Go Back

22/03/21

புலனைந்தும் பொறி கலங்கி


பின்னணி:

சீர்காழி நகரத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் உள்ள பல தலங்களையும் கண்டு ஆங்கு வீற்றிருக்கும் இறைவனது புகழினைப் பதிகங்களாக பாடும் வண்ணம் தனது ஐந்தாவது தலயாத்திரை மேற்கொண்ட திருஞானசம்பந்தர், கண்ணார்கோயில் என்ற தலத்திற்கு முதலில் செல்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, புள்ளிருக்குவேளூர், நின்றியூர், நீடூர், திருப்புன்கூர், பழமண்ணிபடிக்கரை, குறுக்கை வீரட்டம், அன்னியூர், பந்தணைநல்லூர், திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, கோடிகா, கஞ்சனூர், மாந்துறை, மங்கலக்குடி, வியலூர், திருந்து தேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம் முதலான தலங்கள் சென்ற பின்னர் திருவையாறு வந்தடைகின்றார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். உலகத்தவர் உய்யும் வண்ணம் தேவாரப் பதிகங்கள் அருளும் ஞானசம்பந்தர் வருவதை அறிந்த அடியார்கள் திருவையாறு நகரத்தினை அழகுபடுத்தி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர். ஆடல் பாடல்களுடன் தலத்து தொண்டர்கள் ஞானசம்பந்தரின் வருகையை கொண்டாடினார்கள் என்பது இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதன் மூலம் புலனாகின்றது., பல்லக்கின் அருகே தொண்டர்கள் வந்த போது, ஞானசம்பந்தர் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அடியார்கள் அனைவரையும் வணங்கிய பின்னர் நந்தியம்பெருமானுக்கு சிவபெருமான் அருள் புரிந்த சிறப்பினை உடைய திருவையாறு என்று அந்த தலத்தினை வணங்கி, புலனைந்தும் என்று தொடங்கும் பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். எனவே திருக்கோயில் செல்வதற்கு முன்னர் பாடிய பாடலாக இந்த பதிகம் கருதப் படுகின்றது.

வந்தணைந்து திருத்தொண்டர் மருங்கு வர மானேந்து கையர்

தம் பால்

நந்தி திருவருள் பெற்ற நன்னகரை முன் இறைஞ்சி நண்ணும்

போதில்

ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சல் என்பார் தம் ஐயாறு

என்று

புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி

வேந்தர்

சிலாத முனிவர் என்பர் பிள்ளைப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். நேரில் தோன்றி அவருக்கு காட்சியளித்த பெருமான், அவரை புத்திரகாமேட்டி யாகம் செய்யுமாறு ஆலோசனை கூறி, யாகத்தின் முடிவில் பூமியின் அடியில் ஒரு பெட்டகம் கிடைக்கும் என்றும் கூறினார். முனிவரும் அவ்வாறே செய்து பூமிக்கு அடியில் இருந்த பெட்டகத்தை எடுத்து திறந்து பார்த்தார். அந்த பெட்டியில் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரனை தாங்கிய சடையும் கொண்ட உருவம் இருந்தது. அப்போது ஒரு அசரீரி மூலமாக, முனிவரை பெட்டியை ஒரு முறை மூடி பின்னர் திறந்து பார்க்குமாறு இறைவன் பணித்தார். முனிவரும் அவ்வாறே பெட்டியை ஒரு மூடிய பின்னர் திறந்து பார்த்தார். அப்போது பெட்டியின் உள்ளே ஒரு அழகிய குழந்தை இருந்தைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அந்த குழந்தைக்கு ஜப்பேசன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.

கல்வி கேள்விகளில் மிகவும் சிறந்தவனாக விளங்கிய ஜப்பேசன், தனது வாழ்நாள் பதினாறு வருடங்கள் மட்டுமே என்பதை அறிந்து கொண்டான். ஆனால் அதைப்பற்றி கவலை ஏதும் கொள்ளாமல், பெருமானின் அருள் பெற்று விதியை மாற்றுவேன் என்று தீர்மானமாக இருந்தான். திருவையாறு தலத்தில் இருந்த சூரிய புஷ்கரணி என்ற குளத்தில் இறங்கி, ஒற்றைக் காலில் நின்ற வண்ணம்அந்த சிறுவன் தவம் செய்யத் தொடங்கினான். மீன்களும் தண்ணீர் பாம்பும் அவனது உடலை கடித்து அரித்ததை பொருட்படுத்தாமல் தனது தவத்தினை நாட்கணக்கில் தொடர்ந்த சிறுவனுக்கு, சிவபெருமான் நேரில் தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் அந்த குளத்தில் கங்கை, காவிரி, ஆகிய நதிகளின் நீர் பொங்கும் வண்ணம் செய்தார். மேலும், கங்கை நீர், அம்பிகையின் பால், இடபத்தின் வாயில் வழிந்த நுரை இவற்றை கொண்டு, சிறுவனை நீராட்டினார். சிறுவனின் உடல் நலம் தேறிய பின்னர், அவனுக்கு நந்தி என்ற நாமம் அளித்து சிவகணங்களுக்கு தலைவனாக பதவி அளித்தார். மேலும் கயிலாய மலையின் முதல் வாயிலைக் காவல் காக்கும் பொறுப்பினையும் அந்த சிறுவனுக்கு அளித்தார். புலிக்கால் முனிவர் வியாக்ரபாதரின் மகளாகிய சுயம்பிரபை என்பவளை நந்திக்கு, திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து வைத்தார். இவ்வாறு நந்திக்கு பல விதங்களிலும் பெருமான் அருள் செய்தமை சேக்கிழாரால் மேற்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது. நந்தியின் திருமணத்திற்கு அருகல் உள்ள தளங்களில் இருந்த அந்தணர்கள் பலவிதங்களிலும் உதவி செய்தனர். திருமணம் முடிந்த பின்னர், உதவி செய்த அந்தணர்களுக்கு நன்றி கூறும் விதமாக மணமக்கள், மழபாடியிலிருந்து புறப்பட்டு திருப்பழனம், சோற்றுத்துறை, வேதிக்குடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் இறுதியாக திருவையார் சென்று அடைந்தனர். இந்த நன்றி கூறும் விழாவுக்கு ஏழூர் பெருவிழா என்று பெயர். இன்றும் ஏழூர் திருவிழா என்ற பெயரில் நந்தியின் திருமணமும், திருமணம் முடிந்த பின்னர் தம்பதிகள் ஏழு ஊர்களுக்கும் செல்வது ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. இந்த ஏழூர் திருவிழாவினை முதன் முதலில் தொடங்கி நடத்தி வைக்கப்பட்டது இராஜராஜ சோழனின் காலத்தில் என்பதை அறியும்போது சைவ மதத்தின் வளார்ச்சிக்கு சோழர்கள் செய்த சேவையை நாம் உணர்கின்றோம்.

இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஐந்து பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளிய பன்னிரண்டு பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் இது வரை கிடைத்துள்ளன. அப்பர் பிரானுக்கு இறைவன் கயிலாயக் காட்சியை, இந்த தலத்து கோபுரத்தில் காட்டி அருள் புரிந்தார். சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் கண்டியூர் தலத்திலிருந்து (காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்று) இந்த தலம் வந்தடைந்த போது, காவரி நதியைக் கடக்க வேண்டி இருந்தது. நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால், அவர்கள் இருவரால் நதியை கடக்க முடியவில்லை. பரவும் பரிசு ஒன்று என்று தொடங்கும் பதிகத்தினை உரத்த குரலில் பாடிய சுந்தரர், ஐயாறு உடைய அடிகளோ என்று குரல் கொடுத்த வண்ணம் பதிகம் பாடினார். தனது கன்று எங்கிருந்து குரல் கொடுத்தாலும் அதனை புரிந்து கொள்ளும் தாய் போல், சிவபெருமான் ஒலம் என்று எதிர்க்குரல் கொடுத்து, சுந்தரர் பாடிய பாடலை தான் செவிசாய்த்து கேட்டதை உணர்த்தினார். சுந்தரர் இருந்த இடத்திற்கு மேற்கே உள்ள காவிரியின் நீர் உறைந்து பளிங்கு மலை போல் நிற்க, கிழக்கு பகுதியில் உள்ள நீர் நன்றாக வடிந்து, குளிர்ந்த மணல் பரப்பு தோன்றியது. பெருமானின் கருணைச் செயலை நேரில் கண்ட, சுந்தரர், சேரமான் பெருமான் நாயனார் மற்றும் அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்த தொண்டர்கள் அனைவரும், மெய் சிலிர்த்து, கண்கள் தாரை தரையாக கண்ணீர் பொழிய, தங்களது கைகளை தலைமேல் கூப்பி, இறைவனை வணங்கினர். பின்னர் அனைவரும், காவிரி நதியின் மணல் பரப்பில் நடந்து அடுத்த கரையினைச் சென்றடைந்து ஐயாரப்பனை தரிசனம் செய்து வணங்கினார்கள். திருக்கோயிலிருந்து திரும்பிய அவர்கள் மீண்டும் நதியைக் கடந்து தென்கரை அடையும் வரையில், ஒரு புறம் நீர் உறைந்தும் மறுபுறம் மணல் பரப்பாகவும் இருந்தது. இறைவனை தரிசனம் செய்த தொண்டர்கள் அனைவரும் மீண்டும் நதியைக் கடந்து தென்கரை அடைந்த பின்னர், காவிரி நதி முன்போல் வெள்ளப்பெருக்குடன் ஓடத் தொடங்கியது. நீரின் வல்லமையை வெற்றி கொண்ட மூன்று தேவாரப் பதிகங்களில் சுந்தரர் அருளிய இந்த பதிகமும் ஒன்றாகத் திகழ்கின்றது. மற்றைய இரண்டு பதிகங்கள் கடலிடையே அப்பர் பிரான அருளிய நமச்சிவாயப் பதிகமும், கொள்ளம்புதூர் தலத்து இறைவனை நோக்கி திருஞானசம்பந்தர் அருளிய கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகமும் ஆகும்.

திருவையாறு தலம் தஞ்சாவூரிலிருந்து பதினோரு கி.மீ. தொலைவில், கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. ஐந்து ஆறுகள் பாய்வதால், காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் இந்த தலத்தின் அருகே பாய்வதால் ஐயாறு என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் திருநாமம், பஞ்சநதீஸ்வரர், ஐயாரப்பன், பிரணதார்த்திஹரன்; இறைவியின் திருநாமம், அறம் வளர்த்த நாயகி, தர்ம சம்வர்த்தினி, தர்மாம்பிகை, வடிவுடைமங்கை. ஒரே கோயிலின் உள்ளே, தென் கயிலை, வடகயிலை, ஐயாரப்பன் என்று மூன்று சன்னதிகள் உள்ளன. காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களில் இந்த தலமும் ஒன்று. மற்ற தலங்கள், திருவிடைமருதூர், சாய்க்காடு, மயிலாடுதுறை, வாஞ்சியம், வெண்காடு என்பன. நந்திதேவரின் திருமணத்துடன் தொடர்பு கொண்ட, திருவையாறு, சோற்றுத்துறை, வேதிகுடி, பூந்துருத்தி, பழனம், கண்டியூர், நெய்த்தானம் ஆகிய ஒரு தொகுப்பாக ஏழூர் (சப்த ஸ்தானம்) என்று அழைக்கப் படுகின்றன.

பாடல் 1:

புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு

ஐம் மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும்

கோயில்

வலம் வந்த மடவார்கள் நடமாட முழவு அதிர மழை என்று

அஞ்சிச்

சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே

விளக்கம்:

அலமந்த போது=வருந்தி இறக்கும் தருவாயில்; தன்மை நவிற்சியணி; குரங்குகள் இயல்பாக மரம் ஏறி வேடிக்கை பார்ப்பதை, மேகங்கள் தென்படுகின்றனவா என்று பார்ப்பதாக தனது கருத்தினை ஏற்றிச் சொல்லும் பாங்கு, சங்க காலத்துக் கவிதைகளின் நயம் தேவாரப் பாடல்களில் உள்ளன என்பதை நமக்கு உணர்த்துகின்றது. பொறி=செயல்பாடுகள்; நெறி=செல்லவேண்டிய வழி; ஐ=கோழை; முழவு=மத்தளம் போன்ற வாத்தியம்; முகில்=மேகம்; அலமந்து (நான்காவது அடி)= சுழன்று

உயிர் உடலை விட்டு பிரியும் சமயத்தில் உயிர் படும் துன்ப வேதனைகளை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஐந்து புலன்களும் தங்களது செயல்பாட்டின் வலிமை குறைந்து உயிருடன் ஒத்துழைக்கத் தவறுதலும், தாங்கள் செல்லவேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் செல்லுதலும், கோழை தொண்டையை அடைத்துக் கொண்டு ஆகாரம் உட்செல்வதை தடுத்தும் ஒன்றும் பேச முடியாமல் நிலையில் இருப்பதும், உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் மிகவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்தும் செயல்களாகும். அந்த தருணத்தில் உயிர், தான் உடலை விட்டு பிரிந்த பின்னர் அடைய இருக்கும் நரக வேதனைகள், மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய பிறப்புகள் ஆகியவற்றை நினைத்து கவலை அடையும். அந்த நிலையில் சுற்றத்தார், அவரது செல்வம் ஏதும் அவருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இறைவன் ஒருவன் தான் அவருக்கு அபயம் அளிக்கும் நிலையில் இருப்பார் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு அடுத்து சட்டநாதர் சன்னதியும் பிரணதார்த்திஹரர் சன்னதியும் உள்ளன. ப்ரணதார்த்திஹரன் என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று. உயிர் அடையும் வேதனைகளை முற்றிலும் அழித்து நீக்குபவன் என்பது இந்த வடமொழி திருநாமத்தின் பொருள். இறைவனின் இந்த தன்மையையே இந்த பாடலில் சம்பந்தர், கோழை தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு தகுந்த வழியினை காட்டுபவன் என்று குறிப்பிடுகின்றார். ஐ (கோழை) தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு வழியை (ஆற்றினை) காட்டுபவன் என்பதால் ஐயாறன் என்று பெயர் வந்ததாக சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் பொருத்தமாக இருப்பதுடன், பிரணதார்த்திஹரன் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேர் மொழிபெயர்ப்பாக ஐயாரப்பன் என்ற திருநாமம் இருப்பதையும் நாம் உணரலாம்.

இவ்வாறு உயிர் உடலினை விட்டு பிரியும் தருவாயில் ஏற்படும் துயரங்களையும், அதனை நீக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் ஒருவனே என்பதையும் ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது, நமக்கு அப்பர் பிரான் திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு–சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில் உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமது உயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு, இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப்படுகின்றது. ஈட்டிய வினைகளின் ஒரு பகுதியை சூக்கும் உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும், முடிந்தால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவ முடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவும் நடக்காது என்பதே நிதர்சமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது, யார் உதவி செய்ய வல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாக இருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்று பன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு. அரசனின் மனைவி குடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் மற்ற அனைவர்க்கும் தாய், தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள்.

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில், தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமைத் தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் இது உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்.

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர்

நல்லார்

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச்

செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா

என்றன்

அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டு

அடியேன் என் செய்கேனே.

திருச்சேறை பதிகத்தின் ஒரு பாடலில் (5.75.5) சேறை செந்நெறிச் செல்வனார் இருக்கும்போது நாம் இயமனுக்கு பயப்பட வேண்டியதில்லை என்றும் இயமன் நம் முன்னர் தோன்றினாலும் அவனைத் துரத்தும் வழியை தான் கண்டு கொண்டதாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். சேறை செந்நெறிச் செல்வனாரை வணங்கி அவரது அருள் பெற்று சிவலோகம் செல்வதே அப்பர் பிரான் உணர்த்தும் வழியாகும். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் பெறுகின்றோம்.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நனிபள்ளி தலத்து பதிகத்தின் (4.70) ஏழாவது பாடலில் தனது அடியார்கள் நரகத்தில் வீழாமல் பாதுகாப்பவர் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்: சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: சிவபிரான் தனது தொண்டர்களின் வினைத் தொகையை அறவே நீக்கி விடுவதால். அத்தகைய தொண்டர்கள் நரகத்துத் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்

விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

நமது மனதினை குரங்குக்கு ஒப்பிடுவது ஆன்மீக இலக்கியங்களின் வழக்கம். தனது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, திருவையாறு தலத்தில் உள்ள குரங்குகள் மரமேறி மேகங்கள் தென்படுகின்றனவா என்று எட்டிப் பார்ப்பது போன்று, உயிரின் நலத்தினை விரும்பும் மனம், மரணம் நெருங்கி வரும் நேரத்திலாவது ஐயாரப்பனை நினைத்து உய்வினை அடைய வேண்டும் என்ற செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது

பொழிப்புரை:

ஐந்து புலன்களும் தங்களது இயல்பான செயல்பாடுகளில் வலிமை குன்றி, தாம் செல்லவேண்டிய வழியில் நின்று செயல்படாமல், என்ன செய்வது என்று அறியாமல் இயலாமையால், மயக்கத்தில் ஆழ்ந்து, அறிவு செயல்படுவதை நிறுத்தி உயிருடன் ஒத்துழைக்காததால் நிலையில் இருந்த போதும், உடலில் பெருகிய கோழை மேலெழுந்து வந்து தொண்டையை அடைத்துக் கொண்டு வாயில் செலுத்தப்படும் உணவு உட்செல்வதை தடுத்தும் பேச்சினை தடை செய்த போதிலும், உயிர் இறைவனை நினைத்தால், அந்த இறைவன், அந்த உயிரினுக்கு அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பான். அத்தகைய ஆற்றல் கொண்ட இறைவன் அமரும் தலம் திருவையாறு ஆகும். இந்த இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயிலை வலம் வரும் இளம் பெண்கள் நடனத்திற்கு ஏற்ப, முழவுகள் பின்னணியில் அதிர்ந்து ஒலிக்கின்றன. இவ்வாறு முழவுகள் எழுப்பும் ஓசையைக் கேட்ட குரங்குகள், அந்த ஓசையினை இடியின் ஓசை என்று தவறாகக் கருதி தடுமாற்றம் அச்சத்துடன் மரங்களின் மீதேறி, மேகங்கள் எங்குள்ளன என்று நான்கு திசைகளிலும் சுழன்று சுழன்று பார்க்கின்றன.

பாடல் 2:

விடலேறு படநாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன்

பாவையோடும்

அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள்

கோயில்

கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல்

வைகித்

திடல் ஏறி சுரி சங்கம் செழுமுத்து அங்கு ஈன்று அலைக்கும்

திருவையாறே

விளக்கம்:

விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு= கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றது. திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் ஞானசம்பந்தர், பெருமான் பலியேற்கச் சென்ற போது தேவியுடன் சென்றதாக குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்றபோதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.

பல திருமுறை பாடல்களில் இறைவன் தேவியுடன் பலியேற்கச் செல்வதாக கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலி தலத்தின் மீது அருளிய பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. கடை=மனைவாயில்; இயலால்=அழகோடு

கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்

புயலார் கடல் பூம்புகலி நகர் தானே

உமை அன்னையை மட்டும் அழைத்துச் செல்லாமல், கங்கை நங்கையையும் தனது சடை மேல் ஏற்றவனாக பெருமான் பலியேற்கச் சென்றார் என்று புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஈடு=பெருமை.

தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

குடந்தை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.72.4) மாதொருபாகனின் கோலத்தில் பலி ஏற்பவர் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மாதார் மங்கை= காதல் நிறைந்த உமையம்மை; பெருமான் மீது தான் வைத்திருந்த எல்லையற்ற அன்பின் காரணமாகத் தானே, எப்போதும் பெருமானை விட்டு பிரியாது இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அன்னை பெருமானிடம் வேண்டி, அவனது உடலினில் ஒரு பாகத்தைப் பெற்றாள் அல்லவா.

போதார் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகாரும்

தாதார் பொழில் சூழ்ந்த எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்

மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்

காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்= பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை= வலிமை; நிறை=கற்பு; பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயின் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்புநிலை குன்றிய பின்னர் அவர்களது வலிமையையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார்.

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி

நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்

பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (5.36.4) அப்பர் பிரான் இருவராக, பலி ஏற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கீறு=கிழித்த; அருவராதது=அருவருக்கத் தகாதது; இருவராய்=சக்தியும் சிவமுமாக இருவராய்; கடை=வீட்டு வாயில்; உழலுதல்=திரிதல். இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண்தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும்.

அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து

இருவராய் இடுவார் கடை தேடுவார்

தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்

ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே

தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன தைரியம் இருந்தால், உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ

பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.46.6) பெருமான் பலி ஏற்பதையும், நஞ்சு உண்டதையும் மிகவும் நயமாக இணைத்து, பெருமானின் எல்லையற்ற கருணையை குறிப்பிட்டு, தனது கோரிக்கையை சுந்தரர் பெருமானிடம் சமர்பிக்கும் பாங்கினை நாம் உணரலாம். இலவ=இலவம்பூ; மென்மையான இதழ்கள் உடைய அன்னை என்று கூறுகின்றார். கலவ மயில்=தோகை உடைய மயில்; பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமான், தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி நஞ்சினையும் உட்கொண்டார் என்று கூறுகின்றார். தன்னிடும் முறையிடும் அடியார்களின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க இயலாத பெருமான், தனக்கு பட்டாடைகளும் வாசனைப் பொருட்களும் தாரமால் இருப்பது தவறன்றோ என்று சுந்தரர் முறையிடும் பாடல். எச்சும் போது= உச்சி வேளை, நண்பகல்;

இலவ இதழ் உமையோடு எருது ஏறிப் பூதம் இசை பாட இடு

பிச்சைக்கு எச்சும் போது

பல அகம் புக்கு உழிதர்வீர் பத்தோடு சாந்தம் பணித்து அருளாது

இருக்கின்ற பரிசு என்ன படிறோ

உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்

செய்ததது உமக்கு இருக்கொண்ணாது இடவே

கலவ மயில் இயலவர்கள் நடமாடும் செல்வக் கடல் நாகைக்

காரோணம் மேவி இருந்தீரே

பொழிப்புரை:

மற்ற உயிர்களைக் கொல்லும் வல்லமை வாய்ந்த விடம் பொருந்திய படத்தினை எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று அசைப்பவனும், மலையரசன் இமவான் மகளாகிய பார்வதி தேவியுடன், வலிமை வாய்ந்த இடபத்தின் மீது ஏறிக்கொண்டு தாருக வனத்து இல்லத்தரசிகளிடம், அழகிய சொற்களை உடைய மங்கையரே எமக்கு பலி இடுவீராக என்று கேட்டு பலி ஏற்றவனும் ஆகிய இறைவன் உறையும் கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. வளைந்து காணப்படும் மூக்குகள் கொண்ட கடற்சங்குகள், கடலிலிருந்து மேலேறி காவிரியின் நீர்ப்பெருக்கோடு கலந்து வந்து, மணல் திடல்களில் ஏறி அமர்ந்து இரவு நேரங்களில் முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் இடம் திருவையாறு தலமாகும்.

பாடல் 3:

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை

பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலும் கோயில்

கொங்காளப் பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்திக்

கூதல் நீங்கிச்

செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரை தேரும் திருவையாறே

விளக்கம்:

கொங்கு=நறுமணம்; கங்காளர்=பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது தாங்கியவர்; கானப்பேர்=தற்போது காளையார் கோயில் என்று அழைக்கப்படும் பாண்டி நாட்டு பாடல் பெற்ற தலம். கூதல்=குளிர்;

பொழிப்புரை:

முற்றூழிக் காலத்தில் பிரமன் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது தாங்கியவரும், கயிலாய மலையின் தலைவரும், கானப்பேர் என்று அழைக்கப்படும் பாண்டிய நாட்டு தலத்தில் உறைபவரும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியில் வைத்திருப்பவரும், திரிசூலப் படையினை உடையவரும், இடபத்தை ஆட்கொண்டு அதன் மீது அமர்ந்து பயணம் செய்பவரும் ஆகிய பெருமான் தொடர்ந்து உறையும் இடம் திருவையாறு ஆகும். இந்த தலத்தில் உள்ள நறுமணம் மிகுந்த சோலைகளில் நுழையும் சிவந்த கால்களை உடைய வெண்குருகு பறவைகள் தங்களது கூர்மையான அலகுகள் கொண்டு ஈரமான இறகுகளை கோதி உலர்த்தி குளிர் நீங்கப் பெற்று, பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டிய இரையினைத் தேடுகின்றன.

பாடல் 4:

ஊன் பாயும் முடை தலை கொண்டு ஊரூரின் பலிக்கு உழல்வார்

உமையாள் பங்கர்

தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும்

கோயில்

மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள் தோறும்

தேன் பாய மீன் பாயச் செழுங்கமலம் மொட்டு அலரும் திருவையாறே

விளக்கம்:

ஊன் பாயும்=ஊன் உலர்ந்து பரவிய; முடை=முடை நாற்றம்; உடை=உடைந்த; தேன் பாயும்=தேன் ஒழுகும்; சங்கரன் என்றால் நலம் செய்பவர் என்று பொருள். பெருமான் ஊர் தோறும் சென்று பலி ஏற்பது உயிர்களுக்கு நன்மை புரியும் நோக்கத்துடன் தான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

ஊன் உலர்ந்து துர்நாற்றம் வீசும் பிரமகபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவாறு ஊர்கள் தோறும் சென்று பலி ஏற்பதற்காக திரிபவரும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவரும் பாய்ந்து செல்லும் ஆற்றலை உடைய இடபத்தைத் தனது வாகனமாகவும் உடையவரும் ஆகிய சங்கரனார் தங்கும் திருக்கோயில் உடைய தலம் திருவையாறு ஆகும். மான்கள் துள்ளித் திரியும் சோலைகளில் அருகே உள்ள வயலோரங்களில் உள்ள மரங்கள் மீது குரங்குகள் குதித்து பாய்வதால், மலர்களில் உள்ள தேன் மடுக்களில் சிந்துவதைக் காணும் மீன்கள் துள்ளி குதிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் மொட்டாக உள்ள தாமரை மலர்களை மலரச் செய்கின்றன.

பாடல் 5:

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கு நிறைந்த

கொன்றைத்

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும்

கோயில்

காரோடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ்

தார் வீதித்

தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே

விளக்கம்:

கரந்தை=விபூதிப் பச்சை; கரந்தை, கூவிளம் (வில்வம்), வெள்ளெருக்கு, கொன்றை முதலிய மலர்கள் பெருமானுக்கு உகந்த மலர்கள்; நீர்=இங்கே கங்கை நதி; தத்துவன்=உயர்ந்த பொருளாக இருப்பவன்; கார்=மேகம்; சேயிழை=சிறந்த அணிகலன்கள். தேரோடும் வீதிகளில் நடன அரங்குகள் இருந்த நிலை, பண்டைய நாட்களில் இறைவன் வீதிவலம் வரும் போது, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றதை நமக்கு உணர்த்துகின்றன

பொழிப்புரை:

கங்கை நதி, வில்வ இலைகள், பிறைச்சந்திரன், வெள்ளெருக்கு மலர்கள், விரிந்து நிறைந்து காணப்படும் கொன்றை மலர் கொத்துகள், குளிர்ந்த விபூதிப் பச்சை இலைகள் ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்தவரும், அனைத்து உயிர்கட்கும் அனைத்துப் பொருட்கட்கும் உயர்ந்த பொருளாக விளங்குபவரும் ஆகிய இறைவன் தங்கும் திருக்கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. வானில் உலவும் மேகத்தைத் தொடும் வண்ணம் மிகவும் உயர்ந்து காணப்படும் இந்த திருக்கோயில், வானளவு உயர்ந்து நறுமணம் பரப்பும் சோலைகளால் சூழப்பட்டு, நறுமணம் நிறைந்து தேர்கள் ஓடும் வண்ணம் அகன்ற வீதிகளில் அமைந்துள்ள அரங்குகளில் சிறந்த அணிகலன்கள் அணிந்த மங்கையர்கள் இடைவிடாது நடனம் பயில்கின்றனர்.

பாடல் 6:

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும்

கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

விளக்கம்:

தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி= உயிர்கள் வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி கட்டுவதும் தானே.

பொழிப்புரை:

அனைத்து உலகங்களுக்கும் வேந்தனாக விளங்கும் பெருமான், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நன்னெறி காட்டும் விகிர்தனாக உள்ளார். நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையினைத் தனது சடையில் அணிந்தவரும், புண்ணியமே வடிவமாக உள்ளவரும் ஆகிய இறைவன் உறையும் திருக்கோயில் உள்ள இடம், காந்தாரம் இசைக்கு பொருந்தும் வகையில் மகளிர் பாடல்கள் பாட, அழகிய வீதிகளில் அமைந்த அரங்குகளில் சிறந்த அணிகலன்களை பூண்ட இளம் பெண்கள் தேம் தாம் என்று ஒலிக் குறிப்புக்கு ஏற்ப நடமாடும் திருவையாறு நகரமாகும்.

பாடல் 7:

நின்றுலா நெடு விசும்பு நெருக்கி வரு புரம் மூன்று நீள் வாய் அம்பு

சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில்

குன்றெலாம் குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு

தென்றலார் அடி வருடச் செழுங்கரும்பு கண் வளரும் திருவையாறே

விளக்கம்:

சிலை=மலை, வில் என்ற இரண்டு பொருள்களும் பொருந்துவதால், மலையாகிய வில் என்று பொருள் கொள்வது பொருத்தமே. மலையாளி=மலையை ஆள்பவர், கயிலை மலையை ஆள்பவர்; பிரசம்=தேன்; மென்மையான காற்று என்பதை குறிப்பிட வருடுதல் என்று கூறுகின்றார். நின்றுலா=நின்று உலவும்; நின்றுலா என்ற தொடரை நெடுவிசும்பின் நேருக்கு என்ற தொடருக்கு பின்னே அமைத்து பொருள் கொள்ள வேண்டும். நெருக்கி வரு புரம்=ஒரே நேர்கோட்டினில் நெருங்கி வந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; உலாம்=உலவும் வண்ணம்; கண் வளரும்=கணுக்கள் வளரும் வண்ணம்;.

பொழிப்புரை:

நீண்ட வானவெளியில் எப்போதும் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும், நேர்கோட்டினில் நெருங்கி வந்த தருணத்தில், மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினைத் தொட்டு, அந்த மூன்று கோட்டைகளையும் துளைத்துச் செல்லும் வண்ணம் ஒரு கூரிய அம்பினை எய்தி அந்த கோட்டைகளை அழித்த சிவபெருமான் கயிலாய மலையினை ஆள்பவன் ஆவான். இத்தகைய ஆற்றல் பொருந்திய பெருமான் சென்றடைந்து உறையும் திருக்கோயில், குளிர்ந்த தென்றல் காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடையும் குயில்கள் குன்றுகளில் அமர்ந்த வண்ணம் கூவ, தேன் நிறைந்ததும் செழுமை நிறைந்து தேன் உடையதும் ஆகிய மலர்களில் படர்ந்து நறுமணத்தினை சுமந்து வரும் தென்றல் காற்று கரும்புகளின் அடிபாகத்தினைத் தடவி வீச, கரும்பின் கணுக்கள் செழிப்பாக வளரும் வயல்கள் கொண்ட ஊராகிய திருவையாற்றில் உள்ளது.

பாடல் 8:

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர் கோன் தலைகள்

பத்தும்

மஞ்சாடு தோள் நேரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர்

கோயில்

இஞ்சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்து அங்கு ஓடிச்

செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருவையாறே

விளக்கம்:

தேங்காய் தாமாக மரத்திலிருந்து விழுவதைத் தவிர்த்து எவரும் தேங்காயை பறிப்பதில்லை என்று குறிப்பிட்டு, நகரின் செல்வ வளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. செஞ்சாலி=சிறந்த வகை நெல்; இந்த பாடலில் அஞ்சாதே மலை எடுத்த அரக்கன் என்று ஞானசம்பந்தர் இராவணனை குறிப்பிடுகின்றார். தேரிலிருந்து வேகமாக கீழே குதித்து கோபத்துடன் மலையை நோக்கி ஓடிய அரக்கனிடம் அவனது தேர்ப்பாகன், தவறு செய்யவேண்டாம் என்று சொன்ன அறிவுரை அரக்கனது காதில் விழவில்லை. புனிதமான மலையினை வலம் வந்து வணங்காமல், அந்த மலையினை பேர்த்து எடுக்கத் துணிவது தவறு அல்லவா, அந்த தவற்றின் பின் விளைவுகள் மோசமாக இருக்குமே என்று அச்சம் கொண்டு, தவிர்த்திருக்க வேண்டும். சர்வ வல்லமை உடைய சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவதால் என்ன நேரிடுமோ என்று கவலை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், தனது வலிமையின் மீது அளவு கடந்த நம்பிக்கை உடையவனாக, அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்ட கயிலாய மலையினைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர நினைத்தான். இந்த செய்கையைத் தான் அஞ்சாதே மலை எடுத்தான் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலிமை என்று உணர்த்தும் மைந்து என்ற சொல், எதுகை கருதி மஞ்சு என்று திரிந்தது. நெரிய=நொறுங்கும் வண்ணம்; அடர்த்த=மலையின் கீழே அமுக்கிய; இன், சாயல் ஆகிய இரண்டு சொற்களும் சேர்ந்து இஞ்சாயல் என்று மாறின. இன்=இனிய; சாயல்=நிழல்; மேதி=எருமை மாடு; இரிந்து=போம் கொண்டு; உழக்கி=காலால் மிதித்து நசுக்கி;

பொழிப்புரை:

தான் செய்வது தவறு என்று உணர்த்தப்பட்ட பின்னரும், அந்த தவற்றின் பின்விளைவுக்கோ, சர்வ வல்லமை வாய்ந்த சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானால் என்ன நேரிடுமோ என்றும் அச்சம் கொள்ளாமல், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த, அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் வலிமை வாய்ந்த இருபது தோள்களும் நொறுங்கும் வண்ணம் கயிலை மலையின் கீழே பொருந்தும் வண்ணம், தனது கால் பெருவிரலால் கயிலை மலையை அழுத்தியவன் சிவபெருமான், அரக்கன் தனது தவறினை உணர்ந்த பின்னர், அவனுக்கு பல விதங்களில் அருள் புரிந்த வல்லமை உடையவன் ஆவார். அவர் வீற்றிருக்கும் திருக்கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. இனிமை தரும் நிழல் அளிக்கும் தென்னை மரத்திலிருந்து கீழே விழும் இளம் தென்னம் நெற்றுகள் மரத்தின் கீழே இருந்த எருமை மாடுகளின் முதுகினில் விழ, அச்சம் கொண்ட எருமை மாடுகள் எழுத்து குதித்து, அருகே இருந்த நெல்வயல்களின் செஞ்சாலி கதிர்களை தனது கால்களால் நசுக்கி ஆங்கே செழுமையாக பூத்துள்ள தாமரைகளின் அருகே படுக்கும் வண்ணம் நீர்வளமும் நிலவளமும் கொண்ட ஊர் திருவையாறு ஆகும்.

பாடல் 9:

மேல் ஓடி விசும்பு அணவு வியன் நிலத்தை மிக அகழ்ந்து

மிக்கு நாடும்

மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும்

கோயில்

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார்

முகத்தின் நின்று

சேல் ஓடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

விளக்கம்:

அணவி=நெருங்கி, அணுகி; கோல்=நடனம் கற்பிக்கும் ஆசிரியர் ஏந்தும் தலைக்கோல்; நடனம் ஆடும் போது அபிநயங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மாணவிகளுக்கு சுட்டிக் காட்டுவதற்காக வைத்திருக்கும் கோல்; சேல்=மீன் போன்ற கண்கள்; சிலை=வில் போன்று வளைந்த புருவம்; மிக்கு=மிகுந்த முயற்சி செய்து; விசும்பு=ஆகாயம்; கோல்=திரண்ட; வியன்=அகன்ற;நடனக்கலை மிகவும் சிறப்பாக போற்றப்பட்ட நிலை, இந்த பதிகத்தின் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. சேலோட சிலையாட என்று நடன மாந்தர்கள் காட்டிய அபிநயத்தினை ஞானசம்பந்தர் நயமாக குறிப்பிடுவது, இசைக்கருவிகள் முழக்கியும் நடனமாடியும் நகர் மாந்தர்கள் ஞானசம்பந்தரின் கொண்டாடினார்கள் போலும் என்று தோன்றுகின்றது.

பொழிப்புரை:

அன்னமாக உருவெடுத்து ஆகாயத்தைத் தொடும் அளவு மேலே பறந்து சென்ற நான்முகனும், மிகவும் ஆழமாக அகன்ற பூமியைத் தோண்டிக் கொண்டு பன்றியாக சென்ற திருமாலும், பெருமானின் திருமுடியையும் திருவடியையும் காண்பதற்கு மிகுந்த முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் காண முடியாத வண்ணம், நெடுந்தழலாக நின்ற சிவபெருமான், பொருந்தி உறையும் திருக்கோயில் அமைந்துள்ள தலம் திருவையாறு ஆகும். நடன ஆசிரியர்கள் தங்களது கையினில் கோல் ஏந்தியவராக, தங்களது மாணவிகளுக்கு அபிநயங்கள் எவ்வாறு செய்வது என்பதை சுட்டிக் காட்ட, அதற்கு ஏற்ப வண்ணம் நடனமாடும் அழகாக குவிந்த மார்பங்களையும் சிறந்த நகைகளையும் உடைய மாதர்கள், தங்களது முகத்தில் உள்ள, மீன் போன்ற கண்கள் வேகமாக இங்குமங்கும் ஓடும் வண்ணமும், வில் போன்று வளைந்த புருவங்கள் மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் பாவனைகளை வெளிப்படுத்தி நடனமாடும் ஊர் திருவையாறு ஆகும். .

பாடல் 10:

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம்

ஒன்று இல்லா

மிண்டாடு மிண்டர் உரை கேளாதே ஆளாமின் மேவித்

தொண்டீர்

எண் தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும்

கோயில்

செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள் வந்து அலைக்கும்

திருவையாறே

விளக்கம்:

செண்டு=மலர்க் கொத்துகள்; குற்றுடுக்கை=உடலில் மார்பின் மேல் உடுத்தும் பாய். மிண்டு= குறும்பு; மிண்டாடு=குறும்புத் தனமாக பேசப்படும் சொற்கள்; மேவி=விரும்பி; குண்டாடு= குண்டர்கள் ஈடுபடும் இழிந்த செயல்களைச் செய்யும்;

பொழிப்புரை:

குண்டர்கள் ஈடுபடும் இழிந்த செயல்களை செய்பவரும், சிறிய ஆடையினை உடுத்தித் திரிபவரும் ஆகிய சமணர்களும், நல்ல குணம் ஏதும் இல்லாத புத்தர்களும், சிவபெருமான் குறித்து பேசும் குறும்பான சொற்களை, உலகத்தவரே, நீங்கள் கேளாது இருப்பீர்களாக. எட்டு தோள்களை உடையவரும், மூன்று கண்கள் பொருந்தியவரும், எமது தலைவரும் ஆகிய இறைவனாருக்கு அடிமையாக மாறி அவருக்கு தொண்டு செய்வீர்களாக. எமது ஈசன் மனம் மகிழ்ந்து உறையும் இடம் திருவையாறு தலத்தில் உள்ள திருக்கோயில் ஆகும். பூங்கொத்துகள் மெதுவாக அசைந்து அசைந்து ஆடிக் கொண்டு வரும் வண்ணம், நீர்ப்பெருக்கினை உடைய காவிரி நதி, தனது அலைகளால் முத்துக்களை இரு கரைகளிலும் கொண்டு வந்து சேர்க்கும் நகரம் திருவையாறு ஆகும்.

பாடல் 11

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம் பெருமானை

அந்தண் காழி

மன்னிய சீர் மறைநாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்

இன்னிசையால் இவை பத்து இசையுங்கால் ஈசனடி

ஏத்துவார்கள்

தன்னிசையோடு அமர் உலகில் தவநெறி சென்று எய்துவர்

தாழாது அன்றே

விளக்கம்:

தாழாது=தாமதம் ஏதும் இன்றி; அந்தண்=குளிர்ச்சியும் அழகும் பொருந்திய; இசையுங்கால்=பாடும் போது; தேவார பாடல்கள் ஓதுவது தவம் என்று குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

அன்னங்கள் மலிந்த சோலைகள் நான்கு திசைகளிலும் புடை சூழ்ந்திருக்கும் ஐயாறு தலத்தின் பெருமான் குறித்து, அழகும் குளிர்ச்சியும் பொருந்திய சீர்காழி நகரில் பொருந்தி வாழ்பவனும், சிறப்பு வாய்ந்த நான்கு வேதங்களையும் ஓதுபவனும், வளர்ந்து கொண்டிருக்கும் புகழினை உடையவனும் ஆகிய, ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய இந்த பத்து பாடல்களையும் இனிமையான இசையுடன் பொருத்தி பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடும் அடியார்கள், தாங்கள் ஓதிய தேவாரப் பாடல்கள் அளிக்கும் தவத்தின் பயனாக, தாமதம் ஏதுமின்றி தேவர் உலகில் வாழும் வாய்ப்பினை பெறுவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகம் உள்ளிட்டு ஏழு பதிகங்கள் (1.129–1.135) மேகராகக்குறிஞ்சி பண்ணில் பொருந்தும் வண்ணம் பாடப் பட்டுள்ளன. இந்த பண்ணில் பொருந்தும் வண்ணம் இந்த ஏழு பதிகங்களையும் மனம் ஒன்றி ஓதினால், மழை பொழியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐயாறு தலத்தில் அடியெடுத்து வைத்த உடனேயே, பெருமானின் புகழினையும் தலத்தின் சிறப்பினையும் பாடிய வண்ணம், திருக்கோயில் சென்ற ஞானசம்பந்தரின் செயல், திருக்கோயிலுக்கு செல்லும் போதும் இறைவன் பற்றிய சிந்தனையுடன் நாம் செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில், உடலினை விட்டு உயிர் பிரியும் தருணத்தில், வேறு எவரும் நமக்கு உதவி செய்ய முடியாத நிலையில், அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்று உணர்த்தும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் நாம் இறப்பதற்கு முன்னமே பெருமான் நம்மைத் தேடி கொண்டு வந்து பலியேற்று அருள் புரிவதையும் உணர்த்துகின்றார். நாம் அவனை அழைக்கவேண்டும் என்று காத்திராமல், நமது இல்லம் தேடி வந்து, நமது மூன்று மலங்களையும் பிச்சையாக ஏற்றுக் கொண்டு முக்தி நிலை அளிப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருக்கும் பெருமானின் கருணை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கங்காளர் என்ற சொல் மூலம், மூன்றாவது பாடலில், உலகிலுள்ள அனைத்து உயிர்களும் உடலிலிருந்து பிரிந்த பின்னரும், தான் மட்டும் அழியாமல், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அகப்படாமல் இருப்பவன் சிவபெருமான் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. மேலும் உயிரற்ற பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்களைத் தனது தோள் மீது சுமந்த கங்காளன் என்று குறிப்பிடுவதன் மூலம், பிரமன் திருமால் ஆகிய இருவரும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாதவர்கள் என்பதும் இங்கே கூறப்படுகின்றது. எனவே, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்ட சிவபெருமான் ஒருவனே, உயிர்களுக்கு முக்தி நிலை அளிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று பதிகத்தின் மூன்று பாடல்களும் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு நமக்கு நல்லதே புரியும் பெருமானை, மிகவும் பொருத்தமாக சங்கரனார் என்று நான்காவது பாடலில் சம்பந்தர் அழைக்கின்றார். இந்த காரணம் பற்றியே, மிகவும் உயர்ந்த தத்துவனாக இறைவன் மதிக்கப்படுவது ஐந்தாவது பாடலில் நமக்கு உணர்த்தப் படுகின்றது. நமக்கு நன்னெறியாகிய முக்திநெறியைக் காட்டும் பெருமானை, விகிர்தன் என்று அழைத்து, ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன் சிவபெருமான் என்பதை ஆறாவது பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் பெருமானது ஆற்றல் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், நடனக்கலை இந்த தலத்தில் அந்நாளில் போற்றப் பட்டதை உணர்த்துகின்றது. பத்தாவது பாடலில் புறச்சமயவாதிகள் பேசும் குறும்பு பேச்சினை பொருட்படுத்தாது, இறைவனுக்கு நாம் ஆளாக வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பாதகத்தின் இறுதிப் பாடலில், பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்களை முறையாக இனிய இசையுடன் பொருத்தி பாடி, அவனை வழிபடுவதே சிறந்த தவம் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் பெருமானை எதற்காக வழிபட வேண்டும் என்றும் எப்படி வழிபடவேண்டும் என்பதையும் தெரிந்து கொண்ட நாம், அவனை முறையாக வழிபட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, மறுமையில் என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்போமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Pulanainthum Pori
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

புலனைந்தும் பொறி கலங்கி


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: