இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஒன்பதாம் திருமுறை

The Ninth Thirumurai is the ninth volume in the collection known as the Panniru Thirumurai, or "Twelve Thirumurais." It is a key text in Tamil Saiva literature, consisting mainly of hymns by the poet Manickavasagar.


9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷாத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய 301 பாடல்களின் தொகுப்பும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா

திரு இசைப்பா என்பது, கடவுள் தன்மை பொருந்திய இசைப் பாட்டுக்கள் எனப் பொருள் தரும். தேவாரத் திருப்பதிகங்கட்குப் பின்னர் அவை போல அருள் ஆசிரியர் சிலரால் இசைத் தமிழாக அருளிச் செய்யப்பட்ட திருப்பதிகங்களே திருஇசைப்பா எனப் பெயர் பெற்றன. எனினும் தேவாரத்தில் உள்ளது போல இவற்றுள் தாளத்தோடு அமைந்த திருப்பதிகங்கள் மிகுதியாக இல்லாமல் பண்மட்டில் அமைந்த திருப்பதிகங்களே மிகுதியாக உள்ளன.

1. கோயில் ஒளி வளர் விளக்கே

திருச்சிற்றம்பலம்

1. ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

தெளிவுரை : ஒளிமிகும் விளக்கே ! அழிவில்லாத ஒப்பற்ற பொருளே ! சென்று பற்றும் சுட்டறிவும் ஆய்வும் கடந்து நின்று சிவஞானத்தால் அறியப்படும் மேலான பேரறிவே ! ஒளி பொருந்திய பளிங்கின் தோற்றத்தை உடைய திரட்சியான மாணிக்க மலையே ! மெய்யன் பரது மனத்தின்கண் தித்திக்கும் தேனே ! அன்பு பெருகும் மெய்யடியாரது மனத்தின்கண் பேரானந்தத்தை விளைவிக்கும் கனியே ! தில்லை அம்பலத்தையே நடனம் புரியும் சபையாகக் கொண்டு அங்குச் சிதாகாசத்தில் ஆடும் ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வீக நடனத்தை விரும்பிச் செய்யும் உன்னை, அடியவனாகிய யான் புகழ்ந்து உரைக்குமாறு நீ உரைத்தருள்வாயாக.

2. இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
இருட்பிழம்(பு) அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.

தெளிவுரை : பிறவித் துன்பத்தைத் தொலைத்து என்னைத் தடுத்தாட் கொண்டருளி, என் மனத்தினுள் இருந்த அஞ்ஞானமாகிய மிக்க இருளை வேரறக் களைந்து சுடர் விட்டு எழுந்த ஒளி பொருந்திய மாணிக்கத் தீபத்தினுள்ளே ஒளி வீசுகின்ற தூய்மையான அழகிய ஒளியினுள்ளே ஒளி வடிவாய் விளங்குபவனே. வலிமை பொருந்திய இடபத்தை வாகனமாக உடையவனே ! பொன்னம்பலத்தில் நின்று நடனம் ஆடுபவனே ! பிரமனும் திருமாலும் அறிய முடியாதவாறு மிக்க ஒளியை வீசிப் பரவி நின்றவனாகிய உன்னை, அடியவனாகிய யான் வணங்கும் வண்ணம் நீ திருவருள் புரிவாயாக.

3. தற்பெரும் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
தொண்டனேன் கருதுமா கருதே.

தெளிவுரை : ஆன்மாவிற்கும் உயர்வான கடவுளே ! பிறைச் சந்திரனைத் தரித்த திருமுடியை உடையவனே ! நீல கண்டனே ! சிதாகாயத்தில் உறைபவனே ! நன்மையைத் தரத்தக்க பெரிய பொருளோடு கூடிய சொற்களைக் கலந்து உன்னை என்னுடைய நாவினால் துதிக்கும் பொருட்டு எளியவனாகிய எனது உள்ளத்தில் முடிவு இல்லாத உன்னை இருக்கும்படி கொடுத்தருளிய பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடுபவனே ! ஊழிக்காலமாயும் எல்லா உலகங்களாயும் அவற்றின் வேறாகியும் இருக்கின்ற உன்னைத் தொண்டனாகிய யான் நினைக்கும் வண்ணம் நினைந்தருள் புரிவாயாக.

4. பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்
பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும்
அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமாறு உரையே.

தெளிவுரை : பெருமையுடன் சிறுமையும் பெண்ணுடன் ஆணும் ஆகி நின்று, எனது பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களை நீக்கி அருளிய பெருஞ்சோதியே ! கருநிறத்துடன் வெண்ணிற ஒளி பொருந்தியவனே. கயல் மீன்போன்ற கண்களை உடையவளும் மலை அரசன் மகளும் ஆகிய உமாதேவிக்குப் பற்றுக் கோடாக நிற்பவனே ! உன்னைக் காண்டற்கு அருமையினையுடைய நான்கு வேதங்களும் ஓலமிட்டுக் கூவுகின்ற தலைவனே ! பொன்னம்பலத்தே எழுந்தருளிய அமுதம் போன்றவனே. நீ ஒருவனாகத் திகழ்ந்து பலபொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நின்ற உன்னைத் தொண்டனாகிய யான் புகழ்ந்து சொல்லும் வண்ணம் உரைத்தருள் புரிவாயாக.

5. கோலமே மேலை வானவர் கோவே !
குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகா லா ! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்
கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே.

தெளிவுரை : அழகிய திருவடிவம் கொண்டவனே ! மேற்பதங்களில் உள்ள தேவர்களுக்கு அரசனே ! குணங்குறிகளைக் கடந்து நின்ற ஒப்பற்ற பண்பனே ! காலத்தின் வடிவமாக இருப்பவனே ! கங்காதேவிக்குத் தலைவனே ! யமனை வென்றவனே ! மன்மதனை அழித்தவனே! நஞ்சினையே அமுதமாக உண்டருளிச் செம்பொன் வேயப்பெற்ற அம்பல வெளியைக் கோயிலாகக் கொண்டு ஆனந்த தாண்டவம் புரிய வல்லவனே ! உலகமாய் இருப்பவனே ! நல்ல யோகியாகிய உன்னை உறுதுணை இல்லாத தனித்தவனும் தொண்டனுமாகிய யான், நெருங்கும் வண்ணம் நீ நெருங்கி அருள்வாயாக.

6. நீறணி பவளக் குன்றமே ! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே !
ஏறணி கொடியேம் ஈசனே ! உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே.

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்த பவளமலை போன்றவனே ! நிமிர்ந்து நின்ற நெற்றிக்கண்ணை உடையதான ஒப்பற்ற அக்கினி வடிவானவனே ! வெவ்வேறாகிய அழகிய உலகங்களும் போகப் பொருள்களுமாய் இருப்பவனே ! யோக முதிர்ச்சியினால் விளையும் இன்பப் பெருக்கே ! மேரு மலையாகிய வில்லை ஏந்திய வீரனே ! கங்கா தேவியைத் தரித்த சடை முடியையுடைய எமது அற்புதமான ஆனந்தக் கூத்தனே ! அழகிய பொன்னால் செய்யப் பெற்ற பொன்னம்பலத்தில் உள்ள அரசே ! இடப வடிவம் தாங்கிய அழகிய கொடியையுடைய எமது தலைவனே. உன்னைத் தொண்டனாகிய யான் பொருந்தும் வண்ணம் நீ மனம் இசைந்து அருள்வாயாக.

7. தனதன்நல் தோழா சங்கரா ! சூல
பாணியே ! தாணுவே சிவனே !
கனகநல் தூணே ! கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
அம்பலத்து அமரசே கரனே !
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.

தெளிவுரை : குபேரனுக்கு நல்ல தோழனாக விளங்குபவனே ! இன்பம் செய்பவனே ! சூலப்படையினைக் கையில் ஏந்தியவனே ! அழிவில்லாதவனே ! பேரின்ப வடிவினனே ! அழகிய பொன்தூண் போன்றவனே ! கற்பகத் தளிர் போலும் அழகனே ! மூன்று கண்களை உடைய மேலான கரும்பு போன்ற இனியவனே ! தூய்மை உடையவனே ! முருகக் கடவுளுக்கும் விநாயகக் கடவுளுக்கும் தந்தையே ! பொன்னம் பலத்தில் வந்து தரிசிக்க நிற்கும் இந்திரன் முதலான தேவர்களுக்குத் தலைமை பூண்டவனே ! தொண்னாகிய யான் உன் திருவடிகள் இரண்டையும் என் மனத்தில் இனிமையோடு கலந்து அனுபவிக்கும்படி நீ திருவருள் புரிவாயாக.

8. திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் தனத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே !
அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய்
ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே.

தெளிவுரை : மாறிமாறி வரும் பிறவிகளில் உழலுகின்ற சிறு தெய்வங்களை அடையும் வழிகளில் திகைத்து நிற்கின்ற என்னைத் திகைக்காமல் பொன்னிறமும் மின்னிறமும் கலந்து நிரம்பிய திருவடியின்கீழ்ச் செல்லும்படி செய்த ஒப்பில்லாத ஒளியையுடைய மாணிக்கம் போன்றவனே ! தருமத்தின் பல தன்மைகளை அருளிச் செய்து சனகாதி முனிவர்களுக்குக் குருமூர்த்தியாகிக் கல்லால மரத்தின்கீழ் எழுந்தருளிய பொன்னம் பலவனே ! புறச்சமயத்தினராகிய சமணர் புத்தர்களின் பொய்ச் சமயங்களை உண்டாக்கின உன்னை, தொண்டனாகிய நான் சேரும் வண்ணம் நீ சேர்ந்து அருள்வாயாக.

9. தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்
நெறித்தரு ளியவுருத் திரனே !
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே.

தெளிவுரை : தக்கன் சிவ நிந்தனையுடன் செய்த வேள்வியில் அவனது நல்ல தலையும், எச்சன் என்பவனின் வலிய தலையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்கு முகங்களையுடைய பிரமதேவனின் தலையும் ஒருசேர அறுபட்டுத் தரையில் உருளும்படி ஒளிமிக்க தம் திருப்புருவத்தை நெரித்துக் கோபித்தருளிய உருத்திர மூர்த்தியே ! எலும்பு மாலையானது, அழகிய புலித் தோலாகிய ஆடையின்மீது மேன்மேல் ஆடிக் கொண்டிருக்கப் பொற்சபையில் ஆனந்த நடனம் செய்யும் அழகனே ! திருமால், பிரமன் முதலிய தேவர்கள் யாவர்க்கும் தொடர்ந்து பற்றி அறிதற்கு அரிதாகிய உன்னைத் தொண்டனாகிய யான் தொடரும் வண்ணம் நீ தொடர்ந்து அருள்வாயாக.

10. மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
அருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே !
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே !
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே.

தெளிவுரை : நரசிங்கத் தோற்றமாய்த் தூணில் வெளிப்பட்டு இரணியனின் மார்பைக் கிழித்த திருமாலுக்கு அருள் செய்த கொடையாளனாகிய சரப மூர்த்தியே. சிவபூசையை மறந்து பௌத்த மதத்தில் மயங்கி நின்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற அசுரர்கள் வசிக்கும் இடமான திரிபுரம் எரிந்து அழியும்படி நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப் பெற்ற தேரின் மேல் ஏறிய ஆண்சிங்கம் போன்ற வீரனே ! வலிமை நிறைந்த அரக்கனாகிய இராவணனின் அகங்காரம் ஒடுங்கும்படி அவனைக் கயிலை மலையின்கீழ்த் திருவருள் கொண்டு நசுக்கிய கனகசபையில் எழுந்தருளிய அரசே ! விடத்தைக் கண்டத்தில் அணிந்த எமது அழகனே ! உன்னைத் தொண்டனாகிய யான் விரும்பும் வண்ணம் நீ விரும்பி அருள்வாயாக.

11. மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா(து)
அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.

தெளிவுரை : ஒலிக்கும் வீரக்கழலை அணிந்த திருவடிகளை உடைய சிவபெருமானே ! வேதங்களும் இந்திரன் முதலான தேவர் கூட்டமும் அறிய மாட்டாமல் பிரம விட்டுணுக்களுடனே மயங்கி நின்று பலதடவைகள் ஓலமிட்டும் அறியமுடியாத உன்னை, அறிவிலியாகிய யான், துதித்த அற்பமான சொற்களை, அறிவில்லாத பயனற்ற சிறியோரின் செயலைப் பொறுக்குமாறு போல பொறுக்கின்ற பொன்னம்பலத்துள் எழுந்தருளிய நிறைந்த கருணைக்கு இருப்பிடமாக விளங்குபவனே ! உன்னைத் தொண்டனாகிய யான் நினைக்கும் வண்ணம் நீ நினைத்தருள்வாயாக.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் உயர் கொடியாடை

பாதாதி கேசம்

திருவுரு

12. உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்
பெருகிற பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள்என் மனத்துவைத் தருளே.

தெளிவுரை : உயர்ந்த கொடிச்சீலைகள் அடர்ந்த கூட்டத்தினிடத்து, ஓமப் புகையின் கூட்டத்தோடு புகழ் பெற்ற உயர்ந்த மாளிகைகளினின்றும் எழுகின்ற அகிற் புகைக் கூட்டம் கலந்து பெருகி மூடியிட்டது போன்ற தோற்றத்தையுடைய பெரும்பற்றப்புலியூரினிடத்தே, சிறந்த ஒளியுள்ள நவமணிகள் வரிசையாய்ப் பதிந்திருக்கின்ற பொன் நிரம்பிய அம்பலத்துள் உள்ள சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! அஞ்ஞான மயக்கம் நீங்குதற்குக் காரணமானதும். தேவர்களின் முடிகள் தோயப்பெற்றதுமான, தாமரை மலர் போன்ற உமது திருவடிகளை அடியேனது மனத்தில் வைத்தருள்வாயாக.

சேவடிகளையே கூறினாராயினும் திருவுருவம் முழுவதையும் கூறுதல் கருத்தென்க.

திருவடி

13. கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவதி நிதியம்
திரண்டசிற் றம்பலக் கூத்தா !
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்னடிக் கீழ(து)என் னுயிரே.

தெளிவுரை : கருநிற மேகத்தின் நடுவிடத்தே சென்று பொருந்திய சிகரங்களையுடைய பொன்மயமான மாளிகைகள் எவ்விடத்தும் நிறைந்து பெருகி வளர்கின்ற மூன்று வைதிக அக்கினிகளோடு நான்கு வேதங்கள் ஓதும் ஓதுவிக்கும் தொழில்கள் மிகுந்த பொலிவுடன் விளங்கும் பெரும்பற்றப்புலியூராகிய மேன்மை நிறைந்துள்ள தெய்வத்தன்மை கொண்ட தில்லைப்பதியின்கண் என்றும் நீங்காது பொருந்தும் சிவஞானச் செல்வம் திரண்டு கிடக்கும் சிற்சபையில் ஆனந்தத்தாண்டவம் புரியும் பெருமானே ! எனது உயிரானது இன்பத்தைத் தருகின்ற பொன்னிறம் மிகுந்த சிலம்புகள் மிக்கு ஒலிக்கும் உனது திருவடிகளுக்குக் கீழே இருக்கின்றது.

திருக்கணைக்கால்

14. வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்
பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.

தெளிவுரை : எல்லை கடந்து துள்ளிப் பாயும் வாளை மீன்கள் விளங்குகின்ற குளங்களில் உள்ள தாமரை மலர்களைக் கரும்புகளோடு ஆவலாய் மேய்கின்ற எருமைகள் பொருந்தியுள்ள பரம்பு அடித்த செந்நெல் விளைகின்ற கழனிகளாலும் செங்கழுநீர் மலர்களுடைய வயல்களாலும் சூழப்பெற்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள சிரசில் தரித்த கிரீடத்தையுடைய இந்திராதி தேவர்கள் நின் திருவடியை முறைப்படி வணங்குகிற சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! முனிவர்கள் எப்பொழுதும் இடைவிடாமல் தியானிக்கின்ற அழகிய உனது கணைக் கால்களின் அடியை என் நெஞ்சமானது நினையும் தொழிலில் நிலைத்து நின்று பின்பு வேறு ஒன்றையும் நினைத்தலை விட்டு நீங்கியது.

திருத்துடை

15. தேர்மலி விழவில் குழவொலி தெருவில்
கூத்தொலி ஏத்தொலி ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில்
திகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா !
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.

தெளிவுரை : தேர்த் திருவிழாவில் தெருக்களில் புல்லாங்குழல் ஓசையும், பலவகையான கூத்துக்களின் ஒலியும், அன்பர்கள் துதிக்கின்ற துதிகளின் ஒலியும், வேதங்களை ஓதுவதால் உண்டாகிய மிகுந்த ஒலியும், பரவி நின்று கடல் ஒலியினும் மிகுந்து ஒலிக்க விளங்குகின்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள, சிறப்புப் பொருந்திய தாளத்திற்கு இசைய ஆடும்தெய்வத் திருக்கூத்தின் இயல்பிலே சிறப்புற்றுத் திகழ்கின்ற சிற்சபையில் ஆனந்தத்தாண்டவம் புரியும் பெருமானே ! கச்சு அணிந்த தனங்களையுடைய உமாதேவியாரால் வருடப் பெற்ற திரண்ட பெரிய அழகிய உனது தொடைகளை எனது அறிவு போய்ப் பொருந்தியது.

திருவுடை

16. நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)
இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதணம்
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற்சிற் றம்பலக் கூத்த !
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.

தெளிவுரை : மிகுதியாகத் தழைத்த வாழை மரங்களும் நிழல் தரும் பூங்கொடிகளும் நீண்டுயர்ந்த தென்னை மரங்களும் இளமையான பாக்கு மரங்களும் மனத்தைக் கவரும்படியான பெரிய பலாமரங்களும் மாமரங்களும் பிறைச்சந்திரன் தவழ்கின்ற சோலைகளும் நெருக்கிய அகழியினிடத்தே உள் மேடைகளைக் கொண்ட பழைய மதில்கள் சூழ்ந்த பெரும்பற்றப்புலியூரின்கண் உள்ள கரைகள் கட்டித் தடுக்கப் பெற்ற நீரினிடத்தே (சிப்பியில் தோன்றிய) திரட்சி பொருந்திய கூட்டமாயுள்ள முத்துக்கள் பதிக்கப் பெற்ற செம்பொன்னால் வேய்ந்த சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! அரையிற் கட்டிய பாரத்தை யுடைய அழகிய புலித்தோல் ஆடைமேல் கட்டியுள்ள நூற்கச்சையினிடத்து என் விருப்பம் சென்றது.

திருவுந்தி

17. அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)
அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச் சிற்றம்பலக் கூத்த !
மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி
வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.

தெளிவுரை : அது அறிவு; இது அறிவு என்று துன்பமுற்று மனம் அலைதற்குக் காரணமாகிய நூல்களைக் கற்றுப் பிறரை வாதுக்கு அழைத்துப் பிதற்றுதலை விட்டு, அருமையான வேதங்களை உணர்ந்து, பெருமையினை உடைய அறிவின் வழிநின்று, நீங்குதல் இல்லாத வேள்விகளைச் செய்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள அற்ப அறிவினையுடைய சமணர்களும் புத்தர்களும் அணுகாத திருவருட் செல்வம் நிறைந்த சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! தேன் போலும் இனிய அறிவுப் பெருக்கத்தில் அழுந்தி, அழகிய உனது திருவயிற்றினிடத்துள்ள கொப்பூழின் வளைவைக் கண்டு அனுபவித்து என் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது.

திருவயிறு முதலியன

18. பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை மிடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்த !
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து
கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.

தெளிவுரை : போர் செய்ய வல்ல மலைபோலும் புயத்தின் முன் கையின் மீது பொருந்திய புலித்தோலையும், திருநீற்றை அணிந்த பூணூலைத் தாங்கிய மார்பையும், பெரிய மலையை ஒத்த வலிய தோள்களையும் ஒருங்கு தரிசிக்கும் பேறு பெற்ற அந்தணர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள அழகு பொருந்திய வயிற்றின்மேல் அணிந்துள்ள மாலைகள் நான்கு திசைகளிலும் அலையும்படி சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! அழகுடன் விளங்கும் வயிற்றின்மீது பொருந்திய ஒப்பற்ற மணிவடத்தினிடத்து எனது அறிவு நிலைத்து நின்று அறிந்தறிந்து அனுபவித்து வேறு தொழில் அற்றுக் கிடந்தது.

திருக்கரங்களும் திருவாயும்

19. கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !
சீர்கொள்சிற் றம்பலக் கூத்த !
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.

தெளிவுரை : மதிக்கத்திக்க மழுவும், வீசுகின்ற கையும், உடுக்கையும், பாம்பாகிய கங்கணமும், அபயமளிக்கும் செங்கையும் ஆகிய இவற்றைத் தம் பிறவிப் பிணி ஒழியுமாறு தரிசித்து, இறைவனின் பெருமை பொருந்திய திருநடனத்தைக் காணுதலினின்றும் நீங்காதவர்களாகிய பெரியோர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே எழுந்தருளிய மிகுந்த நீலநிறம் பொருந்திய மணிபோல் விளங்கும் கண்டத்தை உடைய எனது அமுதம் போன்றவனே ! சிறப்பினைக் கொண்ட சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! உனது அழகிய முத்துப் போன்ற பற்களிடத்தும், பவளம் போன்ற வாயினிடத்தும் அமைந்த செம்மையான ஒளியின்கண் எனது நினைவு ஒடுங்கிக் கிடக்கின்றது.

திருமுகம்

20. திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உருமணி முன்றில்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரம்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்த
கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல
மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.

தெளிவுரை : அழகிய உயர்ந்த வடிவம் கொண்டு உலகளந்த திருமாலும், பிரமனும், இந்திரனும், தேவர்களும் திருநந்திதேவரின் காவல் பொருந்திய திருக்கோயில் வாயிற்படியினிடத்து நின்று உள்ளே புக முடியாமல் ஒருவரோடு ஒருவர் நெருக்கப்பட்டுப் பெரிய கிரீடங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அதனால் நவரத்தினங்கள் கீழே சிந்திப் பிரகாசிக்கும் முற்றம் விளங்கிய பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள, புகழ் மிக்க மேருமலையாகிய வில்லை ஏந்திக் கொண்டு திரிபுரத்தை நோக்கி நகைத்துத் தீயைப் பரப்பிய சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! அடியேனது பிறவிக் கடலை வற்றச் செய்யும் குண்டலம் அணிந்த திருச்செவியினிடத்தும் ஆணவ மலங்களைப் போக்கும் செந்தாமரை மலர் போன்ற திருமுகத்தினிடத்தும் என் கருத்தானது கலந்து பொருந்தியது.

திருமுடி

21. ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம்
பெருந்தடங் கண்கள்மூன் றுடையான்
பேர்கள்ஆ யிரம்நூ றாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச்சிற் றம்பலக் கூத்த !
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.

தெளிவுரை : இரண்டு வில்போன்ற புருவங்களையும் அகன்ற பெரிய மூன்று கண்களையும் உடைய சிவபெருமானின் ஆயிரம் லட்சம் திருநாமங்களைப் பக்தி மேலீட்டினால் பிதற்றுகின்ற அழகினைக் கொண்ட, கற்பகத் தருவைப்போல விரும்பியவற்றை அளிக்கின்ற பெரியோர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப்புலியூரினிடத்தே உள்ள சிறப்பு நிறைந்த கொக்கு இறகும் கொன்றை மலரும் பொருந்திய திருமுடியினை உடைய சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெரு மானே ! கங்கையைத் தரித்த செஞ்சடையில் வாழ் கின்ற சந்திரனும் அன்று அலர்ந்த ஊமத்த மலரும் என் சிந்தையுள் நிறைந்து தங்குவன ஆயின.

பணிவு

22. காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன், பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்த !
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.

தெளிவுரை : மன்மதனை, யமனை, தக்கனை, தவ வலிமை மிக்க எச்சனை அழியும்படி செய்து பின்பு அவர்களுக்குத் திருவருள் பாலித்தவனாகிய உன்னை அல்லாத பேய்த் தன்மை உடையவர்களை மனத்தினாலும் நினைக்காமல் நீங்கி நின்ற தவத்தினால் மேம்பட்ட சிவத் தொண்டர்களுக்குத் தொண்டனாகிய என்னை, பெரும்பற்றப்புலியூராகிய காவல் பொருந்திய நல்ல தில்லைப்பதியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே ஆட்கொண்ட திருவருட்செல்வம் நிறைந்த சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே ! எனது அற்புதமான துதிச் சொற்களின் பொருளை உனது அழகிய தாமரை மலர்போன்ற திருவடியின்கீழ் உள்ள பழைமையான பூதகணங்கள் பொறுத்தருளுவர் அன்றோ?

திருச்சிற்றம்பலம்

3. கோயில் உறவாகிய யோகம்

திருச்சிற்றம்பலம்

23. உறவா கியயோ கமும்போ கமுமாய்
உயிராளி என்னும்என் பொன்னொருநாள்
கிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும் மணிநீர் அருவி
மகேந்திர மாமலைமேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் பொன்போன்ற சிறந்த மகள் விளங்குகின்ற தில்லைப்பதியின்கண் உள்ள சிற்றம்பலத்தில் நடம் புரியும் பெருமானைக் குறித்து, உயிர்களுக்குத் தொடர்பான யோகமும் போகமுமாய் நின்று என் உயிரை ஆள்பவனே ! என்று சொல்லுவாள்; முன்னொரு நாள் மேன்மை இல்லாதவரான அசுரர்களின் முப்புரத்தை அழித்த வெற்றி பொருந்திய வில்லைக் கைக் கொண்டு மூகாசுரன் என்னும் பன்றியின் பின்னே சென்று அதனைக் கொல்வதற்காக நின்ற வேடனே ! என்று சொல்லுவாள்; இரத்தினங்களைக் கொழித்துக் கொண்டு ஓடி வரும் நீர் அருவிகளை உடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையின்மீது எழுந்தருளிய குறவனே ! என்று சொல்லுவாள்; நற்குணங்களுக்கு இருப்பிடமானவனே ! என்று சொல்லுவாள். மலை நாட்டிற்கு உரியவர் குறவர் ஆதலால், இங்கு இறைவனைக் குறவா என்றார்.

24. காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்
செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : தீவினையுடைய யான் பெற்ற மகள், விளங்குகின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் நடிக்கும் கூத்தப் பெருமானைக் குறித்து, சுடுகாட்டில் ஆடுகின்ற பல்வகைப் பூதகணங்கள் வேடுவர்களாய்ச் சூழ்ந்து வர. கொடிய பன்றியின் பின் நெடிய பகற்பொழுதில் காட்டில் நடந்த வேடுவனே ! மகேந்திர மலையில் உள்ளவனே ! என்று சொல்லுவாள், விம்மி அழுது அஞ்சுவாள்; பெருமை யுடையவனே என்று சொல்லுவாள், சிவநேயச் செல்வர்களும் மிக்க புகழையுடைய மூவாயிரம் அந்தணர்களும் தமது சிவந்த கைகளைக் கூப்பி வணங்குகின்ற நெறி தவறாதவனே; என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

25. கானே வருமுரண் ஏனம் எய்த
களியார் புளினநற்கா ளாய்என்னும்
வானே தடவும் நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேலிருந்த
தேனே என்னும் தெய்வவாய் மொழியார்
திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, காட்டிலே வருகின்ற மாறுபாடு கொண்ட பன்றியை அம்பினால் எய்து கொன்ற களிப்பு மிகுந்த நல்ல வேடக்காளையே ! என்று சொல்லுவாள்; ஆகாயத்தை அளாவுகின்ற நீண்ட சிகரங்களையுடைய பெரிய மகேந்திர மலைமீது இருந்த தேன் போன்றவனே ! என்று சொல்லுவாள்; தெய்வத்தன்மை பொருந்திய வேதத்தை ஓதுகின்றவர்களும் திருவருட் செல்வத்தை உடையவர்களும் ஆகிய தில்லை, மூவாயிரவர்களுக்குத் தெய்வமாகிய தலைவனே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

26. வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்
விசயற்(கு) அருள்செய்த வேந்தே ! என்னும்
மறியேறு சாரல் மகேந் திரமா
மலைமேல் இருந்தமரும் தே ! என்னும்
நெறியே ! என்னும் நெறிநின்ற வர்கள்
நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே ! என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, முன் ஒரு நாள் கோபம் மிகுந்து ஓடும் பன்றியைத் துரத்திக் கொண்டு பின்னே சென்று அருச்சுனனுக்கு அருள் புரிந்த அரசே ! என்று சொல்லுவாள்; மான்கள் உலாவும் மலைப் பக்கங்களையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையின் மேல் வீற்றிருந்த பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவனே ! என்று சொல்லுவாள்; அன்பர்களை நன்னெறியில் செலுத்துபவனே என்று சொல்லுவாள்; சன்மார்க்கத்தில் நின்ற பெரியோர்கள் இடைவிடாமல் நினைக்கின்ற நீதியோடு கூடிய வேதாந்தங்களில் கூறப்பெற்றுள்ள நிலைத்த இலட்சியப் பொருளே என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

27. செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
எனைநீ நலிவதென் னேஎன்னும்
அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)
அரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக்குறித்து, செழுமையான தென்றல் காற்று அன்றில் என்னும் பறவை, சந்திரன், இராப்பொழுது, கடலின் அலை ஓசை, இனிய குழலோசை, எருதின் கழுத்தில் கட்டிய மணி ஓசை ஆகிய இவை எழுந்து என்மீது பகை கொண்டு துன்புறுத்த, அதனால் வாட்டமடைந்த என்னை நீ வருந்துவது ஏனோ என்று சொல்லுவாள்; நீரில் அழுந்தாத மகேந்திர மாமலையில் உள்ள ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பட்சிகளுக்கு அரசாகிய கருடனுக்கு அருள் செய்த தலைவனே ! தேவர்களுக்கு ஒப்பற்ற இளந்தளிர் போன்ற தன்மையனே என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள். அன்றில், துணை பிரியாப் பறவை, மேற்கூறியவை மாலைக் கால நிகழ்ச்சிகள். இவை பிரிந்தாரை வருத்துவன.

28. வண்டார் குழலுமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவல வில்லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலைபல் பசுங்கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியாருக்கு முன்னே, மகேந்திர மலைச் சாரலில், கண்ட தேவர்கள் கவலைப் படும்படி பன்றியின் பின் வில்லை ஏந்திக் கொண்டு வேடர்களோடு விரைவாய் ஓடும் நாய்களுடன் சென்று அப் பன்றியை வளைத்துக் கொண்டவனே ! என்று சொல்லுவாள்; பழைமையாகிய பிரமன், தக்கன், எச்சன், சூரியன் இவர்களுடைய தலைகளையும் பற்களையும் பசிய கண்களையும் தக்கன் யாகத்தில் பறித்துக் கொண்டவனே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

தக்கன் யாகத்தில் பிரமன், தக்கன், எச்சன் இவர்களின் தலைகளையும், பன்னிரண்டு சூரியர்களில் பூஷன் என்பவனின் பற்களையும், பகன் என்பவனின் கண்ணையும், வீரபத்திரர் பறித்தார் என்பது புராண வரலாறு.

29. கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்
கணையும் கவணும் கைக்கொண்(டு)
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை
வராக முன்னோடி விளியுளைப்ப
நடப்பாய் ! மகேந்திர நாத ! நா தாந்தத்(து)
அரையா என்பார்க்கு நாதாந்தபதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, மிகக் கடுமையாகப் பறைகள் ஒலிக்க, வேகமும் கொடுமையும் நிறைந்த வில்லையும் அம்பையும் கவண் என்னும் கருவியையும் கைக் கொண்டு, புலித்தோலும் செருப்பும் சிறுகத்தியும் தரித்தவனாய்ப் பன்றியின் முன்னே ஓடிக் கூக்குரல் முழக்கி நடந்தவனே ! மகேந்திர மலைக்குத் தலைவனே ! நாத தத்துவத்தின் முடிவாய் இருக்கின்ற தலைவனே ! என்று துதிக்குமும் அடியவர்களுக்கு, நாத தத்துவத்தையும் கடந்த (சிவலோக) பதவியைக் கொடுப்பவனே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

30. சேவேந்து வெல்கொடி யானே ! என்னும்
சிவனே ! என் சேமத்துணையே என்னும்
மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்
வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்கும் தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, இடபத்தின் வடிவம் எழுதப் பெற்றுள்ள வெற்றி பொருந்திய கொடியை உடையவனே ! என்பாள்; சிவபெருமானே ! எனது உயிரின் பாதுகாவலுக்குரிய துணைவனே என்பாள்; பன்றி முதலிய விலங்குகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள மலைச் சாரலையுடைய மகேந்திர மலையினிடத்து எழுந்தருளிய தலைவனே ! நீ இங்கே வருவாயாக என்று சொல்லுவாள்; தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் மலர்களைக் கையில் ஏந்தி நின்று வணங்கப் புகழ் நிறைந்த பொன்னம்பலத்தில் சிறப்புடன் வீற்றிருக்கும் அரசே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்பாள்.

31. தரவார் புனம்சுனை தாழ்அருவித்
தடல்கல் லுறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்
மலைசூழ் மகேந்திர மாமலைமேல்
சுரவா ! என்னும் சுடர்நீள் முடிமால்அயன்
இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்
குரவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, மிக்க பயன் தரும்படியான தினைப்புனங்களையும் மலைச் சுனையினின்று இழியும் அருவிகளையும் உடைய பெரிய கற்பாறைகளின் கீழுள்ள குகைகளில் வசிக்கும் போர் புரியும் சிங்கங்கள், குங்கும மரங்கள் பொருந்திய சோலைகள். அழகிய வேங்கை மரங்கள் ஆகிய இவை நிறைந்ததும், எல்லாப் பக்கங்களிலும் மேகங்களால் சூழப் பெற்றுதுமான மகேந்திரம் என்னும் பெரிய மலையினிடத்து எழுந்தருளிய தேவ தேவனே ! என்று சொல்லுவாள்; ஒளி பொருந்திய நீண்ட கிரீடங்களைத் தரித்த திருமால், பிரமன், இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களுக்கும் குருவாக விளங்குபவனே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

32. திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீர் அருவி மகேந்திரப்பொன்
மலையின் மலைமக ளுக்கருளும்
குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லை அம்பலக் கூத்தனைக் குறித்துத் திருவெண்ணீற்றை அணியாத உருவத்தைத் தொடமாட்டேன் என்று சொல்லுவாள். பின், திருவெண்ணீற்றைத் தன் உடம்பின்மேலும் அழகிய நெற்றியின்மேலும் அணிந்து, பெருமை பொருந்திய நீலகண்டத்தை உடைய சிவபெருமானது புகழைத் தன் வசமிழந்து சொல்லிக் கொண்டு, இவள் பெரிய தெருக்களின் வழியே திரிந்து கொண்டிருப்பாள், இறங்கி ஓடி வருகின்ற நீரருவிகளையுடைய மகேந்திரம் என்னும் அழகிய மலையினிடத்து மலை மகளாகிய உமாதேவியாருக்குச் சிவாகமப் பொருளை அருள்புரிந்த குருமூர்த்தி நீ என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

33. உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)
உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்
பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற திருச்சிற்றம்பலக் கூத்தனைக் குறித்து, எனக்கு மிக நெருங்கிய உறவினனே ! என்பாள்; உன்னை அல்லாமல் வேறொன்றையும் அறியேன் என்று சொல்லுவாள்; உணர்ச்சிகள் இறை அறிவுடன் கலந்து சிவமயமே ஆகிப் பல நலங்களைச் செய்வதாகிய திருஐந்தெழுத்தையும் இடைவிடாமல் செபித்து, உடற்பிணியும் உயிப்பிணியும் நீங்கும் பொருட்டு நான் திருவெண்ணீற்றை அணியும் பேற்றைப் பெற்றேன் என்று சொல்லுவாள்; சுற்றிலும் பொருந்திய சோதி மயமான மகேந்திர மலையினை வலம் வந்து, அதனால் மனத்திலுள்ள அஞ்ஞான இருளைப் போக்கிக் கொண்டு சிவத்தியானம் செய்யாத மனத்திலும் நிறைந்திருப்பவனே ! என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

34. வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)
அவனிச் சிவலோக வேதவென்றி
மாறாத மூவாயிர வரையும் எனையும்
மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்(து) உன்
அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

தெளிவுரை : என் மகள், விளங்குகின்ற தில்லையம்பலக் கூத்தனைக் குறித்து, வெவ்வேறாக மனத்தின்கண் பெரு மகிழ்ச்சியை விளைவித்துப் பூலோகத்தைச் சிவலோக மாகச் செய்து வேதம் ஓதும் மேம்பாடு வேறுபடாத தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களையும் தாழ்ந்த என்னையும் ஒரேவிதமாகத் திருவுளம் மகிழ்ந்து ஆட் கொள்ள வல்லவனே ! என்று சொல்லுவாள்; அருவிகள் நிறைந்த சிகரங்களைக் கொண்டுள்ள மகேந்திர மலையிடத்து வழிபடும் உனது மெய்யடி யார்களின் பிழைகளை எல்லாம் பொறுத்தருள்பவனே ! உமாதேவியாரை இடப்பாகத்தில் வைத்தருளிய சிவபெருமானே என்று சொல்லுவாள்; குணக்குன்றே என்று சொல்லுவாள்.

திருச்சிற்றம்பலம்

4. கோயில் இணங்கிலா ஈசன்

இத்திருப்பதிகம் தில்லைப் பெருமானிடத்தும் அவன் அடியாரிடத்தும் அன்பு செய்ய மாட்டாதவரது இழிபு உணர்த்தி அவரைக் காணுதலும், அவரோடு பேசுதலும் ஆகாமையை உணர்த்தி அருள்கின்றது.

திருச்சிற்றம்பலம்

35. இணங்கிலா ஈசன் நேசத்(து)
இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : ஒப்பற்ற ஈசனாகிய சிவபெருமானிடத்து, அன்பினால் பொருந்தியிருந்த மனத்தையுடைய எனக்கு, எக்காலத்தும் மகிழ்ச்சியோடு கூடிய சிறப்பு நிறைந்த தில்லைப் பதியின்கண் எழுந்தருளிய நடராசப் பெருமானது மங்கலமான அடியார்களின் ஈகைத் தன்மைகளை எடுத்துச் சொல்லாத மேன்மை இல்லாத தொளை போன்ற வாயினையும், துவாரங்களையுடைய உடலையும் சுமந்து கொண்டிருக்கும் நடைப் பிணங்களை என் கண்கள் காணமாட்டா; எனது வாயும் பயனற்று அலையும்; அந்தப் பேய்களோடு பேசாது.

36. எட்டுரு விரவி என்னை
ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்(கு) அலங்கல் தில்லை
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : எட்டு உருவங்களோடு கலந்து திகழ்ந்து என்னை ஆட்கொண்டவனும், திரண்ட சோதி வடிவினனும் ஆகிய ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற மலர் மாலையை அணிந்த தில்லைப்பதிக்கு அதிபனை அடையப் பெறாத தீயவர்களையும் இழிந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டு திரியும் குற்றேவல் செய்பவர்களையும், கொடிய வார்த்øதைகளைப் பேசும் சைவ மதத்திற்குப் புறம்பானவர்களையும் எனது கண்கள் காணமாட்டா. எனது வாயும் பயன் அற்று அலையும்; அந்தப் பேய்களோடு பேசாது.

37. அருள்திரள் செம்பொன் சோதி
அம்பலத் தாடு கின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான்
இன்பருக்(கு) அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : அருளே வடிவெடுத்தாற்போன்ற செம்பொற் சோதியனும், பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற கருநிறம் நிறைந்த கண்டத்தினை உடைய எம் தலைவனும் ஆகிய சிவபெருமானிடத்து அன்பு செலுத்தி, அதனால் இன்பம் அடையும் அடியவர்களுக்கு அன்பைக் காட்டாத குறும்பு செய்பவர்களையும், கூச்சலிட்டுப் பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்ற பொறாமை உடையவர்களையும் கழுகுகள் போல் பறித்துண்ணும் பிரஷ்டரை எனது கண்கள் காணமாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

38. துணுக்கென அயனும் மாலும்
தொடர்வரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்(கு) அணிய செம்பொன்
அம்பலத் தாடிக்(கு) அல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : திடுக்கிட்டு அஞ்சுமாறு பிரமனும் திருமாலும் தொடர்ந்து அறிதற்கு அரிய சோதி வடிவினனாகி இங்கு, அடியவர்களாய் அணுகினவர்களுக்குச் சமீபித்து வந்து அருள் செய்யும் பொன்னம்பலத்தில் நடனமாடுபவனும் ஆகிய நடராசப் பெருமானுக்கு அன்பர் அல்லாத மூக்கால் அழும் சோம்பேறிகளையும் வீணான பாவிகளையும், இழி செயல் புரிவோர்களையும் கீழ்மக்களையும் மன அழுக்கு நிறைந்த கயவர்களையும் எனது கண்கள் காணமாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

39. திசைக்குமிக் குலவு சீர்த்தித்
தில்லைக்கூத்(து) உகந்து தீய
நசிக்கவெண் ணீற(து) ஆடும்
நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : எட்டுத் திக்குகளுக்கும் மேற்பட்டுப் பரவுகின்ற புகழினை உடைய தில்லையம்பலத்தில் இறைவன் புரியும் நடனத்தை விரும்பித் தீமைகள் (பாவங்கள்) அழியும்படி திருநீற்றைப் பூசும் சிவனடியார்களைச் சேராத நாய் போன்ற இழிந்தவர்களையும், (பகைவர்கள்) பரிகசிக்க வடமொழியிலுள்ள பிற சமய நூல்களை ஓதுகின்ற அறிவில்லாதவர்களையும் மத பேதங்களைப் பற்றித் தர்க்கம் செய்யும் அற்பர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

40. ஆடர(வு) ஆட ஆடும்
அம்பலத்(து) அமிர்தே என்னும்
சேடர்சே வடிகள் சூடத்
திருவிழா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
சழக்கரைப் பிழக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : படமெடுத்துப் பாம்புகள் ஆடுகின்ற பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற அமிர்தம் போன்றவனே ! என்று துதிக்கின்ற பெருமை பொருந்திய சிவனடியார்களுடைய செம்மையான பாதங்களைத் தலையில் சூடிக் கொள்வதற்குப் பாக்கியமில்லாத வீண் உடம்பு எடுத்தவர்களையும், அற்பர்களையும், கோள் பேசித்திரியும் வம்பர்களையும், உறுதியற்ற பொய்ப் பேச்சையுடைய பேடியர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

41. உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்(பு) அருளும் தில்லைச்
செல்வன்பாற் செல்லும் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : என் உள்ளத்தை உருகுமாறு செய்து, அவ் உள்ளத்தின் உள்ளே ஊறிவருகின்ற தேன்போன்ற பேரின்ப உணர்ச்சி நீங்காது இருக்கின்ற திருவருட்குறிப்பினை அருளுகின்ற தில்லைப்பதியின்கண் எழுந்தருளிய செல்வனாகிய கூத்தப் பெருமானிடம் சென்றடையும் மனப்போக்கு இல்லாத குறைந்த அறிவினை உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய திருடர்களையும், நீங்காத பாவங்களைப் பெருகச் செய்பவர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

42. செக்கர்ஒத்(து) இரவி நூறா
யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
கருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்ட மிண்ட
எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : செவ்வானம் போன்ற நூறாயிரம் சூரியர்கள் திரண்டதற்கு ஒப்பாகிய ஒளிபொருந்திய தில்லைப் பதியின்கண் எழுந்தருளிய அழகராகிய பொன்னம்பலவர் என்று சொல்லுகின்ற வேத வாக்கை நினைத்துப் பார்க்காத இறுமாப்பு உடையவர்களையும், கீழோர்களையும், கர்வங் கொண்ட வஞ்சகர்களையும் புத்தர் சமணர் முதலிய பொய்யர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அந்தப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

43. எச்சனைத் தலையைக் கொண்டு
செண்டடித்(து) இடபம் ஏறி
அச்சங்கொண்(டு) அமரர் ஓட
நின்றஅம் பலவற்(கு) அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : எச்சனது தலையை அரிந்து எடுத்துக் கொண்டு அதனைப் பந்தாக அடித்து, தக்கன் வேள்வியை அழித்த போது தேவர்கள் பயந்து ஓடும்படி செய்து இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி நின்ற பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானிடத்து அன்பர் அல்லாத வெறுக்கத் தக்கவர்களையும் ஞான சாஸ்திரங்களைக் கற்காத தீக்குணம் பொருந்திய கீழ் மக்களையும் லௌகிக நூல்களைக் கற்கும் பித்தர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

44. விண்ணவர் மகுட கோடி
மிடைந்தொளிர் மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
அரசனுக்(கு) ஆசை இல்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்(து)
இருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : சிவ தரிசனத்திற்கு வரும் தேவர்களின் கோடி மகுடங்கள் ஒன்றோடொன்று நெருங்கிப் பிரகாசிக்கின்ற நவரத்தின மணிகள் இடைவிடாது ஒளியை வீசுகின்ற பெருமை பொருந்திய பொன்னம்பலத்தில் எழுந்தருளிய வெற்றி வேந்தனாகிய கூத்தப் பெருமானிடத்து, அன்பு இல்லாத அறிவிலிகளையும் தெளிவடையாத மனத்தினையுடைய அஞ்ஞானிகளையும் வம்புச் சொற்கள் பேசம் பெண் தன்மை உடையவர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

45.சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்
உறைப்புடை யடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
பேசா(து)அப் பேய்க ளோடே.

தெளிவுரை : மேன்மை மிக்க அடியார்கள் வாழ்கின்ற தில்லைப்பதியின்கண் உள்ள செம்பொன்னால் ஆகிய சிற்சபையில் ஆடுகின்ற பெருமானிடத்து, அடிமை பூண்டு ஒழுகும் மனவுறுதியைக் கொண்டு சிவபெருமான் திருவடி என்று சொல்லப்படும் திருவருட் பேற்றிற்கு அறிகுறியாகிய திருவெண்ணீற்றை உடல் முழுதும் அணியாதவர்களையும் இறப்பிற்கும் பிறப்பிற்குமே விருப்பமுடையவர்களாய் மீண்டும் மீண்டும் உலகில் வந்து பிறக்கின்ற கீழோர்களையும் எனது கண்கள் காண மாட்டா; எனது வாயும் அப் பேய்த்தன்மை உடையவர்களோடு பேசாது.

திருச்சிற்றம்பலம்

2. சேந்தனார் அருளிய திருவிசைப்பா

1. திருவீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

46. ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை
என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்
போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை அன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.

தெளிவுரை : ஒப்பற்ற ஒரே தலைவனாக இருப்பவனை, தேவர்களுக்கு அரசனாகத் திகழ்பவனை, எனது உயிர்க்கு அமிர்தம் போல இனியவனாய் இருப்பவனை, இணையில்லாத சிவானந்தமாகிய இன்பத்தை ஊட்டும் தலைவனை, மேகம் போன்ற நிறத்தினனான திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருள் செய்து, அத் திருமாலையே பொன்னாலாகிய நீண்ட சிவிகையாகக் கொண்டு எறிச் செலுத்திய மேகம் போலும் கைம்மாறு கருதாத தலைவனாகிய சிவபெருமானை, மேன்மை மிகுந்த திருவீழிமிழலையில் தேவலோகத்தினின்றும் கீழே இறங்கி வந்த செழுமையான கோயிலிலே எழுந்தருளிய சிவயோகங்களுக்குத் தலைவனாய் இருப்பவனை அல்லாமல் வேறொரு பொருளும் உலகத்தில் உள்ளதென்று யான் அறிந்திலேன்.

47. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

தெளிவுரை : நல்லறிவு தரத்தக்க நூல்களைக் கற்றவராகிய மெய்ஞ்ஞானிகள் அனுபவிக்கும்படியான பேரின்ப உணர்வாகிய கற்பக மரத்தின் கனி போன்று விரும்பியவற்றைத் தருபவனை, கரையில்லாத கருணை என்னும் பெருமை பொருந்திய கடல் போன்றவனை அஞ்ஞானிகள் அறியாத மாணிக்க மலை போன்றவனை, அன்பால் நினைப்பவருடைய மனத்தின்கண் மாணிக்கச் சுடர் போன்று ஒளி வீசுபவனை, பகைவர்களாகிய திரிபுராதிகளின் முப்புரங்களை அழித்த எங்கள் சிவபெருமானை, திருவீழிமிழலையின்கண் மேன்மையுற அமர்ந்தருளிய தலைவனாகிய இறைவனை எனது மனம் இன்பம் அடையுமாறு பல முறை தரிசித்து எனது கண்களும் இன்பம் அடைந்தன.

48. மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தைஎன் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)
எளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்
குருகவல் வினைகுறு காவே.

தெளிவுரை : இவ் உலகப் பற்றைத் தொலைத்து, நான் அனுபவித்த தேவாமிர்தம் போன்றவனை, எனது மாறுபாடு இல்லாத மாணிக்கம் போன்றவனை, முற்காலத்தில் தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் காண்பதற்கு அரியவனாய் மெய்யடியார்களுக்கு எளியனாய் ஒப்பற்ற பெரிய பவள மலை போன்றவனை, இதழ்கள் விரிந்து மலர்ந்த பூக்களினின்று தேன் ஒழுகுகின்ற சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் தலத்தில் எழுந்தருளி ஆட்சி புரியும் மேகம் போன்று கருத்து அழகிய கண்டத்தை உடைய எமது குருமூர்த்தியாகிய வயிரமணியை அடைக்கலமாக அடைந்தால் வலிய வினைகள் வந்து அடையமாட்டா.

49. தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.

தெளிவுரை : தன் திருவடி நிழலின் கீழ் என்னையும் தடுத்தாட் கொண்ட சந்திரன் விளங்குகின்ற திருமுடியினை உடையவனை, தானாகவே என்னிடத்துள்ள மூன்று தாமரைகளின் உள்ளும் உதித்து எழும் செழுமையான சூரியனை, ஒளி பொருந்திய அருட்பெருங் கடலினுள்ளே நீர்ப் பெருக்காய் இருப்பவனை, திருவீழிமிழலை என்னும் தலத்துள் எழுந்தருளிய வெண்மையான படிகம் போன்ற இறைவனது அழகிய திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, இனி நான் அத்திருவடிகளை என்னை விட்டு நீங்கும்படி விடுவனோ? விட மாட்டேன், அவற்றை என் சிரமீது அணிந்து கொண்டேன்.

50. இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த் தெய்வ நெறிநாண் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமால(து) அவமும்
அறிவரோ அறிவுடை யோரே.

தெளிவுரை : சிவபெருமானை அடைதற்கு இவ் வழி நல்வழி என்று எண்ணி, அஞ்ஞானமும் வஞ்சகமும் கூடிய பிறவியை ஒழிக்கும் தகுதி இல்லாத இந்திர சாலம் போன்று அழியும் பொய்யாகிய பிற தெய்வ வழிபாட்டு நெறியில் நான் செல்லாதபடி அருள் செய்து, பழைய உயர்ந்த சிந்தாமணி என்ற தேவமணி போன்ற சிவபெருமான், ஏற்படுத்தி வைத்த உண்மையான சிவமார்க்கத்தை அடையும் வழியில் நின்ற நான்கு வேதங்களில் வல்ல அந்தணர் வாழும் திருவீழிமிழலை என்னும் தலத்தில் விண்ணினின்று இறங்கி வந்த செழுமையான விமானக் கோயிலின்கண் எழுந்தருளிய சிவபெருமானே அல்லாது அச்சிவநெறியில் நிற்கும் அறிவுடையோர் பயனற்ற ஒரு பொருளையும் அறிந்து கொள்வார்களோ ! அறியார்கள்.

51. அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
ஐவரோ(டு) அழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.

தெளிவுரை : அந்தக் கனவு போன்றே மெய் போலத் தோன்றிப் பின் மறையும் செல்வத்தையே பெறும் வகையினை ஆராய்ந்து அக் கனவு போன்ற ஐம்புலன்களின் நுகர்ச்சியில் தோய்ந்து யான் பயனின்றிப் பிறவியில் புகாதபடி தடுத்து என்னை ஆட்கொண்டருளிய பரிசுத்தமானவனை, உமாதேவியாரை இடப்பாகத்தில் பெற்றவனை, எட்டுத் திசைகளிலும் விளங்குகின்ற புகழை உடைய திருவீழிமிழலை என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி நீழலின் கீழே புகுந்து நிற்பவராகிய சிவனடியார்களின், அழகிய திருவடித் தாமரையில் பொருந்திய துகளை அணிந்து நான் அடிமைத் தொழிலை மேற் கொண்டேன்.

52. கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ ? இனியே.

தெளிவுரை : கங்கா நதியின் தீர்த்தம் போன்ற புனிதமான நீரினை உடைய அரிசிலாற்றங்கரையின் இரண்டு பக்கங்களிலும் மணம் கமழும் சோலைகளை அடுத்துள்ள வயல்கள் பொருந்திய சந்திரனை நேரே தொடுமாறு, மிக உயர்ந்த மேல் மாடிகள் நிறைந்த மாளிகைகள் சூழ்ந்த மேன்மை பொருந்திய திருவீழிமிழலை என்னும் தலத்தில் எழுந்தருளிய சிறந்த சிவஞானச் செல்வத்தை அருளும் இறைவனாகிய தானாகவே தோன்றி நின்ற சிறந்தவனை, தனது பேரொளியாகிய உமாதேவியாரை இடப்பாகத்தில் உடைய எனது அருமையான தேவாமிர்தம் போன்றவனை இனிமேல் நான் மறந்து வருந்துவனோ?

53. ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்
கண்முக கரசர ணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே.

தெளிவுரை : முக்கண்கள் ஆயிரம் சூரியர்கள் ஒன்று சேர்ந்தார் போல ஒளியுள்ளவனும், திருமுகம் திருக்கை, திருவடியாகிய இவை ஆயிரம் தாமரை மலர் போன்று அழகாய் உள்ளவனும் பாய்ந்து ஓடுகின்ற பெரிய கங்கா நதியையும் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் மறைத்து வைத்துள்ள பரவிய சடை ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய திருமுடியினை உடையவனும், மூங்கிலைப் போலும் திரண்ட பெரிய தோள்களை உடைய உமாதேவியின் மணவாளனும் ஆகிய சிவபெருமான் தமது இருக்கையாக விரும்பிய திருவீழி மிழலை என்ற தலத்தைச் சூழ்ந்த சோலையின் கண் சென்று தங்கியிருந்தாவது இறைவன் திருவடிகளைப் புகழ்ந்து துதிக்கின்ற அடியவர்களுடைய பாதங்களை இந்திரன் முதலான தேவர்கள் போற்றிப் புகழ்வார்கள்.

54. எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடிதிண் தோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய்
நின்(று)ஐஞ்ஞாற்(று) அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.

தெளிவுரை : எண்ணற்ற பல கோடிக்கணக்கான செம்மையாகிய பாதங்களையும், எண்ணற்ற பல கோடிக் கணக்கான திருமுடிகளையும், எண்ணற்ற பல கோடிக் கணக்கான வலிய தோள்களையும், எண்ணற்ற பல கோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களையும், அழகினைக் கொண்ட முக்கண்கள் பொருந்திய திருமுகங்களையும், தன்மைகளையும் கொண்டு விளங்குபவரும் அளவு கடந்து நின்று ஐந்நூறு அந்தணர்கள் துதித்து வழிபடுகின்ற எண்ணிறந்த பல கோடிக்கணக்கான குணங்களை உடையவரும் ஆகிய அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளிய இச் சிவபெருமானே நம்மை ஆட்கொள்ளும் கடவுளாவார். இவ்வாறு பல உறுப்புக்களை உடைய மூர்த்தியை, மகா சதாசிவ மூர்த்தி எனச் சிவாகமங்கள் கூறும்.

55. தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்
மறலிவேள் இவர்மிகை செகுத்தோள்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.

தெளிவுரை : தட்சன், வெம்மைமிக்க கிரணங்களையுடைய சூரியன், சலந்தராசுரன், பிரமன், சந்திரன், இந்திரன், யாகத் தலைவனான எச்சன், வலிமை மிகுந்த மன வலிமையுடைய இராவணன், திரிபுரம், யானை, கருடன், யமன், மன்மதன் ஆகிய இவர்களுடைய வரம்பு கடந்த அகந்தையை அழித்தவனும் திசைகள் முழுமையும் நிரம்பிய புகழை உடைய திருவீழிமிழலையில் எழுந்தருளியவனுமான சிவபெருமானின் திருவடி நீழலின் கீழ்ப் புகுந்து இருக்கின்ற மெய்யடியார்களுடைய அழகிய பாத தாமரையில் பொருந்திய துகளை நான் அணிந்து அவர்களுக்குத் தொண்டு புரியும் பணியை மேற்கொண்டேன். சிவ நிந்தை செய்த கருடனை நந்தி தேவர் தண்டித்தார். பொன்னடிக் கமலப் பொடி இதனை வடமொழியில் ஸ்ரீபாததூளி என்பர்.

56. உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று)
ஆந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே.

தெளிவுரை : இன்ப மயமான ஞான ஒளியை மனத்தில் பொருந்துமாறு பரப்பி, உயிர்கள்மேல் அருள் மழையைப் பொழிகின்ற உமாதேவியாரது கணவனை, வளம் மிகுந்த கங்கா நதியையும் பிறைச் சந்திரனையும் சிரசில் தரித்து இளமையான இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி வருகின்ற சிவபெருமானை முருகக் கடவுளின் தந்தையை விளங்குகின்ற புகழினையுடைய திருவீழிமிழலைக்கு அரசே ! என்று என்னால் முடிந்தவரையில் நான் கண்டத்தினால் கூடிய மட்டும் கூவி அழைத்தால், அடியேன் கைக்கொண்ட பொன்னிறம் பொருந்திய கற்பகத் தருவைப் போன்ற அவ் ஈசன் என்னிடம் வரத் தவறுவானோ? தவறமாட்டான்.

57. பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத்(து) எம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் அமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே.

தெளிவுரை : பாடும் அணி நலனுக்கு வெகுமதியாகத் திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் நாள் தோறும் பொற்காசுகளை அருளிச் செய்து, திருவருள் கனிந்த செந்தமிழ்ப் பாமாலைகளை நீடித்து என்றும் அலங்காரமாய் இருக்கும்படி சூட்டிக் கொண்டு, எமது பெருமை மிக்க அவ்விரு அடியார்களின் மனத்திலே நிறைந்து நின்ற சிவபெருமானை, அழகிய வேடுவக் கோலம் பூண்ட அமுதம் போன்றவனை, திருவீழி மிழலை என்னும் ஊரை ஆளுகின்ற குற்றமற்ற நல்ல புகழையுடைய பொன்மயமான கற்பகத் தருவைப் போன்றவனை நான் அடைதற்கு எவ்விதத் தகுதி உடையேன்?

திருச்சிற்றம்பலம்

2. திருவாவடுதுறை

திருச்சிற்றம்பலம்

58. பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா ! திருவா வடுதுறை
அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று)
அருளாது ஒழிவது மாதிமையே.

தெளிவுரை : உண்மைப் பொருளைக் கூறுகின்ற நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்கள் வசிக்கும் சாத்தனூரின்கண், அழியாப் புகழ் கொண்டவர்களான ஆயிரம் அந்தணர்கள் மன உணர்ச்சியோடு கோயிற் கைங்கரியங்களைச் செய்கின்ற செல்வச் சிறப்பு வாய்ந்த காவிரித் தென்கரையில் வீற்றிருந்தருளும் தலைவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளிய தேவாமிர்தமே ! என்று என் மகள் உன்னைக் கூப்பிட்டால், மை தீட்டப் பெற்ற பெரிய, கண்களையுடைய என் பெண்ணுக்கு நீ ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது அழகோ? அழகு ஆகாது.

59. மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோட மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி அமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி அறிகிலன் பொன்நெடும்
திண்தோள் புணர நினைக்குமே.

தெளிவுரை : மாமரத்து மலர்களின் வாசனை வீசும் சோலைகளாலும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற உப்பரிகைகளைக் கொண்ட மாளிகைகளாலும் வீதிகளாலும் சூழப்பெற்ற ஒளிவீசும் மதில்களை உடைய அழகிய சாத்தனூரில் வாழும் உண்மைகளைக் கூறும் வேதங்களின் கட்டளைப்படி ஒழுகும் அந்தணர்கள் வணங்குகின்ற முதல்வனும், தேவர்களுக்கு முன்னோனும், அழகிய திருவாவடுதுறையில் எழுந்தருளிய நம்பியுமான சிவபெருமான் நின்ற நிலையினை என் மகள் அறியும் ஆற்றல் இல்லாதவளாகி அவரது அழகான உயர்ந்த வலிய தோள்களைத் தழுவ நினைத்து நின்றாள்.

60. நினைக்கும் நிரந்தர னே ! என்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !
மனக்கின்ப வெள்ளம் மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத்
தருணேந்து சேகரன் என்னுமே.

தெளிவுரை : என் மகள் பலவாறு நினைப்பாள்; எக் காலத்தும் நிலைத்திருப்பவனே என்று சொல்லுவாள்; நிலாவின் அழகினைக் கொண்ட சிவந்த சடையிலுள்ள கங்கை நீரால் நனைக்கப் பெற்ற அழகு மிகுந்த கொன்றை மாலையின் மீது தனக்குள்ள விருப்பத்தை இன்பம்படப் பேசுவாள்; நல்ல நெற்றியினை உடைய பெண்களே, என் மகள் மனத்திற்கு இன்பப் பெருக்கைத் தருகின்றவனும், உமாதேவியார்க்குக் கணவனான சிறந்தோனும், வளமை நிறைந்த சாத்தனூர்க்கு இனியவனுமான சிவபெருமானைத் திருவாவடுதுறையிலுள்ள இளஞ்சந்திரனைத் தரித்த திருமுடி உடையவன் என்று சொல்லுவாள்.

61. தருணேந்து சேகர னே! எனும்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருள்நேர்ந்த சிந்தை அவர்தொழப்
புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்
அருள்நேர்ந்(து) அமர்திரு மாவடு
துறையாண்ட ஆண்டகை அம்மானே !
தெருள்நேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே.

தெளிவுரை : அகன்ற காவிரியாற்றின் தென்கரையிலுள்ள சாத்தனூரில், மெய்ப்பொருளையே பேசுகின்ற மனத்தை உடைய அடியார்கள் வணங்கப் புகழும் செல்வமும் மிக நிரம்பிய அழகிய கோயிலிலே அருளை வழங்கிக் கொண்டு வீற்றிருக்கும் திருவாவடு துறையை ஆண்டருளிய சிறந்தோனாகிய இறைவனே ! இளஞ்சந்திரனைத் தரித்த திருமுடி உடையவனே ! பொட்டு இட்ட நெற்றியினை உடைய என் மகள் விஷயத்தில் மட்டும் தெளிந்த அறிவுடன் கூடிய உன் மனம் இரங்காமல் வலிதாய் இருக்கின்றது. அதற்கு என்ன காரணம்?

62. திலக நுதல்உமை நங்கைக்கும்
திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்(கு) என்னையாட்
கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன்(று) அறிகின்றி லேம்எனும்
அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்?
வயலந்தண் சாந்தையர் வேந்தனே !

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி மிக்க வயல்களால் சூழப் பெற்ற சாத்தனூரில் உள்ளவர்களுக்கு அரசே ! பொட்டு அணிந்த நெற்றியினையுடைய உமாதேவியார்க்கும், திருவாவடுதுறை ஈசனுக்கும், அடிமை பூண்டு ஒழுகும் கூட்டமாகிய அடியார்களுக்குத் தொண்டு செய்யுமாறு என்னை அடிமையாகக் கொடுத்து ஆண்டு கொண்டருளிய குணக் கடலாகிய சிவபெருமானை அல்லாமல் வேறு ஒன்றையும் அறிகின்றேம் இல்லை என்று என் மகள் சொல்லுவாள். வெள்ளிய திருநீற்றை அணிவதும் பஞ்சாட்சரத்தைச் செபிப்பதும் அல்லாமல் செய்ய வல்ல காரியம் வேறொன்றும் இல்லாதவளாக இருக்கின்றாள். இதற்கு நான் என்ன செய்வேன்?

63. வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப் புரவித்தேர்
சாந்தை முதல் ! அயன் சாரதி
கதியருள் என்னும் இத் தையலை
ஆந்தண் திருவா வடுதுறையான்
செய்கை யாரறி கிற்பாரே ?

தெளிவுரை : சிவபெருமான், விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மதிலோடு கூடிய அழகிய முப்புரங்கள் நீறாகி எரிய, மேருமலையாகிய வில்லை வளைத்துக் கொண்டு, வேதங்களாகிய குதிரைகள் பூட்டிய தேரையும், பிரமனாகிய சாரதியையும், வாசுகியாகிய வில்லின் கயிற்றையும், சிவந்த கண்களையுடைய திருமாலான கொடிய அம்பையும் உடன் பெற்று நின்றார். நீர் வளம் பொருந்திய குளிர்ந்த திருவாவடுதுறையில் எழுந்தருளிய இறைவன் செய்த செய்கையை யாவர் அறிய வல்லார்? சாத்தனூர் முதல்வனே ! இந்தப் பெண்ணுக்கு ஆதரவு அளிப்பாயாக என்று கூறுவாள்.

64. கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு)
எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகள்என்
சொல்லிச் சொல்லும் இத் தூமொழி
கற்போல் மனம்கனி வித்தஎங்
கருணால யாவந்திடாய் என்றால்
பொற்போ பெருந்திரு வாவடு
துறையாளி பேசா(து) ஒழிவதே.

தெளிவுரை : பரிசுத்தமான மொழியைப் பேசும் இப் பெண்ணாகிய என் மகள், பாவிகளே ! உடலின் பயன் நாங்கள் செய்து முடிப்போம் என்று எண்ணித் தக்கன் வேள்விக்குச் சென்று வீரபத்திரர் வந்த போது, அவ்விடத்தினின்று எழுந்தோடி அழிந்த அத் தேவர்களுடைய வீர மொழிகளைப் போன்றுள்ளது. உடலின் பயன் என்ன கண்டீர் என்று சொல்லுவாள். கல்லைப் போன்ற எமது மனத்தைக் கனியச் செய்த கருணைக்கு இருப்பிடமானவனே ! பெரிய திருவாவடுதுறையை ஆட்சி புரிபவனே ! என் மகள்பால் வந்தருள்வாயாக என்றால் வாய் பேசாமல் சும்மா இருப்பது அழகோ?

65. ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்
உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
ஒழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை எய்திநின்(று)
இறுமாக்கும் என்னிள மானனே.

தெளிவுரை : அழிதல் அல்லாத சிவஞானச் செல்வத்தினைப் பெற்ற சாத்தனூரிலுள்ள அழகிய ஆவடுதுறையில் இன்ப வெள்ளத்தில் மூழ்கினவளும், கெடுதல் இல்லாதவளுமாகிய இளமானை ஒத்த என் மகள், நீங்குதல் சிறிதும் இல்லாத நிறைந்த உண்மைத் தன்மையையும், இடைவிடாது ஊறிக் கொண்டிருக்கும் பேரின்ப வெள்ளத்தையும், வற்றுதல் சிறிதும் இல்லாத காவிரித் தீர்த்தத்தையும், எண்ணில்லாத முனிவர்களையும், எண்ணில்லாத இறைவன் திருவுருவங்களையும் சிறிதும் குற்றமில்லாத முறையில் அடைந்து நின்று அதனால் செருக்குற்றாள்.

இறைவனே ! இவளுக்கு அருள் புரிதல் உன் கடனாகும்.

66. மானேர் கலைவளையும் கவர்ந்துளம்
கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே !
தேனே ! அமுதே ! என் சித்தமே !
சிவலோக நாயகச் செல்வமே !
ஆனேஅ லம்புபுனற் பொன்னி
அணியா வடுதுறை அன்பர்தம்
கோனே ! நின் மெய்யடி யார்மனக்
கருத்தை முடித்திடுங் குன்றமே !

தெளிவுரை : தேன் போன்று இனியவரே ! அமுதம் போன்று உயிர்க்கு உறுதியானவரே ! என் மனமாக இருப்பவரே ! சிவலோகத்திற்குத் தலைமையினையுடைய ஞானச் செல்வமே ! பசுக்கள் ஒலியுடன் மூழ்குகின்ற காவிரி ஆற்றின் கரையில் திகழும் அழகிய ஆவடுதுறையிலுள்ள மெய்யன்பர்களுடைய அரசே ! உனது மெய்யடியார்களின் மனத்திலுள்ள எண்ணங்களை முடித்து வைக்க வல்ல குன்று போன்றவரே ! மான் போன்ற எனது மகளின் அழகிய ஆடையையும் கைவளைகளையும் கவர்ந்து கொண்டு, மனத்தையும் கொள்ளை கொள்ள நியாயம் உண்டோ ?

67. குன்றேந்தி கோகன கத்(து)அயன்
அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்
இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றேஅ லம்புபு னற்பொன்னி

அணியா வடுதுறை ஆடினாள்
நன்றே இவள்நம் பரமல்லள்
நவலோக நாயகன் பாலளே.

தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமாலும், தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் தேடிக் காண முடியாத திருவருள் நெறியிலே என்னையும் சேர்த்து விட்டாய் அல்லவா? என்று மிக வருந்தி, இளங்கொடி போல்வாளாகிய என் மகள் இறைவனைக் கூவி அழைக்கின்றாள். அவள் துன்பத்தின் எல்லையைக் கடந்து விட்டாள். ஒலியுடன் ஓடுகின்ற காவிரி நதியின் அருகே திகழும் ஆவடுதுறையை அடைந்தாள். இவள் நமது செயலுக்கு ஒத்தவள் அல்லள்; புதிய உலகத்துத் தலைவனாகிய இறைவனைச் சார்ந்தவள் ஆயினாள். இது நமக்கு நன்றாயிருக்கிறதா?

68. பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.

தெளிவுரை : பால், அமுதம், தேன் என என் மனத்தினுள்ளே நின்று, இன்பத்தைக் கொடுத்து அருள் செய்பவன்; எனது அருமையான உயிரினிடத்தும் இன்பத்தை விளைவிப்பவனாகி, யமன் உடலையும் மன்மதன் உடலையும் திரிபுரத்தையும் அழித்தவன். சேல் மீனும் கயல் மீனும் மகிழ்ந்து விளையாடுகின்ற காவிரி நீரையுடைய திருவாவடுதுறை இறைவனோடு விளையாடுவதற்கே முந்துவாள், என் மகள். இதுவே உண்மையாம். இந்தப் பெண் இந்த வழி நின்று விலகாமையை அறிந்தோம்.

திருச்சிற்றம்பலம்

3. திருவிடைக்கழி

திருச்சிற்றம்பலம்

69. மாலுலா மனம்தந்(து) என்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
வேலுலாந் தேவர் குலமுழு தாளும்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும் என்மெல்லியல் இவளே.

தெளிவுரை : பார்வதி தேவியின் மகனான குமரக் கடவுள் எனக்குக் காதலால் உண்டான மயக்கங் கொண்ட மனத்தைக் கொடுத்து என் கையிலுள்ள சங்கு வளையல்களைக் கவர்ந்து கொண்டான். விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களது குலம் முழுவதையும் ஆளுகின்ற குமரக் கடவுளும், வள்ளியம்மையினது கணவனும் சேல்மீன்கள் சஞ்சரிக்கின்ற நீர் வளமுள்ள வயல்களை உடைய திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய வேல் ஏந்திய பெரிய கையை உடைய முருகப் பெருமானும் ஆகிய அவன் என் வேந்தன் (தலைவன்) என்று எனது மெல்லிய தன்மை உடைய தலைவியாகிய இவள் சொல்லுவாள்.

70. இவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க
எழில் கவர்ந் தான்இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவரும் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்
குழகன்நல் அழகன்நங் கோவே.

தெளிவுரை : இளங்காளை அனையானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரிய யானையின் மீது சுற்றிலும் வெண்சாமரை வீசக் குடையின் கீழே பொன்மலை போல வருகின்ற கள்வனும் விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப் பெற்ற திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய பெருமை வாய்ந்த நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய நங்கையாகிய வள்ளியம்மையாருக்கும், தெய்வயானை அம்மையாருக்கும் மணவாளனும் நல்ல அழகை உடையவனும் ஆகிய எமது தலைவன் இந்த என் தலைவியின் கச்சு அணிந்த இளமையும் மென்மையும் பொருந்திய தனங்களிலே பசலை நிறம் மிக இவளது இயற்கை அழகினைக் கவர்ந்து கொண்டான்.

71. கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
பொன்னை மேகலை கவர்வானே ?
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும்
சுப்பிர மண்ணியன் தானே.

தெளிவுரை : தெய்வத் தன்மை பொருந்திய பவள நிறங் கொண்டு இளமை வாய்ந்த மணக்கோலங் கொண்ட கூட்டங்கள் சூழப் பெற்ற வெற்றி பொருந்திய கோழிக் கொடியை உடையவனும், காவலைச் செய்யும் நல்ல சேனையைப் போல் யாவரையும் காப்பாற்றுபவனும், தேவர்களுக்கு நல்ல தலைவனும் ஆகிய திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய சிறிய இறகுகளையும், நல்ல தோகையினையும் உடைய சிறந்த மயிலின் மீது ஏறிச் செல்லுகின்ற சுப்பிரமணியக் கடவுள், எனது அழகிய பெண்ணின் மேகலையைக் கவர்ந்து கொள்வானோ?

72. தானவர் பொருது வானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலவிளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !

தெளிவுரை : போரில் தேவர் தம் சேனை சூரபன்மனால் மடிய, தான் சூரபன்மனுடன் போர் புரிந்து அவன் இறக்கும்படி மார்பினைப் பிளந்தவனும், மானை ஏந்திய பெருமை வாய்ந்த கையினை உடைய வள்ளலாகிய சிவபெருமானது புதல்வனும், வேதங்களில் மிகுதியாகச் சொல்லப் பெற்ற அறுவகைப் புண்ணயச் செயல்கள் வளரும்படியான தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குரா மரத்தின் நீழலின் கீழே எழுந்தருளிய தலைமை வாய்ந்த கூத்தாடுபவனாகிய சிவபெருமான் விரும்பிய இளைய யானை போன்றவனுமான முருகப் பெருமான் எனது கொடி போன்ற பெண்ணுக்குத் துன்பத்தை உண்டு பண்ணுவது நல்ல தன்மை ஆகுமோ?

73. குலமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா(து) அழகோ ?
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே.

தெளிவுரை : பெருமை மிக்க கூட்டத்தாரான அந்தணர்களும் தேவர்களும் மற்றுமுள்ள உலகத்தவர்களும் ஈடேறவும், அடியனேன் வாழவும் உறுதியான அழகிய அலங்காரமுள்ள மாடங்கள் நிறைந்த திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய, மணித் திரள்களைத் தள்ளிக் கொண்டு ஓடும் நீரையுடைய, கங்காதேவியின் புதல்வனும் கணபதிக்குப் பின் தோன்றிய தம்பியாகிய சிறுவனுமான முருகப்பெருமான், நற்குணம் வாய்ந்த அழகிய சிறுமியும் கொவ்வைக் கனி போலும் வாயினை உடையவளுமான என் மகள் படும் துன்பத்தைப் போக்க, கவனியாமல் இருப்பது அழகாமோ ?

74. கிளையிளஞ் சேயக் கிரிதனை கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)
அருளுங்கொல் முருகவேள் பரிந்தே.

தெளிவுரை : தன் அடியார்க்கு உறவினனான இளங்குமரனும், அக்கிரவுஞ்ச மலையைப் பிளந்த ஆண்மையில் சிறந்தவனும், குற்றமற்ற வேற்படையினை ஏந்திய ஞானச் செல்வம் உடையவனும், வளைந்த இளம்பிறைச் சந்திரனைச் செஞ்சடையில் தரித்த சிவபெருமானது புதல்வனும், மேக நிறத்தையுடைய திருமாலின் அழகிய மருமகனும், நெருங்கிய இளஞ்சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய மிக இளைய யானை போன்றவனும் ஆகிய முருகக் கடவுள், அடர்ந்த கூந்தலை உடைய என் பெண்ணுக்கு இரங்கி அருளுவானோ ?

75. பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண்(டு) ஐயுறும் வகையே.

தெளிவுரை : சகல கலைகளையும் அறிந்த வேத நெறியில் நிற்கும் அந்தணர்கள் வாழ்கின்ற திருஇடைக்கழி என்னும் தலத்தினிடத்து, அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய கட்டுகள் அமைந்த கொடிய வில்லைக் கையில் ஏந்திய வலிமை உடையவனான முருகப் பெருமான் மீது அழகிய சொல்லை உடையவளாகிய என் மகள் காம மயக்கங்கொண்டு அவனை, அன்புடன் கூடிய சிவந்த சோதி வடிவமோ? சூரியனோ? பசிய பொன்னை உருக்கி ஊற்றிய செவ்வொளியோ? பரிசுத்தமான மாணிக்கத்தின் தொகுதியோ? அழகுக்கு அரசு இதுவோ? என்று சந்தேகம் கொள்ளும் விதம் இருந்தவாறு என்னே !

76. வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்
துடியிடை மடல்தொடங் கினளே.

தெளிவுரை : தனவர், தகுவர், தைத்தியர் என்னும் பலவகைப்பட்ட அசுரர்கள் மடியும்படி வந்து மதிலை வளைத்துக் கொண்டு பெரிய போரினைச் செய்த முயற்சி உடையவனும், புகை மிகுந்த தீயினால் முப்புரத்தைச் சாம்பலாக்கிய மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானது புதல்வனுமாகிய எல்லாத் திக்குகளிலும் பரவிய புகழ் மிகுந்த திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து, அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய எண்ணிக் கையில் மிகுந்த திருநாமங்களைப் பெற்ற முருகக் கடவுளது திருவடிகளைப் பெறுதற்காக உடுக்கை போன்ற இடையை உடைய எனது பெண்ணானவள் பனை மடலால் செய்த குதிரையில் ஏறத் தொடங்கினாள்.

மடலேறுதல்: இத்துறை காமம் மிக்க ஆடவர்க்கே உரியதாயினும், பக்திச் சிறப்பை முன்னிட்டுப் பெண் பாலார்க்கும் கொள்ளப்படும். உழிஞை அமர், முற்றுகை இட்டுச் செய்யும் போர்.

77. தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல்
புறஇதழ் ஆகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)
அறுமுகத்(து) அமுதிணை மருண்டே.

தெளிவுரை : மனத் திண்மை கொண்ட வேதநெறியில் நிற்கும் வேதியர்கள் வாழ்கின்ற திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய வலிமையான சிங்கம் போன்றவனும், மலர்ந்த மலர்போன்ற பன்னிரண்டு கண்களையும் ஆறுமுகங்களையும் கொண்ட தேவாமிர்தம் போன்றவனும் ஆன அழகிய முருகப் பெருமானை என் மகள் கண்டு காதலித்து மயங்கி, மடல் ஏறுதலை முற்பட்டாள் என்று அறிந்தும் அவன், தனது அழகிய திருமுடியில் அணிந்த மாலையிலுள்ள புற இதழைக் கூட வழங்காதவன் ஆனான். மற்றும் தன் பக்கத்தில் இடங்கொண்டுள்ள அந்தக் குறத்தியாகிய வள்ளியம்மையார் இடத்திலும் முருகக் கடவுள் கோபத்தைத் தெரிவிக்கும்படியான செய்கையையும் சொல்லையும் உடையவனாக இருக்கின்றான்.

78. மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே
விடலையே எவர்க்கும்மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.

தெளிவுரை : உண்மைப்பொருளாகிய இறைவனிடத்துப் பேரன்பு கொண்ட அடியார்களும் சிறந்த அறிவினையுடைய வேதத்தில் வல்ல பிராமணர்களும் வாழ்கின்ற திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நீழலின் கீழே எழுந்தருளிய முன் கொண்டையினை உடைய அழகிய முடியினையும் பிறைச் சந்திரனைத் தரித்த சடைமுடியினையும் மூன்று கண்களையும் உடைய அழகிய உருவம் கொண்ட சிவபெருமானது குலக் கொழுந்தான முருகப் பெருமான் விரும்பி உறைகின்ற திருக்கோயிலினையும் வளம் பொருந்திய நல்ல சிறுசிறு குன்றுகளையும் நன்றாகப் பூத்துக் குலுங்குகின்ற சோலைகளையும் கொண்ட மகிழ்தற்குரிய திருப்பிடவூரினிடத்துள்ள மருண்ட மான் போலும் கண்களையுடைய என் மகளுக்கு அருள் செய்யாமல் போவேனோ? போகான். அவன் எல்லார்க்கும் மேம்பட்ட குரிசில் ஆவான்.

79. கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் இவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே.

தெளிவுரை : மயக்க உணர்வினையுடைய மனமே ! தூயதான திருவார்த்தைகளைப் பேசுகின்ற தேவர்கள் தலைவனும் செம்மையான திரண்ட சோதி வடிவினனுமான முருகக் கடவுளைப் பற்றிச் செப்புறை என்ற ஊரினையுடைய சேந்தனாகிய யான் வளமையோடு கூடித் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறிய மொழிகளைப் போன்று இயற்றிய இப் பாடல்களினால் செழிப்பான பெரிய பொழில்கள் சூழ்ந்த திருவிடைக்கழி என்னும் தலத்தினிடத்து அழகிய குராமரத்தின் நிழலின் கீழே எழுந்தருளிய மேலே எழுந்து விளங்கும் சூரியனைப் போன்ற பிரகாசம் உடைய முருகப் பெருமானைத் துதிப்போர் அல்லது துதித்தலைக் கேட்போருடைய துன்பம் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

3. கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா

1. கோயில் கணம் விரி

திருச்சிற்றம்பலம்

80. கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தம் கோவில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்
மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : நெருக்கமாக விரிந்துள்ள தலைகளின் இடமாகப் பொருந்திய சிவந்த மாணிக்கங்களையும் பிளவுபட்ட நாக்குகளையும் விடம் பொருந்திய மேல் வாய்களையும் கண்களாகிய காதுகளையும் பிளந்த வாய்களையும் விரிந்த படத்தில் தோன்றும் நெருங்கிய புள்ளிகளையும் வெண்மையான பற்களையும் கொண்டுள்ள பாம்புகளை ஆபரணமாக அணிந்த உயர்ந்தவனாகிய சிவபெருமானது ஆலயம் எது என்னில், வாசனை பரவிய இனிய மாமரச் சோலைகளின் செறிவில் மேகங்கள் தவழும்படி வளர்ந்துள்ள இளம் பாக்கு மரங்களின் குலைகள் வரிசையாக அரும்பியுள்ள பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் வாழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம்.

81. இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால்
அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : இந்தக் கடத்தற்கு அரிய பிறவிக் கடலில் நீந்துகின்ற அறிவில்லாதவனாகிய எனக்கு என்னுடன் பிறந்த ஐம்பொறிகளாகிய ஐந்து பேரும் பகைவர்களே ஆவர். பின்னர் யாவர் எனக்குத் துணை என்று கேட்டால் அஞ்சாதே என்று அருள் செய்கின்ற நடராசப் பெருமானது கோயில் எது என்னில், தாம் பயிரிட்டுத் திருத்திய வயல்களிடத்துச் செழித்த செந்நெற் பயிர்களில் களையாக முளைத்துள்ள நீலோற்பல மலர்களை உழத்தியர்கள் பிடுங்கி வயல்களின் வரப்புகளில் எறிய, அவை அரும்பும்படியான பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் வீற்றிருக்கும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றமபலமேயாம்.

82. தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : தாய்க்குச் சமமாக இரங்குகின்ற தலைவனே ஓ என்றும் ஆதரவு இன்றித் தனிப்பட்ட எனக்கு உற்ற துணைவனாய் இருப்பவனே ஓ என்றும் நாய்த் தன்மை உடைய எளியேன் வருந்தி இருந்து புலம்பினேன். ஆனால் என்மீது கருணை கொண்டு நன்மையைச் செய்கின்ற எவற்றிற்கும் மேலோனாகிய சிவபெருமானது கோயில் எது என்றால், பெண்களுடைய சிவந்த, உதடுகளுக்கு ஒப்பாகக் காணப்படுகின்ற அழகிய முருக்கம் பூ மலர்ந்து வளர்கின்ற இளஞ்சோலைகளில் மாந்தளிர்கள் சிவந்த தீயைப் போன்று தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம்.

ஓகாரங்கள், முறையீடு குறித்து நின்றன.

83. துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தம் கோயில்
அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : துந்துபி, வேய்ங்குழல், யாழ், மொந்தை ஆகிய இசைக்கருவிகள் ஆகாயத்தில் ஒலிக்கவும், முனிவர்களின் கூட்டம் தொடர்ந்து வாழ்த்தவும், திருநந்தி தேவர் கையிலுள்ள மத்தளம் மேகத்தின் இடியைப் போல முழங்கவும், ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற மேலான சிவபெருமானது கோயில் எது என்றால், நான்கு வேதங்களின் முடிபாகிய உபநிடதங்களில் ஞான பாகம் நிரம்பியுள்ள பெறற்கரிய நுண்ணிய வேதப் பொருள்கள் அந்தணர்களின் நினைவில் இடைவிடாது வளர்கின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம்.

84. கண்பனி அரும்பக் கைகள்மொட் டித்(து)என்
களைகணே ! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : கண்களில் ஆனந்தக் கண்ணீர் பனித்துளிகள் போல் ததும்பி நிற்க, கைகளைத் தாமரை மொட்டுப் போலக் கூப்பி, அஞ்சலி செய்து வணங்கி, என்னுடைய ஆதரவே ! அபயம் என்று கூவி ஓலமிட்டு, எலும்புகள் எல்லாம் உருகுகின்ற அன்பர்களுடைய கூட்டத்தில் அடியேனையும் சேர்த்து வைப்போனாகிய இறைவனது கோயில் எது என்றால், பல பண்களைத் தேன் வண்டுகள் கூடிப் பாடி நின்று விளையாடப் பசுமையான சோலைகள் நிறைந்த மிக அடர்ந்துள்ள இடத்தில் செண்பக மலர்கள் மலருகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப் பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம். செண்பகப் பூவில் வண்டுகள் மொய்க்கா. அதனால் அதற்கு வண்டுலா மலர் என்று பெயர்.

85. நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்
நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்
விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)
அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : மனத்திலுள்ள துன்பம் நீங்குமாறு அடியார்களுடைய மனத்தின்கண் புகுந்து (அங்கேயே) ஒடுங்கி நிற்கும் தன்மையோடு இருளை நீக்கித் தோன்றிய வெப்பத்தையுடைய சூரியனின் சிவந்த கிரணங்கள் பிரகாசிப்பன போல ஒளியைப் பரப்பும் விரிந்த செஞ்சடையை உடைய சிவபெருமானது கோயில் எது என்றால், அழகிய ஒளி வீசும் மதிலை வட்டமாகச் சூழ்ந்துள்ள கடல் போன்ற அகழியினுள் படிந்து கிடக்கும் மாணிக்கத் தொகுதிகள் பரவி நின்று சிவந்த ஒளியை வீசுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம்.

86. பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : செந்தாமரை மலர்த் தொகுதியைப் போல திருவுருவம் சிவந்த ஒளியை வீச, அடியவரது உள்ளத்தில் வந்து எழுந்தருளிய திருமாலாகிய இடபத்தை உடையவனும் தூய்மையான வெண்ணிறப் பளிங்குக் குவியல் போன்று தோன்றிய காட்சி தெரியும்படி தோன்ற நின்றவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய கோயில் எது என்றால், வேதியர்கள் தத்தம் நாவினிடத்துத் திரண்ட வேதங்களின் பொருளை உணர்ந்து ஓதி ஓமகுண்டங்களில் நறுமணம் பொருந்திய நெய்யினைக் கொண்டு பெருக்கிய ஓமத் தீயின் தொகுதிகள் விளங்கும் பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாகும்.

87. சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்
புணர்ப்படை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : சிறப்புடைய வலிமை வாய்ந்த உலகம் முழுவதையும், மற்றைத் திசைகளுடன் அண்டங்கள் முழுவதையும் தம்மீது மூடிக் கொண்ட தமது பெருமையில் சிறியதாம் தன்மையை அடைந்து ஒடுங்கிப் போகும் (பெரியதொரு) செயலையுடைய இறைவனது கோயில் எது என்றால் ஆரவாரம் செய்துகொண்டு வந்து பொருந்தி நின்று தேவர்களும் மற்றவர்களும் மூழ்கும்படியான கடல் அலைகளைப் போன்று வீசுகின்ற அலைகளை உடைய பரிசுத்தமான தீர்த்த நீர் பெருகி விளங்கும் பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாகும்!

88. பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : இணைந்து கொண்டிருக்கும் சிவந்த சடையையும் பிறைச்சந்திரன் தவழ்கின்ற திருமுடியையும் மிகுந்த தமது கருணையையும் காட்டித் தாயானவள் தேன் கலந்த இனிய உணவை மனமுவந்து ஊட்டினாற் போல அருள் செய்கின்ற மேலான சிவபெருமான் எழுந்தருளிய கோயில் எது என்றால் புன்னை மலர்களின் தேன் சொரியப் பெற்ற சோலைகளின் உள்ளிடத்தைத் துருவிச் சென்று புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டுக் கூட்டங்கள் பாடுகின்ற அழகிய இனிமை பொருந்திய பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாகும்.

89. உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்
இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : இந்திரலோகம் இவ்வுலகில் வந்து விளங்கியது போல, எவ்விடத்தும் அழகிய மாணிக்கங்களின் ஒளியைப் போன்ற மேம்பட்ட ஒளியைக் கக்கி எமது தலைவனாகிய சிவபெருமான் நடனம் செய்கின்ற இடங்களிலெல்லாம் இருட் கூட்டம் முழுவதும் ஒழியச் செய்கின்ற கோயில் எது என்றால், புதுமை பொருந்திய கோயிலும் கோபுரமும் மண்டபமும் ஓங்கி வளர்ந்த நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த மாளிகைப் பத்திகளும் செம்பொன்னினால் பொருந்தித் தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாகும்.

90. இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)
எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்
பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

தெளிவுரை : பெரிய அலைகளால் முத்துக்களைக் கரைகளில் சேர்க்கப் பெறும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் அழகிய அறிவாகிய கண் இல்லாத கணக்கற்ற அற்ப மாந்தர் உயிர் திருந்தும்படியான தக்க பருவத்தில் அறிவிலே சென்று பற்றும் தன்மை வாய்ந்த கருவூர் என்னும் இடத்தில் வளர்த்த இனிமை மிக்க தமிழ்ப் பாமாலையை ஏற்றுக் கொண்ட அரிய கருணையைப் பொழிகின்ற மேலான சிவபெருமானது கோயில் எது என்றால், சோலைகளின் உட்புறத்திலுள்ள மலர்களைத் தீண்டி வண்டுகள் உறங்கச் செருந்தி மலர்கள் மலர்ந்து தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதியில் திகழும் சிவஞானச் செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாகும்.

கருவூர்த்தேவரை, கருவூர் என்றது உபசாரம். செருந்தி ஒருவகை மரம்.

திருச்சிற்றம்பலம்

2. திருக்களந்தை ஆதித்தேச்சரம்

திருச்சிற்றம்பலம்

91. கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : நூல்களால் உணர்த்தப்படும் பொருளும் அவற்றால் பெறப்படும் அறிவுமாகி, என்னைக் கற்பு நெறியால் பெற்றெடுத்து எனக்கே முலைப்பாலை அருந்தக் கொடுத்தருளிய தாயைக் காட்டிலும் நல்லதைச் செய்கின்ற மூன்று கண்களை உடைய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய இடம், மலையைக் குடைந்து இயற்றினாற் போன்ற நீண்ட பெரிய வாயில்களை உடைய மாடங்களின் இடங்களில் எல்லாம் வேதங்களை நன்குணர்ந்த அந்தணர்கள் வேதங்களை முறையாக ஓதுவதானது கடல் அலைகளைப் போல் முழங்குகின்ற அழகிய குளிர்ச்சி பொருந்திய நீர் வளமுள்ள திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயில் ஆகும்.

92. சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
திருநுதல் அவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : கலவையோடு கூடிய சந்தனக் குழம்பு பூசப்பட்ட அழகிய பொன்மேனியில் கற்பூரம் போன்ற வெண்மையான திருநீற்றை எங்கும் பூசப் பெற்றுச் செந்தீப் போன்ற உருவத்தோடு விளங்கும், அழகிய நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் எழுந்தருளிய இடம், விறகு மலை போன்று வெட்டப்பட்ட காடு தீப்பற்றி எரிகின்ற தோற்றத்தைப் போல ஏழு அடுக்குள்ள வாயில்களை உடைய மாளிகைகளில் அந்தணர்கள் ஓமாக்கினியை வளர்க்கின்ற அலைகளைக் கொண்ட நீர் நிலைகள் சூழ்ந்த திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் கோயில் ஆகும்.

93. கரியரே இடந்தான் செய்யரே ஒருபால்
கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்
முறைதெரிந்(து) ஓருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளும் தேட
அரியரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : உமாதேவியாரை இடப்பாகத்தில் தாங்கியிருப்பதால் கருமை நிறம் பொருந்தியவரே ! ஆனால், வலப்பக்கத்தில் செந்நிறம் உடையவரே ! தம் கழுத்தில் ஒப்பற்ற கண்டிகை மாலை அணிந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் கல்லால நிழற்கீழ் இருந்து ஞானயோக முறையினை அறியும்படி செய்து விளங்குபவரே ! ஒரே உடம்பில் ஆண் பெண் வடிவு பெற்று விளங்கும் தன்மையான இருவரே ; மூன்று கண்களும் நான்காகிய பெரிய அகன்ற தோள்களும் உடைய சிவபெருமானே; நான்கு வேதங்களும் தேடி அறிதற்கு அருமையானவரே ! அப்படியானால் அத்தகைய இறைவன் எழுந்தருளிய இடம் திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்ற கோயிலாகும்.

94. பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)
அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தேன் பிணிபொறுத் தருளாப்
பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தெந் குடிமுழு தாளும்
குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : சிவபெருமான் தொன்று தொட்டுத் தொண்டு பூண்டு வரும் பழ அடியார்க்கு எளியவரே; ஆனால் முரட்டுக்கு அரியவரே; பாவியாகிய யான் செய்கின்ற குற்றங்களை யெல்லாம் பொறுத்தருளி எனது பிறவி நோயைத் தீர்த்தருளாத பித்தரே; நஞ்சையுடைய பாம்பை ஒளிவீசும் காதணியாக அணிந்தவராய் வந்தருளி என்குலம் முழுவதையும் ஆளுகின்ற என்றும் இளமைத் தன்மை யுடையவரே ! ஒழுகுகின்ற நீரையுடைய கங்கா தேவியைச் சடையில் அணிந்த அழுகுடையவரே; அப்படியாகில் அத்தகைய இறைவன் எழுந்தருளிய இடம் திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

95. பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம்(பு) அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால்
துடியிடை இடமருங்(கு) ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : சிவபெருமானின் சடைமுடி பவளம் போன்ற செந்நிறமே, அழகிய வாய் பவளம் போன்ற செந்நிறமே, அழகிய திருமேனி பவளம் போன்ற செந்நிறமே. அத் திருமேனியில் கலலைச் சாந்தாகச் பூசப்பட்ட திருநீறு வெண்ணிறமே. முருக்கோடு கூடிய பூணூல் வெண்ணிறமே. திருநகை (பற்கள்) வெண்ணிறமே. ஆடுகின்ற பாம்பு வளைந்து தொங்கிக் கொண்டிருக்கும். மேகலையும் சேலையும் உடுக்கை போன்ற இடையில் தரித்த ஒரு பெண் (உமாதேவியார்) இடப்பக்கத்தில் இருப்பாள். அப்படியாகில் அத்தகைய இறைவன் எழுந்தருளிய இடம் திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

96. நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் கிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று
குழைவரே கண்டவர் உண்ட(து)
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : சிவபெருமானின் திருக்கழுத்து நீல நிறம். திருவாய் பவளம் போன்ற செந்நிறம். பற்கள் வெள்ளிய முத்துக்களை வரிசையாகப் பதித்துப் பிரகாசிப்பன போலத் தோன்றும். திருமுகம் நிறைய மகிழ்ச்சியைக் காட்டும். ஆ, அந்த ஒப்பற்றவரது திருவுருவம் எவ்வளவு அழகானது என்று கண்டவர்கள் மனம் உருகுவர். அவர் உண்டது நஞ்சு. அப்படியானால் அத்தகைய இறைவன் இருக்கும் இடம் திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

97. திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்
திறத்தவர் புறத்திருந்(து) அலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே
புரியவும் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : புகலிடமாக அடையத்தக்க ஆதரவு நீயே ஆவாய் என்று நினைந்து மனம் கரைந்து உருகும் வகையினர் ஒருபுறம் இருந்து வருந்தவும்; எருமைக் கடாவினைப் போன்ற என்னை இன்னமும் வேறொரு பிறவியில் பிறந்து பொய்ந் நெறியில் சென்று அடையாதபடி ஆட்கொள்ள விரும்பிக் காப்பாற்றி எனக்கு இனிய கருணையையே செய்யவும் சிவபெருமான் வல்லவரே; அவரது பேரொளியே இறைவன் எழுந்தருளிய இடம், திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

98. மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான
விளக்கரே எழுதுகோல் வளையாண்
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்
மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : சிவபெருமான் மெய்யடியார்களுக்கு உண்மைப் பொருளாய் இருப்பவர்; உண்மை அடியவர்க்கு வைப்பு நிதி போன்ற சோதி வடிவினர். சித்திகரிக்கப்பட்ட அழகிய வளையல்கள் அணிந்த உமாதேவியாரை ஒரு பக்கத்தில் உடைமையால் அப்பாகம் கருநிறம் வாய்ந்தவர். உலகத்தில் பிட்சையின் பொருட்டுத் திரிந்து மயானத்தில் வாழ்பவர். எல்லாருடைய மனத்தில் பொருந்தி இருந்தும் மெய்யுணர்வு அற்றவர்களுக்கு வெளிப்படாமல் மறைந்திருப்பவர். பக்கத்திலுள்ள மேலான பளிங்குக் கல் ஒளியைத் தன் வழியே செலுத்துமாறுபோல அஞ்ஞான இருளைப் போக்கி என்னுள் எழுந்தருளி வந்த குருமூர்த்தி, அத்தகைய இறைவன் எழுந்தருளிய இடம், திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்குகின்ற ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயில் ஆகும்.

99. குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

தெளிவுரை : சிவபெருமானின் அழகிய திருவாய், செவ்வல்லி மலர் போலச் செந்நிறமுடையது. திருக்கழுத்து, நீலோற்பல மலர் போலக் கருமைநிறமுடையது. இரண்டு திருச்செவிகளும் குழைகளை உடையன. ஒரு பக்கத்தில் தூய்மையான மேகலாபரணம் உடையவர். புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நல்லபாம்பு திருச்சடைமேல் பிரகாசிக்கும் திருமுகம் செந்தாமரை மலர். திருக்கண்கள் செந்தாமரை மலர். பாதக் குறடுகள் பொன்னிறமுடையன. பண்புகளின் தன்மை மிகப் பரிசுத்தமே. அத்தகைய இறைவன் எழுந்தருளிய இடம், திருக்களந்தை என்னும் தலத்தில் அழகுடன் விளங்கும் ஆதித்தேச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

வலச் செவியில் உள்ளது குழை என்றும் இடச்செவியில் உள்ளது தோடு என்றும் கூறுவர்.

100. நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளமாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்
இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே.

தெளிவுரை : நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருக்களந்தைப் பதியில் உள்ள நிறைந்த புகழையுடைய ஆதித்தேச்சரம் என்ற திருக்கோயிலில், திருமால் துதித்து வழிபடுகின்ற சிவபெருமானது திருவடிகள் மீது, மிக்க நன்மையைத் தரத்தக்க பலகலைகளைப் பயின்ற கருவூர்த் தேவருடைய வேதங்களை ஓதும் பவளம் போன்ற வாயினிடத்துச் சுரந்த அமுதம் கலந்த பேரின்பத்தை அளிக்கும் தமிழ் மாலையின் மிக்க அழகு பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பாட வல்லவர்கள் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானம் எழுந்த மனமுடையவரே ஆவர்.

திருச்சிற்றம்பலம்

3. திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம்

திருச்சிற்றம்பலம்

101. தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.

தெளிவுரை : தளிர்போலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மாணிக்கம் போன்ற அழகிய பாதங்களில் உள்ள காற் சிலம்புகள் ஒலிக்கவும். விரித்த சடையின்மேல் அலைகள் மோதும் கங்காநதியின் தெளிந்த ஒளியை உடைய அழகிய நீர்த் திவலைகள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்த திருமுகத்தினின்றும் சொட்டுச் சொட்டாக விழவும், மேலான ஒளியை வீசும் நீலமணி போன்ற வண்டுகள் பசுமையான சோலைகளிலும் வயல்களிலும் தங்கள் ரீங்கார ஒலியினால் மிகுந்த ஆரவாரத்தைச் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழும் மிக்க ஒளியையுடைய மணியம்பலத்துள் நின்று நடனம் ஆடுகின்ற அழகனாகிய சிவபெருமான் என் மனத்தோடு கலந்து ஒன்றுபட்டான்.

102. துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளமாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.

தெளிவுரை : ஒரு கலையாகிய வெள்ளிய பிறைச் சந்திரனையும், பரவிய சடைமுடியையும், உச்சிக் கொண்டையையும், சூலத்தையும், நீலகண்டத்தையும், காதணியையும், பவளம் போன்ற சிவந்த வாயின் உதடுகளையும், நெற்றிக் கண்ணின்மேல் அமைந்த பொட்டையும் காட்டிக் கொண்டு, சேல் மீனும் கயல் மீனும் குதிக்கின்ற நீரை உடைய வயல்களிடத்து உழத்தியர்கள் மிகுந்த ஆரவாரத்தைச் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் சுற்றித் திரியும் வண்டுகள் ரீங்காரம் செய்யும் மணியம்பலத்துள் நின்று நடனம் புரிகின்ற அழகனாகிய சிவபெருமான் என் மனத்தோடு கலந்து ஒன்றுபட்டனன்.

103. திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேல்
புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்
போய்வருந் தும்பிகாள் ! இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என்
மனத்தையும் கொண்டுபோ துமினே.

தெளிவுரை : அழகு பொருந்திய நெற்றிக் கண்ணையும், பவளம் போன்ற வாயின் இடத்துள்ள உதடுகளையும் நெற்றிப் பொட்டையும் உடையவனாகிய சிவபெருமானது சடை முடியின்மேல் உங்களுக்கு விருப்பத்தைத் தரும் மலர்களின் மகரந்தப் பொடிகள் மெல்லிதாக விழும்படி ரீங்காரம் செய்யப் போய் வருகின்ற வண்டுகளே ! மலைகளின் மீது தவழ்கின்ற மேகத்தின் கீழே தவழும் மாளிகைகளில் மக்களின் ஆடல் பாடல்களினால் மிகுந்த ஒலிகள் பொருந்திய திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழும் ஒளி பொருந்திய மணியம்பலத்துள் நின்று நடிக்கும் தலைவனைக் கண்டு அவனிடம் கலந்த என் மனத்தைப் பெற்றுக் கொண்டு இங்கே திரும்பிவாருங்கள்.

இது வண்டு விடு தூது.

104. தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்
செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே ! என்னும்என் மனனே.

தெளிவுரை : என் உடல் மனத்தைச் தெளியச் செய்கின்ற திருவெண்ணீற்றைத் தரித்த சிவபெருமானது திருவெண்ணீற்றைப் பூசிக் கொள்ள விரும்புகிறது. என் காதுகள் அவனது சிவஞானத்தைப் பற்றித் தெரிவிக்கும் நூல்களையே கேளா நின்றன. என் வாய், மெதுவாக அவனது திருநாமத்தைச் சொல்லுகிறது. என் கண்கள் அவனது ஆலயத்தின் விமானத்தேயே பார்த்திருக்க என் மனம் பெருமூச்சு விடுகின்றது. கிளிகள் அழகிய மரச்செறிவுகளில் மழலை மொழி பேசி விளையாடி. மாஞ்சோலையை அடைதற்காக மிகுந்த ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க் கோட்டூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய வள்ளலே ! மணியம்பலத்துள் நின்று நடிக்கும் வலிமையுடையோனே என்று என் மனம் நினையா நிற்கும். இப்பாடல் தலைவியின் இரங்கலைக் கூறுவது.

105. தோழி ! யாம் செய்த தொழில்என் ?எம் பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்
கேழலும் புள்ளும் ஆகிநின் றிருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே.

தெளிவுரை : தோழியே ! அநேக ஊழிக் காலங்களாக நினைந்து மனம் கலங்கி, நெகிழ்ந்து, நைந்து, உள்ளம் கரைந்து உருகும் தன்மை வாய்ந்த பன்றியும் அன்னமுகமாக உருவம் கொண்டு நின்ற திருமால் பிரமன் ஆகிய இருவரும் எம்பெருமானின் இரண்டு செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணும் பொருட்டு மிக்க ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழும் மணியம்பலத்துள் நின்று நடிக்கும் இறைவனை யாம் காணும் பொருட்டு அறிவு கலங்கிக் காதல் மயக்கம் ஒழியோம். யாம் கைக் கொண்ட செயல் என்னே ! இது தலைவி இரங்கித் தோழியிடம் கூறியது.

106. என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய்
இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண்(டு) அயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவஓ என்று
மயங்ககுவன் மாலையம் பொழுதே.

தெளிவுரை : தோழீ ! நீ எனக்கு உற்ற துணையாயிருக்க இந்த இரவுக் காலம் ஒருவாறு கழியும். பிறகு பகற்காலம் வருவதால் நம் தலைவன் நம்மிடம் வந்து கலங்காதே என்று சொல்லமாட்டான். அப்போது கடலும் அதன் அலைகளும் ஒலித்து என்னைக் கலங்கும்படி செய்யும் என்பதை நோக்கி நான் தளர்கின்றேன். முருக்கம் பூப்போன்ற செந்நிறம் பொருந்திய அழகிய வாயினை உடைய பெண்கள் தெருக்களில் விளையாட்டுக்களால் மிகுந்த ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழும் அழகைக் கொண்ட மணியம்பலத்துள் நின்று நாட்டியம் ஆடுகின்றவனே ! ஓ ! என்று மாலைக் காலத்தைக் கண்டு மயங்குவேன். தோழி ! நாம் வேறு என்ன செய்ய வல்லோம் ?

இப்பாடல் தலைவி பொழுது கண்டு இரங்கல் ஆகும். கிஞ்சுகம் முள் முருக்கம்பூ, ஓ இரக்கம் குறிக்கும் இடைச் சொல். முறையீடு குறித்தது எனினுமாம்.

107. தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.

தெளிவுரை : வில்வம் தரித்துள்ள திருமுடியும், வெண்மையான திருநீற்றின் ஒளியும், சங்கொலியும் சகடை என்ற வாத்தியப் பேரொலியும், குழை என்னும் காதணி பொருந்திய திருச்செவிகளும், குளிர்ச்சி பொருந்திய செஞ்சடைக் கற்றையும் இடபமும் ஆகிய இவை திரள் திரளாகத் தோன்றுகின்ற ஒளி வீசும் பொற் பொடிகளைக் கொழிக்கின்ற நீர் நிறைந்த வயல்களில் உழவர்கள் உழவுத் தொழிலால் மிகுந்த ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழும் மேகங்கள் தவழ்கின்ற மணியம்பலத்துள் நின்று நடனமாடுகின்ற வலியோனாகிய இறைவனது செல்வங்கள் போலக் காணப்படுகின்றன.

108. தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி
இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

தெளிவுரை : தன்னிடத்திலுள்ள மழலை மொழி போன்று ஓசை தரும் சிலம்பும் சதங்கையும் உடுக்கையும் திருவடிகளும், திருவெண்ணீறும், இனிய புன் சிரிப்பும், மழலை மொழியும் உடைய கங்கையும், கோங்க மலரும், கொன்றை மலரும், இளம்பிறைச் சந்திரனும் காதணியும் வளர்கின்ற இளமானும் ஆகிய இவற்றையுடைய கின்னர வாத்தியம், மத்தளம், மெல்லோசையுடைய யாழ் வீணை ஆகிய இவை இடைவிடாது மிகுந்த ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய தலைவனும், மணியம்பலத்துள் நின்று நடனம் செய்யும் அழகனுமாகிய சிவபெருமானை, என் மனத்தினுள்ளே இருக்கச் செய்தனன்.

109. யாதுநீ நினைவ(து) எவரையாம் உடைய(து) ?
எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தனனே.

தெளிவுரை : அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருள்களும் தானேயாகி நின்றோனும், பாதக்குறடு, மெல்லோசையான சிலம்பு என்பவற்றோடு உட்புகுந்து குளிர்ந்த தாமரை மலர் போன்ற என் கண்ணுள் நிலைத்து நின்று நீங்காதவனும், தாழம்பூவின் நிழலைக் கெண்டை மீன்கள் நெருங்கி அதனைக் குருகென்று நினைத்துப் பயந்து ஓடுகின்ற திருக்கீழக்கோட்டூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய பெருந்தவக் கோலங் கொண்டவனும் மணியம்பலத்துள் நின்று ஆடல் புரியும் அழகை உடையவனும் ஆகிய எம்பெருமான் எனது மனதுள் புகுந்து கொண்டான். ஆதலால், மனமே ! நீ நினைப்பதற்கு அவனைத் தவிர வேறு என்ன உள்ளது ? யாரை நாம் துணையாகப் பெற்றுள்ளோம் ?

110. அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;
செய்வதென் ? தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்
கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே அறியும்என் மனமே.

தெளிவுரை : அந்திக் காலத்துச் செவ்வானம் போன்ற திருவுருவையும் பிறைச் சந்திரனை உடைய செவ்வானம் போன்ற அழகிய சடையையும் வெண்ணிறமான விபூதியையும் மனத்தினால் நினைந்து பார்க்கும் போது நான் நினைக்கிறேன். என் உணர்ச்சியும் இழந்து அவன் வயம் ஆயினேன். இனிச் செய்வது என்ன இருக்கிறது? தெளிந்த நீரில் ஒளியிட்டுக் கொண்டு பாய்ந்து சென்று துள்ளிக் குதிக்கின்ற கெண்டை மீன்கள் தாமரைப் பூக்களை இழிக்கின்ற குளிர்ச்சியான வயல்களில் உழவர்கள் உழவுத் தொழிலைச் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் திகழ்கின்ற புதுமையான மணியம்பலத்துள் நின்று நடனம் புரியும் வலிமை உடையவனே என் மனக் கருத்தை அறிய வல்லவன்.

111. கித்திநின் றாடும் அரிவையர் தெருவில்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்
முத்தியாம் என்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே,

தெளிவுரை : கித்தி என்னும் விளையாட்டை நின்று கொண்டு ஆடுகின்ற பெண்கள் தெருக்களில் நிறைந்த ஆரவாரம் செய்கின்ற திருக்கீழ்க்கோட்டூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய பித்தனும், மணியம்பலத்துள் நின்று நடனம் புரியும் வலிமையோனுமான சிவபெருமானை வேதத்தைப் பிதற்றுகின்ற யான் புகழ்ந்து கூறிய அழகிய சிறந்த தமிழ்ப் பாமாலையானது ஓதுகின்ற பெருமையுடைய பெரியோர்க்கு அகன்ற பெரிய இந்திரலோகத்தில் இன்பத்துடன் இருப்பதோடு முத்தியையும் அளிக்கும் என்று கருதி உலகத்தவர் இப் பாமாலையினால் இறைவனைத் துதிப்பாராயின், இலக்குமிதேவியும் முகமலர்ச்சியுடன் தானே எதிர் கொண்டு வந்து வரவேற்பாள்

திருச்சிற்றம்பலம்

4. திருமுகத் தலை

திருச்சிற்றம்பலம்

112. புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே.

தெளிவுரை : எல்லா லோகத்திற்கும் தலைவனே ! உலகில் உள்ள உயிரினுக்குள் இருந்து அமுதம் போன்ற இன்பத்தைத் தருபவனே ! எங்கும் நீக்கமற நிறைந்தவனே ! வேதங்களை இருடிகளுக்கு அருளுகின்ற பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மாணிக்கமே ! தொண்டு செய்வார்க்கு இரங்கி அருளுகின்ற பசுபதியே ! பன்னகா பரணர் என்னும் திருநாமம் உடையவனே ! உலகத்திலுள்ள சூரியன் புற இருளை நீக்குவது போல எனது அஞ்ஞான இருளைப் போக்கி அருள் செய்து மேலும் தனித்திருப்பவனாகிய எனது தனிமைத் தன்மை ஒழிவதற்காக அடியேனது மனத்தின் கண்ணும் திருமுகத்தலை என்னும் பழைய ஊரிலுள்ள வெண்மையான பெரிய வைர மணிகள் பதிக்கப் பெற்ற அழகிய திருக்கோயிலின்கண்ணும் நீ எழுந்தருளியிருந்தாய்.

பன்னகம் காலால் அல்லது மார்பால் ஊர்ந்து செல்வது (பாம்பு). இத் திருப்பதிகத்தில் ஆசிரியர் இறைவன் தனக்கு அருள் செய்தமையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

113. புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே.

தெளிவுரை : மனம் வருந்துகின்ற தீவினையேனது பாவங்கள் ஒழியும் பொருட்டு என் மனத்தினுள் புகுந்து அடைய வேண்டிய மெய்ப் பொருள்களை ஞான நூல்களின் வாயிலாக மழைபொழிவது போல் பேரின்ப உணர்ச்சியாகிய தேனை மிகுதியாகப் பொழியும் பவளம் போன்ற சிவந்த வாயினையும் மூன்று கண்களையும் உடைய மிக்க ஒளிபொருந்தி நீண்டுயர்ந்த மாணிக்க மலையே ! அலைகள் ஒலிக்கின்ற இனிய நீரில் துள்ளிக் குதித்து இளமையாகிய வரால் மீன்கள் திரிகின்ற திருமுகத்தலை என்னும் தலத்தினிடத்து விரும்பி எழுந்தருளி, அடியேன் உண்ணுகின்ற இனிய பழமாகவும் இனிதாகிய ஆனந்த வெள்ளமாகவும் என் மனம் முழுமையும் நிறைந்து இருக்கின்றாய். இஃது என்ன ஆச்சரியம் !

114. கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே !
பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம் ? நீ ஏழைநாய் அடியேற்(கு)
எளிமையோ பெருமையா வதுவே.

தெளிவுரை : கல்லைப் போன்று கரையாத மனத்தை உடைய கள்வனாகிய யான், உன்னிடம் மனம் கசிந்து நிற்றலும் இல்லேன். இரு கண்களினின்றும் நீரைப் பொழிந்திலேன். உன் முன் நின்று சிரித்து நீங்கினேன் இல்லை. ஆனாலும், செழுமையான வளத்தைத் தரும் நீர் சூழ்ந்த திருமுகத்தலை என்னும் தலத்தினிடத்து விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளிய பன்னகாபரணா ! பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மாணிக்கமே ! நீ பாவியேனாகிய என்னுடைய உயிருக்குள்ளே புகுந்தது என்ன காரணமோ? அறியேன் ! அறிவில்லாத நாய் போன்று இழிந்த அடியேனுக்கு இப் பெறும்பேறு எளிதாகக் கிட்டுவதோ ? அது பெருமையும் ஆவதாகும்.

115. கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்
பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !

தெளிவுரை : கெடுதல் இல்லாத மெய்யுணர்வைக் கொடுக்கும் ஏடுகளைப் படித்து அதில் மிகப் பழகியும், செழுமையான நீரிடத்துக் கிடந்தும் நீர் ஊறாத தக்கையைப் போன்று மெய்ந்நூற் கருத்துக்கள் ஒன்றும் பதியாத என் மனத்தில் அமர்ந்த அழிவில்லாத மாணிக்கமே ! மாணிக்கங்கள் ஒளியைக் கக்கிப் பிரகாசிக்கும் படியான பன்னகாபரணா ! பரமனே ! மேட்டு நிலங்களில் எல்லாம் செந்நெல்லின் பசுமையான கதிர்கள் விளையப் பெற்று, மிக விளங்குகின்ற திருமுகத்தலை என்னும் பழைமையான ஊரினிடத்தே நெடுங்காலமாக உறைகின்றாய். என்றாலும், அடியேன் மனத்துள் நுழைந்து மனம் முழுவதும் நீ நிறைந்து நின்றனை. இஃது என் பேறு ஆகும் !

116. அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)
என்னைஆள் ஆண்டநா யகனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.

தெளிவுரை : கனவைப் போன்று நிலையற்ற அப் பொருட் செல்வத்தையே ஈட்டுவதிலும் பாதுகாப்பதிலும் மனத்தைச் செலுத்தி ஐம்புலன்களுக்கும் எனக்கும் இடையில் தோன்றிய இக் கலகம் எல்லாம் நீங்குமாறு என் உள்ளத்துள்ளே புகுந்து எழுந்தருளி, என்னை அடிமையாக்கி ஆண்டு கொண்ட தலைவனே ! மூன்று கண்களை உடைய இறைவனே ! உலக முழுவதும் துதிக்குமாறு திருமுகத்தலை என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருந்து பவளம் போன்ற சிவந்த திருவாயினால் உபதேசத்தருளி அடியேனிடத்தில் இன்பமானது இடையில் விட்டு நீங்காதபடி அருள் புரிந்தாய்.

117. புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே.

தெளிவுரை : சூளையில் வைத்துச் சுடுவதற்கு முன் தண்ணீர் பட்ட மாத்திரத்தில் கரைந்து போவதும் மிகுந்த தீயில் வைத்துச் சுட்டபோது அழகிய தண்ணீரைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு உயிரைப் பாதுகாப்பதுமான வேலைப்பாடு அமைந்த நீர்ச்சால் போல, மாறுபாடு அடைந்த என் மனத்துள் நிறைந்து அம் மனம் உருக மகிழ்ந்து அருள் புரிந்த பேரொளி வடிவினனே ! பகை கொண்டு வந்த முப்புரங்களை எரித்தழித்த தலைவனே ! திருமுகத்தலை என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளி அடியேனது வினையினால் எடுத்த உடலில் நீ புகுந்து நின்றமையால் அவ் வுடல் நீ எழுந்தருளுதற்குச் சிறந்த விமானமாயிற்று.

118. விரியுநீர் ஆலக் கருமையும் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடும் கனலும்ஓத் தொளிரும்
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.

தெளிவுரை : பேய் போன்றவர்களாகிய யாங்கள் செய்த பிழைகளைப் பொறுத்து ஆட்கொண்ட பேரொளி வடிவமானவனே ! பாற்கடலினிடத்து எழுந்த கொடிய ஆலகாலத்தின் கருமை நிறமும் கலவைச் சாந்து போல விளங்கும் திரு நீற்றின் வெண்ணிறமும் திருமேனியின் செந்நிறமான ஒளியும் கரியையும் நீறுபூத்த நெருப்பையும் ஒத்து விளங்கும் கழுத்தில் ஒப்பற்ற ஒற்றை வடம் என்னும் ஏகாவலியை அணிந்து தோன்றக் கூடிய வகை எல்லாம் தோன்றி நின்று அழகுடையவனாகித் திருமுகத்தலை என்னும் தலத்தினிடத்து விரும்பி எழுந்தருளிய உன்னை, அடியவன் பிரியும் வகை உண்டோ ? இல்லை.

119. என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)
என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனியையாய் இனையே.

தெளிவுரை : அடியவனை உனது திருவடித் தாமரைகளை வணங்கச் செய்து எலும்புகள் எல்லாம் உருகும்படி நீ எளிதில் எழுந்தருளி வந்து, நின்னை என்னிடத்து நிலைக்கச் செய்து எவ்விடத்திலும் எப்பொழுதும் நீக்க மற நிறைந்து நின்ற அழகிய ஒளிவடிவானவனே ! பழைமையான எனது ஆணவமலம் முழுவதும் நீங்கத் திருமுகத்தலை என்னும் தலத்தினிடத்து விரும்பி எழுந்தருளி அடியேனுக்குக் கறுப்பஞ்சாறும் பாலும் தேனும் கிடைத்தற்கரிய தேவாமிர்தமும் பழமுமாகி இனிமையுடையை ஆயினாய், இஃது என்ன அதிசயம் !

இப்பாடல் பாச நீக்கம் கூறியது.

120. அம்பரா அனலா; அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயுமா யினையே.

தெளிவுரை : ஆகாயமாய் உள்ளவனே ! காற்றாய் உள்ளவனே ! நெருப்பாய் உள்ளவனே ! நீராய் உள்ளவனே ! மண்ணாய் உள்ளவனே ! திங்களாகவும், ஞாயிறாகவும் உள்ளவனே ! ஆன்மாவாய் உள்ளவனே ! தேவர்களால் சிறிதும் அறிய முடியாத நீக்கமற நிறைந்து நின்ற பேரொளியே ! அறிவினால் மனவுறுதி உடையவராய் நன்மையைச் செய்யும் சொற்களைச் சொல்லுகின்ற பேரறிவுடைய மக்கள் வாழ்கின்ற திருமுகத்தலை என்னும் தலத்தினிடத்து விரும்பி எம்பிரானாகி, எழுந்தருளி அடியவனை ஆட்கொண்ட நீயே மீண்டும் என் தந்தையாகவும், தாயாகவும் இருக்கின்றாய். இஃது என் பேறு ஆகும்.

இங்குச் சிவபெருமானுடைய அஷ்ட மூர்த்தங்களுள் (இயமானன் தவிர) மற்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. உரையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

121. மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாப் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலயம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே.

தெளிவுரை : எல்லாப் பொருள்களுக்கும் முதன்மையாகி, எல்லாப் பொருளும் அழிந்த பின் எஞ்சிய பொருளாகி, அழிவில்லாத முதற்பொருளாகித் திருமுகத்தலை என்னும் ஆலயத்தினிடத்து விரும்பி எழுந்தருளி, இனிய பாலாகவும் அமுதமாகவுமான பன்னகாபரணனுடைய குளிர்ச்சி பொருந்திய தாமரைமலர் போன்ற இரண்டு திருவடிகளின்மீது கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி எடுத்த வெல்லக் கட்டியை ஒத்த இனிய சொற்களால் கருவூர்த் தேவர் செய்த தேவாமிர்தத்தை ஒத்த இனிய தமிழ் மாலையை இனிமையாகப் பாடுகின்ற அடியவர்கள் எல்லாம் சிவபதவியை அடைந்து நின்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

5. திரைலோக்கிய சுந்தரம்

திருச்சிற்றம்பலம்

122. நீரோங்கி வளர்கமல
நீர்பொருந்தாத் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : சிறப்புப்பெற்று விளங்கும் பொழில்கள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் வீற்றிருக்கும் அழகுடையோனே ! போக்குதற்கு அரிய தீவினையை உடையவனான எனது மேன்மையை மறந்து இன்று ஊராரால் பழிக்கப்படுதலையும் கவனியாமல் ஒளிமிக்க முகம் மலர்ந்து உன்னிடத்தே சரண் அடைந்தேன். அவ்வாறு அடைந்தும் நீரிடத்து உயர்ந்து வளர்கின்ற, தாமரை இலையில் தண்ணீர் ஓட்டாமல் இருக்கும் தன்மையினைப் போல் அல்லவா நீ அடியவனிடம் நெருங்காமல் இருக்கின்றாய்.

123. நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ? அருள்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே !

தெளிவுரை : கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற இடத்தில் விளங்கும் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகுடையோனே ! உருகாத மனத்தை உடைய என்னை உருகுவிக்கும் பொருட்டு, ஐயனே ! நீ இவ்வீதியின் வழியே உலா வந்த அன்று முதல் இன்று வரையில் கைகள் அஞ்சலியாகப் பொருந்தும்படித் தொழுது மலை அருவியைப் போல் கண்களினின்றும் நீர் பெருகுமாறு இருந்தாலும் அருள் செய்ய மாட்டாயா ?

124. அம்பளிங்கு பகலோன்பால்
அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே ! என்
மருந்தே !நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே !

தெளிவுரை : நறுமணம் வீசுவதோடும் கூடிப் பழுத்த பழமே ! எனக்குச் சுவையான தேவாமிர்தம் போன்றவனே ! அருள் நிறைந்த மூன்று கண்களையுடைய சிவந்த பொன்னிறமான பளிங்குக் கல்போன்ற செம்மேனி உடையவனே ! சோலைகள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரை லோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய அழகு உடையோனே ! அழகிய பளிங்கானது, சூரியன் முன்னிலையில் உண்டாகின்ற வெளிச்சத்தைப் போல இவள் மனத்தில் முன்னே தோன்றி இருந்த முதிர்ந்த காதலும் நின் முகத்தைப் பார்த்தவுடன் தெளிவாய்த் தோன்றியது.

125. மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்தது யார்செய்தார் ?
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : கருமைநிறம் பொருந்திய கூந்தலை உடைய இப்பெண், தன் மனத்தை இவனுக்குக் கொடுக்கவும் இவளுடைய வளையல்களை இவளுக்குக் கொடுக்காமல் இவ்விடத்தே நின்ற கோவணாண்டியும் கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலின்கண் எழுந்தருளிய அழகு பொருந்தியவனும் ஆகிய இவன் செய்த செயலை, யாவர் இதற்கு முன் செய்தனர் ? ஒருவரும் இல்லை. ஆதலால், இவன் நேர்மையான வழியில் நின்ற நம் அடியார்களுக்கெல்லாம் உண்மையாக நடந்து கொள்ளும் தன்மையினால் உண்டாகும் செய்ந்நன்றியைப் பாராட்டுதல் இல்லாதவன் ஆயினான்.

இத் திருப்பாட்டில் ந காரங்கட்கெல்லாம், ஞ காரங்கள் போலியாய் வந்தன.

126. நீவாரா(து) ஒழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்(று) அருள் புரிவாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : தேவர் கூட்டங்கள் வணங்கித் துதிக்கின்ற தேவனே ! அழகிய பூஞ்சோலைகள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய எழில் வாய்ந்தவனே ! நீ இவள் இடத்திற்கு வாராமல் போனாலும் இப் பெண் உன்னிடத்து அன்பு கொண்டு கண்களாகிய நீலோற்பல மலர்கள் கோக்கப் படாத அழகிய முத்துக்களை (கண்ணீரை)ச் சொரிந்தன. ஆயினும் நீ, ஐயோ ! என்று இரக்கம் கொண்டு அருள் செய்யாமல் இருக்கின்றாய்.

127. முழுவதும்நீ ஆயினும் இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : செம்மையான மதில்களும் சோலைகளும் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய அழகுடையோனே ! நீ உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்ற போதிலும் தழைத்த கூந்தலையுடைய இப் பெண் இடத்து நீ வாராமையால் தன் உடல் முழுவதும் குற்றமுடையது என்றே நினைந்து மனம் தெளியாமல் இருக்கின்றாய். அவள் தன் வாயால் இடைவிடாமல் சொல்லிச் சொல்லிப் பழகுவதும் உன் ஒப்பற்ற திருப்பெயர் தவிர வேறொன்றுமில்லை. அவள் புலம்புவதும் உன்னுடைய தன்மையை எண்ணியேதான். ஒருவர் பெறத்தக்க பேறும் அதுவே அல்லவா?

128. தன்சோதி எழுமேனித்
தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : செந்நெல் விளையும் பசுமையான வயல்கள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய அழகுடையோனே ! தன்னுடைய சோதி மேலெழுந்து வீசுகின்ற திருமேனியில் பொன்போன்ற அழகிய சாயலை (நிறத்தை) நீ காட்ட மாட்டாய். உனது சோதியின் அழகைக் காணும் பொருட்டு இவள் ஓலமிட்டு அந்த வடிவழகை நீ காட்ட மாட்டாய். அதனால் இவளுடைய கண்கள் உறங்கமாட்டா. இவள் துன்பம் தீரும் வழியை எனக்குச் சொல்லுவாயாக.

129. அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : பெருமை வாய்ந்த மதில்களால் சூழப்பெற்ற குளிர்ந்த நந்தவனம் பாதிரி மலர்களைச் சொரிகின்ற கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய அழகுடையோனே ! எனது உயிரான பெண்ணுக்கு நீ கருணை செய்யாமல் ஒழிந்தாய். அன்றியும் உனது விளங்குகின்ற செஞ்சடையின் மேலே யுள்ள கலை முற்றாத இளம்பிறை சிந்துகின்ற நெருப்பினாலும் உன் கையிலிருக்கின்ற யாழ் நரம்பின் இசையாலும் இவளுடைய உயிரை நீ பிளந்துவிட்டாய்.

130. ஆறாத பேரன்பின்
அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : அழகான சோலைகள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய அழகுடையோனே ! தணியாத மிகுந்த அன்பினை உடையவர்களது மனத்தின்கண் நீ குடிகொண்டு மேலும் வேறாகப் பலர் உன்னைச் சூழ்ந்திருக்க வீற்றிருக்கின்றாய். அதனைக் காரணமாகக் கொண்டு உன் பெருமையில் ஈடுபட்டு இப் பெண் உன்னைப் பொதுத் தன்மையினின்று நீக்கித் தனக்கே உரியவனாகச் செய்யும் பொருட்டு விரைந்து இன்னமும் தேறுதலை அடையாமல் இருக்கின்றாள்.

131. சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர்தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : துள்ளி நடக்கும் நடையினையுடைய பெண்களின் பாடலால் எழும் ஒலியும், ஆடலில் சிலம்பு முதலியவற்றின் அணிகலன்களினால் உண்டாகும் ஒலியும் செம்மையான முறையில் நிகழும் திருவிழா வினை அலங்கரிக்கின்ற கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்ற தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமை வாய்ந்தவனே ! எம்பெருமானே ! நழுவின உடையோடும் துவண்ட இடையோடும் விரிந்த கூந்தலோடும் இந்த இளம் பெண் துன்பம் பட்டுக்கொண்டு இருந்த விதத்தினை நீ ஒரு நாளேனும் பார்த்து இரங்கினாய் இல்லை.

132. ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

தெளிவுரை : பெருமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கோட்டூர் என்னும் ஊரைச் சார்ந்துள்ள திரைலோக்கி என்னும் தலத்தில் திகழும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானே ! வேதங்களின் சாரமாகிய உபநிடதத் தேனைக் குடித்து அருந்தமிழ் மாலை கற்றுச் சிவ மணம் கமழப் பெற்ற காரணத்தினால், புகழ் நிலைபெற்ற கருவூர்த்தேவரால் காந்தாரப் பண்ணில் இசைக்கப்பெற்ற பத்துப் பாடல்களை உடைய தமிழ் மாலை முழுவதையும் போற்றி இசையோடு பாடுவார் இறையருள் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

6. கங்கைகொண்ட சோளேச்சரம்

திருச்சிற்றம்பலம்

133. அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : முற்காலத்தில் திருமாலால் அறிய இயலாத ஒப்பற்றவனாகிய பெருமையுடையோனே ! மூன்று கண்களை உடையவனே ! விசாலமான பெரிய நான்கு தோள்களையுடைய இனிய கரும்பின் சாறே ! தேனே ! தேவாமிர்தமே ! கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே ! பிரமதேவன், அன்னப்பறவை வடிவாகி ஆகாயத்தில் பறந்து தேடும்படி அவ்வளவு பெரிய உருவத்தைக் கொண்ட நீ, மிகச் சிறியவனாகிய என்னை ஆட்கொள்ளுதலை விரும்பி என் உள்ளத்துள்ளே புகுந்து நின்ற உனது எளிமையான தன்மையை எப்பொழுதும் நான் மறக்கமாட்டேன்.

இத் திருப்பதிகம் இறைவர், தமக்கு அருள் செய்த கருணையைப் புகழ்தலை முதன்மை யாகக் கொண்டு, பிறவற்றையும் கூறுவதாய் அமைந்தது.

134. உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா !
ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்
மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேல்
பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணினின்(று) அகலான் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : மனம் கசிந்து, உடல் இளகி, முக்கண்ணனே ! முறையோ என்று முறையிட்டு ஒரு நாளாயினும் பூமியில் நின்று உரத்த குரலில் கூறிக் கதறினேன் இல்லை. எம்பெருமானை அடையும் வழியைப் பற்றிக் கூறும் பாமாலை சூட்டப் பெற்றனவும், மழலை மொழிபோல் மென்மையாக ஒலிக்கின்ற அழகிய சிலம்புகள் அணிந்தனவுமான திருவடிகளை என் முடியின்மேல் சூடி நின்று உருகப் பெற்றிலேன். திருவடிகளுக்குத் திருத்தொண்டு செய்திலேன் என்றாலும், கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பாவியாகிய எனது உயிருக்குள் நுழைந்து என் கண்களினின்றும் நீங்காதவனாய் இருக்கின்றான். இவன் இவ்வாறு செய்வதற்கரிய காரணம் யாதோ ? அறியேன்.

135. அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்
தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே அற்புதமான தெய்வம் ! இத் தெய்வத்தைக் காட்டிலும் வேறு ஒரு தெய்வம் உண்டோ ? இல்லை. தன்னை அன்புடன் பஞ்சாக்கரமாகிய சொல்லின் இடத்திலே வைத்து மனம் களிக்கின்ற மெய்யடியார்களுக்கு எட்டுத் திசைகளிலும் உள்ள பொன்னினது பலவகைப்பட்ட நிதிக் குவியல்களும் பசிய பொன்னாலாகிய மாளிகைகளும் பவளம் போலும் உதட்டினை உடைய மகளிரது பருத்த தனங்களும் கற்பகச் சோலையும் ஆகிய இவை முழுவதும் கிடைக்கும்.

136. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண் ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிதம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்(து) இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கேயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே ! அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும் திருவெண்ணீறும், சிவத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்ற சடைகளும், அச் சடையின்மேல் அணிந்த கங்கையின் அலையும், சதங்கைகளும் சிலம்புகளும் ஆகிய இவற்றை நின்பால் தரிசித்த எட்டுத் திக்குகளிலும் கூட்டமாகக் கூடி நின்ற உமது அடியார்களுடைய முகம் மலரப் பெற்று இரண்டு கண்களிலும் நீர் ததும்பக் கைகள் குவிந்து நிற்கும். இதற்குக் காரணம் யாதோ ?

137. சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள்மூன்(று) எரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவனே ! வேத மூர்த்தியாகிய பிரமனாகவும், திருமாலாகவும், இந்திரனாகவும், ஞாயிறாகவும் விரிந்த சடையையும் மூன்று கண்களையும் உடைய உருத்திரமூர்த்தியாகவும் ஆவான்; உடலிலுள்ள உயிர்களுக்குத் வேதாமிர்தம் போலப் பேரின்ப உணர்ச்சியைத் தருபவன் ஆவான்; இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் ஆவான்; மும் மதில்களையும் எரித்த ஆண் சிங்கம் போன்ற வீரனும் ஆவான்; மேலும் நினைப்பவர்கள் நினைக்கின்ற உருவங்களை எல்லாம் உடையவனும் ஆவான்; எல்லா உருவங்களும் இறைவனது திருவுருவங்களே என்பதாம்.

138. அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்
அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்
உள்கலந்(து) எழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்
குறுகலர் புரங்கள்மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : அண்டங்கள் எல்லாம் ஒப்பற்ற அணுவளவாய்த் தோன்றி நிற்க அத்தனைப் பெரியவனாயும், அணுக்கள் எல்லாம் அண்டங்களாய்த் தோன்றி நிற்க அத்தனைச் சிறியவனாயும் ஆகி நின்றவனே ! அடியேன் உண்ட ஆகாரம் உனக்கு ஆகும் வகையாக, எனது உள்ளத்தினுள் இரண்டறக் கலந்து எழுகின்ற மேலான ஒளி வடிவினனே ! வாசுகி என்னும் பாம்பை வில்லின் நாணாகவும், மேருமலையை வில்லாகவும் கொண்டு பகைவருடைய திரிபுரங்களை எரித்த வீரனே ! நீல கண்டனே ! கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அருள் புரிவாயாக.

உண்ணும் உணவையும் ஈஸ்வரனுக்குச் செய்யும் ஆகுதியாக நினைத்துச் செய்தல் மரபு.

139. மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த
முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே
நிசிசரர் இருவரோ(டு) ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : திரிபுர சங்கார காலத்தில் தப்பிப் பிழைத்த இராக்கதர்கள் மூவரிடத்தும் அன்பிற்கு ஆட்பட்ட கருணையை உடையவனே. கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவனே ! மோதுகின்ற அலைகளோடு கூடிய பாற்கடலின் நடுவில் உருவாகிய முழுமையான இரத்தினத் தொகுதியும் அமுதமும் அவ்விடத்தே தாயைப் போன்ற தலையன்பினைக் காட்டி உருகி ஓருருவாகிய தன்மையில் என்னை முன்னே பெற்றெடுத்த நீ வெளிப்பட்டுத் தோன்றினால், நானும் அவ்வாறே உன்னோடு உருகிக் கலந்து ஒன்றாய் விடுவேன்.

140. தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)
அமருல(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : உன்னைப் பித்தன் என்று ஒரு தரம் கூறுவாராயினும் அவர் பிழை செய்தவற்றைப் பொறுத்தருள் செய்யும் உனது கையினை அடியவனின் சிரத்தின் மேல் வைத்து ஸ்பரிச தீட்சையைச் செய்த கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலின் கண் எழுந்தருளிய இறைவனே ! கிளி போலும் வாயினை உடைய அழகிய பெண்களின்மீது வைத்த அன்பை நூறாயிரம் பங்காகச் செய்து அதில் ஒரு பங்கை உன்னிடத்தில் வைத்த அன்பர்களுக்கு நின் பெருமையானது இன்ப லோகத்தை அளிக்கும்.

கைத்தலம் சென்னிமேல் வைத்தல் ஸ்பரிச தீட்சை.

141. பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்
புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! மூட்டிய தீயினால் பாலோடு கலந்த நீரானது காய்ச்சப்பட்ட மாத்திரத்தில் பாலை விட்டுப் பிரிந்து விடுவதுபோல பாவம் முன்னே போக பாலைப் போன்ற புண்ணியம் பின்னே சென்று அறிவினால் அறியும் வகையாக என்னுள்ளே புகுந்து, ஒரு யோக மார்க்கத்தில் விளங்கி நீ நுட்பமாகக் காணப்படுவாய். ஆயினும் இறைவனே ! உன் பெருமையானது உன்னிடத்தில் ஒடுங்கும்படி நீ மிக எளியவனாக வந்து கண்ணினுள் மணி கலந்து நிற்பது போல என்னொடு ஒன்றுபடக் கலந்து நின்றனை !

இங்குப் புண்ணியத்திற்குப் பாலும், பாவத்திற்கு நீரும் உவமையாகக் கூறப்பெற்றுள்ளன. இப்பாடல் உவமையணி.

142. அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

தெளிவுரை : கொங்கைகளின் பாரத்தினால் துவளும் கொடி போன்ற இடையை உடையவரும் இடப்பாகத்தில் அமர்ந்திருப்பவருமான உமாதேவியார் கண்டால் கோபங் கொள்வார் என்று எண்ணி விளங்குகின்ற சடைமுடிமேல் கங்காதேவியைப் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கின்ற எம்பெருமானே ! கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் இறைவனே ! தேவர்கள் தங்கள் அழகிய கைகளால் பூமழை பொழியத் திருவடிச் சிலம்புகள் ஒலிக்க, ஒரு நாள் அடியவனிடம் எழுந்தருளி வந்து உம் கைகளால் அடியேன் சிரசின்மீது தொட்டு என்னையும் உய்யுமாறு ஆட்கொண்டு அருள் புரிந்தாய்.

ஆசிரியர் தற்குறிப் பேற்றமாக அருகிருக்கும் உமாதேவியார் கங்கையைக் கண்டு விட்டால் கோபிப்பார் என்று கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.

143. மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே.

தெளிவுரை : ஒரு பக்கம் உமாதேவியோடிருந்தே யோகம் செய்பவனைப் போல் காணப்படுபவனை, வளரா நின்ற இளம்பிறையைத் தமது திருமுடியின் மீது கங்கையுடனே தரித்திருக்கும் சிவபெருமானை, கங்கை கொண்ட சோளேச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனை, அகங்கையில் ஓடு ஏந்திக் கொண்டு பிச்சை ஏற்று உண்டு திரியும் கருவூர்த் தேவர் சொல்லிய பாடல்களாகிய மாலையால் துதி செய்தவர் ஆணைசக்கரம் ஏந்திய செம்மையான கையுடன் உலகில் சக்கரவர்த்தியாய் அரசு செலுத்திச் சிவபெருமான் திருவருட் கடலில் மூழ்கித் திளைத்தலும் செய்வர்.

திருச்சிற்றம்பலம்

7. திருப்பூவணம்

திருச்சிற்றம்பலம்

144. திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : மருத மரம், அரச மரம், கோங்க மரம், அகில் மரம் ஆகிய இவற்றை அடித்துக் கொண்டும் மலையின் மேலுள்ள வளப்பமாகிய இரத்தின மணிகள் முதலிய பொருள்களை வாரிக் கொண்டும் இறங்கி ஓடி வருகின்ற வையை ஆற்றினது அலைகள் மோதுகின்ற கரைகளின் பக்கத்தில் உள்ளதும் பெரிய கடை வீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவனே ! நீ மேன்மையான கருணையைப் புரிந்து என்னை அடியவனாக ஆட்கொண்டு இவ்வாறு சிறியேனுக்கு இன்பத்தைத் தரும் பொருள் இன்னது என்று தெரிவித்து மிகுந்த கருணையைச் செய்து இன்பத்தையே தருகின்ற உனது பெருமையைக் காட்டிலும் பெரிதாகிய ஒன்றை உவமித்தற்கு உண்டோ! இல்லை.

145. பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : குளங்களில் வாளை மீன்கள் இனிய நீரை வாயினால் உண்டு கொண்டிருக்க, தெளிந்த தேன் பாய்ந்து குளத்தில் ஒழுகும்படி செய்யும் அழகிய உயர்ந்த சோலைகள் சூழ்ந்தும் பெரிய கடை வீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே ! ஆதிசேடனாகிய படுக்கையில் பள்ளி கொண்டவனான திருமாலும் பிரமன் முதலான தேவர்களும் மிக நீண்ட காலமாக உன்னைக் காணும் பொருட்டுப் பேராவல் கொண்டிருக்க, நீ எனது மனத்தினுள்ளே புகுந்து நின்ற உனது எளிய தன்மையை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.

146. கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்
கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : மிகப் பரந்து விளங்குகின்ற திருவிழாவின் போது தேவாரப் பாடல்கள் பாடிக்கொண்டு செல்லும் அடியவர்களின் பின்னே செல்வோர், பாட்டினிடத்துக் கொண்ட பெருவிருப்பாகிய பக்தியினால் மயங்கிக் கீழே விழுந்த போது அவிழ்ந்து தொங்கின முறுக்கோடு கூடிய சடையை மீண்டும் எடுத்துக் கட்டுகின்றதும் பெரிய கடை வீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய எம்பெருமானே ! கடற்கரையில் எழுகின்ற அலைகளின் ஒலியைப் போல், உடுக்கையாகிய வாத்தியத்தின் இடையில் பிடித்த கையில் கட்டிய கயிற்றின் முனையில் உள்ள நாவினால் உடுக்கையின் இரண்டு பக்கமும் ஓசை உண்டாகும் படியாக ஒருநாள் நீ வந்து எங்கள் கண் முன்பாக இருக்க மாட்டாயோ?

தாருக வனத்து முனிவர் தாம் செய்த அபிசார வேள்வியினின்றும், உடுக்கையைத் தோற்றுவித்துச் சிவ பெருமான் மீது ஏவ, அதனை அவர் தம் கையில் ஏந்தி ஒலிக்கச் செய்தார்.

147. கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கே
கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : இருள் செறிந்து அடர்ந்த சோலைகளில் வண்டுக் கூட்டங்கள் ரீங்காரம் செய்ய, அவற்றின் அருகே சிவ புண்ணியத்தைச் செய்த தேவ மாதர்கள் பரத சாஸ்திர முறைப்படி நின்று நடன மாடுகின்றதும் பெரிய கடை வீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே ! என் கண்ணிற் பொருந்திய கருமணியின் உள்ளே நீ புகுந்து அங்கே ஒன்றாகக் கலந்து ஒடுங்கிய உனக்கு அவ்விடம் நுட்பமாய் இருந்தாலும் எம்பெருமானே ! நீ மிக நுண்ணிய அணுவின் தன்மையையும் கடந்து நின்ற உன் பெருந்தன்மையை நான் அறிவேன்.

148. கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்
அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க
நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : உயர்ந்த பல அடுக்குகளைக் கொண்ட மாளிகைகள் இடத்தே இரவுக் காலத்தின் இருளை நீக்குவதற்கு நிலையாக வைத்துள்ள தீபங்கள் எண்ணில்லாத பலகணிகளின் பக்கத்திலே இருந்து விளங்குகின்றதும் பெரிய கடை வீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவனே ! கொடிய தீவினைகளாகிய கயிற்றினால் கட்டப்பட்டுப் பிறவிக் கடலுள் வீழ்த்தப்பட்ட நான் அவற்றினின்றும் தாண்டி, ஐம்புலன்களாகிய கள்வரை மெதுவாகத் துரத்தி, உனது ஒன்றோடொன்று ஒத்த திருவடிகள் இரண்டையும் அடைய வேண்டி முறைப்படி அடைந்துள்ளேன். நீ அருள் செய்வாயாக அல்லது அருள் செய்யாவிட்டாலும் விடுவாயாக. அஃது உன் விருப்பம்.

149. செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்
சேவடி பார்த்திருந்(து) அலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்
என்னுடை அடிமைதான் யாதே ?
அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
அரிவையர் அவிழ்குழல் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : கண்டவர்களின் மனம் மிக மகிழும்படி ஒரு நாள் பிட்சாடணர் கோலத்துடன் சிவபெருமான் பிட்சை ஏற்க எழுந்தருளியபோது அதனைக் கண்ட பெண்களின் கூந்தல் காதலினால் அவிழ அம் மாதர்களின் கூந்தலில் அணிந்த மலர்களில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் பொம்மென்று எழுந்து இசைபாடுவதும் பெரிய கடைவீதியினை உடையதுமான திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவனே ! திருந்திய மனத்தையுடைய பெரியோர்கள் உன்னிடத்து அன்பை எனக்குக் கொடு என்று சொல்லி உனது செம்மையான திருவடிகளைத் தரிசித்துக் கொண்டிருக்கும் அருள் கிடைக்காமல் வருந்தி நிற்க என்னுடைய மனத்தில் நீ எழுந்தருளியிருத்தலுக்கு யான் என்ன தகுதி உடையவன்? எனது அடிமைத் திறம் தான் என்ன தகுதியுடையது? அறிந்திலேன்.

150. சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்
சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.

தெளிவுரை : மின்னல் போன்ற மிக்க ஒளியை உடைய பொன்மயமான மாளிகைகளின் முற்றங்களையும் விளங்குகின்ற இளம்பிறைச் சந்திரன் தவழ்கின்ற மாடங்களையும் பொன்போன்று ஒளிர்கின்ற மதில்களையும் கொண்டு விளங்குவதும் பெரிய கடை வீதிகளையும் உடைய திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே ! புகழ்ந்து சொல்லும் தகுதியினை நான்கு வேதங்களால் கண்டு அறிய முடியாத உள் இடத்தில் ஒளிந்து கொண்ட நீ இன்று கல்லைப் போன்ற கடினமான மனத்தை உடைய எனது கண்ணாகிய வலையிலே அகப்பட்டுக் கிடக்கின்ற இந்தக் கருணையை விடப் பெரிய தன்மை ஒன்று உண்டோ ? இல்லை.

151. பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைவெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன(து) உருவமா குவரே.

கருவூர்த் தேவர் வேதம் ஓதும் அந்தணர் குலத்தினர். பாவணத் தமிழ்கள் பத்தும் என்றாராயினும் தற்போது எட்டுப்பாடல்களே கிடைத்துள்ளனே, 8,9 பாடல்கள் கிடைக்கவில்லை.

தெளிவுரை : திருப்பூவணம் என்ற தலத்தில் திருக்கோயில் கொண்டு என்னை ஆட்கொண்டருளிய தூயனை உமாதேவியாரை இடப் பாகத்தில் உடையவனை, வெண்மையான கோவணம் உடுத்தி வெள்ளிய தலை ஓட்டைக் கையில் ஏந்திய இளையோனை, அழகு முழுவதும் நிறைந்த தீப்போன்ற செந்நிறமுடையவனை, மேன்மை பொருந்திய வேதங்களை உணர்ந்த பெருமை விளங்குகின்ற கருவூரனாகிய யான் சொன்ன பாட்டின் தன்மைøயாய் உள்ள தமிழ்த் துதிப்பாடல்கள் பத்தினையும் கற்றுப் பாட வல்லவர்கள் சிவபெருமானது சாரூப பதவியைப் பெறுவார்கள்.

சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் இவை நான்கும் பத முக்திகள்.

திருச்சிற்றம்பலம்

8. திருச்சாட்டியக்குடி

திருச்சிற்றம்பலம்

152. பெரியவா கருணை இளநிலா எறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால்
தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.

தெளிவுரை : திருச்சாட்டியக்குடி என்னும் தலத்தில் விளங்கும் ஏழிருக்கை என்ற திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசனுக்குக் கருணை பெரியதாய் இருக்கின்றவாறும் இள நிலவை வீசும் பிறைச் சந்திரன் தவழ்கின்ற சடை முடி அவிழ்ந்து உச்சிக் கொண்டை சரியுமாறும், குண்டலங்கள் விளங்கி இரு பக்கங்களில் உள்ள காதுகளில் தொங்குமாறும், கழுத்துக் கருமையாய் இருந்தவாறும், சிவந்த வாயில் புன்னகை காட்டுமாறும் திருச்சாட்டியக்குடியில் உள்ள அன்பர்களின் இருகைகள் குவிந்தவற்றை நோக்கித் திருமுகம் மலர்ந்தவாறும் என்ன வியப்பு !

153. பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்
பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்
வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெரும் தேவி
சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயம் கோயில்மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.

தெளிவுரை : திருச்சாட்டியக்குடி என்னும் தலத்தில் திகழும் ஏழ் இருக்கை என்ற திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு அணிகின்ற மாலை, பாம்பு ஆகும். உண்ணும் பாத்திரம், மண்டை ஓடு ஆகும். பட்டத்து யானை, இடபமாகும். திருமஞ்சனம் செய்யும் இடம், அன்பர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்து ஓடுகின்ற அருவியாகும். மலையரசன் மகளாகிய பார்வதி தேவியார் மகிழ்ச்சிக்குரிய பெருந்தேவி ஆவார். அணியும் சந்தனமும் திருநீறாகும் . அரிய சாம வேதம் இன்னிசை ஆகும். சடையானது மகுடம் ஆகும். திருச்சாட்டிகைக் குடியில் உள்ள அன்பர்களது அழகு பொருந்திய மனமானது கோயிலில் உள்ள மூலத்தானமாகும்.

154. தொழுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே.

தெளிவுரை : திருச்சாட்டியக்குடி என்னும் தலத்தில் திகழும் ஏழிருக்கை என்ற திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஈசனுக்கு உறைவிடம் பேய்கள் சஞ்சரிக்கும் சுடுகாடு. போர்த்துக் கொள்ளும் போர்வை, யானைத் தோல். உண்ணும் உணவு அலைந்து ஏற்கும் பிச்சை. கோவணம், நெருப்புப் போல விடத்தைக் கக்கும் பாம்பு. செபமாலையானது பளிங்கு மாலை. திருச்சாட்டியக்குடியிலுள்ள வேதியர்கள் இளகிய நெய்யைச் சொரிந்து வளர்க்கின்ற ஓமத்தீயின் ஒளியானது விளக்கு. என்றாலும் அந்த ஈசனை வணங்கிக் கொண்டு பின் செல்லும் கூட்டம், பிரமன் முதலிய தேவர் கூட்டமாகும். தேடிக்கொண்டு பின்னே தொடர்ந்து செல்வன நான்கு வேதங்கள் ஆகும்.

155. பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
தமருகம் சாட்டிக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.

தெளிவுரை : ஏழிருக்கை என்ற திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசனுக்கு இசைக்கும் பாட்டுக்கள் நான்கு வேதங்களாம். தும்புருவும் நாரதரும் அன்போடு பாடுகின்ற கந்தர்வர் ஆவர். உயிர்களுக்கெல்லாம் புகலிடமாயுள்ளது அவரது நடனசாலையாம். மூவுலகங்களிலும் மிகுந்த இருளில் அவர் இரு கைகளினாலும் அபிநயம் காட்டித் திருநடனம் செய்வர். அப்போது தாள ஒத்தோடு கூடிய அவரது திருநடனத்தில் அவர் கையில் பிடித்திருக்கும் உடுக்கை தானே ஒலி செய்யும். திருச்சாட்டியக்குடியிலுள்ள மெய்யன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை, ஈசனுக்குக் கமலாசனமாகும்.

156. திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்மூன்(று) ஏழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.

தெளிவுரை : ஏழிருக்கை என்ற திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசனுக்குத் திருமகன் முருகன் ஆவான்; தேவியோ என்றால் உமையவள் ஆவாள்; மாமனோ எனில் இமயமலை அரசன் ஆவான்; இலக்குமி, சிறந்த ஆண்மகனான மன்மதனுக்குத் தாயாவாள்; மன்மதன் சிவபெருமானுக்கு மருமகன் ஆவான்; மலையரசன் மகளான பார்வதி தேவியார் வழங்குகின்ற மிக்க செல்வத்தினால் தனபதியாகிய குபேரன் சிவபெருமானுக்கு நண்பன் ஆவான்; திருச்சாட்டியக் குடியில் எழுந்தருளிய ஈசன் இரண்டு திருமுகமும் மூன்று கால்களும் ஏழு கைகளும், கொண்ட அக்கினிதேவனின் வடிவமாக நின்றும் அருள்புரிபவர் ஆவார். இதை அர்த்தநாரீசுர உருவம் என்றும் கூறுவர்.

157. அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்
கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே, களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்(கு)
இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்
இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.

தெளிவுரை : தீயே ! நீரே ! காற்றே ! பூமியே ! ஆகாயமே ! ஆகாயத்தினின்று யாவற்றையும் காத்து அருள்கின்ற பொன்மயமானவனே ! வெள்ளிமலை போல் வெண்ணிறமானவனே ! எனக்கு ஆதரவானவனே ! வேறு ஆதரவு இல்லாத தனியேனது மனத்தின்கண் கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே ! திருச்சாட்டியக்குடியிலுள்ள அடியவர்களுக்கு மிக இனிய சுவையுள்ள பழமாகி, எங்கும் நீக்கமற நிறைந்து ஏழிருக்கை என்று சொல்லும் திருக்கோயிலின் மூலத்தானத்தில் நீ எழுந்தருளியிருக்கும் தன்மையினை அடியவனுக்குச் சொல்வாயாக !

158. செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.

தெளிவுரை : பொன்னே ! பவள மலையே ! தரிசிக்க வந்து நின்ற திருமால் பிரமன் முதலிய தேவர்கள் கூட்டத்துள் சிவபெருமானிடத்து மிக்க அன்புடையவர் அனுபவிக்கின்ற நிறை அமுதே ! ஐயனே ! அறிவில்லாதவனாகிய எனது சம்புவே ! அணு வடிவாய் இருப்பவனே! மலைபோல் அசைவில்லாதவனே ! சிவபெருமானே ! சங்கரனே ! திருச்சாட்டியக்குடியிலுள்ள அடியாருக்கு இன்பம் தருபவனே ! எங்கும் நீக்கமற நிறைந்து ஏழிருக்கை என்று சொல்லும் திருக்கோயிலின் மூலத்தானத்தில் நீ எழுந்தருளியிருக்கும் தன்மையினை அடியவனுக்குச் சொல்வாயாக.

159. செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை
இறைவனே ! போற்றியே போற்றி !

தெளிவுரை : சிவந்த கண்களைப் போன்ற திருமாலே போற்றி ! நான்கு முகங்களைக் கொண்ட பிரமனே போற்றி ! சிவபுரம் என்ற தலத்துள் எழுந்தருளிய அழகிய கருணைக் கண்களையுடையவனே போற்றி ! இறப்பில்லாதவனே போற்றி ! தேவர்களுக்குத் தலைவனாய் விளங்குபவனே போற்றி ! தத்தமக்குரிய நான்கு வேதங்களையும் பிறநூல்களையும் சகல கிரியைகளையும் கற்றோராகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருச்சாட்டியக்குடி என்னும் தலத்தில் எழுந்தருளியிருந்து அன்பர்களுக்கு அருள்புரிகின்ற எங்கள் தலைவனே போற்றி ! ஏழிருக்கை என்று சொல்லும் திருக்கோயிலின் மூலத்தானத்தில் எழுந்தருளிய இறைவனே போற்றி போற்றி !

சிவபெருமானே எல்லாத் தேவர்களின் வடிவமாய்த் திகழ்கின்றார் என்பதாம்.

160. சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய்!
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
அமரர்கள் அதிபனே ! அருளாய் !
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டிக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.

தெளிவுரை : அனைத்துப் பொருள்களுக்கும் முதன்மையாய் இருப்பவனே ! என்னுடைய பிறவித் துன்பத்தை நீக்கிய சித்தனே ! அருள்புரிவாயாக ! செம்மையான அழகிய கண்களை உடையவனே ! அருள்புரிவாயாக ! சிவபுரம் என்ற தலத்துள் வீற்றிருக்கின்ற ஐயனே ! அருள் புரிவாயாக ! என்றும் சிரஞ்சீவியாய் இருப்பவனே ! அருள்புரிவாயாக ! தேவர்களுக்குத் தலைவனே ! அருள் புரிவாயாக ! குதித்தோடுகின்ற நீர் வளம் பொருந்திய வயல்களும் குளிர்ந்த சோலைகளும் சூழ்ந்துள்ள திருச்சாட்டியக்குடி என்னும் தலத்துள் ஏழிருக்கை என்ற திருக்கோயிலின் மூலத்தானத்தில் எழுந்தருளிய முத்தனே ! அருள் புரிவாயாக ! யாவற்றிற்கும் முதன்மையானவனே, அருள் செய்வாயாக !

சித்தன் மதுரையில் எல்லாம் வல்ல சித்தர் வடிவு கொண்டு அருளிய இறைவன்.

161. தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேல்
காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்
கழறுசொல் மாலைஈர் ஐந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே
வளரொளி விளங்குவா னுலகே.

தெளிவுரை : முயற்சிக்குத் தகுந்த பலனைக் கொடுக்கின்ற வயல்களையும், பசுமையான சோலைகளையும், நீர் நிலைகளையும் பூந்தோட்டங்களையும் உடைய திருச்சாட்டியக்குடி என்னும் தலத்திலுள்ள அடியார்கள் ஈட்டிய பொருளாக இருக்கின்ற ஏழிருக்கை என்னும் திருக்கோயிலின் மூலத்தானத்தில் எழுந்தருளிய சிவபெருமானது பாத மலர்களின்மேல், மேலான நுண்ணிய பொருள்களைக் காட்டும் படியான வேத நூல்களில் நல்ல பயிற்சியுள்ள கருவூர்த் தேவர் பாடிய பாமாலைப் பாடல்கள் பத்தும் சிந்தையில் பதித்த அன்பின் உறுதியுடைய மக்களுக்கு அல்லவா ஒளி வளர்ந்து பிரகாசிக்கின்ற சிவலோகப் பேறு கிடைக்கும்.

திருச்சிற்றம்பலம்

9. தஞ்சை இராசராசேச்சரம்

திருச்சிற்றம்பலம்

162. உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.

தெளிவுரை : காவல்கள் பலவாக ஒன்றொடொன்று நெருங்கிப் பலவித ஆயுதங்கள் அமைக்கப் பெற்ற உயர்ந்த அடுக்கு நிலைகளை உடைய பெரிய மலை போன்ற உப்பரிகைகளின் பக்கங்களில், வெண்மையான சந்திரன் தவழும் மதில்களால் சூழப் பெற்ற தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார்க்கு உலகத்தார் எல்லாரும் வணங்கும் படியாக வந்து எழுகின்ற கிரணங்களை உடைய சூரியன் பல ஆயிரங்கோடி ஒன்று சேர்ந்த பரப்பு எல்லாம் திரண்டது போன்ற மிக்க ஒளியை உடைய திருமேனியானது அழகுள்ளதாய் இருக்கின்றது. இஃது என்ன வியப்பு !

163. நெற்றியிற் கண்என் கண்ணின்நின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
ஏற்றுநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் இவர்க்கே.

தெளிவுரை : மடங்கி விழும் அலைகளை உடைய வடவாற்றின் நீர் செல்லும் மதகில் வாழ்கின்ற முதலைகள் வாரி எறிநின்ற நீரை உடைய அகழியோடு கூடிய மதில்களால் சூழப்பட்ட தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையாரது நெற்றியிலுள்ள கண்கள் என் கண்களினின்றும் நீங்கா. அவரது அழகிய சிலம்புகள் ஒலிக்கின்ற பொன் போன்ற அழகிய திருவடிகள் என் இல்லம் முழுவதையும் ஆட்கொள்ளும் பொருட்டு என் நெஞ்சினுள் புகுந்தன. அவை மீண்டும் வெளியே வரவில்லை. ஆதலின், இவரைத் தவிர வேறு உறவினர் எனக்கு எதற்கு?

164. சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : கோங்கு மலர்க் கொத்தினைப் போன்ற வெண் கொற்றக் குடைகளை உடைய அரசர்களது மகுடங்கள் ஒன்றோடொன்று பட்டுத் தேய்ந்து கீழே சிந்திய சிவந்த ஒளியை வீசும் இரத்தின மணிக் குவியல்கள் உயர்ந்துள்ள இடங்களைக் கொண்ட மாளிகைகளைத் தன்னகத்தே பெற்ற மதில்களால் சூழப்பட்ட தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார்க்கு சடைகளால் ஆன மகுடத்தினின்று குளிர்ச்சி பொருந்திய நிலவொளி வீசவும், வெள்ளிய நிலவு ஒளிவிடுவது போன்ற முத்துக் குடையின் நிழலில் அவர் இடப வாகனத்தின் மீது எழுந்தருளி உலா வருகின்ற கருத்து யாதோ ?

சிவபெருமான் இடப வாகனத்தின் மீது எழுந்தருளி உலா வருதல், அடியார்களுக்கு அருள் செய்யும் நிமித்தமாகும். கோங்கம் பூக்கொத்து, குடைக்கு வடிவுவமை.

165. வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளீர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : மேக மண்டலத்தின் அளவு உயர்ந்து பரவிக் காணப்படும் மதில்களின் மேல் அமைத்துள்ள இடபங்களின் அழகிய வடிவங்களில் வரிசையாக ஒளி மிகுவதற்காகப் பதிக்கப் பெற்று விளங்கும் பளிங்கு கற்கள் அடுத்துள்ள சோலையில் பூக்கள் முதலியவற்றில் ஒளிவீச, அது சூரிய மண்டலம் போல விளங்கும்படி, திகழும் மதில்களால் சூழப்பட்ட தஞ்சை மாநகரிலுள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார்க்கு, வயிரம் பொருந்திய அகில் கட்டையின் புகைகளினால் மணம் கமழும் மாளிகைகளிடத்து இரவில் பெண்கள் தம் விரல்களினால் யாழை மீட்டி இனிய இசையை எழுப்புவார்கள்.

166. எவரும்மா மறைகள் எவையும்வா னவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : உவர்ப்பாகிய பெரிய கடலின் ஒலியைப் போன்று ஒலி செய்கின்ற பெரிய தெருக்களில் பொருந்திய அரச யானைகளின் கூட்டம் அங்கும் இங்கும் உலாவுகின்றதும், பெரிய மலை போலச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்ததுமான தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார் எத்தகைய பெருமை உடையவராலும், புகழ் வாய்ந்த வேதங்கள் எவற்றாலும் இந்திராதி தேவர்களின் கூட்டங்களாலும் தண்டினை உடைய அழகிய தாமரை மலரை ஆசனமாகக் கொண்ட பிரமதேவனாலும் திருமாலாலும் அறிதற்கு அரிய பெருமை உடைய வலிய நெருப்பை உமிழும்படியான அக்கினித் தூணாக நின்றவர் அவர்.

167. அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : அழகிய முத்துக்களைச் கோத்துக் கட்டிய கட்டு மலையில் தோன்றும் ஒளியும் குளிர்ந்த நிலவின் ஒளியும் வளங்களைத் தருகின்ற பூமியின் ஒளியும் மிகப் பெருகிச் சிறப்புற்ற வீதிகளில் நிறைந்துள்ள இருள் முழுமையும் நீங்கி நிற்கும் மதில்கள் சூழ்ந்த தஞ்சையில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார் அருள் புரிய வேண்டிய வழியால் அருள் புரிந்து, ஆட்கொள்ள வேண்டிய வழியால் ஆட்கொண்டு நின்ற அந்த இறைவர் தமது அழகிய கண்களையும் புன்சடையையும் நீண்ட காதுகளையும் தெரியக் காட்டி, யான் பெற்ற குயில் போலும் இனிய குரலையுடைய இப் பெண்ணை மையல் செய்வது அழகாகுமோ ? ஆகாது. இப்பாடல் நற்றாய் இரங்கல் என்ற துறையைச் சார்ந்தது.

168. தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால் சேறலின் றேனும்
நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோ
சுனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : நீர் ஊற்றினையும், நீர் பாயும் மதகினையும் உடைய தடாகத்திலுள்ள அழகிய செங்கழுநீர் மலர்கள் சுற்றுப்புறங்களிலும் ஒளிவீசும் மாளிகைகளிலும் மற்றைய எல்லாப் பொருள்களிலும் மிகுந்த நறுமணத்தைச் செய்வதும், மதில்கள் சூழ்ந்ததுமான தஞ்சையில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார், ஒப்பற்ற பெருமையுடைய அவர், தாமே எல்லாப் பொருள்களிலும் கலந்து இருக்க, பிறப்பு இனிய தளிர் தளிர்ப்பதைப் போலவும், இறப்பு இலை உதிர்ந்து விழுதலைப் போலவும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வது என்றால் மனத்தினால் வணங்குதற்கு அரிய அவர் தம்மிடத்துச் செல்லுதல் தற்போது நிகழாவிடினும் மனம் இடிந்து கரைந்து வருந்துவத்றகு என்ன காரணம் ?

169. பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : நெடுங்காலமாகத் தங்களால் இயன்ற சிவத் தொண்டு செய்து முன்னோர் பலர் தரிசிக்கும் பொருட்டு வருந்திக் கொண்டிருக்க, மின்னல் போலும் ஒளிவீசும் நீண்ட புருவத்தினை உடைய இளமயில் போன்ற பெண்கள் மலையின் தோற்றத்தைப் போன்று உயர்ந்து காட்சியளிக்கும் நாடக சாலைகளில் இனிய நடனம் செய்கின்றதும், மதில்கள் சூழ்ந்ததுமான தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார் பெரிய கோயிலாக என் மனத்தினிடத்து வந்து வீற்றிருக்கும் எளிமைத் தன்மையை, யான் எப்பொழுதும் மறவேன்.

இப்பாடல் பெருமிதச் சுவையுடையது.

170. மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதிர் அனையவா ழியரோ !
பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில்
புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : மதில் சூழ்ந்த தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார் அழகு மிகுந்த திருநீற்றுக் கோலத்தை அழிக்கும்படி அழகு பொங்கும் கங்கைநீர் தளும்பும் ஒளி பொருந்திய சடைமுடியை உடையவர். அவர் எங்களுக்கு இனிமையானவர். நீக்க மற நிறைந்து மேகங்களால் சூழப்பெற்ற காலத்துச் சூரியன் ஒளி மறைந்து இருப்பது போல வஞ்சகருடைய மனத்தினிடத்துக் காணப்படாமல் மறைந்து நிற்பவர். அழகிய திருவடி ஒளியில் மூழ்கிய அன்பர்களுக்கு இளவேனிற் காலத்தில் உதித்த ஞாயிறு போன்று வாழ்விக்கும் தன்மையுடையவர்.

171. தனியர்எத் தனைஓ ராயிர வருமாம்
தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆர் அமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தெளிவுரை : மதில் சூழ்ந்த தஞ்சை மாநகரில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையார் தனிமையானவர். எவ்வளவோ ஆயிரம் வடிவம் கொள்ளும் தன்மை உடையவர். என் வசப்பட்டவர் ஆவர். கனியைப் போன்றவர். அரிய இனிய கரும்பு போன்றவர். வெண்மையான முறுக்கிய பூணூலைத் தரித்தவர். அரிய அமுதம் போன்றவர். தூய்மையானவர். கால்களில் பொன்மயமான வீரக்கழலை அணிந்தவர். முறுக்கிய சடாமுடியை உடையவர். புண்ணிய வடிவினர். புறம் பேசாத மெய்யன்பர்களுக்கு மிகவும் இனிமையானவர்.

172. சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந்(து) அருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
பொன்நெடுங் குன்றுடை யோரே.

தெளிவுரை : தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் ஆகிய மரங்கள் நிறைந்த நந்தவனத்தின் கரிய இருள் பரவியிருக்கின்ற இடமும் மதிலும் சூழ்ந்த தஞ்சையில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப் பெருவுடையாரிடத்துப் பிறவிப் பிணிக்கு அரிய மருந்து ஆகிய அவரது திருவருளைப் பருகித் துன்பம் நீங்கப் பெற்ற கருவூர்த் தேவர் பாடிய பாமாலையாகிய இந்தப் பத்துப் பாடல்களின் பொருளாகிய அரிய மருந்தை உண்பவர்கள், உணர்ந்து அனுபவிப்பவர்கள் சிவபதம் என்னும் அழகிய பெரிய கயிலாய மலையைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்.

அருமருந்து காய கற்பம். இவ்வாசிரியர் காய கற்பம் அருந்தி நெடுநாள் வாழ்ந்தார் என்ப.

திருச்சிற்றம்பலம்

10. திருவிடைமருதூர்

திருச்சிற்றம்பலம்

173. வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : மிக்க இருளையுடைய நல்ல நடு இரவில் ஒரு படத்தை உடைய செந்நாகம் பெரிய மாணிக்கத்தை உமிழ்ந்ததால் உண்டாகும் ஒளி பொருந்திய சிவந்த சோதி வட்டம் போன்று விளங்க, பாவியேனால் காதலிக்கப்பட்ட சிவபெருமான் காதில் அணிந்த செம்பொன்னால் ஆகிய அழகிய தோடு திகழ்கின்றது. அத்தகைய தோட்டினையும் விளங்கும் சடைமுடியினையும் மிக்க அழகு பொருந்திய திருநீற்றுக் கோலத்தினையும கொடிய நஞ்சால் கருநிறம் விளங்கும் சிவந்த கழுத்தினையும் உடைய தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்குத் தேவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் திருவிடைமருதூரே ஆகும்.

174. இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : இந்திரலோகத்திலுள்ள தேவர்கள் யாவரும் சொன்ன ஏவல் கேட்டு இரண்டு திருவடித் தாமரைகளையும் வணங்கி எழுந்து நிற்க, ஐந்து தலை நாகத்தை இடுப்பில் மேகலைபோல் கட்டிக் கொண்டு வீடுகள்தோறும் போய்ப் பிச்சைக்காக அலைந்து திரிகின்ற சிவபெருமான் ஆனவர், நரம்புகளை உடைய வீணையின் இசையை எழுப்பிப் பாட அதனோடு சாதி கின்னரமாகிய இசைக்கருவி கலந்து ஒலிக்க வேதியர் எழுப்பும் வேத மந்திரமாகிய இசைப் பாடல்களும், இனிய குழலோசையும் எங்கும் பொருந்திய தலம் திருவிடைமருதூரே ஆகும்.

175. பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
பல்லவம் வல்லியென்(று) இங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
வீங்குல(கு) ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமகள் உடனாய்த்
தூக்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை அணுகி நுணுகியுள் கலந்தோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய சந்திரனிடத்துள்ள கொழுந்து என்று சொல்லத் தகும் தளிர்க்கொடி போன்று, இப்படிப் பல பொருள்களாகச் செய்யப்படுகின்ற ஒரே பொருளாகிய பொன்னைப் போல எல்லாப் பொருள்களுமாய் பெரிய உலக முழுவதும் நீக்கமற நிறைந்து நின்று, ஊடலோடு கூடிய இன்ப நுகர்ச்சியான கலவித் தொழிற்குரிய உமாதேவியோடு பொருந்தியவனாய்ப் பேரிருளின் நடுவாகிய இரவிலே என் மனத்தின்கண் புகுந்து மிக நுட்பமாக உள்ளே கலந்து நின்றவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் திருவிடைமருதூரே ஆகும்.

176. அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு
அடியனேன் உள்கலந்து அடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
படர்சடை விடம்மிடற்(று) அடிகள்
துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை
சுடர்உமிழ் தரஅதன் அருகே
மணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்ப
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : அழகு மிக்க ஒளி மாணிக்கத்தினுள் கலந்தாற் போல, அடியவனாகிய எனது மனத்தினுள் கலந்து அடியவன் செய்யும் தொண்டினை ஏற்று மகிழ்ந்தருளும் உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்டவனும் விரிந்த சடைகளையும் கண்டத்தில் விடத்தையும் பெற்றவனுமாகிய சிவபெருமான், ஒளிவீசுகின்ற ஆடையைத் தரித்த இடுப்பின் மேல் ஆடை ஒன்று ஒளியினை வீச அதன் பக்கத்தில் மாணிக்கத்தைக் கக்குகின்ற பாம்பு மிக்க அழகுடன் பிரகாசிக்க எழுந்தருளியிருக்கும் தலம், திருவிடை மருதூரேயாகும்.

177. பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல்
படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி
தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிகள் உடனாய்
வந்தணு காது நுணுகியுள் கலந்தோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : வினையுடன் கட்டப் பட்டிருக்கும் நிலையினையும் வினையை விட்டு நீங்கும் நிலையினையும் தெரிவிக்கும் பொருளை உடைய ஞான நூல்களில் கூறிய வழியில் ஒழுகி நின்று சிறிது சிறிதாக மேல் நிலையை அடைந்து, மனமும் தானும் கலந்ததாகிய ஒரு கலப்புச் சிறிது அறிந்தாலும் முற்றிலும் அறியாத வகையில் என் தந்தையாகவும் தாயாகவும் எனக்கு இவ்வாறாக நின்று, கணக்கற்ற பலவூழிக் காலங்களாக வெளிப்பட்டு வந்து நெருங்காமல் மிக நுட்பமாய் என் மனத்துள் கலந்தவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம், திருவிடைமருதூரே ஆகும்.

178. எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு)
ஏப்பமிட்(டு) இலங்கெயிற்(று) அழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந் தாடும்
தூங்கிருள், நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப
அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி
வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : எரிகின்ற சுடுகாட்டில் வைக்கப்பட்ட பிணத்தின் கொழுப்பைத் தின்று ஏப்பத்தை விட்டு விளங்குகின்ற பற்களை யுடைய நெருப்பைக் கக்கும் வாயினையும் நெருங்கக் கட்டிய கழலினையும் உடைய பெரும் பேய்க் கூட்டங்கள் குதித்து ஆடுகின்ற மிக்க இருளையுடைய நல்ல நடு இரவில், கருணை புரிவதைக் குறிக்கும் புன்சிரிப்பானது இளஞ்சந்திரனைப் போல ஒளிவீசவும் செவ்வானம் போன்று ஒளி வீசவும் விளங்குகின்ற திருமேனியில் அணிந்த கீற்றுக்களோடு கூடிய பாம்புகள் ஆடவும் நடனம் புரிகின்ற எம் தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம், திருவிடைமருதூரே ஆகும்.

179. எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந்(து) உருகி
அழலையாழ் புருவம் புனலொடும் கிடந்தாங்(கு)
ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : அழகு மிக்க வேலைப்பாடு உடைய பச்சை மட்கலங்கள் ஆகாயத்தினின்று மழைத் துளிகள் பட்ட அளவில் நனைந்து கரைந்து போக, நெருப்பில் சுடப்பட்ட அம் மண் பாத்திரங்கள் பின்னர் நீரில் கிடந்தாலும் கெடாதவாறு போல, மாதர்களோடு கலவித் தொழிலில் ஆழ்ந்து கிடந்த அறிவில்லதாவனாகிய எனது மனம் உன் அருளாகிய பெருந் தீயில் மூழ்கிய பின், சிற்றின்ப நுகர்ச்சியால் விளையும் தீமை வந்து தாக்காதவாறு மிகுந்த இருளையுடைய நல்ல நடு இரவில் ஒப்பற்ற மெல்லிய யாழோசை ஒலிக்க என் மனத்துள் வந்து புகுந்தவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம், திருவிடைமருதூரே ஆகும்.

180. வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார்
மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
விழுமியோன் முன்புபின்(பு) என்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : வைக்கோலை நாடும் இடபத்தின் மேல் பெருமையோடு எழுந்தருளியவரும் உமாதேவியை இடப்பாகத்தே உடையவருமான சிவபெருமான் என்மீது அன்பு வைத்துக் கொடிய செந்தீயினால் சுடப்பட்ட செங்கற்களைப் போல மாறுபடாத வண்ணம் என்னைச் செம்மையாக்கி மேன்மை பொருந்திய அச் சிவபெருமான் எனக்கு முன்னும் பின்னும் உள்ளான் என்று சொல்லும்படி எளிமையாக என் உள்ளத்தில் வந்து வீற்றிருக்கின்ற கருநிறம் கொண்ட கழுத்தை உடைய எண்ணற்ற அண்டங்களில் உள்ள தேவர்களுக்குத் தேவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம் திருவிடை மருதூரே ஆகும்.

181. கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக்
கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலம்கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே ! என்றுநின்(று) உருகிப்
புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : கலங்கிய குளத்து நீரைத் தேற்றாங்கொட்டை முதலியவற்றால் தெளியச் செய்து விடத்து, நீருடன் கலந்திருந்த மண் அடியில் தங்கியவாறு போல நன்மையை அளிக்கும் பேரருளை என்னுடன் கூட்டி, அடியேனுடைய சிந்தையில் புகுந்த பெருமானே ! வீணனாகிய என்னுடைய அறிவினுள் கலந்து நின்றவனே. எப்பொழுதும் உன் தொண்டில் நின்று மனம் உருகி வாய்விட்டுக் கதறுகின்றவர் பயனற்ற தன்மையை அடையார். நல்ல பயனைப் பெறுவர். அத்தகைய அடியவர்களது நீர் அருவியைப் போல ஆனந்தக் கண்ணீரைச் சொரியும் கலங்கிய தோற்றத்தை உடைய அழகிய கண்களில் திகழும் கண்மணியினைப் போன்ற சிவபெருமான் எழுந்தருளிய தலம், திருவிடைமருதூரே ஆகும்.

182. ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடை மருதே.

தெளிவுரை : ஒன்று சேர்ந்து தொழிலைச் செய்யும் இரண்டு கண்களையுடைய கணக்கற்ற மிக அறிவில்லாத மக்கள் உறங்குகின்ற நல்ல இருளை உடைய நள்ளிரவில் ஒப்பற்ற கருநிறம் பொருந்திய கண்களினின்று பிரகாசிக்கும் செழுஞ்சுடர் ஒளியோடு கலந்து பொருள்களைக் காண்பது போ/ல, இறைவனுடைய அறிவோடு கலந்து உணரும் தன்மையை அடைந்த கருவூர்த் தேவர் அருளிய கரும்பு போன்ற இனிய தமிழ் மாலையாகிய பதிகத்தைப் பெரிய சோலையினிடத்து மருத யாழுடன் கலந்து பாட, அதனால் வெளிப்பட்டுத் தோன்றும் கரிய கழுத்தினை உடைய தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம், திருவிடைமருதூரேயாகும்.

திருச்சிற்றம்பலம்

4. பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா

1. திருவாரூர்

திருச்சிற்றம்பலம்

183. கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.

தெளிவுரை : தமது கரங்களில் வெண்மையான முத்துக்களால் பதிக்கப் பெற்ற சிறந்த வளையல்களை அணிந்து, கழுத்திலே ஒப்பற்ற மாலையைத் தரித்து, மூன்று கண்களை உடைய இறைவராய் வீதியில் திருவுலா வந்து, உலகிலே மிகுந்த சிறப்பினை உடைய திருவாரூரில் எழுந்தருளிய முழுமுதற் கடவுளாய் வீதியிலும் எழுந்தருளும் விடங்கராய் இருந்து நடனம் ஆடுகின்றார். அவர் இவ்வாறு வளைந்தாடும் அழகிய தோற்றம் உமாதேவியார் இடத்திலும் தக்க சிறப்பினை உடைய கங்கா தேவி இடத்திலும் சிறிதும் இல்லை. இப்படி இவர் ஆடும் கோலம் கொள்வதற்கு அவரது உட்கருத்துதான் யாதோ ?

184. பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.

தெளிவுரை : சிவபெருமான் அருட்சத்தியாயும் சிவமாயும் உலகெலாம் படைத்த ஒப்பற்ற முழுமுதற் கடவுளாயும் உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகிய பொருளாயும் திருவாரூரில் எழுந்தருளிய முழுமுதற் கடவுளாயும் வீதியிலும் எழுந்தருளும் விடங்கராயும் இருந்து நடனம் செய்கின்றார். தேவர்களே ! சிவபெருமானிடத்து அன்பு பூண்டு பக்தி மயமாகி அவரது தன்மையை உணர்பவர்கள், திருவருளை நன்றாக நுகர்ந்து அனுபவிக்கும் தோறும் அவர்களுக்கே அத் திருவருள் அமுதம் போன்று இனிக்கும்; இவருடைய திருவுருவம் (அருள் வடிவம்) இருந்த விதம் இத்தன்மையது.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் முத்து வயிரமணி

திருச்சிற்றம்பலம்

185. முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவன் தில்லையை இடமாகக் கொண்ட சிறப்பினை வியந்தருளிச் செய்தது. இதற்கு உரித்தாகச் சொல்லப்பட்ட சாளரபாணி என்னும் பண் பிற திருமுறைப் பாட்டுக்களில் காணப்படாதது.

வெண்மையான முத்துக்களினாலும் வைரங்களினாலும் அழகிய மாணிக்கங்களினாலும் செய்யப் பெற்ற மாலைகளின் மீது பூங்கொத்துக்கள் பிரகாசிப்பன போன்றும் தூண்டப்பட்ட விளக்கின் ஒளியைப் போன்றும் இருக்கும் தில்லைவெளி எல்லாத் திசைகளிலுமுள்ள தேவர்கள் புகழ்ந்து துதிக்கின்ற அழகிய பொன்னம் பலத்தில் எழுந்தருளிய இறைவனுக்கும் நடன சபையாக ஆயிற்று. இங்கு நடனம், ஆனந்த தாண்டவ நடனம் ஆகும்.

186. கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே.

தெளிவுரை : எம்பெருமானே ! சிறப்புமிக்க கணம்புல்ல நாயனார் கண்ணப்ப நாயனார் என்று பெயர் கொண்ட உனது பக்தர்கள் சிவபுரத்தை ஆளா நிற்க, நீ அங்கு நின்றும் ஆட்சி புரியாமல் ஒரு போதும் அழியாத மூன்று வகை அக்கினிகளாலான வேள்வியைச் செய்கின்ற தில்லை மூவாயிரம் அந்தணர்களோடும் உடனுறையும் வாழ்க்கையினை மேற் கொண்டு நீ இன்புற்று ஆனந்தக் கூத்து ஆடுகின்றாயே, என்னே உனது அருள் !

முத்தீ : காருகபத்யம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்பன. வேள்வி இங்கு ஓமம்.

187. அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.

தெளிவுரை : அக இதழ்களோடு கூடிய அழகிய மலர்கள் பொருந்திய வயல்களை உடைய திருவாமூரில் எழுந்தருளிய திருநாவுக்கரசு சுவாமிகளை முத்தியை அடையும் பொருட்டு வழியினைக் காட்டிய வீரனே ! அழகிய தில்லைப் பதியின்கண் உள்ள கொல்லையில் மேயும் தன்மையை உடைய இடபத்தின் மீது எழுந்தருளியவனே ! சகல செல்வங்களும் நிறைந்த திருச்சிற்றம்பலம் என்னும் இடத்தையே நீ நடனமாடும் சபையாகக் கொண்டு அடைந்தாய்.

188. எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும்ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.

தெளிவுரை : சிவபெருமான் எம் உயிரைக் பிணைத்திருக்கும் வலிய வினையாகிய நோயை அறவே அழித்திட்டு எம்மை ஆட்கொள்ளுகின்ற சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளையும் அடிமையாக ஆட்கொண்டருளி, செலுத்தப்பட்ட அம்பு போன்ற (கூரிய) கண்களை உடைய உமாதேவியாரும் தானுமாக அழகிய தில்லைப்பதியிலுள்ள செம் பொன்னால் செய்யப் பெற்ற பொன்னம்பலமே எழுந்தருளி இருத்தற்கு இடமாயிற்று.

189. களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.

தெளிவுரை : உடலுடன் சேரமான் பெருமாள் நாயனாரும் ஆரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளும் முறையே குதிரையின் மேற்கொண்டும் மதநீர் ஆறுபோலப் பெருகி ஓடுகின்ற அயிராவணம் என்ற வெள்ளை யானையின் மேற்கொண்டும் கயிலையை அடைய, முளை போன்று வளைந்த பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவனே ! நீ தில்லை மூவாயிரம் அந்தணர்களோடும் கலந்து நடனமாகிய விளையாட்டைச் செய்கின்ற திருச்சிற்றம்பலம் உனது ஆடலரங்கம் ஆகும்.

190. அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.

தெளிவுரை : இறைவனே ! உலகம் முழுதுமுள்ள அடியவர்கள் உன்னைச் சூழ்ந்து வர, அடையத்தக்க உலகம் வேறு உண்டு என்று கருதி நீ அவ்விடத்தைத் தேடிச் செல்லாமல் மேல் உங்களுக்குச் செல்லும் வழியை உண்டாக்கும் சிவபுண்ணியச் செயல்கள் பொருந்திய சிறப்பினை உடைய சிவலோமாக விளங்குவதும் தில்லைத் தலத்திலுள்ள திருச்சிற்றம்பலமே ஆகும்.

தில்லைச் சிற்றம்பலமே சிவலோகமாகத் திகழ்வது என்னும் பெருமையை இப் பாடல் கூறுவதாகும்.

191. களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.

தெளிவுரை : சிவபெருமானே ! சுண்ணச்சாந்து பூசிய அழகிய மேல்மாடியும் நிலாமுற்றமும் சூழ்ந்துள்ள மாளிகைகளின் மேல் கூந்தலினையும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியினையும் உடைய சிறந்த ஆபரணங்களை அணிந்த மகளிர் உன்னைத் துதித்துப் பாட, அப்பெண்கள் அணிந்துள்ள ஒளியினைக் கொண்ட சிறந்த ஆபரணத்தில் பதிக்கப் பெற்ற இரத்தின மணிகள், மிகுந்த இருளை அங்கிருந்து நீக்குகின்றதனால் தெளிவு கொண்ட தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலமே நீ நடனமாடும் இடமாக அடைந்தாய். என்னே உனது அருள் !

192. பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நயிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.

தெளிவுரை : பழைமையான உலகமாகிய நாடக மேடையில் உயிர்களை எல்லாம் கூத்தாடச் செய்பவராகிய சிவபெருமானே ! பாடகமும் பாத கிண்கிணியும் பல வகையான சிலம்பும் அசைந்து ஒலிக்கவும், வளையலை அணிந்த கையினை உடைய பெண்கள் நாடோறும் நின்னை வணங்கித் துதிக்கவும், மாற்றுயர்ந்த பொன்னால் அமைக்கப்பட்ட பொன்னம்பலமே, உனது நடனமிடும் நடன அரங்கம் ஆகும்.

193. உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.

தெளிவுரை : எம்பெருமானே, நீ அழகிய தீப்பிழம்பாகிய தூண் வடிவத்துடன் பல கற்பகாலம் அளவும் எங்கும் பரந்து நின்றபோது பிரமனும் திருமாலும் நின் அடிமுடி காண இயலாமல் வணங்கித் துதிக்கவும், சூரியனுக்குச் சமமாக ஒளி பொருந்தி விளங்குகின்ற மாளிகைகள் சூழ்ந்துள்ள அரகர என்று போற்றுவதற்கு இடமாகிய திருசிற்றம்பலமே உனக்கு நடன அரங்கம் ஆகும்.

194. சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.

தெளிவுரை : சிவனடியார்கள் வாழ்கின்ற தில்லைப் பதியிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப் பெருமானது ஆனந்த தாண்டவத்தின் அதிசயத் தன்மையை அங்குக் கண்டறிந்த வண்ணம் திருப்பூந்துருத்திநம்பி காடநம்பி செய்தருளிய தமிழ் மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் அவற்றின் கருத்தை உணர்த்து பாடும்படியான இத் தொழிலில் வல்லவர்கள், சிவபெருமானை அடைந்து நிற்கும் மோட்ச நிலையைப் பெற்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

5. கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா

கோயில் மின்னார் உருவம்

திருச்சிற்றம்பலம்

195. மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே ?

தெளிவுரை : இத் திருப்பதிகம் தில்லைப் பெருமானைக் காணும் வேட்கை மிகுதியை எடுத்தோதி அருளியது. மின்னலைப் போன்ற பெண்களினது வடிவம் மேல் நிலைகளில் விளங்க, வெண்மையான கொடிகளைக் கொண்ட மாளிகைகள் சூழ்ந்து இருக்கப் பொன்னாலாகிய ஒன்று வந்து நின்றது போலும் என்று சொல்லும்படி தென்னா என்று இசை ஒலியை எழுப்பி வண்டுகள் பாடும் அழகிய தில்லைப் பதியிலுள்ள பொன்னம்பலத்தில் எழுந்தருளிய எனது அரிய அமிர்தத்தை, எங்கள் இறைவனை அடைந்து தரிசிப்பது எந்நாளோ? தில்லை தரிசிக்க முத்தி என்பது ஆன்றோர் வாக்கு. இச் செய்யுள் தற்குறிப்பு ஏற்ற உவமையணி ஆகும்.

196. ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்று கொலோ !

தெளிவுரை : என்றும் அணையாத மூன்று வைதீகாக்கினிகளை வளர்ப்பவரும், ஐந்து வகையான யாகங்களைச் செய்பவரும், வேதாங்கங்கள் ஆறினையும் அறிந்தவரும், நான்கு வேதங்களை ஓதுபவரும், கோமேதயாகம் செய்பவரும், அந்தணர்களும் நெய்விட்டுச் சிவாக்கினியை வளர்த்து மேம்பாடு அடைபவர்களும் ஆகிய தில்லை மூவாயிரம் தீட்சிதர்கள் ஆகிய இவர்களுடனே முன்னர்ப் பதஞ்சலி முனிவர் உனது ஆனந்த தாண்டவத்தைத் தரிசிக்க ஆவலுடன் நின்றபோது நடன அரங்கமாகிய திருச்சிற்றம்பலத்தில் நடனமிட எழுந்தருளி நின்ற என் அரசே ! உன் திருநடன தரிசனம் கிடைப்பது எந்நாளோ ?

197. முத்தீ யாளர் நான்ம றையர்
மூவாயிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும்
தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ ?

தெளிவுரை : நாள்தோறும் முத்தீயை வளர்ப்பவர்களும் நான்கு வேதத்தை ஓதும் உரிமை உடையவர்களும் உன் திருவருள் வழி நின்று கூடிவாழும் வாழ்க்கையை மேற்கொள்பவர்களுமான தில்லை மூவாயிரம் அந்தணர்கள் இடைவிடாமல் ஓதிய நான்கு வேதங்களையும், தெத்தே என்று வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் அழகிய தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்துள் எழுந்தருளிய அப்பனே ! உனது நடனத்தைத் தரிசிக்க அடியவன் வந்து சேருவதும் எந்நாளோ?

198. மானைப் புரையும் மடமென் நோக்கி
மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி மேலோர்
அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவது என்றுகொலோ ?

தெளிவுரை : மானை ஒத்த இளமையும் மென்மையுமுள்ள பார்வை உடைவளான பெருமை பொருந்திய உமாதேவியாரோடு வீற்றிருக்கும் பசுவின் பால் முதலிய பஞ்சகௌவியம் அபிடேகம் செய்து கொள்ளும் திருமுடி மீது ஒப்பற்ற பிறைச்சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானை, தேன் போலும் இனியவனை, பால் போலும் சுவையுள்ளவனை, தில்லைப் பதியில் செழிப்பான செம்பொன்னாலாகிய சிற்றம் பலத்துள் எழுந்தருளிய இறைவனை, ஞானக் கொழுந்தினை அடியவன் வந்து தரிசிப்பது எந்நாளோ?

199. களிவான் உலகில் கங்கை நங்கை
காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ?

தெளிவுரை : மகிழ்ச்சியுடன் இன்பம் எய்துவதற்குரிய தேவலோகத்தில் தோன்றிய கங்கையாகிய பெண்ணிடத்து அன்பு கொண்டவனே ! எனக்கு அருளினைச் செய்வாயாக என்று ஒளி பொருந்திய மேனியினை உடைய திருமால் தில்லையம்பலத்துத் திருவாயிலின் முன்னே வரம் பெற விரும்பித் தவம் கிடக்க, அவர்க்கு அருள் புரியாமல் உனது மெய்யடியார்களுக்கு, அருள் புரியும் தெளிந்த அரிய அமிர்தம் போன்றவனே ! தில்லைப்பதியில் செழுமையான பொன்னால் செய்யப்பெற்ற பொன்னம் பலத்திலுள்ள ஒளி பொருந்திய மேலான சோதி வடிவம் உடையவனே ! உன்னை நாய் போன்ற இழிந்த அடியேன் அடைந்து தரிசித்து நிற்பதும் எந்நாளோ?

200. பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
காண்பதும் என்றுகொலோ ?

தெளிவுரை : உலகத்தவர் எல்லாரும் வந்து வணங்கும்படி பதஞ்சலி முனிவருக்கு முன்னே மகிழ்ந்து நடனம் புரிந்தவரும் கச்சணிந்த முலையினை உடையவளாகிய உமாதேவியாரை இடப்பாகத்தில் பெற்றவரும் பெருமை வாய்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கச் சிறப்புடனே திகழ்கின்ற தில்லைப்பதியில் செம்பொன்னாலாகிய சிற்றம்பலத்தில் நடனமிடுகின்ற கருநிறம் பொருந்திய கண்டத்தை உடையவருமான எமது கற்கண்டு போன்ற இனியவரைக் கண்டு தரிசிப்பதும் எந்நாளோ?

பதஞ்சலி முனிவர் பாம்புக் காலை உடையர். வியாக்கிரமபாதர் புலிக்கால் முனிவர். இவர்கள் கண்டு களிப்புற இறைவன் நடனம் ஆடுகின்றார் என்ப.

201. இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்ற வற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ ?

தெளிவுரை : இலை வடிவம் அமைந்த ஒளி மிக்க வேற்படையை உடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணனது இருபது தோள்களும் நெரியக் கயிலை மலையைத் தூக்கி எடுத்த அந்த இராவணனுக்கு வாட் படையும் நீண்ட ஆயுளும் கொடுத்தருளியவரும், மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை அழித்தற்கு அம்பைச் செலுத்த அவ் வில்லை ஏந்தியவரும், செம்பொன்னினால் அமைந்த சிற்றம்பலத்துள் எழுந்தருளிய கலைமான் கன்றை ஏந்திய அழகிய திருக்கரத்தை உடையவரும் ஆன பெருமானை அடியவன் தரிசிப்பதும் எந்நாளோ?

202. வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி யாடும்
அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே.

தெளிவுரை : கொடுங்கோல் மன்னனாகிய பாண்டியனது நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தனதாக்கிக் கொண்ட சோழனும் உறையூர்க்கு அரசனும் ஆகிய முதற் பராந்தகன் என்னும் சோழன் பொன் வேய்ந்ததும், மிக அழகான வளையல்களை அணிந்த மாதர்கள் பாடி ஆடுகின்றதுமான அழகிய தில்லைப் பதியிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளிய எமது தலைவரும் எங்கும் நிறைந்தவருமான எமது சிவபெருமானை அடைந்து தரிசிப்பதும் எந்நாளோ?

203. நெடியா னோடு நான்மு கனும்
வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி ரட்டும்
அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ?

தெளிவுரை : நீண்ட திருவிக்கிரம வடிவு கொண்ட திருமாலும் நான்முகனும் தேவர்களும் நெருக்கமாக நின்று மகுடத்தொடு மகுடம் தாக்கி அதனால் சிந்திய முழு மணிகளின் தொகுதியைச் சிவத்தொண்டர்கள் திருஅலகைக் கொண்டு திரட்டி அப்புறப்படுத்தும் அழகிய தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்து எழுந்தருளியவரும், நறுமணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவருமான சிவபெருமானைத் தரிசித்து வணங்குவதும் எந்நாளோ !

204. சீரான் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாழிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.

தெளிவுரை : மிகச்சிறப்பு வாய்ந்த தில்லைப்பதியில் திகழும் பொன்னம்பலத்தில் எழுந்தருளி நடனமாடும் சிவபெருமானை, மேகங்கள் தவழ்கின்ற உயர்ந்த சோலைகளை உடைய உறையூர்க்கு அரசனும், தஞ்சை மாநகர்க்குத் தலைவனுமான கண்டராதித்தன் திருவருளோடு கலந்து பாடின தெவிட்டாத இனிய சொற்களுடன் கூடிய அரிய தமிழ்மாலையைக் கற்றுப் பாட வல்லவர்கள், திரும்பி வாராத முத்தி உலகில் பெருமையுடனே பேரின்பத்தையும் அடைந்து வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

6. வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா

கோயில் துச்சான

திருச்சிற்றம்பலம்

205. துச்சான செய்திடினும்
பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி
இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை
நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே !

தெளிவுரை : அழகு மிக்க தில்லைப்பதியில் ஆனந்த தாண்டவம் செய்கின்ற பெருமானே ! கசந்தாலும் இளம் வாழைக்காய் இளம் வேப்பிலை இவற்றை விரும்பு பவர்கள் கறி செய்வதற்கு உபயோகிப்பார்கள். அது போல அடிமையை விரும்புபவர்கள் அவ் வடிமை இழிவான செயல்களைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆதலால் எவ்வித ஆதரவும் அடியவன் இல்லாதிருத்தலை நீ தெரிந்திருந்தும் எனது தொண்டை விரும்பாது இருக்கின்றாயே !

206. தம்பானை சாய்ப்பற்றார்
என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்(கு) இல்லாமை
என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி
வழியடியேன் தொழிலிறையும்
நம்பாய்காண் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே !

தெளிவுரை : அழகு மிக்க தில்லைப்பதியில் ஆனந்த தாண்டவம் செய்கின்ற நம்பெருமானே ! எவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரைப் பிடிக்கமாட்டார்கள் என்ற பழமொழியும் எம்மைப் போன்றவர்க்குப் பொருந்தாமை என்னிடத்தே கண்டு கொண்டேன். புதியராய் வந்தவரின் தொண்டினைப் பெரிதும் விரும்புகிறாய். வழிவழி வந்த அடியவனின் தொண்டனைச் சிறிதும் விரும்பவில்லை.

207. பொசியாதோ கீழ்க்கொம்பு
நிறைகுளம்என் றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச்
சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும்
எனையுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே !

தெளிவுரை : அழகு மிக்க தில்லைப்பதியில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே ! நீர் நிறைந்த குளத்தின் அருகில் பள்ளத்திலுள்ள மரத்திற்கு அக் குளத்தின் நீர் கசிந்து பாயாதோ ? என்று சொல்லும் பழமொழியின் வார்த்தைக்கு இணங்கத் திக்கு நோக்கி மருண்டு விழித்துச் சிவபெருமானே ! ஓ ! என்று கதறினாலும் என் வேண்டுகோளுக்கு இணங்கினான் இல்லை. என்னை ஆளாக உடைய உமாதேவியார் பழ அடியானாகிய என்னிடத்திலும் பேசாது இருக்கின்றாள். அவன் அருளைப் பெற விரும்பினேன்.

208. ஆயாத சமயங்கள்
அவரவர்கள் முன்பென்னை
நோயோடு பிணிநலிய
இருக்கின்ற அதனாலே
பேயாவித் தொழும்பனைத்தம்
பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே ! ஆராய்ச்சியில்லாத புறச் சமயத்தை அனுட்டிக்கும் அவ்வவர்களுக்கு முன்பாக அடியேனைப் பல நோய்கள் வருத்த, அதற்கு ஆட்பட்டு இருக்கின்ற காரணத்தினால், இத் தொண்டனைப் பேய் என்று கருதித் தம்பிரானே அருளாது இகழ்கின்றாய் என்று அவர்கள் நாய் போன்ற என்னைப் பரிகசிக்கும் படி செய்வித்தாய்.

209. நின்றுநினைந்(து) இருந்துகிடந்து
எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றியொரு கால்நினையா(து)
இருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல்
கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ ? திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே ! நிற்கும் போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் எழுந்திருக்கும் போதும் உன்னை நினைந்து வணங்குகின்ற உனது அடியவனான நான் ஒரு சமயம் ஐம்புலன்களும் ஒன்று பட்டு உன்னை நினையாமல் இருந்தாலும் என்னை அவ்வாறு இருக்க விடமாட்டாய். எப்போதும் உன்னை நினைக்குமாறு செய்வாய். கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப்போல் கதறச் செய்கின்றாய் எனினும், வந்து எதிரில் நிற்கமாட்டாய். இச் செயல் உனக்கு நல்லதாமோ?

210. படுமதமும் மிடவயிறும்
உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும்
அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்(கு)
ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் ஆடுகின்ற பெருமானே ! ஒழுகும் மதநீரையும் பானை போன்ற வயிற்றினையுமுடைய யானை முகக் கடவுளாகிய விநாயகரை மகனாக உடைய தலைவனே. அகத்திய முனிவருக்கு மூலத்தை (பிரணவத்தை) அறியும்படி நீ அறிவுறுத்தியதும் வேத நூல் அல்லவா? ஓர் எருதினுக்கு இடுவது புல்லும் மற்றோர் எருதினுக்கு இடுவது வைக்கோலுமாம். இது நடுவு நிலைமை ஆகுமோ? அகத்தியனுக்கு அந் நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளினாய். இது நடுநிலை ஆகுமா?

211. மண்ணோடு விண்ணளவும்
மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா(து)
ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்(து)
அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே. பூவுலகத்தோடு வானுலகம் வரையிலுள்ள மனிதர்கள் முதல் தேவர்கள் வரையுள்ள யாவர்க்கும் ஆதரவாக நீ இருக்கின்றாய். அடியவனுக்கு மட்டும் நீ ஆதரவாகாமல் போதலும் நான் மிகவும் கலக்கமடைந்து பெருமை பொருந்திய தலைவனே என்று அழுது துன்புற்று மேனோக்கிக் கூவி அழைத்தாலும் என்னிடம் அடையவில்லை !

212. வாடாவாய் நாப்பிதற்றி
உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல்
எற்றேமற் றிதுபொய்யில்
கூடாமே கைவந்து
குறுகுமா(று) யான்உன்னை
நாடாயால் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் புரிகின்ற பெருமானே ! வாய் வாட்டமுற்று, நாவினால் உளறி, உன்னை நினைந்து மனம் உருகி, முத்தியைப் பெறுதற்கு நான் செய்கின்ற குற்றேவல் இதைத்தவிர வேறு யாது உளது? குற்றேவல் பொய் யொடு கூடாமல் இருக்கக் கைகொடுத்து உதவி நான் உன்னை வந்து அடையும்படி நீ அருள மாட்டாயா?

213. வாளாமால் அயன்வீழ்ந்து
காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத்
துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும்
அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.

தெளிவுரை : அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் புரிகின்ற பெருமானே ! ஒரு தொண்டும் புரியாமல் திருமாலும் பிரமனும் விரும்பி உன்னைக் காண்பதற்கு அரிதாகிய மாண்பின் தன்மையைத் தோள்கள் பொருந்தவும் கைகள் பொருந்தவும் துணையாயுள்ள அடியார்கள் பொருந்தவும் நான் வணங்கி னாலும் நீ என்னை அடியவனாக உடையதுவும் உண்மை தானோ? அடியவனாகிய யான் உனது திருவடிகளை அடைவதற்குரிய நாள் எந்நாளோ ? அறியேன்.

214. பாவார்ந்த தமிழ்மாலை
பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான்
என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக்
கூத்தாடி நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல்
இனியுனக்குத் தடுப்பரிதே.

தெளிவுரை : மேலாவனே ! தென்திசையிலுள்ள அழகிய தில்லைப்பதியில் ஆனந்தக் கூத்து ஆடுபவனே ! அடியவர்க்கு அடியவனாகிய ஒருவன் செய்யுள் வடிவாகப் பொருந்திய தமிழ்ப் பாடலின் தொகுதியை எடுத்துக் கூறி ஓயாமல் (எப்பொழுதும்) கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றான் என்று கருதி, எனக்கு நீ அருள் செய்யின் மிகவும் நன்று. இனி உனது நாயடியேனாகிய யான் சாகும் தருணத்திலேனும் உன்னைத் தரிசித்தலை நீ தடை செய்ய முடியாது.

இதனால் இறைவனது காட்சியைக் காண இவருக்கிருந்த வேட்கை மிகுதி புலனாகும்.

திருச்சிற்றம்பலம்

7. திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா

1. கோயில் பாதாதி கேசம்

திருச்சிற்றம்பலம்

215. மையல் மாதொரு கூறன் மால்விடை
யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக்
கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென்
சிந்தை உள்ளிடம் கொண்டனவே.

தெளிவுரை : மிக்க காதல் கொண்ட உமாதேவியாரை இடப்பாகத்தே கொண்டவனும், திருமாலாகிய இடபத்தின் மீது ஊர்பவனும் மான் கன்றைப் பெரிய கரத்தில் ஏந்தியவனும், மேகம் போன்று கறுத்த விடம் பொருந்திய கண்டத்தை உடையவனும் நெருப்பு மயமான மழு என்னும் ஆயுதத்தைத் தாங்கியவனும் பெரியோனும் நிறைந்த தீ (மழு) ஏந்தி நடனமாடுபவனும் அழகிய நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பசுமை நிறைந்த தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்தில் எழுந்தருளியவனுமாகிய நடராஜப் பெருமானுடைய சிவந்த பாதங்கள் என் மனத்தினுள் வந்து நின்று அதனைத் தம் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டன.

216. சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த
தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து)
ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என்
சிந்தை உள்ளிடங் கொண்டனவே.

தெளிவுரை : தண்ணீர் தாழ்ந்திருக்க அதில் பொற்றாமரை மலர் மேல் எழுந்து விளங்கும் குளமும், அக் குளத்து நீரின் இடத்துள்ள தாமரை மலரை அணைந்து ரீங்காரம் செய்து கொண்டு வண்டுகள் மலரினிடத்து மோதுகின்ற அழகும் பொருந்திய தில்லைப்பதியினுள் பொன்னம்பலத்தில் எழுந்தருளிய நடராசப் பெருமானை நோக்கித் தேவர்களும் வித்தியாதரர்களும் அன்பினால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து புகழ்ந்து துதிக்க, ஆனந்த நடனம் செய்கின்ற அழகிய கூத்தப் பெருமானின் வீரக்கழல், சிலம்பு, கிண்கிணி என்ற சதங்கை இவை யாவும் என் மனத்தினுள் வந்து அதனைத் தம் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டன.

217. குருண்ட வார்குழல் கோதை மார்குயில்
போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள்
திருமல்கு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ
ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென்
சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.

தெளிவுரை : இங்குத் திருத்தொடைகளைத் தியானித்ததாகும். குறங்கு தொடை.

சுருண்ட நீண்ட கருமையான கூந்தலை உடைய பெண்கள் குயிலைப் போலக் கொஞ்சிப் பேசுகின்ற அழகிய மாளிகைகள் நிரம்பிய தில்லையில் மேன்மை நிறைந்த சிற்றம்பலத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவனும் பெருமை பொருந்திய இமயமலை அரசன் மகளாகிய பார்வதி தேவியார் வியப்புற்று நின்று தொழுமாறு நடனமாடுகின்றவனுமான கூத்தப் பெருமானின் மாணிக்கத்தை ஒத்த அழகும் ஒளியும் சேர்ந்து திரண்டிருக்கிற பெருமை வாய்ந்த திருத்தொடைகள் என் மனத்தினுள் வந்து அதனைத் தம் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டன.

218. போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ்
தடமல்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசை
தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே
தமியேனைத் தளிர்வித்ததே.

தெளிவுரை : இது திருக்கச்சையைத் தியானித்தது. யானையைப் பிளந்து அதனால் மலையரசன் மகளாகிய உமாதேவிக்கு ஏற்பட்ட அச்சத்தைக் கண்டவனும், குளிர்ந்த நீர் சூழ்ந்த ஆழமான தடாகங்கள் நிறைந்த தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியவனுமாகிய சிவபெருமான், சுற்றி வந்து பாயும் புலியின் தோலைத் தன் அரையின் மீது அணிந்து அதன்மேல் இழுத்துக் கட்டிய அழகிய கயிற்றினோடு தொங்கும்படி விளங்கும் திருக்கச்சு அல்லவா தனியேனாகிய என்னைத் தளர்ச்சியடையச் செய்தது.

219. பந்த பாச மெலாம்அறப் பசு
பாசம் நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும்
அணியார் தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும்
திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்சுழி என்உள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே.

தெளிவுரை : ஆன்மாக்களைக் கட்டியுள்ள மும்மலக் கட்டுகள் எல்லாம் அறுபட்டு ஒழியும் படி தன் முனைப்பாகிய உணர்ச்சியை நீக்கிய பல முனிவர்களோடு மூவாயிரம் அந்தணர்களும் வணங்குகின்ற அழகு வாய்ந்த தில்லையில் எழுந்தருளிய பொன்னபலவனின் சிவந்த நெருப்பை ஒத்த திருமேனியும், விளங்குகின்ற அழகிய திருவயிறும், அத்திரு வயிற்றிலுள்ள சிறப்புற்ற உந்திச் சுழியும் என் மனத்தினுள் வந்து அதனைத் தம் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டன. இங்குத் திருமேனி, திருவயிறு, உந்திச்சுழி இவற்றைத் தியானித்ததாகும்.

220. குதிரை மாவொடு தேர்பல குவிந்(து)
ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார்
மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே.

தெளிவுரை : குதிரை யானை இவற்றோடு தேர்கள் பல ஒன்று சேர்ந்து நெருங்குகின்ற தில்லையில் பூங்கொம்பை ஒத்த மகளிரொடு இனிய இசைப் பாடல்களைப் பாடுகின்ற அடியார் மகிழ்ந்து துதிக்கின்ற சிற்சபையில் எழுந்தருளியவனும், ஒலிக்கும்படி கட்டப்பெற்ற வீரக்கழல்களை அணிந்த நீண்ட கால்களை வீசிநின்று அழகாக நடனம் செய்கின்றவனுமான நடராசப் பெருமான்மீது விளங்குகின்ற திரு அரைப்பட்டிகைகள் என் மனத்தினுள் வந்து அதனைத் தம் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டன. இது உதர பந்தனத்தைத் தியானித்தது. உதர பந்தனம் ஆடவர் அணியும் அரைப்பட்டிகை.

221. படங்கொள் பாம்பணை யானொடு பிரமன்
பரம்பரமா ! அருளென்று
தடங்கையால் தொழவும்
தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
வினையேனை மெலிவித்தவே.

தெளிவுரை : படத்தை உடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலுடனே பிரமனும் நின்னை நோக்கி, மிகவும் மேன்மை பொருந்தியவனே ! எங்கட்கு அருள் புரிவாயாக என்று பெரிய கைகளால் கூப்பி வணங்கவும், அவர்கட்கு அருள் புரியாமல் அக்கினியைக் கையிலேந்தி ஆடுகின்ற சிற்றம்பலத்தை உடைய நடராசப் பெருமானின் பெரிய திருக்கைகள் நான்கும், அந் நான்கு திருக்கைகளுக்கும் உரிய நான்கு திருத்தோள்களும் பொருந்திய அகன்ற திருமார்பில் உள்ள ஆபரணங்களுக்கு மேற் பக்கத்தில் அமைந்த விடம் பொருந்திய திருக்கழுத்தும் அல்லவா? தீவினை உடையேனாகிய என்னை வருந்தச் செய்தன. இது திருக்கைகளையும் திருத்தோள்களையும் திருமார்பையும் திருநீலகண்டத்தையும் தியானித்தது.

222. செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று
மகிழ்ந்தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும்
திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
அடியேனை ஆட்கொண் டனவே.

தெளிவுரை : சிவந்த வரிகளுடன் கூடிய தாமரை மலர்கள் பொருந்திய தடாகங்கள் சூழப்பெற்ற தில்லைப்பதியில் உள்ள பெருமை வாய்ந்த மூவாயிரம் அந்தணர்கள் வணங்கா நிற்க, உலகத்திலுள்ள ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு நின்று அகமகிழ்ந்து ஆனந்த நடனம் ஆடுகின்ற சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப் பெருமானுடைய சிவந்த திருவாயினிடத்துத் தோன்றும் பற்களும், விளங்குகின்ற அழகிய திருக்காதுகளும், அத் திருக்காதுகளில் திகழும் மாத்திரை என்னும் அணிகளும் அழகான திருத்தோடும் அல்லவா, அடியேனாகிய என்னை ஆட்கொண்டன! இங்கு முறுவல், காதுகள், மாத்திரைகள், தோடு இவற்றைத் தியானித்ததாகும். மாத்திரை ஒருவகைக் காதணி.

223. செற்றவன் புரந்தீ எழச்சிலை
கோலி ஆரழல் ஊட்டினான்அவன்
எற்றி மாமணிகள்
எறிநீர்த் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு
மலரும் திருமுக மும்முகத்தினுள்
நெற்றி நாட்டம் அன்றே
நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.

தெளிவுரை : வலிமை மிக்க முப்புரங்களையும் தீயெழுந்து அழிக்கும் பொருட்டு மேருமலையாகிய வில்லை வளைத்துத் தணிக்க முடியாத பெருந்தீயை உண்ணும் படி செய்தவனும், பெருமை பொருந்திய இரத்தின மணிகளை அலையினால் வாரி எறிகின்ற நீர் நிலைகள் சூழ்ந்த தில்லையில் எழுந்தருளியவனுமான பொன்னம்பலவனது அழகிய இரண்டு ஒளிவீசும் விழிகளோடு மலர்ந்த திருமுகம் அம்முகத்தினுள் அமைந்த நெற்றிக் கண்ணும் அல்லவா, என் மனத்தினுள்ளே பதிந்து இருக்கின்றன !

224. தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக்
கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள்
மடைபாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ்
அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே
பிரியா(து) என்னுள் நின்றனவே.

தெளிவுரை : பசுக்கள் சிறந்த தாமரை மலர்களை மிதித்துத் துவைக்கவும், கரும்பினது நல்ல சாறானது வயல்களில் கலக்கவும், கயல் மீன்கள் மனக் குழப்பத்தோடு மடைகளில் பாய்கின்ற செழிப்பு மிக்க தில்லைப் பதியில் எழுந்தருளிய நடராசப் பெருமானது முறுக்கப்பட்ட பூமாலைகளோடு தோன்றிய அகத்தி மொட்டும் ஊமத்தை மலரும் பிறைச் சந்திரனும் ஆகிய இவற்றுடன் கூடிய திருவடி அல்லவா என்னை விட்டு அகலாமல் என் மனத்துள் வந்து நிலைத்து நின்றன.

இது திருமுடியைத் தியானித்தது. தொறுக்கள் பசுக் கூட்டங்கள்.

225. தூவி நீரொடு பூஅவை தொழு(து)
ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி
அமர்ந்தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக்
கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள்
விடையான்அடி மேவுவரே.

தெளிவுரை : நீரினால் அபிடேகம் செய்து, மலர்களினால் அர்ச்சித்து, வணங்கித் துதிக்கும் கையினை உடையவர்களாய் மேலானதாகிய ஒப்பற்ற சுவாசத்தை உள்ளே நிறுத்தி, மிக மனம் விரும்பி உருகிய அன்புடையவர்களாய்த் தேவர்கள் வணங்க, ஆனந்தக் கூத்து ஆடிய தில்லையில் எழுந்தருளிய நடராசப் பெருமானைத் திருவாலியமுதனார் புகழ்ந்து பாடிய இப் பாடல்கள் பத்தினையும் துதிக்க வல்லவர்கள் இடப வாகனனாகிய சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள்.

நீரொடு பூ அவை தூவி என மாற்றுக.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் பவளமால்வரை

திருச்சிற்றம்பலம்

226. பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.

தெளிவுரை : பெரிய பவள மலையைப் பனி மூடினாற் போன்ற தாகிய ஒப்பற்ற பரவிய ஒளியை வீசும் திருவெண்ணீறும், சிறந்த குவளை மலர் மாலையும், கொன்றை மலர்மாலையும் நெருங்கிய பொன்னிறமான முடிக்கப்பட்ட திருச்சடையை உடையவனும், வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகள் சூழ்ந்த தில்லையில் திருநடனம் செய்கின்ற வெண்ணீறு பூசியதால் வெண்ணிறம் பொருந்தியவனும் ஆகிய சிவபெருமானை நினைக்கும் போதெல்லாம் என் மனமானது நெருப்பிலிட்ட மெழுகுபோல் உருகுகின்றது.

முதலடி சிவபெருமானது சிவந்த திருமேனியில் திருவெண்ணீறு பூசிய திருக்கோலத்தைக் குறிப்பிட்டதாகும். இது உவமையணி.

227. ஒக்க ஓட்டந்த அந்தியும்
மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப்
பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு
தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன்
மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.

தெளிவுரை : ஒருசேர ஓடி வந்த மாலைக் காலமும் சந்திரனும் அலைகளை உடைய கடல் ஒலியும் சேர்ந்து நெகிழ்ந்து விழுகின்ற என் மனத்தில் தாக்குதலும், கற்பின் வரம்பு கடந்திருக்கின்ற என்மீது, செந்நிற ஒளிவீசும் மாளிகைகள் சூழ்ந்துள்ள தில்லையில் எழுந்தருளிய கூத்தப்பெருமான் அழகிய ஆனந்த நடனத்தைச் செய்கின்ற விதத்தினால் பக்கத்தில் ஓடி வந்த மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் தைக்குந் தோறும் நான் மிக வருந்தினேன்.

228. அலந்து போயினேன் அம்பலக்
கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
காலனை உயிர்செக வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
மேலொற்ற வந்தருள் செய்யாயே.

தெளிவுரை : அழகிய தில்லையை ஆட்சி புரிகின்ற அரசே ! பொன்னம்பலத்தில் நின்று நடனம் புரியும் பெருமானே ! தனக்குத் தொண்டு செய்த சிலந்திப் பூச்சியை நோக்கிச் சோழனாகப் பிறந்து அரசாள் வாயாக என்று அருள் புரிந்த தேவதேவே ! எங்கும் இருப்பவனே ! அடியவன் மிகவும் துன்பமடைந்து வருந்தி நிற்கின்றேன். துன்பமடைந்த மார்க் கண்டனுக்காக அந்த யமனை உயிர் நீங்கும்படி உதைத்தருளிய பரவிய உனது பாதங்கள் என் அழகிய கொங்கையின் மீது ஒற்றுமாறு வந்து அருள் செய்வாயாக.

229. அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
பொன்பயப் பிப்பது வழக்காமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத்
திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.

தெளிவுரை : அழகிய தில்லையை ஆளுகின்ற அரசே ! உயிர்களுக்குத் திருவருளைச் செய்து திருநடனம் புரிகின்ற நல்ல சிற்றம்பலத்தில் நடிக்கும் பெருமானே ! திரண்டு ஓடி வரும் நீண்ட இரத்தின மணிகளை உடைய கங்கா நதியை அழகிய சடையில் முடித்து வைத்தருளி, அந்தச் செம்மையானவளாகிய உமாதேவிக்குத் தம் வடிவில் ஒரு பாதியையும் கொடுத்து நல்ல அழகிய தீயை (அக்கினியை) சிறந்த நெற்றியில் கண்ணாக வைத்தருளியவனே ! என்னை மயக்கி அழகிய கொங்கைகளின்மேல் பொன்னிறங் கொண்ட தேமலை உண்டு பண்ணச் செய்தது நீதியோ?

230. வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந்(து) இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட
என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.

தெளிவுரை : சிவபெருமான் பாதாளம் ஏழின் கீழே வைத்த திருவடிகளைத் திருமாலானவன் இன்னும் தேடிக் காணப் பெற்றிலன். தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் பிரமதேவன் சிவபெருமானின் திருமுடியைத் தேடிக் காணப் பெறாமையால் களைப்புற்றுத் திரும்பிப் பூமியில் இறங்கி வந்து அழகிய வேதங்களைக் கொண்டு, இன்னமும் துதித்துக் கொண்டிருக்கின்றான். பசுமையான வயல்களிடத்துத் தாமரை மலர்கள் மலர்ந்து விளங்குகின்ற தில்லையில் எழுந்தருளிய நடராசப் பெருமானைப் பக்தியுடன் சென்று வணங்க, என் மனமானது பதைபதைத்து நிற்றலிலிருந்து நீங்காது.

231. தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து
அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை
வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர்
தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள்
காண்பதோர் மனத்தினை உடையேற்கே.

தெளிவுரை : நான்கு வேதங்களை நன்கு ஆராய்ந்த அந்தணர் வாழ்கின்ற தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்துள் நின்று நடனம் ஆடுகின்ற சிவபெருமானது தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளைத் தரிசிக்க வேண்டும் என்பதாகிய ஒப்பற்ற கருத்தினை உடைய என்மீது, வெள்ளிய கிரணங்களை வீசும் சந்திரன் மெலிந்து உடல் வெளுத்து வளைந்து பாம்புக்குப் பயந்து தான் இருந்தாலும், கோபித்து வந்து வந்து என்னைத் துன்புறுத்தி நெருப்பை வீசுகின்றான்.

232. உடையும் பாய்புலித் தோலும்நல்
அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங்
கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும்
வயல்தில்லை அம்பலத்(து) அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று
ஆரையும் உள்ளுவது அறியேனே.

தெளிவுரை : சிவபெருமான் அணியும் ஆடையானது பாய்கின்ற புலியினது தோலும் நல்ல பாம்புமே ! அவர் உண்ணும் உணவாவது பிச்சைச் சோறே ! அவர் ஏறிச் செலுத்துவது இடபமே ! அவர் எழுந்தருளியிருக்கும் இடம் கொடுமை மிக்க மலையே ! இவ்வாறு இருந்தாலும் என் மனமானது நீர் மடையில் ஓடி வருகின்ற வாளை மீன்கள் தாவிக் குதிக்கின்ற வயல்களை உடைய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் நின்று மழுவேந்தி நடனமாடும் என்னை அடிமையாக உடைய இறைவனை அல்லாமல் வேறு ஒருவரையும் நினைத்தலை நான் அறியேன்.

233. அறிவும் மிக்கநல் நாணமும்
நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு
தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன்
ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர்
ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.

தெளிவுரை : சிதம்பரத் தலத்தின் கண் நான்கு வேதங்களாலும் தில்லைவாழ் அந்தணர்கள் துதிக்கச் சிறந்த திருநடனம் செய்தலை விரும்புகின்ற ஈசனே ! தற்போதத்தையும், மிகுந்த நல்ல நாணத்தையும், மன அடக்கத்தையும், பொருளின் மீது ஆசையையும் இங்குள்ள உறவினரையும், என்னைப் பெற்றெடுத்த நல்ல தாயையும் தந்தையையும் உடன் பிறந்தாரையும் நான் பிரியுமாறு விடுத்து விட்டு உன்னையே அடைக்கலமாக அடைந்துள்ளேன். ஆதலால், என்னை ஏற்றுக் கொள்வாயாக.

புலி இங்கு வியாக்கிரபாதர். பிரிய என்பது எதுகை நோக்கிப் பிறிய என நின்றது.

234. வான நாடுடை மைந்தனே !
ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய
படர்சடைப் பால்வண்ண னேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு
தில்லையுள் திருநடம் புரிகின்ற
ஏன வாமணிப் பூணணி
மார்பனே ! எனக்கருள் புரியாயே.

தெளிவுரை : தேன் கூடுகள் மிகுந்த சோலைகள் சூழ்ந்த தில்லையில் திருநடனம் செய்கின்ற, பன்றிக் கொம்பாகிய அழகிய ஆபரணத்தை அணிந்த திருமார்பை உடையவனே ! சிவலோகத்தைத் தனது நாடாக உடைய வலிமை வாய்ந்தவனே ! ஓ என்று முறையிடுவேன். நீ வந்து அருள்புரிவாயா என்பேன். பால், நெய், தயிர் முதலிய பஞ்சகௌயத்துடன் அபிடேகம் செய்யப் பெற்ற விரிந்த சடையையும் விபூதி பூசியதால் பால் போன்ற வெண்ணிறத்தையும் உடையவனே ! என்பேன். ஆதலால், எனக்கு நீ விரைந்து அருள் செய்வாயாக.

235. புரியும் பொன்மதில் சூழ்தரு
தில்லையுள் பூசுரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
காதலித்(து) இனையவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
பரமன(து) அடியிணை பணிவாரே.

தெளிவுரை : யாவரும் விரும்பும் அழகிய மதில் சூழ்ந்த தில்லைவாழ் அந்தணர் பலர் துதிக்க, மழுவேந்தி நடனம் ஆடுகின்ற எமது இறைவனிடம் அன்பு கொண்டு வருந்தியவளான தலைவி கூறிய மொழிகளாக, மலைகளைப் போன்று உயர்ந்து பருத்த மதில்களால் சூழப்பட்ட மயிலை என்னும் நகருக்குத் தலைவனும், வேதங்களில் வல்லவனுமான திருவாலி அமுதன் என்பவன் செய்த துதிப்பாடல்களாகிய இப் பத்துப் பாடல்களையும் ஓதி இறைவனைத் துதிக்க வல்லவர், சிவபெருமானுடைய இரண்டு திருவடித் தாமரைகளை அடைந்து என்றும் பணிந்து இருப்பவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

3. கோயில் அல்லாய்ப் பகலாய்

திருச்சிற்றம்பலம்

236. அல்லாய்ப் பகலாய் அருவாய்
உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை
மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு)
அருளித் தேவன் ஆடுமே.

தெளிவுரை : இரவாகி, பகலாகி, அருவாகி, உருவாகி, தெவிட்டாத அமுதமாகி இருப்பதோடு கல்லால் மர நிழலில் இருப்பவனே ! கயிலை மலையை உடையவனே ! யாம் காணும்படி அருள் செய்வாயாக என்று பதஞ்சலி முனிவர் போன்ற பல்லாயிரம் சிவனடியார்கள் துதிக்கத் தம் இடத்தினின்றும் வெளிப்பட்டு நின்று மேகங்கள் தவழ்கின்ற மதில்களை உடைய தில்லைப்பதியிலுள்ள அன்பருக்கு அருள் செய்து தேவதேவனாகிய சிவபெருமான் திருநடம் புரிகின்றான். தில்லையைத் தரிசிக்க முத்தி என்றபடி அன்பர்கள் இறைவனின் திருநடனத்தைக் கண்டு களிப்பதே முத்தியாம்.

237. அன்ன நடையார் அமுத
மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
காண விகிர்தன் ஆடுமே.

தெளிவுரை : அன்னம் போன்ற மென்மையான நடையினையும் அமுதம் போன்ற இனிய சொற்களையும் உடைய மாதர்கள் வாழும் தில்லையில் அழகிய நல்ல தமிழும் இனிய இசையும் கலந்த சிற்றம்பலத்தில் பொன்னும் மணியும் நிறைந்துள்ள இடத்தில் புலித்தோலைப் பிடரின்மேல் தரித்து மின்னற் கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமாதேவியார் காணுமாறு விகிர்தனாகிய இறைவன் திருநடம் புரிகின்றான்.

238. இளமென் முலையார் எழில்மைந்
தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர
மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர்
போற்ற அழகன் ஆடுமே.

தெளிவுரை : இளமையும் மென்மையும் பொருந்திய கொங்கைகளை உடைய மகளிர் அழகிய இளைஞனுடன் அழகு மிகுந்த படுக்கையின் மேலே இருந்து இன்பம் அனுபவிக்கின்ற செல்வம் நிறைந்த மாளிகை சூழ்ந்த தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்துள் அளவற்ற பெருமையினை உடைய தேவர்கள் துதிக்க, உயர்ந்த பொன் மலையினுள் வயிரமலை இருந்தது போல் அழகனாகிய இறைவன் தமது வலக்கையினை வளைத்து நின்று ஆடுகின்றான். கவித்தல் என்றது அபயமாகக் காட்டுதலை.

239. சந்தும் அகிலும் தழைப்பீ
லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
நட்டம் நாதன் ஆடுமே.

தெளிவுரை : சந்தன மரம், அகில் மரம், தழைத்த மயில் தோகை, சாதிக்காய் மரம், பலா மரம் ஆகிய இவற்றைத் தள்ளிக் கொண்டு மலை மீதிருந்து கீழ் இறங்கி ஓடி வருகின்ற நிவவு நதியின் தென்கரையில் திகழும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த நினைத்தற்கரிய தெய்வத்தன்மை பொருந்திய தில்லைப்பதியில் திகழும் திருச்சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் மத்தளம் கொட்ட நடராசப் பெருமான் திருநடம் புரிகின்றான்.

240. ஓமப் புகையும் அகிலின்
புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த
பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள்
சூடித் தேவன் ஆடுமே.

தெளிவுரை : ஓமம் செய்வதால் ஏற்படும் புகையும், மகளிர் கூந்தலுக்கு அகிற் கட்டையை எரிப்பதால் உண்டாகும் புகையும் மேல் எழுந்து மேகங்களின் மீது படிய, ஓமாக் கினியை வளர்க்கும் உண்மைத் தொழிலை உடைய வேதியர்கள் நிறைந்த தில்லையில் இடப் பக்கத்து அழகு மிக்க அநுக்கிரகமாகிய தொழிலைச் செய்யும் எடுத்த பாதத்தில் (குஞ்சித பாதத்தில் ) மென்மையான ஓசையை உடைய சிலம்பு ஒலிக்க நெருப்பைப் போலச் செந்நிறமான ஒளி வீசும் சடை மேல் பிறைச்சந்திரனை அணிந்து எம்பெருமான் திருநடம் புரிகின்றான். இறைவன் வலத் திருவடியை ஊன்றியும், இடத் திருவடியைத் தூக்கியும் நடனம் செய்தல் அறிக.

241. குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்
டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே.

தெளிவுரை : குரவ மலரும் குளிர்ந்த புன்னை மலரும் தாழை மலரும் குவிந்து கிடக்கும் கரைகளின் மேல் கடல் அலைகள் வந்து உலாவப் பெற்ற தில்லையில் அழகு நிறைந்த சிற்றம்பலத்தில் மலை போல உயர்ந்து பொருந்திய இரத்தின மணி மண்டபத்துள் அந்தணர்கள் மகிழ்ந்து துதிக்க, திருமேனியில் அணிந்த பாம்புகள் ஆடவும், மழுவைக் கையில் ஏந்திக் கொண்டு அழகனாகிய எம்பெருமான் திருநடம் புரிகின்றான்.

242. சித்தர் தேவர் இயக்கர்
முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா ! அருளாய் அணியம்
பலவா ! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த
தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ
நட்டம் குழகன் ஆடுமே.

தெளிவுரை : சித்தர்கள், தேவர்கள், இயக்கர்கள், முனிவர்கள் ஒன்று கூட, தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையில் வீற்றிருக்கும் அத்தனே ! அழகிய பொன்னம்பலத்தில் எழுந்தருளி யவனே ! எங்கட்கு அருள் புரிவாயாக என்று பலமுறை கூறி, அவர்கள் துதிக்க, முத்துக்களும் மற்றைய மணிகளும் கலந்து நிறைந்துள்ள சிற்சபையாகிய அரங்கத்துள் வெள்ளிய இளம்பிறைச் சந்திரனைத் தரித்துப் பூங்கொத்துக்கள் நிறைந்த சடைகள் தொங்க அழகனாகிய இறைவன் திருநடம் புரிகின்றான்.

243. அதித்த அரக்கன் நெரிய
விரலால் அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்கும்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக்
கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள
மேனிப் பரமன் ஆடுமே.

தெளிவுரை : கயிலை மலையைத் தூக்கும் பொருட்டு ஆரவாரித்த இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு நெரியும்படி விரலால் ஊன்றி நெருக்கியவனே ! அருள் புரிவாய் என்று அந்தணர்கள் பலவாறு துதித்து வணங்குகின்ற திருச்சிற்றம்பலத்தினுள் உதய காலத்தில் தோன்றும் இளஞ் சூரியக் கிரணம் போல் சிவந்த ஒளியை வீசும் பெரிய இரத்தின மணிகள் எங்கும் பதிக்கப் பெற்றுள்ள அரங்கத்தில் பவளம் போன்ற சிவந்த திருமேனியை உடைய மேலான எம்பெருமான் திருநடம் புரிகின்றான்.

244. மாலோ(டு) அயனும் அமரர்
பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே !
அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள்
தாழப் பரமன் ஆடுமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேவர்கள் தலைவனாகிய இந்திரனும் வந்து வணங்கி நின்று, விடத்தைக் கண்டத்தில் உடையவனே ! பாவங்களை அழிப்பவனே ! எங்களுக்கு அருள்புரிவாய் என்று பலமுறை எடுத்துக் கூறி, அவர்கள் துதிக்க, கெண்டை மீன்கள் துள்ளிக் குதிக்கின்ற வயல்கள் நிறைந்த தில்லைச் சிற்றம்பலத்தில் நின்று, பாலினால் அபிடேகம் செய்யப் பெற்ற திருமுடியிலுள்ள சடைகள் தொங்கி ஆட உயர்ந்தோனாகிய எம்பெருமான் திருநடம் புரிகின்றான்.

245. நெடிய சமணும் அறைசாக்
கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆரூர்
நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய
கோலக் குழகன் ஆடுமே.

தெளிவுரை : சமணர்களும் புத்தர்களும் அறிவு நிரம்பாத பல கோடிக்கணக்கான குற்றம் பொருந்திய தவத்தைச் செய்பவர்களும் அடைய முடியாத தில்லைச் சிற்றம்பலத்தினுள் எழுந்தருளிய சிவபெருமானை நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பண் இசையுடன் பதிகங்கள் பாட இடபக்கொடியும் இடபவாகனமும் கொண்ட அழகும் இளமையும் உடையோனாகிய சிவபெருமான் திருநடம் புரிகின்றான்.

246. வானோர் பணிய மண்ணோர்
ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை
மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத
வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும்
பாடப் பாவ நாசமே.

தெளிவுரை : தேவர்கள் வணங்கவும், உலகத்தவர்கள் துதிக்கவும் நிலையாகத் திருநடம் புரிகின்ற தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளம் நிறைந்த தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய சிவபெருமானைத் தூய்மையான நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர் குலத்தில் வந்த திருவாலிஅமுதனர் சொன்ன பால்போலும் இனிய தமிழ்மாலைப் பாடல்கள் பத்தினையும் பாடினால் பாடுவோரது பாவங்கள் யாவும் அழியும்.

திருச்சிற்றம்பலம்

4. கோயில் கோலமலர்

திருச்சிற்றம்பலம்

247. கோல மலர்நெடுங்கண்
கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
என்றுகொல் காண்பதுவே.

தெளிவுரை : அழகிய செந்தாமரை மலர்போன்ற நீண்ட கண்களையும், கோவைக் கனி போன்ற வாயினையும், பூங்கொடி போன்ற அழகிய இடையையும் உடைய பெண்களே ! பால் போலும் சுவையுள்ளவனை, அமுதம் போலும் இனியவனை, மேலாகிய பேரொளி யுடையவனை, கெண்டை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பெருமை பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்துள் எழுந்தருளியுள்ள எனது சிவபெருமானை யான் தரிசிக்கப் பெறுவது எந்நாளோ?

248. காண்பதி யான் என்றுகொல்
கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று)
அறிதற்(கு)அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய்
மறையோன்மலர்ப் பாதங்களே.

தெளிவுரை : ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கத்தை ஒத்தவனும் நெருப்பை ஒத்தவனும் ஆண் என்றும் பெண் என்றும் அருவம் என்றும் உருவம் என்றும் அறிதற்கு அருமை யானவனும் ஆகிய உயர்ந்து பருத்த மாளிகைகள் சூழ்ந்த பெருமை வாய்ந்த தில்லைச் சிற்றம்பலத்தில் பெருமையுடைய அழகிய திருநடனம் புரிகின்றவனும் வேதியர்களில் (மூவாயிரவர்களில்) ஒருவரான நடராஜப் பெருமானின் தாமரைகள் போன்ற திருவடிகளை யான் தரிசிக்கப் பெறுவது எந்நாளோ?

249. கள்ளவிழ் தாமரைமேல்
கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே
உருவாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற
ஒருவனை உணர்வரிதே.

தெளிவுரை : தேன் ஒழுகும் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரமதேவனொடு திருமாலும் கண்டு வணங்க, ஒளி வீசும் அக்கினியின் நடுவே உருவம் உடையவராய்ப் பரவி உயர்ந்த சிறப்பினை உடைய தெளிவான குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த பெருமை பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்தில் அழலேந்தி கூத்தாடுகின்ற ஒப்பற்ற எம்பெருமானை உணர்தல் அருமையாகும்.

250. அரிவையோர் கூறுகந்தான்
அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
எம்பிரான்என் இறையவனே.

தெளிவுரை : உமாதேவியைத் தன் இடப் பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனும், அழகியவனும், அழகிய பெரிய யானையின் தோலை உரித்து நல்ல மேலாடையாக விரும்பிப் போர்த்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும், தன்னை விரும்புகின்ற அடியவர்களுக்கு இனிய அருளைச் செய்கின்றவனுமான புலியூராகிய தில்லைச் சிற்றம்பலத்தில் அனலை ஏந்தி மகிழ்ந்து ஆனந்த நடனம் ஆடுகின்ற எம்பெருமானே எனது தலைவனாவான்.

251. இறைவனை என்கதியை
என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
நினைத்தேன் இனிப் போக்குவனே.

தெளிவுரை : எனது கடவுளை, எனக்குப் புகலிடமாக இருப்பவனை, என் உடம்பினுள் உயிர் மூச்சாகி மறைந்துள்ளவனை, பூமியிலும் வானிலும் நிறைந்த மேலான ஒளியாய் இருப்பவனை, பெருகித் தோன்றிய சிறகுகளை உடைய அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற சிறந்த தில்லைச் சிற்றம்பலத்தில் நிறைந்த பேரழகாய் இருக்கும் சிவபெருமானை நான் இடைவிடாமல் தியானிக்கின்றேன். என் மனத்தில் வந்து தோன்றிய அவனை இனிப் போக விடுவேனோ? விட மாட்டேன்.

252. நினைத்தேன் இனிப்போக்குவனோ?
நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த
மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக்
கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியும்
தில்லைமாநகர்க் கூத்தனையே.

தெளிவுரை : பரிசுத்தமாய் விளங்குபவனை, இடைவிடாது நினைப்பவர் மனத்தினுள்ளே வீற்றிருக்கும் இரத்தின மணி போன்றவனை, அழகிய மாணிக்கம் போலத் திகழ்பவனை, வயல்களில் சப்தமிட்டுக் கொண்டு பாயும் நீரானது பொன்னையும் ஒளிவீசும் சிறந்த பவளத்தையும் கோபத்தோடு வந்து எறிவது போல வீசி எரிகின்ற சிறந்த தில்லையில் எழுந்தருளிய நடராசப் பெருமானை நான் இடைவிடாமல் நினைக்கின்றேன். இனி அவனை என் மனத் தினின்றும் போக விடுவேனோ? விடமாட்டேன்.

253. கூத்தனை வானவர்தம்
கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவுருவின்
முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும்
அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற
எம்பிரானடி சேர்வன்கொலோ?

தெளிவுரை : திருநடனம் புரிகின்றவனும், தேவர்களின் தலைவனும், இளையோனாய் யாவர்க்கும் முன்னே எழுந்து நின்ற பெரியோனும், பிரமன் திருமால் உருத்திரன் என்ற மூவர்க்கும் முதல்வனாய் நின்றவனும், முதன்மையாக நின்ற பசுத்தன்மையை (தற்போதத்தை) ஒழிக்கும் பொருட்டு யாகாதிகளைச் செய்யும் மூவாயிரம் அந்தணர்கள் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் உண்மையான பக்தர்கள் துதிக்க நின்று திருநடனம் செய்கின்ற எமது தலைவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளை எப்பொழுது அடைவேனோ?

254. சேர்வன்கொலோ அன்னையீர்
திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி
அணிநீ(று)என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன்
எம்பிரான் என்பால் நேசனையே.

தெளிவுரை : அன்னைமீர் ! சிறந்த மரக்கலங்கள் வந்து சேரும் கடற்கரைப் பகுதியினைக் கொண்ட பெருமை பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியவனும் அழகிய அகங்கையில் மான் கன்றைப் பிடித்தவனும் எம்மை ஆண்டவனும் என்னிடம் அன்புடையவனுமான இறைவனது விளங்குகின்ற தாமரை மலர் போன்ற பாதங்களை யான் அன்பு பெருகத் தழுவி அவர் அணிந்துள்ள திருநீறு என் முலைகள் மீது படியும் பொருட்டு அவரை அடையும் பேறு பெறுவேனோ?

255. நேசமு டையவர்கள்
நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர்
கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும்
எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.

தெளிவுரை : சிவபக்தி உடையவர்களது நெஞ்சினுள்ளே குடிகொண்டு வீற்றிருக்கின்ற மிக்க கோபமுடைய பெரிய இடபத்தின்மீது ஏறிச் செல்கின்ற நெற்றிக்கண்ணை உடையவனும், அழகும் சிறப்பும் வாய்ந்த நாட்டில் மிகுந்த புகழைப் பெற்ற பெரியோர்கள் வாழ்கின்ற சிறந்த தில்லைப் பகுதியில் எழுந்தருளிய ஈசனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனுமாகிய கடவுள் எமது சிவபெருமானே என்று யான் துதிப்பேன்.

256. இறைவனை ஏத்துகின்ற
இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
மகிழ்ந்தேத்துக வானெளிதே.

தெளிவுரை : சிவபெருமானைப் போற்றுகின்ற காதல் கொண்ட இளம் பெண்ணினது சொற்கள் போன்று, இனிய தமிழ்ப் பாடல்களால் வேதங்களில் வல்ல புலவர் களாகிய வேதியர்கள் மகிழ்ந்து துதிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து, உழவர்களின் ஆரவார ஒலி எழுகின்ற செந்நெல் வயல்களாலும் பெரிய கரும்புகளை அறைக்கும் அழகிய ஆலைகளாலும் சூழப் பெற்றுள்ள திருமயிலையில் வாழும் வேதங்களில் வல்ல அந்தணராகிய திருவாலிஅமுதனார் உரைத்த சொல்லால் மகிழ்ந்து துதியுங்கள். துதித்தால் சிவலோகம் எளிதில் கிடைக்கும்.

8. புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா

1. கோயில் வாரணி

திருச்சிற்றம்பலம்

257. வாரணி நறுமலர் வண்டு கிண்டு
பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்
ஆவியின் பரம்என்றன் ஆதரவே.

தெளிவுரை : வண்டுகள் ஒலிக்கும் தேன் ஒழுகுகின்ற அழகிய நறுமண மலர்களும், அழகிய செண்பக மலர் மாலையும், மாலைக் காலமும் ஆகிய இவை கச்சணிந்த அழகிய என் முலைகள் மெலிந்து போகுமாறு பலகால் வந்து நம்மை மயங்கச் செய்யும். சிறப்பும் அழகும் பொருந்திய இரத்தினங்கள் பதிக்கப் பெற்றுத் திகழும் மாளிகைகள் உயர்ந்து விளங்கும் தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய கூத்தப் பெருமான் அருள்புரிய வரமாட்டான். என்மீது கருணை கொண்டு என்னை அஞ்சாதே என்று சொல்கின்றவர் யாவர் உள்ளனர்? ஒருவரும் இல்லை. என் உயிர்க்குப் பாதுகாப்பாய் உள்ளது எனது அன்பு ஒன்றேதான். ஆதரவு விருப்பம்; காதல் அஃது என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை.

258. ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட்( டு) அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவேபோய்ப்
பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார்
அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே !

தெளிவுரை : தில்லைச் சிற்றம்பலத்தில் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஆனந்தக் கூத்து ஆடுகின்ற எம்பெருமானே! என் உயிர்க்குப் பாதுகாப்பாய் இருக்கும் எனது பாசமும், கொடு வினையேனாகிய என்னை விட்டுவிட்டு நீங்க, பாவியேனுடைய வன்மையான மனமானது மெல்லவே போய்க் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைத் தரித்த சடையை உடைய சிவபெருமானிடத்துச் சேர்கின்றது. இஃது என்ன அதிசயம் ! வேறு ஆதரவு ஒன்றும் இல்லாமையால் ஏற்பட்ட சோர்வும் மன உருக்கமும் மன உறுதியின் அழிவும், மனத்தின் தன்மையும் உயிருக்கு உண்டான துன்பமும் ஆகிய இவற்றை யார் அறிவார்கள்.

259. அம்பலத் தருள்நடம் ஆடவேயும்
யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர்முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும்உய்யேன்
வன்பல படையுடைய பூதஞ்சூழ
வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலமை தீரும்வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே !

தெளிவுரை : எம்பெருமானே ! நீ தில்லையம்பலத்தில் ஆன்மாக்களுக்கு அருள் வழங்கும் ஆனந்த தாண்டவத்தைச் செய்து கொண்டிருக்கக் கண்டும், முற்காலத்தில் தேவர்களாகிய வலிய பழிகாரர்கள் விடத்தை உண்ணச் செய்தார்கள் என்றும், என்ன தீங்கு நேருமோ என்றும் நினைந்து மனம் அச்சம் கொண்டு மிக்க துன்பத்தினால் பிழைக்கமாட்டேன்; ஆதலால் விடத்தை உண்ணச் செய்த தேவர் கூட்டங்களை அங்கேயே அழித்து எனது உடலில் மிகுதியாக அமைந்த பசலைத் தன்மை நீங்குமாறு எங்கள் வீதியின் வழியே வலிய பல படைக்கலங்களை ஏந்திய பூதங்கள் சூழத் திருவுலா எழுந்தருள்வாயாக.

260. எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்
கொழுந்தது வாகிய கூத்தனேநின்
குழையணி காதினில் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும்என் சிந்தைவெளவ
அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ?
அரும்புனல் அலமரும் சடையினானே !

தெளிவுரை : அருமையான கங்கை நீர் ததும்பும் சடையினை உடைய சிவபெருமானே ! எங்கள் வீதி வழியே பவனி வருவாயாக. குற்றமற்ற முனிவர்களிடத்தில் எழுந்த மெய்ஞ்ஞானம் கொழுந்தாகிய தில்லைக் கூத்த பெருமானே! குழை என்னும் ஆபரணத்தை அணிந்த உனது காதிலுள்ள மாத்திரையென்னும் அணிகலனும், நீர் நிறைந்த செழுமையான குளத்தில் தோன்றிய தாமரை மலரை ஒத்த மூன்று கண்களும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயும் என் மனத்தையும் கொள்ளை கொள்வதால் உயிர் துன்பத்தில் ஆழும். ஆதலால், என் அரிய உயிர்க்கு நேர்ந்த துன்பத்தைப் போக்க நான் யாது செய்வேன்?

261. அரும்புனல் அலமரும் சடையி னானை
அமரர்கள் அடிபணிந்(து) அரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சில்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

தெளிவுரை : தில்லை அம்பலத்தில் தோன்றிய எங்கள் தேவ தேவனே! பெரிய தடாகத்தில் பூத்த கருங்குவளை மலரை ஒத்த கரிய கண்டத்தை உடையவனே! அரிய கங்கை நீர் ததும்புகின்ற சடையினையுடைய உன்னைத் தேவர்கள் முற்காலத்தில் அடிபணிந்து அசுரர்களின் கொடுமைக்கு ஆற்றாது அழுது முறையிடத் திரிபுரத்தை எரித்தற்கு ஏந்திய மேருமலையாகிய உனது வில்லைப் போன்ற புருவத்தின் அழகினது புகழை நான் பேசவும் எனது பேதை மனம் வருந்தும். திருத்தமாக அமைந்த உனது தாமரை மலர் போன்ற திருவடி மீது கொண்ட விருப்பத்தினால் வளையல் அணிந்த மகளிரின் முன்பு எனது பெண்மைக் குணங்களை நான் இழந்து விட்டேன்.

262. தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோ(டு) இடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்
ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.

தெளிவுரை : தில்லை அம்பலத்தில் எழுந்தருளிய எங்கள் தேவ தேவனை, மெய்யாகிய இறைவன் என்று மனம் தெளிந்த மூவாயிரம் அந்தணர்கள் இடைவிடாமல் நினைக்கின்ற அளவினை உடையதாகிய அழகைக் கொண்ட ஒளி வடிவமானவனே! எனது உயிரைப் பாதுகாத்தலாகிய தொழிலை மேற்கொண்டிருக்கும் எனது தந்தையே! பற்களோடு கூடிய பசுமையாகிய தலை ஓட்டை ஏந்திக் கால் தடுக்கி உனது மெல்லிய தாமரை மலர் போன்ற திருவடி வருந்துமாறு நீ மயானத்திற்குச் சென்று இருளினில் அருமையாகிய திருநடனத்தை ஆடினால் இவ்விடத்தில் எங்களுடைய அரிய உயிரைக் காப்பாற்றுவது அரிதே ஆகும்.

263. ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே
அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றம் சாயக்
குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா!
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.

தெளிவுரை : தில்லையில் வாழ்கின்ற எங்கள் பெருமானே. இவ் வுலகத்தில் தனது அரிய உயிரைக் காப்பாற்றுதல் மிக அரியதாதலால் மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயர் உனது திருவடிகளைப் பூசித்து வணங்கக் கூரிய நுனி பொருந்திய சூலப்படையினை ஏந்திய இயமன் கீழே விழுமாறு ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த உனது திருவடித் தாமரைகளை வழிபடுதலாகிய பணியை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு உதைத்தது என்றால் உன்னைப் போல் உயிரைப் பாதுகாப்பவர் இனி வேறு யார் உளர்? ஒருவரும் இலர். தேவர்களும் குறை நீங்கியவர்கள் ஆனார்கள். அவரவர்கள் அடைகின்ற துன்பங்களை நீக்குவதற்காக முற்பட்டு நின்ற சிறந்த உயிர்க்கு உயிரானவரே ! மாதர் இனிக் காதலால் மாய்வதே அன்றி உயிர் வாழ்தல் அரிதாகும்.

264. சேயிழை யார்க்கினி வாழ்வரிது
சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரம் புலியதள் இன்னுடையும்
பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)
ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈச னேயோ.

தெளிவுரை : தில்லையில் எழுந்தருளிய ஞானச் செல்வம் உடைய எங்கள் பெருமானே! எங்களை அடிமையாக உடைய கடவுளே! மாதர் இனி உயிருடன் வாழ்தல் அரிதாகும். நீ தாயைக் காட்டிலும் நன்மை செய்வாய் என்று நான் உன்னைத் தஞ்சமாக அடைந்தேன். பெண்களின் தனிமையை நீ எண்ணிப் பார்க்கின்றாய் இல்லை. சுகத்தைச் செய்யும் இறைவனே! பாயும் தன்மையுடைய பெரிய புலியின் தோலாகிய உனது ஆடையையும் மெல்ல மேலே தூக்கிய அழகிய குஞ்சித பாதத்தையும் கண்டு காதல் மிகுதியால் ஐயோ! சங்கினாலாகிய கைவளையல்களை இவள் இழந்தாள்.

265. எங்களை ஆளுடை ஈசனையோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.

தெளிவுரை : எங்களை அடிமையாகக் கொண்ட இறைவனே! எனது இளமையாகிய கொங்கைகள் அழுந்த உன்னை அணைந்து உனது அழகிய தாமரை மலரை ஒத்த திருமுகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து உனது சடையின் மேலுள்ள குளிர்ச்சியான பிறைச் சந்திரனின் ஒளி என்மேல் பரவ, செவ்விய கயல்மீன்களைப் போன்ற கண்களையுடைய பிற பெண்களுக்கு முன்பாகத் தில்லைத் திருச்சிற்றம் பலத்தினுள் விரைந்து போய் அங்கே உனக்குரிய பல தொண்டுகளை நாடோறும் செய்து உன் திருவருளைப் பெற்றால் இந்த நிலவுலகத்தில் இன்பத்தோடு வாழ்ந்து இருக்கலாம்.

266. அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழிவுமையாள்
கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே?

தெளிவுரை : சிவபெருமானின் திருவருளைப் பெற்றால் உலகில் துன்பம் நீக்கி இன்பம் உற்றிருக்கலாம் என்று தேவர்களுக்குத் தலைவனான இந்திரனும், பிரமனும், திருமாலும், அறிவு நிறைந்தவர்களில் மேம்பட்டவராகிய பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவர்களும் இன்னமும் எங்கள் கூத்தனாகிய நடராசப் பெருமானைத் துதிக்கின்றனர். அஞ்சும் தன்மையும் மழலைச் சொற்களைப் போன்ற மென்மையான சொற்களைப் பேசும் தன்மையும் உடைய உமாதேவியாரது நாயகனிடம் கொடிய தீவினையாகிய கயிற்றினால் பிணித்து ஆட்டப்படுவேனாகிய நான் திருவருளைப் பெறும் பொருட்டு என் மனம் துன்புறுகின்றது. அந்தோ! ஆசையின் அளவை இவ்வளவென்று வரையறுத்துக் கூறுபவர் இவ் உலகில் யாவர் இருக்கின்றார்கள்? ஒருவரும் இலர்.

267. ஆசையை அளவறுத் தார்இங் காரே?
அம்பலத்(து) அருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை அணைவர் தாமே.

தெளிவுரை : ஆசை அளவின் எல்லையை வரையறுத்தவர் இவ் உலகில் யாவர் உளர்? ஒருவரும் இலர். ஆதலால், ஆசை மிகுதியினால் தில்லைச் சிற்றம்பலத்தில் அரிய ஆனந்த நடனம் புரியும் பெருமானை, நறுமணம் மிக்க நல்ல மலர்களை அணிந்த கூந்தலை உடைய பெண்கள் நாடோறும் கூடி நின்று ஆரவாரித்து எழும் மாலைக் காலத்துப் பேரொலியைக் கண்டு கூறிய, குற்றமற்ற வேதசாத்திரங்கள் பலவற்றை ஓதுகின்ற நாவினையுடைய சொல்வளமை பொருந்திய புரு÷ஷாத்தம நம்பியினது சொற்களாகிய மலர்களால் தொடுத்த மாலையான பாடல்களைக் கொண்டு இறைவனைத் துதிக்க வல்லவர்கள் மலையரசன் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய சிவபெருமானை அடைந்து இன்புறுவர். வைகலும் நாள்தோறும்; வாசக மலர்கள் சொற்களாகிய பூக்கள்.

திருச்சிற்றம்பலம்

2. கோயில் வானவர்கள்

திருச்சிற்றம்பலம்

268. வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?
தேனல்வரி வண்டறையும் தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.

தெளிவுரை : தேனை உண்ணும் நல்ல இசைப் பாட்டைப் பாடும் வண்டுகள் ஒலிக்கின்ற தில்லைச் சிற்றம் பலத்தில் எழுந்தருளிய பெருமான், நான் உறவுடையேன் என்று கருதாமல் திருநடனம் புரிகின்றார். மேலும், இந்திராதி தேவர்கள் வேண்டிக் கொள்ள மேன்மேலும் எழுந்து பெருகி வந்த ஆலகால விடத்தை உண்டு தேவர்களைப் பாதுகாத்த கருணையாளரான ஈசன், குற்றமில்லாத எனது கையில் அணிந்த ஒளி மிக்க வளையல்களைக் கழலச் செய்து எனக்குப் பெருந்துன்பம் விளைவிப்பாரோ?

269. ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.

தெளிவுரை : இந்திராதி தேவர்கள் தேடிக் காண இயலாது துதிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான், படம் எடுத்து ஆடும் கரிய பாம்பினையும் அழகிய பிறைச் சந்திரனையும் பசிய கொன்றை மலர் மாலையினையும் அணிந்து கொண்டு வருகின்ற விதத்தை நான் தரிசித்தேன். அப்போது அவ் ஈசர்மீது கொண்ட காதலால் என் தோள் வளையல்கள் கழன்று விழுந்தாலும் விழட்டும். அவர் திருநடனம் புரிந்து கொண்டு வரும் போது அவரது அருகிலே நிற்பதற்கும் இடங் கொடுக்க மாட்டார்கள் போல் இருக்கிறதே.

270. ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.

தெளிவுரை : பொருந்தி நில்லாத பகைக் குணத்தை உடைய அசுரர்களின் மூன்று மதில்களைக் கொண்ட திரிபுரத்தை ஓர் அம்பினால், அதாவது புன்சிரிப்பினால் நோக்கிய அவ் விடத்தே நெருப்பு உண்ணுமாறு அழியச் செய்து மகிழ்ந்த தன்மையரும் அந்தணர்களாகிய பெரியோர்கள் ஓதும் வேத ஒலி நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியவருமான நடராசப் பெருமான் மத்தள முழக்கத்துடன் திருநடனம் ஆட, அதனால் எனக்கு மையலை உண்டாக்கி எனது அழகிய கைவளையல்களைக் கழலச் செய்கின்றாரே.

271. ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே.

தெளிவுரை : சிறந்த தேர்த் திருவிழா நீங்காது நடக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமான் இல்லந்தோறும் பிச்சை ஏற்க வந்து ஏடி ! போருக்கு வருவாய் ! என்று அழைப்பதுபோல் புருவத்தை நெரிக்கின்றார். அதாவது, கண்வைத்து நோக்குகின்றார். அதனால் எனக்கு நீங்காத துன்பத்தைச் செய்கின்றவர்களை ஒத்து விளங்குகின்றார். நீங்களே இதனைப் பாருங்கள். யாவர்தாம் இத் துன்பங்களைச் சகிக்க வல்லவர்? ஒருவரும் இலர்.

272. காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேல் பூஅம்பால் காமவேள்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.

தெளிவுரை : மிக உயர்ந்த அழகிய உப்பரிகைகளைக் கொண்ட மாளிகைகள் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமான் எனது கைவளையல்களைக் கவர்ந்து கொண்டார். அப்போது அணிகலன்களைப் பூண்ட அழகிய எனது தனங்களின் மீது மலர்களாகிய அம்பினால் மன்மதன் ஆண்மையைச் செலுத்துகின்ற தன்மையைக் கண்டும் அவர் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாரே! இதனை நீங்களே பாருங்கள்.

273. ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்
வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.

தெளிவுரை : ஏ இங்குள்ள இவர் தேவர்களுக்கும் தேவர்; மகா தேவர் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இவரே எல்லார்க்கும் தாயும் தந்தையுமாய் விளங்குபவர் என்று சொல்லுவார்கள். பிறைச் சந்திரனைத் தரித்த தில்லையில் எழுந்தருளிய பெருமானின் வாய்மொழியாகிய வேதாகம சாத்திரங்களைப் பெரியோர்கள் மூலம் கேட்டறிந்து அதன்படி ஒழுகுபவர், உலகை ஆளும் அரசர் ஆவர்.

274. ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.

தெளிவுரை : அந்தோ ! தெய்வாம்சம் பொருந்திய வேதங்கள் முழங்குகின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானும் தமது திருவடியினாலே இயமனுடைய மூப்பு அடையாத உடலும் அழியுமாறு அவனை உதைத்துக் கொன்று மகிழ்ந்த முக் கண்களை உடையவருமான இவர், எனது கையில் அணிந்த வளையல்களைக் கவர்ந்து கொள்வாரோ !

275. என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்
மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.

தெளிவுரை : என்னைத் துன்புறுத்த வல்லவர் யார் என்று இறுமாந்திருந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணனது நிலையான தலைகள் பத்தையும் மலையின் கீழ்வைத்து நெறிபடச் செய்த உமாதேவியாரின் கணவரும் செந்நெல் விளைகின்ற வயல்களால் சூழப் பெற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானுமாகிய இம் முத்தர் இதற்கு முன்னர் தாம் கண்டறிந்தவர்போல இல்லை. தற்போது என்னைக் கண்டறியாதவர் போல நடிக்கிறார்.

276. முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.

தெளிவுரை : இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவரும் ஞானிகள் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியவருமான எம்பெருமான் கைகளை வீசி நின்று ஆடும்போது, என்மீது அருள் நோக்கம் வைக்காமல் இருக்கின்றார். நடுப்பகலில் வந்து எனது வீட்டிற்குள் புகுந்து அன்புடையவர்களே, பிச்சை இடுங்கள் என்று கூறி எங்கும் பார்க்கின்றார். ஆனால் என்னை மட்டும் பார்க்கவில்லை.

277. நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர் !

தெளிவுரை : ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! திருமாலுக்குச் சக்கரத்தை அளித்துத் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனைத் தண்டித்து இடபத்தின்மீது விரும்பி எழுந்தருளும் தில்லையில் உள்ள எம்பெருமான் நம்மைப் பார்க்காத காரணத்தால் நாமும் அவரைப் பார்க்கவில்லை என்று அவர் எண்ணியதால் அவர் நம் ஊருக்கே வந்து எனது வளையல்களைக் கழலச் செய்து கொண்டு போவாரோ?

இங்கு இறைவன் திருமாலுக்குச் சக்கரம் அளித்ததை அருளாகவும், பிரமனைத் தண்டித்ததை அழித்தலாகவும், இடபத்தின்மீது எழுந்தருளியதைக் காத்தலாகவும் கொள்க.

278. ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.

தெளிவுரை : அழகிய நெற்றியினை உடைய ஒரு தலைவி காரணமாகத் தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானைப் புருடோத்தம நம்பி பாடிய பண்ணோடு கூடிய அழகிய பத்துப் பாடல்களையும் கற்றுப் பக்தியினால் ஆடிப்பாடியவர்கள் சிவலோகத்தில் நன்கு மதிக்கப் பெற்று குதூகலத்துடன் வாழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

9. சேதிராயர் அருளிய திருவிசைப்பா

கோயில் சேலுலாம்

திருச்சிற்றம்பலம்

279. சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயன் சார்வதி னால்இவள்
வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று
மால தாகும்என் வாணுதலே.

தெளிவுரை : கெண்டை மீன்கள் உலாவுகின்ற வயல்கள் சூழ்ந்த தில்லையில் எழுந்தருளிய பெருமானே ! ஒளி பொருந்திய நெற்றியையுடைய எனது மகளாகிய இவள் உம்மை நீண்ட நாட்கள் உம் அருகில் சார்ந்து இருந்தமையால் பாற்கடலில் தோன்றிய விடத்தை நீர் உண்டு மகிழ்ந்தீர் என்று மயக்கத்தை அடைந்திருக்கின்றாள்.

280. வாணு தற்கொடி மாலது வாய்மிக
நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை
காணில் எய்ப்பிலள் காரிகையே.

தெளிவுரை : ஒளி வீசுகின்ற நெற்றியை உடைய பூங்கொடி போன்ற என் மகள் உம்மீது மையல்கொண்டு நாணம் முழுவதையும் இழந்து விட்டாள். இனி நான் என்ன செய்வதென்று அறியேன். வான் முகடு அளவும் உயர்ந்து விளங்கும் மாளிகைகள் சூழ்ந்த தில்லைப் பதியில் எழுந்தருளிய பெருமானே! உம்மைக் கண்டால் இப் பெண் துன்பம் நீங்கியவள் ஆவள்.

281. காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
கீரி யல்தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழலாள் இவள்விம்முமே.

தெளிவுரை : பெரிய மத மயக்கமுள்ள யானையின் தோலை இழுத்து உரித்து மேற்போர்வையாகக் கொண்டவரே ! மிக்க சிறப்பினையுடைய தில்லைப்பதியில் எழுந்தருளியவரே ! சிவபெருமானே என்று கூவி யழைத்து நறுமணம் பொருந்திய அழகிய நீண்ட கூந்தலை உடையவளான இப் பெண் அழாநின்றாள். ஆதலால் இந்தப் பெண்ணுக்கு அருள் செய்யக் கடவீர்.

282. விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா
உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.

தெளிவுரை : பெருமையுடைய பெரியோர்கள் வாழ்கின்ற தில்லையில் எழுந்தருளிய பெருமானே ! எங்களுடைய அழகிய கூந்தலை உடைய இப் பெண் தேம்பித் தேம்பி அழுது, நீண்ட பெருமூச்சு விட்டு, என்னை ஆட்கொள்வாய் என்று சொல்லி உம்மையே எண்ணித் துதிக்கின்றாள்; ஒன்றுக்கும் பயன் படாதவளாய்ச் சோர்வு அடைகின்றாள்.

283. அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயவுன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.

தெளிவுரை : நுட்பமாகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ள மதில்களையுடைய தில்லைப்பதியில் எழுந்தருளிய பெருமானே ! என் மகளாகிய இவள் இவ்விடத்து உம்மீது காதல் கொண்டுள்ளாள். மேலும் இவள் தளர்ச்சியடைந்து அஞ்சலி செய்து, ஐயோ, நான் பிழைக்க உனது அழகிய கொன்றைப் பூக்களால் தொடுக்கப் பெற்ற மாலையை எனக்குக் கொடுத்தருள் வாயாக என்று கூறுகின்றாள்.

284. மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)
ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்மடக் கொடியையே.

தெளிவுரை : பிரமதேவனது சிரங்கள் ஐந்தில் ஒன்றைத் துண்டித்தவரே ! என்னுடைய இளங்கொடியை ஒத்த பெண்ணைத் தில்லையில் வருந்தும்படி செய்தீர். அவள் தான் வளர்க்கும் பசுங்கிளியினைப் பார்த்து, அழகிய பசுமையான கிளியே ! நீ சிவபெருமானைக் குறித்து, உமாதேவியாரைத் தனது ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் என்றும், வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மாலையை சூடிய திருமார்பை உடையவன் என்றும் நீ கூறினால் நான் பிழைப்பேன் என்று சொல்லுகிறாள்.

285. கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.

தெளிவுரை : உம்மைப் பகைத்தவர்களாகிய மூன்று அசுரர்களின் முப்புரத்தின் கோட்டை தகருமாறு செவ்விய மேருமலையாகிய வில்லின் அடியைக் காலால் மிதித்து வளைத்த பெருமானே! பூங்கொடி போன்ற இடையை உடையவளும் இளமை அழகு வாய்ந்தவளும் கொம்புகளைக் கொண்ட இளம் பெண் யானை போன்றவளுமான என் மகளை என்ன செய்து விட்டீர்? நீர் செய்த இந்த மயக்கம் எப்பொழுது நீங்கும்?

286. அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.

தெளிவுரை : பிறைச்சந்திரனைப் போல விளங்குகின்ற ஒளிவீசும் நெற்றியினையுடைய மிகுதியான வளையல்களை அணிந்த என் பெண், சனகாதி நால்வர்க்கு அறத்தைச் சொன்ன தரும வடிவினனே ! அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளச் சென்றபோது மூகாசுரன் என்னும் பன்றியின் பின் சென்ற வேடனே! என்னைத் துன்புறுத்தாதே என்று அரற்றுகிறாள். சிறகுகளை உடைய வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த பசுமையான தில்லைப்பதியில் எழுந்தருளிய பெருமானே என்று அரற்றுகிறாள்.

287. அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்
கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே.

தெளிவுரை : தென்றல் காற்று உலாவும் சோலைகள் சூழ்ந்த தில்லையில் திகழும் பெருமானே ! தக்கன் வேள்வி செய்த அக் காலத்தில் சூரியனுடைய பற்களை உடைத்து, தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த யானையைக் கொன்று, யமனை மார்க்கண்டனுக்காக உதைத்து அவன் உயிரைக் கொள்ளுதலைச் செய்தீர் என்று உம்மை இப் பெண் சொல்லுகிறாள். உம்மிடங் கொண்ட காதல் காரணமாக இவள் ஒன்றுக்கும் உதவாமல் இருக்கிறாள்.

288. ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம்எய் தியிருப்பரே.

தெளிவுரை : வளம் பொருந்திய அழகிய சேதி நாட்டிற்கு அரசனான சேதிராயர் என்பார் தில்லையில் எழுந்தருளிய தலைவரான நடராசப் பெருமானை விரும்பிப் புகழ்ந்து உரைத்தனவாகிய இப் பத்துப் பாடல்களையும் தூய்மையான நெறியில் நின்று பாடுகின்றவர்கள் சிவலோகத்தில் மேலான பேரின்பத்தை அடைந்து இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு

கோயில் மன்னுக

திருச்சிற்றம்பலம்

289. மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : நம் மெய்யடியார்களாகிய அன்பர்கள் தில்லைப் பதியை அடைவார்களாக. நம் இனத்தவர்களாகிய பக்தர்கள் மேன்மேலும் பெருகி ஓங்குக! வஞ்சகர்கள் தில்லையினின்றும் நீங்கிச் செல்க. அன்ன நடை போன்ற நடையினை உடைய உமாதேவியின் கணவராகிய சிவபெருமான் பொன்னால் செய்யப்பெற்ற இனிதாக உள்ள பொன்னம்பலமாகிய மண்டபத்தின் (பொற்சபையின்) உள்ளே எழுந்தருளி, உலகமெல்லாம் இருள் நீங்கி விளக்கம் பெற அடியவர்களாகிய நமக்கு அருள் செய்து இனிமேல் வரக்கடவதாகிய மறுபிறவி வாராமல் நீக்கும்பொருட்டு ஒரு நல்ல வழியை திருவருள் நெறியை எமக்குக் கைகூடும்படி தந்த பித்தனைப் புகழ்ந்தே பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்.

290. மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி
ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : செருக்குக் கொண்டு மாறுபடப் பேசும் மனத்தை உடையவர்கள் போய்விடுங்கள். மெய்யடியாராக இருப்பவர்கள் விரைந்து வாருங்கள்; சிவபெருமானிடத்துப் பேரன்பு செலுத்தியும் அவனருளைப் பெற்றும் தலைமுறை தலைமுறையாய் அடியார் கூட்டத்துள் கலந்து எம்பெருமானுக்குத் தொண்டு செய்யுங்கள். அப்பெருமானை அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி அவற்றிற்கு மேலும் அப்பாற்பட்ட பொருள் என்றும், அளவில்லாததான ஒப்பற்ற இன்ப வெள்ளமாகிய பொருள் என்றும், முற்காலத்தும் இக்காலத்தும் எக்காலத்தும் உள்ள பராபரப் பொருள் என்றும் சிவபெருமானைப் புகழ்ந்தே பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்.

291. நிட்டையி லாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : தியானம் செய்யாத உடலின் தன்மையினை நீங்கும்படி செய்து, என்னை அடிமையாகக் கொண்ட ஒப்பற்ற பல தன்மைகளும் மேலானவனாகிய சிவபெருமானது மெய்யடியார்களைப் பெருமைபடுத்தும் பல இயல்புகளும் ஆகிய இவற்றையே மனத்தில் நினைத்து எட்டு உருக்கொண்ட மூர்த்தியினை என் மனம் நினைக்கும்போது உண்டாகும் ஊற்றாகிய பேரானந்த உணர்ச்சியினைத் தரும் தேவாமிர்தம் போன்றவனை, கல்லால மர நீழற்கீழ் எழுந்தருளிய ஞானாசாரியனை, அடியவனைத் தன் வயமாக்கிக் கொண்டவனைப் புகழ்ந்தே பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்.

292. சொல்லாண் டசுரு திருப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில
தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : புகழ்ந்து சொல்லப் பெற்ற வேத சிவாகமங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து உணர்ந்த தூய்மையான மனத்தினையுடைய சிவத்தொண்டர்களாக இருக்கின்றவர்களே! நீங்கள் சில காலங்களில் அழிந்து விடுகின்ற திருமால் பிரமன் இந்திரன் முதலாய தேவர்களுடைய குறுகிய கொள்கையினுடைய மதங்களில் ஈடுபடாமல் நின்று பொற்குவியல் போன்று திகழும் மேருமலையை வில்லாகக் கொண்ட வீரமுடையவனும் அறவடிவாகிய இடபத்தை வாகனமாக உடையவனும் பல ஆண்டுகள் உள்ளவன் என்னும் சொல்லின் அளவைக் கடந்து நின்றவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்தே பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்.

293. புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)
ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட
கோவினுக்(கு) என்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக
னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : பற்பல அண்டங்களிலுள்ள இந்திரன், திருமால், பிரமன் முதலிய தேவர்கள் சிவபெருமான் சந்நிதியை அடைந்து தரிசிக்கத் தாம் தாம் முற்பட்டுத் தம்மிடையே சிறு சண்டையிட்டுக் கொண்டு, இறைவனே ! ஓலம் என்று முறையிட்டு இன்னமும் தஞ்சம் என்று அவர்கள் அடைய அரிதாகி. உன்னை மிக வேண்டி வேண்டி அழைக்கவும் அவர்களுக்கு அருளாமல் எனது உயிரைத் தன்வயப்படுத்திக் கொண்ட தலைவனாகிய சிவபெருமானுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய வல்லோம்; வஞ்சகர்க்குத் தான் வெளிப்படாமல் இருந்தும் என்றும் அன்புடன் வேண்டுவார் வேண்டியவற்றை ஒளியாது கொடுத்தருளும் கற்பகத் தருவைப் போன்றவனாகி இருந்தும் அளவில்லாத பெருங் கருணைக் கடலாக இருந்தும், எப் பொருள்களிடத்தும் பரவியும் நிறைந்தும் விளங்கும் எல்லையற்ற எனது தோழமையுடைய சிவபெருமானைப் புகழ்ந்தே பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் வாழ்த்துவோம்.

294. சேவிக்க வந்தயன் இந்திரன்
செங்கண்மால் எங்கும்திசை திசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக்
குழாம்குழா மாய்நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்
தனத்தினை அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : பற்பல அண்டங்களிலுள்ள திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் சிவபெருமானைத் தரிசிக்க வந்து, எவ்விடத்தும் திக்குகள்தோறும் நின்று ஓலமிட்டுத் தாம் தாம் முன்னர் என்று இடத்தை ஆக்கிரமித்துச் சென்று, நெருக்கிக் கூட்டம் கூட்டமாய் நின்று தரிசிக்க, அப்பொழுது ஆனந்த நடனம் புரியும் என் உயிர்க்கு அமிர்தம் போன்றவனை, எனது பேரன்பாகிய செல்வத்தை உடையவனை, என் தந்தையை, தேவர்கள் உவமை சொல்வதற்காக நினைக்கின்ற நினைப்பிற்கு அப்பாற்பட்டவனாகிய சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

295. சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு
பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற
உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : சிறந்த புகழையும் திருவருட் செல்வமாகிய புண்ணியமும் மிக விளங்கச் சிவலோகத்தைத் தன் உலகமாக உடைய தலைவனது சிவந்த திருவடியின் கீழ் இருந்து பிறர் எவரும் பெறுதற்கரிய அறிவினைப் பெற்றேன். இவ் உலகில் நான் பெற்ற பேற்றை யார் பெற வல்லவர் என்று ஊரில் உள்ளவர்களும் உலகத்தவர்களும் புகழ்ந்து பேசவும், உமாதேவியாரின் கணவனாகிய சிவபெருமானுக்கு ஆட்பட்ட தன்மையினை உலகில் உள்ளவர்களும் தேவ லோகத்தில் உள்ளவர்களும் அறிந்து போற்றும் வகையில் பக்தி மேலீட்டினால் நாக்குக் குளறி அச் சிவபெருமானைப் புகழ்ந்து, பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

296. சேலுங் கயலும் திளைக்கும்
கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியாநெறி
தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின்
றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : சேல் மீனும் கயல் மீனும் மகிழ்ந்து பிறழ்ந்து திரிவது போன்ற கண்களையுடைய மாதர்களின் இளமையான கொங்கைகளின்மீது பூசிய செங்குங்குமம் போலச் சிவபெருமானின் திருவெண்ணீறு அணிந்த திருமார்பு விளங்குகின்றதென்று சிவத்தொண்டுகளைச் செய்யும் சிவனடியார்கள் அதனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டு இருக்கவும், திருமாலும் பிரமனும் அறிய முடியாத திருவருள் நெறியினை எனக்கு அருளி என் மனத்தினுள்ளே வந்து இனிமை பயக்கும் பாலையும் அமுதையும் ஒத்து நின்றவனாகிய நடராசப் பெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

297. பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : வியாக்கிரபாத முனிவரின் குழந்தையாகிய உபமன்யு முனிவர் பசியினால் பாலை விரும்பி உண்ண அழுதலும், அவர்க்குப் பாற் கடலையே அழைத்து உண்ணக் கொடுத்தருளிய பெருமானும், அக் காலத்தில் திருமாலுக்குச் சலந்தராசுரனைப் பிளந்த சுதர்சனம் என்னும் சக்கரப்படையைக் கொடுத்தருளிய இறைவனும் என்றும் நிலைபெற்றுத் திகழும் தில்லையில் வேதங்களை ஓயாமல் ஓதி ஆரவாரம் செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற சிற்றம்பலம் என்னும் பொற்சபையைத் தமக்கு இடமாகக் கொண்டு அன்பர்களுக்கு அருள் புரிந்து ஆனந்த நடனம் புரிய வல்லவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

298. தாதையைத் தாளற வீசிய
சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : தன் தந்தை எச்சதத்தரின் கால்கள் அற்று விழும்படி வெட்டிய அந்தணச் சிறுவராகிய விசாரசருமர் என்ற சண்டேசுரர்க்கும், அப்பொழுதே தேவர்களோடு பூலோகத்தவரும் வணங்குமாறு அழகிய கோயிலும் சிவ நிர்மாலியமான அமுதும் தந்தருளி, இன்னும் பரிவட்டமும் ஒளி பொருந்திய அழகிய இண்டை மாலையும் சண்டேசுரர் என்னும் திருப்பெயரும் சண்டீசர் பதவியும் தொண்டர்க்கு எல்லாம் அதிபதியாகவும் ஆகிய இவற்றை விசாரசருமர் செய்த பெரும்பாவச் செயலுக்கு வெகுமதியாகக் கொடுத்தருளிய சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம். சண்டேசுவரர் கோயில் சிவாலயத்தில் அபிடேகத் தீர்த்தத் தொட்டிக்கு அடுத்து அமைந்துள்ள தனிக்கோயில்.

299. குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று
விம்மி மிகுதிரு ஆரூரின்
மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : குழலின் ஓசையும் யாழின் ஓசையும் நடனமாடும் ஓசையும், எவ்விடத்தும் கூட்டமாக அடியார்கள் பெருகி நின்று துதிக்கும் தோத்திர ஒலியும் திருவிழாவின் ஒலியும் ஆகிய இவ் ஓசைகள் எல்லாம் ஆகாயத்தின் அளவும் சென்று மேன்மேலும் பெருகி அதிகரிக்கின்ற திருவாரூரில் எழுந்தருளிய இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானுக்குத் தலைமுறை தலைமுறையாக அடிமை பூண்ட ஆடவரும் மகளிரும் மணம் புரிந்து கொண்ட குடும்பத்தில் பிறந்த பழைமையான அடியாரோடும் சேர்ந்து நின்று எம் தந்தையாகிய சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

300. ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : அழகிய மார்கழித் திருவாதிரை நாளில் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுதற்குத் தேவர் கூட்டத்துள் யார் யார் வந்தனர்? திருமாலுடன் பிரமதேவனும் அக்கினி தேவனும், சூரிய தேவனும் இந்திரனும் வந்தனரா? நன்று. தேரோடும் சிவமே நிலவும் நான்கு திருவீதியிலும் தேவர்களின் கூட்டங்கள் எல்லாத் திசைகளிலும் பரவி நிற்க, உலகெலாம் நிறைந்த இறைவனின் பழைமையான புகழைப் பாடிக்கொண்டும், மெய்ம்மறந்து கூத்து ஆடிக் கொண்டும் அவனைப் பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம். தில்லைத் தேர்த் திருவிழா இப்பொழுது திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப்படுகின்றது.

301. எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்
எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர்
அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
என்று பல்லாண்டு கூறுதுமே.

தெளிவுரை : என் தந்தையும் என் தாயும் என் உறவினர் எல்லாமும் ஆகி, எமக்கு அமிர்தமாகி நின்ற எம் பெருமானே என்று பலகாற் சொல்லித் துதித்து, இடைவிடாமல் நினைக்கின்ற சிவபெருமானது சிறப்புற்ற அடியார்களுக்கு அடிமை புரியும் நாய் போன்ற செப்புறை என்ற ஊரிலுள்ள முடிவில்லாத மிகுந்த பரவசம் அடைந்த சேந்தனாகிய என்னை வலிய வந்து ஆட்கொண்டு என்னுள் புகுந்து எனது ஆணவம் முதலிய மலக்கட்டுகளை அழித்து என் அரிய உயர்மீது அருள் பாலித்து விளங்குபவனே என்று சிவபெருமானைப் புகழ்ந்து பல்லாண்டு வாழ்க எனக் கூறி நாம் போற்றுவோம்.

திருச்சிற்றம்பலம்.

ஒன்பதாம் திருமுறை முடிவுற்றது.


Ninth Thirumurai

Poet:

Manickavasagar: A revered Nayanmar celebrated for his deep devotion to Lord Shiva and his significant contributions to Saiva literature.

Hymns:

The Ninth Thirumurai includes a collection of hymns known as "Tiruvembavai" and "Tirupallantu," among others.

These hymns are renowned for their spiritual depth and lyrical beauty, focusing on the divine aspects of Shiva and his temples.

Manickavasagar's hymns in this Thirumurai reflect his personal devotion and profound spiritual experiences.

Philosophy of the Hymns:

Devotion to Shiva: The hymns express deep devotion and reverence for Lord Shiva.

Philosophical Themes: The hymns explore themes such as divine grace, spiritual wisdom, and the contrast between worldly life and spiritual enlightenment.

Personal Devotion: They describe the poet’s experiences of divine vision and the transformative effects of encountering Shiva.

Structure of the Hymns:

The hymns are lyrical and rhythmic, designed to be sung in worship and devotional contexts.

They feature repetitive refrains and evocative imagery that enhance their emotional and devotional impact.

Significance of the Ninth Thirumurai:

The hymns contribute to the Saiva tradition by emphasizing the importance of sincere devotion and the pursuit of spiritual knowledge.

Manickavasagar’s works are celebrated for their emotional intensity and philosophical depth.

The Ninth Thirumurai plays a crucial role in Tamil devotional literature, inspiring devotion and spiritual practice among Saiva devotees.

The Ninth Thirumurai remains a vital part of Tamil Saiva literature, offering profound insights into the nature of divine grace and the significance of heartfelt devotion to Lord Shiva.



Share



Was this helpful?