Go Back

22/03/21

மெய்த்தாறு சுவையும்


பின்னணி:

எருக்கத்தம்புலியூர் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கி மகிழ்ந்து பதிகம் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர் ஆங்கிருந்து புறப்பட்டு, முதுகுன்றம் (தற்போதைய பெயர் விருத்தாசலம்) நோக்கி புறப்படுகின்றார். அவ்வாறு செல்லும் வழியில் பல தலங்களும் சென்று இறைவனைப் பணிந்து பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் நமக்கு அந்த தலங்கள் யாவை என்று தெரியவில்லை. மேலும் அந்த தலங்களுக்கு உரிய பதிகங்களும் நமக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு முதுகுன்றம் செல்லும் வழியில், மத்தா வரை நிறுவி என்று தொடங்கும் பதிகம் பாடி (1.12) முதுகுன்று அடைவோம் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் முதுகுன்று அடைவோமே என்று முடிகின்றன. தலத்தினை அடைந்த சம்பந்தர் தலத்தில் உள்ள குன்றினை வலம் வந்தவாறு நின்று மலர் தூவி என்று தொடங்கும் பதிகத்தினை (1.93) பாடுகின்றார். பின்னர் திருக்கோயிலின் உள்ளே நுழைந்த சம்பந்தர் முரசதிர்ந்து என்று தொடங்கும் (3.99) பதிகம் பாடி இறைவனைத் தொழும் அடியார்கள் பெறவிருக்கும் பயன்களை உணர்த்துகின்றார். பின்னர் இறைவனின் பெருமைகளை குறிப்பிட்டு அத்தகைய இறைவன் உறையும் திருத்தலம் முதுகுன்றம் என்று தேவராயும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில் (1.53) கூறுகின்றார். பல நாட்கள் இந்த தலத்தில் தங்கியிருந்த சம்பந்தர் மெய்த்தாறு என்று தொடங்கும் பதிகம் பாடி (1.131) பெருமானின் பெருமையையும் தலத்தின் செல்வச் செழிப்பையும் உணர்த்துகின்றார். தலத்தில் பல நாட்கள் தங்கியதால், தலத்திற்கு வரும் அடியார்களின் தன்மையை உணரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது போலும். அவ்வாறு தான் உணர்ந்தவற்றை, தேவா சிறியோம் (2.64) என்று தொடங்கும் பதிகம் மூலம் உணர்த்தி நம்மையும் அத்தகைய அடியார்களை பின்பற்றும் வண்ணம் தூண்டுகின்றார். மேலும் வண்ண மாமலர் என்று தொடங்கும் பதிகம் மூலம் (3.34) இறைவன் அன்னையுடன் வீற்றிருக்கும் அழகினை கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஏழு பாடல்களிலும் உமையன்னை பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

பாடல் 1:

மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும்

விரும்பு நால் வே

தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல்

அரிவை பாகம்

ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு

தெண்ணீர்

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும்

முதுகுன்றமே

விளக்கம்:

மெய்த்த ஆறு என்பது மெய்த்தாறு என்று சேர்ந்தது; உடலினால் அறியப்படும் ஆறு சுவைகள், உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் மற்றும் துவர்ப்பு; ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப்படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்; சுவை, இசை, குணம் ஆகியவை மாயையின் காரியங்கள் என்பதால் அவைகளால் இறைவனால் அறியமுடியாது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்தவன் இறைவன் என்பதால் வேதங்களாலும் இறைவனை அறியமுடியாது. நடை=நன்னடை. ஒழுக்கமான வாழ்க்கை;

ஒத்த ஆறு சமயங்கள்=சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. வெதிர்=மூங்கில்; நித்திலம்=முத்து; மூங்கில்கள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்கள் சிதற அவற்றை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்பதால் முத்தாறு என்ற பெயர் வந்தது போலும்.

இந்த பாடலில் மூங்கிலில் முத்து தோன்றும் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். யானையின் தந்தம், பன்றியின் கொம்பு. மூங்கில், தாமரை, கரும்பு, பெண்களின் கழுத்து, சிப்பி, உடும்பு ஆகியவற்றில் முத்து கிடைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பல சங்க இலக்கியங்கள் யானை மற்றும் மூங்கில் முத்தின் பிறப்பிடம் என்று கூறுகின்றன. ஆனால் சங்கினைத் தவிர்த்த வேறு எந்த பொருளிலும் முத்துகள் இருப்பதாக நிரூபணம் ஆனதில்லை. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரம் இலக்கியம் இருபது இடங்களில் முத்து தோன்றுவதாக குறிப்பிடுகின்றது.

பொழிப்புரை:

உடல் உணரும் ஆறு சுவைகளாலும், உடல் கேட்கும் ஏழு இசைகளாலும், எட்டு குணங்களாலும் அறிய முடியாத இறைவன், அனைவரும் விரும்பும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்து நிற்பதால் நான்கு வேதங்களாலும் அறிய முடியாதவனாக உள்ளான். மேலே குறிப்பிட்டவாறு அறியப்படாமல் இருப்பவனும், ஒழுக்கமான வாழ்வு கொண்டு அன்புடன் அணுகினால் மட்டுமே தெளிவாக அறியப்படுபவனும், பளிங்கு போன்று திருமேனியில் உமை அன்னையை ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், தங்களுக்குளே மாறுபாடு ஏதுமின்றி ஒத்த கருத்துடன், பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுபவனும்; ஆகிய சிவபெருமான் விருப்பமுடன் உறையும் ஊர் முதுகுன்றமாகும். தெளிந்த நீரினை உடைய மணிமுத்தாறு நதி மலையின் கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து சேர்க்கும் கரைகளை உடைய ஊர் முதுகுன்றமாகும்.

பாடல் 2:

வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில்

விசயன் மேவு

போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த

புராணர் கோயில்

காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலரும்

உதிர்த்துக் கயம் முயங்கி

மூரி வளம் கிளர் தென்றல் திரு முன்றில் புகுந்து

உலவு முதுகுன்றமே

விளக்கம்:

வேரி=தேன், அம்பிகை தனது கூந்தலில் சூடியிருந்த மலர்களில் உள்ள தேன்; கயம்= நீர்நிலை; மூரி=பெருமை; முயங்கி=தடவிக்கொண்டு; காற்றுக்கு இயற்கையில் மணம் இல்லை. ஆனால் முதுகுன்றத்து தலத்தில் வீசும் காற்று, சோலைகளில் உள்ள மலர்களில் படிந்தும் அவைகளை உதிர்த்தும் வருவதாலும், தலத்தின் நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்து வருவதாலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டதாக விளங்குகின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கார்=மழை; அர்ஜுனன் போர் புரியும் ஆற்றலை நேரில் காண அம்பிகை விரும்பியதால், தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு அர்ஜுனன் தவம் புரிந்த இடத்திற்கு பெருமான் சென்றதாக புராணம் கூறுகின்றது. பொறை=வலிமை

பொழிப்புரை:

தேன் மிகுந்த புதிய மலர்களை உடையதாய் தேனின் மனம் வீசும் கூந்தலை உடைய உமை அன்னையுடன், வேடுவ வேடம் தாங்கியவனாய், வெம்மை மிகுந்த கொடிய காட்டினில் தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை அணுகியவர் சிவபெருமான். அவர் அர்ஜுனனின் போரிடும் ஆற்றலை உமையம்மை கண்டு அறிந்து கொள்ளும் பொருட்டு, அவனுடன் போரிட்ட பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரத்தை அளித்தார். இத்தகைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றிய பெருமான், மழையால் செழித்து வளர்ந்துள்ள நறுமணம் வீசும் சோலைகளில் உள்ள கனிகளை உதிர்த்தும், மலர்களை சிந்தியும், வரும் வழியில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்தும் வரும் வலிமை மிகுந்த தென்றல் காற்று புகுந்து வீசும் முற்றங்கள் கொண்ட அழகிய வீடுகளை உடைய முதுகுன்றம் எனப்படும் தலத்தில் உறைகின்றார்.

பாடல் 3:

தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன்

அருக்கன் அங்கி

மிக்க விதாதாவினொடும் விதி வழியே தண்டித்த

விமலர் கோயில்

கொக்கு இனிய கொழும் வருகை கதலி கமுகு உயர்

தெங்கின் குலை கொள் சோலை

முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள்வயல்

சூழ் முதுகுன்றே

விளக்கம்:

விதி=சிவ அபராதம் செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் படவேண்டும் என்ற நெறிமுறை. எச்சன்=யாகத்தின் தலைவன்; யக்ஞம் என்ற வடமொழிச் சொல் எச்சம் என்று பயன்படுத்தப் பட்டுள்ளது. கொக்கு=மாமரம்; வருக்கை= பலா; கதலி=வாழை; கொழும்=சிறந்த; விதாதா=பிரமன்; அங்கி=தீக்கடவுள்; அருக்கன்= பன்னிரு சூரியர்களில் ஒருவன்; புராணர்=பழையவர்;

கொக்கு என்றவுடன் நமக்கு சேவல் தினமும் காலையில் கொக்கரக்கோ என்று கூவுவது நினைவுக்கு வருகின்றது. முருகப் பெருமானுடன் செய்த போரின் இறுதிக் கட்டத்தில் சூரபதுமன், மாயை புரிந்து மாமரமாக மாறுகின்றான். முருகப் பெருமான் விடுத்த வேல் அந்த மரத்தினை இரண்டு கூறாக பிளக்க, அவ்வாறு பிளக்கப்பட்ட கூறுகள் மயிலாகவும் சேவலாகவும் மாறி முருகப்பெருமானை எதிர்க்கச் சென்றன. அப்போது முருகப் பெருமான் தனது கருணைக் கண்களால் அவை இரண்டினையும் நோக்க, அந்த இரண்டு பறைவகளும் ஆவேசத்தை விட்டுவிட்டு இயற்கை நிலையை அடைந்தன. பின்னர் சேவல் கொடியின் சின்னமாகவும் மயில் வாகனமாகவும் ஏற்றுக் கொள்ள படுகின்றன. சேவல் கொக்கரகோ என்று கூவுவதை மாமரமாக நின்ற சூரபதுமனை அழித்த தலைவனே என்று கூறுவதாக விளக்கம் கூறுவார்கள்.

யாகத்தின் தலைவன் வேறு யாகத்தை நடத்தி வைப்பவர் வேறு. யாகத்தின் தலைவனின் மேற்பார்வையில் வேள்விச் சடங்குகள் நடைபெறுவதாக ஐதீகம். இன்றும் வேள்விகள் செய்யப்படும் தருணத்தில், அங்கே கூடியிருக்கும் அந்தணர்களில் முதியவரும் வேள்வி விதிமுறைகள் தெரிந்தவரும் ஆகிய ஒருவரை பிரமன் என்று நியமித்து அவர் மீது அட்சதை தூவி வேள்வியினை தொடங்குவார்கள். இவ்வாறு பிரமனாக நியமிக்கப் பட்டவர், அதே இடத்தில் அமர்ந்து, வேறெங்கும் செல்லாமல் வேள்வியை கண்காணிக்க வேண்டும். வீடுகளில் நடைபெறும் வைதீக சடங்குகளிலும் இந்த முறை பின்பற்றப்படுவதுண்டு. ஆனால் பல இடங்களில் எவரும் அவ்வாறு உட்கார்ந்து கண்காணிப்பதில்லை என்பதால், ஒரு தர்ப்பைக் கட்டினை பிரம்மாவாக பாவித்து அதன் மேல் அட்சதை தூவி வைதீக சடங்குகளை, பெரும்பாலான இடங்களில் இந்நாளில் நடத்துகின்றனர். பெருமானை புறக்கணித்துத் தான் செய்ய திட்டமிட்ட வேள்வி அனைவர்க்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரம்மாண்டமான அளவில் வேள்வி செய்ய தக்கன் நினைத்தான் என்பதை குறிப்பிடும் வண்ணம் பெரு வேள்வி என்று குறிப்பிடுகின்றார். தக்கன் நடத்திய வேள்வி பெருமானை நிந்தித்து செய்யப் பட்டமையால் பெரு என்ற சொல் இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. வேதங்களில் சொல்லப் பட்டுள்ள நெறிக்கு மாறாக அமையக் கூடாது என்பதை கருத்தினில் கொண்ட பெருமான் இந்த வேள்வி முற்றுப்பெறாமல் அழிக்கின்றார்.

பொழிப்புரை:

சிவபெருமானை நிந்தனை செய்வது தகாத குற்றமாக கருதப்படுவதால், பெருமானை நிந்தனை செய்து பெரிய அளவில் நடத்தப் பட்ட தக்கனது வேள்வி முற்றுப் பெறாமல் அழித்ததுமன்றி, அந்த வேள்வி செய்தவர்கள் மற்றும் வேள்வி செய்வதற்கு துணையாக நின்றவர்கள் ஆகிய சந்திரன், இந்திரன், வேள்வித் தலைவன், சூரியன், அக்னி, வேள்வியில் பிரமனாக கருதப்பட்டவன் ஆகிய அனைவரையும் தண்டித்தவரும், இயற்கையிலேயே மலங்களிலிருந்து விடுபட்டவரும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் உள்ள தலம் முதுகுன்றம் ஆகும். இனிப்பான மாங்கனிகள் உடைய மாமரம் சிறந்த பலா மரங்கள் வாழை மரங்கள் கமுகு மற்றும் குலை குலையாக தேங்காய் கொண்டுள்ள உயர்ந்த தென்னை மரங்கள் ஆகிய சோலைகள் நிறைந்த இந்த தலத்தில் முக்கனிகளின் சாறு ஒழுகி அதனால் விளைந்த சேறு எப்போதும் உலராமல் இருக்கும் நீண்ட வயல்களைக் கொண்ட செழிப்பு மிகுந்த தலம் முதுகுன்றமாகும்.

பாடல் 4:

வெம்மை மிகு புர வாணர் மிகை செய்ய விறல் அழிந்து

விண்ணுளோர்கள்

செம்மலரோன் இந்திரன் மால் சென்று இரப்பத்

தேவர்களே தேரதாக

மைம்மருவு மேரு விலும் மாசுணம் நாண் அரி எரி

கால் வாளியாக

மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன்

இடம் முதுகுன்றே

விளக்கம்:

மாசுணம்=பாம்பு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு. புரவாணர்= விறல்=வலிமை; மைமருவு=மேகங்கள் தவழும் உயர்ந்த மலை;

திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது அவருக்கு உதவும் பொருட்டு, பல தேவர்கள் முன்வந்தனர், எட்டு திசைகள் தூண்களாகவும், பூமி தேர்த் தட்டாகவும், ஆகாயம் தேரின் கூரையாகவும், சூரியன் சந்திரன் தேரின் சக்கரங்களாகவும் கொண்ட தேரினை தேவத் தச்சன் விசுவகர்மா உருவாக்கினார். வேதங்கள் குதிரைகளாக நிற்க, பிரமன் சாரதியாக மாறினான். மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், திருமால் அம்பின் தண்டாகவும், அக்னி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் இறக்கைகளாகவும், பங்கு கொள்ள, பல தேவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த போரினால் பங்கு கொண்டனர். இவ்வாறு தேவர்களும் மற்றவர்களும் பங்கு கொண்டமை இங்கே தேவர்களே தேரதாக என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது.

அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருந்த தேவர்கள், சிவபிரானுக்குத் தாங்கள் உதவுவதைக் குறித்து சற்று கர்வம் கொண்டார்கள் போலும். இதனை உணர்ந்த சிவபிரான், எவருடைய உதவியும் இல்லாமல் தான் ஒருவனாகவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்டார். அவர் தனது திருவடிகளை எடுத்து தேரின் மீது வைத்தவுடன், தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்த தருணத்தில், அங்கே இருந்த திருமால் இடபமாக மாறி பெருமானைத் தாங்கினார் என்றும் புராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சியும் பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது.

பொழிப்புரை:

கொடுமை மிகுத்து வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள் அளவு மிஞ்சி அனைத்து உயிர்களுக்கும் தீங்கினைச் செய்ய, தங்களது வலிமை குறைந்து வாழ்ந்து வந்த தேவர்களும் தாமரை மேல் அமரும் பிரமனும் திருமாலும் இந்திரனும் பெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டிய போது அவர்களுக்கு இரங்கிய பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றார். அப்போது பல தேவர்கள், பெருமான் ஏறிச் சென்ற தேரின் பல பாகங்களாக பங்கேற்றனர். மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து நின்ற மேரு மலையினைத் தனது வில்லாக வளைத்துக் கொண்ட பெருமான் வாசுகி பாம்பினை அந்த வில்லின் நாணாக ஏற்றி, திருமால் தீக்கடவுள் மற்றும் காற்றுக் கடவுள் மூவரும் பங்கு கொண்ட அம்பினை அந்த வில்லினில் பூட்டி, நொடிப் பொழுதினில் மூன்று கோட்டைகளும் தீப்பற்றச் செய்து சாம்பல் பொடியாக மாறுமாறு அழித்தார். இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறையும் இடம் முதுகுன்றமாகும்.

பாடல் 5:

இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒரு பாலா

ஒரு பால் எள்காது

உழை மேவு முரி உடுத்த ஒருவன் இருப்பிடம் என்பர்

உம்பர் ஓங்கு

கழை மேவு மடமந்தி மழை கண்டு மகவினொடும் புக

ஒண் கல்லின்

முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல்

முதுகுன்றே

விளக்கம்:

உழை=மான்: உழை மேவும் முரி=தோல், கழை=மூங்கில்; இழை=அணிகலன்; எள்குதல்= இகழுதல், எள்காது-இகழாது; உம்பர்=தேவர்கள், இங்கே தேவர்களின் உலகம்; ஒண்=சிறந்த; கல்லின் முழை=மலையில் அமைந்துள்ள குகையில்; மால் யானை=சிறந்த பெரிய யானை;

தனது மனைவியை உடலின் ஒரு பாகத்தே பெருமான் ஒருவன் தான் வைத்துள்ளான். மேலும் மான் தோல் புலித்தோல் ஆகியவற்றை, தவம் செய்யும் போதும் பூஜை வழிபாடுகள் செய்யும் போதும் தாங்கள் அமரும் ஆசனமாக பயன்படுத்தும் எவரும் அந்த தோலினை ஆடையாக அணிவதில்லை. எனவே தான் பெருமான் மான் தோல் அணிந்திருக்கும் நிலையினை குறிப்பிடும் சம்பந்தர் தோல் என்று இகழாது மான் தோலினை பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். வேறு எவரும் இத்தகைய கோலத்துடன் காட்சி அளிப்பதில்லை என்பதால் ஒப்பற்ற ஒருவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மட மந்தி=பெண் குரங்கு; ஏந்திழை=சிறந்த நகைகளை உடலில் கொண்டவள்;

பொழிப்புரை:

மேகலை எனப்படும் அழகிய அணிகலன் பொருந்திய மார்பகங்களை உடையவளும் அழகிய நகைகளைத் தனது உடலில் ஏந்தியவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு புறத்தே வைத்துள்ள பெருமான், தனது உடலின் ஒரு பகுதியில் தோல் என்று இகழாது மான் தோலினை அணிந்துள்ளான். இவ்வாறு ஒப்பற்றவனாக காட்சி தரும் பெருமான் உறையும் திருக்கோயில் உள்ள இடம் முதுகுன்றமாகும். வானுலகம் எட்டும் வண்ணம் உயர்ந்து வளர்ந்துள்ள மூங்கில் மேல் அமர்ந்துள்ள பெண் குரங்கு, மழை வருதலைக் கண்டதும் அச்சமுற்று தனது குட்டியுடன் மலையில் உள்ள குகை ஒன்றினில் ஒடுங்கும் பொருட்டு வேகமாக கீழே இறங்க, பெரிய யானைகள் தங்களது குட்டிகளுக்காக உணவினைத் தேடும் பொருட்டு அலைந்து கொண்டிருக்கும் சாரல்களை உடைய முதுகுன்றமே, பெருமானின் திருக்கோயில் உள்ள தலமாகும்.

பாடல் 6:

நகையார் வெண்தலை மாலை முடிக்கு அணிந்த நாதன்

இடம் நன் முத்தாறு

வகையாரும் வரைப் பண்டம் கொண்டு இரண்டு கரை

அருகும் எறிய மோதித்

தகை ஆரும் வரம்பு இடறிச் சாலி கழுநீர் குவளை

சாயப் பாய்ந்து

முகையார் செந்தாமரை கண் முகம் மலர வயல்

தழுவு முதுகுன்றமே

விளக்கம்:

வரைப் பண்டம்=மலைகளில் கிடைக்கும் பொருட்கள், மணிகள், அகில், சந்தனம், முதலியன; நகை=பல்; நகையார் வெண்தலை=வாய் பிளந்து காணப்படுவதால் சிரிப்பது போன்ற தோற்றத்தினை உடைய மண்டையோடுகள்; தகை=தடுப்பு, இங்கே நதிக்கு பாதுகாப்பாக இருக்கும் கரை; இடறி=இடித்துக்கொண்டு, மோதி, வாரி இறைத்துக் கொண்டு; சாலி=செஞ்சாலி எனப்படும் ஒரு வகை நெல்.

பொழிப்புரை:

வாய் பிளந்து இருப்பதால் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் சிரிப்பது போன்று காட்சியளிக்கும் மண்டையோடுகளை தனது தலையில் தலைமாலையாக அணிந்தவனும் எமது தலைவனுமாகிய பெருமான் உறையும் இடம் முதுகுன்றம் தலமாகும். மலையில் கிடைக்கும் பல வகையான பண்டங்களை அடித்துக் கொண்டு வந்து மணிமுத்தாறு நதி தனது அலைகளால், தனக்கு பாதுகாப்பாக இருக்கும் இரண்டு கரைகளையும் உடைத்துக் கொண்டு தான் அடித்துக் கொண்டு வந்த பொருட்களை வாரி இறைத்துக் கொண்டும், நெற்கதிர்கள் கழுநீர் கொடிகள் மற்றும் குவளைக் கொடிகள் ஆகியவற்றை நீரின் வேகத்தினால் சாய்த்துக் கொண்டும் தாமரைக் கொடியில் உள்ள மொட்டுகளை வயல்களின் வரப்புகளில் மோதி மலரும் வண்ணம் புரட்டியும் முதுகுன்றம் தலத்தினை வந்து அடைகின்றது. இவ்வாறு செல்வச் செழிப்பும் நீர்வளமும் உடைய தலமாகிய முதுகுன்றமே பெருமான் உறையும் தலமாகும்.

பாடல் 7:

அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி

அமரர் வேண்ட

நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தில் ஒன்று

அறுத்த நிமலர் கோயில்

திறம் கொண் மணித் தரளங்கள் வரத் திரண்டு அங்கு எழில்

குறவர் சிறுமிமார்கள்

முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலைப்

பெய் முதுகுன்றமே

விளக்கம்:

தரளம்=முத்து; மணி=மாணிக்கக் கற்கள்; கிளரும்=விளங்கித் தோன்றும்; திறம் கொள்= முதிர்ந்து தரமான நிலையில் இருக்கும் நிலை; சிறிய சொப்பு கிண்ணங்களை வைத்துக் கொண்டு சிறுமியர்கள், தங்களை இல்லத்தரசிகளாக பாவித்துக் கொண்டு சமையல் செய்வது போன்று விளையாடுவது பண்டைய நாளிலும் பழக்கமாக இருந்தது போலும். நாகரீகம் பெருகிய இந்நாளில், இத்தைகைய விளையாடல்கள் அரிதாக மாறி, கணினியில் பல விளையாட்டுகளை இருபாலரும் விளையாடும் இந்நாட்களில் இத்தகைய விளையாட்டுகளை நாம் கற்பனையில் தான் காணமுடியும். நாமும் நமது சிறு வயதினில், சிறுமியர்கள் மணலினை அரிசியாக பாவித்து விளையாடுவதை கண்டிருக்கின்றோம். செல்வச் செழிப்பு மிகுந்திருந்த முதுகுன்றத்தில் பண்டைய நாளில் சிறுமியர்கள் முத்தினை அரிசியாக பாவித்து விளையாடியதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த செய்தி, பண்டைய நாட்களில் தலத்தினில் வாழ்ந்து வந்த அடியார்கள் இறைவனை வணங்கி அவனது அருளினால் செல்வச் செழிப்புடன் இருந்ததை நாம் அறிகின்றோம். இன்றும் நாம் கடற்கரை மற்றும்,. ஆற்றங்கரையில் சிறுவர்கள் மணல் கொண்டு வீடு கட்டி விளையாடுவதை காண்கின்றோம். இந்த செயலை சிற்றில் கட்டு விளையாடுவது என்று பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நமக்கு திருக்காளத்தி தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (3.69.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் வேடுவப் பெண்கள், தாம் அணிந்திருந்த பொன்னால் செய்யப்பட்டதும் இரத்தினங்கள் பதிக்கப் பெற்றதும் ஆகிய அணிகலன்களை கவண்கற்களாக வீசி தினைகளை கவர வந்த பன்றிகள் மான்குட்டிகள் கிளிகள் ஆகியவற்றை விரட்டினார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி காளத்தி தலத்தின் செல்வச் செழிப்பினை நமக்கு உணர்த்துகின்றது. வாதை பட= வருந்தும் வண்ணம்;

வானவர்கள் தானவர்கள் வாதை பட வந்ததொரு

மாகடல் விடம்

தான் அமுது செய்து அருள் புரிந்த சிவன் மேவு மலை

தன்னை வினவில்

ஏனம் இளமானினொடு கிள்ளை தினை கொள்ள

எழிலார் கவணினால்

கானவர் தம் மாமகளிர் கனகமணி விலகும் காளத்தி

மலையே

இந்த பாடலில் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினை பெருமான் அறுத்ததாக ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு திருவையாறு தலத்தின் மீது அவர் அருளிய பாடலை (1.120.3) நினைவூட்டுகின்றது. தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அறுத்தார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர் தம் வளநகர்

எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல்

இருந்தவன் சிரமது இமையவர் குறை கொள

அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (3.48.6) திருஞானசம்பந்தர், பிரமனின் தலை கொய்யப்பட்டது தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி என்று கூறுகின்றார். அருத்தி=விருப்பத்துடன்; மற்றவர்கள் நகைக்கும் வண்ணம் மண்டை ஓட்டினில் உணவு பிச்சையாக ஏற்பது பெருமானின் தகுதிக்கு உரிய செயலா என்று கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது. மேலும் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பெருமான், அந்த உயிர்களுடன் கலந்து நின்ற தன்மையினை தனக்கு விளக்கம் அளித்து உணர்த்துமாறு தலத்தில் உள்ள அடியார்களிடம் சம்பந்தர் விண்ணப்பிக்கின்றார். புயல் பொழிந்து இழி வானோர் என்று தேவர்கள் மழை பொழியச் செய்து நன்மை புரிவதாகவும் இங்கே கூறுகின்றார்.

இயலுமாறு எமக்கு இயம்புமின் இறைவன்னுமாய்

நிறை செய்கையைக்

கயல் நெடும் கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர்

உறை வீரட்டன்

புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்காக அன்று

அயன் பொய்ச்சிரம்

அயல் நகவ்வது அரிந்து மற்று அதில் ஊண் உகந்த

அருத்தியே

தேவர்கள் வேண்ட என்று இந்த மூன்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டாலும் எந்த தருணத்தில் தேவர்கள் அவ்வாறு வேண்டினார்கள் என்று தெளிவான குறிப்பு இந்த பாடல்களில் காணப்படவில்லை. திருவானைக்கா தலத்தில் நடைபெறும் பஞ்சபிராகர விழாவின் விவரங்கள் சித்திரமாக இறைவன் சன்னதியில் உள்பிராகாரத்தில் தீட்டப் பட்டுள்ளது. இந்த விழாவினுக்கு அடிப்படையாக கூறப்படுகின்ற சம்பவத்தில் திலோத்தமை பிரமன் குறித்து பெருமானிடம் தொடுத்த புகாரின் அடிப்படையில் பிரமனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பிரமன் தான் படைத்த படைப்புகளின் நேர்த்தி பற்றி தானே வியந்து கொண்டு கர்வம் மேலோங்க செயல்படலானார். இந்த கர்வம், அவரை அவர் படைத்த ஒரு அழகான பெண்ணின் மீது, திலோத்தமை மீது, அதிகமான அன்பு வைக்கத் தூண்டியது. அந்த அன்பு நாளடைவில் காதலாக மாற, பிரமனால் தனது படைப்புத் தொழிலில் முன் போல் கவனம் செலுத்த முடியவில்ல. அவர் திலோத்தமை எங்கு சென்றாலும் அந்த திசை நோக்கி பார்த்து ரசிப்பதில் கொண்டிருந்த ஆர்வமும் கவனமும், அவரது படைப்புச் தொழிலில் வெளிப்படவில்லை. இந்த கவனக் குறைவினால் அவரது படைப்புகள் குறைந்த நாட்களில் இறக்கும் படியாகவும், படைப்புகள் அலங்கோலமாகவும் மாறின. திலோத்தமையும் இறைவனிடம் தான் எங்கு சென்றாலும் தன்னைப் பின் தொடர்ந்து பிரமன் பார்ப்பது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இறைவனிடம் கூறுகின்றாள். தனது தவறினை உணர்ந்த பிரமன் திருவானைக்கா தலம் வந்தடைந்து இறைவனை வேண்ட இறைவன் உமை அம்மையுடன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவ்வாறு காட்சி கொடுத்த சமயத்தில் இறைவன் உமை அம்மை வேடமும், உமை அம்மை இறைவன் வேடமும் அணிந்து வந்தனர். மாறு வேடங்களில் வந்த காரணம் யாது என்று பிரமன் திகைத்து நிற்க, சிவபிரான் தனது படைப்பின் அழகில் மனம் மயங்கிய பிரமன், அவனது படைப்பை விட அழகில் விஞ்சிய இறைவியின் அழகில் மதி மயங்கி மறுபடியும் தவறு செய்யக்கூடாது என்பதற்காகத் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெளிவுபடுத்தினார். அப்போது தான் இறைவன் மற்றும் இறைவியின் அழகு, தனது படைப்புகளின் அழகினை விடவும் பல மடங்கு உயர்ந்தது என்பதை பிரமன் உணர்ந்தார். இதனால் தனது படைப்பின் மீது பிரமனுக்கு இருந்த கர்வமும் ஒழிந்தது. மேலும் தனது தொழிலில் எந்த விதமான கவனச் சிதைவும் இன்றி ஈடுபடுவதாகவும் முடிவு செய்தார். மாற்று கோலத்தில் வரும் இறைவனும் இறைவியும் ஐந்து பிராகாரங்களை சுற்றி உலா வருவதால் பஞ்ச பிராகார விழா என்ற பெயர் பெற்றது. படைப்புத் தொழில் சரிவர நடக்காமையால் தேவர்களும் திலோத்தமையுடன் சேர்ந்து கொண்டு பெருமானிடம், பிரமனின் கர்வத்தை குறைக்குமாறு வேண்டினரோ என்று, இந்த பாடல்களில் உள்ள குறிப்பு உணர்த்துகின்றது போலும்.

பொழிப்புரை:

ஆல மரத்தின் கீழ் அமர்ந்தவாறு அறநெறிகள் குறிப்பிடப்படும் நான்கு வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு தெளிவுபட உணர்த்தியவனும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி செம்மை நிறத்துடன் பொலியும் தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினை அறுத்தவனும், இயல்பாகவே மலங்களிளிருந்து விடுபட்டவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் முதுகுன்றம் தலத்தில் உள்ளது. மணிமுத்தாறு நதி அடித்துக் கொண்டு வரும் தரமான முத்துக்களும் மணிகளும் குவியல்களாக வருவதைக் கண்ணுற்ற அழகிய வேடுவச் சிறுமிகள் அவற்றை முறங்களில் வாரிக் கொண்டு வந்து மணிகளை புடைத்து நீக்கி மீதமுள்ள முத்துகளை அரிசியாக பாவித்து உலையில் இட்டு சமையல் செய்வது போன்று விளையாடும் தலம் முதுகுன்றமாகும். இந்த தலமே பெருமான் வீற்றிருக்கும் தலமாகும்.

பாடல் 8:

கதிரொளிய நெடுமுடி பத்து உடைய கடல் இலங்கையர்

கோன் கண்ணும் வாயும்

பிதிர் ஒளிய கனல் பிறங்கப் பெரும் கயிலை மலையை

நிலை பெயர்த்த ஞான்று

மதில் அளகைக்கு இறை முரல மலரடி ஒன்று ஊன்றி

மறை பாட ஆங்கே

முதிர் ஒளிய சார் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி

முதுகுன்றமே

விளக்கம்:

அளகை=அழகாபுரி, குபேரனின் தலைநகர்; அளகைக்கு இறை=அழகாபுரிக்கு தலைவனாகிய குபேரன்; முரல=ஒலிக்க; இராவணன் கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்ததையும் பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்றி அவனை மலையின் கீழே அழுத்தியதையும் கண்ட குபேரன் அரக்கன் இராவணன் அழிந்தான் என்று நினைத்து மகிழ்ந்தான். ஒரு வழியில் குபேரன் இராவணனுக்கு தமையன் என்றாலும், அரக்கன் இராவணன் தனது அண்ணன் என்பதையும் மதிக்காமல் குபேரனுடன் போர் புரிந்து அவனை வென்று அவனது புட்பக விமானத்தை கைப்பற்றினான். எனவே தான் இராவணன் அழிந்தான் என்று எண்ணம் குபேரனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. குபேரனின் தலைநகர் அளகாபுரி. இந்த பாடலில் அளகை என்று குறிப்பிடப்படுகின்றது. குபேரன் அடைந்த மகிழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப் பட்டது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. முதிரொளி=மிகுந்த ஒளி.. பிதிர்த்தல்=உதிர்தல், சிதறுதல், வெளிப்படுத்துதல்; பிறங்க= விளங்க. மலையின் கீழே அமுக்குண்ட அரக்கனுக்கு, தான் அந்த இடரிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தமையால், இறைவனிடம் அவன் வரம் ஏதும் கேட்கவில்லை. எனினும் இறைவன், அவன் ஓதிய சாம கானத்தில் மகிழ்ந்து தானே முன்வந்து அவனுக்கு பரிசாக நீண்ட வாழ்நாளையும் வாளினையும் அளித்தார் என்ற செய்தி இங்கே முன்னீந்த என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

கதிரவனின் ஒளிக்கதிர்கள் போன்று ஒளிவீசும் நீண்ட முடிகளைக் கொண்ட பத்து தலைகளை உடையவனும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனும் ஆகிய அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் கயிலை மலை குறுக்கே நின்றது என்று கருதி, தனது கண்களும் வாயும் ஒளிமிகுந்த தீப்பொறிகளை வெளிப்படுத்தும் வண்ணம் மிகுந்த சினத்துடன் விளங்க, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு மலையினை அசைத்த அன்று, பெருமான் தனது மலர் போன்று மிருதுவான கால் பெருவிரலினை கயிலாய மலையின் மீது ஊன்ற அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு அமுக்குண்டு வருந்தினான். அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு வருந்தி அழுததைக் கண்ட குபேரன், அரக்கன் இராவணன் அழிந்துபட்டான் என்ற மகிழ்ச்சியுற, அவனது தலைநகரான அளகாபுரியில் மகிழ்ச்சியின் மிகுதியால் ஆரவாரக் குரல்கள் எழுந்தன. தனது உடல் உறுப்புகள் நெருக்குண்டு வருந்திய அரக்கன் அப்போது சாமகீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்த பெருமான், தானே முன் வந்து மிகுந்த ஒளியினை உடைய நீண்ட வாளினை அரக்கனுக்கு பரிசாக ஈந்தார். இவ்வாறு சாமகானத்தை விருப்பமுடன் கேட்கும் இறைவன் உறையும் திருக்கோயில் உள்ள தலம் முதுகுன்றமாகும்.

பாடல் 9:

பூவார் பொற்றவிசின் மிசை இருந்தவனும் பூந்துழாய்

புனைந்த மாலும்

ஒவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி

உண்மை காணாத்

தேவாரும் திரு உருவன் சேரு மலை செழு நிலத்தை

மூட வந்த

மூவாத முழங்கொலி நீர் தாழ மேல் உயர்ந்த

முதுகுன்றமே

விளக்கம்:

கழகு=இங்கே அன்னத்தை குறிக்கின்றது; தவிசு=ஆசனம்; பூந்துழாய்=துளசி; பிரளயம் வந்த போதும் அழியாமல் நின்று பல ஊழிக் காலங்களைக் கடந்த மலை முதுகுன்றம் என்று கருதப்படுகின்றது. அதனால் இந்த மலைக்கு பழமலை என்ற பெயரும் உள்ளது. தலத்து இறைவனும் பழமலை நாதர் என்று அழைக்கப்படுகின்றார். தேவாரும்=தெய்வத் தன்மை பொருந்திய

பொழிப்புரை:

மலர்களில் சிறந்த மலராக கருதப்படும் தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் தளசி மலையினை விருப்பமுடன் அணிந்த திருமாலும், அன்னமாகவும் பன்றியாகவும் உருவெடுத்து இடைவிடாது மேலே பறந்தும் கீழே தோண்டியும் சென்று முறையே இறைவனின் திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவத்தினை உடையவனாக பெருமான் திகழ்ந்தான். அத்தகைய உயர்ந்த பெருமான் வந்து சேர்ந்து உறையும் திருக்கோயில் உள்ள தலமாகிய முதுகுன்றம், பிரளய காலத்தில் செழுமையான உலகத்தை மூடும் வண்ணம் பேரொலியுடன் கடல் நீர் பொங்கி உலகத்தினை அழித்த போதும் அதனினும் உயர்ந்து நின்று பிரளயத்தில் அழியாமல் நின்று பல ஊழிகளைக் கண்ட தலமாகும்.

பாடல் 10:

மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும்

விரவலாகா

ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள்

உணர்ந்து அங்கு உய்மின் தொண்டீர்

ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது

உணர்ந்து ஐம்புலன்கள் செற்று

மோனிகளாய் முனிச் செல்வர் தனித்து இருந்து தவம்

புரியும் முதுகுன்றமே

விளக்கம்:

சீவரம்=துவராடை; தட்டு=ஓலைத் தடுக்கு; இந்த பாடலில் பெருமானைப் பற்றிய குறிப்பு ஏதும் நேரிடையாக காணப்படவில்லை. தவம் செய்யும் முனிவர்கள் வாழும் இடம் என்று தலத்தின் சிறப்பே இங்கே கூறப்படுகின்றது. இத்தகைய பாடல் மிகவும் அரிதான பாடலாகும். விரி தரு தட்டு என்று குறிப்பிட்டு, தாம் செல்லும் இடமெல்லாம் சமணர்கள் ஓலைப் பாயினை சுருட்டி கையில் இடுக்கிக் கொண்டு சென்ற தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பின்னிரண்டு அடிகளில் ஞானிகளின் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், அவர்கள் எவ்வாறு புத்தர் மற்றும் சமணர்களுடன் மாறுபட்டுளனர் என்று குறிப்பாக உணர்த்துகின்றார். ஐம்புலன்களை அடக்கியவர்கள் ஞானிகள்; புலன்களை அடக்காமல் உடல் வளர்ப்பதே குறிக்கோளாக கொண்டவர்கள் புத்தர்களும் சமணர்களும். சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை ஏற்றுக்கொண்டு அவர்களை பின்பற்றி நடந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்பது உணர்ந்து கொண்டு செயல்படுவீர் என்ற அறிவுரையையும் இங்கே சம்பந்தர் வழங்குகின்றார். பதிகத்தின் பல பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை உணர்த்திய சம்பந்தர் இந்த பாடலில், சிறப்பு வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். செல்வச் செழிப்பு வாய்ந்த முதுகுன்றம் கல்விச் சிறப்பும் இறை உணர்வில் சிறந்தும் விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தங்களது உடலில் துவராடை புனைந்த புத்தர்களும், உறங்கும் பொழுது விரிக்கப்பட்டு பாயாக பயன்படும் ஓலைத் தடுக்கினை சுருட்டி தங்களது கைகளில் இடுக்கிக் கொண்டு செல்லும் சமணர்களும், நண்பர்களாக ஏற்றுக்கொண்டு பழகுவதற்கு தகுதியற்றவர்களாய், ஊனம் உடையவர்களாக தங்களது உடலினை மட்டும் வளர்த்துக் கொள்பவர்களாக உள்ளனர். எனவே அவர்களது சொற்களை ஏற்றுக் கொள்ளலாகாது என்பதை உங்களது மனதினில் உணர்ந்து அவர்களது சொற்களை ஒதுக்கி விட்டு உய்யும் வழியினை, தொண்டர்களே நீங்கள் நாடுவீர்களாக. ஞானிகளாக உள்ளவர்கள் நான்கு வேதங்களையும் முறையாக ஓதி பொருளினை முற்றிலும் புரிந்து கொண்டு, தங்களது ஐந்து புலன்களையும் வென்று, ஏதும் பேசாமல் மௌனிகளாக தனியே இருந்து தவம் புரிந்து இறைவனின் தன்மைகளையும் பண்புகளையும் அறிந்த செல்வர்களாக விளங்கும் முனிவர்களாக வாழும் தலம் முதுகுன்றமாகும்.. .

பாடல் 11:

முழங்கொலி நீர்முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து

இறையை மூவாப்

பழம் கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே

பதியாக் கொண்டு

தழங்கெரி மூன்று ஓம்பும் தொழில் ஞானசம்பந்தர் சமைத்த

பாடல்

வழங்கும் இசை கூடும் வகை பாடும் அவர் நீடுலகம்

ஆள்வர் தாமே

விளக்கம்:

பழமலையை குறித்து பாடிய சம்பந்தருக்கு, பல ஊழிகளைக் கடந்து பழம்பதியாக திகழும் சீர்காழி தலத்தின் தன்மை நினைவுக்கு வந்தது போலும். அந்த தன்மையையும் இந்த பாடலில் அவர் குறிப்பிடுகின்றார். எரி மூன்று=ஆகவனீயம், காருகபத்யம் மற்றும் தக்ஷிணாக்னியம் என்பன. முழங்கொலி=ஆரவாரம் மிகுந்த ஓசை; கழுமலம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீர்காழி, கொச்சைவயம் மற்றும் கழுமலம் என்பன சீர்காழியின் பன்னிரண்டு பெயர்கள். சீர்காழியினை குறிப்பிடும் சம்பந்தர் மூவாத தலம் என்று கூறுகின்றார். மூவா என்ற சொல் அழிவற்ற என்று பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

மிகுந்த ஆரவாரத்துடன் பாயும் மணிமுத்தாறு நதியால், வலம் வந்து பணிந்து இறைஞ்சப் படும் முதுகுன்றத்து இறைவனை, பண்டைய நாளிலிருந்து பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப்படுவதும் அழிவற்ற தன்மையை உடையதும் ஆகிய கழுமலம் தலத்தினை தனது ஊராகக் கொண்டவனும், ஒலி எழுப்பிய வண்ணம் போற்றப்படும் மூன்று வகையான தீக்களை பேணி வளர்க்கும் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உண்டாக்கிய இந்த பதிகத்தினை இசை பொருந்தி கூடும் வண்ணம் பாடி இறைவனை வழிபடும் அடியார்கள், இந்த உலகத்தினை நீண்ட காலம் ஆள்வார்கள்.

முடிவுரை:

முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கி பல பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர் இங்கிருந்து பெண்ணாகடம் தலத்திற்கு செல்கின்றார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். மேகராகக் குறிஞ்சி பண்ணில் மொத்தம் ஏழு பதிகங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு பதிகங்களை, பக்தியுடன் முறையாக பாடினால் மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

இந்த பாடலில் தலத்து இயற்கை காட்சிகள் படம் பிடித்தது போன்று மிகவும் அழகாக ஞான சம்பந்தரால் உணர்த்தப் படுகின்றன. திரு கி.வா.ஜா அவர்களின் கூற்றுப்படி, தேவாரப் பதிகங்கள் என்னும் வாகனத்தில் ஏறிக் கொண்டு இறைவனின் அருள் பெறுவதற்கும், தமிழ்நாடு எங்கும் மாற்றுச் சமயங்களின் ஆதிக்கதத்தினைக் குறைத்து சிவமணம் கமழச் செய்யவும் ஊர் ஊராக சென்றவர்கள் அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும். இவர்கள் இருவரில் சிறியவராகிய திருஞானசம்பந்தர், இன்றைய இரயில் பயணங்களில் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்க்கும் குழந்தை போன்று, செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றதின் தாக்கம், அவரது பாடல்களில் இயற்கை வருணனையாக வெளிப்படுகின்றது போலும். இரயில் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் செய்தித் தாளையோ புத்தகத்தையோ பிரித்து அதில் ஆழ்ந்து விடுவது போன்று அப்பர் பிரான், பயணத்திலும் இறை சிந்தைனையில் ஆழ்ந்திருந்தார் போலும்.

பதிகத்தின் முதல் பாடலில் மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை கரை கொணர்ந்து சேர்க்கும் முத்தாறு நதி பாயும் தலம் என்றும், இரண்டாவது பாடலில் பூக்களின் நறுமணத்தையும் பழங்களின் நறுமணத்தையும் நீரின் குளிர்ச்சியையும் வாரிக் கொண்டு வந்து தென்றல் உலவும் முற்றங்கள் கொண்ட வீடுகளை உடைய தலம் என்றும், முக்கனிகளின் சாறு ஒழுகி சேறு உலராத வண்ணம் கனிகள் நிறைந்து காணப்படும் சோலைகள் நிறைந்த தலம் என்று மூன்றாவது பாடலிலும், நான்காவது பாடலில் மழையினைக் கண்டு அச்சம் கொண்ட பெண் குரங்கு மூங்கில் மரத்திலிருந்து அவசரமாக கீழே இறங்கி தனது குட்டியுடன் உள்ளே புகும் குகையினை உடைய தலம் என்றும் யானைகள் தங்களது குட்டிகளுக்கு இரை தேடும் சாரலினை உடைய தலம் என்றும், மிகுந்த நீரினை கரைகளில் மோதி நெற்கதிர்களையும் கழுநீர் மற்றும் குவளைக் கொடிகளை சாய்த்தும் தாமரை மொட்டுகளை கரையினில் மோத வைத்து மலர வைக்கும் முத்தாறு நதி உடைய தலம் என்று ஆறாவது பாடலிலும், வேடுவச் சிறுமிகள் முத்துக்களை அரிசியாக பாவித்து உலையில் இடுவது போன்று விளையாடும் தலம் என்று ஏழாவது பாடலிலும், தலத்தின் செழிப்பையும் நீர் வளத்தினையும் இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்தர் உணர்த்துகின்றார். பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் ஊழிகளைக் கடந்த தலம் என்று தலத்தின் சிறப்பை உணர்த்தும் சம்பந்தர், பத்தாவது பாடலில் இந்த தலம் முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக விளங்கியது என்றும் கூறுகின்றார். முனிவர்கள் தவம் செய்த இடம் சென்று வணங்குவதே பெரிய புண்ணியம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். நாமும் முதுகுன்றம் சென்று, அந்த தலத்தினை வணங்கி, முதுகுன்றத்தை வலம் வந்து, முதுகுன்றத்து முதியவனை வணங்கி பதிகங்கள் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Meiththaaru Chuvaiyum
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மெய்த்தாறு சுவையும்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: