Digital Library
Home Books
Thirunaalapovar Nayanar is one of the 63 revered Nayanmars, who are celebrated saints in Tamil Shaivism. These saints are known for their intense devotion to Lord Shiva and their significant contributions to the Shaivite tradition.
ஆதனூர் என்னும் சிவத்தலம் சோழவள நாட்டிலே ஒரு பிரிவான மேற்காநாட்டில் கொள்ளிடக் கரையை அடுத்தாற் போல் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் நீர்வளமும், நில வளமும் அமையப் பெற்றது. ஆதனூருக்கு அருகாமையில் ஊரை ஒட்டினாற்போல் வயல்களால் சூழப்பட்ட சிறு குடிசைகள் நிறைந்த புலைப்பாடி ஒன்று இருந்தது. அங்கு குடும்பம் குடும்பமாகக் குடிசைகள் அமைத்துப் புலையர் குல மக்கள் உழுதலைத் தொழிலாகக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒருவர்தான் நந்தனார் என்பவர்.
மண் மாதாவின் மடியிலே வீழ்ந்து உணர்வு பிறந்த நாள் முதல் அரனாரிடத்து அளவில்லாத அன்பும், பக்தியும் பூண்டிருந்தார் நந்தனார். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். தமது குலத்தினருக்குரிய தொழில்களில் மேம்பட்டு விளங்கிய நந்தனார், தமக்குத் கிடைக்கும் தோல், நரம்பு முதலியவற்றை விற்று மற்றவர்களைப் போல் ஊதியத்தைப் பெருக்காமல், கோயில்களுக்கு பயன்படும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய போர்வைத் தோல் முதலிய பொருள்களை இலவசமாக வழங்கி வந்தார்.
கோயில்களில் உள்ள வீணைக்கும், யாழுக்கும் நரம்புகள் அளிப்பார். ஆராதனைப் பொருளான கோரோசøன போன்ற நறுமணப் பொருள்களை வழங்குவார். இங்ஙனம் நந்தனார் பல வழிகளில் இறைவனுக்கு இடையறாது அருந்தொண்டு புரிந்து வந்தார். அக்காலத்தில் தாழ்ந்த குலத்தோர் எனக் கருதப்படுவோர் ஆலயத்துள் சென்று இறைவைனை வழிபடத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். அதனால் நந்தனார் ஆலயத்திற்குள் போகாது வெளியே இருந்தவாறே இறைவனை மனதிலே எண்ணி ஆனந்தக் கூத்தாடுவார்; பாடுவார்; பெருமகிழ்ச்சி கொள்வார்.
இறைவனை ஆடிப்பாடி வாழ்த்தும் நந்தனார் ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் அமர்ந்திருகு்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க எண்ணினார். அக்கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்று உளம் விரும்பினார். ஒரு நாள் புறப்பட்டு அத்திருக் கோயிலை அடைந்தார். சிவலோக நாதரைக் கோயிலின் வெளியிலேயே நின்று வழிபட்டுப் போக விரும்பினார் நந்தனார்.
அவருடைய விருப்பம் நிறைவேறாது போயிற்று ! சிவலோகநாதரை மறைத்துக் கொண்டு நந்தி இருந்தது. அதைப் பார்த்தும் நந்தனாருக்கு வேதனை தாங்க முடியவில்லை. தேடி வந்த பெருமானின் திவ்ய தரிசனம் தம் கண்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண்கலங்கினார். சிவ சிவ என்று இறைவன் திருநாமத்தையே ஓதிக் கொண்டிருந்தார். கோயிலின் வெளியே மனம் நைந்து உருகும் பக்தனைக் காக்கத் திருவுள்ளங் கொண்ட சிவலோகநாதர் தம்மை மறைத்துக் கொண்டிருந்த நந்தியைச் சிறிது விலக்கினார்.
தீபாராதனை ஒளியில் கர்ப்பக் கிரகத்தில் ஆனந்தச் சுடராய் அருள் வடிவாய் காட்சி அளிக்கும் சிவலோக நாதரின் திருத்தோற்றத்தைப் பார்த்து உள்ளமும், உடலும் பொங்கிப் பூரிக்க நிலத்தில் வீழ்ந்து பன்முறை வணங்கினார் நந்தனார். சிவலோக நாதரைப் பாடிப் பாடி ஆனந்தக் கூத்தாடினார். பக்தி வெள்ளத்தில் மூழ்கி மிதந்து தத்தளித்தார். உள்ளத்திலே பேரின்பம் பூண்டார். அவர் உடல் புளகம் போர்த்தது ! கோயிலை பன்முறை வலம் வந்தார். நந்தனார் மன நிறைவோடு ஊருக்குப் புறப்பட்டார்.
திரும்பும் போது ஊருரின் நடுவே பெரும் பள்ளம் ஒன்று இருக்கக் கண்டார். பள்ளத்தை பார்த்ததும் நந்தனார் உள்ளத்தில் ஒரு நல்ல எண்ணம் பிறந்தது. ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பள்ளத்தை சுவாமி புஷ்கரணியாக்கினார். எண்ணியதை எண்ணியபடிச் செய்து முடித்தார். ஆதனூருக்கு திரும்பினார். ஆதனூரை அடைந்ததும் நந்தனார் சிவலோகநாதர் நினைவிலேயே இருந்தார். மீண்டும் திருப்புன்கூர்ப் பெருமானை வழிபட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனே ஆதனூரை விட்டுப் புறப்பட்டுத் திருப்புன்கூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டார்.
இம்மையில் தாம் எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்டதாக உள்ளம் பூரித்தார். அரனார் பக்தியிலே மூழ்கி மிதந்து வந்தார் நந்தனார். நாட்கள் நகர்ந்தன. நந்தனாரின் தொண்டுகளும் தங்கு தடை ஏதுமின்றி தவறாது நடந்தவண்ணமே இருந்தன. பற்பல தலங்களுக்குச் சென்று அடிக்கடி இறைவனை வழிபட்டு வந்த நந்தனாரின் பக்தி உள்ளத்தில் ஒரு ஆசை பிறந்தது. சிவத்தலங்களுக்குள் ஒப்பற்ற மணியாய் விளங்கும் தில்லைக்குச் சென்று அம்பலக் கூத்தனை வழிபட்டு வரவேண்டும் எனற தணியாத ஆசை எழுந்தது ! இரவு துயிலப் போகும்போது, பொழுது புலர்ந்ததும், எப்படியும் தில்லைக்குப் புறப்பட வேண்டும் என்று எண்ணுவார். விடிந்ததும் அவரது எண்ணம் அவரது இதயத்தினின்றும் கதிரவனைக் கண்ட காலைப்பனி கலைவது போல் மறைந்துவிடும்.
முடவன் கொம்புத் தேனை விரும்புவதா? உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்பது போல் தனக்கு எவ்வளவுதான் ஆவல் உயர்ந்தபோதும் மற்றவர்களைப்போல் தில்லைக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியுமா என்ன ? முடியவே முடியாது என்ற உறுதியான தீர்மானத்திற்கே வந்துவிட்டார் நந்தனார். இவ்வாறு அவரால் சில நாட்கள்தான் இருக்க முடிந்தது !
மீண்டும் தில்லைக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் தரிசிக்காவிடில் இம்மையில் உயிர் வாழ்ந்து என்ன பயன்? சிதம்பர தரிசனம் கிடைக்காது போகும் இந்த இழிவை அகற்றுவது எப்படி ? என்றெல்லாம் எண்ணிப் பலவாறு புலம்புவார். இங்ஙனமாக ஒவ்வொரு நாளும் நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக் கொண்டேதான் போனது. ஒவ்வொரு நாளும் நாளைக்குப் போவேன் என்று எண்ணி நாளைக் கடத்திக்கொண்டே வந்த நந்தனார் திருநாளைப் போவார் என்றே திருநாமத்தைப் பெற்றார். எப்படியோ ஒருநாள் அவரது இதயத்தில் எழுந்த இந்த ஆசை பூவாகி, காயாகி, கனிந்து முதிர்ந்தது. நாளைப் போவோம் என்று நாள் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நந்தனார், ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார்.
நந்தனார் தில்லையின் எல்லையை வந்தடைந்தார். தில்லையிலே அந்தணர் நடத்தும் வேள்விப் புகை விண்ணை முட்டி மேகத்தோடு கலந்திருந்தது. மூவாயிரம் வேள்விச் சாலைகளிலிருந்து எழுந்த இறைவனின் திருநாம ஒலிகள் தில்லை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன. முரசம் முழங்கிய வண்ணம் இருந்தது. கயிலையே தில்லைக்கு வந்து விட்டாற் போன்ற கோலாகலக் காட்சி ! இவற்றை எல்லாம் பார்த்த நந்தனாருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்படியே சிலைபோல் எல்லையிலேயே நின்றுவிட்டார் ! தில்லையின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர் தமக்கு நகருள் சென்று கோயிலைக் காணும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து உளம் வாடினார்.
அடங்காத ஆறாக் காதல் வளர்ந்தோங்கிற்று; உள்ளம் உருகிற்று; சென்னி மீது கரம் தூக்கி தொழுது நின்றார். தில்லையைக் கண்ட களிப்பில் அவர் உடல் இன்ப நாதம் எழுப்பும் யாழ்போல் குழைந்தது. உள்ளக்களிப்பு கூத்தாட நகரைப் பன்முறை வலம் வந்தார். எல்லையிலேயே நின்றபடி ஆனந்தக் கூத்தாடினார். பாடினார். அம்பலத்தரசரின் நாமத்தைப் புகழ்பாடிப் பெருமையுற்றார்.
இப்டியே ஆடியும், பாடியும் நந்தனார் தம்மையறியõமலேயே தில்லையின் எல்லையைத் தாண்டி அந்நகரத்தைச் சுற்றியமைந்திருந்த மதிற்புறத்தை அடைந்தார். மதிலை வணங்கினார். இரவும் பகலும் திருமதிலையே வலம் வந்து கொண்டிருந்தார். அவரால் ஆலயத்தை அடைய முடியவில்லை. ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீண்டாமைத் தொழுநோய் அவரைத் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையை நினைத்து நெஞ்சு புலம்பினார். இறைவனை உள்ளே சென்று வழிபடும் பேறு எனக்கு இல்லையே ! களிநடனவம் புரியும் திருநடராஜரின் காலைத் தூக்கி நின்றாடும் ஆனந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைக்காத கண்ணைப் பெற்ற பெரும் பாவியானேனே ! கண்ணிருந்தும் குருடன் ஆனேனே ? என்றெல்லாம் பலவாறு அரற்றினார்.
அரனார் நாமம் போற்றித் துதித்தார் ; துக்கித்தார். அம்பலத்தரசனை மனத்தில் நினைத்தபடியே தன்னை மறந்து அப்படியே நிலத்தில் சாய்ந்தார். இப்படியாக நாட்கள் பல உருண்டோடின. அவரது ஆசை மட்டும் ஈடேறவே இல்லை. ஒருநாள், அம்பலத்தரசன் அவரது கனவில் எழுந்தருளி, நந்தா ! வருந்தாதே ! எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன். இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். இறைவன் நந்தனாருக்கு அருள்செய்து பின்னர் தில்லைவாழ் அந்தணர் தம் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருக்குலத்திலே தோன்றியவன்தான். திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார். மறுநாள் காலைப் பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.
எம்பெருமானை நினைத்து உருகும் நந்தனாரை அணுகி, அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம் பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக என்று வேண்டிக் கொண்டார். தில்லை அந்தணர்கள் மொழிந்ததைக் கேட்டு, உய்ந்தேன் என்று கூறி நந்தனார் அவர்களைத் தொழுதார். அந்தணர்கள் மதிற்புறத்தே நெருப்பை மூட்டி நந்தனார் மூழ்கி எழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நந்தனார் இறைவன் மலர்த்தாளினை மனத்திலே எண்ணியவராய்த் தீயை வலம் வந்தார்.
செந்தீ வண்ணர் தியானத்திலேயே தீயிடை மூழ்கினார் நெருப்பிலை மூழ்கி எழுந்த நந்தனார் பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் போல் சடை முடியுடன், கோடி சூர்யப்பிரகாசத்துடன் வெளியே வந்தார். நந்தனார் அனலிடை மூழ்கி எழுந்த காட்சி செந்தாமரை மலர் மீது தோன்றிய பிரம்ம தேவரைப் போல் இருந்ததாம். நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்தனர். அவரை வாழ்த்தி வணங்கினார். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர்.
நான் மறைகள் ஒலித்தன. அந்தணர் வழிகாட்ட நாந்தனார் முன் சென்றார். கரங்குவித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் சென்றார். குவித்த கரங்களோடு திருமுன் சென்றவர் திரும்பவே இல்லை ! அம்பலத்தரசன் திருவடி நீழலிலேயே ஐக்கியமாகி, உமையொரு பாகரோடு கலந்தார் நந்தனார் ! எம்பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார் நந்தனார்.
குருபூஜை: திருநாளைப் போவார் நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருநாளைப்போவார் அடியார்க்கடியேன்!
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |