Go Back

22/03/21

நீறு சேர்வதோர்


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக கொடிமாடச் செங்குன்றூர், திருநணா, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கருவூர் ஆனிலை ஆகிய கொங்கு நாட்டுத் தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், கருவூர் தலத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் சோழநாடு வந்தடைகின்றார். அப்போது முதன்முதலாக அவர் சென்ற தலம் வாட்போக்கி என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். ஆனால் இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் திருப்பராய்த்துறை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் சொல்கின்றார். நீடும்=சிறப்பினில் நீண்ட, சிறப்பு மிகுந்த; கூடும் கருத்தொடு=மனம் ஒன்றிய உணர்வினராக; கோதில்=குறைகள் இல்லாத; அந்தணர் குலத்தில் உதித்த கவுண்டின்ய கோத்திரம் என்ற பிரிவினைச் சார்ந்தவராக திருஞானசம்பந்தர் இருந்தார் என்று நாம் அறிகின்றோம். அதனால் கவுணியர் என்று சேக்கிழார் பல இடங்களிலும் ஞானசம்பந்தரை குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரே சில பாடல்களில் கவுணியன் சம்பந்தன் என்று தன்னை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடுகின்றார். இறைவனின் சன்னதி முன்னர் பதிகம் பாடிய போதும், இறைவனை வணங்கித் தொழுத போதும், கண்களிலிருந்து கண்ணீர் மழையாகப் பொழிய தனது கைகள் இரண்டையும் தலை மேல் கூப்பியவராக உள்ளம் உருகி ஞானசம்பந்தர் நின்றார் என்று இந்த பாடலிலிருந்து நாம் அறிகின்றோம்.

நீடும் பராய்த்துறை நெற்றித் தனிக் கண்ணர் நண்ணிக்

கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல்மாலை

பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்திழியச்

சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்

பராய்த்துறை தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகமும், அப்பர் பெருமான் அருளிய ஒரு குறுந்தொகை பதிகமும் (5.30) நமக்கு கிடைத்துள்ளன. திருச்சி கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து பதினைந்து கி.மீ. தூரத்தில் உள்ள தலம். பராய் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்த இடம் என்பதால், பராய்த்துறை என்ற பெயர் வந்தது; வடமொழியில் இதனை தாருகமரம் என்று அழைப்பார்கள். பண்டைய நாளில் தாருகவனமாக இருந்த இடம் என்று கூறுவார்கள். இறைவனின் திருநாமம், தாருகவனேசுவரர், பராய்த்துறை நாதர், செல்வர்; சுயம்பு மூர்த்தம்; இறைவியின் திருநாமம் பசும்பொன் மயிலாம்பாள்; ஹேமவர்ணாம்பாள்; பிக்ஷாடனர் வேடம் தாங்கிச் சென்று, தாருவனத்து முனிவர்களின் செருக்கினை இறைவன் அழித்த இடம். இறைவனை அப்பர் பிரான் பராய்த்துறை பசும்பொன் என்று அழைக்கின்றார். மணிவாசகர் போற்றித் திருவகவலில் பராய்த்துறை மேவிய பரனே போற்றி என்று கூறுகின்றார். மேலும் சென்னிப்பத்து பதிகத்தின் நான்காம் பாடலில் தென் பராய்த்துறையாய் சிவலோகா என்று குறிப்பிடுகின்றார். முதலாம் பராந்தகச்சோழனின் காலத்தில் கட்டப்பட்ட கோயில். இந்திரன், குபேரன், சப்த ரிஷிகள், ஆகியோர் வழிபட்டு பலனடைந்த தலம். கருவறைக் கோஷ்ட மூர்த்தியாக அர்த்தநாரீஸ்வரர் இருப்பதை நாம் காணலாம். மிகவும் அழகான சிலை. அர்த்த மண்டபத்தில் பிக்ஷாடனர் உற்சவ மூர்த்தியை காணலாம். புரட்டாசி மாதம் பதினெட்டாம் தேதியில் சூரிய ஒளி சுவாமியின் இலிங்க உருவத்தில் விழுகின்றது. முருகப் பெருமான், தனது பாதங்களில் குறடு அணிந்திருப்பதை காணலாம். மூலவர் சன்னதிக்கு முன்னம் உள்ள தூண்களில் ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளி சிலைகளை காணலாம். தனி மண்டபத்தில் இருக்கும் தென்முகக் கடவுள், சிங்கங்கள் தாங்கி நிற்கும் தூண்கள் உடைய மண்டபத்தில், சிறந்த வேலைப்பாடு உடைய கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ளார். இவரை வீராசன தட்சிணாமூர்த்தி என்று கூறுவார்கள்.ஐப்பசி (துலா மாதம்) மாதம் முதல் நாளில் பராய்த்துறையில் உள்ள காவிரி படித்துறையிலும் கடை நாளில் மயிலாடுதுரையில் உள்ள காவிரி படித்துறையிலும் நீராடுதல் சிறப்பாக கருதப்படுகின்றது. கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும், எண்ணற்ற மனிதர்கள் தங்களது நீரினில் நீராடுவதால், தங்களிடம் படிந்துள்ள பாவக்கறையினை போக்கிக் கொள்ள துலாஸ்நானம் செய்கின்றனர் என்று நம்பிக்கை.

பாடல் 1:

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

பாறு சேர்வதொர் கையர் பராய்த்துறை

ஆறு சேர் சடை அண்ணலே

விளக்கம்:

பாறு=கழுகு; உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகளை கழுகுகளும் பருந்துகளும் சூழ்ந்து கொண்டு, அந்த தலையில் உள்ள தசைத் துணுக்குகளை உண்பது பழக்கம். மகாபாரத, இராமாயண போர்கள் நடந்த போது கழுகுகள் ஆங்கே திரிந்த செய்தி அந்த காவியங்களில் குறிப்பிடப்படுகின்றது. சிவபெருமான் தனது கையினில் ஏந்தியுள்ள பிரம கபாலத்தை கழகுகள் மொய்ப்பதில்லை; எனினும் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகளின் பொதுத் தன்மை கருதி கழுகுகள் அந்த தலையை நாடி வருவதாக பல தேவாரப் பதிகங்கள் கூறுகின்றன. அண்ணல்=தலைவர்; நேரிழை= அழகிய ஆபரணங்கள் அணிந்த பார்வதி தேவி; இந்த தலத்தினில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, பெருமான் பலி ஏற்கும் செயலை குறிப்பிட்டு இந்த பதிகத்தின் முதல் பாடல் உள்ள நிலை மிகவும் பொருத்தமான ஒன்று. அன்று தொடங்கிய பெருமானின் இந்த கருணைச் செயல் இன்றும் நடைபெறுவதாக அப்பர் பிரான் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம், கீழ்க்கண்ட செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1) பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

கான் அறாத கடி பொழில் வண்டினம்

தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்

ஊன் அறாததோர் வெண் தலையில் பலி

தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மிகுந்த விருப்பத்துடன் அவர் பலி ஏற்கின்றார் என்று இந்த பாடலில் அவர் கூறுகின்றார்.

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இந்த பாடலில் மாதொரு பாகனாக இறைவன் உள்ள தன்மையும் குறிப்பிடப்படுகின்றது. தோடுடைய செவியன் என்று மாதொரு பாகனாக இறைவன் உள்ள தன்மையை குறிப்பிட்டு தனது முதல் பதிகத்தை தொடங்கிய ஞானசம்பந்தர், மாதொரு பாகனின் உருவத்தை இங்கே கண்ட பின்னரும், அந்த உருவத்தைத் தனது பாடலில் குறிப்பிடாமல் அவரால் இருக்க முடியாது அல்லவா. இந்த பதிகத்தின் எட்டு பாடல்களில் (2–9) அடிகள் என்று பெருமானை அவர் குறிப்பிடுகின்றார். அடிகள் என்றால் தலைவர் என்று பொருள். அண்ணல்=தலைவர்; பெருமானை வந்தடைந்த பொருட்கள் அவரது பெருமையை மேலும் உயர்த்துகின்றன என்பதை நாம் உணர்கின்றோம்.

பொழிப்புரை

தனது உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டுள்ள சிவபெருமானின் திருமேனியின் ஒரு பாகம், பல விதமான நகைகள் அணிந்த பார்வதி தேவி வந்து சேர்ந்த கோலத்துடன் காணப்படுகின்றது. கழுகுகள் தேடி வரும் வண்ணம் உலர்ந்த தசைத் துணுக்குகள் நிறைந்ததால் புலால் நாற்றம் அடிக்கும் பிரம கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவராக பல இடங்களுக்கும் சென்று பலியேற்றுத் திரியும் பெருமான், வானிலிருந்து வேகமாக கீழே இறங்கிய கங்கை நதி சென்றடைந்த சடையினை உடையவர் ஆவார். அவரே திருப்பராய்த்துறை தலத்தினில் நமது தலைவராக உறைகின்றார்.

பாடல் 2:

கந்த மாமலர்க் கொன்றை கமழ்சடை

வந்த பூம்புனல் வைத்தவர்

பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை

அந்தம் இல்ல அடிகளே

விளக்கம்:

வந்த=கீழே இறங்கி வந்த: பைந்தண்=பசுமையும் அழகும் இணைந்த; கந்த=நறுமணம் வீசும்; பூம்புனல்=அழகிய கங்கை நதி; அந்தம் அல்ல=தாம் எல்லாவற்றிற்கும் அந்தம் செய்பவரே தவிரே பெருமான் தனக்கு அந்தம் என்பது இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவர் சிவபெருமான்; எந்த உயிரும் தான் பிறக்கப் போவதை முன்னமே அறிந்து கொள்ள முடியாது. தகுதியான உடலுடன் பொருத்தப்பட்டு பிறக்கும் வரை, உயிர் எதனையும் அறியாத நிலையில் முடங்கிக் கிடப்பதால், தான் உடலுடன் பொருத்தப்படும் நிலையை உயிரால் அறிந்து கொள்ள முடிவதில்லை; பிறக்கும் சமயத்தில் தான், உடலுடன் கருவி கரணங்களுடன் இணைக்கப்படுவதால், அந்த உடலின் உதவி கொண்டு, உயிர் தான் பிறந்ததை உணர்கின்றது. தனது கண்ணெதிரே பல உயிர்கள், தாங்கள் குடி கொண்டிருந்த உடல்கள் அழிந்து அந்தந்த உடல்களிலிருந்து பிரிந்து செல்வதைக் காணும் உயிர்கள், தனது உடலும் ஒரு நாள் அழிந்துவிடும் என்ற உண்மையை உயிர்கள் உணர்கின்றன. மேலும் பல நூல்கள் வாயிலாகவும் பெரியோர்கள் மூலமாகவும், உயிர் நிலையான தன்மை உடையது என்பதை அறிந்து கொள்வதால், இந்த பிறவியில் கொண்டிருந்த உடல் அழிந்து பட்டாலும், மீண்டும் வேறோரு உடலுடன் இணைக்கப்பட்டு பிறப்போம் என்பதையும் நாம் அறிகின்றோம். என்பதால், முடிவு ஏற்படும் உயிருக்கு தோற்றம் ஏற்படும் என்பதையும் முடிவு தோற்றத்திற்கு அடிகோலுகின்றது என்பதும் நமக்கு புலனாகின்றது. பெருமான் அந்தம் என்பதே இல்லாதவன் என்பதால், அந்தத்தை தொடரும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அந்தமும் ஆதியும் இல்லாதவனாக இருக்கும் பெருமான், அனைத்துப் பொருட்களுக்கும் அந்தமுமாகவும் ஆதியாகவும் இருக்கின்றான் என்பதையும் நாம் உணர்கின்றோம். பொருட்களுக்கும் உயிர்களுக்கும் இந்த கருத்தினை வலியுறுத்தவே அந்தம் இல்லாத பெருமான் ஆதி இல்லாதவனாகவும் இருக்கின்றான் என்று சில தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன.

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (1.39), திருஞானசம்பந்தர் அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் என்று தொடங்குகின்றார். அந்தம்=முடிவு; சங்கார காரணனாக இறைவன் இருக்கும் நிலை; ஆதி=தொடக்கம், சங்கார காரணனாக இருக்கும் இறைவன், மீண்டும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நமது கண்ணெதிரே விரிந்து பரந்து காணப்படும் உலகும், உலகிலுள்ள பலவகையான பொருட்களும் நிலையானவை என்ற மாயத் தோற்றத்தை அளிப்பதால், அந்த நிலை உண்மை நிலையல்ல என்பதை தெளிவுபடுத்தும் சம்பந்தர், இறைவன் ஒருவனே நிலையானவன் என்றும், அவனே உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இந்த உலகமும் உலகப் பொருட்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் ஆதியும் ஆகிய அண்ணல் என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் ஒவ்வொரு ஊழியின் முடிவிலும், உலகத்தை அழிப்பதும் மீண்டும் உலகத்தை படைப்பதும் செய்பவன் இறைவன் என்பதனை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து

இலங்க

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்

சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப

வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே

உலகத்தின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகத்தில் உள்ள உயிர்களையும் உலகப் பொருட்களையும் பாதுகாப்பதும் இறைவன் தான் என்பதை சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை குறிப்பட்டு சம்பந்தர் உணர்த்துகின்றார். கங்கை நதியை பெருமான் தனது சடையில் மறைத்த செய்தியை குறிப்பிட்டு, பெருமான் கரத்தல் (மறைக்கும்) தொழிலை புரிவதை நமக்கு உணர்த்துகின்றார். உலகினை மீண்டும் மீண்டும் படைப்பதே, உயிர்கள் தங்களது எஞ்சிய வினைகளை அனுபவித்து கழித்துக் கொண்டு, தன்னை வந்தடையவேண்டும் என்று நோக்கத்துடன் என்பதால், உயிர்களுக்கு இறைவன் தொடர்ந்து அருள் புரிந்து கொண்டிருப்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவன் தனது கூத்து மூலம், ஐந்து தொழில்களை தொடர்ந்து செய்யும் தன்மையை உணர்த்துவதை, தில்லைச் சிதம்பரத்தில் உணர்ந்த ஞானசம்பந்தர், அந்த நினைவிலே மகிழ்ந்து திளைத்தார் போலும். அதனால் தான், தில்லைக் கூத்தபிரானைக் கண்டு மகிழ்ந்த தான் சென்ற அடுத்த தலமாகிய திருவேட்களம் பதிகத்தின் முதல் பாடலிலும் பெருமான் ஐந்து தொழில்களையும் புரியும் தன்மையை குறிப்பிடுகின்றார்.

புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.29.11) திருஞானசம்பந்தர், அந்தமும் ஆதியாக இருக்கும் பெருமான் நடுவாகவும் இருந்து உயிர்களை பாதுகாக்கின்றான் என்று கூறுகின்றார். அந்தம் முதலாகி நடுவாய பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்ற திருவாசகம் சிவபுராணத் தொடரினை நினைவூட்டுகின்றது. ஆதி, அந்தம் நடுவு என்ற சொற்கள் உயிர்களின் தோற்றம் முடிவு மற்றும் தோற்றம் முடிவு ஆகிய நிலைகளின் இடையே உள்ள நிலை ஆகியவற்றை குறிக்கும். அந்தம்=அழிக்கும் தொழிலைச் செய்யும் உருத்திரன், முதல்=படைப்புத் தொழிலை செய்யும் பிரமன், நடுவு=இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உயிரினை காக்கும் தொழிலைச் செய்யும் திருமால். சிவபெருமான், பிரமன், திருமால் உருத்திரன் ஆகிய மூவராக இருக்கும் நிலையும், அந்த மூவரினும் வேறுபட்டு இருக்கும் நிலையும் திருவாசகம் சிவபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன் மேல்

அந்தம் முதலாகி நடுவாய பெருமானைப்

பந்தன் உரை செய்த தமிழ்கள் பத்தும் இசை கூர

வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே

அனைத்து உயிர்களுக்கும் அந்தமாகவும் ஆதியாகவும் பெருமான் இருக்கும் நிலை, வெண்காடு தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் முதல் பாடலிலும் (3.15.1) உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் பெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார்.

மந்திர மறையவை வானவரொடும்

இந்திரன் வழிபட நின்ற எம்மிறை

வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய

அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே

உலகின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமானை எந்தை பெருமான் இறைவன் என்று பிரமனும் திருமாலும் தொழ நின்ற ஈசன் என்று திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.71.9) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான்=பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் இந்த தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம். அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். இறைவனைப் போன்று அடியார்களும் தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டவர்களாக அன்றைய நாளில் இருந்ததை நாம் அறிகின்றோம்.

அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும்

இவர்கள்

எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய்

ஈசன் இடமாம்

சிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர்

அவர்கள்

வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே

திருவீழிமிழலை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.95.2) அந்தமும் ஆகியுமாகி நின்றீர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெந்தழல் ஓம்பும் மிழலை என்று இங்கே வாழ்ந்த அந்தணர்கள் வேள்விகளை இடைவிடாது செய்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவரைப் போன்று வீழிமிழலையில் ஐந்நூறு அந்தணர்கள் சிறப்பாக சிவபிரானை வழிபாடு செய்ததாக கூறுவார்கள். உயிரினை, அதனுடன் பிணைக்கப் பட்டுள்ள வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தி, அந்த உடல் உலாவும் உலகங்களில் உள்ள பொருட்களின் மீது பற்றுதலை ஏற்படுத்தியும், மற்றும் பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் பந்தங்களிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவும் இறைவன் வழிவகுக்கின்றார். இந்த கருத்தைத் தான் பந்தமும் வீடும் பரப்புகின்றீர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

அந்தமும் ஆதியாகி நின்றீர் அண்டம் எண் திசையும்

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்றுகந்தீர்

வெந்தழல் ஓம்பும் மிழலையுள்ளீர் என்னைத் தென் திசைக்கே

உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

திருச்சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.44.9) ஆதியும் அந்தமுமாகி நிற்பவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிறிந்தான்=பிறவாக வேறு ஒரு பொருளாக மாறுபட்டு இருத்தல்; பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து அவர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கும் நிலை; எறிந்தான்=அழித்தவன்; அழிவிலிருந்து தான் தோற்றம் பிறக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அழித்தவன் என்றும் ஏழ் உலகங்களுக்கும் முன்னே தோன்றியவன் என்றும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

எறிந்தானே எண் திசைக்கும் கண்ணானே ஏழுலகம் எல்லாம்

முன்னாய் நின்றானே

அறிந்தார் தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமுமாய்

ஆகி அங்கே

பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று

எப்போதும் வந்து நெஞ்சில்

செறிந்தானே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே

உன் அபயம் நானே

இவ்வாறு ஆதியும் அந்தமுமாகி நிற்கும் இறைவனின் தன்மையை எவரும் அளந்து அறிய முடியாது என்று சுந்தரர் ஒரு பொது பதிகத்தினில் (7.44.7) கூறிகின்றார். தார்=மாலை; ஒரே இடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டிராமல், ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களைக் கொண்டிருப்பதால், அவன்பால் அன்பு வைத்துள்ள அடியார்கள் எங்கு சென்றால் அவனை பார்க்க முடியும் என்று திகைக்கின்றனர் என்றும், ஆயிரம் பெயர்கள் உடையவனாக இருப்பதால் எந்த பெயரைச் சொல்லி அவனது இருப்பிடத்தைக் கேட்டு அறியமுடியும் என்று அடியார்கள் கவலை கொள்வதாகவும் நகைச்சுவையாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

தாரும் தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்

ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும்

ஊரும் ஒன்றில்லை உலகெலாம் உகப்பார் தொழப்

பேரும் ஓராயிரம் என்பரால் எம் பிரானுக்கே

அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் உள்ள பெருமான் தான், முதலை உண்ட பாலனை மீட்டுத் தர முடியும் என்ற கருத்துடன் பெருமானை வேண்டும் சுந்தரர், அவினாசி என்று பெருமானை அழைத்து, குளத்தின் கரையினில் பிள்ளை தோன்றும் வண்ணம் கொணர்ந்து தர வேண்டும் என்று முதலைக்கு ஆணை இடவேண்டும் என்று இறைவனிடம் கோருகின்றார். இந்த பாடல் புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடல் (7.92.4)

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்

அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே

கரைக் கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

மணிவாசகர் திருவெம்பாவை பதிகத்தின் இறுதிப் பாடலில் இறைவனின் திருப்பாதங்கள் தான் ஆதியும் அந்தமுமாக இருக்கின்றன என்று கூறுகின்றார். மேலும் அந்த திருப்பாதங்கள், வாழ்வின் தோற்றமாகவும், போகமாகவும், இறுதியாகவும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது. இதன் மூலம் இறைவனின் திருநாமமே, நமது வாழ்வின் அனைத்தும் என்பதும் இங்கே கூறப்படுகின்றது. அத்தகைய திருவடிகளை நாம் போற்றி வழிபட வேண்டியது நமது கடமை என்று மணிவாசகர், பதிகத்தை முடிக்கின்றார். இந்த பாடலில் பாதம் என்ற பொருள் பட வேறு வேறு சொற்கள் கையாளப்பட்டுள்ளது இந்த பாடலின் மற்றொரு சிறப்பாகும். திருவெம்பாவை பதிகத்தினையே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி என்று தானே மணிவாசகர் தொடங்குகின்றார்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்

பொழிப்புரை:

நறுமணம் கமழும் கொன்றை மலர்களைத் தனது சடையினில் மணம் வீசும் வண்ணம் பொருத்தி வைத்துள்ள பெருமான், மிகுந்த வேகத்துடன் மிகுதியான நீர்ப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த அழகிய கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து வைத்துள்ளார். பசுமையும் குளிர்ச்சியும் இணைந்த மாதவிக் கொடிகள் சூழ்ந்த பராய்த்துறை தலத்தினில், ஆதியும் அந்தமமும் இல்லாத பெருமான் உறைகின்றார்.

பாடல் 3:

வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து

ஓத நின்ற ஒருவனார்

பாதி பெண்ணுரு ஆவர் பராய்த்துறை

ஆதி ஆய அடிகளே

விளக்கம்:

முறையால் விரித்து=அதற்குரிய பண்களுடன் இசைத்து; வேதர்=வேதங்களை உடையவர்;

பொழிப்புரை

வேதங்களை முதன் முதலில் முறையான இசையுடன் இணைத்து விரித்து ஓதியதால், அந்த வேதங்களை உடையவராக விளங்கும் ஒப்பற்ற பெருமான், தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்தவர் ஆவார்; எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்கும் அவர் பராய்த்துறையில் உறையும் தலைவர் ஆவார்.

பாடல் 4:

தோலும் தம் அரை ஆடை சுடர் விடு

நூலும் தாம் அணி மார்பினர்

பாலு நெய் பயின்றாடு பராய்த்துறை

ஆல நீழல் அடிகளே

விளக்கம்:

தோல்=புலித்தோல் அரை=இடுப்பு; தாருகவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தோலினை ஆடையாக உடுத்திக் கொண்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. பயின்றாடுதல்= தொடர்ந்து நீராடுதல்; வேதங்களை விரித்து ஓதியவர் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட ஞான சம்பந்தருக்கு இறைவன், வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு உணர்த்திய செய்கை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் உள்ள வீராசன தட்சிணாமூர்த்தி சன்னதி சிறப்பு வாய்ந்தது. கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளினை விளக்கியவர் சிவபெருமான். இந்த செய்தியை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. இதனை மிகவும் அழகாக உணர்த்தும், திருஞான சம்பந்தர் அருளிய சேய்ஞலூர் பதிகத்தின் முதல் பாடல் (1.48.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. நூல்=வேதம் மற்றும் சிவ ஆகமங்கள்; மால்=ஐயப்பாடு; மால் என்ற சொல்லுக்கு காதல் மயக்கம் என்று ஒரு பொருளும் உள்ளது. என்னே=வியப்புக் குறிச்சொல். பெருமானின் கருணைத் திறத்தினை வியந்து சொல்லியது. நல்லறம்=சிவதன்மம்; நால்வர்=சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், சனகர் ஆகியோர்; பிரமனின் மனதிலிருந்து தோன்றியவர்கள் என்பதால் மானச புத்திரர்கள் என்று கூறுவார்கள்.

நூல் அடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை

ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே

சேல் அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

வேதங்கள் ஆகமங்கள் ஆகிய பல நூல்களைக் கற்ற பின்னரும், பெருமானின் திருவடியை கூறும் மார்க்கம் தெளிவாக புரியாமல், தங்களது அஞ்ஞானம் நீங்காததால், உண்மை யாது என்று புரிந்து கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த சனகர் சனாதனர் சனந்தனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் தங்களது ஐயப்பட்டினை விளக்க வேண்டும் என்று பெருமானிடம் வேண்ட, அதற்கு இசைந்த பெருமானும் ஆலமரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவாறு அரிய மறைகளின் பொருளை விளக்கிய அவரது கருணைத் திறம் மிகவும் வியக்கத்தக்கது. அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

பொழிப்புரை;

புலித்தோலினைத் இடுப்பினில் ஆடையாகக் கட்டிக் கொண்டவரும், ஒளி பொருந்திய முப்புரி நூலினை தனது மார்பினில் அணிந்தவரும் ஆகிய சிவபெருமான், தொடர்ந்து பாலும் நெய்யும் கொண்டு நீராடுகின்றார். அவரே, ஆல மரத்தின் நீழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கு வேதங்களுக்கு விளக்கம் அறிவித்தவரும், பராய்த்துறை தலத்தினில் உறையும் எமது தலைவரும் ஆவார்.

பாடல் 5:

விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல்

இரவில் நின்று எரி ஆடுவர்

பரவினார் அவர் வேதம் பராய்த்துறை

அரவம் ஆர்த்த அடிகளே

விளக்கம்:

விரவி=கலந்து; திருமேனி முழுவதும் மறையும் வண்ணம் பூசுதல்; மெய்=உண்மை; பரவுதல்=புகழ்ந்து பேசுதல்; வேதம் பரவுதல்=வேதங்களால் புகழ்ந்து பேசப்படுபவர்; நீறு மெய் என்ற சொற்களை மெய் நீறு என்று மாற்றி பொருள் கொள்ளவேண்டும். மெய்ப்பொருளாகிய நீறு, என்றும் அழிவில்லாத நீறு என்பதே பொருள்; உண்மையில் உள்ளது நீறு சத்தியமாவது நீறு என்ற திருநீற்றுப் பதிகத்தின் சொற்றொடர்கள் நினைவுக்கு வருகின்றன. பெருமான் தீயினில் நின்று ஆடுவது, ஊழித்தீ என்பதால் இங்கே இரவு என்பது பிரளய காலத்து இரவினையே குறிக்கும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்ற திருவாசகத் தொடர் நினைவுக்கு வருகின்றது. அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் எரி ஆடுமாறே என்று தீயினில் நின்று பெருமான் நடனம் ஆடும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் (4.22.1). பெருமான் நடனம் ஆடுவது ஆணவ மலம் ஒடுங்கும் பொருட்டு என்று கூறுகின்றார். நறவம்=தேன்: நாறுதல்=நறுமணம் வீசுதல் துஞ்சடை இருள்=மரணத்திற்கு காரணமாகிய ஆணவமலம். ஆணவமலத்தின் காரணமாகத் தான், உயிர்கள் வினைகளைப் பெருக்கிக் கொண்டு, அந்த வினைப்பயன்களை அனுபவிக்க கணக்கற்ற பிறப்புகள் எடுக்க நேரிடுகின்றது, இறப்பே பிறப்புக்கு காரணம் என்பதால், நமது இறப்புக்கும் ஆணவ மலமே காரணம் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னிச்

நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவ நாறு

மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே

துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே

பொழிப்புரை:

தனது திருமேனி முழுவதும் மறையும் வண்ணம் திருநீற்றினை உடலெங்கும் பூசிக்கொண்டு இருப்பவர் சிவபெருமான்; அவர் உலகம் எங்கும் இருள் சூழ்ந்து பகல் இரவு என்ற பேதம் இன்றி, அனைத்துப் பொழுதுகளும் நள்ளிரவாக தோன்றும் சமயத்தில் தீயினிடை நின்ற வண்ணம் நடனம் ஆடுகின்றார். நான்கு வேதங்களும் அவரைப் புகழ்ந்து பாடுகின்றன. தனது இடுப்பினில் கச்சையாக பாம்பினை இறுகக் கட்டிய அவர், பராய்த்துறை தலத்தினில் தலைவனாக உறைகின்றார். ,

பாடல் 6:

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறை கொள் கண்டம் உடையவர்

பறையும் சங்கும் ஒலி செய் பராய்த்துறை

அறைய நின்ற அடிகளே

விளக்கம்:

அறைய=பேரொலி எழுப்ப; எப்போதும் மறையோதும் பரமனாக விளங்கும் பெருமான், தேவைப்பட்ட நேரத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மையாளராக விளங்குகின்றார் என்பதை குறிக்கும் வண்ணம், உம்மைத் தொகை மறையுடன் இணைந்துள்ளது. துள்ளி விளையாடும் மான் கன்றினை பெருமான் தனது கையில் ஏந்திய நிகழ்ச்சியும் இந்த தலத்தினில் நடைபெற்றது தான். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் செய்து, புலி, மதயானை, பாம்பு, முயலகன் முதலான கொடிய தன்மை கொண்ட உயிர்களை பெருமான் மேல் ஏவினார்கள். புலியைக் கொன்றும், யானையின் தோலை உரித்தும், முயலகனை தனது காலில் கீழே அழுத்தி வைத்து அவனது வலிமையை முழுவதுமாக அடக்கியும், பாம்பினைத் தனது கரங்களில் கங்கணமாகவும், தோளில் ஆபரணமாகவும், கழுத்தினில் மாலையாகவும் அணிந்த பெருமான், தன் மீது ஏவப்பட்ட, வெறி ஊட்டப்பட்ட மான் கன்றினை கொல்லவில்லை. அதற்கு பதிலாக அதன் தன்மையை முன் போல் துள்ளி விளையாடும் கன்றாக மாற்றிவிட்டு தனது கையினில் ஏந்திக் கொண்டார். இந்த நிகழ்ச்சியே இங்கே கையில் மான்மறி ஏந்தியவர் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி நமக்கு மற்றொரு உண்மையையும் உணர்த்துகின்றது. எவராலும் அடக்க முடியாத ஆணவ மலத்தினை அடக்கும் வல்லமை பெருமான் ஒருவருக்கே உண்டு என்பதையும், அவரது அருளினைப் பெற்ற பின்னரே நாமும் ஆணவ மலத்தினை அடக்கும் தன்மையை பெறுவோம் என்பதையும் உணர்த்துகின்றது. அதே போன்று துள்ளித் திரியும் மனதினை அடக்கும் ஆற்றல் பெருமான் ஒருவருக்கே உண்டு என்பதையும், நாமும் நமது மனதினை நிலை நிறுத்தி ஒரே பொருளில் கவனம் செலுத்தும் வண்ணம் மாற்றும் ஆற்றலை அவரை வழிபட்டுப் பெறலாம் என்பதையும் உணர்த்துகின்றது. மறையும் என்ற சொல்லில் உள்ள உம்மைத் தொகை, ஆகமங்களை அருளிய பெருமான் வேதங்களையும் அருளினார் என்பதை உணர்த்துகின்றது என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. அறை என்ற சொல்லுக்கு மந்திரச் சொல் என்ற பொருளும் பொருந்தும். எனவே மந்திரச் சொற்களாக உள்ள பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சொற்றுணை வேதியன் என்று வேதங்களில் உள்ள சொற்களுக்கு துணையாக இருப்பவன் சிவபெருமான் என்று உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது.

பொழிப்புரை:

வேதங்களை எப்போதும் ஓதிக்கொண்டு இருக்கும் பெருமான், தன் மீது ஏவப்பட்ட வெறி ஊட்டப்பட்ட மான் கன்றினை அடக்கி, துள்ளித் திரியும் சாதுவான கன்றாக மாற்றி, தனது கையினில் ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். மானின் தன்மையை மாற்றியது போன்று, ஆலகால விடத்தின் தன்மையையும் மாற்றி, அந்த விடத்தினால் எவருக்கும் எந்த விதமான கேடும் விளையாத வண்ணம் தனது கழுத்தினில், அந்த விடத்தின் கறை கருமணி போல் தோன்றும் வண்ணம் தேக்கிக் கொண்டவர் சிவபெருமான்; அவர், பறை சங்கு போன்ற இசைக்கருவிகள் பேரொலி எழுப்பும் வண்ணம் இசைக்கப்படும் திருவிழாக்கள் நிறைந்த பராய்த்துறை தலத்தினில் அடிகளாக உறைகின்றார்.

பாடல் 7:

விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்

சடையில் கங்கை தரித்தவர்

படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை

அடைய நின்ற அடிகளே

விளக்கம்:

அடைய=பொருந்தும் வண்ணம்; விடையும் ஏறுவர் என்று சிறப்பு உம்மைத் தொகை கொடுத்து, பெருமான் இடபத்தினை தனது வாகனமாக ஏற்றுக் கொண்ட செய்தி இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. மிகவும் எளிமையான தன்மை உடையவராக விளங்கும் பெருமான், குதிரை யானை சிங்கம் புலி போன்று உயர்ந்ததாக கருதப்படும் விலங்குகளையோ தேரையோ தனது வாகனமாக ஏற்றுக் கொள்ளாமல் இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. தனக்கு பகைவராக எவரும் இல்லாததால் மழுவாளினை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏதுமின்றி, எந்த கறையும் படாமல் வெண்மை நிறத்துடன் மழுவாள் இருக்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் மழு ஆயுதம் தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட ஆயுதம் என்பதையும் நாம் கந்தபுராணத்திலிருந்து அறிகின்றோம். அந்த ஆயுதம் எந்த விதமான எவருக்கும் செய்யாத வண்ணம், சிவபெருமான் தனது கையினில் மழு ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டமையால் கறை ஏதுமின்றி இந்த ஆயுதம் காணப்படுகின்றது. சீர்காழி தலத்தினில் இரண்டாவது தளத்தில் இருக்கும் கயிலாயக் காட்சியில் நாம் சிவபெருமானை மான் மற்றும் மழுவின்றி இருக்கும் கோலத்தில் காணலாம். இந்த காட்சி நமக்கு, சீர்காழி தலம் பிரளயத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் மிதந்தது என்பதையும், மீண்டும் உலகம் தோற்றுவிக்கப் பட்ட பின்னரே தாருகவனத்து நிகழ்ச்சிகள் நடந்தன என்பதையும் உணர்த்துகின்றன.

சீர்காழியின் இந்த திருக்கோலம், வீழிமிழலை மற்றும் சீர்காழி தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் (1.4) ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப் படுகின்றது. ஞானசம்பந்தர் வீழிமிழலை தலத்தினில் தங்கியிருந்த போது, சீர்காழி அந்தணர்கள் அவரை சந்தித்து விரைவில் சீர்காழி திரும்புமாறு வேண்டினார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்ற சம்பந்தர், பெருமானின் திருவுள்ளக் குறிப்பினை உணரும் பொருட்டு, திருக்கோயிலுக்கு சென்ற போது, திருக்கோயில் விமானத்தில், சீர்காழியில் இருக்கும் கயிலாயக் கோலம் பெருமானால் ஞானசம்பந்தருக்கு காட்டப்படுகின்றது. இதன் மூலம், இந்த தலத்தினில் தங்கியவாறே சீர்காழி தலத்து பெருமானின் கோலத்தினைக் காணலாம் என்று பெருமான் உணர்த்துவதாக கருதிய ஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் வீழிமிழலை தலத்தில் தங்கினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், வீழிமிழலை தலத்தினில் கடும் பஞ்சம் ஏற்பட, அப்போது பெருமானின் திருவருளால் தினமும் பொற்காசுகள் பெற்ற ஞானசம்பந்தரும் அப்பர் பெருமானும், தலத்து அடியார்களின் பசியினைப் போக்கினார்கள் என்பதையும் பெரியபுராணம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு பெருமான் உணர்த்தியதை, சம்பந்தர் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். செறி=செறிந்த; முளரித்தவிசு=தாமரை மலரின் இதழ்கள்; ஆறும் செற்று=காமம் முதலான அறுவகைக் குற்றங்களை நீக்கி; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு;

செறி முளரித் தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றுருந்தானும்

மற்றைப்

பொறி அரவத்து அணையானும் காணாப் புகலி நிலாவிய புண்ணியனே

எறி மழுவோடு இளமான் இன்றி இருந்த பிரான் இது என்கொல் சொல்லாய்

வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

பொழிப்புரை:

இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான், தனது திருமேனி முழுவதும் வெண்மை நிறம் கொண்ட திருநீற்றினை பூசியவராக காணப்படுகின்றார். அவர் உலகினை புரட்டிப் போடும் நோக்கத்துடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த, கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றவராக உள்ளார்; பராய்த்துறை தலத்தில் உறையும் தலைவராக விளங்கும் அவர், தனது கையினில் வெண்மை நிறம் கொண்ட மழுவாள் படையாக பொருந்தி இருக்கும் வண்ணம் ஏந்தியவராக உள்ளார்.

பாடல் 8:

தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை

நெருக்கினார் விரல் ஒன்றினால்

பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை

அருக்கன் தன்னை அடிகளே

விளக்கம்:

தருக்கு=செருக்கு; தேவர்கள் எவராலும் தனக்கு மரணம் ஏற்படாது என்று வரம் வாங்கியமையல் தனது வலிமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால், சிவபெருமானால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்துடன், அவர் வீற்றிருக்கும் புனிதமான மலை என்பதையும் கருதாமல், அரக்கன் இராவணன், கயிலை மலையைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடரவேண்டும் என்று முடிவுசெய்த தன்மையை, தருக்கு என்ற சொல் மூலம் ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பத்து தலைகளுடன் பிறந்தமையால் அரக்கன் இராவணனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தசக்கிரிவன் தான். அவனுக்கு இராவணன் என்ற பெயரை சூட்டியவரே சிவபெருமான் தான். வாளோடு நாமமும் ஈந்தார் சிவபெருமான் என்று பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இராவணன் என்ற சொல்லுக்கு உலகமெங்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அழுதவன் என்று பொருள். பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்ற, கயிலை மலையின் கீழே அமுக்குண்டு, தனது உடல் கூழாக மாறிவிடும் நிலையில் இருந்ததை உணர்ந்த, அரக்கன், பெருமானின் தயவினை வேண்டி சாமகானம் பாடிய போது அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், தனது கால் விரலால் ஏற்பட்ட அழுத்தத்தை தளர்த்தவே, இராவணனின் துன்பம் நீங்கியது என்று வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டப் பகுதி கூறுகின்றது. இதே பகுதியில் அவனை சிவபெருமான் இராவணன் என்று அழைத்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த செய்தி தான், அரக்கனது இயற்பெயரைக் குறிப்பிட்டு இங்கே உணர்த்தப் படுகின்றது. பருக்கினார்= பருகச் செய்தார்; நுகரச் செய்தார்; நாளோடு வாளும் நாமமும் கொடுத்து அரக்கனை இன்பத்தில் ஆழ்த்தி, இன்பத்தினை பருகச் செய்தமை பருக்கினார் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

சிலர் அருக்கன் என்பதற்கு சூரியன் என்று பொருள் கொண்டு, தக்கனது வேள்வியில் பங்கேற்ற சூரியனின் பல தகர்க்கப்பட்ட செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது என்று விளக்கம் கூறுகின்றனர். பருங்குதல் என்றால் பிடுங்குதல் என்று பொருள். எதுகை கருதி பருக்கினார் என்று திரிந்ததாக கூறுவார்கள். பொதுவாக ஞானசம்பந்தரின் பதிகத்து எட்டாவது பாடல்களில் அரக்கன் இராவணனுக்கு பெருமான் அருளிய குறிப்பு காணப் படுவதால், இறைவனின் அருட்செயலை உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை:

தனது உடல் வலிமையாலும், தான் பெற்றிருந்த வரத்தின் தன்மையாலும் செருக்கு அடைந்தவனாகத் திரிந்த அரக்கன் இராவணனை, கயிலை மலையின் கீழே அமுங்கி நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். பின்னர் அரக்கன் இராவணன், சாமகானம் பாடியதால், தனது உள்ளம் குளிரவே, அவனுக்கு பல வரங்கள் அளித்து இன்பங்கள் நுகரச் செய்த கருணையாளராகிய பெருமான் உறைவது பராய்த்துறை தலமாகும்.

பாடல் 9:

நாற்ற மாமாலரானொடு மாலுமாய்த்

தோற்றமும் அறியாதவர்

பாற்றினார் வினையான பராய்த்துறை

ஆற்றல் மிக்க அடிகளே

விளக்கம்:

நாற்றம்=நறுமணம்; மாமலர்=சிறப்பு வாய்ந்த தாமரை மலர்; தோற்றம்=திருவடி திருமுடி காணப்பெறும் தோற்றம்; பாற்றுதல்=சிதற அடித்தல்;

பொழிப்புரை:

நறுமணமும் சிறப்பும் வாய்ந்த தாமரை மலரின் உறையும் பிரமனும், திருமாலும், தனது திருமுடியையும் திருவடியையும் காண முடியாத வண்ணம், நெடிய நீண்ட நெருப்புத் தழலாக உயர்ந்த தோற்றம் உடையவர் சிவபெருமான். திருமால் பிரமன் ஆகிய இருவரும் தங்களது வினைகளின் தாக்கம் காரணமாக இறைவனது அடியையும் முடியையும் காண முடியாமல் வருந்தினார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுது வணங்க, அவர்களது தீவினைகளைச் சிதறடித்து , இறைவன் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்தார். இத்தகைய ஆற்றல் உடைய அடிகள், திருப்பராய்த்துறை தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 10:

திருவிலிச் சில தேரமண் ஆதர்கள்

உருவிலா உரை கொள்ளேலும்

பரு விலால் எயில் எய்து பராய்த்துறை

மருவினான் தனை வாழ்த்துமே

விளக்கம்:

திரு=பெருமானின் அருட்செல்வம்; தேரமண்=தேரர் எனப்படும் புத்தர்கள் மற்றும் அமணர் என்று சொல்லப்படும் சமணர்கள்; ஆதர்கள்=அறிவில்லாதவர்கள்; உருவிலா=பொருளற்ற; உருப்படியற்ற, நன்மை பயக்காத; கொள்ளேலும்=ஏற்றுக் கொள்ளாதீர். உண்மைக்கு மாறான சொற்கள் என்பதால் பொருளற்ற சொற்கள் என்று கூறுகின்றார். பரு=மலை; எயில்=கோட்டைகள்; மருவுதல்=பொருந்தி இருத்தல்;

பொழிப்புரை:

பெருமானின் அருட்செல்வம் அடையப் பெறாத சிலராகிய புத்தர்களும் சமணர்களும், அறிவற்ற கீழ் மக்களாக சொல்லும் பொருளற்ற சொற்களை, உலகத்தவரே நீங்கள் பொருட்படுத்தாமல் ஒதுக்கித் தள்ளுவீர்களாக. மேரு மலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் அம்பினைப் பூட்டி எய்தி, பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்த சிவபெருமான், பராய்த்துறை தலத்தினில் பொருந்தி உறைகின்றார். அவரை வணங்கி வாழ்த்துவீர்களாக.

பாடல் 11:

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்

செல்வர் மேல் சிதையாதன

செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்

செல்வமாம் இவை செப்பவே

விளக்கம்:

சிதையாதன=அழிவற்ற; இந்த பாடலில் செல்வர் என்று பெருமானை ஞானசம்பந்தர் அழைக்கின்றார். செல்வர் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. அந்த பெயர் வந்ததற்கான காரணத்தை நாம் இங்கே காண்போம். முன் காலத்தில் இந்த இடம் தான் தாருக வனமாக இருந்தது. இங்கு தவம் புரிந்து வந்த முனிவர்கள் அவர்கள் செய்யும் கருமமே மோட்சத்தை கொடுக்கும் என்றும் கடவுள் என்று ஒருவர் தேவையில்லை என்று கூறிக்கொண்டு அகந்தையில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் இறைவனை மறந்தது மட்டும் அல்லாமல், இறைவனை இகழவும் செய்தனர். தாருகவனத்து முனிவர்கள் தங்களது அறிவு காரணமாக மிகுந்த கர்வம் உடையவர்களாய் இருந்துவந்தனர். அவர்களது மனைவியர்களும் தங்களது அழகு மற்றும் கற்பு நெறி குறித்து மிகுந்த பெருமை உடையவர்களாய் இருந்தனர். தங்களது அறிவு திறமை, ஒழுக்கம், தவம் முதலிய பண்புகளால், அந்த முனிவர்கள் தாங்கள் மும்மூர்த்திகளுக்கு சமமான நிலை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, தாங்கள் நினைத்தால் மும்மூர்த்திகள் போல எதையும் சாதிக்க முடியும் என நம்பினார். இந்த தற்பெருமையின் பயனாக அவர்களின் இறை நம்பிக்கை குறையலாயிற்று.

சிவபிரான் அவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த விரும்பி திருமாலுடன் தாருகாவனம் சென்று அடைந்தார். சிவபிரான், பிட்சாடனர் வடிவத்திலும் திருமால் மோகினி வடிவத்திலும் அங்கு சென்றனர். பிட்சாடனரின் அழகு கண்டு மயங்கி முனிவர்களின் மனைவிகள் தங்களது வீட்டுக் கடமைகளை மறந்து, தங்களது ஆடைகள் நழுவுவதை கூட உணராமல், சிவபிரான் பின்னர் செல்லத் துவங்கினர். தமது மனைவியர்களின் நிலை கண்டு கோபமுற்ற முனிவர்கள், இதற்கு காரணமான சிவனை அழிக்க தீர்மானம் செய்தனர், முனிவர்கள் அனைவரும் கூடி ஒரு வேள்வி தொடங்கி, அந்த வேள்வி மூலம் ஒரு புலியைப் படைத்து, அந்த புலியை சிவபிரான் மீது ஏவினர். சிவபிரான் அந்த புலியின் தோலை உரித்து, அந்த தோலையே ஆடையாக அணிந்துகொண்டார். புலி பயனற்று போனதை கண்ணுற்ற முனிவர்கள் பாம்புகளைத் தோற்றுவித்து சிவபிரான் மீது ஏவினர். சிவபிரான் அந்த பாம்பைகளை அடக்கி, பாம்பையே தனக்கு அணியாக கொண்டு தனது உடலில் பல இடங்களிலும், தனது கழுத்தில் மாலையாகவும் அணிந்து கொண்டார். அதனை கண்ட முனிவர்கள் முயலகன் எனும் அரக்கனை தோற்றுவித்து அந்த அரக்கனை சிவபிரானை கொல்வதற்காக அனுப்பினர். முயலகனை அடக்கிய சிவபிரான் முயலகனை தரையில் போட்டு மிதித்தார். தங்களது முயற்சிகள் பயனற்று போன நிலையில், முனிவர்களுக்கு உண்மை நிலை புரிந்தது. சிவபிரானை அணுகி வணங்கி தங்களது தவறுகளை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அவர்களது வழிபட்டால் மனம் மகிழ்ந்த சிவபிரான், ஆனந்த கூத்து ஆடினார். அந்த கூத்தைக் காண அனைத்து தேவர்களும் கூடினர்; கண்டு மகிழ்ந்தனர். மோகினி வடிவத்துடன் சிவபிரானை தொடர்ந்து சென்ற திருமாலும் அந்த ஆனந்தக் கூத்தை கண்டு மகிழ்ந்தார். சிவபிரான் தாருக வனத்து முனிவர்களுக்கு வரங்களும் கொடுத்து அருளினார். தாருகவனத்து முனிவர்களுக்கு சிவஞானம் எனும் செல்வத்தை அளித்ததால் செல்வர் என்று அழைக்கப்படுகின்றார். சிவஞானம் மற்றும் முக்திச் செல்வம் உடையவராக விளங்கும் பெருமானே முழுமையான செல்வராவார். குபேரன் உட்பட செல்வர்கள் அனைவரும் இவருக்கு ஈடாகமாட்டர்கள்.

தாருகவனத்து மகளிரின் செருக்கை அடக்க, பிட்சாடனராக கையில் ஓடு ஏந்தி பிச்சை கேட்டு வந்த சிவபெருமானின் அழகில், முனிவர்களின் மனைவியர் மயங்கி, சிவபிரான் பின்னே ஓடியது தலபுராணத்தில் சொல்லப்படும் தகவல். எனவே சிவபெருமான் பலி ஏற்க புறப்பட்டால், பெண்கள் தங்களது பேரழகையும், ஆடைகளையும், கை வளையல்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாக பொருள் அமைந்த பாடல் ஒன்று பதினோராம் திருமுறையில், கபில தேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதியில் வருகின்றது. இவ்வாறு கூறுவதன் மூலம், சிவபெருமானின் ஒப்பற்ற அழகு உணர்த்தப்படுகின்றது. கலை என்றால் ஆடை என்றும் சந்திரனின் கலை என்றும் பொருள். ஏர் என்றால் அழகு என்று பொருள். காமின் என்றால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பொருள். இந்தப் பாடல் தோழி தலைவியை நோக்கி கூறுவதாக அமைந்த பாடல்.

கலை காமின் ஏர் காமின் கை வளையல்கள் காமின்

கலைசேர் நுதலீர் நாண் காமின் – கலையாய

பால் மதியன் பண்டரங்கன் பார் ஓம்பு நான்மறையன்

பால் மதியன் போந்தான் பலிக்கு

செல்வம் மல்கிய செல்வர் என்ற தொடர், சிவபெருமானின் அடியார்களை குறிப்பதாக பொருள் கொண்டு, பெருமானின் கருணையால் பொருட்செல்வமும் அருட்செல்வமும் மிகுதியாக வாய்க்கப் பெற்ற பராய்த்துறை அன்பர்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். இரண்டு விதமான செல்வங்களை குறிப்பிட்டு, இம்மையிலும் மறுமையிலும் செல்வம் அளிக்கும் பெருமான் என்று இங்கே சொல்லப் படுகின்றது.

பொழிப்புரை:

பெருமானின் அருளால் பொருட்செல்வமும் அருட்செல்வமும் நிறைந்து வாழும் செல்வர்கள் மிகுந்த பராய்த்துறை தலத்தில் உறைபவரும், வேறு எவரிடமும் இல்லாத முக்திச் செல்வமும் சிவஞானச் செல்வமும் உடைய செல்வராக விளங்குபவரும் ஆகிய சிவபெருமான் மீது, அவரது அருளினைச் செல்வமாக பெற்ற ஞானசம்பந்தன் பாடிய என்றும் அழிவற்ற சிறப்பு வாய்ந்த செந்தமிழ் பாடல்களை பாடல்களை முறையாக ஓத, பெருமானின் கருணையால் பொருட்செல்வமும் அருட்செல்வமும் பெற்று வாழலாம்.

முடிவுரை:

இந்த பதிகம் மழைவேட்டல் பதிகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதல் திருமுறையில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் பாடும் வண்ணம் ஞானசம்பந்தர் அருளிய ஏழு பதிகங்களும் (1.129 முதல் 1.135 வரை) மழை வேட்டல் பதிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பதிகங்களை பக்தி உணர்வுடன் மனம் ஒன்றி முறையாக பாடினால் மழை பொழியும் என்று நம்பப்படுகின்றன. இந்த தலம் தான் பண்டைய நாளில் தாருகவனமாக இருந்தது என்பதை நாம் முன்னரே கண்டோம். அதற்கு ஏற்றார் போல் அன்று தாருகவனத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகள் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன. முதல் பாடலில், பெருமான் முனிவர்களின் இல்லங்கள் சென்று பலியேற்ற செய்கையும், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான்கன்றின் தன்மையை மாற்றித் தனது கையினில் பெருமான் ஏற்றுக் கொண்ட செய்கை பதிகத்தின் ஆறாவது பாடலிலும், அந்த முனிவர்கள் ஏவிய மழு ஆயுதத்தை பெருமான் தனது கையில் ஏந்திய செய்தி ஏழாவது பாடலிலும் உணர்த்தப் படுகின்றன.

பெருமானின் உடலைச் சேர்ந்த திருநீறு பெருமை பெற்றதும், பெருமானின் உடலில் பங்கு பெற்றதால் தனது விருப்பம் நிறைவேறவே உமையன்னை மகிழ்ந்ததும், உண்ணும் கலனாக பெருமானின் கைகளைச் சேர்ந்த பிரம கபாலம் சிறப்பாக கருதப் படுவதும், பெருமானின் சடையினைச் சென்றடைந்ததால் புண்ணிய நதியாக கொண்டாடப்படும் தன்மையை கங்கை நதி பெற்றதும், பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப்பட்டு, பெருமானுடன் இணைவதால் நாம் பெருமை அடைவோம் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். என்றும் அழியாது நிலையாக இருப்பவர் பெருமான் என்று இரண்டாவது பாடலிலும், அனைத்து உயிர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாக பெருமான் இருக்கும் தன்மை மூன்றாவது பாடலிலும், சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் விரித்த தன்மையை நான்காவது பாடலிலும், நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் தன்மையை ஐந்தாவது பாடலிலும், நஞ்சினை உட்கொண்டு ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களைக் காப்பாற்றிய தன்மை ஆறாவது பாடலிலும், விடையினை வாகனமாகக் கொண்டும் திருநீறு பூசியும் எளிமையான கோலத்தில் இருக்கும் தன்மை ஏழாவது பாடலிலும், தனது கால் பெருவிரலை ஊன்றி இராவணனின் செருக்கினை அடக்கிய செய்கையை எட்டாவது பாடலிலும், வினைகளை சிதறடிக்கும் ஆற்றல் படைத்தவர் என்று ஒன்பதாவது பாடலிலும், எவராலும் வெல்ல முடியாத திரிபுரத்து அரக்கர்களை வென்ற வீரச்செயல் பத்தாவது பாடலிலும் குறிப்பிடப்பட்டு பெருமானின் தன்மைகளை ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். கடைப்பாடலில் பராய்த்துறை செல்வரின் செய்கைகளை உணர்த்தும் பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் குறைவற்ற செல்வங்கள் பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். நாமும், பராய்த்துறை தலம் சென்றடைந்து பரமனை வணங்கி பதிகம் பாடி, சிறந்த முக்திச் செல்வத்தை மறுமையில் பெற தகுதி படைத்தவர்களாக மாறுவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Neer Chaervathoar
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

நீறு சேர்வதோர்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: