Go Back
22/03/21
மையாடிய கண்டன்
மையாடிய கண்டன் - பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு பெரும்புலியூர் தலம் சென்று மண்ணுமோர் பாகம் உடையார் என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவன் தனது அடியார்களுக்கு செய்யும் உதவிகளை அந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு இறைவனைப் புகழ்ந்து பாடினார். அப்போது அவருக்கு திருவையாறு தலத்திற்கு மேற்கே உள்ள தலங்கள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழவே, மேற்கு திசை நோக்கி செல்லலானார். அவ்வாறு செல்லும் வழியில் நெய்த்தானம் மழபாடி ஆகிய இரண்டு தலங்களுக்கும் சென்றார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பூகம்=பாக்கு மரங்கள்; குடதிசை=மேற்கு திசை;
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக்
குறிப்பினோடும்
படரு நெறி மேல் அணைவார் பரமர் திரு நெய்த்தானப் பதியில்
நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு
நின்றும்
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்றச்
சென்றார்.
இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்கள் கிடைத்துள்ளன. மழபாடி தலம் சென்று பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் பாடி பரமனைப் பணிந்த சுந்தரர், அருகிலுள்ள பல தலங்களுக்கும் சென்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். ஆனால், அப்போது அவர் நெய்த்தானம் சென்றதாக எங்கும் குறிப்பு இல்லை. திருவையாறு தலம் சென்ற போதும், சுந்தரர் அருகிலுள்ள நெய்த்தானம் தலம் சென்றதாக பெரிய புராணத்தில் குறிப்பு ஏதும் இல்லை. மேலும் நெய்த்தானம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. இந்த தலம் திருவையாறு தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது.
தஞ்சையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. தற்போது தில்லைஸ்தானம் என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம், நெய்யாடியப்பர் இறைவியின் திருநாமம் பாலாம்பாள் வாலாம்பிகை. தெய்வீகப் பசு காமதேனு நெய் கொண்டு பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் நெய்த்தானம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். கௌதம முனிவர் பிருகு முனிவர், கௌசிக முனிவர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்ட தலம். நடராஜ சபையில், அம்பிகை பெருமானின் ஆடலுக்கு ஏற்ப தாளம் இடுவதையும், மணிவாசகர் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதையும் காணலாம். தென்முகக்கடவுள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் இருப்பதை காணலாம். வட்ட வடிவமான பீடத்தில், சற்று உயரமான பாணத்துடன் அமைந்துள்ள அழகிய இலிங்கம். சுயம்பு இலிங்கம். பரமனை நெய்யால் நீராட்டிய பின்னர் வெந்நீரால் நீராட்டுவதையும் நாம் இங்கே காணலாம். அம்பிகை சிலை ஒரே கல்லால் செய்யப்பட்டது என்று கூறுவார்கள்.
பாடல் 1
மையாடிய கண்டன் மலைமகள் பாகமது உடையான்
கையாடிய கேடில் கரி உரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே
விளக்கம்:
மை=கருமை நிறம் கொண்ட விடம்; ஆடிய=பொருந்திய; கை=துதிக்கை; கையாடிய=யானை நிற்கும் நிலையில், நடக்கும் நிலையில் எப்போதும் தனது துதிக்கையை ஆட்டியவாறே இருக்கும். அந்த தன்மையை குறிப்பிடும் பொருட்டு கையாடிய கரி என்று கூறுகின்றார். கரி=ஆண் யானை; கேடில்=அழிவற்ற புகழினைப் பெற்ற; இறைவனை எதிர்த்து வந்து இறைவனால் தனது உடலின் தோல் கிழிக்கப்பட்டமையால், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை அழிவற்ற புகழினைப் பெற்றது. செய்=வயல்; செய்யாடிய=வயல்களில் முளைத்த; நெய்யாடியப்பர் என்ற பெருமானின் திருநாமம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
ஆலகால விடம் பொருந்தியதால் கருமை நிறத்து கறையினைத் தனது கழுத்தினில் நிலையாக உடையவனும், மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், தனது துதிக்கையை ஆட்டியவாறு தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழனை உடைய யானையின் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், ஒப்பற்றவனும் ஆகிய இறைவன், வயல்களில் விளையும் குவளை மலரினை ஒத்த கண்களை உடைய உமை அன்னையுடன், நெய்யால் நீராட்டப்பட்டு மகிழ்ந்தவராக உறையும் இடத்தின் பெயராகிய நெய்த்தானம் என்ற பெயரினை சொல்வீர்களாக.
பாடல் 2
பறையும் பழி பாவம் படு துயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவம் படு சடை எம் பெருமானூர்
அறையும் புனல் வரு காவிரி அவை சேர் வடகரை மேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே
விளக்கம்:
பறையும்=நீங்கும்; அறையும்=ஒலிக்கும்; புனை=அணிகின்ற; நிறை=கற்பு நெறி
பொழிப்புரை:
ஆரவாரத்துடன் பாய்ந்து வரும் அலைகள் கொண்ட காவிரி நதியின் வடகரையில் அமைந்ததும், பிறைச் சந்திரன் கங்கை நதி மற்றும் பாம்பினைத் தனது சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமான் தனது ஊராகக் கொண்டு உறைகின்ற தலமும், நிறைந்த குணமாகிய கற்பினைத் தங்களது அணிகலனாகக் கொண்ட மகளிர் வாழ்வதும் ஆகிய நெய்த்தானம் என்ற பெயரினைச் சொன்னால், உம்மைச் சூழ்ந்துள்ள பாவங்களும், அந்த பாவங்களால் ஏற்படும் பழிகளும் பாவத்தின் விளைவாக ஏற்படும் பல துயரங்களும், உம்மை விட்டு முற்றிலும் நீங்கிவிடும்.
பாடல் 3:
பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான்
வேயாயின தோளிக்கு ஒரு பாகம் மிக உடையான்
தாயாகிய உலகங்களை நிலை பேறு செய் தலைவன்
நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே
விளக்கம்:
வேயாயின=வேய் போன்ற, மூங்கில் போன்று அழகிய; தாயாகிய உலகங்கள்=அனைத்து உயிர்களையும் தாய் போன்று தாங்கும் உலகம்; பெருநடம்=ஊழிக் காலத்தில் ஆடப்படும் நடனம்; உலகில் உள்ள அனைத்து உயிர்களுடன் பெருமான் கலந்து நின்று அவற்றை இயக்குவதால் தான் உயிர்களின் இயக்கம் நடைபெறுகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், நிலைபேறு செய் தலைவன் என்று கூறுகின்றார். நெய்யாடிய என்ற சொல் எதுகை நோக்கி நேயாடிய என்று திரிந்தது என்று சிலர் சொல்வார்கள். பலரும், நேயம் ஆடிய பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு நேயாடிய என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்றும் விளக்கம் கூறுகின்றனர். பிந்தைய விளக்கம் மிகவும் பொருத்தமாக காணப்படுகின்றது. மானசீகமாக இறைவனின் திருவுருவத்தை நினைத்து, அன்பினால் அவனை நீராட்டி வழிபடுவது ஞானப் பூஜையின் ஒரு அங்கமாகும். அத்தகைய பூஜையை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடலை நாம் இங்கே காண்போம். பாவநாசத் திருப்பதிகத்தின் கடைப் பாடல் இது (4.15.10). மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபடவேண்டும் என்று கூறுகின்றார், இவ்வாறு செய்யப்படும் வழிபாடு நமது பாவங்கள் அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பாவநாசமே என்று முடிவதால், இந்த பொது பதிகத்திற்கு பாவநாசத் திருப்பதிகம் என்ற பெயர் வந்தது.
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே
அனைத்துப் பொருட்களுக்கும் முன்னமே, தானாகவே தோன்றியவனை, வெண்மை நிறம் கொண்ட மூத்த காளையினை வாகனமாகக் கொண்டவனை, மாலை நேரத்து செம்மை படர்ந்த வானத்தின் வண்ணத்தானை, அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவனை, தங்களது சிந்தையில் இருத்தித் தங்களது எண்ணங்களால் அவனை நீராட்டி, அவனது புகழைக் குறிக்கும் பாடல்கள் பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து, இறைவனே எங்கள் தலைவனே என்று வழிபடும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
அன்பே வடிவமாக இருக்கும் பெருமான், அனைத்து உயிர்கள் மீது அன்பு பாராட்டி அவற்றை இயக்கும் பெருமான், பெரிதும் விரும்புவது அன்பினையே. உயிர்கள் தன்னிடம் அன்பு பாராட்டி, தன்னை வழிபாட்டு தனது அருள் பெற வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது. ஒருவருக்கு மற்றவர் பால் கொண்டுள்ள அன்பு நாளுக்கு நாள் குறையாமல் வளர்ந்து கொண்டே இருந்தால் அதனை காதல் என்று கூறுவார்கள். அத்தகைய அன்பினை பெருமான் பால் வைத்து உள்ளம் கசிந்து அவனது திருநாமத்தைச் சொல்லும் அன்பர்களை நன்னெறியாகிய முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவர் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுவது (3.48.1) நமது நினைவுக்கு வருகின்றது.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
அன்பு மயமாக இருக்கும் பெருமான், நாமும் அனைவரிடத்தும் அன்புடன் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். வேதிகுடி பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.91.3) அன்பின் வழி நில்லாது பல உயிர்களுக்கும் துன்பமிழைத்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்த இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அன்பு மயமாக விளங்கும் பெருமானை அன்பன் என்றும் ஆராவமுதன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.
முன்பின் முதல்வன் முனிவன் எம் வினை கழித்தான்
அன்பின் நிலை இல் அவுணர் புரம் பொடியான செய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி
அன்பனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே
அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கை. அன்பும் சிவமும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியுள்ளது என்பதை திருமூலர் அழகாக விளக்குகின்றார். அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருமந்திரப் பாடலின் திரண்ட கருத்தாகும். அன்பே வடிவாக இறைவன் இருப்பதால் தான் அன்பே சிவம் என்று சான்றோர்கள் கூறுவார்கள். இறைவனின் திருவருள் அன்பு எனப்படும். அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவமும் ஒளியும் மணியும் போன்று பிரிக்க முடியாதவை. எனவே இவற்றை வேறு வேறு என்று கூறுதல் தவறு. இன்பம் அளிக்கும் சிவனின் திருமேனி திருவருள் தான் அவனது திருமேனி என்பதை அறிந்தவர்கள் அவனது திருவடியின் மீது அன்பினை வைத்து தியானித்து இன்பம் அடைவார்கள். அவர்கள் அடையும் இன்பநிலை சிவமாய் அமர்ந்து இருந்தார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே
சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் அளவற்ற இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். தங்களுக்குள்ளே மாறுபட்டு தத்தம் வழியே தன்னை இழுத்துச் செல்ல இடைவிடாது முயற்சி செய்யும் வஞ்சக ஐம்புலன்கள், தன்னைத் தங்களின் வசப்படுத்தும் வழியினை, இறைவனின் உதவியுடன் தான் அடைத்ததால் தனது உள்ளத்தில் பரஞ்சோதி சுடர் விட்டது என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின்
வழியடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே
கடுவாய்க்கரை புத்தூர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.62.3) அப்பர் பிரான் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். அன்பே வடிவானவனும், அடியார்களின் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனாகத் திகழ்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் வீற்றிருப்பவனும், கடுவாய்க் கரை தென்புத்தூர் தலத்தில் உறைபவனும், அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனும் ஆகிய பெருமானை அடியேன் இந்த தலத்தில் கண்டு, வாழ்வினில் உய்வினை அடையப் பெற்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
அன்பனை அடியார் இடர் நீக்கியைச்
செம்பொனைத் திகழும் திருக் கச்சி
ஏகம்பனைக் கடுவாய்க்கரைத் தென் புத்தூர்
நம்பனைக் கண்டு நான் உய்யப் பெற்றெனே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் (5.13.1) அப்பர் பிரான் இறைவனை அன்பனே என்று அழைக்கின்றார். பைங்கழல்=பசும் பொன்னினால் செய்யப் பட்ட கழல் அணிகலன்;
என் பொனே இமையோர் தொழும் பைங்கழல்
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்றிலேன்
செம்பொனே திருவீழிமிழலையுள்
அன்பனே அடியேனைக் குறிக்கொளே
நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ் வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப்
புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து
அருளுவது இனியே
தாயாகிய உலகங்கள் என்ற தொடருக்கு, தன்னில் வாழும் உயிர்களைத் தாய் போன்று தாங்கும் உலகம் என்று பொருள், சிலர் கொள்கின்றனர். அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்று வள்ளுவர் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. தாய் தானே, தனது மக்கள் தனக்கு செய்யும் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு அன்பு பாராட்டுகின்றாள். உலகம் நிலைத்து நிற்பதற்கு பெருமான் தான் காரணம் என்பதால், உலகத்தை நிலைபேறு செய்த தலைவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தாயாகிய என்ற அடைமொழியை தலைவன் என்ற சொல்லுடன் சேர்த்து, உலகங்கள் என்பதற்கு உலகினில் உள்ள உயிர்கள் என்று பொருள் கொண்டு உலகிலுள்ள உயிர்கள் இயங்க வழி வகுப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. .
பொழிப்புரை:
ஊழிக் காலத்தில் பேய்கள் பாட, பெருநடனம் ஆடும் பெருமான், மூங்கில் போன்று அழகிய திரண்ட தோள்களை உடைய பார்வதி தேவிக்குத் தனது உடலின் இடது பாகத்தை அளித்தவன் ஆவான். அனைத்து உலகங்களில் உள்ள எல்லா உயிர்களுடன் இணைந்து நிற்கும் பெருமான், தாய் தனது குழந்தைளை அக்கறையுடன் பாதுகாப்பது போன்று, அந்த உயிர்கள் நிலையாக இயங்கச் செய்கின்ற தலைவனாக இருக்கின்றான். அடியார்களின் அன்பினால் நீராட்டப்படும் இறைவன் உறையும் இடமாகிய நெய்த்தானம் தலத்தின் பெயரை பலமுறையும் சொல்வீர்களாக.
பாடல் 4:
சுடுநீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி
நடு நள்ளிருள் நடம் ஆடிய நம்பன் உறை இடமாம்
கடு வாள் இள அரவாடு உமிழ் நஞ்சம் அது உண்டான்
நெடு வாளைகள் குதி கொள்ளுயர் நெய்த்தானம் எனீரே
விளக்கம்:
சுடுநீறு=சுடுகாட்டு சாம்பல் ஆகிய திருநீறு; நம்பன்=விரும்பப்படுபவன்; வாள்=ஒளி பொருந்திய; நெடு=நீண்ட; நள்ளிருள்=அடர்ந்த இருள்; எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் ஊழிக்காலம்; கடு= கொடுமை நிறைந்த; மந்திர மலையினை மத்தாக பாவித்து, தன்னைக் கயிறாக சுற்றி கடைந்த போது வாசுகி பாம்பு உடல் வருத்தம் தாளாமல் உமிழ்ந்த நஞ்சு;
பொழிப்புரை:
சுடுகாட்டில் இருக்கும் சூடான சாம்பலை திருநீறாகத் தனது உடலில் பூசிக்கொள்பவனும் நமது தலைவனும், ஒளிவீசும் சூலத்தையும் அனல் பிழம்பினையும் தனது கையினில் ஏந்தியவனாக இருள் அடர்ந்த நள்ளிரவினில் நடமாடுபவனும், அனைவராலும் விரும்பப்படுபவனும், கொடிய குணம் ஒளி வீசும் உடல் மற்றும் இளமை ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வாசுகி பாம்பும் பாற்கடலும் வெளிப்படுத்திய நஞ்சினை உண்டவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் வண்ணம் அதிகமான நீர்ப்பெருக்கு உடைய நெய்த்தானம் தலமாகும். நீங்கள் நெய்த்தானம் எனப்படும் இந்த தலத்தின் பெயரினை சொல்லி உய்வினை அடைவீர்களாக.
பாடல் 5:
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் உரை உந்திப்
பகரா வரு புனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்
நிகரான் மணல் இடு தண் கரை நிகழ்வாய நெய்த்தான
நகரான் அடி ஏத்தந் நமை நடலை அடையாவே
விளக்கம்:
முந்திய நான்கு பாடல்களில் நெய்த்தானம் என்று தலத்தின் பெயரினைச் சொல்லி உய்யுமாறு அறிவுரை வழங்கிய ஞானசம்பந்தர், இந்த பாடலில் நெய்த்தானத்து இறைவனின் திருவடிகளைப் பணிந்து புகழ்ந்து வாழ்த்தி நமது துன்பங்களை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். அனவைரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் சந்தனம் ஏலம் மணிகள் செம்பொன் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வருவதையும் நதியின் அலைகள் கரையினில் மோதி இரைச்சல் இடுவதையும் இணைத்து, ஞானசம்பந்தர் ஒரு அழகான கற்பனை செய்கின்றார். தான் உந்திக் கொண்டு வரும் விலையுயர்ந்த பொருட்களை காவிரி நதி விலை கூவி விற்பது போன்று அலைகள் இரைச்சல் இடுகின்றன என்று கூறுகின்றார். ஒரு பொருளின் விலையினை கூவிச் சொல்வதை விலை பகர்தல் என்று கூறுவார்கள். நிகரான் மணல் என்பதற்கு ஒரு வகையான மணல் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது.
பொழிப்புரை:
மனிதர்கள் விரும்பி நுகரும் ஏலம், சந்தனம், செம்பொன், மணி ஆகிய பொருட்களை அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நதியின் அலைகள் இரைச்சல் இடுவது, அந்த விலையுயர்ந்த பொருட்களை ஆரவாரத்துடன் விலை கூறி ஏலம் விடுவது போல் உள்ளது. மேலும் தனது அலைக் கரங்களால் ஒரு வகையான மணலைக் கரையினில் சேர்க்கும் காவிரி நதி, இறைவனைப் பணிந்து புகழ்ந்து வழிபடுவது போன்றும் அந்த ஆரவாரம் உள்ளது. இவ்வாறு குளிர்ந்து காணப்படும் காவிரி நதியின் வடகரையில் உள்ள நெய்த்தானம் நகரத்தில் வீற்றிருக்கும் இறைவனது திருவடிகளை புகழ்ந்து வணங்கும் அடியார்களை துன்பங்கள் சென்று அடைய, துன்பங்கள் விலகி ஓடி விடும்.
பாடல் 6:
விடையார் கொடி உடை அவ்வணல் வீந்தார் வெளை எலும்பும்
உடையார் நறுமாலை சடை உடையார் அவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே
விளக்கம்:
விடை=இடபம்; அண்ணல் என்ற சொல் அணல் என்று குறுகியது, தலைவன் என்று பொருள்; வீந்தார்=இறந்தவர்கள்; மேய=பொருந்திய; புடையே=அருகிலுள்ள; நெய்த்தானத்தின் சிறப்பு மீண்டும் இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. உயிர்கள் இந்த பிறவியில் செய்த செயல்களின் வினைகளுக்கு ஈடாக, சொர்கத்திலும் நரகத்திலும் தான் செய்த புண்ணிய பாவ செயல்களின் பலன்களை நுகர்ந்து வினைகளின் ஒரு பகுதியை கழிக்கின்றன. எனவே அனைத்து உயிர்களும் சில காலத்தை சொர்கத்தில் கழிக்கின்றன என்று கருதலாம்.. எனவே இந்த பாடலில் அமருலகம் என்பது, தேவர்களும் செல்ல விரும்பும் வீடுபேறு உலகம், முக்தி உலகம் என்று பொருள் கொள்வதே பொருத்தம். பெருமான் ஒருவன் தான் வீடுபேறு தரும் வல்லமை உடையவன் என்பதால், பெருமானை வழிபடாதவர்கள் வீடுபேறு அடைய மாட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
பொழிப்புரை:
இடபக் கொடியை உடைய தலைவனும், இறந்தவர்களாகிய பிரமன் திருமால் மற்றும் பல தேவர்களின் எலும்புகளை எரிக்கப்பட்டதால் சாம்பல் படிந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் எலும்புகளை மாலையாக அணிந்தவனும், நறுகணம் கமழும் மாலைகளைத் தனது சடையின் மேல் அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தி உறையும் தலம் நெய்த்தானம் ஆகும். பெருமான் உறையும் திருக்கோயிலின் அருகே உள்ள வாய்க்கால்களிலும் வயல்களும் சோலைகளிலும் காவிரி நதியின் பாய்ந்து செழிப்பாக விளங்குகின்றன. இத்தைகய சிறப்பு வாய்ந்த நெய்த்தானம் தலம் சென்றடைந்து இந்த இறைவனை வழிபடாத மனிதர்கள், மறுமையில் வீடுபேறு அடைய மாட்டார்கள்.
பாடல் 7:
நிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழலானவன் அனல் அங்கையில் ஏந்தி அழகாய
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயரின்றித் தொழுவாரே
விளக்கம்:
கழலாதே=நீங்காதே, விடல் இன்றி=இடைவிடாமல்; தொழலார்=தொழுதலை உடைய; நிழலார்= ஒளி பொருந்திய;
பொழிப்புரை:
பயிர் செழித்து வளர்தலால் ஒளியுடன் விளங்கும் வயல்களும், நறுமணம் கமழும் சோலைகளும் நிறைந்த நெய்த்தானம் தலத்தினில், தழலே உருவமாக உடையவனும் தனது அழகிய கையினில் தீச்சுடரினை ஏந்தியவனும், அழகிய வீரக் கழல் அணிந்த திருப்பதங்களை உடையவனும் ஆகிய இறைவனின், திருப்பாதங்களை நாள்தோறும் இடைவிடாது மறவாது தொழும் அடியார்கள் எந்நாளும் துன்பமின்றி வாழ்வதுடன், ஏனையோர் தொழும் வண்ணம் சிறப்பாக வாழ்வார்கள்.
பாடல் 8:
அறையார் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி
நிறையார் புனல் நெய்த்தானன் நல்நிகழ் சேவடி பரவக்
கறையார் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே
விளக்கம்:
இறை=மணிக்கட்டு, தலைவன்; இறையார=மணிக்கட்டு பொருந்தும் வண்ணம்; அறைதல்=ஓசை எழுப்புதல்; அணி சேர்=அழகு வாய்ந்த; கறையார் கதிர்=கறை பொருந்தியதும் ஒளி வீசுவதும் ஆகிய சந்திரன்; கதிர் வாள்=ஒளி வீசும் கதிர்களை உடைய சந்திரனின் பெயரை உள்ளடக்கிய சந்திரகாசம் என்ற பெயரினை உடைய வாள்; இறைவன் இராவணனுக்கு அளித்த வாளின் பெயர் சந்திரகாசம்.
பொழிப்புரை:
அலைகள் எழுப்பும் ஓசை நிறைந்த கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் தலைவனாகிய அரக்கன் இராவணன், தனது இருபது கரங்களின் மணிக்கட்டுகள் கயிலை மலையின் கீழே பொருந்தும் வண்ணம், அழகான கயிலை மலையினைப் பெயர்த்து வேறொரு இடத்தில் வைப்பதற்கு முயற்சி செய்த போது, அரக்கனது இருபது தோள்களும் அறுந்து விழும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது ஊன்றி அழுத்திய சிவபெருமான், நீர்வளம் நிறைந்த நெய்த்தான நகரில் உறைகின்றார். தனது செயல் தவறு என்பதை உணர்ந்த அரக்கன், நலம் தருவதும் ஒளிமிகுந்ததும் ஆகிய, பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து இசைக்க, பெருமான் அவனது நிலைக்கு இறங்கி, முயற்கறை உடையதும் ஒளி வீசும் கதிர்களை உடையதும் ஆகிய சந்திரனின் பெயரினை உள்ளடக்கிய சந்திரகாசம் என்ற பெயரினை உடைய வாளினை அரக்கனுக்கு ஈந்து அருள் புரிந்தார். இவ்வாறு தனக்கு கேடு செய்ய முயன்றவனுக்கும் அருள் புரிந்த கருணை உள்ளம் கொண்ட இறைவனின் திருப்பாதங்களைப் புகழ்ந்து உரைப்பதே, நாம் பெருமானிடம் சரண் அடைவதற்கு தகுந்த வழியாகும். .
பாடல் 9:
கோலம் முடி நெடுமாலொடு கொய் தாமரையானும்
சீலம் அறிவரிதா ஒளி திகழ்வாய நெய்த்தானம்
காலம் பெற மலர் நீரவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடையார் உடல் உறு நோய் நலியாவே
விளக்கம்:
கோலம் முடி=அழகிய கிரீடம்; சீலம்=இயல்பு; காலம் பெற=விடியற்காலை வேளை; பொழுது விடிவதற்கு முன்னமே எழுந்து நீராடி, பெருமானைத் தொழுது வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது (6.31.3) நமது நினைவுக்கு வருகின்றது. அப்பர் பிரான், இந்த பாடலில் நாம் எவ்வாறு நம்மை இறைபணியில் ஈடுபடுத்திக்கொள்வது என்பதை விளக்குகின்றார். நிலை பெறுதல்=தடுமாற்றம் இல்லாத நிலையில் இருத்தல்;
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்
பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்து ஏத்தி
புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சய போற்றி போற்றி
என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா
நில்லே
பாதிரிப்புலியூரில் இருந்தபோது கொடிய சூலை நோயால் வருந்திய அப்பர் பிரான், எவரும் அறியாமல், திருவதிகையில் தனது தமக்கையார் தங்கியிருந்த திருமடம் வந்தடைகின்றார். அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்னர், தனது தமக்கையார், திருவலகு, தோண்டி, சாணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு திருக்கோயில் சென்றபோது தானும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவர் திருக்கோயிலில் செய்த பணிகளைக் கண்டார். தனது தமக்கையார் செய்த பணிகளைக் கூர்ந்து கவனித்த அவர் தானும் அத்தகைய பணிகளை மேற்கொண்டு மற்றும் திருக்கோயில் சுற்றுப் பாதைகளையும் செப்பனிடத் தொடங்கினார். இந்த பாடலின் இரண்டாவது அடியில், தனது தமக்கையார் செய்த பணிகளைக் குறிப்பிடும் அப்பர் பிரான், அனைவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். தனது தமக்கையார், உழவாரப் பணியில் தான் ஈடுபடுவதற்கு முன்மாதிரியாக இருந்ததை அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் பாடல் இது. நெஞ்சமே, நீ தடுமாற்றம் ஏதும் இன்றி, நிலையான மெய்ப்பொருளை நினைக்கவேண்டும் என்று விரும்பினால் என்னருகில் வா. நான் உனக்கு சொல்வதைக் கேட்டு கடைப்பிடிப்பாயாக. நீ தினமும் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, உடலில் வெண்ணீறு பூசி, சிவபிரானது திருக்கோயில் புகுந்து, தரையை சுத்தமாக பெருக்கிய, பின்னர் நன்றாக மெழுகி, பூமாலைகள் கட்டி, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவரைத் தலையால் முழுதுமாக வணங்கி, புகழ்ந்து பாடி, மகிழ்ச்சியுடன் கூத்தும் ஆடி, சங்கரா நீ வெல்க, வாழ்க என்றும் கங்கையைத் தனது செஞ்சடைமேல் வைத்த ஆதிமூலமே என்றும் ஆரூரா என்றும் பலமுறை கூவி அழைப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறும் வகையில், நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்.
பெரியபுராணத்தில், திலகவதியார் செய்த பணிகளைக் குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. பணிமாறுதல்=திருக்கோயிலின் திருமுற்றத்தை பெருக்கித் தூய்மைப் படுத்துதல்; அலகு=துடைப்பம்; புனிறு=அண்மைக் காலத்தில் கன்று ஈன்ற பசு; அண்மையில் கன்று ஈன்ற பசுவின் சாணம், புனிதமற்றதாக கருதப் படுவதால், அதனை திருக்கோயிலில் பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனிறகன்ற
நலமலி ஆன் சாணத்தால் நன்கு திருமெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்
கடும்பகல் நட்டம் என்று தொடங்கும் நேரிசைப் பதிகத்தின் (பதிக எண்:4.77) மூன்றாவது பாடலில், அப்பர் பிரான், பல்வேறு திருப்பணிகள் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைக் கூறுகின்றார். துளக்கி நன்மலர்=ஒளி பொருந்திய மலர்கள், வாடாமலும் புதுமையாகவும் இருக்கும் மலர்கள்; திருக்கோயில் தரையினைப் பெருக்கி சுத்தம் செய்தால் கிடைக்கும் பலனை விட பத்து மடங்கு பலன், தரையை மெழுக்கிட்டு சுத்தம் செய்தால் கிடைக்கும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்கள் பறித்து மாலைகளாகத் தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணித்தால், நமக்கு மேலுலகம் கிடைக்கும் என்றும் கோயிலில் திருவிளக்கு ஏற்றினால் நமக்கு ஞானம் ஏற்படும் என்றும் கூறும் அப்பர் பிரான், இறைவனைப் பாடல்களால் துதிப்பவர்க்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றார். தனது தமிழ்ப் புலமைக்காக நாவுக்கரசர் என்று இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட அப்பர் பிரான், தன்னால் அளவிடமுடியாத பலன் கிடைக்கும் என்று கூறினால், அது எத்தைகைய பலன் என்பதை நாம் உணரலாம்.
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றியாகும்
துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே
எந்த இறைபணியையும் நாம் நீராடிய பின்னரே மேற்கொள்ளவேண்டும். புலர்கின்ற காலை வேலை என்று விடியற்காலம் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. காலை விடிவதற்கு முன்னர் எழுந்து நீராடி, மலர்களைப் பறித்து, பின்னர் மற்ற இறைபணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் கடவூர் வீரட்டத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் (4.31.4) இங்கே நினைவு கூரத் தக்கது. பெரும்புலர் காலை=இரவின் நான்காவது பகுதி. விதி=வகுக்கப்பட்ட நெறிமுறை.
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டானாரே
விடியற்காலைப் பொழுதினை சிறுகாலை என்று குறிப்பிட்டு, விடியற்காலைப் பொழுதினில் இறைவனை வணங்க வேண்டும் என்று அறிவுரை கூறும் ஞானசம்பந்தரின் பாடல் (3.103.4) வலம்புரம் நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும். உடலினை நிலையில்லாத பொருள் என்பதை உணர்ந்து, நிலையான பொருளாகிய சிவபெருமானை வணங்குமாறு நம்மைத் தூண்டும் பதிகம்.
ஊனமர் ஆக்கை உடம்பு தன்னை உணரில் பொருள் அன்று
தேனமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ
ஆனமர் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாள்தொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.102.10) விடியற்காலை நேரத்தில் சங்கு ஒலிப்பித்து குங்கிலியப் புகை காட்டி இறைவனை வழிபட வேண்டும் என்று கூறுகின்றார். சங்கு ஊதி ஒலி எழுப்புவது, பண்டைய நாட்களில் மங்கல வழக்காக கருதப்பட்டு வந்தது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு ஒலி எழுப்பி, மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அனைவரையும் திருக்கோயில் வழிபாட்டிற்கும், திருவிழா வைபவத்திற்கும் அழைப்பது இதன் நோக்கமாக இருந்தது போலும். நாளடைவில் சங்கு ஊதுவதன் நோக்கத்தினை நாம் மறந்து, மங்கல நிகழ்ச்சிகளில் சங்கினால் ஒலி எழுப்புவதை நாம் நிறுத்தி விட்டோம். ஆனால் இன்றும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் சிங்கப்பூர் கோயில்களில் வெண்சங்குகள் ஊதப்பட்டு அப்பர் பிரானின் பாடல் நினைவூட்டப்படுகின்றது.
சங்கு ஒலிப்பித்துடுமின் சிறுகாலைத் தடவழலில்
குங்கிலியப் புகை கூட்டி என்றும் காட்டி இருபது தோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப் புனல் ஓட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித் தாமரை என்னை ஆண்டனவே
காலைப்பொழுது புலர்வதன் முன்னர், பூக்களை பறிக்கும் பழக்கம் கொண்டவராக அப்பர் பிரான் இருந்தார் என்பதை நாம் அவரது திருவையாறு பதிகத்திலிருந்து (4.3.8) தெரிந்து கொள்ளலாம். பெரும்புலர்=வைகறைப் பொழுது: இறைவனைத் தொழுது துதிப்பதற்காக நாம் பயன்படுத்தும் மலர்கள், நமக்கு முக்திப் பேற்றினைப் பெற்றுத் தரும் என்பதால், அந்த மலர்களை பெறுமலர் என்று அப்பர் பிரான் சிறப்பிக்கின்றார்.
விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது
கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
பொழிப்புரை:
அழகிய கிரீடத்தை உடையவனும் நீண்ட திரிவிக்ரமனாக உயர்ந்து மூன்று உலகங்களையும் தனது ஈரடியால் அளந்த திருமாலும், பறிக்கத் தூண்டும் வண்ணம் அழகு படைத்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும், தனது திருவடியையும் திருமுடியையும் தேடக் காணாத வண்ணம் இயல்பு உடைய சிவபெருமான், அவர்களின் எதிரே நீண்ட தழற்பிழம்பாக நின்றான். அத்தகைய ஆற்றல் உடையவனாக நெய்த்தானம் நகரினில் உறையும் பெருமானை, விடியற்காலையில் எழுந்து நீரும் மலரும் சுமந்து கொண்டு திருக்கோயில் சென்று, இறைவனை நீராட்டிய பின்னர் மலர்கள் தூவித் தொழுது ஏத்தும் அடியார்கள் உலகத்தவரால் புகழப் படுவார்கள்; மேலும் மற்றவர்களை அண்டித் துன்புறுத்தும் பிறப்பிறப்பு நோய் அவர்களை நெருங்காது.
பாடல் 10:
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்
புத்தர் அவர் சொன்னம் மொழி பொருளா நினையேன்மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமது ஏத்தும்
சித்தம் உடை அடையார் உடல் செறு நோய் அடையாவே
விளக்கம்:
இறை=சிறிதும்; மத்தம்=செருக்கு; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்;
பொழிப்புரை:
தங்களது சித்தத்தில் செருக்கு நிறைந்து சிறிதும் அறிவு இல்லாதவர்களாக விளங்கும் சமணர்களும் புத்தர்களும், பெருமானைக் குறித்து இழிவாக பேசிய பேச்சுகளை பொருட்டாக மதிக்காமல், நாம் நாள்தோறும் தொடர்ந்து வழிபடும் வண்ணம் நெய்த்தானம் தலத்தில் உறையும் பெருமானை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்டு விளங்கும் பெருமானை, புகழ்ந்து பணிந்து வணங்கும் சிந்தனை உடைய அடியார்களது உடல், மனிதர்களை துன்புறுத்தும் எந்த நோயாலும் பாதிக்கப் படாது செழுமையாக விளங்கும்.
பாடல் 11:
தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில்
பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே
விளக்கம்:
நில மல்கிய=நிலவளம் பொருந்திய; நில மல்கிய என்ற தொடருக்கு சிறந்த புகழினை உடைய நெய்த்தானம் தலம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சில மல்கிய என்ற தொடரில் உள்ள சில என்ற சொல். சில் (நுண்ணிய பொருள்) என்பதன் திரிபாக கருதி, நுண்ணிய பொருட்களிலும் நிறைந்து நிற்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்கள் மற்றும் ஆறாவது பாடலில், நெய்த்தானம் தலத்தின் சிறப்பு கருதி, ஞானசம்பந்தர் இந்த தலத்தின் பெயரினை உச்சரித்து உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுவதை நாம் நினைவில் கொள்ளலாம். தல மல்கிய=தலங்களில் சிறந்த தன்மை உடைய; ஒப்பற்ற பலனை தரும் பாடல்கள் என்று இந்த பதிகத்து பாடல்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சிவகதி பெறலாம் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுகின்றார். சிவகதி என்றால் சிவஞானமாகிய நெறி என்று பொருள். சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதற்கு வழி வகுக்கும் நெறியே சிவஞானம் என்றும் சிவகதி என்றும் அழைக்கப்படுகின்றது.
கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், நமச்சிவாயப் பதிகம் பாடிய வண்ணம் இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தின் தன்மைகளை உணர்த்துகின்றார். இறைவனின் அருளால், கல்லே தெப்பமாக மாற திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் அருகே கரை ஏறுகின்றார். உடனே அருகிலிருக்கும் திருக்கோயிலுக்கு சென்று ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.94.6) பெருமானை நோக்கி தருவாய் சிவகதி என்று வேண்டுகின்றார். அப்பர் பிரானே சிவகதி வேண்டும் என்று ஆசைப் படுகின்றார் என்றால் சிவகதியின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ. மனம், மொழி, மெய்களால் (உடலினால்) இறைவனை வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பாடலில் மூன்று வகையான வழிபாடுகளும் சொல்லப்பட்டுள்ளன. மனத்தால் நினைந்து, வாயினால் அவனது நாமத்தை சொல்லி, உடலில் திருநீறு அணிந்து சிவபிரானை வழிபடுதல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்ற பொருள் கொண்டு, சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் சிவபிரானது தன்மைகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவனது திருநாமங்களை இடைவிடாது பல பதிகங்கள் மூலம் எடுத்துரைத்த செய்கையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள்.,
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே
தான் கருவாகக் கிடந்த போதே சிவபிரானின் பாதங்களைத் தொழும் கருத்தினை உடையவனாக இருந்ததாக திருநாவுக்கரசு நாயனார் இங்கே குறிப்பிடுகின்றார். அவரது பெற்றோர்கள் இருவரும் சைவவேளாளர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இல்லற நெறி வழுவாமல் அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகினார்கள் என்றும் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவாது தமக்கையார் திலகவதியாரும் சிவநெறியில் பற்று உள்ளவராய்த் திகழ்ந்ததை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் மருள்நீக்கியாரை கருவுற்ற காலத்தே, அவரது தாய் மாதினியார் சிவபிரானைப் பற்றிய சிந்தனையில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான், தான் கருவாக இருந்த காலத்தே சிவபிரானின் சிந்தைனையோடு இருந்தததாக இங்கே குறிப்பிடுகின்றார். தாய்மைப் பேறு காலத்தில், அன்னைமார்கள் நல்ல சிந்தனையுடன் இருப்பது, கருவிலிருக்கும் குழந்தையின் மனப் பக்குவத்திற்கு மிகவும் நல்லது. கருவில் இருக்கும் குழந்தையின் புற உறுப்புகள் வளர்வது போல், குழந்தையின் அக உறுப்பான மனமும் விரிவடைகின்றது. மகாபாரதத்தில், சுபத்திரை கருவுற்ற காலத்தில், கண்ணனும் அர்ஜுனனும், சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பது பற்றி பேசிக் கொண்டிருந்த பேச்சுகளை, கருவாக இருந்த அபிமன்யு கேட்டதன் மூலம், அவன் சக்கர வியூகத்தை உடைக்கும் வழியினை அறிந்தான் என்று கூறப்படுகின்றது. தான் கருவில் இருந்த போதே சிவபிரானின் திருப்பாதங்களை நினைத்து இருந்ததாக அப்பர் பிரான் கோவாய் முடுகி என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (4.96.5) கூறுகின்றார்.
கருவுற்று இருந்து உன் கழலே நினைத்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்து அடியேனைத் திகைப்பு ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்
திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
கருவாக இருந்த காலத்தில் வேறு எதையும் காண முடியாத நிலையில் சிவபிரானை நினைந்து இருந்த தான், கருவில் இருந்து விடுபட்டு வெளியே வந்த பின்னர், உலகத்தில் உள்ள பொருட்களைக் கண்டு திகைத்து நின்றதால் உலகியல் பொருட்கள் மீது பற்று கொண்டதாகவும், அந்த திகைப்பினை ஒழித்து உலகப் பற்றினை நீக்கவேண்டும் என்று இங்கே இறைவனிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார்.
சிவகதியை வேண்டும் அப்பர் பிரான், இந்த பாடலில் தனது தகுதியை குறிப்பிட்டு பெருமானிடம் வேண்டுவதை நாம் உணரலாம். அவர் குறிப்பிடும் தகுதிகள் தான் என்ன. கருவாய்க் கிடந்த நாளிலிருந்தே பெருமானின் திருப்பாதங்களின் தன்மையை நினைத்தல், உலகினில் பிறப்பெடுத்த பின்னர் அவனது திருநாமங்களை அறிந்து கொண்டு இடைவிடாது சொல்லுதல், வாயார சிவாயநம என்று சொல்லியவாறு திருநீறு பூசிக் கொள்ளுதல் என்பனவே அந்த தகுதிகள். நாமும் இந்த தகுதிகளை அடைந்து இறைவனிடம் சிவகதியை வேண்டுப் பெறுவோமாக.
ஒரு பொது பதிகத்தின் பாடலிலும் (4.77.7) அப்பர் பிரான் சிவகதி பெறுவது எப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். அளறு=சேறு: பாறுதல்=நீங்கி ஓடுதல்: பன்றி சேற்றினில் ஆழ்ந்து கிடப்பது போல், மனிதன் மூன்று மலங்களில் சிக்குண்டு, உடலினை பெரிதாகக் கருதி உலக இன்பங்களில் மூழ்கி இருக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. தீவினைகளை உடைய நெஞ்சமே, பன்றி சேற்றில் புரண்டு இன்பம் அடைவது போல, உலக வாழ்வின் இன்பங்களில் சிக்குண்டு, உனது உடலினை பெரிதாக கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை வாழ்கின்றாய். உவர்ப்புச் சுவை கலந்த உமிழ் நீர் ஊருவதால் நாற்றமெடுத்து, இரத்தம் ஒழுகும் பல ஓட்டைகள் ஒரு போர்வையால் மூடப்பட்டு காணப்படும் இந்த உடலின் இழிவான தன்மையை அறிந்து கொள்ளாமல், உடலை அழகுடைய உடல் என்று நீ கருதுகின்றாய். இந்த நிலையிலிருந்து நீ தேறி, வெளியே வந்து, சிவபிரானை நினைப்பாயாகில், உனக்கு சிவகதி திண்ணமாகும். எனவே இறைவனை விருப்பத்துடன் நினைந்து உய்வாயாக என்பதே அப்பர் பிரான் நமக்கு கூறும் அறிவுரை ஆகும்
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டுத்
தேறி நீ நினைதியாயில் சிவகதி திண்ணமாகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே.
பெருமானின் திருவடிகள் மீது மலர்கள் தூவித் தொழுதால் சிறந்த பரிசாகிய சிவகதியினைப் பெறலாம் என்று அப்பர் பிரான் நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.43.8) கூறுகின்றார். வெம்மையான=தீயினும் கொடியதாக நம்மை வருத்துவதால் வெம்மை வினை என்று கூறுகின்றார். கடலின் அலைகள் போன்று ஒன்றன் பின் பின் ஒன்றாக வினைகள் நம்மை வந்து வருத்துவதால் வினைக் கடல் என்று குறிப்பிடுகின்றார். சும்மை=ஆரவாரம்; ரீங்காரம் இட்டு ஆரவாரம் செய்தவாறு புதுமலர்களை சூழும் வண்டுகளை இங்கே குறிப்பிடுகின்றார். சும்மை என்பதை சுமை என்ற சொல்லின் திரிபாக கருதி, சுமந்து செல்லும் பூக்களை குறிப்பிடுகின்றார் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். தலை மீது சுமந்து செல்லும் அளவுக்கு மிகவும் அதிகமாக பூக்களை எடுத்துச் சென்று இறைவனை அனைவரும் வணங்கி வேண்டும் என்பது அப்பர் பிரானின் ஆசை போலும்.
வெம்மையான வினைக்கடல் நீங்கி நீர்
செம்மையாய சிவகதி சேரலாம்
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ
நம்மை ஆளுடையான் இடம் நல்லமே
கோளிலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (5.56.9) கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடி சிவகதி பெறலாம் என்று கூறுகின்றார். கேடு மூடி=துன்பமே மிகுதியாக பரவி; உண்ணும்=நுகரும்; வினைகளில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து உலக வாழ்க்கை என்ற சுழற்சியில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு கூறும் அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. சென்ற பல பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளைக் கழிப்பதற்காக எடுத்த்துள்ள இந்த பிறவியிலும் மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீங்காமல், மீண்டும் பிறப்பதற்கே வழியினைத் தேடிக் கொள்ளமால், இறைவனைப் புகழ்ந்து பாடி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுமாறு நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
கேடு மூடி கிடந்து உண்ணு நாடது
தேடி நீர் திரியாதே சிவகதி
கூடலாம் திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின் இரவோடு பகலுமே
சிவபெருமானை தங்கள் சித்தத்தில் வைத்து வழிபடும் அடியவர் சிவகதி பெறுதல் திண்ணம் என்று, வடகுரங்காடுதுறை மீது அருளிய பதிகம் ஒன்றில் (3.91.3) சம்பந்தர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முழை=குகை, ஆரம்=சந்தன மரம்: முகந்து நுந்தி=தள்ளிக் கொண்டு வரும்: காவிரி நதி தனது அலைகளால் வாரிக் கொண்டு வரும் பொருட்களின் செல்வச் செழிப்பு இங்கே கூறப்படுகின்றது.
முத்து மாமணியொடு முழை வளர் ஆரம் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மணி மதிபொதி சடைமுடி அடிகள் மேல்
சித்தமா அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே
நெய்த்தானத்து பதிகத்தினை ஓதுவதன் பலனாக சிவகதி கிடைக்கும் என்று கூறும் ஞானசம்பந்தர் சில பதிகங்களின் பயனாக சிவகதி கிடைக்கும் என்று சொல்கின்றார். அத்தகைய பதிகங்களை நாம் இங்கே காண்போம். விசயமங்கை பதிகத்தை (3.17.11) ஓதினால் சிவகதி புகுதல் திண்ணம் என்று உறுதியாக கூறுகின்றார். நண்ணிய=நெருங்கிய, இங்கே அவதரித்த என்று பொருள் கொள்ளுதல் பொருத்தம். இந்த பதிகத்தினை முறையாக ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்கள் புண்ணியம் செய்தவர்களாக விளங்குவார்கள் என்றும் அத்தகைய அடியார்கள் சிவகதி அடையப்பெற்று சிவானந்த பெருவாழ்வு வாழ்தல் திண்ணம். என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
விண்ணவர் தொழுதெழு விசயமங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (1.112) ஓதும் அடியார்கள் சிவகதி பெறுவார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். நவம்=புதுமை; இம்மையில் புதுமையான பல நலன்கள் பெற்று மறுமையில் சிவகதி பெறுவார்கள் என்று கூறுகின்றார். தேவாரப் பாடல்களை ஓதினால் தவம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது.
சிவன் உறைதரு சிவபுர நகரைக்
கவுணியர் குலபதி காழியர் கோன்
தவமல்கு தமிழிவை சொல்ல வல்லார்
நவமோடு சிவகதி நண்ணுவரே
சண்பை நகர் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தான் அருளிய பதிகத்தின் (1.66.11) பாடல்களை சிந்தனை செய்து பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் சிவகதி சேர்வார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். வந்தி=வந்தனை; மறை=இரகசியம்; பூஜை நேராம் அல்லாத மற்ற நேரங்களில் பெருமான், பிராட்டியுடன் இரகசியம் பேசுகின்றார் என்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் (சந்தி வேலைகள்) தியானம் செய்கின்றார் என்றும் ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தின் மறை பேசிச்
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்திய செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.105) கடைப் பாடலில் தான் அருளிய பதிகத்தின் பாடல்களை கற்று வல்லவராக திகழும் அடியார்கள் சிவகதி பெறுவது நிச்சயம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். தெருண்ட=தெளிந்த; இருண்ட மேதி=கருமை நிறம் உடைய எருமை மாடுகள்; குருண்ட வார்குழல்=சுருண்டு நீண்டு காணப்படும் சடை;
குருண்ட வார்குழல் சடை உடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெரும் திருக்கோயில் எம் பெருமானை
இருண்ட மேதி இன மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே
பூந்தராய் நகரத்தின் மீது (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.13.11), அந்த பதிகத்தின் பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கும் அடியார்கள், அனைத்துப் பேறுகளிலும் தலை சிறந்ததாக கருதப்படும் சிவகதியை அடைவது திண்ணம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பரம்=பாரம் என்ற சொல் பரம் என திரிந்தது; பரமலி குழல்=அடர்த்தியான கூந்தல்;
புரம் எரி செய்தவர் பூந்தராய் நகர்ப்
பரமலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்த்தல் திண்ணமே
நமது தீவினைகள் நம்மை சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்ல விடாது தடுக்கும் என்றும், நாம் அந்த தீவினைகளின் தாக்கத்தையும் மீறி அவனது திருநாமத்தைச் சொன்னால் தீவினைகள் அழிந்துவிடும் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். ஆன்மாவைப் பிணித்துள்ள தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதாக வழி வகுக்கும் நெறி சிவகதி எனப்படுகின்றது.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே
பொழிப்புரை:
தலங்களில் சிறந்ததாக கருதப்படுவதும், நீர்வளம் மிகுந்ததும் ஆகிய சீர்காழி நகரினைச் சார்ந்தவனும் தமிழ்ப் புலமை பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், உலகெங்கும் பரவிய புகழினை உடைய நெய்த்தானத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய, ஒப்பற்ற பலன்களை அளிக்கும் பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், நுண்ணியமான பொருட்களிலும் நிறைந்து நிற்பவனும், சிறந்த முக்திச் செல்வத்தை உடையவனும் ஆகிய இறைவனது திருவடிகளை, நிறைவான புண்ணியத்தை அளிக்கும் திருவடிகளைச் சார்ந்து என்றும் ஆனந்தத்தில் ஆழ்ந்து சிவகதியில் இருப்பார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் பல பாடல்களில் நெய்த்தானம் என்று தலத்தின் பெயரை சொல்லுமாறு திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நெய்யாடிய பெருமான் என்று தலத்து பெருமானின் திருநாமத்தை உணர்த்தும் பாடலுடன் இந்த பதிகத்தினை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். தலத்து இறைவனை நமக்கு அறிமுகப்படுத்தும் இந்த பாடலில், ஞானசம்பந்தர், பெருமானின் தியாகம் வீரம் கருணை ஆகிய மூன்று பண்புகளை குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றும் நோக்கத்துடன், ஆலகால விடத்தினைத் தானே உட்கொண்ட தியாகச் செயலும், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டு வீரச் செயலும், உமை அன்னைக்குத் தனது உடலின் இடது பாகத்தை வழங்கிய கருணைச் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. முதல் பாடலில் பெருமானை நமக்கு அறிமுகப்படுத்தியதன் காரணம் இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. பெருமானை வழிபட்டு, நமது பழி பாவம் துயரங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிமுகத்தின் நோக்கம். உலகத்து உயிர்களுடன் இணைந்து, அந்த உயிர்களை இயக்கச் செய்து தாய் போல தாங்கும் பெருமானின் திறம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. அனைத்து உயிர்களுடன் இணைந்து அவற்றை தொழில்படுத்தும் பெருமான், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தங்களது உடலினை விட்டு பிரிந்த பின்னரும், தான் அழியாமல் இருக்கும் நிலை, நான்காவது பாடலில் உணர்த்துப் படுகின்றது.
ஐந்தாவது பாடலில், காவிரி நதி ஆரவாரம் செய்து கொண்டு வரும் நிலையினை, காவிரி நதி பெருமானைப் புகழ்ந்துப் பாடுவதாக நயமாக கூறுகின்றார். வீடுபேறு நிலையினை அடைய விருப்பம் உடைய தொண்டர்கள், நெய்த்தானம் தலம் சென்று பெருமானை வணங்க வேண்டும் என்று ஆறாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை இடைவிடாது தொழும் அடியார்கள் மற்றவர்கள் தொழப்படும் நிலையினை அடைவார்கள் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். தனக்கு கெடுதி செய்ய நினைத்த அரக்கன் இராவணனுக்கும் அருள் புரிந்த பெருமானின் கருணைச் செயல் எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் அறிய முடியாது திகைத்த நிலையும் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமான் குறித்து பேசும் இழிவான சொற்களும் உணர்த்தப் பட்டு, அடியார்களுக்கு அறிவரை கூறப்படுகின்றது. கடைப் பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதி சிவகதி அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். நெய்த்தானம் தலத்தின் பெருமையையும், பெருமான் தனது அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையயும் இந்த பதிகத்தின் மூலம் புரிந்து கொண்ட நாமும், நெய்த்தானம் தலம் சென்று இறைவனை வழிபட்டும், இந்த பதிகத்தினை முறையாக ஓதியும் சிவகதி பெற்று இன்பம் அடைவோமாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Maiyaadiya Kandan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்