Go Back

22/03/21

புண்ணியர் பூதியர்


புண்ணியர் பூதியர்- பின்னணி


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி, வெண்ணியூர் சக்கரப்பள்ளி, புள்ளமங்கை, நல்லூர், திருக்கருகாவூர் அவளிவணல்லூர் பரிதிநியமம் பூவனூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் ஆவூர் பசுபதீச்சரம் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகமே நமக்கு கிடைத்துள்ளது. நல்லூர் சென்ற அப்பர் பிரான் இந்த தலமும் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. ஆனால் நமக்கு அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய தேவாரப் பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் இந்த தலம் சென்றதை சேக்கிழார் குறிப்பிடும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

பொங்கு காதலில் போற்றி அங்கு அருளுடன் போந்து

பங்கயத்தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே

எங்கும் அன்பர்கள் ஏத்தொலி எடுக்க வந்தணைந்தார்

அங்கணருக்கு இடமாகிய பழம்பதி ஆவூர் பழம்பதி ஆவூர்

சிவபெருமான் உறைகின்ற தலங்கள் செல்லச் செல்ல, திருஞானசம்பந்தருக்கு மேலும் பல தலங்கள் செல்லவேண்டும் ஆர்வம் பொங்கியது என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். அத்தகைய ஆர்வம் பொங்கியதும் பெருமானின் அருள் என்றும் கூறுகின்றார். ஆவூர் செல்லும் முன்பு பல தலங்களும் சென்றதாக சேக்கிழார் குறிப்பிடுகினார். எனினும் அந்த தலங்கள் யாவை என்றும் தெரியவில்லை. வெண்ணியூர் அரதைப்பெரும்பாழி ஆகிய தலங்களாக இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். ஆவூர்த் தலம் சென்ற பிள்ளையாரை அடியார்கள் வாழ்த்தி வணங்கினார்கள் என்று கூறுகின்றார். ஆவூர் தலம் சென்ற பிள்ளையார் குறைவிலாத அன்புடன் தமிழ் மாலைகள் சாத்தினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தமிழ் பாமாலைகள் கேட்பதற்கு விருப்பம் கொண்டுள்ள பெருமானின் உள்ளம், அத்தகைய பாடல்களைக் கேட்பதால் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சி அடையும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆவூர் என்பது தலத்தின் பெயர். பசுபதியீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். திருஞானசம்பந்தர் பெருமான் பால் கொண்டிருந்த அன்பு நாளுக்கு நாள் அதிகமாகக் கொண்டிருந்த தன்மை, தணிவில் காதல் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

பணியும் அப்பதி பசுபதியீச்சரத்து இனிது இருந்த

மணியை உள்புக்கு வழிபடும் விருப்பினால் காதலால் வணங்கித்

தணிவில் காதலில் தண்டமிழ் மாலைகள் சாத்தி

அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்தணைந்தார்

இந்த தலம் கும்பகோணத்திற்கு பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. சிறிய குன்றில் மேல் உள்ள மாடக் கோயில். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இன்றைய நாளில் கோவிந்தக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர், அச்வத்தநாதர், ஆவூர் உடையார்; இறைவியின் திருநாமம் மங்களநாயகி பங்கயவல்லி; வாயு மற்றும் ஆதிசேஷனின் இடையே நடந்த போட்டியின் விளைவாக மேரு மலையின் இரண்டு துண்டுகள், ஆவூர் பசுபதீச்சரம் மற்றும் நல்லூர் தலங்களில் விழுந்தன என்று கூறுவார்கள். எனவே நல்லூர் போன்று இந்த தலமும் கயிலாய மலைக்கு இணையாக கருதப்படுகின்றது. பிரமன், சப்தரிஷிகள், இந்திரன் சூரியன், நவகிரகங்கள் மற்றும் காமதேனு ஆகியோர் இறைவனை வழிபாட்டு பலன் அடைந்தனர். வசிட்ட முனிவரின் சாபத்தால் வருந்திய காமதேனு இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபாட்டு தனது சாபத்தின் விளைவை நீக்கிக் கொண்டது. பங்கஜவல்லி அம்பிகை சன்னதியின் கிழக்குச் சுற்றில் தசரதர் இறைவனை வழிபடும் புடைச் சிற்பமும் உள்ளது.. தர்மத்வஜன் என்ற அரசன், இந்த தளத்தில் உள்ள பிரம தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்டநோய் நீங்கப் பெற்றான் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. மணிமேகலை நூலின் ஆசிரியர் சாத்தனார் இந்த ஊரைச் சார்ந்தவர்.

ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய திருக்கோயில். கொடிமரத்தில் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பம் உள்ளது. நல்லூர் போன்று இறைவனின் சன்னதி ஒரு கட்டுமரத்தின் மீது அமைந்துள்ளது. படிகட்டுகள் மூலம் மேலேறிச் சென்ற பின்னர் உள்ள மகாமண்டத்தில் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் இரண்டு அம்பிகை சன்னதிகளும் உள்ளன. கருவறையில் உள்ள சுயம்பு மூர்த்தம் கிழக்கு நோக்கி உள்ளது. முருகப் பெருமான் வில்லேந்தியவராக வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகின்றார். கோஷ்டத்தில் உள்ள வீராசன தக்ஷிணாமூர்த்தி மிகவும் அழகிய உருவம். இரண்டு அம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்கயவல்லி சன்னதி மிகவும் பழமையானது. நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில், கட்கம் சங்கம் தாங்கிய வண்ணம், அபய வராத ஹஸ்தத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகை. மங்களாம்பிகை சிலை, பின்னர் குளத்தில் கண்டெடுக்கப்பட்டு நிறுவப் பட்டுள்ளது. இடுப்பிலே கைவைத்த வண்ணம் நின்ற கோலத்தில் அபய வரத கரங்களுடன் காட்சி தரும் அழகிய உருவம் கொண்டுள்ள சிறப்பு வாய்ந்த சன்னதி. அம்பிகை சன்னதிக்கு அருகே கிழக்கு நோக்கி நான்கு பைரவர்களும், வடக்கு நோக்கி ஒரு பைரவர் சன்னதியும் உள்ளன. அசிதாங்க பைரவர், குரூ பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் ஆகியோரை நாம் இங்கே தரிசனம் செய்யலாம். சப்த மாதர்கள் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளன

பாடல் 1:

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள்

கண்ணியர் என்றென்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊராம்

விண்ணுயர் மாளிகை மாடவீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும்

பண்ணியல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

பூதியர்=செல்வம் உடையவர்; பூதி என்ற சொல்லுக்கு திருநீறு என்றும் பொருள் உண்டு. இறைவனை நாம் சென்ற அடைவதற்கு திருநீறு கருவியாக பயன்படுவதால் பூதிசாதனம் என்றே பெரியபுராணத்தில் பல இடங்களில் புகழ்ந்து பேசப்படுகின்றது. புடை=அருகில்; புடைபடுவார்= பெருமானை நெருங்கி அவனது புகழினைப் பாடும் அடியார்கள்; கண்ணியர்=தலை மாலையாக அணிந்தவர்; சுலாவி=கலந்து; அறாத=முடிவு பெறாமல், இடைவிடாது கேட்கப்படுதல்; புண்ணியமே வடிவமாக இருப்பவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் சிவபெருமானை புண்ணியர் என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே சிந்திப்போம்.

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக வீழிமிழலை தலத்தினில் ஞானசம்பந்தர் தங்கியிருந்த போது சீர்காழி தலத்திலிருந்து சில அந்தணர்கள் வந்து அவரை சந்தித்தனர். சீர்காழியை விட்டுப்பிரிந்து வெகு காலம் ஆனதால், பிள்ளையார் மிக விரைவில் சீர்காழி வரவேண்டும் என்று அவர்கள் வேண்டினார்கள். பெருமானின் திருக்குறிப்பு யாது என்பதை அறிந்து கொள்வதற்காக ஞானசம்பந்தர் திருக்கோயில் சென்றபோது, சீர்காழி தலத்தில் இருக்கும் கோலத்துடன் (தனது கையினில் மான் மழு ஏதுமின்றி) பெருமான் விமானத்தில் காட்சி கொடுக்க, பெருமானின் திருக்குறிப்பு தான் இன்னும் சில நாட்கள் திருவீழிமிழலையில் தங்கவேண்டும் என்பதை ஞானசம்பந்தர் புரிந்து கொள்கின்றார். இவ்வாறு தனக்கு காட்சி அளித்ததை பதிகத்தின் அனைத்துப் பாடல்களில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், புகலி நிலாவிய புண்ணியன் என்று பெருமானை உணர்த்துகின்றார். காழியில் இருந்த கோலத்தை, மான் மழு இன்றி இருந்த கோலத்தை, குறிப்பிட்டு வீழியில் காட்சி கொடுத்த அதிசயத்தை உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகம். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலை நாம் இங்கே காண்போம். இதன் பின்னர் வீழிமிழலையில் கடுமையான பஞ்சம் ஏற்பட, பெருமானின் அருளினால் தினமும் ஒரு பொற்காசு பெற்றுக் கொண்ட ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும், அடியார்கள் பஞ்சத்தால் வருந்தாமல் இருக்கும் வண்ணம் அன்னதானம் செய்கின்றனர். இந்த தொண்டினை செய்ய வேண்டும் என்பதற்காக அன்று காழிக் காட்சியை இங்கே காட்டியதன் பொருளாக ஞானசம்பந்தர் புரிந்து கொள்கின்றார்.

செறிமுளரித் தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றைப்

பொறி அரவத்து அணையானும் காணப் புகலி நிலாவிய புண்ணியனே

எறி மழுவோடு இளமான் கையின்றி இருந்த பிரான் இது என் கொல் சொல்லாய்

வெறிகமழு பூம்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

செறி=நறுமணம் நிறைந்த; முளரி=தாமரை மலர்; தவிசு=ஆசனம்; செற்று=வெற்றி கொண்டு, உயிர்க்கு உட்பகையாக விளங்கும் காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்கள்; பொறியரவு=புள்ளிகள் கொண்ட பாம்பு; அணையான்=படுக்கையாகக் கொண்ட திருமால்; சீர்காழி திருக்கோயிலில் கட்டுமலையில் வீற்றிருக்கும் உமாமகேசுவரர் பிரளய வெள்ளம் வடிந்த பின்னர் இறைவன் காட்சி கொடுத்த திருக்கோலம். அனைத்து நிகழ்வுகளும், தாருகவனத்து திருவிளையாடல்கள் உட்பட, அதன் பின்னர் நடந்தவை என்பதால், பெருமான், தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மான் மழு இன்றி காட்சி தருகின்றார். இந்த தன்மையையே எறிமழுவோடு இளமான் கையின்றி இருந்த பிரான் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது.

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.130.6) திருஞானசம்பந்தர் புண்ணியனார் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் தன்மையை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி=உயிர்களுக்கு வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி கட்டுவதும் தானே.

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

பெருமானை பலரும் புண்ணியர் என்று கருதுகின்றனர் என்று திருநீலகண்டப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.116.4) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வித்தியாதரர் என்ற வடமொழிச்சொல் விச்சாதரர் என்று மாறியுள்ளது. திண்ணிய=வலிமை மிகுந்து; உறுதியாக உயிர்களைப் பற்றி இருப்பதால், உயிர்களால் நீக்கமுடியாத வினைகள் என்று குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் இமையாத மூன்று கண்களை உடையவர் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம். இறைவன்; சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவறினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபிரானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்துவிட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபிரான் திறந்ததாக அப்பர் பிரான் ஒரு பாடலில் கூறுகின்றார்..

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்

திண்ணிய தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடல் ஒன்றினில் (3.3.7) திருஞானசம்பந்தர் இறைவனை புண்ணியா என்று அழைக்கின்றார். செடிய=கொடுமையான, துடி இடை=துடி எனப்படும் இசைக்கருவியின் நடுவினைப் போன்று மெலிந்து காணப்படும் இடையினை உடையவள்; புகர் ஏறு=புள்ளிகளை உடைய எருது; தொழுது எழுதல் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து வணங்கிய பின்னர் அடியார்கள் எழுவது இங்கே உணர்த்தப் படுகின்றது.

அடியவர் தொழுது எழ அமரர் ஏத்தச்

செடிய வல்வினை தீர்ப்பவனே

துடி இடை அகல் அல்குல் தூமொழியைப்

பொடியணி மார்பு உற புல்கினனே

புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலிந்நகர்

நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.04.02) ஞானசம்பந்தர் இறைவனை புண்ணியன் என்று அழைக்கின்றார். வாழினும்=நல்வினைப் பயனால் இன்பம் நுகரும் தருணம்; சாவினும்=வினைப்பயன்களை அனுபவித்து இறக்கும் தருணம்; வருந்தினும் போய்=தீவினைப் பயனால் துன்பம் நுகர்ந்து துன்பத்தால் வருந்தும் நிலை; வீழினும்= நன்னெறியிலிருந்து விலகும் தன்மை; தாழ்=வானிலிருந்து கீழே தாழ்ந்து இறங்குகின்ற; இளம்=மென்மையான நீர்; தடம்=அகன்ற; தயங்கு=தாங்கும்; சென்னி=தலையில் உள்ள சடை; போழிள=பிளவுபட்ட ஒற்றைப் பிறைச் சந்திரன்; இவ்வாறு எப்போதும் பெருமானின் கழல்களை பற்றிக் கொண்டு இருக்கும் தனக்கு பெருமான் செல்வம் வழங்காமல் இருக்கலாமா என்று ஞானசம்பந்தர் கேட்கின்றார்.

வாழினும் சாவினும் வருந்தினும் போய்

வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்

தாழிளம் தடம் புனல் தயங்கு சென்னிப்

போழிள மதி வைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.5) திருஞானசம்பந்தர் இறைவனை புனிதர் புண்ணியர் என்று குறிப்பிடுகின்றார். ஏதம்=குற்றம்; பரம்=மேலான பொருள்; பரமர்=அனைவர்க்கும் மேலான இறைவர்; வேதம் கண்=வேதங்களில்

பூதங்கள் பல உடைப் புனிதர் புண்ணியர்

ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்மிறை

வேதம் கண் முதல்வர் வெண்காடு மேவிய

பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.55.4) திருஞானசம்பந்தர் பெருமானை புண்ணியன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் ஆதரிக்காது என்று கூறுகின்றார்.

பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே

மின் போலும் புரிநூல் விடையேறிய வேதியனே

தென்பால் வையம் எல்லாம் திகழும் திருவான்மி தன்னில்

அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

ஞானசம்பந்தர் புகலி தலத்தின் மீது அருளிய பாடலில் குறிப்பிட்டது போன்று அப்பர் பிரானும் திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.20.04) இறைவனை புண்ணியா புனிதா என்று அழைக்கின்றார். ஈங்கு=என்னிடம்: இறைவனைத் தொழுதும் போற்றியும் இருக்கும் தனக்கு எந்த குறையும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இறைவனைத் தொழுது போற்றி காலத்தை கழிப்பதை, எத்தகைய பெரும் பேறாக அப்பர் பிரான் கருதினார் என்பது நமக்கு விளங்குகின்றது. வினைகள் நீக்கும் இறைவனை புண்ணியன் என்றும், மூன்று மலங்களையும் நாசம் செய்யும் இறைவனை புனிதன் என்றும் அழைத்து, அவனைத் தொழுது, புகழ்ந்து பாடும் அடியார்கள் அடையும் பயன் இங்கே உணர்த்தபடுகின்றது

பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொற்கழல்

ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன குறை உடையேன்

ஓங்கு தெங்கு இலையார் கமுகு இளவாழை மாவொடு மாதுளம் பல

தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.2) அப்பர் பிரான், புண்ணியமே வடிவான பெருமானை புண்ணிய மூர்த்தி என்று அழைக்கின்றார். பொருவிடை=போரிடும் காளை: அதள்=தோலாடை: காண முக்தி என்பது தில்லைத் தலத்துடன் இணைத்துச் சொல்லப்படும் முதுமொழி. பேரின்பம் அளிக்கும் முக்தி தானே அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வமாக கருதப்படுகின்றது. அதனால் தான் உலகுக்கெல்லாம் சிறந்த செல்வத்தை அளிக்கக்கூடிய தில்லை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தில்லைத் தலத்தில் உறையும் சிற்றம்பலவனின் திருவடியைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினை விட உயர்ந்த காட்சியினை காணக்கூடிய வாய்ப்பு இல்லை: சிவபிரானின் திருவடிக் காட்சி தான் மிகவும் உயர்ந்தது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலி அதளன்

உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.94.8) அப்பர் பிரான், தான் அடுத்த பிறவியில் புழுவாய்ப் பிறக்கினும், புண்ணியனாகிய இறைவனின் திருவடிகளை மறவாதவனாக இருக்கவேண்டும் என்று வேண்டுகின்றார்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே

வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ் வையகத்தே

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்

செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே

பெண்ணாகடம் தலத்து இறைவனை தூங்கானை மாடத்தெம் புண்ணியனே என்று அழைக்கும் அப்பர் பிரான், பெருமான் தனது திருவடிகளில் தோய்ந்த திருநீற்றினை, தனது (அப்பர் பிரானின்) உடலின் மீது பூசவேண்டும் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.109.2) வேண்டுகின்றார். அடியார்களில் கடையவன் என்ற பொருள் பட, சிறுத்தொண்டன் என்று தன்னை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தூய்மையற்ற உடலைத் தாங்கி நின்றமையால் அவ்வாறு கருதினார் போலும். இந்த பாடலில் சிவபெருமானின் திருவடியில் படிந்துள்ள திருநீற்றினை தன் மேல் பூசுமாறு அப்பர் பிரான் விண்ணப்பிக்கின்றார். முதல் பாடலில் உள்ள விண்ணப்பமும் (மூவிலைச் சூல அடையாளம் பொறித்தல்) கடைப் பாடலில் உள்ள விண்ணப்பமும் (இடபத்தின் குறி பொறித்தல்) ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பெரியபுராண பாடல் தெரிவிக்கின்றது. இந்த பாடலில் உள்ள கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை குறித்து தகவல் ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை எனினும், இந்த கோரிக்கையும் நிறைவேற்றப் பட்டிருக்கும் என்று நாம் நம்பலாம். அரும்பிணி=அகற்றுவதற்கு அரிய பிணி. தனது உடலின் தூய்மை கெட்டுப் போன தன்மையை ஒரு நோயாக அப்பர் பிரான் கருதுகின்றார். என் நினைந்தான்=என்னவென்று நினைத்துக் கொண்டான். தனது தகுதிக்கு மீறிய வேண்டுகோளை விடுப்பதாக எண்ணி சிவபிரான், தனது வேண்டுகோளை ஏற்காமல் இருப்பாரோ என்ற ஐயம் அப்பர் பிரானுக்கு வருகின்றது. என்ன நினைத்து இந்தத் தொண்டன் இவ்வாறு வேண்டுகின்றான் என்று நினைத்து இறைவன் சும்மா இருந்துவிட்டால், சிவபிரான் மேல் பழி சூழும் என்று எச்சரிக்கையினை அப்பர் பிரான் விடுக்கின்றார். தேவன் என்ற சொல் தலைவன் என்ற பொருளில் இங்கே வருகின்றது. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாவர் தம் கடன் என்று கூற்றாயினவாறு எனத் தொடங்கும் பதிகத்தில் பாடிய அப்பர் பிரான் இங்கே, அன்பு கொண்டு பணியும் அடியார்களின் தலைவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார். புண்ணியன் என்றால் பழி பாவங்கள் ஏதுமின்றி புண்ணியங்கள் நிறைந்து செய்தவன் என்று பொருள். புண்ணியன் என்று அழைப்பதன் மூலம், தனது வேண்டுகோளை நிறைவேற்றாது போனால் ஏற்படும் பழியினைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை சிவபிரானுக்கு மிகவும் நயமாக உணர்த்துகின்றார்.

ஆவா சிறுத்தொண்டன் என் நினைந்தான் என்று அரும்பிணி நோய்

காவாது ஒழியில் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்

தேவா திருவடி நீறு என்னைப் பூசு செந்தாமரையின்

பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (5.90.9) அப்பர் பிரான் பொன்னார் சடைப் புண்ணியன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் வஞ்சனை ஏதுமின்றி பெருமானை வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போலும் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.99.1) புண்ணியா என்று பெருமானை அழைக்கும் அப்பர் பிரான், அவனது திருவடியை நாடி தான் செல்வதாக உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பெருமானை பூம்புகலூர் மேவிய புண்ணியன் என்று குறிப்பிடுகின்றார். ஒன்பது வாசல்=இரண்டு கண்கள், இரண்டு நாசித் துவாரங்கள், இரண்டு காதுகள், வாய், எருவாய், கருவாய்: நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களும் எப்போதும் திறந்தே காணப்படுகின்றன. இருந்தாலும் உடலுடன் உயிர் ஒட்டியிருக்கும் வரையில் இந்த துவாரங்கள் திறந்து காணப்பட்டாலும், அவை வெளியேறுவதில்லை; உயிர் பிரிந்த பின்னர், திறந்துள்ள வாயில் வழியாக, உயிர் மறுபடியும் உள்ளே வரவும் முடிவதில்லை. திறந்து காணப்பட்டாலும், உயிர் மறுபடியும் வரமுடியாத நிலை என்பதால், அனைத்து துவாரங்களும், ஒரே சமயத்தில் அடைக்கப்பட்டுள்ளது போலவே காணப்படுகின்றன. இந்த செய்தியைத் தான் ஒக்க அடைக்கும்போது என்று இறக்கும் சமயத்தினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்

கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (7.52.3) திரிபுரத்து பறக்கும் கோட்டைகள் மூன்றையும் பொடி செய்த புண்ணியனே என்று கூறுகின்றார். பறக்கும் கோட்டைகளில் பலருக்கும் தீங்கு இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களுக்கு முடிவு கட்டிய செயல், மிகவும் புண்ணியமான செயல் தானே. பண்டு என்ற சொல் பாண்டு (பாண்டாழ்) என்று எதுகை கருதி நீண்டது. பல பழைய பிறப்புகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைகள்; ஆழ் வினை=உயிரை இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ள வைக்கும் வினைகள்;

தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்

பூண்டாய் எலும்பைப் புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே

.பாண்டாழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய

ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.1) சுந்தரர் புண்ணியா புனிதா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், தன்னிடம் அஞ்சேல் என்று சொல்லி பெருமான் தேற்ற வேண்டும் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அமரர்களின் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் தனக்கு உறவு அல்ல என்று தெளிவு படுத்துகின்றார். தனது அருட்கண்ணால் நோக்கி அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனை மிகவும் பொருத்தமாக அங்கணா என்று அழைக்கின்றார். அங்கணன்=அழகிய கண்களை உடையவன்;

கங்கை வார் சடையா கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே

பொங்கு மாகடல் விட மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா

செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடுதுறையாய்

அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.8) புண்ணியா என்று சுந்தரர் அழைக்கின்றார். பெருமான், தன்னைத் தொழுது வணங்கும் தொண்டர்களின் துயரங்களை நீக்கும் கருணையாளன் என்றும் அத்தகைய அடியார்களின் சிந்தை எப்போதும் தன் பால் இருக்கும் வண்ணம் வைத்து அவர்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துபவன் என்றும் குறிப்பிடுகின்றார். காவிரியில் பொங்கி ஓடிய வெள்ளத்தைக் கண்ட சுந்தருக்கு பெருமான், தனது அடியார்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை மகிழ்வித்திடும் கருணைச் செய்கை நினைவுக்கு வந்தது போலும்.

போழும் மதியும் புனக்கொன்றை புனல் சேர் சென்னிப் புண்ணியா

சூழும் அரவச் சுடர் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக

வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட

ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ

திருவாசகம் திருவார்த்தை பாடலில் மணிவாசகர், பெருமானை புண்ணியன் என்று அழைக்கின்றார். மறை பயின்ற வாசகன் என்று பெருமானை அழைக்கின்றார். வேதங்களை அறிந்தவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடியதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது. அந்த வேதியர்களுக்கும் தலையாய வேதியன் சிவபெருமான். வேதங்களை உலகத்தவர்க்கு அருளியவன் சிவபெருமான்; வேதங்களை அனுதினமும் முறையாக ஓதிக் கொண்டிருப்பவனாக கருதப்படுபவன்; மேலும் வேதங்களின் பொருளை பூரணமாக அறிந்ததால் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை புரிந்து கொள்வதற்கு விளக்கம் அளித்து அருள் புரிந்தவன் சிவபெருமான். எனவே மறை பயின்ற வாசகன் என்ற சொல்லுக்கு பொருத்தம் உடையவனாக பெருமான் விளங்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. மாமலர் என்று ஆறு ஆதாரங்களில் ஒன்றான அநாகதம் (இதயக் கமலம்) குறிப்பிடப்படுகின்றது. மூலப்பொருளாக இறைவன் இருக்கும் நிலை, இங்கே ஆதிப்பிரமம் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. பெருமானின் தன்மையை அறிந்த அடியார்களை, தனது தலைவனாக தான் ஏற்றுக் கொள்வதாக இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.

மாதிவர் பாகன் மறை பயின்ற வாசகன் மாமலர் மேய சோதி

கோதில் பரங்கருணை அடியார் குலாவு நீதி குணமாக நல்கும்

போதலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து

ஆதிப்பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம் பிரான் ஆவாரே

பொழிப்புரை:

புண்ணியமே வடிவானவர் என்றும், சிறந்த முக்திச் செல்வத்தை உடையவர் என்றும், தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டு தான் என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் தன்மையை உலகுக்கு உணர்த்துபவர் என்றும், பூதகணங்களின் தலைவர் என்றும், தன்னை நெருங்கி வந்தடைந்து தனது புகழினைப் பாடும் அடியார்களின் மனதினில் உறைபவர் என்றும், சந்திரனை தலைமாலையாக அணிந்தவர் என்றும், பெருமான் பால் காதல் கொண்டுள்ள அடியார்கள் கை தொழுது பெருமானைப் புகழ்ந்து வணங்க, பெருமான் உறைகின்ற ஊர் ஆவூர் தலத்தினில் அமைந்துள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். விண்ணை முட்டும் வண்ணம் உயர்ந்த மாளிகைகள் கொண்ட மாட வீதிகளில், சோலைகளில் உள்ள மலர்கள் பரப்பும் நறுமணம் நிறைந்த காற்று உலவுகின்றது. இத்தகைய செல்வச் செழிப்பு மிகுந்த ஆவூர் தலத்து வீதிகளில், பண்ணுடன் பொருத்தி பாடப்படும் இனிய பாடல்கள் இடைவிடாது கேட்கப் படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 2:

முத்தியர் மூப்பிலர் ஆப்பினுள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும்

அத்தியர் என்றென்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊராம்

தொத்தியலும் பொழில் மாடு வண்டு துதைந்து எங்கும் தூமதுப் பாயக் கோயில்

பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

முத்தியர்=முக்திச் செல்வத்தை உடையவர்; மூப்பிலர்=மூப்பு அடையாதவர் என்று குறிப்பிட்டதன், மூலம், மூப்பு பிணி மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கடந்தவர் சிவபெருமான் என்று இங்கே விரித்து உரைக்கின்றார். சென்ற பாடலில் பூதி என்ற இரண்டு பொருள் தரும் சொல்லினை பயன்படுத்தி பூதியர் என்று இறைவனை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அந்த இரண்டு பொருள்களுக்கும் முற்றிலும் சிவபெருமான் பொருத்தமானவர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஆப்பு என்பது கன்றாப்பூர் தலத்தினை குறிக்கும்.

கன்றாப்பூர் என்பது தலத்தின் பெயர். நடுதறி என்பது திருக்கோயிலின் பெயர். இரண்டையும் இணைத்து கன்றாப்பூர் நடுதறி என்று அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடுகின்றார். நடுதறி என்றால் நடப்பட்ட முளை என்று பொருள். கன்றுக்குட்டியை கட்டுவதற்காக நடப்பட்டிருந்த ஆப்பினில் முளைத்த ஈசன் என்பதால் கன்றாப்பூர் என்று தலத்தின் பெயர் அமைந்தது. தற்போது கண்ணாப்பூர் என்று அழைக்கப் படுகின்றது. சைவ குடும்பத்தில் பிறந்து பெருமானை தினமும் வழிபட்டு வந்த கமலவல்லி என்ற பெண் வைணவ குடும்பத்தில் வாழ்க்கைப் பட்ட போதும், இடைவிடாது பெருமானை வணங்கி வந்தாள். இதனைக் கண்டு பொறாத அவளது கணவன், தனது மனைவி வழிபட்டு வந்த இலிங்கத்தை கிணற்றில் தூக்கிப் போட்டான். ஆனாலும் அந்த பெண்மணி மனம் தளராமல், தனது குடும்பத்தினர் அறியாதவாறு, மாட்டுத் தொழுவத்திலிருந்த கன்று கட்டப்படும் முளையினை இலிங்கமாக பாவித்து தொடர்ந்து வழிபட்டு வந்தாள். இதனை அறிந்த அவளது கணவன், அந்த முளையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் கோடரியால் வெட்ட, அந்த முளையிலிருந்து இறைவன் தோன்றி கணவன் மனைவி இருவருக்கும் காட்சி அளித்தார். அந்த இடமே சன்னதியாக இன்றும் வழிபடப் படுகின்றது. இலிங்கத்தில் உச்சியில் கோடரி பட்ட அடையாளத்தை நாம் காணலாம்.

அத்தியர் என்ற சொல்லுக்கு இரவலர் யாசிப்பவர் என்பது பொதுவான பொருள். அத்தி என்ற சொல்லுக்கு யானை என்ற பொருளும் உள்ளது. யானை போன்று கம்பீரம் மிகுந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். யானை பொதுவாக சாதுவான மிருகம். ஆனால் கோபம் கொண்ட யானையின் முன்னே செல்வதற்கு எவரும் அஞ்சும் வண்ணம், அதன் செயல்கள் விளங்கும். அது போன்று கோபம் கொண்டவராக வீரபத்திரர் விளங்கி தக்கனது வேள்வியினை அழித்தார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஹத்தி என்ற வடமொழிச் சொல்லுக்கு கொலைத்தொழில் என்று பொருள். அந்த பொருளினை உள்ளடக்கி கொலைத் தொழில் புரிந்தவர் என்று பெருமானை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம். தக்கனது வேள்வியை முற்றுப்பெறாமல் அழித்த வீரபத்திரர் செய்த பல வீரச்செயல்கள், (சந்திரனைத் தனது காலால் தேய்த்தது, சூரியனின் பற்களை உடைத்தது, மற்றொரு சூரியனின் கண்களை பிடுங்கியது, வேள்வித் தலைவனின் தலையை அறுத்தது, தக்கனின் தலையைப் பறித்தது, அக்னியின் கையை வெட்டியது முதலியன), கொலைத் தொழிலுக்கு ஒப்பானவை தானே. எனவே அத்தியர் என்ற சொல்லினை தக்கன் வேள்வி சாடும் என்று தொடருடன் இணைத்து பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. அணங்கு=தெய்வத்தன்மை வாய்ந்த பெண், பார்வதி தேவி; தொத்து=பூங்கொத்து; இயலும்=அழகு செய்யும்; மாடு=அருகில்; துதைந்து=தொய்ந்து, புதைந்து;

பொழிப்புரை:

சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் என்றும், பிறப்பு இறப்பு பிணி மூப்பு முதலியன அற்றவர் என்றும், கன்றாப்பூர் என்ற தலத்தினில் கன்றுக்குட்டி கட்டப்படும் முளையினில் தானே சுயம்புவாக தோன்றியவர் என்றும், மூன்று கண்களை உடையவர் என்றும், தன்னைப் புறக்கணித்தும் இகழ்ந்தும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு புறம்பாகவும் வேள்வி செய்யத் துணிந்த தக்கனது யாகம் முற்றுப்பெறாமல் அழித்தவர் என்றும், அந்த யாகத்தில் பங்கு கொண்டோர் பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கியவர் என்றும், அடியார்களால் பல வகையிலும் புகழப்படும் இறைவன், தெய்வீகத் தன்மை பொருந்திய பார்வதி தேவியுடன் உறைகின்ற இடம் ஆவூர் தலத்தில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். இந்த தலத்தில் உள்ள சோலைகளில் கொத்து கொத்தாக பூக்கும் மலர்களில் வண்டுகள் புதைந்து தோய்வதால், அந்த மலர்களில் உள்ள தூய்மையான தேன் எங்கும் ஒழுகி பாய்கின்றது; மேலும், திருக்கோயிலில் குழுமியுள்ள அடியார்கள் இடைவிடாது பெருமானைப் புகழ்ந்து பாடும் பாடல்களின் ஒலியும் கேட்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 3:

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம்வழி வந்து இழிவு ஏற்றமானார்

இங்குயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறைவர் என்றும் இருந்த ஊராம்

தெங்குயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும் பொய்கை

பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

பொங்கி வரும் புனல்=மிகுந்த கோபத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி; வானிலிருந்து கீழே இறங்கி நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாததால் மிகுந்த கோபத்துடன் உலகினையே புரட்டிப் போடும் எண்ணத்துடன் வேகத்துடன் வந்த கங்கை நதி; அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்ததாக கருதப்படுவது மனிதப் பிறவியே. மனிதப் பிறவி எடுப்பதன் மூலம் தான், உயிர்கள் தங்களுக்கு அளிக்கப்பட கருவி கரணங்களை பயன்படுத்தி உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்து, அவனை துதித்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைய முடியும் என்பதால் போம் வழி, முக்திவுலகுக்கு செல்லும் வழியாகிய மனிதப்பிறவி என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஆனால் இதனை, மனிதப்பிறவிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பினை, அனைவரும் உணர்ந்து செயல்படுவதில்லை. சிலர் இறைவனை வழிபட்டும் பல புண்ணியங்களைச் செய்தும் வாழ்வினில் உய்வினை அடைகின்றனர். ஆனால் பலர் மேலும் மேலும் தீய செயல்களை செய்து இழிந்த நிலையாகிய பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு உள்ளனர். இந்த தன்மையையே ஏற்றமானார் என்றும் இழிவுமானார் என்றும் ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சாலி=ஒரு வகை உயர்ந்த ரக நெல்; பங்கயம்=தாமரை மலர்; பங்கயமங்கை என்ற தொடர் தலத்து அம்பிகை பங்கஜவல்லியை குறிப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது.

பொழிப்புரை:

வானிலிருந்து கீழே இறங்கி நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாததால் மிகுந்த கோபத்துடன் உலகினையே புரட்டிப் போடும் எண்ணத்துடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையினில் தரித்துக் கொண்டு மறைத்த ஆற்றல் உடையவர் சிவபெருமான்; முக்தி அடைந்து உய்யும் வாய்ப்பினை அளிக்கும் முகமாக உயிர்களுக்கு மனிதப் பிறவியை அளிப்பவர் சிவபெருமான். அத்தகைய உயர்ந்த மனிதப் பிறவியை பெறுகின்ற உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அந்த உயிர்களுக்கு இழிவு அல்லது ஏற்றம் பெறுவதற்கும் வழி வகுப்பவர் சிவபெருமானே. இந்த உலகினில் உள்ள உயர்ந்த ஞானம் அடைந்த சான்றோர்களும் வானவர்களும் புகழ்ந்து ஏத்தும் சிவபெருமான் என்றும் உறைகின்ற இடம் ஆவூர் பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். உயர்ந்த தென்னை மரங்கள், கரும்புகள் சென்று சேரும் ஆலைகள் மற்றும் சாலி எனப்படும் உயர்ந்த நெல் விளையும் வயல்கள், நீர்நிலைகள் நிறைந்த தலமாகிய ஆவூரினை, தாமரை மலரில் உறைகின்ற திருமகள் மிகவும் விரும்புவதால், இந்த ஊர் செல்வச் செழிப்புடன் காணப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 4:

தேவியொர் கூறினர் ஏறது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும்

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்

பூவியலும் பொழில் வாசம் வீசப் புரிகுழலார் சுவடு ஒற்றி முற்றப்

பாவியல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

செலவினர்=செல்பவர்; நல்குரவு=வறுமை என்பது பொதுவான பொருளாக இருப்பினும், இங்கே அந்த பொருள் பொருத்தமற்றது. சிவபாத இருதயரின் குடும்பம் வறுமையில் வாடியதாக பெரியபுராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் தன்மை, பெருமை குறித்து நன்கு கற்று அறிந்து சிவஞானம் கைவரப் பெற்றவர்களையே செல்வர்களாக நால்வர் பெருமானார்கள் கருதியது அவர்களது பல பாடல்களில் வெளிப்படுகின்றது. எனவே அத்தகைய சிவஞானத்தை தனக்கு அருளி தனது அஞ்ஞானமாகிய வறுமையை தீர்த்தவர் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆவி=உயிர்; ஒற்றி=தாளமிடுதல்; முற்ற=முழமையாக தேர்ந்த; பாவியல்=இசையோடு இணைந்த; அந்தணர்=அம்+தணர், குளிர்ந்த உள்ளம் கொண்டவர்; கருணை உள்ளம் கொண்டவரை குளிர்ந்த உள்ளம் கொண்டவர்கள் என்று சொல்வது மரபு; இயலும்=நிறைந்த, பொருந்திய;

பொழிப்புரை:

பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவரும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு தான் விரும்பும் இடங்களுக்கு செல்பவரும், எனது அஞ்ஞானமாகிய வறுமையை தீர்த்து எனக்கு எண்ணரிய சிவஞானம் அளித்து என்னை இன்பமாக வாழச் செய்பவரும், எனது உயிர் போன்று எனக்கு இனிமையானவரும், கருணை உள்ளம் கொண்டவரும், எனது துயரங்களைப் போக்கி தந்தை போன்று என்னை காப்பவரும் ஆகிய சிவபெருமான் விருப்புடன் அமரும் இடம் ஆவூர் தலத்தில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயில் ஆகும். பூக்கள் நிறைந்த சோலைகளிலிருந்து நறுமணம் எங்கும் பரவி கமழ, சுருண்ட கூந்தலை உடைய மகளிர் தங்களது கால்களால் தாளம் இட்டவாறு தேர்ந்த இசையோடு இணைந்த பாடல்களை இடைவிடாது பாடுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 5:

இந்து அணையும் சடையார் விடையார் இப்பிறப்பு என்னை அறுக்க வல்லார்

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊராம்

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதிப்

பந்தணையும் விரலார் தம் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

இந்து=சந்திரன்; வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்டால் தான், ஒருவர் முக்தி நிலையை அடைய முடியும். தனது உயிருடன் பிணைந்துள்ள பிறப்பிறப்புச் சங்கிலியை வெட்டி எறிபவர் சிவபெருமான் என்று கூறுவதன் மூலம், சிவபெருமான் தனது வினைகளை அறுத்தெறிந்து விட்டார் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பந்தாடும் மாதர்கள் என்று குறிப்பிட்டு, தலத்து மாதர்களின் சுறுசுறுப்பு இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

தன்னிடம் சரணாக வந்தடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் தங்கும் சடையினை உடையவரும், இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவரும், எனது வினைகளை முற்றிலும் அறுத்தெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து என்னை மீட்டு எனக்கு முக்தி உலகத்தில் இடம் அளிப்பவராக உள்ளவரும், தன்னை வந்தடைந்து தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்கள் மனதினில் நிலையாக குடிகொண்டிருக்கும் பெருமான், நிலையாக உறையும் இடம் ஆவூர் தலத்தில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். கொத்து கொத்தாக மலரும் பூக்கள் சென்றடையும் கூந்தலை உடைய மகளிர் வாழும் தன்மையும் திருவிழாக் காலங்களில் பல திசைகளிலிருந்தும் வந்து சேரும் மக்கள் கூட்டங்களை தாங்கும் வண்ணம் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் மெல்லிய விரல்களை உடைய இளம் பெண்கள் நிறைந்த தன்மையும் உடைய ஊர் ஆவூர் தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 6:

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்

ஒற்றை விடையினர் நெற்றிக் கண்ணார் உறை பதியாகும் செறிகொள் மாடம்

சுற்றிய வாசலின் மாதர் விழாச் சொற்கவி பாட நிதானம் நல்கப்

பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

கும்பிடுவார் என்ற சொல்லினை குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் என்ற தொடர்களுக்கும் பொதுவாக கருதி அத்துடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். நிதானம்=நிதி தானம், பொற்காசுகள்; சுற்றிய=சார்ந்துள்ள; இந்த தலத்தில் இருந்த மகளிர் பல விதமான ஆற்றல் பெற்றிருந்தார்கள் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் உணர்த்துகின்றன, இசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்கள் என்று நான்காவது பாடலும், பாடலை ரசித்து பாட்டின் இசைக்கு ஏற்ப தாளமிடுவதில் வல்லவர்கள் என்று நான்காவது பாடலிலும், பந்து விளையாட்டினில் வல்லவர்கள் என்று ஐந்தாவது பாடலிலும், இனிமையான குரலினை உடைய மகளிர் என்று ஒன்பதாவது பாடலிலும் தலத்து மகளிரின் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தலத்து மகளிர் சிறந்த கவிகள் என்று குறிப்பிடுகின்றார். தமிழ் மொழியில் சிறந்த புலமை பெற்று விளங்கிய ஞானசம்பந்தர், கவிகள் என்று சிறப்பித்து கூறுவதால், அவர்களின் புலமை மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பது புலனாகின்றது. கவிஞர்களுக்கு பாராட்டு மிகவும் அவசியம். பாராட்டுகள் இல்லையேல் அவர்களுக்கு கவிகள் இயற்றுவதில் ஊக்கம் குறைந்துவிடும். இந்த தலத்தில் உள்ள பெண் புலவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெற்று அவர்கள் மேல் மேலும் ஊக்கமடைந்த தன்மையும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில் பங்கய மங்கை விரும்பி உறையும் இடம் என்று குறிப்பிட்டு, திருமகள் இந்த தலத்தில் இருந்ததை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், மகளிரின் புலமைத் தன்மையையும் அதனை ரசித்து பரிசளிப்போரையும் குறிப்பிட்டு, கலைமகள் இந்த தளத்தினில் விரும்பி உறையும் தன்மையையும் குறிப்பிடுகின்றார். மேலும் உமையம்மையுடன் இறைவன் அமர்ந்துள்ள நிலையை குறிப்பிட்டு மலைமகள் அருள் பாலிப்பதையும் உணர்த்துகின்றார். இவ்வாறு முப்பெரும் தேவியர்களின், அருள் பெற்ற தலமாக ஆவூர் இருந்ததை நாம் இந்த பதிகத்தின் மூலம் உணர்கின்றோம்.

தனது அடியார்களின் குற்றமறுத்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானை இடைவிடாது தியானம் செய்யும் மனம், பெருமானின் அருளினால் திருத்தப்படுகின்றது. பெருமானை இடைவிடாது வழிபடுவதால் நமது சிந்தையை திருத்தி கொள்ளலாம் என்று அப்பர் பிரான் உணர்த்தும், திருமருகல் குறுந்தொகை பதிகத்தின் முதல் பாடல் (5.88.1) நமது நினைவுக்கு வருகின்றது. மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் இது. அதாவது உயிரின் உட்பகைகளாக விளங்கும், காமம் குரோதம், மோகம், உலோபம், மதம் மாற்சரியம் ஆகியவை முற்றிலும் நீக்கப்படும் என்று அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

தான் அந்நாள் வரை செய்த பிழைகளைப் பொறுத்த பெருமானென்று திருவாரூர் பதிகத்தின் முதல் பாடலில் (7.59.1) குறிப்பிடும் சுந்தரர், தான் இனிமேல் பிழைகள் செய்வதை தவிர்க்கும் வண்ணம் தனது சிந்தனையை திருத்தி அமைத்தவன் பெருமான் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். தனக்கு பலவகையான செல்வங்களைத் தந்து அந்த செல்வங்களை அனுபவிக்கும் போகத்தினையும் அளித்த பெருமான், உண்மையான மெய்ப்பொருளை, அந்த மெய்ப்பொருளின் தன்மையை உணரும் ஆற்றலையும் தனக்கு அளித்துள்ளார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். .

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை

இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

குணத்தின் உள்ளார் என்ற தொடர் நற்குணங்கள் கொண்ட அடியார்கள் என்று உணர்த்துகின்றது. ஒருவரின் சிந்தனையில் உள்ள குற்றங்களை நீக்கிய பின்னர், எஞ்சியிருப்பது நல்ல சிந்தனைகளும், அத்தகைய சிந்தனையால் விளையும் நற்குணங்கள் தாமே. அத்தகைய நற்குணங்களாக உள்ளவர் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். செறிகொள்= நெருங்கிய

குற்றம் அறுத்தார் என்ற தொடரினை அடியார்களுடன் இணைத்து, மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் செய்யப்படும் குற்றங்களை நீக்கியவர்கள் என்று தலத்து அடியார்களின் தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக பொருள் கொள்வது பொருத்தமே. பெருமானை தினமும் தியானம் செய்து வந்தால், மூவகைக் குற்றங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும் என்று ஞானசம்பந்தர் உணர்த்தும் திருநாரையூர் பதிகத்து பாடல் (2.86.1) நமது நினைவுக்கு வருகின்றது. இறைவன் உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடல்களுடன் இணைக்கின்றான். அவ்வாறு இணைக்கப்படும் உடல்களில் மனித உடல் உட்பட பல்வேறு ஜீவராசிகளின் உடல்கள் அடக்கம். இவ்வாறு இருக்கையில், மனித உடலைப் பெற்று வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் மனித உடலுக்கு தான் இறைவன் முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் கருவிகள் அளித்து உயிர்கள் உய்யும் வழியினைத் தேடிக்கொள்ள வழி வகுத்துள்ளான். ஆனால் இந்த கருவிகளின் உதவியுடன் மெய்ப்பொருளை உணர்ந்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து நமது பழைய வினைகளைக் கழித்து வீடு பேற்றை அடைவதை நமது குறிக்கோளாக கொண்டு நாம் செயல்படுவதில்லை. வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசி, மனத்தினால் தீய எண்ணங்களை நினைத்து, உடல் உறுப்புகளால் பல பாவங்களைச் செய்து வினையை பெருக்கிக்கொண்டு, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றோம். இவ்வாறு அல்லற்படும் மனிதனுக்கு சம்பந்தர் இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் அறிவுரை கூறுகின்றார். நாரையூர் பெருமானை, மனதினால் நினைத்து, வாக்கினால் துதித்து, கைகளால் தொழுது நாம் உய்யும் வகையைக் காட்டும் பாடல் இது. எந்த முக்கரணங்கள் (வாய், மனம், உடல்) தீயனவற்றைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றதோ, அந்தக் கரணங்கள் தங்களது செயல்களுக்கு பரிகாரம் தேடும் முகமாக என்ன செய்ய வேண்டும் என்று அழகாக கூறும் பாடல் இது.

உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு குற்றம் உலகில்

வரையில் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினைமின்

வரை சிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவத்

திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

உரையினில் வந்த பாவம்=பொய்யான சொற்களை பேசுதல், பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் சொற்களை பேசுதல், கடுமையான சொற்களை பேசுதல், பயனற்ற சொற்களை பேசுதல் என்பன நமது மொழியால் வரும் பாவங்களாக கருதப் படுகின்றன. உணர்=உணர்தற்கு உரிய கருவியாகிய மனம்; உணர் நோய்=மனதினில் தோன்றும் தீய எண்ணங்கள்; மனதினில் தோன்றும் எண்ணங்களே நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன. சில தீய எண்ணங்களை செயலாக மாற்றும் திறன் இல்லாமையால் நாம் அந்த செயல்களை செய்யாத போதிலும் அத்தகைய தீய எண்ணங்கள் பாவமாக கருதப் படுகின்றன. செயல் தீங்கு குற்றம் என்பதை தீங்கு செயல் குற்றம் என்று மாற்றி வைத்து, பொருள் கொள்ள வேண்டும். உம்ம என்ற சொல்லினை இந்த மூன்று வகையான குற்றங்களுக்கும் பொதுவானதாக கருதி பொருள் கொள்ளவேண்டும். இந்த மூவகைக் குற்றங்களை நீக்கியவர்கள் இயல்பாகவே நற்குணங்கள் நிறைந்தவராக இருப்பார்கள்.

பொழிப்புரை:

தனது அடியார்களின் சிந்தையில் உள்ள குற்றங்களை நீக்கி அவர்களது சிந்தனையை சீர் செய்யும் பெருமான் அத்தகைய அடியார்கள் இனிமேல் குற்றங்கள், பிழைகள் செய்வதை தவிர்க்கின்றார். தன்னை கும்பிட்டு வழிபடும் அடியார்கள் பால் அன்பு வைக்கும் சிவபெருமான் அவர்களுக்கு பல விதங்களிலும் நன்மை புரிகின்றார். ஒரு எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளவரும் தனது நெற்றியில் ஒரு கண் உடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற இடம் ஆவூர் தலத்தில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். திருவிழாக் காலங்களில், நெருங்கிய மாட வீடுகளைச் சார்ந்த வாயிலில் மாதர்கள் இனிய சொற்கள் அமைந்த பாடல்களை பாட, இலக்கிய நயங்கள் உடைய பாடல்களை பாட, அந்த வீடுகளில் வாழும் செல்வர்கள் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து பொற்காசுகளைப் பரிசாக அளிக்க, அந்த காசுகளைப் பெற்றுக்கொள்ளும் மாதர்கள் மகிழும் காட்சிகள் நிறைந்தது ஆவூர் நகரம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 7:

நீறுடையார் நெடுமால் வணங்கும் நிமிர்ச்சடையார் நினைவார் தம் உள்ளம்

கூறுடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊராம்

தாறுடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டு இட்டு இனத்தைப்

பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

குவலயம்=உலகம்; தகு கனி=உண்ணத்தகுந்த கனிகள்; கூழை=குள்ளமான;

பொழிப்புரை:

திருநீற்றினை உடல் முழுவதும் அணிந்தவரும், நெடிய உருவம் கொண்ட திருவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமாலால் வணங்கப்படுபவரும், நிமிர்ந்த சடையினை உடையவரும், தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் குடிகொண்டு இருப்பவரும், கோவண ஆடையினை அணிந்து எளிமையாக இருப்பவரும் ஆகிய பெருமான், உலகத்தவர் அனைவரும் போற்றும் வண்ணம் எழுந்தருளி இருக்கும் இடம் ஆவூர் நகரினில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். வாழைத் தாறுகளில் உள்ள உண்ணத்தகுந்த கனிகளை உண்ணும் குள்ளமான குரங்குகள், கனிகள் உட்கொண்டதால் தெம்படைந்த செருக்குடன், அந்த பழத்தாறினில் எஞ்சிய பழங்களை உட்கொள்ள வரும் தனது இனத்தைச் சார்ந்த குரங்குகள் அஞ்சியோடும் வண்ணம் பாய்ந்து விரட்டும் தோட்டங்கள் நிறைந்த தலம் ஆவூர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 8:

வெண்டலை மாலை விரவிப் பூண்ட மெய்யுடையார் விறலார் அரக்கன்

வண்டமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளமோங்கி எங்கும்

கண்டவர் சிந்தைக் கருத்தின் மிக்கார் கதியருள் என்று கையாரக் கூப்பிப்

பண்டலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

வெண்தலை மாலை=பிரளய காலத்தில் அனைவரும் இறந்துபட, அவர்களின் உடலிலிருந்து பிரிக்கப் பட்டதால் தசைகள் வற்றி வெண்மையாக காணப்படும் மண்டையோடுகள் இணைந்த மாலை; விரவி=கலந்து; மெய்=உடல், சிவபெருமானின் திருமேனி; விறல்=திறமை, இங்கே உடல் வலிமை என்று பொருள் கொள்வது பொருத்தம்; செற்று=வெற்றி கொண்ட, மலையின் கீழே நெருக்கி அரக்கனின் வலிமையை அழித்த; மைந்தர்=வல்லமை உடையவர்; பண்டு=பண்டைய நாளிலிருந்தே, நெடு நாட்களாக; பலவிதமான போகங்களை நுகர்வதில் விருப்பம் உடையவன் அரக்கன் இராவணன் என்பதை உணர்த்த, புதுமலர்களை சூடியவன் என்று இங்கே கூறப் பட்டுள்ளது. செற்றுகந்த என்ற தொடர் முதலில் அரக்கன் இராவணனை மலையின் கீழே அமுக்கி வருத்திய இறைவன் பின்னர் அவன் சாமகானம் பாடிய போது, மகிழ்ச்சியடைந்து அவனுக்கு பல வரங்கள் அளித்த தன்மையை உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

பிரளய காலத்தில் இறந்து போகும், பிரமன் திருமால் உள்ளிட்ட பல தேவர்களின் தலைகளை, உடலிலிருந்து பிரிக்கப்பட்டதால் தசை வற்றி வெண்மை நிறத்துடன் காணப்படும் பல மண்டையோடுகளை மாலையாக கோர்த்து வேறு பல மலர் மாலைகளுடன் கலந்து தனது தலையிலும் திருமேனியிலும் சூட்டிக் கொண்டுள்ளவன் சிவபெருமான். உடல் வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின், பல விதமான போகங்களை நுகர்பவனாக வண்டுகள் சூழும் புது மலர்களை தனது முடியில் அணிந்து கொண்ட அரக்கன் இராவணனின், தலைகள் நொறுங்கும் வண்ணம் அவற்றை கயிலை மலையின் கீழே அமுக்கி வெற்றி கொண்ட ஆற்றல் உடைய வலிமையாளரும் பின்னர் அவனது சாம கானத்தை மகிழ்ந்து கேட்டு அவனுக்கு பல நன்மைகள் புரிந்த கருணையாளரும் ஆகிய சிவபெருமான் தங்கும் இடம் வளத்துடன் காணப்படும் ஆவூர் தலத்தில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயில் ஆகும். பெருமானைக் காணும் அடியார்கள், உயர்ந்த சிந்தனை உடையவர்களாக, பெருமானே எங்களுக்கு கதியாக விளங்கி அருள் புரிவாயாக என்று தங்களின் கைகளை கூப்பிக் கொண்டு, நெடுநாட்களாக தொடர்ந்து மலர்கள் கொண்டு தூவி வழிபடும் தன்மையராக விளங்குகின்ற தலம் ஆவூர் தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 9:

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரியாகி நீண்ட

சீலம் அறிவு அரிதாகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊராம்

கோல விழாவின் அரங்கு அதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்

பாலெனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

நேட=தேட; சீலம்=எளிய; செம்மை=தன்மை; கோல=அழகிய; பிரமனும் திருமாலும், பெருமானின் முடியையும் அடியையும் தேடிச் சென்ற போது அவர்கள் பெருமானை வணங்கவில்லை. தங்களது ஆற்றல் கொண்டு கண்டுவிடுவோம் என்ற செருக்குடன் அவர்கள் திகழ்ந்தமை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. தங்களது முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், பெருமானின் தன்மையை புரிந்து கொண்ட அவர்கள் பெருமானைப் பணிந்தனர். எனவே வணங்கி என்ற சொல்லினை சீலம் அறிவு அரிதாகி நின்ற என்ற தொடருக்கு பின்னர் வைத்துப் பொருள் கொள்ளவேண்டும். சீலம்=எளிமை; சௌலப்யம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல். அடியார்களுக்கு மிகவும் எளியராக விளங்கும் பெருமான், அடியார் அல்லாதார் அறிவதற்கு மிகவும் அரியவராக இருக்கும் தன்மை, பெருமானின் அடியாராக விளங்காமல், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் திருமாலும் பிரமனும் தேடிச் சென்ற தகவல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தங்களது முயற்சியால் இறைவனது திருமுடியையும் திருவடியையும் காண இயலாதவர்களாக இருந்ததுமன்றி, தங்களது நாவினால் இறைவனின் புகழினைப் பாடி வழிபடும் தன்மை அற்றவர்களாக இருந்தனர் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய இலிங்க புராண குறுந்தொகையின் (5.95) முதல் ஒன்பது பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பாடல்களில் பெருமானை எவ்வாறெல்லாம் வழிபடவேண்டும் என்பதை குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு வழிபடத் தவறியவர்கள் பிரமன் மற்றும் திருமால் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தங்களது குற்றங்களை நீக்கிக் கொண்டு இறைவனைப் புகழ்ந்து வணங்குவதிலிருந்து தவறியவர்கள் என்று அவர்கள் இருவரையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொக்கம்=வஞ்சகமான சொற்கள்; ஐயன்=தலைவன்; மெய்யன்=உண்மையே வடிவானவன்; வேதங்களும் பல தேவர்களும், தங்களுக்குளே யார் பெரியவன் என்று வாதம் புரிந்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனிடம், அவர்கள் இருவரை விடவும் பெரியவன் சிவபெருமான் என்று உணர்த்திய போதும், அதனை ஒப்புக்கொள்ளாமல் ஆணவத்துடன் தாங்களே பெரியவர் என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையே பொய்யும் பொக்கமும் போக்கிலர் என்று அப்பர் பெருமானால் இங்கே உணர்த்தப் படுகின்றது.

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்

பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்

அய்யன் வெய்ய அழல் நிற வண்ணனை

மெய்யைக் காணல் உற்றார் அங்கு இருவரே

இங்கே குறிப்பிடப்படும் இலிங்க புராண குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் இறைவன் உறையும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும் அவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். இவ்வாறெல்லாம் இறைவனை வழிபாடு செய்யாமல் இருந்த பிரமனும் திருமாலும் தங்களது முயற்சியில் தோல்வியடைந்து திகைத்த நிலையில், பெருமான் அவர்கள் பால் இரக்கம் கொண்டு இலிங்க வடிவினனாய் தோன்றினான் என்று பதிகத்தின் கடைப்பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் பண்டைய நாளில் முறையே பெருமானின் திருவடியையும் முடியையும் தேடிக் கண்டுவிடலாம் என்று முயற்சி செய்தபோது, அவர்கள் இருவரும் காணமுடியாத வண்ணம் நெடிய தழற்பிழம்பாக ஓங்கி நின்றவன் சிவபெருமான். பொதுவாக தனது அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருந்து அருள் புரியும் பெருமான், அடியார்களின் தன்மை அற்றவர்களாக விளங்கிய திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய தன்மையும் பின்னர் அவர்கள் இருவரும் பெருமானின் பெருமையை உணர்ந்து அவரை வணங்கிய போது அவர்களுக்கு லிங்கமாக காட்சி தந்த கருணைத் தன்மையும் உடைய சிவபெருமான் விருப்பத்துடன் வந்தடைந்து உறையும் இடம், ஆவூர் தலத்தினில் உள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலாகும். இந்த தலத்தினில் மிகவும் அழகாக கொண்டாடப்படும் திருவிழாக்களில், கொடியிடையுடன் விளங்கும் தலத்து மகளிர் தங்களது துணையினோடு இணைந்து பால் போன்று இனிய மொழியில் பெருமானைப் புகழ்ந்து பாடுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 10:

பின்னிய தாழ் சடையார் பிதற்றும் பேதையராம் சமண் சாக்கியர்கள்

தன்னியலும் உரை கொள்ள கில்லாச் சைவர் இடம் தளவேறு சோலைத்

துன்னிய மாந்தரும் மைந்தர் தாமும் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தை

பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

விளக்கம்:

பண்டைய நாளில் சமணத் துறவிகள் அல்லாத ஏனைய சமணர்கள் பின்னித் தொங்கவிடப்பட்ட சடையினை உடையவர்களாக இருந்தார்கள் என்று தருமபுரத்து ஆதீனத்தார் வெளியிட்டுள்ள தேவார விளக்கம் குறிப்பிடுகின்றது. தாழ்சடை=தொங்கும் சடை; பேதையர்=அறிவற்றவர்கள்; தளவு=முல்லை; துன்னிய=நெருங்கிய; புத்தர்களும் சமணர்களும் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட தகவல்களை சொல்லி பெருமானை குறித்து இழிவாக பேசுவதால், அவர்களது பொய்யான மொழிகளை இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. சைவர் என்ற சொல் பெருமானின் அடியார்களை குறிக்கும் சொல்லாக பொருள் கொண்டு, தலத்து சைவர்கள் சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் மொழிகளை புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பின்னப்பட்டு தாழ்ந்து தொங்கும் சடை உடையவர்களாகிய சமணர்களும் புத்தர்களும் அறிவற்று தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்துள்ள மதத்தையும் பெருமையாக பிதற்றும் சொற்களை ஏற்காதவராக விளங்கும் சிறந்த சைவராகிய பெருமான் உறைகின்ற இடமாவது ஆவூர் தலத்தினில் உள்ள பசுபதீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலாகும். முல்லைக் கொடிகள் நிறைந்து படர்ந்துள்ள சோலைகளில் உள்ள சுனையினில் நெருங்கி நீராடும் மாதரும் மைந்தரும் சிவபெருமானை குறித்து மனம் ஒன்றி பாடப்படும் பாடல்கள் தொடர்ந்து கேட்கப்படும் தலம் ஆவூர் நகரமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக.

பாடல் 11

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர்ப்

பண்டுரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சரத்து ஆதி தன் மேல்

கண்டல் கண் மிண்டிய கானல் காழிக் கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன

கொண்டு இனிதா இசை பாடியாடிக் கூடும் அவர் உடையார்கள் வானே

விளக்கம்:

பண்டுரியார்=பண்டைய நாளிலிருந்தே சிவபெருமானை வழிபடும் உரிமை பெற்ற பழவடியார்கள்; வழிவழியாக பெருமானை தொழுது வரும் குடிகளில் பிறந்த அடியார்கள்; கண்டல்=தாழை; மிண்டிய=நெருங்கி வளர்ந்த; வானம்=உயர்ந்த முக்தி உலகம்; ஞானசம்பந்தன் சொன்ன பாடல்களை மனதினில் கொண்டு என்று மனத்தால் செய்யப்படும் வழிபாடும், பாடி என்று மொழிகளால் செய்யப்படும் வழிபாடும். ஆடி என்று உடலால் செய்யப்படும் வழிபாடும் இங்கே குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு, நமது மனம் வாக்கு காயம் ஆகிய மூன்று கருவிகளையும் நாம் இறை வழிபாட்டினால் ஈடுபடுத்தவேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது.

பொழிப்புரை:

எட்டு திசையில் உள்ள அடியார்கள் யாவரும் வணங்கிப் புகழ்ந்து பாடும் சிவபெருமானை, அழகு மிகுந்த ஆவூர் தலத்தினில் அமைந்துள்ள பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானை, பண்டைய நாளிலிருந்தே வழிவழியாக வரும் சிவனடியார்கள் போற்றிப் புகழும் பெருமானை, தாழைப் புதர்கள் அடர்ந்து காணப்படும் கடற்கரைச் சோலைகள் உடைய சீர்காழி தலத்தைச் சார்ந்தவனும் கவுணியர் கோத்திரத்து வழி வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொன்ன பாடல்களை, பொருந்திய இசையுடன் கூட்டி இனிமையாக பாடியும் ஆடியும் இறைவனை வழிபடும் அடியார்கள் மறுமையில் உயர்ந்த முக்தியுலகத்தினில் இடம் பெறுவார்கள்.

முடிவுரை:

ஆவூர் பசுபதீச்சரம் தலத்து அடியார்கள் எவ்வாறெல்லாம் சிவபெருமானை கொண்டாடினார்கள் என்பதை ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் உணர்த்தி, நாமும் அவ்வாறு பெருமானை போற்றிப் புகழ்ந்து கொண்டாடவேண்டுமென்று விரும்புகின்றார் போலும். பெருமானின் புகழ் மிக்க குணங்களை குறிப்பிட்டு தலத்து அடியார்கள் கைதொழுது வணங்கும் தன்மை பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. பக்தி உணர்வுடன் அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து இடைவிடாது போற்றுகின்றனர் என்று இரண்டாவது பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். தலத்தில் உறைகின்ற அடியார்கள் சிவஞானம் பெற்றவராக விளங்கி இறைவனைப் போற்றுவதால், இலக்குமி தேவியின் அருள் பெற்று செல்வம் உடையவர்களாக விளங்குகின்றனர் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். நான்காவது பாடலில் தலத்து மகளிர் இசைப் பாடல்களுக்கு ஏற்ப கால்களால் தாளம் இடுகின்றனர் என்றும் ஐந்தாவது பாடலில் திருவிழாக் காலங்களில் சேரும் மக்கள் கூட்டத்தை தாங்கும் வண்ணம் அகன்ற வீதிகள் உடைய ஊர் என்றும் ஆறாவது பாடலில் சொற்கவிகளை பாடும் மாதர்களுக்கு பொற்காசுகள் பரிசாக வழங்கப் படுகின்றன என்றும் இந்த தலம் உலகத்தவர் அனைவராலும் போற்றப் படுகின்றது என்று ஏழாவது பாடலிலும், தலத்து அடியார்கள் வாழையடி வாழையாக தங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பெருமானை வழிபடுவதாக எட்டாவது பாடலிலும், திருவிழாக் காலங்களில் அரங்குகளில் மாதர்களும் மைந்தர்களும் இணைந்து பால் போன்று இனிய மொழியில் இறைவனை துதித்து பாடுகின்றனர் என்று ஒன்பதாவது பாடலிலும், ஒன்றிய மனத்துடன் காதலர்கள் இணைந்து பெருமானைப் புகழ்ந்து பாடுகின்றனர் என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிடப் படுகின்றது. இந்த அடியார்கள் காட்டிய வழியில் சென்று நாமும் இறைவனைப் பேணி வழிபட்டும் ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்களை முறையாக இசையுடன் கலந்து பாடியும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு உரிய தகுதி படைத்தவர்களாக மாறுவோமாக

Tag :

#thirugnanasambandhar thevaram
#Punniyar Boothiyar
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

புண்ணியர் பூதியர்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: