Go Back

22/03/21

மறையுடையாய்


மறையுடையாய் - பின்னணி


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி நகரம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த நகரத்திலிருக்கும் மூன்று தலங்களும், மூக்கீச்சரம் சிராப்பள்ளி ஆனைக்கா ஆகிய மூன்று தலங்களும் சென்று பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்து வணங்கிய பின்னர் பாற்றுறை என்ற அழைக்கப்பட்ட தலம், மற்றும் நெடுங்களம் என்று அழைக்கப்பட்ட தலத்திற்கும் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அந்த பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பதிகத்தினை இடர் களையும் பதிகம் என்று அழைப்பார்கள். இந்த பதிகத்தினை தினமும் பக்தியுடன் ஓதினால், எடுத்த காரியங்கள் எந்தவிதமான தடைகளும் இன்றி நடக்கும் என்றும், வீண் பழி அவமானங்கள் ஏற்பட்டிருப்பின் விலகும் என்றும் இறையருள் எளிதில் கிட்டும் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். பாடல்கள் தோறும் அடியார் இடர் களையாய் என்று குறிப்பிடப்படுவதால் இவ்வாறு கருதுவது பொருத்தமாகத் தோன்றுகின்றது. ஆனால் சேக்கிழார் இந்த பதிகம் ஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்டதன் காரணத்தை வேறுவிதமாக கூறுகின்றார். பெருமானின் அரிய குணங்களை கருணைத் தன்மையை உணர்ந்த அடியார்கள் அனைவரும் நால்வர் பெருமானர்கள் அருளிய பதிகங்களை பாடி பெருமானை வழிபட வேண்டும் என்று விரும்புகின்றோம். எனினும், நம்மையும் மீறின சில காரணங்களால் சில சமயங்களில் அவ்வாறு வழிபட இயலாமல் போகின்றது அல்லவா. அத்தகைய இடர்கள் வாராமல் அடியார்கள் தொடர்ந்து இறைவனைப் போற்றி வழிபடவேண்டும் என்பதே ஞானசம்பந்தரின் அவாவாக உள்ள நிலை இந்த பதிகத்தின் பாடல்களில் வெளிப்படுகின்றது என்று சேக்கிழார் கூறுகின்றார். அடுதல்=கொல்லுதல்; அடும்பணி=கொல்லும் தொழில், கொல்லும் தொழிலைச் செய்யும் பாம்புகள்; நியமம்=ஒரு தலத்தின் பெயர்; நியமம் செல்வதற்கு முன்னர் பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அத்தகைய தலங்கள் யாவை என்று தெரியவில்லை. மேலும் நியமம் மற்றும் அந்த தலங்கள் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் ஞானசம்பந்தர் காட்டுப்பள்ளி தலம் சென்றதாகவும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலா

வகை நேர் விலக்கும்

இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்னும் இன்னிசை

மாலை கொண்டு ஏத்தி ஏகி

அடும்பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து

நியமம் போற்றிக்

கடும் கை வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளிப் பதி

கை தொழுவார்

புறவார் பனங்காட்டூர் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.53) பாடல்களில், பெருமான் அடியார்கள் பால் கருணை கொண்டு அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். பெருமான் பால் அன்பு வைத்து அவனுடன் கலந்த அடியார்களுக்கு, பெருமானின் திருவடிகளில் சரண் அடைந்த அடியார்களுக்கு, பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றும் அடியார்களுக்கு, மலர்களைப் பெருமானின் திருவடிகளில் தூவி வழிபடும் அடியார்களுக்கு, பெருமானின் தன்மைகளை சொல்லிப் போற்றும் அடியார்களுக்கு, அனுதினமும் பெருமானை கைகூப்பி வணங்கி சிறப்பாக வழிபடும் அடியார்களுக்கு, பெருமானுக்கு உண்மையான தொண்டு புரியும் அடியார்களுக்கு, பாடல் கேட்டு அருள் புரியும் பெருமானே என்று அழைத்து வணங்கும் அடியார்களுக்கு, பெருமானை வணங்குவதே தவம் என்று கருதி வழிபடும் அடியார்களுக்கு, பெருமானைக் கண்டால் மகிழ்ச்சி அடையும் அடியார்களுக்கு, பெருமான் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். செரு= சண்டை; கேண்மை=உரிமை, நெருக்கும்; உனது தேவி என்ற உரிமை உடைய பார்வதி தேவி; கமழ் சடை=இயற்கை நறுமணம் கமழும் சடை; பங்கயம்=தாமரை; அங்கை=அழகிய கை;

செங்கயல்லொடு சேல் செருச் செயச் சீறி யாழ் முரல் தேன்

இனத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்

கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி

மான்மறி

அங்கை ஆடலனே அடியார்க்கு அருளாயே

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் உள்ள திருவெறும்பூருக்கு அருகில் உள்ள தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்த பேருந்து வசதிகள் உள்ளன. தற்போது மக்கள் வழக்கில் நட்டங்குளம் என்று அழைக்கப் படுகின்றது. திருச்சி தஞ்சை சாலையில் உள்ள துவாக்குடி என்ற இடம் அடைந்து, அங்கே பிரியும் சாலையில் நான்கு கி.மீ. தூரம் சென்றால் இந்த தலம் அடையலாம். இறைவனின் திருநாமம் நித்ய சுந்தரேஸ்வரர், நெடுங்கள நாதர், இடர் களையும் நாதர், சதுர பீட ஆவுடையாரில் அமர்ந்துள்ள சிறிய அளவிலான இலிங்கம். இறைவியின் திருநாமம் மங்கள நாயகி, ஒப்பில்லா நாயகி. வங்கியச் சோழன் மற்றும் அகத்தியர் வழிபட்ட தலம். வங்கியச் சோழனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அழகிய உருவம் உடையவராக இறைவன் காட்சி அளித்தமையால் நித்திய சுந்தரேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகின்றனர். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. இராஜ கோபுரத்தின் முன்னும் பின்னும், திருஞான சம்பந்தர் அருளிய பதிகத்தில் இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. ஐந்து நிலை கோபுரத்திற்கு வெளியில் சுப்பிரமணியர் மற்றும் விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன. சுப்பிரமணியர் சன்னதிக்கு அருகே கருப்பண்ண சுவாமி சன்னதியும் உள்ளது. அம்பிகை சன்னதி வெளி பிராகரத்தில் உள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், மேல் இரண்டு கைகளில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரண்டு கைகளில் அபய வரத முத்திரைகள் காட்டிய வண்ணம் காட்சி தரும் அம்பிகை கொள்ளை அழகு. வாராஹிக்கு செய்யப்படும் சிறப்பு வழிபாடுகள் திருமணத் தடைகளை நீக்கும் என்று நம்பப் படுகின்றது. வடக்கு சுற்றில் அகத்தியர் வழிபட்ட இலிங்கம் உள்ளது. மேற்குச் சுற்றினில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. வடமேற்கில் ஜேஷ்டா தேவி சன்னதியையும் காணலாம். வித்தியாசமான நவகிரக சன்னதி. சூரியன் தனது இரண்டு மனைவியருடன் காட்சி தர, மற்ற கிரகங்கள் அவரை நோக்கி அமைந்துள்ளன. கோஷ்டத்தில் உள்ள தென்முகக் கடவுள் தனது மேல் கரங்களில் மானும் மழுவும் ஏந்தியவராக கீழே உள்ள கரங்களில் சின்முத்திரை மற்றும் திருநீற்றுப் பெட்டகம் ஏந்தி காணப்படுகின்றார். இரண்டு கால்களையும் மடித்து யோக நிலையில் காட்சி தரும் அழகிய உருவம். மேற்கு கோஷ்டத்தில் மாதொரு பாகனின் உருவத்தை காணலாம். மூலத்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் இருப்பதையும், மூலவர் கருவறையின் வாயிலின் நேரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதையும் காணலாம். திருநாரையூர் திருக்கோயிலிலும் இந்த அமைப்பு காணப்படுகின்றது. மூலவருடன் அம்பிகை அருவமாக இருப்பதாக நம்பிக்கை. அதனால் தான் சுவாமிக்கு ஒரு விமானமும் தேவிக்கு ஒரு விமானமும் ஆக இரண்டு விமானங்கள். திருக்கோயிலில் உள்ள வெண்கல குதிரை விந்தையான அமைப்பு கொண்டது. ஆடி மாதத்தில் ஏழாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரையிலும், உதய சூரியனின் ஒளி இலிங்கத்தின் மீது படிகின்றது.

அம்பிகை இந்த தலத்தில் சிவபிரானை மணம் செய்து கொள்ள வேண்டி தவம் இருந்தபோது, சிவபிரான் அம்பிகையை சோதிப்பதற்காக ஒரு வயதான மனிதரின் வேடம் தரித்து தவம் செய்து கொண்டிருந்த அம்பிகையின் கையை பிடித்தார். திடுக்கிட்ட அம்பிகை, முதியவரிடம் இருந்து விலகி அருகில் இருந்த நந்தவனம் அடைந்து ஒளிந்து கொள்ள, சிவபிரான் அங்கும் தொடர்ந்து சென்று தனது உண்மைக் கோலத்தை காட்டி அருளினார். ஆனந்தமும் வியப்பும் ஒருங்கே அடைந்த அம்பிகை நாணம் உற்று ஐயனின் கைத்தலம் பற்றி இருவரும் கயிலாயம் சென்றனர் என்பது தல வரலாறு. அம்பிகை சென்று ஒளிந்துகொண்ட சோலை, ஒளி மதி சோலை என்று வழங்கப்படுகின்றது. இந்த சோலை இந்த தலத்திற்கு அருகில் உள்ளது. சிவபிரான் அம்பிகையை தொடர்ந்து சோலை சென்ற காரணத்தால், நிழலார் சோலை வனம் உடையார் என்ற பெயர் ஏற்பட்டது. அப்பர் பிரான் ஒரு பதிகத்தில் நிழலார் சோலை நெடுங்களம் என்று குறிப்பிடுகின்றார்.

பாடல் 1:

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

ஓராய்=மன்னித்து அருள் புரிவாய்; திருஞானசம்பந்தர் உலகிலுள்ள மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கின்றார். பெருமானின் பெருமைகளை குறிப்பிட்டு அவனை வாழ்த்தி வணங்கும் அடியார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர், பெருமானை வாழ்த்தி வணங்காத மனிதர்கள். பின்னவர், உலகெலாம் படைத்து நம்மையும் தோற்றுவித்து அருள் புரியும் பெருமானை வணங்காத குற்றம் செய்ததனால் குறை உடையவர்கள். அத்தைகைய குறை ஏதும் இல்லாமல் நிறைந்த குணம் உடையவர்களாக இருப்பவர்கள் முன்னவர்கள். இத்தகையவர்களை நிறை உடையவர்கள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இரு வகையினருக்கும் அருள் புரியுமாறு பெருமானை வேண்டுகின்றார். அவரவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு எவ்வாறு அருள் புரிவது என்பதையும் அவரே குறிப்பிடுகின்றார். குறை உடையவர்களின் குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என்றும், நிறை உடையவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து இறைவனை வழிபடும் பொருட்டு எந்த இடர்ப்பாடும் நேராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். இவ்வாறு அனைவர்க்கும் அருள் புரிய வேண்டும் என்று ஞானசம்பந்தர் வேண்டுவது அவரது பரந்த உள்ளத்தை நமக்கு காட்டுகின்றது.

இந்த உலகில் பெருமானை வழிபடாத பலரும் நலமுடன், பல வகையான செல்வங்கள் பெற்று இருப்பதை நாம் காண்கின்றோம். அத்தகையவர்கள் சென்ற பிறவிகளில் செய்த நற்செயல்களின் விளைவுகள் ஒரு புறம் இருந்தாலும், ஞானசம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் அவர்களின் குற்றங்களை மன்னிப்பதே காரணம் என்பது இந்த பாடலின் மூலம் உணர்த்தப் படுகின்றது போலும். மேலும் நிறை உடையவர்களின் உயர்ந்த கொள்கை என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழாமல் இருப்பதே அவர்களின் உயர்ந்த கொள்கையாகும்.

சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழாமல் இருப்பது மிகவும் சிறந்த கொள்கை என்று கூறும் ஞானசம்பந்தர் எவ்வாறு அந்த கொள்கையை பின்பற்றியவராக இருந்தார் என்பதை அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. மாந்துறை பதிகத்தின் பாடல் மூலம் (2.110.3) ஞானசம்பந்தர் பெருமானது திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். மாசிலாமணி, கேடிலா மணி என்பன இந்த தலத்து இறைவனின் திருநாமங்கள்; வாடினார் தலை=பிடுங்கி எறியப்பட்டதால் வாடிய பிரமனின் தலை; கோடு=உச்சி; பூகம்=கமுகு பாக்கு மரங்கள்; பூகமும் கூந்தல்=கமுகு மரங்களின் ஓலைக் கொத்து; கெழு முதல்=நிறைந்த முதல்வன்; பெருமான் ஒருவரே நிறைந்த முழுமுதல் கடவுள் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். நம்பன்=விரும்பப்படுபவன், அடியார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதால் பெருமானை, அடியார்கள் மிகவும் பெருமானை விரும்புகின்றனர் என்று உணர்த்தும் வண்ணம், சிவபெருமானை நம்பன் என்று குறிப்பிடுகின்றார்.

கோடு தேன் சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி

ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்

வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்

கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய மற்றொரு பதிகத்தின் முதல் பாடலை (3.44.1) நினைவூட்டுகின்றது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக்கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஞானியர்கள் போற்றிப் பேணாத தெய்வங்களை தானும் போற்றமாட்டேன் என்று பதிகத்தின் கடை அடியில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

மாந்துறை பதிகத்தின் மற்றொரு பாடலில் (2.110.4) வானவர்களின் தலைவனாகிய பெருமானை வணங்குதலைத் தவிர்த்து தான் வேறொன்றும் அறியேன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். கொழுந்து=சிறப்பான ஒன்று, தலையானது; ஞாழல்=புலிக் கொன்றை மரம்; கண்டன்=கழுத்தினை உடையவன்; ஏனையோரின் கழுத்திலிருந்து மிகவும் வேறுபட்டு புகழினை உடையது பெருமானின் கழுத்து. ஸ்ரீகண்டன் என்பது அவரது திருநாமங்களில் ஒன்று. அனைவரையும் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினைத் தானே உட்கொண்ட பெருமான், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதி, வயிற்றினுள்ளே அந்த விடத்தைச் செலுத்தாமல், தனது கழுத்தினில் எப்போதும் தேக்கிய வண்ணம் இருக்கின்றார். இவ்வாறு அனைவர்க்கும் நன்மை புரிந்த, கழுத்து பெருமான் ஒருவருக்கே உரியது என்பதால், கண்டன் என்று மிகவும் பெருமையாக அவரை ஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார்

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்

அலை கொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த

மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

நின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.18.6) பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறொன்றையும் அறியாது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சலவம்–கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்= மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்=சோலை; மிடையும்=நெருங்கி இருத்தல்.

மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்

சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த

வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி

ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே

இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டும். பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசிக்கொள்பவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் தன்னை மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். படிறன் என்றால் வஞ்சகன் என்று பொருள். தனது அடியார்களுக்கு காட்சி அளிக்கும் இறைவன், அடியார் அல்லாதாருக்கு காட்சி கொடுக்காமல் மறைந்து கொள்வதை, படிறு என்று சுந்தரர் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். அவர்களுடன் பழகினால் அவர்களது கெட்டகுணம் தன்னையும் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தின் காரணமாக, அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை இயற்கையான நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான்

மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை

உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என

நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று

அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமானே ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன்

கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை

சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ

அருளிலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்

புரியாயே

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழேன் என்று சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகள் நமது நினைவுக்கு வருகின்றன. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று சுந்தரர் கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில்

புதுமலர் கிழிய

பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர்

பெருமான்

கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான

சம்பந்தன தமிழ் கொண்டு

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை

இலரே

பெருமானே நீ மனிதர்கள் செய்யும் குற்றத்தினை பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று ஞானசம்பந்தர் வேண்டுவதை நாம் கண்டோம். எல்லாம் வல்ல பெருமான், நமது குற்றங்களை மன்னித்து அருள் புரிவாரா என்ற சந்தேகம் நமக்கு எழாத வண்ணம், சந்திரனின் குற்றத்தை பொருட்படுத்தாமல், அவனை வாழவைத்த கருணைச் செயல் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன் வளரும் பிறையாக மாறியது, வளரும் பிறை என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. சிறந்த வேதங்களை உடையவன் பெருமான் என்று குறிப்பிடும் ஞானசம்பந்தர், தோலுடையாய் என்று பெருமானின் பற்றற்ற நிலையையும் குறிப்பிடுகின்றார். உயிருள்ள உடலுடன் ஓடியிருக்கும் வரையில் தான் தோலுக்கு அழகு. உடலிலிருந்து பிரிந்த தோல் அருவருக்கத்தக்கது. ஆனால் பற்றற்றவர் என்பதால் வேதங்களையும் தோலாடையையும் வித்தியாசம் பார்க்காமல் ஏற்றுக் கொள்பவர் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

இரண்டு வகையான மனிதர்களை குறிப்பிடாமல் அடியார்களையே இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. அடியார்களாகிய நாங்கள் உனது நாமங்களை, சொல்வதைத் தவிர்த்து வேறேதும் செய்யவல்லோம் அல்லோம்; எனினும் எங்களது குறைகளை பொறுத்தருள்வாய் ஈசனே என்று வேண்டுவதாக விளக்கம் சொல்லப்படுகின்றது. இந்த விளக்கம் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் என்ற தொடருக்கு மாறுபடுவதால் இந்த விளக்கம் அவ்வளவு பொருத்தமானதாக தோன்றவில்லை.

பொழிப்புரை:

வேதங்களை உடையவனே, புலித் தோலை ஆடையாக உடுத்தவனே, அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரனைத் தனது நீண்ட சடையின் மேல் அணிந்து கொண்டு வளரும் சந்திரனாக மாற்றியவனே, அழகிய தலைக் கோலம் உடையவனே, என்று பலவிதமாக உனது புகழினைப் பேசாத மனிதர்களின் குற்றங்களை, பெருமானே நீ பொருட்படுத்தாது மன்னித்து அருள் புரிவாயாக. நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, உன்னையன்றி வேறு எந்த தெய்வத்தையும் நினைக்காத உயர்ந்த நிறைவான கொள்கை உடைய அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம் அருள் புரிவாயாக.

பாடல் 2:

கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சு தன்னைத்

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை

மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்

நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

கனைத்து=மிகுந்த ஆரவாரத்துடன்; வெண்திரை என்று இங்கே ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகாலவிடம் என்பதை உணர்த்தும் பொருட்டு, வெண் திரை என்று குறிப்பிடுகின்றார். ஆலகால விடம் வெகு வேகமாக அனைத்து இடங்களிலும் பரவ, தேவர்களும் அசுரர்களும் அதன் நெடியையும் தாங்க முடியாமல் தவித்த போது, பெருமான் தனது அணுக்கத் தொண்டராகிய சுந்தரரை ஆலகால விடத்தினைத் திரட்டிக்கொண்டு வருமாறு பெருமான் பணிக்கின்றார். பெருமானின் அருளே துணையாக நிற்க, சுந்தரர் அந்த விடத்தினைத் தனது கையில், நெல்லிக்கனி போன்று திரட்டிக் கொண்டு வந்தார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தன்மையே இங்கு தினைத்தனையா என்று சொல்லப் பட்டுள்ளது. தினை=சிறிய அளவு; பேணி=பாராட்டி; திருந்திய=செம்மையான உயர்ந்த குணங்கள் உடைய; உலகெங்கும் பரந்து பெருகிய நஞ்சு, பெருமானின் திருமுன்னர், தனது வலிமை இழந்தது என்பதை குறிப்பிடும் வண்ணம், தினையளவாக சிறுத்து வலிமை இழந்தது என்ற விளக்கம் கூறுவதும் பொருத்தமே. பகல் முழுவதும் ஈசனின் தன்மையையே நினைத்து வாழ்ந்த அடியார்களின் உயிர், அந்தராத்மாவாகா இரவிலும் இறைவனை நினைத்து நிற்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

மிகுந்த ஆரவாரத்துடன் வெண்ணிறம் உடைய அலைகளால் சூழப்பட்ட பாற்கடலிலிருந்து எழுந்து உலகங்கள் எங்கும் பரவி நின்ற, ஆலகால நஞ்சினை, தினைத் தானியம் போன்று சிறிய அளவினதாக திரட்டி, உட்கொண்டு தனது நெஞ்சினில் தேக்கிய சிவபெருமான், சிறந்த செம்மையான குணங்களை உடையவன்; பெருமானே, உனது தன்மைகளை மனதினில் நிலைநிறுத்தி, பாடியும் ஆடியும் போற்றிப் புகழ்ந்தும், இரவும் பகலும் எப்போதும் உன்னையே நினைத்த வண்ணம், எழுகின்ற அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 3:

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத

என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த

பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

அடியார்களின் இடர்களைக் களைந்து அருள் புரிய வேண்டும் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தனது அடியார்களாக விளங்கிய தேவர்களின் இடரைக் களையும் பொருட்டு, ஆலகால நஞ்சினை உட்கொண்ட செய்தியை இரண்டாவது பாடலிலும், மூன்றாவது பாடலில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிருக்கு வந்த ஆபத்தினை களைந்த செய்கையையும் குறிப்பிடுகின்றார். வவ்வுதல்=திருடுதல்; நிமலன்=இயற்கையாகவே மலங்கள் நீங்கப் பெற்றவன், குற்றமற்றவன்; அடல்=வலிமை மிகுந்த; பெருமான் மிருகண்டு முனிவருக்கு, பிள்ளைப்பேறு தன்னை நோக்கி தவமிருந்த முனிவருக்கு வரம் அளித்த போது, அவருக்கு பிறக்கவிருக்கும் மகனின் ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் தான் என்று தெளிவாக கூறுகின்றார். எனவே இந்த பதினாறு ஆண்டுகள் ஆயுட்காலம் என்பது இறைவனால் வரையறுக்கப் பட்டது தான். எனவே தான் இயமனும் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை பிரிப்பதற்காக, பிற உயிர்களைப் பிரிப்பது போன்று தனது கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தான் வைத்திருந்த பாசக் கயிற்றினை சிறுவனின் கழுத்தின் மீது வீசுகின்றான். சிறுவன் அப்போது இறைவனை வழிபாடு செய்வதில் ஈடுபட்டிருந்ததை பொருட்படுத்தாமல், சிறுவனது உயிரினை பிரிக்க நினைத்ததே அவன் செய்த தவறு. இயமனும் பெருமானை வழிபட்டு, தனது கடமையை நிறைவேற்ற பெருமான் உதவி புரிய வேண்டும் என்று வேண்டியிருந்தால், இயமனுக்கு தண்டனை கிடைத்திருக்காது. பெருமானுக்கு செய்யப்படும் வழிபாட்டினுக்கு இடர் செய்தமையால் தான் அவன் தண்டனை பெற்றான், சண்டீசரின் தந்தை விசாரசருமன் எச்சதத்தரின் மீது வீசிய கோலும் மழுவாளாக மாறியது, நமது நினைவுக்கு வருகின்றது. எச்சதத்தர் சண்டீசர் செய்து வந்த வழிபாட்டினை தடுக்கும் பொருட்டு, பெருமானை நீராட்டுவதற்கு வைத்திருந்த பாற்குடத்தை இடறி பாலை கீழே கொட்டியதற்கு இறைவன் அளித்த தண்டனையே, கோல் மழுவாட்படையாக மாறி அவரது காலை துண்டித்தது. எனவே பெருமான் செய்த செயல் குற்றமற்றது என்பதை உணர்த்தும் பொருட்டு, நிமலனே என்று பெருமானை ஞானசம்பந்தர் அழைக்கின்றார். ,

பொழிப்புரை:

எப்போதும் உனது திருவடிகளை வணங்கி வந்த சிறுவன் மார்க்கண்டேயன், நிமலனாகிய நின்னை தனது மனதினில் நிலைநிறுத்தி வழிபட்டுக் கொண்டிருக்கையில், அவனது உயிரினை திருட்டுத் தனமாக கவர்வதற்கு முயற்சி செய்த வலிமை வாய்ந்த கூற்றுவனை நோக்கி, இந்த சிறுவன் எனது அடியான், இவனது உயிரினைத் திருடுவதற்கு முயற்சி செய்யாதே என்று முழங்கிய வண்ணம், இயமனை காலால் உதைத்த பெருமானே, பொன் போன்று சிறப்பு வாய்ந்த உனது திருவடிகளை புகழ்ந்து, நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து கொண்டு வந்து வழிபடும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 4:

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழற் கீழ்

நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

அவிர்சடை=விரிந்த சடை; விரிந்த சடையினில் எவ்வாறு கங்கை நதியை அடக்கி வைக்க முடியும் என்ற ஐயம் நமக்கு எழலாம். உலகெங்கும் பரந்து நிற்கும் பெரிய உருவத்தினை உடைய பெருமானின் சடையினில் உள்ள ஒரு முடியில், புல்லின் நுனியில் காணப்படும் பனித்துளி போன்று கங்கை நங்கை பொருந்தியது என்று அப்பர் பிரான் திருவீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.10) குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தன்னை நோக்கி தவமிருந்த அடியான் பகீரதனின் இடரைக் களைந்து, மிகுந்த வேகத்துடன் கீழே பாய்வதற்கு முயற்சி செய்த கங்கை நதியின் வேகத்தை தடுத்து, அருள் புரிந்த பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே

வரை எடுத்த அரக்கன் தோள்கள்

இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத்

தேய்த்தானை இரவி தன் பல்

பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்திழியும் புனல்

கங்கை பனி போலாங்கு

செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே

சேர்கின்றாரே

தலை புரிந்த பலி மகிழ்வாய் என்ற தொடர் மூலம், பிரமகபாலத்தில் பிச்சை ஏற்பதை பெருமான் மிகவும் மகிழ்கின்றார் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர், வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றோம் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் பெருமான் பலியேற்கச் செல்வதை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.10) திருஞானசம்பந்தர் பெருமானை வெண்தலையில் பலி ஏற்றுக் கொள்வதை விரும்புவன் என்று கூறுகின்றார். துவர்க்கூறை=துவர்ச் சாயம் ஏற்றப்பட்ட உடை; புறம்=பொருந்தாத சொற்கள்; மெய்யில்= மெய்+இல், உண்மையற்ற; பெருமான் பலி ஏற்பதன் பின்னணியில் அமைந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்து கொள்ளாமல் உண்மைக்கு பொருந்தாத சொற்களை மற்றவர் கூறுவதை பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் நின்று, பக்குவப்பட்ட அடியார்கள் தாங்கள் இடும் மலங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கும் பெருமானின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

குண்டமணர் துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கையினார்

புறம் கூற

வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி

வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன்

வாழ்கொளிபுத்தூர்

தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி சேர்வோம்

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை ஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமானே, பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு;

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு

ஆர்க்கச்

சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும்

பிச்சைக்கு

உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து

அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை

அடையாவே

தான் ஏந்தியுள்ள ஓட்டினில் அளிக்கப்படும் பிச்சையை மிகவும் இனியது என்று மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று வீழிமிழலை பதிகத்து பாடலில் (3.85.10) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிச்சையேற்கும் நோக்கத்தினை அறியாத சமணர்களும் புத்தர்களும், அவரது பெருமையை அறியாதவர்களாக இருப்பதால் பெருமானை தூற்றுகின்றனர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இச்சையர்=விருப்பமுடையவர்; மொச்சைய= நீராடுவதை தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடையவர்; விச்சை=வித்தை செய்பவர்;

இச்சையர் இனிது என இடுபலி படுதலை மகிழ்வதோர்

பிச்சையர் பெருமையை இறை பொழுது அறிவென உணர்விலர்

மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்

விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் வீழி மிழலையே

திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .

பட்டி ஏறுகந்தேறி பல இலம்

இட்டமாக இரந்து உண்டு உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ

கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே

தான் ஏந்தியுள்ள மண்டையோட்டினில் மற்றவர்கள் அளித்த பிச்சையினை ஏற்றுக் கொள்வதை மிகவும் விரும்பும் பெருமான் என்று அப்பர் பிரான், திருவதிகை வீரட்டம் மீது அருளிய பதிகம் ஒன்றில் (6.5.2) குறிப்பிடுகின்றார். மிடறு=கழுத்து: உள்குதல்=மனதினில் நினைந்து உருகுதல்; ஓட்டகம்=ஓடு+அகம்; ஓடு=மண்டையோடு அகம்=உள்ளே; ஊண்=உணவு

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல்லூழி ஆய படைத்தாய்

போற்றி

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து

உறைவாய் போற்றி

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார்மேகம் அன்ன

மிடற்றாய் போற்றி

ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி அலைகெடில

வீரட்டத்து ஆள்வாய் போற்றி

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (6.28.4) ஒன்றிலும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஊண்=உணவு; நடை பலவும்=நடைபயில வேண்டிய நெறிகள்; காமரம்=சீகாமரம்; நாட்டகத்தே நடை பலவும் பயின்றார் என்பதற்கு, ஆறு வேறுவேறு சமயங்களை, அவரவர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப படைத்தவர் சிவபெருமான் என்று கூறுவதாக விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. ஆறு ஒன்றிய சமயங்கள்=சிவபெருமான் ஒருவரையே பரம்பொருள் என்று வழிபடுவதில் ஒத்திருந்தாலும் தங்களுக்கு சிறிய வேறுபாடுகள் பல கொண்ட ஆறு அகச் சமயங்கள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம் மற்றும் சைவம்.

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் ஓருருவாய்த் தோன்றி

உயர்ந்தார் போலும்

நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்

கடற்கோர் நாதர் போலும்

காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடித்

திரிவார் போலும்

ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணியாரூர்

திருமூலட்டனானாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.4) வெட்கமோ தயக்கமோ கொள்ளாமல் வாய் திறந்த நிலையில் சிரிப்பது போன்று தோன்றும் மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு விருப்பத்துடன் பிச்சையேற்கச் செல்பவன் என்று, பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்திற்காக பிச்சை எடுப்பவன், எதற்காக வெட்கம் அடையவேண்டும், தயக்கம் கொள்ளவேண்டும், மாறாக விருப்பம் தானே கொள்ள வேண்டும். அதனால் தான், நாணாது நகுதலை ஊண் நயந்தான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நற்றவன்=மென்மையான தவத்தினை செய்பவன்; முந்நீர்=கடல் :

நற்றவனைப் புற்றரவ நாணினானை நாணாது நகுதலை ஊண்

நயந்தான் தன்னை

முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து

உண்டான் தன்னைப்

பற்றவனைப் பற்றார் தம் பதிகள் செற்ற படையானை அடைவார்

தம் பாவம் போக்க

கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக்

கண்டேன் நானே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (6.63.8) அப்பர் பிரான், பிச்சையே இச்சிப்பான் என்று குறிப்பிட்டு, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் பிச்சை எடுப்பதாக குறிப்பிடுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது தானே முதியோர்களின் மொழி. உலகத்தவர்கள் ஏற்கும் பிச்சையிலிருந்து மாறுபட்டது, இறைவன் ஏற்கும் பிச்சை என்பதை நாம் உணரவேண்டும். உலகத்தவர்கள் தங்களது தேவைக்கு பிச்சை எடுக்கின்றனர். ஆனால் இறைவனோ, உலகத்தவர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமான் ஏந்தியுள்ள ஓட்டினில் பிச்சையாக அளித்து வாழ்வினில் உய்வினை பெரும் வண்ணம் பிச்சை ஏற்றுத் திரிகின்றான். உலகத்தவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு, தனது சேவடிகளை வந்தடைந்து முக்தி பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் பிச்சை ஏற்கின்றான். தாங்கள் உய்வினை அடையவேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் உய்வினை அடையவேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகம். எனவே தான் இச்சையுடன் பிச்சை ஏற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

மகிழ்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னை மறவாது கழல்

நினைந்து வாழ்த்தி ஏத்திப்

புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானைப் பூதகணப்

படையானைப் புறங்காட்டு ஆடல்

உகந்தானைப் பிச்சையே இச்சிப்பானை ஒண் பவளத் திரளை

என் உள்ளத்துள்ளே

திகழ்ந்தானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச்

சென்று ஆடினேனே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.2) சுந்தரர், பிச்சை ஏற்கும் தொழிலை காதலித்தவன் என்று குறிப்பிடுகின்றார்.

படைக்கண் சூலம் பயில வல்லானைப் பாவிப்பார் மனம் பாவிக்

கொண்டானைக்

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானைக் காமன் ஆகம் தனை

கட்டழித்தானைச்

சடைக்கண் கங்கையை தாழவைத்தானைத் தண்ணீர் மண்ணி

கரையானைத் தக்கானை

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து

என் நினைக்கேனே

பொழிப்புரை:

இமயமலையை ஆட்சி புரிந்தவனாகிய இமவானின் மகளாகிய பார்வதி தேவியை, மிகுந்த மகிழ்ச்சியுடன் உனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்ட பெருமானே, அலைகள் நிறைந்த கங்கை நதியைத் தனது விரிந்த சடையில் ஏற்றுக்கொண்டு மறைத்தவனே, திருவாரூர் தலத்தினில் உறையும் பெருமானே, தலையோட்டினை விருப்பத்துடன் தனது கையில் ஏந்திக்கொண்டு அதனில் இடப்படும் பலியினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் பெருமானே, அனைவர்க்கும் தலைவனே, உனது திருவடி நிழலில் நிலையாக இருப்பதையே விரும்பும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 5:

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிசேர்

தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்

தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழற்கீழ்

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

பாங்கு=குணங்கள்; படிமம்=சிலை, தவவேடம் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. உடலை அசைக்காமல் மூச்சினை அடக்கியும் தவம் இருப்போர்கள் சிலை போன்று அசையாமல் இருப்பதால், படிமம் என்ற சொல்லுக்கு தவவேடம் என்று விளக்கம் அளித்தார் போலும்; தூங்கி=மனம் ஒன்றி; தூங்கி இருக்கும் சமயத்தில் இருப்பது போன்று, புலன்கள் எந்த செயலிலும் ஈடுபடாமல் மனம் ஒன்றி இறைவனின் வழிபாட்டினில் ஈடுபடுதல்; தாங்கி நில்லா=தம்மால் பொறுக்க முடியாத வண்ணம், கரை கடந்து பொங்கும் அன்பு; சென்ற பாடலில் பலியேற்கும் செயலை மிகுந்த விருப்பத்துடன் செய்கின்றான் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமான் அவ்வாறு பலியேற்பதின் பெருமையை உணர்ந்தவர்களாக அடியார்கள் இருக்கின்றனர் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

நல்ல குணங்களை உடையவர்களும், தவவேடம் தாங்கியவர்களும், உலகத்தில் வாழும் பலவகை மக்களும், பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமானின் செயலின் பெருமையை உணர்ந்தவர்களாக, மனம் ஒன்றி ஆடியும் பாடியும், அனைவரும் தொழுவதற்கு உரிய தகுதி படைத்த உனது திருப்பாதங்களை வணங்கித் தொழுகின்றனர். உன் பால் கரை கடந்த அன்பு கொண்டுள்ள அவர்கள், உனது திருவடி நீழலின் கீழே இருப்பதையே என்றும் விரும்புகின்றனர். இவ்வாறு உனது திருவடி நீழலை விட்டு பிரியாது நிற்கும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 6:

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேல் கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

விருத்தன்=அனைவரிலும் மூத்தவன், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய பெருமான் தோன்றிய காலம் யாது என்தை இதுவரை எவரும் அறியவில்லை; பாலன்=அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும், தான் அழியாமல் இருப்பதால் பாலன் என்றார். வயது முதிர்ந்தவர் இறந்த பின்னரும் சிறியோர் உயிருடன் இருப்பது பொதுவான் உலக நியதி. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், பெருமானை பாலன் என்று குறிப்பிட்டார் போலும்,. பொதுவாக பாலன் விருத்தன் என்று வரிசைப் படுத்தி கூறுவார்கள். உலகினில் தோன்றும் உயிர்கள், இறைவன் என்று ஒருவன் இருப்பதையும் அத்தகைய ஒருவன் தாங்கள் தோன்றுவதற்கு முன்னமே இருந்தான் என்பதையும் உணர்வதால், அவனை விருத்தனாக முதலில் உணர்கின்றனர். பல உயிர்கள் இறந்த பின்னரும் இறைவன் இருப்பதை உணரும் உயிர்கள், தாம் இறந்த பின்னரும் இறைவன் அழியாமல் இருக்கும் தன்மையை ஊகித்து உணர்கின்றன. எனவே, தங்களுக்கும் பின்னரும் இறைவன் இருக்கும் தன்மையை பாலனின் தன்மையாக காண்கின்றனர். எனவே தான் விருத்தன் என்பது முதலில் கூறப்பட்டு, பாலன் என்பது பின்னர் கூறப்படுகின்றது. அனைத்து உயிர்களும் உலகங்களும் இயங்குவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவன் என்று உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று தமிழ்ப் படுத்தப் பட்டுள்ளது. கமழ் சடை என்று, இயற்கையாகவே நறுமணம் கமழும் பெருமானின் சடையின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

விருத்தனாகி பாலனாகி என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது. மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற நாள் வரையில், தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள்.

அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியினால் வாடும் முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமாரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், வேற்று ஆடவன் ஒருவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்தவண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, குழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக்கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்; வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு மறைந்தார். இது தான் திருவிளையாடலில் கூறப்படும் வரலாறு.

இணையான திருவடிகள் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொன்னடி என்றும் மலரடி என்றும் பெருமானின் திருவடிகள் போற்றப்படுகின்றன. பொன் போன்று சிறந்ததும் ஒளிவீசுவதும் ஆகிய திருவடிகள் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இத்தகைய ஒப்பு முழுமையான ஒப்பு அல்ல. பொன்னுடன் ஒப்பிடப்படும்போது, திருவடிகளின் மென்மை வெளிப்படுவதில்லை; மலருடன் ஒப்பிடப்படும்போது திருவடிகளின் ஒளிவீசும் தன்மை வெளிப் படுவதில்லை. எனவே ஞானசம்பந்தர் ஒரு முடிவுக்கு வந்தார் போலும், பெருமானின் திருவடிக்கு எந்த பொருளும் இணையாகாது; எனவே பெருமானின் திருவடிக்கு அவரது திருவடியே இணையானது என்பது தான் அந்த முடிவு. பெருமானின் இடது திருவடிக்கு அவரது வலது திருவடி இணையாகவும், அவரது வலது திருவடிக்கு இடது திருவடிக்கும் இணையாக உள்ள தன்மை இங்கே அடியிணை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக விருத்தனாக இருப்பவனே, அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் பாலனாக இருப்பவனே, நான்கு வேதங்களையும் நன்றாக கற்றுணர்ந்து அதன் பொருளாக இருப்பவனே, கங்கை நங்கையை தனது நறுமணம் கமழும் சடையில் வைத்து மறைத்தவனே, முழுமுதற் கடவுளாக இருப்பவனே, உனது இணையான திருவடிகளைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் போற்றும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 7:

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

பகீரதனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த கங்கையின் தன்மையினை மாற்றும் பொருட்டு, கங்கை நதியைத் தனது சடையில் தேக்கிய பெருமானின் செயலை சென்ற பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், உலகத்தவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு இடையூறாக இருந்து பல இடர்களை விளைவித்த திரிபுரத்து அரக்கர்களாய் அழித்த செய்தி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. கூறு=உமையன்னையை ஒரு கூறாகத் தனது உடலில் பெருமான் கொண்டுள்ள நிலை; மூன்றும் ஒன்றாக் கூட்டி என்ற தொடருக்கு திருமாலை அம்பின் தண்டாகவும், தீயினை அம்பின் கூரிய நுனியாகவும் காற்றினை அம்பின் இறகுகளாகவும் கூட்டி பெருமான் திரிபுரத்து பறக்கும் கோட்டைகளின் மீது எய்தார் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. வேறுவேறு திசையினில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் பறந்து கொண்டிருந்த கோட்டைகளை ஒரே நேர்க்கோட்டினில் வரச்செய்தவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

சிவபெருமானின் வீரச் செயல்களில் தலை சிறந்த வீரச் செயலாக விளங்குவது திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளை எரித்தது தான். வேறு வேறு திசைகளில் எப்போதும் பறந்து கொண்டிருப்பதால், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வருவது என்பது மிகவும் அரிதான செயல். மேலும் ஒரே நேர்க்கொட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால், அந்த அரக்கர்கள் ஒரே நேர்க்கோட்டினில் வாராத வண்ணம், வேறு வேறு திசையில் பறந்து கொண்டிருந்தனர். பெருமான் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தார் என்று பல திருமுறைப் பாடல்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. ஒரே கோட்டினில் வரும் தருணத்தில் தாங்கள் அழிவதற்கு வாய்ப்பு இருப்பதை நன்கு அறிந்த திரிபுரத்து அரக்கர்கள் அவ்வாறு ஒரே கோட்டினில் வருவதை தவிர்ப்பார்கள் அல்லவா. எனவே பெருமான் திரிபுரத்து கோட்டைகளை அழித்த போது அந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வந்த நிலை அரக்கர்களின் செயலால் அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர் கோட்டினில் வரும் வண்ணம் செய்த பின்னர், அந்த கோட்டைகளை ஒரே அம்பினால் எரியூட்டி அழித்தார் என்பது புலனாகின்றது. இந்த செய்தியை ஞானசம்பந்தர், இணையாது இருந்த கோட்டைகள் இணைக்கப்பட்டன என்பதை உணர்த்தும், அன்பில் ஆலந்துறை பதிகத்தின் முதல் பாடலை (1.33.1) நாம் இங்கே காண்போம். பிணை=தங்களது துணையோடு சேர்ந்து இருக்கும்; மட=இளமை வாய்ந்த: கணை=அம்பு; நீடு எரி=நீண்டு எரியும்; மால்=திருமால்; வரை=மலை; இணையா=வேறு வேறு திசைகளில் எப்போதும் கொண்டிருப்பதால், எப்போதும் சேராமல் இருக்கும் நிலை.

கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.64.02) திருஞானசம்பந்தர், மூன்று கோட்டைகளையும் ஒன்ற வைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மருவார்=பகைவர்கள்; உம்பர் பிரான்=தேவர்கள் தலைவன்; சாலி=ஒருவகை நெல்; ஆலை=கரும்பு; பாண்டிய மன்னன், அரசியார் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோருடன் பாண்டிநாட்டுத் தலங்கள் அனைத்தும் சென்ற, திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் குடிமக்களை பாதுகாத்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மாமலையான் மடந்தை

ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரான் அவன் ஊர்

கருவார் சாலி ஆலை மல்கிக் கழல் மன்னர் காத்தளித்த

திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப் பூவணமே

மேலும் ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான் கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை திருஞானசம்பந்தர் வலம்புரம் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.103.1) உணர்த்துகின்றார். சிலை=வில்; குனி=வளைத்த, மேரு மலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை குறிப்பிடுகின்றது. வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மேதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கொட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து=பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு=அழகு; இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு; ஊடுருவிச் சென்ற;

கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி

இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்

துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்

வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே

மாறு கொண்டார்=வேதநெறிக்கு மாறான வழியில் சென்றதால், பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; சாந்தம்=சந்தனம்;

பொழிப்புரை:

உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் பொருத்தி, தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனே, வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு ஒன்று சேராமல் இருப்பதன் மூலம், தங்களை எவரும் அழிக்க முடியாத வண்ணம் வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, கொடிய வெம்மை மிகுந்த அம்பினை எய்து, வேதநெறிக்கு மாறாக வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவனே, அனைத்து உயிர்களுக்கும் அரசனாகத் திகழ்பவனே, தனது கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, நீ அணிந்த திருநீற்றினை சந்தனம் போன்று உயர்ந்த வாசனைப் பொருளாக கருதி மகிழ்ச்சியுடன் தங்களது உடலில் பூசிக் கொள்ளும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 8:

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை

அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்

என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்

நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

வாய்மொழி=தோத்திரம், பாடல்கள்; நைதல்=கசிந்த மனத்துடன் அன்பினால் உருகி நிற்றல்; அன்றி நின்ற=கோபித்து நின்ற; வாயுவுக்கும் ஆதிசேடனுக்கும் இடையே நடைபெற்ற பலப் பரீட்சையின் விளைவாக சிதறிய மேரு மலையின் ஒரு பகுதியே திரிகோணமலை என்று கூறுவார்கள். இந்த மலை இயற்கையான அரணாக இலங்கைக்கு திகழ்ந்தது என்பர்.

பொழிப்புரை:

தனது உச்சியில் கொடியை உடையதாக, இலங்கைக்கு இயற்கையான அரணாகத் திகழ்ந்த திரிகோண மலையால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் குறுக்கே கிடந்து தனது பயணத்திற்கு இடையூறாக இருந்தது கயிலை மலை என்ற எண்ணத்துடன் கோபம் கொண்டவனாக, கயிலை மலையினைப் பேர்த்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரவேண்டும் என்று முடிவு செய்தான். அரிய கயிலை மலையினை பேர்த்தெடுக்க அரக்கன் முயற்சி செய்த போது, தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றுவதன் மூலம், அரக்கனை கயிலை மலையின் கீழே நெருக்கி அவனது உடலினை நசுக்கியவன் சிவபெருமான். இத்தகைய பல செயல்கள் செய்யும் ஆற்றல் உடைய பெருமானே என்று குறிப்பிட்டு தங்களது வாயால் பெருமானின் பெருமையை உணர்த்தும் பல தோத்திரங்களையும் பாடல்களையும் இரவு பகலும் மனம் கசிந்து பாடியவர்களாக விளங்கும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 9:

வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்

சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதியுள் ஆகி நின்றாய்

கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்

நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

வெண்கொம்பு=யானைத் தந்தம்; ஒசித்த=ஒடித்த; நேட=தேட; கேழல்=பன்றி; வேழம்=யானை; குவலயாபீடம் எனப்படும் பட்டத்து யானை; கண்ணனாக அவதாரம் செய்த போது, சிறுவர்கள் கண்ணனையும் பலராமனையும் மன்னன் கம்சனின் கட்டளைக்கு இணங்க, அக்ரூரர் வடமதுரைக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே, தனது பட்டத்து யானையை கண்ணனின் மீது ஏவி கண்ணனை கொல்வதற்கு, மன்னன் கம்சன் முயற்சி செய்கின்றான். கண்ணனோ, பாய்ந்து யானையின் முதுகின் மீதேறி அதன் தந்தத்தை ஒடித்து, யானையை கொன்று விடுகின்றான். இந்த நிகழ்ச்சியே இங்கே, திருமாலின் ஆற்றலை குறிப்பிடும் வண்ணம் உணர்த்தப்படுகின்றது. கேழல் வெண்கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும் மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது.

பொழிப்புரை:

தன் மீது ஏவி விடப்பட்ட குவலயாபீடம் என்று அழைக்கப்பட்ட பட்டத்து யானையின் தந்தத்தினை ஒடித்து அதனைக் கொன்ற ஆற்றல் படைத்த கண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் மீது அழகுடன் பொலிந்து விளங்கிய நான்முகனும் தங்களைச் சூழ்ந்துள்ள இடங்கள் அனைத்திலும் தேடியபோதும், அவர்கள் இருவரும் தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம் சோதிப் பிழம்பாக நின்ற பெருமானே, அரக்கன் இரண்யாட்சனை கொன்ற பின்னர் வெறியுடன் திரிந்த வராகத்தின் கோரைப் பல்லினை உடைத்து, திருமாலை வெற்றி கொண்டதன் சின்னமாக தனது மார்பினில் அணிந்த பெருமைக்கு உரிய பெருமானே, அழிவற்று நிலையாக இருப்பதும் பொன் போன்று சிறந்ததும் ஆகிய உனது திருவடிகளை பற்றுக்கோடாக கருதி, அதன் நிழலில் வாழும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 10:

வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்

தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்

துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

விளக்கம்:

வேடமிலாச்=துறவி வேடத்திற்கு பொருந்தாத எதிர்மறை குணங்களைக் கொண்ட சமணர்கள்; வெஞ்சொல்=கடுமையான சொற்கள்; தஞ்சம்=பற்றுக்கோடு; தத்துவம்=உயர்ந்த பொருள்; துஞ்சல்= இறத்தல், அழிவடைதல்; ஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த பெருமானின் அடியார்கள் தொடர்ந்து இறைவனைத் தொழுவதற்கு இடையூறாக, இடராக இருந்தது, சமணர் மற்றும் புத்தர்களே. எனவே தான் அவர்களின் ஆதாரமற்ற பழிச் சொற்களில் மயங்கி அடியார்கள் மயங்காத தன்மையை அடையர்களுக்கு இறைவன் அருள வேண்டும் என்று இங்கே சம்பந்தர் வேண்டுகின்றார்.

பொழிப்புரை:

கடுமையான சொற்களைப் பேசுவதைத் தவிர்த்து வேறு எதையும் பேசாதவர்களும், தாங்கள் கொண்டுள்ள துறவி வேடத்திற்கு பொருத்தமற்ற எதிர்மறை குணங்களை உடையவர்களாக விளங்கிய சமணர்களும், சிவபெருமானைப் புறக்கணிப்பதால் சிறந்த பற்றுக்கோட்டினை இழந்து தாங்கள் சார்வதற்கு நற்சார்பு ஏதும் இல்லாமல் தவிப்பர்களும் ஆகிய புத்தர்களும் வாழ்வினில் உயர்ந்த பொருளை உணராமல் இருக்கின்றனர்; காலத்தினால் மாறுபடாது என்றும் அழியாமல் இருக்கும் பொருட்களை உணர்த்தும் வேதங்களின் மந்திரங்களை உச்சரித்து உன்னை புகழ்ந்த வண்ணம், உனது திருவடிகளை தங்களது நெஞ்சினில் வைத்து உன்னையே சிந்திக்கும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக.

பாடல் 11:

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்

சேடர் வாழும் மாமறுகில் சிரபுரக்கோன் நலத்தால்

நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன

பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே

விளக்கம்:

சேடர்=சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு; நீட=நீண்ட; மேய=பொருந்திய; மறுகு=வீதி; சிரபுரம்=சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று; நாடவல்ல=ஆராய்ந்து உணர்ந்த;

பொழிப்புரை:

மேலும் மேலும் நீண்டு வளரும் சடையினை உடைய சிவபெருமான் பொருந்தி உறைகின்ற நெடுங்களம் தலத்தினை, சிறந்த ஒழுக்கத்துடன் வாழும் பெரியோர்கள் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இந்த பத்து பாடல்களை, சிறந்த பொருளை ஆராய்ந்து உணரத் தக்க பாடல்கள் கொண்ட மாலையை, முறையாக பாடும் வல்லமை உடைய அடியார்களின் பாவம் அவர்களை விட்டு விலகிவிடும்.

முடிவுரை:

இடரைக் களையும் எந்தாய் போற்றி என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் அடியார்களின் இடரினைக் களைய வேண்டும் என்று ஞானசம்பந்தர் வேண்டுவது போன்று, அப்பர் பெருமானும் பசுபதி திருவிருத்தம் என்ற பதிகத்தின் பாடல் ஒன்றினில் பெருமானின் அடியார்களுக்காக வேண்டுவதை நாம் உணரலாம். இந்தப் பதிகம் திருவதிகையில் அருளப்பட்ட பொதுப் பதிகம் என்றாலும், அப்பர் பிரான் அவதரித்த தலமாகிய திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர் குறித்து பாடப்பட்ட பாடல் என்று கருதப்படுகின்றது. காம்பு= மூங்கில்; அழைக்கும்=வருத்தும்; மூங்கில் தனக்கு ஒப்பாக முடியாது என்று புறக்கணித்து மூங்கிலை வருத்திய கங்கை நங்கையின் தோள்கள் என்று கூறப்படுகின்றது. இருமை=பெருமை, வற்றாமை, வளம் அளித்தல், அழியாமை, தன்னில் குளிப்பவரின் பாவம் தீர்த்தல் ஆகிய பெருமைகளை உடைய கங்கை நதி; பணை=பருமை; ஏம்பலைத்தல்=அங்கலாய்த்தல்; தனது சடையினில் கங்கை நதியைத் மறைத்து பாம்பினை வைத்துக் கொண்டுள்ள பெருமானின் தன்மை, கங்கையின் மார்பகத்தில் பாம்புகள் தவழ்கின்றன என்று இங்கே கூறப்படுகின்றது.

சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள் பரவி

ஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய் இரும் கங்கை என்னும்

காம்பலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வனமுலை மேல்

பாம்பலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே

இந்த பதிகத்தில் அப்பர் பிரான் சிவனடியார்களை, உடல் சுகத்தை தேடாமல் வெறும் தரையில் படுத்துறங்கும் அடியார்கள் என்றும், தங்களது பிறவிப் பிணியை அகற்றிக் கொள்வதற்காக சிவபிரானது தாளில் தங்களது தலையினை பதிக்கும் அடியார்கள் என்றும், வேறு ஒருவரையும் தஞ்சம் என்று அடையாது சிவபிரானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் என்றும் இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ந்து சிவபிரானின் பாதங்களை வழிபடும் அடியார்கள் என்றும், பிறவியாகிய துயரக் கடலைக் கடப்பதற்காக சிவபிரானது திருவடிகளை வணங்கும் அடியார்கள் என்றும், உலகப் பற்றுக்களை அழித்து நிற்கும் தொண்டர்கள் என்றும், மனம் உருகி தங்களது சித்தத்தினுள்ளே சிவபெருமானின் திருநாமத்தையே எப்போதும் பிதற்றும் அடியார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.99.8) அடியார்களின் நிலை கண்டு இரங்கி பெருமான், அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். கூம்பல்=கை குவித்தல்: சாம்பர்=சாம்பல் என்பதன் திரிபு; ஏம்பலித்தல்=வருந்துதல், தங்களது இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, உடலில் திருநீற்றினை முழுவதும் பூசிக்கொண்டு, தரையில் புரண்டு பல நாட்களாக வழிபடும் அடியவர் என்று அடியார்கள் யார் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால் வண்ணனே

கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பன்னாள்

சாம்பரைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று

ஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய் கச்சி ஏகம்பனே

பெருமானே, நீ தான் அடியார்களின் கவலையை களையவேண்டும் என்று சுந்தரர் பெருமானை நோக்கி வேண்டும் பாடல் ஒரு பொதுப் பதிகத்தின் (7.47.2) பாடலாகும். கொங்கு=கொங்குநாடு; குறும்பு=பாலை நிலம்; குரக்குத்தளி ஒரு வைப்புத்தலம்; அவியா=அணையாத; கங்குல்=இரவு;

கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய் குற்றாலா

மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா

சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்

கங்குல் புறம்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே

சங்கிலி நாச்சியாரை விட்டுப் பிரிந்து திருவொற்றியூர் தலத்தினை விட்டு அகன்று, ஒற்றியூர் தலத்தினை விட்டுப் பிரியேன் என்று செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், சுந்தரரின் கண்களின் பார்வை பெருமானால் பறிக்கப்படுகின்றது. தட்டுத் தடவித் தடுமாறிக்கொண்டு திருமுல்லைவாயில், வெண்பாக்கம், திருவாலங்காடு ஆகிய தலங்கள் சென்ற பின்னர், சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சி மாநகரம் சென்று சேர்கின்றார். திருமுல்லைவாயில் தலம் சென்ற போது அருளிய பதிகத்தின் (7.69) பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் பாசுபதா பரஞ்சுடரே என்று பெருமானை விளித்து, அடியேன் படுதுயர் கலையாய் என்று தனது துன்பங்களை தீர்க்கமாட்டாயா பெருமானே என்று உருக்கமாக பாடுவதை உணரலாம், இந்த பதிகத்தின் பாடல்களும், நமது இடர்களைக் களைவதற்கு பெருமானிடம் வேண்டுவதற்கு பொருத்தமாக அமைந்துள்ளன. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். பெருமானின் திருவடிகளையே சிறந்த செல்வமாகவும், வீடுபேற்று இன்பமாகவும் உண்மையான மெய்ப்பொருளாகவும் தான் கருதுவதாக சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வேறு எவரையும் தனது துணையாக மதியாது இருக்கும் தான், அவர்களைப் பற்றிக் கொள்வதற்கு உரிய செயல்களை தான் செய்யாமல் இருப்பதாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்

என்றெண்ணி

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த்

திரிவேன்

முருகமர் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் வாயினால் உன்னைப்

பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

காஞ்சி மாநகரினில் பெருமானின் அருளினால் தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்ற சுந்தரர், வழியில் ஆமாத்தூர், அரத்துறை, ஆவடுதுறை, துருத்தி ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருவாரூர் சென்றடைகின்றார். ஆங்கே மீளா அடிமை என்று தொடங்கும் திருப்பதிகத்தினை பாடி இறைவனது அருளால் வலது கண் பார்வையினையும் பெறுகின்றார். இந்த திருப்பதிகத்தின், பல பாடல்களில், அடியார்கள் தங்களது குறைகளை உன் முன்னே வைத்து வருந்தி வேண்டும் போது, அவர்களுக்கு அருள் புரியாமல் இருப்பது உனக்கு தகுதியான செயலா என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்கின்றார். அடியார் என்று தன்னையே குறிப்பிட்டுக் கொண்டு பாடிய பதிகமாக இருப்பினும், நமது இடர்களை நாம் பெருமானின் அருள் கொண்டு களைந்து கொள்வதற்கு பொருத்தமான பாடல்களாக இவை உள்ளன. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இதே பதிகத்தின் விளக்கத்தில், முதல் பாடலுடன் தொடர்பினை உணர்த்தும் விளக்கத்தில் கண்டோம்.

மணிவாசகரும் தனது திருச்சதகம் தொகுப்பின் முதல் பாடலில், சிவபெருமானது அடியார்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். உடல் புளகாங்கிதம் அடைந்து, நடுநடுங்கி, கைகளைத் தலை மேல் வைத்து, கண்களில் நீர் ததும்ப, மனம் புழுங்கி, பொய்களைத் தவிர்த்து, இறைவனை சயசய என்று போற்றி, இத்தகைய ஒழுக்கத்தினை கைவிடாமல் இருக்கும் அன்பனாகிய என்னை இறைவனே நீ கண்டுகொள்ள வேண்டும் என்று மணிவாசகர் இங்கே வேண்டுகின்றார்.

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கு என்

கை தான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய் தான் தவிர்த்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே

இந்த பதிகத்தின் முதல் பாடலில் உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு நிறைந்த தன்மையாரக இருப்பவரின் இடரை களைய வேண்டும் என்று ஞானசம்பந்தர் வேண்டுகின்றார். பதிகத்தின் அடுத்த ஒன்பது பாடல்களில் கொள்கையினால் உயர்ந்த நிறை உடையவர்கள் யார் என்பதை சம்பந்தர் விளக்குகின்றார். மனத்தகத்தே ஆடல் பாடல் பேணி இராப்பகலும் நினைத்து எழுவார், பொன்னடியேப் பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின்னடியார், தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார், தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார், அடியிணையே பரவும் நிருத்தர் கீதர், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார், நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் நின்று நைவார், பொன்னடியின் நீழல் வாழ்வார், தோத்திரம் நின்னடியே நெஞ்சில் வைப்பார், என்று நிறைவான அடியார்களை சம்பந்தர், இந்த பதிகத்தின் பல பாடல்களில் அடையாளம் காட்டுகின்றார். சிவபெருமானுக்கு அவரது அடியார்களை எவரும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான அடியார்கள் எவர், ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக அடியார்களாக நடிப்பவர் எவர் என்பதை சிவபெருமான் நன்றாக உணர்வார். எனவே அடியார்களை, அவர்களது குணங்களைக் குறிப்பிட்டு அப்பர் பிரானும், சம்பந்தரும், மற்ற அருளாளர்களும் அடையாளம் காட்டுவது நாம் அவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நமக்கு கற்பிக்கவே என்பதை உணர்ந்து அத்தகைய குணங்களை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெருமான் அடியார்களின் இடர்களைக் களைந்து எவ்வாறு அருள் புரிகின்றார் என்பதை, இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் புரிந்து கொண்ட நாம், இந்த பதிகத்தினை முறையாக பக்தியுடன் ஓதி, இறைவனின் அருளுடன் நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் இடர்களைத் தீர்த்துக் கொள்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Maraiyudaiyaay
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மறையுடையாய்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: