Go Back

22/03/21

அருத்தனை அறவனை


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் திருத்தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர், ஆங்கிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி சென்று புள்ளிருக்குவேளூரை அடைந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமே அந்நாளில் கடைமுடி என்று அழைக்கப்பட்டு தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடைமுடி தலம் சென்றதாக பெரியபுராணத்தில் குறிப்பு ஏதும் காணப்படாமையால், புள்ளிருக்குவேளூர் செல்லும் வழியில் இங்கும் ஞானசம்பந்தர் சென்றிருக்கலாம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் நமக்கு இதுவரை கிடைத்துள்ளது. இந்த தலத்தில் கண்வ மகரிஷி தவம் செய்தார் என்று கூறுவார்கள். இறைவனின் திருநாமம்; கடைமுடிநாதர்; இறைவியின் திருநாமம்; அபிராமி அம்மை. பிஞ்ஞகர்=அழகிய தலைக் கோலம் கொண்டவர். திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்களும் பிஞ்ஞகர் கோயில் பிறவும் எனும் சொற்றொடர், கடைமுடி, காட்டுப்பள்ளி, நாங்கூர் ஆகிய தலங்களை குறிக்கலாம் என்றும் கருதுகின்றார்.

திருமறைச் சண்பையராளி சிவனார் திருக்கண்ணார்கோயில்

பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்

உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்மாலை கொண்டு ஏத்தி

வருபுனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்

பாடல் 1:

அருத்தனை அறவனை அமுதனை நீர்

விருத்தனை பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்

கருத்தவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

விருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை; பாலனாகி=அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை: இந்த இரண்டு நிலைகளும், ஞான சம்பந்தப் பெருமானால் இடர் களையும் பதிகத்தின் (1.52) எட்டாவது பாடலில் குறிக்கப் படுகின்றது. கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்; சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் சம்பந்தர் கூறுகின்றார். .

விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடை மேல் கரந்தாய்

அருத்தனாய ஆதி தேவன் அடியிணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பெருமான், பாலனகவும் விருத்தனாகவும் இருக்கும் நிலை இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலை (1.76.3) நினைவூட்டுகின்றது. தன்னை வழிபடும் அடியார்களின் நிலைக்கு ஏற்ப பெருமான் பாலனாகவும் விருத்தனாகவும் வடிவு கொள்கின்றார். விருத்தனாக வடிவம் ஏற்று, தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பல நிகழ்ச்சிகளை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம், சுந்தரரின் வரலாற்றினில் நான்கு இடங்களிலும் மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், பெருமான் முதியவராக வேடம் தரித்து வருவதை நாம் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுக்கும் பொருட்டு ஓலையுடன் வந்து சுந்தரரை ஆட்கொண்டபோதும், திருவதிகை சித்தமடத்தில் சுந்தரருக்கு திருவடி தீட்சை கொடுத்து பின்னர் மறைந்த போதிலும், கூடலையாற்றூருக்கு வழிநடத்தி கூட்டிச் சென்ற போதும், கருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பொதி சோறு அளித்த போதிலும் பெருமான் முதியவராக வந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம்.

விருத்தனை பாலனை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற வரை, தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள். அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியினால் வாடும் முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், ஒரு ஆடவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்தவண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, முழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக்கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்; வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு பெருமான் மறைந்தார். இது தான் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாறு.

தில்லை நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.22.9) ஊழித்தீயினில் நின்று நடமாடும் இறைவன் என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களும் ஊழியில் அழிந்த பின்னரும் நிலைத்து நிற்கும் இறைவன் அனைவருக்கும் இளையவன் என்றும், ஊழி முடிந்தவுடன் மீண்டும் உலகம் தோன்றுவதற்கு முன்னமே இறைவன் இருப்பதால் அனைத்து உயிர்களுக்கும் மூத்தவன் என்று உணர்த்தும் பொருட்டு விருத்தனாய் பாலனாய் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னிச்

திருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழ

கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே

விருத்தன் என்பதற்கு அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைவரிலும் மூத்தவன் என்றும், பாலன் என்பதற்கு அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாது இருப்பவன் என்று பொருள் கொண்டு, ஆதி அந்தமற்ற நிலையில் இருக்கும் இறைவனை விடவும் மூத்தவர் எவரும் இல்லை என்றும், அழியாமல் நிலைத்து நிற்கும் அவனை விடவும் இளையவர் எவரும் இல்லை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.2) அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் பெருமான் விருத்தனாகவும் பாலனாகவும் திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்= திருமால்; ஏலம்= நறுமணம் மிகுந்த;

மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்

பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்

காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியனாரே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில், அப்பர் பிரான், விருத்தனாகவும் பாலனாகவும் இருக்கும் பெருமான், தனது அடியார்களின் தன்மையை நன்கு அறிவார் என்று கூறுகின்றார். திருத்தன்=உயிர்களைத் திருத்தி ஆட்கொள்பவன், அருத்தன்= மெய்ப்பொருளாக உள்ளவன்.

ஒருத்தனர் உலகங்கட்கு ஒரு சுடர்

திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்

விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்

அருத்தனார் அடியாரை அறிவரே

ஒருத்தன் என்பதன் மூலம் சிவபிரான் ஒப்பற்றவன் என்று அப்பர் பிரான் நமக்கு இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம், திருவண்டப்பகுதி அகவலில் வரும் வாக்கியம், ஒருவனாய் உலகேத்த நின்றவன் சிவபெருமான் என்ற செய்தியை, ஆரூர்த் திருத்தாண்டகம் ஒன்றின் முதல் அடியாக அப்பர் பிரான் வழங்குகின்றார். திருவாரூர்த் தலம் எத்தகைய பழமை வாய்ந்தது என்று இங்கே கூறப்படுகின்றது. தெரித்த என்றால் தோற்றுவித்த என்று பொருள்.

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோ

கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால்

விழித்த நாளோ

மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான் மறிகை ஏந்தி

ஓர் மாதோர் பாகம்

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக்

கொண்ட நாளோ

மறைக்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.23.9) பால விருத்தனும் ஆனான் கண்டாய் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூல நோய்=கன்மம் மாயை ஆகிய மற்ற மலங்கள் நம்மை பிடிப்பதற்கு காரணமாக இருப்பதும், உயிர் தோன்றிய காலந்தொட்டே உயிருடன் கலந்திருந்து உயிர்கள் அடையும் அனைத்து துயரங்களுக்கும் மூலமாக இருப்பததால், ஆணவ மலம் மூலமலம் என்று அழைக்கப்படுகின்றது. எவராலும் அடக்க மூடியாத ஆணவ மலத்தினை அடக்குவதற்கு உதவும் பரமன் என்பதால், சிவபெருமானை முதல்வன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும்

ஆனான் கண்டாய்

ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும்

ஆனான் கண்டாய்

பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே போல்வான்

கண்டாய்

மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும்

மணாளன் தானே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.3) சுந்தரர், பெருமானை விருத்தன் என்றும் பாலன் என்றும் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம், முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகள் தாமே இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் நமக்கு விளைவிக்கின்றது. இவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் செய்யும் வினைகளை செய்வினை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். விருத்தனாக திருவதிகை சித்தமடத்தில் காட்சி அருளிய பெருமான், கயிலை மலையில் வீற்றிருந்த வண்ணம் காட்சி கொடுத்தார் அல்லவா. முதுமை அடையாத தோற்றத்துடன் இறைவன் காட்சி கொடுத்ததை பாலன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமானின் திருவுருவத்தினை பல நாட்கள் கனவினில் கண்டிருந்த சுந்தரர், இந்த தலத்தில் நேரில் கண்டுகொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறுவதை நாம் உணரலாம். பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையாத தன்மை தனக்கு இருந்ததால் தான், உய்வினை அடைந்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

திருத்தினை நகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை உறுத்திடும்

செம்பொனை அம்பொன்

ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன்

உய்யும் காரணம் தன்னால்

விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்து எங்கும் காண

மாட்டாது விட்டிருந்தேன்

கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலைக் கழுமல வளநகர்

கண்டு கொண்டேனே

அருத்தன்=பொருளாக விளங்குபவன்; வேதத்தின் என்று நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும். அறவன்=அறத்தின் வடிவமாக உள்ளவன்; அமுதன்=அமுதம் போன்று இனியவன்; பெருமான் ஒப்பற்ற ஒருவன் என்பதை உலகத்தவர் அனைவரும் உணர்ந்து கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்று சம்பந்தர் கூறுகின்றார். கருத்தவன்=உலகத்தவரின் கருத்தாக இருப்பவன்;

பொழிப்புரை:

வேதங்களின் பொருளாக விளங்குபவனும், அறத்தின் வடிவமாக உள்ளவனும், அமுதம் போன்று தெவிட்டாத இனிமையினை உள்ளத்திற்கு அளிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியமையால் அனைவர்க்கும் பழமையானவனும். அனைத்து உயிர்கள் அழிந்த பின்னரும் தான் அழியாமல் நிலையாக இருப்பதால் அனைவரினும் இளையவனாக கருதப் படுவானும் ஆகிய இறைவன் யார் என்று நீங்கள் வினவுவீராயின், உமது கேள்விக்கு நான் அளிக்கும் விடையினை கேட்பீர்களாக; ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் நமக்கு உண்மையான துணை இல்லை என்பதை கருத்தினில் கொண்டு, உலகத்தவர், தொழுது புகழ்ந்து வணங்கும் இறைவன் கடைமுடி எனப்படும் வளமான நகரத்தில் உறைகின்றான். எனவே அந்த தலம் சென்று இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீராக.

பாடல் 2:

திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்

அரை பொரு புலியதள் அடிகள் இடம்

திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்

கரை பொரு வளநகர் கடைமுடியே

விளக்கம்:

திரை=அலைகள்; பொருதல்=மோதுதல், பொருந்துதல்; விம்மும்=பெருகுதல்; திருக்கோயிலுக்கு தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரிநதி ஓடுகின்றது.

பொழிப்புரை:

கங்கை நதியின் நீரலைகள் மோதும் சடைமுடியினில், நாளும் ஒளி பெருகும் பிறைச் சந்திரனை உடையவரும், தனது இடுப்பினில் புலித்தோல் ஆடை பொருந்தியவரும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, வளமான கடைமுடி தலமாகும், நுரைகள் பெருகியும் தெளிந்த நீரினைக் கொண்டுள்ள நீரலைகள் கரையினில் மோதும் தன்மையால் இந்த தலம் நீர்வளத்துடன் காணப்படுகின்றது.

பாடல் 3:

ஆல் இளமதியினொடு அரவு கங்கை

கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி

ஏல நன் மலரொடு விரை கமழும்

காலன வளநகர் கடைமுடியே

விளக்கம்:

காலன்=காலை உடையவன்; பெருமானின் திருவடி, நறுமணம் மிகுந்த மலர்கள் சாத்தப்பட்டு மணத்துடன் கமழும் நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. ஏலம்=நறுமணம் விரை=வாசனை; பெருமானை வணங்கும் அடியார்கள் மலர்கள் தூவியும் தூபதீபம் காட்டியும் பெருமானை இந்த தலத்தில் வழிபட்டனர் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆல்=கல்லால மரத்தின் நீழல்; கோல=அழகிய;

பொழிப்புரை:

கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறம் உறைத்தவரும், ஒற்றைப் பிறைச் சந்திரனுடன் பாம்பு மற்றும் கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவரும், அழகிய வெண்ணீற்றை உடலெங்கும் பூசியவரும் ஆகிய இறைவனை அடியார்கள் நறுமணம் மிகுந்த மலர்களை அவரது திருவடிகளில் தூவியும், வாசனை வீசும் தூபங்கள் காட்டியும் தொழுதும் வணங்குகின்றனர். இவ்வாறு அடியார்கள் தொழுவதால் நறுமணம் கமழும் திருவடிகளைக் கொண்டுள்ள இறைவன் உறைவது கடைமுடி எனப்படும் தலமாகும்.

பாடல் 4:

கொய்யணி நறுமலர்க் கொன்றை அந்தார்

மையணி மிடறு உடை மறையவன் ஊர்

பை அணி அரவொடு மான் மழுவாள்

கை அணிபவன் இடம் கடைமுடியே

விளக்கம்:

மை=மை போன்று கரிய நிறம் கொண்ட ஆலகால விடம்; பை=பாம்பின் படம்; கொய்யணி= அப்போது தான் கொய்யப்பட்ட; கொய்தல்=பறித்தல்;

பொழிப்புரை:

அப்போது தான் பறிக்கப்பட்ட, நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், மை போன்று கரிய நிறம் கொண்டிருந்த ஆலகால விடத்தினை அருந்திய பின்னர் அதனைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டு விளங்கும் கழுத்தினை உடையவனும், வேதத்தின் பொருளாக உள்ளவனும், ஆகிய இறைவன் உறையும் ஊர் யாது என்று நீர் அறிந்து கொள்ள விரும்பினால் கேட்பீராக; படம் எடுத்து ஆடுவதும் கொடிய விடத்தினை உடையதும் ஆகிய பாம்பினை கங்கணமாக அணிந்து கொண்டுள்ள கையினில் மானினையும் மழுவினையும் ஏற்றுக் கொண்டுள்ள இறைவன் உறையும் இடம் கடைமுடி தலமாகும்.

பாடல் 5

மறையவன் உலகவன் மாயமவன்

பிறையவன் புனலவன் அனலுமவன்

இறையவன் என உலகம் ஏத்தும் கண்டம்

கறையவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

புனலாகவும் அனலாகவும் உலகமாவும் உள்ள பெருமான் என்று மூன்று பஞ்ச பூதங்களை இந்த பாடலில் குறிப்பிட்டமையால் மற்ற இரண்டு பூதங்களாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்தியதாக பொருள் கொள்ள வேண்டும்; அதே போன்று சந்திரனையும் அனல் என்று அக்னியையும் குறிப்பிட்டமையால் சூரியனாகவும் இறைவன் உள்ள நிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மறையவன்=வேதங்கள் உண்மைப் பொருள் என்று உணர்த்தும் பெருமான்; மாயம்=மாயை, உலகப் பொருட்கள் மற்றும் உலகினில் உள்ள அனைத்து உயிர்கள்; மறையவன், உலகவன், மாயமவன் என்பதற்கு வேறு விதமாகவும் அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். மறை என்பது வேதங்கள் முதலான சொற்ப்ரபஞ்சத்தையும் உலகு என்பது பொருட்ப்ரபஞ்சத்தையும், மாயை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு பிரபஞ்சங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ள சுத்த மாயை மற்றும் அசுத்தமாயையை குறிப்பதாக ;பொருள் கொண்டு, இறைவன் சொல்லாகவும், பொருளாகவும், சொல்லும் பொருளும் தோன்றுவதற்கு காரணமாகிய மாயையாகவும் இருக்கும் நிலையை உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

வேதங்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருளாகவும், உலகமாகவும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும், உலகினில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருக்கும் பெருமான், சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களாகவும், நீர் தீ முதலான பஞ்ச பூதங்களாகவும் இருக்கின்றான். இவனே அனைவரிலும் முதலானவன், தலையானவன் என்று உலகத்தவர் புகழ்ந்து ஏத்த, வளமான கடைமுடி தலத்தில் உறையும் இறைவன் ஆவான்.,

பாடல் 6:

பட அரவு ஏர் அல்குல் பல் வளைக்கை

மடவரலாளை ஒர் பாகம் வைத்துக்

குடதிசை மதியது சூடு சென்னிக்

கடவுள் தன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

குடதிசை=மேற்கு; வளர்பிறை பிறைச் சந்திரன் மேற்கு திசையில் தோன்றுவதால் குடதிசை மதி என்று குறிப்பிட்டதாக அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். சந்திரன் எப்போதும் ஒரே திசையில் தோன்றுவதில்லை. மாதத்தில் பாதி நாட்கள் ஒரு திசையிலும் மிகுதியான நாட்களில் வேறொரு திசையிலும் தோன்றுவதை நாம் காண்கின்றோம். குறைந்த கலைகளைக் கொண்ட சந்திரன் மேற்கே உதிப்பதை பெரும்பாலும் காண்கின்றோம். பட அரவு=புடைத்த படத்தினை உடைய பாம்பு;

பொழிப்புரை:

பாம்பின் புடைத்த படம் போன்று புடைத்து அழகாக விளங்கும் மார்பகங்களைக் கொண்டவளும், பல வகையான வளையல்களைக் கொண்ட கைகளை உடையவளும் இளமையும் அழகும் சேர்ந்து பொருந்தியவளும் ஆகிய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், மேற்கு திசையினில் உதிக்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறைவது வளம் மிகுந்த கடைமுடியாகும்.

பாடல் 7:

பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்

அடி புல்கு பைங்கழல் அடிகள் இடம்

கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்

கடி புல்கு வளநகர் கடைமுடியே

விளக்கம்:

பொடி=திருநீறு; புல்குதல்=பொருந்துதல்; கடி=நறுமணம்; புரிபுல்கு=முறுக்கேற்றப்பட்ட; பஞ்சினைத் திரித்து நூல் நூற்று முறுக்கேற்றி பூணூல் செய்யப்படுவதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட மார்பினில் ஒன்பது புரிகள் கொண்ட பூணூல் பொருந்த இருப்பவனும், தனது திருவடிகளில் வீரக்கழல் பொருந்தியவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, கொடிகளில் பூத்த மலர்களுடன் குளிர்ந்த சுனைகளில் ஊறுகின்ற நீரின் மணமும் கலந்து கமழும் வளமை உடைய கடைமுடி தலமாகும்.

பாடல் 8:

நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்

சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்

ஆதரவு அருள் செய்த அடிகளவர்

காதல் செய் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

ஆதரவு=அன்புடன் செய்யப்படும் உதவி; நோதல் செய்து=வருத்தி; நோக்கு=அருட்பார்வை: அழிய= இல்லாத நிலை ஏற்பட; அன்பே உருவான பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்பவன். பெருமானை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தனது செருக்கினால் மறந்த அரக்கன், பெருமான் உறையும் மலை என்ற சிறந்த தன்மையையும் புரிந்து கொள்ளாமல், அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்து அந்த முயற்சியால் உமையன்னை அச்சம் கொள்ளுமாறு மலையினை அசைத்தான். அத்தகைய செய்கையால் பெருமானின் அருட்பார்வையினை அரக்கன் இழந்ததுமன்றி, பெருமானின் கால் விரல் அழுத்தத்தால் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நெருக்குண்டான். இந்த நிலையினை நோக்கழிய அரக்கனை நோதல் செய்து என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாதல்–வலிமை அழிந்தவன்;

பொழிப்புரை:

செருக்கு மிகுந்த தனது செயலால், இறைவனது அருட்பார்வையை இழந்த அரக்கன் இராவணன், தான் கயிலை மலையினை பேர்த்து எடுக்க செய்த முயற்சியின் விளைவாக, கயிலை மலையின் கீழே அகப்பட்டு நெருக்குண்டு தனது வலிமை முழுவதும் அழிந்த நிலையில், பெருமானே உனது திருவடிகளே சரணம் என்று இறைஞ்சி சாம கானம் பாடலும், அரக்கன் செய்த தவறினை பொருட்படுத்தாது அன்புடன் அரக்கனுக்கு பல வகையிலும் உதவி செய்த பெருமான், மிகுந்த விருப்பத்துடன் உறைவது வளம் மிகுந்த கடைமுடி தலமாகும்.

பாடல் 9:

அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்

புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்

கடை முடி அதன் அயல் காவிரியே

விளக்கம்:

சதுரன்=சாமர்த்தியம் மிகுந்தவன்; வியத்தகு திறமை உடையவன்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

பொழிப்புரை:

தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு, நீண்ட தழலாய் நின்ற இறைவனின் திருவடியை திருமுடியை கண்டு விடுவோம் என்று முயற்சி செய்த திருமாலும் பிரமனும், தங்களது முயற்சி வீணான பின்னர் பெருமானின் வலிமையை உணர்ந்து, அன்புடன் அவரை அணுகி அவரது அருகில் சென்று அருள் புரிவாய் என்று இறைஞ்சி அவனைப் போற்றி இசைத்து நின்றனர். இவ்வாறு இருவரினும் உயர்ந்து நிற்பவன் தான், என்று உலகுக்கும் அவரகள் இருவருக்கும் உணர்த்திய இறைவன், தனது சடையின் இடையே கங்கை நதியைத் தேக்கி வைத்த திறமையாளன் ஆவான். அத்தகைய சதுரன் உறையும் இடமாகிய கடைமுடி தலத்தின் அருகே காவிரியாறு ஓடுகின்றது.

பாடல் 10:

மண்ணுதல் பறித்தலும் மாயமிவை

எண்ணிய கால் அவை இன்பம் அல்ல

ஒண்ணுதல் உமையை ஒர் பாகம் வைத்த

கண்ணுதல் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

மண்ணுதல்=நீக்குதல், கழுவுதல், தலைமுடியினை மழித்தல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. பறித்தல்=பிடித்து இழுத்தல்; தங்களது தலைமுடிகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொள்ளுதல் சமணர்களின் செயலாகும். அடிக்கடித் தங்களது தலையில் உள்ள முடியினை மழித்துக் கொள்ளுதல் புத்தர்களின் செயலாகும். இந்த இரண்டு செயல்களும் ஒரு மாயத் தோற்றத்தை அவர்களும் இருவரும் ஒழுக்க நெறியுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், சம்பந்தரது காலத்தில் வாழ்ந்து வந்த சமண மற்றும் புத்தத் துறவிகள், அரசன் தங்களின் மீது வைத்திருந்த மதிப்பினை தவறாக பயன்படுத்தி வந்தமையால், அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இங்கே அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

தங்களது தலைமுடியினை முற்றிலும் மழித்துக் கொண்டுள்ள புத்தர்கள், தங்களது தலை முடியினை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டுள்ள சமணர்கள் ஆகிய இவர்களது புறத் தோற்றத்தை கண்டு. ஒழுக்க நெறியினை உடையவர்கள் என்று அவர்களை நினைத்து, உலகத்தவரே நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களது உண்மையான தோற்றம் மெய்யான துறவல்ல. ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நெறிகள் உண்மையான அழியாத இன்பத்தை விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணரலாம். எனவே அவர்கள் காட்டும் நெறியினைத் தவிர்த்து பெருமான் உணர்த்தும் சைவ நெறியினைச் சார்ந்து உய்வினை அடைவீர்களாக. ஒளிவீசும் நெற்றியினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது நெற்றியினில் கண் உடைய பெருமான், உறையும் தலம் வளம் நிறைந்த கடைமுடி தலமாகும்.

பாடல் 11:

பொன் திகழ் காவிரிப் பொருபுனல் சீர்

சென்றடை கடைமுடிச் சிவனடியை

நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன

இன் தமிழ் இவை சொல இன்பமாமே

விளக்கம்:

பொன் திகழ்=அழகுடன் விளங்கும்; பொரு புனல்=கரையில் மோதுகின்ற அலைகள்;

பொழிப்புரை:

அழகுடன் திகழ்ந்து அலைகள் இரு கரைகளிலும் மோதும் வண்ணம் ஓடிவரும் சிறந்த காவரியாற்றின் கரையில் அமைந்துள்ள கடைமுடி தலத்தினை சென்றடைந்து ஆங்கே உறையும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிமையான தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் ஓதும் அடியார்களுக்கும் இன்பம் உண்டாகும்.

முடிவுரை:

வினவுதிரேல் என்று குறிப்பிட்டு உலகத்தவரின் கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக இந்த பதிகத்தின் முதல் பாடல் அமைந்துள்ளது. அதே போன்று மற்ற பாடல்களும் இறைவன் அமரும் இடம் கடைமுடித் தலம் என்று உலகத்தவர்க்கு தலத்தின் இறைவனின் தன்மையையும் எடுத்துச் சொல்வதாக கொள்ளவேண்டும். உண்மையான மெய்ப்பொருளை அணுக வேண்டும் என்று விரும்பும் மனிதர்களுக்கு, சிவபெருமானே உண்மையான ஒப்பற்ற மெய்ப்பொருள் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் அடையாளம் காட்டுகின்றார். அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட பெருமான் எல்லையற்ற கருணையும் ஆற்றலும் உடையவன் என்பதை, சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றார். இத்தகைய பெருமானை பலரும் வணங்கிப் பயன் அடைவதை மூன்றாவது பாடலில் உணர்த்தி, நான்காவது பாடலில் பண்டைய நாளில் தேவர்கள் உட்பட அனைவரும் அழியும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு உலகினை காத்த கருணையாளன் என்று உணர்த்துகின்றார். அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அனைத்துப் பொருட்களிலும் கலந்துள்ள பெருமான் என்று அவனது சர்வவியாபகத் தன்மை ஐந்தாவது பாடலில் விளக்கப் படுகின்றது. தனது திருவருளின் அம்சமாக விளங்கும் அன்னையுடன், உலகத்தவர்க்கு அருள்புரியும் நோக்கத்துடன் கடைமுடித் தலத்தினில் பெருமான் உறைகின்றார் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் அழகிய தோற்றம் ஏழாவது பாடலில் கூறப்படுகின்றது. பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சத்தை உடையவன் என்று எட்டாவது பாடலில் உணர்த்தும் சம்பந்தர் ஒன்பதாவது பாடலில் வியத்தகு ஆற்றலை உடையவன் பெருமான் என்று எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த அறிவுரை இன்றும் பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். மாற்று மதத்தவர்களின் போதனைகள் மற்றும் செயல்பாடுகள், இந்து மதத்தினை அழிக்கும் நோக்கத்துடன் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டு அவர்களது வலையினில் வீழாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது. அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறாமல் இருக்கும் வண்ணம் அறிவுரை கூறப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், பதிகத்தின் பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்துடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றது. உண்மையான ஒப்பற்ற ருள் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை உணர்ந்து, அவனை முழு மனதுடன் வழிபட்டு, மாற்று மதத்தவரின் போதனைகளில் மயங்காது தொடர்ந்து பெருமானை வழிபட்டு, பதிகங்கள் ஓதி இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Aruththanai Aravanai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

அருத்தனை அறவனை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: