Go Back

22/03/21

பூவார் கொன்றை - பாடல் 4


பூவார் கொன்றை - பாடல் 4


மாணா வென்றிக் காலன் மடியவே

காணா மாணிக்கு அளித்த காழியார்

நாணார் வாளி தொட்டார் அவர் போலாம்

பேணார் புரங்கள் அட்ட பெருமானே

விளக்கம்:

மாண்பு என்ற சொல்லினை ஆதாரமாகக் கொண்ட எதிர்மறைச் சொல் மாணா; மாட்சிமை இல்லாத, பெருமையற்ற என்று பொருள் கொள்ளவேண்டும்; உயிர்களின் வினைகளுக்கு தக்கவாறு, குறிப்பிட்ட காலத்தில் அந்த உயிரிலிருந்து உடலினை பிரிக்கும் பணி பெருமானால் இயமனுக்கு இடப்பட்ட பணியாகும். எனவே இயமன் அந்நாள் வரை பல்லாயிரக் கணக்கான உயிர்களை வேறு வேறு உடல்களிளிளிருந்து பிரித்து இருந்தாலும், அத்தகைய செயல்களைச் செய்வதில் அவனுக்கு பெருமானின் துணை இருந்து வந்தது. அதனால் தான் தனது செயல்களில் அவனால் வெற்றி கொள்ள முடிந்தது. எனவே அந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் பெருமானின் உதவி தான். அதனால் தான் அவன் அந்நாள் வரை பெற்ற வெற்றிகள் பெருமைக்கு உரியன அல்ல என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயன் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழுது வணங்காத நிலை இங்கே காணா மாணி என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. வாளி=அம்பு; நாணார்=நாணில் பொருந்திய;.

பொழிப்புரை:

பெருமையற்ற வெற்றிகளை உடையவனாக விளங்கிய இயமன், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் கண்டு வணங்காமல் இருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிப்பதற்காக முயற்சி செய்த போது, காலனை தனது காலால் உதைத்து வீழ்த்தி சிறுவன் மார்க்கண்டேயனுக்கு நீண்ட வாழ்நாள் அளித்தவர் காழி நகரத்து இறைவன் ஆகிய சிவபெருமான் ஆவார். மேரு மலையினை வில்லாக கொண்டு வாசுகிப் பாம்பினை நாணாக பூட்டி, அந்த வில்லினில் அம்பினைப் பொருத்தி, வேத நெறியினை புறக்கணித்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவரும் அவரே.

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பூவார் கொன்றை - பாடல் 4


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: