Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - முன்னுரை


முன்னுரை:


புறவம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் பெயர்களில் ஒன்றாகும். மன்னன் சிபியை சோதிக்கும் நோக்கத்துடன் இந்திரன் புறா வடிவத்தோடும் அக்னி கழுகு வடிவத்துடனும் வந்தனர். அவ்வாறு சோதனை செய்த அக்னியும் இந்திரனும், தாங்கள் தவறாக மன்னன் சிபியை நினைத்தற்கு மன்னிப்பு கோரி பெருமானை வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். புறவன் (புறாவுக்கு உரியவனாகிய பருந்து உருவில் வந்த இந்திரன்) தான் இழந்த புறாவின் நிறைக்கு ஈடு கட்டும் விதமாக, வேதங்களும் அமரர்களும் ஒப்பும் விதமாக நீதி அருளும்படி விண்ணப்பிக்க, பொறையன் (சிபிச் சக்ரவர்த்தி) தனது உடலையே அந்த புறாவுக்கு நிகராகும்படி ஈந்த வரலாற்றை கூறும் வகையில் திருஞான சம்பந்தர் அருளிய ஒரு தேவாரப் பாடல் அமைந்துள்ளது.

மன்னனது தியாகத்தை அனைவரும் புகழ, மன்னன் தனது உடல் பெறுமாறு அருளிச் செய்ததும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. மறை அமரர் என்று புறாவாக வந்த அக்னியும், பருந்தாக வந்த இந்திரனும் குறிப்பிடப்பட்டுள்ளனர். நிறைதையுழி என்றால் நிறைவு வேண்டியிருந்த போது என்று பொருள். அதாவது தான் இழந்த புறாவின் எடைக்குச் சமமாக தனக்கு சதை வேண்டும் என்று புறாவை துரத்தி வந்த பருந்து கோர, அதற்காகத் தன்னையே அளித்து புறாவின் எடைக்கு நிறைவாகச் செய்த சிபி மன்னனின் செயலை இங்கே சம்பந்தர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் பாடல் நரருலகு சுரர் என்று தொடங்கும் பதிகத்தின் எட்டாவது பாடாலாகும் (3.67.8).

அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா

மறையின் ஒழி முறை முரல் செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடமாம்

குறைவின் மிக நிறைதையுழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும்

புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளும் புறவம் அதுவே

மேற்குறித்த பாடலின் முதல் இரண்டு அடிகள் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை மலை நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றன. அறம் அழிவு பெற=உலகினில் தருமம் அழியும் வண்ணம் பல கொடிய செயல்கள் புரிந்த அரக்கன் இராவணன். தெறு=அழித்த; புயவன்=வலிமையான தோள்களை உடைய அரக்கன்; விறல்=வலிமை; விரல் நிறுவி= விரலை ஊன்றி; மாமறை=சிறந்த வேதமாகிய சாமகானம்; முறை=முறையாக; முரல் செய்= பாடிய; முரல்=வண்டு செய்யும் ரீங்காரம்; பிறை எயிறன்=பிறைச் சந்திரன் போன்று வளைந்த பற்களை உடைய அரக்கன்; உற=நீண்ட வாழ்நாளும், சிறந்த வாளும் இராவணன் என்ற பெயரும் பெரும் வண்ணம் அருள் புரிந்த இறைவன்; தனது உணவாகிய புறாவினை தான் உட்கொள்ள முடியாமல் புறாவினுக்கு அபயம் அளித்த மன்னன் சிபியிடம்; தான் இழந்ததை, புறா வடிவில் இருந்த தனது உணவினை, ஈடு செய்து நீதி வழங்குமாறு அக்னியாக வந்த கழுகு முறையிட்டது. அக்னியின் இழப்பினை ஈடு செய்யும் நோக்கத்துடன் மன்னன், முதலில் தனது தொடையின் ஒரு பகுதியினை அறுத்து தராசுத் தட்டில் வைக்கின்றான். ஆனால் புறா இருந்த தட்டு தாழ்ந்து இருந்தமையால், கழுகு இரண்டு தட்டுகளும் ஒரே நிலையில் இருக்கும் வண்ணம் மேலும் மாமிசம் அளிக்கும் படி வேண்டியது. இரண்டு தட்டுகளும் நேராக இருக்கச் செய்யும் முயற்சியில் முடிவில் மன்னன் தானே தராசுத்தட்டில் அமர்ந்து தனது உடலினை முழுவதுமாக கழுகுக்கு ஈந்தான். பொறை=பாரம், எடை; தனது உடலையே புறாவின் எடைக்கு நேராக ஈந்ததால், மன்னனுக்கு பொறையன் என்ற பெயர் வந்தது.

முதல் மூவரின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பழமொழி இது தான். பாலை கொடுத்து சூலை கொடுத்து ஓலை கொடுத்து. மூவரும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தேவார பாடல்கள் புனைய ஆரம்பித்து பல தலங்களுக்குச் சென்று சிவநெறியை பரப்பலானார்கள். வானில், விடையின் மீது தனது துணையுடன் அமர்ந்தவராக பெருமான் காட்சி அளித்ததைக் காணும் பேற்றினைப் பெற்ற திருஞான சம்பந்தர், குளக்கரையில் (மண்மிசை) நின்றிருந்த வேதியர் குலச் சிறுவனாகிய சம்பந்தர், தனது கண்களின் வழியாக தான் அறிந்த கொண்ட கருத்து என்றும் பிரியாமல் மனதினில் இருக்கும் வண்ணம் கலந்தைமையால், பெருமானைக் காண்பதற்காக யானைக் கன்று போன்று சிறப்பு வாய்ந்தவராக விளங்கிய சம்பந்தர், திருக்கோயிலின் உள்ளே சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். போதகம்=யானைக் கன்று.

அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே

மண் மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்

கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக

புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புக்கார்

மூன்று வயதுக் குழந்தை, தான் கேட்ட கேள்விக்கு பதிலாக பாடல் பாடியதையும். அந்தப் பாடலில் இறைவனின் பெருமைகளை அழகாக உணர்த்தியதையும், தனக்கு பால் அளித்தவர் பெருமான் என்று அவரை சுட்டிக் காட்டியதையும் உணர்ந்த சிவபாத இருதயரின் கையில் இருந்த கொம்பு அவரை அறியாமல் கீழே விழுந்தது; எல்லையற்ற தவம் செய்த தந்தை என அனைவரும் புகழும் வண்ணம், இறைவன் சம்பந்தருக்கு இறைவன் அருள் செய்தமை அமைந்திருந்தது. மாறு விழுந்த=கையினால் இறுகப் பற்றியிருந்த நிலையிலிருந்து மாறி கீழே விழுந்த நிலை; தந்தையார் இரு கைகளையும் குவித்து, தனது மகன் காட்டிய திசை நோக்கி, மகிழ்ச்சியினால் கூத்தாடினார். தான், தனது மகன் எச்சில் பாலைக் குடித்தான் என்று நினைத்து தவறு என்றும், நடந்தது வேறு ஒரு அதிசயம் என்பதையும் உணர்ந்த தந்தையார், தனது மகனைத் தான் தவறாக நினைத்தமையால் இறைவனின் கோபத்திற்கு ஆட்பட்டுள்ள தனக்கு என்ன நேருமோ என்றும் அச்சம் கொண்டார்; வெருட்சி=இறைவனின் திருவருளினை உணராமல் தனது மகனைக் கோபித்துக் கொண்டதால் ஏற்பட்ட பயம்; வியப்பு=நடந்த அதிசயத்தை நினைத்து வியப்பு அடைந்த நிலை; விருப்பு=புறச் சமயத்தின் தாக்குதலை முறியடிக்கும் மகன் வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் மகனின் மேல் மேலும் கூடிய விருப்பு; இவ்வாறு அச்சம், வியப்பு, விருப்பு ஆகிய வேறுவேறு உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்ட சிவபாத இருதயர், சம்பந்தர் மொழிந்த பதிகத்தில் அமைந்துள்ள கருத்தினை ஆராய்ந்து எண்ணினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

ஈறில் பெருந்தவம் முன் செய்து தாதை எனப்பெற்றார்

மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி

வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்

கூறும் அருந்தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார்

மேலும் சிவபிரான் மற்றும் உமையம்மையின் தரிசனம் தான் காணப் பெறாவிடினும் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து குழந்தைக்கு தரிசனம் கிடைத்த பேற்றை புரிந்து கொண்ட சிவபாத இருதயர் தோணிபுரத்தாரின் அருளை நினைந்து வியந்து குழந்தையுடன் கோயிலுக்குள் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். இந்த பாடலில் காதலர் என்று அன்புக் குழந்தை குறிப்பிடப்படுகின்றது. தனது குழந்தையை பின் தொடர்ந்து சிவபாத இருதயர் கோயிலுக்குள் சென்றார் என்றும் இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் திருவருள் பெற்று மேன்மை பெற்றவராக விளங்கிய குழந்தையின் பெருமையினை உணர்ந்த தந்தையார் குழந்தையின் முன்னே செல்லாமல் பின்னே சென்றார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த கருத்து பெரியபுராணம் அளிக்கும் வாழ்வியல் கருத்துக்களில் ஒன்றாகும். நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய எவரேனுடனும் நாம் செல்ல நேர்ந்தால், அவருக்கு முன்னே செல்லாமல் அவரைப் பின் தொடர்ந்து சொல்லவேண்டும் என்பதே அந்த கருத்தாகும். தனது மகனே ஆயினும், அவனது பெருமையினை உணர்ந்தமையால் தந்தையார் பின் தொடர்ந்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது. காதலர்=நாளுக்கு நாள் சம்பந்தர் பால் அவரது தந்தையார் வைத்திருந்த பெருகிய நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

தாணுவினைத் தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்

காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டுள்ளார்

தோணிபுரத்து இறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்

பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார்

தந்தை பின் தொடர சன்னதியை அடைந்த சம்பந்தர், நறவம் நிறை வண்டு (1.74) எனத் தொடங்கும் பதிகத்தை அருளுகின்றார். தோணியப்பரையும் உமை அம்மையையும் ஒரு சேரக் கண்ட சம்பந்தப் பெருமான் இந்த பதிகத்தின் பத்து பாடல்களிலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே என முடிக்கிறார். உமை அம்மையோடு இறைவனை இணைத்து உமையாளொடும் இருந்த விமலன் என்று கடைக்காப்பு பாடலிலும் கூட குறிப்பிடப் பட்டுள்ளது. அனைத்து பாடல்களிலும் உமை அம்மையின் குறிப்பு காணப்படும் அரிதான பதிகங்களில் இதுவும் ஒன்று. சேக்கிழார் இந்த செய்தியை தனது பாடலில் குறிப்பிடுகின்றார். மால் விடை=சிறந்த இடபம்; வாழ்வு என்பது இங்கே பெருமான் அடியார்களுக்கு அளிக்கும் முக்தி நிலையினை குறிப்பிடுகின்றது. எனை ஆளுடையான் என்று சம்பந்தர் இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிடுவதை சேக்கிழார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இறைவன் தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் தனது வாழ்க்கையில் நடந்ததை இந்த குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். சம்பந்தர் தனது வாழ்வினில் அருளிய இரண்டாவது பதிகம் இது. முதல் பதிகம் குளக்கரையில் நின்றவாறு அருளப்பட்டமையால், இந்த பதிகமே திருக்கோயில் சந்நிதானத்தில் சம்பந்தர் அருளிய முதல் பதிகமாகும்

பொங்கொளி மால் விடை மீது புகுந்து அணி பொற்றோணி

தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே

இங்கெனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று

அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - முன்னுரை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: