Books / பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


ஐந்திணை ஐம்பது

(மாறன் பொறையனார்)


(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)


     இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுள் ஒன்று நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையவராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கொள்ள இடமுண்டு. இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். 'வண் புள்ளி' என்பதை வளப்பமான புள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு.

1. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்! -
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்! 1

எயில் - மதில்
தார் - மாலை
கார் - மேகம்
மல்லர் - மல்யுத்தம் செய்பவர்
     "தலைவியே! மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து, - பணிமொழி! -
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள். 2
அணி நிற - அழகிய
மஞ்ஞை - மயில்
கலி - ஆரவாரம்
நீர்மை - தன்மை
     "மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
மின்னும், முழக்கும், இடியும், மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய, - முல்லை
முகை வென்ற பல்லினாய்! - இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்? 3
முகை - மொட்டு
நமர் - நம்மவர்
     "தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.

உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார். 4
உள்ளுதல் - நினைத்தல்
தொடி - வளையல்
கூர்தல் - மிகுதல்
     "ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.

பருவம் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண். 5
கோடு - சிகரம்
கொண்மூ - மேகம்
வளி - காற்று
     என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.

முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து. 6
தும்பி - வண்டு
     மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.

தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு. 7
ஆன் - பசு
தொடி - வளையல்
     கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.

பருவம் கண்டு அழிந்த தலைவிக்குத் தோழி கூறியது
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்? 8
வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு
     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

'பருவம்' என்று அழிந்த கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
வருவர் - வயங்கிழாய்! - வாள் ஒண் கண் நீர் கொண்டு,
உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
பைங்கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
வம்ப மழை உரறக் கேட்டு. 9
இழை - அணிகலன்
வம்ப - புதுமை
     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள்மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம். 10
கானம் - காடு
கவுள் - கன்னம்
     "கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.
2. குறிஞ்சி
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇயது
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய, - மென்முலையாய்! -
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினா இன்றி, இனிது. 11
இணர் - பூங்கொத்து
கவின் - அழகு
பொழில் - சோலை
     "மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.

பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம். 12
வெற்பு - மலை
ஏனல் - தினை
     "பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.

சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
'கானக நாடன் கலவான் என் தோள்!' என்று, -
மான் அமர் கண்ணாய்! - மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா! 13
நானம் - கத்தூரி மணம்
வால் - தூய்மை
     "மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.

தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது
புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு. 14
பொன் அன்னாய் - திருமகளே
மா - விலங்கு
     "தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்.

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப்படைத்து மொழிகிளவியான் வரைவுகடாயது
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம். 15
வேங்கை - வேங்கை மரம்
சேந்தன - சிவந்தன
     "நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்.

இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16
வேழம் - யானை
தொடி - வளையல்
     "வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

'மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட!
எஞ்சாது நீ வருதி' என்று எண்ணி, அஞ்சி,
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும், உள் உருகி நின்று. 17
மஞ்சு - மேகம்
எஞ்சாது - தவறாது
     "மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள்.

தோழி செறிப்பு அறிவுறீஇ, தலைமகனை வரைவு கடாயது
எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா; - கறங்கு அருவி
மா மலை நாட! - மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18
குரல் - கதிர்
மடம் - அறியாமை
     "ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.

தோழி இரவுக்குறியின்கண் நெறி விலக்கி, வரைவு கடாயது
நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, 'ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!' என்னும், என் நெஞ்சு. 19
வால் - வெண்மை
அதர் - வழி
     "நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள்.

தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும் உள்ளத்தாளாய்ச் சொல்லியது
வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! 'அணங்கு அணங்கிற்று!' என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன் - தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய். 20
அணங்கு - தெய்வம்
மறி - ஆட்டுக்குட்டி
     "தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.

3. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை, - பாண! - வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ. 21
வாயில் - தூது
துன்னல் - தைத்தல்
     "பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீதான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
நெறி அதுகாண், எங்கையர் இற்கு. 22
போது - அரும்பு
புனல் - நீர்
     "மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)

யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல், -
பாண! - பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று? 23
யாணர் - புது வருவாய்
கேண்மை - நட்பு
     "பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள்.

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24
கோலம் - அழகு
குருகு - நாரை
     "பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய் - விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால். 25
அழல் - நெருப்பு
விழைதல் - விரும்புதல்
     "நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்தது
பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26
வதுவை - திருமணம்
     "வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.

வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம். 27
ஊரன் - ஊர்க்காரன்
     "நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் - வாட்கண்ணாய்! - 'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு. 28
புனல் - அருவி
     "ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது
'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29
வியல் - அகன்ற
இழை - அணிகலன்
     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; - ஒளியிழாய்! -
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு. 30
வளி - காற்று
இழை - அணிகலன்
     "ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

4. பாலை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு. 31
உதிரம் - இரத்தம்
உகிர் - நகம்
     "உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்

தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் -
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம். 32
அழல் - நெருப்பு
களிறு - ஆண் யானை
     "அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.

மகட் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது
பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு? 33
ஆயம் - தோழியர் கூட்டம்
     "பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி.
வேட்ட முனைவயின் சேறிரோ - ஐய! - நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து? 34
கோடு - வளைதல்
அமை - மூங்கில்
     "தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.

தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து, 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது
கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம். 35
நிணம் - கொழுப்பு
கண்படுக்கும் - உறங்கும்
     "பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள்.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து? 36
பிடி - பெண் யானை
தாள் - அடி
     "தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.

உடன் போய தலைமகட்கு நற்றாய் கவன்று உரைத்தது
தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை? 37
முன்றில் - முற்றம்
அத்தம் - காடு
     "தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்.

பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
சுனை வாய்ச் சிறு நீரை, 'எய்தாது' என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 38
கலைமான் - ஆண்மான்
பிணை - பெண்
     "நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.

தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
மடவைகாண்; - நல் நெஞ்சே! - மாண் பொருள்மாட்டு ஓட,
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
நம்மின் பிரிந்த இடத்து? 39
மடம் - அறியாமை
படர் - துன்பம்
     "நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான்.

இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை; - நல் நெஞ்சே! - நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
என்கொலோ சேக்கும் இடம்? 40
அல்கல் - இரவு
அதர் - வழி
இறந்து - கடந்து
     "நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான்.

5. நெய்தல்
அல்லகுறிப்பட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய், தோழி தலைமகட்குச் சொல்லியது
தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து,
ஒண் தடங் கண் துஞ்சற்க! - ஒள்ளிழாய்! - நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால்; என்கொலோ,
பூந் தலை அன்றில் புலம்பு? 41
அன்றில் - பறவை
     "ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.

காமம் மிக்க கழிபடர் கிளவி
கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ! 42
அலவன் - நண்டு
சிதையாதி - அழிக்காதே
     "வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.

பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத்
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல்,
ஆழியால் காணாமோ, யாம்! 43
சினை - முட்டை
தார் - மாலை
     "தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்புஅறிவுறீஇ, வரைவு கடாயது
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி,
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு, அன்னை, 'எவ்வம் யாது?' என்ன, 'கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது' என்றேன். 44
பொழில் - சோலை
     "இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள்.

தலைமகனைத் தோழி வரைவு கடாதற்பொருட்டுத் தலைமகள் வரைவு வேட்டுச் சொல்லியது
ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன்
சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,-
மாந் தளிர் மேனியாய்! - மன்ற விடுவனவோ,
பூந் தண் பொழிலுள் குருகு? 45
குருகு - பறவை
     "மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள்.

பகற்குறி வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்று தோழி வரைவு கடாயது
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம்
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும்
கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ? 46
ஓதம் - அலை
     "அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள்.

தோழிக்குத் தலைமகன் சொல்லியது; தோழற்குச் சொல்லியதூஉம் ஆம்
பெருங்கடல் உள் கலங்க, நுண் வலை வீசி,
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு. 47
உணங்கல் - வற்றல்
அணங்கு - தெய்வம்
     "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

தலைமகனைத் தோழி வரைவு கடாயது
எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!
மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்? 48
நித்திலம் - முத்து
ஒற்கம் - குறை
     "அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள்.

அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறிய, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.
கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான், தெளியாக் குறி. 49
இழுது - வெண்ணெய்
புடை - பக்கம்
     "வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள்.

அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட
மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும்
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன், - ஒளியிழாய்! -
உள் உருகு நெஞ்சினேன் ஆய். 50
பரி - குதிரை
அரவம் - ஒலி
     "ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

சிறப்புப் பாயிரம்
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய,
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்,
செந்தமிழ் சேராதவர்.
     கணக்கில் தேர்ச்சி பெற்ற மாறன் பொறையன் என்ற பேரறிஞர், மக்களுக்குரிய பண்புகளின்படி வாழ்ந்து, உயர்ந்தோராகிய உலகமக்கள் பெற்ற பயன்களை ஆராய்ந்து இயற்றிய 'ஐந்திணை ஐம்பது' என்ற அகப்பொருள் நுட்பங்களை உணர்த்துகின்ற இந்நூலினை ஆர்வத்துடன் படித்து அறியாதவர் செந்தமிழ் மொழியின் பயனை அடையப் பெறாதவர்கள் ஆவார்கள்.

© Om Namasivaya. All Rights Reserved.