Digital Library
Home Books
அனுமன் குழந்தையாக இருக்கும் போதே அவனது வலிமை இப்படி இருக்குமானால் வளர்ந்து பெரியவன் ஆகும் போது எவ்வளவு பலவானாக இருப்பான் என்று அதிசயித்து தேவர்கள் பேசிக்கொண்டார்கள். தன் மகன் அனுமனை அணைத்தபடி வாயுவும் குளுமையாக வீசிக் கொண்டே சென்றான். பல யோசனை தூரம் ஆகாயத்தில் சென்ற பின்னும் குழந்தைக்கு திருப்தி ஏற்படவில்லை. குழந்தைத் தனமான குதூகலமும் தந்தையின் உதவியும் சேர ஆகாயத்தில் வெகு நேரம் வட்டமடித்துக் கொண்டு சூரியனை நோக்கிச் சென்றான். குழந்தை தானே என்று சூரியனும் தன் வெப்பத்தை கொடுக்காமல் விட்டான். அதே தினம் ராகுவிற்கு சூரியனை விழுங்கும் பருவ காலம் (சூரிய கிரகணம்) தொடங்கியது. பருவ காலம் ஆரம்பித்ததும் ராகுவும் சூரியனைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தான். வழியில் எதிர்பட்ட குழந்தை ராகுவிற்கு தடையாக இருந்தது. உடனே இந்திரனிடம் சென்ற ராகு இன்று சூரியனை விழுங்க எனக்கு விதிக்கப்பட்ட பருவ காலம். சூரியனைப் பிடிக்க வந்தேன். இன்னொரு ராகு சூரியனை பிடிக்க சென்று கொண்டிருக்கிறது என்றான். இதைக் கேட்டு பரபரப்படைந்த இந்திரன் தன் ஆசனத்தை விட்டு துள்ளி குதித்து எழுந்தான். தன் ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்ட இந்திரன் ராகு முன் செல்ல சூரியனும் அனுமானும் இருந்த இடம் வந்து சேர்ந்தார்கள். ராகு முகத்தை மட்டுமே உருவமாக கொண்டவன். முன்னால் வந்த ராகுவைக் கண்டதும் குழந்தையான அனுமன் விளையாட்டாக ராகுவை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தான். பயந்த ராகு இந்திரா இந்திரா என்று கூப்பிட அழைத்தான். இந்திரன் ராகுவிடம் பயப்படாதே நான் இந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுமன் இருக்கும் இடத்தினருகில் சென்றான்.
அனுமனின் கவனம் இப்பொழுது யானையான ஐராவதத்தின் மேல் சென்றது. குதாகலத்துடன் அதனுடன் விளையாட யானையை நோக்கி விரைந்து சென்றான். குழந்தையை தடுத்தே ஆக வேண்டுமே என்ற நோக்கத்தில் தன்னுடைய வஞ்ராயுதத்தால் குழந்தையை மெதுவாக தட்டினான். இந்திரனின் ஆயுதத்தால் தாக்கப்பட்ட குழந்தை அனுமன் ஆகாயத்தில் இருந்து நிலை குலைந்து ஒரு பெரிய மலை மீது விழுந்தான். இதனால் குழந்தை அனுமனுக்கு உடலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. மயக்கமடைந்து விழுந்தான் குழந்தை அனுமன். தன் மகனை இந்திரன் வஞ்ராயுதத்தால் அடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வாயு இந்திரனை எச்சரித்து விட்டு விழுந்த தன் குழந்தையை எடுத்துக் கொண்டு மலை குகைக்குள் சென்று விட்டான். இந்திரனின் மீது உள்ள கோபத்தில் உலகத்தில் தன் இயக்கத்தை நிறுத்தினான். வாயுவின் இயக்கம் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்து நின்றது. மூச்சு விடக் கூட முடியாமல் உயிரினங்கள் அனைத்தும் தவித்து அலறினார்கள். வாயுவின் இச்செயலால் மூவுலகும் அழிவின் எல்லையில் நின்றது.
தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் என மூவலகத்தவர்களும் பிரம்மாவிடம் சென்று உங்களை சரணடைகிறோம் இப்பிரச்சனையை தீர்த்து எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அனைவருடன் பிரம்மா அனுமன் இருந்த இடம் வந்து சேர்ந்தார். அடிபட்ட மகனை மடியில் வைத்துக் கொண்டு வருந்திக் கொண்டிருந்த வாயுவைக் கண்டனர். சூரியன் உருக்கி எடுத்த தங்கம் போல் பிரகாசமாக இருந்த குழந்தையை பிரம்மா கருணையுடன் பார்த்தார். மிகவும் வருத்தத்துடன் இருந்த வாயு பகவான் தன் குழந்தை அனுமனை பிரம்மாவிடம் கொடுத்தார். பிரம்மாவின் கைகள் பட்டதும் குழந்தை அனுமன் எழுந்து விளையாட ஆரம்பித்து விட்டான். அனுமனை விளையாட ஆரம்பித்ததும் வாயு தன் இயக்கத்தை ஆரம்பித்தார். உலகத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உயிரினங்கள் பிராணனைப் பெற்று நடமாட ஆரம்பித்து பழையபடி உலக இயக்கம் நடை பெற்றது.
பிரம்மா தேவர்களிடம் பேச ஆரம்பித்தார். தேவர்களே நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். இதில் உங்களின் நன்மையும் அடங்கியுள்ளது. இந்த குழந்தை உலகில் பல நல்ல காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனால் என்னுடைய பிரம்ம தண்டத்தாலோ பிரம்மாஸ்திரத்தாலோ இவனுக்கு எந்த பாதிப்பும் வராது என்று வரம் தருகிறேன். உங்களால் முடிந்தவரை வரங்கள் தந்து இவனது சக்தியை பெருக்குங்கள் என்றார். உடனே இந்திரன் தன் கழுத்திலிருந்து மாலையை எடுத்து குழந்தை அனுமனுக்கு அணிவித்து இன்றிலிருந்து என்னுடைய வஜ்ராயுதம் முதல் எந்த ஆயுதத்தாலும் அடிபட்டாலும் இக்குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்ற வரத்தை தருகிறேன் என்றான். அடுத்து சூரிய பகவான் என்னுடைய தேஜசில் நூற்றில் ஒரு பங்கை இக்குழந்தைக்கு கொடுக்கிறேன். இதனால் இக்குழந்தை எல்லா சாஸ்திர ஞானமும் பெற்று நல்ல வாக்கு வன்மை உடையவனாக ஆவான். சாஸ்திர ஞானத்தில் இவனுக்கு இணையாக யாரும் ஆக மாட்டார்கள் என்று வரம் அளித்தார். அடுத்து வருணன் இக்குழந்தைக்கு மழையினால் வெள்ளத்தினால் எந்த பாதிப்பும் வராது என்ற வரத்தை அளித்தார். அடுத்து யமன் இக்குழந்தைக்கு என் பாசக் கயிறினாலோ தண்டத்தாலோ மரணம் வராது மரணம் இல்லாத ஆரோக்கியத்துடன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்ற வரத்தை அளித்தார். அடுத்து குபேரன் தன்னுடைய கதை ஆயுதத்தை கொடுத்து யுத்தம் என்று வந்தால் இக்குழந்தை எந்த சிரமமும் இல்லாமல் யுத்தம் செய்து வெற்றி பெறுவான் என்ற வரத்தை அளித்தான். அடுத்து விஸ்வகர்மா என்னால் உருக்கப்பட்ட எந்த அஸ்திரமும் இவனை எதுவும் செய்யாது என்ற வரத்தை அளித்தார்.
பிரம்மா வாயுதேவனைப் பார்த்து உன் மகன் அனுமன் தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிரியாகவும் நம்பியவர்களுக்கு அபயம் தருபவனாகவும் சிரஞ்சீவியாகவும் இருப்பான். யாராலும் வெற்றி பெற முடியாத அபரிமிதமான பலம் உடையவனாக இருப்பான் என்றார். விருப்பம் போல உருவம் எடுத்துக் கொள்ளவும் விரும்பிய இடம் செல்லவும் இவனால் முடியும். இவன் போகும் வழியை யாரும் தடை செய்ய முடியாது. அற்புதமான பல செயல்களை செய்து நல்ல கீர்த்தியை அடைவான். விஷ்ணுவின் அவதாரமான ராமனுக்கு உதவியாக பல காரியங்களை செய்து ராவணனை அழிக்க கருவியாக இருப்பான் என்றார். மகிழ்ச்சி அடைந்த வாயு அஞ்சனையிடம் விவரங்களைச் சொல்லி குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றான். குழந்தை சிறுவனானதும் குருகுல ஆசிரமத்து ரிஷிகளிடம் கல்வி கற்றான். மற்ற நேரங்களில் கைக்குக் கிடைத்ததை வீசி உடைத்து உருத் தெரியாமல் செய்து விளையாடுவான். அனுமனின் விளையாட்டு ரிஷிகள் செய்யும் யாகத்திற்கு இடையூராக இருந்தது. ஆனாலும் குழந்தையின் எதிர் காலத்தை அறிந்த ரிஷிகள் இதனை பொறுத்துக் கொண்டார்கள்.
அனுமன் தன் விளையாட்டில் எல்லை மீறவே கேஸரி என்ற ரிஷி அதட்டினார். அதையும் கேட்காத அனுமன் தன் விளையாட்டிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். இதனை கண்ட பிருகு என்ற ரிஷி தன் கோபத்தை வெளிக் காட்டாமல் எங்களது யாகத்திற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டி உன்னுடைய சக்திகள் உனக்கு தெரியாமல் மறந்து போகும். உலகிற்கு நன்மை செய்ய உனது சக்திகள் தேவைப்படும் காலத்தில் உனது சக்தியை யாராவது ஞாபகம் செய்தால் அப்போது உடனே தெரிந்து கொள்வாய் என்று சிறிய சாபத்தை கொடுத்தார். இதன் பின் அனுமன் சாதுவாக அடக்கம் மிகுந்தவராக இருந்தார். அச்சமயத்தில் குரு குலத்தில் சுக்ரிவனை தனது நண்பனாக அனுமன் பெற்றான். வானர அரசனாக இருந்த வாலி சுக்ரீவர்களின் தந்தையான ருக்ஷரஜஸ் சொர்க்க லோகம் சென்றார். அவரைத் தொடர்ந்து வாலி அரசனாகவும் சுக்ரீவன் யுவராஜனாகவும் பொறுப்பெற்றுக் கொண்டார்கள். அனுமானுக்கு சிறு வயதிலிருந்தே சுக்ரீவனுடன் பிரிக்க முடியாத நட்புடன் காற்றும் நெருப்பும் போல இருவரும் இணை பிரியாமல் இருந்தார்கள்.
அனுமன் தன்னுடைய அபரிதமான சக்தியை உணராமல் சுக்ரீவனுக்கு சமமாகவே இருந்தான். வாலி சுக்ரீவர்களிடையே விரோதம் முற்றிய போதும் வாலி சுக்ரீவனை விரட்டி அடித்த போதும் கூட தன்னுடைய சக்தியை அனுமன் உணரவில்லை. ரிஷிகளின் சாபத்தால் தன் இயல்பான சக்தியையும் பலத்தையும் உணராதவனாக சுக்ரீவனுடன் கூடவே இருந்தானே தவிர உதவி எதுவும் செய்யத் தெரியவில்லை. கூண்டில் அடைப்பட்ட சிங்கம் போல இவன் ஆற்றல் வெளிப்படாமல் மறைந்து கிடந்தது. சாஸ்திர ஞானத்தில் அனுமனுக்கு சமமானவர்கள் யாருமே இல்லை. பொது அறிவிலும் வேத பாராயணம் செய்வதிலும் இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து சொல்வான். நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை சொல்வான். யுக முடிவில் எமனைப் போல செயல்படுவான். அச்சமயம் இவன் எதிரில் யாராலும் நிற்கக் கூட முடியாது. ராமா உனக்கு நன்மை செய்யவே அனுமன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டான். அனுமனைப் பற்றி நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன் என்றார் அகத்தியர். அனைத்தையும் கேட்ட ராமரும் சுற்றி இருந்தவர்களும் அனுமனின் வரலாற்றைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்.
ராமரிடம் அகத்தியர் தொடர்ந்து பேசினார். இது வரை உங்களுடன் பேசியதும் பார்த்ததும் திருப்தியாக இருந்தது. உங்கள் உதவியோடு யாக காரியங்களை செய்ய விரும்புகிறேன். எனவே இப்போது நான் கிளம்புகிறேன் என்று எழுந்தார். ராமர் அகத்தியருக்கு தன்னுடைய வணக்கத்தையும் மரியாதையும் செலுத்தி வழி அனுப்பி வைத்தார். அன்று சூரியன் மறையவே சுற்றி இருந்த அனைவரையும் அனுப்பி விட்டு தன் சந்தியா கால ஜபங்களை முடித்துக் கொண்டு அந்தபுரம் சென்றார் ராமர். சில நாட்கள் விருந்தினர்களாக தங்கியிருந்த சுக்ரீவன் தலைமையிலான வானரங்களும் விபீஷணன் தலைமையிலான ராட்சசர்களும் தங்கள் இருப்பிடம் கிளம்ப தாயரானார்கள். ராமர் அவர்களின் தகுதிக்கேற்ப பொன்னையும் பொருளையும் கொடுத்து மரியாதை செய்தார். அனுமனிடம் வந்த ராமர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ராமரை வணங்கிய அனுமன் தனது வேண்டுகோளை வெளியிட்டார். எனக்கு தங்களிடத்தில் உள்ள நட்பும் பக்தியும் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்க வேண்டும். என் மனம் வேறு எதிலும் நாட்டம் கொள்ளக் கூடாது. உலகில் ராம கதை உள்ள வரை என் உயிரில் பிராணன் இருக்கும் வரை உங்கள் திவ்ய சரித்திரத்தை யார் சொன்னாலும் என் காதுகளால் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும் என்றார். அதனைக் கேட்ட ராமர் தன் ஆசனத்தில் இருந்து இறங்கி வந்து அனுமனை தழுவிக் கொண்டார். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும் நான் உயிரையே கொடுப்பேன். உன் விருப்பப்படியே ஆகட்டும். என் கதை உலகில் உள்ள வரை உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.
ராமனிடம் வந்த சீதை தனக்கு ஒரு ஆசை இருப்பதாகவும் அதை நிறைவெற்றி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். புண்யமான தபோ வனங்களைப் பார்க்க வேண்டும். கங்கா தீர்த்ததில் தவம் செய்யும் ரிஷிகளைப் பார்க்க வேண்டும். தேஜஸ் நிறைந்த முனிவர்கள் பழம் கிழங்குகளைச் சாப்பிட்டபடி மர நிழல்களில் வாழ்வதைக் காண வேண்டும். ஒர இரவு ஒரு பகல் ஏதோ ஒரு தப வனத்தில் முனிவர்களுடன் சேர்ந்து இருந்து விட்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றாள். அப்படியே ஆகட்டும் என்று ராமரும் வாக்களித்து விட்டு அரசவைக்கு சென்றார். ராமரைச் சுற்றி மந்திரிகள் உட்பட பலரும் அமர்ந்திருந்தனர். நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை விவரித்து சொல்பவர்களும் பல விதமான கதைகளைச் சொல்பவர்களும் வேடிக்கையும் விளையாட்டுமாக பல சம்பவங்களையும் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் ராமர் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டார். நகரத்தில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கிறது? என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் நிலவுகிறது. சீதையைப் பற்றியும் பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணனைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? தாயார் கைகேயியைப் பற்றிய எண்ணம் மக்கள் மத்தியில் எவ்வாறு நிலவுகிறது? இரவில் ஊருக்குள் சஞ்சரிக்கும் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டார்.
ராமர் கேட்டவுடன் பத்ரன் என்ற ஒற்றன் வணக்கத்துடன் பதிலளித்தான். மக்கள் அனைவரும் நல்ல விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் ராவணனை அழித்ததைப் பாராட்டி பேசுகிறார்கள். இந்த யுத்தத்தைப் பற்றியும் அதன் வெற்றியைப் பற்றியும் நகரில் பல கதைகள் பரவியுள்ளன என்றான். அதற்கு ராமர் சுப செய்தியாக இருந்தாலும் அசுப செய்தியாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். சுபமான செய்தி என்றால் தொடர்ந்து செய்வோம். அசுபமான செய்தி என்றால் நம்மை மாற்றிக் கொள்வோம் பயப்படாதே கவலையின்றி விவரமாகச் சொல் என்றார் ராமர். கடை வீதிகளிலும் வனங்கள் உபவனங்கள் என நமது நாட்டில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன் என்று பத்ரன் மிக கவனமான சொற்களுடன் விவரமாகச் சொல்ல அரம்பித்தான்.
ராமர் செய்தது அரிய செயல். சமுத்திரத்தின் மேல் சேது பாலத்தைக் கட்டி விட்டார். தேவர்கள் தானவர்கள் கூட இப்படி கடலின் மேல் பாலம் கட்டியதாக அறிந்தது இல்லை. நெருங்கவே முடியாதவன் என்று பெயர் பெற்ற ராவணன் தன் படை பலங்களோடு ராமரால் அழிக்கப்பட்டான். வானர வீரர்கள் கரடிகள் அவர்களோடு இப்போது ராட்சசர்களும் ராமரின் வசத்திற்கு வந்து விட்டார்கள். ராவணனை வதம் செய்து தன் சீதையை மீட்டு வந்துவிட்டார். முன்பு ராவணன் அவளை அபகரித்துக் கொண்டு இலங்கையின் அசோக வனத்தில் வைத்தான். ராட்சசர்களின் கட்டுப்பாட்டில் சில காலம் இருந்தவளை குறை ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார் ராமர். மாற்றான் கட்டுப் பாட்டில் இருந்த தன் மனைவியை ராமர் ஏற்றுக் கொண்டது பெரிய செயல். சீதையுடன் சேர்ந்ததில் தான் அவருக்கு எவ்வளவு ஆனந்தம். மாற்றானுடன் இருந்த சீதையை காணும் போதெல்லாம் ராமருக்கு எப்படி ஆனந்தம் ஏற்படுகிறதோ தெரியவில்லை? நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசுகிறார்கள் என்று சொல்லி முடித்தான். இதைக் கேட்ட ராமரின் முகம் வருத்தத்தில் வாடியது. கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து இது என்ன புதிய குழப்பம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தலை குனிந்தபடி ராமரை வணங்கி இப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம். இவன் சொல்வது சரிதான் என்றார்கள். அவர்கள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்ட ராமர் அவர்களை அனுப்பி விட்டு யோசிக்கலானார்.
ராமர் நீண்ட யோசனைக்குப் பிறகு வாயில் காப்போனைக் கூப்பிட்டு சீக்கிரம் லட்சுமணன் பரதன் சத்ருக்னன் மூவரையும் அழைத்து வா என்று கட்டளையிட்டார். வாயில் காப்போன் ஜய கோஷம் செய்து வாழ்த்தி விட்டு ராஜா உங்களை அழைக்கிறார். என்று மூவருக்கும் செய்தியை கூறினான். மூவரும் உடனடியாக ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். ராமரின் கவலையான முகத்தைப் பார்த்து ஏதோ குழப்பம் என்று ஊகித்துக் கொண்டார்கள். கண்களில் நீருடன் முகம் வாட்டாமாக இருந்த ராமரைப் பார்த்து செய்வதறியாமல் பேசாமல் நின்றனர். அவர்களை அமரச் செய்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் மூவரும் தான் எனக்கு உயிர். நீங்கள் மூவரும் தான் எனக்கு எல்லாம். உங்கள் உதவியோடு தான் நான் ராஜ்ய பாலனம் செய்கிறேன். சாஸ்திரங்களை அறிந்தவர்கள் நீங்கள். நல்ல புத்தி உடையவர்கள். நான் சொல்வதைக் கேட்டு யோசித்து ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் என்றார். ராமர் என்ன சொல்லப் போகிறாரோ என்று மனம் கலங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போன்ற குழப்பங்கள் மனதில் தோன்ற வாய் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தபடி மூவரும் அமர்ந்திருந்தனர்.
ராமர் மூவரிடமும் பேச ஆரம்பித்தார். கவனமாக கேளுங்கள். யாரும் குறுக்கே பேச வேண்டாம். நமது அயோத்தி மக்கள் மத்தியில் என்னையும் சீதையையும் குறித்து எந்த விதமான பேச்சு நடமாடுகிறது என்று தெரிந்து கொண்டேன். மக்கள் மத்தியில் பெரும் தவறான ஒரு பேச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பேச்சு மிகவும் அருவருக்கத் தக்கதாக என்னைக் குத்தி வாட்டுகிறது. நான் பெயர் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன். சீதையும் ஜனகரின் உத்தமமான குலத்தில் தோன்றியவள் இது அனைவருக்கும் தெரியும். தண்டகாருண்ய வனத்தில் ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு சென்றான். நான் ராவணனை வதம் செய்து அழித்தேன். ராவணனின் பிடியில் சீதை இருந்தாலும் அவள் மாசற்றவள் என்பதை நான் அறிவேன். சீதையை அயோத்திக்கு அழைத்து வருவதற்கு முன்பாக அவள் மாசற்றவள் என்பதையும் அவளின் புனிதத்தன்மையையும் இந்த உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னியிலும் இறங்கச் செய்தேன். சீதையும் அக்னியில் இறங்கி தனது புனிதத் தன்மையை நிருபித்து விட்டாள். அக்னியில் இறங்கியவளை அக்னி தேவனே அழைத்து வந்து அவளின் புனிதத் தன்மையை உலகிற்கு காட்டினான். தேவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். சீதை மாசற்றவள் என்று அனைவருக்கும் உணர்த்திய பின்னரே அயோத்திக்கு அழைத்து வந்தேன். இத்தனை செயலும் மக்களிடம் நம்பிக்கை வருவதற்காகத் தானே செய்தேன். இப்போது மக்கள் மத்தியில் சீதையின் மீது ஒருவிதமான சந்தேகமும் தவறான எண்ணமும் நிலவி வருகிறது. மாற்றானுடன் இருந்த சீதையுடன் எப்படி ராமர் அழைத்து வந்தாரோ அது போலவே நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசியிருக்கிறார்கள். அதன் உட்பொருள் சீதை புனிதமானவள் என்பதை மக்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்து என் மனம் மிகவும் வருந்துகிறது.
இக்ஷ்வாகு வம்சத்தில் நமது முன்னோர்கள் சத்தியத்தையும் தர்மத்தையும் காத்து தனக்குப் பின் வரும் வாரிசுகளுக்கு கொடுத்தார்கள். வழிவழியாக வந்த நமது குலத்தில் இப்போது நான் அரசனாக இருந்து உங்களின் உதவியால் சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இக்ஷ்வாகு வம்சத்தின் புகழையும் பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு வகையில் அதற்கு ஒரு பழிச்சொல் வந்திருக்கிறது. இது போன்ற பழிச் சொல் நம்மை கீழே தள்ளி விட்டுவிடும். இஷ்வாகு வம்சத்தின் புகழை நான் குலைத்து விடுவேனோ என்று நடுங்குகிறேன். இந்த பயத்தினால் உயிரை விடலாமா என்றெல்லாம் யோசிக்கிறேன். எனக்கு இதை விட பெரிய துக்கம் என்று ஒன்று இருக்கும் என்று தோன்றவில்லை. நீங்கள் இந்த சோகக்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் எனக்கு கை கொடுக்க வேண்டும். நான் சொல்வது போல் செய்து விடுங்கள். இந்த பழிச்சொல் சீதையின் காதில் விழுந்தால் அவள் துடித்து விடுவாள். இச்செய்தியை அவள் கேட்டால் அந்த கனமே உயிரையும் விட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இச்செய்தி அவளின் காதில் விழுவதற்கு முன்பாக அவளை அயோத்தியில் இருந்து அனுப்பி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். சீதைக்கு முனிவர்கள் வாழும் காட்டில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக என்னிடம் நேற்று கூறினாள். ஆகையால் நாளைக் காலை தேரோட்டி சுமந்திரரை ரதத்தை பூட்டச் சொல்லுங்கள். அதில் சீதையை அழைத்துச் செல்லுங்கள். நகரத்தின் எல்லையில் இருக்கும் கங்கைக் கரையைத் தாண்டி வால்மீகி முனிவரின் அழகிய ஆசிரமம் இருக்கிறது. ஆசிரமத்திற்கு முன்பாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை விட்டுவிட்டு திரும்பி வந்து விடுங்கள். சீதை அவள் விருப்பப்பட்ட ஆசிரம வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளட்டும். என்னைப் பிரிந்து இருந்தாலும் பரவாயில்லை. இச்செய்தி அவளின் காதுகளில் விழாமல் இருக்க வேண்டும் அதுவே முக்கியம். இதற்கு மேல் சீதையைப் பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம். இது எனது கட்டளை நான் சொன்னதைச் செய்து விடுங்கள். எனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆலோசனை சொல்ல யாரும் முயற்சி செய்யாதீர்கள். இது எனது கட்டளை. இந்த செயலை உடனே நிறைவேற்றுங்கள் என்று தன் கண்களில் நீர் வடிய ராமர் சொல்லி முடித்தார்.
ராமரின் கட்டளையை கேட்டு திடுக்கட்ட மூன்று சகோதரர்களும் பேச முடியாமல் சிலை போல் நின்றார்கள். ராமர் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டார். மூவரும் கலந்து பேசி ராமரின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இச்செயலை லட்சுமணன் செய்யுமாறு பரதனும் சத்ருக்கனனும் கேட்டுக் கொண்டார்கள். அந்த இரவு ராமருக்கும் சகோதரர்கள் மூவருக்கும் மன நிம்மதியின்றி கழிந்தது. விடிந்ததும் லட்சுமணன் சுமந்திரரை அழைத்து ரதத்தில் குதிரைகளைப் பூட்டி அதில் சீதை அமர வசதியாக ஆசனம் தயார் செய்யுங்கள். மகரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களைக் காண சீதையை அழைத்துச் செல்ல அரசரின் உத்தரவு என்று வாடிய முகத்துடன் உத்தரவிட்டான். அரண்மனைக்குள் சென்ற லட்சுமணன் சீதையிடம் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்மீகி முனிவர் வாழும் ஆசிரமத்திற்கு தங்களை அழைத்துச் செல்ல ராமர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி தங்களை அழைத்துச் செல்ல வந்தேன் என்றான்.
ராமர் இட்ட கட்டளை என்றதும் சீதை உடனே தயாராகி கிளம்பி விட்டாள். சுமந்திரனை அனுப்பி விட்டு லட்சுமணன் தானே ரதத்தை ஓட்டினான். சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். நாம் கிளம்பியதில் இருந்து அபசகுனங்களை நிறைய காண்கிறேன். என் கண் துடிக்கிறது. இதயம் ஏனோ நடுங்குகிறது. நான் ஆசைப்பட்ட இடத்திற்கு செல்கிறேன் ஆனாலும் எனக்கு உற்சாகம் வரவில்லை. இனம் புரியாத கவலை தானாகவே தோன்றுகிறது. அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் நீயும் வேண்டிக் கொள் என்றாள். இதைக் கேட்ட லட்சுமணனின் மனம் துணுக்குற்றாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கங்கை கரைக்கு வந்தடைந்தார்கள். கங்கை நதிக் கரையில் பாதி நாள் கழிந்தது. திடிரென லட்சுமணன் தன் கட்டுப் பாட்டை இழந்து அழ ஆரம்பித்தான். சீதை எதுவும் புரியாமல் என்ன இது? ஏன் அழுகிறாய் என்று கேட்டாள். வெகு நாட்களாக நான் வசிக்க விரும்பிய இடம் இது. இங்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயத்தில் ஏன் அழுகிறாய்? நீ எப்பொழுதும் ராமன் அருகிலேயே இருப்பவன். இரண்டு நாள் பிரிந்து இருக்க வேண்டுமே என்று அழுகிறாயா? லட்சுமணா எனக்கும் ராமனிடத்தில் அன்பு உண்டு. ராமரை என் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன். நானே சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். சிறு பிள்ளை போல அழுகிறாயே விவரம் அறியாதவனா நீ. அழுகையை நிறுத்தி விட்டு இந்த கங்கையைக் கடந்து அக்கரையில் இருக்கும் முனிவர்களை தரிசிக்க ஏற்பாடு செய். மகரிஷிகளை உரிய முறையில் வணங்கி ஆசீர்வாதம் பெற்று ஒரு இரவு அவர்களுடன் வசித்து விட்டு நகரம் திரும்புவோம் என்றாள். தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட லட்சுமணன் சீதையை படகில் ஏறச் செய்து கங்கைக் கரையே கடந்து முனிவர்கள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
ராமர் எனக்கு ஒரு கட்டளையை பிறப்பித்திருக்கிறார் என்று சீதையிடம் பேச ஆரம்பித்தான் லட்சுமணன். கண்களில் நீருடன் பணிவாக தன் தன் நிலையை சொல்ல ஆரம்பித்தான். மதிப்புக்குரிய ராமர் இந்த கட்டளையை எதற்காக பிறப்பித்தார் என்று எனக்கு தெரியவில்லை. நேற்று இரவு முதல் ஒரு பெரும் பாரத்தை என் மனதில் சுமந்து வருகிறேன். இந்த செய்தியை தங்களிடம் சொல்லும் முன் என் உயிர் பிரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இச்செயலை செய்ய என்னை பணித்ததற்கு பதிலாக எனக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். உலகமே நிந்திக்கப் போகும் இந்த செயலைச் செய்ய ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ என்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். இதில் என் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியபடி லட்சுமணன் அவள் பாதங்களில் விழுந்து அழுதான். லட்சுமணனின் சொல்லையும் செயலையும் கண்ட சீதை கவலையால் துடித்துப் போனவளாக எனக்கு எதுவுமே புரியவில்லை விவரமாகச் சொல் லட்சுமணா என்று கேட்டு பதறினாள்.
ராமர் சபையில் நகரத்தில் இருப்பவர்களைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்த போது உங்களை பற்றிய செய்தி ஒன்று அவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் வருந்திய ராமன் நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். என்ன செய்தி என்று அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். அச்செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். இச்செய்தியால் எனக்கு மகாகோபம் வந்தாலும் ஏன் இத்தகைய முடிவை ராமர் எடுத்தார் என்றும் அவரின் மனதில் உள்ளவற்றையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எந்த விதமான குறையோ குற்றமோ உங்களிடம் இல்லை. ஆனாலும் மாசற்ற உங்களை ராமர் தியாகம் செய்து விட்டார். இந்த ஆசிரமத்தில் உங்களை விட்டு வரும்படி எனக்கு உத்தரவிட்டார். நீங்களும் முனிவர்கள் இருக்கும் இந்த இடத்தில் வசிக்க விரும்பினீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் இருங்கள். எங்கள் தந்தைக்குப் பிரியமான முனிவர் வால்மீகி இங்கு தான் இருக்கிறார். அவரது பாதுகாப்பில் உங்களை விட்டுச் செல்கிறேன். உபவாசங்கள் விரதங்கள் தவங்களில் உங்களின் மனதைச் செலுத்தி அமைதியாக இருங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் இப்போது இதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். இடி விழுந்தது போன்ற இந்த செய்தியைக் கேட்ட சீதை சுயநினைவின்றி பிரம்மை பிடித்தவள் போல் நின்றாள். காதில் விழுந்த செய்தியை கிரகித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.
ராமரை நான் பிரிந்து இருக்க வேண்டுமா என்று கண்களில் நீர் பெருக கதறினாள். சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். என்னை இப்படி சித்ரவதை செய்வதற்காகத் தான் பிரம்மா இந்த பூமியில் பிறப்பெடுக்கச் செய்திருக்கிறார். என் சரீரம் துக்கத்தை அனுபவிக்கவே படைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. ராமர் என்னை கை விட்டுவிட்டார். முன்பு பல காலம் காடுகளில் உள்ள ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அப்போது ராமர் என்னுடன் இருந்தார். அதனால் வனவாசத்திலும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். இப்பொழுது அவரில்லாமல் தனியாக ஆசிரமத்தில் எப்படி இருப்பேன். என் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவேன். இப்போதே அக்னியில் இறங்கி என் உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணுகிறேன் ஆனால் அப்படி உயிரை விட்டால் இக்ஷ்வாகு குலம் பரிகாசத்துக்கு ஆளாகும். அதனால் உயிரையும் விடமுடியாமல் ராமரில்லாமல் வாழவும் முடியாமல் இனி வரும் காலம் முழுவதும் தவிக்கப் போகிறேன் என்றாள் சீதை.
ராமரின் இந்த நாட்டின் அரசர் எனது அண்ணன். அவர் இட்ட கட்டளையை இதுவரை நான் மீறியதில்லை என்றான் லட்சுமணன். அதற்கு சீதை உன் கடமையை நீ செய் லட்சுமணா உன் மீது எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. ராமர் உனக்க இட்ட கட்டளைப்படி இந்த காட்டுப் பிரதேசத்தில் என்னை தனியாக விட்டுவிட்டுத் திரும்பிச் செல். உங்களது தாயார் மூவரிடமும் என்னுடைய வணக்கத்தைச் சொல்லிவிடு. ஏனேய உறவினர்களின் நலத்தை விசாரித்ததாகச் சொல். தர்மம் தான் எனக்குப் பெரியது என்று சொல்லிக் கொள்ளும் ராமரிடம் நான் சொன்னதாக ஒரு செய்தியை மட்டும் சொல்லிவிடு. சீதை மாசற்றவள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடத்தில் நிறைந்த பக்தியும் அன்புமுடையவள். உங்கள் நன்மையில் அக்கறையுள்ளவள். யாரோ ஏதோ பேசிய பேச்சால் தர்மத்தைக் காப்பற்றுகிறேன் என்ற பெயரில் என்னைத் தியாகம் செய்கிறீர்கள். பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் அதனால் உங்களது உத்தரவிற்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ருது காலம் தாண்டி நான் ராமனது கர்ப்பத்தை தாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும் அப்படியே சொல்லிவிடு உனக்கு விடை தருகிறேன் நீ செல்லமாம் என்று சீதை லட்சுமணனிடம் பேசி முடித்தாள்.
ராமர் இல்லாமல் இனி நீங்கள் தனியா எப்படி இருக்கப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது தாய்மை வேறு அடைந்திருக்கிறீர்கள் உங்களை பார்த்துக் கொள்ள யாரும் அருகில் இல்லையே என்று தலையை தரையில் மோதிக் கொண்டு அழுதான் லட்சுமணன். சீதையை வணக்கி விட்டு அவளைக் காண சக்தியற்றவனாக கங்கை கரையை தாண்டி தனது ரதத்தில் கிளம்பினான் லட்சுமணன். வெகு தூரம் வரை ரதத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதைக்கு ரதம் கண்ணில் இருந்து மறைந்ததும் தாங்க முடியாத துக்கம் அவளை ஆட்கொண்டது. மயில் கூட்டங்கள் அவளை வினோதமாகப் பார்த்தன. தனக்கு புகலிடம் எதுவுமே இல்லை என்ற உண்மை அவளை சுட்டது. பாரம் மனதை அழுத்தியது. செய்வதறியாது கதறி அழ ஆரம்பித்தாள். காட்டில் அழுதபடி நிற்கும் சீதையைக் கண்ட சில சிறுவர்கள் வால்மீகி முனிவரிடம் ஓடிப் போய் தெரிவித்தனர். சிறுவர்கள் சொன்னதைக் கேட்டதும் வால்மீகி முனிவர் தன் ஞானக் கண்களால் நடந்ததை உணர்ந்தார். காட்டில் நிற்பது சீதை என்பதை அறிந்ததும் விரைவாக சீதை இருக்குமிடம் வந்தார். வால்மீகி முனிவர் வேகமாக செல்வதைப் பார்த்ததும் அவரின் சீடர்களும் உடன் ஓடினார்கள்.
ராமனுக்கு பிரியமானவளான சீதை அனாதை போல நிற்பதைக் கண்டார். அவளிடம் இதமாக பேச ஆரம்பித்தார். தசரதனின் மருமகளும் ஜனகரின் மகளான உன் வரவு நல்வரவாகுக உனக்கு என் ஆசீர்வாதம். இக்காட்டில் ஒரு பெண் நிற்கின்றாள் என்ற செய்தி கேட்டதும் என் தவ வலிமையால் நடந்தவற்றையும் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டேன். என் தவப்பயனாக பெற்ற ஞானக் கண்கள் சொல்வது பொய்யாகாது. கவலையின்றி நீ என்னுடன் இருக்கலாம். நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறையும் வராது. ஆசிரமத்தில் தவம் செய்யும் தாபஸ்விகளும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் உன்னை மகளாக பாவித்து கவனித்துக் கொள்வார்கள். பயமின்றி இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கலாம். இந்த இடத்தை உன் வீடு போல எண்ணிக் கொள் என்றார். இதைக் கேட்ட சீதை வால்மீகி முனிவரை கை கூப்பி வணங்கி முனிவரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றாள். சீதை ஆசிரமத்தினுள் நுழைவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன் சிந்திக்க ஆரம்பித்தான். சீதையின் பிரிவைத் நம்மலே தாங்க முடியவில்லையே. ராமர் என்ன பாடு படப்போகிறாரோ. ரமருக்கு இதை விட வேறு என்ன துக்கம் வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து கிளம்பினான். வால்மீகி முனிவரிடம் முனிவர்கள் சிலர் வந்தார்கள். விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கே ஏன் இப்படி ஒரு சோதனை நடக்கிறது என்று கேட்டார்கள். வால்மீகி பதில் சொல்ல ஆரம்பித்தார்.
ராமரின் தந்தை தசரதர் ஒரு முறை இங்கு வந்திருந்தார். அப்போது துர்வாச மகரிஷியும் இங்கு வந்திருந்தார். அவரிடம் தசரதர் தனது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு துர்வாச மகரிஷி பதில் சொல்ல ஆரம்பித்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. அப்போது தேவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாத அசுரர்கள் பிருகு முனிவரின் மனைவியை சரணடைந்தார்கள். அவள் அவர்களுக்கு அபயம் அளித்தாள். இவர்களுக்கு அபயம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். தன்னுடைய சக்ராயுதத்தால் பிருகு முனிவரின் மனைவியின் தலையைக் கொய்து விட்டான். தன் மனைவி சக்ராயுதத்தால் கொல்லப்பட்டதை அறிந்த முனிவர் யோசிக்காமல் சட்டென்று விஷ்ணுவை சபித்து விட்டார். உலகைக் காக்கும் நீ யார் என்பதை நீயே அறியாமல் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறப்பெடுப்பாய். நான் எனது மனைவியை பிரிந்து இருந்தது போல் நீயும் உன் மனைவியை பிரிந்து வாழ்வாய் அப்போது துக்கம் என்ன என்பதை நீ அறிவாய் என்று சபித்து விட்டார். பின்பு இந்திரனின் ஆயுதத்தால் தான் தன் மனைவி அழிந்தாள் என்பதை அறிந்த பிருகு முனிவரும் வருத்தப்பட்டு விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். உலக நன்மைக்காக இந்த சாபத்தை ஏற்றுக் கொள்வதாக விஷ்ணுவும் அறிவித்தார். இந்த சாபத்தின் விளைவாக விஷ்ணு தான் யாரேன்று தெரியாமல் இந்த பூலோகத்தில் பிறந்திருக்கிறார் அவரே உனது மகனான ராமர்.
ராமர் என்ற பெயர் மூவுலகிலும் பரவி வெகு காலம் சுகமாக சிறப்பாக இருப்பார். ஆனால் சாபத்தின் பலனை அனுபவித்தே தீர்வார். இவரைப் பின் பற்றிச் செல்பவர்கள் சுகமாகவும் நிறைந்த செல்வச் செழிப்போடும் இருப்பார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத படி தர்மத்தின் படி அரசாளவார். ராமர் அரசனாக பதவி ஏற்றக் கொண்ட சில காலத்தில் ராமரிடமிருந்து சீதை பிரிந்து விடுவாள். ராமருக்கும் அவரது மனைவி சீதைக்கும் பிறக்கும் குழந்தைகள் அயோத்திக்கு வெளியே பிறப்பார்கள். ராமர் நிறைய அஸ்வமேத யாகங்கள் செய்வார். பத்தாயிரம் ஆண்டுகள் ராமர் தனது ராஜ்யத்தை ஆள்வார். அதன் பிறகு அவரின் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அவரது லோகத்திற்கு சென்று விடுவார் என்று துர்வாச மகரிஷி சொல்லியிருக்கிறார் என்று வால்மீகி முனிவர் தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக சொன்னார். சில நாட்கள் கழித்து சீதைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். சீதையை பார்த்துக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்த தகவலை வால்மீகி முனிவருக்கு தெரியப்படுத்தினார்கள். மகிழ்ச்சி அடைந்த வால்மீகி முனிவர் குச முஷ்டி மற்றும் லவம் என்ற இரண்டு மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்து குழந்தைகளுக்கு அணிவித்தார். காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக வைத்து முதலில் பிறந்தவனுக்கு குசன் என்ற பெயரையும் இரண்டாவது பிறந்தவனுக்கு லவன் என்ற பெயரையும் வைத்து வேத மந்திரங்களை ஓதினார் வால்மீகி முனிவர். மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர். ராமர் சீதையின் புதல்வர்களின் பிறப்பைக் கொண்டாடினர். லவ குசர்கள் இருவரும் வால்மீகி முனிவரின் மேற்பார்வையில் வேதங்களை கற்று வளர்ந்து வந்தார்கள்.
ராமர் அயோத்தியை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்து சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். ராஜ சூய யாகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன் தங்களின் கருத்தை சொல்லுங்கள் என்றார். பரதன் பேச ஆரம்பித்தான். தர்மம் உங்களிடத்தில் நிலைத்து இருக்கிறது. பூமியில் உள்ள அரசர்கள் அனைவரும் உங்களை மற்றொரு பிரம்மா போல புகழ்ந்து போற்றுகின்றனர். எங்களைப் போலவே உலகத்தார் அனைவரும் உங்களை மதிப்பும் மரியாதையுமாக தங்களின் தந்தையைப் போல நினைக்கிறார்கள். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு செய்ய வேண்டும் இந்த யாகம் செய்யும் போது பல நாட்டு அரசர்களும் யாகத்தில் பங்கு கொள்வார்கள். நமக்கு தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று பல ராஜ வம்ச அரசர்களும் எண்ணுவார்கள். இதனால் வீணாக கோபமும் அகங்காரமும் தலையெடுக்கும். தன்னிடம் உள்ள செல்வத்தை காட்டிக் கொள்வதற்காக அவர்களுக்குள் போட்டி வரும் பொறாமை சண்டை தொடரும். அதனால் இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள். நம்மிடம் ஏற்கனவே புகழும் அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது இது தேவையில்லை என்று எண்ணுகிறேன் என்றான் பரதன். இதைக் கேட்ட ராமர் நீ சொல்வதும் சரியே. நீ கூறிய இந்த கருத்தால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பு கூடுகிறது. நீ சொல்வது மிகச்சரியானது. மக்களுக்கு துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
ராமரிடம் லட்சுமணன் பேச ஆரம்பித்தான். அஸ்வமேத யாகம் யாராலும் அடக்க முடியாத பலமும் வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. இதை யோசித்துப் பாருங்கள். இந்திரனுக்கு விருத்திரனை வதம் செய்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்தது. தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் அஸ்வமேத யாகம் செய்து தனது தோசத்தை போக்கிக் கொண்டான். நம் அயோத்தி மக்களுக்கும் உலக மக்களுக்கும் இருக்கும் பல விதமான தோசங்களை நீக்கி அனைவருக்கும் நன்மைகளை அளிக்கும் இந்த அஸ்வமேத யாகத்தை நாம் செய்வோம் என்றான். இந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத பலமும் வீரமும் உடைய ராமரும் சரி என்று ஏற்றுக் கொண்டார். அஸ்வமேத யாகம் எப்போது எப்படி செய்வது என்று ஆலோசனை சொல்வதற்காக வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், மந்திரிகள், மற்றும் பிராமண சிரேஷ்டர்கள் கொண்ட சபையைக் கூட்டச் சொல்லி லட்சுமணனுக்கு உத்தரவிட்டார்.
ராமரின் உத்தரவிற்கேற்க முனிவர்களும் வேத விற்பன்னர்களும் அயோத்தி நகருக்கு வந்தார்கள். அவர்களை அரண்மணை வாயிலுக்கே சென்று ராமர் வரவேற்றார். அனைவருக்கும் அவரவர்களுக்கேற்ப மரியாதைகள் செய்து அவர்களுக்குறிய ஆசனத்தை அளித்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். மக்களின் நலனுக்காக அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் அனைவரும் அருகில் இருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து யாகத்தை நிறைவு செய்து கொடுங்கள் என்று அனைவரையும் வணங்கிய படி பணிவுடன் கேட்டுக் கொண்டார். ராமரின் இச்செயலுக்கு மகிழ்ந்த முனிவர்கள் ராமரை ஆசிர்வதித்து யாகத்தை செய்து கொடுப்பதாக வாக்களித்தார்கள். உடனடியாக ருத்ரனை வணங்கி அஸ்வமேத யாகத்தை தொடங்க அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள். யாகம் செய்வதற்கான இடம் நாள் நேரம் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தீவிர ஆலோசனைக்கு பின்பு முனிவர்கள் முடிவு செய்தார்கள். யாகத்தின் நியதிப்படி ராமர் தனது மனைவியுடன் அமர்ந்தால் மட்டுமே அதற்கான பலன் என்று கூறி சீதையைப் போலவே தங்கத்தில் ஒரு உருவம் செய்து ராமரின் அருகில் வைத்து யாகத்தை செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டு அதற்கேற்றார் போல் தனது சகோதரர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். யாகத்தில் கலந்து கொள்ள சுக்ரீவன் விபீஷணன் உட்பட தனது நண்பர்களுக்கும் அரசர்களுக்கும் அழைப்புகளை அனுப்பினார்.
ராமர் அஸ்வமேத யாகம் செய்வதை முன்னிட்டு தானங்கள் பல செய்தார். அசுவமேத யாகம் என்பது பல வருடங்கள் செய்யும் ஒரு பெரிய வேள்வியாகும். யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யார் என்ன தானம் கேட்டாலும் அதனை அந்நாட்டு அரசன் கொடுக்க வேண்டும். அரசன் தனது அரச குதிரையில் தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி உலகம் முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அரசரது பிரதிநிதி பெரும்படையுடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று நாட்டு அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றி கொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து அடுத்த நாட்டிற்கு செல்லும். அனைத்து அரசர்களும் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு குதிரை யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேரும். குதிரை வந்ததும் யாகம் செய்த அரசன் தன்னை சக்கரவர்த்தி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். யாகத்தின் பலனாக அதில் கலந்து கொண்டவர்களும் அந்நாட்டு மக்களும் பல விதமான தோசங்களில் இருந்து விடுபடுவார்கள். அயோத்திக்கு முனிவர்களும் வேதம் சொல்லும் அந்தணர்களும் பண்டிதர்களும் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுக்ரீவன் மற்றும் விபீஷணன் தங்களது உறவினர்களுடன் வந்து சேர்ந்தார்கள்.
ராமர் எல்லா முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து யாகத்திற்கான குதிரையை விட்டார். ராமரது பிரதிநிதியாக லட்சுமணனும் படை வீரர்களும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றார்கள். நல்ல முறையில் யாக சாலை தயாராவதைக் கண்டு ராமர் திருப்தியடைந்தார். யாகம் ஆரம்பித்தது யாகத்திற்கு வந்தவர்கள் லட்சுமணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் லட்சுமணனது வலிமையைப் பற்றியும் பேசிக் கொண்டர்கள். யாகம் செய்யும் அந்தணர்கள் என்ன பொருள் வேண்டும் என்று கேட்டு முடிப்பதற்குள்ளாக அவர்களிடம் அப்பொருட்களை வானரங்களும் ராட்சசர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிரஞ்ஜீவிகளான சில முனிவர்கள் இது போல யாகத்தைக் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ அது கிடைத்தது. தங்கம் விரும்பியவனுக்கு தங்கம் ரத்தினம் விரும்பியவனுக்கு ரத்தினம் என்று கிடைக்கப் பெற்றார்கள். தங்கமும் வெள்ளியும் ரத்தினமும் வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருந்தது. உணவும் உடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருட காலத்தைத் தாண்டிச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |