Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 11


மடையில் வாளைபாய - பாடல் 11


நலம் கொள் காழி ஞானசம்பந்தன்

குலம் கொள் கோலக்கா உளானையே

வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே

விளக்கம்:

நலங்கொள்=இயற்கை வளம் பொருந்திய; குலங்கொள்=பண்பினால் உயர்ந்த குலத்தினை உடையவர்களாக விளங்கிய; வலம்கொள்பாடல்=திருவருளினால் வல்லமை பெற்று விளங்கும் பாடல்; உலம்=மலை; கோலக்கா தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தினை பாடும் அடியார்களின் வினைகள் மலை போன்று உயர்ந்தும் வலிமை உடையதாகவும் விளங்கினும், அத்தகைய வினைகளும் தீர்ந்து விடும் என்று சம்பந்தர் கூறுவது, அவரது நமச்சிவாயப் பதிகத்தின் பாடலை (3.49.6) நினைவூட்டுகின்றது, மந்தர மலை போன்ற அளவு பாவங்களைச் செய்ததால் வலிய வினைகளால் கட்டுண்டவர்களாக இருப்பினும், அவர்கள் திருவைந்தெழுத்தினை உச்சரித்தால் அவர்களது கொடிய வினைகளும் சிந்திவிடும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நந்தி=சிவ பெருமான்;

மந்தரம் அன பாவங்கள் மேவிய

பந்தனை அவர் தாமும் பணிவரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே

திருவருளினால் வல்லமை பெற்றுத் திகழும் பாடல் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தில் பொற்றாளம் பெற்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை. ஆனால் நம்பியாண்டார் நம்பி அருளிய பாடல்கள் மற்றும் சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்களில் இந்த குறிப்பு காணப்படுவதை நாம் இந்த பதிகத்து விளக்கத்தின் முடிவுரையில் காணலாம். வல்லமை வாய்ந்த பாடல் என்று குறிப்பாக, நடந்த அதிசயத்தை, சம்பந்தர் உணர்த்துகின்ராரோ என்று தோன்றுகின்றது. இந்த பதிகத்தினை தினமும் நம்பிக்கையுடன் ஓதினால் பேச்சுத் திறமை வளரும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர், பிறவி ஊமையாக இருந்த தனது மகன், இந்த தேவாரப் பதிகத்தின் உதவியால், பேசும் சக்தியைப் பெற்றதால் மனம் மகிழ்ந்த தாய், பொன்னால் செய்யப்பட்ட தாளம் ஒன்றினை இறைவனுக்கு அளித்தது இன்னும் திருக்கோயிலில் உள்ளது.

பொழிப்புரை:

இயற்கையாகவே நலங்கள் பல பெற்று வளமுடன் திகழும் சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினராக விளங்கும் மனிதர்கள் வாழும் கோலக்கா நகரத்தினில் உறையும் இறைவனைக் குறித்து அருளிய பதிகத்தினை, நல்ல பலனை அளிக்கவல்ல இந்த பதிகத்தினை ஓதும் அடியார்களின் வினைகள் மலை போன்று அளவில் பெரியதாகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பினும் அடியோடு நீங்க அவர்கள் இன்பமுடன் வாழ்வார்கள்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
மடையில் வாளைபாய - பாடல் 11


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: