்டு விளங்கிய திருநாளானது, உலகமெல்லாம் ஏத்தும் ஒப்பற்றவராக இருந்த நாளோ! அயன் அரி, அரன் என மூன்று உருவமாகி மேவிய நாளோ !காலனைக் காய்ந்த திருநாளோ ! மன்மதனை எரித்த நாளோ ! பூவுலகமும் விண்ணுலகமும் தோன்றிய நாளோ ! மானைக் கரத்தில் ஏந்திய நாளோ ! உமாதேவியைத் திருமேனியின் ஒரு பாகமாகக் கொள்வதற்கு முன்னரோ அன்றிப் பின்னரோ ஆகும் !

341. மலையார்பொற் பாவையோடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாதனே.

தெளிவுரை : திருவாரூரில் ஈசன் திருக்கோயில் கொண்டு விளங்கிய திருநாளானது, உமாதேவியாரை உடனாகக் கொண்டு மேவிய நாளோ ! வானவர்கள் வலிமையுடன் திகழுமாறு, அமுதம் கிடைக்குமாறு செய்த நாளோ ! தீப் பிழம்பாகித் திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரிதாகி உயர்ந்த நாளோ ! கடல் நஞ்சினை உண்டு காத்த திருநாளோ ! தேவர்கள் சூழ்ந்து போற்றி நாளோ ! முப்பும் எரித்த நாளோ ! அல்லது அதற்கு முன்னரோ ! பின்னரோ ! ஆகும்.

342. பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண் நாளே.

தெளிவுரை : ஈசன் திருவாரூரைக் கோயிலாகக் கொண்டு மேவிய திருநாள், உமாதேவியாருடன் வேட்டுவத் திருக்கோலத்தில் பார்த்தனுக்கு அருள் செய்யும் பொருட்டு ஏகிய நாளோ ! தேவர்களைக் காப்பவராய் மேவிய நாளோ ! தில்லை அம்பலத்தில் திருக்கூத்துப் புரிவதற்குப் புகுந்த நாளோ ! அல்லது அதற்கு முன்னரோ ! பின்னரோ !

343. ஓங்கி உயர்நதெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : ஈசன் ஆரூரில் கோயில் கொண்ட திருநாளாவது, சோதிப் பிழம்பாகி ஓங்கிய நாளோ ! எழுகின்ற யுகங்களாய் மேவிய நாளோ ! தக்கன் புரிந்த வேள்வியைத் தகர்த்த நாளோ ! நான்முகனும் திருமாலும் தியானித்து மேவச் சந்திரனைச் சடையில் வைத்த நாளோ ! அன்றி அதற்கு முன்னரோ, பின்னரோ !

344. பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தொண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : சிவபெருமான், பாலன், இளைஞன், வாலிபன் எனப்பெறும் பருவங்களில் மேவிய பான்மையில்லாதவர்; பணியும் அடியவர்களுக்குப் பற்றாகி அருள் வழங்குபவர்; நீல கண்டமும் எட்டுத் தோளும் கொண்டுள்ளவர்; நேற்று இன்று நாளை என்னும் முக்காலமும் ஆனவர்; ஒழுக்க சீலமும், சிவலோக நெறியும் ஆனவர்; செம்மை திகழும் புகழும், எண்குணச் சிறப்பும், நுண்ணறிவும், அழகும் உடையவர். இத்தகைய தன்மையுடைய ஈசன், திருவாரூரில் கோயில் கொண்ட நாள், இதற்கு முன்னரோ ! பின்னரோ !

345. திறம்பலவும் வழிகாட்சிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள் செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : ஈசன் திருவாரூரில் கோயில் கொண்ட திருநாளானது, உயிர்களுக்கு அறியும் திறனைக் காட்டி நுண்மையும் பருமையும் உடைய தோற்றம் கொண்ட நாளோ ! அறநெறியிலிருந்து திரிந்து செல்வர்களின் மயக்கத்தைத் தீர்த்தும் மாமுனிவர்களுக்கு அருள் செய்தும் மேவிய நாளோ ! பிரமனின் தலையை அறுத்த நாளோ ! கபாலம் ஏந்திப் பிச்சை யேற்ற நாளோ ! சனகாதி முனிவர்களுக்கு அறப் பொருள்களை உரைப்பதற்கு முன்னரோ ! பின்னரோ !

346. நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : ஈசன், திருவாரூரில் கோயில் கொண்ட திருநாளானது, மண்ணுலகில் தோன்றி நெடிது உயர்ந்து நெருப்புப் பிழம்பாகிய நாளோ ! நிலையாக வும் மாறுபட்டு இயங்கியும் எல்லாம் தாமேயாகிக் கற்பகமாக மேவிய நாளோ ! திருமாலைப் படைத்தும் முப்புர அசுரர்களை எரித்தும் சலந்தராசூரனை அழித்தும் தேவர்களுக்கு அருள் புரிந்த நாளோ ! அதற்கு முன்னோ பின்னோ !

347. பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கெடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : ஈசன், திருவாரூரில் கோயில் கொண்டு மேவிய திருநாளானது, முயலகனைத் திருப்பாதத்தால் அழுத்திப் பூவுலகில் பரஞ்சுடராகி ஓங்கிய நாளோ ! ஏத்திப் போற்றும் அடியவர்களுக்கு உயர்ந்த உலகப் பேற்றை அருளிச் செய்த நாளோ ! பூத கணங்களை யுடையவராகிய புனிதராய் சனகாதி முனிவர்களுக்கு அரம் உரைத்த நாளோ ! அதற்கு முன்னோ பின்னோ !

348. புகையெøட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : உலகில் உயிர்கள் புகுந்து கொள்ளும் பிறவியானது, தேவர். மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், ஆகிய ஏழுடன் நரகர் என் எட்டு ஆகும். மற்றும் போக்கு எனப்படும் குற்றங்கள் எட்டும், புலன்கள் வகையாயின எட்டும், பூதலங்கள் எட்டும், எண் பொழில்களும், எட்டுக் கலைகளும் காட்சி, காப்பு ஆகியனவும், அதனால் பெறப்படும் பயன்கள் எவ்டும், சுடர்கள் எட்டும், எட்டுவகையான கால பேதங்களாகிய அளவுகளும், நன்மைகள் எட்டும், நல்லோரின் எட்டு அகமலர்களும், திசைகள் எட்டும் என உடையனவாகும். இவையனைத்தும் தோன்றுவதற்கு முன்னோ பின்னோ ஈசன் திருவாரூரில் கோயில் கொண்டு மேவி திருநாள் ஆகும். புகைபுகுதல் பிறப்பினை உணர்த்திற்று; போக்கும் குற்றம். அவை எட்டு ஆவன.

1. அறியாமை, 2. திரிபு, 3.அகங்காரம் (யான் என்னும் அகப்பற்று), 4. மமகாரம் (எனது என்னும் புறுப் பற்று), 5. விருப்பு, 6. வெறுப்பு, 7. நல்வினை (பிறவிக்கு வித்தாவது), 8. தீவினை. இவற்றை வேறு வகையால் முன்னிலைப் படுத்தப்படுதலும் உண்டு.

349. ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

தெளிவுரை : சிவபெருமான், திருவாரூரைத் திருக்கோயிலாகக் கொண்ட திருநாளானது, ஏழு உலகமும் மலையும் ஆகி, இராவணனது செருக்கினை அடக்கிய நாளோ ! நறுமணம் கமழ இனிமை விளங்கும் தென்றலானது தோன்றிய நாளோ ! யானையின் தோலை உரித்த நாளோ ! சண்டேசருக்குக் கொன்றை மாலை அணிவித்துச் சிறப்பினைப் புரிந்த நாளோ ! சகரர்களை நரகிற் புகாவண்ணம் தவம் செய்த பகீரதச் சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி கங்கையை மண்ணுலகில் தவழச் செய்த புனித நாளோ ! இப்பூவுலகம் இறைவனை அறிவதற்கு முன்னோ ! பின்னோ.

திருச்சிற்றம்பலம்

35. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

350. தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் கழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பின் வண்ணச் சுடர்போன்ற திருமேனியில் தூய திருவெண்ணீறு பூசிக் கையில் சூலத்தை ஏந்தி நாகத்தை மாலையாகப் பூண்டு காதில் அணி திகழ், சடைகள் தாழ, முப்புரி நூல் அணிந்தவராகித் திங்களைச் சூடியவராய், வீதி வழியே உலாவந்து, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவர் திருக்குறிப்பை அறிந்த நடை நடக்கும் வெள்ளை இடபத்தில் ஏறி வெண்காட்டில் மேவிய விகிர்தனார் ஆவார்.

351. பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கியபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தனது திருப்பாதத்தை ஏத்தும் அடியவர்களுக்குத் திருப்பாத மலரால் அருள் புரியும் கருணை வயத்தவர்; பாதாளம் சென்று கடரும் திருப்பாதப் பெருமையுடையவர்; எல்லாக் குற்றங்களையும் தமது திருப்பாதத்தால் தீர்த்தருள்பவர்; ஏகபாதராக விளங்குபவர்; ஊர்தோறும் திரிந்து சென்று பலியேற்பவர்; பிரளய காலத்தில் வீணையை மீட்டுபவராகி வேதத்தை ஒலிக்கச் செய்பவர். அவர், வெண்காட்டில மேவிய விகிர்தர் ஆவார். இத் திருப்பாட்டானது, ஈசனின் திருவடி மாண்பினை ஏத்திப் போற்றுவதாயிற்று.

352. நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான் ஓடு ஏந்திப் பிச்சையேற்று வந்தார். நான் ஆங்கே நிற்கவும் பிச்சை ஏற்காதவராகி அருகே வருபவரைப் போன்று நோக்கினார். நான் அவருடைய ஊரை வினவ ஒன்றாகச் சொல்லவில்லை. அப்பெருமான், வெண்காட்டில் மேவும் விகிர்தர் ஆவார். இது அகத்துறையின் பாற்பட்டு ஈசன் மன்னுயிர் பால் கொண்டுள்ள கருணையை விழைந்து ஓதுதலாயிற்று.

353. ஆகத் துமையடக்கி யாறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறுடையவராகிக் கங்கையைச் சடையில் சூடி, அரவத்தை அரையில் கட்டி, இடப வாகனத்தில் ஏறிப் புலித்தோலை உடுத்தியவராகிப் பூத கணங்கள் சூழப் புகுந்து நிற்க, யான் அமுது இடுவதற்காகச் சென்றேன். அத்தன்மையில் அவர் என் கையைப் பற்றி என் நிலையை மறக்கச் செய்து, என் வளையலைக் கவர்ந்தார். அப் பெருமான் வெண் காட்டில் மேவிய விகிர்தம் ஆவார். ஈசன்பால் தன்னை மறந்து மேவும் மன்னுயிரின் தன்மையை அகத்துறையின் வாயிலாக ஓதப் பெற்றது.

354. கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற்
கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : ஈசன், வெண்குழையைக் காதில் அணிந்து, பூதகணங்கள் கொடுகொட்டியை முழங்கப் பாடலைப் பாடி என் உள்ளத்தைக் கவர்ந்து செல்வார் போல் திரிவார், நான் அதனைக் காணாதவன் போன்று இருப்பேன்.ஆயினும் என் கண்ணுள் அப் பெருமான், மறைந்து நிற்பார். அவர், கங்கை தரித்த சடைமுடியும், வேதம் ஓதும் திருநாவும் உடைய வெண்காட்டு நாதர் ஆவார்.

355. தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரையும் பரிசழிப்பா ரொக்கின் றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றார் கனலப் பேசிக்
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியார் வேத நாலர்
வெண்கொடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான் சூலத்தராகி மழுப்படையை யேந்திக் கொன்றை மலரை அணிந்து, வெள்ளை இடபத்தில் ஏறி இனிய வார்த்தைகளைப் பேசிப் பலி ஏதும் ஏற்காது. பார்க்கின்றவர் தம் நெஞ்சைக் கவர்பவராயினர். திருவெண்ணீற்றுத் திருமேனி வேதம் ஓதுபவராகிச் சடை முடி கொண்டு மேவும் வெண்காட்டு நாதர் ஆவார்.

356. பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கை
கோணாகம் பூண்பனவும் நாணாஞ் செல்வார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றே லோவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேதம் ஓதி
வெணகாடு மேவிய விகிர்தா னாரே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைப் பாகம் கொண்டு நாகத்தை ஆபரணமாக உடையவர்; உலக மாந்தரைப் போன்று உண்பதும் மேலாதவராகி நஞ்சினை உண்டவர். அவர், விரிந்த சடையுடையவர். என்னைப் பற்றியவராகி, இனிமையாகப் பேசுதல் ஆனார். அப்பரமன், சடையின் மீது சந்திரனைச் சூடி, வேதம் ஓதியவராகி வெண் காட்டில் மேவும் விகிர்தனார் ஆவார்.

357. மருதங்க ளாமெரிவர் மங்டக யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
கருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : ஈசன், இனிய தோத்திரங்களால் ஏத்தப்படுபவர்; தேவர்கள் மற்றும் திருமாலும் நான்முகனும் கூடி ஏத்திப் பூசித்து வழிபட்டுத் தூப தீபங்கள் காட்டிக் குற்றவேல் புரிய, வேண்டிய வரங்களைத் தருபவர். அப் பெருமான், வெள்ளை இடபத்தில் ஏறி விளங்கும் வெண்காட்டு நாதர் ஆவார்.

358. புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் தேடிப் போந்தும் காணாது பேரழலாகி நின்ற சிவபெருமான், எல்லாப் பொருள்களிலும் வீற்றிருப்பவர்; உலகத்தின் விளக்காக ஒளிர்பவர்; கொன்றை மாலை சூடி விளங்குபவர். தவம் செய்த வெள்ளை யானைக்கு அருள் புரிந்தவர். அவர் வெண் காட்டில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

359. மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீச்சுந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாய்ப பிடித்த திருமாலின் (கிருஷ்ணாவதாரத்தில் புரிந்து அருளிச் செயல்) மைந்தனாகிய கரும்பு : வில்லையுடைய மன்மதனை நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்தவர் சிவபெருமான். அவர், இராவணனுடைய முடிகள் நெரியுமாறு திருவிரலால் கயிலை மலையை ஊன்றி அடர்த்தவர். அப்பெருமான், வெண் காட்டில் மேவிய விகிர்தனார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

36. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

360. அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையால் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே

தெளிவுரை : ஈசன், கடல் நஞ்சை உட்கொண்டு தேவர் களுக்கு அருள்செய்த ஆதிமூர்த்தியாவார்; கூற்றுவனை உதைத்தவர்; புலித்தோலை உடுத்தியவர்; முப்புரங்களை எரித்தவர்; நீப்போன்று சுட்டுத் துன்புறத்திய சூலை நோயைக் களைந்து, என்னை ஆட் கொண்டவர்; கபாலம் ஏந்திப் பலியேற்கும் பண்புடையவர். அவர் பழனத்தில் மேவும் எம் தலைவர் ஆவார்.

361. வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே
யுறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரனார் தாமே.

தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடையின் மேல் ஏற்று விளங்குபவர். தேவர்களாகிய மேலோர்களுக்கு மேலவர்களாகிய அயன்மாலுக்கும் மேலானவர்; புறச் சமயம் சார்ந்த என் குற்றத்தைப் போக்கி ஆட்கொண்டவர்; பூத கணங்களைப் படையாக உடையவர்; உள்ளத்தில் உவகையை உண்டாக்குபவர்; பிறவி நோயும் ஏனைய இப் பிறவியில் நேரும் சிறு நோய்களையும் தீர்ப்பவர்; கடலில் தோன்றிய நஞ்சை உட்கொண்டு காத்தவர். அவர் பழனத்தில் மேவும் எம் பெருமான் ஆவார்.

362. இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போதும் என்நெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையில் அசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேல்மே லுகப்பார் தாமே
பரம் அடியார்க்குப் பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : ஈசன், இரவும் பகலுமாக விளங்குபவர்; என்னுடைய நெஞ்சில் எக்காலத்திலும் உறைபவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; கையில் நெருப்பை ஏந்தி ஆடியவர்; குரவ மலரின் மணம் கமழும் திருக்குற்றாலத்தில் வீற்றிருப்பவர். திருவேடங்களையுகந்து மேவுபவர்; பரவியேத்தும் அடியவர்களுக்கு நற்பாங்குடன் அருள் புரிபவர். அப்பெருமான் பழனத்தில் மேவும் எம் தலைவர் ஆவார்.

363. மாறில் மதில்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக வார்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறுகொடுஞ் சூலக் கையர் தாமே
யென்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், வலிமையுடன் விளங்கிய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; திருவெண்ணீறு தரித்து விளங்கும் நிமலர்; நெருப்புக் கண்ணுடையவர்; சூலத்தைக் கையில் ஏந்தியவர்; எலும்பாபரணம் அணிந்தவர்; பிரமகபாலம் ஏந்திப் பலியேற்பவர். அவர் பழனத்தில் மேவும் எம் தலைவர் ஆவார்.

364. சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா அமுதமு மானார் தாமே
யளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியமம் உடையார் தாமே
நீள்வரைவில் லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், யாவராலும் சிறப்புடன் வணங்கப்படுபவர்; திசைகளுக்கெல்லாம் தலைவர்; அன்பர்களுக்கு ஆரா அமுதாக விளங்கி இனிமை தருபவர்; அளவற்ற பெருமையுடையவர்; இனிமையுடைய ஒழுக்கசீலம் உடையவர்; மேரு மலையை வில்லாக வளைத்தவர்; பூவுலகத்தவரால் பரவி ஏத்தப்படுபவர். அப்பெருமான் பழனத்தில் மேவும் எமது பிரான் ஆவார்.

365. காலனுயிர் வெளவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீர்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானானர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், காலனின் உயிரைக் கவர்ந்தவர்; விரைவாக ஏகும் வெள்ளை இடபத்தை உடையவர்; அழகிய திருவேங்கடங்கள் பல கொண்டு மகிழ்பவர்; வாசுகி என்ற பாம்பை நாணாகக் கொண்டு வில்லை ஏந்தியவர்; நீல கண்டத்தை உடையவர்; பாலராகவும் விருத்தராகவும் திருக்கோலம் கொண்டு அருளியவர். அப் பரமன், பழனத்தில் மேவும் எம் பிரான் ஆவார்.

366. ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
யேழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவாய் அறவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; ஊழிகளை கடந்தவர் அடியவர்கள் விரும்பி மலர்தூவி ஏத்த உகப்பவர்; அளவற்ற பெருமையுடையவர்; பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; அரவத்தைக் கையில் பற்றி ஆர்த்து விளங்குபவர்; கங்கையைச் சடையில் ஏற்றவர். அப்பெருமான் பழனத்தில் மேவும் எம் பிரான் ஆவார்.

367. ஓராதா ருள்ளத்தில் நில்லவார் தாமே
யுள்ளூறும் அன்பர் மனத்தார் நாமே
பேராதொன் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றும் காட்சிக் கரியார் தாமே
ஊராகு மூவுலகத் துள்ளார் தாமே
யுலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திமையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நினைத்து ஏத்தாதவர் உள்ளத்தில் மேவாதவர்; நினைந்து ஏத்தும் அனபர்களின் மனத்தில் மேவி விளங்குபவர்; என் சிந்தையில் சூடி கொண்டு விளங்குபவர்; ஏனையோர்க்குச் காட்சி அரியவர்; மூன்ற உலகங்களிலும் நேராமல் அப்பெருமான் பழனத்தில் மேவும் எம் பிரான் ஆவார்.

368. நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறந்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் புரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மூவுலகத்தை அளப்பதற்õக நெடிது உயர்ந்த திருமால், காணுதற்கு அரிய தன்மையில், நெருப்பு உருவத்தில் ஓங்கி உயர்ந்தவர்; உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு, அதன்மேல் நாகத்தைக் கட்டியவர்; பொன் போன்ற சடையில் கங்கையைத் தரித்துள்ளவர்; ஏழுலகங்களையும் ஆட்கொண்டு விளங்குபவர்; மன்னுயிர்கள் உய்தற் யöõங்கணறும் சிவமாகத் திகழ்பவர்; பார்த்தனுக்கு அருள் புரிந்தவர். அப் பெருமான் பழனத்தில் மேவும் எம்பிரான் ஆவார்.

369. விடையேறி வேடுலகத் திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தர் தாமே
பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையும் ஆற்ற வழித்தார் தாமே
படையாய் பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் மேவி எல்லா உலகங்களிலும விளங்குபவர்; சூரியனாகத் திகழ்பவர்; தேவர்கள் புடை சூழ விளங்குபவர்; சோற்றுத்துறை, பூந்துருத்தி, நெய்த்தானம், ஐயாறு ஆகிய தலங்களில் மேவுபவர்; இராவணனின் ஆற்றலை அழித்தவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர். அப்பெருமான், பழனத்தில் மேவும் எம்பிரான் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

37. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

370. ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நாதனே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்ணென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான், பொருந்தி நிற்காத அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய பெருமானே ! கூரிய மழுப்படையும் பூத கணங்களையும் உடைய பெருமானே ! பேராயிரம் உடையவராகிப் பிறைசூடும் பிஞ்ஞகனே ! ஆராஅமுதென விளங்கும் ஐயாற்றில் மேவும் ஈசனே ! என்று நான் மனம் உருகி ஏத்தி நிற்கின்றேன்.

371. தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, முப்புரங்களை எரித்துச் சம்பலாக்கிய புராணனே ! இளமையான சந்திரனைச் சூடிய முக்கண்ணனே ! முதல்வனே ! அம்பு தொடுத்து மேவும் வில்லுடைய நாதனே ! என்னைத் துயர்க் கடலிலிருந்து கரையேறச் செய்து, வருவாய் என்று அழைக்கும் ஐயாற்றீசனே ! என ஏத்தி நைகின்றேன்.

372. அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, திருவெண்ணீறு தரித்த பிரானே ! அடியவர்களின் ஆரமுதே ! நீல கண்டனே ! நான்கு மறையாக விளங்குபவரே ! நினைத்து ஏத்தும் அன்பர்களின் உள்ளத்தில் அமுதம் என மேவும் ஈசனே ! யான் அச்சம் கொள்ளாதவாறு என்னை ஆளும் ஐயாற்று இறைவனே ! என உருகி ஏத்தி நைகின்றேன்.

373. தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, தொன்மை மேவும் கடலே ! இளம்பிரைச் சந்திரனைச் சூடிய நாதனே ! யாவுமாக நிறைந்த பரமனே ! ஏழிசையாகிய நாயகனே ! அல்லல் இல்லாது காக்கும் ஐயாற்றீசனே ! என, அரற்றி நைகின்றேன்.

374.இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னை
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானைச் சடைமுடியில் இண்டை மாலை புரிந்த ஈசனே ! இருசுடராக விளங்கும் சோதியே ! தொண்டர்களால் தொழப்படும் பரமனே ! நீலகண்டப் பெருமானே ! நெற்றியில் நெருப்புக் கண்ணுடைய ஈசனே ! திருத்துருத்தி, நெய்த்தானம் ஆகிய தலத்துள் விளங்கும் நாதனே ! ஐயாற்றீசனே ! என, அரற்றி ஏத்தி நைகின்றேன்.

375. பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றனார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, முப்புரத்தை எரித்த ஈசனே ! பசுபதீ ! பண்டரங்கக் கூத்து புரியும் நாதனே ! கற்றவர்கள் ஏத்தும் கற்பகளே ! இடப வாகனத்தை உடைய ஈசனே ! அன்பர்களின் நெஞ்சுள் உறையும் நாயகனே ! பார்த்தனுக்கு அருள் செய்த பரமனே ! அன்பர்க்கு அருளும் ஐயாற்றீசனே ! என்று அரற்றி ஏத்தி நைகின்றேன்.

376. விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான, இளம்பிறை சூடிய பெருமானே ! தேவர்களின் தலைவனே ! முப்புரம் எரித்த ஈசனே ! திருக்கச்சியில் மேவும் ஏகம்ப நாதனே ! தேவங்களை ஓதிய பரமனே ! பசுபதீ ! திருநீறு தரித்த திருமேனியுடைய ஈசனே ! திருவண்ணாமலையில் விளங்கும் சோதியே ! ஐயாற்றீசனே ! என, நான் அரற்றி ஏத்தி நைகின்றேன்.

377. அவனென்று நானுன்னை யஞ்சா தேனை
அல்லல் அறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றன்னை
யென்றென்யே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானுக்கு அஞ்சி நடக்காது அவம்கொண்டு இருந்தனன். அப் பெருமான், என் துயரைக் களைபவர்; சிவனே என ஏத்த அருட் செல்வத்தை வழங்குபவர்; பவன் என என்னுள்ளத்தில் மேவி, வினையை நீங்குபவர். அப் பரமனை, ஆதி மூர்த்தி யாகிய ஐயாற்றீசனே என்று நான் அரற்றி நைகின்றேன்.

378. கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானைத் திருக்கச்சியில் மேவும் ஏகம்பநாதனே ! கயிலை மøயில் வீற்றிருக்கும் ஈசனே ! காரோணத்தில் திகழும் பரமனே ! உமாதேவியாரோடு நித்தமும் மணவாளத் திருக்கோலத்தில் திகழும் தலைவனே ! நினைத்து ஏத்தும் அன்பர் மனத்துள் மேவும் ஈசனே ! அச்சமும் பிணியும் தீர்க்கும் ஐயாற்றீசனே ! என ஏத்தி அரற்றி நின்று நைகின்றேன்.

379. வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
கலாவாய தொல்நெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத் தாயென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, வில்லேந்தி வேட்டுவத் திருக்கோலம் தாங்கிய ஈசனே ! திருவெண்ணீறு தரித்த பரமனே ! சொல்லாகவும், சூழ்ந்து மேவியும், விளங்கித் தொன்மையுடைய ஆசார சீலம் உடைய தலைவனே ! எல்லாமாகவும் என்னுயிராகவும் திகழும் தேவனே ! இராவணனுடைய தோள்களை நெரித்த கயிலை வாசனே ! தீவினைகளைத் தீர்த்தருளும் ஐயாற்றீசனே ! என, ஏத்தி அரற்றி நைகின்றேன்.

திருச்சிற்றம்பலம்

38. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

380. ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஓசையாகவும், ஒலியாகவும் திகழ்பவர்; உலகுக்கெல்லாம் ஒப்பற்ற ஒருவராக விளங்குபவர்; வாசம் பொருந்திய மலராக மேவுபவர்; மலையரசனின் மருகராக விளங்குபவர்; பக்தி பூண்டு பேசும் அன்பர்களுக்கு இனிமையானவர்; எம் தலைவராகித் திருவடியைச் சூட்டியவர்; ஒளி திகழும் யாவும் ஆகியவர். நீவிர் திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதி ஆவீர்.

381. நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாயே நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஊனக் கண்ணால் நோக்குவதற்கு அரியதாகிய திருமேனியுடையவர்; பசி, பிணி, பிறப்பு, இறப்பு முதலான வருத்தம் இன்றி அருள் நோக்கம் புரிபவர்; ஐம்புலன்களால் தீமை நிகழாத வண்ணம் காத்தருளியவர்; மன்மதனை எரித்தவர்; நாகத்தை யுடையவர்; அடியவன் மீது திருவடியை øவ்து ஆட் கொண்டவர்; தீர்வதற்கு அரியதாகிய தீவினையைத் தீர்த்தருள்பவர். தேவரீர், திருவையாற்றில் மேவும் செம்பொற் சோதியாவீர்.

382. கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்சேச வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வானில் மேவும் பெருஞ்சுடர் ஆகியவர்; கடலும், மலையும், வானும் ஆகியவர்; மண்டையோட்டைக் கலனாகக் கொண்டு பலியேற்றவர்; சாரும் அடியவர்களை ஆட்கொண்டு அருள்பவர்; அன்பர்களின் மனக் கருத்தை முடித்து வைப்பவர்; மலர் போன்ற சேவடியை என்மேல் வைத்தவர்; நீலகண்டத்தையுடையவர். நீவிர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

383. வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கள் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வானை நோக்கியுள்ள மலைகளாக ஆகுபவர்; பெருமையுடைய கயிலை மலையில் விளங்குபவர்; ஒளி மிகுந்த மழுப் படையுடையவர்; சந்திரன், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சென்னியில் வைத்தவர்; பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; அடியவனாகிய என்மேல் திருவடி வைத்தருளியவர்; தேன் போன்ற சொல் பயிலும் உமா தேவியைப் பாகமாக உடையவர். நீவிர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

384. பெண்ணான் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பெண்ணாகவும் ஆணாகவும் பிறப்பில்லாத ஈசனாகவும் விளங்குபவர்; பெரியவர்கள் எனப்படும் அயன், மால் மற்றும் ஞானியர் முதலான அனைவருக்கும் பெரியவர்; உண்பதற்கு உரியதாகாத நஞ்சினை உண்டவர்; ஊழியின் முதற் பொருளாய் விளங்குபவர்; உலகின் கண்ணாக மேவிக் காப்பவர்; கழலணிந்த சேவடியை என்மேல் வைத்து அருளியவர்; உறுதியான மழுப்படையுடையவர். நீவிர் திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற்சோதியாவீர்.

385. உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எல்லாப் பொருள்களின் உணர்வாக விளங்குபவர்; உற்றவர்க்கோர் துணையாகும் சுற்றம் ஆகுபவர்; கற்று விளங்கும் கலை ஞானம் ஆகுபவர்; கற்று மேவும் அருளாளர்களுக்கு, இனிய ஊற்றம் தரும் கற்பகமாய் விளங்குபவர்; ஈன்ற தாயினும் நன்மை புரிபவர்; தலைவனாய் என் தலைமேல் திருவடி வைத்தவர்; திருநீலகண்டனாகத் திகழ்பவர். நீவிர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

386. எல்லா உலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எல்லா உலகமும் ஆனவர்; திருக்கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; நற்குணத்தினரை அறிபவராகி அத்தன்மையில் அத்தகையோருக்கு உரிய நன்மையாக விளங்கும் பொருள்களை நன்கு அறிந்து அருளிச் செய்பவர்; ஞானத்தின் நல் விளக்கமாகத் திகழ்பவர்; பொல்லாங்கு விளைவிக்கும் தீய வினைகளை அறுப்பவர்; புகழ்மிக்க திருவடியை என் மேல் வைத்து அருள் புரிந்தவர்; மெய்யான செல்வத்தை வழங்குபவர். நீவிர் திருவையாற்றில் அகலாது விளங்குகின்ற செம்பொற் சோதியாவீர்.

387. ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவரறியாத தேவன் தீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பஞ்ச கவ்வியöத்தைப் பூசனையாகக் கொள்பவர்; அளவற்ற பெருமையுடையவர்; பூவினில் விளங்கும் நறுமணமானவர்; போர்க்கோலம் தாங்கி முப்புரங்களை எரித்தவர்; நடுநிலை மேவும் நீதிச் சொல்லாக விளங்குபவர்; தேவர்களாலும் அறிய முடியாத மாதேவர். நீவிர் திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

388. எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எண் திசைகளுக்கும் ஒண் சுடராய் விளங்குபவர்; திருக்கச்சித் திருவேகம்பத்தில் விளங்கும் இறைவர்; கொன்றை மாலை சூடியனர்; பக்குவப்பட்ட ஆன்மாக்கள் மகிழ்ந்து மேவும் முத்திப்பேறாகிய உலகத்தை அளிப்பவர்; தொண்டர்கள் புகழ்ந்து ஏத்த விளங்குபவர்; தூய்மையான சேவடியை என்மேல் வைத்தவர்; முப்புரத்தை எரிப்பதற்காக மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாயு, அக்கினி, திருமால் ஆகியோரைக் கூட்டி ஒரு சரமாக ஆக்கியவர். தேவரீர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

389. விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்ககு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள் விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; நஞ்சுண்டு தேவர்களைக் காத்த தலைவர்; ஊழிக்காலமாகத் திகழ்பவர்; அடியவனைத் தொண்டனாக்கியவர்; தூய்மையான மலரடியை என்மேல் வைத்தருளியவர்; கையில் எரியேந்தி ஆடல் புரிபவர். நீவிர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற் சோதியாவீர்.

390. ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் யாராலும் அறியப்படாதவர்; வானில் தேர் செலுத்தும் வல்லவர்; இராவணனுடைய பத்துத் தலைகளும் துன்புறுமாறு செய்தவர்; முப்புரங்களை எரித்தவர்; பிரமனும் திருமாலும் தேடும் திருவடிமலரை ஈசன்மேல் வைத்தவர். நீவிர், திருவையாற்றில் அகலாது மேவும் செம்பொற்சோதியாவீர்.

திருச்சிற்றம்பலம்

39. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

391. நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீறு துதையப்பூசிய திருமேனியுடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டுள்ளவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; இடபத்தில் ஏறி எல்லா இடங்களிலும் திரிபவர்; ஏழுலகமும் ஏழுமலைகளும் ஆனவர்; பகைத்துப் போர் செய்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; அப் பரமன் மழபாடியில் விளங்கும் மணாளர் ஆவார்.

392. கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், சென்னியில் கொக்கின் இறகைச் சூடியவர்; இடபத்தில் ஏறும் கூத்தன் ஆவார்; எலும்பினை அரையில் கட்டி ஆடுபவர்; கையில் நெருப்பேந்தியவர்; சங்கு மணியும் பாம்பும் மாலையாக உடையவர்; அடியவர்களுக்கு அமுதம் என இனிமை புரிபவர்; கங்கை தரித்த சடையுடையவர். அப் பெருமான், மழபாடியில் விளங்கும் மணவாளர் ஆவார்.

393. நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் சேற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்றா மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், சென்னியில் கொக்கின் இறகைச் சூடியவர்; இடபத்தில் ஏறும் கூத்தன் ஆவார்; எலும்பினை அரையில் கட்டி ஆடுபவர்; கையில் நெருப்பேந்தியவர்; சங்கு மணியும் பாம்பும் மாலையாக உடையவர்; அடியவர்களுக்கு அமுதம் என இனிமை புரிபவர்; கங்கை தரித்த சடையாடையவர். அப் பெருமான், மழபாடியில் விளங்கும் மணவாளர் ஆவார்.

393. நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் சேற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்றா மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண்ணுடையவர்; உமைபாகம்; பாம்பினை ஆட்டிப் பல ஊர்கள் சென்று பலியேற்பவர்; முப்புரங்களை எரித்தவர்; சென்னியில் சந்திரனைச் சூடியவர். எத்தகைய குற்றத்திற்கும் ஆட்படாதவர். அவர், மழபாடியுள் விளங்கும் மணாளர் ஆவார்.

394. அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் தரித்தவர்; அண்டங்களைக் கடந்தவர்; காலனை உதைத்து அழித்தவர்; புலியின் தோலை உடுத்தியவர்; முப்புரங்களை வில்லேந்தி எரித்துச் சாம்பலாக்கியவர்; சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; மலை மங்கையாகிய உமாதேவியின் மணாளர். அப்பரமன், மழபாடியுள் மேவும் மணாளர் ஆவார்.

395. உலந்தார்தம் அங்கம் அறிந்தாந் கண்டாய்
உவகை÷õ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், இறந்தவர்களின் எலும்பை ஆபரணமாக உடையவர்; பக்தர்களுக்கு மகிழ்ந்தருள்பவர்; கொன்றை திகழும் சடையுடையவர்; நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆனவர்; மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை யேற்பவர். மலர்பாதத்தை தன் தலை மேல் வைத்தவர். அப்பெருமான் மழபாடியுள் மேவும் மணாளர் ஆவார்.

396. தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவ வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் தலையைக் கொய்தவர்; பக்தர் நெஞ்சினை இருக்கையாகக் கொண்டவர்; திருமாலால் ஏத்தப்படுபவர்; எல்லாப் பொருள்களிலும் பொருந்தி விளங்குபவர்; அம்பு பொருந்தி வில்லையுடையவர்; கண்டத்தில் கருமையுடையவர்; மானைக் கையில் ஏந்தியவர். அப்பெருமான் மழபாடியுள் விளங்கும் மணாளர் ஆவார்.

397. நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், கடலும் மலைகளும், விசும்பும் ஒளியும், பூவுலகமும், சூரியனும் ஆகுபவர்; அன்பர்தம் அன்பர்; அணுவாகவும் ஆதி மூர்த்தியாகவும் விளங்குபவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவர். அப் பெருமான், மழபாடியுள் மேவும் மணாளர் ஆவார்.

398. பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்ற திருமேனியுடையவர்; கொன்றை மாலை தரித்தவர்; மின்னலைப் போன்ற சடை முடியுடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; தன்னை நிகர்த்த வேற ஒருவர் இல்லாதவர்; மங்கலம் தரும் சிவமாகத் திகழ்பவர்; உமை பாகம். அப்பெருமான், மழபாடியுள் மேவும் மணாளர் ஆவார்.

399. ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், ஆலகால விடத்தை உண்டு கண்டத்தில் இருத்திய ஆதி மூர்த்தியாவர்; புரங்கள் மூன்றினையும் எரித்தவர்; காலனைக் காலால் அழித்தவர்; கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்த பரமர். பால் போன்ற இனிய மொழி பகரும் உமாதேவியைப் பாகமாகக் கொண்டவர்; இடபத்தில் ஏறிப் பலி÷ யற்பவர்; திருமாலும் அறிதற்கு அரியவர். அப்பெருமான் மழபாடியுள் மேவும் மணாளர் ஆவார்.

400. ஒரு சுடராய் உலகேழு மானான் கண்டாய்
ஒங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேற்வொலியு மானான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

தெளிவுரை : சிவபெருமான், ஒப்பற்ற சுடராகி ஏழுலகமும் ஆகி ஓம் எனும் சொல்லின் உட்பொருளாய் விளங்குபவர்; ஞாயிறு, சந்திரன் ஆகிய சுடர்களாகவும் அவற்றின் ஒளி வண்ணமாகவும் விளங்குபவர்; விழாக்களும் வேள்வியும் ஆற்றும் செயலாகத் திகழ்பவர்; இராவணின் இருபது தோள்களையும் நெரியச் செய்தவர். மாணிக்க மலை போன்றவர். அப் பெருமான் மழபாடியுள் விளங்கும் மணவாளர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

40. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

401. அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
யென்றொன்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் என இனிமையுடன் உண்டு தேவர்களைத் காத்த தலைவர். மேருவை வில்லாகவும், நாகத்தை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு திரிபுரங்களை எரித்துச் சாம்பலாக்கிய பெருமை யுடையவர்; பொன்னும் முத்தும் வயிரமும் போன்று யாவும் தொகுத்தவாறு மழபாடியில் மேவும் வயிரத் தூண் ஆகியவர். அப்பரமனை நான் ஏத்தி மனம் கசிந்து உருகுகின்றேன்.

402. அறைகலந்த குழல்மொந்த வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் காம்பம் மேய
கனவயிரத் திரள் தூணே கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானை, குழல், மொந்தை, வீணை, யாழ் என்னும் கருவிகளால் கந்தருவரும் தேவரும் ஏத்த விளங்குபவர்; வேத மந்திரங்கள் ஓதிப் புனித நீர் கொண்டு வழிபடும் அன்பர்களுக்கு வானுலகத்தை ஆளும் பேறு அளிப்பவர்; திருக்கச்சியில் மேவும் திருவேகம்பத்தில் மேவுபவர். அப் பெருமான் கனகவயிரத்தூணாக வேதங்கள் விளங்கியேத்தும் மழபாடியுள் வீற்றிருப்பவர். அவரை நான் மனம் கசிந்து உருகி ஏத்துகின்றேன்.

403. உரங்கொடுக்கு மிருண்மெய்ர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கொடுத்திங் கடியேனை யாண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான், சமணர்தம் பொய்யுரையின் பாற்பட்டு வருந்திய என்னை ஆட்கொண்ட பவளத்தின் திரட்சி போன்றவர்; மன்மதனை எரித்தவர்; முப்புரத்தை அழித்தவர். அவர், பொன்னும் முத்தும் வயிரமும் ஆகித் தூண் போன்று மழபாடியில் விளங்குபவர். அப் பரமனை ஏத்தி அரற்றி நைகின்றேன்.

404. ஊனிகந்தூ ணுறிக்கையர் குண்டர் பொல்லா
வூத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்டு
மீனகஞ்சேர் வெள்ளநீர் வீதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான், சமணர்பால் மயக்குற்று வாடிய என்னைப் பொருளாகக் கொண்டு ஆட் கொண்டவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; தேவர்களின் தலைவர். அவர், மழபாடியில் மேவும் வயிரத்தூண் ஆகியவர். அப்பரமனை ஏத்தி அரற்றி நைகின்றேன்.

405. சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஒல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமான், நான்முகனின் சிரத்தைக் கபாலமாகக் கொண்டவர்; சூரியனின் பல்லை உகுத்தவர்; சந்திரனைத் தேய்த்தவர்; வெள்ளை இடபத்தில் விளங்குபவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; மழபாடியுள் மேவும் வயிரத்தூண் ஆகியவர். அப் பெருமானை ஏத்தி அரற்றி நைகின்றேன்.

406. சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சமண சமயத்தில் மூழ்கித் தீவினையில் விழுந்திருந்த என்னை ஆட்கொண்டு, காம மயக்கத்தை ஒழியச் செய்து கருணை புரிந்த சிவபெருமான், என்னைத் திருத்தும் வயிரத் தூணாக மழபாடியுள் விளங்குபவர். அப்பரமனை நான் ஏத்தி அரற்றி நைகின்றேன்.

407. சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்துணையே யென்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பிறவித் துயரைத் தீர்ப்பவர்; சுருண்டு மேவும் சடையுடையவர்; கங்கையைச் சடையில் ஏற்றவர்; எனக்குத் துணையாகவும், தலைவராகவும், விளங்குபவர்; திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரியவர்; ஒளிக்கதிர் எனத் திகழ்பவர். தேவரீர் வேதத்தின் உச்சியாய், வழித்துணையாய், வயிரத் தூணாய், மழபாடியில் விளங்குபவர். தேவரீரை நான் ஏத்தி அரற்றி நைகின்றேன்.

திருச்சிற்றம்பலம்

41. திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

408. வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எல்லா வகைகளும் உடையவர்; கயிலையில் மேவுபவர்; மிகைப் பொருளையும் கடந்து அளவிடற்கு அரியவர்; என் உயிர்க்குப் பகையாக மேவும் ஐம்புலன், மும்மலம், இருவினை முதலான யாவினையும் தீர்த்து ஆட்கொண்டவர்; திருவெண்காடு, திருப்பாசூர் ஆகிய திருத்தலத்தில் மேவுபவர்; எல்லாத் திசைகளிலும் தொழுது போற்றும் அன்பர்களுக்கு, ஆங்காங்கே சென்று எழுந்தருளி அருள் புரிபவர். தேவரீர், நெய்த்தானத்தில் மேவி, என்னுடைய நெஞ்சிலும் விளங்குபவராவார்.

409. ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே என்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நீன்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், எனக்கு இனிய அன்பராகியவர்; கயிலாயத்தில் மேவுபவர்; நடனக் கலையின் நுட்பங்கள் திகழத் திருநடனம் புரிபவர்; திருக்கோடிகா மேவும் அழகர்; பார்த்தனுக்குப் பாசுபத அத்திரம் அருளியவர்; பழையனூர் என்னும் திருத்தலத்தில் மேவும் பண்பவர்; தீர்த்தனாகவும் சிவலோக நாதனாகவும் விளங்குபவர். அப்பெருமான், நெய்த்தானத்தில் மேவி என் நெஞ்சுள் வீற்றிருப்பவர் ஆவார்.

410. அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், இரவாகவும் பகலாகவும் விளங்குபவர்; கயிலையில் விளங்குபவர்; கல்லால மரத்தின் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்தவர்; திருக்காளத்தில் விளங்குபவர்; கற்பகத் தருவாய்த் திகழ்பவர்; சொல்லும் பொருளுமாகுபவர்; சோற்றுத் துறையுள் மேவுபவர்; மாந்தர்க்கு உலகியலின் திருவாய் விளங்குபவர். தேவரீர், நெய்த்தானத்தில் மேவி என் நெஞ்சுள் விளங்குபவர்.

411. மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளா÷ ய.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டவர்; பனி சூழ்ந்த கயிலையில் விளங்குபவர்; பொன் போன்ற சடையுடையவர்; பூத கணங்களின் தலைவர்; என் நாவின் சுவையாக உள்ளவர்; திருக்கச்சியில் மேவும் திருவேகம்பத்தில் மேவுபவர்; தென்னூர் என்னும் தலத்தில் விளங்குபவர். தேவரீர், திருநெய்த்தானத்தில் மேவியிருந்து என் நெஞ்சுள் விளங்குபவர்.

412. முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன் கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள் செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறந் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரிபாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், முதற் பொருளாய் விளங்குபவர்; கயிலையில் மேவும் ஆதி மூர்த்தி; நந்திக்கு அருள் புரிந்தவர்; திருநள்ளாற்றில் நடம் புரிபவர்; பந்தத்தால் பிணிக்கப் படாதவர்; பைஞ்ஞீலியில் வீற்றிருப்பவர்; சிந்தைக்கும் மேலானவர். தேவரீர் நெய்த்தானத்தில் மேவி நின்று என் நெஞ்சுள் விளங்குபவர்.

413. தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவெண் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அடியவர்களுக்குத் தக்க துணையாகுபவர்; கயிலை மலையில் மேவுபவர்; எலும்பு மாலை பூண்டவர்; ஆக்கூரில் தான்தோன்றீசராக வீற்றிருப்பவர்; ஏழுலகும் ஆனவர்; புள்ளிருக்கும் வேளூரில் மேவுபவர்; மாகோணம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். தேவரீர், நெய்த்தானத்தில் மேவி நின்று என் நெஞ்சுள் விளங்குபவர்.

414. புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பெருமைக்குரிய பெரும் புகழ் உடையவர்; கயிலையில் மேவுபவர்; கபாலம் ஏந்தியவர்; இராமேச்சுரத்தில் மேவுபவர்; கபாலம் மேவி இருப்பவர்; சந்திரனைச் சூடியவர்; தேவரீர், நெய்த்தானத்தில் மேவி நின்று என் நெஞ்சுள் விளங்குபவர்.

415. வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றுங்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் வானவர்களின் தலைவர்; எப்போதும் இளமையாகத் திகழ்பவர்; கயிலை நாயகர்; மயானத்தில் ஆடுபவர்; திருக்கடவூர் வீரட்டானத்தில் மேவியவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; திருவொற்றியூர், திருவாரூர் ஆகிய தலங்களில் உள்ளவர்; தேனும் அமுதும் போன்று அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவர். தேவரீர், நெய்த்தானத்தில் நின்று மேவி என் நெஞ்சுள் விளங்குபவர்.

416. தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கண்ணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், தந்தை தாய் என இன்றிச் சுயம்பானவர்; கயிலை நாதர் ! எம் பிரானாகியவர்; திருக் கச்சியில் மேவும் திருவேகம்பத்தில் விளங்குபவர்; முக்கண்ணுடையவர்; மூவலூரில் விளங்குபவர்; என் சிந்தையுள் உறைபவர். தேவரீர் நெய்த்தானத்துள் வீற்றிருந்து என் நெஞ்சுள் விளங்குபவர்.

417. மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், இராவணனுடைய வலிமையை அழித்தவர்; கயிலையில் மேவியவர்; உலகப் பற்றற்ற ஞானிகளின் பிறப்பினை நீக்கித் திருவடிப் பேற்றை அளிப்பவர்; திருவீழி மிழலையுள் விளங்குபவர; அறத்தின் திருவடிவம் ஆனவர்; நஞ்சினைத் தானே உண்டு தேவர்கள் அமுதத்தைப் பெறுமாறு அருள் புரிபவர்; ஐம் புலன்களின் இயல்புகளிலிருந்து நீங்கியவர். தேவரீர், நெய்த்தானத்தில் மேவி நின்று, என் நெஞ்சுள் விளங்குபவர்.

திருச்சிற்றம்பலம்

42. திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

418. மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்õன நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! மெய் எனப்படும் இத்தேகத்துள், ஐம்புலன்கள் நின்று மேவிப் புரியும் குற்றங்களிலிருந்து விடுபட்டும், வினைக் கூட்டிலிருந்து விடுபட்டும் உய்ய வேண்டுமானால், உமா÷திவயைப் பாகம் கொண்ட, நீலகண்டப் பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கும் நெய்த்தானத்தை நினைந்து ஏத்துக. அவ்வாறு நினைத்தால் உய்யலாம்.

419. ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானை றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரிஅயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! பிறவி என்பது வினை வழியானது, இதனை நீக்குவது அரிது என்று சொல்ல வேண்டாம். இப் பிறவி நீங்குவதற்கு வழி உள்ளது. தேவர்களின் தலைவராகிய சிவபெருமான் என்னை இம் மண்ணுலகத்தில் ஆட்கொண்டவர். அவர், முப்புரங்களை எரித்தவர்; அரியும் அயனும் காணாத வண்ணம் நெடிது உயர்ந்தவர். அப்பெருமான், உறையும் நெய்த்தானத்தை நினைக. அவ்வாறு நினைந்து ஏத்த உய்யலாம்.

420. பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! பலவாறாகிய பற்றுக் கொண்டு அலைந்து இவ் வாழ்க்கையில் உழன்று நையும் தன்மையைத் தவிர்வாயாக. பன்னிரு சூரியர்களும் தேவர்களும் எண்ணற்ற அமரர்களும் ஏத்தும் ஈசன் மேவும் நெய்த்தானத்தை நினைக, உய்யலாம்.

421. அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிøயா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஆசையடெல் அகப்பட்டு வினைசேரும் ஆக்கைடன் பாசப் பிணிப்பு உடைய கடைப்பட்ட வாழ்வில் ஆழ்ந்து தளராதே ! சிவ பெருமான், கொன்றையும், கங்கையும், சந்திரனும் சடையில் வைத்து உகந்து, தேவர்கள் ஏத்த நிலையாய் விளங்கி மேவும் நெய்த்தானத்தை, நினைவு கொள்க. உய்யலாம்.

422. தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்தவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்னு
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! உயிரானது உடலை விட்டு பிரியும் காலத்தில் தினையளவும் பொறுமை கொள்ளாது. இத்தகைய உடலைப் பொருளாகக் கொண்டு, எல்லாம் பெறலாம் என்னும் தன்முனைப்பினைத் தவிர்ப்பாயாக. தேவர்களுக்காக மூன்று கோட்டைகளையும் வளைத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்த சிவபெருமான், பெருங் கருணையுடையவர். அவர் விளங்கும் நெய்த்தானத்தை நினைந்து ஏத்துக. அவ்வாறு நினைய உய்யலாம்.

423. மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! துன்பத்தை விளைவிக்கின்ற இவ்வுடல் கொண்டு வாழும் வாழ்க்கையினை மெய்யென்று எண்ணி வினையில் கிடந்து அழுந்தி வீழாதே. ஈசன், தன்னை ஏத்தும் அடியவர்களின் மனத்துள் மேவுபவர்; குமாரக் கடவுளின் தாதையானவர்; திருநடனம் புரியும் இயல்பினர்; சூலப்படையுடையவர்; வீரக் கழலும், சிலம்பும் அணிந்து நடனம் புரிபவர்; அப்பெருமான் நிறைவுடன் மேவும் இடமாகிய நெய்த்தானம் என நினைந்து ஏத்துக. உய்யலாம்.

424. பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு வீயாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! பேசுவதற்குப் பெருமையாக அமையாதது இந்த மானிடப் பிறவி, இதனைப் பெரியதென்று சிறு மனத்தால் வேண்டுகின்றனை ! போகம் என்னும் வலையில் வீழ்ந்திருந்து நலிகின்றனை ! சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; தூய திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; முப்புரி நூல் அணிந்துள்ளவர்; நினைந்து ஏத்தாத கீழ் மக்களுக்கு அரியவர். அப்பரமன் விளங்கும் நெய்த்தானத்தை நினைத்தால் உய்யலாம்.

425. அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய் வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்மே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா உய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஐம்புலன்களால் ஆட்கொள்ளப்பட்டு, நோய்க்கு இடமாகிய இவ்வுடலின் தன்மையில் பற்றுக் கொண்டு கீழ்மை கொள்ளாதே ! சிவபெருமான், வஞ்ச மனத்தவரால் காண வொண்ணாதவர்; வானவர்களால் ஏத்தப்படுபவர்; அன்பர்க்கு இனியவர். அப் பெருமானுடைய தலமாகிய நெய்த்தானத்தை நினைந்தால் உய்யலாம்.

426. பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடி கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா உய்ய லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! உடலின் கண் புகுந்து உயிரானது கொள்ளும் கீழ்ப்பட்ட வாழ்வை எண்ணி இடர்ப்பட வேண்டாம். தேவர்களின் தலைவராகிய சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; நெற்றியில் கண்ணுடையவர். அவர், பகைமை கொண்டு ஆற்றிய தக்கனின் வேள்வியைத் தகர்த்து வீற்றிருக்கும் நெய்த்தானத்தை நினைந்து ஏத்துமின், உய்யலாம்.

427. உரித்தன் றுனக்கில் வுடலின் தன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

தெளிவுரை : விரதம் மேவியும் தவத்தில் முனைந்தும் நிலை பெறாத நெஞ்சமே ! இவ்வுடலின் தன்மையானது உரிமைக்கு இடமாவதன்று, உண்மையை உரைத்தேன். சிவபெருமான், முப்புரத்தை எரித்தவர்; கையில் நெருப்பேந்தியவர்; எண் தோளுடையவர்; ஏத்தாத இராவணனை விரலால் ஊன்றி நெரித்தவர்; அப்பெருமான் நெய்த்தானத்தில் வீற்றிருப்பவர். அவரை நினைத்து ஏத்துக. நினைத்தால் நீ உய்யலாம்

திருச்சிற்றம்பலம்

43. திருப்பூந்துருத்தி (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

428. நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், ஓரிடத்தில் நிற்காது பள்ளத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடைய கங்கையைச் சடை முடியின் மேல் தரித்தவர்; ஒரு நிலைப்பட்டு நினைத்து ஏத்தும் தன்மையின்றி அலைந்து மேவும் என் நெஞ்சுள் புகுந்து, தன்னை நினையுமாறு செய்தவர்; எல்லா ஞானத்தையும் தாமே பெற்று அறியுமாறு என்னை ஆக்கியவர்; சொல்லுவதற்கு அரிய திருமொழிகளை உணர்த்தி அடியேனைத் தொடர்ந்து ஆளாக்கியவர். கொடிய தன்மையாகி என்னை வருத்திய சூலை நோயைத் தீர்த்தருளிய புனிதன் ஆவார். புண்ணியனாகிய அப்பரமனைப் பூந்துருத்தியில் கண்டேன்.

429. குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான்தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், திருக்குற்றாலம், கோகரணம் ஆகிய தலங்களில் மேவியவர்; கொடிய தொழிலையுடைய கூற்றவனை கண்டத்தில் இருத்தியவர்; உணர்ந்து ஏத்தும் தன்மையில்லாது திரியும் மனத்தில் உணர்வினைத் தந்து நினைக்கச் செய்தவர்; ஆல் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்தவர்; வீணை பயின்றவர்; நாகத்தை அணிந்தவர். அப் பரமனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

430. எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை
யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எக்காலத்திலும் எனக்கு இனிமையாக விளங்குபவர்; எழில் மிக்க கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; நினைத்து ஏத்தும் மனத்தின்கண் பொருந்தியும் நினையாதவர் மனத்தில் பொருந்தாமலும் உள்ளவர்; நின்றியூரில் மேவியவர்; அடியேனை ஆளாகக் கொண்டவர்; இனிமை செய்பவர்; காதில் வெண்குழையணிந்தவர். அப்பரமனைப் பூந்துருத்தியில் கண்டேன்.

431. வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை
அல்லற்கடல் நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை
நிச்சமல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியா டரவார்த்த புனிதல் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திப் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை சூடியவர்; வெள்ளை யானை வழிபட்டுப் பேறு பெற்ற வெண்காட்டில் வீற்றிருப்பவர்; அடியேனை ஆளாகக் கரையேறச் செய்தவர்; சிவநெறியைக் காட்டியவர்; நலிவு தரும் பிணியைத் தீர்ப்பவர்; அரவத்தைப் பற்றி ஆட்டும் புனிதர். பொய்யிலியர் என்னும் திருப்பெயரையுடைய அப்பெருமானைப் பூந்துருத்தியில் கண்டேன்.

432. மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை
விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை
நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்
தலைகொண்டு மாத்திரைகண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்தியில் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றினும் மேலானவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; முப்புரங்களை எரித்தவர்; நான்கு வேதங்களை விரித்தவர்; ஞானிகளால் போற்றி ஏத்தப் படுபவர்; பிரம கபாலத்தைப் கையில் ஏந்தி நொடிப் பொழுதில் உலகம் யாவும் செல்பவர்; புண்ணியனாகவும் புனிதனாகவும் விளங்கிப் பொய்யிலியர் என்னும் திருப்பெயர் உடையவர். அவரைப் பூந்துருத்தியில் கண்டேன்.

433. ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
அசைத்தானை அழகாய பென்னார் மேனிப்
பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம்
புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேலப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மேருவை வில்லாகக் கொண்டு அதற்கு நாணாக வாசுகி என்னும் நாகத்தைக் கட்டியவர்; அரையில் நாகம் கொண்டு விளங்குபவர்; பொன் போன்ற திருமேனியுடையவர்; பிரமனின் தலையைப் கொய்தவர்; மன்மதனை எரித்தவர்; பின்னர் பரிவு கொண்டு உயிர் பெறச் செய்தவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; புண்ணியனாகவும் புனிதராகவும் மேவும் பரமன் ஆவார். பொய்யிலியர் என்னும் திருநாமம் தாங்கிய அப் பெருமானை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

434. எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி
யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேல் திங்களும் பாம்பும் தீரும்
புரிந்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை எரித்தவர்; யானையின் தோலை உரித்தவர்; பூத கணங்கள் சூழ விளங்குபவர்; சடை முடியின்மீது சந்திரனும், பாம்பும், கங்கையும் திகழும் புண்ணியர். அப் பெருமானைப் பூந்துருத்தியில் கண்டேன்.

435. வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி
யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்தருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், வானவர்களுக்கு என உலகத்தைப் படைத்தவர்; யாவற்றுக்கும் வித்தாக விளங்குபவர்; தேவர்களின் தலைவர்; கங்கையைச் சடையின் மேல் தரித்தவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் மேவியவர். அப் பரமனைப் பூந்துருத்தியில் கண்டேன்.

436.ஆண்டானை வானோ ருலக மெல்லாம்
அந்நா எறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி
விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட
நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை
நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், வானுலகத்தில் விளங்கும் தேவர்களின் நாதன் ஆகியவர்; தக்கனின் வேள்வியைத் தகர்த்தவர்; பிரமனும், திருமாலும் தேடிய ஞான்று பேரொளிப் பிழம்பாக ஓங்கி உயர்ந்தவர்; முப்புரங்களை எரிக்க வில்லேந்தியவர்; புனிதனாகவும், புண்ணியராகவும் விளங்குபவர். பொய்யிலியர் எனத் திருப்பெயர் தாங்கிய அப் பரமனைப் பூந்துருத்தியில் கண்டேன்.

437. மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை
மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மலையெடுத்த இராவணனுடைய மணிமுடியும் தோளும் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர்; ஏழிசை கேட்டு உகந்தவர்; பிரமனின் சிரத்தினை அறுத்தவர்; தான் நஞ்சினை உண்டு தேவர்கள் அமுது பெறுமாறு அருளியவர்; புண்ணியர்; புனிதர்; பொய்யிலியர். அப் பெருமான், பூந்துருத்தியில் மேவி விளங்கக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

44. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

438. மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுள் ளபயம் நானே.

தெளிவுரை : சிவபெருமான் ! தேவரீர், மூத்து விளங்கும் பெருமையுடையவர்; எல்லாவற்றையும் முறைமை விளங்கப் படைப்பவர்; ஏழுலகும் ஆனவர்; இன்பனாய் விளங்கி உயிர்களின் துன்பத்தைப் போக்குபவர்; எல்லாப் பொருள்களையும் காப்பவராகவும் காண்பவராகவும் மேவியவர்; என் தீவினையைத் தீர்த்தவர்; திருச்சோற்றுத் துறையுள் விளங்குபவர். அத்தகைய ஒளி திகழும் சிவபெருமானே நான் தேவரீர்பால் அபயம் ஆனேன்.

439.தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணரக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், உலகின் தலைவர்; தத்துவப் பொருளாகியவர்; சார்ந்து மேவி வணங்குபவர்களுக்கு அமுதம் போன்றவர்; ஒப்புமையற்றவர்; ஓதுதற்கு அரியவர்; கூற்றுவனைக் காய்ந்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; மும்மதில்களை எரித்து அழித்தவர்; திருச்சோற்றுத்துறையுள் வீற்றிருப்பவர். திகழ்கின்ற ஒளியாகும், சிவ பெருமானே ! நான் தேவரீரும் அபயம் ஆனேன்.

440. முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பிறைச் சந்திரனைச் சூடியவர்; கற்பகக் கொழுந்து ஆனவர்; உற்றவர் என ஒருவரும் அற்றவர்; உலகினைப் பாதுகாக்கும்
ஒண்சுடர்; வேதம் ஓதுபவர்; எல்லாக் கலைகளிலும் மேலானவர்; என் தீவினையாகிய நோயைத தீர்த்தவர்; திருச்சோற்றுத் துறையுள் மேவுபவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் அடைந்தேன்.

441. கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்க ளூழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனாய் யெண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயன் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், உலகமெல்லாம் காப்பவர்; ஊழிக் காலங்களைக் காண்பவர்; தேவர்களுக்கு அருள் புரிபவர்; வேதம் விரித்தவர்; தீமை புரிந்த முப்புர அசுரரின் கோட்டைகளை எரித்தவர்; திருச்சோற்றுத் துறையுள் விளங்குபவர். சிவபெருமானே ! நான் தேவருக்கு அபயம்.

442. நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நான்கு வேதங்கள் ஆனவர்; ஞானக்கூத்துப் புரிபவர்; திருக்கச்சியில் மேவும் ஏகம்பர்; அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; அளவற்ற பெருமையுடையவர்; அடியவர்களுக்கு அமுதமானவர்; இடப வாகனம் உடையவர்; திருச்சோற்றுத் துறையுள் மேவுபவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

443. ஆர்ந்தவனே யுலகெல்லாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
நோர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், உலகெலாம் ஆனவர்; அளவற்ற பெருமையுடையவர்; குற்றாலத்தில் மேவிய கூத்தபெருமான்; சூலப்படையேந்தியவர்; பிரளயங்கள் யாவும் ஆகுபவர்; எப்போதும் மேவுபவர்; திருச்சோற்றுத் துறையுள் விளங்குபவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

444. வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய ஆரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், வள்ளல் தன்மையுடையவர்; வானோர் பெருமானானவர்; வேடுவனாய்ப் பன்றியின் பின் சென்றவர்; மூன்று வலிமையாக கோட்டைகளை எரித்தவர்; கயிலையில் மேவியவர்; ஒப்புமையில்லாத உமா தேவியைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு தேன் போன்ற விளங்குபவர்; திருச்சோற்றுத் துறையுள் வீற்றிருப்பவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

445. தன்னவனாய் உலகெலாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதே னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச் சோற்றுத் துறையு மானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், உலகெலாம் தன்மயமாகித் தாமேயாகுபவர்; தத்துவப் பொருளாகித் திருவடியைப் போற்றுவார்க்கு இன்னமுதாக விளங்குபவர்; என்னுடைய இதய மலரில் விளங்குபவர்; பாச வினைகளைத் தீர்ப்பவர்; உமா தேவியைப் பாகம் கொண்டவர்; வானோரால் ஏத்தப்படுபவர்; காவிரியின் தென் கரையில் உள்ள திருச்சோற்றுத்துறையுள் விளங்குபவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

446. எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
யேழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம்
ஆதியும் அந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், எட்டுத் திக்குகளிலும் கண்ணாய் விளங்குபவர்; ஏழுலகும் ஆனவர்; பிரமனும் திருமாலும் காண முடியாத வாறு சிறந்து திருச்சோற்றுத் துறையுள் வீற்றிருப்பவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

447. மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், கரிய கண்டம் உடையவர்; திருமாலும் மற்றும் தேவர்களும் அறியாத வண்ணச் சூலத்தை ஏந்திய தலைவர்; இராவணனைக் கால் விரலால் அடர்த்தவர்; மெய்யடியவர்களுக்கு வேண்டிய யாவும் தரும் செம்மையுடையவர்; திருச்சோற்றுத் துறையுள் மேவுபவர். சிவபெருமானே ! நான் உம்மிடம் அபயம் ஆனேன்.

திருச்சிற்றம்பலம்

45. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

448. வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார்நஞ் கலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண்ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சடுந்தொழிலுங் கைவிட்டவே.

தெளிவுரை : சிவபெருமான், சடைமுடியின்மீது ஊமத்தம், சந்திரன் ஆகியன கொண்டு விளங்குபவர்; தோள்கள் ஆயிரமாக வீசி நடனம் புரிபவர்; சிவலோக நாதராவார்; உலகு, நிலைபெறும் தன்மையில், கொடிய நஞ்சினை உண்டவர்; ஒற்றியூரில் மேவும் ஒளி வண்ணத்தில் திகழ்பவர். நான் அப்பெருமானைக் கனவில் கண்டேன். அத்தன்மையில் என் மனப் புழுக்கமும் உடல் வெப்பமும் அகன்றன.

449. ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடையி லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யிழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன்றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், தேகத்தில் நெளியும் பாம்பைக் கட்டி இடபத்தில் ஏறிக் கங்கையைச் சடையிலும் உமாதேவியைத் திருமேனியிலும் கொண்டு விளங்குபவர்; பெண்ணும் ஆவர்; ஆணும் ஆவர்; மன்மதனை எரித்த பரமயோகி; மூன்று கண்ணுடையவர். அப்பெருமான், நான்கு மறைகளும் ஓத வேள்வி மல்கும், ஒளி திகழும் ஒற்றியூரில் உறைபவர் ஆவார்.

450. வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையின் மீது விரும்பி ஏற்றவர்; வெண்மையான சந்திரனும் பாம்பும் உடன் திகழ வைத்தவர்; கண்டாரை ஈர்க்கும் பாங்குடையவர்; பகலில் இசை பாடிப் பலியேற்பவர்; உள்ளத்தைக் கவர்ந்தவர். அவர் ஓயாது மறையோதி வேள்வி மல்கும் ஒற்றியூரை உடைய தலைவர் ஆவார்.

451. நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்ற தோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே.

தெளிவுரை : சிவபெருமான், வெள்ளை இடபத்தில் ஏறித் திருவெண்ணீறு பூசி, நாகத்தை அரையில் கட்டிப் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி இல்லம் புகுந்து பலிகேட்க, நான் அடிகளுடைய ஊர் யாது என்றேன். அப்பெருமான், கடலில் மரக்கலன்கள் செல், அலைகள் மோதும் திருஒற்றியூர் என்றார்.

452. மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகிநின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தவராகித் தன்னுடைய பெருமைகளைப் பேசினபோது, பக்தர்கள் பலர்கூடிப் போற்ற நீவிர் பயின்றிருக்கும் ஊர் யாது என்றேன். அப்பெருமான், உத்திர நாளின் சிறப்புடைய ஒளி திகழும் ஒற்றியூர் என்று உரைத்தனர்.

453. கடிய விடையேற்றிக்காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இடபத்தில் அமர்ந்து, கரிய கழுத்துடையவராகி மானும் மழுவும் கையில் ஏந்தி இடுகின்ற பலியைக் கொள்ளாதவராகி மேவ, ஒளி மயமாகத் திகழும் அடிகள் யாவர் என வினவினேன். அப்பெருமான், கையில் கபாலம் ஏந்தியவராகி, மயிலாப்பூரில் காண, அவர் வடிவுடையம்மையை உடனாகக் கொண்டு திருவொற்றியூரில் புகுந்தனர்.

454. வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழத்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

தெளிவுரை : வல்லவர்களாகிய வானவர்கள் கூடி இருந்து வாழ்த்த ஒளி போன்ற சிவபெருமான் காணப் பெறாதவராகி மறைந்து மேவ, நான்மறையோர் கூடி, நாம் இருக்கும் ஊர், கடலின் ஓதம் திகழ ஒளி மேவும் ஒற்றியூர் அப்பரமனை ஆங்குப் பணிமின் என்கின்றனர்.

455. நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னேங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே.

தெளிவுரை : நேற்று ஒரு அடிகள் பகலில் வந்து வடிவழகு உடையவராகிக் கண்ணால் இனிது நோக்கி வந்தார். அப் பரமனை இனியொரு நாள் கண்டால், இறுகத் தழுவி இருந்து பிரிந்து செல்லவிடாது விளங்குவேன். அவர் ஒற்றியூரில் உறைந்து திரிபவர் ஆவார்.

456. மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

தெளிவுரை : சிவபெருமான், மண்ணுலகத்தினரா எனில் அதுவும் இல்லை; விண்ணுலகத்தினரா எனில் அதுவும் இல்லை; மற்றும் மலை, கடல், காற்று, எண், எழுத்து, நெருப்பு, இரவு, பகல், பெண், ஆண், அலி என ஆகுபவரா எனில் அதுவும் இல்லை. அப் பெருமான், பெரியோனாகவும் நல்லவர்களுக்குத் தீமையற்றவராகவும் விளங்குபவர். அவர் ஒற்றியூரில் விளங்கும் தலைவர் ஆவார்.

457. மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவனைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே

தெளிவுரை : சிவபெருமான், அரக்கனாகிய இராவணனுடைய தலையும் தோளும் நலியச் செய்தவர்; திருமாலும் பிரமனும் தேடிய காலத்தில் ஒளிப்பிழம்பாக ஓங்கியவர். அவர் என்னை நோக்கி ஒற்றியூர் நமது ஊர் எனச் சொல்லிச் சென்றார். கையில் அணிந்த என்னுடைய வளையல்கள் கழன்று விழுமாறு என்னை வாடச் செய்து சென்றனரே.

திருச்சிற்றம்பலம்

46. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

458. நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், நம்மிடம் அமைந்து பொருந்துபவர்; வேதத்தைக் கரை கண்டவர்; ஞானப் பெருங்கடல்; நன்மை எல்லாம் ஆனவர்; கச்சித் திருவேகம்பத்தில் மேவுபவர்; கல்லால நிழலில் வீற்றிருப்பவர்; அடியவர்களுக்குக் கற்பகம் போன்று யாவும் அருள்பவர்; பொன், பவளம், முத்து, சந்திரன், சூரியன், நெருப்பு, நீர் என உயர்ந்த பொருளாகி உலகில் மிளிர்ந்து நன்மை புரிபவர். அப்பெருமான், திருவாவடு துறையுள் விளங்க அடியேன் திருவடியை அடைந்து உய்ந்தேன்.

459. மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னாøத் தன்னொப்பா ரில்லா தாøன்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதன் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன அடைந்துய்ந்த தேனே.

தெளிவுரை : சிவபெருமான், மின்னலும், இதன் இடையில் சேரும் இடியும், மேகமும், அதிலிருந்து எழும் மழையும் ஆகி அருளைப் பொழிபவர்; யாவும் தானகாகுபவர்; தனக்கு ஒப்புமை ஏதும் இல்லாதவர்; தாயாகிக் காப்பவர்; உயிர்களுக்குத் தந்தையாகும் எந்தை; உலகமும் அண்டமும் ஆகுபவர்; செவ்வானம் போன்ற வண்ணம் உடையவர். அப்பெருமான், திருவாவடுதுறையுள் மேவும் ஈசன் ஆவார். அவருடைய திருவடியை அடைந்து அடியேன் உய்ந்தேன்.

460. பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துயந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவர்; பவளம் மாணிக்கம் என மிளிர்பவர்; தூய்மையான நெறியாகியவர்; சொல்லின் பொருளாக விளங்குபவர்; வித்தாகவும், முளையாகவும், வேராகவும் உள்ளவர்; வினையின் தாக்கம் அடையாதவாறு காப்பவர். அப் பெருமான் திருவாவடுதுறையுள் விளங்க, அடியேன் அவ்வரனடியை அடைந்து உய்ந்தேன்.

461. பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேறி வாங்குந்
தோணியைத் தொண்ட÷ன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், சிவந்த சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடியவர்; பேரன்பு கொண்டவராகிச் சிவபிரானைப் பற்றி மேவும் அடியவர்களுக்கு முத்தியின் தன்மையை அடைவிக்கும் ஏணி போன்று செய்விப்பவர்; இடராகிய துயர்க் கடலுள் அலைந்த அடியவனுக்குக் கரையேறச் செய்யும் தோணி போன்றவர்; வெண் குழையைக் காதில் அணிந்தவர். அப் பெருமான், ஆணிப் பொற்சுடர் போன்று திருவாவடுதுறையுள் மேவியவர். அவருடைய திருவடியை தொண்டனாகிய அடியேன் அடைந்து உய்ந்தேன்.

462. ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதன் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், உலகத்திற்கு உரிய உறுதிப் பொருளாக மேவிக் காக்கும் தன்மையடையவர்; மாணிக்க மணியின் வண்ணம் உடையவர்; கதிரவன் உச்சிப் போதில் மேவும் பேரொளி போன்றவர்; இடி முழக்கம் ஆனவர்; பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப் படுபவர்; தூயவர்; இனிய சுவையுடைய தேனும் தீங்கரும்பின் சுவையும் ஆனவர்; திருவாவடுதுறையுள் விளங்குபவர். அப் பெருமானை அடியேன் அடைந்து உய்ந்தேன்.

463. ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை
நீண்ட சடை முடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், இடபத்தையுடையவர்; எட்டுத் தோள் உடையவர்; இரவில் நடனம் புரிபவர்; உருத்திரனாகி அழித்தல் தொழில் செய்பவர்; காலனை உதைத்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் இருத்தியவர்; திருநீறு பூசிய திருமேனியுடையவர்; நீண்ட அரவத்தைக் கையில் பற்றியுள்ளவர்; சடை முடியின் மீது கங்கையைத் தரித்தவர். ஆவடுதுறையுள் மேவியவர். அப் பரமனின் திருவடியை அடியேன் அடைந்து உய்ந்தேன்.

464. கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
கடல்வரைவா ளாகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதன் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; கடல், மலை, ஆகாயம், பவளம், முத்து, சந்திரன், சூரியன் நெருப்பு என யாவும் ஆகுபவர்; என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு இருப்பவர்; உள்ளம் கசிந்துருகும் அடியவர்கள்பால் சிறப்புடன் குடிகொண்டு அருளிச் செய்பவர்; ஆவது துறையுள் மேவியவர். அப் பெருமானின் திருவடியை அடியேன் அடைந்து உய்ந்தேன்.

465. மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளிடையயைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமானை உண்மையின் வடிவமானவர்; பொய்த் தன்மையர்பால் கலவாதவர்; பரவொளியாகவும், குளிர்ந்த ஒளியாகவும் விளங்குபவர்; கையில் நெருப்பேந்தியவர்; மன்மதனை எரித்தவர்; மூன்று கண்ணுடையவர்; சடையின் மேல் பாம்பும் சந்திரனும் திகழ வைத்தவர்; புலித்தோலை உடுத்தியவர்; அழகுடையவர்; அப்பெருமான் ஆவடு துறையில் மேவி விளங்க, அடியேன் திருவடியை அடைந்து உய்ந்தேன்.

466. வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், வெறுப்பு விருப்பு இல்லாதவர்; அருச்சுனனுடன் போர் செய்த வேட்டுவத் திருக்கோலம் பூண்டவர்; தூண்டாது மேவும் சுடராகியவர்; சூலப்படையுடையவர்; காலனை உதைத்து அழித்தவர்; பூவுலக மாந்தரும் தேவர்களும் வணங்கி ஏத்த ஆட்கொண்டு அருள்பவர்; ஆவடுதுறையுள் மேவியவர். அப் பெருமானின் திருவடியை அடியேன் அடைந்து உய்ந்தனன்.

467. பந்தணவு மெல்விரலான் பாகன் தன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியானைச் சீரி யானைத்
திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; பாடலும் ஆடலும் பயில்பவர்; நறுமணம் கமழும் கொன்றை மாலை தரித்தவர்; அழகு மிகுந்த நீல கண்டர்; செந்தமிழும் ஆரியமும் ஆனவர்; சிறப்பின் மிக்க புகழுடையவர்; திருமார்பில் முப்புரிநூல் அணிந்தவர்; அந்தணராக ஆவடுதுறையுள் மேவியவர். அப் பெருமானின் திருவடியை அடியேன் அடைந்து உய்ந்தேன்.

468. தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கண்டத்தில் தரித்தவர்; தக்கனுடைய வேள்வியைத் தகர்த்தவர்; பிறை தவழும் சிவந்த சடையுடையவர்; மலையெடுத்த இராவணனை விரலால் ஊன்றி நெரித்தவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; அடியேனின் உடலில் உற்ற சூலை நோயைத் தீர்த்தவர்; ஆவடு துறையுள் மேவியவர். அப்பெருமானின் திருவடியை அடியேன் அடைந்து உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

47. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

469. திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், எனக்கு அருள் புரியும் திருவானவர்; நுகரும் செல்வமானவர்; தேனாக இனிப்பவர்; வானோர் சுடராகவும் அச்சுடரில் எழும் சோதியாகவும் என் உறவாகவும், ஊனாகவும் உள்ளமாகவும் அதற்குள் விளங்கும் கருப் பொருளாகவும் விளங்குபவர்; கற்பகமாய் விளங்கி அருள்பவராகவும், கண்ணாகவும், கருமணியாகவும் அக் கருமணியுள் ஆடும் பாவையாகவும் விளங்குபவர். அவர், கண்ணுக்குப் புலனாகாதவாறு மேவும் கொடிய வினையாகிய நோய் என்னை அடையாதவாறு காக்கும் ஆவடு துறையுள் உறையும் அமரர் தலைவர் ஆவார்.

470. மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! நான் திருவைந்தெழுத்தை மறவாது நாவினால் ஏத்தித் துதிப்பேன்; எனவே வஞ்சத்தை நெஞ்சில் கொள்ளாதவனானேன்; தேவரீரையன்றிப் பிற தெய்வத்தை எண்ணித் தொழேன். தேவரீரின் செயல்களைக் கண்டு நான் ஆற்றாதவனாகி நிற்க, ஆவடுதுறையுள் மேவும் தேவர் தலைவராகிய நீவிர் அஞ்சாதே என உரைப்பீராக.

471. வரையார் மடமங்கை பங்கா கங்கை
மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர்ப்போகப் பெறுவே னாகில்
உறுநோய்வந் தேத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! உமா தேவியாரைப் பாகமாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! கங்கையின் மணவாளனே ! நீண்ட சடையுடையவனே ! தேவரீர் பால் கசிந்துருகி நின்று ஏத்தும் அன்பர்களுக்கு அரசனாக விளங்கிக் காக்கும் நாதனே ! இப் பிறவியில் வினையாகிய நோய் பற்றியிருந்து, திருவைந்தெழுத்தை ஓதாது இருந்தால் என் செய்வேன் ! ஆவடுதுறையுள் மேவும் தேவர் தலைவனே ! அஞ்சாதே என்று அருள் புரிவீராக.

472. சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
சிலைவளைவித் துமையவனை யஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
நில்லா வுயிரோம்பு நீத னேநான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! முப்புரங்களை எரித்த நாதனே ! யானையின் தோலை உரித்தவனே ! எலும்பு மாலை சூடிய பரமனே ! நான் உலகிற்குச் சுமை போன்று உயிரை ஓம்புகின்ற கீழ்மையுடையவன் ஆனேன். ஆவடு துறையுள் மேவிய தேவர்கள் தலைவனே ! பிறவியால் அலுத்தேன். அஞ்சேல் என உரைத்து அருள் புரிவீராக.

473. நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்புந் துறந்தேன் தன்னைச்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! நித்தமும் தூய நீராடி, நறுமண மலர் கொய்து, பூசித்து ஏத்திப் போற்றித் துறத்தற்கு அரியதாகிய துன்பத்தலிருந்து விடுபட்டேன். தேவர்கள் வேண்டியவாறு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உய்வித்த பெருமானே ! ஆவடு துறையில் மேவும் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என அருளிச் செய்வீராக.

474. கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், திருமாலின் எலும்பும் பிரமனின் தலையும் கொண்டு யானையின் தோலைப் போர்வையாக்கி எலும்பு மாலையுடைய கோலத்தில் எல்லா இடங்களிலும் செல்பவர். தேவர்களின் தலைவராக விளங்கும் நாதனே ! வினைக் கேடு உடைய எனக்கு நல்வினையும் தீவினையும் ஆகிய தேவரீர், அஞ்சேல் என்று உரைத்தருள்வீராக.

475. உழையுரித்த மானுரிதோ லாடை யானே
உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே ! மான் தோலை அணிந்த நாதனே ! உமா தேவியின் நாயகனே ! தேவர்களின் தலைவனே ! நீலகண்டப் பெருமானே ! கயிலை நாயகனே ! தேவரீர் பால் அன்புடையவர்களின் பிழைகளைப் பொறுத்தருளும் பாங்கானது பெரியோரின் பண்பு ஆயிற்றன்றோ ! அத்தகைய பேரருள் உடைய நாதனே ! தேவரீர் மயில்கள் ஆடும் சோலை திகழும் ஆவடுதுறையுள் உறைபவர் ஆவீர்.

476. உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஏந்திப் பலியேந்தித் திரியும் பரமனே ! தேவரீர்பால் அன்புடையவர்களுக்கு பிரியமானவராகி ஒளிரும் நாதனே ! நெருப்பைக் கையில் ஏந்திய ஈசனே ! திருவாவடுதுறையுள் மேவும் தேவர் தலைவனே ! மலம் சேரும் பிறவியானது மாயுமாறு அருள் புரிவீராக. அஞ்சேல் என்று உரைப்பீராக.

477. பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும்
ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் கபாலம் ஏந்தி இடப வாகனத்தில் ஏறி ஊர் தோறும் திரிபவர்; உமாதேவியோடு மயானத்தில் ஆடி மகிழ்பவர்; தேவரீர் என்னைக் கருத்தில் கொள்ளாதவரானால் எல்லாரும் இகழ்பவர்; யான் புறச் சமயத்தின் தொடர்புறுத்துத் தேவரீர்பால் சார்ந்தேன். ஆவடு துறையுள் மேவும் ஈசனே ! அடியவனை அஞ்சேல் என உரைத்துக் காத்தருள் புரிவீராக.

478. துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்டநாள் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

தெளிவுரை : ஈசனே! யான் துறவு நெறியில் சென்று மேவாதவனானேன்; பூமாலை புனைந்து சூட்டும் தூயவன் அல்லன்; ஆயினும் எனக்குத் தேவரீரின் திருவருளையன்றி வேறு சொல் உரையேன். அவ்வாறு பேசாத நாள் எனக்குப் பயனற்ற நாளே ஆகும். இராவணனை அடர்த்த ஈசனே ! திருவாவடுதுறையுள் மேவும் அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என உரைத்தருள்வீராக.

திருச்சிற்றம்பலம்

48. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

479. நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் நன்மை யானவர்; நான்கு வேதங்களாகியவர்; முப்புரங்களை எரித்தவர்; தேவர்களுக்கும் மேலானவர்; உமை பாகர்; வேள்வியாகவும், சூரியன், சந்திரன், அக்கினி என மூன்று சுடர்களாகவும் விளங்குபவர்; திருத்தொண்டாற்றிப் பணிபவர்களுக்கு முத்திப்பேறு அளிப்பவர்; தேவர்கள் வணங்கியேத்தும் வலிவலத்துள் வீற்றிருப்பவர். அவர் என் மனத்தில் உள்ளவர் ஆவார்.

480. ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கொன்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
களியானை யீருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், ஊனாகவும், உயிராகவும், உள்ள பொருளாகவும், புலனுக்குத் தோன்றாத பொருளாகவும் விளங்குபவர்; உமாதேவியாருக்குத் தேனாகவும் திருவாகவும் மேவுபவர்; எண் திமையாகவும், சென்றாடும் தீர்த்தமாகவும், கடலாகவும், மலையாகவும் விளங்குபவர்; பார்த்தனுக்கு அருள் புரிந்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். தேவர்கள் வணங்கி ஏத்தும் அப்பெருமான். வலிவலத்தில் மேவியவர். அவர் என் மனத்தில் உள்ளவர் ஆவார்.

481. யேவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
இன்பன்காண் துன்பங்களில்லா தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் உத்தமன்காண் தானேயெங்கும்
ஆயவன்காண் அண்ட்ததுக் கப்பா லான்காண்
அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : ஈசன், எல்லாம் பொருந்தியவராயும் எல்லா இயல்பும் ஆகியவராகவும் உள்ளவர்; இன்பனாகியவர்; துன்பம் இல்லாதவர்; தாயாகவும் தன்னொப்பு இல்லாதவராகவும் தத்துவமாகவும் உத்தமனாகவும் விளங்குபவர்; அண்டம் கடந்தவர்; உருகிப் போற்றும் அன்பர்பால் விளங்குபவர். தேவர்கள் வணங்கி ஏத்த வலி வலத்தில் மேவும் அப்பெருமான், என் மனத்தில் உள்ளவர் ஆவார்.

482.உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானார்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தொன்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாம் உடையவர்; உடலின் உயிராகவும் ஓங்காரப் பொருளாகவும், உலகின் வித்தாகவும், பொழியும் மழையாகவும் விளையும் பயனாகவும் விளங்குபவர்; ஏத்தாதார்க்குத் தோன்றாதவர்; ஏழ் பொழிலாக உள்ளவர்; சடையில் பாம்பும், சந்திரனும் கங்கையும் மேவி விளங்குபவர்; வானவர்கள் ஏத்தும் வலிவலத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் என் மனத்துள் விளங்குபவர் ஆவார்.

483. கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், சொல்லாகவும், அதன் குணமாகவும், குறித்து மேவும் நோக்கமாகவும் விளங்குபவர்; பொருள்களின்பால் மேவும் குற்றங்களின் இயல்பாகியவர்; அழகிய திரு வெண்ணீற்றுத் திருமேனியர்; ஒளியும் நெருப்பும் ஆகியவர்; சடை முடியில் கங்கையைத் தரித்தவர்; ஏழுலகும் ஆனவர்; மன்மதனை எரித்தவர்; தேவர்கள் ஏத்தும் வலிவலத்தில் உறைபவர். அவர் என் மனத்தில் உள்ளவர் ஆவார்.

484. நிலையவன்காண் தோற்றவன் காணிறையானான்காண்
நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த
சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண்
கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலைத்தன்மையுடையவராகவும், தோற்றப் பொலிவு உடையவராகவும், நீராகவும், பாராகவும், விளங்குபவர்; முப்புரம் எரித்த வில்லேந்தியவர்; சிவந்த வாய் உடைய உமாதேவியை ஒரு பாகம் கொண்டவர்; கலைப் பொருளாக விளங்குபவர்; காற்றாக விளங்குபவர்; காலனை அழித்தவர்; கயிலாயம் என்னும் தெய்வ மலையாகியவர்; வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தில் விளங்குபவர். அவர், என் மனத்துள் உறைபவர் ஆவார்.

485. பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணும்
கண்ணவன்காண் கருத்தாதவன்காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே

தெளிவுரை : சிவபெருமான், பெண்ணாகவும் ஆணாகவும் விளங்குபவர்; பெரியோர் எனக் கருதப்படுபவர்களுக்குப் பெரியவராகவும் அரியவராகவும் விளங்குபவர்; அயனாக விளங்குபவர்; எண்ணாகவும் எழுத்தாகவும், இனிமையுடைய இசையாகவும், சொல்லாகவும், எல்லாவற்றையும் காணும் கண்ணாகவும், கருத்தாகவும் நற்கதியாகவும், மதியாகவும் ஏழ்கடல் சூழ்ந்த மண்ணுலகமாகவும் திகழ்பவர். வானவர்கள் வணங்கியேத்தும் வலிவலத்துள் மேவும் அப்பரமன், என் மனத்துள் வீற்றிருப்பவர் ஆவார்.

486. முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
முதலவன்காண் முடியவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண் சேயவன்காண் அளவில்சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
வேண்டினான் காணீண்டு புனற்கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்கும் முன்னவராகவும், பின்னவராகவும் அழியாத தன்மையுடையவராகவும், மூவாத திருமேனி உடையவராகவும் விளங்கும் முதல்வர்; முச்சுடராகவும் அடியவர்களுக்கு அண் மையராகவும் விளங்குபவர்; சோதி வடிவாகியவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவர்; கங்கையின் மணவாளர்; வானவர்கள் யேத்தும் வலிவலத்துள் விளங்குபவர். அப்பெருமான், என் மனத்துள் மேவுபவர் ஆவார்.

487. நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க்கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
காலங்க ளூழியாய்க் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : சிவபெருமான், செல்வமாகவும், யாவர்க்கும் நினைப்பரிய நீதியாகவும், வேத நாயகனாகவும், நினைந்து ஏத்துபவர்களுக்கு நற்கதியாகவும், மேகமாகவும், கனலாகவும், ஊழிக்காலமாகவும், அதன் பதியாகவும், பழமாகவும் அதன் சுவையாகவும் விளங்குபவர்; சடை முடியில் சந்திரனையும் நாகத்தையும் தரித்தவர்; வானவர்கள் பணிந்தேத்தும் வலிவலத்துள் மேவியவர். அப்பெருமான் என் மனத்துள் மேவுபவர் ஆவார்.

488. பங்கயத்தின் மேலானும் பல னாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா
அனலவன்காண் அலைகடல்சூழிலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறனகாண் வானோ ரேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகிப் பெருந்தீப்பிழம்பாகிய சிவபெருமான், இராவணனின் முடிகளை நெரியுமாறு விரலால் ஊன்றியவர்; அழகர்; உமைபாகர்; வானோர் ஏத்தும் வலிவலத்தில் மேவியவர். அப்பெருமான் என் மனத்துள் உள்ளவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

49. திருக்கோகரணம் (அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா, கர்நாடகா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

489. சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனையும் கங்கையையும் சடையில் பொருந்துமாறு வைத்தவர்; அடியவர்களுக்கு அமுதானவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; அடியவர்கள் ஏத்தி வழிபடும் உருவத்தில் பொருந்தி மேவி அருள் புரிபவர்; பல்வகையான இசைகளுக்கும் தாளங்களுக்கும் ஏற்ப நடனம் புரிபவர்; வேதமாகவும் மந்திரப் பொருளாகவும் ஆகியவர். அப் பெருமான், கடல் சூழ்ந்த கோகரணத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

490. தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்கண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான் (பிரமனின்) வற்றல் ஆகிய மண்டையோட்டை ஏந்தியவர்; எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பவர்; அடியவர்களுக்கு அமுதமாகியவர்; நறுமணம் கமழும் கெடில வீரட்டானத்தில் விளங்குபவர்; பிறரால் கேடு செய்ய முடியாதவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; வீரம் மிக்கவர்; கயிலையில் வீற்றிருப்பவர்; திருமாலும் காணற்கு அரியவர். அப்பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

491. தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையான் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைகளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், ஊனக்கண்ணால் காண்பதற்கு அரியவர்; விரிந்து தாழ்ந்த சடைமுடியுடையவர்; பொன் போன்ற சடை முடியில் கங்கையை ஏற்றவர்; தொன்மையாகியவர்; ஐம்பூதங்களானவர்; உமைபாகர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; வேதங்களை விரித்து ஓதியவர். அப் பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

492. ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய் மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் செஞ்சடையில் மேவி விளங்கும் எம் திருவாரூரன் ஆவார்; அன்பராகத் திருப்பழனத்தில் மேவியவர்; திருநீற்றைத் திருமேனியில் தரித்த ஒளி வண்ணம் உடையவர்; தனக்கு நிகராக எவரையும் உரைத்தற்கரிய தலைவர்; மழப்படையுடையவர்; கொக்கரை என்னும் வாத்தியக் கருவியைக் கொண்டவர்; பூத கணங்களை படையாக உடையவர்; மாறுபட்டுப் போர் செய்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமான், கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

493. சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையாளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், மேரு மலையை வில்லாக்கி, அக்கினியை அம்பாக்கி முப்புரங்களை எரித்தவர்; ஐம்பூதங்களாக விளங்குபவர்; பூத கணத்தினரைப் படையாகக் கொண்டவர்; கையில் நெருப்பேந்தி ஆடியவர்; அடியவர்களுக்கு அமுதம் போன்றவர்; மணம் கமழும் நீண்ட சடையுடையவர். அப்பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

494. பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
கட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறைச் சந்திரனோடு கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; புகழ் உடையவர்; பிறப்பற்றவர்; நீல கண்டம் உடையவர்; கபாலத்தை யேந்தியவர்; மழுப் படை யுடையவர்; பறையொலிக்கக் கீதத்தை இசைத்தவர்; தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் புரிபவர். அப் பெருமான், கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

495. மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
ளுன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், மின்னல் போன்று ஒளி திகழும் வானில் விளங்குபவர்; தேவர்களின் தலைவர்; மும்மூர்த்திகளுக்கும் தலைவர்; சூலப்படையுடையவர்; எண்ணங்கள் மேவும் தன்மையில் சிந்தையில் உறைபவர்; அம்பினைச் செலுத்த வல்லவர்; தேவர்கள் ஏத்த விளங்குபவர்; உலகத்தை அளந்த திருமாலும் காண்பதற்கு அரியவர், அப் பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

496. பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
மன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், பின்னி முறுக்கிய சடையின் மேல் பிறைச் சந்திரனைச் சூடியவர்; பேரருள் உடையவர்; பிறப்பில்லாதவர்; உலகம் தோன்றுவதற்கு முன்னர் விளங்கிய தொன்மையுடையவர்; மூன்று அசுரர் புரங்களை எரித்தவர்; இத்தகைய வடிவம் என உரைத்தற்கு அரியவர்; ஏழு கடல்களும் உலகமும் ஆகியவர்; உமைபாகர். அப் பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

497. வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகம் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : சிவபெருமான், வெட்டவெளியில் ஆர்ப்பரித்துத் தீமைகள் புரிந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; அட்ட வீரட்டங்களில் மேவி வீரச் செயல்களைப் புரிந்தவர்; மன்மதனை எரித்தவர்; ஐம்பூதங்கள் ஆகியவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; துன்பம் தரும் தீய வினைகளைக் காத்தருள்பவர். கண்டத்தின் பெருமை விளங்கத் திகழும் நீல கண்டர்; கொன்றை மாலை அணிந்தவர்; வட்ட மதி போன்ற உமாதேவியைப் பாகம் கொண்டவர். அப் பெருமான் கடல் சூழ்ந்த கோகரணத்தில் மேவுபவர் ஆவார்.

498. கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

தெளிவுரை : ஈசன், கயிலையை யெடுத்த இராவணனை கால் விரலால் ஊன்றியவர்; அவன், இசை கேட்டு அருள் புரிந்தவர்; பொய்த்தன்மையுடையவர்களுக்குப் புறம்பானவர்; போர்ப்படையுடையவர்; தன்னை எதிர்ப்பவர் இல்லாதவர்; நீல கண்டம் உடையவர். அப் பெருமான், கடல் சூழ்ந்த கோகரணத்தில் விளங்குபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

50. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

499. போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; புலித்தோல் ஆடை உடையவர்; பார், சந்திரன், சூரியன், உயிர், ஆகாயம், நீர், காற்று, நெருப்பு, என விளங்கும் அட்டமூர்த்தமாகியவர்; முப்புரக் கோட்டைகளை எரிக்கத் தெய்வத் தன்மையுடையவர்களால் யாக்கப்பெற்ற தேரைக் கொண்டவர். அவர் திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் திருவடியை வணங்காதவர் தீயவழியில் செல்லும் தன்மையர் ஆவார்.

500. சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்
கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், மயானத்தில் மேவும் சாம்பல், எலும்பு, தலையோடு, தலை முடியால் பின்னப்பட்ட கயிறு ஆகியவற்றையுடைய திருக்கோலம் தாங்கியவர்; தேவர்கள் எல்லாம் சேர்ந்து பங்கேற்று நடத்திய தக்கனின் வேள்வியைச் சிதைத்தவர்; திருக்கச்சியேகம்பத்தில் திகழ்பவர்; திருவடியைச் சார்ந்து மேவிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை அழித்தவர். அவர் திருவீழிமிழலையில் மேவுபவர். அப்பெருமானைத் தொழாதவர் தீநெறியாகிய நரகிடை சேரக்காணும் தன்மையுடையவர் ஆவார்.

501. அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை
அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை
மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆல் நிழலின் கீழ் அமர்ந்து அறப் பொருளை ஓதியவர்; முனிகளுள் மேலானவராகிய அகத்தியரை உகப்பவர்; அயனும் மாலும் தேட அவர்களுக்குப் புலனாகாதவாறு ஒளிப் பிழம்பாக ஓங்கி உயர்ந்தவர்; நஞ்சினை உட் கொண்டவர்; உமாதேவியைப் பாகங்கொண்டு ஐம்புலன்களின் இயல்பினில் கலவாது திகழ்பவர்; மீயச்சூர் என்னும் தலத்தில் உறைபவர்; உமா தேவியார் புரிந்த தவத்தின் தன்மை உலகிடை உணர்த்துமாறு புரிந்தவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப்பொருமானின் திருவடியைச் சாராதவர் நரகிடை ஏகுபவர் ஆவார்.

502. தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், தூய்மையான சுடர்ப் பவளச் சோதியாகி எல்லா உயிர்க்கும் துணையாகும் தாயானவர்; திருமாலுக்குச் சக்கரப் படையருளியவர்; யாவர்க்கும் இனிமை செய்பவர்; சாம வேதம் ஓதுபவர்; திருவைந்தெழுத்தைச் சிந்திப்பவர்களின் மனத்துள் உறைபவர், அத்தகைய பதத்தின் பெருமையை உணராதவர்களுக்குத் தொலைவில் உள்ளவர்; திருவீழிமிழலையுள் மேவுபவர். அப்பரமனைச் சாராதவர்கள் நரகிடைச் சேர்பவராவர்.

503. நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், நற்றவத்தின் மேன்மையினும் நன்மை விளங்குமாறு அருள் புரிபவர்; தீமை செய்யும் தன்மையில் வெளிப்பட்ட நஞ்சினை அமுது செய்து காத்தவர்; அமுதத்தை உட்கொண்ட தேவர்கள் மாய்த்தாலும் தான் எக்காலத்திலும் மாயாது நிலைத்து விளங்குபவர். வருங்காலம், சென்றகாலம், நிகழும்காலம் என யாவும் ஆகி, யாவும் உணர்ந்த ஞானிகளும் அறிவதற்கு அரிய ஒண்சுடராய் விளங்குபவர்; வானத்தில் திரிந்து மூன்று அசுரர் புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; திருவீழி மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானைச் சார்ந்து ஏத்தாதவர்கள் நரகிடைச் சேர்பவராவார்.

504. மைவான மிடற்றானை அவ்வன் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிககே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய மிடற்றையுடையவர்; வானத்தில் ஒளிரும் மின்னல் போன்ற சடைமுடியின் மேல் சந்திரனைச் சூடியவர்; மழையாக விளங்குபவர்; பிச்சையேந்தித் திரிபவர்; பேய்க் கணங்கள் சூழ்ந்து மேல சூலத்தை ஏந்தி விளங்குபவர்; பொய்மையில்லாதவர்; மெய்த்தன்மை யுடையவராகி எல்லாக் காலத்திலும் நிலைத்திருப்பவர்; பூவுலகத்திலும், வானுலகத்திலும் விளங்குபவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பரமனின் திருவடியைச் சாராதவர் நரகிடைச் சேர்ப்பவராவார்.

505. மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை
வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்
பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
திக்கனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் மேலானவர்; குறைகளைக் கூறியேத்தும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; ஆறு சமயங்கள் ஆகியவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; எல்லாத் தத்துவங்களும் தானேயாய் விளங்குபவர்; மேரு மலையை நடுவுள் வைத்து மேவும் திசைகள் அனைத்தும் ஆனவர்; திருவீழிமிழலையுள் விளங்குபவர். அப்பெருமானின் திருவடியைத் துதியாதவர் நரகிடைச் சேர்பவராவார்.

இருமூன்று சமயம் ஆறு சமயங்கள். அவையாவன; 1. சௌரம், 2. காணபத்யம், 3. கௌமாரம் 4. வைணவம் 5. சாக்தம், 6. சைவம். அல்லது 1. பாசுபதம், 2. மகாவிரதம், 3. காபாலிகம், 4. வாமணம், 5. பைரவம், 6. சைவம் என்பன. மற்றும் 1. உல காயதம், 2. புத்தம். 3. சமணம், 4. மீமாம்சை, 5. பஞ்சராத்திரம், 6. பட்டாச்சாரியம் என்றும் பகர்வர்.

506. வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவி னானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான் இந்திரனின் தோளை நெரித்தவர்; வளைகுளம், திருமறைக்காடு ஆகிய தலத்தில் மேவி வீற்றிருப்பவர்; ஊனாகவும் உயிராகவும் விளங்குபவர்; பார்த்தனின் தவத்திற்கு உகந்து கானவனாகச் சென்றவர்; கயிலாயத்தில் வீற்றிருப்பவர்; கங்கை தரித்த சடையுடையவர்; அன்பிற் கலந்து பொருந்திய மனத்தினார்க்குத் தேன் போன்று இனிமையானவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் திருவடியைத் துதித்து ஏத்தாதவர் நரகிடைச் சேர்பவர் ஆவார்.

507. பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்
பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த
தபோதனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், பரம் பொருளாகத் திகழ்பவர்; பலவாக வியாபித்துள்ளவர்; உயிர்களுக்கெல்லாம் தலைவர்; பக்தர்களுக்கு முத்திப் பேற்றை அருளிச் செய்பவர்; வணங்கி ஏத்தும் அடியவர்களின் மனத்தில் உள்ளவர்; அக்கினி, திருமால், வாயு ஆகியவர்களை அம்பாகக் கொண்டு தாளின் கீழ் வைத்த தபோதனர்; சடை முடியில் நாகத்தை அணிந்தவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் திருவடியைத் துதியாதவர் நரகிடை உழல்பவராவார்.

508. அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றை அறுத்தவர்; மலையெடுத்த இராவணனுடைய தோள்களை நெரித்தும் அவன் இசை கேட்டு அருளியும் விளங்கியவர்; தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சந்திரனைத் தேய்த்தவர்; சூரியனின் பல்லை உகுந்தவர்; பகீரதற்காகப் பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் ஏற்ற அப்பெருமான் திருவீழிமிழலையில் விளங்க, அவரைத் துதியாதவர் நரகிடை வீழ்பவராவார்.

திருச்சிற்றம்பலம்

51. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

509. கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தர்
கந்தமா தனத்துள்ளார் காளத்தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபாலமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலைமலை, நாகைக் காரோணம், கந்தமாதனம், திருக்காளத்தி, மயிலாடுதுறை, மாகாளம், திருவக்கரை ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; திருமாலுக்குச் சக்கரப்படை அருளியவர்; கூரிய சூலமும் கபாலமும் கையில் ஏந்தியவர்; இடப வாகனத்தில் ஏறிச் சோதியென விளங்கும் திருநீறு தரித்தவர். அவர், திருவீழிமிழலையில் மேவினாரே.

510. பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்
கெடில வடஅதிகை வீரட் டத்தார்
மாதுயந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீறு தரித்தவர்; பொன்னிறத்தினர்; முப்புரிநூல் அணிந்தவர்; நாகத்தையுடையவர் சங்கரர்; காதில் வெண்குழையணிந்தவர்; கேதீச்சரம், கேதாரம், திருவதிகை வீரட்டானம், மழபாடி, வேதிகுடி, மீயச்சூர் ஆகிய இடங்களில் திகழ்பவர். பெருந்துயரம் தருவதாகிய வினை தீர்த்த அப்பெருமான் மழுப்படையேந்தியவராகி வீழிமிழலையுள் மேவினாரே.

511. அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணா ழிகையார் உமையோ ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாட்ததார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருவண்ணாமலை, திருவாரூர், அளப்பூர், வைகல் மாடக்கோயில், திருவொற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம், ஏமகூடம், பேராவூர் ஆகிய தலங்களில் உறைபவர். அப்பெருமான் தேவர்கள் ஏத்த உமாதேவியோடு வீழிமிழலையுள் மேவினாரே.

512. வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்காடு, திருச்செங்காட்டங்குடி, வெண்ணி, திருவேட்களம், பழனம், பராய்த்துறை, சிராப்பள்ளி ஆகிய தலங்களில் உறைபவர்; யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் வீழிமிழலையுள் மேவினாரே.

513. புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமாடுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற்
றளியுள்ளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்காளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பூத கணங்கள் சூழ்ந்து வேதங்களைப் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தில் நடனம் புரிபவர்; புலித்தோலை உடுத்தியவர்; கச்சியில் விளங்கும் திருமேற்றிளி என்னும் திருக்கோயிலில் விளங்குபவர்; கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; எலும்பு மாலை அணிந்துள்ளவர்; திருக்கழுமல நகரில் விளங்குபவர். அப்பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபக்கொடியுடையவராகிச் செல்வம் மல்கும் வீழி மிழலையில் மேவியவர் ஆவார்.

514. பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்ப ரார் ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பெரும்புலியூர், அரதைப் பெரும்பாழி, பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), இரும்பூளை, இன்னம்பர், ஈங்கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் ஆகிய தலங்களில் விளங்குபவர். அப் பெருமான் தேவர்கள் ஏத்தும் வீழி மிழலையுள் மேவியவர் ஆவார்.

515. மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருமறைக்காடு, திருவலிவலம், திருவாய்மூர், திருவாழ்கொளிபுத்தூர், மாகாளம், திருக்கற்குடி, திருவிற்குடி, கானப்பேர், பழையனூர் ஆலங்காடு ஆகிய தலங்களில் உள்ளவர். அப்பெருமான் காலனை அழித்தவராகி வீழிமிழலையுள் மேவியவராவார்.

516. அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்குமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருவஞ்சைக்களம், திருவையாறு, திருவாரூர், பேரூர், திருவழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கை, நாகேச்சரம், நாரையூர் ஆகிய தலங்களில்விளங்குபவர். அப்பெருமான், சமணரின் பிடியிலிருந்து என்னை மீட்டவராய் வீழிமிழலையில் மேவியவரே.

517. கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டொலடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத் துள்ளார்
வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான் கொண்டல், கொண்டீச்சரம், திருக்கோவலூர், வீரட்டானம், தண்டலை நீணெறி, தலையாலங்காடு, தலைச்சங்காடு என்னும் பெருங்கோயில், திருவலஞ்சுழி, வைகல் மாடக் கோயில் ஆகிய தலங்களில் உறைபவர். அப்பெருமான், கபாலத்தைக் கையில் கொண்ட விகிர்தராய்த் திருவேடம் தாங்கி வீழிமிழலையில் மேவியவர் ஆவார்.

518. அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரிய ரானார்
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அரிச்சந்திரம் அம்பர் பெருந்திருக்கோயில் ஆகிய தலத்தில் விளங்குபவர். திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரும் காணற்கு அரியவர்; சந்திரபுரத்தில் உள்ளவர்; உமாதேவியாரை உடனாகக் கொண்டு ஏமகூடத்தில் உறைபவர்; இனிய இசையுடன் ஓதும் வேதத்தை விரிப்பவர். அப் பெருமான், நன்கு கையினை விரித்து நெருப்பை யேந்தி ஆடும் வேடத்தினராகி வீழிமிழலையில் மேவியவர் ஆவார்.

519. புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருப்புன்கூர், திருப்புறம்பயம், திருப்புத்தூர், திருப்பூவணம், புலிவலம் ஆகிய தலங்களில் விளங்குபவர்; இராவணனுடைய தோளும் தாளும் நெரியுமாறு விரலால் ஊன்றியவர். அப்பெருமான், மின்னலைப் போன்று ஒளிரும் சடைமுடியுடையவராகி இடப வாகனத்தில் ஏறி வீழிமிழலையில் மேவி விளங்குபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

52. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

520. கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான் கண்ணாகவும், கண்ணின் ஒளியாகவும், காட்சியாகவும் விளங்குபவர்; இனிய இசையில் மிளிரும் பண்ணாகவும், அதன் திறனாகவும் திகழ்பவர்; பழமாகவும் அதன் சுவையாகவும் விளங்குபவர்; மண், நெருப்பு, நீர், காற்று, மழைமேகம் சேர் ஆகாயம் என மேவும் ஐம்பூதமாகவும் விளங்குபவர். அப்பெருமான், தேவர்களுக்குத் தலைவராகித் திருமாலால் தேவலோகத்திலிருந்து பூவுலகிற்குக் கொணர்ந்து நிறுவப் பெற்ற விமானத்தில் வீழிமிழலையின்கண் மேவியவர் ஆவார்.

521. ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிநறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பின் சாறு போன்று இனிமை தந்து மகிழ்விக்கும் திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; ஒழுக்க சீலமும் ஆகாரமும் உடைய அடியவர்களின் சிந்தையில் உள்ளவர்; முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவர்; பஞ்ச கவ்வியத்தை விரும்பி பூசனை ஏற்பவர்; பண்டரங்கம் என்னும் திருக்கூத்து புரிபவர்; கபாலம் ஏந்திப் பிச்சையேற்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் தேக்கியவர். அப்பெருமான் வீழிமிழலையில் மேவும் விண்ணிழி விமானத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

522. தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண்தீர்த் தென்னையாட் கொண்டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், குளுமையும் வெம்மையும் ஆனவர்; திருமாலுக்குச் சக்கரப்படையை அளித்தவர்; முக்கண்ணுடையவர்; கபாலம் ஏந்தியவர்; மன்மதனை எரித்தவர்; சமண நெறியிலிருந்து என்னை மீட்டு ஆட்கொண்டவர்; திருமால் பிரமன் ஆகியோருக்கும், எரியும் நெருப்பு வண்ணமாக ஓங்கிக் காட்சி நல்கியவர்; தேவர்கள் ஏத்த விளங்குபவர். அவர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்தில் மேவியவர் ஆவார்.

523. காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பால் லான்காண்
ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், காதில் சங்கினால் ஆகிய குழையணிந்தவர்; பொன் மலை போன்று விளங்குபவர்; உமாதேவியார் புரிந்த தவத்தை உவந்து சோதித்தவர்; ஏனத்தின் மருப்பினை ஆபரணமாக உடையவர்; ஆதி மூர்த்தியாகவும், அண்டங்களைக் கடந்தவராகவும் விளங்குபவர்; ஐந்தல நாகத்தை அரையில் கட்டியவர்; வேதத்தின் நாயகராகவும், அத்தகைய விதியை அருளியவராகவும் ஆனவர். அப்பெருமான் வீழிமிழலையுள் உள்ளவர் ஆவார்.

524. நெய்யினோடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தினான் காண்
வெய்ய கனல்விடையாட் டாடி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான் நெய், பால், இளநீர் ஆகியவற்றைப் பூசையாகக் கொள்பவர்; மணவாளத் திருக்கோலத்தில் எஞ்ஞான்றும் திகழ்பவர்; கையில் மழுப்படையுடையவர் மானும் ஏந்தியவர்; காலனின் உயிரைக் காலால் காய்ந்தவர்; சிவந்த திருமேனியில் வெண்ணீறு தரித்தவர்; சிவந்த சடையின்மேல் வெண்மையான சந்திரனைச் சூடியவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; அப்பெருமான், வீழிமிழலையுள் மேவியவர் ஆவார்.

525. கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடத்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : திருமால், சக்கரப்படை வேண்டிப் பூசிக்கும்போது, ஒரு மலர் குறையத் தன் கண்ணை இடந்து அருச்சிக்க அருள் நல்கிய சிவபெருமான், கொன்றைமலர், வன்னி, ஊமத்தம், கங்கை, சந்திரன், அரவம் ஆகியவற்றைச் சடையில் தரித்தவர்; உமைபாகர். பரமனாகவும், பரமேட்டியாகவும் திகழ்பவர். அப் பெருமான், வீழிமிழலையில் வீற்றியிருப்பவர் ஆவார்.

526. கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், சலந்தாசூரனை அழித்த ஆழிப் படையைத் திருமாலுக்கு ஆயுதமாக அளித்து அருள் புரிந்தவர்; விசயனோடு வேடுவனாகத் தோன்றிப் போர் புரிந்தவர்; மாயை நீங்கிய சுயமாகிய பரம் பொருளானவர்; சதாசிவ மூர்த்தியாய் விளங்குபவர்; தனக்கு நிகராக யாரும் இல்லாத மேன்மையுடையவர்; மலை மகளை விரும்பித் திருமேனியில் பாகம் கொண்டவர். அப் பெருமான், வீழிமிழலையுள் வீற்றிருப்பவர் ஆவார்.

527. மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன் காண்புத்தன் மறவா தோடி
யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கினாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்த்தவமாகவும், மெய்த்தவத்தில் மேவாத கடின சித்தம் உடையவர்களுக்குத் தோன்றாதவராகவும் திகழ்பவர்; புத்த சமயத்தில் மேவிய சாக்கிய நாயனார் ஈசனை மறவாது நினைத்துக் கற்களை நறுமலராக மனத்தினால் கொண்டு ஏத்த, உயர்ந்த கதியை அருளிச் செய்தவர்; உலகினைத் தோற்றம் செய்தும், ஒளித்து மறைத்தும், உய்யுமாறு செய்தும் விளங்கும் வித்தகர். அப்பெருமான், விரும்பி ஏத்தப்பெறும் வீழிமிழலையுள் வீற்றிருப்பவர் ஆவார்.

528. சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன்தலை கொண்டான் காண்
இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்
விண்ணிழிதன் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சந்திரனைக் காலால் தேய்த்தவர்; தக்கனையும் எச்சனையும் தண்டித்தவர்; இந்திரனின் தோளை நெரித்துப் பின்னர் அருளியவர்; யாவர்க்கும் ஈசனாகவும், அன்பர்க்கு நேசனாகவும், நினைந்து ஏத்தும் அடியவர்களுக்கு மந்திரமும் மறைப்பொருளாகவும் ஆனவர்; மாலும் அயனும் காண்பதற்கு அரிய சோதிப் பொருளாக உயர்ந்தவர். அப்பெருமான், வீழி மிழலையில் விளங்குபவர் ஆவார்.

529. ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவினுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஒருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணியான்காண்
கொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், சுடுகாட்டில் விளங்குபவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு ஒரே வடிவம் ஆகி விளங்கும் ஓங்காரப் பொருளானவர்; கொன்றை மாலை சூடியவர்; இடபத்தைக் கொடியாக உடையவர்; புலித் தோலை ஆடையாக உடையவர். அப் பெருமான் வீழிமிழலையுள் மேவுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

53. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

530. மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலும்
தேனேறு திருவிதழித் தாரார் போலுந்
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தி அருள் புரிபவர்; மேரு மலையை வில்லாக வளைத்தவர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படை, இடபக்கொடி, உடுக்கை ஆகியவற்றை உடையவர். கொன்றை மாலை சூடியவர்; திருவீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்ட அழகராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் ஆவார்.

531. சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தார் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு காலகுறைத்த நாதர் போலும்
நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையார் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன், சலந்தராசூரனை சக்கரப் படையால் அழித்த சதுரர்; இயமனைக் காலால் அழித்தவர்; திருமாலைத் தன் இடது பாகத்தில் பொருந்தியவர் குமாரக்கடவுளைத் திருமகனாக உடையவர்; குளிர்ச்சி மிக்க திருவீழி மிழலையுள் விளங்குபவர். அப் பெருமான், தேவர்கள் பின்னர் அமுதத்தை உண்ணும் அருளைப் புரிபவராய், முன்னம் நஞ்சினை உட்கொண்டு அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

532. நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
எயில்மூன்றும் எரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவர்; நிமலர்; திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளிச் செய்தவர்; இடபத்தைக் கொடியாகக் கொண்டவர்; மூன்று கோட்டைகளையும் அக்கினியை அம்பாக்கி எரித்துச் சாம்பலாக்கியவர்; பல வண்ணத் திருவேடம் கொள்பவர்; வீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், கங்கையைச் சடையில் தரித்த அழகராகி, அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

533. கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், யானை முகத்தோற்றப் பொலிவுடைய விநாயகரைப் படைத்துக் கயாமுகாசுரனை வதையுறச் செய்தவர்; தக்கனையும் அவன் செய்த வேள்வியையும் சிதைத்தவர்; பிரமனின் சிரங்களுள் ஒன்றை அறுத்தவர்; வீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப்பெருமான் ஐந்து வேள்வியும் வேதத்தின் ஆறு அங்கமும் ஆகியவராய், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

534. துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந்
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தோர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன் வைத்து விளங்கும் கோவணத்தை உடையவர்; சூரியன், சந்திரன், அக்கினி என ஆகித் தூய்மையுடையவராகவும், பொன்னொத்த திருமேனியுடைய புனிதராகவும் விளங்குபவர்; பூத கணங்கள் புடைசூழ் விளங்குபவர்; மின்னலைப் போன்ற சிவந்த சடையுடையவர்; வீழி மிழலையுள் விளங்குபவர். அப்பரமன், அன்னத்தைக் கொடியாகக் கொண்ட பிரமனின் தலையைக் கபாலமாக ஏந்தியவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் ஆவார்.

535. மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன்வீழி மிழலையார் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலால் அறிவதற்கு அரியவர்; நினைந்து ஏத்தும் அடியவர்களுக்குப் பிறவாப் பேற்றினை அருள்பவர்; நான்கு மறைகளுக்கும் தலைவர்; திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; சூலப் படையைக் கையில் யேந்தி விளங்கும் காளியைப் படைத்தவர்; பெருமையுடைய வீழிமிழலையுள் மேவும் விகிர்தர். அப்பெருமான் ஆலகால விடத்தை மிடற்றில் அடக்கியவராய் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

536. பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண்டணிந்தார் போலுந்
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பஞ்சு போன்ற மென்மையான விரலுடைய உமா தேவியைப் பாகமாகக் கொண்டவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; மேகம் போன்று விளங்கும் நீலகண்டர்; பெருமையுடைய கயிலை மலையில் மேவும் மணாளர்; சிவந்த சடை முடியில் வெண்மையான சந்திரனைச் சூடியவர்; திருவீழி மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமான், ஐம்புலன்களை அடக்கிய அடியவர்களுக்கு அண்மையில் விளங்குபவராய் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

537. குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலும்
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன் வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், சமண நெறியிலிருந்து என்னை ஆட்கொண்டவர்; குடமூக்கில் விளங்குபவர்; அடியவர்களின் இதயத் தாமரையில் விளங்குபவர்; கருடனை மாயச் செய்து, பின்னர் உயிர் பெறச் செய்தவர்; மண்டையோட்டினை ஏந்திப் பலியேற்றவர்; வீழி மிழலையுள் வீற்றிருப்பவர். அண்டத்துக்கு அப்பாலும் விளங்கும் அப் பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

538. முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மெய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், முத்துப்போன்ற இனிய முறுவல் புரிபவர்; பவளக் கொடி போன்ற சடைமுடியுடையவர்; பக்தர்களுக்கு மிகவும் இனியவர்; அட்ட மூர்த்தியாகியவர்; தோழனாகிய குபேரன்பால் மிக விருப்பம் உடையவர்; வீழி மிழலையுள் விளங்கும் விகிர்தர். அம்மையப்பராக விளங்கும் அப்பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

539. கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியார் அஞ்சுமாறு யானையை அடர்த்து, அதன் தோலை உரித்தவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற அக்கினியின் கரத்தைத் துண்டித்தவர்; ஏனத்தின் வளைந்த பல்லை அணியாகக் கொண்டவர்; சூரியனையும் சந்திரனையும் தண்டித்தவர்; வீழிமிழலையுள் விளங்குபவர். அரியும் அயனும் துதி செய்து ஏத்த நின்ற அப் பரமன், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

540. கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலாள் அடர்ந்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணன் கதறி வீழுமாறு கால் விரலால் அடர்த்தியும், பின்னர் அருள் செய்தும் விளங்கும் சிவபெருமான், உமாதேவியார் குளிர்ந்து நோக்கத் திருக்கூத்துப் புரிபவர்; சூரியனாக ஒளிர்பவர்; வீழி மிழலையுள் ஒளிர்பவர். கூர்மையான சூலப்படையுடைய அப்பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

54. திருப்புள்ளிருக்கு வேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

541. ஆண்டனை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், என்னை ஆட்கொண்டவர்; அடியேனை அடிமையாகக் கொண்டவர்; தனது திருவடியோடு திருமுடியையும், மாலும் அயனும் அறியாதவாறு, அரியதொரு தீப் பிழம்பாய் நெடிது ஓங்கியவர்; திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் விளங்குபவர்; சலந்தாசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர்; திருக்கேதாரத்தில் மேவி விளங்குபவர்; அழிவில்லாதவர்; அரவத்தையும் எலும்பையும் ஆபரணமாகப் பூண்டவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி வணங்காது இத்துணைக் காலத்தையும் வீணாகக் கழித்தேனே !

542. சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கும் வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சிறப்பின் மிக்கவர்; சிந்தையுள் உறைபவர்; இனிய அன்பானவர்; தேவர்களின் தலைவர்; காலனைச் சினந்து தாக்கி மார்க்கண்டேயரின் அச்சத்தைப் போக்கியவர்; பிறப்பு இறப்பு எனும் தன்மையற்றவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர். அப் பரமனைப் போற்றித் துதியாது காலத்தை வீணாக்கினேனே.

543. பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பத்தியுடன் என்னைப் பல காலம் பாமாலைகளைப் பாடுமாறு பயில்வித்தவர்; எல்லாக் கடவுளாலும் ஏத்தப் பெறுபவர்; என்னுள்ளத்தில் ஊறி இனிமை தரும் தேனும் பாலும் அமுதமும் கரும்பின் சுவையும் ஆகுபவர்; ஆதி மூர்த்தியாய்ப் புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தை வீணாக்கினேனே !

544. இருளாய் வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான் , மன இருளை நீக்கிப் பாவத்தைக் கெடுத்துச் சிந்தையைத் தெளிவித்துச் சிவலோக நெறியை அறியச் செய்து, ஏழையேனை உய்யச் செய்தவர்; தவமாகவும், வேதமும் அங்கமும் கடந்த பொருளாகவும் விளங்கிப் புள்ளிருக்கும் வேளூரில் திகழ்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தை வீணாக்கினேனே !

545. மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், மின்னல் போன்ற வடிவமாகி விண்ணில் மிகுந்து ஒலி என ஒன்றாகியவர்; காற்று என வீசுதலால் ஊறு, ஒலி என இரண்டாகியவர்; நெருப்பின் தன்மையில் உருவம், ஊறு, ஒலி என மூன்றாகியவர்; புனல் என்னும் பான்மையில் சுவை, உருவம், ஊறு, ஒலி என நான்காகியவர்; நிலம் என்னும் பாங்கில் நாற்றம், சுவை, உருவம், ஊறு, ஒலி என ஐந்தாகியவர்; பவளக் கொழுந்து போன்றவர்; முத்து, வயிரம், பொன் எனப் பெருமையுடன் திகழ்பவராகிப் புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

546. அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தாளை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், பொற்கழல் ஒலிக்கத் தில்லையில் நடனம் புரிபவர்; சூலப்படையுடையவர்; நாகைக் காரோணத்தில் தாங்குபவர்; புள்ளிருக்கும் வேளூரில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது, காலத்தைப் போக்கினேனே !

547.நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்தருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

தெளிவுரை : சிவபெருமான் நெருப்புப் போன்ற திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; என்னுள்ளத்தில் நீங்காது விளங்குபவர்; வேதத்தின் வித்தாகியவர்; திருவெண்காடு, திருத்துருத்தி (குத்தாலம்), திருவிடைமருதூர், ஈங்கோய்மலை, கயிலைமலை ஆகிய தலங்களில் மேவியவர்; புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர்; அப்பெருமானைப் போற்றி ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

548. பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராதநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழுத்திண் சிலைகைக் கொண்ட
பேரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆயிரக் கணக்கான திருப்பெயர்களால் புகழ்ந்து ஏத்தப்படுபவர்; பிரியாது நினைந்து ஏத்தும் அடியவர்களுக்கு, வாராத செல்வமாகிய முத்திப் பேற்றை அளிப்பவர்; நோய்க்கு மணி மந்திர ஒளடதம் போன்று, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகியவர்; தீராத நோயைத் தீர்த்தருள வல்லவர்; முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய வில்லை யேந்தியவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி ஏத்தாது காலத்தைப் போக்கினேனே. இத் திருத்தலத்தின் சிறப்பாக விளங்கும் ஈசனின் திருவருட் செயலின் தன்மையானது மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி என ஏத்தப் பெற்றது.

549. பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாத ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பண் போன்ற இனிமையுடையவர்; உமைபாகர்; சடையில் கங்கையையேற்றவர்; நண்ணி என்னைத் தானாக்கிக் கொண்டவர்; வேதப் பொருளானவர்; திங்களைத் தரித்தவர்; இடப வாகனத்தை உடையவர்; மாலாகவும் அயனாகவும் விளங்குபவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

550. இறுத்தானை இலங்கையரகோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால் முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரியுமாறு ஊன்றிய சிவபெருமான், அவ் வரக்கனின் இனிய இசை கேட்டு மகிழ்ந்து, அருள் புரிந்தவர்; அடியவர்களின் வினை நோய் பாவம் என யாவும் அறுத்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் கருமை கொண்டவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர். நெருப்பு, மழுப்படை, மான், கங்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

55. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

551. வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், விண்ணாகவும் மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று என நான்கு பூதங்களாகவும் விளங்குபவர்; உள்ளத்தின் ஊற்றாகத் திகழும் எண்ணத்தில் திகழ்பவர்; ஓயாது மேவும் ஒலியாகுபவர், ஆற்றும் திறனாகத் திகழ்பவர்; வேதமும் அங்கமும் ஆனவர்; காற்றாகிக் கலந்து மேவுபவர். கயிலையில் வீற்றிருப்பவர். தேவரீரைப் போற்றுதும்.

552. பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பேய்க் கூட்டத்துடன் ஆடல் புரிபவர்; பிறவி அறுக்கும் பெருமான் ஆவார்; உயிர்களைப் பிறப்புக்களில் வைத்துத் திருவிளையாடல் புரிபவர்; என் சிந்தையில் புகுந்தவர்; மாலையில் திரிந்த முப்புரங்களை எரித்தவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; கயிலை மலைக்கும் உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

553. மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் முப்புரம் எரித்தவர்; என் சிந்தையில் புகுந்தவர்; என்னைப் பிறப்புக்கொண்டு மேவுமாறு படைத்தவர்; உயிரைக் கண்ணுக்குப் புலனாகாதவாறு உடலுள் ஒளித்தவர்; செல்வமும் ஆற்றலும் ஆகியவர்; உலகத்தோரால் ஏத்தப் படுபவர்; மேகம் போன்றவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

554. வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், தேவர்கள் போற்றும் அமுதமானவர்; என் சிந்தையில் புகுந்தவர்; குறை நீக்கும் பருப்பொருளானவர்; நெருப்பு வண்ணத்தில் ஓங்கி உயர்ந்தவர்; தேனின் சுவையானவர்; தேவர்களின் தேவராகியவர்; மயானத்தில் ஆடலை உகந்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

555. ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் ஊராகவும் உலகமாகவும் விளங்குபவர்; அழலாய் ஓங்கி உயர்ந்தவர்; எல்லா இடங்களிலும் பரந்து விளங்குபவர்; என் சிந்தையில் புகுந்தவர்; நீருள் மேவும் தன்மையும், ஒளியும் ஆனவர்; ஒப்புமையற்றவர்; கார் முகிலாய் மேவுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

556. சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சிறிய தன்மையும் பெருந்திரட்சியும் ஆகியவர்; தேவர்களால் அறியப்படாத தேவர்; புல்லுக்கும் உயிர்வாழ்க்கை அருளிச் செய்தவர்; என் சிந்தையுள் நீங்காது கலந்து மேவுபவர்; பல உயிர்களாக மேவியவர்; உலகினைக் பற்றி இருந்து காத்து இயக்குபவர்; உலகினைப் பற்றி இருந்து காத்து இயக்குபவர்; கல்லுக்கும் உயிர்கொடுத்து மேவுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

557. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பண்ணின் இசையாக இருப்பவர்; ஏத்தும் அன்பர்களின் பாவத்தைப் போக்குபவர்; எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆகி என் சிந்தையில் நீங்காது விளங்குபவர்; விண்ணும், மண்ணும் நெருப்பும் ஆனவர்; மேலோர்களுக்கும் மேலானவர்; கண்ணின் மணியாக விளங்குபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

558. இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புரணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், இமைத்தலும் உயிர்த்தலும் இன்றித் தாமே இயங்குபவர்; என் சிந்தையில் திகழ்பவர்; உமைபாகர்; எழுகின்ற ஊழிகள் யாவும் ஆனவர்; கடலில் பொங்கியெழுந்த நஞ்சினை அருந்தியவர்; ஆதி புராணராகத் திகழ்பவர்; அருளாகி மேவும் கனலாகியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

559. மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மூப்பு இல்லாதவர்; பிறப்பு இல்லாதவர்; இறப்பு இல்லாதவர்; யாவர்க்கும் முன்னவர்; தேவர்களின் தலைவர்; எங்கும் நிறைந்தவர்; அடியவனுக்கு எல்லாமாக விளங்குபவர்; என் அல்லலை நலியச் செய்தவர்; கனகத் திரளாகக் கனிந்து காத்தருள்பவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

560.நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஆகாயம் ஆகியவர்; யாங்கணும் விரிந்தவர்; அடியும் முடியும் காண முடியாத தன்மையுடையவர்; தம் யாங்கு இருக்கின்றோம் என அறியா வண்ணம் நின்றவர்; கூற்றுவனை உதைத்தவர், என் சிந்தையைக் கோயிலாகக் கொண்டவர்; இடியும் மின்னலும் ஆகியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

561. உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்மா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஊணும், உறக்கமும் அற்றவர்; வேதத்தை ஓதாது உணர்ந்தவர்; இராவணனைத் திருவிரலால் ஊன்றி உகந்து இசை கேட்டு அருள் புரிந்த ஈசர்; என் சிந்தையில் புகுந்தவர்; உலகுக்குக் கண் போன்று ஒளிர்பவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

56. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

562. பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்கா தென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் பொறுமைக்கு நிலையாகும் பூமியுடன், நீரும் ஆனவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ள புனிதர்; நிறைந்த தன்மையுடைய நெஞ்சுள் உறைபவர்; என்னுள்ளத்தில் நீங்காது இருப்பவர்; வேதம் விரித்தவர்; வானோரால் ஏத்தப்படுபவர்; நஞ்சினை உண்டு கறையுடைய கண்டத்தை உடையவர்; கயிலை மலைக்கும் உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

563. முன்பாகி நின்ற முதலே போற்றி
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றாக் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி
யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முதலில் தோன்ற முதற் பொருளானவர் மூப்படையாத திருமேனியும் முக்கண்ணும் உடையவர்; அன்புடையார்க்கு அண்மையில் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; எலும்பை ஆபரணமாக அணிந்தவர்; என் சிந்தையுள் நீங்காதவர்; கண்ணில் பரவி ஒளிரும் ஒளியானவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

564. மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மாலையில் தோன்றும் மதியானவர்; என் சிந்தையில் மேவுபவர்; உயிரைப் பற்றி மேவும் வினைகளை அறுப்பவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரும்பின் தெளிந்த சுவையானவர்; அடியவர்களுக்கு அமுதமானவர்; காலை தோன்றும் கதிரவன் ஆனவர்; கயிலை மலைக்கு உரியவர்; தேவரீரைப் போற்றுதும்.

565. உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலில் ஒளியாய் முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வினைகளைத் தீர்ப்பவர்; எரியும் நெருப்பை வீசி ஆடுபவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; பலவண்ணக் கூத்துகளைப் புரிபவர்; சுடரில் திகழும் சோதியானவர்; என்னுள்ளத்தில் இருப்பவர்; கடலில் விளங்கி ஒளிரும் முத்து ஆனவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

566. மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி
மாலுக்கும் ஓராழி யீந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசே ரனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கரிய மிடற்றையுடையவர்; மாலுக்குச் சக்கரம் அருளியவர்; பொய்மை மேவும் சிந்தையில் புகாதவர்; என் உள்ளத்தில் விளங்குபவர்; திருமேனியில் பால் போன்ற திருவெண்ணீறு பூசியவர்; பெருஞ் சீலத்தவர்கள் ஏத்தும் பெருவிளக்கமானவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

567. ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேவி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கங்கை தரித்த சடைமுடியுடையவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்; திருநீறு அணிந்த திருமேனியுடையவர்; என் உள்ளத்தில் விளங்குபவர்; திருமேனியின் ஒரு பாகத்தில் உமாதேவியை உடையவர்; மழுப்படை யேந்தியவர்; வாரத்தில் மேவும் ஏழு கிழமைகளும் ஆகியவர்; கரிய மிடற்றினையுடையவர்; கயிலை மலைக்கு உரியவர், தேவரீரைப் போற்றுதும்.

568. அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோவிண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஏழு அண்டங்களையும் கடந்தவர்; ஆதி புராணனாய் விளங்குபவர்; தொல் வினை தீர்ப்பவர்; பூவுலகத்தினரும் தேவர்களும் ஏத்த விளங்குபவர்; தொண்டர் பரவும் இடத்தில் விளங்குபவர்; ஐந் தொழிலும் மேவும் அருஞ்சுடரானவர்; கரிய கண்டம் உடையவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

569. பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
யாரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பெருகி ஓங்கும் நீராகிய கங்கை போன்றவர்; தீராத நோய் யாவையும் தீர்ப்பவர்; உருகும் பக்தர்களின் உள்ளத்தில் ஒளிர்பவர்; குறை தவிர்க்கும் கடவுள் ஆவார்; ஒளிர்ந்து மேவும் பொன் போன்றவர்; யாராலும் இகழப்படாதவர்; மேகம் பொழியும் மழையாகுபவர், கயிலை மலைக்கு உரியவர், தேவரீரைப் போற்றுதும்.

570. செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், திருமாலும், நான்முகனும் தேடியும் காண்பதற்கு அரியவரானவர்; நஞ்சுண்டு பொறுத்தருள் புரிந்தவர்; என்னை ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை உகந்து ஏற்பவர்; பெரியோர்களாகிய ஞானிகளால் ஏத்தப்படுபவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்

571. மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வானவர்களின் தலைவர்; முப்புரம் எரித்தவர்; இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு, விரலால் ஊன்றியவர்; மன்மதனை எரித்தவர்; காலனை அழித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

57. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

572. பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்தம அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், தோத்திரப் பாடல்களாக விளங்குபவர்; சந்திரனைச் சடையில் சூடியுள்ளவர்; தூய கொன்றை, ஊமத்தம் ஆகிய மாலைகளை அணிந்தவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை உகந்து ஆடுபவர்; புரங்கள் மூன்றும் எரியுமாறு நகை செய்தவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

573. அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர்மெய் பூசுந் தலைவா போற்றி
எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி
யென்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உயிர் வாழ்க்கையில் மேவும் நடுக்கத்தைக் கொடுக்கும் வினைகளை அறுப்பவர்; கல்லால நிழலில் மேவி அறம் உரைத்தருளியவர்; சதுரப்பாடு உடையவராகி ஆற்றல் மிகுந்து விளங்குபவர்; சிறப்புடைய குழையைக் காதில் அணிந்தவர்; சாம்பலைத் திருமேனியில் பூசியவர்; ஈடு இணையற்ற தன்மையால் எதிர்பாடில்லாத தன்மையற்ற முத்தியுலகத்தை வழங்குபவர்; எக் காலத்திலும் நிலைத்து மேவும் அருளைப் புரிபவர்; கதிரவனாகவும் கதிரவனுக்கு ஒளியாகவும் விளங்குபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

574. செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சிவந்த திருமேனியுடையவர்; கரிய கண்டத்தை உடையவர்; வெண்மையான திருவெண்ணீற்றைத் தரித்தவர்; நிலைத்த செல்வம் உடையவர்; அழகும் பெருமையும் நுண்மையும் கொண்டவர்; ஆகாயத்தின் வண்ணம் உடையவர்; கனலாகவும், குளிர்ச்சியாகவும், அண்மையாகவும் திகழ்பவர்; பயன் கருதாத தன்மையில் மேவும் வேள்வியையுடையவர்; கையில் நெருப்பை ஏந்தி நடனம் புரிபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

575. ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உலகின் சீரிய ஆட்சியை உடையவர்; அடியவர்களுக்கு இனிமை தரும் அமுதம் யாவும் தருபவர்; வஞ்சனை இல்லாதவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தவர்; மாட்சிமையுடையவர்; என் சிந்தையில் மேவி மகிழ்ந்து விளங்குபவர்; பிறரால் காண்பதற்கு அரியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

576. முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முதற்பொருளாய் விளங்குபவராகி முற்பட்டு நின்று ஒளிரும் முதல்வர்; மூப்படையாத திருமேனியுடையவர்; என்னுடைய தாயும் தந்தையும் ஆனவர் ஏழிசையை உகந்து விளங்குபவர்; உமை மணவாளர்; மந்திரமும் தந்திரமும் ஆனவர்; கன்னித்தன்மையுடைய கங்கையின் தலைவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

577. உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய் தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உலகம் யாவற்றின் உரிமையும் உடையவர்; உயிரின்பால் பொருந்தி மேவுபவர்; எரியும் நெருப்பாகிய கதிரவனாய் விளங்குபவர்; இகழப்படும் முண்டம் எனப்படும் மண்டையோட்டை ஏந்தியவர்; தேவர்களால் காண்பதற்கு அரியவர்; அறிவாகவும், எல்லாப் பொருள்களிலும் உட்பொலிவும் நுண்மையாகவும் விளங்குபவர்; திருமாலுக்கு ஆழிப்படையளித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

578. எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேற்றிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மனத்தில் தோன்றும் எண்ணங்களாய்த் திகழ்பவர்; இடப வாகனத்தினர்; பண்ணாகி விளங்குபவர்; யாழ், வீணை எனப் பயின்றவர்; விண்ணோர்க்குத் தீத்திரட்சியாய் உயர்ந்தவர்; மேலோர்களுக்கும் மேலோராகுபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கயிலை மலைக்கு உரியவர் தேவரீரைப் போற்றுதும்.

579. முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சடை முடியில் சந்திரனைச் சூடியவர்; திருநீறு பூசிய மூர்த்தியானவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் உடையவர்; சோதிக்கும் தன்மையில் நண்ணிய திருமால் நான்முகன் ஆகியோருக்குத் தோற்றம் பெறாது உயர்ந்து விளங்கியவர்; அடியவர்களின் அடிமைத்தனத்தின் பாங்கினை அறிபவர்; தேவர்களுக்கு விண்ணுலக வாழ்கை அளித்தவர்; மூன்று அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; கயிலை மலைக்கு உரிமையானவர். தேவரீரைப் போற்றுதும்.

580. போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், யாவரும் போற்றித் திருவடியை ஏத்திப் பரவுமாறு விளங்கியவர். புண்ணியராகவும், நண்ணுவதற்கு அரியவராகவும் மேவுபவர்; வானில் நிலவும் மேகம் ஆனவர்; எண்ணத்தில் மலர்ந்து தோன்றும் ஆயிரக்கணக்கான திருநாமங்களையுடையவர்; நான்கு திசைகளுக்கும் ஒளியாக மேவும் தலைவர்; நான்முகனுக்கும் திருமாலுக்கும் காட்சிக்கு அரியவர்; காற்று வீசும் எல்லா இடங்களுக்கும் ஆதார வித்தாகத் திகழ்பவர்; கயிலை மலைக்கு உரிமையானவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

58. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

581. மண்ணளந்த மணிவண்ணார் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திநெற்றி யுடையா ரொற்றைக்
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் சூழ நின்று ஏத்த நெற்றிக் கண்ணுடையவராய்க் கையில் நாகத்தைப் பற்றி விளங்கும் சிவபெருமான், பண்ணிசைத்துப் பாடிப் போற்றும் பெருமக்களால் ஏத்தப்படுபவர். யானும் அப்பெருமானை ஏத்தியவனாகிப் பின் தொடர்ந்து செல்லலுற்றேன். அவர், வயல் வளமும் மாடவீதியும் சூழ்ந்து மேவும் வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவராயினர்.

582. சிலைநவின்ற தொருகணையாற் புரமூன்று றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய தீவண்ணராகிய சிவபெருமான், தேவர்கள் ஏத்தி நிற்க, யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்து ஆடுபவர். அவர், வேத விற்பன்னர்கள் ஏத்தி நிற்க இடபத்தில் ஏறிப் பூத கணங்கள் சூழ்ந்து மேவி, மலைமகளும் கங்கையும் உடன் திகழ வலம்புரத்தை அடைந்து விளங்கினர்.

583. தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நாலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தனது தீவண்ணம் நிலவும் திருமேனியின் ஒரு பக்கத்தில் அரியின் உருவத்தைக் கொண்டவர்; ஆக்கூர் தான்தோன்றி மாடத்துள் மேவுவார்போலக் காட்டினர்; தோலாடை உடுத்தியவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; திருவெண்ணீறு தரித்தவர்; வேதத்தை விரித்து ஓதியவர்; மாயச் சொற்களை உரைப்பவர்; அப் பெருமான், வலம்புரத்தை அடைந்து வீற்றிருப்பவர் ஆவார். இது அகத்துறையின் பாற்பட்டு ஓதுதலாயிற்று.

584. மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
கோவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : இளநாகத்தை அரையிற் கட்டி மேவும் சிவபெருமான், மும்மூர்த்திகளின் வடிவானவர்; மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியை அம்பாகத் தொடுத்தவர்; கொன்றை மலர் சூடியவர்; அப்பரமனைக் கண்டு அடியேன் பின் செல்ல, அவர் வா ! வா ! என உரை பகர்ந்து, இனியன பேசிப் பூதகணங்கள் சூழ, வலம்புரத்தில் மேவி வீற்றிருப்பவரானார்.

585. அனலொருகை யதுவேந்தி யதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைகற்றைப் பொன்போல் மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : கையில் அனலை ஏந்திப் புலித்தோல் ஆடையின் மேல் நாகத்தைக் கட்டிச் சடையில் கங்கை விளங்கப் பொன் போன்ற திருமேனியுடைய புனிதராகிய சிவபெருமான், தேவர்களெல்லாம் ஏத்த, இடபத்தின் மேல் விளங்குபவர். அவர், திருவாரூர், சிரபுரம், திருவிடைமருதூர் ஆகிய தலங்களை நோக்கிச் செல்வார்போல என் மனம் உருகுமாறு பேசி, வளையல்கள் கழன்று விழும் தன்மையில் இனிய மாயம் செய்து வலம்புரத்தை அடைந்து விளங்குபவராயினர்.

586. கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபாலியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெளித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெநது சிந்தை வெளவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நீலகண்டம் உடையவர், காலனை உதைத்து அழித்தவர்; மண்டையோட்டினை மாலையாகக் கொண்டவர்; தோலை உடையாகக் கொண்டவர்; திருவெண்ணீறு பூசியவராகி முனிவர் குழாம் புடைசூழ கையில் வீணை யேந்தியவராகிச் சிறிய புன்முறுவல் காட்டி, என் சிந்தையைக் கவர்ந்தவர்; என்பால் மாயச் சொற்களை உரையாற்றி மயங்குமாறு செய்தவர். அவர் வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவரானார்.

587. பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூசீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : பட்டினை உடுத்திப் பவளம்போல் மேவும் வண்ணத் திருமேனியில், சந்தனத்தைப் பூசித் திருப்பாதம் நோவத் திருநடனம் புரியும் சிவபெருமான் இங்கே எழுந்தருள, தேவரீர், எவ்வூரில் உள்ளவர் என்று வினவினேன். அவர் என் உயிரைக் கொள்ளை கொள்ளுமாறு ஆர்வமுடன் நோக்கி, வேறு பதிக்குச் செல்வார் போன்று உரை செய்து வலம்புரத்தில் புகுந்து ஆங்கே விளங்குபவர் ஆனார்.

588. பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று
பழனம் பதிபழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே

தெளிவுரை : சிவபெருமான், தனது ஊரானது, பாசூர் எனவும், பழனம் எனவும் சொல்லி நின்றார். அவர், நனிபள்ளியில் இன்று வைகி நாளைத் திருநள்ளாறு சேர்வேன் என்றார். அவர் ஒரு இடமாகச் செல்லாதவராய்த் தோள்களை வீசி ஆடும் சுந்தரராகித் திருவெண்ணீறு பூசி, வயல் சூழ்ந்து மேவும் வலம்புரம் புகுந்து வீற்றிருப்பவர் ஆவார்.

589. பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றான் றொவ்வா
என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைக் கையிற் பற்றி ஒளி திகழும் மழுப்படையேந்தியவராகிச் செல்லும் போது, ஒரு இடத்தில் பொருந்தித் தங்காது விளங்க, இவர் செய்கை யாவும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மையுடையதாயிற்று. அவர், திருவேடத்தின் பொலிவு காட்டி, வலம்புரத்தில் புகுந்து விளங்குபவர் ஆயினர்.

590. செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்கும்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : திருமால், இராமாவதாரத்தில் வில்லேந்தியவராகி வானரச் சேனையோடு சேதுபந்தனம் செய்து பொருது இராவணனை வெற்றி கொண்டார். அவ்வரக்கனின் முடிகள் நெரியுமாறு திருவிரலால் சிறிது ஊன்றி அடர்த்தவர், சிவபெருமான். அவ்வடிகள் இந்நாள், வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவர் ஆயினர்.

திருச்சிற்றம்பலம்

59. திருவெண்ணியூர் (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

591. தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணியமர்ந்த துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தொண்டு புரியும் அடியவர்களுக்கு நன்னெறியாகுபவர்; தூய திருவெண்ணீறு திகழும் மார்பினர்; அயனும் மாலும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் ஓங்கியவர்; கொன்றை மாலை தரித்தவர்; தேவர்கள் உய்யும் தன்மையில் நஞ்சினை உட்கொண்டு அருள் புரிந்தவர்; அசுரர்களின் கோட்டைகள் மூன்றினையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் சென்னியில் உறையும் விகிர்தர் ஆவார்.

592.நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்புப் போன்ற வண்ணம் கொண்ட திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; பூந்துருத்தியில் மேய புராணனார்; யானையின் தந்தம் போன்று வளைந்து மேவும் வெண்மையான சந்திரனைச் சூடியுள்ளவர்; வளைகுளம், திருமறைக்காடு ஆகிய தலங்களில் விளங்குபவர்; திருத்தொண்டர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தனார் ஆவார்.

593. கையுலாம் மூவியைவே லேந்தி னாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; கையில் நெருப்பேந்தி மயானத்தில் நடனம் புரிபவர்; நாகத்தை ஆட்டுபவர்; திருப்புன்கூரில் மேவியவர். திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

594. சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புரியதன்மேல் நாகங் கட்டி
யுண்பலிக்கென் றாரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் வைத்த சதுரர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு அதன்மேல் நாகத்தைக் கட்டியவர்; பலியேற்று ஊர் தோறும் திரிபவர்; மயிலாடுதுறையுள் மேவும் மணாளர்; இடபக் கொடியுடையவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

595. மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் அவற்றின் குணமாக விளங்குபவர்; பண்ணுடன் ஏத்தும் இசை விளங்கும் பருப்பதம் பாசூர் ஆகிய தலங்களில் மேவியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கையில் கபாலம் ஏந்தியவர்; தாருகவனத்து முனிவர்களின் இல்லந்தோறும் சென்று பலி கொள்பவர்; வெண்மையான சந்திரனைச் சூடியவர்; அப் பெருமான், வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

596. வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
குரகைழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்யடியவர்களுக்கு வீடுபேறு அருள்பவர்; நஞ்சுண்டு கருத்த கண்டம் உடையவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; நாகத்தை ஆட்டுபவர்; கல்லால மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தவர்; வேட்டுவத் திருக்கோலத்தில் சென்று அர்ச்சுனருக்கு அருள் செய்தவர். அப் பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

597. மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்த ராகி நாதஞ்
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தார் வீச வந்த
காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை சூடி விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகங்கொண்டு மான் ஏந்தியவர்; சிட்டர் வேடத்தராகிப் பலியேற்றுத் திரிபவர்; பாசக் கயிற்றை வீசிய காலனை மாய்த்தவர், வெண் குழையக் காதில் அணிந்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

598. செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் சந்திரனைச் சூடியவர்; திருஆலவாயில் உறையும் செல்வர்; உமைபாகர்; ஆறு அங்கமும் நான்கு வேதமும் ஆனவர்; நீண்ட சோலையும் மாடவீதியும் கொண்ட ஆரூரில் உறைபவர்; யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

599. வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவெண் சிந்தை யுள்ளே மன்னினாருங்
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வளரும் சந்திரனைச் சூடியவர்; நீலகண்டர்; என் சிந்தையுள் மேவுபவர்; திருக்கச்சியேகம்பத்தில் திகழ்பவர்; உள்ளத்தில் நிறையும் அமுதாகுபவர்; எல்லாத் திசைகளிலும் ஒளிர்பவர்; மழுப்படையுடையவர். அவர் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

600. பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தடனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை சூடியவர்; திருப்புகலூர், திருப்பூவணம் ஆகிய தலங்களில் மேவுபவர்; சூலம் ஏந்திச் செஞ்சடையில் கங்கை திகழ விளங்குபவர்; இராவணனுடைய தலைகளைத் திருவிரலால் ஊன்றி நெரித்தவர்; உமைபாகர். அப்பெருமான் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

60. திருக்கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவ மார மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ
டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்
கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்கும் முந்தியவர்; மூப்பில்லாதவர், அரையில் பாம்பைக் கட்டியவர்; எலும்பு மாலையை ஆரமாகக் கொண்டவர்; பணிந்தேத்தும் அன்பர்களுக்கு மலைத்தேன் போன்று இனிமையானவர்; இடர் தீர்ப்பவர். அப் பெருமான் கற்குடியில் மேவும் கற்பகமாக விளங்க நான் கண்ணாரக் கண்டேன்.

602. செய்யானை வெளியரைக் கரியான் தன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், செம்மேனியில் வெண்ணீறு பூசிய நீலகண்டர்; நான்முகனாகவும், எண் திசையாகவும் மேவும் அழகர்; நுண்மையும், சிறப்பும் கொண்டு அண்மையானவராகவும் சேய்மையானவராகவும் திகழ்பவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை விரும்புபவர்; மெய்ம்மையுடையவர், பொய்மையற்றவர், விடையும், சடையும், மானும் கொண்டு கற்குடியில் வீற்றிருப்பவர். விழுமிய கற்பகம் போன்ற அப்பரமனைக் கண்ணாரக் கண்டேன்.

603. மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றமைமா ருதத்தி ரண்டை
விண்ண தனிலொன்றை விரிகதிரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மண்ணில் திகழும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என ஐந்தாகவும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஓசை என நான்காகவும், நெருப்பில் ஒளி, ஊறு, ஓசை என மூன்றாகவும், காற்றில் ஊறு, ஓசை என இரண்டாகவும், ஆகாயத்தில் ஓசையாகவும் விளங்குபவர்; கதிரவன், தண்மதி, விண்மீன் என ஆகுபவர்; எண் எழுத்து ஏழிசையாகுபவர்; மன்மதனை எரித்தவர்; நெற்றிக் கண்ணுடையவர். அப் பெருமான் கற்குடியில் கற்பகமாய் விளங்கக் கண்ணாரக் கண்டேன்.

604. நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் தன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நற்றவமானவர்; நாகத்தை வில்லின் நாணாகக் கொண்டவர்; கபாலம் ஏந்திப் பலியேற்றவர்; மூப்பில்லாதவர்; நஞ்சுண்டு நீல கண்டர் ஆனவர்; பற்றற்றவர்; ஈசனைப் பற்றாது, பகை கொண்ட மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; தன்னைக் கதியாக அடைந்தவர்களின் பாவத்தைப் போக்குபவர். அப் பெருமான் கற்குடியில் விழுமிய பொருளாக விளங்குபவர். கற்பகம் போன்று திகழும் அவரைக் கண்ணாரக் கண்டேன்.

605. சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச்
சங்கரனைத் தழலுறுதான் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா கணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா ஐயங்களையும் தீர்ப்பவர்; உயிர்களுக்கு இன்பம் செய்பவர்; தழல் வடிவம் ஆனவர்; மழுப்படை யேந்தியவர்; எலும்பு மாலை அணிந்தவர்; திருமேனியில் உமா தேவியைக் கொண்டுள்ளவர்; திங்களும் பாம்பும் சடையில் திகழுமாறு செய்து கங்கையைத் தரித்தவர். அப்பெருமான் கற்குடியில் விழுமிய பொருளாக விளங்கிக் கற்பகமாய்த் திகழ அடியேன் கண்ணாரக் கண்டேன்.

606. பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும், பிறப்பும் இறப்பும் இல்லாதவராகவும் விளங்குபவர்; தேவர்க்கு மேலானவர்; வேதம் ஓதி விரிப்பவர்; பண்ணின் பயனாகுபவர்; உலகுயிர்க்குக் கண்ணாகுபவர். அப்பெருமான் விழுமிய பொருளாகக் கற்குடியில் மேவும் கற்பகமாய்த் திகழ நான் கண்ணாரக் கண்டேன்.

607. பண்டானைப் பரந்தைøனிக குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை
யொருவருந்தன் பெருமைதனை அறியவொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகிவீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தொன்மையாய் விளங்குபவர்; பரவி விளங்குபவர்; நுண்மையாய்த் திகழ்பவர்; பூவுலகமும் மேலுலகமும் ஆகியவர்; உலகமெல்லாம் காக்கும் தன்மையில் உண்டு உமிழ்ந்த திருமாலைத் தன் மேனியில் கூறுடையவர்; யாராலும் அறியப்படாத பெருமையுடையவர்; முப்புர அசுரர்புரங்களை எரித்தவர். அப் பெருமான், விழுமியராகக் கற்குடியில் மேவி விளங்கும் கற்பகமாகத் திகழ நான் கண்ணாரக் கண்டேன்.

608. வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களின் தலைவர்; அடியவர்களின் மனத்தில் உறைபவர்; குணங்கள் பலவாகியவர்; இடவாகனர்; குழலும் முழவமும் இயம்பக் கூத்தாட வல்லவர். அப் பெருமான், விழுமியவராய்க் கற்குடியில் மேவும் கற்பகமாய் விளங்க, நான் கண்ணாரக் கண்டேன்.

609. கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத்
தையலோர் பங்கினைத்த தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர், திருமாலைக் கூரிய அம்பு ஆக்கி முப்புரத்தை எரித்தவர்; மூவரைக் காத்தவர்; செம்மை திகழும் பொருளானவர்; தத்துவங்கள் ஆகுபவர்; உமை பாகர்; தன் கையில் மான் ஏந்தியவர். அப் பெருமான் கற்குடியில் மேவும் விழுமியவராகிக் கற்பகமாய்த் திகழ, நான் கண்ணாரக் கண்டேன்.

610. பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் தன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் உலகம் யாவும் ஆகுபவர்; திருப்புன்கூர், புறம்பயம், திருப்புகலூர், இடைமருது ஈங்கோய்மலை ஆகியவற்றில் விளங்குபவர்; நெருப்பேந்தி ஆடுபவர்; இராவணனின் தோளை நெரித்தவர்; அப் பெருமான் விழுமிய கற்குடியில் கற்பகமாய் விளங்கக் கண்டு நான் தரிசித்தேன்.

திருச்சிற்றம்பலம்

61. திருக்கன்றாப்பூர் (அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

611. மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேந்திக்
காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உமைபாகர்; வேத நாவர்; மதிசூடீ; தேவர்களுக்கெல்லாம் நாயகர்; மனம் உருகிப் போற்றி நாள்தோறும் பூவும் நீரும் கொண்டு ஏத்தும் அடியவர் நெஞ்சுள் உறைபவர். தேவரீரைக் கன்றாப்பூரில் காணலாமே.

612. விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செலகதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியா நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : காலை விடிந்ததும் எழுந்து நீராடித் தூய்மையுடன் திருவெண்ணீறு தரித்துச் சிவபெருமானே ! தேவரீர் வினை நோயைத் தீர்ப்பீராக ! நற்கதி அருள்வீராக என ஏத்தி, உமைபாகனே ! சுடலையில் நடனமாடும் ஈசனே ! சோதியே ! எனப் போற்றி வழிபடும் அடியவர்கள் உள்ளத்தில், கன்றாப்பூரில் மேவும் நடுதறி நாதரைக் காணலாம்.

613. எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைத்தங் குவந்த நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : நெற்றியில் திருவெண்ணீறு தரித்து விளங்கும் சீலர்களைக் கண்டதும் உகந்து அவர்க்கு அடிமை பூண்டு ஈசனின் அருள் திறத்தைப் போற்றி, அவ் அடியவர்க்குத் தொண்டு செய்யும் அன்பர்களின் நெஞ்சினுள், கன்றாப்பூரில் மேவும் நடுதறி நாதரைக் காணலாம்.

614. இலங்காலஞ் சொல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : தம்மிடம் பொருள் இல்லாது வறுமை உற்றனம் என்னும் எண்ணத்தைக் கொள்ளாது சிவனடியார் யாவர்க்கும் அடிமைபூண்டு, அமுது ஈந்து, தேவர்களைக் காத்தருள நஞ்சருந்திய ஈசனின் இணையடிக்கே சித்தம் வைத்தவராகி ஏத்தும் அடியவர்களின் நெஞ்சினுள் கன்றாப்பூர் நடுதறி நாதரைக் காணலாம்.

615. விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று பும்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், விருத்தர்; நீலகண்டர்; பிறைசூடும் ஒருவர்; உமைபாகர்; உலகநாதர்; நுந்தா ஒண்சுடர். தேவரீர், ஐம்புலன்களை அடக்கி மனம் கசிந்து போற்றும் அடியவர்களின் நெஞ்சுள் மேவுபவர். தேவரீரைக் கன்றாப்பூரில் காணலாம்.

616. பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : புழுப் பொதிந்த போர்வை எனப்படும் இப்புலால் உடம்பானது அழியக் கூடியது என்று எண்ணியும், காம மயக்கத்தின் வயப்படாதவராகிச் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை ஓதி மனம் கசிந்து உருகியும் மேவும் அடியவர்களின் நெஞ்சினுள், கன்றாப்பூரில் வீற்றிருக்கும் நடுதறியப்பரைக் காணலாம்.

617. ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதண்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : உடல்கெட்டுத் தொண்டையில் கோழை சேர்ந்து யாக்கையை விட்டு உயிர் பிரிந்து சென்று மயானத்தில் இடுவதன்முன், பிறை சூடும் பரமனுக்கு ஆளாகி, அன்பினால் அகம் குழைந்து மெய் சிலிர்க்கத் திருவடியை ஏத்தும் அடியவர்களின் நெஞ்சினுள்ளே, கன்றாப்பூரில் மேவும் நடுதறியப்பரைக் காணலாம்.

618. திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிக்க தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : ஐம்புலன்களால் ஈர்க்கப்படாது துன்பத்தை வென்று, சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச் சிந்தித்துத் துன்பத்தை நீக்கி, ஈசனைக் கதிரவனின் பல்லிறுத்த பரமனே ! பாவநாசனே ! பரஞ்சுடரே ! என்று நாள்தோறும் பரவியேத்தும் அடியவர்களின் நெஞ்சினுள்ளே, கன்றாப்பூரில் விளங்கும் நடுதறி நாதரைக் காணலாம்.

619. குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தீ யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை எரித்தவர்; கூற்றுவனை உதைத்தவர்; அர்ச்சுனர்க்குப் பாசுபதம் அருளிச் செய்தவர்; இராவணனுடைய தலைகளை விரலால் ஊன்றி நெரித்தவர்; பின்னர் அருள் கொடுத்தவர். அப் பரமனை நெஞ்சில் கொண்டு தொழும் அடியவர்கள்பால் கன்றாப்பூரில் வீற்றிருக்கும் நடுதறிநாதரைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

62. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

620. எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய் வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : ஈசனே ! இவ்வுலகில் தாயர், தந்தை, சுற்றத்தார், செல்வம் மற்றும் உள்ள அனைவரும் இருப்பினும் உயிரானது நீங்கினால், விறகில் தீமூட்டிச் செல்பவராவர். திருவேடம் பல கொண்டு திரு வானைக்காவில் மேவும் செல்வா ! என் அத்தனே ! தேவரீரின் பொற்பாதத்தை அடையப் பெற்றால் எனக்கு எத்தகைய துன்பமும் இல்லை. தாயர் தாயர் ஐவர். அவர் பாராட்டும்தாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் ஆவர். மற்றும், அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, தேவியை ஈன்றாள், தன்னை ஈன்றாள் எனவும் ஆவர்.

621. ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லவனுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் ஊனாகி உயிராகி அதனுள் மேவும் உணர்வாகி மற்றும் பிறவியாகிய யாவும் ஆகியவர்; நான் அறியாத தன்மையில் என்னுள் மேவி விளங்கி நல்லதும் தீயதும் காட்டுபவரானீர்; கொன்றை மாலை தரித்த ஈசனே ! திருநின்றியூரில் விளங்கும் நாதனே ! திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவனே ! ஞானமாகி மேவும் தேவரீருடைய பொற்பாதத்தைச் சரணாக அடையப்பெற்றால் உலகியல் துன்பமானது என்னை ஏதும் செய்யாது.

622. ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே யெழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : இவ்வுலகத்தில் மெய்த் தவத்தைப் பேணாது உண்டு வாழும் தன்மையுடையவர்களோடு ஒட்டி இருந்தும், திரிந்தும், காலத்தைக் கழித்த என்னைக் காத்து அருளிய சிவபெருமான், தன்னை உணருமாறு என்னைச் செய்தவர்; என்னை ஆட் கொண்டவர்; எழில் மிக்க ஆனைக்காவில் மேவியவர். அப் பரமனுடைய பொற் பாதத்தைச் சரணடைந்தால் துன்பம் ஏதும் இல்லை.

623. நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையாதுன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல் போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்.
அனைத்துலகும் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! பக்தியுடன் ஏத்தி வழிபடும் அன்பர்களின் நெஞ்சுள் விளங்கும் தேவரீர், சந்திரனைச் சடையில் சூடியவர்; பகைமை கொண்டு போர் செய்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; இடபவாகனம் உடையவர்; நீலகண்டர்; கயிலாய மலைக்கு உரியவர்; அனைத்துலகும் ஆகி, ஆனைக்காவில் வீற்றிருப்பவர். தேவரீரின் இன்னருள் விளக்கமானது மேவி இருக்க, உலகியல் துன்பம் ஏதும் இல்லை.

624. இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள்மேய
அம்மாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : நிலையற்றதாகிய மானிட வாழ்க்கை என்னும் துன்பக் கடலிடைச் சுழிப்பட்டு இளைத்து நலியாத வண்ணம் என் மனத்தில் புகுந்து கருணை புரியும் சிவபெருமானே ! தேவரீர் அடியேனை நினைத்து ஏத்தச் செய்தவர்; காண்பதற்கு அரியவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; வேத நாயகர்; ஆனைக்காவுள் விளங்குபவர். தேவரீருடைய பொற்பாதங்களை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

625. உரையாரும் புகழானே யொற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், புகழுக்கு உரியவர்; ஒற்றியூரில் விளங்குபவர்; திருக்கச்சி ஏகம்பம் மேவியவர்; காரோணத்தில் விளங்குபவர்; நறுமலர் தூவி வணங்குபவர்பால் மிகுந்த அன்புடையவர்; எலும்பும் நாகமும் ஆபரணமாகக் கொண்டவர்; புனிதமாகிய காவிரித் தீர்த்தம் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் தேன் போன்றவர். வானோர்களின் தலைவராகிய தேவரீருடைய பொற்பாதத்தை அடையப் பெற்றால், துன்பம் ஏதும் இல்லை.

626. மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தொன்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டட யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கரிய கண்டம் உடையவர்; மாதொரு பாகர்; மானும், மழுவும் அனலும் ஏந்தியவர்; காலனை அழித்தவர்; எலும்பு மாலை அணிந்தவர்; முன் வினையும் அதன் பயனும் ஆகியவர்; சிவந்த திருமேனி வண்ணம் உடையவர்; யாவர்க்கும் அரியவர்; தேவர் குலத்தின் காவலர்; திருவானைக்காவில் மேவிய அழகர். தேவரீருடைய பொற்பாதத்தை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

627. இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் சூலப்படையுடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; எல்லா இடங்களிலும் வியாபித்து மேவுபவர் என்று கும்பிட்டு யாவராலும் ஏத்தப்படுபவர்; மேரு மலையை வில்லாகக் கையில் ஏந்தி, முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; திருவானைக்காவுள் மேவி நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர். வினைப் பயனால் நேரும் தடை கண்டு தளர்ச்சி யடையாது தேவரீருடைய திருவடியை அடையப் பெற்றால் உலகியல் துன்பமானது, என்னை எதுவும் செய்யாது.

628. விண்ணரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர்; வேத நெறியாகுபவர்; நஞ்சுண்டு கரியதாகிய மிடற்றினர்; எண்ணற்ற புகழ் உடையவர்; பக்தியுடன் போற்றும் அடியவர்களின் உள்ளத்தில் விளங்குபவர்; அழகிய ஆனைக்காவுள் மேவியவர்; தேவரீருடைய பொன்னடிகளை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

629. கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப்
பருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், இடபத்தைக் கொடியாகக் கொண்டவர்; கூளிகள் பாடவும் பூதங்கள் உடன் ஆடத் தேவரீரும் ஆடுபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டவர்; மாகாளம், திருவானைக்கா ஆகிய தலங்களில் விளங்குபவர்; இராவணனுடைய தோளும் முடியும் நெரித்து அடர்த்தவர்; தேவரீருக்கு அடிமையாக இருக்கப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

63. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

630. முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
சார்தற் கரியானை தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை
யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை போர்த்தி விளங்குபவர்; மூப்படையாதவராய் மேவுபவர்; மனம் வாக்கு காயமாகவும் விளங்குபவர். ஆன்மாவில் மேவிப் பொருந்தியவர்; சார்ந்து மேவுதற்கு அரியவர்; என் அன்பிற்குரியவர்; என் ஈசன்; காவிரி சூழ்ந்த ஆழகிய ஆனைக்காவில் இனிது விளங்கும் தேனும் பாலுமாகியவர்; நீர்த் திரட்சியாகிய அப்பெருமானைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.

631. மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்
கருத்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அமுதமாகத் திகழ்பவர்; திருவைந்தெழுத்தோதி ஏத்தும் மனத்தினர்க்குப் பிறவி நோயைத் தீர்த்தருளும் மருந்தாகியவர்; சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; என் உள்ளத்தில் மகிழ்ந்து விளங்குபவர்; இறப்பும் பிறப்பும் இல்லாதவர்; தேவர்களின் தலைவர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படையை ஏந்தியவர்; ஊர்தோறும் திரிந்து பலியேற்றவர்; திருவானைக்காவுள் விளங்கும் செழுநீர்த்திரள் ஆகியவர். அப் பெருமானை ஏத்தி மகிழ்ந்தேன்.

632. முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் நல்கியவர்; பல்வகைப்பட்ட உயிர்களுக்கும் துணையானவர்; ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளை உலகத்தில் விளங்கச் செய்பவர்; யாவற்றையும் தன்பால் ஒடுங்குமாறு செய்பவர்; வணங்கி ஏத்தாத முப்புர அசுரர்புரங்கள் மூன்றினையும் எரித்தவர். திருவானைக்காவுள் மேவும் அப்பெருமானை ஏத்தி மகிழ்ந்தேன்.

633. காராருங் கறைமிடற்றெம் பெருமாøன் தன்னைக்
காதில்வெண் குழையானைக் கழம்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரனைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மேகம் போன்ற கரியமிடற்றை உடையவர்; காதில் வெண்குழை அணிந்தவர்; கொன்றை மாலை அணிந்தவர்; புலித்தோல் உடுத்தியவர்; யாவும் தானாகி விளங்குபவர்; ஞான வடிவாகியவர்; மணி மாலை தரித்தவர்; சடை முடியின் அலங்காரம் மிகுந்து விளங்குபவர்; நான்கு வேதங்களைத் தேராக உடையவர்; திருவானைக்காவுள் நீர்த் திரளாக விளங்குபவர்; அப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

634. பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்
கையானைக் கங்காள வேடத் தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரனைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்ப்பொருளானவர்; முப்புரங்களை எரித்தவர்; தவத்தினும் உயர்ந்தவர்; இடப வாகனர்; மான் ஏந்திய கையுடையவராகி எலும்பு மாலையும் மழுப்படையும் கொண்டவர்; நெருப்புப் போன்ற சிவந்த மேனியராகத் திருவானைக்காவில் விளங்குபவர். செழுமையான நீர்த் திரளாகிய அப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

635. கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்தலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மான் மழு ஆகியவற்றை ஏந்தியவர்; வயிரத் திரளாகவும் மாணிக்கக் குன்றாகவும் உறுதியாய் நிலைத்து ஒளிர்பவர்; எனக்கு உச்சியாய் உயர்ந்து விளங்குபவர்; சடையில் கங்கை தரித்து மயானத்தில் மேவியும், முப்புரம் எரிப்பதற்காகிய மேருவாகிய வில்லுக்கு அரவத்தை நாணாகக் கொண்டும் திகழ்பவர். திருவானைக்காவில் செழுமையான நீர்த் திரளாய் மேவும் அப் பெருமானை அடைந்து மகிழ்ந்தேன்.

636. ஆதியனை யெறிமணியி னோசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
கரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிமூர்த்தியாகவும், மணியின் ஓசையாகவும் விளங்குபவர்; தேவர்களால் அறியப்படாதவர்; வேதப் பொருளானவர்; கொன்றை மாலை அணிந்தவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவர்; பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்தவர்; திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர். அப்பெருமானை அடியேன் கண்டு மகிழ்ந்தேன்.

637. மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை
மறவாது கழல்நினைத்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், திருக்கச்சியேகம்பத்தில் மகிழ்ந்து விளங்குபவர்; அன்புடன் ஏத்தி வழிபடும் பக்தர்களுக்குப் பொன்னுலகத்தை அளிப்பவர். பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; மயானத்தில் நடம் புரிபவர்; விரும்பிப் பலியேற்பவர்; பவளத் திரள் போன்று மேவும் செம்மேனியர்; திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர்; என்னுள்ளத்துள் மேவும் அப்பெருமானை நான் கண்டு மகிழ்ந்தேன்.

638. நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவு தீப்பணிநோய் காப்பான் தன்னை
இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைக் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திருளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவராலும் விரும்பப்படுபவர்; நான்கு வேதங்களிலும் மேலானவர்; அடியவர்களுக்கு வறுமை, நோய் முதலான துன்பங்கள் அடையாதவாறு காப்பவர்; இசையாக விளங்குபவர்; எண்ணற்ற வண்ணங்கள் உடையவர்; திருவிடைமருதூர், ஈங்கோய்மலை ஆகிய தலங்களில் விளங்குபவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; கடல், பூவுலகம், விண்ணுலகம், நெருப்பு, நீர், காற்று, எட்டுத் திசைகள் என ஆகித் திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர். அப் பெருமானை நான் அடைந்து மகிழ்ந்தேன்.

639. பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
ஆண்மையெலாங் கொடுத்தவன்தன் இடரப்போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கியவர்; அயனும் மாலும் அறியாதவாறு செந்தழலாய் ஓங்கி உயர்ந்தவர்; தேவர்களின் தலைவர்; உண்மையான பலத்தை உணராது, மலையெடுத்த இராவணனைத் திருவிரலால் ஊன்றி அடர்த்தவர்; பின்னர் அருள் புரிந்தவர். திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக மேவும் அப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

64. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

640. கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உருத்திரனாகத் திகழ்பவர்; காலனை அழித்தவர்; உலகமாகவும் உலகில் திகழும் நீர், காற்று, நெருப்பு மற்றும் வானில் மேவும் இடியும் மின்னலும் ஆனவர்; பவளம் போன்ற செம்மேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; கங்கையைத் தரித்தவர்; எழிலும் பொழிலும் விளங்கும் கச்சியில் மேவிய ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் விளங்குபவராவர்.

641. பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலஆரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா இடங்களிலும் பரந்து விரிந்தவர்; எல்லா உயிர்களும் ஆனவர்; பணியும் அன்பர்களின் பாவத்தையும் வினையையும் போக்குபவர்; தூய மலர்களைத் தரித்தவர்; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தன்மைகளை அருளும் தலைவர்; உலகில் தோன்றும் பிறவி என்னும் சுமையை நீக்க உயிர்களுக்குப் பிறவாமையை அருள்பவர்; மலர் தூவி ஏத்தும் பக்தர்களின் உள்ளத்தில் நீங்காது இருப்பவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப் பெருமான் என் எண்ணத்தில் உள்ளவர் ஆவார்.

642. நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவாருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பெறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசி விளங்குபவர்; நீரும் நெருப்பும் ஆனவர்; மழு, உடுக்கை, நெருப்பு ஆகியவற்றைக் கையில் ஏந்தியுள்ளவர்; தோற்றம் கொண்டு விளங்கிக் காட்சி தருபவர்; அழிவில்லாதவர்; தனக்குத் துணை என்று யாரும் இன்றித் தாமே யாவற்றிலும் திகழும் ஆற்றல் உடையவர்; தொழுது ஏத்தும் அடியவர்களுக்குத் துணையாக மேவி அருள்பவர்; புகழின் மிக்கவர்; சடையில் பாம்பும், கங்கையும் கொண்டு விளங்குபவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் திகழும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

643. தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா என்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உலகின் தாயாகத் திகழ்பவர்; தனக்கு ஒப்புமை எதுவும் இல்லாத தனித் தன்மையுடையவர்; உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவர்; பிறவியாகிய நோயைத் தீர்ப்பவர்; தேவர்கள், அசுரர்கள் மற்றும் பூவுலகத்தவர் என யாவர்க்கும் சேய்மையுடையவர்; சித்தத்தில் உவந்து ஒருநிலைப்பட்ட மனத்தினராகித் திருவடியை நினைந்து ஏத்தும் அடியவர்களிடம் பொருந்தி விளங்குபவர்; எழிலும் பொழிலும் உள்ள கச்சியில் விளங்கும் ஏகம்பர். அப் பெருமான் என் உள்ளத்தில் மேவியவர் ஆவார்.

644. அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்களின் கோட்டைகளை அம்பால் எரித்து அழித்தவர்; திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; தன்னை ஏத்தாதவர்களுக்கு முன்னின்று தோன்றாதவர்; விழைந்து ஏத்தும் அடியவர்களுக்குப் பற்றாய் விளங்கி அருள் புரிபவர்; அரவத்தை இடையில் கட்டியவர்; சடையில் கங்கையை ஏற்றவர்; தூய்மை சான்ற முனிவர்களால் ஏத்தப்படுபவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப் பெருமான், என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

645. அசைத்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்அடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கிரியினுரி போர்த்தான் தான்காண்
கடலில்விடம் உண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பாடலை இசைத்து நடனம் புரிபவர்; அடியும் முடியும் தேடிய மால் அயன் ஆகியோர் காணாதவாறு, அழல் வண்ணமாக நெடிது ஓங்கி உயர்ந்தவர்; பேய்க் கணங்களால் பரவியேத்தப் படுபவர்; நினைந்து ஏத்தும் அடியவர்கள்பால் அன்பு உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் வழங்கி அருள் புரிந்தவர், எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். என் எண்ணத்தில் மேவி விளங்குபவர் ஆவார்.

646. முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கி உருமெனத்தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கூற்றுவனை அழித்தவர்; முப்புரங்களை எரித்தவர்; சடைமுடி அலங்காரம் கொண்டவர்; கொன்றை மலரும், பாம்பும் சடையில் திகழ அணிந்தவர்; சூலப் படையுடையவர்; மேகத்தில் முழங்கும் இடி, மின்னல், மழை என ஆகியவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் ஏகம்பர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

647. வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சகன்காண் அஞ்செழுத்துநினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடை யெட்டுடையான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை நினைந்து ஏத்தாதவர்கள் வருந்துவதற்குக் காரணமானவர்; திருவைந்தெழுத்தை நினைந்து ஏத்தும் அன்பர்களுக்கு அமுதம் போன்று இனிமை தந்து பிணி தீர்க்கும் மருந்தாகியவர்; வானுலகமும் மண்ணுலகமும் மற்றும் யாரும் ஆகி விரிந்தவர்; திசைக்கு ஒன்றாகப் பரந்து தலையைக் கபாலமாகக் கையில் ஏந்தியவர்; ஊர்தோறும் சென்று பலியேற்றவர்; எழிலும் பொழிலும் திகழும் திருக்கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

648. வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், புலித்தோலை உடுத்தியவர்; வேதத்தின் பொருளானவர்; பக்தி மேலிட்டுக் கசிந்து உருகியும் விம்மியும் அழுது ஏத்தும் அடியவர்களுக்குத் தன்னையே அளிப்பவர்; இடப வாகனத்தில் அமர்ந்து திரிபவர்; பூத கணங்களுடன் இயைந்து நடனம் புரிபவர்; மயானத்தில் விளங்குபவர்; அற்புதனாகவும் சொற்பதம் கடந்தும் நின்றவர்; எழிலும் பொழிலும் திகழும் திருக்கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

649. அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் தலையை அறுத்தவர்; நஞ்சினை உண்டவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; தேவ தேவர்; திசையனைத்தும் தொழுது ஏத்துமாறு மானைக் கரத்தில் ஏந்தியவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நெரித்தவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; அப்பெருமான், என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

65. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

650. உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத்தொருவன்காண் உணர்மெய்ஞ்ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; ஓங்காரத்தில் ஒளிர்பவர்; மெய்ஞானத்தை விரித்து ஓதியவர்; நான்கு வேதமானவர்; உயிர்களானவை வினைப் பயனையொட்டி உலகில் பிறவியைக் கொள்ளுமாறு செய்பவர்; நுண்மையாக விளங்கி யாங்கணும் நிறைந்தவர்; திரிபுரங்களை எரித்தவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், என் எண்ணத்தில் விளங்குபவர் ஆவார்.

651. நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பு கொண்டு நேசிப்பவர்களுக்கு நேசமானவர்; நேயம் அற்ற கீழ்த் தன்மையுடையவர்பால் அணுகாதவர்; நாணம் என்னும் தன் முனைப்பு ஆகிய உணர்வு அற்ற நெஞ்சினர் தம் உள்ளத்தில் விளங்கும் அன்பர்; அழகிய கொன்றை மலரைத் தரித்தவர்; உமை பாகர்; வானவர்கள் வணங்கி ஏத்தும் ஈசன்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

652. பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண்டரி கப்போதிதன்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண்
வார்சடைமா கணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உலகினைத் தாங்கும் தன்மையுடையவர்; புண்ணியனாகவும் பிரமன் மற்றும் திருமாலாகவும் விளங்குபவர்; சடையில் பாம்பும், சந்திரனும் விளங்கத் தரித்தவர்; பேய் ஆடும் இடுகாட்டில் மேவும் இறைவன்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் வீற்றிருக்கும் ஏகம்பன் ஆவார். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

653. பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தைசெய்யும்
பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்றம்ஊர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலமாகவும், ஆகாயமாகவும், கடலாகவும் மலைகளாகவும், இரவும் பகலும் நின்ற சீராகவும், எட்டுத் திசைகளாகவும், அடியவர்களின் சிந்தையில் திகழும் திருவைந்தெழுத்தாகவும் விளங்குபவர். ஆயிரக்கணக்கான நாமங்கள் உடைய பெரியோனாகவும், காணற்கு அரியவனாகவும், இடுப வாகனத்தில் அமர்ந்து விளங்குபவராகவும் திகழ்பவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் விளங்குபவர்.

654. பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூடிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அருச்சித்தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பெருந்தவத்தில் மேவும் பிஞ்ஞகர்; பிறைச் சந்திரனைச் சூடியுள்ளவர்; துன்பம் தரும் வினையாகிய பிணி தீர்க்கும் மருந்தாகியவர்; மந்திரங்கள் ஆனவர்; வானவர் போற்றும் மகாதேவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டவர்; தேவர்களால் அருச்சித்து ஏத்தப்படுபவர். எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் உள்ளவர்.

655. ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பாண்டுபல சருகால் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஆய்ந்தவர்; அரவம், எலும்பு, ஆமைஓடு ஆகியவற்றை ஆபரணமாகப் பூண்டவர்; மன்மதனை எரித்தவர்; பலகாலம் சிவலிங்கத் திருமேனியில் நூல் பந்தல் அமைத்து ஏத்திய சிலந்திக்கு அருள் புரிந்து கோச்செங்கட்சோழ மன்னராக்கி உலகாளச் செய்தவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

656. உமையவனை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் தான்காண்
இற்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்த் தான்காண்
சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய்
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகத்தில் பொருந்தியவர்; கங்கையைச் சடையில் திகழ வைத்துப் பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்திற்கு இரங்கிச் சிறிது ஒழுகி நிலத்தில் மேவுமாறு செய்தவர்; இமய மலையாகிய கயிலை மலையில் வீற்றிருக்கும் செல்வர்; ஏதும் அற்றவர்போல் பிட்சாடனராகத் தோற்றம் கொண்டு பலியேற்கச் சென்றவர்; ஆறு சமயங்களுக்கும் தலைவர்; தத்துவமாகத் திகழ்பவர்; உத்தமன் எனத் தானேயாகி விளங்குபவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

657. தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்
தூமலர்ச்சே வடியிணையெம் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலில் அமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தொண்டு செய்யும் தொண்டர்களுடைய துயர்களைத் தீர்ப்பவர்; தூய மலர் போன்ற ஒளி மேவும் திருவடியுடையவர்; விடத்தைக் கண்டத்தில் தேக்கியவர்; தேவர்களுக்கு அமுதத்தை அருளிச் செய்தவர்; கொன்றை மாலை தரித்தவர். சந்திரனும் நட்சத்திரங்களும் ஆகியவர். எட்டுத் திசைகளிலும் எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

658. முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் முதற் பொருளானவர்; மூவரில் முதன்மையானவர்; சூலப் படையுடையவர்; முருகப் பெருமானின் தந்தையானவர்; ஆனைமுகக் கடவுளின் தாதை; திருவடியை ஒருமித்து ஏத்தும் அன்பர்களின் உள்ளம் இனிக்க மேவும் சிவனாவார். பெருமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவர; எந்தையாவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர், என் எண்ணத்தில் மேவுபவர்.

659. பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண்
மின்னிசையும்வெள் ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
யெடுக்க அடி யடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இனினிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்று விளங்கும் சடைமுடியுடைய புனிதர்; பூத கணங்களின் தலைவர்; புலித்தோலை உடுத்தியவர்; அரவத்தை தன் வயத்தில் ஆட்டி வைப்பவர்; காதில் வெண்மையான குழையணிந்த சதுரர்; வெகுண்டு எழுந்து மலையெடுத்த இராவணனை அடர்த்தவர்; அவன் இசை கேட்டு வாளை ஈந்தவர். கச்சியில் மேவும் ஏகம்பநாதராகிய அப் பெருமான், என் எண்ணத்தில் உள்ளவர்.

திருச்சிற்றம்பலம்

66. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

660. தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவருக்கும் தாயாய் விளங்குபவர்; வானவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் தலைவர்; கயிலை மலையாக விளங்குபவர்; உலகமெல்லாம் ஆகியவர்; சேய்மையிலும் அண்மையிலும் திகழ்பவர்; வெம்மையுடைய அழலாகவும் தண்மையுடைய நிழலாகவும் விளங்குபவர்; யாராலும் அறிய வொண்ணாத தன்மையுடையவர்; திருமால், நான்முகன், வேத மந்திரம், தந்திரம், வேள்வி என மேவுபவர். அவர் திருநாகேச்சரத்தில் உள்ளவர். அப்பெருமானைச் சேராதார் நன்னெறியாகிய முத்திப்பேற்றை அடையாதவராவர்.

661. உரித்தானை மதவேழந் தன்னை மின்னா
ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெளித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; மின்னலைப் போன்று ஒளிரும் சடையுடையவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டவர்; பகை கொண்ட அசுரர்களின் கோட்டை மூன்றினையும் எரித்தவர்; தன்னை வழிபடும் அடியவர்களின் வினையும் பாவமும் நீங்குமாறு செய்பவர்; கல்லால மரத்தின் கீழ் இருந்து நால்வர்க்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தன்மைகளையும், வேதம் ஆகமம் என்பனவும் விரித்து உணர்த்தியவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் வீற்றிருப்பவர். அவரைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திப் பேற்றை அடையாதவரே.

662. காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே,

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியவர்; பக்தி இல்லாதவர் நெஞ்சில் மேவாதவர்; ஏத்தி வழிபடும் அடியவர்களின் மனத்தில் விளங்குபவர்; தனக்கு இணையாக யாரும் இல்லாத சிறப்புடையவர்; தேவர்களின் தலைவர்; உலகெலாம் நிறைந்தவர். புகழின் மிக்க திருநாகேச்சரத்துள் மேவும் அப் பெருமானை வணங்காதவர் முத்தியாகிய நன்னெறியை அடையாதவராவர்.

663. தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கும் அறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா உலகமும் தானாக ஆனவர்; யாவற்றுக்கும் தலைமையானவர்; யாராலும் ஊனக் கண்ணால் காணமுடியாத திருவடிவம் ஆனவர்; நிலையான அன்புடைய பக்தர்களுக்கு அன்பராக விளங்குபவர்; கயிலை மலையை உடையவர்; மேருமலையை வில்லாகவும் அரவத்தை நாணாகவும் கொண்டு, முப்புரங்களை எரித்தவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திப்பேற்றை அடையாதவராவர்.

664. மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப்பொடி கொள்பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்
பரந்தானைப் பவளாமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை விரும்பும் பக்தியுடையவர்களுக்கு மெய்யானவர்; அவ்வாறு மெய்யன்பு இல்லாதவர்களுக்குத் தோற்றம் பெறாதவர்; மயானத்தில் ஆடல் புரிபவர்; பொன் போன்ற சடைமுடியுடையவர்; திருநீற்றிப் பையையுடையவர்; நாகத்தை அடைத்துக் கட்டியவர்; எங்கும் நிறைந்தவர்; பவளக் குன்று போன்ற சிவந்த திருமேனியுடையவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் விளங்க, அவரைச் சாராதவர் நன்னெறியாகிய முத்தி நெறியைச் சாராதவர் ஆவார்.

665. துறந்தானை அறம்புரியாத துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலத்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவிலவல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான் அறநெறியில் மேவாதவர்களைப் பற்றாதவர்; தோத்திரங்களால் ஏத்தப்படும் பெருமையுடையவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிற்பன, நடப்பன என யாவும் ஆனவர்; ஏத்தாதவர்களைக் கருதாதவர்; திருவைந்தெழுத்தை ஓதி வழிபடும் அடியவர்களுக்கு எல்லாக் காலங்களிலும் சிறப்புடன் மேவி அருள் புரிபவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவராகாதவர்.

666. மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமாக உள்ளவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; தேவர்களின் தலைவர்; என் பிறவித் துயரைத் தீர்க்கும் இனிய அமுதமானவர்; பெருமையுடைய திருவேகம்பத்தில் உறைபவர்; யாரும் அறியாதவாறு என்னுள்ளத்தில் வீற்றிருந்து விளங்குபவர்; திருநாகேச்சுரத்தில் மேவும் அப் பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவர் ஆகாதவரே.

667. எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன்றினால்
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை இமைநேரத்தில் எரித்தவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; பிறப்பில்லாதவர்; அறவழியில் மேவாத பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்தவர்; திருக்கூத்து புரிபவர்; வேற்றாரோடு குறியில்லாது இருந்த என்னை அடியவனாகச் செய்தவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவர் ஆகாதவரே.

668. அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், அன்புடையவர்; பால் போன்ற சுவையுடையவர்; பயிரின் வாட்டம் தீர்க்கும் மழை போன்றவர்; பிரமனும் திருமாலும் காணாத சுடர் ஆனவர்; குற்றமற்ற தொண்டு புரியும் அன்பர்களுக்கு எளியவர்; யாவர்க்கும் அரியவர்; இனிய கரும்பின் சுவை போன்றவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திக்குச் சேராதாரே.

669. சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புனிதன் தன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அங்ச
அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், உலகேழும் ஏத்தும் புகழுடையவர்; மன்மதனை எரித்தவர்; சடையில் சந்திரனைச் சூடிய புனிதர்; மலை எடுத்த இராவணனை விரலால் அடர்த்தவர்; தன்னை அடைந்தவரின் பாவத்தைத் தீர்ப்பவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவராகாதவரே.

திருச்சிற்றம்பலம்

67. திருக்கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

670. ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான் தனக்கு ஆட்பட்ட அடியவர்களுக்கு அன்பனாக விளங்குபவர்; பசுவின் பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; நான் அபயமாகச் சார்ந்த திருவடியுடையவர்; தனக்க நிகராக யாரும் இல்லாதவர்; சந்தனம், குங்குமம், சாந்து ஆகிய நறுமணக் கலவைகளைத் தோளில் பூசி விளங்குபவர்; துளையிடப்படாத முத்து போன்ற வெண்மையும் உயர்வும் உடையவர்; தூய வெண்ணிறமான கோவணத்தை அரையில் கட்டியுள்ளவர்; கேடிலியப்பர் என்னும் திருநாமத்துடன் கீழ்வேளூரின் தலைவராக வீற்றிருந்து ஆள்பவர்; அப் பெருமானை நாடுபவர்கள். இப் பிறவியில் எத்தகைய கெடுதியும் இல்லாதவராகி இம்மையில் இனிய வாழ்க்கையும் மறுமையில் முத்திப் பேறும் வாய்க்கப் பெறுபவர்களாய்ப் பெருமை கொள்வார்கள்.

671. சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம்போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சொல்லின் பொருள் தெரிந்து பாடும் அன்பர்களின் மனத்தில் எழும் அஞ்ஞானத்தை நீக்கும் சிவபெருமான், அடியவனை நன்னெறியாகிய சைவநெறியில் ஒழுகச் செய்தவர்; பலவகைப்பட்ட தோத்திரப் பாடல்களைப் பாடியும் மனம் கசிந்து உருகியும், பணிந்தும் விளங்கும் அடியவர்களின் குறைகளைப் போக்குபவர். தீய வினைகளைத் தீர்ப்பவர். அப்பெருமான், கீழ்வேளூரில் வீற்றிருக்கும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அவரை வணங்குபவர்கள் தீமைகளை யாவும் தீரப் பெற்றவர்கள் ஆவார்கள்.

672. அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் கட்டியவர்; ஏத்தும் அடியவர்களுக்கு அன்பர்; மெய்ஞ்ஞானப் பொருளானவர்; யாவும் அறிந்தவர்; மனமாரப் பக்தியுடன் மேவும் அடியவர்களுக்கு முன்னின்று அருள் புரிபவர்; அல்லாதவர்களின் நெஞ்சில் புகாதவர்; தெவிட்டாது இனிமை தருபவர்; என் மனத்துள் படியும் மாசினைக் களைபவர். அப்பெருமான் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அவரை அடைபவர்கள் எல்லாத் துன்பமும் நீங்கப் பெற்றவராவர்.

673. தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக்
கெடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் தலையைக் கொய்தவர்; எலும்பு மாலை பூண்டவர்; சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி என்னும் கிரகங்களைக் கொண்ட கிழமைகள் ஆனவர்; வினையேனாகிய என்னை நரகக் குழியில் மேவாது மீட்டவர்; யாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவர்; வேதப் பொருளாகியவர்; வீணையை இசைத்து மீட்டுபவர். அவர் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பெருமானை ஏத்தி வணங்க, எல்லாத் துன்பமும் நீங்கப்பெறும். மாவிரதம் ஆறு சமயங்களில் ஒன்று. இச்சமயத் திருக்கோலத்தை உணர்த்திற்று.

674. நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் தன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் நல்லவர்; வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; வேதங்களையும் அதன் அங்கங்களையும் கடந்து விளங்குபவர்; முச்சுடராகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவர்; தொண்டர்களுக்கு அண்மையில் மேவி அருள் புரிபவர்; வில்லேந்தியவர்; உமைபாகர்; மெய்யன்பு இல்லாதவர்கள்பால் நாடாதவர். அவர் கீழ்வேளூரில் மேவும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப்பெருமானை ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

675. கழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியின் மேல் கங்கை, வன்னி, கொன்றை, தூய ஊமத்தம், அரவம் என யாவும் தரித்தவர்; முப்புரங்களை அழித்தவர்; நஞ்சுண்டவர்; மன்மதனை எரித்தவர்; உமைபாகர்; யானையை உரித்தவர்; அவர் கீழ்வேளூரில் மேவும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பரமனை ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

676. உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், உள்ளத்தில் ஒளிரும் ஒளியானவர்; ஓங்காரப் பொருளானவர்; சூரியன், சந்திரன் அக்கினி என முச்சுடரும், விண்ணுலகமும், மண்ணுலகமும், ஆகாயமும் ஆகியவர்; வளரும் ஒளியாகவும் மரகத ஒளியின் வடிவாகவும், வானவர்கள் ஏத்தும் பேரொளியாகவும் விளங்குபவர். அவர் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப்பெருமானை ஏத்தி வணங்குபவர்கள் எத்தகைய துன்பமும் இல்லாதவராவர்.

677. தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சும் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், காலனைக் காலால் உதைத்து அழித்து மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்தவர்; புலித்தோல் உடுத்தியவர்; எலும்பும் பாம்பும் ஆபரணமாகப் பூண்டவர்; ஏத்தி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்குபவர்; நஞ்சினை மிடற்றுள் தேக்கியவர்; தேவர்கள் எல்லாரும் சேரத் தக்கன் புரிந்த வேள்வியை அழித்தவர். அவர், கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பரமனைத் தொழுது ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

678. மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதெனப் னுள்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோட்டு மாலை தரித்தவர்; மயானத்தில் கூத்தாடுபவர்; எலும்பும் அரவமும் ஆபரணமாகப் பூண்டவர்; என்னுள்ளத்துள் விளங்குபவர்; என்னை ஆட்கொண்டு, சிந்தையில் திகழ்பவர்; ஐயப்பாடு இல்லாதவர்; தேவர்களின் ஐயத்தையும் அச்சத்தையும் போக்கியவர். அவர் கீழ்வேளூரின் தலைவராக மேவும் கேடிலியப்பர் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழுபவர்களின் துன்பம் யாவும் தீரும்.

679. முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், மலையெடுத்த இராவணனின் தலைகளை நெரித்துப் பின்னர் அவனுடைய இசைக்கு இரங்கி அருள் புரிந்தவர்; என்னுடைய நெஞ்சுள் திருவடிமலரைப் பதித்தவர்; மூன்று புரங்களை எரித்தவர்; பொய்மை பேசும் வஞ்சகர்களைத் தண்டிப்பவர்; அவர் கீழ் வேளூரின் பெருமானை ஏத்தி வணங்குபவர்களின் துன்பம் யாவும் கெடும்.

திருச்சிற்றம்பலம்

68. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

680. கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவணனை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவரின் கண்ணில் திகழும் கருமணியாய் விளங்குபவர்; பொன்மலை போன்றவர்; ஏத்தும் அன்புடையவர்களுக்கு எளிமையானவர்; குருவாக விளங்கி ஞானத்தைப் பொழிபவர்; நாகத்தை ஆட்டுபவர்; புலித்தோலை உடுத்தியவர் கோவண ஆடை கொண்டவர்; அரிய மணி போன்று ஒளிர்பவர்; அமுதம் போன்று இனிமையும் நன்மையும் தருபவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசனையாகக் கொள்பவர்; நான் அபயம் அடைந்த செல்வர். திருமுதுகுன்றத்தில் மேவும் அப் பெருமானை அடியேன் அறியாது திகைத்திருந்தேனே.

681. காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டம் உடையவர்; காபாலியானவர்; மழுப்படையுடையவர்; பூவுலகமும் விண்ணுலகமும், பாதாள உலகமும் ஆனவர்; வெண்மையான சந்திரனைச் சூடியவர்; உமை பாகர்; பக்தர்களின் வினையைத் தீர்ப்பவர்; திருமுதுகுன்றத்தில் மேவியவர். அப் பெருமானைத் தீவினையேன் அறியாது திகைத்திருந்தேனே.

682. எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செழும்பவளக் கொழுந்தொப்பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் தொழப்படுபவர்; இடப வாகனத்தை உடையவர்; என்னைப் பக்தியுடன் பணிந்து பாமாலை சூடுமாறு பயில் வித்தவர்; முத்தும் நவமணியும் ஆனவர்; மாணிக்கமாகவும் பவளக் கொழுந்தாகவும் திருமுதுகுன்றத்தில் விளங்குபவர். அப்பெருமானைத் தீவினையேன் அறியாது திகைத்திருந்தேனே.

683. ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கருவினுள் மேவும் சோதியானவர்; பக்தர்களின் மனத்தில் உறையும் உத்தமர்; அருச்சுனனுக்காக வில்லேந்திக் கானகத்தில் வேடுவனாக வந்தவர்; கரிய கண்டம் உடையவர்; நெருப்பும் காற்றும் ஆனவர்; தெரிந்து ஆட்கொண்டு திருவடியை என் தலையின் மேல் சூட்டியவர்; இனிய கரும்பு போன்றவர்; திருமுதுகுன்றத்தில் திகழ்பவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

684. தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்; நான்முகனும், நெருப்பு, காற்று, நீர் ஆகாயம் மற்றும் எல்லா உலகமும் ஆனவர்; எலும்பும் முத்தும் ஆபரணமாகக் கொண்டவர்; ஆறு சமயங்களாகித் தொண்டர்களுக்கு அருள் செய்பவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

685. புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
கடைதோறு யிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை எரித்த புனிதர்; பொன்னார் திருமேனியுடைய புராணர்; விழாக்களின் ஒலியும் விண்ணில் மேவும் இடியொலியும் ஆனவர்; திருவெண்காட்டில் மேவிய விகிர்தர்; வீரக் கழல் ஒலிக்க, வாயில்தோறும் பிச்சையேற்கத் திரிபவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப்பெருமானை அறியா திகைத்திருந்தேனே.

686. போர்த்தானை யின்னுரிதோல் பொங்க பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் தன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினையே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியவர்; புலித் தோலை உடுத்தியவர்; ஐம்புலன்களின் உணர்வினைத் தீய்த்தவர். முப்புரங்களை எரித்தவர்; காலனை அழித்தவர்; பக்தர்களின் கொடிய வினைகளைத் தீர்ப்பவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

687. துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணிளோ டாணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறவானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இயல்பினால் ஊன் இன்றி ஞான ஒளி வடிவாக விளங்குபவர்; மழு முதல் ஆனவர்; பிறப்பின் தன்மையின்றி எல்லா உயிரும் தானேயாகியவர்; பெண்ணும் ஆணுமாக விளங்குபவர்; பக்தியுடன் ஏத்தும் தொண்டர்தம் உள்ளத்தி எப்போதும் விளங்குபவர்; திருமுது குன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

688. பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தில் மலையான் தன்னைக்
கருதாதார் புரமூன்றும் எரியம் அம்பால்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலம் ஏந்தியவர்; பொற்றூண் போன்று விளங்குபவர்; புவலோகத்தில் விளங்குபவர்; இளம்பிறை சூடியவர்; முழு முதலாகவும் உறுதியுள்ள கற்றூண் போன்றும் விளங்குபவர்; திருக்காளத்தியில் உறைபவர்; முப்புரங்களை எரித்தவர்; திருமுது குன்றத்தை உடையவர். அப் பெருமானை அடியேன் அறியாது திகைத்திருந்தேனே.

689. இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
யெழுநரம்பி னிசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இராவணனுடைய தோள்களை நெரியுமாறு ஊன்றியவர்; அவனுடைய இசைக்கு இரங்கி அருள் புரிந்தவர்; பூந்துருத்தியில் மேவியவர்; தேவர்களின் நிதியாகத் திகழும் புண்ணியர், உமையைத் திருமேனியில் பாகம் கொண்டு மகிழ்ந்தவர்; சந்திரனைச் சடையில் வைத்தவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சங்கர நாராயணர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத் திருந்தேனே.

திருச்சிற்றம்பலம்

69. திருப்பள்ளியின் முக்கூடல் (அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

690. ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இனிய அமுதானவர்; அயனும் மாலும் அறியாத ஆதிமூர்த்தி; கொன்றை மாலை தரித்த சடையுடையவர்; தனக்கு இணையாகச் சொல்லப்படும் தன்மையில் யாரும் இல்லாதவர்; உயிர்களுக்கு நன்மை செய்பவர்; நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், ஏழு கடல்கள் என யாவும் சூழ்ந்த நிலமாகியவர்; பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர் அப் பெருமானை ஏத்தாது பாழாய் உழன்றேனே.

691. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைக்
பயிலாதே பாயேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனர், தேவர்களால் ஏத்தப்படுபவர்; வேத நாயகர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரிய கண்டத்தையுடையவர்; தத்துவம் ஆனவர்; தனக்கு நிகர் இல்லாத ஒப்பற்றவர்; முப்புரங்களை எரித்தவர்; சூலப்படையுடையவர்; பள்ளியின் முக்கூடலில் வீற்றிருப்பவர். அப் பரமனை இதுநாள் வரை ஏத்தாது பாழாய் உழன்றேனே.

692. பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப்
புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்றுடன் விளங்குபவர்; பொன்மலை போன்றவர்; சடையில் கங்கையைக் கரந்த புனிதர்; வேத நாயகர்; திருவெண்காட்டில் மேவியவர்; இடபத்தில் வீற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; திருவாதிரை நாளுக்கு உரியவர்; மைம்மேவு கண்ணியைப் பாகமாகக் கொண்டு பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர். அப்பெருமான ஏத்தாது பாழானேனே.

693. போர்த்தானை ஆனையின்தோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்வச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; முப்புரங்களை எரித்தவர்; உமைபாகர்; நஞ்சினை உண்டு தேவர்களின் அச்சத்தைத் தீர்த்தவர்; மன்மதனை எரித்தவர்; பள்ளியின் முக்கூடலில் உள்ளவர்; அப் பெருமானை ஏத்தாது காலத்தைப் போக்கி உழன்றேனே.

694. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்வா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைச் சரணடைந்தவர்களைப் பாவங்கள், துயரங்கள், நோய்கள், புலன்கட்படாது மறைந்து நின்று உயிரைப் பற்றித் துன்புறுத்தும் வினைகள், வறுமை என எதுவும் சாராது காத்தருள்பவர்; மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; சலந்தராசூரனைச் சக்கரப் படைகொண்டு அழித்தவர்; தன்னொப்பிலாத் தனித் தன்மையுடையவர்; தத்துவமாய் விளங்குபவர்; உத்தமர்; நினைவோரின் உள்ளத்தில் படிந்து வாசம் புரிபவர்; பள்ளியின் முக்கூடல் நாதர். அப் பரமனை ஏத்தாது உழன்றனனே.

695. கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் கரந்தவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; தேவர்களின் தலைவர்; தன்னடியை ஏத்தும் பக்தர்கள் வருந்தாதவாறு காத்தருள்பவர்; மண்ணுலகமாகவும் விண்ணுலகமாகவும் கடலாகவும் ஆகாயமாகவும் முற்றும் எல்லாமாகவும் பரந்தவர்; பள்ளியின் முக்கூடல் நாதர். அப் பெருமானை ஏத்திப் போற்றுமாறு உழன்றனனே.

696. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் தோழனை நீடு ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை மேவும் சடையுடையவர்; நல்லூரிலும் நள்ளாற்றிலும் மேவியவர்; திருநல்லம், திருவாய்மூர், திருமறைக்காடு, திருஆக்கூர், திருநீடூர், திருநெய்த்தானம், திருவாரூர், ஆகிய பதிகளில் விளங்குபவர்; குபேரனின் தோழர்; பள்ளியின் முக்கூடலில் மேவியவர்; அப்பெருமானை ஏத்தி வணங்காது உழன்றனனே.

697. நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்
குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நற்றவம் ஆனவர்; நான்கு மறைகளானவர்; யாவர்க்கும் நல்லவர்; முப்புரங்களை எரித்தவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; திருவாரூர் திருமூலட்டானத்தில் மேவியவர்; நாகத்தை ஆபரணமாக பூண்டவர்; தனது திருவடியை ஏத்தும் அடியவர்களைப் பற்றி நின்று அருள் புரிபவர்; பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர். அப்பெருமானை ஏத்தி வணங்காது வீணே உழன்றனனே.

698. ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஊனாகவும், உடலாகவும், உயிராகவும், ஏழுலகும் ஆனவராகவும் தேவர் தலைவராகவும் விளங்குபவர்; சந்திரனைச் சூடியவர்; வளவி என்னும் தலத்தில் விளங்குபவர்; அருச்சுனனைக் கொல்ல வந்த பன்றியின் பின், உமாதேவியுடன் வேடுவக் கோலத்தில் காட்டில் சென்றவர்; கயிலை மலைக்கு உரியவர்; கசிந்துருகி ஏத்தும் அடியவர் தம் நெஞ்சில் இருந்து, பால் போன்று இனிமை தருபவர்; பள்ளியின் முக்கூடலில் மேவியவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது உழன்றனனே.

699. தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் போரோடுங் கூர்வாள் தன்னைக்
குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனுடைய இருபது தோளும் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர்; அவனுடைய இசைப்பாடலைக் கேட்டு உகந்து அருள் செய்தவர்; கூற்றுவனை உதைத்தவர்; பள்ளியின் முக்கூடலில் மேவி விளங்குபவர். அப் பெருமானை ஏத்தி வணங்காது வீணே உழன்றனனே.

திருச்சிற்றம்பலம்

70. பொது - ÷க்ஷத்திரக்கோவை

திருச்சிற்றம்பலம்

700. தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தேங்கூர்
கொல்லிக் குளிரறைப்பள்ளி கோவல்
வீரட்டங் கோகரமங் கோடி காவும்
முல்லைப் பறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : தில்லைச் சிற்றம்பலம், செம்பொன் பள்ளி, திருந்துதேவன்குடி, திருச்சிராப்பள்ளி, திருக்கோவலூர் வீரட்டம், கோகரணம், திருக்கோடிக்கா, திருமுருகன்பூண்டி, முழையூர், பழையாறை, திருச்சத்தி முற்றம், திருக்காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாயத்தில் மேவும் சிவபெருமானைக் காணலாம்.

701. ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டானமுங்
கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவாரூர் மூலட்டானம், திருவானைக்கா, ஆக்கூர்த் தான்தோன்றி மாடம், ஆவூர்ப் பசுபதீச்சரம், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், திருக்குறுக்கை வீரட்டானம், கோட்டூர், குடமூக்கு (கும்பகோணம்), கோழம்பம், திருக்கழுக்குன்றம், கானப்பேர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

702. இடைமரு தீங்கோ யிராமேச் சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக்களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவிடைமருதூர், திருஈங்கோய் மலை, இராமேச்சரம், இன்னம்பர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, திருப்பாண்டிக் கொடுமுடி, திருக்குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கேட்டுக்காடு, கடைமுடி, திருக்கானூர், கடம்பந்துறை ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

703. எச்சி லிளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தம்டுறை யழுந்தூர் ஆறை
கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : எச்சிலிளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், திருவாவடுதுறை, திருஅழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, திருக்கச்சூர் ஆலக்கோயில், கரவீரம், திருக்காட்டுப்பள்ளி, கச்சியில் உள்ள (அனைத்துத்)திருக்கோயில்கள், திருவேகம்பம் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

704. கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரு மேம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : கொடுங்கோளூர், திருஅஞ்சைக்களம், கொடிமாடச் செங்குன்றூர்; கொங்கணம், குன்றியூர், திருக்குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், திருநெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏமகூடம் கடம்பூர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

705. மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணைகளர் காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : பழமண்ணிப் படிக்கரை, திருவாழ்கொளிபுத்தூர், திருவக்கரை, மந்தரமலை, வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், திருவேட்களம், அருட்டுறை (திருவெண்ணை நல்லூர்க்கோயிலின் பெயர்), பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, காறை, திருக்கழப்பாலை ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

706. வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதிகுடி விசய மங்கை வியலூர்
ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா
மலையாலங் காடும் அரதைப்பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவீழிமிழலை, திருவெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, திருவியலூர், அகத்தியான்பள்ளி, திருவண்ணாமலை, திருவாலங்காடு, அரதைப் பெரும்பாழி, திருப்பனந்தாள், திருப்பழனம், பாதாளேச்சரம், திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, பனங்காட்டூர், சீகாழி, நாகைக்காரோணம் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

707. உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : உஞ்சேனை மாகாளம், திருஊறல் (தக்கோலம்), திருவோத்தூர், உருத்திரகோடி, திருமறைக்காடு, பொதியின்மலை, தஞ்சை வழுவூர் வீரட்டம், மாதானம், திருக்கேதாரம், திருவெஞ்சமாக்கூடல், மீயச்சூர், திருவைகாவூர், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

708. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், திருச்சேறை, திருக்கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, திருவதிகை வீரட்டானம், திருவையாறு, அசோகந்தி, திருஆமாத்தூர், திருக்கண்டியூர் வீரட்டம், திருக்கருகாவூர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

709. நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருநறையூர்ச் சித்தீச்சரம், திருநள்ளாறு, திருநாரையூர், திருநாகேச்சரம், திருநல்லூர், துறையூர், திருச்சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், திருத்துருத்தி, சோமேச்சரம், உறையூர் (மூக்கீச்சரம்) திருவொற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், திருஏடகம், கறையூர், கருப்பறியலூர், கன்றாப்பூர் ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

710. புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தானத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : புலிவலம், திருப்புத்தூர், திருப்புகலூர், திருப்புன்கூர், திருப்புறம்பயம், திருப்பூவணம், பொய்கைநல்லூர், திருவலிவலம், திருமாற்பேறு, திருவாய்மூர், வைகல் மாடக்கோயில், திருவலஞ்சுழி, திருவாஞ்சியம், திருமருகல், திருநெய்த்தானம் மற்றும் எல்லாத் தானங்களும், பெருங்கோயில்களும் பல கால் விரலால் ஊன்றி அடர்த்த கயிலாயநாதனைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

71. பொது - அடைவுத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

711. பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புரந்தழியச் சலந்தரனைப் பிளந்தான பொறசக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

தெளிவுரை : சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர்; சலந்தராசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர். அவர் சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கொல்லியறைப்பள்ளி, மயில்கள் சாரும் சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, நனிபள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி என மேவும் தலங்களில் இனிதாக வீற்றிருந்து அருள் பாலிப்பவர்.

712. காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே.

தெளிவுரை : காவிரிக் கரையில் மேவும் திருக்கண்டியூர் வீரட்டானம், திருக்கடவூர் வீரட்டானம், திருவதிகை வீரட்டானம், திருவழுவை வீரட்டானம், திருப்பறியலூர் வீரட்டானம், திருக்கோவலூர் வீரட்டானம், திருக்குறுக்கை வீரட்டானம், திருவிற்குடி வீரட்டம் என் அட்ட வீரட்டத் தலங்களைக் கூட நாவினால் உரைக்கும் அன்பர்களைச் சிவபெருமானுடைய தமர்கள் என்று எண்ணி நமன் தமர்கள் விலகிச் செல்வார்கள்.

713. நற்கொடிமேல் விடையுயர்ந்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான்குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங்குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட் டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.

தெளிவுரை : இடபக்கொடியுடைய சிவபெருமான், செம்பங்குடி, நல்லக்குடி, நாட்டியத்தான்குடி, திருக்கற்குடி, தென்களக்குடி, திருச்செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, திருவிற்குடி, வேள்விக்குடி, வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என மேவும் திருத்தலங்களில் விளங்குபவர். அவரை ஏத்திப் போற்ற இடர் யாவும் விலகிப் போகும்.

714. பிறையூருஞ் சடைமுடியெம் பெருமான னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஒத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே.

தெளிவுரை : பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்து மேவும் சிவபெருமான், திருவாரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நாறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர்மயானம், சேற்றூர், திருநாரையூர், உறையூர் (மூக்கீச்சரம்), திருஓத்தூர், ஊற்றத்தூர், அனப்பூர், ஓமாம்புலியூர், திருஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னும் தலங்களில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்த இடர்கள் யாவும் விலகும்.

715. பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கேரில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் விளங்கும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டு. கரக்கோயில் ஞாழக் கோயில் கொகுடிக் கோயில், வேதியர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில், ஆலக்கோயில் என மேவும் திருக்கோயில்களில் சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பரமன் உறையும் கோயில்களைச் சூழ்ந்து வணங்கிப் போற்றி தீவினைகள் யாவும் தீரும்.

716. மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.

தெளிவுரை : மலைமகளை உடனாகக் கொண்ட சிவபெருமான், திருமறைக்காடு, பொழில் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, திருச்சாய்க்காடு, கொள்ளிக்காடு, பலர் பாடிப் போற்றும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, திருவெண்காடு என மேவி விளங்குபவர். ஆங்குச் சென்றணைந்து ஏத்த வினையானது விலகிச் செல்லும்.

717. கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுத லோன்நண்ணுமிடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

தெளிவுரை : சமணர்தம் பிடியிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்ட சிவபெருமான் நண்ணும் இடமாவது, அண்ணல்வாயில், நெடுவாயில், நெய்தல்வாயில், திருமுல்லைவாயில், ஞாழல் வாயில், தென் மதுரை ஆலவாயில், திருப்புனவாயில், குடவாயில், குணவாயில் என்பன. ஆங்குச் சென்றடைந்து ஏத்த தீயவினைகள் யாவும் விலகிச் செல்லும்.

718. நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
கரநாகேச் சுரநாக ளேச்சுரநன் காண
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆட்கேச் சுரமகத்தீச் சுரமய னீச்சர
மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.

தெளிவுரை : சிவபெருமான் வீற்றிருப்பது, நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், கொண்டீச்சுரும், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் என ஏத்தி ஈச்சுரம் பலவும் இயம்புவோமாக. இது ஈசன் மேவும் தலங்களை ஈச்சுரம் என ஏத்தும் சிறப்புத் தோன்ற ஓதப் பெறுவதாயிற்று.

719. கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.

தெளிவுரை : கந்தமாதனம், கயிலைமலை, திருக்கேதாரம், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், அண்ணாமலை, திருப்பருப்பதம், மகேந்திரம், இந்திர நீலபருப்பதம், ஏமகூடம், விந்தமாமலை, பொதியன்மலை, மேருஉதயம், சுத்தம் என மேவும் மலைகள் சந்திரனைச் சடை முடியில் தரித்து மேவும் சிவபெருமான் விளங்கும் இடமாகும். அவற்றை ஏத்தி இடரை நீக்குவோமாக.

720. நள்ளாறும் பறையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம்களங்கா எனஅனைத்துங் கூறுவோமே.

தெளிவுரை : திருநள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்லிடைக்குளம், திருக்குளம், திருவஞ்சைக்களம், நெடுங்களம், திருவேட்களம், நெல்லிக்கா, திருக்கோலக்கா, திருவானைக்கா, திருக்கோடிக்கா ஆகியவாறு சிவபெருமான் மேவிய ஆறு, குளம், களம், கா என அனைத்தும் கூறி ஏத்துவோமாக.

721. கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய சிரங்கள் நெரியுமாறு கால் விரலால் அடர்த்த சிவபெருமான் மேவும் திருப்பராய்த்துறை, தென்பாலைத்துறை, தவத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடு துறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, திருவாவடுதுறை, மற்றும் உள்ள துணையணைத்தும் வணங்குவோமாக. இத் திருப்பதிகமானது, பள்ளி, வீரட்டம், குடி, ஊர், கோயில், காடு, வாயில், ஈச்சரம், மலை, ஆறு, குளம், களம், கா, துறை என வரும் தலங்கள் பலவற்றை ஏத்தி ஓதப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

72. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

722. அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்
டிலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்த ஈசன் உமாதேவியார் காணும் தன்மையில் நடனம் புரிபவர். அப்பெருமான், நின்றியூரும் நெடுங்களமும் மேவி இடப வாகனத்தில் ஏறிச் சூலப்படையேந்தி விளங்குபவர். அவர், தேவர்களும் உமாதேவியாரும் ஏத்த வலஞ்சுழியில் மேவியவர் ஆவார். உமாதேவியார் ஈசனை வழிபட்ட திருத்தலச் சிறப்பானது இவண் ஓதப் பெற்றது. இத் திருப்பதிகத்தில் இத்திருப்பாட்டு ஒன்று மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏனையவை கிடைத்தில.

திருச்சிற்றம்பலம்

73. திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும்

(அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர் மாவட்டம்)
(அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

723. கருமணிபோற் கண்டத் தழகந் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான் நீலமணி போன்ற கண்டத்தை உடைய அழகர்; கல்லால நிழலின் கீழ் இருந்தவர்; நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர்; பவளக் குன்று போன்றவர்; காவிரி விளங்கும் வலஞ்சுழியில் மேவுபவர்; மகாதேவராக விளங்கி வரம் தருபவர். அவர், அழகிய கொட்டையூரில் விளங்கும் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

724. கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தியவர்; கற்கும் பெற்றியுடையவர்களுக்கு ஞானமாய் விளங்குபவர்; கங்கையைச் சடையில் ஏற்றவர்; தலையோட்டைக் கையில் கொண்டவர்; காவிரியின் வளம் பெருக்கும் வலஞ்சுழியில் மேவியவர். அவர் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் கோமான் ஆவார்.

725. செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : செந்தாமரை மாலையணிந்த சிவபெருமான், தேவர்தம் தலைவராவர்; உமைபாகர்; பசுவில் பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; காவிரியின் கரையில் விளங்கும் வலஞ்சுழியில் மேவும் மணாளர் ஆவார். அப் பெருமான் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

726. பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவிரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான் திருநீறு, அணிந்த திருமேனியுடைய புனிதர்; திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; எண் திசைக்கும் ஒளிவிளக்கானவர். அப்பெருமான், காவிரி நீர் பாயும் வலஞ்சுழியில் விளங்குபவர். அவர் கொட்டையூரில் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

727. அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலநதரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பும் அரவமும் ஆபரணமாக உடையவர்; வேதமும் அங்கமும் ஆனவர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவர்; சதாசிவ மூர்த்தியானவர்; சலந்தராசூரனை அழித்தவர். அப்பெருமான் காவிரிக் கரையில் மேவும் வலஞ்சுழியில் மழுப்படையுடையவராய் விளங்குபவர். அவர், கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் உறையும் தலைவர் ஆவார்.

728. சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனல் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், சண்டேசரைத் தேவர்கள் எல்லாம் தொழுமாறு செய்தவர்; சதாசிவ மூர்த்தியாக தொழுது ஏத்தப் பேரொளியாய் நின்றவர். அப்பெருமான் பொன்னி வளம் பெருக்கும் வலஞ் சுழியில் மேவும் மாமருந்தாக விளங்குபவர். அவர், கொட்டையூரில் மேவும் கோடீச்சரத்தில் உறையும் கோமான் ஆவார்.

729.அணவரியான் கண்டாய் அமலன் கண்டா
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குடைமுடைநல் லடியார்வாழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், காண்பதற்கு அரிய நிமலர்; அவிநாசியில் மேவியவர்; நாகாபரணம் கொண்டவர்; பண்டரங்கக் கூத்தாடுபவர்; பகவானாக விளங்கும் அப் பெருமான், வலஞ்சுழியில் மேவுபவர். அவர், மாலுக்கும் அயனுக்கும் வரம் நல்குபவராகக் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் மேவும் கோமான் ஆவார்.

730. வரைகமழும் மலர்க்கொன்றை தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவரமரும் பொழில்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மாலை தரித்தவர்; வேதங்களால் தொழப் படுபவர்; அரையில் தோலாடை உடுத்தியவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; அப்பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், வஞ்சகர்களுக்கு அரியவராகிப் பொழில் சூழ்ந்த கொட்டையூரில் விளங்கும் கோடீச்சரத்தில் உறையும் கோமான் ஆவார்.

731. தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன்மகன் அசைவுத விர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தாமரையாகிய தானத்தில் விளங்குபவர்; இராமபிரான், இராவணனைக் கொன்ற பழி தீரும் தன்மையில் பூசித்து ஏத்த அருள் வழங்கியவர்; சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடியவர்; அறுபத்தி நான்கு கலைகள் ஆனவர். அப்பெருமான் காவிரி நீர் பாயும் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், முனிவர்கள் தொழுது ஏத்தும் திருப்பாதம் உடையவராகிக் கொட்டையூரில் மேவும் கோடீச்சரத்தில் விளங்கும் தலைவர் ஆவார்.

732. விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலி வல்லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; இராவணனுடைய உடலை அடர்த்தவர்; நான்முகனும் திருமாலும் தேட, அழற் பிழம்பாய் நீண்டு உயர்ந்தவர். அப்பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், மாதேவராக மறையும் அங்கமும் ஓதி வாழும் வேதியர்கள் வாழும் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் உறையும் தலைவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

74. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

733. சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், சொல்லாகவும் அதன் பொருளாகவும் வேத கீதமாகவும் உள்ளவர்; சுடராழியை நெடிய திருமாலுக்கு வழங்கியவர்; இரவாகவும் பகலாகவும் விளங்குபவர்; பிறரால் காணற்கு அரியவர்; அடியவர்களுக்கு எளிமையானவர்; மூன்று கோட்டைகளையும் எரித்த வில்லையுடையவர்; அருச்சுனருக்குப் பாசுபதம் என்னும் தொய்வப் படையை வழங்கியவர்; சூரியன் முதலானவரும் மாமுனிவர்களும் விரும்பி யேத்தும் நற்றன்மையுடையவர்; கையில் நெருப்பேந்தி ஆடும் நம்பர். அவரை நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

734. பஞ்சுண்ட மெல்லடியான் பங்கன் தன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர் போய்நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் உமாதேவியைத் திருமேனியில் தரித்துள்ளவர்; நிலர், நீர், நெருப்பு, காற்று என ஆனவர்; மேகம் திகழும் ஆகாயம் ஆனவர்; வானத்தில் மேவும் சந்திரனாகியவர்; சந்திரனைத் தன் சடைமுடியின் மேல் வைத்தவர்; என் நெஞ்சில் புகுந்து அதில் தோன்றும் நினைவுகளாகி நிற்பவர்; நெடுங்கடலைக் கடைந்தபோது நஞ்சானது வெளிப்பட, அதனைக் கண்டு எல்லாரும் அஞ்சி ஓடத் தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் தந்தவர். அப் பெருமானை, நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

735. மூவாதியாவர்க்கும் மூத்தான் தன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னை
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானைக் நாவினில்நல் லுரையா னானை
நாரையூர் நன்னகரிற் கண்டான் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருளுக்கும் முன்னர் விளங்குபவராயினும் மூப்பின் தன்மை அடையாதவர்; எக்காலத்திலும் முடிவுற்ற ஒண்பொருளாக விளங்கி, யாவற்றுக்கும் முதல் நடுவு அந்தம் என ஆகியவர்; எல்லாத் தேவர்களுக்கும் இறைவன் ஆகியவர்; பிரமனின் ஐந்த சிரங்களில் ஒன்றைக் கொய்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; அடியேன் நினைக்கும்தோறும் உள்ளத்தில் மேவி விளங்குபவர்; என் நாவாகவும் நாவில் மலரும் நல்லுரையாகவும் விளங்குபவர். அப் பெருமானை நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

736. செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், செம்பொன்னாகவும், பவளமாகவும், முத்தாகவும், மாணிக்கமாகவும் விளங்குபவர்; தொழுது ஏத்தும் அன்பர்களின் சித்தத்தில் விளங்குபவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; மதில்களில் திருப்பாங்குடைய கச்சியில் விளங்கும் திருவேகம்பர்; கயிலாய மலைக்கு உரியவர். கழுகு, காகுத்தன் (இரமாமபிரான்) ஆகியோரால் ஏத்தி வழிபடப் பெற்றவர்; எனக்குப் பெருமானாகியவர்; யாவர்க்கும் நாதன் ஆகியவர். அப்பெருமான் திருநாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

737. புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைந்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர் சடை முடியின் மேல் கங்கையைத் தரித்த புனிதர்; மணம் கமழும் எருக்கம் பூவைத் தரித்தவர்; சிவந்த திருமேனியில் வெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; மலைமகளாகிய பார்வதி தேவி தவம் செய்து பெற்ற மணாளர், பிறவியில் பிணிக்கப் பெற்று உறுகின்ற நோயைப் பரித்தெடுத்து முத்திப் பேற்றை அருளிச் செய்யும் கொடியாக உடையவர்; யாவர்க்கும் நாதனாகியவர். அவர் நாரையூர் என்னும் நன்னகரில் வீற்றிருக்க கண்டேன்.

738. பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரை னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறவியின் தன்மை யின்றியும் இறப்பின் வழிபட்டதாகும் தனது ஆற்றலின் இயல்பால் பெருகி ஓங்குபவர்; பேய்கள் பாட, நடனம் புரியும் பித்தவர்; மறவாத சிந்தையுடைய அன்பர்களிடம் பொருந்திச் சிறப்புடன் விளங்குபவர்; ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தில் உறவாகி நன்மை புரிந்தும் தீவினைகளுக்குப் பகையாகி, அவற்றை விலக்கியும் விளங்குபவர்; எல்லா உயிரும் ஆனவர்; எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் ஆகி எழுகின்ற ஓசை யாகவும் திகழ்பவர்; தேன் மணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் சூடியுள்ளவர். அப் பெருமானைத் திருநாரையூரில் நான் கண்டேன்.

739. தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோ பானைமுகற் கப்பன் தன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் புரிந்த வேள்வியை அழித்தவர்; கபாலம் ஏந்தி பலியேற்ற தலைவர்; கொக்கரை, சச்சரி, வீணை ஆகியவற்றை உடையவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; உருத்திராக்கமும் எலும்பும் அணிந்தவர்; ஆறுமுகனையும் ஆனைமுகனையும் புதல்வர்களாகப் பெற்றவர்; நக்கராக விளங்குபவர்; திருவக்கரை, திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ளவர். அவர், நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

740. அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்ட கத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், அரியும் பிரமனும் ஏத்த அன்புடையவராய் விளங்குபவர்; காலனை மாய்த்த காலனாக விளங்குபவர்; அளப்பதற்கு அரிய தீப்பிழம்பாக ஓங்கி இலிங்கமாகவும் அதன் சிறப்பாகவும் திகழ்பவர்; எண்ணத்தில் மேவியும் பண்ணின் ஓசையாகவும் ஆனவர்; முப்புரங்களை எரித்தபோது, ஆங்குப் பத்தியுடன் அர நாமத்தை ஓதிய மூன்று அசுரர்களாகிய விரத்தன், பரமயோகன், குணபரன் ஆகியோரை காத்தவர்; தன்னை வழிபட்ட சிலந்திக்கு அருள் செய்து மறு பிறவியில் கோச்செங்கட்சோழனாக்கியவர்; இடுகாட்டில் நடனம் புரிபவர். அப்பெருமான் நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

741. ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், ஆலகால விடத்தை மிடற்றில் தேக்கி அணியெனக் கொண்டவர்; ஆல் நிழலில் மேவி அறம் உரைத்தவர்; அன்பர்களின் உள்ளத்தில் பாலும், தேனும், பழமும், கரும்பின் சாறும், அருந்தும் சுவையும் ஆகியவர்; மேன்மையான வேள்வியும் அதன் பயனும் ஆகியவர்; நான்கு வேதங்களுக்கும் நாயகன் ஆனவர்; அப் பெருமான், நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

742. மீளாத ஆளென்னை உடையான் தன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மீளவும் தீய நெறியின்பால் ஈர்த்துச் செல்லவொட்டாது அடிமை பூண்டு ஒழுகுமாறு என்னை ஆளாகக் கொண்டு அருள் புரிந்தவர்; தூய மனத்தோடு வழிபட்ட மார்க்கண்டேயருக்கு உயிர் தந்து, கூற்றுவனை அழித்தவர்; தோள் வலிமையால் கயிலையை எடுத்த இராவணனுடைய தோளை நெரித்து, அழித்தவர்; அவன் ஏத்தி வணங்க வாளும் வாழ்நாளும் அருளியவர். அப் பெருமான், நாரையூர் என்னும் நன்னகரில் வீற்றிருக்கக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

75. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

743. சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச்சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிகுண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தொங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சொற்களின் வளமை மேவும் நான்கு வேதங்களாகவும், அங்கம் ஆறாகவும் ஆனவர்; சொல்லின் பொருளைக் கடந்து சுடர் விடும் சோதியாகியவர்; கயிலையில் வீற்றிருப்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கருத்த கண்டம் உடையவர். பெருமை மிக்க மாணிக்க மலை போன்ற தோள் உடையவர்; உமா தேவியின் மணாளர்; சூலப் படையுடையவர்; அப் பெருமான் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

744. கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தொங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அர்ச்சுனருக்காகச் காட்டில் வேட்டுவத் திருக்கோலம் தாங்கிப் போர் புரிந்தவர்; இடபத்தில் ஏறிச் சென்று பலியேற்பவர். அப்பெருமான் பொழில் திகழும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

745. நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு தரித்த திருவடிவம் தாங்கியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; சந்திரனும், பாம்பும், கங்கையும் விளங்கும் சடையுடையவர்; பொன் போன்று ஒளிரும் தோள் உடையவர்; அடியவர்களுக்கு, விரும்பிக் காட்சி நல்குபவர்; இடபக் கொடி ஏந்தியவர்; ஏழுலகமும் தொழுது ஏத்துமாறு விளங்குபவர்; உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர். அப் பெருமான், குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

746. தக்கனத பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழநி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்தவர்; சந்திரனைத் தரித்தவர்; செம்பவளம், சூரியன், நெருப்பு, மின்னல், எனச் சொல்லும் தன்மையில் சிவந்த திருமேனியுடையவர். அப் பெருமான், மறையவர் வேதம் ஓதி வேள்வி புரிய அப்புகை மேகமாக விளங்கிப் பொழிய, கழனிகள் விளங்கும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

747. கால்வலி தொலைத்தகழற் காலம் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்பால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நிலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், காலனை உதைத்தவர்; மன்மதனை எரித்தவர்; ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அறம் உரைத்தவர்; ஆண், பெண், அலி எனவாகவும் அலை அற்றவராகவும் ஆனவர்; நீலம், வயிரம், பச்சை, செம்பொன், பளிங்கு என அறிவதற்கு அரிய வண்ணம் உடையவர். அப்பெருமான் அழகிய மணிகள் திகழும் காவிரியின் நீர் வளம் மிக்க குடத்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தர் ஆவார்.

748. முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முறைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக்கடிச் செம்பொன் மலைபோலிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் சந்திரனைச் சூடியவர்; மூன்று கண்களையுடையவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிந்தவர்; உமை பாகர்; பொன் மலை போன்று விளங்குபவர். அப் பெருமான் என் மனத்தில் மேவியவராகிக் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் விளங்கும் கூத்தனார் ஆவார்.

749. காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமல்த்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளிவத் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : மேகம் போன்ற வண்ணம் உடைய திருமாலும், தாமரையில் மேவும் நான்முகனும் காணாதவாறு நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், முப்புரம் எரித்தவர்; நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வேதம் எனப் பரவி விளங்குபவர். குமரக் கடவுளின் தாதை அவர் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

750. பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருப்புகலூர், திருப்புறம்பயம், திருப்பூந்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்களில் விளங்குபவர்; திருமாலுக்குச் சக்கரப்படையருளியவர்; திருவானைக்காவில் சிலந்திக்கு அருள் செய்து கோச்செங்கட் சோழ நாயனாராக மிளிரச் செய்தவர். அப் பெருமான் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

751. பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கரவக் கடல்முகடு தட்ட விட்டுச்
சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அணிந்தவர்; புலித்தோலை உடுத்தியவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பு உடையவர்; களியோடு அரிய நடனம் புரிந்த வெற்றி கொண்டவர்; சிவபூசையைத் தடுத்த தந்தையின் காலைத் துணித்த சண்டேசருக்கு அருள் புரிந்த புராணர்; அவருக்குச் சடையில் திகழும் கொன்றை மாலையைச் சூட்டி அருள் புரிந்தவர். அப் பெருமான் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

752. ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்÷õ
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் காணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வினையின் வலிமையால் ஆட்பட்டு நலிவுற்ற என் பிறவியை அறுத்து அருட்குணத்தால் ஆட்கொண்டவர். அப் பெருமான், காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி முதலான தீர்த்த மகிமையுடைய குடந்தையில் விளங்கும் கீழ்க் கோட்டத்தில் மேவும் தலைவர் ஆவார். இத் திருப்பாட்டில் குடந்தையில் திகழும் மகாமகக் குளத்தின் சிறப்பானது ஏத்தப் பெற்றது.

753. செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இனினிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைககீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவலோகத்தில் திகழும் அமுதம் போன்ற உமாதேவியாரைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான், இராவணனை மலையின் கீழ் அடக்க, அவன் இசைக்கு உகந்து அருள் புரிந்தவர். அப்பெருமான், குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

76. திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

754. புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்
தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண்டோன் காண்
தீர்த்தன்காண் திருமாலோர் பாகத்தான் காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் தொழுது ஏத்தப் படுபவர்; இடப வாகனர்; உலகம் ஏழும் ஆகியவர்; எல்லா உயிரும் ஆனவர்; கொன்றை மாலை சூடியவர்; வேதம் ஓதும் பிரமனின் தலையைக் கொய்தவர்; திருமாலைப் பாகம் கொண்டு மேவுபவர்; அப் பெருமான் திருப்புத்தூரில் வீற்றிருக்கும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

755. வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; வேதங்கள் நான்கும் ஆனவர்; மண்ணுலகமும் விண்ணுலகமும், நெருப்பும், காற்றும், நீரும், மலையும் ஆனவர்; நஞ்சுண்டு கருத்த கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களையுடையவர்; கயிலை மலையில் விளங்குபவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையுள் மேவியவர் ஆவார்.

756. மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தொன்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மின்னல் போன்ற இடையுடைய உமா தேவியின்பால் பெரிதும் விருப்பம் உடையவர்; மேருவை வில்லாகக் கொண்டவர்; தமிழ்ச் சங்கத்தில் புலவராகச் சென்று வாதிட்டுத் தருமி என்னும் அந்தணருக்குப் பொற்கிழி அளித்தவர்; பொன் போன்ற கொன்றை மலரும், காந்தள் மலரும் திகழும் சோலை சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

757. தேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்நீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் பணிந்து ஏத்தும் சிவபெருமான், கொன்றை மலர், வன்னி, ஊமத்தம் ஆகியவற்றைச் செஞ்சடையில் வைத்தவர்; முத்துக்களை ஈனும் மறைக்காட்டில் விளங்கும் மாணிக்கமணியானவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையுள் விளங்குபவர்.

758. கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றாடிகாண்
தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியானைகாண்
திருமருவு பொழில் புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறவி கொள்ளும் வல்வினையை நீக்கியவர்; திருக்கச்சியில் மேவும் ஏகம்பர்; பெரும்பற்றப்புலியூரில் திருக்கூத்து மேவி பிணி தீர்ப்பவர்; குபேரனின் தோழனாகத் திருவாரூரில் விளங்கும் களிறு போன்றவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

759. காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியார் காணத் திருநடனம் புரிபவர்; பாம்பைக் கையில் பற்றி ஆட்டிக் கபாலம் ஏந்திப் பலியேற்பவர்; பவளக் குன்று போன்ற வடிவத்தையுடையவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; அரவத்தை இடையில் கட்டியவர்; வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

760. வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடையான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கொன்றை மலர், சந்திரன், வன்னி ஆகியவற்றைச் சடையில் சூடிய சிவபெருமான், எலும்பும் நாகமும் ஆபரணமாகப் பூண்டவர்; புலித்தோலை உடுத்தியவர்; நுண்பொருளாய் விளங்குபவர்; ஆயிரம் திருநாமங்களையுடையவர்; பொழில் சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்துளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

761. புக்கடைந்த வேதியற்காக் கலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள வளையாளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதற்காகக் காலனை மாய்த்த புண்ணியர்; யானையின் தோலை உரித்தவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரும்பும் புன்னையும் விளங்கும் திருவாரூரில் மேவியவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

762. பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
பராபரன்காண் தக்கன்றந் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், அனைவர்க்கும் பற்றும் துணையுமாக விளங்குபவர்; வானோர்க்கும் மற்றும் அனைவருக்கும் தலைவர்; தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; அஞ்ஞானத்தையும் சினத்தையும் அகற்றி ஞானம் மிகுந்து தோன்ற விளங்கும் பெற்றியுடையவர்; திருக்கழுக்குன்றத்தில் மேவியவர்; மன்மதனை எரித்தவர்; சீர் மருவும் திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

763. உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட
வோராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரம்மதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், வலிமையுடைய சலந்தராசூரனின் உடலைப் பிளந்த சக்கரப் படையைத் தோற்றுவித்தவர்; தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சூரியனின் பற்களை உகுத்தவர்; இந்திரனின் தோளை நெரித்தவர்; நாகத்தை ஆபரணமாகவும் மாலையாகவும் கொண்டு விளங்குபவர்; இராவணனுடைய தலையை நெரித்தவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர்.

திருச்சிற்றம்பலம்

77. திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

764. பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கைஅனல் கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : திருவாய்மூர் அடிகளை நான் கண்டபோது, அடியவர்கள் எல்லாரும் ஏத்தி அப்பரமனை வணங்கக் கண்டேன்; பக்தர் கணங்களைக் கண்டேன்; பூதப்படைகளைக் கண்டேன்; திருநடனம் புரிய முழவமானது அதிரக்கண்டேன்; அழகிய கையில் நெருப்பைக் கண்டேன்; அரவும் கங்கையும் சடையில் விளங்கக் கண்டேன்; கொக்கின் இறகும் கொன்றை மலரும் கண்டேன்; கபாலத்தைக் கையில் கண்டேன்.

765. பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, பாலின் மொழியாள் பாகத்தில் மேவக் கண்டேன்; பதினெட்டு கணங்களைக் கண்டேன்; நீல வண்ணம் உடைய கண்டம் கண்டேன்; நெற்றி விழி கண்டேன்; இடபம் கண்டேன்; இளம் சந்திரனைக் கண்டேன்; திருமுடியில் கரந்தை விளங்கக் கண்டேன்; கொன்றை மாலை கண்டேன். பதினெண்கணங்களாவன : 1. தேவர், 2. அசுரர், 3. முனிவர், 4. கின்னரர், 5. கிம்புருடம், 6. கருடர், 7. இயக்கர், 8. இராக்கதர், 9. கந்தருவர், 10. சித்தர், 11. சாரணர், 12. வித்தியாதரர், 13. நாகர், 14. பூதர், 15. வேதாளகணம், 16. தாராகணம், 17. ஆகாசவாசிகள், 18. போகபூமியோர்.

766. மண்ணைத் திகழ நடம தாடும்
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்
வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, மண்ணுலகம் திகழ நடனம் புரிகின்ற சிலம்பு ஒலிக்கும் திருப்பாதம் கண்டேன்; விண்ணில் திகழும் முடி கண்டேன்; பலவாகிய திருவேடங்கள் கண்டேன்; மழுப்படை கண்டேன்; நான்கு மறையும் அங்கமும் ஓதக் கண்டேன், வண்ணம் திகழ்ந்து பொலியும் அழகு கண்டேன்.

767. விளைத்த பெரும்பத்தி கூர நின்று
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, மெய்யடியார்கள் பக்தியுடன் விரும்பி ஏத்தக் கண்டேன்; இளமையான நாகத்தைத் திருமேனியில் கண்டேன்; எலும்பாபரணம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திருமார்பில் திருநீறு கண்டேன்; மூன்று மதில்களையும் எரித்து அழித்த வில்லைக் கையில் கண்டேன்.

768. கான்றையும் போதகத்தி னுரிவை கண்டேன்
காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண்
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறிதங் கையில் மருவக் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, யானையின் தோலைப் போர்த்து விளங்கக் கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கசிந்து உருகும் உணர்வு கண்டேன்; அயனும் மாலும் நண்ணி வரக் கண்டேன்; மான் கன்று கையில் விளங்கக் கண்டேன்.

769. அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே யீந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, திருவடியில் சிலம்பு ஒலிக்கக் கண்டேன்; அடியவர்களுக்குக் கருணை புரியக் கண்டேன்; சடைமுடியில் விளங்கும் அரவத்தால் சந்திரன் போய் மறையக் கண்டேன்; இடபக்கொடி கண்டேன்; கோவண ஆடை விளங்கக் கண்டேன்; கையில் வடித்தெடுத்த சூலம் கண்டேன்.

770. குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது குழையும் தோடும் காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கண்டேன்; மார்பில் முப்புரி நூல் கண்டேன்; ஏழிசை இயம்பும் யாழும் வீணையும் ஒலிக்கக் கண்டேன்; தழைத்த சடை கண்டேன்; தக்கை தாளம் என் இவற்றைக் கண்டேன்; கரிய மிடறு கண்டேன்.

771. பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, உலகத்தின் மாந்தர்களுக்குப் புதுமையானதாக உள்ள செய்கைகள் அழகுடன் மிளிரக் கண்டேன்; தேவர்கள் போற்றி நின்று ஏத்தக் கண்டேன்; பரிந்து ஏத்தும் அன்பர்களுக்கு உரிய பரிசினை வழங்கக் கண்டேன்; விருந்தாய் மேவும் தன்மை கண்டேன்; உமாதேவியும் விநாயகரும் தோன்றக் கண்டேன்.

772. மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரணெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
அன்றவன்றன் வேள்வி யழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது; மெய்யன்பர்களுக்கு அருள் நல்குதலைக் கண்டேன்; வேடுவத் திருக்கோலத்தில் இருந்த காட்சியைக் கண்டேன்; கையில் உள்ள அம்பானது கோட்டை மதில்களை எரித்த காட்சியைக் கண்டேன்; கையில் கங்கணமும் நெருப்பும் விளங்கக் கண்டேன்; ஐயம் ஏற்றுப் பல ஊர் திரியக் கண்டேன்; தக்கனின் வேள்வியானது அழிக்கப் பெற்றதைக் கண்டேன்.

773. கலங்க இருவர்க் கழலாய் நீண்ட
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, பிரமனும் திருமாலும் காணாதவாறு அழலுருவாய் நீண்டு உயர்ந்த காரணம் கண்டேன்; கருவாய் விளங்கி உயிர்களுக்குப் பிறப்புக்களை அளிக்கும் பண்பு கண்டேன். பாடல் ஒளியெலாம் கூடி விளங்கக் கண்டேன்; இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அருள் புரிந்த பெருமை கண்டேன். வலக்கையில் அனல்போல் ஒளிரும் மழுப்படையும் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

78. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

774. ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உலகம் யாவிலும் வியாபித்துத் தானேயாய் மேவி ஒப்பற்ற தன்மையாய் விளங்குபவர்; ஊழிக் காலத்திலும் நிலைத்து உயர்ந்து மேவுபவர்; எல்லா இடத்தும் நிலைப்பவர்; ஐம்பூதங்களாகிய நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குபவர்; உலகத்தில் உள்ள அனைத்தையும் கொன்றழிக்கும் ஆற்றலுடைய கூற்றுவனை உதைத்து அழித்தவர். அழகிய பழையனூரில் வீற்றிருப்பவர்; திருத் தலங்களில் பக்தர்கள் நீராடி மகிழும் தீர்த்தமாக விளங்குபவர். அப் பெருமான் திருவாலங்காட்டில் உறையும் செல்வர் ஆவார்.

775. மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; வானோரால் ஏத்தப்படுபவர்; கங்கையைச் சடையின் மேல் தரித்தவர்; சரணாகதியாக விளங்கும் அடியவர்களுக்கு அன்புடையவர்; பலவாகிய திருவேடப் பொலிவு உடையவர்; பழையனூரில் விளங்குபவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர், திருவாலங்காட்டில் விளங்கும் செல்வர் ஆவார்.

776. ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவின் பஞ்ச கவ்வியத்தினைப் பூசையாக உகந்து ஏற்பவர்; அளவில்லாத பெருமையடையவர்; பூவின் மணமாகவும், புனிதப் பொருளாகவும் திகழ்பவர்; பண்ணின் இசை மேவும் பாடலை உகப்பவர்; படியனூரைப் பதியாக உடையவர்; தேவர்கள் வணங்கி ஏத்த விளங்குபவர். அப்பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

777. நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர்; நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் விரித்து உரைத்தவர்; மாற்றம் கொள்ளாது இளமைப் பொலிவுடன் விளங்கும் திருமேனியுடையவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; பிரமகபாலம் ஏந்திப் பலியேற்று உணவு கொண்டவர்; பழனூரைப் பதியாக உடையவர்; தெளிந்த சிவஞானிகளின் சித்தத்தில் விளங்குபவர். அப் பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

778. அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பர்கள் வழிபடும் தன்மையில் பகலும் இரவும் ஆகிய சந்திப்பொழுதாகியவர்; இரவும் பகலும் ஆனவர்; சொல்லும் பொருளுமாகவும், தோத்திரமும் சாத்திரமுமாகவும் ஆனவர்; அருளிச் செயல்களை ஓதும் உரையாகவும் கீத இசையாகவும் விளங்குபவர்; பழையனூரைப் பதியாக உடையவர். செல்கதியாகிய முத்தி நெறியைக் காட்ட வல்லவர். அப்பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

779. தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பணிந்தேத்தும் திருத்தொண்டர்களுக்கு நெருக்கமானவர்; தூய நீறணிந்த அழகர்; அயனும் மாலும் தேட நெருப்புப் பிழம்பாக ஓங்கி உயர்ந்தவர்; பண்ணின் இசைக்கு விரும்பும் தன்மையுடையவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர். அவர் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

780. மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டம் உடையவர்; மயானத்தில் ஆடல் புரிபவர்; திருவையாறு, திருவாரூர், திருவானைக்கா, தில்லை அம்பலம் ஆகிய தலங்களில் மேவுபவர்; பாம்பைக் கையில் ஏந்தி ஆட்டுபவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; திருமகள் பூசித்து வழிபட விளங்கி அருள் புரிந்தவர். அப் பெருமான் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

781. விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணுலகமும் மண்ணுலகமும் ஆனவர்; ஞானிகளால் ஏத்தப்படுபவர்; மன்மதனை எரித்தவர்; ஊழிக் காலங்களைக் கடந்தவர்; பண்ணிசை விளங்கும் பாடலை உகப்பவர்; பழையனூரைப் பதியாகக் கொண்டவர்; உறுதியான மழுப்படை ஏந்தும் கரம் உடையவர். அவர் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

782. காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊரார் கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கருமை வண்ணம் கொண்ட கடல் நஞ்சை உண்டவர்; கயிலை மலையை உடையவர்; தனது ஊர் எனத் திருக்கச்சியை உகந்து மேவிய ஏகம்பர்; திருவொற்றியூரில் உறைபவர்; உலகத்தினரால் புகழ்ந்து ஏத்தப்படுபவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; தீராத கொடிய வினையைத் தீர்ப்பவர். அவர், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

783. மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவர்; கயிலை மலையை வணங்கி ஏத்தாத இராவணனை விரலால் அடர்த்து நெரித்தவர்; பால் போன்ற திருநீற்று மேனியராகத் திகழ்பவர்; பழையனூரில் வீற்றிருப்பவர்; ஆசார சீலமுடைய அருளாளர்களால் பரவி ஏத்தப்படுபவர். அப் பெருமான், திருவாலங் காட்டில் உறையும் செல்வர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

79. திருத்தலையாலங்காடு (அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

784. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், தனது தொண்டர்களுக்கு நன்மை தரும் நெறியாக விளங்குபவர்; அவர்களை நரகிடை வீழாமே காப்பவர்; அண்டங்களைக் கடந்தவர்; திருவாதிரை நாளுக்கு உரியவர்; நெற்றியில் மேவிய கண்ணிலிருந்து எழும்பும் தீயாகியவர்; மும்மூர்த்திகளின் தலைவராகியவர்; தலையாலங்காட்டில் ஒளிர்பவர். அப் பெருமானைச் சார்ந்து மேவித் தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கி இருந்தேனே.

785. அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநாடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்குமணியை அரையில் கட்டியவர்; முப்புரம் எரித்தவர்; கொக்கிறகு சூடியவர்; நடனம் புரிபவர்; காதில் குண்டலம் அணிந்தவர்; அன்பிற் குழையும் பக்தர்களின் சிந்தையில் ஒளிர்பவர்; புண்ணியமாக விளங்குபவர். அப் பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

786. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யே வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், வேதவித்தாகவும், வேதமாகவும், மெய்த் தவமாகவும் விளங்கிச் சந்திரனைச் சூடி மேவும் விகிர்தர். என்னை இடராகிய பிறவிக் கடலில் வீழாது காத்தவர்; பொய்த்தன்மையுடையோரால் அறியப்படாதவர்; கங்கையைச் சடையில் மறைத்து உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டவர். தலையாலங்காட்டில் மேவும் அப்பெருமானைச் சார்ந்திருந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

787. சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவளனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவன், நான்முகன், திருமால், செழுஞ்சுடர்களாகிய சூரிய சந்திரர், அக்கினி, நீர், ஆகாயம், உலகங்கள் என அனைத்தும் ஆகிப் பொன், மணி, முத்து எனவாகிய ஈசன், எல்லா இடங்களிலும் வாசம் செய்பவராகி, இடப வாகனத்தில் திரிபவர். அவர் தலையாலங்காட்டில் வீற்றிருக்க, அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

788. கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைத்
காமருபூதம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் கரந்தவர்; விரும்பத்தக்க பூம்பொழில் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர்; அழகிய கையில் மானை ஏந்தியவர்; திருவையாறு, திருவாரூர் ஆகிய பதிகளில் உறைபவர்; அடியவர்களுக்கு குறைவில்லாது அருள் புரிபவர்; பரிதி நியமம், திருப்பாசூர் ஆகிய தலங்களில் மேவும் சங்கரர். அப்பெருமான், தலையாலங் காட்டில் மேவ, அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

789. விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் கட்டியவர்; தேவர்களுக்கு அறிவரியவர்; தனது அடியவர்களுக்கு உயர்ந்த தேவர்கள் உலகத்தை ஆளுமாறு அருள் புரிபவர்; பொன் போன்ற பெருமையுடையவர்; யானையின் தோலை உரித்து அழித்தவர்; உமைபாகர்; கங்கை, சந்திரன், நாகம் ஆகியவற்றைச் சடையில் திகழ வைத்தவர்; விரிந்த கடல் போன்றவர். அப்பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தித் துதியாது காலத்தைப் போக்கினேனே !

790. விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறி மனைதோறும் சென்று பலியேற்பவர்; அட்ட வீரட்டானங்களில் உறைபவர். திருவெண்ணீறு தரித்தவர்; மயானத்தில் ஆடுபவர்; இறந்தகாலம், பிற்காலம், நிகழ்காலம் என முக்காலமும் ஆனவர்; புலித்தோலை உடுத்தியவர்; உமைபாகர்; சடையழகுடையவர். அப் பெருமான் தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

791. கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பின் கட்டியாகவும், கனியாகவும், தேனாகவும், கன்றாப்பூரில் மேவும் நடுதறிநாதராகவும், காறை என்னும் தலத்தில் உள்ளவராகவும், சூலம் ஏந்தியும் திகழ்பவர்; என்னை உடையவர்; ஆனைக்காவில் விளங்குபவர்; கொன்றை சூடிய தூயராகவும், உலகுக்கெல்லாம் தாயாகவும் திகழ்பவர்; அப்பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் அவரைத் தொழுது ஏத்தாது, காலத்தைப் போக்கினனே !

792. பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுப்பனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், பண்ணிசையாகவும் இசையின் பயனாகவும் பாலின் பயனாகவும் விளங்குபவர்; ஆகாயம், நெருப்பு, காற்று என ஆகுபவர்; கண்டு மகிழும் அன்பர்க்கு எளியவர்; யாவற்றுக்கும் காரணமாகவும், மால் அயனாகவும் விளங்கி, என் இதயத் தாமரையாகிய நெஞ்சுள் நிற்பவர்; யானையின் தோலை உரித்தவர். அப் பெருமான் தலையாலங்காடு என்னும் தலத்தில் வீற்றிருக்க, அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

793. கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுதுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராணவனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், இருபது கரங்களையுடைய இராவணன் கயிலையை எடுக்கத் தனது திருவிரலால் ஊன்றி அடர்த்தவர்; அவன் இசை கேட்டுப் பரிந்து அருள் புரிந்தவர்; இராவணன் என்னும் பெயர் விளங்குமாறு செய்தவர்; அப் பெருமான் தலையாலங் காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது நெடுங்காலம் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

80. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

794. பாரானை பாரினது பயனா னானைப்
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலாற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : ஈசன், பூவுலகமானவர்; உலகில் விளங்கும் பயனாகியவர்; படைப்பும் தானேயாகி எல்லா உயிர்களையும் பரிவுடன் காப்பவர்; இனிய அமுதமாகி மகிழ்விப்பவர்; அடியவர்களுக்கு எல்லாமே தானேயாகியவர்; தேவர்களின் தலைவர்; கரிய கண்டத்தையுடையவர்; கயிலையின் அதிபதியாகியவர், தன்னைக் கருதுபவர்களின் மனத்துள் விளங்குபவர்; காலனை அழித்தவர்; எல்லாச் சிறப்பும் உடைய செல்வர். திருமாற்பேற்றில் பவளக் குன்றுபோல் மேவும் அப்பரமனை நான் அடைந்தேன். இது அடைவதற்கு அரியவராகிய ஈசன்பால் அடையப் புரியும் கருணையை எண்ணி உவந்து ஏத்துவதாயிற்று.

795. விளைக்கின்ற நீராகி வித்து மாகி
விண்ணொடுமண் ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி
முழங்கொளிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், விளையும் வித்தாகவும் விளைவிக்கும் நீராகவும், விண்ணும் மண்ணுமாகவும், செம்பொற் சோதியாகவும் சுடராகவும், நடுக்கம் அற்ற கதிரவனாகவும் விளங்குபவர்; சந்திரனும், பாம்பும், கங்கையும் சடையில் தரித்தவர். திருமாற்பேற்றில் செம்பவளக்குன்றுபோல விளங்கும் அப்பரமனை நான் அடைந்தேன்.

796. மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக்
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

தெளிவுரை : மலைமகள் தலைவனாகவும், நீராகவும் முத்து, மரகதம், மாணிக்கம் எனவாகவும், மானையேந்திய கையினராகவும் விளங்கும் சிவபெருமான், கச்சியில் மேவும் ஏகம்பர்; இனிய சுடர்; கனகக் குன்று; மதிப்பின் மிக்க திருவெண்ணீறு தரித்த மேனியுடையவர்; மெய்யடியார் வேண்டும் தன்மையில் உடன் மேவி வேண்டுபவராய்ப் பொருந்தி விளங்கி அருள் புரிபவர்; வில்லேந்திய கரத்தினர். திருமாற் பேற்றில் செம்பவளக் குன்றாக விளங்கும் அப் பெருமானை நான் சென்றடைந்தேன்.

797. உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய
கச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்க்கு உற்ற உறவாகியவர்; உடலுக்கு உயிராகியவர்; ஓங்காரத்தில் ஒளிரும் ஒப்பற்றவர்; உமைபாகர்; பிஞ்ஞகர்; பிறப்பின் தன்மையைக் கடந்தவர்; பெரியானாகவும் யாவர்க்கும் அரியோனாகவும் விளங்குபவர்; கற்று அறியப்படும் பொருள் யாவும் தானேயாய்த் திகழ்பவர்; கச்சியில் மேவும் திருவேகம்பர்; காலனை வீழ்த்தியவர். திருமாற்பேற்றில் மேவும் பவளக் குன்று எனத் திகழும் அப்பரமனை நான் சென்றடைந்தேன்.

798. நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான் எரிந்து விழுமியதாய் விஞ்சும் நீறு (சாம்பல்) ஆகியவர்; நீற்றை நல்கும் நெருப்பு ஆகியவர்; மனத்தில் தோன்றும் நினைவு ஆகியவர்; உமா தேவியாரைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவர்; உயிரைக் கூறுபடுத்தும் கூற்றுவன் ஆகியவர்; கோள்களாகியவர்; குறைவற்ற அடியவர்கள் பக்திப் பெருக்கினால் ஆனந்தக் கண்ணீர் உகுத்து மேவ, அத்தகையோர் செய்யும் அனாசாரமாகிய குறைகளைப் பொறுப்பவர்; அவர்களிடம் எக்காலத்திலும் சினவாத தன்மையுடையவர். திருமாற்பேற்றில் பவளக்குன்றென மேவும் அப் பெருமான் பால் நான் சென்ற அடைந்தேன்.

799. மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை
மறப்பிலியை மதியேந்தி சடையான் தன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத்தியைக்
கருதுவார் மனத்தானைக்கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், வேதப் பொருளானவர்; திருமறைக்காட்டில் விளங்குபவர்; யாவற்றையும் இயல்பாய் உணரும் தன்மையுடையவராகி மறப்பின்மை கொண்டவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; ஒண் சுடராகிய சூரியனாய் விளங்குபவர்; தேவதேவர்; இனிய தவமானவர்; உலகின் வித்தானவர்; நீலகண்டத்தை உடையவர்; திருக்காளத்தியில் மேவுபவர்; தன்னை ஏத்தி வழிபடுபவர்களுடைய மனத்தில் திகழ்பவர்; உறுதிப் பொருளை நவிலும் ஞான நூலாய் விளங்குபவர்; சூலமும் மழுவும் படையாக உடையவர். திருமாற் பேற்றில் பவளக் குன்று என விளங்கும் அப் பெருமானை நான் அடைந்தேன்.

800. பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்
பெரியானை அரியானைப் பெண்ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை
நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருள்களுக்கும் தோற்றமாகத் திகழ்பவர்; பிறவாத பெருமையுடையவர்; பெரியேனாகவும், அரியோனாகவும், பெண்ணும் ஆணும் ஆகும் வண்ணமாகவும், நின்மலனாகவும், தன்னை நினைத்தவர்பால் பதியாதவராகவும், நினைந்து ஏத்தும் அடியவரை நினைபவராகவும் உள்ளவர்; அறத்தின் பெருநிலையாகவும் அறத்தின் வழி நிற்கும் நீதியாகவும், தலைவனாகவும், அழகனாகவும், தேவர்களால் ஏத்தி வணங்கப்பெறும் திகழொளியாகவும் விளங்குபவர். திருமாற் பேற்றில் மேவும் அப்பெருமான், பவளக்குன்று என மேவி விளங்க நான் அடைந்தனன்.

801. வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், மேகமாவும், மதியாகவும் உள்ளவர்; தன்னை ஏத்தி வணங்குபவரின் மனத்தில் உள்ளவர்; உடலுக்கு உறுதுணையானவர்; திருவொற்றியூரில் விளங்குபவர்; உத்தமர்; ஊழிக் காலத்தில் நிலைபெற்று மேவுபவர்; பெருங்களிறு போன்ற வல்லமையுடையவர்; திருக்காளத்தியில் மேவுபவர்; பக்தர்களின் கருத்தில் உள்ளவர்; யாவற்றுக்கும் கருப் பொருளானவர்; தேனின் சுவையானவர். திருமாற் பேற்றில் மேவும் அப்பெருமான் செம்பவளக் குன்றுபோலத் திகழ நான் சென்றடைந்தேன்.

802. முற்றாத முழுமுதலை முளையை மொட்டை
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப்
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், இளமை திகழும் முழுமுதலானவர்; முளையாகவும், மொட்டாகவும், மலராகவும் விளங்குபவர்; எல்லா உயிர்க்கும் பற்றாகியும், பரிவாகியும் விளங்குபவர்; மன்மதனை எரித்தவர்; முப்புரங்களை எரித்தவர். திருமாற் பேற்றில் பவளக் குன்றென ஒளிரும் அப்பெருமானை நான் அடைந்தேன்.

803. விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமும் அங்கமும் ஓதியவர்; வெற்பெடுத்த இராவணனை விரலால் ஊன்றி நெரித்தவர்; சந்திரனையும் கங்கையையும் சடையில் தரித்தவர்; சுயம்பானவர்; முப்புரங்களை முறுவல் கொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர். திருமாற்பேற்றில் பவளக்குன்றென விளங்கும் அப்பெருமானை நான் அடைந்தேனே.

திருச்சிற்றம்பலம்

81. திருக்கோடிகா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

804. கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண்உடையவர்; இளங்காளை போன்றவர்; கந்தமாதனத்தில் உள்ளவர். மயல் தீர்க்கும் ஞான மருந்தானவர்; திருக்கச்சியில் மேவும் ஏகம்பர்; சூரியனாக விளங்குபவர்; மீயச்சூரில் விளங்குபவர்; மேகம் போன்ற கரிய கண்டம் உடைய கூத்தன். அவர் கோடிகாவில் உறையும் அழகர் ஆவார்.

805. வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான் உமை பாகர்; மறைக்காட்டில் உறையும் மணாளர்; வினை தீர்த்துப் பரலோக நெறி காட்டும் பரமன்; முப்புரங்களை எரித்தவர்; திருவாரூர் திருமூலட்டானத்தில் விளங்குபவர்; பக்தர்களின் மனத்தில் மேவுபவர். அவர் கோடிகாவில் அமர்ந்துறையும் குழகர்.

806. அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் தரித்தவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்; உமைபாகர்; வானோர்களால் அணியென ஏத்தப்படுபவர்; ஏழுலகும் ஆகியவராய்ச் சூலப்படையேந்தியவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

807. மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : ஈசன், தன்னொப்பில்லாதவர்; மயிலாடுதுறையில் மேவியவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; பூந்துருத்தியில் மேவும் பொய்யிலியப்பர்; பற்றற்றவர்களுக்கு இல்லை என்னாது முன்னின்று அருள்பவர்; திருவையாறு, குற்றாலம் ஆகிய தலங்களில் விளங்குபவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

808. வாராந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; திருமாற்பேற்றில் மகிழ்பவர்; இடப வாகனர்; திருப்புகலூரில் விளங்கும் புனிதர்; சடையில் கங்கையைத் தரித்தவர்; நினைந்தேத்தும் அடியவர்களின் வினையைத் தீர்ப்பவர்; சூலப் படையுடையவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

809. கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மலர் சூடிய சடையுடையவர்; கண்ணை இடந்து அப்பிய கண்ணப்ப நாயனாருக்கு உயர்ந்த இடத்தை அருளியவர்; உலகில் தோன்றும் பிறவித் தளையை அறுப்பவர்; உலகப் பற்றினை விட்டவர்களைப் பற்றி விளங்குபவர்; திருவடியில் மேவும் சிலம்பின் ஒலி ஆர்க்கத் திரிபவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் தலைவர்; தில்லையில் திருக்கூத்து புரிபவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

810. உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : ஈசன், கரத்தில் மானை ஏந்தியவர்; திருவொற்றியூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய தலங்களில் மேவியவர்; மார்பில் முப்புரி நூல் திகழ எட்டுத் தோள்களுடன் விளங்குபவர்; என் நெஞ்சுள் நீங்காத தலைவர்; காதில் மேவும் குழையானது ஆடுமாறு திரு நடனம் புரிபவர். அவர் கோடிகா மேவும் குழகர் ஆவார்.

811. படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் கட்டியவர்; திருப்பராய்த்துறை, திருப்பாசூர் ஆகிய தலங்களில் மேவியவர்; ஏழுலகிலும் நடனம் ஆடித் திரிபவர்; நான்கு மறைகளின் பொருளாகவும் நாதராகவும் உள்ளவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலையில் விளங்குபவர்; குடத்தை ஏந்தி ஒருவகைக் கூத்து ஆடிய திருமாலைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; அவர், கோடிக்காவில் மேவும் குழகர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

82. திருச்சாயக்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

812. வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலும்
தேனொத் தடியார்க் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனும் பாம்பும் சடைமுடியில் விளங்குமாறு வைத்தவர்; தில்லையில் நடனம் புரியும் தேவர்; ஞானச் சுடரானவர்; வினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் உயிர்களுக்கு வகுப்பவர்; அடியவர் பெருமக்களுக்குத் தேன் போன்று இனிமையானவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

813. விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை உண்ட சிவபெருமான், திருத்துருத்தி, வேள்விக்குடி, திருவண்ணாமலை, அதியரைய மங்கை, திருப்பராய்த்துறை, காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரம் (புகார்) ஆகிய தலங்களில் மேவியவர். அவர் திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

814. கானிரிய வேழ முரித்தார் போலும்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ளவர்; புரங்கள் மூன்றை எரித்தவர்; கபாலத்தை ஏந்தியவர்; கயிலை மலையில் வீற்றிருப்பவர்; திருத்தோணிபுரத்தில் விளங்குபவர்; அப் பெருமான், தெளிந்த பொய்கையுடைய திருச்சாய்க்காட்டில் இனிது மேவும் செல்வர் ஆவார்.

815. ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலும்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் கபாலம் ஏந்தியவர்; ஊழிகள் பல கண்டவர்; கையில் மான் ஏந்தி இருப்பவர்; திருமறைக்காடு, திருக்கோடி ஆகிய தலங்களில் மேவியவர்; மயானத்தில் ஆடல் புரிந்தவர்; மன்மதனை எரித்தவர். அப்பெருமான், சோலை திகழும் திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

816. கார்மல்கு கொன்றையுந் தாரார் போலும்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூ ரொருநாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாட லுகந்தார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை அணிந்தவர்; காலனை உதைத்தவர்; பூவுலகத்தவரால் ஏத்தப்படுபவர்; திருப்பருப்பதத்தில் மேவுபவர்; பலியேற்று உழன்றவர்; திருவோத்தூரில் எந்நாளும் விளங்குபவர்; அப்பெருமான், சிறப்பு மிக்க பாடலை உகந்தவராகி திருச்சாய்க் காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

817. மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க் கரியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : ஈசன் திருமாலும், நான்முகனும் தானேயாகி விளங்குபவர்; மூப்படையாத திருமேனியுடையவர்; மார்க்கண்டேய முனிவரின் உயிரைக்கவர வந்த கூற்றுவனை உதைத்தவர்; தேவர்களுக்கெல்லாம் காண்பதற்கு அரியவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

818. கடுவெளியோ டோரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலும்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், ஆகாயம் முதலாக ஐம்பூதங்கள் ஆகியவர்; காரோணத்தில் எல்லாக் காலத்திலும் விளங்குபவர்; பூத கணங்களைப் படையாக உடையவர்; கச்சியில் மேவும் திருவேகம்பர்; தனக்கு இணையாக யாரும் இல்லாதவர்; பாண்டிக் கொடுமுடியை ஊராகக் கொண்டவர்; அடியவர்களின் நோயைத் தீர்ப்பவர். அப் பெருமான், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

819. விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தம் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலும்
சிலையினார் செங்க ணரவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பு மாலையை மார்பில் அணிந்தவர்; வெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர்; உமாதேவியாரின் மணாளர்; திருமாற்பேற்றில் மகிழ்ந்து விளங்குபவர்; மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; சோற்றுத்துறை, திருத்துருத்தி ஆகிய தலங்களில் திகழ்பவர். வில்லேந்தியவராகி நாகத்தைத் திருமேனியில் தவழ விட்டவர். அவர் திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

820. அல்லல் அடியார்க் கறுப்பார் போலும்
அமருலகம் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களுடைய அல்லலைத் தீர்ப்பவர்; அமரர் உலகத்திற்குரிய ஆட்சியை அளிப்பவர்; திருநல்லம், நல்லூர், திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ளவர். உமை பாகர்; முன் தோன்றிய பழம் பொருளானவர்; தில்லையில் நடனம் புரிபவர். அவர், திருச்சாய்க்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

821. உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : ஈசன், கயிலையை எடுத்த இராவணனுடைய முடிகளை விரல்கொண்டு நெரித்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர்; பெண்ணும் ஆணும் ஆகிய அர்த்தநாரி; மெய்யன்பர்களுக்கு இனியவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

83. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

822. விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணும், நிலனும், மேகமும், கடல்சூழ்ந்த உலகில் விளங்கும் மாந்தர் உள்ளத்தில் மேவும் எண்ணமும், சொல்லும், இயற்றும் செயலும் ஆகியவர்; கண்ணாகவும், ஒளியாகவும், காட்சியாகவும், அன்பின் மிக்க அடியவர்கள் பரவிப் பாடும் பண்ணாகவும், உள்ளவர். இனிய அமுதமாகத் திருப்பாசூரில் மேவும் அப்பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

823. வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி
விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்று
கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினைப் பாசூர் மய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதமாகவும், ஆறு அங்கமாகவும் விரிந்து பரவும் பொருள்களுக்கெல்லாம் வித்தாகவும் விளங்குபவர். மழையாகவும், மேகமாகவும், வானவர்கள் போற்றி மலர் தூவி ஏத்த நின்ற உமை பாகராகவும் திகழ்பவர். பாசூர் மேவும் பரஞ் சுடராகிய அப் பெருமானைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

824. தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞலா மாகிக்
காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக்
குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஏழுமலைகளாகவும், காற்றாகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும், ஆகாயத்தின் உச்சியாகவும், கடலால் சூழப்பட்ட உலகமாகவும் காண்கின்ற சூரியனாகவும், உயிர்களின் கதியாகவும் விளங்குபவர்; குடமுழவு, சச்சரி ஆகிய வாத்தியங்கள் இயம்ப நெருப்பைக் கையில் ஏந்திக் கூத்து ஆடுபவர். அப்பெருமான், அரவத்தைக் கையில் பற்றி ஆட்டும் அழகராய்ப் பாசூரில் மேவும் பரஞ்சுடரென விளங்க அடியேன் கண்டு உய்ந்தேன்.

825. நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை
நிறைமதிய முடன்குடி நீதி யாலே
சீராரும் மறையோதி யுலக முய்யச்
செழுங்கடலைக் கடந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேய
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தரித்த செஞ்சடையில் நாகமும் கொன்றையும் சந்திரனும் சூடிச் சிறப்புடைய வேதத்தை ஓதியும், உலகம் உய்யும் தன்மையில் கடலில் தோன்றி வெளிப்பட்ட நஞ்சினை உட்கொண்டு மேவிய நீல கண்டமும் கொண்டு விளங்குபவர்; திருக்கச்சியில் மேவும் கண்ணுதல்; ஒற்றியூரில் வீற்றிருப்பவர்; தேவர்களும், பூவுலகத்த வரும் ஏத்தி வணங்க மேவுபவர். அப் பெருமான் பாசூரில் மேவும் பரஞ்சுடர். அவரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

826. வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்
கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், வேடனின் திருக்கோலம் தாங்கி வில்லேந்தி, உமாதேவியாரும் அதற்கு ஒத்த திருக்கோலம் பூணப் பன்றியின் பின்னால் அம்பு ஏந்தி, விசயன் வியந்து போற்றுமாறு பூசல் விளைவித்தவர்; காளி தேவி காணுமாறு பெரிய நடனம் புரிந்தவர்; வேதமும் அங்கமும் ஆய்ந்து ஓதி விரித்தவர். பாசூர் மேவிய பரஞ்சுடராகிய அப் பெருமானைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

827. புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால்
புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : புத்தி பூர்வமாகச் சிவத் தொண்டு மேவும் பண்பால் வாயினால் பந்தர் அமைத்த சிலந்திக்கு அருள் செய்து, மறுமையில் கோச்செங்கட் சோழநாயனாராக விளங்கச் செய்த சிவபெருமான், ஆங்குப் பூசித்த வெள்ளானைக்கு அருள் செய்து முத்திப் பேறு அளித்தவர்; பக்தர்களுக்கு இனிய அமுதம் போன்றவர். பாசூர் மேவும் பரஞ்சுடராகிய அப்பரமனைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

828. இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியார் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தனக்கு இணையாக யாரும் இல்லாத தனிப் பெருமையுடையவர்; திருவிடைமருதூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் விளங்குபவர்; யாவருக்கும் ஆதிதேவர்; காண்பதற்கு அரியவர்; அடியவர்களுக்கு எல்லா நன்மைகளையும் புரிபவர்; சிவந்த திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; நறுமணம் கமழும் சந்தனக் கலவையுடன் திகழும் உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர். பாசூர் மேவிய அப்பரஞ்சுடரை அடியேன் கண்டு உய்ந்தேன்.

829. அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி
அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு
இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : யாவரும் அஞ்சும்படி தோன்றிய கடல் நஞ்சினை உண்டு, கரிய கண்டத்தைக் கொண்டவராகிய சிவபெருமான், தேவர்களும் அசுரர்களும் ஏத்த விளங்குபவர்; பண்டரங்கம் என்னும் கூத்து ஆடுபவர்; பாசூர் மேவும் அப் பரஞ்சுடரை அடியேன் கண்டு உய்ந்தேன்.

830. ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கெல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றார் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் அறியாதவாறு நெடிது தீப்பிழம்பாக ஓங்கிய ஈசன், சூலப்படையேந்தி அந்தகாசூரனை அழித்தவர்; பல உயிர்களைக கொல்லும் கூற்றுவனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்து அருளியவர்; பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய திருமேனியுடையவர். பாசூரில் மேவும் அப் பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

831. வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
மெல்லியலாள் உமைவெருவரிரைந் திட்டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும்
இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : நெடிய முடியுடைய இராவணன் கயிலையை எடுத்தபோது திருவிரலால் ஊன்றி அடர்த்த சிவபெருமான், அவனுடைய இசையைக் கேட்டு இரங்கி அருள் புரிந்தவர். நாகத்தைச் சடையில் கொண்டவர். பாசூரில் மேவும் அப்பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

84. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

832. பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பெருந்தகையாளர்; பெறுதற்கரிய மாணிக்கம் போன்றவர்; தன்னை நினைந்து ஏத்தும் அடியவர்களின் மனத்தில் மன்னி விளங்கும் மணி விளக்கு; பூவுலகில் எழுந்தருள்பவர்; எட்டுத் தோள்களை வீசி நடனம் புரிபவர்; பொன்னின் ஒளி விளங்கும் குன்றானவர்; ஆலின் கீழ் இருந்து அறப்பொருள் உண்மைகளை உரைத்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

833. துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆலழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : இரணியனுடைய உடலை நகத்தால் கிழித்த அழித்த திருமாலும், பிரமனும் தேடியபோது பேரழல் ஆகிய சிவபெருமான், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; கயிலை மாமலையில் மன்னி விளங்குபவர்; பொன் போன்ற திரட்சியான தோளுடைய செல்வர். அப் பெருமானைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

834. உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்
முழுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மனம் கசிந்து உருகி ஏத்தும் அடியவர்களுக்குத் தேன் போன்று இனிமையானவர்; தேவர்களின் மணி முடியாகிய ஆட்சியை அணியுடன் திகழச் செய்பவர்; நிலைத்த தன்மையால் விளங்கும் மெய்த்தன்மையானவர்; அந்தணர்களுக்கு வேதப் பொருளாகியவர்; மாலுக்கும் அயனுக்கும் முழுமுதலானவர்; மெய்த் தவத்தின் துணையானவர்; உமாதேவியாகிய குழலம்மையைப் பாகம் கொண்டவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

835. கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் கொன்றை மாலை தரித்தவர்; ஒளி திகழும் மாணிக்கமாகவும், பொன்னாகவும் திகழும் நறுமணங்கமழும் மலர் போன்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர்; அசையும் பொருளுக்கும் அசையாப் பொருளுக்கும் நற்றாய் போன்று திகழ்பவர்; அடியேனை அடிமை கொண்டு ஆளாகச் செய்து தமிழ் மாலைகளைப் பாடுவித்தவர்; சிந்தையில் தோன்றிய மயக்கினைப் போக்கி அருள் புரிந்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

836. நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; கெடிலநதிக் கரையில் மேவும் திருவதிகை வீரட்டானத்தில் விளங்குபவர்; திருவாரூரில் திகழ்பவர்; சூலப்படையுடையவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

837. கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையொன்றில் கரந்தவர்; திருக்கடவூர் வீரட்டானத்தில் விளங்குபவர்; திருவையாற்றில் மேவும் புனிதர்; பூந்துருத்தி, நெய்த்தானம் ஆகியவற்றில் பொருந்தி விளங்குபவர்; நான்கு மறைகளை விரித்தவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

838. எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை
ஏகம்பம் மேயானை யில்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமா எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாத் திக்கும் ஆனவர்; திருக்கச்சி யேகம்பத்தில் திகழ்பவர்; இன்மை என்னும் தன்மையுடைய சமண நெறியில் புகுந்த என்னை, அதில் வீழாது காத்துப் பக்தி நெறி காட்டிப் பாவம் தீர்த்துப் பண்டை வினைப் பயனைப் போக்கி, என் மனத்துள் தித்திக்கும் தேன் என ஊறுபவர். அப் பெருமானைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

839. கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இறையுணர்வு இல்லாதவர்களின் மனத்தில் அணுகாதவர்; ஞான நூல்களைக் கற்றவர்களும் பக்தி உணர்வால் திகழ்பவர்களும் மகிழுமாறு விளங்குபவர்; பொல்லாமையை உகந்து, அத்தன்மையில் திரிந்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்து அழித்தவர்; அழியக் கூடிய இவ்வுடம்பின் பிணக்கமானது நீங்கும் தன்மையில் தவச்சீலத்தை அடியேற்கு நிறைவித்தவர்; சென்ற பின் திரும்பிச் செல்லாத முத்தி யுலகத்திற்கு என்னைச் செல்லுமாறு புரிபவர். அப் பரமனைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

840. அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், அரிய பெரும் பொருளானவர்; ஆலகால விடத்தை அமுதமெனச் செய்து உண்டு கண்டத்தில் கருமை கொண்டவர்; இடப வாகனர்; தமது தகுதிக்கேற்பத் திருத்தொண்டு செய்யும் அன்பர்களுக்கு, உலகம் யாவும் அளிக்கும் உலப்பிலா அன்புடையவர்; உமை பாகர்; அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

841. பேரரவ மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் தன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவாள் அரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இடபவாகனர்; புறம்பயம், திருப்புகலூர் ஆகிய தலங்களில் மேவியவர்; சடை முடியில் கங்கை, சந்திரன், பாம்பு ஆகியவற்றைத் தரித்தவர்; புஷ்பக விமானத்தையுடைய இராவணனுடைய முடிகளை நெரியச் செய்தவர்; ஒலிக்கும் வீரக்கழலை அணிந்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

85. திருமுண்டீச்சரம் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

842. ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டி விளங்குபவர்; அடியவர்களுக்கு அன்பராகியவர்; யானையின் தோலைப் போர்த்துள்ளவர்; சடையின் மேல் கங்கை தரித்தவர்; உலகம் ஏழினையும் கலங்காது காத்தவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதர். அப்பெருமான் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

843. கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஒருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் கருத்தாகியவர்; பிரமனின் ஒருதலையைக் கொய்தவர்; சென்னியில் கங்கையைத் தரித்தவர்; உமாதேவியைத் திரு மேனியில் பாகமாகக் கொண்டவர்; ஒப்பற்ற ஒருவராகவும், அயன், அரி, அரன், என்னும் மூன்று வடிவினராகவும் மேவும் பழைமையானவர்; தேவர்களுக்கும் மேலானவர்; மெய்யடியவர்களின் உள்ளத்தில் விரும்பி மேவுபவர்; துன்பங்களைத் தீர்த்தருள்பவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோக நாதராகிய அவர் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

844. நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென்றி யாவர்க்கும் அறியவொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; வேதங்களை விரித்த நாதர்; உயிர்களுக்கு இன்பம் செய்பவர்; முக்கண்ணுடையவர்; மனம் உருகிப் போற்றும் அடியவர்களுக்கு அன்பர்; கையில் நெருப்பேந்தி ஆடியவர்; சேய்மையாகவும் அண்மையாவும் விளங்கி, யாவர்க்கும் அறியவொண்ணாது மேவுபவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதராகிய அவர், என் சிந்தையுள் உள்ளவர் ஆவார்.

845. மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், முன்னோனாய், மும்மூர்த்திகளுக்கு முதல்வராய் முக்காலமுமாய்க் காப்பவர்; உலகுக்குக் கண் போன்றவர்; எலும்பு மாலையுடையவர்; கயிலையில் விளங்குபவர்; யாவற்றையும் காப்பவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; பிரமனும் திருமாலும் அறியாதவாறு நெருப்புப் பிழம்பானவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதராகிய அப் பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

846. கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், காட்டில் வாழும் வேடுவனாய்த் திருக்கோலம் கொண்டு, அருச்சுனனோடு போர் செய்தவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; நான்கு வேதங்களும் ஆனவர்; இடப வாகனர்; எல்லாப் பொருள்களாகவும், உலகின் உயிராகவும், உரையாகவும் உணர்வாகவும், உணர்ந்தவர்களுக்கு இனிய தேனாகவும், திகழ்பவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோக நாதராகிய அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

847. உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யடையமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்களின் உறவாகவும், யாவும் உற்றவராகவும் எல்லா இடங்களிலும் உலப்பிலாது மேவும் ஒருவராகவும் விளங்குபவர்; அரவத்தைக் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவர்; மயானத்தில் ஆடுபவர்; நற்றவமாகவும், மார்க்கண்டேயரைக் காக்கக் கூற்றுவனைச் செற்றவராகவும் மேயவர். திருமுண்டீச்சரத்தில் விளங்கும் சிவலோக நாதராகிய அப் பரமன், என் சிந்தையில் திகழ்பவராவார்.

848. உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லையெல் லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற தேவர்களையும் பிறரையும் உதைத்துச் சாடிய சிவபெருமான், சூரியனுடைய பல்லை உகுத்தவர்; தக்கனின் தலையை வீழ்த்தியவர்; உமாதேவியை மதியாத தன்மையில், அவ் வேள்வியின் அவிர்பாகத்தை நயந்த அனைவரையும் சிதைத்தவர். திருமுண்டீச்சரத்தில் மேவிய சிவலோக நாதராகிய அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

849. உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சமணரும் புத்தரும் அன்மை உரைப்பாராயினும் சிவபெருமான், தனது அடியவர்களுக்குப் பரிவுடன் அருள் புரிபவர். அப் பெருமான், பெண்ணை ஆறானது ஈசனை வலங்கொண்டு செல்லும் தன்மையில் திருமுண்டீச்சரத்துள் சிவலோக நாதராக விளங்குபவர். அவர் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

850. அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களின் துயரைத் தீர்ப்பவர்; மன்மதனை எரித்தவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய முடிகளை நெரித்தவர். திருமுண்டீச்சரத்தில் மேவிய சிவலோக நாதராகிய அப் பரமன் என் சிந்தையுள் விளங்குபவராவர்.

திருச்சிற்றம்பலம்

86. திருஆலம்பொழில் (அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

851. கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபாலியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், எல்லாப் பொருளுக்கும் கருவாகி விளங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; பிரமனின் தலையைக் கொய்து கபாலமாக ஏந்தியவர்; உமைபாகர்; உணர்வாகவும் ஓசையாகவும் விளங்குபவர்; திருவலஞ்சுழி, திருமறைக்காடு, திருவாவடுதுறை ஆகிய தலங்களில் மேவும் திருவாலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரைச் சிந்தனை செய்வாயாக.

852. உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக
வுடையானை யுடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; புலித்தோலை உடுத்தியவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; அழகிய கையில் நெருப்பேந்தியவர்; விடத்தை அமுதாக உட்கொண்டவர்; பவள மலை போன்றவர்; திருமாலுக்குச் சக்கரப்படை அருளி உகந்தவர். பரம்பைக் குடியில் விளங்கும் திருவாலம் பொழிலில் மேவும் அப்பரமனைச் சிந்தித்து ஏத்துவாயாக.

853. உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால்
கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், அயன் அரி அரன் என மும்மூர்த்தியாகவும், உணர்வின் கண் ஒன்றாகவும், ஓங்கார மெய்ப் பொருளாகவும் விளங்குபவர்; கருப் பொருளாகவும், அதன் ஆக்கத்தை அறிபவராகவும் திகழ்பவர்; மார்க்கண்டேயருக்கு அருள் செய்யும் தன்மையில் காலனைக் காலால் உதைத்து அழித்தவர்; ஏத்து வணங்குபவர்களுக்குச் செல்வத்தைத் தருபவர். பரம்பைக் குடியில் மேவும் திருவாலம் பொழிலில் விளங்கும் அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

854. பார்முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று
வாரமதாம் அடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், நிலவுலகம், ஆகாயம், பாதாளம் என விளங்கும் பரம் பொருள் ஆனவர்; உமை பாகர்; தில்லையில் நடம் புரிபவர்; வாட் போக்கியில் வீற்றிருப்பவர்; அன்புடைய அடியவர்களுக்கு அன்பர் ஆவர்; வஞ்சனையுடையவர்களுக்கு அத்தன்மையாகுபவர். தென் பரம்பைக் குடியில் மேவும் திருவாலம் பொழிலில் விளங்கும் அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

855. வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், உமைபாகர்; வானவர்க்கும் மேலான தலைவர்; மணியும் முத்தும் போன்று ஒளிர்பவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு அரவத்தை அரையிற்கட்டியவர்; தனது அடியவர்பால் அன்புடையவர்; கோவண ஆடையுடைய புனிதர்; பூந்துருத்தி, திருப்புகலூர் ஆகிய தலங்களில் விளங்குபவர். அப் பெருமான், தென் பரம்பைக் குடியில் மேவும் திரு ஆலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரைச் சிந்தித்து ஏத்துவாயாக.

856. விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், எல்லா இடங்களிலும் விரிந்து வியாபித்துள்ளவர்; நுண்மையாகி உள்ளுக்குள் மேவி ஒளிர்பவர்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் கர்த்தாவாகி விளங்குபவர்; சலந்தரனின் உடலைப் பிளந்து அழித்தவர்; நஞ்சினை உட்கொண்டு உலகம் யாவும் உய்யுமாறு கருணை புரிந்தவர்; அசுரர் கோட்டைகளை எரித்தவர்; அப் பெருமான், தென் பரம்பைக் குடியில் மேவிய திருஆலம் பொழிலில் விளங்குபவர். அவரைச் சிந்தித்து ஏத்துவாயாக.

857. பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாருந் தன்னை யிகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், புன்மையுடைய எனது உடலில் புகுந்து விளங்குபவர்; புறம்புறம் விளங்கும் புனிதர்; எல்லோரும் இகழும் தன்மையுடைய பலியை உகந்தவர்; பக்தர்களுக்கு அன்புடையவராகி, வெளிப்பட்டு அருள்பவர்; அன்பில்லாதவர்கள்பால் பொருந்தி விளக்கம் ஆகாதவர். அவர் திருவாலம்பொழிலில் விளங்குபவர். அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

858. ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயந்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், திருமாலும் அயனும் நாடுவதற்கு அரியவராக உயர்ந்து ஓங்கியவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டவர்; திருப்பராய்த்துறை, திருவெண்காடு ஆகிய தலங்களில் உறைபவர்; கபாலம் ஏந்திப் பலியேற்பவர்; திருப்பூவணம், புறம்பயம் ஆகிய தலங்களில் விளங்குபவர்; எனது தீய வினைகளைத் தீர்ப்பவர். அப் பெருமான் திருவாலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரை சிந்தித்து ஏத்துவாயாக.

859. கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், சமணநெறியினர்க்கு அரியவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; மேருமலையை வில்லாக ஏந்தி நெருப்பையும், வாயுவையும் அம்பாகக் கொண்டு முப்புரத்தை எரித்தவர். பரம்பைக் குடியில் மேவும் ஆலம்பொழிலில் விளங்கும் அப்பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

திருச்சிற்றம்பலம்

87. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

860. வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், அருள் வழங்கும் தேவனாகியவர்; தேவர்களுக்கும் மேலாகியவர்; வடமொழியும், தென் தமிழும், நான்கு வேதங்களும் ஆகியவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப் படுபவர்; அழகான தலைவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; அருச்சுனனுக்கு அருள் செய்யும் பாங்கில் வேட்டுவத் திருக்கோலம் பூண்டவர்; கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்தவர்; பக்தர்களின் இதயத் தாமரையில் தேனாக மேவி இனிமை தருபவர்; இயல்பான செல்வத்தை உடையவர். அச் சிவபெருமான், சிவ மந்திரமாக விளங்குபவர். அவர் சிவபுரத்தில் மேவும் எம் செல்வர் ஆவார்.

861. நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறது சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்.
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், உடையை நீத்தவர்; அரவத்தைக் கட்டியுள்ளவர்; பூதகணங்களுடன் சேர்ந்து நடனம் புரிபவர்; அழகு மிகுந்தவர்; கொக்கிறகைச் சூடியவர்; உமைபாகர்; திருவெண்ணீறு தரித்தவர்; மூவுலகுக்கும் பொருளானவர்; எல்லாத் திசைகளும் ஆனவர்; சிவந்த திருமேனியுடையவர்; அன்புடையவர்; சிவபுரத்தில் மேவும் அவர் எம் செல்வர் ஆவார்.

862. வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியின் மணவாளர்; பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவர்; யானையின் தோலை உரித்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டம் கருத்தவர்; அம்பர் பெருந்திருக்கோயில், அயவந்தி, திருவையாறு ஆகிய தலங்களில் விளங்குபவர்; செம்பொன் போன்ற வடிவம் உடையவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

863. பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பர்கள்பால் பித்துடையவர்; தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; முத்தி அருள்பவர்; மூன்று வகையான தீயாகியவர்; முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் முதற்பொருளானவர்; அரிசிற்கறைப்புத்தூர், பெருந்துறை, நறையூர்ச் சித்தீச்சரம் ஆகிய தலங்களில் விளங்குபவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

864. தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான்காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், தூயவர்; திருநீறு, அணிந்த திருமேனியுடையவர்; பளிங்கு போன்ற சோதியானவர்; நெருப்பாய் விளங்குபவர்; தீய அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; மானைக் கரத்தில் ஏந்தியவர்; திருவாரூரில் மேவியவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்; மாற்றார்க்குத் தொலைவில் உள்ளவர்; பாதுகாப்பாகும் முத்தி நெறியானவர். அவர் சிவபுரத்தில் விளங்கும் செல்வர் ஆவார்.

865. பரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில்நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலமாகவும், நிலத்தில் மேவும் பயிராகவும், பயிரை வளர்க்கும் மழையாகவும் மழையில் நின்ற நீராகவும் ஆகியவர். நீராகிய கங்கையைச் சடையில் தரித்தவர்; நிலத்தை ஆளும் அரசர்களால் ஏத்தப்படுபவர்; திருமால் வெள்ளைப் பன்றியாகி வழிபட்ட சிறப்பு உடையவர். தேவர்களால் ஏத்தப் படுபவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார். இத் திருப்பாட்டில் திருமால் வெள்ளைப் பன்றியாகிப் பூசித்த தல வரலாற்றுக் குறிப்பு ஓதப் பெற்றது.

866. வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில் முழு வேந்தி னான்காண்
காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், எரியும் நெருப்பேந்தியவர், கெடில நதி பாயும் திருவதிகை வீரட்டானத்தில் விளங்குபவர்; மெய்ம்மையுடையவர்களுக்கு அருளையும் பொய்மை யுடையவர்களுக்கு மருளும் சேர்ப்பவர்; வீணை வாசித்தவர்; மழுப்படை ஏந்தியவர்; மன் மதனை எரித்தவர்; சிவந்த திருமேனியுடையவர்; திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

867. கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்தமாகி
மலையாகி மறிடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், கற்கப்பெறும் வேதம் ஆகமம் அங்கம் என எல்லாச் சாத்திரங்களும் ஆகியவர்; கலைகளின் கருத்தாக விள்ஙகுபவர்; மலையும் கடலும் ஆகி, மண்ணாகி மண் விண்ணும் ஆகி விளங்குபவர்; மலையெடுத்த இராவணனைத் தகர்ந்து விழுமாறு ஒரு விரலால் ஊன்றி அடர்த்தவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவர். அப் பெருமான் சிவபுரத்தில் மேவும் எம் செல்வராவார்.

திருச்சிற்றம்பலம்

88. திருஓமாம்புலியூர் (அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

868. ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டு வானை
உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தைக் கையில் ஏந்தியவர்; நஞ்சினை அருந்தி நீலகண்டர் ஆகியவர்; தேவர்கள் ஏத்தச் சந்திரனைச் சடையில் ஏற்றவர்; எல்லாப் பிறப்புக்களிலும் என்னை ஆளாகக் கொண்டுள்ளவர்; ஊர்ந்து செல்லும் நாகத்தைப் பற்றி ஆட்டுபவர். அப் பெருமான் உயர்ந்த புகழ் மன்னும் ஓமாம்புலியூரில் மேவும் சிறப்புடைய வடதளியில் திகழும் எம் செல்வன் ஆவார். அவரை ஏத்தாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

869. ஆதியான் அரிஅயனெனö றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை யமலன்
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்ற றோம்பும்
உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : ஆதிப்பொருளாகிய சிவபெருமான், அரிபிரமர் அறியவொண்ணாத தலைவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; சந்திரனைத் தேய்த்துத் தக்கனையும் எச்சனையும் அழித்துச் சூரியனின் பற்களை உகுத்து வீரம் விளைவித்தவர்; அந்தணர், வதம் ஓதி வேள்வி புரியும் ஓமாம்புலியூரில் விளங்கும் வடதளியில் அப்பரமன் வீற்றிருக்க அவரை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

870. வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச்
சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவர்; இந்திரனின் தோளை நெரித்தவர்; கற்பகத் தரு போன்ற உமை பாகர்; உயிர்களுக்கு நலன்களைச் செய்யும் எம் பெருமான் ஆவார். அப்பெருமான், மணிமாடங்கள் நிலவும் உத்தமர்கள் வாழ்கின்ற சிறப்பும் மேவிய ஓமாம் புலியூரில் விளங்கும் வடதளியில் வீற்றிருப்பவர். அவரை ஏத்தித் தொழாது திகைத்தவனாகிக் காலத்தைப் போக்கினேனே.

871. அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; காலனின் உயிரைக் கவர்தம் பொருட்டுத் திருவடியை எடுத்தவர்; அப் பெருமான், அந்தணர்கள் மூன்று வகையான தீயை வளர்த்து வேள்வியைப் புரியும் ஓமாம் புலியூரில் பரமனை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

872. பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப்
பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் தன்னை
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்
உயர்புகழ் தணரேத்த வுலகர்க் கென்றும்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அருச்சித்து ஏத்திய அக்கினிக்கு அருள் புரிந்தவர்; திருத்தொண்டர்கள், நரகில் வீழாதவாறு காத்தருள வல்லவர்; மதில் திகழும் ஓமாம்புலியூரில் உலகத்தோர்க்குத் தீங்கில்லாது அருள் வழங்கும் வடதளியில் வீற்றிருக்கும் செல்வர்; அப்பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தனனே.

873. அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பாதனை உமையாள் நங்கை
மணவாள நம்பியைஎந் மருந்த தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு நுங்கப்
பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் ஏத்தப்படுபவர்; இனிய அமுதாகியவர்; அடியவர்களைத் துயரின்றிக் காப்பவர்; உமை மணவாளர்; எனக்க நல் மருந்தாகுபவர்; நீர்வளமும் வயல் வளமும், பொழில் வளமும் விளங்கும் ஓமாம்புலியூரில் மேவும் வடதளியில் வீற்றிருக்கும் எம் செல்வர். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

874. மலையானை வருமலையொன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவாளை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலை மலையில் விளங்குபவர்; யானையின் தோலை உரித்தவர்; வேதம் ஆகியவர்; வேதங்களாலும் அறிதற்கு அரிய கலை ஞானம் உடையவர்; கையில் மான் ஏந்தியவர்; அடியவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவர்; அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் விளங்கும் உத்தமர்; முப்புரங்களை எரித்த வில்லேந்தியவர். அவர் வடதளியில் மேவும் எம் செல்வர் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்துக் காலத்தைப் போக்கினேனே.

875. சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சூடியவர்; சந்திரனையும் நாகத்தையும் உடன் தரித்தவர்; பக்தர்களுக்கு இனியவர்; தன்னொப்பில்லாத அழலுருவானவர்; வேதங்களை ஓதி அந்தணர்கள் பயிலும் ஓமாம்புலியூரில் விளங்குபவர்; அடியவர் உள்ளத்தில் திகழ்பவர்; வடதளியில் மேவும் செல்வர். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

876. வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று
மலையெடுத்த வாளரக்கன் தோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசை கேட்டிருந்ததானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளும் தாளும், பத்துத்தலைகளும் நெரிய ஊன்றி மீண்டும் அவனுடைய இனிய இசையைக் கேட்டு அருள் புரிந்த சிவபெருமான், புகழ் மிக்க மறையவர்கள் விளங்கும் ஓமாம்புலியூரில் மேவும் வடதளியில் விளங்கும் செல்வன் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

89. திரு இன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

877. அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்க வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்தில் உள்ளவர்; அன்புடைய பண்பாளர்களின் சிந்தையில் விளங்குபவர்; சொற்களில் அருமையுடைய வேதங்களாகியவர்; தூய நெறியைக் காட்டியருள்பவர்; வில்லேந்தி முப்புரங்களை எரித்தவர்; தோற்றம் பெறாத வெளியும் மேன்மையுடன் மேவும் பேரொளியுமாக விளங்குபவர்; மயானத்தில் இரவில் நடம் புரியவல்லவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவர். இத்தலத்தில் மேவும் ஈசனின் திருப்பெயர் இவண் ஓதப் பெற்றது.

878. கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சேவற்கொடியேந்திய குமாரக கடவுளின் தந்தையாவர்; உமாதேவியைப் பாகத்தில் ஏற்று மகிழ்ந்தவர்; ஊழியின் முதல்வராக யாண்டும் நிலைத்திருப்பவர்; தன்னை நினைந்து ஏத்தும் அடியவரின் உள்ளத்தில் ஒளிர்பவர்; சுழல்கின்ற சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களில் ஊர்பவர்; அன்பர்கள் அடைகின்ற பிறவிகளில் தாமே துணையாகி விளங்குபவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

879. தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருத்தொண்டர்களின் உள்ளத்தில் உள்ளவர்; தூயநெறியானவர்; மாலயனால் காணப் பெறாதவர்க்கு அரியதோர் தீப் பிழம்பானவர்; பத்தர்களின் சித்தத்தில் இருப்பவர்; நீலகண்டத்தையுடையவர்; மன்மதனை எரித்தும் காலனை உதைத்தும் வீரச்செயலை நாட்டியவர்; சடையில் இண்டைமாலை தரித்தவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

880. வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலும்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும்
தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் இளமையான பிறைச்சந்திரனைச் சூடியவர்; சூலப்படையுடையவர்; திருநீறு பூசியவர்; யாவர்க்கும் படியளக்கும் இறைவன் ஆகியவர்; தனக்கு மேலாக யாரும் இல்லாதவர்; பன்றியின் கொம்பை ஆபரணமாகப் பூண்டவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

881. சூழுந் துயரம் அறுப்பார் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களின் துயர்தீர்ப்பவர்; எல்லாப் பொருள்களுக்கும் தோற்றமும் இறுதியாகவும் நிற்பவர்; நஞ்சினை உட் கொண்டவர்; திருநடனம் புரிபவர்; அடியவனை ஆளாகக் கொண்டவர்; பிறப்பினை அறுப்பவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

882. பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பாதத்தில் சிலம்பு அணிந்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; பூம்புகலூரில் விளங்குபவர்; வேதத்தின் பொருளானவர்; திருவேடங்கள் பல உடையவராகி ஊர்தோறும் திரிபவராகிச் சிவாலயங்களைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு இடர் நேராதவாறு துணை நிற்பவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

883. பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக் கரியார் போலும்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலம் ஏந்திப் பலியேற்று உண்பவர்; பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவர்; பத்தி இல்லாதவர்கள்பால் நெருங்காதவர்; ஏத்தும் அடியவர்களின் குற்றங்களைக் களைபவர்; பூதகணங்களைப் படையாகக் கொண்டவர்; கடல்களும் மலைகளுமாய் விளங்குபவர்; எல்லோரும் ஏத்தும் பெருமான் ஆவார். அவர், இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

884. மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நடமட் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் கொன்றை முதலான மலர்களைச் சூடிய சடையுடைய சிவபெருமான் உமைபாகர்; துன்பம், பிணி ஆகியவற்றைத் தீர்ப்பவர்; காலனை அழித்தவர்; நடனம் புரிந்தவர்; ஐம்பூதங்கள் ஆனவர்; எட்டுத் திசைகளும் ஆனவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

885. கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நான் கருவுற்ற காலத்திலிருந்து என்னை ஆட்கொண்டு அருளும் பெற்றிமையுடையவர்; முப்புரங்களைப் போர் செய்து எரித்து அழித்தவர்; தேவர்களுக்கெல்லாம் கடவுளாகியவர்; திருவடியை வணங்கியேத்திய நான்முகற்கும் திருமாலுக்கும் ஒப்பற்றவராய் நெடிது உயர்ந்தவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

886. அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொண் றுடையார் போலும்
வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையை விரித்துப் பாம்பை அரையில் கட்டிப் பலியேற்றவர்; வலக்கையில் மழுப்படையுடையவர்; தக்கனின் வேள்வியைச் சிதைத்தவர்; மலையைப் பெயர்த்த இராவணனுடைய வீரத்தை அழித்தவர்; அவன் இசை பாடி ஏத்த அருள் புரிந்தவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

90. திருக்கஞ்சனூர் (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

887. மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயந்திருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; மூன்று சுடர்களாகிய சூரியன், சந்திரன், அக்கினி என முக்கண்களை யுடையவர்; வேதமும் தமிழும் உரைத்த நாவலர்; வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் ஆனவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசைப் பொருளாக ஏற்று மகிழ்பவர்; தேவர்களின் தலைவர்; அயனும் மாலும் ஆனவர்; அக்கினி தேவனால் ஏத்தி வழிபடப் பெற்றவர். அப் பெருமான் கஞ்சனூரின் தலைவராய் விளங்க, அக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

888. தலையேந்து கையானை யென்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் கபாலம் ஏந்தியவர்; எலும்பு மாலையுடையவர்; எலும்புக் கூட்டினைத் தாங்குபவர்; சடை முடியில் கொன்றை மாலை சூடியவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; கயிலை மலைக்கும் உரியவர்; தனக்கு உவமையாக யாரும் இல்லாதவர்; சந்திரன், சூரியன், திருமால் மற்றும் தேவர்கள் ஏத்தும் தலைவர்; மானைக் கரத்தில் ஏந்தியுள்ளவர். கஞ்சனூரில் மேவும் அத்தலைவரை கண்டு உய்ந்தேன்.

889. தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், தொழுது ஏத்தும் தொண்டர்களுக்கு அருள் செய்பவர்; மழுப்படையுடையவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; சிவந்த திருமேனியுடையவர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்துத் தக்கனையும் எச்சனையும் அழித்துச் சூரியனுடைய பல்லை உகுத்துப் பகனுடைய கண்ணைப் பறித்தவர். அப் பெருமான், கஞ்சனூரில் மேவும் தலைவர். அவரைக் கண்டு உய்ந்தேன்.

890. விண்ணவனை மேருவில்லா வுடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்
இருவிசும்பும் இருநிலமும் மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் மேலானவர்; மேருவை வில்லாக உடையவர்; அருளுடையவர்களுக்கு மெய்ம்மையுடையவராகவும் அது அற்றவர்களுக்கு அற்றவராகவும், யாவர்க்கும் அவரவர் விதியாகவும் ஆனவர்; பெண்ணாகவும் ஆணாகவும் விளங்குபவர்; அடியவர்பால் பித்து உடையவர்; மயானத்தில் இருப்பவர்; பெருந்தகுதிக்கு உரியபெருமானாகவும், எட்டுத் திசைகளாகவும், கீழும், மேலும் ஆகவும் நிலமாகவும் வானாகவும் விளங்குபவர். கஞ்சனூரில் மேவும் அப்பரமனைக் கண்டு உய்ந்தேன்.

891. உருத்திரனை உமாபதியை உலகா ளானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான் துன்பத்தைத் தீர்க்கும் உருத்திரனாகவும், உமாபதியாகவும், உலகாகவும், உத்தமனாகவும், முத்தாகவும் மேவி விளங்கும் ஒப்பற்றவர்; மலையாக விளங்குபவர்; முப்புரி நூல் மார்பினர்; பகலும் இரவும் ஆகிய காலங்கள் ஆகியவர்; நீர், நெருப்பு, ஆகாயம் என விரிந்து மேவியவர். முத்துக்குவியலாகும் ஒண் சோதியானவர்; திருநீறணிந்த திருமேனியுடையவர்; நினைந்து ஏத்தும் அன்பர்களின் கருத்தாகுபவர். கஞ்சனூரில் மேவும் அப்பரமனை நான் கண்ணாரக்கண்டு உய்ந்தேன்.

892. ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார்சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றைமலர், பாம்பு, தும்பை, பிறைச்சந்திரன், எருக்கு, கங்கை ஆகியவற்றை சடையில் தரித்தவர்; பொன்மலை போன்றவர்; கீழ்வேளூரில் மேவும் கேடிலியப்பர்; மடவார்தம் வளையல்களைக் கொள்பவர்; கஞ்சனூரில் மேவிய அத்தலைவரைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

893. நாரணனும் நான்முகனும் அறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், நாரணனும் நான்முகனும் அறியாதவாறு நெடிது நெருப்புப் பிழம்பாக ஓங்கியவர்; நான்கு வேதங்களின் வடிவானவர்; பூதங்கள் பணி செய்து விளங்கப் பலியேற்று உண்பவர்; பால் போன்ற திருநீறு அணிந்தவர்; நெருப்புப் போன்ற சுடர்மிகும் சிவந்த திருமேனியுடையவர்; சூரியனாகத் திகழ்பவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; இடது கையில் மானை ஏந்தியவர்; கரிய கண்டத்தை யுடையவர்; கஞ்சனூரில் மேவும் தலைவர். அப் பெருமானைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

894. வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்
தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் மேலானவர்; திருவலிவலம், திருமறைக்காடு ஆகிய தலங்களில் மேவியவர; பிறைசூடிய மறையோனாகவும் மற்றும் ஏனைய தன்மையராகவும் விளங்குபவர்; உமாதேவியாரோடு இனிது வீற்றிருப்பவர்; ஏத்திப் போற்றும் அன்பர்களுக்குத் தேன் போன்றவர்; தேவர்கள் போற்றும் தன்மையில் காட்டில் அருச்சுனனுக்கு அருளும் திருக்குறிப்பில் வேடுவனாகத் திகழ்ந்தவர். கஞ்சனூரில் மேவும் அத்தலைவரைக் கண்டு உய்ந்தேன்.

895. நெருப்புருவத் திரமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான் நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணீறு தரித்தவர்; நினைவோரின் நெஞ்சில் நிறைபவர்; முயலகன் மேல் தாள் வைத்து நடனம் புரிபவர்; சலந்தராசூரனை அழித்தவர்; ஞானிகளின் சிந்தையில் விளங்குபவர்; யாவற்றுக்கும் விதியானவர்; திருவெண்ணீறாகத் திகழ்பவர்; ஒளியாகியவர்; தேவர்கள் போற்றும் கருத்தாகியவர். கஞ்சனூரில் மேவும் அக்கோவைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

896. மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலாணைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : திருமாலுக்கு ஆழியை அருள் செய்த சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியுள்ளவர்; தனது தோழனாகிய குபேரனின் விமானத்தைக் கவர்ந்த இராவணனை மலையின்கீழ் அடர்த்துப் பின்னர் அருள் செய்தவர். கஞ்சனூரில் ஓங்கும் அத்தலைவரைக் கண்டு உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

91. திருஎறும்பியூர் (அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

897. பன்னியசேந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணேடு பண்ணிறைந்த கலைக ளாய்
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந் தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பியூர் மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் பெருமைமிக்க செந்தமிழின் திறம் அறியாதவனாகிய எனக்கு அருள் திறத்தை அறிவித்து அதன் நெறியைக் காட்டியவர்; அன்பாய் விளங்கி அன்னையும் தந்தையும் ஆகி ஆதரித்து அருள் செய்து ஆளாகக் கொண்டவர்; எறும்பியூரில் மேவும் மாணிக்கநாதர். நான் அப் பெருமானை அடையப் பெற்றேன் !

898. பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளித்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பளிங்கு போன்று ஒளிரும் சோதியானவர்; உயிர்க்கெலாம் தலைவர்; பாசுபத வேடத்தினர்; சலந்தராசூரனை அழித்தவர்; வேதங்களின் தலைவர்; யாவர்க்கும் மேலானவர்; உலகளந்த திருமாலாக விளங்குபவர்; படைக்கும் நான்முகனாகியவர்; அல்லல் தீர்க்கும் அருமருந்தாகியவர்; என்னை ஆட்கொள்ளும் தன்மையில் உள்ளம் தெளியச் செய்தவர்; எறும்பியூர் மலைமேல் விளங்கும் மாணிக்கநாதர். செழுஞ்சுடராகிய அப்பெருமானை நான் அடையப் பெற்றேன்.

899. கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படித்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கருப்பொருளாகவும், மனத்தில் மேவும் கருத்தாகவும், ஞானச் சுடராகவும், அமரர் ஏத்தும் உருவாகவும் விளங்குபவர்; உலகின் முதல் இறுதி நடு என முழுவதும் ஆகித் திகழ்பவர்; உமைபாகர்; மயானத்தில் ஒளிரும் மாசிலாமணியானவர்; எறும்பியூர் மலைமேல் விளங்கும் மாணிக்கநாதர். செழுஞ்சுடராகிய அப்பெருமானை நான் அடையப் பெற்றேன்.

900. பகழிபொழில் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும் அம்பொற் குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையே ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்களை அக்கினிக் கணை தொடுத்து அழித்தவர்; புகழ்ந்து ஏத்தும் அன்பர்களுக்கு இனிமைதரும் அமுதம் ஆனவர்; புண்ணியனாக விளங்குபவர்; பொன் மலையாகவும், முத்துத் தூணாகவும், உமாதேவியின் தலைவராகவும், ஏத்தும் எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கநாதராகவும் விளங்குபவர். அச் செழுஞ் சுடரை நான் அடையப் பெற்றேன்.

901. பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பூதங்களுடன் மேவி நடனம் புரிபவர்; சூலப்படையுடையவர்; அயனும் மாலும் ஏத்தக் காணாவண்ணம் நிமிர்ந்து ஓங்கியவர்; முனிவர் கணங்கள் ஏத்தும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கநாதர். அச் செழுஞ்சுடரை நான் அடையப் பெற்றேன்.

902. கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மேகம் போன்றவர்; மழையாய் விளங்குபவர்; பொழிந்த நீரைக் கதிரவனாய் ஒளிர்ந்து கவர்பவர்; இடபத்தில் ஏறிப் பல ஊர்களிலும் திரிபவர்; திருவொற்றியூரில் விளங்குபவர்; பேரெழுத்தாகிய பிரணவமாகத் திகழ்பவர்; பிரமன், திருமால், இந்திரன் ஆகியோர் ஏத்தும் எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கநாதர். அச்செழுஞ் சுடரை நான் அடையப் பெற்றேன். திருமால் பிரமன் முதலானோர் வழிபட்ட திருத்தலச் சிறப்பானது இத் திருப்பாட்டில் உணர்த்தப் பெற்றதைக் காண்க.

903. நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிருகாலும் ஆகா சம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாய் செம்பொன்
ஆணியென்று மஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலவும், நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும், விண்மீன்களும், மண்ணுலகமும், விண்ணுலகமும், மன்னுயிரும், என்னுயிரும் ஆகியவர்; பொன்மலையாகவும், நீல மலையாகவும், பவளத்திரள் எனவும் ஏத்த எறும்பியூரில் மேவும் மாணிக்கநாதர். அஞ்செழுஞ்சுடரை நான் அடையப் பெற்றேன்.

904. அறந்தெறியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : அறத்தின் நற்றன்மையை உணராது வெற்றுச் சொற்களைச் கூறிச் சிவபெருமானுடைய திருவடியை ஏத்தாத சமண்நெறியில் வாழ்க்கையைக் கழித்தநாள் மெய்யான நாள் ஆகாது. ஈசனின் திருவைந்தெழுத்தை ஓதி அடிமைத்திறத்தில் அன்பு மேலிட்டுச் செறிந்த அன்புடன் எறும்பியூர் மலை மேல் மேவும் மாணிக்கத்தைச் சென்றடையப் பெற்றேன். அதுவே நற்பயனைத் தந்தது என்பது குறிப்பு.

905. அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை அறியும் அன்பர்களின் மனத்தில் உள்ளவர்; அவ்வாறு அறிபவர்களுக்கு அன்றி, அறியாதார் மனத்தில் மேவாதவர்; அரவத்தை மாலையாகவும் ஆபரணமாகவும் உடைய புண்ணியன்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு மிடற்றில் தேக்கியவர்; தேன் துளிர்க்கும் கொன்றை மலரைச் சடையில் தரித்தவர்; மடையில் தாமரை மலர் விளங்கும் சிறப்புடைய எறும்பியூரில் மலை மேல் விளங்கும் மாணிக்கம் ஆனவர். அச் செழுஞ்சுடரைச் சென்று நான் அடைய யாவும் பெற்றேன். ஈசனின் இன்னருளைப் பெற்ற தன்மையானது யாவும் பெற்றேன் என்பதாயிற்று.

906. அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : அரிய தவத்தில் மேம்பட்டவனாகிக் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோள் முரிந்து நெரியுமாறு செய்த சிவபெருமான், அவ்வரக்கனின் இனிய இசை கேட்டு அருள் புரிந்தவர். அவர். யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர். அப் பெருமான், எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கமாகிய செழுஞ்சுடர் ஆவார். அவரைச் சென்று அடையப் பெற்றேன்.

திருச்சிற்றம்பலம்

92. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

907. மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைப்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் சூலம் ஏந்தியவர்; மயானத்தில் ஆடுபவர்; யாவற்றுக்கும் முதலானவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்க உகந்து ஏற்பவர்; தேவர்களின் நாயகர்; ஆலகால விடத்தை உண்டு உகந்த தலைவர்; நான்முகனும் திருமாலும் போற்றவும் காணற்கு அரிய பெருமானாகியவர்; புனிதனாக விளங்குபவர்; யாவற்றையும் காத்தருளும் தெய்வமாகத் திகழ்பவர். அப்பெருமான், கழுக்குன்றத்தில் அமர்ந்து விளங்குபவர். கற்பகமாகிய அப்பெருமானை நான் கண்ணாரக் கண்டேன்.

908. பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்டலையைச் (மண்டையோடு) சடைமேல் கொண்டு விளங்குபவர்; புலித்தோலை உடுத்தியவர்; சொல்லும் அதற்குரிய பொருள் விளக்கமும் ஆகியவர்; சுடர் மயமாகத் திகழ்பவராகி, எலும்பு மாலை அணிந்தவர்; முறைமையற்ற செயலைப் புரிந்த காலனை அடர்ந்தவர்; ஆல் நிழலில் மேவி அறம் உரைத்தவர்; அமுதம் போன்று அன்புடையார்க்கு ஆகுபவர்; காவியணிந்த காபாலி யானவர். அப் பெருமான், கற்பகம் போன்று விளங்கக் கண்ணாரக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

93. பொது - பலவகைத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

909. நேர்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
படஅரவும் பனிமதியும் வைத்த செல்வவ்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
தனித் தொருதண் டூன்றிமெய் தளவா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளவர்; கங்கையைச் சடைமுடியில் வைத்தவர்; அரவத்தையும் சந்திரனையும் உடன்வைத்தவர். தொண்டர்கள் தமது மனத்தை ஒருமைப்படுத்தி, மூப்படைந்து தண்டு ஊன்றி, மெய் தளர்ந்து நலியாத முன்னம், பூந்துருத்தி ! பூந்துருத்தி ! என ஏத்துவாராக. அவ்வாறு ஏத்த, புலால் தன்மையுடைய இவ்வுடலைப் போக்கிப் பிறவாத் தன்மையை அடையலாம்.

910. ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
யகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தான மென்பீ ராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்க லாமே.

தெளிவுரை : மடவாரோடு விளங்கி மாய வாழ்க்கையில் மகிழ்பவர்களே ! கோழையானது பெருகி மிடற்றில் அடைத்தால் உதவுவார் யாரும் இல்லை. சந்திரனும் பாம்பும் கங்கையும் மடையின் மேல் வைத்த பண்பாளராகிய ஈசன் மேவும் பதியாகிய நெய்த்தானம் என்பீராகில் இப்பிறப்பின் துன்பத்தை நீக்கிப் பிறவாமையை அடையலாம்.

911. பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

தெளிவுரை : நிலைத்தன்மையில்லாததும் அழியக்கூடியதும் ஆகியவற்றைப் பேசி அதில் மகிழ்ந்து நிலையற்ற பொருள்களைத் தேடி உலகியலில் களித்தவராக உள்ளவர்களே ! நெய் முதலான பஞ்ச கவ்வியத்தைப் பூசனையாக ஏற்ற உகக்கும் நீலகண்டப் பெருமான், சடைமுடியுடையவர்; நெற்றியில் கண்ணுடையவர். அப் பெருமான் மேவும் தலமாகிய ஐயாறு என்று உரைப்பீராகில் அல்லல் யாவும் தீர்ந்து தேவர் உலகை ஆளலாம்.

912. இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே யென்பீ ராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

தெளிவுரை : தம் கையில் உள்ள பொருள் குறைவு படும் என்னும் கருத்தில் ஒருவருக்கும் உதவி செய்யாது, தாய், தந்தை, பெண்டிர், மக்கள் என்னும் தளைப்பட்டும் உணராது களித்த மனத்தினராக வாழ்பவர்களே ! சிவபெருமான், நம்மைத் துன்பத்திலிருந்து விடுவிப்பவர்; தேவர் உலகத்தை ஆளச் செய்பவர். அவர் மேவும் பழனம் என்னும் தலத்தை ஏத்தி உரைப்பீராக. உமது வினை நோய் யாவும் கெடும்.

913. ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே.

தெளிவுரை : மாயும் தன்மையுடைய மனை வாழ்க்கையை நிலை பேறு உடையதாகக் கருதி மகிழ்ந்து வாழ்பவர்களே ! ஒன்பது துளைகளையுடைய இவ்வுடலின் தன்மையை நினைக்காதவரானீர் ! எல்லாத் துவாரங்களும் அடைப்பட்டு இறுதிக் காலம் நெருங்கும்போõது உணரமாட்டீர். உயிரனாது நீங்கிச் செல்லும் முன்னர், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய ஈசன் மேவும் சோற்றுத்துறையைச் சிவபஞ்சாட்சரம் போன்று உரைப்பீரானால், துயர் யாவும் நீங்கித் தூய நெறியில் சேரலாம்.

914. கலஞ்சுழிக்குங் கருங்கட்லசூழ் வையந் தன்னிற்
கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கு மன்னாகந் தன்னான் மேய
அருமறையோ டாறங்க மானானர் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில், பிறவியாகிய மாயக் கடலில் அழுந்தி நலத்தை எல்லாம் அழித்துத் துன்பம் அடையும் நெஞ்சே ! உனக்கு இன்பம் நிகழ வேண்டுமானால் ஈசனின் திருவடியை ஏத்தி உரைப்பாயாக. ஆதிசேடன் வழிபட்ட பெருமையுடையதும் வேதமும் அதன் அங்கமும் ஆகிய சிவபெருமான் மேவும் கோயிலாவதும் வலஞ்சுழியே என உரைத்து ஏத்துவாயாக. கொடிய வினை யாவும் தீர்ந்து மறுமையில் வானுலகின் ஆட்சியைப் பெறலாம்.

915. தண்டிகுண் டோதரன்பிங் கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை யுலகம் படைத்தான் தானும்
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

தெளிவுரை : தண்டி, குண்டோதரன், சங்கு கன்னன் ஆகிய சிவகணத்தினரும், பிருங்கி என்னும் முனிவரும் நந்திதேவரும், உலகத்தைப் படைத்த பிரமனும், உலகினை அளந்த திருமாலும், பல்லாண்டு இசைத்துப் போற்றவும் சிறிய கண்களையுடைய பூத கணங்கள் பாடிப் போற்றவும் விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமான் இடப வாகனத்தில் வீற்றிருக்கின்ற கண்டியூர் என்னும் தலத்தை ஏத்தி ஓதுவீராக. உமது கொடிய வினை யாவும் தீரும்.

916. விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன்தமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே யென்பீ ராகிற்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! வெள்ளை இடபத்தையுடைய ஈசனின் இனிய திருவடியைக் கண்டதும் விடத்தை நீக்கிய பாம்பு அசையாது நின்று விளங்குதல் போன்ற, அசைவற்ற தன்மையில் சிந்தித்திருப்பாயாக. மாலும் அயனும் காணாதவராய், ஆல் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்த செல்வராகிய ஈசன் விளங்கும் தலமாகிய குடமூக்கினை ஏத்தி ஓதி உரைப்பாயாக. உமது கொடிய வினை யாவும் தீர்ந்து அரனின் திருப்பாதத்தை அணுகலாம்.

917. தண்காட்டச் சந்தனமுந் தவள நீறும்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி யிரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.

தெளிவுரை : சிவபெருமான், குளிர்ச்சியான சந்தனமும், வெண்ணீறும் தரித்தவர்; கொன்றை மாலை சூடியவர்; மயில் போன்ற சாயலை உடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டவர்; கையில் நெருப்பேந்தி இரவில் நடனம் புரிவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை நினைந்து உரைப்பீராக. எல்லா வினையும் கெட்டழியும்.

918. தந்தையார் தாயா ருடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கென்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.

தெளிவுரை : தந்தை, தாய், உடன் பிறந்தவர், தாரம், புத்திரர், தான் என விளங்குபவர் வந்த விதம் யாது ? போகும் வழி யாதோ ! எனவே, நிலையற்றதாகிய இத்தன்மையில் மகிழ வேண்டாம். நெஞ்சமே ! உனக்கு ஒன்று சொல்கின்றேன். சந்திரனையும் அரவத்தையும் சடையில் தரித்த எந்தை ஈசனின் திருநாமம் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும். அதனை உரைத்து ஏத்துக. பெருமைக்குரிய வீடு பேற்றை அடையலாம்.

திருச்சிற்றம்பலம்

94. பொது - நின்றதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

919. இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாய றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பூமியாகவும், நெருப்பாகவும், நீராகவும், இயமானன், காற்று எனவும், சந்திரன், சூரியனாகவும், ஆகாசமாகவும் விளங்கும் அட்ட மூர்த்தியானவர். நலனுக்குரிய பெருமையும் துன்பத்திற்குரிய சிறுமையாகிய குற்றமும் தனது ஆற்றலால் விளைவிப்பவர். பெண், ஆண், அலி எனவும் இயல்பான ஒளி உருவமும் தாமேயாகுபவர். நேற்று இன்று நாளை என்னும் மூன்று காலமும் ஆகியவர். அவர் சடைமுடியுடைய அடிகளாய் யாங்கணும் நின்றவராவர்.

920. மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் காப்பாலோ ராண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மண்ணுலகமும், விண்ணுலகமும் ஆனவர்; மலையாகத் திகழ்பவர்; வயிரம் மாணிக்கம் என விளங்குபவர்; காணும் கண்ணாகவும், கண்ணில் விளங்கும் கருமணியாகவும் விளங்குபவர்; எல்லா வடிவமைப்பும் உடைய கலைப் பொருளாகவும், கலைக்குரிய ஞானமாகவும் விளங்குபவர்; பெண்ணாகவும், அத்தகைய போக சக்திக்குரிய உயிர்ப்புத் துணையாகிய ஆணாகவும் மேவியவர்; பிரளயத்துக்கும் அப்பால் விளங்கும் அண்டமாக விளங்குபவர்; எண்ணும் எழுத்தும் ஆகி, எழுகின்ற சுடர்களாகியவர். எம் அடிகளாகிய அவர் யாவுமாய் நின்று விளங்குபவராவார்.

921. கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் கலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கல்லும், களறும், கானும் ஆகியவர்; காவிரியும், கால்வாயும், கழியும் ஆகியவர்; புல், புதர், செடியாகியவர்; புரங்களின் தோற்றங்களாகியவர். புரங்கள் மூன்றையும் எரித்தவர்; சொல்லாகவும் அதன் பொருளாகவும் ஆகியவர்; போக்கும் வரவும் ஆகிய அசைவாகியவர்; நெல்லாகவும் விளையும் நிலமாகவும் வளர்க்கும் நீராகவும் ஆகியவர். அவர் நெடுஞ்சுடராய் ஓங்கி யாவுமாய் நின்ற அடிகள் ஆவார்.

922. காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமானுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானு மேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், காற்றாகி கார்மேகமாகி முக்காலமும் ஆகியவர்; கனவும் நனவும் ஆகி இரவும் ஆனவர்; கூற்றும், கூற்றுவனை அழித்த ஆற்றலும், கடலும், கடலின் தலைவனும் ஆகியவர்; நீறணிந்த அழகும் திருமேனியும் ஆனவர்; ஆகாயமாகவும் அதன் எல்லையாகவும் ஆனவர்; ஏற்றில் ஏறும் இறைவனாகவும் ஏற்றுக்கு உரியவராகவும் விளங்குபவர். எழுகின்ற சுடராய் மேவும் எம் அடிகளாகிய அவர், யாவுமாய் நின்று விளங்குபவராவர்.

923. தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பும் நீறுமாகித் திண்மை, திசை திசைக்கோர் தெய்வமாகி விளங்குபவர்; தாயாகவும் தந்தையாகவும் மற்றும் சார்வும் ஆகியவர்; விண்மீன், சூரியன், சந்திரன், காய், பழம், பழத்தின் சுவை என ஆகியவர். இவற்றை நுகர்பவன் தானேயாகி முன்னிலையும் படர்க்கை எனச் செல்லும் யாவும் ஆகி, நேர்மையாகி, நெடுஞ் சுடர் ஆகி நிமிர்ந்த எம் அடிகள், யாவுமாய் நின்றவராவார்.

924. அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதியாய், வேதமாய் அதன் அங்கமாய் ஐம்பூதமாய், எல்லாச் சொல்லும் ஆகிச் சந்திரனாய் அதன் இயல்பாய், கங்கையும் காவிரியும் ஆகியவர்; கன்னியாய்க் கடலாகி, மலையாகிக் கழியுமாகி, எங்குமாய் இடப வாகனராகி விளங்குபவர். அவர் எழுசுடராய் ஓங்கிய அடிகளாகி யாங்கும் நின்றவராவார். கடல், கங்கை, காவிரி, மலை முதலான யாவற்றுக்கும் அதன் அதிதேவதையைச் சுட்டுதலாம்.

925. மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புத் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கோல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

தெளிவுரை : ஈசன், மாதா, பிதா, மக்கள், கடல், ஆகாயம், கோதாவிரி, குமரி எனவாகியவர்; புலித்தோலை உடுத்தியவர்; மலர்தூவி ஏத்துபவர்களுக்குப் பிறப்பினை அறுக்கும் புனிதர்; அடியவர்கள் நினைத்தவாறு நிற்பவர். அவர் அழல், வண்ணனாய் நின்றவராவார்.

926. ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவாகிப் பஞ்ச கவ்வியமாகி, அறிவாகி, அழலாகி, அவியாகி, நாவும் உரையும் ஆகி, நாதனாகி, வேதத்தின் பொருளாகி, பூவும் அதன் மணமும் ஆகித் தேவதையாகவும் விளங்குபவர். செழுஞ்சுடராகிய அவ்வடிகள் யாவுமாய் நின்றவராவார். கடல், கங்கை, காவிரி, மலை முதலான யாவற்றுக்கும் அதன் அதிதேவதையைச் சுட்டுதலாம்.

925. மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கோல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

தெளிவுரை : ஈசன், மாதா, பிதா, மக்கள், கடல், ஆகாயம், கோதாவிரி, குமரி எனவாகியவர்; புலித்தோலை உடுத்தியவர்; மலர்தூவி ஏத்துபவர்களுக்கு பிறப்பினை அறுக்கும் புனிதர்; அடியவர்கள் நினைத்தவாறு நிற்பவர். அவர் அழல், வண்ணனாய் நின்றவராவார்.

926. ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவாகிப் பஞ்ச கவ்வியமாகி, அறிவாகி, அழலாகி, அவியாகி, நாவும் உரையும் ஆகி, நாதனாகி, வேதத்தின் பொருளாகி, பூவும் அதன் மனமும் ஆகித் தேவதையாகவும் விளங்குபவர். செழுஞ்சுடராகிய அவ்வடிகள் யாவுமாய் நின்றவராவார்.

927. நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நீர், நீள அகலம் ஆகிய அளவீடு, நிழல், விசும்பு, பேர், பெருமை என ஆகியவர்; முப்புரம் எரித்தவர், தன்னை அடைந்தவர்களை ஆட்கொள்பவர்; உலகமாகவும், பண்ணாகவும், பாடலாகவும் ஆனவர். பரஞ்சுடராய் மேவும் அவ் வடிகள் யாங்கணும் நின்றவராவார்.

928. மாலாகி நான்முகனாய் மாபூதமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப்
பூதங்கமாய்ப் புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருமால், நான்முகன், பூதங்களாகவும் அதன் தத்துவங்களாகவும், மகிழ்வும் ஆகியவர்; எண் திசைக்கும் எல்லையாகி நிலமாகவும், பரலோகமாகவும் பூலோகம், புவலோகம், சுவலோகம், பூத கணங்கள், ஆகவும் விளங்குபவர்; புராணனாகிய தொன்மையுடையவர். அவர், இயலாததையும் இயல்விக்கும் எழுசுடராய் மேவிய அடிகளாகி யாங்கணும் நின்று விளங்குபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

95. பொது - தனித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

929. அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சத் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் தந்தையும் தாயும் தலைவரும் ஆனவர்; அன்புடைய மாமனும் மாமியும் நீவிரே; ஒப்புமையாக மேவும் வாழ்க்கைத் துணையும், விளங்கும் பொருள்களும் ஆனவர்; குலம், சுற்றம், ஊர், யான் துய்ப்பனவும், என்னிடம் உய்த்துள்ளனவும் ஆக்குபவர் நீவிர்; என் நெஞ்சில் துணையாக விளங்குபவர்; பொன்னும் மணியும் முத்தும் ஆகியவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து செல்லும் தேவரீர், நீவிரே ஆவார்.

930. வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செஞ் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

தெளிவுரை : கூற்றமும் தீவினையும் என்பால் நைந்தது, துன்பம் யாவும் தீர்ந்தோம்; சூரியன் எங்கு எழுந்தால் என்ன ! என்னும் தன்மையில் பற்று யாவும் தீர்ந்த தன்மையில், சடையில் கங்கை யேந்திக் கையில் நெருப்பேந்திப் பஞ்ச கவ்வியத்தைப் பூசையேற்கும் பவளவண்ணர் என் சிந்தனையில் உள்ளவராவார்.

931. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவா பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

தெளிவுரை : ஈசன் ஒருவரை ஆட்டுவித்தால் ஆடாதவர் இல்லை; அடக்கினால் அடங்காதவர் இல்லை; பக்தியின் சீலம் இன்றி ஓட்டுவித்தால் அதை யாரால் மாற்ற முடியும். உள்ளிருந்து உருகுமாறு செய்பவரும் அப்பரமன் ஆவர். பாடச் செய்வதும் பணியச் செய்வதும் ஈசனே. அப்பெருமான், ஒன்றைக் காட்டினால் அன்றி யாரும் எதனையும் காண முடியாது. இது ஈசன் உள்ளிருந்து யாவும் புரிதலை ஓதுதலாயிற்று.

932. நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

தெளிவுரை : ஈசன, வீடு பேற்றுக்கு உரியவராகித் திருவடி மலர் மேவும் ஞானமூர்த்தியாகியவர்; சுடர் ஆகவும், மறைகளைக் கடந்தவராகவும், சொற்களைக் கடந்தவராகவும் விளங்குபவர். நெஞ்சுள் நின்று, நிலையற்ற புலால் உடம்பின் உள்ளும் மேவியவர். கற்பகமாகி அப்பரமன், நான் தொடர்ந்து ஏத்தும் கடவுளாவார்.

933. திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போது மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அலை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.

தெளிவுரை : நெஞ்சே ! ஊர்தோறும் திருக்கோயில் இருக்க வேண்டும்; அனைவரும் திருவெண்ணீறு அணிந்த பக்தியுடன் பாட வேண்டும்; பேரூரன் பல கோயில்கள் செழிக்க வேண்டும்; கோயில்களில் முறைப்படி வெற்றிச் சங்கு ஊத வேண்டும்; முறைப்படி வெற்றிச் சங்கு ஊத வேண்டும்; விதானமும் கொடியும் விளங்க வேண்டும்; பக்தர்கள் மலர்தூவி ஏத்தி அதன் பயனைக் கொள்ள வேண்டும். இத்தன்மை இல்லையேல், அது ஊர் எனக் கொள்ளுவதற்கு உரியதன்று; பெரும் காடாகும்.

934. திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அறியற்றார் பிறந்தரா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

தெளிவுரை : நெஞ்சே ! ஈசனின் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை ஓத வேண்டும்; தீ வண்ணராகிய அப்பெருமானுடைய அருளிச் செயலைப் பேசி மகிழ வேண்டும்; திருக்கோயில் சென்று தரிசித்தல் வேண்டும்; மலர் பறித்துத் திருக்கோயில்களுக்குச் சென்று ஏத்தி அருச்சித்தல் வேண்டும்; வினையாகிய நோய்கள் கெடும் தன்மையில் திருவெண்ணீறு அணியவேண்டும். இவ்வாறு அன்புடன் ஏத்தாதவர்கள் பிறவி கொண்டது ஏன் என்றால், பிறவி என்னும் நோய் பெருக, இறப்பும், பிறப்பும் உடைய தொழிலைச் செய்யும் தன்மையுடையதன்றி வேறு இல்லை என்பதாம்.

935. நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் யாவும் ஆனவர்; நினைந்து ஏத்தும் மனத்தின் வித்தாகுபவர்; தலைமையாக விளங்குபவர்; ஆளும் தன்மையின் அமுதமானவர்; நான்கு வேதமும் அதன் ஆறு அங்கங்களும் ஆனவர்; பொன்னும், மணியும், போகமும் ஆனவர்; பூவுலகத்தில் புகழத் தக்கதாக மேவும் பொருளாக உடையவர். பெருமானே ! தேவரீர் எவ்வாறெல்லாம் ஆகி விளங்குகின்றீர் என மகிழ்வதன்றி, ஏழையேன் வேறு எத்தகைய சொற்களால் ஏத்துவேன் !

936. அத்தாவுன் அடியேனை அன்ப லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் அடியேனை அன்பால் ஈர்த்துக் கட்டியவர்; திருவருள் நோக்கம் புரிந்து என்னைத் தூய்மை செய்து ஆட்கொண்டவர்; யாவருக்கும் அரிய பொருளாகிய தேவரீர், எளிமையாக மேவி என் உள்ளத்தில் ஒளிர்பவர்; என்பால் இரக்கம் கொண்டு ஏற்றுக் கொண்டவர்; பொருளற்ற செயலை மேவிய பித்தனாகவும், அறிவற்ற செயலை மேவிய பேதையேனாகவும், வன்மையாய் மேவும் பேயனாகவும் இருந்த அடியேன் செய்த பிழைகள் யாவற்றையும் மன்னித்தவர். இத்தனையும் செய்தவர் என் பரம்பொருளாகிய தேவரீரே அல்லவா ! உமது திருக்கருணையின் பெருமைதான் யாதோ !

937. குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் ஞானி யல்லேன்
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வேன் தோன்றினேன் ஏழையேனே.

தெளிவுரை : ஈசனே ! தீவினையால் மேவி மூவாசையால் உந்தப்பட்டு மும்மலத்தால் பந்தப்பட்டு மேவும் புன்மையுடைய மனித குலத்தை யுடையேனாகி, நற்குணமும் குறியும் அற்றவனாய்க் குற்றமே பெரிதும் உடையவனானேன்; பயனை விளைவிக்கும் நலனை உடையவன் அல்லேன்; ஞானி அல்லேன்; நற்பாங்கு உடையவர்களுடன் கூடி இசைந்திலேன்; விலங்கின் தன்மையுடையவனாயின், அதற்குரிய சிறப்பினை மேவிலேன்; விலங்கிடை மேவும் தீய செயல்களையும் மேவாது இருந்திலேன்; பிறர் வெறுக்கும் பாங்கில் பேசுதலை உடையேன்; இல்லத்தின் சிறப்பினை உடையேன் அல்÷ன்; யாசித்துச் சேர்க்கும் பொருட்பற்று உடையோனாகிப் பிறர்க்கு ஈயாதவனானேன். நான் ஏன் இப் பிறவியைக் கொண்டேன் ! அந்தோ !

938. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

தெளிவுரை : எத்தகைய தன்மையிலும் குறையாத வகையால் எடுக்க எடுக்க நிறைந்து வளரும் குபேரனிடம் உள்ள சங்க நிதி பதும நிதி ஆகிய இரண்டினைத் தந்து பூவுலகத்தையும் வானுலகத்தையும் ஆட்சி பெறும் பேற்றையும் ஒருவர் தருவாராயினும் அவர் மங்கியழியும் தன்மையுடையவராதலால் அவற்றை யாம் ஒரு பொருளாக மதிக்க மாட்டோம். ஒருவர் ஈசனிடம் அன்பர் ஆகில், அவர் உடற் பிணியுடன் திரிவராயினும் அவரை நாம் வணங்கி மகிழ்வோம். இத் திருப்பாட்டு ஈசனின் அடியவர்களையன்றி ஏனையோரைப் பேணாமையை உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

96. பொது - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

939. ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரøயோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார்நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

தெளிவுரை : சிவபெருமான், என் பிறவி நோயைத் தீர்த்து ஆட்கொண்டவர்; திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்; பிரமனின் தலையைக் கொய்து கபாலமாக ஏந்திப் பலியேற்றவர்; திருமாலின் பேருடலைக் கொண்டவர்; மானை இடக்கையிலும் மழுப்படையை வலக்கையிலும் கொண்டவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமான், அன்பின் வடிவினராகிய கண்ணப்ப நாயனார் ஆற்றி பூசை முதலான திருத்தொண்டினை ஏற்ற கபாலியார் ஆவார்.

940. முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருமார்பில் முப்புரி நூல் திகழ விளங்குபவர்; பன்றியில் கொம்பை ஆபரணமாகக் கொண்டவர்; உமா தேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர்; சிவந்த திருமேனியில் வெண்மை திகழும் திருநீறு திகழ்ந்து ஒளிருமாறு பூசி விளங்குபவர்; சங்கினால் ஆகிய தோடு என்னும் அணியைக் காதில் அணிந்தவர்; ஒளிவிடும் கிரீடங்களை முடியில் கொண்டு விளங்கும் தேவர்கள் திருவடியை ஏத்தித் தொழ விளங்குபவர்; தாருகவனத்தில் மேவிய மங்கையர் அளித்த பலியை உகந்து ஏற்றவர். அப் பெருமான், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

941. முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான் சடைமுடியுடையவர்; இளம்பிறைச் சந்திரனையும், நாகத்தையும் தரித்தவர்; திருப்பாதத்தில் சிலம்பும், கழலும் அணிந்து விளங்குபவர்; அடங்காத முயலகனை அடக்கித் திருவடியின் கீழ்க் கொண்டு விளங்குபவர்; அழகிய வடிவுடன் திகழும் மழுப்படையை வலக்கையில் ஏந்தியுள்ளவர்; திருமாலை இடப்பாகத்தில் திகழுமாறு கொண்டு விளங்குபவர்; உடுக்கையைக் கையில் ஏந்தியவர்; எலும்பினைத் தோளின் மேல் கொண்டவர். அப் பெருமான் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.

942. பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், விபூதிப் பையைக் கொண்டுள்ளவர்; புலித்தோலை உடையவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; பாசி மணியும் பாம்பும் அரையில் கட்டியுள்ளவர்; எல்லா மணியும் பாம்பும் அரையில் கட்டியுள்ளவர்; எல்லா உலகங்களையும் படைத்துத் தன்பால் ஒடுங்கி அடங்கவும் செய்பவர்; கொக்கின் இறகையும், வில்வத்தையும் சடை முடியில் சூடி விளங்குபவர்; கொடியவனாகிய சலந்தராசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர்; சிவந்த திருமேனியுடையவர். அப் பெருமான், அடியவனை ஆட்கொண்ட சிவனார் ஆவார்.

943. அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்கு திரையாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திரந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அந்தகாசூரனைக் கூர்மையான சூலத்தால் அழித்தவர்; அருமையுடைய வேதங்களைத் தேர் செலுத்தும் குதிரைகளாகக் கொண்டவர்; ஆலால சுந்தரரைக் கவரி வீசுமாறு கொண்டவர்; சுடுகாட்டை நடனம் புரியும் இடமாகக் கொண்டவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டவர்; மாகளரைத் துவாரபாலகராகக் கொண்டவர்; வேதத்தின் பாங்கினை ஐவகை வேள்வி முதலாகிய தந்திரங்களாகவும், சிவ வழிபாடு மேவும் திருவைந்தெழுத்து முதலான மந்திரங்களாகவும் அருளிச் செய்து விளங்குபவர். அப்பெருமான், சமணத்தில் மேவிய என்னை மீட்டு ஆண்டு கொண்டவராவார்.

944. பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பிளங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண்டார்
உடலுறுநோய் தீர்த்தென்னையாட் கொண் டாரே.

தெளிவுரை : ஈசன், பூத கணங்கள் பலவகையான வாத்தியக் கருவிகளைப் பயிலச் செய்பவர்; பவளம் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; பளிங்கு போன்ற ஒளி திகழும் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; கங்கை தரித்த சடை முடியில் சந்திரனைச் சூடியுள்ளவர்; அழகிய நீலகண்டத்தை உடையவர்; தாருக வனத்தில் மேவிய மகளிர் அளித்த பொருள்களைப் பலியாகக் கொண்டவர்; திருவொற்றியூரில் மேவி வீற்றிருப்பவர். அப் பெருமான் என் உடலில் சூலை நோயைத் தீர்த்து ஆட்கொண்டவராவார்.

945. அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார் தொண்டெனைக் கொண்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய தில்லை அம்பலத்தை ஆடுகின்ற அரங்காகக் கொண்டவர்; ஆல கால விடத்தை அமுதம் என உட்கொண்டு அருளியவர்; பொன் போன்ற இதழ்களையுடைய கொன்றை மாலை தரித்தவர்; அன்புடையவராகித் திருக்கோடி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். மாணிக்கத்தை உடைய அரவத்தைத் தோள்வளையாகக் கொண்டவர்; பெருமையுடைய இடபத்தின் மேல் ஏறித் திருவீதியில் உலா வருபவர். அப் பெருமான் சூலப்படையைக் கையில் ஏந்தியவராகி என்னைத் தொண்டன் ஆக்கிக் கொண்டவர் ஆவார்.

946. படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென்றங்கவரைப் படைத்துக்கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர்வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே
யென்னைஇந்நாள் ஆட்கெட இறைவர்தாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலையும் பிரமன் முதலானோரையும் படைத்துக் கொண்டார்; குடமூக்கு (கும்பேசம்), குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசம்) ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர்; கூற்றுவனை உதைத்து அழித்து, மார்க்கண்டேயரைக் காத்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டவர்; தன்னைப் பக்தியுடன் ஏத்தாதவர்களாகிப் பாவத்தின்பாற் செல்வோரின் மனத்தில் அணுகாதவர்; திருவிடைமருதூரை இடமாகக் கொண்டவர். என்னை ஆட்கொண்டவர். அவ் விறைவர் ஆவார்.

947. எச்சன்நினைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், எச்சன் என்று வழங்கப்பெறும் வேள்வித் தேவனின் தலையை வீழ்த்தியவர்; பன்னிரு சூரியர்களில் பகன் என்பவனுடைய கண்ணைப் பறித்தவர்; மற்றொருவனுடைய பல்லை உகுத்தவர்; தக்கனின் தலையை அறுத்தவர்; அக்கினியின் கரத்தை வெட்டியவர்; இயமனுடைய காலைத் துண்டித்தவர்; சந்திரனை உதைத்தவர்; தக்கன் செய்த வேள்வியினை அழித்துப் பின்னர் அருளும் செய்தவர். அப் பெருமான், அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார்.

948. சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கெடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், தனது சடைகளில் ஒன்றில் கங்கையைக் கொண்டு விளங்குபவர்; சாம வேதத்தை இசையுடன் வீணை மீட்டி ஓதுபவர்; மான் தோலை ஆடையாகக் கொண்டவர்; மனம் கசிந்து உருகி ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தைத் தன்பால் ஒருமித்துக் கொள்பவர்; இல்லங்களின் வாயில் தோறும் சென்று பலியேற்றவர்; கையில் நெருப்பேந்தியவர்; காபாலி வேடம் கொள்பவர்; இடபக்கொடியேந்தியுள்ளவர். அப் பெருமான், கொடிய துயரம் யாவும் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார்.

949. குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேரவிடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்
இடருறு நோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடைமுடியில்மேல், குராமலர், அரவம், சந்திரன் ஆகியவற்றைத் தரித்தவர்; நந்தி தேவரைக் குடமுழாவை வாசிப்பராகக் கொண்டவர்; சிராப்பள்ளியைத் தனது இடமாகக் கொண்டவர்; தென்றலைத் தேராக உடைய மன்மதனை எரித்தவர்; பரஞானம் உடைமையும் அபரஞானம் உடைமையும் ஆகிப் பராபரனாகத் திகழ்பவர். மேரு மலையை வில்லாக ஏந்திக் கையில் கொண்டவர்; இராவணனை அடர்த்து அவன் அழுது ஏத்தி தன்மையில் அப்பெயரை அவனுக்கு நிலைக்குமாறு அருள் புரிந்தவர்.(இராவணன் அழுதவன்). அப் பெருமான் இடர் தரும் நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார்.

திருச்சிற்றம்பலம்

97. பொது - திருவினாத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

950. அண்டங் கடந்த சுவடு முண்டோ
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

தெளிவுரை : எமது பிரானாகிய சிவபெருமானைக் கண்ணுற்ற தன்மையில், அண்டங்களைக் கடந்த கால் சுவடு உண்டோ ! அனல் ஏந்திய கையுடன் ஆடல் செய்ததுண்டோ ! ஏழு முனிவர்களும் கண்டது உண்டோ ! பூத கணங்கள் சூழ்ந்து விளங்குவது உண்டோ ! நீலகண்டம் உண்டோ ! நெற்றியில் கண்ணுண்டோ ! தொண்டர்கள் சூழ்ந்து விளங்குதல் உண்டோ ! இத் தன்மையானது பொருந்தி இருப்பது ஈசனுக்கு உரிய அடையாளம் எனச் சுட்டப் பெறுதலாயிற்று

ஏழு முனிவர்கள் : அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன்.

951. எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோ வெற்றேறுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம் பெருமானாகிய ஈசனைக் கண்ணுற்ற தன்மையில், சூரியன் போன்று ஒளிரும் திருமேனியில் உமாதேவியார் உண்டோ ! வெள்ளை இடப வாகனம் உண்டோ ! நாகாபரணமும் நெருப்பும் உண்டோ ! யானையின் தோல் உண்டோ ! முப்புரிநூல் உண்டோ ! சடையில் நாகம் தரித்ததுண்டோ ! அதன் மேல் பிறைச்சந்திரன் உண்டோ ! கங்கை உண்டோ ! சூலம் உண்டோ ! அவ்வாறு உள்ளது ஈசனின் அடையாளம் ஆகும் என்பது குறிப்பு.

952. நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம் பிரானாகிய ஈசனைக் கண்ணுற்ற தன்மையில் செஞ்சடையின் மேல் சந்திரனை வைத்ததுண்டோ ! நெற்றியில் கண்ணுண்டோ ! திருநீறு, சந்தனம், எலும்பு மாலை, பூண்டதுண்டோ ! பூத கணங்கள் சூழ்ந்ததுண்டோ ! அருகில் இடபம் உண்டோ ! உமாதேவியார் பாகத்தில் திகழ்வதுண்டோ ! கொன்றை மாலை தரித்ததுண்டோ ! நாகமானது தோளின் மேல் விளங்கியது உண்டோ ! இவை அப்பெருமானின் அடையாளங்கள் என்பது குறிப்பு.

953. பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரனாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம்பிரானாகிய ஈசனைக் கண்டு மேவிய தன்மையில், அவர் பண்ணின் மேவும் வீணை பயின்ற துண்டோ ! பூத கணங்கள் பல சூழ்ந்ததுண்டோ ! உண்ணப் பெறாத நஞ்சை உண்டதுண்டோ ! ஊழித்தீ போன்ற ஒளி வண்ணம் உண்டோ ! காலால் காலனை வீழ்த்தியது உண்டோ ! மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தது உண்டோ ! முப்புரக் கோட்டைகளை அம்பு கொண்டு எய்து, எரித்ததுண்டோ ! இவை யாவும் ஈசனுக்கு உரிய அடையாளங்கள் என்பது குறிப்பு.

954. நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொன்றைக் கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம்பெருமானாகிய ஈசனைக் கண்டு மேவிய தன்மையில் அவருடைய திருமேனியின் பாகத்தில் திருநீறு உண்டோ ! நெற்றியில் ஒற்றைக் கண் உண்டோ ! கையில் மழுப்படை உண்டோ ! புலித்தோலாடை யுண்டோ ! கங்கை தரித்த சடையுண்டோ ! அரவமும் அதன் அருகே பிறைச் சந்திரனும் உண்டோ ! இடபக் கொடி யுண்டோ ! திருக்கூத்து உண்டோ ! இவை யாவும் ஈசனின் திரு அடையாளங்கள் என்பது குறிப்பு.

955. பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
களமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

தெளிவுரை : சிவபெருமானைக் கனவில் கண்டு மகிழ்ந்த தன்மையில் அவர், நெற்றிப் பட்டமும் தோடும் கொண்டு விளங்கக் கண்டேன்; பலிக்குத் திரிந்து செல்லக் கண்டேன்; கொடு கொட்டி இயம்ப இலயத்துடன் ஆடக் கண்டேன்; காதில் குழையும் சென்னியில் பிறைச் சந்திரனும் கண்டேன்; கட்டங்கக் கொடி (மழுக்கொடி) கண்டேன்; திண்மையான தோள்களை வீசியாடக் கண்டேன்; மழுப்படையானது வலக் கையில் விளங்கக் கண்டேன். அப்பரமன் திருவாலவாயில் வீற்றிருக்கக் கண்டேன்.

956. அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடுத் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

தெளிவுரை : நற்றவத்தின் தலைவரும் வேதங்களின் முதல்வனும் ஆகிய ஈசனைக் காணும் தன்மையில் அப்பெருமானுடைய தோடு கண்டேன்; சடையில் கங்கையைக் கண்டேன்; கொன்றை மாலை சூடிடக் கண்டேன்; பலியேற்பதற்காகத் திரியும் தன்மையில் கையில் பாம்பு கண்டேன்; திருப்பழனம், கச்சித் திருமேற்றளி ஆகிய தலங்களில் வீற்றிருந்து விளங்கக் கண்டேன்; கறை படிந்த மிடறும் கண்டேன்; கையில் நெருப்பைக் கண்டேன்; அரையில் மான்தோல் உடை கண்டேன். இவை யாவும் ஈசனின் அடையாளங்கள் என்பது குறிப்பு.

957. நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்டவாறே.

தெளிவுரை : சிவபெருமானுடைய திருமேனியில் திருநீறு திகழக் கண்டேன்; சடைமுடி மேல் கங்கை நிலவக் கண்டேன்; மழுப்படையைக் கண்டேன்; கொடுகொட்டி என்னும் வாத்தியத்தைக் கைத்தலத்தில் கண்டேன்; சென்னியில் சந்திரனைக் கண்டேன். அப்பெருமான், அடியவர்களுக்கு அமுதமாக விளங்கக் கண்டேன். அவர், இடபத்தில் ஏறியமர்ந்து இந்நெறியே வந்து காட்சி நல்கக் கண்டேன். நான் ஈசனைக் கண்ட தன்மையானது இத்தகைய பாங்கானதாகும்.

958. விரையுண்ட வெண்ணீறு தூனு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
கரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆலட யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.

தெளிவுரை : சிவபெருமானுக்கு, நறுமணம் கமழும் திருவெண்ணீறு உண்டு; கையில் கபாலம் உண்டு; வீணை உண்டு; பிறைச் சந்திரன் உண்டு; சூலமும் தண்டும் உண்டு; அரையில் கோவண ஆடையுண்டு; வலிமைமிக்க புலித்தோலும் உண்டு; இரையை உண்டறியாத பாம்பும் உண்டு, இத்தனையும் உளள ஈசன் தேவர்களின் தலைவன் ஆவார். அப் பெருமானுக்கு இல்லாத பொருள்தான் யாது உள்ளது ?

959. மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன்ஓ ருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; திருக்கச்சி மயானத்தில் உள்ளவர்; நீண்ட சடையுடையவர்; ஒப்புமை கூறி உவகை காணும் தன்மையில் எவரும் இல்லாதவராகி, உயர்ந்து மேவுபவர்; ஒன்று என இல்லாது, பலவாக விரிந்து யாங்கணும் வியாபித்துள்ளவர்; ஒரு ஊருக்கு மட்டும் உரியவர் அல்லர்; ஒரு வடிவம் மட்டும் உடையவர் அல்லர். அப் பெருமானுடைய வடிவத்தையும் வண்ணத்தையும் அவனருளால் காண்பதல்லால், இவ்வண்ணமும் வடிவும் உடையவர் என உரைப்பதற்கு அரியவர். இவ்விறைவனை எழுதிக் காட்ட முடியாது. கச்சி மயானம் திருவேகம்பத்தின் ஒரு பகுதி வைப்புத்தலம்.

960. பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பு அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

தெளிவுரை : ஈசனின் பொன் போன்ற மேனியின் மீது திருநீறு கண்டேன்; புலித்தோலுடை கண்டேன்; திருமேனியின் பாகத்தில் உமா தேவியைக் கண்டேன்; பாம்பினை அரையில் கட்டியிருக்கக் கண்டேன்; புட்பகவிமானத்தில் வந்த இராவணனை விரலால் அடர்த்த திருவடியைக் கண்டேன்; கொன்றை மலரைச் சூடிய இருக்கக் கண்டேன். அச் சிவபெருமானை, நான் சிந்தையுள் மேவக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

98. பொது - மறுமாற்றத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

961. நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான்
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

தெளிவுரை : நாம் யாருக்கும் குடிமகனாக இருந்து அடிமையாவதில்லை; இயமனுக்கும் அஞ்ச மாட்டோம்; பாவங்களால் சூழப்படுவதில்லாமையால் நாகத்துன்பமும் எமக்கு இல்லை; பிற துன்பம் ஏதும் இல்லை; மகிழ்ச்சியுடன் இருப்போம்; பிணியற்றிருப்போம்; யாருக்கும் பணிய மாட்டோம்; எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை. யாருக்கும் ஆட்படாதவராகிய சங்கரன், சங்கினால் ஆகிய குழையணிந்தவர். அத்தலைவருக்கு நாம் ஆளாகினோம். அப்பெருமானுடைய திருவடியை அடைந்தோம். ஆகையால் நாம் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்லர் என்பது குறிப்பு.

962. அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டேன்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

தெளிவுரை : அகன்ற உலகில் உள்ள ஊர்கள் தோறும் சிவனடியார்களுக்கு உணவு இட்டு இல்லறத்தில் உள்ளவர்கள் வாழ்வார்கள். எனவே உணவு கொள்வதற்கு இன்னல் இல்லை. பூவுலகில் பொது இடங்கள் உள்ளன. பூமியில் கிடந்து உறங்கும் தன்மையில் எத்தகைய இடையூறும் இல்லை. இடப வாகனத்தை உடைய ஈசன். அடியவர்களை ஏற்றுக் கொண்டவர். எமக்கு எத்தகைய குறையும் இல்லை; இடர்கள் தீர்ந்தோம்; சிறந்த ஆடையை உடுத்திப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் தன்மையுடையவர்களின் சொற்களைக் கேட்க மாட்டோம் யாம் குற்றம் அற்றவரானோம்.

963. வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

தெளிவுரை : மனை வாழ்க்கையில் மேவுதலை நீங்கினோம்; காலையில் புனித நீராடி மாதேவா என்று ஈசனை வாழ்த்துதலானோம். திருவெண்ணீறு அணியும் திருக்கோலத்தைப் பெற்றோம்; மேகத்திலிருந்து பொழியும் மழை போன்று கண்ணீர் சோரக்கல் மனமானது நல் மனமாக நைந்துருகப் பத்தியுடன் ஆண்டு, யானையின் மீது இவர்ந்து வரும் அரசர்களின் சொற்களைக் கேட்க மாட்டோம். யாம் பற்றற்றவரானோம்.

964. உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தோடுதீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

தெளிவுரை : சிவனடியார்கள் உருத்திரகணத்தவர்கள் உறவாகித் திகழக் கோவண ஆடை உடுத்தியவர்கள். பகைவர்களால் தாக்கப்படாதவர்கள்; பிறர் செய்யும் தீமையும் நன்மையாய் விளங்கும்; பிறப்பற்றவர்கள் நறுமணம் கமழும் கொன்றை மாலை அணிந்த சிவபெருமானின் சிறப்புடைய திருநாமமாகிய நமச்சிவாய என்று சொல்ல வல்லவர்கள் அவர்கள். மீனக் கொடியுடைய மன்மதனை எரித்துச் சம்பலாக்கிய நெற்றிக் கண்ணுடைய ஈசனையே தொடர்ந்தவராவார்கள். எனவே, அத்தகைய சிவனடியார்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பது குறிப்பு.

965. என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

தெளிவுரை : நாம், எக்காலத்திலும் யாருக்கும் இடையிட்டுத் துன்பம் செய்வதில்லை; இவ்வுலகத்தில் எமக்கு எதிராக உள்ளவரும் இல்லை. சிறு தெய்வங்களைச் சார மாட்டோம். சிவ பெருமானுடைய திருவடியே சேரப் பெற்றோம். எத் தன்மையிலும் குறையில்லாதவரானோம். பிணியுள்ளவர் எல்லோரும் விலகிச் செல்லத் தலை மாலையணிந்த புண்ணியனாக மேவும் ஈசனை நண்ணிப் புண்ணியர்களானோம்.

966. மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத்ச திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.

தெளிவுரை : சிவபெருமான், மும்மூர்த்திகளாகிய பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகியவர்களின் தலைவர் ஆகியவர்; அட்டமூர்த்தியாய் விளங்குபவர்; முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கும் அவர்களினும் மேலானவர்களுக்கும் தலைவராக விளங்குபவர். அப்பெருமானைச் செம்பவளத் திருமேனியுடைய சிவனே என்று ஏத்தும் திருத்தொண்டர்களே எம்மை ஆளும் தன்மை உடையவர்கள். இச்சிறு பகுதிக்கு மன்னனாகிய பல்லவனே அன்றிப் பெருநிலமாகிய நாவலந் தீவுக்குத் தலைவர் எனக் கூறி வந்து ஒருவர் ஏவினாலும் நாம் ஏற்க மாட்டோம். எம்மிடம் கடுமையும் களவும் இல்லை.

967. நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்கிலாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.

தெளிவுரை : சிவபெருமான், நிலைத்து மேவும் அசையாப் பொருளாகவும், அசையும் பொருளாகவும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம் பூதங்களாகவும், மிக நுண்ணியதான அணுப்போன்றும், பெரிய பொருளாகவும், அருமையுடன் ஏத்தப் பெறும் மதிப்பு மிக்க பொருளாகவும் விளங்குபவர்; அன்பு கொண்டு ஏத்துபவர்களுக்கு எளிமையானவர்; அளவிட்டுக் காண முடியாத தற்பரமாகவும் சதாசிவ மூர்த்தியாகவும் விளங்குபவர். அப்பெருமான் யானும் ஆகிய தன்மையுடையவர். நாம் நன்மையும் பொற்பும் உடைய சொற்களைப் பேசும் இயல்பினர். மனம் கலங்கியவராகிப் பேய்க் குணம் உடையவர்கள் எது வேண்டினும் பேசிக் கொள்ளட்டும். நாங்கள் பிழையற்றவர்கள்.

968. ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லோருக்கும் ஈசன், எல்லா உலகங்களுக்கும் இறைவன்; தேவர்களின் கடவுள்; நெருப்பு போன்று ஒளிரும் சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; மலையரசனின் திருமகளாகிய உமா தேவியாருக்கு நலம் செய்யும் நேசனாகுபவர். அப் பெருமானை நாம் நித்தமும் நினைத்து ஏத்திப் பெறுகின்ற பேறுகள் யாவும் பெற்றோம். சமணர்கள் எமக்குச் சொல்லிய வாசகங்களை நீக்கினோம். எம்மிடம் வந்த நீங்களெல்லாம் யார் ? உங்கள் மன்னவன்தான் யாவன் ? நாங்கள் யாருக்கும் ஆட்பட்டோம் என்பது குறிப்பு.

969. சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையவன் வேங்கை அதள்மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்ற முளராய் நின்ற
பøயுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே.

தெளிவுரை : ஈசன், சடைமுடியுடையவர்; காதில் சங்குக் குழை அணிந்தவர்; சாம்பலைப் பூசியுள்ளவர்; பாம்பைத் திருமேனியில் ஆபரணமாகப் பூண்டவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; புலித்தோலை உடுத்தியவர்; மான்தோலை மேலாடையாகக் கொண்டவர்; எம்மை அடிமையாக உடையவர்; உங்களோடும் மற்றும் உள்ளபடை வீரர்களையும் உடைய மன்னனின் பணியைக் கேட்டுப் பணிய மாட்டோம். நாம் எல்லாப் பற்றினையும் நீத்தவர்கள் ஆயினோம்.

970. நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானேந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்துளோமே.

தெளிவுரை : யாம், நாவார ஈசனைப் பாடிப் போற்றி, நாணமில்லாதவர்கள் எம்மை அணுகாதவாறு விளங்கினோம். வா என்று எம்மை அழைத்து ஆள்வது தேவர்களின் தலைவராகிய சிவபெருமானே ஆவார். அப்பெருமான், பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகி, நெருப்புப் பிழம்பாகி ஓங்கியவர்; தேவாதி தேவர்; என் சிந்தையில் விளங்குபவர்; தென் திசைக்குத் தலைவனாகிய இயமன் தானே வந்து எம்மைக் குற்றேவல் செய்யுமாறு பணித்தாலும் அதனை ஒரு பொருட்டாகக் கொள்ள மாட்டோம். ஈசனுக்குரிய எண் குணங்களும் எம்மால் அமையப் பெற்றன.

திருச்சிற்றம்பலம்

99. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

971. எண்ணுகேன் என்செல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீரை எண்ணி மேவுகின்றேன் ! யான், எப்பொருளின் மீது பற்றுக் கொண்டு விண்ணப்பிக்கப் போகின்றேன் ! தேவரீரையன்றி வேறு பற்றுக்கோடு இல்லை; திருவடியைக் கைதொழுது தரிசிப்பதன்றி வேறு ஒன்றிலும் பற்றில்லை. இவ்வுடம்பில் ஒன்பது வாசல்களை வைத்துள்ளீர். இவை யாவும் ஒன்று சேர்ந்து அடைக்கும்போது நான் உணர மாட்டேன். தேவரீருடைய திருவடிக்கே வருகின்றேன். இவண் புண்ணியா என்பது புண்ணியத்தின் வடிவினன் எனவும் புண்ணியனே என்பது புண்ணியத்தின் சிறப்பினை ஏத்தும் தன்மையில் அவ்வறத்தின் தலைவனாகவும் கொண்டு ஏத்தப் பெற்றது.

972. அங்கமே பூண்டாய் அனலாடினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடையினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

தெளிவுரை : திருப்புகலூரில் மேவிய தேவனே ! தேவரீர், எலும்பினை ஆபரணமாகப் பூண்டவர்; கையில் நெருப்பேந்தி ஆடியவர்; ஆதிரை நாளுக்கு உரியவர்; கல்லால மரத்தின் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; படர்ந்து விரிந்த சடையுடையவர்; பாம்பும் சந்திரனும் தமது இயல்பால் பகைமை கொண்டு விளங்கினாலும் அதனை மாற்றிச் சடைமுடியில் விளங்குமாறு தரித்தவர்; தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை உண்டு, சாதல் இன்றியும், மூப்பு இன்றியும், விளங்கும் சிங்கம் போன்ற ஆளுமையும் வலிவும் உடையவர். தேவரீருடைய திருவடிக்கே யான் வருகின்றேன். அடியேனை ஏற்று அருள்வீராக என்பது குறிப்பு.

973. பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணானைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவறுத்தாய்
அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூர் மேவிய புண்ணியனே ! தேவரீர், பாம்பை அரையில் கட்டியவர்; பால் போன்ற திருவெண்ணீற்றைத் தரித்தவர்; காதில் பளிங்கு போன்ற வெண்குழையை அணிந்தவர்; பண்ணின் இசை போன்ற இனிய மொழி பேசும் உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர்; மான் கன்றினைக் கையில் ஏந்தியவர்; வஞ்சம் உடைய கள்வராகிய ஐம்புலன்கள் என்னைப் பற்றாதவாறு, காத்தவர். அவ்வைம்புலன்களால் எனக்கு ஆக வேண்டிய செயலும் ஏதும் இல்லை. ஈசனே ! அடியேன் தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

974. தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் காணா
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! சிவவழிபாட்டினை மேவாது தெளிவற்றவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கிய பெருமானே ! தேவரீர், திரிபுரத்தவர்கள் போல் மருட்சியடையாது, நினைந்து ஏத்தும் அடியவர்களுடைய துன்பத்தை தீர்ப்பவர்; மருந்தாகிப் பிணி தீர்ப்பவர்; வானவர்களுக்கு அருள் புரிபவர்; ஆதியாகியும், வேதமாகியும், பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரிய சோதிப் பொருளாகியும் விளங்குபவர். யாவற்றுக்கும் பொருளானவர். தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன், ஏற்று அருள்வீராக.

975. நீரேறு செஞ்சடைமேல் நிலா வெண்டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதுலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீர் சடை முடியில் கங்கையைத் தரித்தவர்; சந்திரனைச் சூடியவர்; மண்டை யோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்திப் பலியேற்றவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; அடியவர்களின் பாவங்களைப் போக்கி நரகத்தில் வீழாது காக்கும் அருளாளர்; மேகம் போன்று விளங்கும் கரிய கண்டத்தை உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர். வீரம் மிக்க ஏறு போன்றவர். தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன். ஏற்றருள்வீராக.

976. விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தாயென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! விரிந்த சடையுடைய வேதியனே ! வேத கீதமாக விளங்கும் ஈசனே ! பொழில் சூழ்ந்த திருவெண்காடு, மீயச்சூர், திருவாரூர்த் திருமூலட்டானம், மாகாளம், திருவலஞ்சுழி, திருமறைக்காடு ஆகிய தலங்களில் மேவும் நாதனே ! முப்புரங்களை எரித்த தேவனே ! மருவி ஏத்தும் இனியவர் தம் மனத்துள் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருவடிக்கே போது கின்றேன் ஏற்று அருள்வீராக.

977. தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! தேவாதி தேவனே ! தேவர்கள் எல்லாம் மலர்தூவிப் போற்றித் திருவடிக் கமலத்தை ஏத்தவும், வேதங்களை ஓதவும், நடனம் புரியும் பெருமானே ! நான்முகனும் இந்திரனும் திருமாலும் போற்றும் தலைவனே ! மேவும் ஈசனே ! தேவரீருடைய பொன்னடிக்கே போதுகின்றேன். ஏற்றருள்வீராக.

978. நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! நெய் முதலாகிய பஞ்ச கவ்வியத்தைப் பூசைப் பொருளாக உவந்து ஏற்கும் நாதனே ! நீலகண்டப் பெருமானே ! எல்லாம் நிறைந்து மேவும் ஈசனே ! வேதங்களின் நாதனே ! உமைபாகனே ! மான் தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்து மேவும் தலைவனே ! வில்வமாலையும் கொன்றை மாலையும் கொண்டு தேவரீருக்குச் சாத்திப் பொய்மையில்லாத சேவடிக்கே அடியேன் போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

979. துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நூற்றாய
துதைத்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னைணயுந் தண்மதியும் பாம்பும் நீரூஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீர், தைத்து மேவும் கோவண ஆடையுடையவர்; தூய திருவெண்ணீறு தரித்தவர்; கையில் ஒளி திகழும் மழுப்படையுடையவர்; சடை முடியில் குளிர்ந்த சந்திரனும், பாம்பும் கங்கையும் கொண்டு விளங்குபவர்; அன்னம் போன்ற நடையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு திகழ்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாக உடையவர்; ஆதிப் பொருளானவர். தேவரீருடைய பொன்னால் ஆகிய கழலை அணிந்த திருவடிக்கே போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

980. ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! ஒப்பற்ற ஒருவனாகிய தேவரீரை யன்றி, என்னுள்ளமானது வேறொன்றை உணராது. உணர்வுகளைத் தடுமாறச் செய்யும் நல்வினை தீவினை ஆகிய இரண்டும், மற்றும் மும்மலங்களின் பந்தமும், என்னை நலியாதவாறு காத்து அருள் புரிந்தவர். எனக்கு மீண்டும் கருவுக்குள் புகும் தன்மை இல்லை. இராவணனைக் காலாற் செற்ற கயிலை நாதனே ! உன்னடிக்கே போதுகின்றேன். அடியவனை ஏற்று அருள்வீராக. இத் திருப்பாட்டில் இறுதியாகக் கயிலை நாதனை நெஞ்சிருத்தி ஏத்திய சிறப்பினை ஓர்க.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ஆறாம் திருமுறை முற்றிற்று.


Sixth Thirumurai

Poet:

Manickavasagar: A prominent Nayanmar known for his deep devotion to Lord Shiva and his influential contributions to Saiva Bhakti literature.

Hymns:

The Sixth Thirumurai contains a collection of hymns called "Tiruvembavai" and "Tirupallantu," among others.

These hymns are known for their spiritual depth and lyrical beauty, focusing on the divine aspects of Shiva and his temples.

Manickavasagar’s hymns reflect his personal experiences and devotion to Shiva.

Philosophy of the Hymns:

Devotion to Shiva: The hymns express profound devotion and surrender to Lord Shiva.

Philosophical Messages: They address themes such as divine grace, the pursuit of spiritual wisdom, and the contrast between worldly life and spiritual enlightenment.

Divine Vision: Many hymns describe the poet's vision of the divine and the transformative experience of encountering Shiva.

Structure of the Hymns:

The hymns are poetic and musical, designed to be sung in worship and devotion.

They feature repetitive refrains and evocative imagery that enhance their devotional impact.

Significance of the Sixth Thirumurai:

The hymns contribute to the Saiva tradition, emphasizing the importance of sincere devotion and the pursuit of spiritual knowledge.

Manickavasagar’s works are celebrated for their emotional intensity and philosophical depth.

The Sixth Thirumurai plays a key role in Tamil devotional literature and continues to inspire devotion and spiritual practice among Saiva devotees.

The Sixth Thirumurai remains a vital part of Tamil religious literature, offering insights into the nature of divine grace and the significance of heartfelt devotion to Lord Shiva.



Share



Was this helpful?