Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - முடிவுரை


நறவ நிறை வண்டு - முடிவுரை


இதனிடையில் திருக்கோயிலில் நடந்ததை கண்டவர்களும் கேட்டவர்களும், இத்தகைய அற்புதம் வேறெங்கும் நடைபெறவில்லை என்று சொல்லியவாறு தோணிபுரத்து திருக்கோயிலின் வாயிலில் வந்து சூழ்ந்தனர். தனது வாழ்வினில், இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள பதிகத்தினை இரண்டாவது பதிகமாக பாடிய திருஞான சம்பந்தர் திருக்கோயிலுக்கு வெளியே வருகின்றார். வெளியே குழுமியிருந்த வேதியர்கள் காண, இறைவனின் அருளினால் ஏழிசைகள் பொருந்திய செந்தமிழ் பாடல்களை பாடும் திறமை பெற்றவராகவும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு புரிபவராகவும் மாறிய மூன்று வயதுக் குழந்தையினைத் தனது தோளில் சுமந்தவாறு சிவபாத இருதயர் திருக்கோயிலிலிருந்து புறப்பட, அவரை எதிர்கொண்ட பல தொண்டர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

சீர்காழி தலத்தின் தவப் பயனாய் தோன்றியவனே என்றும், கவுணியர் கோத்திரத்து தோன்றிய தனமே என்றும், ஆழ்கடல் போன்று கலை ஞானம் மிகுந்தவரே என்றும், கடலில் தோன்றிய அமுதே என்றும், உலகத்தவர் உய்யும் வண்ணம் அவதாரம் எடுத்தவரே என்றும், பெருமான் மற்றும் பிராட்டி ஆகிய இருவரின் அருளினையும் பெற்றவரே என்றும், மறைகளை வளர்க்கும் செல்வரே என்றும், வைதீக நெறியின் நிலையான பொருளே என்றும், புண்ணியங்களின் முதலே என்றும் பலவாறு அவரை புகழ்ந்து போற்றிய வண்ணம் அடியார்கள் திருஞானசம்பந்தரை பின் தொடர்ந்தனர். மேலும் அவரது திருப்பாதங்களில் தங்களது தலைகளை வைத்து வணங்கினார்கள்.

மூன்று வயதில் தீஞ்சுவை தமிழ் பாடல்கள் பாடும் அதிசய குழந்தையை அழைத்துக்கொண்டு சிவபாத இருதயர் தனது வீடு திரும்பும் முன்னர் சீர்காழி நகரத்திலுள்ள அனைவருக்கும் நடந்த அதிசயத்தின் விவரங்கள் தெரிய வரவே சீர்காழி திருக்கோயிலின் முன்பு மக்கள் கூட்டம் கூடி விட்டது. மகிழ்ச்சியில் மக்கள் தங்கள் உடலின் மேல் இருந்த உத்தரீயத்தை எடுத்து கொடி போல் விரித்து ஆட்டினர் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சீர்காழி தெருக்களில் சிவானந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்று சேக்கிழார் கூறுகின்றார். அறுவை=உடை மீது கட்டப் பட்டிருக்கும் ஆடை; இந்த காட்சி, ஆற்றினில் சுழித்துக் கொண்டு வரும் நுரைக் குமிழிகள் ஆற்றின் ஓட்டத்திற்கு இணங்க மேல் ஏறியும் கீழே இறங்கியும் வருவது போன்று இருந்தது என்று இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். மேலும் நகர மக்கள் தமது இல்லங்களில் அதிசயம் நிகழ்ந்தது போல் கருதி குளிர்ந்த மலர்களையும் வண்ணப் பொடிகளையும் நெற்பொறிகளையும் தூவியும், மங்கல இசை முழங்கியும், வேத கீதங்கள் இசைத்தும், நிறை குடங்களின் மீது விளக்குகளை ஏற்றி வைத்தும், சங்குகள் ஒலித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து

தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே

பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும்

காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கு பெரும் காட்சித்தாக

இவ்வாறு அனைவராலும் கொண்டாடப்படும் வகையில் பதிகங்கள் இயற்றிய திருஞான சம்பந்தரின் பாடல்களை பொருளுடன் உணர்ந்து, மனம் ஒன்றி அந்த பாடல்களை பாடி இறைவனின் திருவருள் பெற்று நாம் வாழ்வினில் உய்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - முடிவுரை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: