Go Back
22/03/21
பொடியுடை மார்பினர்
பொடியுடை மார்பினர் - பின்னணி:
நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகா, சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வாழ்கொளிபுத்தூர் வந்து அடைகின்றார். இந்த தலம் வந்தடைந்த சம்பந்தர், கருங்குவளை மலர் போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய இறைவரின் திருவடிகளை வணங்கி திருப்பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பதிகங்கள் பாடி நீடுவார் என்று குறிப்பிட்டுள்ளமையால் பல பதிகங்கள் சம்பந்தர் இந்த தலத்து இறைவனை குறித்து பாடியிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் நமக்கு இந்த பதிகமும் சாகை ஆயிரம் உடையார் என்று தொடங்கும் மற்றொரு பதிகமே கிடைத்துள்ளது.
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
தலத்து இறைவின் திருநாமம் மாணிக்க வண்ணர்; இறைவியின் திருநாமம் வண்டார் பூங்குழலி. திருமால் வழிபாட்டு தாபித்த மாணிக்கலிங்கம் என்று கருதப்படுகின்றது. மாணிக்க வண்ணர் உறையும் தலம் என்ற நிலை, சம்பந்தர்க்கு பெருமானின் கருமை நிறம் உடைய கண்டத்தை நினைவூட்டியது போலும். கறைமிடற்றான் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சேக்கிழாரும் மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் கார் வளர் கண்டர் என்று கூறுவதை நாம் உணரலாம். சம்பந்தர் இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பெருமானின் திருப்பாதங்களைப் பணிந்து இறைவனைப் காண்போம் என்று கூறியதை மனதினில் கொண்டு சேக்கிழார் இந்த பாடலில் கண்டர் தாள் பணிந்து காண்பவர் என்று திருஞானசம்பந்தரை குறிப்பிடுகின்றார்.
மயிலாடுதுறையிலிருந்து பதினாறு கி.மீ. தொலைவில் உள்ள தலம். மாயவரம் நகரிலிருந்து மணல்மேடு செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலின் அருகே உள்ள கிடாத்தலைமேடு என்ற இடத்திருந்தும் செல்லலாம். மயிலாடுதுறை மற்றும் வைத்தீசுவரன் கோயிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தற்போது வாளொளிபுத்தூர் என்று அழைக்கப் படுகின்றது. தீர்த்த யாத்திரையின் போது இங்கே வந்த அர்ஜுனனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது என்றும், அருகில் நீர்நிலைகள் ஏதும் இல்லாமையால் தாகத்துடன் தவித்த அர்ஜுனனின் எதிரில் ஒரு முதியவர் தோன்றினார் என்றும், அவரது கையில் தனது வாளைக் கொடுத்துவிட்டு அவர் காட்டிய இடத்தில் (வன்னி மரத்தின் அடியில்) தோண்டி ஊற்றெடுத்து வந்த நீரைக் குடித்த அர்ஜுனன் நனது வாளினை திரும்பப் பெற்றுக்கொண்ட பின்னர் முதியவராக வந்த சிவபெருமான் மறைந்து விட்டார் என்றும் கூறுவார்கள். துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த பதிகம் அகத்தியர் தேவாரத் திரட்டில் திருவடிப் பெருமை என்ற தலைப்பின் கீழே சேர்க்கப் பட்டுள்ள பெருமையினை உடையது. பாடல் தோறும் பெருமானின் திருவடிகளை காண்போம் என்றும் திருவடிகளில் சேர்வோம் என்றும் திருவடிகளைத் தொழுவோம் என்று முதல் பத்து பாடல்களில் கூறப் படுவதை நாம் உணரலாம். அரவணையான் என்று தொடங்கும் அப்பர் பிரானின் திருவதிகைப் பதிகமும் அந்தணாளர் என்று தொடங்கும் சுந்தரரின் திருப்புன்கூர் பதிகமும் இந்த தலைப்பின் கீழ் உள்ள மற்ற பதிகங்கள்.
பாடல் 1:
பொடியுடை மார்பினர் போர்விடை ஏறிப் பூதகணம்
புடைசூழக்
கொடியுடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பல பல கூறி
வடிவுடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்க்
கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிடற்றான் அடி
காண்போம்
விளக்கம்:
பொடி=திருநீறு; கொடியுடை=அழகிய கொடிகள் நிறைந்த; மிடறு=கழுத்து; கடி=நறுமணம்; வாகனத்தில் ஏறி பலர் புடை சூழ செல்வதால், பெருமான் பிச்சை ஏற்பது அவரிடம் ஏதும் இல்லாத காரணத்தால் அல்ல என்பதும், பெருமான் பிச்சை ஏற்றாலும் தலைவனாக உள்ளார் என்பதையும் உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசியவரும் போர்க்குணம் கொண்டுள்ள எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பூத கணங்கள் புடை சூழ, செடிகொடிகள் நிறைந்த பல ஊர்கள் சென்று வேதங்களை சொல்லியவாறு பிச்சை ஏற்கச் செல்பவரும், அழகிய உருவமும் வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களும் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று, உலகத்தவர் வாழும் பொருட்டு பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சினை உண்டு அதனைத் தனது கழுத்தினில் தேக்கி கருமை நிறத்து கறை தெரியும் வண்ணம் தோற்றம் அளிக்கும், இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.
பாடல் 2:
அரை கெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம்
அசைத்து ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்திப் போர்விடை ஏறிப் புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஓர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்க்
விரை கமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி
சேர்வோம்
விளக்கம்:
புரை=ஓட்டை; தசைகள் நீக்கப்படுவதால் ஏற்பட்ட ஓட்டை, சேர்த்தல்=மனதினால் சேர்ந்து பிரியாது இருத்தல், இடைவிடாது தியானித்தல்; வரை=மலை, இமயமலை; விரை=மணம். சந்தம் நோக்கி மகரம் மிகுந்தது என்று கூறுவார்கள்
பொழிப்புரை:
இடையில் கட்டிய கோவண ஆடையின் மேலோர் அரவத்தினைச் சுற்றி தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைப்பவனும், ஓட்டை உடைய வெண்தலை ஓட்டினைத் தனது கையில் ஏந்தி பலி ஏற்கச் செல்பவனும், போர்க்குணம் கொண்ட இடபத்தின் மீதேறி எங்கும் திரிபவனும், அனைவரும் புகழும் வண்ணம் மலை மங்கை என்று அழைக்கப்படும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, விரிந்த சடையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி இடைவிடாது அவனது திருவடிகளை தியானித்து இருப்போமாக,
பாடல் 3:
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன் தலை
அங்கையில் ஏந்தி
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி
வாள் நெடுங்கண் உமை மங்கை ஓர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்த்
தாள் நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள் நிழல்
சார்வோம்
விளக்கம்:
இந்த பாடலில் பிச்சை ஐயம் என்ற இரண்டு சொற்களையும் சம்பந்தர் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம். இரண்டும் ஒரு பொருளை உணர்த்துவது போல் தோன்றினும் சிறிய மாறுபாடு உள்ளது. ஐயம் என்பது இடுவோர் இரவலரைத் தேடிச்சென்று இடுவது. பலி என்பதும் இதே பொருளில் வருகின்றது. பிச்சை என்பது இரப்போர் இடுவோரைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வது. ஔவையார் இந்த மாறுபாட்டினை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஐயம் இட்டுண் என்று, தாங்கள் இடும் பிச்சை பெறுகின்ற ஆட்களைத் தாங்களே தேடிக் கொண்டு இடுவோர் செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று, ஏழையாக இருப்போர் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு, தாங்களே தங்களுக்கு உதவி செய்வோர்களைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். அதனால் தான் பிச்சை இழிவாகவும் ஐயம் உயர்ந்ததாகவும் கருதப் படுகின்றது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.
பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே
இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.
ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்
பெருமான் பலி ஏற்க வருவதையோ அவனது கையில் இருக்கும் பாத்திரத்தையோ நாம் இகழலாகாது என்பதை உணர்த்தும் வண்ணம் அருவருக்கத் தகாத வெண்தலை என்று செம்பொன்பள்ளி குறுந்தொகை பாடலில் (5.36.4) அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு பலி ஏற்கும் போதும், அன்னையை விட்டு பிரியாமல் இருக்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம் இருவராய் இடுவார் கடை தேடுவார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் புரியும் இந்த செயல் உயிர்கள் பால் கருணை கொண்டு செய்யப்படும் ஒப்பற்ற செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், ஒப்பற்றவராகிய பெருமான் பல திருநாமங்கள் கொண்டவர் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார.
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே
இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப்பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். உலகில் உள்ள பொருட்களை மூன்று வகையாக பிரித்து, பதி பசு பாசம் என்று வேதாந்தமும் சித்தாந்தமும் கூறுகின்றன. பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். தறுகண்=வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்;
உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் என்றும் தறி நிறுவி
உறுதியாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித்
தறுகண் பாசக்
கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு
கருணை என்னும்
கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து
வருவினைகள் தீர்ப்பாம்
உயிர்களுக்கு இருக்கும் தான் என்ற அகந்தையை கழிக்கும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (4.53.6) நாம் இங்கே காண்போம். பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்று தெளிவு படுத்தும் அப்பர் பிரான், நகைச்சுவையாக பெருமானது உணவு எது என்பதை குறிப்பிடுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். நஞ்சு தான் அவர் விரும்பி உண்ணும் உணவு என்று இங்கே கூறுகின்றார்.
வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்
தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்
ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே
பொழிப்புரை:
நீண்ட பாம்பினை அணிகலனாக உடலில் அணிந்தவனும், அனலைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுபவனும், பொய் சொன்னதால் இழிந்த தன்மை அடைந்த பிரமனது தலையினைத் தனது கையில் ஏந்தி ஊரூராகச் சென்று திரிந்து மக்கள் இடும் உணவினை பிச்சையாக ஏற்றுக்கொள்பவனும், அவ்வாறு ஏற்றுகொண்ட பிச்சையை தனது உணவு என்றும் மக்கள் தனக்களித்த பிட்சை என்று பலவாறு கூறுபவனும் ஆகிய பெருமானை, வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்கள் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று அவன் திருப்பாதங்களில் நீண்ட சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து அந்த தலைவனது திருவடிகளே பற்றுக்கோடு என நினைத்து அதனைக் சார்ந்து நிற்போமாக.
பாடல் 4:
தாரிடு கொன்றை ஒர் வெண்மதி கங்கை தாழ்சடை மேல்
அவை சூடி
ஊரிடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்
விளக்கம்:
காரிடு மாமலர்=கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ; ஊரார்கள் இடும் பிச்சையை சிறந்த செல்வமாக மதிப்பவன் பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சென்ற பாடலின் விளக்கத்தில், பெருமான் பிச்சையாக ஏற்று உலகத்தவரை உய்விப்பது, அவர்களின் ஆணவம் முதலாகிய மலங்கள் என்பதை கண்டோம். உயிர்களும் தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு பெருமானைச் சென்றடைந்து நிரந்தரமான இன்பத்தை அடைவதை விரும்புவது போன்று, பெருமானும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்புகின்றான். எனவே தான், உயிர்கள் தனது பிச்சைப் பாத்திரத்தில் மலங்களை இட்டு உய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும் இறைவன், அவ்வாறு இடப்படும் மலங்களை பெரிய செல்வமாக மதித்து மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றான் என்பதே இந்த பாடலின் உட்கருத்தாக நாம் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
கொன்றை மாலையையும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தனது தாழ்ந்த சடையின் மீது சூடியவனும், ஊரார்கள் இடும் பிச்சையினை பெரிய செல்வம் என்றும் தனக்கு தகுந்த உணவு என்று பலவாறும் குறிப்பிட்டு மகிழ்பவனும், கச்சணிந்த மென்மையான மார்பகங்களை உடையவளாகிய உமை மாதினை ஒரு பாகமாகத் தனது உடலில் ஏற்றவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் கார்க்காலத்தில் தோன்றும் சிறந்த கொன்றை மலர்களை தூவி, தனது கழுத்தினில் நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.
பாடல் 5:
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதில் ஒர்
வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம் பெருமான் அடி சேர்வோம்
விளக்கம்:
அலங்கல்=மாலை; வனமுலை=அழகிய முலை; கனம் என்ற சொல்லுக்கு கூட்டம், மிகுதி, செறிவு என்று பல பொருள்கள் உள்ளன. பொன் என்று பொருள் கொண்டு பொன் போன்ற நிறத்தில் உள்ள கொன்றை மாலை என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இலங்க=விளங்கித் தோன்ற; புனம்=முல்லை நிலம்; முல்லை மற்றும் கொன்றை முல்லை நிலத்து மலர்கள். ஏய்ந்தன=தகுந்த; பெருமானுக்கு பிடித்த எட்டு மலர்களை கொண்டு அவனுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பாக கருதப் படுகின்றது. சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டினை குறிப்பிடப் படுகின்றன. கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
மூன்றாவது நான்காவது ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடல்களிலுள்ள பல கூறி என்ற தொடரை இறைவன் கூற்றாக கொண்டு பொழிப்புரை அளிக்கப் பட்டுள்ளது. இவற்றை அடியார்கள் கூற்றாக கொண்டு, அடியார்கள் இறைவனின் தன்மையைக் குறிப்படும் புகழ்ச் சொற்களாக கருதுவதும் பொருத்தமாக உள்ளது. மேலும் ஆறாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் உள்ள கருத்தினை, பலவகையாக அடியார்கள் போற்றிப் புகழ்ந்த என்று உணர்த்தும் தொடர்களை, காணுங்கால் இந்த பாடல்களுக்கும் அவ்வாறு பொருள் கொள்வது மிகவும் பொருத்தமென்று தோன்றுகின்றது.
பொழிப்புரை:
பொன் போன்று அழகிய கொன்றை மலர் மாலைகள் தனது திருமேனியில் விளங்கித் தோன்ற அணிந்தவனும், தனது காது ஒன்றினில் வெண்குழை அணிந்தவனும், முல்லை மற்றும் கொன்றை மாலைகளை சடையில் அணிந்தவனும், பலியேற்பதற்காக பல ஊர்கள் செல்வோம் என்று கூறிக் கொண்டு செல்பவனும், அழகிய மார்பகங்களை உடையவளும் மலையில் வளர்ந்த மங்கையும் ஆகிய பார்வதி அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் பெருமானின் அர்ச்சனைக்குத் தகுந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக.
பாடல் 6:
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை
அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே
என்னா
வளை ஒலி முன் கை மடந்தையொர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்க்
தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன தாள் இணை
சார்வோம்
விளக்கம்:
அளை=புற்று; களை தலை=களையப்பட்ட பிரமனின் தலை; அலர்=தாமரை மலர்; மிசை= இடம்; மலர் மிசை அந்தணன்=திருமாலின் கொப்பூழ்ப் பூவில் தோன்றிய பிரமன். தளை= மொட்டு; தளையவிழ் மாமலர்=மொட்டாக இருந்து அப்போது விரிந்து மலர்ந்த மலர்கள்;
பொழிப்புரை:
புற்றில் வளர்கின்ற நாகத்தைத் தனது இடையினில் கச்சையாக கட்டி, தனது விருப்பம் போன்று பாம்பினை அசைத்தவனே என்றும், பிரளய காலத்து அனலில் நின்று ஆடுபவனே என்றும், திருமாலின் கொப்பூழ்ப் பூவில் தோன்றிய அந்தணனாகிய பிரமனின் உச்சியில் இருந்த தலையினைக் கிள்ளி அந்த தலையின் உலர்ந்த மண்டையோட்டில் பலி ஏற்கும் கருத்தினை உடையவனே என்றும், அடியார்களின் உள்ளத்தைக் கொள்ளும் கள்வனே என்றும், அடியார்கள் தொழுதேத்த ஒலிக்கும் வளையல்களை முன்கையினில் அணிந்து இளமையும் அழகும் பொருந்தி விளங்கும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் மொட்டாக இருந்து அப்போது தான் விரிந்து மலர்ந்த சிறந்த புதிய மலர்களை தூவி, நமது தலைவனாகிய இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி அந்த திருவடிகளைச் சார்ந்து வாழ்வோமாக..
பாடல் 7:
அடல் செவி வேழத்தின் ஈருரி போர்த்து அழி தலை
அங்கையில் ஏந்தி
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி
மடல் நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்த்
தடமலர் ஆயின தூவித் தலைவன தாள் நிழல் சார்வோம்
விளக்கம்:
மடநெடு=மடல் போன்று நீண்ட இதழ்களை உடைய; அடர் செவி=பரந்த செவி; அழி தலை=கிள்ளியெடுக்கப் பட்டு அழிந்த பிரமனின் தலை, தடமலர்=அகலமான இதழ்களை உடைய மலர்கள் என்றும் தடம் என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள் கொண்டு அல்லி தாமரை போன்ற நீரில் மலரும் மலர்கள் என்றும் இரண்டு விதமாக விளக்கம் கூறுகின்றனர். இரண்டும் பொருத்தமே. உண்டி=உண்பவன்; உடலிடு என்பதற்கு பதிலாக உடனிடு என்ற சொல்லை பாடபேதமாகக் கொண்டு, காலம் தாழ்த்தாமல் உடனே இட்ட பிச்சை என்று சிலர் பொருள் கொள்கின்றனர். உடலிடு பிச்சை என்பதற்கு உடலில் உள்ள அங்கமாகிய கைகளால் இட்ட பிச்சை என்றும் பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து மகளிர் பரவசமைடைந்த தமது உடலுடன் இடப்பட்ட பிச்சை என்று இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர். மூன்றாவது பாடலில் உள்ளது போன்று இந்த பாடலிலும் ஐயம் பிச்சை என்ற இரண்டு சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த தன்மை நமக்கு ஆண்டாள் பிராட்டியார் அருளிய திருப்பாவை பாசுரத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டுகின்றது. தீக்குறள்=பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் சொல்லப்படும் சொற்கள்;
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
பாவை நோன்பு இருக்கவிருக்கும் சிறுமியர்களை வரவேற்ற பின்னர், நோன்பு நோற்கும் சமயத்தில் எவை எவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பன விவரித்து சொல்லப்படும் பாடல். கிரியை என்ற வடமொழிச் சொல் கிரிசை என்று திரிந்தது. பையத் துயின்ற= மெதுவாக உறங்குகின்ற: பாற்கடலில் உறங்குவது போல் தோன்றினாலும், உலகில் நடப்பவை அனைத்தும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் திருமால் என்பதை உணர்த்தும் பொருட்டு அறிதுயில் என்று கூறுவது வழக்கம். இங்கே அதனை சற்றே மாற்றி, பையத் துயின்ற பரமன் என்று குறிப்பிட்டு, பெருமாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழவில்லை என்று இங்கே ஆண்டாள் உணர்த்துகின்றார். ஆந்தனையும்=பிச்சை பெறுபவர்கள், ஆம் (போதும்) என்று சொல்லும் அளவுக்கு; இந்த பாடலில் ஐயமும் பிச்சையும் என்று இரண்டு சொற்கள் இடம் பெறுவதை நாம் உணரலாம். இதற்கு விளக்கம் அளித்த பெரியோரால் ஐயம் என்பது ஆச்சாரியர்கள் துறவிகள் போன்ற பெரியோர்களுக்கு இடும் பிக்ஷை என்றும் பிச்சை என்பது குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு இடப்படும் பிச்சை என்றும் விளக்கம் கூறியுள்ளனர். எனவே ஐயம் என்பது இடுபவர்கள் பணிந்து வணக்கத்துடன் மரியாதையுடன் இடப்படுவது என்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
பரந்த காதுகளை உடைய யானையை, தன்னை எதிர்த்து வந்த மத யானையை, அடக்கி அதன் தோலை உரித்து, அதன் உதிரப்பசை கெடாத தோலை தனது உடல் மீது போர்த்தவனும்; கிள்ளி எடுக்கப்பட்டதால் அழிந்த பிரமனது தலையினை மண்டையோடாக தனது கையில் ஏந்தி தாருகவனத்து மகளிர்கள் தங்களது கைகளால் இட்ட பிச்சையை, ஐயம் என்றும் உண்டி என்றும் பலவாறு கூறி ஏற்றுக் கொண்டவனும், மடல் போன்று நீண்ட இதழ்களை உடைய குவளை மலரினை ஒத்த கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நன்றாக விரிந்து அகன்று மலர்ந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி, அவனது திருவடி நிழலில் ஒதுங்குவோமாக.
பாடல் 8:
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை
அடர்த்து
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி
போற்றி
வயல் விரி நீள் நெடுங்கணி பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்
விளக்கம்:
சயவிரி மலர்=வாகை மலர்; வாகை மரம் இந்த தலத்தின் தலமரம் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த குறிப்பு அமைந்துள்ளது. வரை=மலை; ஒல்க=அசைய; அடர்த்து=நெருக்கி; ஆர்தல்=உண்ணுதல்; ஐ=தலைவன்; ஆர்தலை=உண்ணும் செயலை உடைய தலைவன்; அயல்=உறவினர் அல்லாதார், ஊரார்கள்;
பொழிப்புரை:
உயர்ந்த கயிலாய மலையினை அசைத்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின், கடகங்கள் அணிந்திருந்த கைகளை மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனே என்றும், ஊரார்கள் இடும் பிச்சை ஐயம் ஆகியவற்றை உட்கொள்ளும் தலைவனே என்றும், புகழ்ந்து அவனது திருவடிகளைப் போற்றி, வயல்களில் விளைவதும் நீண்டு விரிந்ததும் ஆகிய கருநீல மலர்கள் போன்ற கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் சிறந்த வாகை மலர்களை தூவி, தாழ்ந்த சடையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி, அந்த திருவடிகளை சார்ந்து இருப்போமாக.
பாடல் 9:
கரியவன் நான்முகன் கை தொழுது ஏத்தக் காணலும்
சாரலும் ஆகா
எரி உருவாகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி
வரி அரவு அல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்
விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்
விளக்கம்:
சார்ந்து இருப்போம் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர்க்கு, பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பது எத்தைகைய பெரும் பேறு என்பதை அடியார்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது போலும். பொதுவாக பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடிகள் என்று கூறும் சம்பந்தர் இந்த பதிகத்து பாடலில், அவர்கள் இருவரும் காண முடியாத திருவடிகள், சார முடியாத திருவடிகள் என்று கூறுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளைச் சார்ந்து இருப்பதை ஒரு பெருமையாக கருதி, ஆர்வத்துடன் அந்த திருவடிகளைச் சார வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
கரியவன் என்று அழைக்கப்படும் திருமால் மற்றும் பிரமன் தங்களது கைகளால் தொழுது ஏத்தும் வண்ணம், அவர்களால் காணவும் முடியமால் சாரவும் முடியாமல் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்றவனே என்றும் பல ஊர்களிலும் இடப்படும் பிச்சையையும் பலியையும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு உண்பவனே என்றும் புகழ்ந்து, கோடுகள் உடைய பாம்பின் படம் போன்று புடைத்து எழுந்துள்ள மார்பகத்தினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நன்கு விரிந்து மலர்ந்த சிறந்த மலர்களை தூவி, ஏனைய தேவர்களிலிருந்து மாறுபட்டுள்ள பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி சேர்வோமாக.
பாடல் 10:
குண்டமணர் துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கையினார்
புறம் கூற
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன்
வாழ்கொளிபுத்தூர்
தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி
சேர்வோம்
விளக்கம்:
துவர்க்கூறை=துவர்ச் சாயம் ஏற்றப்பட்ட உடை; புறம்=பொருந்தாத சொற்கள்; மெய்யில்= மெய்+இல், உண்மையற்ற; பெருமான் பலி ஏற்பதன் பின்னணியில் அமைந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்து கொள்ளாமல் உண்மைக்கு பொருந்தாத சொற்களை மற்றவர் கூறுவதை பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் நின்று, பக்குவப்பட்ட அடியார்கள் தாங்கள் இடும் மலங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கும் பெருமானின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வண்டார் பூங்குழலி என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த திருநாமம் வண்டமர் பூங்குழல் மங்கை என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.
இந்த பாடலில் பலியேற்பதை பெருமான் மிகவும் விரும்புகின்றார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர், வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றனர் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே இவ்வாறு பலி ஏற்கச் செல்வதால், மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று ஞானசம்பந்தர் நெடுங்களம் தலத்து பதிகத்தின் பாடலில் (1.52.4) குறிப்பிடுகின்றார்.
மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழற் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை ஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமானே, பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு;
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும் பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே
தான் ஏந்தியுள்ள ஓட்டினினால் அளிக்கப்படும் பிச்சையை மிகவும் இனியது என்று மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று வீழிமிழலை பதிகத்து பாடலில் (3.85.10) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிச்சையேற்கும் நோக்கத்தினை அறியாத சமணர்களும் புத்தர்களும், அவரது பெருமையை அறியாதவர்களாக இருப்பதால் பெருமானை தூற்றுகின்றனர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இச்சையர்= விருப்பம் உடையவர்; மொச்சைய=நீராடுவதை தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடையவர்; விச்சை=வித்தை செய்பவர்;
இச்சையர் இனிது என இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை இறை பொழுது அறிவென உணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் வீழி மிழலையே
திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .
பட்டி ஏறுகந்தேறி பல இலம்
இட்டமாக இரந்து உண்டு உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ
கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே
தான் ஏந்தியுள்ள மண்டையோட்டினில் மற்றவர்கள் அளித்த பிச்சையினை ஏற்றுக் கொள்வதை மிகவும் விரும்பும் பெருமான் என்று அப்பர் பிரான், திருவதிகை வீரட்டம் மீது அருளிய பதிகம் ஒன்றில் (6.5.2) குறிப்பிடுகின்றார். மிடறு=கழுத்து: உள்குதல்=மனதினில் நினைந்து உருகுதல்; ஓட்டகம்=ஓடு+அகம்; ஓடு=மண்டையோடு அகம்=உள்ளே; ஊண்=உணவு
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல்லூழி ஆய படைத்தாய்
போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய்
போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார்மேகம் அன்ன மிடற்றாய்
போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய்
போற்றி
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (6.28.4) ஒன்றிலும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஊண்=உணவு; நடை பலவும்=நடை பயில வேண்டிய நெறிகள்; காமரம்=சீகாமரம்; நாட்டகத்தே நடை பலவும் பயின்றார் என்பதற்கு, ஆறு வேறுவேறு சமயங்களை, அவரவர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப படைத்தவர் சிவபெருமான் என்று கூறுவதாக விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. ஆறு ஒன்றிய சமயங்கள்=சிவபெருமான் ஒருவரையே பரம்பொருள் என்று வழிபடுவதில் ஒத்திருந்தாலும் தங்களுக்கு சிறிய வேறுபாடுகள் பல கொண்ட ஆறு அகச் சமயங்கள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம் மற்றும் சைவம்.
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார்
போலும்
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்கடற்கோர்
நாதர் போலும்
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடித் திரிவார்
போலும்
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணியாரூர்
திருமூலட்டனானாரே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.4) வெட்கமோ தயக்கமோ கொள்ளாமல் வாய் திறந்த நிலையில் சிரிப்பது போன்று தோன்றும் மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு விருப்பத்துடன் பிச்சையேற்கச் செல்பவன் என்று, பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்திற்காக பிச்சை எடுப்பவன், எதற்காக வெட்கம் அடையவேண்டும், தயக்கம் கொள்ளவேண்டும், மாறாக விருப்பம் தானே கொள்ள வேண்டும். அதனால் தான் நாணாது நகுதலை ஊண் நயந்தான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நற்றவன்=மென்மையான தவத்தினை செய்பவன்; முந்நீர்=கடல் :
நற்றவனைப் புற்றரவ நாணினானை நாணாது நகுதலை ஊண்
நயந்தான் தன்னை
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்
தன்னைப்
பற்றவனைப் பற்றார் தம் பதிகள் செற்ற படையானை அடைவார் தம்
பாவம் போக்க
கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக்
கண்டேன் நானே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (6.63.8) அப்பர் பிரான், பிச்சையே இச்சிப்பான் என்று குறிப்பிட்டு, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் பிச்சை எடுப்பதாக குறிப்பிடுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது தானே முதியோர்களின் மொழி. உலகத்தவர்கள் ஏற்கும் பிச்சையிலிருந்து மாறுபட்டது, இறைவன் ஏற்கும் பிச்சை என்பதை நாம் உணரவேண்டும். உலகத்தவர்கள் தங்களது தேவைக்கு பிச்சை எடுக்கின்றனர். ஆனால் இறைவனோ, உலகத்தவர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமான் ஏந்தியுள்ள ஓட்டினில் பிச்சையாக அளித்து வாழ்வினில் உய்வினை பெரும் வண்ணம் பிச்சை ஏற்றுத் திரிகின்றான். உலகத்தவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு, தனது சேவடிகளை வந்தடைந்து முக்தி பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் பிச்சை ஏற்கின்றான். தாங்கள் உய்வினை அடையவேண்டும் என்று கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் உய்வினை அடையவேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகம். எனவே தான் இச்சையுடன் பிச்சை ஏற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
மகிழ்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி
ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானைப் பூதகணப் படையானைப்
புறங்காட்டு ஆடல்
உகந்தானைப் பிச்சையே இச்சிப்பானை ஒண் பவளத் திரளை என்
உள்ளத்துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று
ஆடினேனே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.2) சுந்தரர், பிச்சை ஏற்கும் தொழிலை காதலித்தவன் என்று குறிப்பிடுகின்றார்.
படைக்கண் சூலம் பயில வல்லானைப் பாவிப்பார் மனம் பாவிக்
கொண்டானைக்
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானைக் காமன் ஆகம் தனை
கட்டழித்தானைச்
சடைக்கண் கங்கையை தாழவைத்தானைத் தண்ணீர் மண்ணிகரையானைத்
தக்கானை
மடைக்கண் நீளம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என்
நினைக்கேனே
பொழிப்புரை:
உண்டு உடல் கொழுத்த சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், உண்மையற்ற பொருந்தாத சொற்களை கூறி பழித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பதை விரும்புவனே என்று புகழ்ந்து கூறி, வண்டுகள் அமர்கின்ற புதிய மலர்கள் சேர்ந்த கூந்தலை உடைய உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் தொண்டர்கள் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி பணிந்து வணங்க, அதனை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் தோன்றி நிற்கும் பெருமானது திருவடிகளை சென்று சேர்வோமாக.
பாடல் 11:
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழிய
மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன்
வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிதாமே
விளக்கம்:
கல்=மலை; கல்லுயர்=மலை போன்று உயர்ந்த;
பொழிப்புரை:
மலைகள் போன்று உயர்ந்து எழுந்து நின்று பேரொலியுடன் கரையினை வந்து அடையும் அலைகள் உடைய கடலின் அருகே உள்ள சீர்காழி எனப்படும் பழமையான ஊரினைச் சார்ந்தவனும், நன்மைகள் விளைவிக்கும் உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடையவனும், நன்மை புரியும் தமிழ் பாடல்கள் அருளியவனும் ஆகிய ஞானசம்பந்தன், வலிமையான சூலம் வெண்மழுவாள் முதலிய ஆயுதங்களை பயன்படுத்துவதில் வல்லவனாகிய பெருமான் உறையும் வாழ்கொளிபுத்தூர் தலத்தினைப் போற்றி, சொன்ன பாடல்களில் வல்ல அடியார்களின் துயர் கெடுதல் மிகவும் எளிதாம்.
முடிவுரை:
பெருமானது பெருமைகளை குறிப்பிட்டு அவனது திருவடிகளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவடிகள் பற்றிய குறிப்பு கொண்டுள்ள மற்ற பதிகங்களை நினைவூட்டுகின்றது. முன்னுரையில் அகத்தியர் தேவாரத் திரட்டில் குறிப்பிடப் படும் திருவடிப் பதிகங்கள் இரண்டினை நாம் கண்டோம். திருவடித் தாண்டகம் என்று அழைக்கப்படும் (6.06) பதிகத்தின் அனைத்து அடிகளிலும் பெருமானின் திருவடி குறிப்பிடப்பட்டு, திருவடிகளின் பல்வகை சிறப்பு அப்பர் பெருமானால் உணர்த்தப்படுகின்றது.
அந்தணாளன் என்று தொடங்கும் திருப்புன்கூர் பதிகத்தில் (7.55), சுந்தரர் ஓவ்வொரு பாடலிலும் இறைவனின் ஒவ்வொரு அருட்செயலை குறிப்பிட்டு, அதன் காரணமாக இறைவனின் திருவடிகளை சென்ற அடைந்ததாக குறிப்பிட்டு, நம்மையும் இறைவனது திருவடிகளைப் பணிந்து வணங்குமாறு தூண்டுகின்றார். மார்கண்டேயனுக்கு அருளியது, மழை பொழிவித்தது, அதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை தவிர்த்தது, கலிக்காமரின் பிணியைத் தவிர்த்தது, சண்டீசருக்கு அருளியது, அப்பர் சம்பந்தர் ஆகியோரின் குற்றங்களை பொறுத்து அருளியது, அமரர்கள் வாழும் பொருட்டு நஞ்சு உண்டது, விஜயனுக்கு பாசுபதம் அருளியது, நால்வர்க்கு அறம் உரைத்தது, பகீரதனுக்காக கங்கையை தாங்கியது, திரிபுரத்தில் உள்ள மூன்று அடியார்களுக்கு அருளியது, ஆறு சமயத்தவர்க்கும் அருள் புரிவது மற்றும் இராவணனுக்கு அருள் புரிந்தது ஆகிய செயல்கள் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது.
சிந்திப்ப அரியன என்று தொடங்கும் அப்பர் பிரானின் ஐயாற்றுப் பதிகத்தில் (4.92) அனைத்துப் பாடல்களும் ஐயாறன் அடித்தலமே என்று முடிவடைகின்றன. பெருமானின் திருவடிகளின் பண்புகள் பதிகத்தின் இருபது பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றன. பொதுவாக பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களே பாடும் அப்பர் பிரான், பெருமானின் திருவடிகளின் சிறப்பினை விளக்குவதற்கு பத்து பாடல்கள் போதாது என்று நினைத்தார் போலும்.
மன்னு மலைமகள் என்று தொடங்கும் இன்னம்பர் பதிகத்தின் (4.100) அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் பெருமானின் திருவடிகளின் பெருமைகள் குறிப்பிடப் படுகின்றன. அனைத்துப் பாடல்களும் இன்னம்பரான் தன் இணை அடியே என்று முடிகின்றன. இந்த பதிகத்தின் முதல் பாடலில், மலைமகள் கையால் வருடிய திருப்பாதங்கள் பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார். திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.108) இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த இரண்டு பாடல்களிலும் பெருமானின் திருவடிச் சிறப்புகள் கூறப்படுகின்றன. மார்கண்டேயனின் வாழ்நாளை நீட்ட இயமனை உதைத்த திருவடி என்றும், திருமாலால் காண முடியாத திருவடிகள் என்றும் தொண்டர்கள் போற்றும் திருவடிகள், மாணிக்கம் போன்று ஒளிவீசும் திருவடிகள் என்றும், உமையவள் வருடச் சிவக்கும் திருவடிகள் என்றும் கண்பார்வை இல்லாத தனது அடியார்களுக்கு அவர்கள் முன்னே ஒளியாகத் தோன்றி வழிகாட்டும் திருவடிகள் என்றும் பெருமானின் திருவடிகளின் தன்மை இந்த பதிகத்தில் உணர்த்தப் படுகின்றன.
திருவெம்பாவை பதிகத்தின் கடைப் பாடலில், மணிவாசகர், பாடலின் முதல் ஏழு அடிகளிலும் இறைவனின் திருவடிகளை போற்றி போற்றி என்று கூறி, எட்டாவது அடியில் சிவபெருமான் நம்மை ஆட்கொள்வதற்கு உதவியாக இருக்கும் மார்கழி நீராடும் செயல் போற்றி என்று கூறுகின்றார். இந்த பாடலில் இறைவனின் திருவடிகளை, பாதமலர், செந்தளிர்கள், பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள், புண்டரீகம், பொன்மலர்கள் என்று வேறு வேறு சொற்களால் குறிப்பிடும் நயத்தையும் நாம் காணலாம். எண்குணத்தான் என்று அழைக்கப்படும் இறைவனை எட்டு முறை போற்றி போற்றி என்று சொல்லி அழைப்பதும் மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் இறைவன் புரியும் ஐந்து தொழில்களும் உணர்த்துப் பட்டுள்ளன. தோற்றம் என்று படைத்தல் தொழிலும், போகம் என்று காத்தல் தொழிலும், ஈறு என்று அழித்தல் தொழிலும், காணாத புண்டரீகம் என்று மறைத்தல் தொழிலும், உயிர்களை உய்ய ஆட்கொண்டருளும் செயல் என்று அருளல் தொழிலும் குறிப்பிடப் பட்டுள்ளன.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும்
பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்
பதிகத்தின் முதல் பாடலில் பெருமானது திருவடிகளைக் காண்போம் என்று நம்மை இந்த தலத்திற்கு கூட்டிச் செல்லும் சம்பந்தர், அவ்வாறு கண்டு களித்த திருவடிகளை இடைவிடாது தியானிப்போம் என்று இரண்டாவது பாடலிலும், அவனது திருவடி நிழலே நமக்கு சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்த்து அதனை பற்றுவோம் என்று மூன்றாவது பாடலிலும், அவனது திருவடிகளில் மலர்கள் தூவி கண்குளிர காண்போம் என்று நான்காவது பாடலிலும், தரமான மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனைத் சார்ந்து இருப்போம் என்று ஐந்தாவது பாடலிலும், அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு அவனது திருவடிகளில் சமர்ப்பித்து அந்த திருவடிகளே சரணம் என்று சார்ந்து இருப்போம் என்று ஆறாவது பாடலிலும், சிறந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் தங்கியிருப்போம் என்று ஏழாவது பாடலிலும், கொத்தாக விரிந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடிகளை சார்ந்து இருப்போம் என்று எட்டாவது பாடலிலும், விரிந்து நன்கு மலர்ந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் சென்று தங்குவோம் என்று ஒன்பதாவது பாடலிலும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் இவ்வாறு தொண்டர்கள் மலர் தூவி வணங்க வாழ்கொளிபுத்தூர் தலத்தில் வீற்றிருக்கும் நமது தலைவனின் திருவடி நிழலைச் சென்று அடைவோம் என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர் உணர்த்தியதை மனதில் கொண்டு வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று மாணிக்க வண்ணரைக் கண்குளிர கண்டு வணங்கி, அவனது திருவடிகளை தியானித்து, அவனது திருவடிகளே சிறந்த பற்றுக்கோடு என்பதை உணர்ந்து வாழ்வோமாக. இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானை தொண்டர்கள் எவ்வாறு போற்றுகின்றனர் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். நாமும் பெருமானின் பல வகையான பெருமைகளை குறிப்பிட்டு அவரை புகழ்ந்து, வணங்கி பயன் அடைவோமாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Podiyudai Maarbinar
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்