Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 4


நறவ நிறை வண்டு - பாடல் 4


நினைவார் நினைய இனியான் பனியார் மலர் தூய நித்தலும்

கனையார் விடை ஒன்று உடையன் கங்கை திங்கள் கமழ் கொன்றை

புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதியாக

எனை ஆளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

விளக்கம்:

கனைத்தல்=குரல் கொடுத்தல்; பனியார் மலர்=பனித்துளிகள் படிந்த மலர்கள்; விடியலில் பறிக்கப்பட்ட மலர்கள் தானே பனித்துளிகளை உடைய மலர்களாக இருக்கும். மேலும் தூய மலர்கள் என்று குறிப்பிடுவது, வண்டுகள் தேனைப் பருகுவதற்கும் முன்னம் பறிக்கப்பட்ட மலர்கள் என்பதையும் உணர்த்துகின்றன.

என்னை ஆளுடையான் என்று பெருமானை சம்பந்தர் குறிப்பிடுவதை இந்த பாடலில் நாம் காணலாம். தோடுடைய செவியன் என்று தொடங்கும் முதல் பதிகத்தில் தனது தந்தையார் கேட்ட கேள்விக்கு விடையாக இறைவனின் அடையாளங்களை குறிப்பிட்ட பிள்ளையார், தனக்கு பெருமானுக்கு இடையே இருந்த தொடர்பினை என் உள்ளம் கவர் கள்வன் என்ற தொடரினைத் தவிர வேறு எந்த முறையிலும் குறிப்பிடவில்லை.

ஆனால் மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடிய தன்மையிலிருந்து, பெருமான் அந்த குழந்தையை ஆட்கொண்டு அருளியதை உலகம் உணர்கின்றது, நாமும் புரிந்து கொள்கின்றோம். அதற்கு அடுத்து அருளிய இந்த பதிகத்தில், என்னை ஆளுடையான் என்று இந்த பாடலிலும், என்னை உடையான் என்று ஆறாவது பாடலிலும் குறிப்பிட்டு இறைவன் தன்னை ஆட்கொண்ட தன்மையை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.

அப்பர் பிரான் தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்று குறிப்பிட்டு இறைவன் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை குறிப்பிடுகின்றார்.

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.

சுந்தரரும் தான் அருளிய முதல் பதிகத்தில், அனைத்துப் பாடல்களிலும் உனக்கு நான் அடிமை அல்ல என்று இனி சொல்ல மாட்டேன் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் அவரை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்ட பின்னர் அருளிய பாடல் என்பதால், பெருமான் தன்னை ஆட்கொள்ள முயற்சி செய்த போது தான் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். மணிவாசகரும் திருவாசகத்தில் பல இடங்களில் பெருமான் தன்னை ஆட்கொண்டதை உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

பனித்துளிகள் படர்ந்து காணப்படுவதும் வண்டுகள் தேனைச் சுவைப்பதன் முன்னம் பறிக்கப்படுவதும் ஆகிய தூய்மையான மலர்களை தனது திருமேனியின் மீது தூவி தினமும் மறவாமல் நினைத்து வழிபடும் அடியார்களின் நினைவினில் இனிமையாக இருப்பவனும், உரத்த குரலில் கனைக்கும் எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், கங்கை நதி பிறைச் சந்திரன் மற்றும் கொன்றை மலர் ஆகியவை புனையப்பட்ட நீண்ட அழகிய சடையினை உடையவனும், ஆகிய பெருமான் கடலால் சூழப்பட்ட புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான். அவனே என்னை ஆட்கொண்ட இறைவன் ஆவான்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 4


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: