இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சிவ கவசம்

சிவ கவசம் (Siva Kavasam) is a powerful devotional hymn dedicated to Lord Shiva. The term "கவசம்" (Kavasam) means "shield" or "armor," and thus, Siva Kavasam is a hymn believed to act as a spiritual shield, protecting devotees from harm, negativity, and obstacles.


சிவ கவசம்

அமுதமொழியாள் உமையவள் கணவ!
அரிதரி தரிதனும் மனித்தப் பிறவி
அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை
அஞ்சலென்றருளிக் காத்திட வருக!
அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!
அங்கி அங்கை ஏற்றோய் வருக!
அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!
அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக!

அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக!
அண்ணா மலைதனில் உறையோய் வருக!
அத்தி உரிதனை உடுத்தோய் வருக!
அந்தி வண்ணம் கொண்டோய் வருக!
அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!
அம்மை அப்பனாம் வடிவோய் வருக!
அய்ந்தினை நிலமெலாம் உரியோய் வருக!
அர்ச்சனை ஆற்றுவார்க் கருள்வோய் வருக!


அல்லற் பிறவி அறுப்போய் வருக!
அவ்வியத் தக்கனை ஒறுத்தோய் வருக!
அள்ளிப் பருகும் அமுதோய் வருக!
அற்பொழுதெரி கொண்டாடுவோய் வருக!
மத்தம் மதியம் கூவிளம் அறுகு
தும்பை எருக்கு எழில்நீர் கங்கை
பொன்னெனப் பூத்துக் குலுங்கும் கொன்றை
யாவும் மிலைந்த முடியோய் வருக!

அன்னமென் நடையாள் வேட்டோய் வருக!
கண்டு தண்டாக் கவின் மிகு பொலிவு
மிளிரும் ஒளிமிகு முகத்தோய் வருக!
செங்கதிர் பரப்பும் ஞாயிறு வலப்பால்
தன்கதிர் பரப்பும் மதியம் இடப்பால்
தழலென ஞானம் பொழிவிழி நுதலில்
கொண்டு பொலியும் கண்ணா வருக!
விழுந்து பரந்த சடையோய் வருக!

நீறு பொலியும் நுதலோய் வருக!
குழைவளர் இசைநுகர் செவியோய் வருக!
கடல் நஞ்சேற்ற கழுத்தோய் வருக!
கல்லினும் வலிய தோளோய் வருக!
கொன்றை தவழும் மார்போய் வருக!
செறுநர் ஒறுக்கும் கரத்தோய் வருக!
அரவம் அசைத்த இடையோய் வருக!
உறுநர்த் தாங்கும் அடியோய் வருக!

குவளைக் கண்ணி கூறோய் வருக!
அடல்விடை மீதினிது அமர்ந்தோய் வருக!
அடியேன் என்னைக் காத்தற் பொருட்டுச்
சூலம் சுழற்றி இன்னே வருக!
உயர்தனிச் சூலமென் உச்சி காக்க!
பிழையாச் சூலமென் பின்தலை காக்க!
முனைமலி சூலமென் முந்தலை காக்க!
கூர்மலி சூலமென் குழல் காக்க!


நுண்ணிய சூலமென் நுதலினைக் காக்க!
புகழ்மலி சூலமென் புருவம் காக்க!
இலைமலி சூலமென் இடவிழி காக்க!
வலமலி சூலமென் வலவிழி காக்க!
இனையில் சூலமென் இமைகள் காக்க!
இகல்மலி சூலமென் இடச்செவி காக்க!
வலிமலி சூலமென் வலச்செவி காக்க!
கதிர்மலி சூலமென் கன்னம் காக்க!

நலிமலி சூலமென் நாசி காக்க!
வாட்டும் சூலமென் வாயினைக் காக்க!
நீண்ட சூலமென் நாவைக் காக்க!
பரமன் சூலமென் பற்களைக் காக்க!
ஊறுசெய் சூலமென் உதடுகள் காக்க!
மின்னுஞ் சூலமென் மிடறு காக்க!
பீடுடைச் சூலமென் பிடரி காக்க!
தோலாச் சூலமென் தோளினைக் காக்க!

மாறில் சூலமென் மார்பினைக் காக்க!
வச்சிரச் சூலமென் வயிற்றினைக் காக்க!
முக்கணன் சூலமென் முதுகினைக் காக்க!
வீறுடைச் சூலமென் விலாவினைக் காக்க!
அழுந்துஞ் சூலமென் அரைதனைக் காக்க!
பிளந்திடுஞ் சூலமென் பிருட்டம் காக்க!
கருத்திடுஞ் சூலமென் கழிகுறி காக்க!
கடுக்கும் சூலமென் கொப்பூழ் காக்க!

முத்தலைச் சூலமென் முழங்கை காக்க!
முனைமலி சூலமென் முன்கரம் காக்க!
அழித்திடுஞ் சூலமென் அங்கை காக்க!
புண்விளை சூலமென் புறங்கை காக்க!
பெம்மான் சூலமென் பெருவிரல் காக்க!
கூத்தன் சூலமென் குறிவிரல் காக்க!
நடுக்குஞ் சூலமென் நடுவிரல் காக்க!
அம்பலன் சூலமென் அணிவிரல் காக்க!

சிவன் திருச் சூலமென் சிறுவிரல் காக்க!
தொளைக்குஞ் சூலமென் தொடைதனைக் காக்க!
முந்துறுஞ் சூலமென் முழந்தாள் காக்க!
கனன்றெழுஞ் சூலமென் கணுக்கால் காக்க!
குலைக்குஞ் சூலமென் குதிகால் காக்க!
பாய்ந்திடுஞ் சூலமென் பாதம் காக்க!
நச்சுச் சூலமென் நரம்பெலாம் காக்க!
குத்திடும்ஞ் சூலமென் குருதி காக்க!

இடர்தரு சூலமென் இரைப்பை காக்க!
வதைக்குஞ் சூலமென் வளிப்பை காக்க!
குதறுஞ் சூலமென் குடரினைக் காக்க!
எத்துஞ் சூலமென் என்பெலாம் காக்க!
மூளெரிச் சூலமென் மூட்டெலாம் காக்க!
நாதன் சூலமென் நாடி காக்க!
மூவிலைச் சூலமென் மூளை காக்க!
மாய்க்குஞ் சூலமென் மேனி காக்க!

வருந்துஞ் சூலமென் வாதம் காக்க!
பிழையாச் சூலமென் பித்தம் காக்க!
சினந்திடுஞ் சூலமென் சிலேத்துமம் காக்க!
உலவாச் சூலமென் உயிரைக் காக்க!
உடலுரு பிணியும் உள்ளம் பிணியும்
உன்னற்கரியா நீயெனைக் காக்க!
வான்மின் பொழுதும் வானிடி பொழுதும்
வான்மதிச் சடையா நீயெனைக் காக்க!


பெய்மழைப் பொழுதும் பொய்மழைப் பொழுதும்
பெரும்புனற் சடையா நீயெனைக் காக்க!
இளவெயிற் பொழுதும் கடுவெயிற் பொழுதும்
இளமான் கரத்த நீயெனைக் காக்க!
முன்பனிப் பொழுதும் பின்பனிப் பொழுதும்
முறுவல் முகத்தா நீயெனைக் காக்க!
நிலவழி ஏகினும் நீர்வழி ஏகினும்
நிகரில் பண்பா நீயெனைக் காக்க!

வனவழு ஏகினும் வான்வழி ஏகினும்
வரிப்புலியதளா நீயெனைக் காக்க!
மலைப்புறு மலைவழி ஏகுங் காலை
மலையாள் கணவா நீயெனைக் காக்க!
சென்றிடும் பொழுதும் நின்றிடும் பொழுதும்
செவ்வனல் வண்ணா நீயெனைக் காக்க!
ஆடும் பொழுதும் ஓடும் பொழுதும்
ஆடல் மன்னா நீயெனைக் காக்க!

அறிதுயிற் பொழுதும் நெடுந்துயிற் பொழுதும்
அறிதற்கரியா நீயெனைக் காக்க!
விழித்திடும் பொழுதும் எழுந்திடும் பொழுதும்
விரிமலர்ப் பாதா நீயெனைக் காக்க!
வடபால் ஏகினும் தென்பால் ஏகினும்
வயித்திய நாதா நீயெனைக் காக்க!
மேற்பால் ஏகினும் கீழ்ப்பால் ஏகினும்
மேதகு நீற்றா நீயெனைக் காக்க!

கோணத் திக்கெலாம் ஏகுங் காலை
கொடுமழுப் படையா நீயெனைக் காக்க!
மேலே எழும்பினும் கீழே ஆழினும்
மெய்யுரை நாவா நீயெனைக் காக்க!
புனல்மிகு பாயினும் அனல்மிகு பற்றினும்
புரம் எரி விழியா நீயெனைக் காக்க!
விண்துலங்கிடினும் மண்துலங்கிடினும்
விரிபட அரவா நீயெனைக் காக்க!

கேடு விளைவிக்கும் புயல்நனி வீசில்
கேடிலியப்பா நீயெனைக் காக்க!
காலைப் பொழுதும் மாலை பொழுதும்
கால காலா நீயெனைக் காக்க!
வைகறைப் பொழுதும் மையிருட் பொழுதும்
வைந்நுதிப் படையா நீயெனைக் காக்க!
ஏற்படு பொழுதும் உச்சிப் பொழுதும்
எண் வடிவீசா நீயெனைக் காக்க!

நாண்மீன் பிறழினும் கோண்மீன் பிறழினும்
நாரி யண்ணா நீயெனைக் காக்க!
உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும்
உலக நாதா நீயெனைக் காக்க!
கனமழை பொழியக் களிமண் செறிந்த
வழுக்கு நிலத்தில் உழலும் பொழுது
வழுவா வண்ணம் கோல் பெற்றாற்போல்
வயிறு காய் பசிக் காற்றாராகி
யாண்டு நாடினும் உணவில்லை யாகப்
பொல்லா விதிக்கும் போகா வுயிர்க்கும்
நொந்து நொந்து நலியும் பொழுது
கொளக் கொளக் குறையா அளஅள அஃகா
அமுது தரவல கலன் பெற்றாற்போல்
நளியிரு முந்நீர் நாவாய் செல்ல
வளிமிகு வீச நாவாய் கவிழ
உய்வழியின்றி நையும் பொழுதில்
உய்வழி காட்டி உளமுவப் பூட்டும் உறுவலி
மாபெரும் புணை பெற்றாற்போல்
அதிர் கடல் தன்னில் அருங்கலந் தானும்
செல்வழிச் செவ்வனே செல்லுழிச் செல்வழி
அந்தோ வழுவ அந்தி நேர
மாதிரம் எங்கும் காரிருள் சூழக்
கரையெங்குளதென அறியா நிலையில்
கரையிங் குளதென நலங்கரை துணையெனப்
பேரொளி பாய்ச்சும் கலங்கரை விளக்கம்
கண்ணுற்றாற்போல் எண்ணரு பிறவியில்
பலப்பல தாயரும் தந்தையாரும்
பெற்றுப் பெற்றுப் பேதை யானும்
உழைக்க லாகாத் துயருள் உழல
ஊன்று கோலென உறுபெரும் புணையெனக்
கலங்கரை விளக்கெனப் பெரும்பிணி மருந்தென
நின் திருப்பாதம் காணப் பெற்றேன்!


நின்னருளாலே நின்தாள் பற்றினேன்!
நீயலால் இங்கு மெய்த் தாதை யுண்டோ!
உமையெலால் இங்கு மெய் அன்னை யுண்டோ!
திருவடி யல்லால் துணையும் உண்டோ!
திருநீறல்லால் காப்பும் உண்டோ!
திருமந்திரமலால் படையும் உண்டோ!
திருவருள் அல்லால் நிழலும் உண்டோ!
இந்நாள் காறும் பாவியான் இழைத்த
மாபெரும் பிழையும் சாலப் பொருத்துத்
தோள்திகழ் நீற்றனாய் என்முன் தோன்றிச்
சுந்தர நீற்றை எனக்கணிவித்து
நாயோன் என்னைத் தூயோன் ஆக்கி
எனை ஆட் கொள்க! எனை ஆட் கொள்க!
எனை ஆட் கொள்க எம்மான் நீயே!

Key Points:

Siva Kavasam is a prayer that invokes Lord Shiva's blessings and divine protection.

The hymn describes various aspects of Lord Shiva, including his powers and attributes, and asks for his grace and protection.

Devotees chant Siva Kavasam for mental peace, protection, strength, and spiritual growth.

Like other Kavasam hymns (such as Kanda Sasti Kavasam), this one is recited to safeguard oneself from physical, mental, and spiritual challenges, as well as to attain the grace of Lord Shiva.

The hymn is often recited during festivals, special occasions, or daily prayers by Saivites (devotees of Shiva) to seek his blessings and to remain spiritually shielded.



Share



Was this helpful?