Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 5


நறவ நிறை வண்டு - பாடல் 5


செங்கண் அரவு நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும்

தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை

பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக

எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

விளக்கம்:

முகிழ்தல்=முளைத்தல்; சரி=தொங்கும்; பிளவு பட்டு வாய் திறந்து இருப்பது போன்று காட்சி அளிப்பதால் சிரிக்கும் தோற்றத்தினைக் கொண்டுள்ள தலை என்பதை உணர்த்த நகுவெண்தலை என்று கூறுகின்றார். நகுவெண்தலையை சடையில் சூட்டிக் கொண்டவன் என்று பெருமான் தலைமாலை தலைக்கு அணிந்துள்ள நிலையினை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பல திருமுறைப் பாடல்களில் பெருமான் தலைமாலை அணிந்துள்ள நிலை குறிப்பிடப்படுகின்றது. நாம் இப்போது அப்பர் பிரான் அருளிய அங்கமாலை பதிகத்தின் முதல் பாடலை( 4.9.1) காணலாம்.

தலைமாலை=ஒவ்வொரு ஊழி முடிவிலும் அழியும், பிரமன் திருமால் ஆகியோரின் தலைகளைக் கொண்ட மாலை. தலைமாலை தலைக்கு அணிந்தவன் என்ற தொடர் மூலம், சிவபெருமான் ஒருவனே என்றும் அழியாமல் இருப்பவன் என்ற செய்தி உணர்த்தப்படுகின்றது. மகா சங்கார காலத்தில், அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னர், செத்து செத்து பிறக்கும் தன்மை உடைய திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரின் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையானவர்கள் அல்ல; தான் ஒருவன் தான் நிலையானவன் என்ற உண்மையை அனைவருக்கும் சிவபெருமான் உணர்த்துகின்றார். எனவே அவரைத் தவிர வணங்கத்தக்க தெய்வம் வேறு எவரும் இல்லை.

தலையே நீ வணங்காய் – தலை

மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேரும் தலைவனைத்

தலையே நீ வணங்காய்.

பொழிப்புரை:

சிவந்த கண்களை உடைய பாம்பும், சிரிப்பது போன்று வாய் பிளந்து தோன்றும் தலையும், முளைத்த பிறைச் சந்திரனும் தங்கும் சடை முடியினை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டவனும், கீளில் கட்டப்பட்டு சரிந்து தொங்கும் கோவண ஆடையினை அணிந்தவனும் ஆகிய பெருமான் பொங்கி எழும் அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்டதும் அழகாக விளங்குவதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு, அனைத்து இடங்களிலும் பரவி இருக்கும் இமையோர்கள் வந்து தொழுது தன்னைப் புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 5


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: