இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கந்த புராணம்

The Skanda Purana (கந்த புராணம் in Tamil), also known as the "Kanda Puranam," is one of the eighteen Mahapuranas in Hinduism. This Purana is particularly devoted to Skanda (also known as Kartikeya or Murugan), the son of Shiva and Parvati, who is a major deity in Hinduism, especially revered in South India. The text is extensive and covers a wide range of topics including mythology, rituals, geography, and philosophy.

கந்த புராணம்


மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி, ஏவருந்துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி,மாவடி வைகுஞ்செல்வேள் மலரடி போற்றி அன்னான், சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி, போற்றி
பகைவருடைய ஆற்றலை வற்றச் செய்பவன் கந்தன். ஆறு திருமேனிகளும் சேர்ந்து ஓருருவானவன் அவன்.

அத்தகைய கந்தப்பெருமான் ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவன். கந்தபுராணத்தை வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார், முருகன் கனவில் தோன்றி ஆணையிட்டபடி தமிழில் இயற்றி காஞ்சி கந்த கோட்டத்தில் அரங்கேற்றினர். வேதங்களை வகுத்து அருளிய வியாச மாமுனிவர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அருளினார். அவற்றுள் சிவபுராணங்கள் பத்து, விஷ்ணு புராணங்கள் நான்கு, பிரம்ம புராணங்கள் இரண்டு, அக்னி புராணம் ஒன்று, பிரமகைவர்த்தம் என்னும் சூரிய புராணம் ஒன்று.

சிவபுராணங்கள் பத்தும் சாத்துவிகங்கள். விஷ்ணு புராணங்கள் தாமசங்கள். பிரம புராணங்கள் இரண்டும் இராசசங்களாகும். அக்கினி புராணமும், சூரிய புராணமும் முக்குணச்சேர்க்கை கொண்டவை என்பர். கந்த புராணம் புராணநாயகம் எனப்படுகிறது. இது முதல்வன் புராணம் என்றும் வழங்கப்படும். 18 புராணங்களில் இப்புராணத்தில் தான் 1,81,000 ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில் ஞான வாசனை வீசுகின்றது. இதில் வரும் சூரபன்மன்-ஆணவ மலம்; சிங்கமுகன் கன்ம மலம், தாரகன்-மாயா மலம். கந்தன் திருக்கைவேல்-ஞானம் ஆகும். ஞானப் பண்டிதனாகிய கந்தவேள் மும்மலங்களை அறுத்து ஆன்மாக்களாகிய தேவர்களைப் பந்தத்தினின்றும் விடுவித்தார் என்பதே இப்புராணத்தின் உட்பொருள். முருகப்பெருமான் அசரீரியாக திகட சக்கரம் என்று அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் அதனை வைத்தே விநாயகர் காப்பு எழுதி நூலைத் தொடங்கியுள்ளார். அதில் ஓர் இலக்கணப் பிழை கண்ட புலவர் முன், முருகனே புலவர் வடிவில் தோன்றி அதற்கான விளக்கத்தை வீரசோழியம் என்ற இலக்கண நூலின் அடிப்படையில் விளக்கி மறைந்தார்.

1. புராணத்தோற்றம்

எல்லாம் அறிந்த பரமேசுவரன் கூற்றுப்படி திருமால் தனது ஒரு கலையினால் பிரம்மனின் வம்சத்தைச் சார்ந்த பராசர முனிவர்க்கும் மச்சகந்தி என்ற பெண்ணிற்கும் கங்கை ஆற்றின் நடுவில் தோன்றி வாத நாராயணன் என்ற பெயரில் வதருக வனத்தில் இருந்தபோது, எம்பிரான் ஆணையால் வேதங்களை நான்காகப் பிரித்து அதன் மூலம் வேத வியாசர் எனப்பெயர் பெற்றார். அவர் ரிக் வேதத்தைப் பைல முனிவர்க்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனர்க்கும், சாம வேதத்தை ஜைமினீ முனிவர்க்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிவருக்கும் உபதேசித்தார். அவர் தான் இயற்றிய பதினெண் புராணங்களையும் தன் மகன் சுகப்பிரம்மத்திற்கும் மற்ற சீடர்களுக்கும் போதித்தார்.

நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்கள் சத்ர யாகம் புரிந்து வந்தனர். அங்கு சூதமுனிவர் வந்தடைந்தார். வியாசரின் சீடரான அவரிடம் முனிவர்கள் புராண கதைகளை விவரிக்க வேண்டினர். சூதரும் அவர்களுக்குக் கூற ஆரம்பித்தார். கந்தபுராணமும் அவற்றில் ஒன்று.

கந்தபுராணத்தில் கீழ்க்கண்டவாறு ஆறு சங்கிதைகள் உள்ளன.

1. சனற்குமார சங்கிதை,
2. சூத சங்கிதை,
3. பிரம சங்கிதை,
4. விஷ்ணு சங்கிதை,
5. சங்கர சங்கிதை,
6. ஆர சங்கிதை ஆகும். அவற்றுள் சங்கர சங்கிதை 7 காண்டங்களை உடையது. அவை

1. சம்பவ காண்டம்,
2. அசுர காண்டம்,
3. மகேந்திர காண்டம்,
4. யுத்த காண்டம்,
5. தேவ காண்டம்,
6. தட்ச காண்டம்,
7. உபதேச காண்டம் என்பவை அவை.

இவற்றுள் முதல் ஆறு காண்டங்கள் காசியப சிவாசாரியாரின் கந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழில் மூன்று புராணங்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகக் கருதப்பட்டு வருகின்றன. திருத்தொண்டர் புராணம் (வலது கண்ணாகவும்) திருவிளையாடற்புராணம் (இடது கண்ணாகவும்) கந்த புராணம், (நெற்றிக் கண்ணாகவும்) கருதப்படுகின்றன. இந்தக் கந்தபுராணம் இலங்கையில் அதிகமாகப் பயிலப்பட்டு வருகிறதாக தமிழறிந்த பெரியோர்களால் கூறப்படுகிறது.

2. பார்வதியின் தோற்றமும் தவமும்

ஒருநாள் திருக்கைலாயத்தில் எம்பெருமான் இடபாகத்தில் அமர்ந்திருந்த அம்பிகை திடீரென அவரது அணையிலிருந்து இறங்கி அவரை வணங்கிக் கீழ்கண்டவாறு கூறினாள் : தான் முன்பு ஒருகால் தக்ஷனின் மகளாகத் தோன்றி வளர்ந்து வருகையில் தக்ஷன் அம்பிகையைப் பரமனுக்குத் திருமணம் செய்து வைத்ததையும், ஆனால் தக்ஷன் தான் செய்த வேள்வியில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமலிருந்ததும், மேலும் சிவநிந்தனை செய்ததாலும், வேள்வி வீரபத்திரனால் அழிக்கப்பட்டது; தக்ஷனும் அழிந்தான். இதனால் தான் பெற்றிருந்த தாக்ஷõயணி என்ற பெயரைக் குறித்து விசனமுற்று அது நீங்கிட மறுபிறவி எடுப்பதற்காக அருள்புரிய வேண்டினாள். இவ்வார்த்தைகளைக் கேட்டு மன மகிழ்வுற்றார் பரமன்.

(தாக்ஷயணி என்றால் சிவநிந்தகன் என்று பொருள்) எம்பெருமான் தேவியிடம், இமவான் வேண்டிய வரத்தின்படி நீ அவனுக்குத் திருமகளாகத் தோன்றி ஐந்து ஆண்டுகள் வளர்ந்து தவம் இருப்பாயாக. அப்போது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இமயமலையில் இமவான் அம்பிகை தனக்கு மகளாக வேண்டித் தவம் கொண்டிருந்தான். அங்குள்ள தடாகத்தில் ஆயிரத்தெட்டு இதழ்களுடைய தாமரை மலரில் அம்பிகை குழந்தையாகத் தோன்றினாள். அதுகண்டு வியப்படைந்த இமவான் யாவும் இறைவன் செயல் என்று எண்ணி குழந்தையை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுக்க, அவளும் தாய்மை அடைந்தவருக்கான அறிகுறிகளுடன் குழந்தையை வாரி அணைத்து பார்வதி என்ற பெயரில் வளர்த்து வந்தாள்.

குழந்தைக்கு ஐந்து வயது ஆனவுடன், தாயாகிய மேனையிடம் அம்பிகை தான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வேண்டுவதாகவும் அதற்கான அனுமதியும் வேண்டினார். மேலும் தந்தையிடம் தன் எண்ணத்தைக் குறிப்பிட்டு வேண்டிட இமவான் அம்பிகை தவம் ஆற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள். தாயின் மனம் இதற்கு இடம் கொடுக்காததால் அவள் அம்பிகை தவமிருப்பதை ஏற்காமல் தடுக்க முயற்சித்தாள். இதனால் அம்பிகைக்கு உமா என்ற திருநாமம் ஏற்பட்டது. (தவம் வேண்டாம் என்ற பொருளைத் தரும் உமா என்னும் சொல் மேலும் அந்தச் சொல்லை தேவி பிரணவம் என்றும் கூறுவர்) (குறிப்பு : ஓம் என்ற பிரணவத்தில் அகார, உகார மகாரங்கள் உள்ளது. உமாவில் உகார, மகாரங்கள் முதலினும் அகாரம் இறுதியிலும் உள்ளது. எனவே அது தேவி பிரணவம் எனப்படுகிறது.)

3. காமதகனம்

திருக்கைலாயத்தில் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சிவபெருமான் மவுன யோகத் தோற்றத்தால் அண்டமனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் காமம் தோன்றாமல் இயக்கம் தடைபட்டது. சூரபன்மன் என்னும் அரக்கன் சகல வரங்களையும் பெற்று இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் வருந்திய தேவராஜன் மேருமலையை அடைந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய, ஈசன் அவன் குறையைக் கேட்டு, விரைவில் குமரன் தோன்றி அரக்கர்களை அழித்து உங்களை எல்லாம் காப்பாற்றுவான் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் மோன நிலையும், அம்பிகையின் தவமும் நடைபெறுவதால் குமரன் விரைவில் தோன்ற ஆவன குறித்து ஆலோசனை செய்து, இறுதியில் மன்மதன் என்னும் காமனை ரதியுடன் அனுப்பி ஈசனின் மோன நிலை நீங்கி, அம்பிகையுடன் சேர்ந்திட, அவர் மனதில் விரகதாபம் ஏற்படுத்த வேண்டினர். அதனால் தனக்கேற்பட உள்ள ஆபத்தைக் கூறி மன்மதன் இசையவில்லை. ஆனால், இறுதியில் பிரம்மனின் சாபத்துக்குப் பயந்து சிவபெருமான் மீது மலர்க்கணை செலுத்த இசைந்தான்.

திருக்கைலாயம் அடைந்தான் மன்மதன். ஏற்கனவே, மன்மதனை அனுமதிக்க வேண்டாம் என்று ஈசன் கூறியிருந்ததால் நந்திதேவர் அவனைத் தடுத்தார். ஆனால், பின்னர் தான் தேவகாரியமாக வந்திருப்பதை உணர்த்திட நந்தி வழி விலகினார். இதற்குள் பிரமாதி தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். மன்மதன் ஈசனை அணுகி தனது மணம் மிக்க மலர்க்கணைகள் ஐந்தையும் சிவபெருமான் மீது பிரயோகிக்க, ஈசன் அதனை அறிந்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்திட அவன் சாம்பலானான். அதுகண்ட தேவர்கள் மேலும் இறைவனைப் பிரார்த்தித்து தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டதோடு காமனையும் உயிர்ப்பிக்க வேண்டினர். கருணைக் கடலாகிய சிவபெருமான் இமயமலை சென்று பார்வதியைத் திருமணம் கொள்வதாகக் கூறித் தேவர்களை அனுப்பிவிட்டார். அப்போது காமனை இழந்த அவன் மனைவி ரதிதேவி, தேவர்களுக்காக அவர்கள் ஏவலினால் தனது பதி செய்த தவறை மன்னித்து, உயிர்ப்பித்து அருள வேண்டி பிரார்த்திருக்க, ஈசனும் கவுரி கல்யாணத்தின்போது மன்மதனை அளிப்பதாகக் கூறிட அவளும் இறைவன் கருணையைப் போற்றிச் சென்றாள். பின்னர் சிவபெருமான் சனகாதி முனிவர்களிடம் மோனமே ஞானநிலை, எம்மை மனத்தில் இருத்தி ஒருமையுடன் நினைப்பதே சாந்தி அளிக்கும் என்று கூறி அவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பினார்.

4. அம்பிகையின் தவமும், ஐயன் தரிசனமும்

அம்பிகையின் தவத்தைக் கண்டு அருள்புரிய எண்ணிய சிவபெருமான் வயது முதிர்ந்த வேதியர் உருவில் அம்பிகையின் தவச்சாலையை அடைந்தார். அம்பிகையின் தோழியர்கள் அவரைத் தக்க உபசாரங்களுடன் அழைத்துச் சென்று அம்பிகையின் முன் நிறுத்தினார். அம்பாளின் தவக்கோலம் கண்ட ஈசன் அவளிடம் அவன் ஏன் உடலை வாட்டிக் கொள்கிறாள் என்றும், யாரை மணக்க விரும்புகிறாள் என்றும் அந்தப் பாக்கியசாலி யார் என்றும் வினவ, பார்வதியின் தோழிகள் அவள் குறிப்பறிந்து அம்பிகையின் தவத்தின் குறிக்கோளை எடுத்துரைத்தனர். அதுகேட்ட கிழ வேதியர் எள்ளி நகையாடி கீழ்க்கண்டவாறு எடுத்துரைத்தார். சிவபெருமான் உடை தோல், வாகனம் எருது, ஆபரணங்கள் பாம்பு, எலும்பு; தலைமாலை பன்றிக்கொம்பு, உண்கலம் மண்டையோடு, உண்பது நஞ்சு, நடமாடுவது மயானம் என்றெல்லாம் கூறி, பார்வதியை அவ்வெண்ணத்தை விட்டுத் தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு கூறினார். மிகவும் சினமுற்ற உமாதேவியார் கிழ வேதியரை அவ்விடம் விட்டு அகலுமாறு ஆத்திரத்துடன் கூற, மேலும் சில வார்த்தைகளால் உமாவிடம் விளையாடிய சிவபெருமான் இறுதியில் ஈசனாகக் காட்சி தந்தார். எம்பெருமான் தரிசனம் கண்ட உமாதேவியார் தன் குற்றத்தை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிட, சிவபெருமானும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறி திருக்கயிலாயம் திரும்பினார். செய்தியறிந்த பார்வதியின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுற்று அம்பிகையைத் தவச்சாலையிலிருந்து தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

5. பார்வதி பரிணயம்

கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன? என்று வினவ பரமேசுவரன், பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக என்று கட்டளை இட்டார். சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்திட, இமவானின் மனைவி மேனை ஓர் ஐயப்பாட்டை எழுப்பினாள். ஈசன் தாக்ஷõயாணியை மணந்து, பின்னர் மாமனாராகிய தக்ஷனின் தலையை அறுத்து விட்டார். அது குறித்து அச்சப்படுகிறேன் என்றாள்.

முனிவர்களும் தக்க சமாதானம் தந்தனர். ஆங்கீரசர் கூறினார் தக்ஷன் தனக்கு ஈசன் அளித்த சகல ஐசுவரியங்களையும், பட்டத்தையும் மறந்து ஈசனை ஒதுக்கி வைத்து, மேலும் பரமனைப் பலவிதமாக ஏசினான். தாட்சாயினியும் வர அனுமதிக்கப்படவில்லை. இந்த அலட்சியமும், கர்வமும் தான் அவன் அழிவிற்குக் காரணம். இருப்பினும் மறுபடியும் அவனை உயிர்ப்பித்தருளினார் என்று கூறிட மேனையும் ஐயம் நீங்கினாள். சம்மதம் அளித்தாள். சப்த ரிஷிகளும் மனம் மகிழ்ந்தனர். இமவானையும், மேனையையும் ஆசிர்வதித்து, திருமணத்திற்கான நன்னாளை நிச்சயித்து விடை பெற்றுச் சென்று, கயிலை அடைந்து, எம்பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறி தம் இருப்பிடம் சென்றனர். பர்வதராஜன் அம்பிகையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இமவானின் மகன் மைனாகன் தன்னுடைய தந்தையாரிடம் தேவதச்சனான விசுவகர்மாவை வரவழைத்துச் சொன்னால் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார் என்று கூறினான். விசுவகர்மாவும் இது கேட்டு மனமகிழ்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

பர்வதராஜன் அனைவர்க்கும் மணஓலை அனுப்பி வைத்தான். கைலைக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து வணங்கி, என் தவப் பெண்ணை தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். நாளையே சிறந்த நாள் என்று சப்தரிஷிகள் லக்னம் குறிப்பிட்டுள்ளனர். தேவரீர் தங்கள் பரிவாரங்களுடன் எழுந்தருளி எனது மகளை ஏற்று எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே அருள்பாலித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இசைந்த பரமேசுவரன் சர்வாபரணங்களையும் அணிந்தவாறு தோன்றினார். பூதகணங்கள் புடைசூழ, மங்கலவாத்தியங்கள் முழங்க, தேவாதி தேவர்களுடன் இமயமலையை வந்தடைந்தார் சிவபெருமான் அழகிய மணமகனாக. அவர் இமவானின் நகரமாகிய ஓஷதி பிரஸ்தத்தில் நகர்வலமாக வந்தபோது ஐயனின் திருமேனி அழகு கண்டு அனைவரும் மயங்கி நின்றனர். சிவபெருமான் மணமகனாக திருமண மண்டபத்தை அடைந்தபோது இமவானின் மனைவி மேனை மகளிர் பலர் சூழ அவரை வணங்கி திருவடிகளைப் பாலால் கழுவி பக்திப் பெருக்குடன் விளங்கினாள்.

பிரம்மனும், திருமாலும் இருபுரம் கரம் தந்திட ஈசன் மண்டபத்தில் பிரவேசித்து சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தார். எம்பெருமான், அம்பிகை திருமணம் காணப் பெரும்கூட்டம் கூடியதால் இமயம் உள்ள வடபால் கீழே அழுந்தி, தென்திசை உயர ஆரம்பித்தது. அப்போது ஈசன் அகத்தியரை அருகழைத்து தென்திசை சென்று பொதிகையில் தங்கி, அங்கிருந்தவாறே திருமணத்தைக் காணுமாறு அருள்பாலித்தோம் என்று கூறிட, அகத்தியரும் பொதியமலை சென்றடைய பூமி சமமாகியது. பார்வதி தேவியார் திருமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு கலைமகள் துதி பாடிட திருமண மண்டபம் அடைந்து சிவபெருமானை வணங்கி நிற்க, ஈசனும் தேவியை ஆசனத்தில் இருக்குமாறு பணித்தார். மணமண்டபத்தில் இவ்வாறு ஈசனும் தேவியும் வீற்றிருக்க, பர்வதராஜன், தன் மனைவி மேனை நீர் வார்த்திட சிவனாரின் திருவடிகளை விளக்கி சந்தனம், மலர் சார்த்தி உபசரித்தான். பின்னர் பார்வதியின் கரத்தை, எம்பிரான் கரத்துள் வைத்து வேத கோஷங்களுடன் தாரை நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். பெண்டிர் எல்லோரும் கவுரி கல்யாணம் வைபோகமே என்று கோஷமிட்டார். மங்கல வாத்தியங்கள் முழங்கின.

அடுத்து இமவான் பால், பழம் போன்ற பலவற்றை ஈசனுக்கு அமுதெனப் படைக்க, இறைவன் நன்று எனக்கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு இமவானைப் பணித்தார். அடுத்து திருமண நிகழ்ச்சிகள் யாவும் முறைப்படி நடந்தேற எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். அதுவே தக்க தருணம் என்று ரதிதேவி சிவபெருமானிடம் தனது கணவரைத் தனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானும் கருணை கொண்டு மன்மதனை மன்னித்து ரதிதேவியின் வேண்டுகோளின்படி உனக்கு உயிர் பிச்சை அருளினோம். ஆனால் நீ அவளுக்கு கணவனாக, அவளுக்கு மட்டும் உருவம் கொண்டு விளங்குவாய். மற்றவர்களுக்கு நீ உரு வெளிப்படாமல் அதாவது அனங்கனாக இருப்பாய். உன் ஆட்சி இனி வழக்கம் போல் தொடரும் என்று அருளினார். கல்யாணத்துக்கு வந்திருந்தோருக்கு விருந்தளித்து, தக்க சன்மானங்கள் தந்திட்டான் இமவான். அனைவரும் பார்வதி, பரமேசுவரர்களிடமும், இமவான் மேனையிடமும் விடைபெற்றுத் தம் இருப்பிடம் சென்றனர். சிவபெருமானும் பார்வதி தேவியுடன் ரிஷபம் ஏறி திருக்கைலாயம் அடைந்தார்.

அசுரர்கள் தோற்றம்: இதனை அடுத்து சிவன் பார்வதி திருமணத்திற்கு வந்திருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களது இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதனையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும், தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால், இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில், சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி, யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில், அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி, தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சனை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால், இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார். பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார்.

திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினி தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார்.அவளிடம், மாயா ! நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி, நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம், தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா, தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல, அவனும் அகமகிழ்ந்து, மகளை வாழ்த்தி அனுப்பினான். சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால், புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா.

அவள் எதிர்பார்த்தபடியே, காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ ? என்று மனதில் கேள்விகள் எழ, ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகுசுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி, விளையாடுவதைக் கண்ட காஷ்யபர், ஆஹா... உலகில் இப்படி ஒரு அழகியா ? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால், இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றாள்.

அழகுப்பெண்ணே ! நீ யார் ? இந்த கானகத்தில் உனக்கென்ன வேலை ? இந்த மாளிகையை எப்படி உருவாக்கினாய் ? உன் அங்கங்கள் என் மனதைக் குலைக்கிறதே ! ஏற்கனவே திருமணமானவன். தவசீலன். அப்படியிருந்தும் என் மனம் உன்னைக் கண்டு அலை பாய்கிறதே, என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவள் காஷ்யபரிடம் நல்லவள் போல் நடித்தாள். தவசீலரே ! இந்த மலைப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவள். எனக்கு இந்த மாளிகைகள் எப்படி வந்தன எனத் தெரியாது. ஆனால், யாரும் இல்லாததால், இங்கே புகுந்தேன். வேண்டுமானால், இந்த மாளிகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முனிவராக இருந்தும், என் அழகை வர்ணிப்பதில் நியாயமில்லை. நான் இளங்கன்னி. நீங்களோ முதியவர். வயதிற்காவது மரியாதை கொடுங்கள் சுவாமி ! என்றவளை காஷ்யபர் மீண்டும் வற்புறுத்தினார். அவள் மாயா அல்லவா ? அங்கிருந்து மறைந்து விட்டாள். காஷ்யபர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அழகே ! எங்கே போனாய். நீ இல்லாமல் எனக்கு இனி வாழ்வில்லை. எங்கு மறைந்திருந்தாலும் வந்துவிடு. என்னை ஏற்றுக்கொள். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன், என நாள்கணக்கில் புலம்பிக் கொண்டு, அங்கேயே பசி பட்டினியுடன் கிடந்தார். மன்மதனின் வலைக்குள் சிக்கிய பிறகு தவசீலனாயின் என்ன ! சாதாரண மனிதனாயின் என்ன ! எல்லாரும் ஒன்றும் தான். காஷ்யபர் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது அவர் முன் மீண்டும் தோன்றினாள் அப்பெண். காஷ்யபர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை.

அவர் பரவசத்துடன் அவளை நோக்கி ஓடினார். தான் ஒரு முனிவர் என்பதையும், பிரம்மாவின் புதல்வன் என்பதையும் மறந்து அவளது காலிலேயே விழுந்து விட்டார். தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.
முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல உருவங்களை எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள். காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான்.

இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர்.

மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர். இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன் பெற்றோர் முன்வந்து வணங்கினான். தாயே தந்தையாரே ! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் ? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன ? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான். காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார். மக்களே ! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார். இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார். தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.

என் அன்புக் குழந்தைகளே ! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன். அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள். தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர். கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.

தவசீலரே ! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன. காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல். அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர். அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார்.

சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசூரன்-மூவர் தவமும், சிவபெருமான் அளித்த வரமும்: காஷ்யபா ! இதென்ன கோலம் ? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காமவயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக, அவரைக் குறித்து கடும் தவம் செய், புறப்படு, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார். மாயையால் தூண்டிவிடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி, அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாயினும் கூட, இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது, பத்மாசுரன், அவரிடம், நீர் யார் ? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நின்றீர் ? என்றான் உறுமல் குரலுடன்.

சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே, அடேய்! நீங்கள் யார் ? அசுர சிங்கங்களா ? என்றார். ஆம்... நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரித்தீர் ? என்ற சூரபத்மனிடம், பிழைத்தேன், நான் அடேய் ! சீடர்களே! நான் தான் உங்கள் குலத்திற்கே குரு அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள் ? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே ! தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர். பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர், அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார். புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து, வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாதராண யாகசாலையா அது ? பத்தாயிரம் யோஜனை பரப்பில் யாகசாலை அமைக்கப் பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பில் இதை அமைத்திருக்கிறான். யாகசாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார்.

இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் என்றால் அப்படி ஒரு யாகம்... உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள், சிங்கமுகன் 108 குண்டங்களிலும், தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும், சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான். தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று. ஆனால், புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன், சிவபெருமானே ! என் பக்தி நிஜமானதெண்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி, யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர்விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர். சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார்.

மக்களே ! நீங்களெல்லாம் யார் ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்றார். சிங்கமுகன் அவரை வணங்கி, தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே ! நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள். அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன். என்றான், கவலை வேண்டாம் மகனே ! நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது, என்றவர் சற்றே தலை குனிந்தார். அவரது தலையில் இருந்து ஒரு நதி பெருக்கெடுத்து ஓடி அத்தனை குண்டங்களில் இருந்த நெருப்பையும் அணைத்தது. அப்போது ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர். அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான்.

சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் தருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன். அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது.

தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்.கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது ? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது.

சூரனின் திக்விஜயம் முடிசூட்டு விழா

சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை. அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும்.

சூரபத்மனை வெல்ல இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்து, பத்மாசுரனே ! நான் இன்று முதல் உங்கள் அடிமை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டியது என் கடமை. நான் தங்களைச் சரணடைகிறேன், என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த செல்வபுரியின் வனப்பைக் கண்ட அசுரப்படையினர் ஊருக்குள் புகுந்து அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்தனர். தன் நாடு அலங்கோலமானது கண்டு குபேரன் பெரிதும் வருந்தினான். சூரபத்மன் அவனது பேச்சை பொருட்படுத்தவே இல்லை. அனைத்துச் செல்வத்துடனும் படைகள் புறப்படட்டும் என ஆணையிட்டான்.

குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி ஈசானன். இவனை பார்த்த சூரன். அப்படியே ஒதுங்கிக் கொண்டான். அசுரர்களிடம், வேண்டாம், இவனை வெல்ல நம்மால் இயலும் என எனக்குத் தெரியவில்லை. இவனை உற்று நோக்குங்கள். இவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. நமக்கு வரமளித்த சிவனும் முக்கண்ணன். ஒருவேளை அவர் தான் இவனோ என எண்ணத் தோன்றுகிறது, வம்பை விலைக்கு வாங்க வேண்டாம், எனப் படைகளை கட்டுப்படுத்தி விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. அசுரப்படை அகோரமாய் கத்திக் கொண்டு அங்கு புகுந்ததோ இல்லையோ, எல்லாரையும் விட்டு விட்டு, இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள் அசுரர்கள். ஒரு அறையில் பதுங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்கள் அசுரர்கள் கண்ணில் பட, அவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து, அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி, சுமந்து வரச்செய்தார்கள். இதையடுத்து அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன அசுரப்படை. அக்னி சாதாரணமானவனா ? தைரியசாலியான அவன் அசுரர்களை நோக்கி தன் ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான். ஆனால், சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம், அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான்.

அக்னியே நீ குபேரனைப் போலவோ, இந்திரனைப் போலவோ பயந்து ஓடவில்லை. உன்னால் முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே, இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால், எங்களைப் பொறுத்தவறை நீ பணியாளன். நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், என்று ஆறுதல் சொன்னான். ஆனாலும், இந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவதற்குள், அசுரப்படைகள் அக்னி பட்டணத்தை அழித்து, அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். இதையடுத்து தென்திசை நோக்கி திரும்பியது அசுரப்படை தெற்கே இருப்பது எமலோகம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வர வேண்டியவர்கள் இதோ ! இப்போது வந்து விட்டார்கள். எமன் சாதாரணமான ஆசாமியா ! அவனை எமகாதகன் என்றல்லவா சொல்வார்கள். அந்த அதிபுத்திசாலி, தன் லோகத்தில் விளைந்த அரிசி, பயிறு வகை உளுந்து சகிதமான படை ஊருக்குள்,வருவதற்கு முன்பே நுழைவிடத்தில் போய் நின்றுவிட்டான். முதலில் வந்த தாரகனின் தாழ் பணிந்து, ஐயனே ! நான் நீங்கள் சொல்லும் நபரை மட்டும் தான் பிடிப்பேன். யாருக்காவது விதி முடிந்தால் கூட நீங்கள் கட்டளையிட்டால், அவரை பிடிக்க மாட்டேன், என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள், என்றான். எமன் மீதும் இரக்கம் கொண்ட தாரகன், படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.

மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற அசுரர்கள்: அசுரன் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட லோகத்தை ஜெயிக்கும் எண்ணம் வந்தது. படைகளை வைகுண்டம் நோக்கித் திருப்பினான். தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் படையைப் பார்த்து ஸ்ரீதேவியும், மகாலட்சுமியும் கலங்கிப் போனார்கள். பிரபு ! இது என்ன தூக்கம் ! பாருங்கள். அசுரப்படைகள் நம்மை நோக்கி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க முற்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே ! உங்களுக்கு இந்த ஆதிசேஷன் மீது படுத்து விட்டால் வீடு, வாசல் பற்றி கவலையே கிடையாது. எழுந்திருங்கள், என்று பதட்டத்துடன் கூறினர். மகாவிஷ்ணு சிரித்தார். தேவியே ! என்ன கலக்கம். நான் கண்மூடி இருந்தாலும், உலகத்தில் நடப்பதைக் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வது ? சில சமயங்களில் நாம் பக்தர்களைச் சோதிக்கிறோம். சில சமயம் பக்தன் நம்மைச் சோதிக்கிறான். இந்த அசுரர்கள் பெரும் தவம் செய்து, முக்கண்ணனான என் மைத்துனரிடமே வரம் பெற்றவர்கள். அவர்களை என்னால் ஏதும் செய்ய முடியாது. வேண்டுமானால், நானும் அவர்களுக்கு ஏதாவது பரிசு வேண்டுமானால் கொடுக்கலாம். உம்... உம்... கால் வலிக்கிறது. பிடித்து விடுங்கள். அவர்கள் இங்கு வரட்டும், பார்த்துக் கொள்ளலாம், என்றவராய் கண்களை மீண்டும் மூடிவிட்டார்.

இப்போது அசுரப்படை வைகுண்டத்தை முற்றுகையிட்டு விட்டது. மகாவிஷ்ணு அனைத்தும் அறிந்தவரல்லவா ? அவர் சயனத்தில் ஆழ்ந்திருப்பதென்ன தூக்கத்திற்கு ஒப்பானதா ? சர்வ வியாபியான அவருக்கு தூக்கம் ஏது ? உலகை பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள அவர் ஆவேசமாய் எழுந்தார். தனது பாஞ்சஜன்யம் என்னும் வெற்றிச்சங்கும், நந்தகம் என்ற கத்தி, கவுமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சார்ங்கம் என்ற வில் ஆகிய ஆயுதங்களுடன் அசுரப்படைகளை அழிக்கப் புறப்பட்டார். சிவனிடம் அருள் பெற்ற அசுரர்களைத் தன்னால் அழிக்க முடியாதெனத் தெரிந்தாலும், சிவனின் அருள் பெற்றவர்களுக்கு தனதருளையும் கொடுக்கும் நோக்கத்தில் அவர்களைச் சந்தித்தார். ஆனாலும், அவரருளைப் பெறுவது அவ்வளவு சுலபமானதா என்ன ! சூரர்களுடன் கடும் போரில் இறங்கி விட்டார் நாராயணன். 12 ஆண்டுகள் கடும் போராட்டம் நடந்தது. எந்த ஆயுதமும் சூரர்களை அழிக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த நாராயணன். அவர்களுக்கு அருளும் நோக்கில் தன் சக்கராயுதத்தை ஏவினார். அது தாரகாசுரனின் மார்பில் பதக்கமாய் பதிந்தது. நாராயணன் தாரகனிடம், சூரனே ! நீ சிவனிடம் வரம் பெற்றதை நான் அறிந்தாலும், உனக்கு அருளும் நோக்கிலேயே சக்ராயுதத்தை பரிசாய் தந்தேன். நீ உன் இஷ்டம் போல் இந்த லோகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம் என்றார். தாரகன் அவரிடம் இருந்து விடை பெற்றான். பின்னர் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய சகோதரர்கள் நந்திகேஸ்வரரின் அனுமதியுடன் சிவபெருமானைச் சந்தித்து ஆசி பெற்றனர். சகல அண்டங்களையும் வென்றது குறித்து கூறினர். சிவபெருமான் அவர்களை வாழ்த்தி, ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு தலைவரை நியமித்த பின்னர். அவற்றின் நடு நாயகமாக விளங்கும் ஓரிடத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்ய அனுக்கிரஹம் செய்தார்.

மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் ஓடினர். பரந்தாமா ! பரமசிவன் தான் அசுரர்களுக்கு வரங்களைத் தந்தார் என்றால் தாங்களும் தங்கள் சக்ராயுதத்தை அவர்களுக்கு வழங்கி விட்டீர்களே ! இது நியாயமா ? நம்மை ஆபத்து சூழந்து கொண்டுள்ளதே ! என்றனர்.அவர்களிடம் பரந்தாமன், தேவர்களே முன்பொரு முறை பரமசிவனின் மாமனார் தட்சன் நடத்திய யாகத்திற்கு, அந்த லோகாதி பதியின் அனுமதியின்றிச் சென்றோம். அவன் கொடுத்த அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டோம். அந்த பாவத்தின் பலன் உங்களை மட்டுமல்ல, என்னையும் சேர்ந்து கொண்டது. அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கிறோம். பரமேஸ்வரன் போட்டுள்ள இந்த முடிச்சை அவிழ்க்க அவரால் தான் இயலும். தவறு செய்த நாம் தண்டனையை அனுபவித்து தானே ஆக வேண்டும், என்றார். பரந்தாமனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தேவர்கள் தலை குனிந்தனர். ஒரு நிமிட நேரம் செய்த தவறுக்காக, 108 யுகங்கள் அசுரர்களின் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என வருந்தினர்.

சூரனின் திக்விஜயம் முடிசூட்டு விழா

பரமேஸ்வரனை இரண்டாம் முறையாக சிவலோகத்திற்கே சென்று சந்தித்த சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்தனர். பிரம்மா அவனுக்கு முடிசூட்டினார். விஷ்ணு முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரை சூரபத்மன் வைகுண்டத்துக்கே அனுப்பி விட்டான். தேவர் தலைவரான இந்திரன், அசுரன் உமிழும் வெற்றிலை எச்சிலை பிடிக்கும் பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டான். வாயு சாமரம் வீசினான். பணப்பை இருந்த குபேரனின் கையில், அசுரனுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டிய பாக்குப்பை இருந்தது. வெண்கொற்றக்குடையை சூரிய சந்திரர்கள் பிடித்தனர். இப்படி தேவர்களெல்லாம் ஆளுக்கொரு வேலை செய்ய உத்தரவிட்டான்.

மகேந்திரபுரியை நிர்மாணித்த விஸ்வகர்மாவின் மகள் பத்மகோமளை. பேரழகியான இவளை பத்மாசுரன் திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் உதவியுடன் உலகிலுள்ள அழகிகளை மயக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டான். கணவன் அசுரனாயினும், அவன் மணம் கோணாமல் பதிபக்தி மிளிர அவனுடன் வாழ்ந்தாள் கோமளை. இவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர். பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என அவர்களுக்கு பெயர் சூட்டினர் அசுரதம்பதியர். பட்டத்தரசிக்கு நான்கு மக்கள் பிறந்தாலும், சூரன் பல இன கன்னிகைகளுடன் கூடினான். மூன்றாயிரம் மகன்கள் பிறந்தனர். இங்கே இப்படியிருக்கும் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரை அழைத்துக் கொண்டான். அவன் எமனின் மகள் விபூதிகையை திருமணம் செய்தான். இன்னும் பல பெண்களை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றான். தாரகன் மாயாபுரி என்ற நகரை அமைத்தான். அவன் நிருதியின் மகளான சவுரிகை என்பவளைத் திருமணம் செய்ததுடன் மேலும் பல பெண்களையும் சேர்த்துக் கொண்டான். சவுரிகைக்கு அசுரேந்தின் என்ற மகன் பிறந்தான்.சூரர்களுக்கு ஆட்டுமுகம் கொண்ட அஜாமுகி என்ற சகோதரி பிறந்தாளோ, அவள் தன் பங்குக்கு இந்த உலகைக் கெடுத்துக் கொண்டிருந்தாள்.அழகுள்ளவனோ, அழகில்லாதவனோ யாராயிருந்தாலும் அவள் விரும்பி விட்டால் தன்னை அனுபவித்தாக வேண்டும் என கட்டளையிட்டாள். பல அந்தணர்கள், தேவர்கள் என எல்லோரையும் அனுபவித்தாள். ஒழுக்கம் என்ற சொல்லே அவளுக்கு தெரியாது. போதாக்குறைக்கு தன்னோடு பிறந்த அசுர சகோதரர்களுக்கு லோகத்திலுள்ள அழகான பெண்களை எல்லாம் பிடித்து வந்து இரையாக்கினாள். ஒருநாள் கோபக்கார முனிவரான துர்வாசரை சந்தித்தாள்.

அஜாமுகியின் புதல்வர்கள்

அஜாமுகி துர்வாசரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொன்னாள். தவ சிரேஷ்டரான அவர் இக்கொடுமையை செய்ய முடியாது என மறுத்த பிறகும், அவரைப் பல வந்தப்படுத்தினாள். இதன் விளைவாக அவளுக்கு இல்வலன், வாதாபி என்ற மக்கள் பிறந்தனர். அவர்கள் தன் தந்தையின் தவப்பயன் முழுவதையும் தங்களுக்கு தரவேண்டினர். அவரோ மறுத்தார். எனவே அவரைக் கொல்லவும் துணிந்தனர் மகன்கள். படுகோபக்காரரான துர்வாசர், என்னைப் போன்ற முனிவர்களை துன்புறுத்துவதாலேயே நீங்கள் அழிவீர்கள், என சாபமிட்டார். பின்னர் இல்வலன் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து தன் தம்பி வாதாபியை வெட்டி அக்னி குண்டத்தில் போட்டான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மனிடம், பிரம்மனே ! நான் எத்தனை முறை என் தம்பியைக் கொன்றாலும், நான் அழைக்கும் போது உயிர் பெற்று வரும் வரம் தர வேண்டும், என்றான். அந்த வரம் அவனுக்கு கிடைத்தது. இல்வலன் அந்தணர்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து, தங்கள் இல்லத்தில் திதி நடப்பதாகவும், தான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும் என்றும் சொல்வான். வாதாபி உணவு வடிவில் அந்தணர்களின் வயிற்றுக்குள் போய், அவர்களின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். இப்படி வேதம் கற்ற அந்தணர்கள் பலரைக் கொன்று குவித்தான். இப்படியாக அசுர வம்சம் செய்த அட்டூழியம் பெருகியது.

ஒரு சமயத்தில் இந்திரனின் மனைவி இந்திராணியை பார்த்த சூரபத்மன் அவளை அடைய விரும்பினான். அவர்கள் ஓடி ஒளிந்தனர். பின்னர் சாஸ்தாவின் அருளால் அவள் தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்திராணியைக் காப்பாற்ற, சிவ மைந்தரான சாஸ்தாவின் காவலர் மகாகாளர், சூரனின் தங்கையான அஜாமுகியின் கையை வெட்டி விட்டார். இப்படி சூரர்களுக்கும், தேவர்களுக்கும் பகைமை வளர்ந்தது. தேவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலரை சூரன் கொன்றான். ஆனால், அவர்கள் அமிர்தம் குடித்திருந்ததன் பலனாக மீண்டும் எழுந்து விட்டனர், வேறு வழியின்றி, அவர்களை தன்னாலான மட்டும் கொடுமை செய்தான் சூரபத்மன். தேவர்கள் மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி, சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான், அவர்களை அழிக்கவும் முடியம். எனவே அவரை அணுகுவதென முடிவு செய்தனர். எல்லாருமாக, விஷ்ணுவின் தலைமையில் கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று, சிவபெருமானைச் சந்தித்தனர். அவருக்கும், பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாய் பிறந்த பார்வதிக்கும் அப்போது தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர்களிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர்.

சிவனிடம் முறையிடல்

ஐயனே ! அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன், கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும், இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால், தேவர் உலகமே இல்லாமல் போய்விடும், என்றனர். சிவபெருமான் இதெல்லாம் தெரியாதவரா என்ன ! இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும், வானமும் தாங்கும். ஆனால், விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி.... ஏழுலகில் ஏதாயினும் சரி.... அங்கே அழிவு துவங்கி விடும். அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான், என்றார்.

கந்தன் திருஅவதாரம்

தேவர்கள் மகிழ்ந்து, ஐயனே ! எங்களை வாழ வைக்கப் போகும் இளவல் வடிவேலன் எப்போது வருவார் ? எனக் கேட்டனர். சிவன் அவர்கள் முன்னிலையிலேயே, பார்வதியை ஆசையுடன் பார்த்தார். அப்போது அவருடைய நெற்றியில் இருந்து அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அந்த அனலின் வேகத்தை தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். பார்வதிதேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை நோக்கி, தேவர்களே ! நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன், என்றார். தேவர்கள் அந்த நெருப்பு பந்துகளை வணங்கினர். அதே நேரம் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர். சிவபெருமான் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, தேவர்களே ! கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான். ஆமாம்... இவர்களை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்கப் போகிறீர்கள் ? என்றார். அப்போது ரிஷிபத்தினிகள் ஆறு பேர் சிவபெருமான் முன் வந்து நின்றனர்.
தேவாதிதேவா ! அந்த குழந்தைகளுக்கு நாங்களே தாயாக இருந்து வளர்த்து வருவோம். எங்களிடம் ஒப்படையுங்கள், என்றனர். குழந்தைகளை வளர்க்க முன்வந்த கார்த்திகை பெண்களை சிவபெருமான் பாராட்டினார். அப்போது திருமால் அப்பெண்களிடம், தேவியரே ! நீங்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் சரவணப்பொய்கை சென்றனர். தாமரை மலர்களின் மீது குளிர்நிலவாய் காட்சியளித்தனர் குழந்தைகள். அவர்களை குளத்தில் இறங்கி வாரியெடுத்தனர் கார்த்திகை பெண்கள், அப்போது, அவர்களை அறியாமலே அவர்களின் தாய்மை நெஞ்சத்தில் பொங்கிச் சுரந்த பாலை ஊட்டினர். குழந்தைகள் படுசுட்டிகளாக இருந்தன. அவர்களின் விளையாட்டிற்கு அளவே இல்லை, சிறிது காலத்தில் அவர்கள் தத்தி தத்தி நடைபயில ஆரம்பித்தனர். தள்ளாடி விழுந்தனர் ஓடியாடி விளையாடினர். இதைப் பார்த்து தாய்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது.

நவசக்திகள் தோன்றல்

இங்கே இப்படியிருக்க, சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினாள்.. ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டமல்ல, தன் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழும் அளவுக்கு ஓடினாள். அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார். ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. இதைப் பார்த்த பார்வதிதேவி கோபத்துடன். பெண்களே ! நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள், என சாபம் கொடுத்தாள். அப்பெண்கள் கலங்கியழுதனர்.

சிவன் அவர்களிடம், பெண்களே ! ஒரு ஆண்மகன் பிறபெண்களை உற்று நோக்கினால் என்ன தண்டனையோ, அதே தண்டனை பெண்ணினத்திற்கும் உண்டு, ஆண்கள் தங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்க பெண்ணினமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்வே உலகத்துக்கு உதாரணமாக அமையட்டும். இருப்பினும், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள், என்று உத்தரவிட்டார். பத்துமாதம் கடந்தும் அவர்களுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவை அவர்களின் உடலில் முத்துக்களாய் ஊறின (அம்மை). அந்த அம்மை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றில் இருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தோன்றினர். ஒன்றல்ல... இரண்டல்ல... லட்சம் வீரர்கள் அங்கே இருந்தனர். அந்த குழந்தைச் செல்வங்களைப் பார்த்து சிவன் மிகவும் சந்தோஷப்பட்டார்.

நவவீரர்கள்

ஒருமுறை பார்வதிதேவி சந்தோஷமாக இருந்த போது, அந்த தேவியர் தங்களது சேவையை ஏற்று, சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டனர். இனியும் கர்ப்பம் தாங்கும் சக்தியில்லை என்று கதறினர். சிவபெருமான் பார்வதியிடம், தேவி ! இந்த உலகின் நன்மை கருதியே என் அம்சமான வடிவேலன் தோன்றினான். அவனுக்கு பக்க பலமாக இருக்க இந்த லட்சம் வீரர்களை உருவாக்கினேன். இவர்களை வழி நடத்திச் செல்ல சேனாதிபதிகள் வேண்டாமா ? அதற்காகத்தான் இவர்களைக் கர்ப்பமுறச் செய்தேன். இது என் திருவிளையாடல்களில் ஒன்று, அவர்களை தவறாகக் கருதாமல், உன் சாபத்தை நீக்கிக் கொள், என்றார். கருணைமிக்க அந்த அன்னையும், சாப விமோசனம் கொடுக்க வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஷஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், பின்னர் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை வணங்கி, பார்வதி தேவியின் கடாட்சமும் பெற்று பூரண சக்தியுள்ளவர்கள் ஆயினர். இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான். மற்ற சகோதரர்கள் வீர விளையாட்டுகளுக்கு சென்றால், அவர்களைக் கண்டதுமே போட்டியாளர்கள் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு ஓட ஆரம்பித்தனர்.

சிவன் அவர்களை ஆசிர்வதித்து, மக்களே ! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். என்னிடம் அருள்பெற்ற அவர்கள், எனக்கு பிடிக்காத செயல்களைச் செய்கின்றனர். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நடக்க நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம், என்றார். பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச் சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்த அவர்கள், தாங்கள் சென்ற காளை வாகனத்தில் இருந்து இறங்கினர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது அவள் மார்பில் சுரந்த பாலை முருகக்குழந்தைகள் குடித்து மகிழ்ந்தனர். அப்போது சிந்திய சில துளிகள் சரவணப்பொய்கையில் கலந்தன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. குளத்தில் நீந்திய மீன்களில் பல முனிவர்களாக வடிவெடுத்தன. அவர்கள் பற்பல சாபங்களால் மீன்களாக மாறியிருந்தவர்கள். கந்தனுக்கு ஊட்டப்பட்ட பாலின் மகிமையால் அவர்கள் தங்கள் சுயரூபமடைந்து, கந்தக்குழந்தையை வாழ்த்தி விட்டுச் சென்றனர். இளமையில் மகான்களின் ஆசி கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்த ஆசி காலம் முழுமைக்கும் நன்மை தரும்.

கார்த்திகேயன் பெயர்க்காரணம்

பார்வதிதேவி தன் மகனை வளர்த்த கார்த்திகை தேவியரை அழைத்தாள். அன்னையரே ! தாங்கள் என் மகனை என்னிடமே ஒப்படைத்து விட வேண்டும். இனி அவனை நான் சிவலோகத்தில் வளர்ப்பேன். அவனுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்த தங்களுக்கு நன்றி, என்றாள். கார்த்திகை பெண்களுக்கு கண்ணீர் முட்டியது. பெற்றவள் குழந்தையைக் கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா ? ஆனாலும், தங்கள் ஸ்தனங்களில் இருந்து பாலூட்டியதால் வடிவேலனுடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. சிவபெருமான் அப்பெண்களைத் தேற்றினார். மங்கையரே ! பற்றும் பாசமும் தற்காலிகமானவை. அவற்றை உதறி விட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். ஆயினும், உங்கள் பெருமையை இந்த உலகம் அறிய வேண்டும். கார்த்திகை பெண்களான உங்களால் இந்த குழந்தை உங்கள் பெயரால் கார்த்திகேயன் எனப்படுவான். நீங்கள் ஆறுபேரும் ஒருங்கிணைந்து ஒரு நட்சத்திரமாக வானில் ஜொலிப்பீர்கள். உங்கள் திருநட்சத்திர நாளில் கந்தனை வணங்குவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெறுவர். அவர்கள் ஒன்றாய் இணைந்து நட்சத்திரமாய் மாறி, விண்ணில் ஜொலிக்கத் துவங்கினர். பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயமலை வந்தார் சிவபெருமான். பார்வதிதேவி தன்மகனைக் கொஞ்சி மகிழ்ந்தாள்.

முருகனின் லீலைகள்

பாலமுருகன் செய்த சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல, தன் அரைஞாணில் கட்டப்பட்ட தங்க மணிகள் கலகலவென ஒலிக்க அவன் அங்குமிங்குமாய் ஓடுவான். ஆறுதலைகளிலும் குட்டி குட்டியாய் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளி, எங்கும் பிரகாசிக்க அந்த ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்பி விளையாட்டுக் காட்டுவான். தன் தந்தையின் வாகனமான நந்திதேவரின் மீது விழுந்து உருண்டு புரள்வான். பூலோகம் வந்து கடல்களில் குதித்து திமிங்கலங்களை பிடித்து விளையாடி மகிழ்வான். ஏழு கடல்களை கலக்கி அவற்றை ஒரே கடலாக மாற்றினான். மிகப்பெரிய ஆடு, சிங்கம், புலி முதலானவற்றின் மீது அமர்ந்து உலா வருவான். (முருகனுக்கு மயில் வாகனம் கிடைத்தது பிற்காலத்தில் தான்) இந்திரனின் வில்லான (இந்திர தனுசு) வானவில்லை எடுத்து வந்து அதன் நாண் மீது அமர்ந்து அந்தரத்தில் பறப்பான். மலைகளைப்பிடுங்கி எறிந்தான். இப்படியாக விளையாடும் அவனை யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. சிவமைந்தனின் இந்த சேஷ்டைகள் தேவர்களுக்கு பொறமையை ஏற்படுத்தியது. அந்த பொறாமையை ஏற்படுத்தியதும் சாட்சாத் முருகன் தான். தங்களை விட உயர்வான சக்தி பெற்று வளரும் இச்சிறு குழந்தையின் வீரத்தைப் பார்த்து எமன், வருணன், சூரியன், அக்னி, குபேரன், வாயு ஆகியோர் பொறாமைப்பட்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனிடம் முருகன் செய்யும் சேஷ்டைகள் பற்றி கூறினர். இந்திரனே ! சூரனை அழிக்கப் பிறந்ததாக சொல்லப்படும் முருகன். அதற்குரிய பயிற்சியை எடுக்காமல், நம்மால் படைக்கப்பட்ட பொருட்களை அழித்துக் கொண்டிருக்கிறான். நான் ஏழு கடல்களுடன் விசாலமாக விளங்கினேன். என் பொருட்களை ஒன்றாக்கி விட்டான்.

கடலுக்குள் கிடக்கும் முதலைகளைப் பிடித்து பூஜை செய்கிறான். இப்படி வந்த வேலையை விட்டுவிட்டு, இருப்பவற்றை நாசமாக்கத்தான் இவன் பிறந்தானா ? என்றான் வருணன். எமன் ஓடி வந்தான். இந்திராதி தேவரே ! தங்கள் அடிமையான என்னிடம் உயிர்களை அழிக்கும் சக்தி கொடுத்துள்ளீர்கள். இவனோ, உலக உயிர்களை தானே அழிக்கிறான். அப்படியானால் எனக்கென்ன மரியாதை இருக்கிறது? என் பெருமையைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், நீங்கள் தான் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும், என்றான். குபேரன் தன் பங்கிற்கு, இந்திரரே ! அவன் தலைகளிலுள்ள கிரீடங்களில் ஜொலிக்கும் வைரங்கள், குபேரனான என்னிடம் கூட இல்லை. அவன் என்னை விட செல்வந்தனாக இருக்கிறான். அப்படியானால், எனக்கெதற்கு குபேர பட்டம் ? என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, இந்திரனின் மனதிலும் ஊறிக்கிடந்த பொறாமை உணர்வு வெளிப்பட்டது. எனது பலம் மிக்க தனுசை விளையாட்டு பொருளாக அவன் வைத்திருக்கிறானே ! அப்படியானால் தேவர்களின் தலைவனாய் இருந்து என்ன பயன் ? இந்த முருகனைத் தட்டி வைத்தால் தான், என் பதவி நிலைக்கும், என மனதிற்குள் கருதியவனாய், தனது ஆதரவாளர்களுடன் முருகனை அடக்கி வைக்க தன் ஐராவதம் யானை மீதேறி புறப்பட்டான். சூரியன் முதலான தேவர்கள் தங்களுடையே தேரேறி வந்தனர். அவர்கள் மேருமலையை அடைந்த போது, அதன் சிகரங்களை பாலமுருகன் லாவகமாக கிள்ளி எறிந்து பந்தாடிக் கொண்டிருந்தான்.

தேவர்களின் ஆணவத்தை அடக்கிய வேலன்

மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின் செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, சிறுவன் என்றும் பாராமல், முருகனைத் தட்டிக் கேட்டனர்.ஏ சிறுவனே ! உன் விளையாட்டை நிறுத்தப் போகிறாயா, இல்லையா ? என இந்திரன் ஆவேசமாகக் கேட்டான். தேவர் தலைவனே ! நானோ சிறுவன். நீயோ பெரும்படையுடன் வந்துள்ளாய். சிறுவர்கள் விளையாடுவது என்பது இயற்கை தானே ! என் விளையாட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே, என்றான். வருணன் இந்த பேச்சின் குறுக்கே புகுந்தான். கடலுக்குள் புகுந்து ஆமைகளையும், திமிங்கலங்களையும் கசக்கி பிழிந்து விளையாடுகிறாய். இது தவறில்லையோ ? என்றான். வருணனே ! பிதற்றாதே. பூலோகத்தில் குழந்தைகள் ஏரிகளில் இறங்கி மீன்பிடித்து விளையாடுகிறார்கள். நானும் ஒரு சிறுவன் தான். என் வீரத்தை சுயசோதனை செய்து கொள்ளும் பொருட்டு அவற்றை பிடித்து விளையாடுகிறேன். ஒரு வேளை என் கையால் அவை உயிர்விட்டால் கூட, அவற்றுக்கு முக்தியே கிடைக்கிறது. பிறப்பற்ற நிலையால் ஆனந்தம் கொண்டு, அவை சிவலோகப் பதவியை அடைந்துள்ளன. கணங்களாகவும், என் தாயின் கண்களுக்கு அழகு சேர்ப்பனவாகவும் அவை உருவெடுத்துள்ளன.

அதனால் என் அன்னை மீனாட்சி என்ற திருநாமம் பெற்றிருக்கிறாள். தேவர்களே ! என் பிறப்பின் ரகசியம் உங்களுக்கு மறந்து விட்டதோ ! நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? என்றார்.
தேவர்களும் முருகனை எதிர்த்துப் பேசினர். குழந்தாய் ! அந்த சிவனும், பார்வதியுமே ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும் தன்மை படைத்தவர்கள். உனக்கு ஏது அந்த சக்தி ? இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம், என்று மிரட்டினர்.வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த சின்னஞ்சிறு அம்புகளை தேவர்கள் மீது அடித்தான். ஒரு அம்பு தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம் யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்தது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன்.

முருகனின் விஸ்வரூப தரிசனம்

தேவர்கள் பிரகஸ்பதியிடம் ஓடினர். அவர்தான் தேவர்களுக்கு குரு. தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். நடந்த விபரத்தை தன் ஞானத்தால் அறிந்த குரு, சிவமைந்தனிடம் மோதியது உங்கள் தவறல்லவா ? உங்கள் ஆணவத்தால் அறிவிழந்தீர்களே ! என்னிடம் பாடம் படித்தும் முட்டாள்களாக இருக்கிறீர்களே ! என் பெயரைக் கெடுத்து விட்டீர்களே ! சரி... நானே போய் அவரிடம் சரணடைகிறேன். என்று கூறி புறப்பட்டார்.பாலமுருகனைச் சந்தித்து, அவனை வாழ்த்தி வணங்கி நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிவபெருமானே பிரகஸ்பதி என்று சொல்வாரும் உண்டு. அப்படியிருக்கும் போது, தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்கலாமா என்றால், குருவுக்கு குருவான முருகனிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். பிரகஸ்பதியின் வேண்டுகோளை ஏற்ற பாலமுருகன் சினம் தணிந்தான். இறந்த தேவர்களை உயிர்பெறச் செய்தான். அவர்களின் ஆணவத்தை அழித்து, பக்தி ஞானத்தைக் கொடுத்தான். தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில் ஆறுமுகங்களும், 12 கைகளும் விண்ணுயரம் உயர விஸ்வரூப காட்சி தந்தான். விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம். எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான். தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான்.

அறுமுகனுக்கு ஓர் ஆட்டு வாகனம்

தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒரு கலாட்டா செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். எல்லாரையும் கலாட்ட செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர்.

இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு அதற்கு அசைபவனா என்ன ! அந்த வீரச்சிங்கம், ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க ! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, சிவமைந்தனே இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார். முருகன் சிரித்தான்.

நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையில் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும், என்றார். நாரதர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இதன்பிறகு கைலாயம் திரும்பினார் முருகன்.

முருகன், பிரம்மா சந்திப்பு

ஒருநாள் நான்முகனான பிரம்மா சிவதரிசனத்துக்கு வந்தார். இறைவனை வணங்கிவிட்டு புறப்பட்டார். அப்போது வழியில் முருகன் தன் தளபதிகளோடு உரையாடிக் கொண்டிருந்தான். பிரம்மன் அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் சென்றார். பிரம்மா! இங்கே வாரும், என்றான் முருகன். பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல; சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால், மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை கட்டி நின்றார். வணக்கம் சிவமைந்தரே ! தாங்கள் அழைத்த காரணம் என்னவோ ? முருகன் பவ்வியமாக பேச ஆரம்பித்தான். பிரம்மனே, நீர் எங்கிருந்து வருகிறீர்? எதற்காக இங்கு வந்தீர் ? முருகா ! நான் பரமனைத் தரிசிக்க வந்தேன். என்னுலகம் சத்தியலோகம். அங்கிருந்து தான் என்படைப்புத்தொழிலை நடத்துகிறேன். இவ்வுலகத்தில் இயக்கத்துக்கு காரணமானவனே நான் தான் ! என்று பெருமையடித்துக் கொண்டார் பிரம்மன். ஓ! அப்படியானால் நீர் பெருமைக்குரியவர் தான். சரி... எந்த அடிப்படையில் நீர் உயிர்களைப் படைக்கிறீர் என நான் தெரிந்து கொள்ளலாமா ? என்று ஒன்றுமறியாதவன் போல் அப்பாவியாய்க் கேட்டான் முருகன். சிறுபிள்ளையான உனக்கு அதெல்லாம் புரியாது முருகா ! நான் வரட்டுமா ? என்றார் பிரம்மா. முருகனுக்கு கோபம் வந்து விட்டது. சற்றே அவரை அதட்டி நிறுத்திய முருகன், நான் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு புறப்படும். உம் இஷ்டத்துக்கு என் வீட்டுக்குள் வந்தீர். உம் இஷ்டத்துக்குப் போவதாகச் சொல்கிறீர் ! மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர். உம்.... என்றதும் நடுங்கிவிட்டார் பிரம்மா.

உலகத்தையே கலக்கிய ஆட்டை அடக்கியவன் முருகன். நாமெல்லாம் அவன் முன் எம்மாத்திரம் ? என்பதை நினைவுபடுத்திக் கொண்டு திரும்பவும் கை கட்டி நின்று, முருகப்பெருமானே ! எனையாளும் சிவ மைந்தனே ! படைப்பின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். படைப்புகள் ஓம் என்ற பிரணவத்தின் அடிப்படையில் அமைகின்றன, என்றார். ஓஹோ ! ஓம் என்று சொன்னீரே ! அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்தால் தானே நான் படைப்பின் ரகசியத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும், என்றான் முருகன். முருகா ! இது புரியவில்லையா உனக்கு ! ஓம் என்றால் பிரம்மன். அதாவது அந்த மந்திரத்துக்குரிய பொருளே நான் தான். நான் தான் எல்லாம், என்றார். பிரம்மா ! என்ன உளறுகிறாய். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாத நீ, படைக்கும் தகுதியை இழந்தாய். நான்கு தலைகள் இருந்தும் உமக்கு அறிவு மட்டும் இல்லவே இல்லை, என்றவன் அவரை இழுத்துப் போய், சிறையிலடைக்க வீரபாகுவை உத்தரவிட்டான். பிரம்மனுடன் வந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பிரம்மாவை விடுவிக்க அவர்கள் நேராக சிவனிடம் ஓடினர்.

பிரம்மனை விடுவித்த ஈசன்

பிரம்ம லோகத்தினர் சொன்னதை சிவபெருமான் புன்னகையுடன் கேட்டார். நடந்ததை எல்லாம் நன்றாய் அறிந்த அந்த பரம்பொருள், இந்த உலகத்தை முருகனே படைத்துக் கொண்டிருப்பதை கண்டார். மகனின் அளப்பரிய அறிவாற்றலை நேரில் காணப் புறப்பட்டார். குழந்தை வேலன் படைக்கும் தொழிலைச் செய்து கொண்டிருப்பதை மூன்று கண்களாலும் மகிழ்வோடு பார்த்தார். வேலனை மார்போடு அணைத்து முத்த மழை பொழிந்தார். முருகா ! நீ செய்தது என்னவோ நியாயம் தான் ! அதற்காக உன்னிலும் வயதில் பெரியவருக்கு மரியாதை தந்திருக்க வேண்டாமா ? பிரம்மனை விட்டு விடு, என்றார். தந்தையே ! இதென்ன நீதி ! எனக்காக என் தம்பிகள் இணைந்து இந்த ஸ்கந்தகிரியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவன் நான். உங்கள் லோகத்துக்கு வருபவர்கள். என்னையும் வணங்க வேண்டும் என்பது நீங்கள் வகுத்த நியதி. இதை மீறினார் பிரம்மா. அது மட்டுமல்ல, ஒரு தொழிலைச் செய்பவன், அது பற்றி தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்ற பிரணவம். அதற்குரிய பொருளே அவருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, அந்த அஞ்ஞானி படைப்புத்தொழில் செய்ய அதிகாரமே இல்லையே. அதனால், அவரை சிறையில் அடைத்திருக்கிறேன். இது என் உள்நாட்டு விஷயம். இதில் தலையிடாதீர்கள், என்றான். சிவன் இது கேட்டு மகிழ்ந்தாலும், கோபமடைந்தார் போல்காட்டிக் கொண்டு, முருகா ! பிரம்மனை விடுதலை செய் என்று சொல்வது உன் தந்தை. தகப்பனின் சொல்லை மீறுவது மகனுக்கு அழகல்ல, என்றார். தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்த முருகன். அவரை விடுவித்து விட்டான். பிரம்மன் தலைகுனிந்து நின்றார்.

தந்தைக்கே உபதேசம் செய்த பாலகன்

பிரம்மா ! கவலைப்படாதே. ஓம் என்ற மந்திரத்தின் பொருளை இனியாவது அறிந்து கொள். தெரியாமல் ஒரு பணியைச் செய்யக் கூடாது என்ற முருகனின் வாதம் சரியே, என்றார் சிவன். தேவர்கள் எல்லாம் பொருளைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது முருகன் சொன்னான். தந்தையே ! இது சாதாரண விஷயமல்ல. மிகப்பெரிய ரகசியம். இதை உலகத்தினர் யாரும் அறியக் கூடாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும் என்பதை தாங்கள் தானே அறிவுறுத்தியிருக்கிறீர்கள். அந்தத் தகுதிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், என்றான். அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறரறிய வெளிப்படுத்துபவன், நரகத்தையே அடைவான். ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். சரி... மகனே! அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. அதற்காக பிரம்மனைச் சிறையில் அடைத்தது போல் என்னையும் அடைத்து விட மாட்டாயே ! என்று சொல்லிச் சிரித்தார் சிவன்.

சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தெரியுமா ? தனக்கு அதன் பொருள் தெரிந்தாலும், தன் மகனின் வாயால் கேட்டால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் தான். அது மட்டுமல்ல, தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட, வயதில் பெரியவராயினும், தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால், அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக ! இதற்காக கைகட்டி, வாய் பொத்தி, முட்டுக்காலிட்டு, முருகன் ஆசனத்தில் இருக்க, மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார். தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர், எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான். ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால், இந்த உலகமே நான் தான் என்பதாகும். ஆம்...சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். அவரது ஒட்டுமொத்த சக்தியும் அவருக்குள் அடக்கம் என்று பொருள் சொல்வதுண்டு. பின்னர் கயிலை திரும்பிய சிவன், மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் மனம் மகிழ்ந்தாள்.

திருமாலின் புத்திரிகள்

முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான், திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது. இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் உபேந்திரன் என அழைக்கப்படும் திருமால் பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன், ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் ! என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி, அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால், என் அன்பு புத்திரிகளே ! நீங்கள் இருவரும், என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில், முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது.

தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது. ஒருநாள் அமுதவல்லி, தன் தங்கையிடம் சவுந்தர்யா ! நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ, அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும், நண்பனுக்கும், சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ, அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல், உலக நன்மை கருதி, சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால், நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார். அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால், அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால், அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார், என்றான். இருவரும் என்றேனும் ஒருநாள், முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே, இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு, வெள்ளை பட்டு உடுத்தி, நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக, நாணல்புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்தது.

திருமுருகனின் திருக்காட்சி

அமுதவல்லி, சவுந்தர்யவல்லியின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து, ஆளுக்கொரு பக்கமாக நின்றனர். அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், தங்களைப் போல் கருணையுள்ளவரும், அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே ! நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும், என்றனர். அதற்கென்ன தருகிறேன் என்ற முருகனிடம், அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். பெண்ணே மாப்பிள்ளையிடம் தன் காதலைத் தெரிவிப்பது என்பது இந்தக்காலத்தில் ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். முருகப்பெருமானே காதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான் ! அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன், அவர்களை அணைத்துக் கொண்டார்.

கன்னியரே ! என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல ! சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும், காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில், பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பெற்றவரைப் பகைத்து ஏற்படும் காதல் நிலைப்பதில்லை. எனவே, நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து, அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும், அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
முருகன் அமிர்தவல்லியிடம், அமிர்தா ! நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா. உன் சகோதரி சவுந்தர்யா, பூலோகம் சென்று, அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு, உங்களை நான் மணந்து கொள்கிறேன், என்றதும், அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், சிவபெருமானிடம், ஐயனே ! முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும், வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்படவேண்டும், என்றனர்.

முருகன் தேவ சேனாதிபதி ஆதல்

சிவபெருமான் தன் மைந்தனிடம், முருகா ! உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல. அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது. பலலட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும், என்றதுடன், அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார். பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, பாலகனே ! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா, என ஆசி அளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். காற்றினும் கடுகிச் செல் என்று சொல்வதை இசைத்தான். காற்றை விட வேகமான ஊடகம் உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின.

வீரபாகு தூது

சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக, முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு ! நான் யாரையும் அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. என்னை தனிப்பட்ட முறையில் திட்டுபவர்களைக் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் அடியார்களுக்கு ஒரு துன்பமென்றால், அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். பத்மாசுரனின் சகோதரர்கள் அதைத் தான் செய்கிறார்கள். எனவே, அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன். முதலில், இந்த தாராகசுரனை ஒழிக்க வேண்டும். யானை முகம் கொண்ட அவனையும், அவனது படையையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே. எப்போதுமே, எதிரிகள் நம்மை விட வலிமை வாய்ந்தவர்கள் என்பதை யாரொருவன் அலட்சியம் செய்கிறானோ, அவனை வெற்றிதேவி நெருங்கமாட்டாள். இதை நீ மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீ உடனே தாரகனின் கோட்டைக்குள் செல். நமது படைத்தலைவர்கள் ஐம்பத்து நான்கு பேரை உடனழைத்துச் செல். அவர்களது தலைமையில், நம்மோடு வந்த படையில் பாதி பேரை அணிவகுக்கச் செய். ஒட்டுமொத்த தலைமை பொறுப்பு உன்னைச் சேரும். துணைப் படைத்தலைவராக தம்பி வீரகேசரியை நியமித்து விடு. உம்...சற்று கூட தாமதிக்க வேண்டாம். நான் பின்னாலேயே கிளம்பி வருகிறேன், என்றார். வீரபாகு படைகளை கணப்பொழுதில் ஆயத்தப்படுத்தி, தாரகனின் கோட்டை நோக்கி புறப்பட்டான்.

இந்நேரத்தில், அசுரர்கள் வாழ்ந்த மகேந்திரபுரி பட்டினத்தில் அபசகுனங்கள் தோன்றின. கழுதைகள் கத்துவது போல மேகக்கூட்டங்கள் சப்தம் எழுப்பின. வானத்தில் இருந்து ரத்த மழை பெய்தது. நரிகள் காரணமின்றி ஊளையிட்டன. மேகம் சூழ்ந்ததால் சூரியனைக் காணவில்லை. அதிகாலை வேளையில் சூரியின் உதிக்காத நாள் ஒரு நாட்டுக்கு நல்லதைச் செய்யாது. மக்கள் துன்பப்படுவர். கடும் மழை காலத்தில் கூட சூரிய ஒளி அதிகாலைப் பொழுதில் தெரியாவிட்டால் ஆபத்து விளையும். அசுரர் வீட்டுப் பெண்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அலங்கரிக்கச் சென்ற போது, தங்கள் கணவன்மாரின் தலையற்ற உடல்கள் கண்ணாடியில் தெரிவது போல் கண்டு அலறினர். நீர்நிலையில் வானவில் தெரிந்தது. இவையெல்லாம், தங்கள் நாட்டுக்கு அழிவைக் கொண்டு வரப்போகிறது என்பதை உணர்ந்தனர் அசுரர்கள். ஆனாலும், ஜென்மபுத்தி மாறுமா ? அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

வீரபாகு, தாரகன் வதம்: வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை நுழைந்து விட்டது யென்ற தகவல், தாரகனுக்கு பறந்தது. உடனடியாக அவன் போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. இருதரப்பிலும் பயங்கர சேதம். இருதரப்புமே சமநிலையில் தான் போரிட்டன. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க, பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை, தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில், வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு, தாரகனின் முன்னால் வந்தான். தாரகா ! மரியாதையாக சரணடைந்து விடு. என் கண்ணில் பட்ட எதிரிகள் உயிர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என் காலில் விழு என எச்சரித்தான். தாரகன் நகைத்தான்.

ஏ பொடிப்பயலே ! உன் தலைவன் முருகனே எனக்கு தூசு. அப்படியிருக்க, நீயெல்லாம் ஒரு ஆளா! நீ அனுப்பிய உன் துணைப்படைத்தளபதி, என் அம்புகளின் தாக்கத்தால் மயங்கிக்கிடப்பதைப் பார்த்துமா, உனக்கு புத்தி வரவில்லை. உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு என எச்சரித்தான். வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன், தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான். கோபத்தில் தன் கதாயுதத்தால், பூமியின் மீது ஓங்கி அடித்தான். அதன் பலம் தாங்காத பூமி, இரண்டாகப் பிளந்துவிட்டது. தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால், அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை, வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்த பிறகும், கோபம் தணியாமல் நிற்க, சிவபெருமான் நரசிம்மத்தை விட அதிக கடுமை கொண்ட சரபேஸ்வர வடிவம் எடுத்து, நரசிம்மரின் கோபத்தை அடக்கியது போன்ற நிலைமை இங்கே இருந்தது. இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர்.

வீரபாகுவை சிறைவைத்த தாரகன்

எதற்கும் பணியாத தாரகனை நோக்கி, தன்னிடமிருந்து கடைசி அஸ்திரமும், எப்பேர்ப்பட்ட இடத்தையும் பொடிப்பொடியாக்கும் வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு, அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை. வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன், அங்கிருந்து தப்பித்தால் போது மென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு, ஒரு குகையில் ஒளிந்திருந்தான். தேவப்படைகள் ஆராவாரம் செய்தன. இருப்பினும், அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே, அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றானோ இல்லையோ, பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தன் வாசலை மூடிக் கொண்டது. அது தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டது.

ஒரே இருள்... கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. இருப்பினும், தட்டுத்தடுமாறி எங்காவது தாரகன் ஒளிந்திருக்கிறானா என தடவித்தடவி பார்த்தான். அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. முருகா ! இதென்ன சோதனை. வீரபாகு என்ற சொல் கேட்டால் உலகமே நடுங்கிய காலம் முடிந்து விட்டதா ? என் வீரச்சரிதம் அவ்வளவு தானா ? உன் கட்டளையை நிறைவேற்றாமல் தோற்று விடுவேனா ? உமா தேவியின் புத்திரனே ! என்ன செய்வது என புரியவில்லையே, என முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர். உடனே வீரகேசரியும், லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து, வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும், கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில் திறந்தது. அவர்கள் காற்றினும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவ்வளவு தான். லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. எங்கும் இருள். படைகள் திணறின. இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி விட்டான். அட்டகாசமாக சிரித்தான்.

வீரபாகுவாம் வீரபாகு... அவனை ஒழித்து விட்டேன், என ஆர்பரித்து சிரித்தான். அசுரப்படைகள் ஹோவென எழுப்பிய கூச்சல் அந்தப் பகுதியை நிலநடுக்கம் ஏற்பட்டால் போல் நடுங்கச் செய்தது. அப்போது நாரதர் அங்கு வந்தார். சிதறி ஓடிய படையைக் கண்டார். உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். முருகா ! நீ இருந்தும் இப்படி நடக்கலாமா ? தாரகன் உன் தம்பி வீரபாகு, வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா என்பதே தெரியவில்லை. இன்னும், நீ அமைதியாய் இருந்தால், தேவர்களின் இனமே அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா ? என்றார். முருகன் ஆவேசப்பட்டார். வாயுவை அழைத்தார்.

கிரவுஞ்ச-தாரகாசுர வதம்

வாயு பகவானே ! நீர் உடனடியாக தேரில் குதிரைகளைப் பூட்டு, தேர் கிரவுஞ்ச மலைக்கு செல்லட்டும், என்றார். நாரதர் மகிழ்ந்தார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். அவர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும், சூரியனையும் மிஞ்சும் ஒளியையும், இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். அந்த இளைஞனைப் பார்த்ததும். அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதை பிறந்தது. ஏனோ அவன் அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவன் தன் தூதனை அழைத்தான்.

தூதனே ! அந்த தேரில் நிற்கும் இளைஞன், இவ்வளவு தேஜசுடன் திகழ்கிறானே ! இதுபோன்ற அழகுள்ளவனை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே, சிவபெருமானின் நெற்றியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகளை விட அதிக பிரகாசமாக இவன் முகம் விளங்குகிறதே ! இவனைப் பார்த்தால், கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறதே ! அழகில் மன்மதன் கூட இவன் அருகே நிற்க முடியாது போல் தோன்றுகிறதே ! என்றான். தூதன் அவனிடம், எங்கள் மாமன்னரே ! தாங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே. இவ்வுலகில் இவரை யாரோ என நினைத்துவிடாதீர்கள். ஆலகால விஷத்தை உண்டவரும், யாராலும் அணுக முடியாதவரும், மன்மதனை எரித்தவரும், எமனையே உதைத் தவருமான பரமேஸ்வரனின் இளைய புத்திரன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து அவதாரம் செய்தவன். அவனை வடிவேலன் என்றும், முருகன் என்றும், குமரன் என்றும், கந்தன் என்றும், கடம்பன் என்றும், கார்த்திகேயன் என்றும் இன்னும் பல திருநாமங்களாலும் புகழ்வர் அவனது பக்தர்கள். இவனை எதிர்க்க இவரது தந்தை பரமேஸ்வரனால் கூட முடியாது, என்றான். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும்படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள், 12 கரங்கள், அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள், கமலம் போல் முகம்... இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான்.

வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன், அவரிடம் பேசினான். முருகா ! உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே ! எங்கள் அசுர வம்சத்திற்கும், தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும், என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில், உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே, என்றான் பணிவான வார்த்தைகளால். வடிவேலன் இடிஇடியென சிரித்தான்.

தாரகனை வதம் செய்த கந்தன்

தாரகா ! நன்றாக இருக்கிறது உன் பேச்சு. உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில், பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக, நீயோ, உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிற உயிர்களைத் துன்புறுத்துகிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப் படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன். உன் மரண ஓலையைப் பிடி, என்றார் கம்பீரமான குரலில். அவ்வளவு தான் ! தாரகனுக்கு பொறுமை போய், அசுரகுணம் தலைக்கேறி விட்டது. சிறுவனே ! இங்கே நின்று என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் ! நான் விஷ்ணுவையும், பிரம்மனையும், இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவியபோது, அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். அத்தகைய தைரியம் படைத்த என்னை ஒழித்து விடுவேன் என சாதாரணமாகச் சொல்கிறாயா ? என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடி விடு. போய், தாய், தந்தையுடன் சுகமாக இரு, என்றான் ஆணவத்துடன்.

கர்வம் பிடித்தவனே ! தன் சுயபலத்தை தம்பட்டம் அடிப்பவன் வீரனே அல்ல ! தைரியசாலிகள் செயலில் தான் எதையும் காட்டுவார்கள். அதை மற்றவர்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள்; புகழ்ந்து தள்ளுவார்கள். உன்னை நீயே புகழ்ந்ததன் மூலம் இறைவனிடம் பெற்ற வரத்தை இழந்து விட்டாய். வா போருக்கு, என்று அறைகூவல் விடுத்தார் முருகன். பொறுமையிழந்த தாரகன், முருகனின் மீது அம்பு மழை பொழிய, அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி, தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். ஆனால், அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன். தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன். உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார். அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர். மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான், பரமசிவனார் போல் உருமாறி, அந்த நகரங்களை எரித்தே அழித்தார். அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான்.

வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படைதுவம்சம் செய்தது, போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும், மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்தனர். அன்பரே ! விஷ்ணுவாலும், தேவவேந்திரனாலும் வெல்ல முடியாதவரும், பரமசிவானாரிடம் சாகாவரம் பெற்றவருமான உங்களுக்கா இந்தக்கதி நேர்ந்தது ! இனி நீங்கள் சென்றுள்ள உலகத்திற்கே வருவோம். ஒரு சிறுவனிடம் உங்கள் கணவன் தோற்றான் என்று பிறர் பேசுவது எங்கள் காதில் விழும்முன் உங்களை நாடி வந்து விடுகிறோம், என்று கதறினர்.

தாரகன் மகன் அசுரேந்திரன்

தன் தந்தை இறந்த செய்தியறிந்து, தாரகனின் மகன் அசுரேந்திரன் ஓடிவந்தான். அவன், தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். அப்பா ! ஒரு சிறுவனிடம் தோற்று அசுர குலத்திற்கு தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே ! இது எப்படி சாத்தியமாயிற்று ? ஆயினும், உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன், எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன், இது சத்தியம், என்று சபதம் செய்தான். பின்னர் அகில், சந்தனக்கட்டைகளை அடுக்கி, அதன் மீது தந்தையின் உடலை வைத்து, சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக்கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா, சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.

அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ஏன் இங்கு வந்தான் என்றும் ஆச்சரியப்பட்டான். அவனது பரபரப்பு கண்டு, நடக்ககூடாத ஏதோ நடந்து விட்டதை உணர்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுத அசுரேந்திரன், வார்த்தைகள் வெளியே வராமல் தத்தளித்தான். தரையில் விழுந்த மீன்போல், அவன் துடிப்பது கண்டு, சூரபத்மன் கலங்கி, மகனே ! எந்தச் சூழலிலும் நாம் பதட்டம் கொள்ளக்கூடாது. மேலும், நாம் அசுரர்கள் நமக்கு தேவர்களிடம் பயமில்லை. சிவனின் பேரருள் பெற்ற நாம்... யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. மேலும், எதையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த அண்டத்தில் இல்லை என பெருமை பொங்க கூறினான். பறித்து விட்டார்கள் பெரியப்பா ! பறித்து விட்டார்கள். ஆம்... என் தந்தை... உங்கள் தம்பி... இப்போது இந்த பூமியில் இல்லை. ஒரு சிறுவன் அவரைக் கொன்று விட்டான். என் தாய்மார்கள் தந்தையோடு உடன்கட்டை ஏறி விட்டார்கள். இப்போது நான் அனாதை. எனக்கு என் நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை. அந்தச் சிறுவனைக் கண்டால் உள்ளம் நடுங்குகிறேன். அவனுக்கு பயந்து ஓடி வந்து விட்டேன், என்று நடுக்கத்துடன் சொன்னால் அசுரேந்திரன். சூரபத்மன் இடிஇடியென நகைத்தான்.

சூரபத்மன், சிங்கமுகன் ஆவேசம்

குழந்தாய் ! நீ எதைப் பார்த்து பயந்தாய். யாரைப் பார்த்து பயந்தாய். தந்தை இறந்தான் என்கிறாய். தாய்மார்கள் உடன்கட்டை ஏறினார்கள் என்கிறாய். என்ன உளறல் இது ? ஏதேனும் கனவு கண்டு வந்தாயோ ? கனவுகள் கூட நம் அனுமதி பெற்று தான் நம் கண்களில் தெரிய முடியும். அந்தளவு செல்வாக்கு பெற்றது நம் குலப்பெருமை. மகனே ! அழாதே. உள்ளே உன் பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அங்கே செல். வேண்டியதை சாப்பிடு. அழகுக்கன்னியர் உனக்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு கூடி மகிழ். போதை பானங்கள் அருந்து. துன்பத்தை மறந்து. இன்ப லோகத்திற்கு செல், என்றான் பரிவோடு. பெரியப்பா, என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள். உங்கள் தம்பி மாண்டது உண்மை. அவருக்கு கொள்ளி வைத்த கையோடு இங்கே வந்திருக்கிறேன். அவரைக் கொன்றவன் முருகன். ஆம்... நம் குல தெய்வமான சிவபெருமானின் மைந்தன். நமக்கு அழிவு சிவனால் மட்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால், புது எதிரி ஒருவன்... அதிலும் சின்னஞ்சிறு பாலகன். அவன் திடீரென விஸ்வரூபம் எடுக்கிறான். திடீரென குழந்தையாகிறான். அவனது சக்திவேல் தந்தையை அழித்து விட்டது, என்றான் கண்ணீர் வழிய. சூரபத்மன் நிலைமையைப் புரிந்து கொண்டான்.

தம்பி ! போய் விட்டாயா ? இந்த சிறுவன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே ! யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே ! ஐயோ ! நீ இல்லாமல் எனக்கேது வாழ்வு ? அசுரகுலத்தின் ஒளி விளக்கே ! நீயின்றி நான் இந்த உலகை எப்படி கண்காணிப்பேன். என் அன்பு இளவலே ! அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தால் எனக்கென்ன ? அவனைக் கொன்று கூறு போடுகிறேன். படை கிளம்பட்டும். முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும். உடனே செல்லுங்கள். அந்த முருகனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுங்கள், என ஆர்ப்பரித்தான். கண்கள் ரத்தச் சிவப்பாயின. சபையிலே மன்னன் அழுது கொண்டிருக்கிறான் என்ற சேதியறிந்து, சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் சோகமும், ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். இடிதாக்கிய நாகம் போல் சோகத்தில் சுருண்டு போனான். பலமுறை மயக்கம் தெளிவித்தும் உணர்வற்று கிடந்தான்.

அமோகனின் ஆலோசனை

ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பிய அசுரர்கள் தேரேறி மன்னா ! படையெடுப்பை நிறுத்துங்கள். ஒரு சிறுவனின் கையால் நம் மாமன்னர் மடிந்திருக்கிறார் என்றால், சற்று சிந்திக்க வேண்டும். தாரகனாரைக் கொன்றவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, என்ற குரல் கேட்டு திரும்பினார்கள் சூரபத்மனும், சிங்கமுகனும். அவன் சூரபத்மனின் அமைச்சரான அமோகன். அவன் தொடர்ந்தான். அரசே ! அந்த முருகனை பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள். அவன் சிறந்த பராக்கிரமசாலி. சிவமைந்தன். சிவனோடு நமக்கு எந்த பகையும் இல்லை. அவர் உலகை ஆள்பவர். அந்த சர்வேஸ்வரனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அது போல், அவருக்கு பிறந்த முருகனிடமும் நாம் பணிந்து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அறியாமை காரணமாக நம் தாரகனார், அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனது பலத்தைப் பார்க்க வேண்டும். அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் யார் ? அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் யார் ? எந்த தைரியத்தில் அவன் அசுரர்களோடு மோதுகிறான் ? என்ன காரணத்துக்காக மோதுகிறான். ஒருவேளை நம் நீண்ட கால ஆட்சி போதுமென கருதி, சிவபெருமானே அவனைத் தூண்டியுள்ளாரா ? அல்லது நம் குல எதிரிகளான தேவர்களின் உந்துதலால் இப்படி செய்கிறானா ? எங்கிருந்து அவன் உந்தப்படுகிறானோ, அவனை ஒழித்து விட்டால், வடிவேலன் நம்மை துன்புறுத்த மாட்டான், என்றான். அமோகனின் வார்த்தைக்கு மதிப்பளிப்பவன் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்தான். நீங்கள் இதே உருவில் அலைந்து திரிந்து, அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வாருங்கள், என கட்டளையிட்டான். அந்த பறவை அசுரர்கள் உயரப் பறந்தனர்.

முருகனின் மந்திர ஆலோசனை

சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில், முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். அவர் பல சிவத்தலங்களை தரிசித்த பிறகு, செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு பெரிய கடல் இருந்தது. அங்கே தான் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்கினார். ஐந்து லிங்கங்களை அமைத்து தந்தையையும் வழிபட்டு வந்தார். சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும், சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வர ஒரு தூதனை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அந்தத் தூதன் வேறு யார் ? வீரபாகுதான். வீரபாகு ! நீ உடனே சூரன் தங்கியிருக்கும் வீரமகேந்திர பட்டணத்திற்குச் செல். சூரனின் படை பலத்தை அறிந்து கொள். சூரனால் பிடித்துச் செல்லப்பட்ட ஜெயந்தன் மற்றும் தேவர்களை மீட்டுவிடு. பின்னர் சூரனிடம், எங்கள் தலைவர் முருகனிடம் சரணடைந்து விடு. இல்லாவிட்டால் தலையை இழப்பாய், என எச்சரித்து விட்டு வா, என்றார். வீரபாகுவுக்கு ஏக சந்தோஷம். அவனைப் போல் வீரனை இனி புராண சரித்திரம் காணாது. வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில், அவரை மனதார வணங்கி, விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமான மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான்.

அசுரர்களைக் கொன்ற வீரபாகு

யாளிமுகனின் படைத்தளபதி வீரசிங்கன், பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். டேய் ! நில், நீ யார் ? எங்கே போகிறாய் ? என்றான். வீரபாகு சற்றும் கலங்காமல், நான் வெற்றி வடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ, என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா ? உன்னை ஒழித்து விடுகிறேன், என பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர். அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு, அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது, நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான்.

ஏய் நீ யார் ? தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே ! பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் ? மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா ? என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன், ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி, வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன், ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான். அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு, வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து, கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான். பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு, ஒரு கோபுரத்தின் மீது ஏறி, மகேந்திரபுரியை நோட்டமிட்டான். மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும், ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.

ஜெயந்தனை சந்தித்த வீரபாகு

இவர்கள் சூரபத்மனால் தண்டிக்கப்பட்டவர்கள். தனக்கு பணியாத தேவர்களின் கைகளையும், கால்களையும் வெட்டினான் சூரபத்மன். அவை உடனே முளைத்து விட்டன. தேவர்கள் ஏற்கனவே அமிர்தம் பருகியவர்கள் என்பதால், இத்தகைய நிலை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சூரன், அங்கிருந்த சிறையில் அவர்களை அடைத்து விட்டான். அதுபோல், தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். அவ்வூரில் குவியும் குப்பையையும், தூசையும் வாயுபகவான் காற்று வீசி ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் துப்புரவு பணியைச் செய்து கொண்டிருந்தான். ஜெயந்தனும், தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள், உங்கள் தலைவன் இந்திரனும், இந்திராணியும் எங்கிருக்கிறார்கள் ? சொல்லாவிட்டால் சித்ரவதை செய்வோம், என்று கூறி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல், லோக நாயகரான சிவபெருமானே ! எங்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் ? எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா ? என் தாயும், தந்தையும் எங்கிருக்கிறார்களோ ? அவர்கள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ என்று புலம்பினான்.

அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன், ஜெயந்தா ! நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். அவன் பராக்கிரமசாலி. சூரனை நிச்சயம் சந்தித்து, அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு, என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான். அந்நேரத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி, ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். அங்கே பெரும் அதிர்வு ஏற்பட்டது. அவன் ஜெயந்தனிடம், இந்திரன் மகனே ! கவலைப்படாதே. நல்ல நேரம் பிறந்து விட்டது. மீண்டும் நீங்கள் அவரவருக்குரிய பதவியைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப் போகிறீர்கள். சூரனின் சாம்ராஜ்யம் அழியும், என்று ஆறுதல் கூறி விடை பெற்றான்.

பின்னர் வீரமகேந்திர பட்டணத்தின் தெருக்களில் மற்றவர் கண்ணுக்கு தெரியா வண்ணம் தன் உடலை மறைத்துக் கொண்டு நடந்தான். சூரபத்மனின் கம்பீரமான அரண்மனையை நோட்டமிட்டான். அவனது திறமையை மனதுக்குள் பாராட்டினான் எதிரிகளாக இருந்தாலும், அவனுடைய திறமையை பாராட்டுபவன் எவனோ, அவனே நீதிமான். மேலும், இப்படிப்பட்டவர்களே எதிரியின் பலத்தைப் புரிந்து கொண்டு வியூகம் வகுத்து வெற்றியும் பெற முடியும். புத்திசாலியும், நீதிமானுமான வீரபாகு எதிரியான சூரபத்மனின் திறமையை மனதுக்குள் பாராட்டியதில் வியப்பேதும் இல்லை.

சூரபத்மனிடம் உரையாடிய வீரபாகு

அரண்மனை வாசலில் கோரைப்பற்களும், பார்த்தாலே பயந்து நடுங்கும் விதத்திலும் கோரத் தோற்றமும் உடைய இரண்டு காவலர்கள் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலா வந்தனர். உக்ரன், மயூரன் என்ற அந்தக் காவலர்களின் கண்ணுக்கு வீரபாகு அங்கே நிற்பது தெரியவில்லை வீரபாகு இதைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்து சபாமண்டபத்தில் வந்து நின்றான். சூரபத்மன் மிக கம்பீரமாக ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நெற்றியிலும், உடலிலும் மூன்று பட்டையாக திருநீறு, ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து, தலையில் கிரீடம் சூடி, ஆடம்பரமாகவும், அமர்க்களமாகவும் வீற்றிருந்தான். வீரபாகு யோசித்தான். இவ்வளவு அமர்க்களம் செய்யும் இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு. முருகப்பெருமானை துதித்தான், உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் அந்து வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் தன் உருவத்தை திடீரென வெளிப்படுத்தினான். சிம்மாசனத்தை இழுத்துப் போட்டான். சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான். இதைக் கண்டு சூரபத்மனும், அவையில் இருந்த மற்ற அசுரர்களும் அதிர்ச்சியடைந்தனர். சூரன் அதட்டினான்.

யார் நீ ! என் இடத்துக்குள்ளேயே வந்து என் முன்னாலேயே கால் மேல் கால்போட்டு மரியாதையின்றி அமர்ந்திருக்கும் உன்னை எமலோகம் அனுப்பியிருப்பேன். இருப்பினும், இத்தனை கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்த நீ மாயாஜாலத்தில் சிறந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு, நீ வந்த காரியம் பற்றி கேட்கிறேன் அதை விரைவாக என்னிடம் சொல், என்றான். வீரபாகு தன்னைப் பற்றியும், தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி, முருகன் தோன்றியுள்ளதையும், ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி, திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான். சூரபத்மனுக்கு மீசை துடித்தது. வீரபாகு தொடர்ந்தான். உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவும் முருகப்பெருமான் தயாராக இருக்கிறார். நீ உடனடியாக தேவேந்திரனின் மகன் ஜெயந்தனையும், மற்ற தேவர்களையும் விடுதலை செய்தால் அது சாத்தியமாகும் உன் ராஜ்யத்தையும் நீ காப்பாற்றிக் கொள்ளலாம். மறுத்தால், உன் தலை போய் விடும் முருகனின் சார்பில் எச்சரிக்கிறேன், என்றான். சூரபத்மன் கோபம் கொப்பளிக்க இருக்கையில் இருந்து எழுந்தான்.

அடேய்! பொடியனுக்கு தூதுவனாய் வந்த பொடியனே ! நான் இருக்கையில் எழுந்த பிறகும், என் முன்னால் அமர்ந்திருக்கிறாயே ! திமிர் பிடித்தவனே ! நான் அந்த பொடியனிடம் சரணடைய வேண்டுமா ? என் தம்பியைக் கொன்ற அன்றைய தினமே அவனைக் கொல்ல முடிவெடுத்தேன். ஆனால், ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டேன். இப்போது அவன் என் ராஜாங்க காரியத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டான். சிவனிடம் பெற்ற வரத்தால், இந்த உலகையே என் பிடியில் வைத்துள்ள நான் ஒரு சிறுவனிடம் சரணடைவதா ? நாளையே என்படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யார் அங்கே அவனைப் பிடியுங்கள், என்றான் சூரபத்மன். வீரபாகு ஆவேசமானான், இருந்த இடத்தை விட்டு எழாமலேயே, ஏ சூரனே ! தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால், உன்னை உயிரோடு விடுகிறேன். இல்லாவிட்டால், உன் தலையை இந்நேரம் நொறுக்கியிருப்பேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே, என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் சூரபத்மன் கைகால்கள் நடுங்குமளவுக்கும், முகம் சிவக்குமளவுக்கும் ஆவேசமாகி, பிடியுங்கள் ! அவனைக் கட்டி வைத்து உதையுங்கள், என்றான்.

சூரபத்மனின் மகன் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு

வீரபாகு சூரனின் மிரட்டலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சூரபத்மா ! மீண்டும் எச்சரிக்கிறேன் ஜெயந்தனை விடுதலை செய்கிறாயா? அல்லது உன்னை நானே கொன்று போட்டு விடட்டுமா ? என்றான் ஆவேசமாக. சூரனை சுற்றி நின்ற அசுரர்களும் ஆவேசமானார்கள். வீரபாகுவை பிடிக்க அவர்கள் எத்தனித்தனர். பலமடங்கு கோபத்தில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த சூரபத்மன் ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்களை வீரபாகுவைப் பிடிக்க ஏவினான். வீரபாகு எழுந்தான். அவன் எழவும் ரத்தின சிம்மாசனம் தானாக மறைந்து விட்டது. வீரபாகு அரண்மனைக்கு வெளியே பாய்ந்து சென்று அதன் முகப்பில் இருந்த 20 ஆயிரம் கலசங்கள் பொருந்திய கோபுரத்தை பிடுங்கினான். அதை தூக்கி தன்னைத் தாக்க வந்த கொடிய அசுரர்கள் மீது வீசினான். அதன் அடியில் சிக்கி அவர்கள் மாண்டனர். பின்னர் அரண்மனைக்குள் வந்தான். சூரபத்மனின் ஆஸ்தான மண்டபத்தை தன் கையாலேயே இடித்து நொறுக்கி எக்காளமாய் சிரித்தான். சூரபத்மன் தன் மகன் வஜ்ரபாகுவை வரவழைத்தான். டேய் ! நீ அந்த பாதகனைக் கொல், என்றான். வஜ்ரபாகு பத்தாயிரம் குதிரை பூட்டிய தேரில் ஏறி வீரபாகு மீது ஏற்ற வந்தான். வீரபாகு தன் காலால் எட்டி உதைத்து தேரை நொறுக்கினான். பல மாளிகைகள் பிடுங்கி அவன் மீது வீசினான். ஆனால், சில பாணங்களின் தாக்குதல் தாங்காமல் அவ்வப்போது களைப்படையவும் செய்தான். பின்னர்,வஜ்ரபாகுவின் ஆயுதங்களை முழுமையாக அழித்து விட்டு, அவனைப் பிடித்து இழுத்தான். நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அலறியபடியே உயிர்விட்டான் வஜ்ரபாகு. அதன்பிறகும் கோபம் தணியாத வீரபாகு வீரமகேந்திர பட்டணத்தை சின்னாபின்னப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று விட்டான். சூரபத்மனும் அவன் மனைவி பத்மகோமளையும் மகனின் பிரிவால் அழுதனர். அப்போது மந்திரி தாமகோபன் வந்தான்.

மகாராஜா ! துன்பங்கள் மிஞ்சும் நேரத்தில் அழுது கொண்டிருப்பது எந்த தீர்வையும் தராது. நம் இளவரசரின் ஆயுள் அவ்வளவு தான் ! அவருக்கு நிர்ணயிக்கப்பட்டதை மாற்ற யாராலும் இயலாது. துன்பத்தை விடுங்கள். நடக்கப் போவதை இனி கவனிப்போம். தங்களால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திருச்செந்தூரில் இருந்து திரும்பி விட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்படி நாம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அசுரகுலத்திற்கு கெட்ட நேரம் வந்திருக்கிறது. அதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்குரிய ஆலோசனைகளை உடனடியாகச் செய்தாக வேண்டும் மந்திராலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள், என்றான். திருச்செந்தூரில் இருந்து திரும்பிய ஒற்றர்களிடம் சூரபத்மன் அங்கு நடந்தது பற்றி விசாரித்தான். அவர்கள் சூரனிடம், மகாபிரபு ! இளவரசர் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு மின்னலென பாய்ந்து திருச்செந்தூர் வந்தான். அவனை முருகன் ஆலிங்கனம் செய்து கொண்டார். இங்கு நடந்த விபரங்களை விளக்கமாகச் சொன்னான். முக்கியமாக நம் இளவரசர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் தேவர்களெல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஜெயந்தனையும், மற்றவர்களையும் நீங்கள் விடுதலை செய்ய மறுத்து விட்டதால், தங்களுடன் போரிடவும் அந்த முருகன் தயாராகி விட்டார். உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார், என்றனர். உடனே சூரன், அந்த பிரம்மாவைக் கூப்பிடு. வீரபாகுவால் சிதைக்கப்பட்ட நம் நகரத்தை முதலில் சரி செய்வோம். பின்னர் போருக்கு ஆயத்தமாவோம். என்றான். ஒற்றர்கள் தலை குனிந்தனர். பிரபு ! பிரம்மா இனி இங்கு வரமாட்டார். அவர் முருகன் இருக்கும் திருச்செந்தூரில் அவர் அருகிலேயே அமர்ந்து விட்டார். எனவே, நாம் மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும், என்றனர். உடனே சூரன் மற்றொரு அண்டத்தின் பிரம்மாவை வரச்செய்து, அவரைக் கொண்டு நகரை மீண்டும் கட்டினான்.

சூரபத்மனின் மற்றொரு மகன் பானுகோபன்

இதன்பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற பேச்சுவார்த்தை நடந்தது. வீரம்மிக்க பல அசுரர்கள் முன்வந்தனர். சூரபத்மனின் புதல்வர்களான இரண்யன், சிங்கமுகன் ஆகியோர் போருக்கு செல்ல முன்வந்தனர். காலஜித், கண்டன், அனவன், சிங்கன் ஆகிய படைத்தலைவர்கள் போருக்கு முன்வந்தனர். அடுத்து வீரத்திலகனான பானுகோபன் எழுந்தான். இவன் சூரபத்மனின் வீரத்திருமகன், தந்தையே ! என் சகோதரன் வஜ்ரபாகுவைக் கொன்ற கூட்டத்தை என் கையால் அழித்தால் தான் எனக்கு தூக்கமே வரும். அந்த முருகனைப் பந்தாடிவிட்டு வருகிறேன். உத்தரவு கொடுங்கள், என்றான் இப்படியாக முருகனுடன் போருக்குச் செல்ல, பலர் ஆர்வமாக முன்வர, சூரபத்மன் மகிழ்ச்சியடைந்திருந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கருத்தைச் சொன்னான் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன். அண்ணா ! நீங்கள் எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. படைத்தலைவர்கள் அவசரப்படுகிறார்களே ஒழிய சிந்திக்கவில்லை. உங்களில் யார் போருக்குச் சென்றாலும் உயிரிழப்பது உறுதி. யாரோ ஒரு வீரபாகு. அவன் முருகனுக்கு தூதுவன். ஒரு தூதுவனே நம் அருமை மைந்தன் வஜ்ரபாகுவைக் கொன்றிருக்கிறான் என்றால், அவனது தலைவனான முருகனின் ஆற்றலைக் கேட்கவும் வேண்டுமா ? வேண்டாம் அண்ணா ! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த முருகனிடம் நாம் சரணடைந்து விடுவோம். தேவர்களை விடுதலை செய்து விடுவோம். பின்னர் நம் நாடு நகரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம். பராக்கிரமம் மிக்க அவனிடம் போரிட்டு நம் இனத்தையே அழிப்பதை விட இது நல்ல யோசனை தானே ! என்றான். இப்படி ஒரு ஆலோசனை தம்பி சிங்கமுகனிடம் இருந்து வருமென சூரபத்மன் எதிர்பார்க்கவில்லை. அசுர சபையும் முகம் சுளித்தது. சூரபத்மன் ஆவேசத்துடன், முட்டாளே ! உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ? என்று சீறினான்.

சிங்கமுகா ! அந்தச் சிறுவன் முருகனைக் கண்டா நடுங்குகிறாய் ? கேவலம். அசுர குலத்துக்கே கேவலம்... உன்னைத் தம்பியாக அடைந்ததற்காக வேதனைப்படுகிறேன், என்றான் சூரபத்மன். நல்லதை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாத அண்ணனிடம் வயதில் குறைந்த தம்பி என்ன செய்ய இயலும் ? இவனுக்கேற்ப பேசிவிட்டு போவதே நல்லது என எண்ணி, அப்படியே பேச்சைத் திருப்பினான். அண்ணா ! நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். இருந்தாலும் ஒரு சிறுவனைக் கொன்ற பழி பாவம் உங்களை அடைந்து விடக்கூடாதே என்று தான் அப்படி சொன்னேன். நீங்கள் எங்கே... அந்த சிறுவன் எங்கே ? உங்கள் தகுதிக்கு நீங்கள் அவனுடன் போரிட செல்ல வேண்டாம். நானே போகிறேன். அவனை இழுத்து வருகிறேன் என்று சொல்லவும் சூரபத்மனுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது. சிங்கமுகா ! என் உள்ளத்தின் உறுதியை அறிய நீ அப்படி பேசியிருப்பாய் என அறிந்தேன் நீ சுத்த வீரன். உன்னைப் போன்றவர்கள் அவனுடன் போருக்கு போகக்கூடாது. நம் குழந்தை பானுகோபனை அனுப்புவோம். அந்த சிறுவனுக்கு இந்த சிறுவன் தான் சரியான ஆள். சூரியனை வென்றதால் தானே இவனுக்கு பானுகோபன் என்று பெயர் வைத்தோம். அப்படிப்பட்ட திறமைசாலியின் முன் அந்த முருகனால் நிற்க முடியுமா ? நீ சென்று ஓய்வெடு, பிறகு பார்த்துக் கொள்ளலாம், என கொக்கரித்தான். அசுரகுலத்தின் அழிவு உறுதி என எண்ணி வருந்தியபடியே சிங்கமுகன் அங்கிருந்து போய்விட்டான்.

முருகனுக்கு வழிவிட்ட சமுத்திரராஜன்

இதனிடையே முருகப்பெருமான் படைகளுடன் வீரமகேந்திரபட்டணத்திற்கு கிளம்பினார். சூரபத்மனை அழித்தே தீருவது என்ற முடிவில் இருந்த அவர், கடல் கடந்து அவ்வூருக்குள் செல்ல வேண்டியிருப்பதை அறிந்தார். முருகன் தண்ணீரில் கால வைத்தாரோ என்னவோ, கடலரசன் பணிந்தான். தண்ணீர் அங்கே வற்றிப் போய்விட்டது. அதன் வழியே படைகள் வீரமகேந்திரபட்டணத்தை ஒட்டிய இடத்துக்கு சென்று விட்டன. விஸ்வகர்மாவை அழைத்த முருகன், அங்கே நானும் படைகளும் தங்குவதற்கு ஒரு பட்டணத்தை அமைக்க உத்தரவிட்டார். கணநேரத்தில் விஸ்வகர்மா ஒரு பட்டணத்தை அமைத்து விட்டார். அவ்வூருக்கு கந்தமாதனர் என பெயர் சூட்டப்பட்டது. முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்ட அந்நகரம் ஜொலித்தது. படைகள் அங்கிருந்த வீடுகளில் சுகமாகத் தங்கினர். முருகப்பெருமான் கடல்கடந்து தன் பட்டணத்தருகே முகாமிட்டிருப்பதை தூதுவர்கள் மூலம் சூரபத்மன் அறிந்தான். கடலரசனான சமுத்திரராஜனை அழைத்தான். ஏய் சமுத்திரராஜா ! என்னைக் கேளாமல் எப்படி முருகனின் படைகளுக்கு வழிவிட்டாய். உன்னைத் தொலைத்து விடுகிறேன், என்றான். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மகாசூரரே ! நான் என்ன செய்வேன் ! முருகப்பெருமானும், அவரது பூதப்படைகளும் உள்ளே இறங்கியதுமே நான் சேறும் சகதியுமாகி விட்டேன். அவரது வேலாயுதம் சிந்திய ஒளியில் வற்றிப் போய் தூசியும் துகளுமாகி விட்டேன். மணல் மட்டுமே மிஞ்சியது. அதன்வழியே அவர்கள் நடந்து சென்று விட்டனர். நான் மீண்டும் குளிர்ந்த திரவநிலை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் மகாபிரபு என்று சொன்னான். சூரன் அவனை விரட்டிவிட்டு, போருக்கான ஆயத்தத்தில் இறங்கினான். மகன் பானுகோபனை அழைத்து, அந்த முருகனை கட்டி இழுத்து வா. அசுரகுல பெருமையைக் காப்பாற்று, என உத்தரவிட்டான்.

பானுகோபன் தோற்று ஓடல்

பானுகோபன் ஆர்ப்பரித்து எழுந்தான். பலலட்சம் படை வீரர்களை திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்து, அந்த பானுகோபனைக் கொல்வது உன் வேலை, என உத்தரவிட்டார். வீரபாகுவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. முருகன் இட்ட கட்டளையில் வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்து பானுகோபனுடன் போராடினான். இருவருமே தீரர்கள் என்பதால் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். வீரபாகு போன்றவர்கள் எழ முடியாமல் மயங்கி விட்டனர். கருணைக்கடலான முருகப்பெருமான் இந்தக் காட்சியைக் கண்டார். தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்தன. இது முருகனின் கருணையால் நடந்தது என்பதையறிந்து அவரை போற்றிப் புகழ்ந்தனர். பின்னர் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்தான். பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பானுகோபன் கொண்டுவரவில்லை. அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. பாசுபதாஸ்திரம் தன் மீது ஏவப்பட்டால், உயிர் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது. போரில் இருந்து பின் வாங்கினான் தேரை திருப்பினான். அரண்மனையை நோக்கி சென்றான். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. மீண்டும் போர்க்களம் போவேன். அந்த வீரபாகுவை ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரத்தில் கொல்வேன் இல்லாவிட்டால், அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன், என்று சபதம் செய்தான். அந்த சபதம் அசுரகுலத்தை உலுக்கியது. தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன், இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் முருகனை ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம் செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள் லட்சக்கணக்கான படைகள் தயாராயின.

அதிசூரன், அசுரேந்திரன் வதம்

சூரபத்மன் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். யுத்த தொடர்பான வாத்தியங்கள் எழுப்பிய சப்தம் விண்ணைப் பிளந்தது. ஆரவார ஓசைக் கிடையே சூரபத்மன் போர்களத்திற்கு சென்றான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. உலகையே காக்கும் பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது. பாறைகளையும், மரங்களையும் பிடுங்கி அசுரர்கள் மீது வீசி ஏராளமானோரை முருகனின் படையினர் கொன்றனர். சிங்கமுகனின் மகனான அதிசூரன் இதுகண்டு திகைத்தான். இருந்தாலும் மனம் தளராமல் முருகனின் படையை நோக்கி தேரில் விரைந்து சென்றான். பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவன் அவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். இப்படியாக இருவரும் கடுமையாக போரிட்டனர். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்துக்கொண்டான். தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து தங்கியது. அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான். தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரன் ஆச்சரியப்பட்டான். அவன் மட்டுமல்ல, நாராயண அஸ்திரத்திற்கு மயங்காத உக்கிரனைப் பார்த்து வேதர்களும் ஆச்சரியமடைந்தனர்.

அங்கு நின்ற பிரம்மாவிடம், படைப்புக் கடவுளே ! நாராயண அஸ்திரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. அது யாரையும் அழிக்காமல் விட்டதில்லை. அப்படியிருந்தும் உக்கிரன் எப்படி தப்பித்தான் ? என கேட்டனர். அதற்கு பிரம்மா, யார் ஒருவன் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் மனதார வணங்குகிறானோ அவனை எத்தகைய சக்தி உள்ளவர்களாலும் வதைக்க முடியாது. அதன்படியே இவன் தப்பித்தான். இதைத்தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றார். இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ, அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும், அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன்பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன், அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர்.

தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான். அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான். அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான். இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர்.

போர்க்களத்தில் சூரபத்மன்!

வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால் ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீது அசுரர்கள் பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள் செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கின. அவர்கள் மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவீரர்களில் ஒருவரான வீரமார்த்தாண்டன், சூரபத்மன் மீது ஏராளமான பாணங்களை அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி தள்ளிவிட்டான். மற்றொரு நவவீரனான வீரராட்சஷன், பத்மாசுரன் மீது அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன், விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர் வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தான். வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வீரபாகு கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால் வந்து நின்றான். வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான்.

அடேய் ! நீயா ! அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் ! அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு ! அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய் விடடா ! என்றான். வீரபாகு எக்காளமாகச் சிரித்தான். அடேய் அசுரா ! நான் நினைத்தால் இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன் என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய அனுப்பியுள்ளார். உம் எடு வில்லை ! முடிந்தால் தோற்கடித்துப் பார், என சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வீரபாகுவை மிகச் சாதாரண கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வீரபாகு பல அம்புகளை அவன் மீது எய்தான். அவை சூரனின் இரும்பு உடல்மீது பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வீரபாகு வியப்படைந்தான். சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால் சாதாரண காரியமா ? அது மட்டுமல்ல ! அவனை அழிக்கும் சக்தியாகவும் சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது, வேறு யாரால் அவனைச் சாய்க்க முடியும். வீரபாகு மனம் தளரவில்லை. தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான். பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன. அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து விட்டான். வீரபாகு மீதுபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வீரபாகு களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக மோதினர். எதற்கும் நேரம் வர வேண்டும். பூவுலகில் பிறந்தவன் மனிதனாயினும் சரி ! அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும் வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன். பத்மாசுரனின் முன் எமனாக வந்து நின்றான்.

பத்மாசுரன் தோல்வி அடைதல்

பத்மாசுரா ! என் வீரர்களை வெற்றி கண்டுவிட்டதாக மமதை கொள்ளாதே. இதோ! நான் இருக்கிறேன். உன் படையைச் சந்திக்க இதோ எனது பெரும் படை இருக்கிறது. வீணாக அழிந்து விடாதே. என்னிடம் சரணடைந்து விடு, என முழக்கமிட்டார் முருகன். சூரன் சிரித்தான். இங்கே வந்து உன் படை தவிடு பொடியாகி விட்டது. கிரவுஞ்சன் என்ற சிறுவனையும், தாரகன் என்ற எனது தம்பியான கோழையையும் ஜெயித்து விட்ட ஆணவத்தில் என்னையும் சாதரணமாக கருதாதே. நான் உன்னை ஒரே பாணத்தில் கொன்று விடுவேன். சிறுவன் என்பதால் உயிர்ப்பிச்சை தருகிறேன். ஓடிப் போய் விடு என முருகனை எச்சரித்தான். முருகப்பெருமான் அவனுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். பல்வேறு ஆயுதங்கள் இருதரப்பிலும் பரிமாறப்பட்டன. உக்கிரமான போர் நடந்தது, முருகனை வெல்லார் யாருண்டு ? முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி விட்டார். ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே என சூரன் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். இந்நிலையில் அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் முருகன், அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. சூரனின் நிலை கண்டு அவனது படைகள் சற்றும் தளராமல் முருகனின் படையினருடன் போரிட்டனர். போர்க்களத்தில் நின்றபடி சூரன் யோசித்தான். இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல ! இவனை அழிப்பதென்றால் சற்று கடினமானது தான். ஆனால், முடியாதது ஒன்றல்ல ! மீண்டும் நம் ஊருக்குள் சென்று பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும், என்றபடியே, அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன். சூரன் ஓடிப்போனதை அறிந்து தேவர்கள் முருகனைக் கொண்டாடினர்.

முருகா ! தாங்கள் நினைத்திருந்தால் வேலாயுதத்தை எறிந்து அந்த சூரனை நொடியில் அழித்திருக்க முடியும். ஆனாலும், தாங்கள் எங்கள்மீது கிருபை செய்யவில்லை. சூரனால் நாங்கள் இன்னும் வேதனைப்பட வேண்டும் என்பது விதிபோலும் ! சூரன் மாயத்தால் மறைந்திருந்தாலும் தாங்கள் இந்த வேலை அனுப்பினால் அவன் எங்கிருந்தாலும் தாக்கி அழித்து விடும். எங்களைக் காப்பாற்றுங்கள் மகாபிரபு ! எனக் கருதினர். கருணைக் கடவுளான முருகன் அவர்களிடம், எதிரியாயினும் ஆயுதமற்றவனைக் கொன்றோம் என்ற அவச்சொல் நமக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல ! அவன் மீது கொண்ட கருணையால் தான் அவனை நான் அனுப்பி விட்டேன். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருந்தாமல் திரும்பிவந்தால், அவனை அழிப்பதில் தவறில்லை. சூரன் திருந்த மாட்டான் என்பது நானும் அறிந்ததே ! மீண்டும் அவன் வருவான். அப்போது அவனை நிச்சயம் நான் விடமாட்டேன். நீங்கள் அமைதியாய் இருங்கள், என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இந்த நேரத்தில் வடிவேல் முருகன் போர்க்களத்தில் மயங்கியும், இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள், படையினரை தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர். அரண்மனைக்குள் புகுந்த பத்மாசுரன் மீண்டும் முருகனை அழிப்பது பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்தான்.

மாயையின் ஆசிபெற்ற பானுகோபன்

சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில், அவனது மனைவி பத்மகோமளாவும், மகன் பானுகோபனும் வந்தனர். தந்தையின் மனநிலையை அறிந்த பானுகோபன், அப்பா ! நீங்கள் செய்தது கொஞ்சம் கூட முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை நான் அந்த முருகனிடம் ஆயுதங்களை இழந்து திரும்பினேன் என்பதற்காக என் வீரத்தை நீங்கள் குறைத்து எடை போட்டு விட்டீர்கள் போலும் ! நானும் சிறுவன், அந்த முருகனும் சிறுவன். நாங்கள் போட்டியிட்டு யார் தோற்றாலும் அவமானம் வரப்போவதில்லை. அங்கே வீரம் மட்டுமே பேசப்படும். நீங்கள் அப்படியா ?அண்டசராசரத்தை அடக்கிய õளும் சக்கரவர்த்தியான நீங்கள், அந்த முருகனை வென்றால், ஒரு சிறுவனை வென்று விட்டதாக சூரன் கொக்கரிக்கிறான் என்றும், தோற்றுப்போனால், கேவலம், ஒரு சிறுவனிடம் போய் சூரன் தோற்றானே என்றும் தான் உலகம் பழிக்கும். எப்படிப்பார்த்தாலும் அது உங்களுக்கு அவமானத்தையே தேடித் தரும். கவலைப்படாதீர்கள். மீண்டும் நான் போகிறேன். அந்தச் சிறுவனை தூக்கி வந்து உங்கள் காலடியில் போடுகிறேன். அவனை ஒழித்து விடுங்கள். அந்த முருகன் இருக்கும் தைரியத்தில் திமிர்பிடித்து அலையும் பிரம்மாவையும், விஷ்ணுவையும் சிறையில் தள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு ஆவேசமாக சிரித்தான். பத்மாசுரன் அவனது வீரம் பொங்கிய பேச்சால் மகிழ்ந்தாலும், அன்புச் செல்வமே ! பானுகோபா ! நீ நினைப்பது போல் அந்த வடிவேலனை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவனை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். வேண்டுமானால் அவனுக்கு வலது கையாக இருக்கிறானே, ஒரு தூதன்... வீரபாகு... அவனைப் பிடித்துக் கொண்டு வா, என்றான் வீராப்புடன்.

பானுகோபன் தலையசைத்தான். ஒரு நொடியில் வருகிறேன் தந்தையே, என்றவன் தாய் கோமளாவிடம் ஆசி பெற்று புறப்பட்டான். வீரபாகுவும் சாதாரணமானவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். அவனை வெற்றி கொள்ள சாதாரண அஸ்திரங்கள் போதாது. அவனை மயங்க வைத்து விட்டால் கட்டி வைத்து தந்தை முன் கொண்டு வந்து போடலாம் என்று எண்ணத்தில், தன் பாட்டி மாயையை நினைத்தான். இவள் காஷ்யப முனிவரின் மனைவியாக இருந்து அசுரகுலத்தை உருவாக்கியவள். சூரபத்மனின் தாய். பானுகோபன் நினைத்த மாத்திரத்தில் பாட்டி மாயை அவன் முன்னால் வந்தாள். பானுகோபா ! என் செல்லப் பேரனே ! வீரத்திருமகனே ! எதற்காக என்னை அழைத்தாய். என் அன்பு பேரனுக்காக எதையும் தருவேன், என்றாள். பானுகோபன் அவளிடம், எங்கள் குலத் தலைவியே ! என்னருமை மூதாட்டியே அசுரர் குலத்துக்கு முருகன் என்பவனால் ஆபத்து வந்துள்ளது. அவனது தூதனாக வந்த வீரபாகுவை கட்டியிழுத்து வரும்படி தந்தை கட்டளை இட்டிருக்கிறார். நீங்கள் தான் அசுர குலத்திற்கு வித்திட்டவர்கள். அந்த தேவர் படையை வெல்லும் ஆலோசனையும், ஆயுதமும் தந்தால், அவனைப் பிடித்து விடுவேன், என்றாள். பானுகோபா ! உங்களால் தேவர்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் உண்டு. பிரம்மாவையும், விஷ்ணுவையும் அதிகமாக கொடுமைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்படியான நிலையில், அவர்களை வெல்வது என்பது சாத்தியமல்ல இருந்தாலும். முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிகளின் அடிப்படையில், உனக்கு ஒரு அபூர்வமான ஆயுதத்தை தருகிறேன். இந்த மோகனாஸ்திரத்தை எய்தால் யாராக இருந்தாலும் மயங்கி விடுவார்கள். அந்த நிலையில் அவர்களை கட்டி இழுத்துப் போக வசதியாய் இருக்கும். வெற்றி உனதே, என்று வாழ்த்தி, பேரனை உச்சிமுகர்ந்து அஸ்திரத்தை கொடுத்து விட்டு மறைந்து விட்டாள். பானுகோபன் மகிழ்ச்சியுடன் சென்றான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார்.

பானுகோபன் மாயம், வீரபாகு சபதம்

வீரபாகு ! உன்னைத் தேடி சூரனின் மகன் பானுகோபன் வருகிறான். அவனை வெற்றி கொள்வது உனது கடமை. அவனிடம் உன்னை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் இருக்கிறது. நீ அதற்கு கட்டுப்பட்டால், அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் என்னிடம் இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். போய் வா ! இம்முறை வெற்றிக்கனி உனக்குத்தான், என வாழ்த்தி வழியனுப்பினார். முருகனின் வாயாலேயே வெற்றி என சொன்னபிறகு வீரபாகுவிற்கு என்ன கவலை ? அவன் அவரது தாழ்பணிந்து வணங்கி புறப்பட்டான். சேனைகள் அணிவகுத்துச் சென்றன. பானுகோபனும், வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு புரிந்து விட்டது. எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான், அதிபயங்கர யுத்தம் நடந்தது. எங்கும் நெருப்பு பிடித்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. வெப்பத்தின் உக்கிரத்தில் கடலே வற்றிவிடும் போல் தோன்றவே, சமுத்திரராஜன் கலங்கி நின்றான். இந்த உலகத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என தேவர்களெல்லாம் முருகனிடம் சென்று வேண்டினர். அவர் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

இதே நிலை தான் சூரபத்மனுக்கும். இந்த அதிபயங்கர நெருப்பு உலகத்தையே அழித்து விட்டால், அதில் சிக்கி எல்லோருமே இறந்து விடுவோம். என்னாகப் போகிறதோ ? என நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால், எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன், வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை எய்தான். அது அதிவேகமாகப் பாய்ந்து வந்தது. அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே, ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை, கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். இந்த விபரம் முருகனுக்கு தெரிய வரவே, அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல், மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது. கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும், வீரபாகுவும் முருகனை வாழ்த்தினர். தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன் என வீரபாகு சபதம் செய்தான்.

சூரபத்மனின் மைந்தர்களைக் கொன்ற வீரபாகு

பானுகோபன் வெற்றிக்களிப்பில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு தூதுவன் வேகமாக வந்து வீரபாகு மீண்டும் தப்பி விட்டதைச் சொன்னான். அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும், என எச்சரித்தான். பத்மாசுரனோ பெற்ற மகன் மீதே எரிச்சல்பட்டான். இப்படியெல்லாம் பேசினால் அவனை விழுங்கி விடுவதாகச் சொன்னான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்துச் சென்றான். ஆவேசமாகப் போரிட்டான். ஆனால், தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்கு அடியில் மீன் வடிவில் ஒளிந்து கொண்டான். அடுத்து சூரனின் இன்னொரு மகனும், பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். அவனுக்கே வெற்றி கிடைக்குமென அருள்பாலித்தாள் காளி. காளியே சொன்னபிறகு மாற்றாக என்ன நடந்து விடும் ? பராசக்தியின் அம்சமல்லாவா அவள் ! ஆனால், காளியின் வாக்கு இந்த இடத்திலே பொய்த்துப் போனது. வீரபாகு அக்னிமுகனை பந்தாடி விட்டான். தன் பக்தனைக் காப்பாற்ற காளியே சிங்கவாகனத்தில் வந்து வானில் நின்றபடி சூலத்துடன் வீரபாகுவை தாக்கினாள். தேவியே தன்னை எதிர்த்த நேரத்திலும் கூட வீரபாகு தயங்காமல் அவளுடன் போரிட்டான். பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் விண்ணில் பறந்து அவளது மார்பில் அடித்து கீழே தள்ளினான். காளிதேவி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சிங்கவாகனத்தில் ஏறி தன் இடத்திற்கு போய்விட்டாள். காளி பின் வாங்கினாலும் அதுகண்டு கலங்காத அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான். தன் பிள்ளைகளையெல்லாம் பறிகொடுத்த பிறகு, தம்பி சிங்கமுகனை போருக்கு அனுப்பினான் சூரபத்மன்.

சிங்கமுகனை வதைத்த ஆறுமுகன்

சிங்கமுகன் கொடூரமானவன். கந்தபுராண யுத்த காண்டத்தில் சிங்கமுகன் முருகனுடன் மோதிய காட்சியைப் படிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிங்கமுகன் ஆயிரம் சிங்கத்தலைகளை உடையவன். அவனுடைய மார்பைத் தகர்க்கவே முடியாத அளவுக்கு பலமைல் நீளமுள்ளதாக இருக்குமாம். முருகப்பெருமான் நேரில் களத்துக்கு வந்து விட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அவனது தலைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக முளைத்தது. சிவனிடம் வரம் வாங்கும் போது, இவன் தன் தலைகளை வெட்டி யாகத்தில் போட்டவன். அதன் காரணமாக எத்தனை முறை வெட்டுப்பட்டாலும் மீண்டும் முளைக்கும் வரம் பெற்றவன். ஆனால், தன் சக்தியின் முன்னால் இந்த வரம் எடுபடாது என நிபந்தனை விதித்திருந்ததால், சிங்கமுகன் தன் தலைகளை இழக்க வேண்டியதாயிற்று. முருகப்பெருமான் புதிது புதிதாக முளைத்த தலைகளைப் பார்த்து, இனி முளைக்காதே என அதட்டினார். அதற்குப் பயந்து அந்த தலைகள் மீண்டும் முளைக்கவில்லை. இப்படியாக 999 தலைகளை வெட்டிச் சாய்த்த பிறகு ஒரே ஒரு தலையுடன் போரிட்டான் சிங்கமுகன். தன் வேலாயுதத்தால் அந்த தலையைச் சீவி விட்டார் சிங்காரவேலன். சிங்கமுகனின் சரித்திரம் முடிந்தது. சிங்கமுகனின் மனைவியர்கள் எல்லாம் தீயில் மூழ்கி இறந்து விட்டனர்.

சூரபத்மன் வதம்

இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். நான்கு நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. அப்போது கருணைக்கடவுளான கந்தன் விஸ்வரூபம் எடுத்தார். அவரது காலடியில் இந்த உலகம் கிடந்தது. எல்லாமே தனக்குள் அடக்கம் என்பதை அவர் அவனுக்கும், இந்த உலகத்துக்கும் காட்டினார். அந்தக் காட்சியால் சூரன் ஞானம் பெற்றான். அவனது துர்க்குணங்கள் மறைந்தன. கந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து வணங்கினான். பின்னர் கந்தன் தன் உருவைச் சுருக்குவே, தான் பார்த்த காட்சி அவனுக்கு மறந்து துர்க்குணம் தலை தூக்கியது. மீண்டும் போரிட்டான். கந்தன் வேலை எறியவே, அவன் மாமரமாக மாறி நின்றான். அந்த வேல் மரத்தை இரண்டாகக் கிழித்தது. அப்போது சூரன் ஒரு பகுதி மயிலாகவும், ஒரு பகுதி சேவலாகவும் மாறினான். மயிலை அடக்கி அதன் மீது ஏறி உலகமெல்லாம் வலம் வந்த முருகன். சேவலை தன் கொடியில் இடம் பெறச் செய்து விட்டார். தன் கணவரின் ஆயுள் முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்ட சூரபத்மனின் பட்டத்தரசி பத்மகோமளாவும் மற்ற மூவாயிரம் மனைவியரும் இறந்து போனார்கள். சூரபத்மன் முழு ஞானம் பெற்று முருகனுக்கே காலமெல்லாம் சேவகம் செய்தான்.

தெய்வானை திருமணம்

முருகப்பெருமான் போருக்கு பிறகு திருச்செந்தூர் விட்டு, திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். பிரம்மாதி தேவர்களுடன் இந்திரன் முருகப்பெருமானிடம் வந்து தன் மகள் தெய்வானையை மணந்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். முருகப்பெருமான் சம்மதம் தத்தார். இந்திரன் விடைபெற்றுச் சென்று இந்திராணி, மகள் தெய்வயானை ஆகியோரைக் கண்டு முருகன் அரக்கர்களை அழித்த விவரம் கூறி, தெய்வயானை-திருமுருகன் திருமணம் பற்றி எடுத்துரைக்க எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்தநாளே திருமணம் என்ற விவரம் அறிந்து அனைவரும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய முனைந்தனர். சகலருக்கும் திருமணச் செய்தி அனுப்பப்பட்டது. பிரும்மா முகூர்த்தம் நிச்சயிக்க, பார்வதி பரமேசுவரர்களும் மற்ற தேவர்களும் வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையைக் கன்னிகாதானம் செய்து வைத்தான்.

சாஸ்திரப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்து அருந்ததி காணல் போன்ற சகல வைபவமும் சிறப்பாக நடந்தேறின. மணமக்கள் தாய் தந்தையரை வணங்கி ஆசிபெற்றனர். மணம் முடிந்து அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்றனர். அடுத்து முருகப்பெருமான் விசுவகர்மாவை அழைத்த அமராவதி நகரை நேர்த்தியாக உருவாக்கித் தரப் பணித்தார். அவ்வாறே நகரம் புதுப்பொலிவு பெற்றுவிட்டது. முருகப்பெருமான் பிரும்மனிடம் இந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்தக் கூறினார். இந்திரன் இந்திராணியரை அரியாசனத்தில் அமரச்செய்து பிரும்மா பட்டாபிஷேகம் செய்துவைத்தார். சொர்க்கத்தில் சிலகாலம் தெய்வயானையுடன் தங்கியிருந்து முருகன் வீரபாகுவை சாரதியாக அமர்த்திக் கொண்டு கயிலாயத்துக்குப் பயணமாகி தன் மாளிகைக்குள் அரியாசனத்தில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

வள்ளித் திருமணம்

வள்ளி மலையில் சிவன் என்ற முனிவர் ஒருவர் தவமியற்றி வந்தார். அவரெதிரில் வந்த அழகியதோர் மானைக் கண்டு முனிவர் மோகம் கொள்ள, அந்த மான் கருவுற்று ஒரு பெண் மகவை ஈன்றது. காட்டில் வள்ளிக் கொடிகளுக்கிடையே தோன்றிய அப்பெண் குழந்தையை அங்கு வந்த வேடர் தலைவர் மகிழ்ச்சியுடன் வாரி எடுத்து மகிழ்ச்சியுடன் தன் மனைவியிடம் கொடுக்க அப்புண்ணிய தம்பதிகள் இருவரும் அப்பெண் குழந்தையைச் சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்தனர். தக்கவயது வந்ததும் அவளை வேடர் குல மரபுப்படி தினைப்புனம் காவல் காக்க தோழியருடன் அனுப்பி வைத்தான் மன்னன். ஒருநாள் நாரத முனிவர் தினைப்புனத்தில் வள்ளியைக் கண்டு, உடனே முருகனிடம் சென்று அவள் அழகை வர்ணித்து, முருகன் வள்ளி திருமணத்துக்கான நற்காரியத்தைத் துவக்கி வைத்தார்.

ஆறுமுகன் வேட்டைக்கு வந்த வேடுவனாக வள்ளி முன் தோன்றி அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அவளிடம் தன் தாகத்தைத் தணிக்குமாறு வேண்டி நின்றபோது வேடன் தலைவன் அங்கு வர வள்ளி அச்சமுற்றாள். அப்போது முருகன் வேங்கை மரமாக நின்றான். அங்கு வந்த வேடுவர்கள் புதிதாகத் தோன்றியுள்ள வேங்கை மரத்தை வெட்டி விட எண்ணினர். ஆனால், வேடர் தலைவன் அவர்களைத் தடுத்து குளுமையான நிழல் தரும் அம்மரத்தை வெட்டாமல் விட்டுவிடுமாறு கூறினான். காடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வேடர் மன்னன் திரும்பி வருவது கண்ட முருகன் ஒரு கிழவர் வடிவில் அவன் முன் தோன்றினார். நரைத்த தாடி மீசைகளுடன் சிவப்பழமாய்த் தோன்றிய முருகனை வேடத்தலைவன் வணங்கிட அவனுக்கு விபூதி அளித்து ஆசி கூறினார் கிழவராக வந்த முருகன். கிழவர் வருகைக்குக் காரணம் கேட்க, அவர் வேடர் தலைவனிடம், தான் அவ்வேடனுக்குச் சொந்தமான அந்த மலையிலுள்ள குமரித்தீர்த்தத்தில் நீராட வந்திருப்பதாகக் கூறினான் குமரன்.
அப்போது வேடர் தலைவன் கிழவரிடம், அவர் விருப்பப்படி தீர்த்தத்தில் நீராடி தினைப்புனத்தில் காவல்புரியும் தன் பெண் வள்ளிக்குத் துணையாக இருக்கும்படி கூறிச் சென்று விட்டான். பின்னர் வள்ளியிடமிருந்து தேன், தினைமாவு பெற்று உண்ட முருகன் நீர்வேட்கை தணிய தண்ணீர் கேட்டார் வள்ளியிடம். அவள் கிழவரிடம் அங்கிருந்து ஏழுமலை கடந்துசென்றால் குடிநீர் கிடைக்கும் என்று கூற, கிழவர் வள்ளியை வழித்துணையாக வருமாறு வேண்டிட, அவளும் உடன் சென்றான். நீரைக் காட்டித் தாகம் தீரும்வரை பருகுமாறு கூறி கரையிலேயே அமர்ந்து விட்டாள் வள்ளி. சிறிதுநேரம் கழித்து கிழவராக வந்த முருகன் நீர்வேட்கை தீர்ந்ததென்றும், ஆனால், அப்போது ஏற்பட்ட மோக தாகத்தைத் தணிக்குமாறும் வள்ளியை வேண்டினார். வள்ளி அதற்கு இசையாமல் மறுத்து, வேடுவர் காணில் உமக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி எச்சரித்து தன் இருப்பிடம் செல்லப் புறப்பட்டாள்.

அப்போது கந்தன் அண்ணன் கணபதியை நினைக்க, அவர் முரட்டு யானையாக வள்ளி முன் தோன்ற, அவள் அஞ்சி ஓடிவந்து கிழவர் வடிவில் இருந்த குமரனைக் கட்டிக்கொண்டு தன்னை யானையிடமிருந்து காப்பாற்ற வேண்டினாள். மேலும், அவர் சொன்னபடி நடந்துகொள்வதாகவும் கூறினாள். முருகன் அண்ணனை மனதில் வேண்டிக்கொள்ள யானை மறைந்தது. இவ்வாறு கணபதி அருளால் கந்தன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டார். இறுதியில் வள்ளிக்கு வேங்கை மரம், வேடன், கிழவன் என்று வந்த முருகன் தன் சுயவடிவில் காட்சி தர ஏன் இந்த விளையாட்டு என்று வள்ளி கேட்டாள். அப்போது முருகன் வள்ளியின் முற்பிறப்பில் விஷ்ணு மகளாகித் தன்னை அடைய தவம் புரிந்ததையும் எடுத்துக் கூறி, அன்று அவளுக்குத் தந்த வரத்தின் படியும், அவள் மீது கொண்ட மையலாலுமே இந்த விளையாட்டு என்றான் முருகன். மேலும் அவளை முன்னே செல்லும்படியும், தான் பின்னால் வருவதாகவும் கூறி அவளை அனுப்பி வைத்தார்.

வள்ளியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட தோழியர் காரணம் கேட்டு சர்ச்சை செய்து கொண்டிருந்தபோது வேலன் வேடன் வடிவில் அங்கு வந்து அந்தப் பக்கம் தன் அம்பால் அடிபட்ட யானையைக் கண்டீர்களா என்று கேட்கையில் வள்ளியில் கண்களும், அவ்வேடன் கண்களும் ஒன்றியதை தோழி கண்டு கொண்டாள். அவள் பக்கத்தில் இருந்த வயலுக்குச் சென்றாள். அவளிடம் வேடன் வள்ளியைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டினார். அவளும் வேடர்கள் கண்ணில் பட்டால் ஆபத்து என்றும் எச்சரித்தாள். சோலையில் முருகனும், வள்ளியும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு திரும்பி வந்த தோழி வள்ளியை முருகனிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றாள். தினைகள் நன்கு முற்றிவிட தினைப்புனக் காவலும் முடிவுபெற்றது. வள்ளியும், தோழியும் வீட்டை அடைந்தனர். வள்ளியின் உடல், உள்ள மாற்றங்களையும், அவள் சதாசர்வகாலமும் முருகனையே எண்ணி எண்ணி ஏங்குவதையும் கண்ட பெற்றோர்கள் வள்ளிக்கும் முருகனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிந்து கொண்டனர்.

அன்றிரவு வள்ளியின் வீட்டின் பின்புறம் வந்து காத்திருந்த முருகனிடம், வள்ளியின் தோழி அவளை அழைத்து வந்து ஒப்படைத்தாள். இரவு முழுவதும் இருவரும் மனமகிழ்ச்சியுடன் கழித்தனர். விடியற்காலையில் வள்ளியைக் காணாமல் எல்லோரும் பல இடங்களிலும் தேடி அலைந்தனர். கடைசியில் வள்ளி முருகனுடன் இருப்பதைக் கண்டுகொண்டு அவன் மீது பாணங்கள் எய்தனர். வள்ளி மிகவும் பயம் கொண்டாள். ஆறுமுகன் சேவலை நினைக்க அது வந்து பயங்கரமாய் கத்த அனைவரும் அஞ்சி ஓடினர். பலர் தரையில் சாய்ந்தனர். வள்ளியின் தந்தையும் வீழ்ந்து கிடந்தார். அப்போது அங்கு வந்த நாரதர் இறந்து கிடக்கும் வள்ளியின் தந்தையையும், மற்றோர்களையும் உயிர்ப்பித்து வள்ளியை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தார். உடனே வள்ளியுடன் முருகன் இறந்தவர்களிடையே சென்று, வள்ளியிடம் அவர்களைக் கண்களால் நோக்கி எழுந்திருக்குமாறு கூறச்செய்ய அனைவரும் விழித்து எழுந்தனர். அப்போது முருகன் சண்முகனாக ஆறுதலைகளும், பன்னிரண்டு கண்கள் கூடிய முகத்துடனும் காட்சி அளித்தார். அப்போது அவ்விடம் நாரதர் வந்தார். வள்ளியுடன் புலித்தோல் இருக்கையில் அமர்ந்தார். வேலன் தன் சுயஉருவத்தில் தோன்றினார்.

நாரதர் அக்கினி வளர்த்துத் திருமணச் சடங்குகள் செய்து வைத்தார். வள்ளியின் தந்தை கையில் அவன் மனைவி நீர்வார்க்க முறைப்படி முருகன்-வள்ளி திருமணம் நடந்தேறியது. அங்கு அப்போது பார்வதி பரமேசுவரர்களும் தோன்றி வள்ளித் திருமணம் கண்டுகளித்து ஆசி கூறினர். இந்திராதி தேவர்களும் மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர். பிறகு கந்தன்-வள்ளியுடன் ஸ்ரீபரிபூர்ண கிரியை அடைந்து அந்தக் கிரியின் சிறப்புகளை எல்லாம் வள்ளிக்கு எடுத்துரைத்தார். மற்றும் அங்கு இந்திரன் பூஜித்து வரங்கள் பெற்ற விவரமும் கூறிட இவற்றைக் கேட்ட வள்ளி மனமகிழ்ச்சி அடைந்தாள். அந்த மலை மீது முருகன் லிங்கப்பிரதிஷ்டை செய்து பரமனை வழிபட்டு அவர் அருளைப் பெற்றார். பின்னர் வள்ளியுடன் விமானத்தில் ஏறி கந்தகிரியை அடைந்தார். தெய்வயானை, வள்ளியையும், முருகனையும் இன்முகம் காட்டி வரவேற்று அகமகிழ்ந்தாள். தனக்கு ஒரு துணை வந்திருப்பதாகக் கூறி மகிழ்ச்சி உற்றாள். பின்னர் முருகப்பெருமான் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். இறுதியில் முன்பு திருமாலின் புதல்விகளாகிய தன்னைக் குறித்து தவம் செய்து வேண்டியவாறு இப்போது தெய்வயானை வள்ளியாகத் தோன்றிய அவர்களைத் தான் மணந்ததாகவும் கூறி முடித்தார்.

நவரத்தின சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வயானை சமேதராய் அமர்ந்து முருகன் அனைவருக்கும் காட்சி தந்தருளினார். அவர் கட்டளைப்படி மயில், சேவல், ஆடு, வேல், விமானம் ஆகியவை வந்து சேர்ந்தன. அந்த அரியகாட்சியை இந்திராதி தேவர்களும் எல்லையில்லா ஆனந்தம் கொண்டு அவன் அருளைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஸ்ரீவள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமணிய சுவாமியே நம:

ஆறிரு தடந்தோள் வாழ்கஆறுமுகம் வாழ்க வெற்றியைக் கூறுசெய் தனிவேல் வாழ்க,குக்குடம் வாழ்க செவ்வேள்ஏறிய மஞ்சை வாழ்கயானைதன் அணங்கு வாழ்கமாறிலா வள்ளி வாழ்கவாழ்கசீர் அடியார் எல்லாம்.
கஷ்டங்கள் வரும் போது அழைத்தால் நம்மை தேடி வருவான் வடிவேலன்.

கந்தபுராணம் முற்றிற்று.



Overview of the Skanda Purana

1. Structure and Composition:

- The Skanda Purana is traditionally divided into several Khandas (sections or books), each containing multiple chapters. The main divisions include the Maheshvara Khanda, Vaishnava Khanda, Brahma Khanda, Kashi Khanda, and others. The text is one of the largest Puranas, with some recensions comprising over 80,000 verses.

2. Key Themes and Content:

- Mythological Narratives: The Skanda Purana includes detailed accounts of the birth, deeds, and worship of Skanda (Kartikeya). It narrates his battle against the demon Tarakasura, his role as a commander of the divine army, and his various attributes and manifestations.

- Pilgrimage and Sacred Sites: The text provides descriptions of numerous sacred sites and pilgrimage destinations across India, with a significant focus on the holy city of Kashi (Varanasi). It details the religious significance, legends, and rituals associated with these places.

- Rituals and Worship: The Skanda Purana outlines various rituals and ceremonies dedicated to Skanda and other deities. It includes instructions for puja (worship), festivals, and observances, emphasizing the importance of devotion and ritual purity.

- Philosophical and Ethical Teachings: The Purana addresses philosophical concepts such as Dharma (duty/righteousness), karma (action), and Moksha (liberation). It encourages adherence to moral principles, devotion to deities, and the pursuit of spiritual knowledge.

- Legends and Stories of Other Deities: Besides focusing on Skanda, the Purana also contains stories and teachings related to other deities like Shiva, Vishnu, and the goddess Parvati. These stories often highlight the interconnectedness of various deities in Hindu mythology.

3. Significance of Skanda:

- Skanda, known as Murugan in Tamil Nadu, is a major deity in South Indian traditions. He is often depicted as a youthful warrior god, associated with wisdom, courage, and martial prowess. The Skanda Purana glorifies his qualities, his role as a protector of the righteous, and his importance in the cosmic order.

4. Regional Variations:

- The Skanda Purana has numerous regional versions and recensions, which reflect local traditions and customs. The Tamil version, known as the Kanda Puranam, is particularly popular in South India and contains unique stories and hymns dedicated to Murugan.

5. Cultural and Religious Impact:

- The Skanda Purana has had a significant influence on the worship practices and cultural traditions related to Skanda/Kartikeya. It has inspired various festivals, temple rituals, and artistic representations, particularly in South India.

6. Historical and Geographical Insights:

- The text provides valuable insights into the historical and geographical context of ancient India, describing the religious significance of various regions and the cultural practices of the time.



Share



Was this helpful?