Digital Library
Home Books
Sakkiya Nayanar, also known as Sakkiyar, is one of the 63 Nayanmars, who are celebrated saints in Tamil Shaivism known for their profound devotion to Lord Shiva. His name "Sakkiya" indicates a connection to the Sakyas or Buddhist community, reflecting the inclusive nature of Shaivism which respects devotion beyond orthodox boundaries.
திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார்.
நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார்.
தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.
இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார்.
சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார்.
சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.
குருபூஜை: சாக்கிய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |