Go Back

22/03/21

தண்ணார் திங்கள்


பின்னணி:

தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர்களால் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. பல நாட்கள் சீர்காழியில் தங்கிய சம்பந்தர் மீண்டும் பல தலங்களைக் காண ஆவல் கொண்டமையால், தனது விருப்பத்தைத் தனது தந்தையிடமும் நீலகண்ட யாழ்ப்பாணரிடமும் தெரிவித்தார். அந்நாள் வரை நடைபெற்ற நான்கு தலையாத்திரைகளிலும் பங்கேற்ற அவரது தந்தையார், தனக்கு வயதாகியதால் முன்போன்று நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் வேள்வி செய்யவேண்டும் என்ற ஆவல் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் கூறினார். எனினும் தவம் இருந்து பெருமான் அருளினால் அருமையாக பெற்ற உன்னைப் பிரிந்து இருப்பது கடினம் என்பதால் சில நாட்கள் உன்னுடன் பயணம் மேற்கொள்வேன் என்று தனது நிலையினை ஞான சம்பந்தருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பெருமானையே தனது தந்தையாக எப்போதும் கருதியமையால், சிவபாத இருதயரை, குலத்தாதை என்று சேக்கிழார் நயமாக குறிப்பிடுகின்றார். இந்த தல யாத்திரையில், பல அதிசயங்கள் நிகழ்கின்றன.

பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்

அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவாற்றேன்

இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்

ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்

தந்தையார் இவ்வாறு உரைத்ததைக் கேட்ட ஞானசம்பந்தர், தந்தையார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுமுள்ள அடியார்கள் புடைசூழ சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானை வணங்கிய பின்னர் தனது ஐந்தாவது பயணத்தை தொடங்குகின்றார். ஒவ்வொரு முறையும் தனது பயணத்தைத் தொடங்கும் ஞானசம்பந்தர், சீர்காழி பெருமானை தரிசனம் செய்து அவரை வணங்கிச் செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறியலாம். ஊர் மக்கள் பிரியா விடை அளிப்ப, முத்துச் சிவிகையில் ஏறி ஞானசம்பந்தர் அமர்ந்தபோது சங்க நாதங்களின் ஒலியும், ஊது கொம்புகளின் ஒலியும், மறையோர்கள் சொன்ன மங்கல வாழ்த்தொலிகளும், பெருமானின் திருநாமங்களும் கலந்து ஒலித்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இவ்வாறு தனது ஐந்தாவது தலயாத்திரையைத் தொடங்கிய ஞானசம்பந்தர், மிகுந்த விருப்பத்துடன் கண்ணார்கோயில் திருத்தலம் சென்று அடைகின்றார். ஐந்தாவது தலயாத்திரையில் முதன் முதலாக சென்ற இந்த திருத்தலம் சீர்காழியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் தலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் தெற்கே செல்லும் பாதையில் உள்ளது. இறைவனின் திருநாமம்—கண்ணாயிர நாதர்; இறைவியின் திருநாமம்—முருகுவளர் கோதை; அழகாக வளரும் கூந்தலைக் கொண்ட அம்பிகை என்று பொருள் கொள்ளும் வண்ணம் இந்த பெயர் அமைந்துள்ளது. கண்கள் சம்பந்தமான நோய்கள் இந்த தலத்து இறைவனை வழிபட தீரும் என்று கூறுவார்கள். அழகாக விளங்கும் பிராட்டியின் கூந்தல், தெய்வீக மனத்துடன் திகழ்கின்றது என்று ஞானசம்பந்தர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் கூறுவதை நாம் விளக்கத்தில் காணலாம். இந்த தலத்திலிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர், அடுத்து புள்ளிருக்குவேளூர் செல்கின்றார்.

அகலிகையின் அழகில் மயங்கி, வஞ்சகமாக அவரது கணவரைப் போன்று வேடம் தரித்து ஏமாற்றிய குற்றத்தினால் கௌதம முனிவரிடம் பெற்ற சாபத்தினை இந்திரன் இந்த தலத்து இறைவனை வணங்கி தீர்த்துக் கொண்டான் என்பதும் மகாபலியை வெல்வதற்காக வாமன அவதாரம் எடுத்த திருமால் பெருமானை வழிபட்டார் என்பதும் தலபுராணம் கூறும் தகவல்கள். இந்த இரண்டு தகவல்களையும் ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் அளிக்கின்றார்.

பாடல் 1:

தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ் புனல் சூடிப்

பெண் ஆணாய பேரருளாளன் பிரியாத

கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்

நண்ணா ஆகும் நல்வினையாய நணுகும்மே

விளக்கம்:

தண்மை=குளிர்ச்சி; தண்ணார் திங்கள்=குளுமை பொருந்திய பிறைச் சந்திரன்; பொங்கரவம்= சீற்றத்துடன் பொங்கி எழுந்து படமாடும் பாம்பு; தாழ் புனல்=வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதி; நல்வினை=புண்ணியம்; நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பஇன்பங்களுக்கு காரணம், நாம் பழைய பிறவிகளில் செய்த பாவங்களும் (தீவினைகளும்) புண்ணியங்களுமே (நல்வினைகள்)

என்பதை சைவம் தெளிவாக உணர்த்துகின்றது. நம்மை விட்டு பாவங்கள் நீங்கினால் எஞ்சி இருக்கும் புண்ணியங்களால் நமக்கு, இம்மையில் எப்போதும் இன்பமே ஏற்படும் என்பதை இந்த பதிகத்தின் வாயிலாக சம்பந்தர் உணர்த்துகின்றார். நண்ணா=நெருங்காது; நண்ணும்=நெருங்கி நிற்கும்;

இந்த பாடலில் பெண் ஆணாகிய பேரருளாளன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையினை மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமுறை ஆசிரியர்கள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றனர். பெருமான் புரிந்த பல அருட்செயல்களில் இந்த செயலே மிகவும் பெரிய அருட்செயலாக கருதப்படுவதால், பேரருளாளன் என்று பெருமானை சம்பந்தர் அழைக்கின்றார். கை தொழுவார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். எவரேனையும் கண்டவுடன் கைகூப்பித் தொழுதல் நமது பாரம்பரிய பழக்கம். நமக்கு சமமானவர்களை நமது நெஞ்சினுக்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும், நம்மை விடவும் உயர்ந்தவர்களை நமது முகத்திற்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும் நமது தலையின் மேல் கைகளை வைத்து இறைவனைத் தொழவேண்டும் என்று கூறுவார்கள். நம்மை விடவும் கீழாக எவரையும் கருதாது இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

பொழிப்புரை:

குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும், சீற்றத்துடன் பொங்கி எழும் பாம்பினையும், பள்ளத்தை நோக்கி ஓடும் தன்மையை உடைய பெரிய நீர்ப்பரப்பினைக் கொண்டு மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியையும் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு பேரருள் புரிந்தவனாக பெண்ணாகவும் ஆணாகவும் திகழ்கின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், கண்ணார்கோயில் தலத்தினை விட்டு என்றும் பிரியாதவனாக ஆங்கே உறைகின்றான். இந்த பெருமானை, தங்களது கைகளால் தொழும் அடியார்களை பாவங்களும் அதனால் விளையும் துன்பங்களும் நெருங்காது; புண்ணியங்கள் அவர்களை நெருங்க அதன் விளைவாக இன்பங்களே அவர்களது வாழ்வினில் ஏற்படும்.

பாடல் 2:

கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்

வந்து அமர் தெண்ணீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டிக்

கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆடக் குளிர் வண்டு

செந்திசை பாடும் சீர் திகழ் கண்ணார் கோயிலே

விளக்கம்:

மண்ணி=காவிரி நதியின் கிளையாறுகளில் ஒன்று: கோகிலம்=குயில்; செந்து=தமிழ்ப் பண்களில் ஒன்று; செவ்வழி என்றும் கூறுவார்கள்; கந்து=கந்தம், நறுமணம்; சாந்து=சந்தனக் கட்டைகள்; கார்=கரிய, வயிரம் பாய்ந்து உறுதியான; கதிர்=ஒளிவீசும்; வந்தமர்=வந்து சேரும்; கொந்து=கொத்து கொத்தாக மலர்கள் மலரும் வளமான சோலைகள்; பொதுவாக குயில்கள் பாடுவதாக பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில் குயில்கள் நடமாடின என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடும் இயல்பினை உடைய குயில்கள் நடமாடியது இந்த தலத்தின் தனிச் சிறப்பு போலும். இந்த குறிப்பு பெருமானின் அருள் இருந்தால் இயல்பு நிலை மாறி சிறப்பான நிலையினை எவரும் அடையலாம் என்பதை உணர்த்துகின்றது போல அமைந்துள்ளது. வண்டு பாடும் என்ற தொடரினை வண்டும் பாடும் என்று மாற்றி அடியார்கள் செவ்வழிப் பண்ணில் பதிகங்கள் பாடியது போன்று தலத்து வண்டுகளும் பாடின என்று சிவக்கவியார் தனது பெரியபுராண விளக்கத்தில் கூறுகின்றார். வண்டுகள் கற்றுக் கொண்டு பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றன என்ற குறிப்பு அடியார்கள் இந்த தலத்தில் அடியார்கள் இடைவிடாது சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடினர் என்பதை உணர்த்துகின்றது. கண்ணார்கோயில் சென்று தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முதல் பாடலில் உணர்த்திய சம்பந்தர் அடுத்த இரண்டு பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

நறுமணம் பொருந்திய சந்தனக் கட்டைகளும் வயிரம் பாய்ந்து உறுதியான கரிய அகில் கட்டைகளும் குளிர்ச்சி பொருந்தி அழகுடன் ஒளிவீசும் முத்துக்களும் அடித்துக் கொண்டு வரப்படும் நீர்ப் பெருக்கினை உடைய மண்ணியாறு வந்து சேர்வதால் நிலவளம் மிகுந்த வயல்களையும் கொத்து கொத்தாக மலரும் மலர்கள் கொண்ட சோலைகளும் நிறைந்த இந்த தலத்தினில் மகிழ்ச்சி பொங்க குயில்கள் நடமாடுகின்றன. குளிர்ந்த சூழ்நிலையை விரும்பும் வண்டுகள், அடியார்கள் செவ்வழிப் பண்ணில் இறைவனை துதித்து பாடல்களைக் கேட்டு, செவ்வழிப் பண்ணில் முரலும் சிறப்பினை உடையது கண்ணார்கோயில் எனப்படும் திருத்தலம்.

பாடல் 3:

பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்தப் படு கானின்

எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன்னிடம் என்பர்

கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னிக்

கல்லியல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார் கோயிலே

விளக்கம்:

பாணி என்ற வடமொழிச் சொல் பொதுவாக கைகள் என்று பொருள் தந்தாலும் இங்கே கைகளால் இசைக்கப்படும் தாளத்தை குறிப்பிடுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; எல்லி=இரவு; கல்லியல் இஞ்சி=கல் மதில்; மஞ்சு=மேகம்; படுகான்=பிணங்கள் இடப்படும் சுடுகாடு; கொல்லை=முல்லை நிலம், காடும் காடு சார்ந்த இடம்; சென்ற பாடலில் அடியார்கள் இறைவன் சன்னதியில் பாடுவதை குறிப்பிட்ட சம்பந்தருக்கு இறைவனின் நடனத்திற்கு பூதகணங்கள் பாடுவது நினைவுக்கு வந்தது போலும். இந்த பாடலில் பூதகணங்கள் நடமாட சுடுகாட்டினில் இறைவன் ஆடும் நடனத்தை குறிப்பிடுகின்றார். மௌவல்=காட்டு மல்லிகை

பொழிப்புரை:

பெருமானைப் புகழ்ந்து, பலவகையான பாடல்களை பூதகணங்கள் தங்களது கைகளில் தாளம் இட்டவாறு பாட, அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில் நடமாடும் பெருமான், எங்கள் தலைவன், உறையும் இடம் கண்ணார்கோயில் என்று கூறுவார்கள். முல்லை நிலத்து பூக்களாகிய முல்லை, மல்லிகை, காட்டு மல்லிகை ஆகிய கொடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து செழிப்புடன் வளரும் சோலைகள் கொண்ட கண்ணார்கோயில் வானளாவ மேகத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்த கல் மதில்கள் கொண்டதாகும்.

பாடல் 4:

தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்

மரு வளர் கோதையை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு

உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்

கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே

விளக்கம்:

மருவளர்=நறுமணம் வளர்கின்ற; இயல்பாகவே தேவியின் கூந்தல் நறுமணம் உடையது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இயல்பாகவே நறுமணம் உடைய கூந்தல் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில், பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மருவார் குழலி என்ற தொடர் பல தேவாரப் பாடல்களில் மூவர் பெருமானர்களால் குறிப்பிடப் படுகின்றது.

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்

திருவார் செம்பொன்பள்ளி மேவிய

கருவார் கண்டத்து ஈசன் கழல்களை

மருவாதார் மேல் மன்னும் பாவமே

புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.74.3) மணம் நிறைந்த கூந்தலை உடைய தேவி காணுமாறு சுடுகாட்டில் நடனம் ஆடியவன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உதரபந்தம்=பூதங்கள் இடுப்பில் அணியும் ஒருவகை ஆபரணம்

பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பார்க்கக்

கந்தம் மல்கு குழலி காண கரிகாட்டு எரி ஆடி

அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வெய்தி

எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.1.2) நறுமணம் கமழும் கூந்தலை உடைய அன்னை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி; கொட்டம்=நறுமணம்

கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா

நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்

இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ

விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை

அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்

குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்

விரவிய பொழில் அணி விசயமங்கையே

சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.75.1) நறுமணம் கமழும் கூந்தலை உடைய தேவி என்று உமையன்னையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சந்தம் என்ற சொல்லுக்கு நறுமணம் அழகு என்று இரண்டு பொருள்களும் பொருந்தும்.

எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்

வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்

அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்

சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.123..6) ஞானசம்பந்தர் தேவியை நறுமணம் மிகுந்த கூந்தலை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். விரவது=கலத்தல்; இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர் கூறுகின்றார்.

தரை முதலினில் உயிர் புணர் தகை மிக

விரை மலி குழல் உமையொடு விரவது செய்து

நரை திரை கேடு தகை அது அருளினன் எழில்

வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.

இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

பெருவேளூர் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூந்தலை உடைய நங்கை என்று பார்வதி தேவியை குறிப்பிடுகின்றார். குறவி=குறத்தியாகிய வள்ளி அம்மை; வள்ளியம்மையின் தோள்களைக் புணர்ந்து தனது அன்பினை வெளிப்படுத்தியவன் என்று முருகனைக் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைக் கொடுத்து தனது அன்பினை வெளிப்படுத்திய பெருமானின் செய்கை நினைவுக்கு வந்தது போலும். நங்கையோர் பாகத்தன் என்று பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்

நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்

பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை

உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே

பிராட்டியின் கூந்தல் தெய்வீக நறுமணம் வீசுகின்றது என்று குறிப்பிடும் அப்பர் பிரான் அந்த கூந்தலை அன்றலர்ந்த நறுமணம் வீசும் மலர்கள் அலங்கரிக்கின்றன என்று கூறும் பாடல் (6.4.9), அதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலாகும். கோசரம்=தேசம்: நாண்மலர்=அன்று அலர்ந்த மலர்கள், அந்நாளில் மலர்ந்த பூக்கள்: செம்பொன்னினால் செய்தது போன்று அழகுடன் செம்பட்டை நிறத்தினில் உள்ள சடை கொண்டவன் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு பிராட்டியின் கூந்தலுக்கு உரிய இயற்கை நறுமணத்தினை உணர்த்துவது பொருத்தம் என்று தோன்றியது போலும்.

செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்

பெருமானே தெய்வ நாறும்

வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே

வலங்கை மழுவாளனே

நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம்

மூன்றும் நடுங்கச் செற்ற

அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை

வீரட்டனாமே

எறும்பியூர் தலத்தின் மீது அருளிய, பன்னிய செந்தமிழ் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.91.3) அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தையும் வென்ற நறுமணம் கொண்ட கூந்தலை உடைய அன்னை என்று தேவியை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்; நறுங்குழல் மங்கை என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த பெயர் அப்பர் பிரானுக்கு, இயற்கையாகவே நறுமணம் வீசும் தேவியின் கூந்தலை நினைவுபடுத்தியது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தை வென்ற நறுமணம் உடைய கூந்தலை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தெய்வீக மணம் கமழும் கூந்தல் என்பதால் இயற்கையில் மணம் வாய்ந்த கூந்தலாக, வேறு நறுமணப் பொருட்களோ வாசனை மலர்களோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத கூந்தலாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும் சுடரைப் படிந்து

கிடந்து அமரர் ஏத்தும்

உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகின் நிறை தொழில்

இறுதி நடுவாய் நின்ற

மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா

மணியை வாசத்

திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று

அடையப் பெற்றேன் நானே

திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார், நீயே குண்டையூரில் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல்.

எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்

வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே

செம்பொனின் மாளிகை சூழ் திருகோளிலி எம்பெருமான்

அன்பதுவே அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே

திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.48.8) சுந்தரர் தேவியை மணம் வீசும் குழலாள் என்று கூறுகின்றார். வம்பு=நறுமணம்; இந்த பாடலிலும் பெருமானின் சடை மற்றும் பிராட்டியின் கூந்தல் குறிப்பிடப்பட்டு, அவற்றின் சிறப்புகள் உணர்த்தப் படுகின்றன. கோலுதல்=வளைத்தல்; திரிபுரங்களை எரிப்பதற்காக பெருமான் வில்லை வளைத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது.

செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்

வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டைக்

கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி

நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே

வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.

தரு=மரங்கள்; தருவளர்=மரங்கள் வளர்கின்ற; கானம்=காடு; துங்க=உயர்ந்த; வேழம்=யானை; உருவளர் ஆல்=உயர்ந்து வளரும் ஆலமரம்; கரு=புகழ், மேன்மை; இந்த பாடலில் பெருமானை அடைந்து பணியும் மனிதர்களே கற்றோர் என்று சம்பந்தர் கூறுகின்றார். எனவே ஏனையோரை அவர் கற்றவராக மதிக்கவில்லை என்பது இதனின்று புலனாகின்றது. கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழல் என்று தானே வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். பெருமான் தோலுரித்த யானை கயாசுரன் என்ற அரக்கன் என்றாலும் யானையின் பொதுத்தன்மை குறித்து காட்டில் வாழும் யானை என்று இங்கே குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் இந்த தலத்து இறைவனை வணங்கித் தொழும் அடியார்கள் அடையவிருக்கும் பலனை குறிப்பிடும் சம்பந்தர், இரண்டாவது மூன்றாவது பாடல்களில் தலத்தின் இயற்கை அழகினை குறிப்பிட்டு நம்மை இந்த தலத்திற்க்கு செல்லுமாறு ஊக்குவிக்கும் சம்பந்தர், இந்த பாடலில் தலத்து பெருமானை வணங்குவோரே கற்றவர்களாக கருதப் படுவார்கள் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

மரங்கள் அடர்ந்த கானகத்தில் வாழ்வதும் சிறந்ததும் பெரியதும் ஆகிய யானையின் தோலை உரித்து அதனை, உமையன்னை அஞ்சும் வண்ணம் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமான், சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனாதனர் ஆகிய நான்கு முனிவர்க்கும், உயர்ந்து வளரும் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளாகிய அறத்தினை உணர்த்தினார். இத்தகைய பெருமையை உடைய பெருமான் உறைவதும், நாளும் புகழ் வளர்ந்து திகழ்வதும் ஆகிய கண்ணார்கோயில் திருக்கோயிலை அடைந்து பெருமானைப் பணியும் மனிதர்களே, கற்றவர்களாக கருதப் படுவார்கள்.

பாடல் 5:

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்

செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட

குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்

கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

விளக்கம்:

வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினை அடுத்துள்ள ஊர் குறுமாணிக்குடி என்று இன்றும் அழைக்கப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு குற்றமுடைய வாமனன் என்று கூறுவது நமக்கு பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்து மூன்றாவது அடியினை மாவலியின் தலை மேல் வைத்து அழுத்தியதை மாயச்செயல் என்று மாவலியின் மகன் நமுசி கூறியதாக பெரியாழ்வார் இந்த பாசுரத்தில் கூறுகின்றார். கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி தலத்தில் பெருமானின் சன்னதியில் நமக்கு இடது புறம் தோன்றும் சுவற்றில், திருமால் மாவலியிடம் யாசிப்பது, நெடுமாலாக வளர்வது, மூன்றடி அளப்பது, ஒரு அரக்கனுடன் போரிட்டு அவனை வானில் சுழற்றுவது, பெருமானை வழிபடுவது ஆகிய சித்திரங்கள் பொறிக்கப் பட்டுள்ளதை நாம் கண்டு மகிழலாம். முந்தைய வண்ணம், மூன்றடி யாசகம் கேட்டபோது இருந்த குள்ளமான உருவத்துடன் மூன்றடிகளை அளக்காமல், மாயமாக உயர்ந்த திருவிக்ரமன் உருவத்தால் மூன்றடிகள் அளந்த மாயத்தினை புரிந்து கொள்ளாமல் தனது தந்தை ஏமாந்து விட்டதாக அரக்கன் கூறுவதாக அமைந்த பாசுரம்.

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்

முந்தைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன

மன்னு நமுசியை வானில் சுழற்றிய

மின்னு முடியனே அச்சோவச்சோ

வேங்கடவாணனே அச்சோவச்சோ

அசுரர்களில் சற்று மாறுபட்டவனாக இருந்தவன் மாவலி. வலிமையுடைவனாக இருந்தாலும் மக்களை அன்பால் அரவணைத்து அறம் தவறாமல் ஆட்சி புரிந்தவன்; வேதங்களை மதித்து வேள்விகளை வளர்த்து இறையுணர்வுடன் திகழ்ந்தவன். எனவே தான் மற்றிணை இன்றி வாழ்ந்தவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்றிணை இன்றி என்ற தொடரினை திருமாலுக்கு அடைமொழியாக கொண்டு, தனது வாமன உருவத்திற்கு இணையான அழகிய உருவம் வேறேதும் இல்லாத வண்ணம் தோன்றிய பெருமாள் என்றும் பொருள் கொள்ளலாம். தேவர்களை வென்ற மாவலியின் செயல் இங்கே வானோரைச் செறு மாவலி என்றார் தொடரால் உணர்த்தப் படுகின்றது. செறு என்ற சொல்லுக்கு வருத்திய என்றும் பொருள் கூறப்படுகின்றது. இந்த பாடலில் கற்றவனாக திகழ்ந்த வாமனன் பெருமானை வணங்கிய செயல் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தனக்கு இணையாக வேறு எந்த அரக்கரும் இலாத வகையில் அறம் தவறாமல் ஆட்சி நடத்தியும் வானோரை வெற்றி கொண்டு வலிமையுடனும் திகழ்ந்த மாவலியை, வாமனனாக அவதாரம் எடுத்து குற்றமான வஞ்சக முறையில் நெடிது வளர்ந்து இரண்டு அடிகளால் மூன்று உலகினையும் அளந்த பிரம்மச்சாரி சிறுவன் திருமால், தான் பெருமான் பால் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சிவலிங்கம் தாபித்து வழிபட்ட திருக்கோயில், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் திகழும் பெரிய கழுத்தினைக் கொண்ட பெருமான் பொருந்தி உறையும் தலம் கண்ணார் கோயிலாகும்.

பாடல் 6:

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக

உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்

கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயில் கனி தன்னை

நண்ண வல்லார்கட்கு இல்லை நமன் பால் நடலையே

விளக்கம்:

அனைத்து உறுப்புகளிலும் கண்ணே மிகவும் அருமையான உறுப்பாக அனைவராலும் கருதப் படுகின்றது. கண் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத உறுப்பு. அதனால் தான் மிகவும் முக்கியமாக கருதுவோரை நமது கண் என்று அழைக்கின்றோம். பல திருமுறைப் பாடல்கள் இறைவன் நமக்கு கண் போன்று திகழ்கின்றான் என்று உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.65.2) இமையோர்களின் கண்களாய் விளங்குபவன் என்று கூறுகின்றார்.

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்

கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்

மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி

பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்றவன் என்று காறாயில் பதிகத்தின் பாடலில் (2.15.3) சம்பந்தர் கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேடு, துன்பம்; விண்=வீடுபேறு; எண்= எண்ணம்; எண்ணான்=உள்ளத்தில் நாம் எண்ணுவதற்கு ஏதுவாக எளிமையாக இருப்பவன்; நாம் அவனை நமது மனதினில் எண்ணி துதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன் மிகவும் எளிமையாக இருக்கின்றான். அவ்வாறு மிகவும் எளிமையாக இருக்கும் இறைவனை எண்ணித் துதிப்போர்க்கு இடர்கள் ஏற்படாது துன்பம் விளையாது என்று கூறுகின்றார்.

விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்

மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்

கண்ணானே கடி பொழில் சூழ் திருக் காறாயில்

எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.64.1) உலகுக்கு கண்ணாகவும் வழிபடும் அடியார்களின் கருத்தாகவும் பெருமான் விளங்குகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். பேரருளாளன் என்று அழைக்கப்படும் பெருமான், விண்ணவர்களும் மன்னவர்களும் வியக்கும் வண்ணம் அடியார்களுக்கு, அருள் செய்கின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். அண்ணா= அண்ணாமலை;

அண்ணாவும் .கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார்

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்

கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரிம் எரித்த

பெண் ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே

கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் பெருமான் இருப்பதாக அபப்ர் பிரான் திருவையாறு பதிகத்தின் பாடல் (1.13.7) ஒன்றினில் கூறுகின்றார். தனக்கு கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், தனது கருத்தாகவும், தான் நுகர்ந்து அனுபவிக்கும் பொருளாகவும், இருக்கும் பெருமானை, தனக்கு மிகவும் நெருங்கியவனாக இறைவன் உள்ளான் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அண்ணா என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருக்கும் பெருமானுக்கு அடிமையாக அப்பர் பிரான் மாறியதில் வியப்பேதும் இல்லை. அருத்து=நுகர்ச்சி;

கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்

எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பானாய்

விண்ணானாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே

அண்ணான ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.4) காண்பார் காணும் கண்ணான் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். அரிமான் ஏற்று=ஆண் சிங்கம்; கறங்கும்=ஒலிக்கும்; காண்பார் காணும் கண்ணானை என்பதற்கு வேறொரு விதமாகவும் சுவையான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அன்புடன், திருக்கோயில்களில் உள்ள தனது உருவத்தைக் காணும் அடியார்களின் கண்களாக செயல்பட்டு தனது உருவத்தினை அவர்களுக்கு காட்டும் பெருமான் என்று கூறுகின்றார். பெருமானின் அருளே கண்ணாகக் காணின் அல்லால் அவனது திருவுருவத்தை எவராலும் காண முடியாது என்று அப்பர் பிரான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.

புறம்பயத்து எம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை

உறைந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்

கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை

அறம் சூழ் அதிகை வீரட்டது அரிமான் ஏற்றை அடைந்தேனே

கயிலாயத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.11) கண்ணாய் உலகுக்கு நின்றாய் நீயே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். கண் என்பதற்கு பற்றுக்கோடு என்று பொருள் கொண்டு, உலகத்தவர் அனைவர்க்கும் பற்றுக்கோடாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறை விரல்=சிறிது நேரமே விரலை வைத்து மலையினை அழுத்தியவன்;

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம்

உணர்ந்தாய் போற்றி

எண்ணா இலங்கைக் கோன் தன்னைப் போற்றி இறை விரலால் வைத்து

உகந்த ஈசா போற்றி

பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை

புகுந்தாய் போற்றி

கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே

போற்றி போற்றி

நாட்டியத்தாங்குடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.15) பாடலில் சுந்தரர் பெருமானை கண்ணா என்று அழைக்கின்றார். தனக்கு கண் போன்று மிகவும் அருமையானவன் பெருமான் என்று இதன் மூலம் சுந்தரர் உணர்த்துகின்றார். குண்டாடி=மூர்க்கத் தன்மை; அன்பினால் மட்டுமே நாம் எதையும் அடைய முடியும் என்பது சைவர்களின் கொள்கை. எனவே அன்பு வழியினைத் தவிர்த்து நாம் வேறு எந்த வகையிலும் செல்லலாகாது என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். தங்களது மூர்க்கத் தன்மையால் சமணர்களும் சாக்கியர்களும் தாங்கள் அடைய விரும்பும் பொருளினை அடைகின்றனர் என்பதை கேள்விப் பட்டாலும், நேரில் கண்டாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், சிவநெறியாக உள்ள அன்பு வழியில் தான் செல்வேன் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும்

கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்

தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன் என் வினை போக

நண்டாடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.28.6), சுந்தரர் தனது கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் உள்ள பெருமான் என்று குறிப்பிட்டு, பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு எவரையும் துணையாக கருத மாட்டேன் என்று கூறிகின்றார். வரு=சொல்ல வருகின்ற;

மண் நீர் தீ வெளி ஆகாசம் வரு பூதங்களாகி மற்றும்

பெண்ணோடு ஆண் அலியாகிப் பிறவா உரு ஆனவனே

கண்ணார் உள் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம்

அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே

வேலை=கடல், இங்கே பாற்கடல்; உண்ணவன்=உண்டவன்; நடலை=துன்பம்; இந்த பாடலில் எமதருமனால் ஏற்படும் துன்பம் ஏதும் இல்லை என்று சம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் நரகத்தில் விளையும் துன்பங்களிலிருந்து பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாடு தவிர்க்கும் என்று கூறப்படுகின்றதே தவிர இறப்பு தவிர்க்கப்படும் என்றும் எங்கும் சொல்லப் படவில்லை. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், ஏன் உலகத்தில் பிறந்த எந்த உயிருக்கும், இறப்பு என்பது நிச்சயம், எனவே அந்த இறப்பினை எவராலும் தவிர்க்க இயலாது. பொதுவாக எந்த உயிரும் உடலிலிருந்து பிரிந்த பின்னர், சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு, ஆங்கே இன்ப துன்பங்களை அனுபவித்து தங்களது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றன. பெருமானின் அடியார்களை அவ்வாறு நரகத்திற்கு செல்ல விடாமல் பெருமான் பாதுகாத்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான் என்பதே திருமுறை ஆசிரியர்கள் உணர்த்தும் பொருள். இதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். .

பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு, மிகுந்த விருப்பத்துடன் நஞ்சினை உண்ட பெருமான், அவ்வாறு நஞ்சினை தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் ஆவான். அவன் உலகினுக்கு, உலகினில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்று மிகவும் அருமையானவனாகத் திகழ்கின்றான். அத்தகைய பெருமான் கண்ணார்கோயில் தலத்தில், நாம் அனைவரும் அவனை வணங்கி, அந்த வணக்கத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, இனிய கனியாக திகழ்கின்றான். அந்த இனிய கனியினை நெருங்கித் தொழுது வணங்கும் அடியார்களை, இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவையும் அணுகாது.

பாடல் 7:

முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்

பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி

தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்

கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே

விளக்கம்:

தனது மனைவியை வஞ்சகமாக ஏமாற்றிய இந்திரன் மீது கோபம் கொண்ட கௌதம முனிவர், இந்திரனின் தன்மையை உலகத்தவர் அனைவரும் அறிந்து கொண்டு அவனை இகழும் வண்ணம் அவனது உடல் முழுவதிலும் பெண்குறிகள் தோன்ற வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். இந்த சாபத்தின் விளைவால் அவனது உடல் முழுவதும் பெண்குறிகளின் அடையாளங்கள் தோன்ற இந்திரன் வெளியே தலைகாட்டுவதற்கு தயக்கம் அடைந்தான். பின்னர் இந்த சாபத்தினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு இந்த தலம் வந்தடைந்து இறைவனை வணங்கி தனது நிலையினை மாற்றுமாறு வேண்டினான். இறைவனது அருளால் அவனது உடலில் இருந்த பெண்குறி அடையாளங்கள் கண்களாக மாறின. இவ்வாறு கண்களாக மாறியதால் இந்த தலத்திற்கு கண்ணார்கோயில் என்றும் பெருமானுக்கு கண்ணாயிர நாதர் என்றும் பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. தங்களது தலைவன் இந்திரன் அடைந்த அவமானத்தின் வெளிப்பாடாக திகழ்ந்த அவனது உடலின் நிலை மாறவேண்டும் என்று தேவர்களும் இறைவனை வழிபட்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முனி=கௌதம முனிவர்; பெயர்தல்=அந்த இடத்தினை விட்டு விலகுதல்; சார்பு=சார்ந்து உறையும் இடம்; துன்னமர்=நெருங்கி வந்து; தண்ணருளால் என்ற சொல் தன்னருளால் என்று எதுகை கருதி மாற்றப்பட்டுள்ளது. தண் அருள்=குளிர்ந்த அருள்; துன்பங்களும் வருத்தமும் எவருக்கும் மனதினில் வெப்பம் ஏற்படுத்தும். இன்பங்கள் மனதினையும் உடலினையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், இறைவனின் அருளால் வருத்தம் நீங்கி உடலும் உள்ளமும் குளிர்ந்து இருக்கும் என்பதை உணர்த்த, தண் அருள் என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

பண்டைய நாளில் கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திரனும் தேவர்களும் பின்னர் இறைவனை வேண்டிய போது, அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய ஈசன், இந்திரனுக்கு அவமானம் தரும் வகையில் அவனது உடலெங்கும் விளங்கிய பெண்குறிகள், அழகிய ஆயிரம் கண்களாக மாறும் வண்ணம், இந்திரனது வருத்தத்தை நீக்கி அவனது உடலும் உள்ளமும் குளிரும் வண்ணம், அருள் புரிந்தவன், கண்ணார்கோயில் திருத்தலத்தில் உறையும் ஈசன். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான்; தலத்தில் உள்ள கன்னிப் பெண்கள், திருக்கோயிலை அடைந்து பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர்.

பாடல் 8:

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்

நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த

முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த

திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே

விளக்கம்:

பெருக்கு=பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு=அழிவு; பேதை=அறிவற்றவன், பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் சம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். முந்தைய ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் சம்பந்தர், உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபாட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தின் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

திருக்கயிலை மலையின் பெருமையை அறியாத அறிவிலியாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தியதன் விளைவால், அரக்கன் மலையின் கீழே நெருக்குண்டு துன்பம் அடைந்தான். அப்போது தனது தவறினை உணர்ந்த அரக்கன், பெருமானின் நீண்ட கழல்களை நினைத்து புகழ்ந்து சாமகானம் பாடியதை கண்ணுற்ற இறைவன், அரக்கனை அவன் அடைந்த துன்பத்திலிருந்து விடுவித்து, அவனுக்கு ஒளிவீசும் வாளொடு தேரினையும் அருளினார். இத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமானின் திருநாமத்தை, கண்ணார் என்று சொல்லும் அன்பர்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள்.

பாடல் 9:

செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்

அங்கமலக் கண் நோக்க அரும் வண்ணத் தழல் ஆனான்

தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்

அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே

விளக்கம்:

அங்கமலக்கண்=அங்கு+அம்+மலக்+கண்; அங்கு=பிரமனும் திருமாலும் தமக்குள்ளே யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில்; அம் மலக்கண்=இறைவனின் திருவடியையும் திருமுடியையும், தங்களது கண்களால் காண்போம் என்று செருக்குடன், பிரமனும் திருமாலும் முயற்சி செய்ததால், அவர்களது கண்களை மலக்கண் என்று கூறுகின்றார். பெருமானை அணுக வேண்டிய முறையில் பிரமனும் திருமாலும் அணுகாமல் இருந்ததை அப்பர் பிரான், இலிங்க புராண குறுந்தொகை பதிகத்தின் (5.95) முதல் பத்து பாடல்களில் கூறுகின்றார். பிரமன் திருமால் ஆகிய இருவரும், பெருமானை எவ்வாறெல்லாம் வழிபட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடல்களில் குறிப்பிட்டு, அவர்கள் செய்யத் தவறியதை பாடல் தோறும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் இருவர் இருவர் என்றே அப்பர் பிரான் குறிப்பிட்டு அவர்கள் செய்யத் தவறிய செயல்களை பட்டியல் இட்டு, அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு முயற்சி செய்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் தான், செங்கணான் மற்றும் பிரமன் ஆகிய இருவரே பதிகத்தின் முந்திய பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர் என்று நமக்கு உணர்த்துகின்றார். எவ்வாறு இறைவனை வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறியது, இங்கே சுருக்கமாக தரப்படுகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் இறைவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், அவர்கள் இருவர் மீது இரக்கம் கொண்ட பெருமான் இலிங்கத்தின் உருவில் தோன்றி அவர்களுக்கு காட்சி கொடுத்தான் என்று அப்பர் பிரான் முடிக்கின்றார்.

தங்கமலக் கண்ணார்=தங்கு+அமலக்+கண்ணார்; அமலம்=மலம் நீங்கிய நிலை; ஞானக் கண் உடையவர்; மலம் என்றால் பொதுவாக ஆணவ மலத்தினை குறிக்கும். அறியாமை நிலையினை ஆணவ மலமே உண்டாக்குவதால், மலம் நீங்கிய நிலை என்பது அறியாமை நீங்கிய நிலையினை குறிக்கும். அங்கமலத்தோடு=அம்+கமலத்தோடு; உள்ளம் அங்கமலத்தோடு=தாமரை போன்ற அழகிய உள்ளத்தோடு; பெருமானைத் தொழும் அடியார்கள், ஆணவ மலம் நீங்கியவர்களாக இருப்பதால், அவர்களை அழகிய தாமரை மலர் போன்று உள்ளத்தவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உள்ளத்தால் இறைவனை வணங்குதல் அக வழிபாடாக கருதப் படுகின்றது. திருக்கோயில் சென்று இறைவனின் மூர்த்தத்தைக் கண்டு வழிபடுவது புறவழிபாடு எனப்படும். திகழ் கோயில் என்று குறிப்பிட்டு புறவழிபாட்டினை குறிக்கும் சம்பந்தர் அங்கமலத்தோடு என்று குறிப்பிடுவதால், அகவழிபாடு செய்வோர் புறவழிபாட்டினை கைவிடாமல் ஈடுபடவேண்டும் என்று உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர். தனது மொழிகளால் தூண்டப்பட்டு இந்த தலம் செல்லும் அடியார்கள் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

சிவந்த தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில், நெடிது உயர்ந்த தழற்பிழம்பாய் பெருமான் தோன்றிய போது, பெருமானின் திருவடியையும் திருமுடியையும் எளிதில் கண்டு விடலாம் என்று தங்கள் வலிமை மீது தாங்கள் கொண்டிருந்த செருக்கின் விளைவால் மிகுந்த நம்பிக்கையுடன், தங்களது ஊனக் கண்களின் துணையால் கண்டுவிடலாம் என்று இருவரும் முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி காணவில்லை. இவ்வாறு அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் நீண்டு உயர்ந்த பெருமான், ஆணவ மலத்தினை அடக்கும் வல்லமை வாய்ந்த கண்ணார்கோயில் தலத்தில் உறைகின்றார். இந்த தலத்தில் உள்ள பெருமானை நேரில் கண்டு புறவழிபாடு மற்றும் உள்ளத்தில் நினைத்து அகவழிபாடு செய்து பெருமானை போற்றி வழிபடும் அடியார்களே அமரர் உலகத்தினைச் சென்று அடைவார்கள்.

பாடல் 10:

தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும் தாம் உண்ணும்

சோறு உடையார் சொல் தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்

ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்

ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே

விளக்கம்:

தாறிடு பெண்ணை=குலை தள்ளும் பனைமரங்கள்; தட்டு=பனை ஓலையால் செய்யப்பட்ட; தடுக்குப் பாய்களை சமணர்கள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் எடுத்து செல்வது அவர்களின் வழக்கம். பொதுவாக சமண குருமார்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி செல்லும் அவர்களின் தேவை கருதி, இரவினில் அவர்கள் படுப்பதற்காக பல சமணப் பள்ளிகள் அந்நாட்களில் இருந்தன. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசல் செல்லும் வழியில் குன்றினைக் குடைந்து செய்யப்பட்ட சமணப் படுக்கைகள் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இவ்வாறு எடுத்துச் செல்லும் பாய்களை இடுப்பினில் சுற்றிக் கொள்வதும் உண்டு, அந்த பழக்கத்தையே இங்கே தட்டுடையார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சோறுடையார்=சோற்றினை உட்கொள்வதே வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக கருதிய புத்தர்கள்; பரன்=அனைவர்க்கும் மேலானவன்; தனது சொற்களால் ஊக்கமடைந்து இந்த தலம் செல்லும் அடியார்களின் மனதினைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை இங்கே அளிக்கப் படுகின்றது.

பொழிப்புரை:

குலை தள்ளும் பனை மரங்களின் ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கினை ஆடையாக உடுக்கும் சமணர்களும், சோறு உண்பதே வாழ்க்கையின் பிரதான நோக்கமாக கருதும் புத்தர்களும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாக கருதாதீர்கள்; தனது மார்பினில் வெண்ணூல் அணிந்தவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் மேலானவனும், எலும்பினை ஆபரணமாக அணிந்தவனும், தனது நீண்ட சடையின் மேல் கங்கை நதியைத் தேக்கியவனும் ஆகிய பெருமான் சேர்ந்து எழுந்தருளி இருப்பது கண்ணார் கோயில் என்ற தலமாகும்.

பாடல் 11:

காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த

பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக் கோன்

நாமரு தொன்மைத் தன்மையுள் ஞானசம்பந்தன்

பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே

விளக்கம்:

இந்த பாடலில் பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா என்று சம்பந்தர் கூறுகின்றார். தாம் செய்யாத குற்றத்திற்கு பலர் பழிச்சொற்கள் பெறுவதும் தண்டனை அடைவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். இதற்கு மூல காரணம் அவர்களின் பண்டைய வினைகளே. பெருமானை வழிபடும் அன்பர்கள் மற்றும் பதிகத்தினை ஓதும் அன்பர்கள் அத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்பதால், அந்த வினைகளால் ஏற்படும் பழிகள் வருவதும் தவிர்க்கப்படும் அல்லவா. காமரு=அழகுடைய; நாமரு தொன்மை=மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வதால் அந்த சொற்கள் நாவினுக்கு மிகவும் அதிகமான பழக்கமாக மாறியதை நாவுக்கு தொன்மைத் தொடர்பு உடைய சொற்கள் என்று கூறுகின்றார். பாமரு பாடல் என்ற தொடருக்கு எங்கும் பரந்து செல்லும் இனிய ஓசையினை உடைய பாடல் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது.

பொழிப்புரை:

அழகுடன் விளங்கும் கண்ணார் கோயில் திருத்தலத்தினில் உள்ள கோயிலில் உறையும் பெருமானை, பூஞ்சோலைகள் நிறைந்ததும் பொன்னால் அழகு சேர்க்கப்பட்ட மாடங்கள் நிறைந்ததும் ஆகிய புகலி நகரத்தின் தலைவனாக திகழும் ஞானசம்பந்தனின் நாவின் மூலமாக. பெருமானின் புகழினை மீண்டும் மீண்டும் பாடி பழக்கப்பட்ட நாவின் மூலமாக வெளிவரும் பாடல்கள் பத்தினையும் பாடவல்ல அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் சென்ற பல பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவாக ஏற்படும் தீங்குகள் நம்மை விட்டு நீங்கும் என்றும் வாழ்வினில் இன்பம் ஏற்படும் என்று இம்மையில், பெருமானை கை தொழுவதால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்தின் இயற்கை வளமும், அடியார்கள் பாடும் செவ்வழிப் பண்களை கேட்ட வண்டுகளும் செவ்வழிப் பண்ணில் முரல்கின்றன என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் சுடுகாட்டினில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், நான்காவது பாடலில் பெருமானின் திறமையை (யானை உரித்தது மற்றும் அறம் உரைத்தது) குறிப்பிடுகின்றார். பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருமால் வாமனனாக சென்று வஞ்சகமான முறையில் மாவலியை ஏமாற்றியதால் தனக்கு ஏற்பட்ட பழி மற்றும் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள இலிங்கம் தாபித்து வழிபட்ட கோயில் கண்ணார் கோயில் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில் கண்ணார்கோயில் பெருமானை வணங்கி வழிபடும் அன்பர்களுக்கு இயமனால் துன்பம் ஏதும் உண்டாகாது என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் தலத்தில் உள்ள கன்னிப்பெண்கள், பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர் என்று கூறும் சம்பந்தர், திருக்கண்ணார் என்று இறைவனை அழைக்கும் அன்பர்கள் அனைவரும் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பெருமானை வழிபடும் அடியார்கள் வானோர் உலகத்தினைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் புத்தர்கள் மற்றும் சமணர்களின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை ஓதும் அடியார்களுக்கு தகாத பழிகள் வாரா என்று கூறுகின்றார். கண்ணார்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு, அந்த தலத்திற்கு உரிய பதிகத்தினை பாடி, இம்மையில் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பங்கள் அடைந்தும், நரகத்தினில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்தும், மறுமையில் சிவலோகம் சென்றடைந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.

, Tag :

#thirugnanasambandhar thevaram
#Thannaar Thingal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

தண்ணார் திங்கள்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: