Go Back

22/03/21

கணை நீடு எரிமால்


கணை நீடு எரிமால் - பின்னணி:


தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற சம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று அவனைக் கண்டு களிப்பதும், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும். ஆனால் அடிப்படையாக உயிர்கள் அவ்வாறு பல தலங்கள் செல்லவேண்டும் என்று விரும்பவேண்டும். ஆன்ற=பல நற்குணங்கள் பொருந்திய; முதல் சைவர்=ஆதி சைவர்; கரடம்=அருவி; மதநீர் அருவி போன்று பெருகிப் பாயும் மதயானை; பல பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் யாது என்று அறிய முடியவில்லை; அந்த தலங்களுக்கு உரிய தேவாரப் பதிகங்களும் கிடைக்கவில்லை. அன்பில் என்பது தலத்தின் பெயர். ஆலந்துறை என்பது தலத்திலுள்ள திருக்கோயிலின் பெயர். பல திருக்கோயில்கள் தலத்தின் பெயருடன் இணைக்கப்பட்டு தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகமும் அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன.

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி

ஆன்ற சைவ

முதல் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத்

தொழுது போற்றிப்

பத நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பல பதிகள்

பணிந்து பாடி

மதகரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணி

நூல் மார்பர்

லால்குடி தலத்திற்கு ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தலம் செல்ல, திருச்சியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. அன்பில் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில். இந்த தலம் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் கருதப் படுகின்றது. இறைவனின் திருநாமம், சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீசுவரர்; அம்பிகையின் திருநாமம் சௌந்தர நாயகி. பிரமன் மற்றும் வாகீச முனிவர் வழிபட்டதை குறிப்பிடும் வகையில் இறைவனின் திருநாமங்கள் அமைந்ததாக கூறுவார்கள். மூலவர் சுயம்பு. கோயில் முதலில் மாடக்கோயிலாக இருந்து பின்னாளில், பராந்தகச் சோழனின் காலத்தில், கற்றளியாக மாற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் அருகருகே இரண்டு விநாயகர் உருவங்களை நாம் காணலாம். வெளியே உள்ள விநாயகர் சற்று மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றார். தனது தலையை ஒரு புறமாக சாய்த்துக்கொண்டு, வலது காதினை நீட்டிக்கொண்டு, எங்கோ தொலை தூரத்தில் இருந்து வரும் ஓசையை கேட்பது போன்ற தோற்றத்தில் இருக்கும் விநாயகரின் முகத்தினில் புன்முறுவலையும் காணலாம். இந்த விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். இவ்வாறு பெயர் வந்ததற்கான காரணம் இரண்டு நிகழ்ச்சிகள் செவி வழக்காக சொல்லப் படுகின்றன. பராந்தகச் சோழர் காலத்தில் சாமவேதத்தின் ஜைமினி பிரிவைச் சார்ந்த நூற்றெட்டு அந்தணர்கள், தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்கள், இந்த ஊருக்கு குடியேறினார்கள் என்றும் அவர்கள் இசைத்த சாமகானத்தை, உன்னிப்பாக செவி மடுத்து கேட்ட விநாயகர் என்பதால் செவி சாய்த்த விநாயகர் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். இந்த விநாயகர் திருஞானசம்பந்தருடன் இணைத்து சொல்லப்படும் ஒரு கர்ணபரம்பரைச் செய்தியும் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த தலம் வந்த போது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியபடியால், அவரால் இந்த தலம் வர முடியவில்லை என்றும், அடுத்த கரையிலிருந்தே அவர் பாடிய தேவாரப் பதிகத்தினை விநாயர் ரசித்து உற்று கேட்டார் என்றும், அன்றிலிருந்து இந்த மூர்த்தம் அதே நிலையில் உள்ளது என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி குறித்து பெரிய புராணத்தில் குறிப்புகள் ஏதும் இல்லை. .

பாடல் 1:

கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

பிணை=தங்களது துணையோடு சேர்ந்து இருக்கும்; மட=இளமை வாய்ந்த: கணை=அம்பு; நீடு எரி=நீண்டு எரியும்; மால்=திருமால்; வரை=மலை; இணையா=வேறு வேறு திசைகளில் எப்போதும் கொண்டிருப்பதால், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வருவது என்பது மிகவும் அரிதான செயல். மேலும் ஒரே நேர்க்கொட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால், அந்த அரக்கர்கள் ஒரே நேர்க்கோட்டினில் வாராத வண்ணம், வேறு வேறு திசையில் பறந்து கொண்டிருந்தனர். பெருமான் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தார் என்று பல திருமுறைப் பாடல்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. ஒரே கோட்டினில் வரும் தருணத்தில் தாங்கள் அழிவதற்கு வாய்ப்பு இருப்பதை நன்கு அறிந்த திரிபுரத்து அரக்கர்கள் அவ்வாறு ஒரே கோட்டினில் வருவதை தவிர்ப்பார்கள் அல்லவா. எனவே பெருமான் திரிபுரத்து கோட்டைகளை அழித்த போது அந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வந்த நிலை அரக்கர்களின் செயலால் அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர் கோட்டினில் வரும் வண்ணம் செய்த பின்னர், அந்த கோட்டைகளை ஒரே அம்பினால் எரியூட்டி அழித்தார் என்பது புலனாகின்றது. இந்த செய்தியையே ஞானசம்பந்தர், இணையாது இருந்த கோட்டைகள் இணைக்கப்பட்டன என்பதை இங்கே உணர்த்துகின்றார். இதே செய்தியை உணர்த்தும் வேறு இரண்டு தேவாரப் பாடல்களையும் நாம் இங்கே காண்போம்.

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.64.02) திருஞானசம்பந்தர், மூன்று கோட்டைகளையும் ஒன்ற வைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மருவார்=பகைவர்கள்; உம்பர் பிரான்=தேவர்கள் தலைவன்; சாலி=ஒருவகை நெல்; ஆலை=கரும்பு; பாண்டிய மன்னன், அரசியார் மன்கையர்க்காரசி, குலச்சிறையார் ஆகியோருடன் பாண்டிநாட்டுத் தலங்கள் அனைத்தும் சென்ற, திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் குடிமக்களை பாதுகாத்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மாமலையான் மடந்தை

ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரான் அவன் ஊர்

கருவார் சாலி ஆலை மல்கிக் கழல் மன்னர் காத்தளித்த

திருவால் மலிந்த சேடர் வாழும் தெந்திருப் பூவணமே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.07) திருஞானசம்பந்தர் மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளாது. அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதை கூறு கொண்டாய் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைவரும் சைவநெறியினை பின்பற்றிய தருணத்தில், மாறுபட்டு விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை மாறுகொண்டார் என்று உணர்த்துகின்றார். பெருமானுக்கு அபிடேகம் செய்த திருநீற்றினை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்வதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பொழிப்புரை:

திருமாலை அம்பின் தண்டாகவும் காற்றுக் கடவுளை (வாயுவை) அம்பின் இறகுகளாகவும் அக்னியை அம்பின் நுனியாகவும் கொண்டு நீண்ட தீயினைக் கக்கும் அந்த அம்பினை, வாசுகி பாம்பு நாணாக பூட்டப்பட்ட வில்லினில், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லினில், பொருத்திய பெருமான், எப்போதும் இணையாது இருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், ஒன்றாக ஒரே நேர்கோட்டினில் வரச்செய்த பெருமான், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அழித்தவர் ஆவார். தங்களது துணையுடன் கூடிய பெரிய மயில்களும் குயில்களும் சேர்ந்து வாழும் இள அன்னங்களும் உறைகின்ற சோலைகள் சூழ்ந்த தலம் அன்பில் ஆலந்துறை தலத்தினை இறைவன் அணைந்து உறைகின்றார். .

பாடல் 2:

சடையார் சதுரன் முதிரா மதி சூடி

விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்

கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை

அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

சதுரன் என்றால் திறமை உடையவன், சாமர்த்தியசாலி என்று பொருள். எவர்க்கும் இயலாத பல வீரச் செயல்களை புரிந்த பெருமானை சதுரன் என்று நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் அழைத்து மகிழ்கின்றனர். அத்தகைய சில பாடல்களில் சதுரன் என்று பெருமானை தாங்கள் அழைப்பதற்கான காரணத்தையும் குறிப்பிடுகின்றனர். திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினால் எரித்து அழித்தது, தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டது, அனைவரையும் நடுங்கச் செய்த சலந்தரனை சக்கரப் படையால் அழித்தது, பொங்கி வந்த ஆலகால விடத்தை பருகி உலகத்தவரை காப்பாற்றியது என்பது போன்று பல செயல்கள் புரிந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

ஊழிக்காலத்தில் அனைவரும் இறந்த பின்னர், அவர்களது உடல்கள் எரிந்ததால் ஏற்பட்ட சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் நிலை, என்றும் அழியாது இருக்கும் நிலை, சிவபெருமானது திறமையை, பெருமையை உணர்த்துகின்றது என்பதால், சதுரன் என்று நீற்றினைப் பூசிய செய்கையுடன் அப்பர் பிரான் இணைத்துச் சொல்லும் பாடல் (6.32.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் பிறவிப் பிணியிலிருந்து தன்னை விடுவித்து இனிமேல் பிறவாமலும் சாகாமலும் காத்த பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த செயலும் வேறு எவரும் செய்தற்கு அரிய செயல் என்பதால் இதனையும் சதுரனின் செயலாகவே கொள்ளலாம். புத்தேளிர்=வானவர்கள்; சே=எருது, இடபம்; சதுரன்=திறமை படைத்தவன்; சாவாமே காத்தல்=பிறப்பு மற்றும் இறப்பினைத் தவிர்ப்பதன் மூலம், இறப்பிலிருந்து காப்பாற்றும் தன்மை. வெண்சங்கு போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசியவன் என்று பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும்

பொருளே போற்றி

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி

அளித்தாய் போற்றி

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்று

எம் சதுரா போற்றி

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே

போற்றி போற்றி

காளத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் (6.08) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை மாச்சதுரன் என்று அழைக்கின்றார். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்: பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்; உலகனைத்தையும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமானை விடவும் பெரிய செல்வந்தர் உலகினில் எவர் உள்ளார். ஆனால் அத்தகைய செல்வம் உடையவனாக இருந்தும், ஏதும் இல்லாத வறியவன் போல் பிச்சை ஏற்பவன் போன்ற வேடத்துடன் நடிப்பதை பெருமானின் திறமையாக அப்பர் பிரான் கருதுகின்றார் போலும்.

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக்

கம்பன் காண் பிச்சை அல்லால்

மற்று ஊண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து

மைந்தன் காண் மாசு ஒன்றில்லா

பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது

பொழில் ஏழும் தாங்கி நின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன்

என் கண்ணுளானே

மேலும் வேறு எந்த உணவினையும் ஏற்காமல் இருந்த திறமைசாலி என்று கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஏனையோருக்கு பிச்சை இடுவதால் நமக்கு, அவர்களுக்கு உதவிய புண்ணியம் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இறைவனுக்கு பிச்சை இடுவதால் நமக்கு கிடைப்பதே வேறு. இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை என்பதையும், உயிர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆணவம் முதலான மலங்களையே இறைவன் பிச்சையாக கூறுகின்றான் என்பதையும், அத்தகைய பிச்சைகளை அவனிடம் இடவல்ல உயிர்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப்பட்டு பிறவாத தன்மை அடைகின்றனர் என்பதையும் பல திருமுறை பாடல்கள் விளக்குகின்றன. பிச்சையாக உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முக்திச் செல்வத்தை அளிக்கும் பெருமானை விடவும் திறமைசாலி வேறு எவர் உள்ளார். மேலும் முக்திச் செல்வத்தை பெருமானைத் தவிர வேறு எவர் அளிக்க வல்லார். பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்படாமல் இருக்கும் ஒருவன் தானே, அத்தகைய நிலைக்கு மற்றவரை அழைத்துச் செல்ல முடியும். எனவே தான் அப்பர் பிரான் இங்கே மாச்சதுரன் என்று குறிப்பிடுகின்றார்.

கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலாக மாறிய தனது முன்னோர்களை கடைத் தேற்றும் பொருட்டு, கங்கை நதியினை பாதாள உலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமனும் அவனது தவத்தில் மகிழ்ந்து கங்கை நதியினை கீழே செல்லுமாறு பணிக்கின்றார். ஆனால் தேவ லோகத்தை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லாத கங்கை, பூமியையே தனது வேகத்தால் புரட்டி கடலுடன் சேர்க்கும் எண்ணத்துடன், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கத் தலைப்பட்டாள். அப்போது பூமிக்கு நேரவிருந்த அழிவிலிருந்து காக்கும் பொருட்டு கங்கை நதியினை தாங்குவார் எவருமின்றி, பெருமானின் உதவியை பகீரதன் நாட, பெருமானும் அதற்கு இசைந்து தனது சடை முடியில் கங்கையைத் தாங்கினார். இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயரத்திலிருந்து கீழே பள்ளத்திற்கு பாயும் இயல்பு கொண்ட தண்ணீரை, தடுத்து நிறுத்தி தாங்குவதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. இந்த திறமை பெருமானிடம் இருந்ததை குறிப்பிட்டு சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடலை நாம் இங்கே காண்போம். அல்லரே என்று பாடலை முடித்தாலும், எதிர்மறைக் பொருளாக குறிப்பிடுவதாக கொள்ளாமல் சதுரர் என்று சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம்.

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்

உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்

விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய

சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே

கற்குடி தலத்தின் (1.43.1) மீது அருளிய பதிகத்தில், திருஞானசம்பந்தர் பெருமான் கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றதை, தாழ்சடை வைத்த சதுரர் என்று குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். ஒரு மாதினை உடலிலும் மற்றொரு மாதினை சடையிலும் வைத்திருந்தாலும், இன்ப துன்பங்களைக் கடந்தவராக பெருமான் உள்ளார் என்று சம்பந்தர் கூறுகின்றார். எப்போதும் மனைவியுடன் இருந்தாலும், இன்ப துன்பங்களை கடந்தவராக, எதிலும் பற்று அற்றவராக, ஐந்து புலன்களையும் அடக்கியவராக இருப்பதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. அந்த திறமை பெற்றிருந்த காரணத்தால் இறைவனை சதுரர் என்று சம்பந்தர் அழைக்கின்றார்.

வடம் திகழ் மென்முலையாளை பாகமாதாக மதித்துத்

தடம் திரை சேர் புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்

இடம் திகழ் முப்புரிநூலர் துன்பமோடு இன்பமது எல்லாம்

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (4.68.6) பெருமானை சதுரர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் காரணத்தை நாம் இங்கே காண்போம். தன்னிடம் போரிடுவார் எவரும் இல்லாத நிலையில் சலந்தரன் சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் கயிலாயம் நோக்கிச் செல்கின்றான். அவன் வருவதை அறிந்த பெருமான், ஓர் முதியவர் வேடத்தில் அவனை எதிர்கொள்கின்றார். தரையில் தனது கால் விரலால் சக்கரம் வரைந்த பெருமான், அரக்கனை நோக்கி அந்த சக்கரத்தினை பேர்த்து எடுத்து தனது தலயின் மேல் தூக்கி வைத்ததுக் கொள்ளும் வல்லமை உள்ளதா என்று அரக்கனிடம் கேட்க, அரக்கனும் அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கின்றான். எடுத்த பின்னர் தனது தலைக்கு மேலே அந்த சக்கரத்தை அரக்கன் தூக்கிய போது அந்த சக்கரம் கூர்மை நிறைந்த ஆயுதமாக மாறி அவனது உடலினை இரண்டாக கிழித்து கொன்று விடுகின்றது. இத்தகைய வலிமை வாய்ந்த ஆயுதத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், திருமாலின் பக்திக்கு பரிசாக பெருமான் அளித்து விடுகின்றார். இத்தகைய வல்லமை வாய்ந்த ஆயுதத்தை பரிசாக அடுத்தவர்க்கு அளிப்பதற்கு, தேவைப்பட்டால் அந்த ஆயுதம் இல்லாமலும் தான் எவரையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை பெருமானுக்கு இருந்ததால் தானே. இந்த நம்பிக்கையை தனித் திறமையாக மதித்து சக்கரம் அருள் செய்த சதுரர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்

நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்

வக்கரன் உயிர் வவ்விய மாயற்குச்

சக்கரம் அருள் செய்த சதுரரே

இந்த பாடலில் நாம் நயமான கற்பனை ஒன்றையும் உணரலாம். அந்தி நேரத்து செவ்வானத்தின் நிறம் பெருமானின் மேனி நிறம் என்று பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த பாடலில் ஒரு படி மேலே செல்கின்றார். அந்திச் செவ்வானம் அதே நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. மாலையில் படிப்படியாக குறைந்து இருள் பரவுகின்றது; காலையில் படிப்படியாக குறைந்து முழு வெளிச்சம் தோன்றுகின்றது. இந்த காட்சி அன்றாடம் தோன்றும் காட்சி. இந்த காட்சியைக் கண்ட அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. பெருமானின் மேனி நிறத்துடன் போட்டியிடும் அந்திச் செவ்வானம், பெருமானிடம் தோற்று அழிகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.53.2) சலந்தரனை பிளப்பித்த சதுரர் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சமரம்=போர்; குறைத்த=அழித்த; நமன்=இயமன்; தனக்கு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பயந்து ஓடியதால் தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், தனது தோள் தினவு காரணமாக, சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டும் என்று திரிந்தவன் அரக்கன் சலந்தரன். இதனை உணர்த்தும் வண்ணம் போர் வேண்டினான் என்று அரக்கனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குழகர்=இளமையும் அழகும் பொருந்தியவர்.

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்

பிளப்பித்த சதுரர் போலும்

நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை

இடப்பாகத்து அடைத்தார் போலும்

குமரனையும் மகனாக உடையார் போலும் குளிர் வீழிமிழலை

அமர் குழகர் போலும்

அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை

ஆளுடைய அடிகள் தாமே

காசனைக் கனலை என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (5.93.2) அப்பர் பிரான் இறைவனை சந்திக்கண் நடமாடும் சதுரன் என்று அழைக்கின்றார். சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபுராணத்தில் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் குறிப்பிடுவதும் முற்றூழிக் காலத்து இருளையே. புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்;

புந்திக்கு விளக்காய புராணனைச்

சந்திக் கண் நடமாடும் சதுரனை

அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

கயிலாயம் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.57.2) அப்பர் பிரான் பெருமானை சதுரா என்று அழைக்கின்றார். அதிர்தல்=நடுங்குதல்; அதிரா=நடுங்காத; இறைவனைத் தவிர வேறு எவராலும் நீக்குதற்கு அரிய வினைகள் என்பதை உணர்த்தும் பொருட்டு நடுங்காத வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அதிரா என்ற சொல்லினை உடன்பாட்டு சொல்லாக கருதி அதிரா வினைகள் என்பதற்கு உயிர்களை நடுங்க வைக்கும் வினைகள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்கும் வல்லமை வாய்ந்த ஒருவனை, எவராலும் அளிக்க முடியாத தெளிவான பொருளினை, மௌன மொழியால், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், வேதங்களின் உட்பொருளாக இருந்த கருத்தினை விளக்கிய ஒருவனை, சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆலநிழற் கீழ் அமர்ந்தாய்

போற்றி

சதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசுந் தலைவா

போற்றி

எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்

செய்வாய் போற்றி

கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே

போற்றி போற்றி

குடந்தை கீழ்க்கோட்டம் திருத்தாண்டகத்து பாடல் ஒன்றினில் அப்பர் பிரான், பெருமான் ஆடும் நடனத்தை சதுர நடனம் என்று கூறுகின்றார். சங்கு அரவக் கடல் என்ற சொல்லினை சங்கு கடல் மற்றும் அரவக் கடல் என்று பிரித்து பொருள் காணவேண்டும். அரவம் ஓசை என்ற பொருளில் இங்கே வருகின்றது. சங்கக்கடல் என்றால் சங்குகள் காணப்படும் நீர் நிறைந்த கடல். முகடு=உச்சி; முகடு தட்ட=அண்டத்தின் உச்சியைத் தொடும் வண்ணம். கடலின் நீர்த்துளிகள் அண்டத்தின் உச்சியில் பொருந்தும் வண்ணம் எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர பெருத்த ஓசையுடன் கைகளை வீசி ஆடப்படும் நடனம் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தனிச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதைப் போன்று அவர் ஆடும் நடனமும் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது.

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண்

பூணநூல் புனிதர் போலும்

சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த சைவர்

போலும்

அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற

எறிந்தார்க்கு அருள் அப்போதே

கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை

கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

திருவாசகம் திருவார்த்தைப் பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருந்துறைப் பெருமானை சதுரன் என்று குறிப்பிடுகின்றார். சாத்து=கூட்டம்; வணிகர் கூட்டத்தோடு பற்பல குதிரைகளுடன் வந்த பெருமான், தனது அழகினால் மதுரை மங்கையரைக் கவர்ந்த பெருமான் சதுரனாக இருந்தான் என்று அடிகளார் கூறுகின்றார். அவன் பால் காதல் கொண்டு, அவனை அடைவோமா என்ற ஏக்கத்தினால் உடல் மெலிய, அவனைக் கண்ட மதுரை மங்கையர்களின் வளையல்கள் கழன்றன. இவ்வாறு வளையல்கள் கழல காரணமாக இருந்தவரின் மீது அந்தச் செய்கையை ஏற்றிச் சொல்லி, வளை கவர்ந்தவன் என்று கூறுவது இலக்கிய மரபு.

அங்கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன்

அவனி வந்த

எங்கள் பிரான் இரும் பாசம் தீர இகபரம் ஆயதோர் இன்பம்

எய்தச்

சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை

ஆளி அன்று

மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை அறிவார் எம் பிரான்

ஆவாரே

மேற்கண்ட பாடலுக்கு திருவிளையாடல் புராணத்து வளையல் விற்ற படலத்துடன் இணைத்து சிலர் பொருள் காண்கின்றனர். பிச்சைப் பெருமானாக வந்த சிவபிரானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்கள், தங்களது வளைகள் கழல்வதும் உடை நெகிழ்வதும் உணரமுடியாமல் பெருமான் பால் காதல் மயக்கம் கொண்டிருந்தனர் என்பது புராண வரலாறு. நடந்ததை அறிந்த முனிவர்கள், மதுரை நகரில் வணிக குலத்து பெண்களாக பிறக்க வேண்டும் என்று அவர்களுக்கு சாபம் இட்டதாகவும், அவர்களின் சாபத்தை நீக்கும் வண்ணம் பெருமான் வளையல் வியாபாரியாக வந்ததாகவும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் கூறுகின்றார். சங்கம் என்ற சொல், வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையலை குறிப்பதாக பொருள் கொண்டு, தாருகவனத்தில் முனிவர்களின் மனைவியர் இழந்த வளையல்களை மதுரை நகரில் சேர்த்ததை அடிகளார் உணர்த்துகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். தங்களது கணவர் அல்லாத வேறு ஆடவரை மனதினால் நினைப்பதும் கற்பு நிலை தவறியது என்று கருதிய காலத்தில் வாழ்ந்தவர்கள் தாருகவனத்து மகளிர். அந்நாள் வரை கற்புடன் வாழ்ந்து வந்தமையால், அவர்களது கற்பு ஒரு கவசம் போன்று அவர்களது கணவர்களை காத்தது என்று கூறுவார்கள். அவ்வாறு இருந்த மகளிர், பெருமானது அழகால் கவரப்பட்டு தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை நிறுத்திவிட்டு, தங்களது உடை நெகிழ்வதையும், வளைகளும் மேகலையும் கழல்வதையும் உணராத வண்ணம், பெருமானை பின் தொடர்ந்தார்கள் என்றால், பெருமானது அழகும் திறமையும் ஒப்பற்றது தானே. அத்தகைய திறமையும் அழகும் வாய்ந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்த பெருமானை சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடல் சீர்காழி தலத்தின் மீது அருளிய (2.122.8) பாடலாகும். புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தொலைவு=தோல்வி; உரம்=வலிமை; கரப்பு=மறைப்பு; அழகாரும்=அழகு நிறைந்த; அந்நாள் வரை தோல்வி என்பது என்ன என்று கண்டறியாத அரக்கன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது தலைகளும் தோள்களும் நெரியும் வண்ணம், பெருமான் அரக்கனை மலையின் கீழே அழுத்திய செயல் சதுரப்பாடு உடைய (திறமையான) செயலாக இங்கே கருதப் படுகின்றது. சீர்காழி நகரத்தவர்கள், தங்களது செல்வத்தினை மறைக்காமல், இரப்போர்க்கு இல்லை எனாது கொடுத்து உவந்தனர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

தொலைவு இலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்

தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது

கலையின் மேவும் மனத்தோர் இரப்போருக்குக் கரப்பிலார்

பொழியும் அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே

பெருமானின் வீரச்செயல்களில் தலைசிறந்த வீரச்செயல் திரிபுரத்து கோட்டைகளை எரித்தது அல்லவா. வானில் எப்போதும் பறக்கும் கோட்டைகளை, ஒரே அம்பினால் வீழ்த்தினால் தான் தாங்கள் அழிய முடியும் என்ற பெற்றிருந்த வரத்தின் மமதையால் அனைவரையும் திரிபுரத்து அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். ஒரு நொடிக்கும் சற்றே குறைவான நேரத்தில் அந்த மூன்று கோட்டைகளையும் எரியூட்டி அழித்த பெருமானை சதுரர் என்று திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். முதுசினம்=மிகுந்த கோபம்; வரை=மேரு மலை; மிகுந்த கோபத்துடன் மேருமலையினை வளைத்து. பாடலின் கடை இரண்டு அடிகளில் மலையின் வளமை உணர்த்தப் படுகின்றது. எதிரெதிராக உள்ள மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் நெருப்புப் பொறிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நிலத்தினை தோண்டியபோது வெளிப்படும் மணிகள் ஆகியவை ஒளி வீசுவதால் காளத்தி மலையின் இருள் அகல்கின்றது என்று சம்பந்தர் கூறுகின்றார்.

முது சின வில் அவுணர் புறம் மூன்று ஓர் நொடி வரையின்

மூள எரி செய்

சதுரர் பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை தன்னை

வினவில்

எதிர் எதிரே வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம்

உழுத

கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி

மலையே

பெருமானை விடவும் தான் சதுரன் என்று நகைச்சுவையாக மணிவாசகர் சொல்லும் பாடலை இங்கே சிந்திக்கலாம். இந்த பாடல் கோயில் திருப்பதிகத்தில் வருகின்றது. இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம். ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாகவே பாசநீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா. எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். .தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்

கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது

ஒன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை

உறை சிவனே

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன்

ஓர் கைம்மாறே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.32.8) அப்பர் பிரான் சதுரன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே என்று கூறுகின்றார். அதிரர்=உரத்த குரலில் பேசும் தேவர்கள்; தேவர்களும், வித்தியாதரர்களும், இயக்கர்களும் (யக்ஷர்) தங்களது தலைவன் என்று கருதும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவனாக நின்ற பெருமானின், நெடுந்தழலாய் நின்ற சதுரனின், திருப்பாதங்களின் கீழே நாம் இருக்கப் பெறுவோமாக.

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்

கருத நின்றவ காண்ப அரிதாயினான்

பொறுத்த நீர் வரு பூந்துருத்தித் நகரச்

சதுரன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

முதிரா=வளராத; முதிரா மதி என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த மதியாக, முழு நிலவாகத் திகழ்ந்த சந்திரன் தக்கன் இட்ட சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு வந்த போது பெருமானிடம் சரணடைந்தான். அஞ்சேல் என்று அவனுக்கு அபயம் அளித்த பெருமான், அழியும் நிலையினைத் தவிர்த்து நாளொரு கலையாக வளரும் வண்ணம் அவனுக்கு அருள் புரிந்தார். வளரும் மதியாக மாறியபடியால், பெருமான் அணிந்துள்ள பிறைச் சந்திரன் வளராத மதி என்றும், பிள்ளை மதி என்றும், முதிரா மதி என்றும் திருமுறைப் பாடல்களில் குரிப்பிடப்படுகின்றது. தக்கன் இட்ட சாபத்தினை மாற்றுவது வேறு எவர்க்கும் இயலாத காரியமாக திகழ்ந்த படியால், பெருமானை சதுரன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விடை=இடபம்; கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அரவம்=ஒலி;

இந்த பாடலில் தனது தந்தை என்று இறைவனை சம்பந்தர் அழைக்கின்றார். அம்மையே அப்பா என்று தோணிபுரத்து சிகரத்தை நோக்கி அழுத தனக்கு ஞானப்பால் அளித்த தேவியையும் அதற்கு ஏற்பாடு செய்த பெருமானையும், திருஞானசம்பந்தர் தனது தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்பது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் குறிப்பிடப்படுகின்றது. தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார்.

காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த

தங்கள்

தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால்

வந்து

போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன்

வணங்கிப் போற்றி

மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில்

சென்றார்

இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் பாடலை (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.

தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

கூற்றுவனே நேரில் தோன்றி வருத்துவதைப் போன்று தன்னை வருத்திய சூலை நோயினை எவ்வாறு போக்கிக் கொள்வது என்று தெரியாமல் தவித்த தனது சூலை நோயினை போக்கிய பெருமானை, சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தன்னை மீட்ட பெருமானை, தனது தாய் என்றும் தந்தை என்றும் அப்பர் பிரான் குறிப்பிட்டு, திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (4.94.01) தொடங்குவது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிடினும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் திருநாமம்.

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்

தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே

அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டானாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக்கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெறவிருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, தனது தந்தையாக கருதுவதாக காஞ்சி திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.21.01) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண்சுடர்=பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்

வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற

சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே

தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்னை, காந்தம் இரும்பினை இழுப்பது போன்று திருப்பெருந்துறை தலத்திற்கு அழைத்து அருள் புரிந்த பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு எந்தையடி போற்றி என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் குறிப்பிடுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. அற்புதத் திருவந்தாதியில் (பதினோராம் திருமுறை) காரைக்கால் அம்மையார் பெருமானை எந்தை என்று அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். எந்தையா உள்ளம் என்பதை எம் தையா உள்ளம் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். தையா=புண்படாத; பெருமான் தனது சடையின் மீது வைத்துக் கொண்டுள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. இந்த பொருட்கள் பெருமானின் சடையில் இடம் பெற்றுள்ள வரலாற்றை ஆராய்ந்தால், அதற்கு அடிப்படையாக பெருமானின் இரக்க உணர்வு இருந்த தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். அழியும் நிலையிலிருந்த பிறைச் சந்திரன் பால் இரக்கம் கொண்டு தனது சடையில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை நாம் அனைவரும் அறிவோம். பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டது, பகீரதன் பால் வைத்திருந்த கருணை காரணமாகத் தான் என்பதை புராணங்களும் திருமுறைப் பாடல்களும் விளக்குகின்றன. தாருகவனத்து முனிவர்கள் பெருமானை கொள்வதற்காக நச்சுப் பாம்புகளை ஏவினார்கள். எய்தவன் இருக்க அம்பினை எதற்கு நோவது பயனற்ற செயல் என்பதால், அந்த பாம்புகளின் மீது கோபம் கொள்ளாத இறைவன், அதற்கு மாறாக பாம்புகளின் நச்சுத் தன்மையை மாற்றி, தனக்கு அணிகலனாக ஏற்றுக் கொள்கின்றான். ஏவியவர்கள் இருக்கையில் அம்புகள் மீது கோபம் கொள்ளாது இரக்கம் காட்டிய பெருமான், தாருகவனத்து முனிவர்களின் மனதினில் இருந்த அடிப்படை கருத்தையும் பின்னர் மாற்றியதை புராணங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு பலருக்கும் இரக்கம் காட்டிய பெருமான், தன் பால் இரக்கம் கொள்ளாது இருந்தாலும் தான், அதற்காக வருத்தம் அடையமாட்டேன் என்று அம்மையார் இங்கே கூறுகின்றார். தனது தந்தையாகிய பெருமானுக்கு அடிமையாக ஆட்பட்டு, அவனுக்கு திருப்பணிகள் செய்யும் நிலையில் இருப்பதற்கு மகிழ்ந்து இருப்பேன் என்று கூறும் அம்மையாரின் பக்குவம் சிறந்த அடியார்களிடம் மட்டுமே காணப்படும் பண்பு அல்லவா.

பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கு இரங்காரேனும் கரை மிடற்ற

எந்தையார்க்கு ஆட்பட்டோம் என்று என்று இருக்குமே

எந்தையா உள்ளம் இது

பொழிப்புரை:

நீண்ட சடைமுடியினை உடையவனும், மிகுந்த சாமர்த்தியம் கொண்டவனும், அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை வளரும் பிறையாக மாற்றி தனது சடையில் அணிந்து கொண்டவனும், இடபத்தின் உருவத்தை தனது கொடியில் சின்னமாக ஏற்றுக் கொண்டவனும், எமது தந்தையாக இருந்து எம்மைக் காப்பவனும், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவனும் ஆகிய இறைவன், உறையும் இடமாவது, வேதங்கள் பயிலும் சிறுவர்கள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு இசையும் மொழியும் கற்றுக்கொள்ளும் கிளிகள் சென்றடையும் சோலைகள் நிறைந்த அன்பில் ஆலந்துறை தலமாகும்.

பாடல் 3:

ஊரும் அரவம் சடை மேல் உற வைத்துப்

பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்

நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு

ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

சோலைகள் நிறைந்த தலம் என்று தலத்தின் நிலவளத்தை முந்தைய பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில் தலத்தின் நீர்வளத்தை உணர்த்துகின்றார். புற்றினில் பதுங்கி இருக்கும் காலம் தவிர்த்து எங்கும் ஊர்ந்து திரிந்து கொண்டிருக்கும் பாம்பினை, பெருமான் தனது சடையில் பொருந்தும் வண்ணம் வைத்திருக்கின்றார் என்று சொல்வதன் மூலம், பல இடங்களிலும் திரியும் அடியார்களின் மனதினை ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் வண்ணம் செய்யும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எனவே நமது மனம் அலைபாயாது ஒரே இடத்தில் இருக்கச் செய்வதும் பெருமானின் கருணையால் தான் என்பது மிகவும் நயமாக உணர்த்தப் படுகின்றது. ஒலி பாடும் என்ற தொடருக்கு சான்றோர்கள் பெருமானின் கையில் இருக்கும் துடிக்கருவி எழுப்பும் ஒலி என்று உணர்த்துகின்றனர். துடியிலிருந்து பிறந்தது நாதம். அவ்வாறு பிறக்கும் நாதம் இருவகையாக செயல்படுவதாக கூறுகின்றனர். இறைவனின் அடியார்களுக்கு அந்த ஒலி நாதமாகவும், அல்லாதாருக்கு அந்த ஒலி நடுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுவார்கள். ஒலி என்பதற்கு வேதவொலி என்று பொருள் கொண்டு, பலியேற்கச் செல்லும் போது, பெருமான் வேத கீதங்கள் பாடிக் கொண்டு செல்வதை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆர் பொழில்=நெருக்கமாக வளர்ந்து அடர்ந்து காணப்படும் சோலை;

பொழிப்புரை:

ஊர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பாம்பினை ஒரே இடத்தில் பொருந்தும் வண்ணம் தனது சடையில் நிலை நிறுத்திய பெருமான், அனைவரிலும் உயர்ந்தவராகிய பரமர், உலகம் முழுதும் சென்று, வேத கீதங்களை ஓதியவாறு பல இடங்களுக்கும் சென்று, உயிர்கள் உய்யும் பொருட்டு, பலி ஏற்கின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், நீரில் வாழ்ந்து நீரின் வழியே உணவு உட்கொள்ளும் கயல்மீன்களை, வயலில் உள்ள வாளை வரல் மீன்கள் உண்ணும் வண்ணம் நீர்வளம் நிறைந்த நிலங்களை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 4:

பிறையும் அரவம் உற வைத்த முடிமேல்

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்

மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று

அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

நறை=நறுமணம்; மன்னு=நிலையாக பொருத்தி; அறையும்=ஒலிக்கும்; பாம்பினைத் தனது சடையில் நிலை நிறுத்திய பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தருக்கு சந்திரனையும் அவ்வாறு நிலை நிறுத்திய தன்மை நினைவுக்கு வந்தது போலும். தனது கலைகள் அனைத்தும் அழிந்து தேய்ந்த நிலையில், புகலிடம் வேறொன்றும் இன்றி பெருமானிடம் சரணடைந்த சந்திரனுக்கு மாற்றிடம் ஏதும் இல்லை. எனினும் பாம்பும் சடையில் இருப்பதால், சந்திரனுக்கு அங்கே பொருந்தி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் அல்லவா. அந்த அச்சத்தை தவிர்த்து, தங்களிடையே இருந்த பகையை மறந்து இருவரும் சடையில் பொருந்தி இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிய பெருமானின் ஆற்றல், இங்கே பிறையும் அரவும் உற வாய்த்த முடி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.

பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடம் இல்லை என்பதால் சந்திரனும் பாம்பும் பெருமானின் சடையில் ஒருங்கே நிலவுகின்ற தன்மையை பல தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன, அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.13.01) திருஞானசம்பந்தர் பெருமான் தனது சடையில் பாம்பு, கங்கை நங்கை, இளம் பிறைச் சந்திரன், மற்றும் சிரிக்கும் கபாலம் ஆகியவற்றை வைத்திருப்பதாக கூறுகின்றார், ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்ட பொருட்கள் ஒரே இடத்தில் கலந்து இருக்கின்றன என்பதை குறிப்பிடும் வண்ணம் விரவும் சடை என்று கூறுகின்றார். விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு=போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட உரிவை=தோல்;

குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்

பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்

அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்

விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

பாம்பு சந்திரன் கங்கை நதி ஆகிய மூன்றும் பெருமானின் சடையில் கலந்து இருப்பது, பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமேதும் இல்லை என்ற காரணத்தினால் தான். இந்த தன்மையின் மீது அப்பர் பிரான் தனது கற்பனையை ஏற்றி நயமாக கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (4.53.02) காணலாம். நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை=தோலாடை:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்ப்பதுமாக மாறி மாறி செயல்படுகின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை தான், அவர் நமக்கு உணர்த்துகின்றார்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. இந்த பாடலின் நயத்தில் தனது மனதினை பறி கொடுத்த கி.வா.ஜா. அவர்கள், தனது திருமுறை மலர்கள் புத்தகத்தில், மூன்று பக்கங்களுக்கு மேலாக ஒரு கட்டுரை இந்த பாடலுக்கு வரைந்திருக்கின்றார்.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்

கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்

கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.

அப்பர் பெருமானே, பல பாடல்களில், பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பகையைத் தீர்த்து இருவரையும் ஆட்கொண்ட சிவபெருமான் என்று பாடியுள்ளார். அத்தகைய பாடல் ஒன்று இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில், பாம்பு, சந்திரன், தண்ணீர் ஆகியவைகளுக்கு இடையே இருந்த பகையினைத் தீர்த்து ஒரே இடத்தில் வைத்த பண்பன் என்று குறிப்பிடுகின்றார். வெம்மையான நஞ்சினை உடைய பாம்புக்கு, குளிர்ந்த நீர் அதன் தன்மையால் பகையாக உள்ளது. சடையில் அடைபட்டிருக்கும் கங்கை தனது அலைகளால் மோதுவதால் சந்திரனுக்கு தண்ணீர் பகையாக உள்ளது. அகலம்=மார்பு

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து

நின்றாய் போற்றி

கூம்பித் தொழுவார்கள் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும்

குழகா போற்றி

பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த

பண்பா போற்றி

ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து

ஆள்வாய் போற்றி

வன்னி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள் கொண்டு, சுடர் விட்டெரியும் நெருப்பினை ஒத்த சடைமுடியை உடைய பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நரையுண்டெழு என்ற தொடர் நறுமணம் மிகுந்த நெய் விட்டு வளர்க்கப்படும் வேள்வித்தீ என்ற விளக்கமும் பொருத்தமானதே. மறையோர்கள் குறிப்பிடும் பாடலில் வேள்வி பற்றிய செய்தி வருவது பொருத்தம் தானே.

பொழிப்புரை:

பிறைச் சந்திரனையும் பாம்பினையும், தங்களிடையே இருந்த பகையை மறந்து ஒரே இடத்தில், தனது சடையில் பொருத்திய இறைவன், அந்த சடையின் மீது நறுமணம் கமழும் வன்னி இலைகளையும் நிலையாக பொருத்தியுள்ளார். இந்த இறைவன், வேதியர் பலரும் வேதம் ஓத, அந்த வேதவொலி எங்கும் பரவி நிற்பதும் நீர்வளம் மிகுந்ததும் ஆகிய அன்பில் ஆலந்துறை தலத்தில் உறைகின்றார்.

பாடல் 5:

நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்

கூடும் மலையாள் ஒரு பாகம் அமர்ந்தார்

மாடும் முழவம் அதிர மட மாதர்

ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

நீடும் புனல்=நீண்ட ஆறு; மிகவும் அதிகமான நீர்ப் பெருக்கினை உடையது என்பதை உணர்த்தும் பொருட்டு, நீடும் புனல் என்று கங்கை நதியினை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். மாடு= பக்கம்; மடமாதர்=இளம் பெண்கள்;

பொழிப்புரை:

மிகவும் நீண்டு மிகுந்த நீர்ப்பரப்பினை உடைய கங்கை நதி, தனது சடையில் பொருந்தும் வண்ணம் மறைக்கும் ஆற்றல் படைத்த பெருமான், தன்னைத் தழுவிக் கொண்ட மலைமங்கை உமை அன்னையை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ள பெருமான், அமர்ந்து உறையும் இடமாகிய அன்பில் ஆலந்துறை, ஒலிக்கும் முழவுகளின் பின்னணியில் அழகிய இளம் பெண்கள் பல இடங்களிலும் நடமாடும் தலமாகும்.

பாடல் 6:

நீறார் திருமேனியர் ஊனம் இலார் பால்

ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்

வேறார் அகிலும் மிகு சந்தனம் உந்தி

ஆறார் வயல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

ஆர்=பொருந்திய, நீறார்=திருநீறு பொருந்திய; உம்பர்=மேலுலகில் வாழும் தேவர்கள்; வேறார்= நிலத்திலிருந்து வேறாக கருதப்படும் வண்ணம் பெயர்த்து எடுக்கப்பட்ட; கொள்ளிட ஆற்றின் நீர் வளம் கரையோரங்களில் இருக்கும் அகில் மரங்களை வேரோடு பெயர்த்து அடித்துக் கொண்டு வருகின்றது என்று கூறப்படுகின்றது. வினைகள், உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதற்கு அடிகோலுவதால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்கள் தப்பிச் செல்வதை தவிர்ப்பதால், வினைகள் உயிர்களின் ஊனமாக கருதப் படுகின்றன. பெருமானை வழிபட்டு, தங்களது வினைகளை முற்றிலும் நீக்கிக் கொண்ட அடியார்களை ஊனமிலார் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அனைத்து உயிர்களுடன் பெருமான் பொருந்தி உறைவதாக பல திருமுறைப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் அவ்வாறு இறைவன் கலந்து இருப்பதை அனைவராலும் உணர முடிவதில்லை. பக்குவம் அடைந்த உயிர்கள் மட்டுமே இறைவன் தங்களின் மனதில் இருப்பதை உணர்ந்து இன்பம் அடைகின்றனர். அத்தகைய இன்பம் நாமும் அடைய வேண்டும் என்றால் மனதினில் எந்த விதமான குற்றமும் இல்லாதவர்களாக நாம் மாறவேண்டும் என்ற செய்தி இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. உள்ளம் உருகி தன்னை வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் அமுதமாக ஊறி அடியார்கள் பருகி ஆனந்தம் அடையும் வண்ணம் இறைவன் செயல்படுகின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடல் (3.3.09) நமது நினைவுக்கு வருகின்றது. உருகிட உவகை தந்து=மனம் உருகி தனை வழிபடும் அடியார்களுக்கு, இறைவன் அத்தகைய அடியார்கள் சிவானந்தத்தில் திளைக்கும் வண்ணம் இன்பம் அளித்தல்; வயந்து=விரும்பி; ஆங்குற=திருவடிகளின் கீழே பொருந்தி இருக்கும் வண்ணம்; மன்=தலைவன், அரசன்; பொருதல்=மோதுதல்; பொருகடல்=இடைவிடாது கரையில் மோதும் அலைகள் கொண்ட கடல்; பிறங்கெரி=வெளிப்பட்டு தோன்றும் தீப்பிழம்பு; இந்த பாடலில் பிரமன் மற்றும் திருமாலின் முன்னர் தோன்றிய தீப்பிழம்பு, அளவில் பெருகி நீண்டு உயர்ந்ததை, அவனது அருள் பெருகும் தன்மைக்கு சம்பந்தர் ஒப்பிடுகின்றார். ஒண்=சிறந்த ஒளிவீசும்;

உருகிட உவகை தந்து உடலின் உள்ளால்

பருகிடும் அமுதன பண்பினனே

பொருகடல் வண்ணனும் பூவுளானும்

பெருகிடும் அருள் எனப் பிறங்கு எரியாய்

உயர்ந்தாய் இனி நீ எனை ஒண்மலர் அடி இணைக் கீழ்

வயந்து ஆங்குற நல்கிடும் மதில் புகலிமனே

தனது அடியார்கள் பருகும் வண்ணம் இறைவன் சிவானந்தத் தேனை அளிக்கின்றார் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது அப்பர் பிரானின் திருமருகல் தலத்து பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பரமாய ஆனந்தம்=மேலான ஆனந்தம். சிவானந்தத்தை விடவும் இனிய ஆனந்தம் வேறேதும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. .

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

திருவாசகத்தின் பல பாடல்களில் மணிவாசகர் தனது உள்ளத்தில் தேனாக அமுதமாக ஊறியதாக குறிப்பிடுகின்றார். தனது ஊனினை உருக்கிய பெருமான், சிவானந்தத் தேனைத் தான் பருகும் வண்ணம் பெருமான் அருள் புரிந்தார் என்று மணிவாசகர் கூறும் திருச்சதகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வான நாடர்கள் அறிந்து கொள்ள முடியாத பெருமானை, மற்ற நாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியவில்லை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் இறைவனின் கருணையால், தான் அவனை அறிந்து கொள்ள முடிந்தது என்று இதே பாடலில் உணர்த்தும் அடிகளார், இறைவனை நாம் அறிந்து கொள்ள அவனது கருணை மிகவும் அவசியம் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஊன நாடகம் என்று உயிரினை அதற்கு தகுந்த உடலுடன் பொருத்தி உயிர்கள் வினைகளை அனுபவித்து கழிக்க இறைவன் வழி வகுப்பதை குறிப்பிடுகின்றார். ஞான நாடகம் என்று உள்ளத்தின் அறியாமையை ஒழித்து ஒளியை பெருக்கச் செய்தமை குறிப்பிடப்படுகின்றது.

வான நாடரும் அறிவொணாத நீ மறையில் ஈறும் முன்

தொடரொணாத நீ

ஏனை நாடரும் தெரிவொணாத நீ என்னை இன்னிதாய்

ஆண்டு கொண்டவா

ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக

வைத்தவா

ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்து உடைய

விச்சையே

இவ்வாறு இறைவன் விளைவிக்கும் சிவானந்தத் தேன், அழிவில்லாத ஆனந்தத்தை அளிக்கும் என்று விளக்கும் திருவாசகப் பாடலையும் நாம் இங்கே காண்போம். பிடித்த பத்து பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் அடிகளார், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ

பாவியேனுடைய

ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து

அருளுவது இனியே

பொழிப்புரை:

திருநீறு பொருந்திய மேனியராக காணப்படும் சிவபெருமான், உயிருக்கு உட்பகையாக விளங்கும் காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களின் உள்ளங்களில் இனிய சுவையாக விளங்குகின்றார். இத்தகைய தன்மை கொண்டுள்ள பெருமான், நிலத்திலிருந்து பெயர்த்து அடித்துக் கொண்டு வரப்படும் அகில் மரங்களையும், மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சந்தன மரங்களையும் உடைய காவிரி நதியின் நீர் பாயும் வயல்களை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 7:

செடியார் தலையில் பலி கொண்டு இனிதுண்ட

படியார் பரமன் பரமேட்டி தன் சீரைக்

கடியார் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

செடி=முடை நாற்றம்; பெருமான் பலியேற்கச் செல்வது, பக்குவமடைந்த ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியிருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றது. எனவே எவரேனும் தங்களது மலங்களை அந்த பிச்சைப் பாத்திரத்தில் இட்டால், மிகவும் மகிழ்ச்சி அடைவது சிவபெருமான் தான். இந்த செய்தி தான் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் வைத்திருப்பது பிச்சைப் பாத்திரம் என்பதாலும், அவர் பலி ஏற்கச் செல்கின்றார் என்று சொல்வதாலும், அடியார்கள் அந்த பாத்திரத்தில் சமர்ப்பிக்கும் ஆணவம் கன்மம் மாயை முதலான மலங்கள் உணவாக உருவகப்படுத்தப் பட்டு பெருமான் மகிழ்ச்சியுடன் உண்கின்றார் என்று சொல்லப் படுகின்றது. இந்த தன்மை திருமூலரால் ஒரு பாடலில் விளக்கப்படுகின்றது.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப்பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். தறுகண்=வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்; இவ்வாறு நாம் இடும் சோற்றுருண்டையை மிகவும் விருப்பத்துடன் கடவுள் ஏற்றுக்கொண்டு நமக்கு கருணை புரிவார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் என்றும் தறி நிறுவி

உறுதியாகத்

தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண்

பாசக்

கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை

என்னும்

கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள்

தீர்ப்பாம்

பொழிப்புரை:

முடை நாற்றம் உடைய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏற்றவராக பலிக்கு செல்லும் பெருமான், அந்த பிச்சைப் பாத்திரத்தில் இடப்படும் ஆணவம் முதலான மலங்களை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு இன்பம் அடைகின்றான். மேற்கண்ட கருணைச் செயலால் அனைவராலும் விரும்பப்படுபவனும், அனைவரிலும் மேலானவனும் ஆகிய பெருமானின் புகழினை ஏத்தும் அடியார்கள், நறுமணம் கொண்ட மலர்களை அவனது திருப்பாதங்களில் தூவி, தொழுது வழிபடுகின்ற தலம் அன்பில் ஆலந்துறையாகும்.

பாடல் 8:

விடத்தார் திகழும் மிடறன் நடமாடி

படைத்தார் அரவம் விரவும் சடை ஆதி

கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர

அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

மிடறு=கழுத்து; விடம் என்ற சொல்லுக்கு, ஆலகால விடத்தால் உண்டான கருமை நிறம் கொண்ட கறை என்று பொருள் கொள்ளவேண்டும், ஆர்=பொருந்திய; கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் செயல், தனது தேர் செல்லும் வழியில் குறுக்கே நின்று கயிலை மலை தடை செய்தது என்று தவறாக எண்ணியதால் தான், என்பதை உணர்த்தும் வகையில் தேர் பற்றிய குறிப்பு இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது போலும்.

பொழிப்புரை:

ஆலகால விடத்தினை உட்கொண்டதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் எப்போதும் கருமை நிறம் கொண்ட கறையுடன் திகழும் கழுத்தினை உடைய பெருமான், என்றும் நடனம் ஆடுபவராகவும், படம் எடுத்து ஆடும் தன்மை கொண்ட பாம்பு பொருந்தி இருக்கும் சடையை உடையவராகவும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியான கடவுளாகவும் இருக்கின்றார். கொடிகள் உலாவும் தேரினைக் கொண்டவனும், இலங்கை அரக்கர் குலத்துத் தலைவனும் ஆகிய இராவணன், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு வருந்துமாறு, தனது கால் விரலை கயிலை மலையின் மீது அழுத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த கருணையாளன் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் அன்பில் ஆலந்துறை ஆகும்.

பாடல் 9:

வணங்கிம் மலர் மேல் அயனும் நெடுமாலும்

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை

சுணங்கும் முகத்தம் முலையாள் ஒரு பாகம்

அணங்கும் நிகழ் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

அறிகின்றலர் என்ற சொல்லினை வணங்கி மற்றும் பிணங்கி என்ற சொற்களுடன் கூட்டி பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். தங்கள் இருவரில் யார் பெரியவன் என்பதில் கருத்து வேற்றுமை கொண்டு பிணங்கி நின்ற திருமாலும் பிரமனும், நெடிய தீப்பிழம்பாக இறைவன் தங்களின் முன்னே தோன்றிய போது பெருமானை உணர்ந்து வணங்கி அடி பணியாது நின்ற தன்மையும் இங்கே கூறப்படுகின்றது. பிரமனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் (பிரமன் மற்றும் திருமால்) ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

அணங்கு=தெய்வத்தன்மை பொருந்தியவள்; சுணங்கு=மகளிரின் தோல் அடையும் நிறமாற்றம்; அழகால் ஏற்படும் நிறமாற்றம் மற்றும் பிரிவாற்றாமையால் ஏற்படும் நிற மாற்றம் ஆகிய இரண்டும் சுணங்கு என்றே பொதுவாக குறிப்பிடப்படுவதால், இடத்திற்கு தகுந்தவாறு நாம் பொருள் கொள்ள வேண்டும். வனப்பினால் அழகுடன் விளங்கும் மார்பகங்கள் என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தமாக இருக்கும். பிரிவாற்றாமையால் பசலை பூக்கும் தன்மை உடைய மார்பகங்கள் என்று பொருள் கொண்டு, பெருமானை விட்டு பிரிந்து இருந்தால் வருந்தும் வண்ணம் பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்துள்ள அன்னை என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். சுணங்குதல் என்பது பெண்களின் இயற்கையான குணம். தனது தலைவனை விட்டுப் பிரிந்த தலைவி, தலைவனுடன் மீண்டும் சேரும் நாளும் தருணமும் எப்போதோ என்ற ஏக்கத்தில் பசலை பூத்த உடலுடன் இருப்பதாக பல சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பெண்களின் அந்த பொதுத் தன்மையை இறைவியின் பால் ஏற்றிச் சொல்லப்படும் மரபினை பின்பற்றி சுணங்கு முகத்தம் முலையாள் என்று கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. பெருமை என்ற சொல்லினை வணங்கி என்ற சொல்லுடன் இணைத்து, பிரமனும் திருமாலும் வணங்கிய பெருமை உடைய இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், நெடிய உருவம் கொண்ட திருமாலும், தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டு பிணங்கியவர்களாக இருந்த போது, தங்கள் முன்னே சிவபெருமான் நீண்ட தழல் பிழம்பாக எழுந்ததைக் கண்டு அவரை உணராதவர்களாக அவரது பெருமையினை அறியாதவர்களாக இருந்தனர். வனப்புடன் பொலியும் நிறத்துடன் அழகிய மார்பகங்களைக் கொண்டவளும் தெய்வத்தன்மை உடையவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவராக திகழும் பெருமை உடைய இறைவன் உறையும் இடம் அன்பில் ஆலந்துறையாகும்.

பாடல் 10:

தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்

நெறியா உணரா நிலைக் கேடினர் நித்தல்

வெறியார் மலர் கொண்டு அடி வீழும் அவரை

அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

தறியார்=தறியால் நெய்யப்பட்ட; கையர்=கீழ்மைக் குணம் உடையவர்கள்; அடியார்களின் தன்மையை புரிந்து கொண்டு அவர்கள் கேளாமலே அவர்களுக்கு அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தறியால் செய்யப்பட்ட மெல்லிய ஆடையைத் தங்களது உடலில் போர்த்துத் திரியும் புத்தர்களும், கீழ்மைக் குணம் உடையவர்களும் உண்மையான மெய்ப்பொருளை உணர்த்தும் நெறியினை அறியாதவர்களும், எப்போதும் சிவபெருமானைக் குறித்து புறம் பேசுவதால் நிலையான கேட்டிற்கு ஆளானவர்களும் ஆகிய சமணர்கள் ஆகியோர் கூறும் சொற்களைப் புறக்கணித்து, நாள்தோறும் நறுமணம் கொண்ட மலர்களைத் தூவி இறைவனின் திருப்பாதங்களில் சரண் அடையும் அடியார்களை நன்றாக அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்மை புரியும் சிவபெருமான் அன்பில் ஆலந்துறை தலத்தில் வீற்றிருக்கின்றார்.

பாடல் 11:

அரவார் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்

கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்

பரவார் தமிழ் பத்திசை பாட வல்லார் போய்

விரவாகுவர் வானிடை வீடு எளிதாமே

விளக்கம்:

கரத்தல்=மறைத்தல்; வஞ்சனையாக தமது எண்ணங்களை மறைத்து வழிபடும் போலிகள் போன்று இல்லாமல் உண்மையாக வழிபடும் அடியார்கள் நிறைந்த சீர்காழி நகரம் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அரவார் புனல்=பாம்பு போன்று நெளிந்தும் விரைந்தும் வரும் நீரினைக் கொண்ட ஆறு; பதிகத்தின் கடைப் பாடலில், அந்த பதிகத்தின் பத்து பாடல்களைப் பக்தியுடன் ஓதும் அடியார்கள் பெறுகின்ற பலன்களை குறிப்பிடுவது ஞானசம்பந்தரின் பழக்கம். அவ்வாறே இந்த பாடலிலும் அத்தகைய அடியார்களுக்கு வீடுபேறு கிடைப்பது மிகவும் எளிது என்று கூறுகின்றார். பதிகத்து பாடல்கள் என்று சொல்ல வந்த ஞானசம்பந்தர், தமிழ் பத்திசை என்று சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தேவாரப் பாடல்களை தமிழ் என்றே ஞானசம்பந்தர் அழைப்பதை நாம் உணரவேண்டும். பல பாடல்களில் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று அவர் குறிப்பிடுவதை இங்கே நினைவு கூர்தல் பொருத்தமாகும். இந்த காரணம் பற்றியே ஔவை பிராட்டியார் (பிற்காலத்தில் வாழ்ந்தவர், ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் தமிழ் நாட்டில் இருந்தனர்). மூவர் தமிழ் என்று குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காணலாம்.

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனி மொழியும் கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்

பொழிப்புரை:

பாம்பினைப் போன்று நெளிந்தும் வளைந்தும் விரைந்தும் ஓடி வரும் நதியினை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, வஞ்சனையின்றி பெருமானை வழிபடும் அடியார்கள் நிறைந்த சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பாடிய தமிழ்ப் பாடல்களை, தகுந்த இசையுடன் பொருத்தி பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் சொர்க்க போகத்திற்கு உரியவர்கள்; மேலும் அவர்கள் வீடுபேற்றினை மிகவும் எளிதாக அடைவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், எவராலும் வெற்றி கொள்ள முடியாத திரிபுரத்து அரக்கர்களை அழித்து வெற்றி கொண்ட இறைவனின் ஆற்றல் குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய ஆற்றல் உடைய பெருமான் தன்னைச் சரணடையும் அடியார்களின் இடர்களைக் களைந்து இன்பம் அளிப்பவன் என்ற செய்தி இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. மேலும் இந்த பாடலில் இந்த தலத்தில் இடையறாது வேதங்கள் ஓதப்படுவதால், அந்த வேத ஒலிகளைக் கேட்கும் கிளிகள் இசை பாடுகின்றன என்று தலத்தின் சிறப்பும் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில் உயிர்கள் உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலியேற்கும் செயலும், நான்காவது பாடலில் பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதும் உணர்த்தப் படுகின்றது. தலத்து அடியார்கள் வேதம் ஓதி இறைவனைப் போற்றுகின்றனர் என்று நான்காவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், ஐந்தாவது பாடலில் தலத்து மகளிர் இசையுடன் பொருந்திய நடனங்கள் மூலம் இறைவனைப் போற்றுகின்றனர் என்று உணர்த்துகின்றார்.

ஆறாவது பாடலில், இருவினையொப்பு நிலையினை அடைந்து மலபரிபாகம் அடைந்த அடியார்களின் மனதினில் சிவானந்தம் தரும் இனிய சுவையினை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில், பெருமானின் பெருமையை குறிப்பிட்டு அவனது திருப்பாதங்களை மலர் தூவி வழிபடும் அடியார்களின் தன்மையை குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடலில், அரக்கன் இராவணனை வருத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த கருணைச் செயலை உணர்த்துகின்றார். ஒன்பதாவது பாடலில் பிரமனும் திருமாலும், முதலில் இறைவனின் பெருமையை உணராது இருந்தாலும், பின்னர் இறைவனின் பெருமையை உணர்ந்து போற்றிய தன்மை உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடலில், உண்மையாக தன்னை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு அருள் புரியும் இறைவனின் கருணைச் செயலை குறிப்பிடுகின்றார். கடைப்பாடலில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் தேவாரப் பாடல்களை இனிய இசையுடன் இணைத்துப் பாடும் அடையர்கள் வீடுபேறு அடைவது மிகவும் எளிதான செயல் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மூலம், பெருமான் அருள் புரியும் தன்மையையும் அவனது ஆற்றலையும் அவனை அடியார்கள் வழிபட்டு போற்றும் தன்மையையும் புரிந்து கொண்ட நாம், வஞ்சனை ஏதுமின்றி, மனதாலும் வாக்கினாலும், செயலாலும் இறைவனை வழிபட்டு, அவனது புகழினை உணர்த்தும் தேவார திருவாசகப் பாடல்களை பாடி, இம்மையில் நமது துன்பங்கள் தீர்க்கப் பெற்று மறுமையில் வீடுபேற்றினை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Kanai needu eri
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

கணை நீடு எரிமால்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: