Digital Library
Home Books
ராம காரியமாக செல்லும் அனுமன் வானரங்களிடம் பேசினார். இலங்கை செல்லப் போகிறேன். அங்கு சீதையை காணவில்லை என்றால் அங்கிருந்து தேவலோகத்திற்கு தாவிச் சென்று தேடுவேன். அங்கும் இல்லை என்றால் சீதையை தூக்கிச் சென்ற ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். தேவைப்பட்டால் இலங்கை மொத்த நகரத்தையும் பெயர்த்தெடுத்து வந்து விடுவேன் என்றார். தன்னை கருடனாகவே பாவித்துக் கொண்டு ராம பாணத்தில் இருந்து வேகமாக வெளியேரும் அம்பு போல் அனுமன் வேகமாக தாவினார் அனுமன். அனுமன் ஆகாயத்தில் செல்லும் வேகத்தில் அங்கிருக்கும் மேகக்காற்று எழுப்பிய சத்தங்கள் பெருங்கடலை நடுங்கச் செய்தது. சூழ்நிலைக்கு ஏற்ப சாமர்த்தியமும் அறிவும் சிந்தனை வேகமும் கொண்ட அனுமனுக்கு வழியில் சில சோதனைகள் வந்தது. வானவீதியில் செல்லும் அனுமனை முனிவர்கள் வாழ்த்தினார்கள்.
ராம காரியமாக செல்லும் அனுமனை பார்த்த கடலரசன் அனுமனுக்கு உதவி செய்ய எண்ணினார். கடலின் நடுவில் அனுமன் இளைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செவ்வோம் இதனால் அனுமன் மேலும் புத்துணர்ச்சியுடன் செல்வார் என்று எண்ணினார். தனது கடலுக்குள் இருக்கும் மைனாகம் என்னும் மலையிடம் தண்ணிருக்குள் இருந்து மேலே வந்து அனுமனுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கடலரசன் கேட்டுக் கொண்டதால் மைனாகம் என்னும் மலை தண்ணீரில் இருந்து விரைவாக மேலே இருந்து வந்தது. கடலுக்கு நடுவே தானாக மேலெழுந்து வரும் மலையைப் பார்த்து இந்த மலை நமக்கு நடுவே ஒர் இடையூறாக இருக்கிறது என்று எண்ணிய அனுமன் மிகவும் வேகத்தோடு அந்த மலையை மேகத்தை தள்ளுவது போல தள்ளினார். அனுமனால் தள்ளப்பட்ட மலையானது அனுமனின் வேகத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பெரிதும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தது. மலை வடிவில் இருந்து மனித உருவத்தை பெற்று அனுமனிடம் பேசத் தொடங்கியது.
ராம காரியமாக செல்லும் தங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கடலரசன் என்னை வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுப் பிறகு செல்லுங்கள் என்றது மைனாகம் மலை. அதற்கு அனுமன் உங்கள் வரவேற்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் எனக்கு இங்கு தங்குவதற்கு நேரம் இல்லை. நான் இங்கு தங்கிச் சென்றால் ராம காரியம் மேலும் தாமதமாகும். நான் விரைவாக செல்ல வேண்டும். உங்களை எனது வேகத்தால் தள்ளியதாலும் இங்கு தங்க மறுப்பதாலும் என் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்று மலையை கடந்து சென்றார் அனுமன். அனுமனின் பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் மேலும் அனுமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் பார்க்க விரும்பினார்கள். அதனால் நாகமாதாவான சுரஸையிடம் ராம காரியமாக அனுமன் கடலை தாண்டிக் கொண்டிருக்கிறார் அவர் செல்லும் வழியில் சென்று இடையூறு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நாகமாதா சுரஸையும் சம்மதித்து அனுமன் தாண்டிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள்.
ராம காரியமாக செல்லும் அனுமனின் முன்பாக கொரமான பெரிய ராட்சச உருவத்தை எடுத்த நாகமாதா சுரஸை அனுமனை தடுத்து நிறுத்தினாள். வானர வீரனே இன்று தெய்வங்களின் அருளால் எனக்கு நீ உணவாக கொடுக்கப் பட்டிருக்கிறாய். உன்னை சாப்பிடப் போகிறேன் எனது வாய்க்குள் நீயாக சென்றுவிடு என்றாள். அவளை வணங்கிய அனுமன் ராம காரியமாக இப்பொழுது நான் இலங்கைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் இங்கு உனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கின்றேன். இலங்கையில் சீதையை கண்டதும் அச்செய்தியை ராமரிடம் சொல்லி விட்டு மீண்டும் உன்னிடம் வந்து உனது விருப்பப்படி வாய்க்குள் செல்கிறேன். இப்பொழுது ராம காரியத்துக்கு செய்யும் உதவியாக எனக்கு வழி விடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.
அனுமன் கூறியதை கேட்ட சுரஸை என்னை தாண்டி யாரும் செல்ல முடியாது இது பிரம்மாவினால் எனக்கு கொடுக்கப்பட்ட வரம் எனது வாய்க்குள் சென்று வெளியே வர முடிந்தால் நீங்கள் செல்லலாம் என்று தனது வாயை திறந்து வைத்துக் கொண்டாள் சுரஸை. அனுமன் தன் உடலை மேலும் பத்து மடங்கு பெரியதாக்கி கொண்டு எனது உடல் செல்லும் அளவிற்கு உனது வாயை திறந்து கொள் என்றார் அனுமன். சிரஸை தன் உடலை அனுமன் உடலை விட இருபது மடங்கு பெரியதாக்கிக் கொண்டாள். சாமர்த்தியசாலியான அனுமன் சில கனத்தில் தனது உடலை கட்டை விரல் அளவிற்கு சிறியதாக்கிக் கொண்டு வேகமாக சுரஸையின் வாய்க்குள் புகுந்து வேகமாக வெளியே வந்து சுரஸையின் முன்பாக நின்றார். ராட்சசியே ராம காரியத்தை முடித்ததும் உனது வாய்க்குள் புகுவேன் என்று முன்பு நான் கொடுத்த உறுதி மொழியை இப்போதே நிறைவேற்றி விட்டேன். பிரம்மாவினால் உனக்கு கொடுத்த வரத்தையும் நான் மீறவில்லை. இப்பொது நான் உன்னை தாண்டி செல்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை தடுத்துப்பார் என்றார். உடனே சுரஸை தனது சுய உருவத்தை அடைந்து தேவர்கள் உங்களது பராக்கிரமத்தையும் சாமர்த்தியத்தையும் பார்ப்பதற்காக என்னை அனுப்பியிருந்தார்கள். விரைவில் ராம காரியத்தை முடிப்பீர்களாக என்று வாழ்த்தி அனுமன் செல்ல வழி கொடுத்தாள்.
அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அனுமனுக்கு அடுத்த சோதனை வந்தது. ராட்சச பிராணி ஒன்று அனுமனை பார்த்து இன்று உணவு கிடைத்து விட்டது என்று அனுமனின் நிழலைப் பிடித்து இழுத்தது. தன்னை யாரோ பிடித்து இழுப்பது போலவும் தனது வேகம் குறைவதையும் உணர்ந்த அனுமன் தன்னைச் சுற்றிப் பார்த்தார். கடலில் இருக்கும் ஒரு ராட்சச பிராணி தன் நிழலை பிடித்து இழுப்பதை பார்த்தார். இந்த பிராணியை பற்றி சுக்ரீவன் ஏற்கனவே சொல்லியிருப்பது அனுமனுக்கு நினைவு வந்தது. நிழலைப் பிடித்து இழுத்து சாப்பிடும் சிம்ஹிகை என்ற பிராணி என்று தெரிந்து கொண்டு தன் உடலை மேலும் பெரிதாக்கினார்.
பிராணியும் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அனுமன் உள்ளே செல்லும் அளவிற்கு தனது வாயை திறந்து கொண்டு அனுமனை நோக்கி விரைந்து வந்தது. அனுமன் தன் உடலை சிறியதாக்கிக் கொண்டு மனோ வேகத்தில் பிராணியின் வாய் வழியாக அதன் வயிற்றுக்குள் புகுந்து தனது நகங்களால் வயிற்றை கிழித்து ராட்சச பிராணியை கொன்று வெளியே வந்தார். பிராணி இறந்து கடலில் மூழ்கியது. தனது உடலை பழையபடி பெரியதாக்கி இலங்கை நோக்கி சென்றார். தூரத்தில் மரங்களும் மலைகளும் அனுமனுக்கு தெரிந்தன. இலங்கை வந்து விட்டோம் என்பதை அறிந்தார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இலங்கை சென்றால் தூரத்தில் வரும் போதே நம்மை கண்டு பிடித்து விடுவார்கள் யாருக்கும் தன்னைப்பற்றி தெரியக்கூடாது என்று எண்ணிய அனுமன் தனது இயற்கையான உருவத்திற்கு மாறி இலங்கையில் உள்ள லம்பம் என்னும் மலை சிகரத்தின் மீது இறங்கினார்.
அனுமன் சுற்றிலும் பார்த்தார். இலங்கையின் வளம் குபேரனின் அழாகபுரியை போல் ஜஸ்வர்யத்தின் உச்சத்தில் இருந்தது. திருகூட மலையில் ராவணனின் கோட்டை தாமரை நீலோத்பலம் என்னும் மலர்களால் அகழி போல சுற்றி அழகுடன் இருந்ததை கண்டார். இலங்கை நகரத்தை விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்ளும் வலிமையான ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அனுமன் நிதானமாக யோசித்தார். நாம் யார் எங்கிருந்து வந்திருக்கின்றோம் எதற்காக வந்திருக்கின்றோம் என்று யாருக்கும் தெரியாத வகையில் சீதையை தேட வேண்டும் என்று முடிவு செய்தார். பகலில் சென்றால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்று இரவு வரை காத்திருந்த அனுமன் மிகவும் சிறிய உருவத்திற்கு மாறினார். இலங்கையின் நகரத்திற்குள் நுழைய முற்பட்டார். இவ்வளவு காவல் இருக்கும் நகரத்திற்குள் புகுந்து எப்படி சீதையை தேடுவது என்ற வருத்தமும் விரைவில் சீதையை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் சென்றார் அனுமன். விரோதியின் கோட்டையின் நுழைவு வாயில் வழியாக செல்லக்கூடாது என்ற யுத்த நியதியின்படி வேறு வழியாக ராம காரியம் நிறைவு பெற வேண்டும் என்று எண்ணி தனது இடது காலை வைத்து இலங்கை நகரத்திற்குள் நுழைந்தார் அனுமன்.
அனுமன் நகரத்திற்குள் தனது இடது காலை வைத்ததும் இலங்கை நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்த அதிதேவதை அனுமனின் முன்பு வந்து யார் நீ என்று இறுமாப்புடன் அதட்டலாக கேட்டாள். அதற்கு அனுமன் நான் சாதாரண வானரன் இந்த நகரத்தின் அழகை கண்டு ரசித்துப் பார்க்க வந்தேன். ஆசை தீர இந்த நகரத்தை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிச் சென்று விடுவேன் என்று கூறினார். என்னை மீறி இந்த நகரத்திற்குள் யாரும் செல்ல முடியாது என்னை வெற்றி பெற்றால் மட்டுமே செல்ல முடியும் என்றாள் அதிதேவதை. அனுமன் நான் உள்ளே செல்வேன் என்னை தடுக்க நீ யார் என்று கேட்டார். அனுமனின் கேள்வியால் கோபமடைந்த அதிதேவதை அனுமனை ஒர் அடி அடித்தாள். இதனால் கோபம் கொண்ட அனுமன் அதிதேவதை ஒரு பெண் என்பதால் தனது இடக்கையால் லேசாக குத்தினார்.
அனுமனின் லேசான குத்தில் கீழே சுருண்டு விழுந்தாள் அதிதேவதை. கலங்கிப் போன தேவதை தனது இறுமாப்பை அடக்கிக் கொண்டு பார்க்கிரமம் உடையவரே இந்த இலங்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதிதேவதை நான். ஒரு முறை பிரம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு பிரம்மா எப்பொழுது ஒரு வானரன் தனது பராக்கிரமத்தினால் உன்னே அடக்குகின்றானோ அப்பொழுது ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள் என்று கூறியிருந்தார். அதன்படி இப்பொழுது நீங்கள் உங்கள் பராக்கிரமத்தினால் என்னை அடக்கி விட்டீர்கள். இதனால் ராட்சசர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போது நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த இலங்கை நகரத்திற்குள் சென்று உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தாள்.
அனுமன் நகரத்திற்குள் காலை வைத்ததும் எதிரியின் தலை மீது தன் காலை வைப்பது போலிருந்தது அனுமனுக்கு. குபேரனின் நகரத்திற்கு இணையாக அழகுடனும் செல்வச் செளிப்புடனும் இருந்தது நகரம். மாளிகைகள் வீடுகள் அனைத்தும் தங்கத்தாலும் நவரத்தினங்களாலும் ஜொலித்தது. வீதிகள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரத்திற்குள் கொடூரமான வடிவத்துடன் வில் அம்பு கத்தி என்று பல விதமான ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு கவசத்துடன் வீரர்கள் பலர் நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் அகோரமாகவும் பல நிறங்களையும் பல வடிவங்ளையும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வோரு மாளிகையாக அனுமன் தேடிக்கொண்டே வந்தார். எங்கும் சீதையை பார்க்க முடியவில்லையே என்று அனுமன் வருத்தமடைந்தார்.
அனுமன் விண்ணையே முட்டும் அளவிற்கு பெரிய மாளிகை ஒன்றை கண்டார். அங்கு ராவணனின் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் பிரம்மாவிடம் இருந்து குபேரன் பெற்றிருந்தான். அதை ராவணன் கொண்டு வந்து வைத்திருந்தான். புஷ்பக விமானத்தை பார்த்த அனுமன் இது ராவணனின் மாளிகையாக இருக்கும் என்று எண்ணி இங்கு சீதை இருக்கலாம் என்று ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தார். சமைக்கும் இடம் உணவருந்தும் இடம் என்று ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார் எங்கும் சீதையை காணவில்லை. பெண்கள் மட்டும் இருக்கும் அறைக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்ற தர்மத்தையும் மீறி பெண்களின் அறைக்குள்ளும் சென்று பார்த்தார் அங்கும் சீதை இல்லை. ஓர் அறையில் தங்கத்தினாலும் வைரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு கட்டிலில் ஓர் மலை போல் ஒர் ராட்சசன் படுத்திருந்தான். அவனுடைய ரூபத்தை கண்டு அனுமன் ஒரு சில கனம் பிரம்மித்து நின்று பார்த்தார்.
யானையின் தும்பிக்கை போன்ற கைகளும் மார்பில் விஷ்ணுவின் சக்ராயுதம் மற்றும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட வடுவும் இந்திரனின் ஐராவதன் யானையின் தந்தம் குத்தப்பட்ட தழும்புடன் இருப்பதை பார்த்த அனுமன் படுத்திருப்பது ராவணன் உன்பதை தெரிந்து கொண்டார். அனுமன் சுற்றிலும் பார்த்தார் பல பெண்கள் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்த பெண்ணின் அழகும் முக லட்சணமும் அவை சீதையாக இருக்குமோ என்று அனுமனுக்கு சந்தேகம் வந்தது. அடுத்த கனம் இது என்ன மடமை சீதையை தவறாக நினைத்து விட்டோமே ராமரை பிரிந்த சீதை துக்கத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ராவணனின் அந்தப்புரத்திலா தங்கியிருப்பாள். இது சீதை கிடையாது என்று முடிவு செய்தார்.
அனுமன் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தன் உருவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொண்டு சென்று தேடி பார்த்தார். இலங்கை நகரம் முழுவதும் தேடி விட்டார். ராவணன் மாளிகை முழுவதும் தேடி விட்டார். சீதை எங்கும் காணவில்லை. என்ன செய்வது என்று அனுமனுக்கு தெரியவில்லை. சீதையை ராவணன் கொன்றிருப்பானோ என்ற சந்தேகம் அனுமனுக்கு வந்தது. இனி என்ன செய்வது சீதையை காணாமல் கிஷ்கிந்தைக்கு திரும்ப முடியாது. எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்காமல் திரும்ப செல்வது வீரனுக்கு அழகில்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று எண்ணி மனம் சோர்வடைந்து உயரமான ஓர் இடத்தில் அமர்ந்தார் அனுமன். தூரத்தில் பெரிய மதில் சுவருடன் கூடிய அசோகவனம் கண்ணில் பட்டது. இலங்கை நகரத்திற்கு தொடர்பில்லாமல் தனியாக இருந்தது அசோகவனம்.
இந்த வனத்தில் சீதை இருக்கலாம் என்று புத்துணர்ச்சி அடைந்தார் அனுமன். அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு அசோக வனத்திற்குள் குதித்தார் அனுமன். உள்ளே குதித்ததும் அனுமனுக்கு மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. இங்கு நிச்சயம் சீதையை காண்பேன் என்று புத்துணர்ச்சி அடைந்தார். உயரமான மரத்தின் மீது நின்று கொண்டு சீதையை தேட ஆரம்பித்தார். தூரத்தில் ஓர் மரத்தடியில் கண்ணைக் கூசும் வகையில் பேரழகுடன் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டார். அவரை சுற்றி அகோர வடிவத்துடன் ராட்சசிகள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ராட்சசிகளின் நடுவே தெய்வீகமான முகத்தில் நடுக்கத்துடன் கசங்கி அழுக்கு படிந்த உடையில் பயமும் துயரத்தையும் வைத்துக் கொண்டு அழுததினால் முகம் வாடியிருப்பதையும் கண்டதும் இவரே சீதை என்று முடிவு செய்தார்.
அனுமன் சீதையை பார்த்துவிட்டேன் என்று துள்ளி குதித்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று சுற்றிலும் பார்த்தார். சீதையை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த அனுமன் அவரின் நிலையை கண்டதும் மிகவும் துக்கமடைந்தார். அப்போது இருட்டு மறைந்து காலை சூரியன் மெல்ல வெளிவந்தது. வேத மந்திரங்கள் முழங்க ராவணன் எழுப்பப்பட்டான். காலையில் எழுந்ததும் தன் படை பரிவாரங்களுடன் சீதையை பார்க்க ராவணன் வந்தான். இரவில் தூங்கும் பொது கண்டதை விட இப்போது மேலும் பராக்கிரமசாலி போல் ராவணன் அனுமனுக்கு தெரிந்தான். நடப்பவற்றை அறிந்து கொள்ள அனுமன் மரத்து இலைகளுக்கிடேயே தன்னை மறைத்துக் கொண்டார். சீதை ராவணனை கண்டதும் பெரும்காற்றில் மரங்கள் நடுங்குவதை போல நடுங்கினாள். சீதையிடம் ராவணன் பேச ஆரம்பித்தான். அழகியே என்னை கண்டதும் ஏன் நடுங்குகிறாய் நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை நீ தெரிந்து கொள். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்.
உன்னுடைய முழுமையான அன்பு என் மீது வரும் வரையில் நான் உன்னை தொட மாட்டேன். உன் விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காது. வீணாக தூக்கத்துடன் இருந்து உன் உடலை ஏன் நீ வருத்திக் கொள்கிறாய். உனக்கு சமமான அழகி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. நகைகள் வைர வைடூரியங்கள் அணிந்து பட்டு துணிகளை அணிந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீ ஏன் உன் அழகையும் வயதையும் வீணடித்துக் கொள்கிறாய். நான் இருக்குமிடம் நீ வந்து சேர்ந்து விட்டாய். என்னுடன் சேர்ந்து நீ சகல சந்தோசங்களையம் போகங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம். நீயே பட்டத்தரசியாக இருந்து என் அந்தப்புரம் முழுவதையும் அதிகாரம் செய்து நீயை தலைவியாக இருக்கலாம். தவத்திலும் செல்வத்திலும் புகழிலும் ராமனை விட நானே மிகவும் மேம்பட்டவன் என்பதை தெரிந்துகொள். காட்டில் மரவுரி தரித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை இனியும் நம்பாதே. இனி நீ அவனை நீ கண்ணால் பார்க்க முடியாது. அவன் இங்கு வரமட்டான். என் சொல்லை கேட்டால் சகல ஜஸ்வர்யங்களையும் அனுபவிக்கலாம் என்று சீதையிடம் ராவணன் நயத்துடன் கூறினான்.
அனுமன் ராவணன் பேச்சில் மேலும் துள்ளிக்குதித்தார். இவரே சீதை என்பது உறுதியாகி விட்டது என்று ஆனந்தப்பட்டார். ராவணனின் பேச்சிற்கு சீதை தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதில் கூறினாள். நீ செய்வது பேசுவது அனைத்தும் தகாத காரியமாக இருக்கிறது. நான் யார் என்பதையும் என் பிறந்த வீடு புகுந்த வீட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு பேசு. என்னை பற்றிய உன் எண்ணத்தை உடனே மறந்துவிடு. வேறொருவன் மனைவி எப்போதும் உன் மனைவியாக முடியாது. தர்மத்துடன் உன் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து உன் உயிரை காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் அவமானத்தையும் துக்கத்தையும் நீ விரைவில் அடைவாய் தெரிந்து கொள் என்று மேலும் சீதை பேசினாள்.
சீதை தொடர்ந்து ராவணனிடம் பேசினாள். ராமர் ராட்சசன் ஒருவனை அழித்து விட்டார் என்ற பயத்தில் தானே அவர்கள் இல்லாத நேரம் பார்த்து என்னை நீ தூக்கிக் கொண்டு வந்தாய். அவர்களுக்கு முன்பாக உன்னால் நான் இருக்கும் இடத்திற்கு அருகில் கூட உன்னால் வர முடியாது. இதுவே உன்னுடைய வீரம் என்பதை நான் தெரிந்து கொண்டேன். நீ என்னிடம் கூறிய உன்னுடைய செல்வங்கள் ஜஸ்வர்யங்கள் போகங்கள் என ஒன்றும் எனக்கு தேவை இல்லை. அவற்றை வைத்து நீ எனக்கு ஆசை காட்ட வேண்டாம். இதனால் உனக்கு ஒரு பயனும் இல்லை. நான் சக்கரவர்த்தியின் திருமகன் ராமருக்கு உரியவள். ராமரை விட்டு நான் விலக மாட்டேன். உனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்கிறேன் கேட்டுக்கொள்.
முதலில் ராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவரின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள். ராமர் உன்னை மன்னிப்பார். அவரை சரணடைந்து அவருடைய அன்பை பெற்றுக் கொள். சரணடைந்தவர்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார். உன்னை சுற்றி இருப்பவர்களில் உனக்கு நல்ல புத்தி சொல்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லையா? ஏன் இவ்வாறு கெட்ட காரியங்கள் செய்து உனக்கு கெடுதலை உண்டாக்கிக் கொண்டு உன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் அழிவை தேடிக் கொடுக்கிறாய். அரசன் ஒருவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் சீக்கிரம் அழிந்து போகும். உன்னுடைய பொறுப்பை புரிந்து கொண்டு உன்னுடைய எண்ணத்தை விட்டுவிட்டு உன்னையும் உன் அரசையும் காப்பாற்றிக்கொள் இல்லையென்றால் ராம லட்சுமணர்களின் அம்பு சீக்கிரமே இந்த இலங்கையை அழிக்கும் என்று சொல்லி முடித்தாள்.
சீதை பேசியதில் கோபமடைந்த ராவணன் கர்ஜனையுடன் பேசினான். உன் மீது நான் வைத்திருக்கும் அன்பே உன்னை இப்போது காப்பாற்றியது. இல்லை என்றால் நீ பேசிய பேச்சிற்கு உன்னை கொன்றிருப்பேன். உனக்கு நான் கொடுத்த காலம் முடிய இன்னும் 2 மாதம் மட்டுமே இருக்கிறது ஞாபகம் வைத்துக்கொள். அதற்குள் நீ சம்மதிக்கவில்லை என்றால் ஏற்கனவே நன் சொன்னது போல் என் சமையல் அறையில் உன்னை எனது சமையல் கலைஞர்கள் சமைத்து விடுவார்கள் ஜாக்கிரதை என்று கத்தினான். ராவணனுடைய கோபம் அதிகரித்ததை கண்ட அவனது மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலி என்பவள் ராவணனிடம் உங்களை அடையும் பாக்கியம் இந்த மானிட பெண்ணிற்கு இல்லை. இவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. இவளது பேச்சிற்கு நீங்கள் ஏன் கோவப்படுகின்றீர்கள் வாருங்கள் நாம் செல்லலாம் என்று வற்புறுத்தி ராவணனை அழைத்தாள். ராவணன் சீதையை காவல் காக்கும் ராட்சசிகளிடம் எப்படியாவது இவளை நீங்கள் என் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது மாளிகைக்கு திரும்பினான்.
சீதையை சுற்றி ராட்சசிகள் நின்று கொண்டார்கள். ராவணன் முன்பு தைரியமாக பேசிய சீதை சுற்றி நெருங்கி நிற்கும் ராட்சசிகளின் அகோர உருவங்களை கண்டு பயந்து நடுங்கினாள். ராட்சசிகள் சீதையிடம் பேச ஆரம்பித்தார்கள். உலகம் முழுவதும் புகழும் வீரரான ராவணன் உன்னை விரும்பும் பொழுது நீ வேண்டாம் என்ற சொல்வாய் மூட பெண்ணே. ராவணனை யார் என்று தெரிந்துகொள். பிரம்மாவின் புத்திரரான புலஸ்த்திய பிரஜாபதியினுடைய பேரன் ராவணன். விச்ரவஸ் ரிஷியின் மகன். அவர் சொல்படி கேட்டு நடந்து கொள் இல்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என்றாள் ஒரு ராட்சசி. இன்னோரு ராட்சசி தேவர்களை எல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்த வெற்றி வீரன் ராவணன் உன்னை தேடி வருகின்றார். சூரியனும் அக்னியும் வாயுவும் கூட ராவணனை கண்டு பயப்படுவார்கள். ராவணனுக்கு சமமான வீரன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை இது உனக்கு தெரியவில்லையா? தானாகவே ஒரு பாக்கியம் உன்னை வந்து சேருகிறது அதை வேண்டாம் என்று நீ சொல்வது மடத்தனமாக இருக்கிறது. கர்வப்பட்டு அழிந்து போகாதே அவர் சொல்படி நீ கேட்காவிட்டால் நீ பிழைக்க மாட்டாய் என்றாள். ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். ராவணனைப் பற்றி பெருமையாகவும் ராமரை சிறுமைப்படுத்தியும் தங்களால் இயன்ற வரை அமைதியாகவும் சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதியில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய விருப்பம் என்று கூறினார்கள்.
ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து இந்த ராட்சசர்கள் அனைவரையும் அழித்து நம்மை வந்து மீட்பார் என்று மன தைரியத்தில் இருந்த சீதை ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசம் சுற்றி நிற்பது போல் நான் எனது ராமனை சுற்றியே நின்று கொண்டிருப்பேன். நீங்கள் ராமரைப் பற்றிய தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். ஒரு மனித பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது முறையில்லை. ஒரு மனித பெண் எப்படி ராட்சசனுடன் இருக்க முடியும். நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். இதனைக் கேட்ட ஒரு ராட்சசி சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை அவளைத் தின்று விடலாம் என்றாள். இன்னொரு ராட்சசி அவள் மார்பை கிழித்து இதயத்தை நான் நின்று விடுகிறேன் என்றாள். ராவணன் சீதை எங்கே என்று கேட்டால் சீதை துக்கத்தில் இறந்து விட்டாள் என்று சொல்லி விடலாம்.
இதனால் ராவணன் இனி எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவார். இப்போது இவளை நாம் அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம் என்று ஒவ்வொரு ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி தின்று விடுவதாக அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை ராமரை நினைத்துக் கொண்டாள். தண்ட காருண்ய காட்டில் 14000 ராட்சசர்களை சில கனங்களில் கொன்ற ராமர் ஏன் இன்னும் என்னை மீட்டு போக வரவில்லை நாம் இருக்கும் இடம் இன்னும் அவருக்கு தெரியவில்லையா தெரிந்தால் சும்மா இருப்பாரா என்று நினைத்துக் கொண்டே வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள் அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி சீதையை எப்படி திண்பது என்று சீதை முன்பாக அவளை பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
ராமரைப் பற்றி சீதை பல வகையில் நினைக்க ஆரம்பித்தாள். ராட்சசன் நம்மை தூக்கி வந்ததும் நாம் அவரை பிரிந்த துக்கத்தில் தவத்தில் ஈடுபட்டு ஆயுளைக் கழித்து விடலாம் என்ற எண்ணத்தில் காட்டில் தவத்தில் அமர்ந்து விட்டாரோ என்று நினைத்தாள். மனம் துக்கத்தில் இருக்கும் போது அமைதியாக தவம் செய்ய முடியாது ஆகவே தவத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதன் பிறகு நம் மீது ராமருக்கு அன்பு குறைந்து விட்டதோ அதனால் நம்மை தேடி வரவில்லையோ என்று நினைத்தாள். நம் மீது ராமர் காட்டும் அன்பு உண்மையானது அவர் நம்மை மறக்க மாட்டார். இப்படி ஒரு எண்ணம் நமக்கு வரக்கூடாது. இந்த எண்ணம் பாவமாகும் என்று நினைத்தாள். அதன் பிறகு ராவணன் நம்மை ஏமாற்றி தூக்கி வந்தது போல் ராமரையும் லட்சுமணனையும் ஏமாற்றி யுத்தம் செய்து கொன்றிருப்பானோ என்று நினைத்தாள்.
ராமர் மிகவும் அறிவும் வலிமையும் உடைய வீரர். அவருடன் லட்சுமணனும் இருக்கின்றான். அவரை எப்படி ஏமாற்ற நினைத்தாலும் அவரை ஏமாற்றி யுத்தம் செய்து வெற்றி அடைய முடியாது என்று நினைத்தாள். அதன் பிறகு நான் இல்லாத துக்கத்தில் ராமர் இறந்து விட்டாரோ அப்படி இருந்தால் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருப்பார். நான் அவரை பிரிந்த துக்கத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறேனே நான் எவ்வளவு பெரிய பாவியாக இருக்கிறேன். இப்போதே எமது உயிரை விட்டுவிட்டு ராமர் இருக்கும் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று தனது தலை முடியில் மரத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டு உடலை விட்டு விடலாம் என்று எண்ணினாள். அப்போது திரிஜடை என்ற ராட்சசி அங்கு வந்து ராட்சசிகள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். சீதையின் முன்பாக அவளை பயமுறுத்தி இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கண்டித்தாள். நான் ஒரு கனவு கண்டேன் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள்.
ராமர் சூரியனைப் போல் திவ்ய பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டு இலங்கைக்கு வந்து ராவணனை அழித்து அவனை எமலோகத்திற்கு அனுப்புவதையும் ராவணனை சார்ந்திருக்கும் அவனது ராட்சசர்கள் அனைவரும் அவலட்சணமான துணிகளை உடுத்திக்கொண்டு அவலட்சணமான நிலையில் எமனால் இழுத்துச் செல்வதையும் ராமர் ஒரு யானை மீது பட்டத்து மகாராணி போல் சீதையை அழைத்துச் செல்வதையும் கனவாக கண்டேன். இந்த சீதை மிகவும் புண்ணியவதி. இவளிடம் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் விரைவில் நாம் அழிந்து போவோம். அவளிடம் நல்ல விதமாக பேசி அவளுடைய அருளை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாள். பயந்த ராட்சசிகள் அனைவரும் சீதையை விட்டு விலகி நின்றார்கள். திரிஜடை ராட்சசி பேசியதை கேட்ட சீதை உடனடியாக மனம் மாறி தனது உயிரை விடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தைரியமடைந்தாள்.
அனுமன் மரத்தின் மீதிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு பல வகையில் சிந்தனை செய்தார். சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இது ராட்சசர்களுடைய நகரம் இங்கு காவல் மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது நாம் இங்கிருந்து ராமர் இருக்குமிடம் சென்று சீதை இருக்குமிடத்தை அவரிடம் சொல்லி அதன் பிறகு ராமர் லட்சுமணர்கள் இங்கு வருவதற்குள் சீதை துக்கம் தாளாமல் தன் உயிரையே விட்டு விட்டால் என்ன செய்வது எனவே சீதையிடம் ராமன் விரைவில் வருவார் அவரது உத்தரவின் படியே உங்களை தேடி அனுமனாகிய நான் வந்திருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு நாம் இங்கிருந்து செல்லலாம் என்று முடிவு செய்தார் அனுமன். யாருக்கும் தெரியாமல் சீதையிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தனை செய்தார் அனுமன். காவல் காக்கும் ராட்சசிகள் அனைவரும் தூங்க ஆரம்பித்தார்கள். இதுவே நல்ல சமயம் என்று சீதையின் அருகில் செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் சீதையின் முன்பாக திடீரென்று ஒரு வானரம் சென்று பேச ஆரம்பித்தால் ராவணன் ஏதோ ஏமாற்று வேலை செய்கின்றான் என்று நம்மை கண்டு பயத்தில் கத்தி கூச்சலிட்டால் ராமர் கொடுத்த மோதிரத்தை காண்பிக்க முடியாமலே போய்விடும். சீதையை சுற்றி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசிகள் அனைவரும் வந்து விடுவார்கள். அவர்களை யுத்தம் செய்து சமாளிக்கலாம்.
ஆனால் மேலும் பல ராட்சசர்கள் வருவார்கள் அனைவரையும் நமது வலிமையால் சமாளித்து விடலாம். ஆனால் இவ்வளவு ராட்சசர்களை எதிர்த்து யுத்தம் செய்து சோர்வு ஏற்பட்டாலோ உடலுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மீண்டும் இங்கிருந்து நூறு யோசனை தூரம் தாண்ட முடியாமல் போய்விடும். இதனால் ராமருக்கு சீதை இருக்குமிடத்தை சொல்ல முடியாமல் போகும். எனவே ராமரின் தூதன் நான் என்பதை முதலில் சீதைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணி ஒரு வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த ஆரம்பித்தார். மரத்தின் மீது இருந்து ராம நாமத்தை சத்தமாக செபிக்க ஆரம்பித்தார். ராமருடைய சரித்திரத்தையும் குணங்களையும் சீதை கேட்கும்படி மெதுவான குரலில் தசரதருடைய குமாரர் ராமர் என்று ராமப்பற்றி சொல்ல ஆரம்பித்து சீதையை தேடி வந்திருப்பது அனுமன் என்று முடிக்கும் வரையில் கூறினார் அனுமன்.
அனுமனின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைந்த சீதை யாருடைய குரல் இது என்று சுற்றிலும் தேடினாள். ஒருவரும் அவளது கண்களுக்கு தெரியவில்லை. மரத்தின் மீது பார்த்தாள். ஓரு வானரம் மட்டும் மரத்தில் மறைந்திருப்பதை கண்டாள். காதில் விழுந்த வார்த்தைகளும் கண் முன்பே தெரியும் வானரமும் நமது கனவாக இருக்கும் என்று யூகித்தாள் சீதை. ஆனால் இப்போது விழித்து விட்டோமே இன்னும் இந்த வானரம் கண்ணுக்கு தெரிகிறதே என்று குழப்பமடைந்தாள். சில கனங்களில் தெளிவடைந்த சீதை இது கனவல்ல நிஜம் தான் என் காதில் விழுந்த சொற்கள் உண்மையாக இருக்கட்டும் என்று அனைத்து தெய்வங்களையும் வணங்கினாள். என் ராமரிடம் இருந்து தூதுவன் வந்திருக்கின்றான் இது உண்மையாக இருக்க வேண்டும் என்று அனுமனுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தாள் சீதை.
ராமரின் மனைவி சீதை இவர் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்த அனுமன் சீதையை வணங்கி சீதையிடம் கேள்வி கேட்டார். தாயே மானிடப் பெண்ணாக இருக்கும் உங்களின் முகம் கண்ணிருடன் இருக்கின்றது. நீங்கள் யார்? இந்த வனத்தில் ராட்சசிகளுக்கு நடுவில் ஏன் இருக்கின்றீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள். ராமரிடம் இருந்து ராவணனால் தூக்கி வரப்பட்ட சீதை தாங்கள் தானா என்று கேட்டார் அனுமன். அனுமனின் பேச்சில் மகிழ்ந்த சீதை நான் தான் சீதை விதேஹ ராஜனுடைய மகள் ராமரின் மனைவி. பன்னிரண்டு வருட காலம் சகல சுகங்களையும் ராமருடன் அயோத்தியில் அனுபவித்தேன். 13 ஆம் வருடம் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும் ராமரைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி நாங்கள் காட்டுக்குள் பன்னிரண்டு வருட காலம் வனவாசம் வந்தோம். அப்போது ராவணன் எங்களை வஞ்சகம் செய்து என்னை பலாத்காரமாக தூக்கி வந்து இங்கே சிறை வைத்திருக்கிறான். ராவணனின் சொல்படி நான் கேட்க வேண்டும் என்று எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்திருக்கின்றான். இந்த காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது அது முடிந்தவுடன் அவன் என்னை கொன்று விடுவான் என்று சொல்லி முடித்தாள் சீதை.
ராமர் வரும் வரையில் சீதையின் துயரத்தை போக்கி அவருக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்று அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். தாயே வீரர்களுக்கு எல்லாம் வீரரான தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ராமர் உங்களுக்கு தன்னுடைய நலத்தை சொல்லி அனுப்பினார். அவருடைய அன்பு தம்பியான லட்சுமணன் உங்களை இடைவிடாது நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கின்றார். தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு சொல்லி என்னை அனுப்பினார். ராம லட்சுமணர்களின் பெயர்களை கேட்டதும் சீதையின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. அடுத்த கனம் சீதையின் மனதில் வந்திருப்பது ராவணனாக இருக்குமோ என்று பயம் வந்தது. அனுமனின் பேச்சில் நம்பிக்கை இழந்த சீதை நம்மை ஏமாற்றுவதற்காக ராவணன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றானா என்று நினைத்து அவளது மனம் தடுமாறியது. வந்திருப்பது ராமரின் தூதுவனா இல்லை ராவணனா என்று கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் அனுமனை பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். இதைக் கண்ட அனுமன் கைகூப்பியபடி சீதையின் அருகில் சென்றார். உடனே சீதை பேச ஆரம்பித்தாள். நான் ஏமாந்தேன். முன்பு தண்டகாருண்ய வனத்தில் ராமருடன் இருக்கும் போது சந்நியாசி வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி தூக்கிக் கொண்டு வந்தாய். இப்போது வானர வேடத்தில் வந்து ஏதேதோ பேசி என்னை வருத்துகிறாய் ராவணா இது உனக்கு நல்லதல்ல. துக்கத்தில் இருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே விலகிப்போ என்று மௌனமானாள் சீதை.
ராமனிடமிருந்து சீதையை ராவணன் ஏமாற்றி தூக்கி வந்ததால் சீதை பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த அனுமன் அவளின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும் யோசித்து மீண்டும் சீதையிடம் பேசினார். பூமியில் ஆளும் அரசர்கள் அனைவரும் தலைவனாக மதிக்கும் ராமர் அனுப்பிய தூதுவன் நான். எனது பெயர் அனுமன். வானரங்களின் அரசனான சுக்ரீவனுடைய ராஜ்யத்தில் மந்திரியாக இருக்கிறேன். ராமருடைய உத்தரவின் பேரில் பல மலைகள் குகைகளிலும் தங்களை தேடி இறுதியில் எனது பராக்கிரமத்தால் நூறு யோசனை தூரம் கடலைத் தாண்டி குதித்து இந்த இலங்கையில் இறங்கினேன். நான் ராம தூதுவன் தாயே என்னை சந்தேகிக்க வேண்டாம். எனது வார்த்தையே நம்புங்கள் என்று அனுமன் கண்களில் நீர் ததும்ப சீதையிடம் கூறினார். அனுமன் பேசிய பேச்சு சீதைக்கு தைரியமும் நம்பிக்கையும் தந்தது.
சீதை அனுமனிடம் பேச ஆரம்பித்தாள். வானர உருவத்தில் இருக்கும் உங்களை நான் சந்தேகப்பட்டேன் என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். வஞ்சக ராட்சசனால் ஏமாற்றப்பட்டு தூக்கி வரப்பட்டேன். இதனால் எதையும் நம்ப முடியாமல் நான் பயப்படுகிறேன். நீங்கள் எப்படி ராமரை சந்தித்து நட்பு கொண்டீர்கள் விவரமாக சொல்லுங்கள் என்று சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டாள். அனுமன் வாலிக்கும் சூக்ரீவனுக்கும் உள்ள பகைமை முதல் கடல் தாண்டி வந்து ராவணனின் அந்தப்புரத்தில் சீதையை தேடி இறுதியில் இந்த அசோக வனத்தில் சீதையை கண்டது வரை அனைத்தையும் சொல்லி முடித்தார். ராமரின் தூதுவன் நான் என்று தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன்னுடைய மோதிரத்தை எனக்கு கொடுத்தார். அதனை தங்களிடம் அளிக்கிறேன் பாருங்கள் அப்போது என் மீது தங்களுக்கு நம்பிக்கை வரும் என்று ராமர் தன்னிடம் கொடுத்த மோதிரத்தை எடுத்து சீதையிடம் கொடுத்தார். சீதை மோதிரத்தை வாங்கி தனது கண்களில் ஒற்றிக் கொண்டாள். அனுமன் மீதிருந்த சந்தேகம் முற்றிலும் போய் அனுமன் மீது சீதைக்கு நம்பிக்கை வந்தது. உன் மீதா நான் சந்தேகம் கொண்டேன் என்று சீதை அனுமனிடம் வருந்தினாள். அனுமன் சீதையிடம் விரைவில் ராமர் விரைவில் இங்கு வந்து ராவணனை அழித்து தங்களை மீட்பார் கவலை வேண்டாம் என்று கூறினார்.
ராமரும் தன்னைப் பிரிந்த துக்கத்தில் இருக்கிறாரே என்று சீதை வருந்தினாள். நீங்கள் ராமரிடம் இருந்து கொண்டு வந்த செய்தி எனக்கு அமிர்தம் கலந்த விஷம் போல் உள்ளது. ராமர் விரைவில் இங்கு வந்து என்னை சந்திப்பார் நான் அவரை பார்க்கப் போகின்றேன் என்று மகிழ்வதா இல்லை ராமர் என்னை நினைத்து துக்கத்துடன் இருக்கிறார் என்று வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ராமர் என்னை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்னை தேடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. என்னுடைய செய்தியாக நான் சொல்வதை அப்படியே ராமரிடம் சென்று சொல்லுங்கள் என்று சீதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த இலங்கையில் ராவணனின் தம்பி விபிஷணன் என்பவன் சீதையை ராமரிடம் சென்று சேர்த்துவிடு இல்லை என்றால் ராட்சச குலம் அனைத்தும் ராமரால் அழியும் என்று ராவணனிடம் எவ்வளவோ அறிவுறை கூறினான். ஆனால் ராவணன் கேட்கவில்லை. எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் அளித்திருக்கிறான். அதில் பத்து மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் வந்து ராமர் என்னை மீட்டுச் செல்ல வேண்டும் இல்லை என்றால் ராவணன் என்னை சமைத்து சாப்பிட்டு விடுவதாக சொல்லியிருக்கிறான் என்று சீதை பேசி முடித்தாள்.
அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தாள். இந்த கடலை சில கனத்தில் நான் தாண்டிச் சென்று தங்களின் செய்தியை ராமரிடம் சொல்லி விடுவேன். ராமர் விரைவில் பெரும் சேனையுடன் இலங்கைக்கு வந்து விடுவார் கவலைப்படாதீர்கள். ராவணனோடு சேர்த்து இந்த இலங்கை நகரத்தையே மொத்தமாக தூக்கிக் கொண்டு போய் ராமரிடம் சேர்க்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். இப்போதே இந்த கடலைத் தாண்டிப் போய் ராமரிடம் உங்களை சென்று சேர்த்து விடுவேன். அதற்கான போதிய பலம் என்னிடம் இருக்கிறது. சிறிதும் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். உத்தரவிடுங்கள் தாயே இப்பொழுதே இதனை செய்து முடிக்கிறேன். கடலை தாண்டும் போது என்னை தடுக்கும் பலம் இங்கு யாருக்கும் இல்லை. இன்றே தாங்கள் ராமரை சந்தித்து விடலாம் என்றார் அனுமன்.
அனுமன் கூறியதை கேட்ட சீதை இவ்வளவு சிறிய வானரமாக இருக்கும் இந்த அனுமன் எப்படி நம்மை தூக்கிக் கொண்டு 100 யோசனை தூரம் இந்த கடலை தாவிச் செல்வார் என்று ஆச்சரியப்பட்டு சந்தேகித்தாள். சீதையின் சந்தேகத்தை உணர்ந்த அனுமன் தனது வலிமையை சீதைக்கு காண்பிப்பதற்காக தனது உருவத்தை மிகவும் பெரிதாக்கிக் காட்டினார். இதைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி அடைந்தாள். அனுமனே உனது சக்தியை நான் உணர்ந்தேன். நான் உன்னுடன் வந்தால் கடலைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது வழியில் யாராவது ராட்சசர்கள் உன்னை தடுத்து யுத்தத்திற்கு அழைப்பார்கள். ஆயுதங்களை நம் மீது வீசி எறிவார்கள். நீ என்னையும் பாதுகாத்துக் கொண்டு யுத்தத்திலும் உனது கவனத்தை செலுத்துவது மிகவும் கடினமாகும். எவ்வளவாக வலிமை மிக்கவனாக இருந்தாலும் யுத்தத்தில் வெற்றி என்பது உறுதியானது அல்ல. உனக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் நான் இங்கே இருக்கும் செய்தி ராமருக்கு தெரியாமலேயே போகும். ராட்சசர்கள் ஆயுதங்களை உன் மீது எறியும் போது உன் முதுகில் நான் எப்படி தைரியமாய் அமர்ந்திருப்பேன்.
கடலில் நான் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தது ராவணன் என்னை வஞ்சகமாக தூக்கிச் சென்றான். நீ என்னை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்றால் நீயும் வஞ்சகமாக என்னை தூக்கி செல்வது போல் ஆகும். இது முறையானது அல்ல. இது ராமனுடைய வீரத்தை நாம் குறைவு படுத்துவது போலாகும். ராவணனை எதிர்த்து ராமர் போர் செய்து அவனை அழித்து விட்டு என்னை மீட்டால் தான் ராமரின் சத்ரிய குலத்திற்கு கௌரவமாக இருக்கும். நீ சென்று ராமரையும் லட்சுமணனையும் உங்களது வானர சேனைகளையும் இங்கே அழைத்துவா. நான் காத்திருக்கிறேன். ராமருடைய பானங்களால் இந்த இலங்கை அழிந்து ராவணன் எமன் உலகம் அனுப்பப்பட வேண்டும். விரைந்து சென்று வா என்று சீதை அனுமனிடம் கூறினாள்.
அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமரிடம் நான் சென்றதும் என்ன சொல்ல வேண்டும் தங்களை கண்டு பேசியதற்கான அடையாளங்கள் என்று நான் எதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதை ஒரு முறை தண்டகருண்ய காட்டில் ராமர் எனது மடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் என் முதுகில் கொத்திக் கொண்டே இருந்தது. நான் எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை கல்லைக் கொண்டு அதன் மீது எறிந்தும் போகவில்லை. என்னை மிகவும் துன்புறுத்தியது. முதுகில் காயத்துடன் இருந்த என்னை பார்த்த ராமர் முதலில் சிரித்தார். பின்பு காகம் பறவை அல்ல அது ஒரு ராட்சசன் என்பதை அறிந்து கோபம் கொண்ட ராமர் தனது அம்பை காகத்தின் மீது விட்டார். அம்பு காகத்தை விரட்டியது. ராட்சசன் அம்பிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் தனது சுய ரூபத்தை எடுத்து ராமரின் காலில் விழுந்து சரணடைந்து பிழைத்துக் கொண்டான்.
இச் செய்தியை ராமரிடம் சொல் என்றாள். ராமரின் தம்பி லட்சுமணன் அவருக்கு துணையாக இருப்பதற்காகவே பிறந்தவன். ராமருக்கு நிகரான வலிமையும் சாமர்த்தியமும் உள்ளவன். தன் தந்தை இழந்த துக்கத்தை ராமரின் முகத்தை பார்த்து தீர்த்துக் கொண்டவன். வனத்தில் தன் தாயை மறந்து விட்டு என்னை தாயாக பாவித்து வந்தான். விரைவாக வந்து என் துயரத்தை போக்குவாய் என்று லட்சுமணனிடம் சொல் என்றாள். சிறிது யோசனை செய்த சீதை அனுமனிடம் தர்மத்தை அறிந்த ராமருக்கு என்னை நீ கண்ட அடையாளமாக ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருக்கே அனைத்தும் தெரியும் எனது வணக்கத்தை மட்டும் சொல் போதும் என்று தன் தந்தை தனக்கு கொடுத்திருந்த சூடாமணி ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்து அதனை ராமரிடம் கொடுத்துவிடு என்றாள்.
அனுமனிடம் சீதை கேள்வி கேட்டாள். நீ இங்கிருந்து சென்றதும் நான் மீண்டும் பழையபடி துக்கத்திற்கு சென்று விடுவேன். நீ உன் வலிமையால் இந்த கடலை தாண்டி வந்து விட்டாய். ராமரும் லட்சுமணனும் உங்களது வானர படைளும் எப்படி இந்த கடலை தாண்டி வருவார்கள். உனக்கு ஏதேனும் யோசனை இருந்தாள் சொல் நான் சிறிது ஆறுதலுடன் இருப்பேன் என்றாள்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |