Go Back

22/03/21

பூவார் கொன்றை - பாடல் 5


பூவார் கொன்றை - பாடல் 5


மாடே ஓதம் எறிய வயல் செந்நெல்

காடேறிச் சங்கு ஈனும் காழியார்

வாடா மலராள் பங்கர் அவர் போலாம்

ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே

விளக்கம்:

மாடே=அருகினில்; ஓதம்=கடல் அலைகள்; ஏடு=குற்றம்; இந்த பாடலில் அன்னை பார்வதி தேவியை, வாடா மலராள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கற்புக்கரசியாக திகழும் மாதர்கள் அணியும் மாலைகள் வாடுவதில்லை என்ற நம்பிக்கை பண்டைய நாளில் இருந்து வந்தது போலும். பயிர்கள் அடர்ந்ந்து கிடந்த வயல்கள் என்பதால் வயற்காடு என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

கடல் அலைகளால் வீசி எறியப்பட்ட சங்குகள், செந்நெல் பயிர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த காடுகளில் அமர்ந்து முத்தினை ஈனும் செல்வம் படைத்ததாக விளங்கிய காழி நகரினில் உறையும் இறைவன், கற்பில் சிறந்தவளாக விளங்கியவளும் தான் அணிந்துள்ள மாலை வாடாமல் இருக்கும் தன்மையைப் பெற்றவளும் ஆகிய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டுள்ள இறைவன், குற்றங்கள் புரிந்து பலரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பூவார் கொன்றை - பாடல் 5


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: