Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 9


நறவ நிறை வண்டு - பாடல் 9


நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்

படியா மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில்

பொடியார் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதியாக

இடியார் முழவார் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

விளக்கம்:

நெடியான்=நீண்ட உருவம் கொண்ட திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமால்; பொடி= திருநீறு; படியா மேனி=அளவுக்கு உட்படாத;

பொழிப்புரை:

நெடியவனாகிய திருமாலும் நீண்ட தாமரை மேல் உறையும் பிரமனும் கீழே அகழ்ந்தும் மேலே பறந்தும் காணமுடியாத வண்ணம் எந்த அளவுக்கும் உட்படாத அழல் உருவாகிய திருமேனியை உடையவன் சிவபெருமான். அவன் தனது பவள வண்ணத்தில் உள்ள திருமேனியின் மேல் திருநீறு பூசிய கோலத்தை உடையவன். அவன் தான், கடலால் சூழப்பட்டதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு இருக்கும் பெருமான் இடி போன்று முழங்கும் முழவம் ஒழிக்க நடனம் ஆடும் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 9

Nagercoil, Kanyakumari Dist, Tamil Nadu, India


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: