Go Back

22/03/21

பூவார் கொன்றை - பின்னணி


பூவார் கொன்றை - பின்னணி


இறைவன் அளித்த திருத்தாளத்துடன் சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர், நேராக திருக்கோயில் சென்று வலம் வந்த பின்னர், தோணிபுரத்து பெருமானின் சன்னதியில் பாடிய திருப்பதிகம் இந்த பதிகம் ஆகும். திருப்பெருகு என்று சீர்காழி தலத்தின் செல்வ வளம் குறிப்பிடப் படுகின்றது. கட்டளை என்பது ஒரே பண்ணில் அமைந்த பாடல்களில் உள்ள யாப்பமைதி, தாளபேதம், சீர்களின் நீட்டல் குறுக்கல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து அதன் வகையில் பிரிக்கும் பாகுபாடு. அத்தகைய கட்டளை பேதங்கள், தக்கராகப் பண்ணில் அமைந்துள்ள ஞானசம்பந்தர் பாடல்களில் எட்டு இருப்பதாக கூறுவார்கள். அந்த எட்டு பிரிவுகளில் ஒரு வகையைச் சார்ந்தது இந்த பதிகம் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

திருப்பெருகு பெருங் கோயில் சூழ வலம் கொண்டருளித் திரு முன் நின்றே

அருட்பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளையாக்கி அவற்றுள் ஒன்று

விருப்புறு பொன் திருத் தோணி வீற்றிருந்தார் தமைப் பாட மேவு காதல்

பொருத்தம் உற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை

மேற்கண்டவாறு பதிகத்தினை தொடங்கிய சம்பந்தர், பெருமான் தனக்கு அளித்த தாளத்தை, பாடலின் இசைக்கு தகுந்தவாறு பயன்படுத்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். அடுத்த நடை பெறப் பாடி என்று, இதற்கு முன்னர் அருளிய மடையில் வாளை என்று தொடங்கும் பதிகத்தினை ஒட்டி, அதே பண்ணமைதியும் தாள அமைதியும் வரும் வண்ணம் பாடினார் என்று உணர்த்துகின்றார். மழை பொழிவது போன்று, சரளமாக பாடல்கள் பாடியமையை உணர்த்தும் வண்ணம் ஞானக் கொண்டல் என்று கூறுகின்றார். கொண்டல்=மழை பொழியும் மேகம். சீர்காழி தலத்தில் அந்நாளில் வாழ்ந்த மக்கள் உய்யும் பொருட்டு பதிகங்கள் பாடினார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.

எடுத்த திருப்பதிகத்தின் இசை திருத்தாளத்தினால் இசைய ஒத்தி

அடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற்ற வணங்கிப் போந்து அலைநீர் பொன்னி

மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்துக் காட்சி

கொடுத்து அருளி வைகினார் குறைவிலா நிறை ஞானக் கொண்டலார் தாம்

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பூவார் கொன்றை - பின்னணி


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: