Go Back

22/03/21

வடந்திகழ் மென்முலையாளை


வடந்திகழ் மென்முலையாளை - பின்னணி


தனது ஐந்தாவது திருப்பயணத்தின் ஒரு பகுதியாக கொங்கு நாட்டுத் தலங்கள் சென்ற பின்னர் சோழ நாட்டுக்கு திருஞானசம்பந்தர் திரும்புகின்றார். வாட்போக்கி என்ற தலத்துடன் தனது சோழ நாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கும் ஞானசம்பந்தர் அதன் பிறகு பராய்த்துறை தலம் சென்று, நீறு சேர்வதோர் மேனியர் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி பரமனை வணங்கிய பின்னர், திருவாலந்துறை மற்றும் திருச்செந்துறை ஆகிய தலங்கள் சென்றதாகவும், அதன் பின்னர் திருக்கற்குடி என்ற தலத்திற்கு சென்றதாகவும், வழியில் வேறு பல தலங்கள் சென்றதாகவும் பெரிய புராணம் கூறுகின்றது. இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவுற்று

எழு திருவாலந்துறை திருச்செந்துறை முதலா

வழுவில் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்

செழுமலர்ச் சோலைத் திருக்கற்குடி மலை சேர வந்தார்

அந்தநல்லூர் என்று இன்று அழைக்கப்படும் தலமே ஆலந்துறை என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது என்று சிவக்கவிமணியார் கூறுகின்றார். இந்த தலம் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே பதினோரு கி.மீ. தூரத்தில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் முதல் பராந்தகச் சோழன் முதலாக பல சோழ மன்னர்களின் காலத்தைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த தலத்திலுள்ள திருக்கோயில் ஆலந்துறை என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலத்திற்கு ஒரு கி.மீ. கிழக்கில் திருச்செந்துறை தலம் உள்ளது. இங்கும் பராந்தகச் சோழன் முதலான பல சோழ மன்னர்களின் சாசனங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு தலங்களின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. குற்றமற்ற பல கோயில்கள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் எவையெவை என்பது குறித்து ஏதும் உணரமுடியவில்லை.

இந்நாளில் உய்யக்கொண்டான் மலை என்று அழைக்கப் படும் இந்த தலம், கற்குடி என்று தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படும் இந்த தலம், திருச்சிராப்பள்ளி நகரத்திலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் வயலூர் செல்லும் வழியில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. மலை மேல் அமைந்துள்ள அழகான கற்கோயில் ஓம் என்ற எழுத்தின் வடிவத்தில் உள்ளது. கற்களால் கட்டப்பட்ட கோயில் என்பதால் கல்லால் அமைந்த இல்லத்தில் குடியிருப்பவன் என்று பொருள்பட கற்குடி என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது என்று கூறுவார்கள். இந்த தலத்தின் மீது மூவர் பெருமானர்கள் பாடிய தேவாரப் பதிகங்கள் ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளன. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட கோயில் என்பதால் நந்திவர்ம மங்கலம் என்ற பெயரும் உண்டு. இறைவனின் திருநாமம், உய்யக்கொண்டார், உச்சிநாதர், கற்பகநாதர். சதுரமான ஆவுடையார் மேல் அழகான சுயம்பு இலிங்கம். மேற்கு பார்த்த சன்னதி. இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி அம்மை, மைவிழியம்மை, பாலாம்பிகை. உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர், நாரதர் வழிபட்ட தலம். இராமாயணத்தில் வரும் பாத்திரமாகிய கரன் வழிபட்ட தலம். இங்குள்ள கல்லையே அவன் வழிபட்டதால் கரன்குடி என்ற பெயர் நாளடைவில் கற்குடி என்று மாறியதாக கூறுவார்கள். இந்த கல் இப்போது இடர் காத்தார் என்று அழைக்கப் படுகின்றது. இலங்கை மன்னன் ஒருவனும் இங்குள்ள பெருமானை வழிபட்டு முக்தி அடைந்தான் என்று கூறுவார்கள். இதற்கு சான்றாக ஒரு கல்வெட்டு உள்ளது.

சிறுவன் மார்கண்டேயன் இந்த தலத்திற்கு வந்து, தனக்கு குறைந்த ஆயுட்காலம் விதிக்கப் பட்டது என்பதால், இயமன் தன்னை துரத்துவதாக இறைவனிடம் முறையிட்டான். சிறுவனது வேண்டுகோளைச் செவியுற்ற இறைவன் சிறுவனுக்கு அடைக்கலம் கொடுப்பதாக வாக்கு அளித்தார். அதனால் இறைவனுக்கு உஜ்ஜீவ நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவநாதர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். காப்பாற்றுகிறேன் என்று வாக்கு அளித்து, மார்க்கண்டேயரின் வாழ்வில் உய்வைத் தந்ததால் உய்யக்கொண்டார் என்ற பெயர் வந்தது. விநாயக சன்னதியிலிருந்து பார்த்தால், மார்க்கண்டேயர் நிகழ்ச்சி சுதைச் சிற்பங்களாக கோபுரத்தில் இருப்பது தெரியும், சிறுவனைத் துரத்திகொண்டு வரும் இயமனிடமிருந்து சிறுவனை பாதுக்காப்பதற்காக சன்னதியிலிருந்து வெளியே வந்த இறைவன், தென்திசை நோக்கி நின்றதாகவும், இறைவனைக் கண்ட இயமன் ஓடி விட்டதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கொடிக் கம்பத்தின் அருகே, இரண்டு பாதங்கள் தரையில் அழுந்திய சுவடுகள் காணப்படுகின்றன. இவை பெருமானின் இங்கே நின்றதால் ஏற்பட்ட அடையாளங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு மார்க்கண்டேயருக்கு இறைவன் காட்சி தந்த நாள் ஒரு ஆடி மாதம் பௌர்ணமி நாள் என்று கருதப் படுகின்றது. பௌர்ணமி நாட்கள் இங்கே விசேடமாக கொண்டாடப் படுகின்றன. சாரமாமுனிவரால் பட்டம் சூட்டப்பட்ட சோழமன்னனுக்கு இறைவன் தனது ஆனந்த நடனக் காட்சியை காட்டினான் என்றும் கூறப்படுகின்றது. எனவே நடராஜர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள நடராஜர் சிலை பாதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலிருந்து நம்மை சன்னதிக்கு அழைத்துச் செல்லும் நீண்ட மண்டபத்தின் மேற்கு கோடியில் ஆறுமுகர் சன்னதி உள்ளது. ஒரு கல்லில் புடைச் சிற்பமாக உள்ள முருகப்பெருமான் மூன்று முகங்களுடனும் பன்னிரண்டு கைகளுடன் அழகாக காணப்படுகின்றார். முருகப் பெருமான் ஆவுடையார் மேல் நிற்கும் அரிய காட்சியை காணலாம். அருகில் குளத்திற்கு எதிரில் இருக்கும் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. படிகள் ஏறிச் சென்றால் முதலில் தென்படுவது அம்பிகை அஞ்சனாக்க்ஷி சன்னதி. அம்பிகையின் கையில் இருக்கும் பூவின் இதழ் உடைந்து போனதால் வேறொரு அம்பிகை சிலை செய்ய நினைத்தனர். அம்பிகையின் மேல் சார்த்தப் பட்டுள்ள வெள்ளிக் கவசத்தை நீக்கினால் இந்த நிலையை நாம் காண முடியும். அப்போது அம்பிகை, அடியார்களின் கனவில் தோன்றி இந்த சிலையை அகற்றாமல், புதியதாக செய்யப்பட்ட சிலையை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு சொல்லவே, அன்று முதல் இரண்டு அம்பிகை சன்னதிகள் திருக்கோயிலில் உள்ளன என்று கூறுவார்கள். இரண்டு சன்னதிகளிலும் நித்திய பூஜைகள் செய்யப்படுகின்றன. புதியதாக செய்யப்பட்ட அம்பிகையை பாலாம்பிகை என்று அழைக்கின்றனர். அம்பிகை அஞ்சனாக்ஷியின் சன்னதியும், இறைவனின் சன்னதி போன்று மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி மற்றும் அம்பிகையின் சன்னதிக்கு இடையில், பாலாம்பிகை என்ற அம்பிகையின் சன்னதி (கிழக்கு நோக்கி உள்ள சன்னதி) காணப்படுகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை காணப் படுகின்றனர். நால்வர் சன்னதிகள், வல்லபை சமேத விநாயகர் சன்னதி, உள் சுற்றில் காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதியில் பைரவர், சூரியன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. திருமணவரம் மற்றும் குழந்தை வரம் கொடுக்கும் தேவியாக இங்கே கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை வணங்கப்படுகின்றாள். மூலவருக்கு நேராக உள்ள மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இலக்குமியின் மூத்த சகோதரியாகிய ஜேஷ்டா தேவியின் சிலையையும் நாம் இங்கே காணலாம். தேவியின் அருகே மாடன், சேடி ஆகிய அவளது குழந்தைகளையும் காணலாம். பௌர்ணமி அன்று கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

பாடல் 1:

வடம் திகழ் மென்முலையாளைப் பாகமதாக மதித்துத்

தடம் திரை சேர் புனல் மாதைத் தாழ் சடை வைத்த சதுரர்

இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பமது எல்லாம்

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

இந்த பாடலில் தாழ்சடை வைத்த சதுரன் என்று பெருமானை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சதுரன் என்றால் சாமர்த்தியம் வாய்ந்தவன் என்று பொருள். உயரத்திலிருந்து கீழ் நோக்கிப் பாயும் இயல்பினை உடைய தண்ணீரைத் தனது தொங்குகின்ற சடையினில் அடைத்து வைப்பதற்கு தனி ஆற்றல் வேண்டும் அல்லவா. அந்த ஆற்றல் உடையவராக திகழ்ந்தவர் பெருமான் என்பதால் தான் அவரை சதுரன் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். பெருமானின் பல செயல்கள் சதுரப்பாடு வாய்ந்ததாக கருதப்பட்டு நால்வர் பெருமானர்களால் அவர் சதுரன் என்று பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றார். தக்கனது சாபத்தினால் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தது, திருமாலும் பிரமனும் அடிமுடி காணாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நிமிர்ந்தது, வேகமாக ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கித் தேக்கியது, இசைக்கருவிகளை திறமையாக வாசிப்பது, அடியார்கள் பிச்சையாக அளிக்கும் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு வீடுபேறு அளிப்பது, வலிமை மிகுந்த தக்கன் செய்த யாகத்தினை அழித்தது, அரக்கன் இராவணனின் செருக்கினை அடக்கிய பின்னர் அவனுக்கு பல வரங்கள் அளித்தது, திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினால் எரித்து அழித்தது, அனைவரையும் நடுங்கச் செய்த சலந்தரனை சக்கரப் படையால் அழித்தது, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டது. தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டது, நள்ளிருளில் நட்டம் ஆடுவது, பக்குவமடைந்த உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக அளிப்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் வினைகளை முற்றிலும் அறுப்பது, பல ஊழிகளைக் கடந்தும் அழியாமல் நிலைத்து நிற்பது, வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்குவது, பொங்கி வந்த ஆலகால விடத்தை பருகி உலகத்தவரை காப்பாற்றியது, அடியார்களின் பிறவியை வேருடன் அறுப்பது, தீயினில் நடனம் ஆடுவது, தீயினைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுவது என்பது போன்று பல செயல்கள் புரிந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம். இவ்வாறு பெருமானை சதுரன் என்று அவர்கள் அழைத்த ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.33.2) ஞானசம்பந்தர் பெருமானை சதுரன் என்று அழைக்கின்றார். முதிரா=வளராத; முதிரா மதி என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த மதியாக, முழு நிலவாகத் திகழ்ந்த சந்திரன் தக்கன் இட்ட சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலைக்கு வந்த போது பெருமானிடம் சரணடைந்தான். அஞ்சேல் என்று அவனுக்கு அபயம் அளித்த பெருமான், அழியும் நிலையினைத் தவிர்த்து நாளொரு கலையாக வளரும் வண்ணம் சந்திரனுக்கு அருள் புரிந்தார். வளரும் மதியாக மாறியபடியால், பெருமான் அணிந்துள்ள பிறைச் சந்திரன் வளராத மதி என்றும், பிள்ளை மதி என்றும், முதிரா மதி என்றும் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. தக்கன் இட்ட சாபத்தினை மாற்றுவது வேறு எவர்க்கும் இயலாத காரியமாக திகழ்ந்த படியால், பெருமானை சதுரன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விடை=இடபம்; கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அரவம்=ஒலி; இந்த பாடலில் தனது தந்தை என்று இறைவனை சம்பந்தர் அழைப்பதையும் நாம் உணரலாம்.

சடையார் சதுரன் முதிரா மதி சூடி

விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்

கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை

அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

கடைமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.111.9) திருஞானசம்பந்தர் பெருமானின் ஒப்பற்ற இரண்டு செயல்களை குறிப்பிடுகின்றார். பிரமன் மற்றும் திருமால் இறைவனின் அடிமுடி காணமுடியாமல் திகைத்த செயல், கங்கையைத் தனது சடையில் பெருமான் தாங்கியது ஆகிய இரண்டு செயல்கள்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்

புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்

கடை முடி அதன் அயல் காவிரியே

யாழ் வாசிப்பதற்கு தனித்திறமை வேண்டும் என்பதால் யாழிலிருந்து இனிய இசை எழுப்பும் திறமை படைத்த சிவபெருமானை, சிவபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.112.1) திருஞானசம்பந்தர் சதுரன் என்று அழைக்கின்றார். முரல=ஒலிக்க;

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்

தன் கரம் மருவிய சதுரன் நகர்

பொன்கரை பொரு பழம் காவிரியின்

தென்கரை மருவிய சிவபுரமே

பிரம கபாலத்தில் பலி ஏற்கும் செயலைப் புரியும் பெருமானை சதுரன் என்று குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.22.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் கங்கை நதியைத் தனது சடையினில் பெருமான் ஏற்ற செயலும், கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு இடைவிடாது நடனம் ஆடும் செயலும் குறிப்பிடப்படுகின்றன. இந்த செயல்களைப் புரிவதற்கும் தனி சாமர்த்தியம் வேண்டும் அல்லவா. மேலும் பலரின் மலங்களைத் தான் பிச்சையாக ஏற்றுக் கொண்ட போதும், மலங்களிலிருந்து நீங்கி, அமலனாக இருக்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. எந்த உயிரும் தனது வினையை, நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும் என்பது பொதுவான விதி. அவ்வாறு வினைகளை நுகரும் தருணத்தில் மேலும் பல வினைகளை நாம் சேர்த்துக் கொள்கின்றோம். ஆனால் பக்குவமடைந்த உயிர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக பாவித்து, அத்தகைய இன்ப துன்பங்களால் சலனம் அடையாமல் இருப்பதால், பழைய வினைகளின் விளைவால் துன்பங்கள் அவர்களது செயல்களில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. இவ்வாறு வினைகளை நுகரும் தருணத்திலும், மற்ற உயிர்களைப் போன்று ஆகாமிய வினைகளை பெருக்கிக் கொள்ளாமல் அவர்கள் இருப்பதால், மேலும் மேலும் எத்தனை வினைகள் அவர்களைப் பற்றினாலும், அவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் எந்த விதமான மாறுதலும் அவர்களின் போக்கில் இருக்காது என்பதால், இறைவன் அவர்களது வினைகளைத் தானே வாங்கிக்கொண்டு அவர்களை வினைகளிலிருந்து விடுவிக்கின்றான். வினைகளிலிருந்து விடுவிக்கப் பட்ட அவர்கள் வீடுபேறு அடையும் தகுதியைப் பெறுகின்றனர். இவ்வாறு வினைகளை வாங்கிக் கொண்டு வீடுபேறு அளிக்கும் ஆற்றல் பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் இல்லை; எனவே அவர் சதுரர்.

அலைசேர் புனலன் அனலன் அமலன்

தலை சேர் பழியன் சதுரன் விதிரும்

கொலை சேர் படையன் குடவாயில் தனில்

நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே

திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (3.92.7) பெருமானை சதுரனார் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். தக்கனது வேள்வியைத் தகர்த்த நிகழ்ச்சி இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி செய்வது தவறு என்று தக்கனுக்கு சப்த ரிஷிகள் அறிவுரை கூறியதையும் புறக்கணித்து தக்கன் வேள்வி செய்ய முயன்றான். சப்த ரிஷிகள் அந்த யாகத்தினில் பங்கு கொள்ளாமல் தவிர்த்தனர். ஆனால் பிரமன் திருமால் உள்ளிட்ட பல தேவர்களும் தக்கனுக்கு அஞ்சியவர்களாக அந்த வேள்வியினில் பங்கேற்றனர். இத்தகைய வல்லமை வாய்ந்த தக்கன் செய்த யாகத்தை முறியடித்து, பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த பெருமானை சதுரனார் என்று அழைத்தது பொருத்தம் தானே. அக்கு=சங்கு மணிமாலை; புரிவினர்=முறுக்கடைந்த சடை; எலும்பு மலை; அரை=இடுப்பு; திரை= உடைய கங்கை நதி; செம்மை புக்கதோர் சடை=செஞ்சடை;

அக்குலாம் அரையினர் திரை உலா முடியினர் அடிகள் அன்று

தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை

புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்

திக்கெலாம் புகழ் உறு திருநெல்வேலி உறை செல்வர் தாமே

அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்த பெருமானை சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடல் சீர்காழி தலத்தின் மீது அருளிய (2.122.8) பாடலாகும். புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தொலைவு=தோல்வி; உரம்=வலிமை; கரப்பு=மறைப்பு; அழகாரும்=அழகு நிறைந்த; அந்நாள் வரை தோல்வி என்பது என்ன என்று கண்டறியாத அரக்கன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது தலைகளும் தோள்களும் நெரியும் வண்ணம், பெருமான் அரக்கனை மலையின் கீழே அழுத்திய செயல் சதுரப்பாடு உடைய (திறமையான) செயலாக இங்கே கருதப் படுகின்றது. சீர்காழி நகரத்தவர்கள், தங்களது செல்வத்தினை மறைக்காமல், இரப்போர்க்கு இல்லை எனாது கொடுத்து உவந்தனர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

தொலைவு இலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்

தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது

கலையின் மேவும் மனத்தோர் இரப்போருக்குக் கரப்பிலார்

பொழியும் அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே

பெருமானின் வீரச்செயல்களில் தலைசிறந்த வீரச்செயல் திரிபுரத்து கோட்டைகளை எரித்தது அல்லவா. வானில் எப்போதும் பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினால் வீழ்த்தினால் தான் தாங்கள் அழிய முடியும் என்ற பெற்றிருந்த வரத்தின் மமதையால் அனைவரையும் திரிபுரத்து அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். ஒரு நொடிக்கும் சற்றே குறைவான நேரத்தில் அந்த மூன்று கோட்டைகளையும் எரியூட்டி அழித்த பெருமானை சதுரர் என்று திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.69.2) சம்பந்தர் குறிப்பிடுகின்றார். முதுசினம்=மிகுந்த கோபம்; வரை=மேரு மலை; மிகுந்த கோபத்துடன் மேருமலையினை வளைத்து. பாடலின் கடை இரண்டு அடிகளில் மலையின் வளமை உணர்த்தப் படுகின்றது. எதிரெதிராக உள்ள மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் நெருப்புப் பொறிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நிலத்தினை தோண்டியபோது வெளிப்படும் மணிகள் ஆகியவை ஒளி வீசுவதால் காளத்தி மலையின் இருள் அகல்கின்றது என்று சம்பந்தர் கூறுகின்றார்.

முது சின வில் அவுணர் புரம் மூன்று ஓர் நொடி வரையின்

மூள எரி செய்

சதுரர் பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை தன்னை வினவில்

எதிர் எதிரே வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத

கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (4.68.6) பெருமானை சதுரர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் காரணத்தை நாம் இங்கே காண்போம். தன்னிடம் போரிடுவார் எவரும் இல்லாத நிலையில் சலந்தரன் சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் கயிலாயம் நோக்கிச் செல்கின்றான். அவன் வருவதை அறிந்த பெருமான், ஓர் முதியவர் வேடத்தில் அவனை எதிர்கொள்கின்றார். தரையில் தனது கால் விரலால் சக்கரம் வரைந்த பெருமான், அரக்கனை நோக்கி அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கும் வல்லமை உள்ளதா என்று அரக்கனிடம் கேட்க, அரக்கனும் அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கின்றான். எடுத்த பின்னர் தனது தலைக்கு மேலே அரக்கன் தூக்கிய போது அந்த சக்கரம் கூர்மை நிறைந்த ஆயுதமாக மாறி அவனது உடலினை இரண்டு கூறாகக் கிழித்து கொன்று விடுகின்றது. இத்தகைய வலிமை வாய்ந்த ஆயுதத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், திருமாலின் பக்திக்கு பரிசாக பெருமான் அளித்து விடுகின்றார். இத்தகைய வல்லமை வாய்ந்த ஆயுதத்தை பரிசாக அடுத்தவர்க்கு அளித்ததன் நோக்கம், தேவைப்பட்டால் அந்த ஆயுதம் இல்லாமலும் தான் எவரையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை பெருமானுக்கு இருந்ததால் தானே. இந்த நம்பிக்கையை தனித் திறமையாக மதித்து சக்கரம் அருள் செய்த சதுரர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்

நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்

வக்கரன் உயிர் வவ்விய மாயற்குச்

சக்கரம் அருள் செய்த சதுரரே

இந்த பாடலில் நாம் நயமான கற்பனை ஒன்றையும் உணரலாம். அந்தி நேரத்து செவ்வானத்தின் நிறம் பெருமானின் மேனி நிறம் என்று பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த பாடலில் ஒரு படி மேலே செல்கின்றார். அந்திச் செவ்வானம் அதே நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. மாலையில் படிப்படியாக குறைந்து இருள் பரவுகின்றது; காலையில் படிப்படியாக குறைந்து முழு வெளிச்சம் தோன்றுகின்றது. இந்த காட்சி அன்றாடம் தோன்றும் காட்சி. இந்த காட்சியைக் கண்ட அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. பெருமானின் மேனி நிறத்துடன் போட்டியிடும் அந்திச் செவ்வானம், பெருமானிடம் தோற்று அழிகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (5.1.11) சிற்றம்பலவனை சதுரன் என்று அழைக்கின்றார். பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, இடைவிடாது நடனம் ஆடும் தன்மை, அரக்கனை மலையின் கீழே அடர்த்த செய்கை முதலியன குறிப்பிடப்படுகின்றன. மதுரம்=இனிமை; அதிர=நடுங்குமாறு; ஆர்த்து=ஆரவாரித்து; கொள்சேவடி= கொள்ளுதல் செய்த, கொண்ட திருவடி; அரக்கன் புகழ்ந்து பாடியதை ஏற்றுக் கொண்ட; கொள்ளுதல் என்பதற்கு அருளுதல் என்ற பொருள் உண்டு. சேவடி என்ற சொல்லினை, மிதி மற்றும் கொள் என்ற இரண்டு சொற்களுக்கும் பொதுவாக எடுத்துக் கொண்டு மிதி சேவடி மற்றும் கொள் சேவடி என்று பொருள் கொள்ள வேண்டும். அரக்கனது கர்வத்தினை அடக்குவதற்காக மிதித்த திருவடி, பின்னர் அவனது வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்கள் (சந்திரகாசம் என்ற வாள் மற்றும் மூன்று கோடி வாழ்நாள்) வழங்கிய சேவடியாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. திருமலை என்பது கயிலாய மலையினை குறிக்கும். கோயில் என்பது தில்லைச் சிதம்பரத்தை குறித்தலைப் போல, திருமலை என்ற சொல் கயிலாயத்தை குறிக்கும். சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், முற்றிலும் தணிக்கப்படுவது, இறைவியின் இனிமையான மொழியால் தான். தனது. கோபம் தணிக்கப்பட்ட பின்னர், இறைவன் மீண்டும் படைத்தல் தொழிலில் ஈடுபடுகின்றான். இளைப்பு ஏதும் இன்றி, மூவகைத் தொழில்களிலும் ஈடுபடும் சிவபிரானை சதுரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் மொழியினை, இனிமையான மொழி என்று குறிப்பிடும், அப்பர் பெருமானுக்கு, அந்த இனிய மொழியால் விளைந்த விளைவு நினைவுக்கு வந்தது போலும். தான் நினைத்த மாத்திரத்தில், உலகங்களையும், உலகத்தில் உள்ள பொருட்களையும் படைத்து, உயிர்களையும் பல உடல்களுடன் சேர்த்த பெருமானின், சாமர்த்தியமான செயல் சதுரன் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது.

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்

சதுரன் சிற்றம்பலவன் திருமலை

அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்து இற

மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே

காசனைக் கனலை என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (5.93.2) அப்பர் பிரான் இறைவனை சந்திக்கண் நடமாடும் சதுரன் என்று அழைக்கின்றார். சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபுராணத்தில் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் குறிப்பிடுவதும் முற்றூழிக் காலத்து இருளையே. புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்;

புந்திக்கு விளக்காய புராணனைச்

சந்திக் கண் நடமாடும் சதுரனை

அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

காளத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் (6.08) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை மாச்சதுரன் என்று அழைக்கின்றார். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்: பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்; உலகனைத்தையும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமானை விடவும் பெரிய செல்வந்தர் உலகினில் எவர் உள்ளார். ஆனால் அத்தகைய செல்வம் உடையவனாக இருந்தும், ஏதும் இல்லாத வறியவன் போல் பிச்சை ஏற்பவன் போன்ற வேடத்துடன் நடிப்பதை பெருமானின் திறமையாக அப்பர் பிரான் கருதுகின்றார் போலும்.

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக்

கம்பன் காண் பிச்சை அல்லால்

மற்று ஊண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன்

காண் மாசு ஒன்றில்லா

பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது

பொழில் ஏழும் தாங்கி நின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன்

என் கண்ணுளானே

மேலும் வேறு எந்த உணவினையும் ஏற்காமல் இருந்த திறமைசாலி என்று கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஏனையோருக்கு பிச்சை இடுவதால் நமக்கு, அவர்களுக்கு உதவிய புண்ணியம் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இறைவனுக்கு பிச்சை இடுவதால் நமக்கு கிடைப்பதே வேறு. இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை என்பதையும், உயிர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆணவம் முதலான மலங்களையே இறைவன் பிச்சையாக கூறுகின்றான் என்பதையும், அத்தகைய பிச்சைகளை அவனிடம் இடவல்ல உயிர்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப்பட்டு பிறவாத தன்மை அடைகின்றனர் என்பதை பல திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன. பிச்சையாக உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முக்திச் செல்வத்தை அளிக்கும் பெருமானை விடவும் திறமைசாலி வேறு எவர் உள்ளனர். மேலும் முக்திச் செல்வத்தை பெருமானைத் தவிர வேறு எவர் அளிக்க வல்லார். பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்படாமல் இருக்கும் ஒருவன் தானே, அத்தகைய நிலைக்கு மற்றவரை அழைத்துச் செல்ல முடியும். எனவே தான் அப்பர் பிரான் இங்கே மாச்சதுரன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

ஊழிக்காலத்தில் அனைவரும் இறந்த பின்னர், அவர்களது உடல்கள் எரிந்ததால் ஏற்பட்ட சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் நிலை, என்றும் அழியாது இருக்கும் நிலை, சிவபெருமானது திறமையை, பெருமையை உணர்த்துகின்றது என்பதால், சதுரன் என்று நீற்றினைப் பூசிய செய்கையுடன் அப்பர் பிரான் இணைத்துச் சொல்லும் பாடல் (6.32.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் பிறவிப் பிணியிலிருந்து தன்னை விடுவித்து இனிமேல் பிறவாமலும் சாகாமலும் காத்த பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த செயலும் வேறு எவரும் செய்தற்கு அரிய செயல் என்பதால் இதனையும் சதுரனின் செயலாகவே கொள்ளலாம். புத்தேளிர்=வானவர்கள்; சே=எருது, இடபம்; சதுரன்=திறமை படைத்தவன்; சாவாமே காத்தல்=பிறப்பு மற்றும் இறப்பினைத் தவிர்ப்பதன் மூலம், இறப்பிலிருந்து காப்பாற்றும் தன்மை. வெண்சங்கு போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசியவன் என்று பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும்

பொருளே போற்றி

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி

அளித்தாய் போற்றி

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்று

எம் சதுரா போற்றி

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே

போற்றி போற்றி

கயிலாயம் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.57.2) அப்பர் பிரான் பெருமானை சதுரா என்று அழைக்கின்றார். அதிர்தல்=நடுங்குதல்; அதிரா=நடுங்காத; இறைவனைத் தவிர வேறு எவராலும் நீக்குதற்கு அரிய வினைகள் என்பதை உணர்த்தும் பொருட்டு நடுங்காத வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அதிரா என்ற சொல்லினை உடன்பாட்டு சொல்லாக கருதி அதிரா வினைகள் என்பதற்கு உயிர்களை நடுங்க வைக்கும் வினைகள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்கும் வல்லமை வாய்ந்த ஒருவனை, எவராலும் அளிக்க முடியாத தெளிவான பொருளினை, மௌன மொழியால், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், வேதங்களின் உட்பொருளாக இருந்த கருத்தினை விளக்கிய ஒருவனை, சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆலநிழற் கீழ்

அமர்ந்தாய் போற்றி

சதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசுந்

தலைவா போற்றி

எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்

செய்வாய் போற்றி

கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே

போற்றி போற்றி

குடந்தை கீழ்க்கோட்டம் திருத்தாண்டகத்து பாடல் ஒன்றினில் (6.75.9) அப்பர் பிரான், பெருமான் ஆடும் நடனத்தை சதுர நடனம் என்று கூறுகின்றார். சங்கு அரவக் கடல் என்ற சொல்லினை சங்கு கடல் மற்றும் அரவக் கடல் என்று பிரித்து பொருள் காணவேண்டும். அரவம் ஓசை என்ற பொருளில் இங்கே வருகின்றது. சங்கக்கடல் என்றால் சங்குகள் காணப்படும் நீர் நிறைந்த கடல். முகடு=உச்சி; முகடு தட்ட=அண்டத்தின் உச்சியைத் தொடும் வண்ணம். கடலின் நீர்த்துளிகள் அண்டத்தின் உச்சியில் பொருந்தும் வண்ணம் எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர பெருத்த ஓசையுடன் கைகளை வீசி ஆடப்படும் நடனம் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தனிச் சிறப்பு வாய்ந்த இருப்பதைப் போன்று அவர் ஆடும் நடனமும் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது.

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண்

பூணநூல் புனிதர் போலும்

சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த

சைவர் போலும்

அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற

எறிந்தார்க்கு அருள் அப்போதே

கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை

கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

இறுதியாக பெருமானை விடவும் தான் சதுரன் என்று நகைச்சுவையாக மணிவாசகர் சொல்லும் பாடலை இங்கே சிந்திக்கலாம். இந்த பாடல் கோயில் திருப்பதிகத்தில் வருகின்றது. இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம். ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாகவே பாசநீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா. எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்

கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது

ஒன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை

உறை சிவனே

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன்

ஓர் கைம்மாறே

துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்ற தொடருக்கு, இன்பங்களையும் துன்பங்களையும் கடந்தவராக பெருமான் இருக்கும் நிலை என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இந்த தொடரினை அடுத்து காதலில் வாழும் என்ற தொடர் வருகின்றது. எனவே காதலில் வாழும் என்ற தொடரினை துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்ற தொடருடன் இணைத்துப் பொருள் காண்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் கலந்தவர் காதலில் வாழும் என்ற தொடர் அடியார்களை குறிப்பிடுவதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருவினை ஒப்பு நிலையை அடைந்து, மலபரிபாகம் அடைந்த அடியார்கள், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல் கருதி, இன்ப துன்பங்களால் சலனம் ஏதும் அடையாமல் இருப்பதால், அவர்களையே துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது. அத்தகைய அடியார்களால் காதலிக்கப்பட்டு அன்பு பாராட்டப்படும் தலைவன் சிவபெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் என்று தானே அடையர்களைக் குறிப்பிட்டு, ஞானசம்பந்தர் தனது நமச்சிவாயப் பதிகத்தினைத் தொடங்குகின்றார். வடம்=வரிசையாக கட்டப்பட்ட மாலை;

திருக்கூட்டச் சிறப்பு அதிகாரத்தில் அடியார் பெருமக்களின் தன்மையை குறிப்பிடும் சேக்கிழார், இன்பமும் துன்பமும் கடந்த நிலையில் அவர்கள் உள்ளதை சிறப்பித்துச் சொல்கின்றார். தங்களது பொருளை இழத்தலால் வரும் கேடும் வளர்தலால் வரும் ஆக்கமும் இல்லாத தன்மை உடையவர்கள் என்று கூறுகின்றார். எந்த பொருளின் மீதேனும் நமக்கு பற்று இருந்தால், அந்த பொருளினைப் பெற்றாலும் அவ்வாறு பெற்ற பொருள் வளர்ந்தாலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அத்தகைய பொருளினை இழந்தால் நமக்கு துன்பம் ஏற்படுகின்றது. அந்த பொருளின் மீது நாம் வைத்துள்ள பற்று நீங்கினால், நமக்கு அந்த பொருள் வளர்ந்தாலும் கெட்டாலும் இன்பமோ துன்பமோ ஏற்படுவதில்லை. இவ்வாறு பற்றற்ற நிலையில் அடியார்கள் இருப்பதாக சேக்கிழார் கூறுகின்றார். எனவே அவர்கள் செம்பொன்னையும் மண் ஓடாக கருதுகின்றனர். மேலும் அவர்கள், தங்களது மனதினில் தோன்றுகின்ற அன்பு காரணமாக, பெருமானைக் கும்பிட்டு வாழ்ந்தால் போதும் என்ற முடிவுடன், வீடுபேற்றினையும் வேண்டாத தன்மையர்களாக விளங்கினார்கள் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

இந்த நிலைக்கு எடுத்துக் கட்டாக அப்பர் பெருமான் வாழ்ந்ததை நாம் அவரது புராணத்திலிருந்து அறிகின்றோம். அப்பர் பிரானின் தன்மையை உலகினுக்கு உணர்த்த பெருமான் திருவுள்ளம் கொள்கின்றார். அப்பர் பெருமான் புகலூர் தலத்தினில் உழவாரத் திருப்பணி செய்து கொண்டு இருந்த போது, பெருமானின் சன்னதிக்கு முன்னர் இருக்கும் முற்றத்தில், பொன்னினொடு நவமணிகளும் கலந்து பொலிந்து விளங்குமாறு பெருமான் பரப்பினார். அதனைக் கண்ட அப்பர் பிரானின் மனதினில் எந்த விதமான சலனமும் ஏற்படவில்லை; மாறாக அடியார்களின் காலில் குத்துமே என்று கற்களை அப்புறப் படுத்தியதைப் போன்று பொன் நவமணிகள் அனைத்தையும் கற்களுடன் சேர்த்து வீசி எறிந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். உருள் பருக்கை=குண்டு குண்டாக இருக்கும் கற்கள்; சேண்=அருகருகே; வாவி=குளம்; உழவாரம் என்ற சொல் இங்கே அப்பர் பிரான் வைத்திருந்த உழவாரப் படையை குறிப்பிடுகின்றது.

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு அவையும்

உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கையுடன் ஒக்க

எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி

வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்

இந்த பாடலில் சிவபெருமான் தனது மனைவியின் விருப்பத்தை மதித்து ஏற்றுக்கொண்டு, பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்தார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இவர் இவ்வாறு கூறுவது, நமக்கு சுந்தரர் கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.58) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. கயிலாய மலையில் சுந்தரர் என்ற பெயருடன் அணுக்கத் தொண்டனாக திருப்பணி செய்து கொண்டிருந்த தன்னை, ஒரு தவறு செய்ததற்காக நிலவுலத்தில் பிறக்கவேண்டும் என்ற தண்டனை விதித்த போது, தான் மனம் கலங்கி பெருமானிடம் நிலவுலகத்து பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு விடுதலை அடைய முடியாமல் தவிக்கும் நிலையினைத் தவிர்த்து தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்று விடுத்த வேண்டுதலை, நினைவில் கொண்டு தன்னை இறக்காமலும் மீண்டும் பிறக்காமலும் காத்த பெருமான் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்ற மனிதர்கள் அடையக்கூடிய இறப்பு அவருக்கு நேரவில்லை என்பதையும், களையாத உடலுடன் அவர் கயிலாயம் சென்றார் என்பதையும் நாம் அறிவோம்; இறப்பு தவிர்க்கப்பட்டதால் அதன் பின்னர் நேரும் பிறப்பும் அவருக்கு தவிர்க்கப் பட்டது அல்லவா. அந்த கருணையை நினைத்துப் பார்க்கும் சுந்தரர், தேவிக்கும் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அருள் புரிந்ததை நினைத்தார் போலும், காஞ்சியில் தவம் புரிந்த பிராட்டியை, பெருமானின் திருமேனியில் ஒரு பாகமாக தான் திகழ வேண்டும் என்று விரும்பிய தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்ட கருணைச் செயலை, மாதினை மதித்து அவளது விருப்பத்தினை நிறைவேற்றிய செயலை இங்கே குறிப்பிடுகின்றார். மாதினை மதித்த மாணிக்கம் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்துத் தன்னருள் தந்த

எம் தலைவனை மலையின்

மாதினை மதித்து அங்கொர் பால் கொண்ட மணியை வரு புனல்

சடையிடை வைத்த எம்மானை

ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை

ஒருவனை எங்கள் பிரானைக்

காதில் வெண் குழையனைக் கடல் கொள மிதந்த கழுமல

வளநகர் கண்டு கொண்டேனே

பொழிப்புரை:

வரிசையாக முத்து மற்றும் மணிகள் கோர்க்கப்பட்ட மாலையினை அணிந்தவளும், மென்மையான மார்பினை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின் விருப்பத்தினை மதித்து, அவளைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அகன்று உயரமான அலைகள் கொண்ட கங்கை நங்கையைத் தனது தாழும் சடையில் சாமர்த்தியமாக மறைத்து வைத்தவரும், தனது மார்பினில் இடமிருந்து வலமாக குறுக்கே வரும் வண்ணம் முப்புரி நூல் அணிந்தவரும், ஆகிய பெருமான், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக நினைத்து அதனால் சலனம் அடையாத மனம் உடையவர்களாக விளங்கும் அடியார்களால் காதலிக்கப்பட்டு வாழ்கின்றார். அத்தகைய பெருமான் வாழ்வது கற்குடி என்று அழைக்கப்படும் சிறந்த மலையாகும்.

பாடல் 2:

அங்கம் ஒராறு உடை வேள்வியான அருமறை நான்கும்

பங்கமில் பாடலோடு ஆடல் பேணி பயின்ற படிறர்

சங்கமதார் குறமாதர் தம் கையில் மைந்தர்கள் தாவிக்

கங்குலின் மாமதி பற்றும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

பாணி=தாளம்; படிறர்=வஞ்சனையாளர்; அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று பெருமான் அவற்றை இயக்கினாலும், அந்த உயிர்களால் பெருமானை காண முடிவதில்லை. ஆராய்ந்தால் தான் அந்த தன்மையையும் நம்மால் உணர முடிகின்றது. இந்த தன்மையை உணர்த்தும் பொருட்டு ஒளிக்கும் சோரனைக் கண்டனம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அப்பர் பெருமானும் வானவர் உட்பட எவராலும் அறிய முடியாத வஞ்சகராக பெருமான் இருக்கும் நிலையினை செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் முதல் பாடலில் கூறுகினார். ஊனினுள் உயிர்=உடலில் உள்ள மனம்: கடுமையான தவத்தின் மூலம் மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாது அடக்கி, இறையுணர்வில் திளைத்து இருத்தல்: உணர்வினார்= இறைவனிடத்தில் தனது உணர்வினை செலுத்தியவர்: நான் எனில் தானே என்னும்=நான், எனது உடல், எனது உடைமை என்ற நினைப்பினை விட்டு, எல்லாம் சிவபெருமானின் செயல் என்ற சிந்தனையுடன் இருத்தல்: வஞ்சர்=நெஞ்சில் நில்லாதவன். உடலை வாட்டுதல், மனம் பொறி வழி செல்லாது ஒன்றி நிற்பதற்காக. கொள்ளும் உணவினை நிறுத்தியோ அல்லது சுருக்கியோ உடலை வாட்டுதல் ஒரு வகை. மேலும் கோடை காலத்தில் வெய்யினில் நின்றும் குளிர் மற்றும் மாரிக் காலத்தில் நீரினில் நின்றும் உடலை வருத்திக் கொள்வதும் பண்டைய நாட்களில் வழக்கத்தில் இருந்தது.

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியராகி

வானினுள் வானவர்க்கும் அறியலாகாத வஞ்சர்

நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்

தேனும் இன்னமுதும் ஆனார் திருச்செம்பொன் பள்ளியாரே

கடுமையான தவத்தை மேற்கொண்டு, மனம் ஐம்பொறிகளின் வழியே செல்லாதவாறு அடக்கி, எப்போதும் இறையுணர்வில் திளைத்து இருக்கும் ஞானிகளுக்கு எளியராக சிவபெருமான் விளங்குகின்றார். தனது நிலையினை பெரிதாக மதித்து ஆணவத்தால் நிமிர்ந்து இருக்கும் தேவர்களால் சிவபெருமானை அறிந்து தங்கள் நெஞ்சினில் சிவபெருமானை நிறுத்திக் கொள்ள முடியாது. தான் மற்றும் எனது என்னும் அகந்தை தரும் உணர்வினை விட்டொழித்து, அனைத்தும் சிவமயம் என்ற உணர்வினை வளர்க்கும், மெய்ஞானம் மிகுந்த அடியார்களின் நெஞ்சினுள்ளே தேனாகவும் அமுதமாகவும், அவர்களின் உள்ளம் தித்தித்து இருக்குமாறு இருப்பவர், திருச்செம்பொன்பள்ளியில் உறையும் இறைவன் ஆவார் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை.

பொழிப்புரை:

ஆறு அங்கங்களையும் உடையதும் வேள்விகள் செய்வதற்கான விதிமுறைகளை விளக்குவதும் ஆகிய அரிய நான்கு வேதங்கள் மற்றும் குற்றமில்லாத பாடல்களை பாடிய வண்ணம் நடனமாடும் பெருமான் இசைக் கலையில் தேர்ந்தவராக தான் பாடும் பாடல்களுக்கு பொருந்தும் வகையில் தனது கைகளால் தாளம் இடுகின்றார். உயிர்களுடன் கலந்து அவற்றை இயக்கும் அவர், உயிர்கள் காணமுடியாத வண்ணம் தன்னை ஒளித்துக் கொள்ளும் வஞ்சகராகவும் உள்ளார். சங்கு வளையல்களை அணிந்த குறமகளிர் தங்களின் கைகளில் ஏந்தப்படும் குழந்தைகள், இரவில் வானில் உலவும் சந்திரனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களது குழந்தைத் தனத்தை வெளிப்படுத்தும் கற்குடி என்று அழைக்கப்படும் சிறந்த மலையினில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 3:

நீரஅகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்

தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்

போர் அகலம் தரு வேடர் புனத்திடை இட்ட விறகில்

காரகிலின் புகை விம்மும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

சென்னி=தலை, இங்கே சடையினை குறிக்கும்; மத்தம்=ஊமத்தை மலர்; நீடிய=நீண்டு செழிப்பாக வளர்ந்த; தாரகை=நட்சத்திரங்கள்; தண்=குளிர்ந்த சந்திரன்; அகலம்=அகலமான மார்பு; புனம்=காடு,

பொழிப்புரை:

பரந்த நீர்ப்பெருக்குடன் வந்த கங்கை நதி பொருந்திய சடையினில், நீண்டு செழிப்பாக வளர்ந்த ஊமத்தை மலர்களைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், நட்சத்திரங்கள் சூழ வானில் வலம் வரும் குளிர்ந்த சந்திரனை, தனது சடையினில் ஒற்றைப் பிறைச்சந்திரனாக தனது சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமான், தலை சிறந்த சைவர் ஆவார். போர் செய்வதற்கு ஏற்ப அகன்ற மார்பினை உடைய வேடர்கள், மலைச் சாரலில் உள்ள காடுகளில் தீ மூட்டுவதற்காக இடப்பட்ட விறகுகளில் கரிய அகில் கட்டைகளும் கலந்திருப்பதால், நறுமணம் வீசும் புகை மலிந்திருக்கும் சிறந்த கற்குடி மலையில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 4:

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு

இருங்களம் ஆர விடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்

மருங்களியார் பிடி வாயில் வாழ் வெதிர் இன் முளை வாரிக்

கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

ஒருங்கு=ஒன்று திரண்ட தேவர்கள்; அளி=காப்பாற்று; உம்பர்கள்=தேவர்கள்; ஓலம்=கூக்குரல்; இரும்=பெருமை வாய்ந்த; வேதங்களை ஓதும் பெருமை உடைய கழுத்து; விடத்தினைத் தேக்கியதால் சிறப்பினை அடைந்த கழுத்து என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உண்ணிய= உட்கொண்ட, உண்ட; உண், உண்ணுதல் என்ற சொற்களை மூலமாகக் கொண்டு ஞானசம்பந்தர் பயன்படுத்திய புதுச்சொல்; மருங்கு=அருகே; களியார்=களிப்புடன்; பிடி=பெண்யானை; வாழ்= இளமையாக வாழும்; வெதிர்=மூங்கில்; கருங்களி=கருத்த யானை; இந்த பாடலுக்கு அழகான விளக்கத்தினை வாகீச கலாநிதி கி.வா.ஜா. அவர்கள் தனது திருமுறை விளக்கம் புத்தகத்தில் அளித்துள்ளார்.

ஆலகால விடத்தின் தாக்குதலால் திசைக்கு ஒருவராக ஓடிய தேவர்கள், நம் அனைவரையும் ஒருங்கே அழித்து விடும் ஆற்றல் கொண்டதாக இந்த விடம் உள்ளதே என்ற கவலையுடன், அனைவரும் சிவபெருமான் இருக்குமிடம் சென்று தங்களை காக்கவேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களது வேண்டுகோளுக்கு இரங்கிய இறைவன், இனிய அமுதினை ஏற்றுக் கொள்வது போன்று மீதம் ஏதும் வைக்காமல் உட்கொண்டு, தனது சிறப்பு வாய்ந்த கழுத்தினில் தேக்கினார் என்று கூறுகின்றார். பாடலின் கடை இரண்டு அடிகளில் யானைகள் ஒன்றுக்கொன்று அன்புடன் பழகும் நிலை குறிப்பிடப்படுகின்றது. பெருமான் ஆலகால விடத்தினை இன்னமுதாக கருதி உண்டமையால் தான், அதன் பின்னர் அமுதம் உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது என்று கி.வா.ஜா. அவர்கள் அந்த கட்டுரையை முடிக்கின்றார்.

பொழிப்புரை:

ஆலகால விடத்தின் நொடியையும் தாங்க முடியாமல், பல திசைகளிலும் சிதறி ஓடிய தேவர்கள், ஒருங்கிணைந்து சிவபெருமான் இருக்கும் இடம் சென்று, ஒரே குரலில் பெருமானே நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓலமிட, அதனைக் கண்ட பெருமான், அவர்கள் பால் இரக்கம் கொண்டு, இனிய அமுது அருந்துவது போன்று ஆலகால விடத்தினை உட்கொண்டு, வேதங்களைச் சொல்வதால் சிறப்பு வாய்ந்த தனது கழுத்தில் பொருந்தும் வண்ணம் தேக்கினான். இத்தகைய கருணைச் செயல் புரிந்த இறைவன் உறையும் தலமாவது, தன்னருகே வரும் தனது அன்புக்குரிய பெண்யானை தளர்வடைந்ததைக் கண்ட கருத்த ஆண் யானை மலைச்சாரல்களில் வளரும் பசுமை வாய்ந்த மூங்கிலை உடைத்து அதன் முளைகளை வாரிக்கொடுக்க, பெண் யானை மகிழ்ந்து உண்ணும் காட்சியினை உடைய கற்குடி மலைச்சாரலாகும்.

பாடல் 5:

போர்மலி திண் சிலை கொண்டு பூதகணம் புடை சூழப்

பார் மலி வேடுருவாகிப் பண்டு ஒருவர்க்கு அருள் செய்தார்

ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி எங்கும்

கார்மலி வேடர் குவிக்கும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

ஒருவர்=அர்ஜுனன்; ஏர்=உழவுத்தொழில்; பன்றிகள் பூமியை நோண்டிக் கொண்டு செல்வது ஏர் கொண்டு உழவர்கள் நிலத்தினை உழுகின்ற காட்சியை நினைவூட்டியது போலும்; கேழல்=பன்றி; வேடுவர்கள் நிறைந்த மலையினைக் கண்ட ஞானசம்பந்தருக்கு பெருமான் வேடுவக் கோலம் பூண்டதும், அந்த கோலம் அனைவராலும் புகழப்பட்டதும் நினைவுக்கு வந்தது போலும். கார்மலி= கருமை நிறம் பொருந்திய; வேடர்கள் சிறந்த செல்வமாக பன்றியினை கருதுகின்றனர். மலையினில் மறைந்துள்ள ஒளி வீசும் கற்களை வெளியே கொண்டு வருதலால் பன்றிகளை சிறந்த செல்வமாக வேடர்கள் மதித்தனரோ என்றும் நமக்குத் தோன்றுகின்றது. மேலும் பன்றி அவர்களுக்கு உணவாக பயன்பட்டது என்பதை கண்ணப்பர் சரித்திரத்திலிருந்து உணர்கின்றோம். .

பொழிப்புரை:

போர்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் திண்மையான வில்லினைக் கொண்டு, பூதகணங்கள் தன்னைத் தொடரும் வண்ணம், இன்று வரையிலும் உலகத்தவரால் மிகவும் அதிகமாக புகழப்பட்டு வரும் வேடுவக்கோலம் தாங்கிய வண்ணம் வந்த பெருமான், பண்டைய நாளில் அர்சுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்து அருள் புரிந்தார். காட்டுப் பன்றிகள் உழவர்களைப் போன்று மிகவும் ஆழமாக தோண்டுவதால், பூமியிலிருந்து வெளிப்பட்ட இனிய ஒளி வீசும் மாணிக்கக் கற்களைத் திரட்டி, கருமை நிறம் உடைய வேடர்கள் குவிக்கும் மலைச்சாரலை உடைய கற்குடி மலையே, பெருமான் உறையும் இடமாகும்.

பாடல் 6:

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊரிடு பிச்சையராகி

விலங்கல் வில் வெம் கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்

நலம் தரு சிந்தையராகி நா மலி மாலையினாலே

கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

உலந்தவர்=இறந்து போனவர்கள்; விலங்கல்=மலை, இங்கே மேரு மலை; கனல்=தீக்கடவுளை தனது முனையாகக் கொண்ட அம்பு; எயில்=கோட்டை; மூ எயில்=மூன்று பறக்கும் கோட்டைகள்; முனிதல்=கோபம் கொள்ளுதல்; திரிபுரத்தை எரித்த செய்த செய்கை பிச்சையராகி என்ற தொடருக்கு அடுத்து கூறப்படுவதன் காரணம் சிந்திக்கத் தக்கது. பொதுவாக பிச்சை ஏற்பவர்கள் ஆற்றல் ஏதும் இல்லாதவர்களாக, தங்களுக்குத் தேவையான உணவினையும் மற்ற பொருட்களையும் தாங்களே தேடிக் கொள்ளும் ஆற்றல் அல்லாதவர்களாக இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் இறைவன் பிச்சை ஏற்றது அவனது திறமையற்ற நிலை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், திரிபுரத்தை எரித்த ஆற்றல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த குறிப்பு நமக்கு திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் பாடலை நமக்கு நினைவூட்டுகின்றது. தாய் தந்தை இல்லாதவனாக, சுடுகாட்டினைத் தான் வாழும் இடமாகக் கொண்டு புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள பெருமான் தனியனாக ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றானே ஏன் என்று முதல் பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு பதிலாக அடுத்தவள், தனியனாக இருந்தாலும் பெருமான் கோபம் கொண்டால், அவனது கோபத்தைத் தாங்க முடியாமல் அனைத்து உலங்கங்களும் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதாக இந்த திருவாசகப் பாடல் அமைந்துள்ளது. அதனைப் போன்றே, பிச்சை எடுத்தாலும் பெருமான் கோபம் கொண்ட போது மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்தான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்தும் கற்பொடி காண் சாழலோ

எனவே இறந்து போன தேவர்களின் எலும்புகளை ஆபரணமாக அணிந்து கொண்ட தன்மையோ, பல இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்கும் தன்மையோ பெருமானின் இயலாமையை குறிக்கவில்லை. மாறாக அவனது ஒப்பற்ற தன்மையையே குறிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும் என்பதே இந்த பாடலில் உணர்த்தப்படும் கருத்தாகும். திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழிந்த பின்னர், ஊழிக் காலத்தின் முடிவினில், பெருமான் அவர்களது எலும்பினை மாலையாக அணிந்து கொண்டு, எக்காலத்தும் தான் ஒருவனே நிலையாக அழிவின்றி இருப்பவன் என்பதை உணர்த்துகின்றான். அது போன்றே ஊரூராக திரிந்து சென்று பிச்சை எடுப்பதன் மூலம், தான் ஒருவனே உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அவர்களது வினைகளை முற்றிலும் அழித்து, அதற்கு பதிலாக வீடுபேற்றினை பரிசாக தரும் ஆற்றல் கொண்டவன் என்பதையும் உணர்த்துகின்றான்.

நாமலி மாலை=பாமாலை; நலம்தரு சிந்தையர்=அனைவருக்கும் எப்போதும் நன்மைகளை விளைவிக்கும் சிந்தனையுடன் இருக்கும் சான்றோர்கள்; காமம் வெகுளி மயக்கம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குணங்கள், மனதின் குற்றமாக கருதப் படுகின்றன. இந்த ஆறு குணங்களால் வரும் சிந்தனைகள், மற்ற உயிர்களுக்கு நாம் தீங்கிழைக்க காரணமாக உள்ளன. எனவே இந்த ஆறு குற்றங்களை நீக்கிய சான்றோர்கள், அடுத்தவர்க்கு தீங்கு செய்யும் சிந்தை அற்றவர்களாக, அனைவர்க்கும் நலம் தரும் சிந்தனைகளை உடையவர்களாக உள்ளனர்; மேலும் நாமலி மாலையினாலே கலந்தவர் என்பதன் மூலம், இறைவனின் புகழினைக் குறித்து பாடப்படும் பாடல்கள் மற்றும் தோத்திரங்கள் ஆகியவற்றின் பொருளை முழுதுமாக உணர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களது மனம் அவர்கள் பாடும் பாடும் பாடல்களுடன் ஒன்றி இருக்க, மனம் ஒன்றிய மனத்தவராக அவர்கள் விளங்குகின்றனர். இவ்வாறு மனம் ஒன்றி தன்னை வழிபடும் மனிதர்களின் அன்பினை பெருமான் மிகவும் விரும்புவதால், அத்தகைய மனிதர்களின் அன்பினில் பெருமான் வாழ்கின்றார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

இறந்து போன தேவர்களின் எலும்புகளைத் தனது உடலில் அணிந்தவராக, தான் ஒருவனே என்றும் அழியாமல் நிலைத்து நிற்பவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். மேலும் ஊரூராகத் திரிந்து பலரும் இடும் அவர்களது மூன்று மலங்களாகிய பிச்சையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வீடுபேற்றினை பரிசாக அளிக்கின்றார். இத்தகைய பெருமான், திரிபுரத்து அரக்கர்கள் மீது கோபம் கொண்டவராக, மேருமலையை வில்லாக வளைத்து, தீக்கடவுளை முனையாகக் கொண்ட அம்பினை அந்த வில்லினில் பூட்டி எய்து, மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியச் செய்தார். தங்களது மனதினில் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் காமம், குரோதம், மோகம், உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய தீய குணங்கள் அற்றவர்களாக அனைத்து உயிர்களுக்கும் நலம் பயப்பவர்களாக இருப்பார்கள்; அத்தகைய அடியார்கள், தாங்கள் சொல்லும் தோத்திரங்கள் மற்றும் பாடல்களின் பொருள்களை முழுதும் உணர்ந்தவர்களாக, மனம் ஒன்றி இறை சிந்தனை தவிர்த்து வேறெந்த சிந்தனையும் அற்றவர்களாக, இறைவன் பால் செலுத்தும் அன்பினில் வாழும் சிவபெருமான், கற்குடி மலையில் உறைகின்றார்.

பாடல் 7:

மானிடம் ஆர் தரு கையர் மாமழு ஆரும் வலத்தர்

ஊனிடையர் தலை ஓட்டில் உண்கலனாக உகந்தார்

தேனிடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்திக்

மானிடை வேடர் விளைக்கும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

மானிடம் என்பதை மான் இடம் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும், பாடலில் உள்ள எதுகை அழகினை ரசிப்பதற்காக சொற்கள் பிரிக்காமல் கொடுக்கப் பட்டுள்ளன. ஆர்தரு= பொருந்திய; சந்து=சந்தன மரம்; சிறை=கிளைகள்; திண்=வலிமையான; மலைச்சாரல் என்பதால் ஏரினை பயன்படுத்தி உழுதல் கடினம் என்பதால், மரக் கொம்புகள் கொண்டு நிலத்தினைக் கிளறி பயிர் செய்தனர் என்று குறிப்பிடுவதன் மூலம், ஞானசம்பந்தர் எந்த அளவுக்கு தான் சென்ற தலங்களின் இயற்கைக் காட்சிகளை ரசித்தது மட்டுமன்றி அவற்றை சுவையாகவும் தனது பதிகங்களில் கலந்துள்ளார் என்பதை உணரும் நாம் வியப்பினை அடைகின்றோம். பொதுவாக ஞானசம்பந்தரின் பாடல்களில் இயற்கை காட்சிகளின் வருணனை மிகுந்த சுவையுடன் இருப்பதை நாம் உணரலாம். அதே சமயத்தில் அவருடன் பல தலங்களுக்கு ஒன்றாக சென்ற அப்பர் பிரான், அத்தகைய வர்ணனைகளை தவிர்த்துள்ள தன்மையையும் நாம் காணலாம். இந்த தன்மைக்கு ஒரு சுவையான விளக்கத்தை கி.வா.ஜா. அவர்கள் அளிக்கின்றார்.

நாம் குடும்பத்தோடு இரயில் பயணம் செல்லும் போது நடக்கும் நிகழ்ச்சியை நினைவூட்டி, அவர் விளக்கம் அளிக்கின்றார். பேரனும் அவனது பாட்டனாரும் இரயில் பயணம் செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். சிறுவனாகிய பேரன், பெட்டியின் ஓரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு வருவதை விரும்புவதையும், அவனுக்கு ஓரத்தில் உள்ள இருக்கையை ஒதுக்கி விட்டு, பெரியவர் நடுவில் அமர்ந்த வண்ணம் ஒரு புத்தகத்தையோ அன்றைய செய்தித் தாளையோ பிரித்துக் கொண்டு அதில் ஆழ்ந்து விடுவதை காண்கின்றோம். தேவாரப் பாடல்கள் எனப்படும் இரயில் வண்டியில் ஒன்றாக பயணம் செய்த ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் ஆகிய இருவரில், சிறுவனாகிய திருஞானசம்பந்தர் இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறே செல்ல, அப்பர் பிரானோ இறையுணர்வு என்ற செய்தித் தாளில் முழுதும் ஆழ்ந்தவராக பயணம் செய்கின்றார். இவ்வாறு தான் ரசித்த இயற்கை காட்சிகளை, ஞானசம்பந்தர் தனது பாடல்களில் பதிவு செய்தமையால் அவரது பாடல்களில் இயற்கை காட்சிகள் பற்றிய வர்ணனை அதிகமாக உள்ளது என்று விளக்கம் கி.வா.ஜா. அவர்களால் அளிக்கப்படுகின்றது.

இவ்வாறு வேடுவர்கள் நிலத்தைக் கிளறி தினை விதைக்கும் தன்மையை உணர்த்துவதன் மூலம் ஒரு தத்துவத்தை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக தருமை ஆதீனக் குறிப்பு சுவையான விளக்கம் அளிக்கின்றது. ஆன்மாக்களுக்கு வினைகளால் ஏற்படும் போகம், அவை உய்வினை அடைதற்கு தடையாக இருப்பின் அந்த தடையை நீக்கி, சிவபோகத்தை வித்தாக இட்டு விளைச்சல் தரும் புண்ணிய பூமி கற்குடி தலம் என்று உணர்த்தப் படுகின்றதே என்பதே அந்த விளக்கம்.

பொழிப்புரை:

தனது இடது கையினில் துள்ளி ஓடும் மான் பொருந்தியவரும், தனது வலது கையினில் மழு ஆயுதம் பொருந்தியவரும் ஆகிய பெருமான், இடையிடையே தசைத் துணுக்குகள் பொருந்திய பிரம கபாலத்தை தான் உணவு உட்கொள்ளும் கலனாக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார். இடையிடையே தேன் கூடுகள் நிறைந்த சந்தன மரத்தின் வலிமையான கிளைகளை ஒடித்து அவற்றின் உதவி கொண்டு நிலத்தினைக் கிளறி, தினை விதைகளை விதைத்து பயிர் செய்யும் வேடர்கள் வாழ்கின்ற காட்டினைக் கொண்ட கற்குடி மலையே இறைவன் உறையும் இடமாகும்.

பாடல் 8:

வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்த்

தோளமர் வன் தலை குன்றத் தொல் விரல் ஊன்று துணைவர்

தாளமர் வேய் தலைப் பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்

காளமதார் முகில் கீறும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

தலை குன்ற=தலை நசுங்க; தொல் என்ற சொல்லினை துணைவர் என்ற சொல்லுக்கு முன் வைத்து பொருள் காணவேண்டும். தொல் துணைவர்=பண்டைய காலம் தொட்டே உயிருக்குத் துணையாக இருந்த வரும் இறைவன்; தாள்=அடி, இங்கே மூங்கில் மரத்தின் வேர்ப் பாகத்தை குறிக்கின்றது; வேய்=மூங்கில்; கரி=ஆண் யானை; யானை வளைத்து விட்ட மூங்கில், வானில் உலவும் மேகத்தினைக் கீறியதால், மழை பொழிந்தது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இறைவனின் திருவருள் துணையாக இருந்தால், உயிர்களை மறைத்திருக்கும் ஆணவமலப் படலத்தை கிழித்தெறிந்து, அவனது அருள் மழையினில் நனைந்து இன்புறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது என்று தருமை ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. காளமதார்= கருத்து, நீர் நிறைந்து காணப்படும் மேகங்கள்

பொழிப்புரை:

வாட்போரில் வல்லமை பெற்றவனாக தன்னை நினைத்து செருக்குடன் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமை மிகுந்த தோள்களும் அந்த தோள்களின் மீது அமர்ந்துள்ள தலைகளும், கயிலை மலையின் கீழே அகப்பட்டு நசுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான்; அவர் அனைத்து உயிர்களுக்கும் பண்டைய நாளிலிருந்து துணைவராக இருந்து பாதுகாத்து வருகின்றார்; வரும் நாட்களிலும் அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் இறைவன் உறைகின்ற கற்குடி மலையின் தன்மை சொல்கின்றேன்; செழித்து வளர்ந்துள்ள மூங்கில் மரத்தினை வேரோடு பிடுங்கி எறிய முயற்சி செய்யும் யானை, மரத்தின் நுனியைப் பற்றி கீழே இழுக்கிறது; பின்னர் தனது இயலாமையை உணர்ந்து விட்டுவிட, யானையால் வளைக்கப்பட்ட மூங்கில் வேகமாக நீண்டு நிமிர்ந்து, வானில் உலவும் நீர் நிறைந்த கருமேகங்களை கீற, திருமாலின் மேனி நிறத்தைப் போன்று கருமையாக உள்ள அந்த மேகங்கள் பொழியும் மலைச்சாரலை உடையது கற்குடி மலையாகும்.

பாடல் 9:

தண்டமர் தாமரையானும் தாவி இம்மண்ணை அளந்து

கொண்டவனும் அறிவொண்ணாக் கொள்கையர் வெள்விடை ஊர்வர்

வண்டு இசையாயின பாட நீடிய வார் பொழில் நீழல்

கண்டமர் மாமயில் ஆடும் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

சோலைகள் அடர்ந்து கிடப்பதால் மரங்களின் நிழல்கள் கருமையான நிழல்களை மேகம் என்று தவறாக கருதி மயில்கள் நடமாடுகின்றன என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

நீண்ட தண்டுகளை உடைய தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும், திரிவிக்ரமனாக இருந்த போது தாவி தனது இரண்டு அடிகளால் விண் மற்றும் மண்ணுலகத்தை அளந்தவனும் ஆகிய திருமாலும், கண்டு அறியமுடியாத வண்ணம் நீண்ட பெருந்தழலாக நிமிர்ந்து அவர்கள் இருவருக்கும் அவர்களது உண்மை நிலையை உணர்த்தியவர் சிவபெருமான்; அவர் வெண்ணிற இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டு ஊர்கின்றார். அவர் உறைகின்ற கற்குடி மலையினில், நெருங்கி அடர்ந்து வளர்ந்த மரங்களின் நிழலினை கரிய மேகங்கள் என்று தவறாக கருதும் மயில்கள், ஆங்கு உள்ள வண்டுகள் பாடும் இசைக்கு ஏற்ப நடனமாடுகின்றன.

பாடல் 10:

மூத்துவர் ஆடையினாரும் மூசுக் கடுப்பொடியாரும்

நாத்துவர் பொய்ம் மொழியார்கள் நயமில் அரா மதி வைத்தார்

ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடர் எல்லாம்

காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலையாரே

விளக்கம்:

மொழியார்கள் என்ற சொல்லினை பொய்ம் மற்றும் நயமில் ஆகிய இரண்டு சொற்களுடன் கூட்டி பொருள் கொள்ளவேண்டும்; மூத்துவராடை=மூன்று வகையான துவர் ஆடைகள்; உள்ளாடை, இடுப்பில் அணியும் ஆடை மற்றும் மார்பின் மேல் போர்த்துக் கொள்ளும் ஆடை என்று மூன்று வகையான ஆடைகள்; மூசுப்பொடி=மிகுதியான பொடி; கடுப்பொடி=கடுக்காய்ப் பொடி என்றும் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றையும் கலந்த பொடி என்றும் விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு சமணர்கள் பொடியை உட்கொள்வது, மிகவும் அதிகமாக தாங்கள் உட்கொண்ட உணவினை ஜீரணம் செய்வதற்கும் தங்களது வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் என்று இரண்டு விதமான பயன்களைத் தரவல்லது. ஏத்தும்=புகழ்ந்து வணங்கும்; நாத்துவர்=நாக்கு கூசுவதையும் பொருட்படுத்தாமல் உரைக்கும் பொய் மொழிகள்; நாக்கூசாது பொய்களை உரைத்தவர்கள் என்று குறிப்பிட்டு, அந்நாளைய புத்தர்களும் சமணர்களும் தாங்கள் கூறுவது பொய் என்று தெரிந்தே கூறினார்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உயர் பத்தர் என்று கூறியமையால், உயர்ந்த பத்து குணங்களை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. காமரு=அழகு மிகுந்த:

பொழிப்புரை:

மூன்று வகையான துவர் ஆடையினை பயன்படுத்தும் புத்தர்களும், மிகுதியாக கடுக்காய்ப் பொடியினை உட்கொள்ளும் சமணர்களும், தங்களது நா கூசுவதையும் பொருட்படுத்தாமல் பொய்யான மொழிகளையும் நயமற்ற மொழிகளையும் பேசுகின்றனர். பாம்பினையும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் தனது சடையில் வைத்துள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும் உயர்ந்த நிலையில் உள்ள பத்தர்களும் சித்தர்களும், இறைவனை வேண்ட, அவர்களது இடர்களை ம்குற்றிலும் நீக்கி அவர்களை காத்து அருள் புரியும் பெருமான் உறையும் இடம், அழகிய சோலைகள் நிறைந்த கற்குடி மலையாகும்.

பாடல் 11:

காமருவார் பொழில் சூழும் கற்குடி மாமலையாரை

நாமரு வண் புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம்பந்தன்

பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாட வல்லார்கள்

பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே

விளக்கம்:

பொன்னுலகம் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுவது இந்திரலோகம் அல்ல. அதனினும் மேலான சிவலோகம் அல்லது கயிலை மலை என்று பொருள் கொள்ளவேண்டும். வானவர்களுடன் என்று குறிப்பிட்டிருப்பதால், தேவர்கள் வாழும் இந்திரலோகம் என்றும் பலர் பொருள் கொள்கின்றனர். வானவர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள். தாங்கள் பெருமான் பால் வைத்திருந்த அன்பின் மிகுதியால், பெருமானின் அருளுடன் வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்ட தன்மையால் ஏனையோரினும் உயர்ந்தவர்களாக இருக்கும் தன்மையால் வானவர்கள் என்று குறிப்பிடப் பட்டனர் என்று பொருள் கொள்வது சிறப்பு. களையா உடலோடு கயிலாயம் சென்றவர்கள் சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் தான் என்பதை நாம் சுந்தரரின் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். தான் கயிலாயம் அழைத்துச் செல்லப்பட்ட தன்மையையும், தனக்கு அங்கே கிடைத்த வரவேற்பையும், தான் அங்கே கண்ட காட்சிகளையும், இறைவன் தன்னை மற்றவர்க்கு அறிமுகப்படுத்தியதையும் இந்த பதிகத்தின் பாடல்களில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஒரு பாடலில் (7.100.5) பொன்னுலகம் என்று தான் கயிலாயம் சென்றபோது அங்கே தான் கண்ட காட்சியை இந்த பாடலில் விளக்குகின்றார். மண்ணுலகில் இறைவனை வாழ்த்திய வழியடியார்கள் அனைவரும் அங்கிருந்ததை தான் நேரில் கண்டதாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்

பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டு ஒழிந்தேன்

விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்

என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே

பெருமானின் திருவடிகள் நமக்கு அளிப்பன எவையெவை என்பன என்று பட்டியலிடும் அப்பர் பிரான் (4.92.11) பொன்னுலகம் என்று சிவலோகத்தையும் குறிப்பிடுகின்றார். மனத்தன=மனதினில் இருப்பன: உமையம்மை சிவபிரானை மனதினில் நிறுத்தி தவம் செய்த வரலாறு உணர்த்தப்படுகின்றது. புலை=புன்மைத் தன்மை, இழிந்த நிலை: தேவர் உலகத்தில் வாழும் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு உட்பட்டவர்களே; எனவே பொன்னுலகம் என்று கயிலாயத்தை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும். அலைகள் மிகுந்த காவிரி நதியால் சூழப்பட்ட திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறனின் திருவடிகள், மலையரசனின் மகளாகிய உமையம்மையின் மனதினில் நிலையாக இருப்பன; இறைவனின் திருவடிகளை எப்போதும் வானவர்கள் வணங்குவதால், அவர்களின் முடிகளில் நிலையாக இருப்பன; சிவபெருமானை வழிபட்டு நிற்கும் அடியார்களால் மதிக்கப்படுவன: இழிந்த நிலையாக மதிக்கப்படும் பிறவிப் பிணியை நீக்கும் தன்மை படைத்தன, மற்றும் அடியார்களுக்கு பொன்னுலகம் அளிப்பன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்துப்

புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்

அலையார் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே

மாற்பேறு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பாடலில் (5.59.5), மாற்பேறு மறையவனைத் தொழும் அடியார்கள் பொன்னுலகம் சென்று சேர்வார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அறைய=ஒலி எழுப்ப; அறை=வண்டுகள் எழுப்பும் ஒலி; பொன்னுலகம் என்பதற்கு தேவர்கள் உலகம் என்றும் கயிலாயம் என்று இருவிதமாக பொருள் கொள்ளலாம். சிவபெருமானை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலையாக இருப்பார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பொன்னுலகம் என்பது பொதுவாக தேவலோகத்தை குறிக்கும். ஆனால் இங்கே இந்த சொல் இறைவன் வாழும் கயிலாயத்தை குறிப்பதாக பொருள் கொள்வது மிகவும் ;பொருத்தமாக உள்ளது.

வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்

வார்கொள் நன்முரசம் அறைய அவ்வறை

வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு

வார்கள் மன்னுவர் பொன்னுலகத்திலே

திருஞானசம்பந்தர் மயிலாடுதுறை (3.70) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், தேவார பாடல்களை இசையுடன் இணைத்து பாடும் அடியார்கள் பொன்னுலகம் பெறுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானிடம் உள்ள சூலப் படையின் சிறப்பு இந்த பாடலில் கூறப்படுகின்றது. நிலவுலகில் வாழ்வோர் மற்றும் வானுலகில் வாழ்வோர் எவரையும் பொருட்படுத்தாத படை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். காதன்மை=ஒப்பற்ற அன்பு, காதல்

நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாததொரு சூலமொடு

பேய்க்

கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்ததொரு

காதன்மையால்

மணம் தண்மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையைப்

புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரை செய்வர் பெறுவர்

பொன்னுலகே

வண்புகழ்=வண்மை தன்மை உடைய சீர்காழி நகரம். வண்மை=கொடை, உண்மை, வளம், புகழ், வலிமை என்று பல் பொருட்சொல்; கொடை என்ற பொருள் இங்கே பொருத்தமாக இருக்கும். பூமலி=அழகு மிகுந்த;

பொழிப்புரை:

அழகிய நீண்ட சோலைகளால் சூழப்பட்ட, கற்குடி தலத்தினில் உறையும் இறைவனை சிறப்பித்து, அனைவரின் நாவிலும் எந்நாளும் பொருந்தி வாழும் கொடையாளர்கள் வாழும் சிறப்பினை உடைய சீர்காழி நகரினில் வாழ்பவனும், சைவநலம் திகழப் பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், பாடிய பாடல்கள் பொருந்திய செந்தமிழ் மாலையில் உள்ள பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் உயர்ந்த தன்மை படைத்து முக்தி நிலை அடைந்த அடியார்களுடன் கூடி அழகு மிகுந்த சிவலோகத்தில் பொலிந்து விளங்குவார்கள்.

முடிவுரை:

ஒரு மாதினை முடியிலும் மற்றொரு மாதினை தனது உடலிலும் வைத்ததுள்ள பெருமான் என்று குறிப்பிட்டு, இருவர் அருகில் இருந்தாலும் போக நிலையில் ஆழ்ந்து விடாமல் தனது புலன்களை வென்றவராக பெருமான் இருக்கும் தன்மை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இரண்டாவது பாடலில் உயிர்கள் தன்னைக் காணாத வண்ணம் ஒளித்துக் கொள்ளும் பெருமான் என்று குறிப்பிட்டு, அவனை நாம் காணவேண்டும் என்று விரும்பினால் அவன் பால் அன்பு செலுத்துவது ஒன்றே வழி என்று உணர்த்துகின்றார். மூன்றாவது பாடலில் பெருமானே ஆதிசைவர் என்று கூறுகின்றார். நான்காவது பாடலில், தலத்தில் வாழும் விலங்குகளும் அன்பின் வயப்பட்டு இயங்குவதை குறிப்பிட்டு, பெருமானின் சன்னதியில் அன்புக்கே முதலிடம் என்று கூறுகின்றார். மேலும் தேவர்கள் வேண்ட அவர்கள் பின்னாளில் அமுதம் பெறுவதற்கு வழிவகுக்கும் பொருட்டு பெருமான் தானே விடம் உட்கொண்ட செய்கையை குறிப்பிட்டு, பெருமானின் செயலிலும் அன்பு மிளிர்வதை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார். வேடர்களின் சிறப்பினை உணர்த்த, பண்டைய நாளில் வேடுவனாக வேடம் தரித்து அர்ஜுனனுக்கு அருள் செய்ததை ஐந்தாவது பாடலில் குறிப்பிடுகின்றார். தலை சிறந்த அடியானாகத் திகழ்ந்த கண்ணப்பரும் ஒரு வேடுவர் தானே. எலும்பினை ஆபரணமாக அணிந்தும், உணவிற்காக பிச்சை எடுப்பது போன்று எளிமையான கோலத்துடன் காணப்பட்டாலும், பெருமானின் ஆற்றல் எல்லையற்றது என்பதை திரிபுரத்து நிகழ்ச்சி மூலம் ஆறாவது பாடலில் குறிப்பிடுகின்றார்.

ஏழாவது பாடலில் உயிர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் வினைப் போகத்தை இறைவனின் கருணை விளக்கி, சிவபோகத்தை அவர்களது மனதினில் விதைக்கும் புண்ணிய பூமி கற்குடி என்று கூறப்படுகின்றது. எட்டாவது பாடலில் இறைவனின் திருவருள் துணையாக இருந்தால், நம்மை மூடியிருக்கும் ஆணவமலப் படலத்தைக் கிழித்துக் கொண்டு, இறைவனின் அருள்மழையில் நாம் நனைந்து உய்யலாம் என்று சொல்லப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் இறைவனின் அளவில்லா ஆற்றலும் அன்பு ஒன்றே இறைவனை காண்பதற்கும் உணர்வதற்கும் சிறந்த வழி என்பது உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடலில், தன்னை வணங்கும் அடியார்களின் இடர்களை நீக்கும் தன்மை உடையவர் பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. கடைப்பாடலில் பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் இந்த பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் பொன்னுலகில் பொலிவார்கள் என்று கூறப்படுகின்றது. இறைவனின் பெருமையை இந்த பதிகம் மூலம் உணர்ந்த நாமும், கற்குடி தலம் சென்று இறைவனைப் பணிந்து வணங்கி, ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தினைப் பாடி இம்மையில் நமது இடர்கள் தீர்க்கப்பட்டு மறுமையில் பொன்னுலகம் சென்றடைந்து பொலிவுடன் இருப்போமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Vadanthigazh Menmulai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வடந்திகழ் மென்முலையாளை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: