Go Back

22/03/21

மடையில் வாளைபாய - முடிவுரை:


மடையில் வாளைபாய - முடிவுரை


திருஞானசம்பந்தர்க்கு இறைவன் தாளம் அளித்த செய்தியை நம்பியாண்டார் நம்பி அவர்கள் தனது ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி மற்றும் ஆளுடைப் பிள்ளையார் மும்மணிக் கோவை பதிகங்களில் (பதினோராம் திருமுறை), எழுத்தஞ்சும் இட்ட செம்பொற் தாளம் ஈந்த என்றும் செம்பொன் தாளம் அவையே என்றும் குறிப்பிடுகின்றார். சம்பந்தருக்கு இறைவன் தாளம் ஈந்த நிகழ்ச்சியை, இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் சுந்தரர் குறிக்கிறார். சம்பந்தரை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர் என்றும் இந்த பாடலில் சுந்தரர் புகழ்கிறார்.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு

உலகவர் முன்

தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை

என் மனக் கருத்தை

ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அம் கணன் தனை

எண் கணம் இறைஞ்சும்

கோளிலிப் பெரும் கோயில் உளானைக் கோலக்காவினில்

கண்டு கொண்டேனே

சம்பந்தர் தாளம் பெற்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. அன்று சம்பந்தரின் திருவுருவம் சீர்காழியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அந்த திருவுருவத்திற்கு தாளம் வழங்கப்படும். அடுத்த நாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சம்பந்தரின் திருவுருவம் சீர்காழிக்கு எடுத்துச் செல்லப்படும். இறைவன் அளித்தது பொற்றாளம் என்பதால், முதலில் ஓசை எழவில்லை என்றும், பின்னர் இறைவியின் அருளால் தாளத்திலிருந்து ஓசை எழுந்தது என்றும் அந்த காரணம் பற்றியே இறைவிக்கு ஓசை கொடுத்தநாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இந்த குறிப்பு பெரியபுராணத்தில் காணப்படவில்லை. இந்த செய்தி செவிவழிச் செய்தியாக உள்ளது. சிவஞானத்துடன் குழைத்த ஞானப்பால் அளித்து மூன்று வயது சிறுவனை பாட வைத்த தாயின் கருணை உள்ளம், தாளத்தினில் ஓசை வருமாறு அருள் புரிந்ததும் இயற்கை தானே.

நடந்த அதிசயத்தைக் கண்ட தேவர்கள் வானில் குழுமி மலர்மாரி பொழிந்தார்கள் என்றும், இசையில் வல்ல நாரதர் தும்புரு ஆகியோர், தாளத்திலிருந்து எழுந்த நல்லோசை கேட்டு, அருள் புரிந்த இறைவனையும், இறைவனின் அருளுக்கு தகுதியுடன் விளங்கிய திருஞான சம்பந்தரையும் போற்றினார்கள் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். சிறிய குழந்தை தாளத்துடன் நடந்து செல்வதைக் கண்ட அவரது தந்தையார் பொறுக்க முடியாமல், அந்த குழந்தையைத் தனது தோள்களின் மீது தூக்கிக்கொண்டு, சீர்காழி திருக்கோயிலை சென்றடைந்தார். காதலுடன் அணைந்து (பாடல் எண்; 100) என்று தொடங்கும் பெரிய புராணப் பாடலில், சிவபெருமானை ஞானசம்பந்தரின் தாதை என்று குறிப்பிட்ட சேக்கிழார், கீழ்க்கண்ட பாடலில், பெருமானிடமிருந்து வேறுபடுத்தக் காட்டும் நோக்கத்துடன் சிவபாத இருதையரை குலத்தாதையர் என்று குறிப்பிடுவதை நாம் கீழக்கண்ட பாடலில் காணலாம்.

செங்கமல மலர்க் கரத்துத் திருத்தாளத்துடன் செல்லும்

போது

தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மீது தரித்துக்

கொள்ள

அங்கவர் தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார்

சூழ்ந்து அமரர் ஏத்தும்

திங்கள் அணி மணிமாடத் திருத்தோணிச் சிகரக் கோயில்

பெரும்பாலான பதிகங்களின் கடைப் பாடலில், பதிகத்தின் பலனை உணர்த்தும் திருஞானசம்பந்தர், பாடல் வல்லவர்கள் என்று கூறுவதை நாம் உணரலாம். பாடலை நன்றாக கற்று, அதற்குரிய இசையுடன் பொருந்தியவாறு, பாடலின் பொருளினை உணர்ந்துகொண்டு மனம் ஒன்றியும் பாடுவோரையே பாடல் வல்லார் என்று கூறுகின்றார். நாம் திருஞானசம்பந்தர் அருளிய இந்த பாடலை, கருத்துணர்ந்துக் கற்று, பிழையேதும் இன்றி, இசையுடன் பொருந்தும் வண்ணம் பாடி, சம்பந்தப் பெருமான் குறிப்பிட்ட பலன்களைப் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - முடிவுரை:


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: