Books / பத்துப்பாட்டு நூல்கள்


பொருநர் ஆற்றுப்படை


பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.

ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் வரலாறு

பத்துப்பாட்டினுள் இரண்டாம் பாட்டாகத் திகழும் இப் பொருநராற்றுப் படையை யாத்தவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப் புலவராவார். இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவாரும் உளர். தொல்காப்பிய உரையின்கண், (தொல்.சொல்.இடை. 22.சே.ந) ஆர்விகுதி பன்மையொடு முடிதற்கு முடத்தாமக் கண்ணியார் வந்தார் என்றெடுத்துக் காட்டப்பட்டிருத்தலால், இவர் பெயர் முடத்தாமக் கண்ணி என்பதாம் என்பர். இனி, கண்ணி என்பதனைத் தலையிற் சூடும் மாலையெனக் கொள்ளின், இப்பெயர் பெண்பாற் பெயர் என்று கூறுதற்கிடனில்லை. இப்பெயர் முன்னர் முடம் என்ற சொற்கிடத்தலால், இவர் உறுப்பு முடம்பட்டவர் என எண்ணற்கிடனுளது. இவர் இசைவல்லுநர் என்பதனை, இப்பாட்டின்கண் யாழ் முதலிய இசைக்கருவிகளைப் பற்றிக் கூறும் பகுதிகளால் உணரலாம். இசை, வன்கண்ணரையும் அருளுடை நெஞ்சினராக மாற்றியமைக்கும் பண்புடையதென இவர் கூறியுள்ளார். விறலியருடைய முடிமுதல் அடிகாறும் மிக அழகாகப் புனைந்து பாடியுள்ளார். உவமை எடுத்துக் கூறுவதில் இப்புலவர் பெரிதும் வல்லுநர். யாழினது உறுப்புக்களுக்கு இவர் கூறும் உவமைகள் மிகவும் இனிமை தருவன. அவற்றை,

குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் என்றும், விளக்கழல் உருவின் விசியுறு போர்வை, என்றும் அலவன் கண்கண்டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி என்றும், மாயோள் முன்கை யாய்தொடி கடுக்கும் கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் என்றும் வரும் அடிகளிற் காண்க. இவர் கூறும் பிற வுவமைகளும் சிறப்புடையனவே. கரிகாலன், பொருநனை உடை உண்டி உறையுள் முதலியன அளித்துப் போற்றியவழி, ஞெரேலெனத் தன் வாழ்க்கையிலேற்பட்ட புதுமையால் மருண்டவனாய், இது நனவோ! கனவோ! என ஐயுறுதலும், இது நனவே! என, அவன் இளைஞர் ஏதுக்காட்டி விளக்குதலும், கரிகாலன் அளித்த உணவைத் தின்று தின்று எம் பற்கள் கொல்லையுழுத கொழுப்போன்று தேய்ந்தன என்பதும், கழுத்தளவாக வந்து நிறையும் படி உயிர்ப்பிடம் பெறாது உண்டேம் என்பதும், நகைச்சுவையுடையனவாக இப்புலவர் கூறுதல் இன்பந்தருகின்றன.

கரிகாலன் கொடைச்சிறப்பை இப்புலவர் மிகவும் நன்றாக விளக்கியுள்ளார். செய்யுள் இனிமையில், இப் பொருநராற்றுப் படை சாலச்சிறந்ததென்று அதனை ஓதுவோர் உணர்தல்கூடும். இதனை ஓதுவோர் உணர்வு சலியாமைப்பொருட்டு ஆசிரிய அடியாற் றொடங்கிப் பின்னர் வஞ்சியடியை விரவி இவர் இப்பாடலை யாத்துள்ளமை இவரது மனப்பண்புணர்ச்சியை நன்கு விளக்குகின்றது. இவரைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரிதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இப் பொருநராற்றுப்படை ஒன்றே இவரது நல்லிசைப் புலமையை நன்கு காட்டப் போதியதாக அமைந்துள்ளது. கருங்குளவாதனார், வெண்ணிக்குயத்தியார், உருத்திரங் கண்ணனார் முதலியோர் முடத்தாமக் கண்ணியாரோடு ஒரு காலத்தே உயிர்வாழ்ந்திருந்த நல்லிசைப் புலவர்களாவார்.

பாட்டுடைத்தலைவன் வரலாறு

சோழன் கரிகாற்பெருவளத்தான்

ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து, சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள், இவ்விரண்டாம் பாட்டிற்குத் தலைவனும் பேறுடையான், சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் காவலனாவான். இக் கரிகாற் பெருவளத்தானே, பத்துப்பாட்டினுள் ஒன்பதாம் பாட்டாகத் திகழும் பட்டினப்பாலைக்கும் தலைவனாவான். இம்மன்னர் பெருமான், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய மகன் என்ப. இதனை, உருவப் பஃறே ரிளையோன் சிறுவன், (130) என வரும் இப் பொருநராற்றுப்படை யடியான் அறியலாம். இவன் தன் தாய்வயிற்றிற் கருவா யிருக்கும்போதே இவன் தந்தை இறந்தான். ஆதலால், இவன் கருவிருக்குங்காலத்தே அரசுரிமை பெற்றுப் பின்னர்ப் பிறந்தான் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது. இதனைத் தாய்வயிற் றிருந்து தாய மெய்தி (32) என்னு மடியினால் உணரலாம். தாய்வயிற்றிருந்து தாயமெய்தியதனால், இம் மன்னன் இளைஞனா யிருந்தபொழுதே, இவனுடைய அரசுரிமையைக் கைக்கொள்ளுதற்குத் தாயத்தாரும், பிறருமாகிய பல பகைவர்கள் துணிந்தனர். இளமையிலேயே கோமுடி கொண்டு நாட்டை நன்கு ஆட்சி செய்துவந்தான் இம் மன்னன் என்பதைப் பொருநராற்றுப்படையில்,

பவ்வ மீமிசை பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்த நன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
.......................................................
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்  (135-148)

என்னும் பகுதியால் அறியலாம். இப்பகுதியில் கரிகாலன் மிக இளமையிலேயே மிகப்பெரும் பகைவருடன் போர் புரிந்து வெண்ணிக்களத்தே வென்றமையும் குறிக்கப்பட்டிருத்த லறிக. இனிச் சோழன் கரிகாற் பெருவளத்தானை இளம்பருவத்தே பகைவர் வஞ்சகமாகச் சிறையிட்டனர் என்று கூறுப. இதனை,

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு

எனவரும் பட்டினப்பாலை அடிகளானும் உணரலாம். இச் சிறையிடத்தே, பகைவர் தீக்கொளுவினர் என்றும் அத் தீப்பற்றிய சிறையிடை நின்றும் கரிகாலன் தப்பி வெளியேறினன் என்றும், அம் முயற்சியிலே அவன் கால் தீயாற் கரிந்துபோயிற்றென்றும், அதன் பின்னரே கரிகாலன் என்று இம் மன்னன் வழங்கப்பட்டான் என்றும் கூறுவர். இப் பொருநராற் றிறுதியி லமைந்த,

முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே அளந்ததால் - செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று

என்னும் வெண்பாவானும், பழமொழி முதலியவற்றானும் இந்நிகழ்ச்சி தெளியப்படும். இம் மன்னன் கருவூரிலிருக்கும்பொழுது, கையில் மாலை கொடுத்தனுப்பப்பட்ட கோக்களிறு, இவனுக்கு மாலைசூட்டித் தன் பிடரிலேற்றிக் கொணர்ந்ததென்றும், அதனால் இவனுக்கு அரசுரிமை வழங்கினர் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது.

இம் மன்னன் வெண்ணிப் போரை,

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே  (புறம் - 66)

எனவரும் வெண்ணிக் குயத்தியார் பாட்டானும் உணரலாம்.

இம் மன்னனின் இயற்பெயர் திருமாவளவன் என்பதாம். அரிமா சுமந்த அமளிமே லானைத், திருமா வளவன் எனத் தேறேன் எனவரும் வெண்பாவான் இப் பெயருண்மை தெளியப்படும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார் இக் கரிகாலன் சிறப்புக்கள் பலவற்றைத் தம் பெருங்காவியத்தே கூறியுள்ளார். தமிழ் நாட்டெல்லையுள், தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை இரண்டு திசையினும் பெறாத கரிகாலன், போரிலே பேராசையுடையவனாதலின் வடதிசை பெருந்திசை யாதலிற் பகை பெறலாமெனக் கருதி, ஆண்டுச் சேறற்கு விரும்பி வாளும் குடையும் முரசும் நாளொடு பெயர்த்து, என் வலிகெழு தோள் இத்திசையிலானும் நண்ணாரைப் பெறுவதாக வேண்டுமென்று, தான் வழிபடு தெய்வத்தை மனத்தான் வணங்கி, அவ்வட திசையை நோக்கிய அந்நாளில், இமையவர் உறையும் இமயமலை பகையாகக் குறுக்கிட்டு விலக்கிற்றாகலின், மனஞ்சலித்து மீள்கின்றவன், மடிதலின்றி மேலும் செல்ல முயலும் என்னாசை பின்னிட்டொழிய இம்மலை எனக்குப் பகையாகக் குறுக்கிட்டு விலக்கிற்றென முனிந்து, அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்துத் தான் வேட்டது பெறாத கோட்பாட்டால் மீள்கின்றவன், வச்சிரநாட்டுக் கோன் தான் இடக்கடவ முறைமையில் திறையாகவிட்ட அவனது முத்தின் பந்தரும், மகதவேந்தன் தந்த பட்டிமண்டபமும் அவந்திநாட்டு வேந்தன் தந்த வாயிற்றோரணமும் திறையாகப் பெற்றுவந்தான், எனச் சிலப்பதிகாரத்தே இவன் வெற்றி புகழப்பட்டுள்ளது.

செண்டு கொண்டுகரி காலனொரு காலினி மையச்
சிமைய மால்வரை திரித்தருளி மீளவதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிப்பொறி குறித்தது மறித்த பொழுதே  (கலிங்கத்துப் - இராச.1)

எனவும்,

கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவன்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு  (சிலப் 5: 95 - 8. உரைமேற். அடி)

எனவும்,

இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றிறற்புலி இமயமால் வரைமேல் வைக்கவேகுவோன்  (பெரிய - திருக்குறிப்புத் : 85)

எனவும் பிற்றை நாட்புலவரும் இவன் வெற்றியைப் பாராட்டுதல் உணர்க. இனி, இம் மன்னர்பெருமான் புலவர் முதலிய கலைவாணர்க்கு மிகமிகப் பரிசில் வழங்கிப் போற்றும் இயல்பினன் என்பதனைப் பட்டினப்பாலை பாடிய நல்லிசைப் புலவர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கிப் போற்றினான் என்னும் செய்தியால் உணரலாம்.

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறு நூறா யிரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

என்பது கலிங்கத்துப்பரணி. கரிகாலன் முதன் முதலாகக் காவிரிக்கரை கண்டவன் என்பர். இம் மன்னன் உறையூரைப் பெரிதும் திருத்தினன் என்பதும், காடுகளை அழித்து நாடாக்கினன் என்பதும், நீர் நிலைகளை உண்டாக்கினன் என்பதும், குடிமக்களைப் பேணினன் என்பதும்,

காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடி நிறீஇ

எனவரும் பட்டினப்பாலையான் உணரலாம். இங்ஙனம் நாட்டைப் பண்படுத்தினமையால் அந்நாட்டின் சிறப்பை அவன் சிறப்பாகக் கொண்டு,

ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு

எனச் சான்றோர் போற்றிப் புகழ்ந்தனர். இவ்வேந்தனுக்கு ஆதிமந்தி என்பாள் ஒரு நல்லிசைப் புலமையாட்டி மகளாக இருந்தனள் என்று சிலப்பதிகாரம் கூறும். இம் மன்னன் புகழ் விரிப்பினகலுமாகலின் இத்துணையே கூறி அமைகின்றாம்.

அறிமுகம்

செந்தமிழ் இலக்கியத்தின் சிமையமாகத் திகழும் பத்துப் பாட்டினுள் இஃதிரண்டாம் பாட்டாகத் திகழ்கின்றது. பத்துப்பாட்டிவை என்பதனை,

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

எனவரும் பழைய வெண்பாவாலறியலாம். பத்துப்பாட்டினுள், செம்பாதிப் பாட்டுக்கள், ஆற்றுப் படைப் பாட்டுகளாம். இதனால் பண்டைப் புலவர்கள் இத் துறையைப் பெரிதும் விரும்பிப் பாடினர் என்பது விளங்கும். ஆற்றுப்படை என்பது, புறத்திணைகளுட் பாடாண்டிணையின் உட்பகுதியாய் அமைந்ததொரு துறையாகும். தாவினல்லிசை என்று தொடங்கும் தொல்காப்பியப் புறத்திணை (36) நூற்பாவின்கண்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்

எனவரும் பகுதியே ஆற்றுப்படைக்கு இலக்கணமாம். ஆடன் மாந்தரும், பாடற்பாணரும், கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியு மென்னும், நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது இந்நூற்பாவின் பொருளாம். ஆற்றுப்படை என்னும் இத்துறை உலகில் அறப்பண்பு மிக்கு வறியார்க்குத் தம்பால் உள்ளன வெல்லாம் உவந்தீயும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுதற்கென நல்லிசைப் புலவர்கள் வகுத்துக்கொண்டதொரு புலனெறி வழக்கமாகும். உயரிய மக்கட் பிறப்பெய்தியோர் அப்பிறப்பின் பெருமைக்கேற்ற செயலாக மேற்கொள்ளற் பாலவாகிய அறங்களில் ஈகை தலைசிறந்த தொன்றாம்.

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

என்றற்றொடக்கத்துத் திருக்குறள்களான் இவ்வுண்மை தெளியப்படும். இத்தகைய சிறந்த நற்செயலைச் செய்தற்குரிய கொடைப்பண்பினைக் கருவிலேயே பெற்றுப் பிறப்போரே புரவலர் எனப்படுவார். இப் புரவலரைப் புகழ்வது நல்லிசைப் புலவர்க்கு நனியின்பம் நல்கும் செயலாகும். புரவலர்கள் உடை உண்டி உறையுள் முதலிய உயிர்வாழ்தற்குரிய பொருள்களைப் புலவர்கள் வேண்டி யாங்கு ஈந்து அவர்தம் இன்முகங்கண்டு மகிழ்வதில் பெரிதும் விருப்பமுடையர் ஆவர். புரவலரால், புலவர் உடம்பு வாழ்நாள் முடியுந்துணையும் இனிதே வளர்க்கப்படும். அச்செய்ந்நன்றி போற்றும் புலவர்களோ, தம் அழிவில்லா மெய்ப்பனுவலில் அவ்வள்ளலார் புகழுடலை மண்ணுலகம் உள்ள துணையும் மாயாதே நிலைத்து நிற்கச் செய்வர்.

கண்ணுக்கு ஒளியையும், செவிக்கு ஒலியையும், மூக்கிற்கு நாற்றத்தையும், வாய்க்குச் சுவையையும், உடலுக்கு ஊற்றினையும் ஒருங்கே படைத்தான் இறைவன். இவையிற்றில் ஒன்றைப் படைத்து ஒன்றைப் படையானாயின் இரண்டும் படைக்கப்படாத இல் பொருளாய் ஒழியும். கண்ணிருந்து ஒளியின்றேற் கண்ணாற் பயன் என்ன? அவ்வாறே மக்கட்கு மனனுணர்ச்சி என்னும் அகக் கருவியைப் படைத்த இறைவன், அதற்குப் புலனாக இவ்வருமைக் கலைகளையும் படைத்துவைத்தான். கண்ணில்லானுக்கு ஒளியால் உறுபயன் இல்லை. அங்ஙனமே மனனுணர்வுடையார்க்கன்றிக் கலைகள் அஃதில்லாத மாக்கட்கு இல்பொருளாகவே முடியும். எத்துணைச் சிறப்பாக மனனுணர்வு ஒருவர்க்கு முதிர்ந்துளதோ, அத்துணைச் சிறந்த இன்பத்தை அவர் கலைகளிடத்தே எய்த முடியும். மக்கள் மன உணர்ச்சியைப் பண்படுத்தி அதனை வளர்த்துத் தூய்தாக்கும் பண்புடையன கலைகள். இங்ஙனம் கலைகளாற் பண்பட்டுயர்ந்த மனவுணர்வே இறுதியில் கடவுளையும் தன்னுள்ளே காணும் பேறுடையதாகும். கலைகளின் முழுமையே கடவுள். கடவுளின்பத்தின் துளிகளே கலையில் யாம் நுகரும் பேரின்பம் இதனை,

குலவு மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவு முணர்வின் திறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங்கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினிற் றெளிந்தார் சிறிய பெருந்தகையார்  (பெரிய - சண்டே.15)

என வரும் சேக்கிழாரடிகள் மெய்ம்மொழியானும் தெளிக.

மக்கள் வாழ்க்கையின் பயனை முற்றுவித்தற்கு உறுதுணையாகிய கலைகளை உணர்வோரும் தாம் உணர்ந்தாங்கே பிறரை யுணர்த்தவல்லுநருமே கலைஞர் எனப்படுவார். இத்தகைய கலை யுணர்ச்சி முதிரப் பெற்றோர் கலைபேணுதல் ஒழிந்து இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாத பொருள் ஈட்டுதலில் மனம்போக்கி உழல்வார் அல்லர். அதனால், பெரும்பாலும் கலைஞர் நல்கூர்ந்தாராதலும் இயல்பாயிற்று. இவ்விலம்படு புலவரைப் போற்றுதற்கெனவே இவ்வுலகில் புரவலரை இறைவன் படைக்கின்றான் போலும். அப் புரவலராலே புலமையாளர் உடலும், அவர் தம் கலைச் செல்வமும் செழிப்புடையனவாக வளர்க்கப்படுகின்றன; புலவர்களாலே புரவலன் புகழுடம்பு உலகுள்ள துணையும் நிலைப்பதாகின்றது.

இனி, கைவண்மையுடைய புரவலர்கள் கலைஞர்களே யன்றி யாரே யாயினும் தம்பால் வந்து இல்லையென்றிரப்போர்க்கு இல்லையென்று உரையாது வழங்குமியல்பினராயினும், கலைவாணரல்லால் ஏனையோர் வறுமையுற்ற விடத்தும் இரவாமை மேற்கொள்ளுதலின்றி இரத்தல் இகழ்ச்சியேயாகும் ஆகலானும், மற்றுக் கலைவாணர்க்கு இரந்துயிர் வாழ்தலும் சிறப்புடைய வாழ்வேயாகுமாதலானும், கலைவாணர் இரத்தற்குரியர் ஆதலன்றியும் கொடுத்தாரை வாழ்த்தவும், கொடாதாரைப் பழிக்கவும் உரிமை பெற்றுள்ளனர். ஆதலானும், இச் சிறப்புரிமையாலே ஆசிரியர் தொல்காப்பியனார், ஆற்றுப் படையில் உறுப்பினராகக் கலைவாணர்களை மட்டுமே கூறுவாராயினர்.

இனி, இப் பத்துப்பாட்டினுள், இறுதியினின்ற மலைபடுகடாம் கூத்தராற்றுப்படையாகும். பாணாற்றுப்படை இரண்டுள. இது பொருநரை ஆற்றுப்படுத்தமையாற் பொருநராற்றுப்படை என வழங்கப்பட்டது. பொருநராவார், ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணிபாடுநரும் எனப் பலவகைப்படுவர். அவருள், இவ்வாற்றுப்படையின்கட் கூறப்படுபவன் கரிகாற் பெருவளத்தானுடைய வெண்ணிப்பறந்தலை வென்றியை விதந்து பாடுதலாலே போர்க்களம் பாடும் பொருநன் ஆவான். பொருநன் வாயிலாகக் கரிகாற் பெருவளத்தான் புகழனைத்தும் இப்பாட்டின்கண் விரித்தோதப்படுகின்றன. இப்பாட்டு, இருநூற்று நாற்பத்தெட்டடிகளாலியன்றது. இதன்கண் ஆசிரியவடிகள் மிக்கும், இடையே வஞ்சியடிகள் விரவியும் உள்ளன. முழுதும் ஆசிரியவடிகளானே ஓதாமல் இடையிலே வஞ்சியடிகளை விரவியது இப்பாட்டின் இன்னோசையை மேலும் இன்பமுடைய தாக்குகின்றது.

இனி, இப் பொருநராற்றுப்படையின்கண் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் என்ற தொல்காப்பிய விதிப்படியே, ஆற்றுப்படுத்துவோன் தான் கரிகாலனிடம் சென்று பெற்ற பெருவளனை நன்கு விரித்துக்கூறி, நீயும் சென்றுபயன் எதிர்வாயாக என ஆற்றுப்படுத்தலைக் காணலாம். சிறுபாணாற்றுப்படை முதலிய எஞ்சிய மூன்று ஆற்றுப்படைகளினும், ஆற்றுப்படுத்துவோன், ஆற்றுப்படுத்தப்படுவோனை, நீ இவ்வழியே சென்று இவ்விவ் விடங்களில் இன்னின்ன உண்டிகளைப் பெற்றுச் செல்க எனப் புதியனவும் சில புகுத்து ஓதப்படுதலை ஆராயுமிடத்து இவ்வாற்றுப்படையே காலத்தால் முந்தியதென்று கருதுதற்கு இடனுளது. இப்பொருநராற்றுப்படை ஏனைய ஆற்றுப்படைகட்கு முன்னர் வைக்கப்பட்டதற்கும் இதுவே காரணம்போலும். இப் பொருநராற்றுப்படையில், பொருநர்கள் ஊர்களில் நிகழும் விழாக்களிலே இசைப்புலமை காட்டுதலும், இவர்கள் ஊர் ஊராய்ச் சுற்றித் தங் கலையைப் பரப்பும் வழக்கமுடையராதலும், யாழின் இயல்பும், விறலியர் இயல்பும், கலைவாணரின் நல்கூர் நிலையும், கரிகாற் பெருவளத்தான் கலைவாணரைப் போற்றும் தன்மையும், கரிகாலனின் வென்றிச் சிறப்பும், திணை மயக்கமும், காவிரியாற்றின் பெருமையும், சோணாட்டு வளமும், பிறவும் அழகாக விரித்தோதப் படுகின்றன.


© Om Namasivaya. All Rights Reserved.