Go Back

22/03/21

மத்தா வரை நிறுவிக்


மத்தா வரை நிறுவிக் - பின்னணி:


தனது நான்காவது தல யாத்திரையை தில்லைச் சிதம்பரத்தில் தொடங்கிய திருஞானசம்பந்தர், அருகில் உள்ள வேட்களம், கழிப்பாலை, நெல்வாயில் ஆகிய தலங்களும் சென்று பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லை வந்து ஆடினாய் நறு நெய்யுடன் என்று தொடங்கும் பதிகத்தை (3.01) பாடுகின்றார். மேலும் அப்போது தில்லை வாழ் அந்தணர்கள் அனைவரும், சிவகணங்களாக தனக்கு காட்சி அளிப்பதை அருகிலிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு காட்டுகின்றார். பின்னர் தில்லை தலத்தின் திருவீதிகளை வலம் வந்த சம்பந்தர், யாழ்ப்பாணரின் விருப்பத்திற்கு இணங்கி, அவரது ஊராகிய எருக்கத்தம்புலியூர் செல்கின்றார். பின்னர் ஆங்கிருந்து புறப்பட்டு முதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருத்தாச்சலம் தலத்திற்கு செல்கின்றார். முதுகுன்றம் சென்று பழமலை நாதரை காண்பதற்கு பெரு விருப்பம் கொண்டவராக விளங்கிய ஞானசம்பந்தர், அந்த ஆர்வத்தினை பதிகமாக வெளிப்படுத்தி பெருமானின் புகழினை குறிப்பிட்டபடியே முதுகுன்றம் சென்று அடைவோமே என்று பதிகத்தின் பாடல்கள் முடியும் வண்ணம், பாடிய பதிகம் தான் இந்த பதிகம். இந்த ஆர்வத்தினை உணர்ந்த சேக்கிழார் அன்பு மீதூரச் சென்றார் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மெய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை

அடைவோம் என்று

எய்து சொல்மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும்

புனைந்து ஏத்திச்

செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப்

புக்கு

ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.

சென்னை திருச்சி இரயில் பாதையில் விழுப்புரத்திற்கு அடுத்து அமைந்துள்ள இரயில் நிலையம். சிதம்பரம், விழுப்புரம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இறைவன் திருநாமம்=பழமலை நாதர்; சுவாமி சுயம்பு இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. முதுகுன்றம் என்று தலத்தின் பெயரில் குன்று இருப்பினும், நாம் மலை எதனையும் இங்கே காணமுடியாது. மலை பூமியின் அடியில் அழுந்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கேற்ப பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இந்த மலை தோன்றியபடியால், முதுகுன்றம் என்ற பெயர் வந்தது என்பார்கள். வடமொழியில் விருத்தாசலம் என்று அழைக்கப் படுகின்றது. காசிக்கு முன்னரே தோன்றிய தலம் என்பதால் விருத்தகாசி என்ற பெயரும் உள்ளது. இந்த தலத்தினில் மரணம் அடையும் வாய்ப்பினைப் பெறுகின்ற உயிர்களை, இறைவன் தனது தொடையில் மீது கிடத்தி ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்வார் என்றும், அந்த சமயத்தில் தளர்வு அடைந்திருக்கும் உயிரின் களைப்பினை போக்கும் வண்ணம், இறைவி தனது புடவை முந்தானையால் விசிறி இளைப்பாற்றுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருக்கும் பிராகாரம் கயிலாய பிரகாரம் என்றே அழைக்கப் படுகின்றது. மூவர் பெருமானர்கள் பாடல் பெற்ற தலம். இருபத்து நான்கு ஆகமங்களையும் இலிங்க வடிவினில் முருகர் வழிபட்டதை குறிப்பிடும் வகையில் ஆகம சன்னதி அமைந்துள்ளது. இது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. இந்த ஆகம இலிங்க மூர்த்தங்களின் நடுவே விநாயகர் மற்றும் முருகரின் உருவச்சிலைகளும் உள்ளன.

பாலாம்பிகை என்று மற்றொரு அம்பிகை சன்னதியும் இந்த திருக்கோயிலில் உள்ளது. மகான் குருநமச்சிவாயம் (பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) ஒரு முறை இந்த தலம் வந்த போது நடைபெற்ற அற்புதத்தை உணர்த்தும் வகையில் அம்பிகை பாலநாயகி என்று அழைக்கப் படுகின்றாள். இந்த மகான் தினமும் அம்பிகையை வேண்டி பாட, அம்பிகை அவருக்கு உணவு அளித்து வந்தாள் என்று சொல்வார்கள். இந்த தலம் வந்த இவர், முதுகுன்றத்து நாயகி என்ற பொருள் பட, அம்பிகையை கிழத்தி என்று அழைத்துப் பாட, இவர் முன்னே தோன்றிய அம்பிகை கிழத்தியாக உள்ள தான் எவ்வாறு சோறு கொண்டு வருவது என்று கேட்க, மகானும் முற்றா இளமுலையாள் என்று குறிப்பிட்டு வேறொரு பாடல் பாட, அம்பிகை இளமையான வடிவத்துடன் சோறு கொண்டு வந்து கொடுத்தாள் என்று கூறப்படுகின்றது. இந்த கோயிலில் உள்ள ஆழத்துப் பிள்ளையார், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. மற்றவை, அண்ணாமலை செந்தூரப் பிள்ளையார், நாரையூர் (பொள்ளாப் பிள்ளையார்), மதுரை (முக்குறுணிப் பிள்ளையார்), கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்), காசி (துண்டீர விநாயகர்).

பாடல் 1:

மத்தா வரை நிறுவிக் கடல் கடைந்து அவ் விடம் உண்ட

தொத்தார் தரு மணி நீள் முடிச் சுடர்வண்ணனது இடமாம்

கொத்தார் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு

முத்தாறு வந்து அடி வீழ் தரு முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

வரை=மலை, இங்கே மேருமலை; குங்குமம்=குங்குமப்பூ; கோயிலின் நுழைவாயில் எதிரே மிகவும் அருகினில் மணிமுத்தாறு நதி ஓடுகின்றது. நதி அடித்துக் கொண்டு வரும் பண்டங்கள், மலர்கள், அகில் சந்தனம் குங்குமப்பூ முதலான வாசனைப் பொருட்கள். இறைவனின் திருவடிகளில் சாத்துவதற்காக மணிமுத்தாறு நதியால் கொண்டு வரப்படுகின்றன என்று சம்பந்தர் கற்பனை செய்கின்றார். ஒளிர்தல்=நிறத்துடன் ஒளி வீசி விளங்குதல்; மிகவும் பழமையான குன்றம் சென்று கொண்டிருந்த சம்பந்தருக்கு மற்றொரு பழைய மலையும், அந்த மலையுடன் தொடர்பு கொண்ட பெருமானது கருணைச் செயலும் நினைவுக்கு வந்தது போலும். மந்திர மலையினை மத்தாக பயன்படுத்தி பாற்கடலில் அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் கடல் கடைந்த செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. தொத்து=கொத்து; மணி=அழகிய;

பொழிப்புரை:

மந்திர மலையினை மத்தாக நாட்டி, அமுதம் பெறுகின்ற நோக்கத்துடன் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில், அந்த பாற்கடலிலிருந்து கொடிய ஆலகால விடம் பொங்கி எழுந்த போது, தயக்கம் ஏதுமின்றி அந்த விடத்தினை உட்கொண்ட சிவபெருமான், கொத்தாக பூத்திருக்கும் மலர்களை தனது அழகிய சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் தனது திருமேனியை உடையவன் ஆவான். அவன் முதுகுன்றம் தலத்தில் வீற்றிருக்கின்றான். அந்த தலம் யாதெனின், மலர் கொத்துகளையும் குளிர்ந்த தன்மை உடைய சந்தனம் மற்றும் அகில் கட்டைகள், ஒளி வீசும் குங்கமப்பூ செடியின் கிளைகள் முதலியவற்றை தனது அலைக் கரங்களால் அடித்துக் கொண்டு வரும் மணிமுத்தாறு நதி, அந்த பொருட்களை பெருமானின் திருவடியில் கொண்டு வந்து சேர்த்து, கீழே விழுந்து வணங்கும் இடமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 2:

தழையார் வட வியவீ தனில் தவமே புரி சைவன்

இழையார் இடை மடவாளொடும் இனிதா உறைவிடமாம்

மழை வானிடை முழவ அவ் எழில் வளை வாள் உகிர் எரி கண்

முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

வடவீ=வட ஆலமரம்; சிவன்=சிவபெருமான்; இழை=நூலிழை; முழை=குகை; வளை=வளைந்த; வாள்= ஒளி பொருந்திய; உகிர்=நகம்; முழை=குகை; அரி=சிங்கம்; குமிறும்=கர்ஜனை செய்யும்; தற்போது மலை ஏதும் இல்லாமல் இருப்பினும் ஞானசம்பந்தர் காலத்தில் சிறிய குன்றேனும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. வானில் அடர்ந்த மழையுடன் இடி இடிக்க ஓசை எழுப்புவதைக் கேட்ட சிங்கம் தானும் கர்ஜனை புரிந்து குரல் எழுப்பும் இயற்கை காட்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. சுந்தரரும் தனது தேவாரப் பாடலில், மத யானைகள் சிங்கம் குரங்கு ஆகியவை இங்கே இருந்ததாக கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தவம் புரிந்த சிவபெருமான், பிராட்டியுடன் சேர்ந்து இன்பமுடன் உறையும் இடம் முதுகுன்றம் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தவத்தில் ஆழ்ந்திருந்த பெருமான், தனது தவத்தினை முடித்துக் கொண்டு பிராட்டியை திருமணம் புரிந்து கொண்டதன் காரணத்தை மிகவும் அழகாக விளக்கும் அப்பர் பிரான் பாடல் (4.731.) நமது நினைவுக்கு வருகின்றது.

பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை

வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்

அருந்திரு மேனி தன் பால் அங்கொரு பாகமாகத்

திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

தனது தந்தை தட்சன், சிவபெருமானை புறக்கணித்து நடத்திய யாகத்திற்குச் சென்ற தாட்சாயணி, அங்கே சிவபெருமான் அவமதிக்கப் படுவதை பொறுக்க முடியாமல் தந்தையிடம் வாதம் செய்தாள். ஆனால் தட்சன் தனது மகள் என்றும் பாராமல் உமையம்மையையும் தாழ்த்திப் பேசலானான்; மேலும் சிவபெருமானை, அனைவர் முன்னிலையிலும் மிகவும் அதிகமாக பழித்தான். இதனால் மிகவும் வருத்தமடைந்த உமையம்மை, தட்சன் தந்த உடலுடன் வாழ்வது தவறு என்று கருதி தனது உடலை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தாள். தனது தந்தையிடம், தான் இனிமேல் தட்சனது மகளாக அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர் தனது உடலையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு உமையம்மை தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபிரானிடமிருந்து பிரிந்ததைத் தான் பெண்கொடி பிரிந்த பின்னை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல், ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி. சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று குறிப்பிட்டு உமையம்மை உடலை நீத்த பின்னர், தாட்சாயணி என்று உமையம்மையை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருந்திரு என்பதை உமையம்மைக்கு அடைமொழியாகக் கொண்டு, திருமகள் போன்ற அனைத்து பெண் தெய்வங்களிலும் உயர்ந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம்.

தாட்சாயணியின் உணர்வுகளை மதிக்கும் விதமாக, மணிவாசகரும் தனது திருவுந்தியார் பதிகத்தில், பார்ப்பதி என்று தாட்சாயணியை குறிப்பிடுகின்றார். பார்வதி என்ற பெயர் தான் பார்ப்பதி என்று திரிந்துள்ளது

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை

பார்ப்பது என்னேடி உந்தீ பற

பணைமுலை பாகனுக்கு உந்தீ பற

உயிர்களுக்கு போகம் அளிக்க வேண்டி சிவபிரான் உமையம்மையோடு இருக்கின்றான் என்று மணிவாசகர் தனது திருச்சாழல் பதிகத்தில் கூறுகின்றார். திருச்சாழல் பதிகத்தில் வரும் ஒரு பாடல் இது.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுகின்றார். இந்த கருத்து சம்பந்தர் அருளிய வலிவலம் பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.123..6) உணர்த்தப் படுகின்றது. விரவது=கலப்பது இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர் கூறுகின்றார்.

தரை முதலினில் உயிர் புணர் தகை மிக

விரை மலி குழல் உமையொடு விரவது செய்து

நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்

வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

இதே கருத்தினை அப்பர் பெருமானும் திருவீழிமிழலைப் பதிகத்தின் (6.50.3) மூன்றாவது பாடலில், நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். உமையம்மையின் தவத்தின் தன்மையை, முதியவராய் சிவபெருமான், அளக்கச் சென்ற நிகழ்ச்சியும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

அன்றாலின் கீழ் இருந்தங்கு அறம் சொன்னானை அகத்தியனை

உகப்பானை அயன் மால் தேட

நின்றானைக் கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேரிழையைக்

கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்

வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின்

நிறை அளக்கலுற்றுச்

சென்றானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே

சேர்கின்றாரே

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலிலிலும் மற்ற திருமுறைப் பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றது.

இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம்

திங்கள் முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட

சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல்

மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள்

கடலே

பொழிப்புரை:

தழைகள் நிறைந்த ஆலமரத்தின் அகன்ற நிழலில் அமர்ந்த வண்ணம் தவம் புரிந்த சிவனாகிய சிவபெருமான், நூலிழை போன்று மெலிந்த இடையினையும் இளமையும் உடைய பிராட்டியுடன் மகிழ்வுடன் உறையும் இடம் முதுகுன்றம் ஆகும். வானிலிருந்து பொழியும் அடர்ந்த மழையுடன் கலந்து இடிகள் எழுப்பும் ஓசை, யானை பிளிறுவதை நினைவூட்ட, அதனைக் கேட்கும் சிங்கம், அழகுடன் வளைந்து ஒளிவீசும் நகங்களும் நெருப்பு போன்று ஒளி வீசும் கண்களும் உடைய சிங்கம், குகைகளில் இருந்தவாறு கர்ஜனை செய்யும் காட்சிகளை உடையது உயர்ந்த முதுகுன்றமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 3:

விளையாததோர் பரிசில் வரு பசு பாச வேதனை ஒண்

தளை ஆயின தவிர அவ் அருள் தலைவன் அது சார்பாம்

களையார் தரு கதிர் ஆயிரம் உடையவ் அவனோடு

முளை மாமதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

கதிர் ஆயிரம் உடையான்=சூரியன்; விளையாதது=முளைக்காமல் தானே தோன்றியது; பரிசு= தன்மை; இறைவனைப் போன்றே உயிரும் பாசமும் அநாதி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த கொள்கை சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை. இதனையே திருமூலர் தனது முதல் தந்திரத்தில் (உபதேசம் என்று சொல்லப்படும் அதிகாரத்தில்) கூறுகின்றார். மேலும் பசு (உயிர்கள்) பதியினை (இறைவனை) அணுகும் தன்மை உடையன என்றாலும், அந்த உயிருடன் பிணைந்துள்ள பாசம், உயிர்கள் பதியினை அணுக ஒட்டாது தடுக்கும் என்றும், உயிர்கள் தங்களது முயற்சியால் பாசத்தை அடக்கி பதியினை அணுகினால், பாசம் உயிரினைப் பற்றி நில்லாது அதனை விட்டு நீங்கும் என்றும் கூறுகின்றார். பாசம் பதியினைச் சென்று அணுகாது என்றும் இங்கே கூறப்படுகின்றது. இந்த மூன்றையும் இறை உயிர் தளை என்றும் கூறுகின்றனர். பாசத்திற்கு அடையாளமாக இருப்பது ஆணவம், கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள்.

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

முந்தைய பாடலில் இறைவன் இறையுடன் இந்த தலத்தில் இனிதாக உறைவது, உயிர்கள் போகங்களை அனுபவித்து இனப்பெருக்கத்திற்கு வித்தாக அமைந்து, உடலின்றி தவிக்கும் உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்ள தகுந்த உடலுடன் பொருத்தப் படுவதற்கு வழ வகுக்கவே என்று உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் இறைவன் எவ்வாறு அந்த உயிர்களுக்கு உதவி செய்கின்றார் என்று கூறுகின்றார். நமது தலைவனாகிய இறைவனைத் சார்வதன் மூலம், உயிர்கள் தங்களது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். அதாவது, இறைவன் நிலவுலகில் எழுந்தருளி இருப்பதே, உயிர்கள் அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடையும் பொருட்டு என்று சம்பந்தர் தெளிவு படுத்துவதை நாம் உணரலாம்.

பாச வேதனை=மலங்களின் பிணைப்பினால் உயிர் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் மற்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாத நிலை;

பொழிப்புரை:

எவராலும் தோற்றுவிக்கப் படாமல் உயிர்களுடன் தொன்று தொட்டு அனாதியாக பிணைந்திருக்கும் மலக் கட்டுகள், உயிர்களுக்கு இன்ப துன்பங்களை அளித்து உயிர்களால் நீக்க முடியாத விலங்குகளாக விளங்கி உயிர்களை சிறைப்படுத்துகின்றன. அந்த சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு நமக்கு அருள் புரியும் பெருமான் சார்ந்து உறையும் இடம் முதுகுன்றம் ஆகும். ஒளி பொருந்திய ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் சூரியனும், பெருமானின் அருளினால் அழியும் நிலையிலிருந்து மாறி முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வண்ணம் வானளாவ உயர்ந்து நிற்கும் குன்றம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 4:

சுரர் மாதவர் தொகு கின்னரர் அவரோ தொலைவில்லா

நரரான பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலமார்

அரசார் வர அணி பொற்கலன் அவை கொண்டு பன்னாளும்

முரசார் வரு மணம் மொய்ம்புடை முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

சுரர்=தேவர்கள்; தொகு கின்னரர்=கூட்டமாக குழுமி கின்னரம் எனப்படும் இசைக் கருவியை முழக்கும் கின்னரர்கள்; தொலைவில்லா=விட்டுத் தொலைக்க முடியாத பல பிறவிகளை உடைய மனிதர்கள்; மொய்ம்பு=சிறப்பு; பண்டைய நாளில் அரச குமாரர்களின் திருமண நிகழ்ச்சிகள் முதுகுன்றம் தலத்தில் நடத்தப்படுவதை சிறப்பாக கருதினார்கள் போலும். அவர்களது திருமணங்கள் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுவதை இந்த பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய வண்ணம், உமையம்மையுடன் கூடியிருந்து இல்லற வாழ்க்கைக்கும் முன்மாதிரியாக பெருமான் விளங்கும் இடத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது பொருத்தம் தானே.

பொழிப்புரை:

தேவர்களும், குழுவாக இணைந்து கின்னரம் இசைத்து பாடல்கள் பாடும் கின்னரர்களும், தங்களுடன் பிணைந்துள்ள வினைகளின் தன்மையால் விட்டுத் தொலைக்க முடியாமல் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்ந்துள்ள மனிதர்களுள் அடங்கும் முனிவர்களும் தொழும் வண்ணம் முதுகுன்றம் தலத்தில் வீற்றிருப்பவன் இறைவன். பல அழகிய இளவரசர்கள் வர, அவர்களை பொன் நகைகள் கொண்டு வரவேற்பு நடைபெறும் தருணத்தில் மணமுரசுகள் மங்கலமாக முழங்கும் சிறப்பினை உடைய முதுகுன்றத்தில் பல நாட்கள் அத்தகைய வரவேற்புகள் நடைபெறுகின்றன. அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 5:

அறையார் கழல் அந்தன் தனை அயில் மூவிலை அழகார்

கறையார் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்

முறையாயின பல சொல்லி ஒண் மலர்ச் சாந்து அவை கொண்டு

முறையால் மிகு முனிவர் தொழ முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

அந்தன்=அந்தகாசுரன்; அறையார்=ஒலிக்கின்ற; அயில்=கூர்மையான; கறை=இரத்தத்தால் ஏற்பட்ட கறை; ஒண் மலர்=சிறந்த மலர்கள்; முறையாயின=முறையாக சொல்லப்படும் வேத மந்திரங்கள்; இந்த பாடலில் அந்தகனை அடக்கிய வீரச்செயல் குறிப்பிடப்பிடுகின்றது. இந்த செயல் அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்றாக இருப்பினும், மற்ற செயல்கள் போன்று இல்லாமல், மிகவும் குறைவான பாடல்களில் மட்டுமே இந்த செயல் இடம் பெறுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.09.3) சம்பந்தர் இந்த நிகழ்ச்சியை கூறுகின்றார். அந்தகனை வென்ற மூவிலைச் சூலத்தை உடைய பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட் செயல்களை, அவர் புரிந்த வீரச் செயல்களை குறிப்பிட்டு அவரைப் புகழும் அடியார்களின் வலிய வினைகள் மாய்ந்துவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நீராட்டுவதை திருமஞ்சனம் என்று அழைப்பது இறைய வழக்கில் உள்ளதை நாம் உணரலாம்.

நஞ்சினை உண்டு இருள கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற

வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்

அஞ்சனக் கண் உமை பங்கினர் கங்கை அங்கு ஆடிய

மஞ்சனச் செஞ்சடையார் என்ற வல்வினை மாயுமே.

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.5) அப்பர் பிரான் அந்தகனின் உடலினை கூர்மையான சூலத்தால் பெருமான் அழுத்தியதாக குறிப்பிடுகின்றார். தனது வலிமையால் தேவர்களை வென்ற அரக்கன், பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களை பெண்களுக்கான உடையை அணியச் செய்து ஏளனம் செய்ததுடன் அவர்களை பல விதத்திலும் துன்புறுத்தினான். தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய சிவபெருமான், பைரவரை அந்தகனுடன் போருக்கு செல்லுமாறு பணிந்தார். பைரவரும் அந்தகனை வெற்றி கொண்ட பின்னர், அவனது உடலினை சூலத்தில் ஏந்தியவாறு பெருமான் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தார். பெருமானை தரிசனம் செய்த உடன், பெருமானின் கடைக்கண் பார்வை அரக்கனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கவே, செருக்கு நீங்கிய அரக்கன் பெருமானை புகழ்ந்து துதித்தான். மனம் திருந்திய அவனை பெருமான் தனது கணங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார் என்று கந்த புராணம் கூறுகின்றது. அந்தகனை வென்ற இடம், திருக்கோவலூர் என்று கருதப் படுகின்றது.

அந்தகனை அயில்சூலத்து அழுத்திக் கொண்டார் அருமறையை தேர்க்

குதிரை ஆக்கிக்கொண்டார்

சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடும்

இடமாக் கொண்டார்

மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார் மாகாளன் வாசல்

காப்பாக் கொண்டார்

தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என்னை

ஆட்கொண்டார் தாமே

அந்தகன் ஒரு அசுரன்; சுந்தரன்=ஆலால சுந்தரன் என்ற பெயருடன் திருக்கயிலையில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர்; பின்னாளில் நம்பி ஆரூரராக பிறந்தவர்; மாகாளர்=கயிலையின் மேற்கு வாசலை காக்கும் எழுவருள் ஒருவர்; தந்திரம்=வழிபாடு செய்யும் முறை; தந்திரம் என்ற சொல் ஆகமங்களை குறிக்கும் என்றும் கூறுவார்கள். அயில்=கூர்மை; திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது நான்கு வேதங்களும், பெருமானின் தேரினை இழுத்துச் செல்லலும் குதிரைகளாக மாறின. துணை கவரி=இரண்டு சாமரங்கள்;

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.63.9) அப்பர் பிரான் அந்தகனை அயில் சூலத்தால் கொன்றவன் என்று கூறுகின்றார். அயில்–கூரிய. தென்றல் மன்மதனின் தேராக கருதப் படுகின்றது. அந்தகன் என்ற சொல் இயமனை குறிப்பதால், இங்கே அந்தகன் என்று கூறியது இயமனை என்று சில குறிப்பிடுகின்றனர். திருக்கடவூர் தலத்தில் காணப்படும் காலசம்ஹார மூர்த்தி கையில் சூலம் ஏந்தியவராக காணப்பட்டாலும் இயமனை காலால் உதைத்து பெருமான் வீழ்த்தினார் என்ற செய்தியே பல புராணங்களிலும் உள்ளது; மேலும் தேவாரப் பாடல்களும் அவ்வாறே உணர்த்துகின்றன. எனவே இந்த பாடலில் அந்தகாசுரனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்பதே பொருத்தம். கொன்றவன் என்பதற்கு அந்தகனது செருக்கினை அழித்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தென்றல் நன்னெடும் தேர் உடையான்

பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்

அன்று அந்தகனை அயில் சூலத்தால்

கொன்றவன் குரங்காடுதுறையனே

அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.9.2) சுந்தரர் நெருப்பினை உமிழும் சூலத்தை அந்தகனின் உடலில் பாய்ச்சியதாக கூறுகின்றார். பிரமனின் சிரம் அறுத்த வீரச்செயல் மற்றும் அந்தகனைக் கொன்ற வீரச் செயல் ஆகிய இரண்டு செயல்களை குறிப்பிட்ட சுந்தரர், திருமாலுக்கு ஆழி அளித்ததை குறிப்பிட்டு, மூன்றாவது வீரச் செயலாகிய, சலந்தரனை வென்றதையும் குறிப்பால் உணர்த்துகின்றார்.

அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில்

அந்தகனைத்

திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பாகிய பூசனை செய்

பொழுதில்

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவாக ஒர் கண்மலர்

சூட்டலுமே

பொருவிறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப்

புனிதனீரே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.16.2) இறைவன் அந்தகன் மேல் சூலம் பாய்ச்சிய செயல் குறிப்பிடப்படுகின்றது.

செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர் பங்கயமாச்

சிறந்தானுக்கு அருளி

இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனைத்

தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்

பெருமேதை மறையொலியும் பேரி முழவொலியும் பிள்ளையினம்

துள்ளி விளையாட்டு ஒலியும் பெருகக்

கருமேதி புனல் மண்டக் கயல் மண்டக் கமலம் களிவண்டின் கணம்

இரியும் கலயநல்லூர் காணே

அந்தகனின் செருக்கினை அடக்கிய வீரச் செயல், திருமூலராலும் குறிப்பிடப் படுகின்றது. ஆணவ மலத்தினை அடக்க முயற்சி செய்யும் உயிர்கள் இறைவனை வணங்கி, அவனது உதவியால் ஆணவ மலத்தினை அடக்கலாம் என்பதே இந்த பாடலின் உட்கருத்து என்று சான்றோர்கள் கூறுகின்றனர். குருத்து=நுனி; அந்தகன் பெருமானை வழிபட்டு பெற்ற வரத்தினால் வலிமை கொண்டு விளங்கினான் என்று கந்த புராணம் கூறுகின்றது. பலரையும் வருத்திய அந்தகன், அந்த கொடிய செயல்களுக்கு உரிய தண்டணையை இயமன் மூலம் பெறாமல், சிவபெருமானால் தண்டனை அளிக்கப்பட்டு பின்னர் பெருமானின் கணங்களில் ஒருவராக கருதப்படும் நிலைக்கு உயர்ந்தான் என்ற செய்தி, சிவதீக்கை பெற்ற அடியார்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை சிவபெருமான் மூலமே பெறுவார்கள் என்ற சிவாகமக் கருத்து இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது என்று திரு அருணை வடிவேல் முதலியார் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்

வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்

குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே

பொழிப்புரை:

ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த அரக்கன் அந்தகனின் உடலினை, கூர்மையானதும் அழகு மிகுந்ததும் இரத்தக் கரை படிந்து காணப்படுவதும் மூவிலைச் சூலத்தின் வடிவில் அமைந்ததும் ஆகிய நீண்ட வேலினை முனையில் குத்தி ஏந்திய சிவபெருமான் உறையும் இடம் யாதெனில் முதுகுன்றம் ஆகும். வேத மந்திரங்களை முறையாக மொழிந்து பல முனிவர்களும் சிறந்த மலர்களை இறைவனின் திருவடியில் முறையாக சார்த்தி பெருமானை வழிபடும் தலம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 6:

ஏவார் சிலை எயினன் உருவாகி எழில் விசயற்கு

ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார்

மூவாத பல் முனிவர் தொழு முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

எயினன்=வேடன்; சாவாதவர்=தவ வலிமையால் பிறப்பு இறப்பினை வென்றவர்கள்; மூவாத=மூப்பு அடையாத; ஏவார்=ஏ+ஆர்; ஏ–அம்பு; ஆர்=பொருந்திய; சிலை=வில்; சாவாதவர் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இறக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. எனவே சாவாதவர் என்று இந்த பிறவிக்கான நிலை குறிப்பிடவில்லை என்று நாம் பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். எனவே சாவாத நிலை வேண்டும் என்றால் பிறப்பினை தவிர்க்க வேண்டும், அதாவது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடவேண்டும் எனவே இந்த பிறவியை கழித்த பின்னர் அடுத்த எந்த பிறவியும் எடுக்காமல் இருக்கும் நிலையினை உடையவர்கள் என்ற கருத்து பொருத்தமாக உள்ளது. சாவாதவர்கள் என்பதற்கு வேறொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். பொதுவாக எந்த உயிரும் இறந்த பின்னர் சொர்கத்திற்கு அல்லது நரகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வினைகளின் ஒரு பகுதி அந்த இடங்களில் தூல உடலால் அனுபவித்துக் கழிக்கப்பட்டு, அடுத்த பிறவி எடுப்பதகான சூழ்நிலை உருவாக்கப் படுகின்றது. ஆனால் பெருமானின் அடியார்கள் நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ அழைத்துச் செல்லப் படாமல் சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால், மற்ற உயிர்களைப் போன்று மீண்டும் பிறக்கும் நிலை அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு பெருமானின் அருளினால், மற்ற உயிர்களிலிருந்து மாறுபட்ட தன்மையை உடையவர்கள் என்பதை சாவாதவர் பிறவாதவர் என்ற தொடர் மூலம் இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் குறிப்பிடப்படும் முனிவர்கள் அத்தகையவராக திகழ்ந்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அம்புகள் பொருத்தப்படும் வில்லினை ஏந்திய வேடனாக உருவெடுத்து, அழகிய தோற்றம் கொண்ட அர்ஜுனனனுடன் போரிட்ட பின்னர் அர்ஜுனன் உகக்கும் வண்ணம் என்றும் அழியாமல் இருக்கும் தன்மை உடைய பாசுபத அத்திரம் அளித்து அருள் புரிந்தவனும் ஒப்பற்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் முதுகுன்றம் ஆகும். பெருமானை குறித்து நீண்ட காலம் தவமும் தியானமும் செய்த பல முனிவர்கள் மூப்பினை வென்றவர்களாக இருப்பதுடன், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்களாக, பிறவாதவர்களாகவும் சாவாதவர்களாகவும் திகழ்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த முனிவர்கள் இறைவனைத் தொழும் முதுகுன்றம் தலம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 7:

தழல் சேர் தரு திரு மேனியர் சசி சேர் சடை முடியர்

மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில்

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் ஆடக சாலை

முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

தழல் என்பது இங்கே தழலின் நிறத்தை குறிக்கும். சசி=சந்திரன்; ஆடகசாலை=நடனப் பள்ளி முழவு=மத்தளம்; மால்=பெருமை வாய்ந்த; மழ=இளமை; மிக=மிகவும்; தகு=தகுதியான, தகுதி வாய்ந்த; முனிவர்களும் மற்றும் பலரும் இறைவனைத் தொழுவதால் இறை சிந்தனை நிறைந்து காணப்படும் முதுகுன்றம் நகரினில், செல்வச் செழிப்பு மிகுந்து இருப்பதால் நடனம் மற்றும் பாட்டு ஆகிய மென்கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக தலத்து மக்கள் திகழும் தன்மையும் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் அமைந்த திருமேனியை உடையவரும், அழியும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சேர்த்துக் கொண்டு சந்திரனை அழியாமல் காத்தவரும், பெருமை வாய்ந்ததும் இளமையானதும் ஆகிய விடையினைத் தனது வாகனமாக மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு விடையின் மீது வலம் வருபவரும், வேதங்களை அருளியவரும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் முதுகுன்றத்தில் உள்ளது. திருவிழாக்களின் ஒலியும், அழகு மிகுந்த மங்கையர்கள் தகுதி வாய்ந்த நடனப் பள்ளிகளில் முழவு எனப்படும் இசைக் கருவிகளின் இசை பின்னணியில் ஒலிக்க நடமாடுவதால் ஏற்படும் ஒலியும் கலந்து, ஆரவாரம் மிகுந்து, மற்ற ஓசைகளை மிஞ்சி கேட்கப்படும் முதுகுன்றம் தலம் சென்று அடைவோமாக.

பாடல் 8:

செது வாய்மைகள் கருதிவ் வரை அடுத்த திறல் அரக்கன்

கது வாய்கள் பத்து அலறீ இடக் கண்டான் உறை கோயில்

மதுவாய செங்காந்தண் மலர் நிறையக் குறைவில்லா

முது வேய் கண் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

செது வாய்மைகள்=பொல்லாத சொற்கள்; முது=முதிர்ந்த; வேய்=மூங்கில்; கயிலை மலையின் பெருமையை உணராமல், கயிலை மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி தகாத வார்த்தைகள் பேசி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை இழித்து கூறிய மொழிகள் இங்கே உணர்த்தப் படுகின்றன. அடுத்த=நெருங்கிய; கது=பிளந்த, மலைப் பிளவுகள் போன்று பெரியதாக பிளந்த; செதுவாய்மை என்ற தொடருக்கு வரங்களால் பெற்ற வலிமை குன்றிய நிலை, வலிமைகள் குன்றிய வரங்கள் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். செது=குறைந்த; வாய்மை=வலிமை; வரங்களால் தான் பெற்றிருந்த வலிமையை மிகவும் பெரியது என்று கருதிய இராவணன், தனது வலிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்தான். ஆனால் பெருமானின் கால் விரலின் வலிமையின் முன்னே தனது உடல் வலிமை எவ்வளவு குறைந்தது என்பதை உணர்ந்தான் என்பதை குறிப்பிடும் வகையில், குறைந்த வலிமை (செது வாய்மை) என்று குறிப்பிட்டார் என உணர்த்தும் விளக்கமும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை:

தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று தவறாக கருதி, கயிலை மலையினை குறித்து பொல்லாத மொழிகளை மனதினில் கொண்டவனாக, கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையினை நெருங்கிய அரக்கன் இராவணனை, தனது வாய்களை மலைப் பிளவுகளைப் போன்று பெரிதாகத் திறந்து அலறும் வண்ணம், வருத்திய பெருமான், தனது உடல் வலி காரணமாக அரக்கன் பெரிய குரலில் அழுததைக் கண்டார். தேன் நிறைந்த செங்காந்தண் மலர்களின் மீது, நீட்டிய விரல்கள் போன்று காணப்படும் இதழ்கள் மீது, கைகளை நிரப்புவது போன்று, முதிர்ந்த மூங்கில் மரங்கள் முத்துக்கள் உதிர்க்கும் சோலைகள் நிறைந்த தலம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 9:

இயலாடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவரிய

செயல் ஆடிய தீயாய் உருவாகி எழு செல்வன்

புயலாடு வண் பொழில் சூழ் புனல் படைப்பைத் தடத்து அருகே

முயலோட வெண் கயல் பாய்தரு முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

இகல் (மாறுபட்ட) என்ற சொல் இயல் என்று எதுகை கருதி மாறியது. படப்பை=தோட்டம்; செயல்= திருவிளையாடல்; புயலாடு=மேகங்கள் தவழும்; தடம்=நீர்நிலை; வண்பொழில்=சிறந்த சோலைகள்;

பொழிப்புரை:

தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாதத்தில் ஈடுபட்டு, அதற்கு முடிவு கட்டும் வகையில், தங்களின் முன்னர் தோன்றிய தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்போம் என்று முயற்சி செய்த பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண இயலாத வண்ணம் நீண்ட நெடும் பிழம்பாக எழுந்து திருவிளையாடல் புரிந்த செல்வன் சிவபெருமான். மேகங்கள் தோயும் வண்ணம் உயர்ந்த சிறப்பினை உடைய சோலைகள் மற்றும் நீர்ப்பெருக்கினை உடைய நீர்நிலைகளின் அருகே ஓடி விளையாடும் முயல்கள் அச்சம் கொள்ளும் வகையில் துள்ளிப் பாயும் கயல் மீன்கள் நிறைந்த குளங்கள் உடைய தலம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 10:

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்

மருகன் வரும் இடபக் கொடி உடையான் இடம் மலரார்

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி

முருகன்னது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே

விளக்கம்:

அருகர்=சமணர்கள்; குறிஞ்சி=குறிஞ்சி நிலத்துக்கு உரிய குறிஞ்சிப் பண்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய கடவுளாக முருகனை தமிழ் இலக்கியம் குறிப்பிடுகின்றன. இந்த தலத்தினை குறிஞ்சி நிலம் என்று சம்பந்தர் குறிப்பிடுவதால், அவரது காலத்தில் மலையைச் சார்ந்த இடமாக இந்த தலம் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. கடி=தெய்வத்தன்மை பொருந்திய;

பொழிப்புரை:

சமணர்களும் புத்தர்களும் அறியப்படாத பெருமையினை உடையவன் சிவபெருமான்; அவன் மலை அரசனாகிய இமவானின் மருகன்; அவன் இடபக்கொடி உடையவன்; இந்த பெருமான் உறையும் இடமாவது, மலர்கள் சூட்டப்பட்ட கரிய கூந்தல்கள் உடைய இளம் பெண்கள் தெய்வத் தன்மை பொருந்திய குறிஞ்சிப் பண்ணில் முருகனது பெருமைகளை பாடும் தலம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக.

பாடல் 11:

முகில் சேர் தரு முதுகுன்று உடையானைம் மிகு தொல் சீர்

புகலிந் நகர் மறை ஞானசம்பந்தன் உரை செய்த

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்

பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே

விளக்கம்:

நிகர் இல்லன தமிழ் மாலைகள் என்று ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார்.

இந்த பதிகத்தின் பாடல்களில், உயிர்களை பல இடர்களிலிருந்து காப்பாற்றிய இறைவனின் அருட் செயல்களும், பக்குவப்பட்ட உயிர்களுடன் பிணைந்துள்ள மலங்களை நீக்கி அருள் புரியும் தன்மையும் உணர்த்தப் படுவதால் நிகரில்லாத தமிழ் மாலைகள் என்று கூறினார் போலும். தரு-=மரம்;

பொழிப்புரை:

மேகங்கள் வந்து தங்கும் மரங்கள் உடைய முதுகுன்றம் தலத்தினைத் தனது உறைவிடமாக உடைய பெருமானை, பழமையும் பல சிறப்புகள் மிகுந்ததும் ஆகிய புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த, இணையற்ற தமிழ் மாலைகளாகிய இந்த பதிகத்தின் பாடல்களை முறையான இசையுடன் பொருத்தி ஓதும் அடியார்களை துன்பங்களும் அந்த துன்பங்களுக்கு காரணமான பாவங்களும் அணுகா.

முடிவுரை:

திருக்கோயிலில் இருக்கும் போது, பெருமானைத் தவிர்த்து வேறு எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஞானசம்பந்தரோ, ஒரு படி மேல் சென்று, திருக்கோயிலுக்கு செல்லும் வழியிலும், இறைவன் பற்றிய சிந்தனையில் இருந்ததை நாம் இங்கே காண்கின்றோம். இவ்வாறு இறைவனின் புகழினை எடுத்து உரைக்கும் பாடல்களை அவர் பாடிக் கொண்டு சென்றதால், அவருடன் சென்ற அடியார்களும் இறை சிந்தனையில் ஈடுபட்டிருந்த தன்மையை நாம் உணர முடிகின்றது. இவ்வாறு மேலும் சில பதிகங்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். இதன் மூலம், திருக்கோயிலுக்கு செல்லும் போதே, நமது மனதினை பக்குவப் படுத்தும் வண்ணம், இறைவன் பற்றிய சிந்தனையுடன் நாம் செல்லவேண்டும் என்பதை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.

பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தின் தன்மையிலிருந்து உலகத்தவரை காத்த பெருமான் உறையும் இடம் என்று முதுகுன்றம் தலத்தை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அடுத்த இரண்டு பாடல்களில் பெருமான் இந்த தலத்தில் உறைவதன் காரணத்தை குறிப்பிடுகின்றார். உலகத்தவர் தொடர்ந்து இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தி, உயிர்களுக்கு ஏற்ற உடல்களைத் தரும் வண்ணம் அவர்கள் திகழ்வதற்கு எடுத்துக் காட்டாக, பெருமான் போக வாழ்க்கையை நடத்துவதாக, உமை அன்னையுடன் கூடியிருந்து நாடகம் புரிகின்றார் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில், தங்களை பிணைத்துள்ள வினைகளிலிருந்து விடுதலை பெற விரும்பும் உயிர்களுக்கு உதவி புரிவதற்காக இந்த தலத்தில் பெருமான் உறைவதாக கூறுகின்றார். இவ்வாறு இரண்டு விதமாக செயல்படும் இறைவனின் தன்மையை உணர்ந்த உலகத்தவரும், தேவர்களும். முனிவர்களும் தொழும் வண்ணம் உறைகின்ற இடம் முதுகுன்றம் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார்.

ஐந்தாவது பாடலில் முறையாக வேத மந்திரங்கள் சொல்லி முனிவர்கள் பெருமானைத் தொழும் இடம் முதுகுன்றம் என்றும், அவ்வாறு தொழும் முனிவர்கள், பரமனின் அருளினால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றனர் என்று ஆறாவது பாடலிலும் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருவிழாக்களின் ஆரவார ஒலிகளும் இளம் பெண்கள் நடனம் பயில்வதால் ஏற்படும் ஒலியும் நிறைந்து கேட்கப்படும் தலம் என்றும் கூறுகின்றார். எட்டாவது பாடலில் கொடைவள்ளல்கள் போன்று முதிர்ந்த மூங்கில்கள் காந்தள் மலர்களின் இதழ்கள் மீது முத்தினை உதிர்க்கும் அழகான இயற்கைக் காட்சி நிறைந்த தலம் என்று கூறப்படுகின்றது. கயல்மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி குறிப்பிடப்பட்டு தலத்தின் நீர் வளமும் நில வளமும் ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடலில், இசையில் வல்லவர்களாக திகழும் தலத்து பெண்கள் முருகனது பெருமையை பாடும் தலம் என்று கூறுகின்றார். தலத்தின் பெருமையையும், பெருமான் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையையும், ஞானசம்பந்தரின் நிகரில்லாத இந்த பாடல்கள் மூலம் அறிந்து கொண்ட நாமும், இந்த தலத்தை நாடிச்சென்று, இறைவனை பணிந்து வணங்கி அவனது அருள் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக. அவ்வாறு இந்த தலம் செல்லும் வழியில், ஞான சம்பந்தரைப் பின்பற்றி, அவரைப் போன்று பெருமானது பெருமைகளை பேசியவாறும், சிந்தித்தவாறும் செல்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Maththaa Varai Niruvi
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மத்தா வரை நிறுவிக்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: