Go Back

22/03/21

மன்னியூர் இறை


முன்னுரை:

தனது ஐந்தாவது தலயாத்திரையில் கண்ணார்கோயில், புள்ளிருக்குவேளூர், திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகிலுள்ள பழமண்ணிபடிக்கரை, திருக்குறுக்கை முதலான தலங்கள் சென்று பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த இரண்டு தலங்களின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. குறுக்கைத் தலத்திலிருந்து புறப்பட்ட காழிப் பிள்ளையார் அன்னியூர் மற்றும் பந்தணைநல்லூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. தனது நான்காவது தலயாத்திரையில் திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமமாம்புலியூர், கடம்பூர் வாழ்கொளிபுத்தூர், ஆகிய தலங்கள் சென்றார் என்பதையும், இடறினார் கூற்றை என்று தொடங்கும் பந்தனைநல்லூர் தலத்து பதிகத்தின் (3.121) விளக்கத்தையும் முன்னமே கண்டோம். ஐந்தாவது தலையாத்திரையில் பந்தணைநல்லூர் சென்றபோது சம்பந்தர் அருளிய பதிகமும் இதுவரை கிடைக்கவில்லை.

தற்போது பொன்னூர் என்று அழைக்கப்படும் இந்த தலம் திருநீடூர் தலத்திற்கு மேற்கே உள்ள சாலையில் மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில்பாதையில் நீடூர் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். இறைவனின் திருநாமம்=ஆபத்சகாயர்; இறைவியின் திருநாமம்; பெரியநாயகி. இந்த தலத்தில் அக்னிதேவன், பாண்டவர்கள், அரிச்சந்திரன், இரதிதேவி, வருணன் ஆகியோர் வழிபட்டு பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. பங்குனி மாதத்தின் இறுதி ஐந்து நாட்களில் தினமும் காலையில் சூரியன் தனது கதிர்களால் இறைவனை வணங்குவதை இன்றும் காணலாம். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் மற்றும் அபப்ர் பிரான் பாடிய இரண்டு பதிகங்கள் இதுவரை கிடைத்துள்ளன.

பாடல் 1:

மன்னியூர் இறை

சென்னியார் பிறை

அன்னியூர் அமர்

மன்னு சோதியே

விளக்கம்:

மன்னி ஊர் இறை=என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று உயிர்களை இயக்கம் இறைவன்; இந்த விளக்கம் சிவக்கவிமணியாரால் அளிக்கப்பட்டுள்ளது. மன்னு=நிலையாக நிற்கும்; சோதி வடிவமாக உள்ள இறைவனைத் தவிர்த்து மற்ற அனைத்து சோதிகளுக்கும் அதனை இயக்கும் ஒருவன் தேவைப்படுகின்றது. சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சோதிகளும் இறைவன் அவைகளுடன் கலந்திருந்து இயக்குவதால் தான் ஒளி வீசுகின்றன. மற்ற விளக்குகள் எரிவதற்கு வேறு ஒருவரின் உதவியோ தூண்டுதலாவது தேவைப்படும். அத்தகைய உதவியோ தூண்டுதலோ தேவைப்படாமல் தானே சுயமாக ஒளி வீசும் தன்மை உடையவன் பெருமான். சோதி என்பதற்கு ஞானம் என்று பொருள் கொண்டு ஞான வடிவாக இருப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மன்னி ஊர் இறை என்ற தொடரினை பாடலின் கடையில் வைத்து, சோதி வடிவினனாக இருக்கும் இறைவன், பல ஊர்களிலும் எழுந்தருளி ஆங்காங்கே உள்ள மக்களுக்கு தலைவனாக விளங்குகின்றான் என்றும் பொருள் கொள்கின்றனர்.

பொழிப்புரை:

என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று இயக்கும் இறைவன், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக அன்னியூர் தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளான்; அவன் நிலையாக ஒளி உருவில் விளங்குகின்றான். அவ்வாறு ஒளியுடன் திகழ, அவனுக்கு வேறு எவரது உதவியோ அல்லது தூண்டுதலோ தேவைப்படுவதில்லை.

பாடல் 2:

பழகும் தொண்டர் வம்

அழகன் அன்னியூர்

குழகன் சேவடி

தொழுது வாழ்மினே

விளக்கம்:

வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்; குழகன்=இளமையாக இருப்பவன்; ;

பொழிப்புரை:

இறைவன் பால் மனம் ஒன்றி சிவநெறியில் பழகும் தொண்டர்களே, அனைவரும் வருவீர்களாக. அழகும் இளமையும் இணைந்த அன்னியூர்ப் பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

பாடல் 3:

நீதி பேணுவீர்

ஆதி அன்னியூர்

சோதி நாமமே

ஓதி உய்ம்மினே

விளக்கம்:

நீதி=நியதி, வழிபாட்டு முறைகள்; நீதி பேணுதல்=வழிபாட்டு முறைகளில் ஒழுகுதல்; பெருமானைக் கண்டு தொழுத பின்னர் அவனது திருநாமங்களை சொல்வது தானே முறை.

பொழிப்புரை:

வேதங்களிலும் ஆகம நூல்களிலும் சொல்லிய வண்ணம் முறையாக பெருமானைத் தொழும் அன்பர்களே, நீவிர் அனைவரும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் சுயமாக ஒளி வீசுபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை ஓதி உய்வினை அடைவீர்களாக.

பாடல் 4:

பத்தர் ஆயினீர்

அத்தர் அன்னியூர்

சித்தர் தாள் தொழ

முத்தர் ஆவரே

விளக்கம்:

அத்தர்=தந்தை; சித்தர்=அடியார்களின் சித்தத்துள் நிலைத்து நிற்பவர் என்றும் சித்திகளைத் தருபவர் என்றும் சித்திகளை புரிபவர் என்றும் பல விதமாக பொருள் கொள்ளலாம். சித்தர் என்றதும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதி பிராகாரத்தில் துர்க்கை சன்னதிக்கு அருகே உள்ளே எல்லாம் வல்ல சித்தர் சன்னதி, நமது நினைவுக்கு வருகின்றது. அபிடேக பாண்டியனின் ஆட்சி காலத்தில், எல்லாம் வல்ல சித்தராக பெருமான் தோன்றி மதுரை மாநகரில் திருவிளையாடல் புரிந்தமை, பரஞ்சோதி முனிவரால், திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தர் படலம் என்ற படலத்தில் விவரமாக சொல்லப் படுகின்றது. காதினில் வெள்ளிக் குண்டலங்களும், மார்பினில் ஸ்படிக மற்றும் உருத்திராக்க மாலைகள் அணிந்து, திருமேனி எங்கும் திருநீறு பூசியவராக, கையில் தங்கப் பிரம்பும் மழு ஆயுதமும் தாங்கி, கோவண ஆடையும் புலித்தோலும் அணிந்து, ஜடாமகுடதாரியாய், யாவரையும் மயக்கும் புன்முறுவலுடன் சித்தர் வேடத்தில் ஆலவாய் திருக்கோயிலில் பெருமான் ஒருநாள் காணப்பட்டார். இடையிடையே நான்கு வீதிகள் கூடும் இடங்களில் சென்று, வீதியிலும் மாளிகை வாயில்களிலும் அவர் செய்த சித்து வேலைகளைக் காண மக்கள் கூட்டமாக திரண்டனர். திடீரென அங்கிருந்து மறைந்தும், வேறொரு இடத்தில் தோன்றியும் பல அதிசயங்கள் அவர் நிகழ்த்தினார். இளைஞரை முதியவராக மாற்றியும், முதியோரை இளைஞராக மாற்றியும், பிறவியிலே ஊனமடைந்த பலருக்கும் கண் பார்வை அருளியும், பேசும் சக்தி அளித்தும், அவர்களது காதுகளை கேட்கவைத்தும், ஏழைகளை செல்வந்தராக மாற்றியும், செல்வந்தர்களின் செல்வத்தை மறைத்தும், எட்டிப் பழங்களை இனிப்பாக மாற்றியும், வைகை நதியில் வெள்ளம் பெருக்கியும் பின்னர் அந்த வெள்ளத்தை தணித்தும், பட்ட மரத்தினை பூக்கச் செய்தும், கூன் உடையவர்களது கூனினை நிமிர்த்தியும், பல பொருட்களை தங்கமாக மாற்றியும், தன்னிடம் இருந்த கோல் அந்தரத்தில் தொங்குமாறு செய்தும், அந்தரத்தில் தொங்கிய கோலின் மேல் ஒரு ஊசியினை நட்டு அந்த ஊசியின் மீது தனது கால் பெருவிரல் வைத்து நடனமாடியும், விண்ணில் தாவி மேகத்தினை பிழிந்து நீரினை வெளிக்கொணர்ந்தும், பகலை இரவாக மாற்றியும், இரவினை பகலாக மாற்றியும், பல சித்து வேலைகளைச் செய்த அவரை அரண்மனைக்கு அழைத்து வர மந்திரிகளை மன்னன் அனுப்பினான். சித்தரை அழைக்கச் சென்ற மந்திரி மற்றும் சேவர்களும் சித்தரின் விளையாட்டுகளில் மயங்கி மெய்மறந்து நின்றனர். சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்த அவர்கள் அரண்மனைக்கு அழைத்து வருமாறு மன்னன் தங்களை அனுப்பியதை சொன்னார்கள். அதற்கு சித்தர், மன்னனால் தனக்கு ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்றும், மன்னனுக்கு தன்னிடம் ஆகவேண்டிய காரியம் ஏதேனும் இருந்தால் தன்னை வந்து காணலாம் என்று தெரிவித்தார். மந்திரி மூலமாக இந்த செய்தியை அறிந்த மன்னன், தானே அவரை நாடிச்சென்றான். இதனிடையில் சித்தர் ஆலவாய் திருக்கோயிலில் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு பணிந்து வணங்கிய மன்னன், தன்னிடம் இருந்த கரும்பினை கல்யானை உண்ணுமாறு சித்து வேலை செய்ய முடியுமா என்று கேட்டான். உடனே கல்யானையை சித்தர் பார்க்க, அந்த யானை உயிர் பெற்று பிளிறியதும் அன்றி, மன்னனின் கையில் இருந்த கரும்பையும் பிடுங்கித் தின்றது. மீண்டும் சித்தர் யானையைப் பார்க்க, அந்த யானை மன்னன் கழுத்தினில் இருந்த முத்துமாலையை எடுத்து விழுங்கியது. யானையின் செயலால் மன்னன் மிகுந்த கோபம் கொண்டதை கவனித்த காவலர்கள், யானையை இயக்கிய சித்தரை அடிக்க நெருங்கினார்கள். அப்போது சித்தர் புன்னகையுடன் நில்லுங்கள் என்று கூற அடிக்க வந்த அனைத்து காவலர்களும் சிலை போல் அசைவின்றி நின்றுவிட்டனர். திகைத்து நின்ற பாண்டிய மன்னன் சித்தரை வண்ணகி, தனக்கு புத்திரப்பேறு வாய்க்க அருள் புரியுமாறு வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்றார். பின்னர் சித்தர் மீண்டும் யானையை பார்க்க யானை அவரது எண்ணத்தினை புரிந்து கொண்டு மன்னனின் முத்துமாலையை திருப்பிக் கொடுக்க மன்னனும் அதனை மகிழ்வுடன் அணிந்து கொண்டான். சித்தர் மறைய யானையும் முன்போன்று கல் யானையாக மாறியது. மன்னனுக்கும் சிலநாட்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.

பொழிப்புரை:

இறைவனிடம் அன்பு கொண்டவர்களே, நம் அனைவர்க்கும் தந்தையாக விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் வீற்றிருக்கின்றான். எதையும் செய்யவல்ல சித்தராக விளங்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது, வினைகளிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைவீர்களாக.

பாடல் 5:

நிறைவு வேண்டுவீர்

அறவன் அன்னியூர்

மறையுளான் கழற்கு

உறவு செய்ம்மினே

விளக்கம்:

உறவு=அன்பு; அறவன்=தருமமே உருவானவன்; இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு, அன்பினால் எழுந்த, இறைவன் பக்தன் என்ற உறவு தான். எனவே தான் இறைவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு அன்பினனாக நடந்து கொண்டு அவனுடன் உறவாடவேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறைவனுக்கு உறவினனாக நடந்து கொள்வதில் என்ன இலாபம் என்று அப்பர் பிரான் அறிவுறுத்தும் பாடலை (5.90.10) நாம் இங்கே காண்போம். விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்டு கடைந்த பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

பொழிப்புரை:

குறையேதும் இன்றி மனநிறைவுடன் வாழ விரும்பும் அன்பர்களே, நீங்கள் புண்ணியமே வடிவமாக உள்ள அன்னியூர் இறைவனை, வேதங்களில் பரம்பொருளாக கூறப்படுபவனின் திருப்பாதங்கள் பால் அன்பு வைத்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

பாடல் 6:

இன்பம் வேண்டுவீர்

அன்பன் அன்னியூர்

நன்பொன் என்னுமின்

உம்பர் ஆகவே

விளக்கம்:

உம்பர்=தேவர்கள்; தேவருலகில் நாம் அடையும் இன்பம் இந்த பிறவியில் நாம் செய்யும் புண்ணியங்களின் அளவினைப் பொருத்தது. அந்த இன்பம் சிறிது காலமே நீடிக்கும். பின்னர் நாம் மீண்டும் உலகினில் பிறந்து எஞ்சிய வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் உயிர்களுக்கு அளிக்கும் முக்தி உலகத்து இன்பம் என்றும் அழியாதது. எனவே உம்பர் என்று சம்பந்தர் இங்கே கூறுவது, தேவர்களுக்கும் மேலான நிலை என்று ;பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இறைவனைப் புகழ்ந்து அவனை வழிபடுவதால் நமக்கு இம்மையிலும் இன்பம் மறுமையிலும் இன்பம் என்பதே இங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த கருத்து நமக்கு சாய்க்காடு தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (2.41.1) நினைவூட்டுகின்றது. மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் சாரமாடர்கள்; வான்=மிகவும் உயர்ந்த இன்பம் அளிக்கும் முக்தி உலகம்; கண் புகார்=இடுக்கண் கண் புகார், துன்பம் அடைய மாட்டார்கள்; பெருமானின் புகழினைக் கற்றவரும் கேட்டவரும், சாய்க்காட்டுப் பெருமானின் திருவடிகளைச் சாரும் அடியார்களும், இம்மையில் மனம் வருத்தம் இன்றியும், பிணியேதும் இன்றியும், பசியின்றியும், எந்தவிதமான துன்பங்கள் மற்றும் இடர்களில் படாமலும் இனிமையாக வாழ்வார்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் இந்த உலக வாழ்வு முடிந்த பின்னர், அவர்கள் மீண்டும் உலகினில் பிறக்காத வண்ணம் முக்தி நிலையினை அடைவார்கள் என்றும் கூறுகின்றார், விண் புகார் என்று கூறுவதன் மூலம், தேவர் உலகத்தினை அத்தகைய அடியார்கள் அடைய மாட்டார்கள், ஆனால் அதனினும் உயர்ந்த சிவலோகத்தினைச் சென்று அடைந்து நிலையான இன்பம் பெறுவார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்

கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண் புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித்

தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே

அன்பன் என்று அன்பே வடிவமாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து

அமுதே

ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே

ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இங்கே திருமூலரின் பாடலை குறிப்பிடுவது பொருத்தமாக உள்ளது. அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே மேற்கண்ட பாடலில் திரண்ட கருத்தாகும்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்

அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே

பொழிப்புரை:

இந்த உலக வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர்த்து இன்பம் அடைய வேண்டும் என்று நீர் விரும்புவீராயின், அன்பே வடிவமாக விளங்கும் பெருமானை, அன்னியூர் இறைவனை, நல்ல பொன் போன்று அருமையாக உள்ளவனே என்று புகழ்ந்து வழிபடுவீர்களாக. அவ்வாறு வழிபட்டால், நீங்கள் மறுமையிலும் நிலையான இன்பம் பெறலாம்.

பாடல் 7:

அந்தணாளர் தம்

தந்தை அன்னியூர்

எந்தையே என

பந்தம் நீங்குமே

விளக்கம்:

பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு; சடையான் என்றும் வேதியன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. அந்தணர்களில் சிறந்தவன் என்றும் முனிவர்களில் சிறந்தவன் என்றும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அந்தணர்களுக்கு தலைவனாகவும் அந்தணர்களில் சிறந்தவனாகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான். அந்த இறைவனை எங்களது தந்தையே என்று புகழ்ந்து போற்றுவோர், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தினை நீக்கும் வல்லமை உடையவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 8:

தூர்த்தனைச் செற்ற

தீர்த்தன் அன்னியூர்

ஆத்தமா அடைந்து

ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

தீர்த்தன்=தூய்மை செய்பவன்; ஆத்தமா=அன்புடன்; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. நெருங்கிய நண்பனை ஆப்தன் என்று சொல்வதுண்டு. தூர்த்தன்=காமி, பெண்பித்து கொண்டு அலைபவன்;

பொழிப்புரை:

பெண்பித்து கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணின் வலிமையைக் குன்றச் செய்து அவனை வெற்றி கொண்ட பெருமான், அன்னியூர் தலத்தில் உறையும் பெருமான், தனது அடியார்களின் மலங்களைத் தீர்க்கும் புனிதனாக விளங்குகின்றான். அவனை உங்களது நெருங்கிய நண்பனாக கருதி அவன் பால் அன்பு வைத்து, அவனை புகழ்ந்து வாழ்த்துவீராக.

பாடல் 9:

இருவர் நாடிய

அரவன் அன்னியூர்

பரவுவார் விண்ணுக்கு

ஒருவர் ஆவரே

விளக்கம்:

அரவன்=பாம்பினை அணியாக அணிபவன்; விண்ணுக்கு=விண்ணவர்களுக்கு ஒருவன்=ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இந்திரன்;

பொழிப்புரை:

பிரமன் திருமால் ஆகிய இருவரும் திருவடியையும் திருமுடியையும் தேடி காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கொண்டவனும், அன்னியூர் தலத்தின் இறைவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பாடுவோர், இந்திர பதவியை அடைவாரகள்.

பாடல் 10:

குண்டர் தேரருக்கு

அண்டன் அன்னியூர்த்

தொண்டுளார் வினை

விண்டு போகுமே

விளக்கம்:

அண்டன்=அண்ட முடியாதவன், நெருங்க முடியாதவன்; குண்டர்=பருத்த உடலைக் கொண்ட சமணர்கள்; தேரர்=புத்தர்; சிறிய விதையிலிருந்து பெரிய மரங்கள் வளர்வது போன்று, நமது கண்ணுக்கு தெரியாமல் நம்முடன் பிணைந்திருக்கும் வினைகள், நாம் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க காரணமாக உள்ளன. விண்டு போகும் விதைகள் செயலற்று போவது போல், பெருமானின் அருளினால் அவனது அடியார்களை பிணைந்துள்ள வினைகள் செயலற்று விடுகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

பருத்த உடலை உடைய சமணர்களும் புத்தர்களும் அண்ட முடியாதவனாக விளங்கும் பெருமானுக்கு அன்னியூர் தலத்து இறைவனுக்கு தொண்டு செய்யும் அன்பர்களின் வினைகள் விண்டு போய்விடும்.

பாடல் 11:

பூந்தராய்ப் பந்தன்

ஆய்ந்த பாடலால்

வேந்தன் அன்னியூர்

சேர்ந்து வாழ்மினே

விளக்கம்:

ஆய்ந்த=ஆராய்ந்து பாடிய, வேதங்களின் நுட்பமான பொருளை அறிந்து அவற்றை தமிழ்ப் பாடல்களாக பாடிய; சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவதால் நாம் அவனை நெருங்கி அவனுடன் இணைய முடியும் என்பதையே சேர்ந்த என்ற சொல் மூலம் சம்பந்தர் விளக்குகின்றார்.

பொழிப்புரை:

பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், வேதங்களின் நுட்பமான பொருளினை ஆராய்ந்து அறிந்து அந்த கருத்துகளை தமிழ்ப் பாடல்களாக அமைத்து அன்னியூர் தலத்தின் தலைவனாகிய இறைவன் மேல் இயற்றிய பாடல்களை பாடி இறைவனுடன் சேர்ந்து வாழ்வீர்களாக.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் அனைத்து உயிர்களுடன் கலந்து அவற்றை இயக்குபவன் பெருமான் என்று உணர்த்தும் சம்பந்தர், இரண்டாவது பாடலில் அன்னியூர் தலம் சென்றடைந்து அவனது திருவடிகளைத் தொழுமாறு அனைத்து தொண்டர்களையும் அழைக்கின்றார். மூன்றாவது பாடலில் பெருமானின் திருநாமங்களை சொல்லி உய்வினை அடைவீர் என்றும் நான்காவது பாடலில் அவனது திருப்பாதங்களைத் தொழுது முக்தி நிலை அடைவீர் என்றும் ஐந்தாவது பாடலில் பெருமானுடன் உறவு கொண்டு மனநிறைவுடன் வாழ்வீர் என்றும், ஆறாவது பாடலில் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் வேண்டும் என்று விரும்பினால் அவனை தூயபொன் போன்று சிறந்தவனாக கருதுவீர் என்றும், ஏழாவது பாடலில் நமது தந்தையாக பாவித்தால் பந்த பாசங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும் என்றும், எட்டாவது பாடலில் அவனை நெருங்கிய நண்பனாக கருதுவீர் என்றும், ஒன்பதாவது பாடலில் அவனை புகழ்வீர் என்றும், பத்தாவது பாடலில் அவனுக்கு தொண்டு செய்வீர்கள் என்றும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், தேவார பதிகங்களை இறைவனை நெருங்கி அவனுடன் இணைவீர்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Manniyoor Irai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மன்னியூர் இறை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: