இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வாமன புராணம்

The "Vamana Purana" (வாமன புராணம்) is one of the eighteen Mahapuranas in Hinduism. It is named after Vamana, the dwarf avatar of Vishnu, and is significant for its contributions to the mythology surrounding this incarnation and various related topics. The Vamana Purana is relatively less known compared to some of the other Puranas but is important for its specific focus on the Vamana avatar and related theological themes.


வாமன புராணம்

1. தோற்றுவாய்:

மகாபுராணங்களில் வாமன புராணம் ஒன்று. இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.இந்த வாமன புராணத்தில் பூர்வபாகம், உத்தரபாகம் என இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. தொண்ணூற்றைந்து அத்தியாயங்கள் உள்ளன. இது ராஜசிக புராணம், படைப்பு (அ) சிருஷ்டி விவரங்கள் தந்து, பிரம்மாவின் படைப்புப் பற்றிப் பெரிதும் விளக்குபவை ராஜசிக புராணங்கள் ஆகும்.
நாரதர் ஒரு சமயம் புலஸ்திய மகரிஷியிடம் வாமன புராணம் பற்றிக் கூற வேண்ட, புலஸ்தியர் வாமன புராணம் பற்றிக் கூறலானர்.

வாமனம்-குள்ளம்; வாமனன்-குள்ளன். மூவடி பலியிடம் கேட்டு யாசித்த வாமனின் (விஷ்ணு) வரலாறு வாமனாவதாரக் கதையாகும். வாமன புராணத்தில் மேலும் பல வரலாறுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

வாமன ஜெயந்தி மகாத்மியம் பற்றி புலஸ்தியர், புரட்டாசி மாதம், சுக்கிலபக்ஷ துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் பகவான் விஷ்ணு வாமனனாக அவதரித்தார். இந்த வாமன துவாதசி அன்று செய்யப்படும் தானம் அனைத்துப் புண்ணியமும் தரும். இருமுறை வாமனனாகப் பெருமாள் அவதரித்தார். மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்பு ஒரு தரம் துந்து என்ற அரக்கனை அழிக்கவும் வாமனாவதாரம் நிகழ்ந்த வரலாறு ஒன்றும் உள்ளது. இது விஷ்ணுவின் முதல் வாமனாவதாரம் எனப்படுகிறது.

2. துந்து அரக்கனும், வாமனனும்

தனு, காசிய முனிவர் தம்பதிகளின் மகன் துந்து என்னும் அரக்கன். அவன் பிரம்ம தேவனைக் குறித்துக் கோரத்துவம் செய்து தேவர்களால் தனக்கு மரணம் ஏற்படாதவாறு வரம் பெற்றான். துந்து இந்திரனை வென்று அப்பதவியைப் பெற்றான். இந்திரன் தேவர்களுடன் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் இருப்பிடமாகிய சத்தியலோகம் சென்று அடைந்தான். அதை அறிந்த அரக்கன் துந்து படைத்தலைவனிடம் பிரம்மலோகம் அடைந்து தேவர்களைத் துரத்தித் தங்க இடமின்றி செய்ய வேண்டும் என்றான். பிரம்மலோகம் செல்லும் வழியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் அவனுக்கு வரங்கள் அளித்த பிரம்மாவின் இருப்பிடத்தின் மீது போர் தொடுத்தால் நல்லதல்ல என்று அறிவுரை கூறினர். அப்போது துந்து தனக்குப் பிரம்மலோகத்தை வெற்றிக்கொள்ள ஆவல் உள்ளது. எத்தகைய புண்ணியம் செய்தால் அங்குச் செல்லமுடியும். இந்திராதி தேவர்கள் எவ்வாறு செல்ல முடிந்தது. என்றெல்லாம் கேட்க, சேனாபதி, குருவாகிய சுக்கிராச்சாரியாரைக் கேட்டுப் பாருங்கள் என்று உபாயம் கூறினார். அவ்வாறே அரக்கன் சுக்கிராச்சாரியாரை அடைந்து பிரம்மலோகம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர் இந்திரன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து அந்தச் சக்தியை அடைந்தான் என்றார். உடனே துந்துவும் நூறு அசுவமேத யாகங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான்.

தேவர்கள் துந்து செய்யும் அசுவமேத யாகம் பற்றிய யாகசாலையிலிருந்து வரும் தூபவாசனையினால் அறிந்து மகாவிஷ்ணுவை அடைந்து தங்கள் கவலையை வெளியிட்டு, தங்களைக் காத்திடுமாறு வேண்டினர். அவன் மூவுலகங்களையும் வென்று, பிரம்மலோகத்தையும் பற்றிட யாகம் நிகழ்த்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். விஷ்ணு அவர்களுக்கு அபயமளித்து அனுப்பிவிட்டு அரக்கனை வெல்லக்கூடிய அபாயம் பற்றிச் சிந்தித்தார். உடனே ஓர் அந்தணர் வாமனரூபம் கொண்டு தேவிகா நதியில் மூழ்கியும், எழுந்தும் கால்கைகள் மேலே தோன்ற இறப்பதற்குத் தயாராகுபவன் போல் காட்சி அளித்தார். இந்தக் காட்சியைக் கண்ட துந்து, மற்றும் புரோகிதர்கள் அனைவர்களும் யாகக்காரியங்களை விட்டு அந்த வாமனனைக் காப்பாற்ற விரைந்தனர். இறுதியில் அவ்வாமனனை நீரிலிருந்து வெளியே எடுத்து உபசாரங்கள் செய்தனர். அடுத்து, அந்த வாமனன் உயிர்விட எண்ணிய காரணம் அறிய பலவிதமான கேள்விகளைக் கேட்டனர். வாமன பிராமணன் உடல் நடுங்கிக் கொண்டே தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான்.

வாமனன் கூறிய வரலாறு

பிரபாசன் என்ற மகாவித்வானுக்கு நானும், என் தமையன் நேத்ரபாஸனும் இரு புத்திரர்கள். எங்கள் தகப்பனார் மரணமடைந்து, காரியங்கள் முடிந்த பிறகு வீட்டைப் பங்குபோடுமாறு கேட்க, என் அண்ணன் வாமனன், கூனன், நொண்டி, அலி போன்றவர்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது. போட்டதைச் சாப்பிட்டு விட்டு சும்மா இருக்க வேண்டும் என்றான். வாமனனுக்குச் சொத்து கிடையாது என்பது என்ன நியாயம் என்று கேட்க, அவன் கோபம் கொண்டு என்னை இந்நதியில் இழுத்துத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான் என்று கூறினான். இப்போது உங்கள் தயவினால் உயிருடன் மீண்டேன் என்று நன்றி கூறி அவர்களெல்லாம் யார்? எவர்? என்று கேள்வி கேட்டான். பிராமணர்கள் தாங்கள் பிருகு வம்சத்தினர் என்றும், அவர் துந்து என்னும் மகாவீரன் என்னும் தாதா என்றும், இங்கு அசுவமேத யாகம் நடத்துபவர் இவரே என்றனர். மேலும் துந்துபியிடம் அந்த வாமனனுக்கு ஒரு வீடு, மற்றும் பொன்னும், பொருளும் அளிக்குமாறு கூறினர். அப்போது அரக்கர் மன்னன் அவனிடம், அவனுக்கு தேவை எதுவாயினும் தான் தருவதாகக் கூறிக் கேட்கச் சொன்னார்.

அப்போது வாமனன் வீடு, பொருட்கள் மீது தனக்கு ஆசையில்லை. என் கால்களால் மூன்றடி நிலம் கொடு என்று வேண்டினான். அதைக் கேட்ட துந்து சிரித்து அப்படியே கொடுத்தேன் என்றான். வாமனன் ஓங்கி வளர்ந்து விசுவரூபம் கொண்டான். ஓரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லாததால் கோபம் கொண்டு திடீரென்று துந்துவின் மேல் விழுந்தான். அவன் விழுந்த வேகம், பளுதாங்க முடியாமல் பூமியில் பெரிய பள்ளம் உண்டாயிற்று. உடனே வாமனன் துந்துவை அந்தப் பள்ளத்தில் தள்ளி, அவன் மேல் மண்மாரி பொழியச் செய்து அவனுக்கு சமாதி செய்துவிட்டார். இவ்வாறு துந்துவை அழிக்க வந்த வாமனன், விஷ்ணுவின் முதல் வாமனாவதாரம் என்கிறது வாமன புராணம்.

3. ஓங்கி உலகளந்தான்

துந்து பிரம்மலோகத்தை வேண்டி துராசை கொண்டதன் விளைவாகத் தனக்குத் தானே சமாதியைத் தேடிக் கொண்டான், வாமனனாகிய நாராயணன் செயலால். இது குறித்து விசாரமடைந்த பிரகலாதன் தன் மகனாகிய விரோசனனை ராக்ஷச ராஜ்யத்திற்கு அரசனாக்கினான். அவனும் தந்தை சொற்படி ஆட்சிபுரிந்து வந்தான். இவன் மகனே பலிச்சக்கரவர்த்தி. பலி பாட்டன் வழியில், அவன் அறிவுரைப்படி தரும சாஸ்திர நெறியில் பயிற்றுவிக்கப்பட்டான். பிரகலாதன் அவனுக்குக் குருவாகவும் விளங்கினான். பலி மன்னனானவுடன் இந்திராதி தேவர்களை வென்றது மட்டுமின்றி மூவுலகங்களையும் கைப்பற்றினான். இதனால் தேவர்களுக்கு நித்தியகண்டம் ஆயிற்று.

இதனால் மனமுடைந்த தேவர்கள் தந்தை காசியபரை அணுகி முறையிட அவர் தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்றார். பிரம்மாவும் செய்வதறியாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று ரக்ஷிக்குமாறு வேண்டினர். அப்போது பகவான் தான் வாமனாவதாரம் எடுத்துப் பலியை அடக்குவதாகக் கூறி அவர்கள் புத்திரனாக அவதரிக்க அவர்களது தபஸ்ஸக்தி மட்டும் போதாது என்றும் அவர்களிருவரையும் பரமநிஷ்டையுடன் மேலும் தன்னை அடைய தவம் புரியுமாறு கூறினார். அதிலும் அதிதி செய்யும் தவமே அவள் கருவில் தான் தோன்ற மிகவும் முக்கியமாகும் என்று அருளாசி வழங்கினார். அப்போது அதிதி உலகையே தன்னுள் அடக்கியுள்ள பகவானைத் தன் கருவில் தன்னால் சுமக்க முடியுமா என்று ஐயத்துடன் கேட்க, விஷ்ணு உன் குழந்தையாக நான் பிறக்க இருப்தால் உன்னையும் கரு பளுவையும் நானே சுமப்பேன். நீ தவம் செய் என்றார். இவ்வாறு கூறி நாராயணன் தக்க தருணத்தில் அதிதி கருவில் பிரவேசித்தார்.

ராக்ஷசர்களிடையே அவ்வமயம் மகிழ்ச்சி குறைந்தது. உற்சாகமின்றி காணப்பட்டனர். இதுகண்ட பலிச்சக்கரவர்த்தி பாட்டன் பிரகலாதனிடம் அதற்கான காரணம் கேட்க, பிரகலாதன் ஞானதிருஷ்டியால் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் காரணம் ஆராய பகவான் நாராயணனைத் தியானம் செய்தார். மகா மகிமை கொண்ட நாராயணன் அதிதி வயிற்றில் வாமனனாக அவதரிக்கப் போகிறார். அவர் மகாத்மா விஷ்ணுவின் அம்சமாக உதிக்கப்போகும் வாமனனே. அரக்கர்களின் தேஜஸ்ஸை கவர்ந்து கொண்டார் என்று கூறினார். அதுகேட்ட பலி நாராயணன் யார்? அவர் தன்னிடமுள்ள மகா ராக்ஷசத்தலைவர்களை விடச்சக்தி வாய்ந்தவரா? என்று ஏளனமாகப் பேச ஆரம்பிக்க, பிரகலாதன் கோபம் கொண்டு, ராக்ஷசர்கள் தீய புத்தி உள்ளவர்கள்.

அவர்களுக்குப் பலி தலைவன். அதனால் அவனுக்கு விநாசகாலம். விநாசகாலே விபரீத புத்தி என்று எச்சரித்தார். உனக்கு உன் தந்தையும், அவனுக்குத் தானும், தனக்கு நாராயணனும் குரு. அத்தகைய பரமகுருவை, தனக்கு உயிரினும் மேலான நாராயணனை நிந்தித்தான் என்றும் அதனால் அவன் விரைவில் இராஜ்யத்தை இழப்பான் என்றும் சபித்தான் பிரகலாதன். பின்னர் பலி தான் செய்த தவறுக்கு பச்சாத்தாபப் பட்டு தன்னை மன்னித்து ஆசிர்வதிக்க வேண்ட, பிரகலாதனும் கோபத்தில் தான் கொடுத்த சாபமும் பலிக்கும் வரமாக மாறும் என்று சாபவிமோசன வழியாக அன்று முதல் பலியை விஷ்ணுபக்தி உடையவனாக இருக்குமாறு அறிவுரை பகன்றான்.

வாமனாவதாரம்

அதிதிக்கு மாதங்கள் நிறைய அழகிய வாமனனை (விஷ்ணுவை) தன் மகனாகப் பெற்றெடுத்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். அசுரர்கள் துயரடைந்தனர். பிரம்மா தானே வந்து வாமனனுக்கு ஜாதகதர்மம் ஆகியவை செய்வித்து, பகவானை அவரது லீலாவதார மகிமையைப் புகழ்ந்து துதி செய்தார். அப்போது வாமனாவதார நாராயணன் தேவர்களிடம் அவர்கள் வேண்டுகோளின் படி தான் அவதாரம் எடுத்திருப்பதை உணர்த்தி தான் வாக்களித்தபடியே நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கப் போவதாகக் கூறினார். பிரம்மா வாமனனுக்கு மான் தோல் அளித்தார். வியாழ பகவான் பூணூலும், மரீசி தண்டமும், வசிஷ்டர் கமண்டலமும் அளித்தார். ஆங்கீரசர் தர்ப்பை, ஆடைகள் கொடுத்தார்.

பிரணவத்துடன் கூடிய வேதங்கள் அவரை வந்தடைந்தன. பரத்துவாஜர் அவருக்கு உபநயனம் செய்வித்தார். பரத்வாஜரிடம் வாமனர் அத்யயனம் செய்தார். ஆங்கீரசர் சாமவேதம் கற்பித்தார். சங்கீதமும் கற்பித்தார். பின்னர் வாமனன் பரத்துவாஜரை நோக்கி குருவே மகாத்மாக்களெல்லாம் குருக்ஷத்திரத்திற்குச் செல்கின்றனர். அங்குப் பலி சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்கிறானாம். அங்கு நானும் செல்ல விரும்புகிறேன். அனுமதி அளியுங்கள் என்று பிரார்த்திக்க பரத்துவாஜர் ஜகந்நாதா! நான் உனக்கு கட்டளையிடுவதா? நீ போக முடிவு செய்தால், எனக்கெந்த ஆஷேபனையும் இல்லை. நாங்களும் பலி சக்கரவர்த்தி யாகத்திற்கு வருகிறோம். நீ எங்கெல்லாம் இருப்பாய் என்று அருள்வாயாக என்று வேண்ட, வாமனனும் அப்படியே கூறலானார்.

விஷ்ணுவின் சாந்நித்தியம் உள்ள விசேஷ இடங்கள்

மானச ஏரியில் மச்ச ரூபத்தில் கவுசிசி நதியில் கூர்மங்களாக, கிருஷ்ணா நதியில் ஹயக்கிரீவனாக, அத்தினாபுரத்தில் கோவிந்தனாக, வாரணாசியில் மாதவன், பிந்து மாதவனாக, பிரயாகையில் கேசவனாக, கயையில் கதாதரனாக, கேதாரத்தில் மாதவனாக, பதரிகாசிரமத்தில் நாராயணனாக, குரு÷க்ஷத்திரத்தில் குருத் வஜனாக, விதஸ்தாநதியில் குமாரீலனாக, இமாலயத்தில் சூலபாணியாக, நைமிசாரணியத்தில் பீதவாசனனாக, மலயபர்வதத்தில் சவுகந்தியாயும், நிஷத நாட்டில் அமரேச்வரனாகவும், குருஜாஸ்கலத்தில் ஸ்தாணு சங்கரனாகவும், கிஷ்கிந்தையில் நவமாலியாகவும், பிரபாச தீர்த்தத்தில் கவர்ணிகாவும், மற்றும் உதயசூரியன், சந்திரன், துருவ நக்ஷத்திரத்திலேயும், திராட்சாராமமெனும் சப்த கோதாவரியில் ஹாட கேச்வரனாகவும், அதாவது பீமேச்வரனாகவும், கைலாயத்தில் ரிஷபக் கொடியோனாகவும் சௌராஷ்டிரத்தில் மகாவாசன் (சோமநாதன்) ஆகவும், சிங்களத்தீவில் உபேந்திரனாகவும், சதுர்தச புவனங்களில் பல நாமங்களாகவும் இருப்பதாக பகவான் கூறினார்.

பலி செய்த யாகம்

பின்னர், அனைவரும் பலியின் அசுவமேத யாகத்திற்குச் சென்றனர். பகல் இரவாயிற்று. பூமி அதிர்ந்தது. யாகசாலை அல்லகல்லோலமாயிற்று. யாகத்தில் அக்கினி மூலம் அரக்கர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவிர்ப்பாகம் அவர்களுக்குச் சேரவில்லை. இதை எல்லாம் கண்ட பலிச்சக்கரவர்த்தி தன் குருவாகிய சுக்கிராச்சாரியாரை அணுகி இவற்றிற்கான காரணத்தை அறிய வேண்டினார். சுக்கிராச்சாரியார் ஞானதிருஷ்டியால் வாமனனாகிய (விஷ்ணு) வருவதை அறிந்து கூறினார். அப்போது பலி வாமனரை அதிதியாகத் தான் எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று கேட்க, அவர் பலி அரக்கர்களித்த அவிர்பாகங்களைத் தேவர்கள் அடையுமாறு செய்ய அவர் வருகிறார். அவருக்கு ஒன்றும் தரவேண்டாம். அப்படித் தருவதால் பயனேதும் இல்லை என்று சுக்கிராச்சாரியார் கூறிட, அதற்குப் பலி வரும் யாசகர் வேறு யாராக இருப்பினும் உங்கள் வார்த்தையைக் கேட்டிருப்பேன். ஆனால் சாக்ஷத் மகாவிஷ்ணுவே அல்லவா! அப்படிப்பட்டவர் வந்து யாசகம் கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வேன். முற்பிறப்பு வாசனை, பழக்கம் இந்த ஜன்மத்தில் கர்மமாகும். அதனை விட முடியாது. எனவே, வாமனனுக்கு ஏதாவது தானம் தரவேண்டுமென்று உள்ளது. என்மேல் கருணைகாட்டி நான் செய்யும் தானத்திற்குத் தாங்கள் தடை செய்ய வேண்டாம் என்று குருவிடம் பிரார்த்தித்தான்.

வாமனன் வருகை

தான தர்மம், சத்தியம், பராக்கிரமம் கொண்ட பலிச்சக்கரவர்த்தி, வாமனனாகிய புரு÷ஷாத்தமனுக்குத் தானம் அளித்தால் எல்லாத் தேவதைகளும் திருப்தி அடைவர். சற்பாத்திரமான அவருக்கு அளிக்கும் தானம் பெரும்பலனை அளிக்கவல்லது. அவர் கோபம் கொண்டு அவரால் தான் கொல்லப்பட்டாலும் அதைவிட தனக்கு நன்மை அளிக்ககூடியது வேறென்ன இருக்க முடியும்? இவ்வாறு அவர் கூறி முடிக்கையில் வாமனன் யாகசாலையை அடைந்தார். பலி சக்கரவர்த்தி வாமனாவதார விஷ்ணுவை வணங்க, அவர் பலியை ஆசிர்வதித்து, யாகத்தலைவனான பலியை மிகவும் சிலாகித்துப் பேசினார். அதுகேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலிச்சக்கரவர்த்தி, வாமனர்க்கு அர்க்கியம், பாத்யம் அளித்து பூஜை செய்து தங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டினாலும் அளிக்கத் தயாராக இருப்பதாக வாக்குத் தானம் செய்தான் பலி.

வாமனன் கேட்ட தானம்

அப்போது வாமனன் பரத்துவாசரைக் காட்டி, இவர் என்னுடைய குரு. அக்கினி ஹோத்திரம் செய்ய சொந்தமாக ஓரிடமும், மற்ற வசதிகளும் இல்லாததால் அவருக்காக நான் யாசிக்கிறேன். என் கால்களால் மூவடி நிலம் கொடுக்க வேண்டும் என வேண்டினார். உடனே பலிசக்கரவர்த்தி, தன் மனைவி வித்தியாவளியையும் மகனான பாணனையும் பார்த்துச் சிரித்த முகத்துடன், பாருங்கள் இவர் உருவில் மட்டுமல்ல, கோரிக்கையில் கூட வாமனனே தனக்கு மூவடி நிலம் மட்டுமே வேண்டுகிறார் என்று கூறிய பலி, வாமனனை நோக்கி நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீங்கள் யாசகர். நான் தாதன் (அ) அளிப்பவன். எனவே மூவடி நிலம் கொடுப்பது எனக்கு வெட்கமாய் உள்ளது என்று பலவற்றை அளிப்பதாகக் கூற வாமனன் அவை எல்லாம் எனக்கு ஏன்? நான் கேட்ட மூவடி மண்ணே போதும் என்றார்.

பலி அளித்த தானம்

பின்னர் பலியின் மனைவி விந்தியாவளி நீரூற்ற, பலி வாமனின் கால்களைக் கழுவி, மந்திரம் கூறி தானத்திற்கான நீரைத் தாரையாக வார்த்துக் கொடுக்க முற்பட, சுக்கிராச்சாரியார் சொம்பு மூக்கிலிருந்து நீர்வராமல் தடையானார். அப்போது வாமனன் ஒரு தர்ப்பையால் நீர் வரும் மூக்கிலுள்ள தடையை நீக்கிட நீர் வர தானம் முடிந்தது.

பலி பெற்ற பேறு

அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க வாமனனாக வந்த விஷ்ணு ஓங்கி உலகளக்கும் உத்தமனாக மாறி ஓரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும், அளந்து மூன்றாவது அடி நிலம் கொடுக்குமாறு கூற, அதைத் தன் தலைமீது வைக்குமாறு வேண்டிட அவ்வாறே செய்த வாமனன் பலியை பாதாளத்திற்கு அனுப்பினார். அங்கு மனைவி புத்திரர்களுடன் பரிவாரங்களுடன் வசிப்பாயாக. அங்கு உனக்கு இப்போதுள்ள போகங்கள் அனைத்தும் கிடைக்கும். உனக்கும் உன் மக்களுக்கும் ஆனந்தமுண்டாகட்டும் என்று அருளினார்.

4. குருக்ஷத்திரம்

முற்காலத்தில் சம்வரணன் என்னும் மன்னனுக்கும் சூரிய புத்திரியான தபதிக்கும் வசிஷ்டர் திருமணம் செய்து வைத்தார். அத்தம்பதியருக்கப் பிறந்த மகன் குரு. அவன் பதினான்கு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். சம்வரணன் குருவுக்கு ராச்சியாபிஷேகம் செய்து வைத்தான். அவன் சாமான்ய அரசர்களைப் போல் அரசாண்டு மடிய விரும்பவில்லை. நிலையான புகழ்பெற்று அமரத்துவம் பெறவிரும்பி எவ்விடத்தில் தன் கோரிக்கை நிறைவேறும் என்று ஆராய்ந்தான். சியமந்தபஞ்சகம் என்னும் பிரதேசத்தில் தன் சிரமத்துக்கு ஏற்ற பலன் கிடைக்குமென்று எண்ணி பொன் ஏருக்கு ஒரு பக்கம் ருத்திரனின் ரிஷபத்தையும், மற்றொரு பக்கம் யமனின் எருமையையும் கட்டி நிலத்தைத் தானே உழ ஆரம்பித்தான். இந்திரன் தோன்றி என்ன செய்கிறாய் என்று கேட்க, குரு மன்னன் நான் இப்பிரதேசத்தில் நிலையான புகழ்பெற விரும்பி சத்தியம், தவம், மன்னித்தல், தயை, தூய்மை, தானம், யோகம், பிரம்மச்சாரித்துவம் என்னும் எட்டு அங்கங்களைப் பயிர் செய்ய உழுது கொண்டிருக்கிறேன் என்றான்.

ஸ்ரீஹரி வந்து நீ சொன்ன அஷ்டாங்குலம் என்னும் விதைகள் எங்குள்ளன? உன்னிடமே அல்லவா! அவ்விதைகளைக் கொடுங்கள் என்று இடது கையை நீட்ட, அதை விஷ்ணு வெட்டி வீழ்த்தினார். பாதத்தால் யாசிக்க அதைக் கூட வெட்டினார். அப்போது குரு என் சிரத்தை வெட்டினாலும் எனக்கு இஷ்டந்தான். விதைகளை மாத்திரம் தெளித்துச் செல் என்று வேண்டினான். அப்போது மகாவிஷ்ணு அவனுடைய தருமபுத்திக்கு மெச்சி அவனுக்கு திவ்ய சரீரத்தை அருளி, ராஜா! உன் பெயரில் இவ்விடம் குரு÷க்ஷத்திரம் என்ற பெயரில் புகழ்பெறும். இது தர்ம க்ஷத்திரம். இங்கிருக்கும் இந்த சியமந்த பஞ்சகத்திலும், இவற்றிற்கு இடையே ஓடும் ப்ருதூதக ஆற்றிலும் நீராடுவோர்க்கு அனைத்துப் புண்ணிய பலன்களும் கிட்டும். இங்கு செய்யும் தானம், மற்ற புனிதத்தலங்களில் செய்யும் தானங்களை விட கோடி அளவு பலனைத் தரும் என்று வரம் கொடுத்து மறைந்தார்.

5. சிவ, பார்வதி மக்கள்

ஒரு சமயம் சிவபெருமான் மோகம் அடைந்து, பார்வதியுடன் ஆனந்தமுடன் இருக்க உலகெங்கும் இருண்டது. மேலும் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி பார்வதி கருநிறம் மாறி பொன்னிறமேனி அடைந்து சிவனிடம் வந்து சேர இருவரும் சுக போகத்தில் இருந்தனர். அப்போது இந்திரன், இந்நிலையில் பார்வதி பரமேச்வரர்களுக்குப் பிறக்கும் மகன் சொர்க்க ராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்றும், அதனைத் தடுக்க ஓர் உபாயம் தன் சகாக்களுடன் ஆலோசித்து அதன்படி உமா சங்கரர்களுடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவிக்க எண்ணிட, அக்கினியை அன்னப்பறவை வடிவில் செலுத்த, அவன் சிவனிருக்குமிடம் சென்று வெளியில் தேவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்றான். சிவன் வெளிவர தேவர்கள், தாங்கள் மோகத்தை விடாவிடில் உலகம் தலைகீழ் ஆகிவிடும் என்றனர். அப்படியானால் தன் வீர்யத்தை யார் சுமப்பர்! என்று சிவனார் கூற, அதற்கு அக்கினி முன்வந்தான். அதுவே கார்த்திகேயன் ஜனன காரணம் ஆயிற்று.

இதனால் கோபமடைந்த பார்வதி தேவர்களில் யாருக்கும் அவரவர் மனைவியரிடம் கரு ஏற்படாமலிருக்கச் சபித்தாள். ஒரு சமயம் பார்வதி மணமிகு குளியல் மாவினால் ஒரு பொம்மை செய்து அதை அணைத்துக் கொள்ள மார்பில் பால் சுறந்தது. உடனே அந்தக் குழந்தைக்குப் பிராண பிரதிஷ்டை செய்தாள். அக்குழந்தையை சிவனிடம் அர்ப்பணிக்க எண்ணி அவனை வாயிலில் காவல் இருக்குமாறு கூறி நீராடச் சென்றாள். அப்போது அங்கு வந்த பரமனை அச்சிறுவன் தடுத்து நிறுத்த, அவர் அவன் தலையை வெட்டி வீழ்த்தினார்.

ஸ்நானம் முடிந்து வந்த பார்வதி அதுகண்டு மிகவும் துயருற்றாள். நடந்ததை அறிந்த சிவன், பிரமனை அழைத்து ஒரு தலையைக் கொண்டு வருமாறு ஆணையிட, அவன் செல்கையில் ஐராவதத்தின் புத்திரனைக் கண்டு அதன் தலையை வெட்ட, ஒரு தந்தம் போரின் இடையில் ஒடிந்து போக அத்தலையைக் கொண்டு வர அதனைப் பொருத்தி பரமன் பாலகனை உயிர்ப்பித்தார். அவனே கஜானனன் என்னும் யானை முக கணபதி. பார்வதியிடம் நாயகன் இன்றியே இவன் தோன்றியதால் விநாயகன் என்பது இவன் பெயர் என்றும் யாரொருவர் இவனைப் பூசித்தாலும் அவர்களுடைய விக்கினம் தீரும். எனவே இவன் விக்கின விநாயகன் ஆவான் என்றார்.

6. தண்டகாரணியம் பெயர் ஏன்?

தண்டன் என்ற மன்னன், சுக்கிராச்சாரியாரைத் தன் புரோகிதராகக் கொண்டு ராஜ்யபாரம் வகித்து வந்தான். ஒரு நாள் நகர்ப்புற வெளியில் உலாவிக் கொண்டிருக்கும் போது அரஜா என்ற அழகியைக் கண்டு மோகித்து அவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். அப்போது அவள் தான் சுக்கிராச்சாரியாரின் மகள் என்றும், தனது தகப்பனாரைக் கண்டு அவர் அனுமதி பெற்றால் மன்னன் கோரிக்கை நிறைவேறும் என்றும் நாசூக்காகத் தெரிவித்தாள். மோகத்தால் மதி மயங்கிய தண்டன், அரஜாவை பலாத்காரமாக அனுபவித்தான். பிறகு வீட்டிற்கு வந்து அழுது கொண்டே இருந்தாள். இல்லம் திரும்பிய சுக்கிராச்சாரியார் தன் மகள் சோகம் கண்டு தவித்து விட்டார். மகளை மெதுவாக விசாரித்து நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்தார்.

உடனே கடுங்கோபம் கொண்டு சுக்கிராச்சாரியார், தண்டன் மன்னனும், அவனது ராஜ்யம் முழுவதும் ஏழு நாட்களில் சாம்பலாகக் கடவது என்று சபித்தார். அவ்வாறு சபித்துவிட்டுத் தன் மகளுடன் அதை விட்டு அகன்றார். அவர் சாபத்தின்படி ஏழு நாட்களில் மன்னன் தண்டன், மற்றும் அவன் ராஜ்யமும் எரிந்து சாம்பலாயின. சில நாட்களில் அங்கு மரம், செடி, கொடி அடர்த்தியாக வளர்ந்து அது ஒரு ஆரணியம் (காடு) ஆயிற்று. அது தண்ட காரணியம் என்று பெயர் பெற்றது. எனவே மன்னன் கொண்ட பெண்ணாசையின் பலன் இது.

7. ஸ்தாணு சம்புவும் ஸ்தாணு தீர்த்தமும்

ஒரு சமயம் உமா மகேசுவரர்கள் தாருகவனத்தை அடைந்தனர். அங்குப் பல முனிவர்கள் உடலை வருத்தி பலகாலமாக தவம் செய்து வந்ததால் எலும்பும், தோலுமாகக் காட்சி அளித்தனர். அதைக் கண்டு அம்பிகை தன் கருணையால் பரமேசுவரனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். அவர்கள் மீது தயவு கொள்ளுமாறு வேண்டிட, சிவனார் முனிவர்கள் நீண்ட நாட்களாகத் தவம் செய்து வந்தாலும், சாதாரண மக்களைப் போலவே காமக் குரோதாதிகளை விடவில்லை. அதனால் அவர்கள் தவம் பலிக்கவில்லை. இப்போது ஒரு விந்தையைப் பார் என்று கூறி பரமன் ஓர் அழகிய பிக்ஷõடனராகி, திகம்பரனாகி, ரிஷிபத்தினிகளிடம் சென்று பிச்சை எடுத்தார். அப்போது ரிஷிபத்தினிகள் அனைவரும், ஒருத்தியுடன் ஒருத்தி போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பிக்ஷõடனரைத் தம் வசப்படுத்திக் கொள்ள அவர் கைகால்களைப் பற்றி இழுத்தனர்.

இதனைக் கண்ட முனிவர்கள் மிக்க கோபம் கொண்டு அந்த பிக்ஷõடனரின் லிங்கம் கீழே விழுமாறு கட்டை எடுத்து அடித்தனர். அது அருகிலிருந்த மடுவில் போய் விழுந்தது. இதனால் முனிவர்களின் தவம் கெட்டது. அவர்களின் ஓர் அறிவாளி பிக்ஷõடனர் யாரோ ஒரு மகானாக இருக்கக்கூடும். அவரை நாம் மிகவும் துன்புறுத்திவிட்டோம். அதனால், நாம் சுகம், சாந்தி, அமைதி எல்லாம் இழந்தோம். இதென்ன விந்தையென்று பிரம்மாவைக் கேட்டறிவோம் என அனைவரும் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் நடந்த அனைத்தையும் கூறி முறையிட்டனர்.

அப்போது பிரம்மா சினம் கொண்டார். தவசி ஆனாலும் யாகம், தானம், ஓமம், செய்தவர்களாயினும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படாது. நீங்கள் சிறிதும் எண்ணிப் பாராமல் தவறு செய்து விட்டீர்கள். இருப்பினும் இது குறித்து பரமசிவனாரை நாடி அவர் சொற்கேட்டு நடந்திடலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். சிவபெருமானைப் பக்தியொடு மனமுருகி பிரார்த்தனை செய்ய, பரமன் பிரத்தியக்ஷமாகி அந்த லிங்கத்தை மடுவிலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்து, அதற்குத் தினமும் அபிஷேக ஆராதனை, தூப, தீப நைவேத்தியம் ஆகிய உபசாரங்கள் செய்யுங்கள். அது எனது சொரூபம் யாராயினும் அதை நிஷ்டையுடன் பூசித்தால் இகபரசுகம் பெறுவர். அவர்களுடைய எல்லாப் பாவங்களும் நீங்கும் என்றார். பிரம்மாவும், ரிஷிகளும் மடுவை அடைந்து அந்த லிங்கத்தை வெளியே எடுக்க முனைந்தனர். அது இயலாததால் மறுபடியும் பிரம்மாதி தேவர்களும், முனிவர்களும் கைலாயம் சென்று பரமேசுவர தண்டகம் பாடித் துதித்தனர். அவர்களுடைய பிரார்த்தனையைப் பரமன் ஏற்றார்.

தானே மடுவுக்கு வந்து ஒரே கையால் லிங்கத்தை வெளியே எடுத்தார். இந்த லிங்க தரிசனத்தால் மூவுலகில் உள்ளவர்களும் புண்ணியம் செய்தவர்களாகி சொர்க்கம் அடைவர் என்று கூறி மறைந்தார். அப்போது முதல் அவ்விடம் ஸ்தாணு தீர்த்தம் ஆயிற்று. அதன் அருகில் உள்ள ஆலமரம் ஸ்தாணுவடம் எனப்பட்டது. ஸ்தாணு தீர்த்தம் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள் அந்த இடத்திற்கு வந்து ஸ்தாணு சம்புவைத் (தாணு சங்கரரை) தரிசித்து சொர்க்கம் சேரலாயினர். இதனால் விண்ணுலகம் நிறைந்திட இந்திரன் பிரம்மாவிடம் முறையிட அவர் லிங்கம் கண்ணுக்குப் புலப்படாதவாறு தூளி மழை பெய்யச் செய்யுமாறு கூறினார். பரமன் லிங்கத்தை எடுத்து அதனை ஸ்தாணு வடம் (சிவனார் ஆலமரம்) அருகிலேயே ஸ்தாபித்தார். ஆதனால் அந்த இடமும், மரமும் பவித்திரமாயின. அந்தத் தீர்த்த மரத்தின் அடியில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். அதுகண்ட பிரம்மா அங்கொரு சிற்பலிங்கத்தை நிறுவினார். பின்னர் அந்த சிற்பலிங்கத்தைப் பூசித்தவரும் மோக்ஷமடைந்தனர். பிறகு பிரம்மாதி தேவர்கள் பயனடைய லிங்கத்தின் மீது லிங்கமாக ஏழு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்.

அந்தத் தூளியில் மூழ்கி முனிவர்கள் முக்தி பெற்றனர். தூளி காற்றில் பறந்து குரு÷க்ஷத்திரம் முழுவதும் படிந்து அது புண்ணியத்தலம் ஆயிற்று. அந்த லிங்கத்தைக் கண்டாலும், தொட்டாலும். வடவிருட்சத்தைத் தொட்டாலும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கினாலும் சர்வபாவங்களும் நீங்கி விடும். மோட்சமும் கிட்டும். அங்கு செய்யும் பித்ருதர்ப்பணம் பித்ரு தேவதைகளுக்குத் திருப்தியளிக்கும். கிருதயுகத்தில் சந்நிஹத்யம் என்றும், திரேதாயுகத்தில் வாயு என்றும், துவாபர கலியுகங்களில் ருத்திரதடாகம் என்றும் இந்தத் தீர்த்தம் புகழ்பெற்று வைஸ்வத மன்வந்தரம் முடிவு வரையில் நிற்கும்.

8. சுகேசியும் சூரியனும்:

வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, அவரிடம் விண்ணில் பறக்கக்கூடிய நகரமும், பகைவரால் மரணம் ஏற்படாதவாறும், யாராலும் வெல்ல முடியாதவாறும் வரங்கள் பெற்றான். அந்தப் பறக்கும் நகரத்தின் உதவியால் எங்கும் பறந்து சென்று வந்த சுகேசி ஒரு சமயம் மகதநாட்டுக் காடுகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டு தரிசித்தான். அவர்களை வணங்கி இகபர லோகங்களில் நன்மையும், மகிழ்ச்சியும் அளிக்கவல்ல தர்மங்களைக் கூறுமாறு கேட்டான்.

அவர்களிடம் கேட்டறிந்தவாறு அகிம்சை, சத்தியம், திருடாமை, சாந்தம், தானம் ஆகிய பரம தர்மங்களுடன் நாட்டைத் தர்ம நியாயங்களின்படி ஆண்டுவந்தான். சூரியனும், சந்திரனும் அந்நகரைவிட்டு அகலாமல் அங்கேயே தங்கிவிட்டனர். இதனால் பகல், இரவு வேறுபாடின்றி எங்கும் குழப்பம் நிலவியது. இதனால் ஒளி விவகாரத்தில் சூரியன், சந்திரன்களிடையே தகராறும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சூரியன் விண்ணிலிருந்து அந்த நகரத்தைக் கீழே வீழ்த்தினான். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் சூரியனை நெற்றிக் கண்ணால் நோக்க, அவன் விண்ணிலிருந்து கீழே விழும் நிலையில் அவன் தேரில் இருந்த முனிவர்களும், தேவர்களும், மற்றும் தபோதனர்களான ரிஷிகள் வரண, அசி நதிகள் நடுவிலுள்ள வாரணாசியில் விழும் என்றனர்.

சூரியன் வரண, அசி நதிகளில் பலமுறை மூழ்கித் தாபத்தை தீர்த்துக் கொள்ள முயன்றான். ரதத்தில் இருந்த ரிஷிகள் பிரம்மாவிடம் முறையிட்டனர். சூரியன் இல்லாவிட்டால் காலமாற்றமே இருக்காது. அவன் சர்வகர்ம சாக்ஷி. எனவே அவனை மறுபடியும் ரதத்தில் அமரச் செய்யுமாறு வேண்டினர். கருணாமூர்த்தியான சிவபெருமான் அவர்கள் கோரியபடியே சூரியனைத் தூக்கித் தேரில் அமரச் செய்தார். பரமன் மூன்றாவது கண்ணால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் இப்படியும், அப்படியும் சூரியன் ஆடுவானானான். அதனால் காசியில் சூரியனுக்கு லோலார்க்கன் (ஆடுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது. சுகேசியையும் அவன் நகரத்துடன் விண்ணில் நிறுத்தினார்.

9. நர நாராயணர்

பஹுருசன் என்ற பிராமணனுக்கும் அவள் மனைவி அகிம்சை ஆகியோருக்கும் ஹரீ, கிருஷ்ணன், நர நாராயணர்களென்று நான்கு புத்திரர்கள். சியவன மகரிஷி எதிரில் நைமிசாரணிய மகத்துவமும், சரசுவதி நதியில் நீராடவும் நைமிசாரணியத்துக்கு நர நாராயணர்கள் சென்று, அங்குத் தவம் செய்ய ஆரம்பித்தனர். பிரகலாதன் அவர்களை அணுகி தவம் செய்யும் உங்களுக்கு வில், அம்பு எதற்கு? நீங்கள் உண்மையில் தவம் செய்ய வந்தவர்களா? அல்லது போலியா? என்று கேட்டான். அப்போது நரன் சக்திக்கேற்ற பொருளை அருகில் வைத்திருப்பதில் தவறேதுமில்லை அல்லவா! என்றான். பிரகலாதன் கோபமடைந்து தருமநெறியில் ஒழுகும் நான் இங்கே இருக்கையில் பிராமணர்கள் வில், அம்பு கொள்வதோ? என்று கேட்டான். அதற்கு நரன் ஆம்! உலகில் எங்களை வெல்பவர் யாரும் இல்லை என்று கூற பிரகலாதன் எப்படியாவது நர, நாராயணர்களைத் தான் வெல்லப் போவதாகக் கூறித் தன் பரிவாரங்களைத் தூரத்தில் இருக்குமாறு பணித்தான். மேலும் தன் ராச்சியத்திற்குத் தன் பெரிய தந்தை இரணியாக்ஷனின் மகனான அந்தகாசுரனை அரசனாக்கித் தான் வில்லும், அம்பும் ஏந்தி நர, நாராயணர்களிடம் போர் தொடுத்தான்.

பல ஆண்டுகள் நிகழ்ந்த போரில் வெற்றி யார் பக்கம் என்று நிச்சயிக்க முடியாமல் இருக்கச் சிவபெருமானின் அறிவுரைப்படி பிரகலாதன் போரை நிறுத்தி நர நாராயணர்களைத் துதி செய்து தன் நகரம் ஏகினான். நர, நாராயணர்களின் தவத்தைக் கண்டு அச்சமுற்ற தேவேந்திரன் அதைக் கெடுக்க ரம்பையையும், மன்மதனையும் அனுப்பினான். அவர்கள் என்ன செய்தும் நரநாராயணர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்போது அவர்கள் தங்கள் தொடையைத் தேய்த்து ஓர் அப்சரசைத் தோற்றுவித்து அவளை இந்திரனுக்குப் பரிசாக அனுப்பினர். (தொடை-ஊரு). இவ்வாறு ஏற்பட்ட அவளுக்கு ஊர்வசி என்று பெயர்.

10. மகிஷாசுரனும் காத்தியாயினி தேவியும்

ரம்பன், கரம்பன் என்ற அரக்கர்கள் சகோதரர்கள். அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனவே, இருவரும் தவம் செய்ய முனைந்தனர். கரம்பன் நீரினுள் தவம் செய்ய இந்திரனால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட ரம்பன் கடுமையாகத் தவம் செய்யலானான். நெடுநாட்கள் ஆனதால் தன் தலையை வெட்டி அக்னியில் சேர்க்க முற்பட அக்கினி பகவான் அவன் முன் தோன்ற ஒருவரைக் கொல்வது பாவம்; அதைவிடத் தற்கொலை மகாபாவம். உனக்கென்ன வேண்டும் கேள். நான் தருகிறேன் என்றான். ரம்பன் மூவுலகையும் வென்று ஆளத்தக்க ஒரு மகன் வேண்டும். அவன் மிக்க பலசாலியாகவும், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாதவாறும் இருக்க வேண்டும். காற்றைப் போல் கடுகிச் செல்லக்கூடிய அஸ்திரங்களை எய்வதில் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்க, அக்கினியும் அவ்வரத்தை அளித்தான்.

குபேரனுடைய தோழர்களாகிய யக்ஷர்களின் இருப்பிடத்திற்கு ரம்பன் சென்றான். அங்கு பெண் எருமை ஒன்றைக் கண்டு மோகித்து அதை மணந்து தன் இருப்பிடம் வந்தடைந்தான். இதனால் தானவர்கள் அவனை ஒதுக்கி வைத்தனர். எனவே, ரம்பன் தன் மனைவியுடன் யக்ஷர்கள் நாடடைந்தனர். அங்கு ரம்பன், பெண் எருமைக்கு ஓர் அழகிய மகன் பிறந்தான். அவன் பெயர் மகிஷாசுரன் (மகிஷா-எருமை). மகிஷாசுரன் தாயாகிய பெண் எருமையை, மற்றொரு எருமை தாக்கியது. அதைக் காக்கச் சென்ற ரம்பன் எருமையால் கொல்லப்பட்டான். பெண் எருமையும் ரம்பனுடன் தீக்குளித்து இறந்தது. பிணங்கள் எரியும்போது வெளிப்பட்ட தீப்பிழம்பிலிருந்து ரக்தவிஜன் என்ற பயங்கர அரக்கன் தோன்றினான். அவன் மகிஷாசுரனைத் தன் தலைவனாக ஏற்று மற்றவர்களை எல்லாம் கொன்றழித்தான். மகிஷாசுரன் பயங்கர வீரனாகி அனைவரையும் வென்று மன்னனானான். அவனால் தொல்லைக்குட்பட்ட தேவர்கள் நிவாரணம் தேடி பிரமனை நாட, அவர் அனைவருடனும் விஷ்ணுவைக் காணச் செல்ல, அங்கே சிவனும் இருந்தார். மகிஷாசுரன் கொடுஞ்செயலைக் கேட்ட அரியும், அரனும் கோபம் கொண்டனர்.

அரி, அரன் கோபத்திலிருந்து ஓர் ஒளி சக்தி உதித்தது. பிரம்மாதி தேவர்களும் தமது சக்தியை அதனுடன் சேர்த்தனர். அனைத்துச் சக்தியையும் ஒன்று சேர்த்து காத்தியாயன முனிவரின் ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் தன் சக்தியையும் அத்துடன் இணைத்தார். இவ்வாறு ஒருங்கிணைந்த சக்தியிலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றினாள். அவள் காத்தியாயன முனிவர் ஆசிரமத்தில் தோன்றியதால் தேவி காத்தியாயினி எனப்பட்டாள். அவன் உடலில் சிவசக்தி முகமாகவும், அக்கினி சக்தி கண்களாகவும், யமன் சக்தி கூந்தலாகவும், இந்திரன் சக்தி பதினெட்டு கரங்களாகவும், இந்திரன் சக்தி இடுப்பாகவும், வருண சக்தி கால்களாகவும், பிரம்மாவின் சக்தி பாதங்களாகவும், சூரிய சக்தி கால் விரல்களாவும் அமைந்தன. மற்றும் யக்ஷர்கள் மூக்கையும், சந்தியர்கள் கண் புருவங்களையும், மருத்துக்கள் காதுகளையும் உண்டாக்கினர்.

பின்னர் பிரம்மாதி தேவர்கள் காத்தியாயினிக்குப் பலவித ஆயுதங்களை அளித்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி ஈட்டியையும், வாயு வில்லையும், சூரியன் அம்புறாத்துணியையும், அம்புகளையும், குபேரன் கதையையும், விச்வகர்மா கோடாரியையும் அளித்தனர். மற்றவர்கள் ஆபரணங்களால் அவளை அலங்கரித்தனர். இமயமலை சிங்க வாகனத்தையும் அளித்தது. பின்னர் அனைத்து தேவர்களும் தங்களை அசுரர்களிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டினர். இவ்வாறு உருவும், சக்தியும் பெற்ற காத்தியாயினிதேவி சிங்கத்தின் மீதேறி விந்திய மலைக்குச் சென்று அதைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள்.

ஒரு சமயம் நாரதர் விந்திய மலையிடம், மேரு மலை அதைவிட உயர்ந்தது என்று கூறிட, விந்தியமலை வானளாவ ஓங்கி விண்ணைத் தொட்டுக் கொண்டு சூரிய கதியைத் தடைசெய்தது. சூரியன் அகஸ்தியரை அடைந்து இதற்கொரு நிவாரணம் அளிக்க வேண்டினான். அகஸ்தியர் முதியோன் வடிவில் விந்திய மலை எதிரில் தோன்றி தான் தீர்த்தமாடத் தென்திசை செல்ல விருப்பதாகவும், விந்திய மலையைத் தாண்டும் சக்தி தனக்கு இல்லை என்றும், எனவே தாழ்ந்து வழிவிட வேண்டினார். மற்றும் தான் திரும்பி வரும் வரை தாழ்ந்தே இருக்குமாறு வேண்ட மலை தாழ்ந்து வழிவிட்டது.

பின்னர் அகஸ்தியர் திரும்பி வரவில்லை. தாழ்ந்த மலையும் உயரவில்லை. இவ்வாறு விந்திய மலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கினார். தேவி காத்தியாயினி விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள். மகிஷாசுரனுக்கு சண்டன், முண்டன் என்ற இரண்டு தூதுவர்கள். காத்தியாயினி அவர்கள் கண்ணில் பட, அப்படிப்பட்ட அழகி மகிஷாசுரனுக்கு ஏற்ற மனைவி என்று எண்ணி மகிஷாசுரனிடம் சென்று அவள் அழகை வருணித்துக் கூற, அவன் ஒரு படையுடன், சில படைத்தலைவர்களுடன் துந்துபி என்ற தூதுவனுடன் அனுப்பினான். துந்துபி காத்தியாயினிடம் மகிஷாசுரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அவனை மணந்து கொள்ளுமாறு கூறினான். அப்போது காத்தியாயினி குடும்ப மரபுப்படி தன்னை வெல்பவனையே தான் மணப்பதாக கூறி மகிஷாசுரனை தன்னுடன் போர் செய்து வென்று கைப்பற்றுமாறு கூறினாள்.

துந்துபி மகிஷாசுரனிடம் சென்று இச்செய்தியை கூறினான். மகிஷாசுரன், சிக்ஷுரனைப் படைத்தலைவனாக்கி, நமரன் என்பவனைப் படையுடன் போருக்கு அனுப்பினான். கடுமையான போர் நடந்தது. தேவியின் கதையும், வாகனமாகிய சிங்கமும் பல அரக்கர்களைக் கொன்றன. காத்தியாயினி நமரனை இழுத்துச் சுற்றி எறிந்து கொன்றாள். உடனே தேவி ஒரு பெரும் சிரிப்பு சிரிக்க பல பூதங்கள் தோன்றின. அவையும் அசுரர்களை அழித்தன. அடுத்து சிக்ஷுரன் போர் செய்யத் தொடங்க, தேவி அவனது வில், அம்பு, கேடயங்களை அழித்து அவனையும் கொன்றாள். அவளை எதிர்த்து வந்த மற்ற படைத்தலைவர்களையும் அழித்தாள். மகிஷாசுரன் எருமை வடிவில் காத்தியாயினியை எதிர்த்தான். அந்த எருமையை எதிர்த்துத் தூக்கி வீசி எறிந்தாள். மீண்டும் எதிர்த்த அவனைக் கட்டிவிட்டாள்.

அவன் யானையாக மாறி எதிர்த்தான். அந்த யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினாள். அவன் மறுபடியும் எருமையானான். அவனை எதிர்த்த ஆயுதங்கள் செயலற்றிருந்தன. அப்போது தேவி அந்த எருமையின் மீதமர்ந்து அதனை அலைக்கழித்தாள். அவன் தன் வலிமை இழந்திட தேவி அவன் கழுத்தை திரிசூலத்தால் குத்த, அந்த எருமையின் உடலிலிருந்து ஒரு வீரன் கைகளில் வாளும், கேடயமும் கொண்டு தோன்றினான். அவனை தேவி முடிபிடித்து இழுத்து மார்பை சூலத்தால் குத்தி, கழுத்தை வாளால் வெட்டினாள். இவ்வாறு மகிஷாசுரன் அழிக்கப்பட, அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். தேவர்கள் தேவி காத்தியாயினியைத் துதி செய்து வணங்கினர். தேவி காத்தியாயினி தன்னை வணங்கியவர்களை ஆசிர்வதித்து மறுபடியும் தேவை ஏற்படும் போது தோன்றுவதாகக் கூறி மறைந்தாள்.

11. முரா, முராரி

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று முராரி என்று புலஸ்தியர் கூற, நாரதர் விஷ்ணு ஏன் முராரி என்ற பெயர் பெற்றார் என்று கேட்டார். காசியபருக்கு முரா என்றொரு புதல்வன் இருந்தான். அவன் மற்ற அசுரர்களைப் போல் தானும் வலிமை பெற பிரம்மாவை நோக்கித் தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றிட தான் ஒருவரைத் தொட்டால் அவர் மரணமில்லாதவராயினும் மரணமடையுமாறு என் கைகளுக்கு அத்தகைய அதிசய சக்தி அளிக்கும் வரம் வேண்டினான். பிரம்மாவும் வரத்தை அளித்தார். அத்துடன் அவன் யார் கண்ணுக்கும் புலப்படாத சக்தியும் பெற்றிருந்தான். அவன் இந்திரனைத் தன்னுடன் போருக்கழைத்தான். அவனைத் தன்னுடன் போர் செய்யவும், இல்லாவிட்டால் சொர்க்கத்தைவிட்டு ஓடிப்போகுமாறும் கூற, இந்திரன் ஐராவதத்தையும், வஜ்ராயுதத்தையும் அளித்து விட்டு காளிந்தி நதிக்கரையில் ஓர் நகரை உண்டாக்கி அங்கு மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தான்.

மன்னன் ரகு செய்யும் யாகத்திற்கு முரா வந்து யாகத்தை நிறுத்தி விடுமாறும், இல்லாவிடில் தன்னுடன் போர் செய்யும்படியும் கூறினான். அப்போது அவ்வழியில் வந்த வசிஷ்டர் முராவிடம் ஏன் அவன் எளிய மனிதர்களிடம் போர் செல்ல முயல்கிறான் என்றும், அவர்கள் ஏற்கனவே அவனால் தோற்கடிக்கப்பட்டவர்களே என்றும் கூறி அவனை யமனுடன் போர் செய்யச் செல்லுமாறு கூறினார். யமனுடைய நகரை முற்றுகையிட அவன் எருமை மீது ஏறி விஷ்ணுவிடம் சரண் புகுந்தான். அப்போது விஷ்ணு யமனிடம் முராவைத் தன்னிடம் அனுப்புமாறு கூறி அனுப்பினார். க்ஷீரோதக் கடற்கரையில் விஷ்ணு இருந்தார். அங்கு முரா வந்தடைந்தான். அப்போது விஷ்ணு அவனை நோக்கி அவன் வந்த காரணம் என்ன? என்ன வேண்டும்? என்று கேட்க முரா அவருடன் சண்டை செய்ய வந்ததாகக் கூறினான்.

அப்போது விஷ்ணு தன்னிடம் சண்டை செய்ய வந்த அவன் இதயம் ஏன் படபடக்கிறது என்று கேட்டார். இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியுடன் தான் போர் செய்ய முடியாது என்றார். அதுகேட்ட முரா விஷ்ணு சொன்னது உண்மையா என்று சோதித்துப் பார்க்க அவன் கையை மார்பின் மீது வைத்தான். பிரம்மாவின் வரத்தின் பயனால் அவன் உடனே கீழே விழுந்து மடிந்தான். விஷ்ணு அவன் உடலைச் சக்கராயுதத்தால் வெட்டினார். அரி என்றால் பகைவன். விஷ்ணு முராவின் பகைவன். அந்தப்பகைவனைக் கொன்றதால் விஷ்ணு, முராரி எனப்பெயர் பெற்றார்.

12. உபமன்யுவும் ஸ்ரீதாமனும்

விடமன்யு, ஆத்ரேயி என்ற பிராமணத் தம்பதிகளுக்கு உபமன்யு என்ற புத்திரன் இருந்தான். அந்தண தம்பதிகளிடம் குழந்தைக்குப் பால்கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமை நிலைமை ஆனதால் அரிசி நொய் கஞ்சியே அளித்து வந்தனர். எனவே, குழந்தை உபமன்யுவுக்கு பால் என்பது பற்றியே தெரியாது. ஒருநாள் தன் தகப்பனாருடன் உபமன்யு வேறொரு அந்தணர் வீட்டுக்குச் சென்றான். அங்கு அவர்கள் நல்ல பாலைக் கொடுக்க, அதைச் சுவைத்து அருந்தினான் அவன். வீட்டிற்கு வந்த பின் தாயாரிடம் அவன் தாயார் அளித்த கஞ்சியை உட்கொள்ள மறுத்து விட்டான். அப்போது அவன் பால்தான் வேண்டும் என்றான். சிவனைத் துதித்து மகிழ்ச்சி அடையச் செய்யுமாறும், திருமாலும் சிவபொருனைத் துதி செய்தார் என்றும் அது பற்றிய கதையையும் கூறலானாள்.

உபமன்யுவுக்கு ஆத்ரேயி கூறிய கதை

பலஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதாமன் என்றோர் அரக்கன் இருந்தான். அவன் விஷ்ணுவையே தோற்கடிப்பதாகப் பயமுறுத்தினான். அதனால் விஷ்ணு சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். சிவபெருமான் தோன்றி விஷ்ணுவுக்குச் சக்கரத்தை அளித்து, அது மற்ற எல்லா ஆயுதங்களையும் விரட்டும் என்றும், அதனால் விஷ்ணு அவருடைய பகைவர்களை எளிதில் வெல்ல முடியும் என்றார். அப்போது விஷ்ணு, சிவனார் சொல்வதை எப்படி நம்புவது என்று கூறி, சிவன் மீதிலேயே சக்கராயுதத்தை எவ, அது அவரை மூன்று கூறுகளாக்க அவை முறையே இரணியாக்ஷன், சுவர்ணாக்க்ஷன், விச்வரூபாக்க்ஷன் என்று தோன்றி எல்லாராலும் பூசிக்கப்பட்டனர். சிவபெருமான் அழிவில்லாதவர் ஆகையால் அவருக்கு ஒரு துன்பமும் ஏற்படவில்லை. எனினும் விஷ்ணு தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிக்க வேண்டினார். அந்தச் சக்கராயுதத்தால் அவர் ஸ்ரீதாமன் என்னும் அரக்கனைக் கொன்றார். உபமன்யு சிவபெருமானைத் தன் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடையச் செய்ய எப்பொழுதும் கெட்டியான பாலைப் பெற்றான்.

13. நிக்ஷகரன்

கோஷகரன், தர்மிஷ்டை என்ற அந்தணத் தம்பதியருக்கு குருடும் செவிடுமான ஒரு மகன் பிறந்தான். இதனால் வருத்தம் கொண்ட தாயார் ஆறுநாட்கள் குழந்தையை வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் விட்டுவிட்டாள். ஒரு பெண் பிசாசு இதனைக் கண்ணுற்றுத் தன் மகனை அங்கு கிடத்தி அந்தக் குழந்தையை எடுத்துச் சென்றது. அக்குழந்தையைத் தன் கணவனிடம் காட்டியது. கணவன் அவளிடம் கோஷகரன் சக்திவாய்ந்தவன். அவன் உன்னைச் சபித்து விடுவான். எனவே குழந்தையைக் கொண்டு போய் அங்கேயே விட்டுவிடு என்று அறிவுறுத்தினான். தர்மிஷ்டை குழந்தை அழும் குரலைக் கேட்டு வெளிவந்து பார்த்து இனி அக்குழந்தை பேசும் என்று தன் கணவனை அழைத்துக் கூறினாள்.

கோஷகரனுக்கு உண்மை விளங்கிற்று. ஆனால், அவன் மனைவியிடம் மகன் உடலில் ஓர் ஆவி புகுந்து புலம்புகிறது. அவன் விரைவில் சாதாரணக் குழந்தை ஆகிவிடுவான் என்றார். கோஷகரன் சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்து அக்குழந்தையை அங்கேயே மந்திரத்தால் கட்டிவிட்டான். பிசாசு பிராமணரின் குழந்தையைத் திருப்பி வைக்க வர அவள் குழந்தை மந்திரத்தால் கட்டுப்பட்டிருந்ததால் அதனை எடுக்க முடியவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டு விட்டுச் சென்றாள். பிராமணர் தன் குழந்தைக்கு நிஷாகரன் என்றும், பிசாசின் குழந்தைக்கு திவாகரன் என்றும் பெயரிட்டான். இருவருக்கும் கோஷகரன் கல்விக் கற்பிக்க அவன் சொந்த மகனை விட மற்றவன் நன்கு கல்வி கற்றான். ஆனால் நிஷாகரனோ முட்டாளாகவே காணப்பட்டான். எனவே கோஷகரன் நிஷாகரனை ஒரு பாழடைந்த கிணற்றில் தள்ளிவிட்டு கிணற்றையும் மூடி விட்டான். இது அவன் மனைவி தர்மிஷ்டைக்கு தெரியாது. அவன் பையன் எங்கோ தொலைந்து விட்டான் என்று எண்ணியிருந்தாள்.

கிணற்றில் தள்ளப்பட்ட நிஷாகரன் அதனுள்ளிருந்த மரத்தின் பழங்களை உண்டு உயிருடன் இருந்தான். பத்து ஆண்டுகள் கழிந்தன. அந்தக் கிணற்றுக்கருகில் ஒருநாள் வந்த தர்மிஷ்டை கிணறு மூடப்பட்டிருப்பதைக் கண்டாள். யார் இதை மூடினார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அப்போது தந்தைதான், என்று கிணற்றுக்கு உள்ளிருந்து குரல் கொடுத்தான் நிஷாகரன். உடனே அவள் கிணற்றின் மூடியை அகற்றிவிட்டு அவனைக் காப்பாற்றி கோஷகரிடம் கொண்டுவந்து நிறுத்தினாள். நிஷாகரன் தனது அதிசயக்கதையைக் கூறலானான்.

நிஷாகரன் கூறிய கதை

துவக்கநிலையில் அவன் ஒரு பிராமணனாக இருந்தான். அப்போது செய்த பாவங்களின் பயனாய் நரகவேதனை அனுபவித்து புலியாகப் பிறந்தான். இவ்வாறு முறையே பின்னர் கழுதை, பறவை, எருது என்று பாவங்களின் பலனாக நரக வேதனைகள் அனுபவித்து கடைசியில் நிஷாகரனாகப் பிறந்தான். ஜடிஸ்மாரனாக முற்பிறவிகளைப் பற்றி அறிந்திருந்து இனி அவன் நன்னெறியில் நிற்பான் என்று கூறி முடித்தார்.

வாமன புராணம் முற்றிற்று.


Overview of the Vamana Purana

1. Structure and Composition:

- The Vamana Purana is composed of around 10,000 verses, though the exact number may vary slightly depending on the version. It is organized into different sections that cover a range of subjects related to mythology, cosmology, and religious practices.

2. Key Themes and Content:

- Vamana Avatar: The Purana is named after Vamana, the fifth avatar of Vishnu. The Vamana avatar is depicted as a dwarf Brahmin who appears during the reign of the demon king Bali. The central narrative involves Vamana's request for three paces of land, which he then expands to cover the entire universe, thereby defeating Bali and restoring the cosmic order.

- Mythological Narratives: The Vamana Purana includes various stories about gods, goddesses, sages, and heroes. It provides accounts of the deeds of Vishnu and other deities, illustrating their divine roles and interactions with the world.

- Cosmology and Creation: Like other Puranas, the Vamana Purana describes the creation of the universe, the structure of the cosmos, and the roles of different deities in the cosmic cycle. It outlines the principles of Dharma (righteousness) and the nature of the divine.

- Rituals and Worship: The Purana provides instructions on performing religious rituals, sacrifices, and worship practices. It emphasizes the importance of devotion and proper conduct in religious observances.

- Ethics and Morality: The Vamana Purana offers teachings on ethical behavior, emphasizing virtues such as truthfulness, compassion, and humility. It provides guidance on leading a righteous life and fulfilling one's duties according to Dharma.

3. Significance of Vamana:

- Vamana is an important avatar of Vishnu, representing the divine's ability to humble even the most powerful beings. The story of Vamana is often interpreted as a symbol of humility and the triumph of divine justice over arrogance and pride.

4. Cultural and Religious Impact:

- The Vamana Purana contributes to the understanding of Vishnu's avatars and their significance in Hindu theology. It provides a narrative framework for the worship of Vishnu and his manifestations, particularly Vamana. While not as widely studied or referenced as some other Puranas, it holds particular importance in the context of Vishnu's incarnations.

5. Philosophical and Theological Themes:

- The Purana explores themes of divine intervention, cosmic order, and the role of avatars in restoring balance to the universe. It underscores the idea that the divine takes various forms to address different aspects of existence and to guide humanity towards righteousness.

6. Unique Features:

- The focus on Vamana and his unique method of restoring order distinguishes this Purana from others. The narrative of Vamana's three steps is a key element that highlights the avatar's divine power and the overarching theme of humility and cosmic justice.



Share



Was this helpful?