Digital Library
Home Books
சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி.
பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது. அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன.
ராமானுஜருக்கு இளம்வயது முதலே கல்வியில் பேரார்வம். ஆசிரியர்கள் அவர் மீது கொண்ட அன்பிற்கு அளவில்லை. பள்ளிப் பிள்ளைகளில் முதலாவது இடத்தில் இருந்தார் ராமானுஜர். அது மட்டுமல்ல, மகான்களைக் கண்டால் அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று பாராமல், அவர்களோடு உரையாடுவார். அவ்வகையில் அவரது உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர் திருக்கச்சி நம்பி என்னும் பக்தர். இவரை ஊரார் ஸ்ரீகாஞ்சி பூர்ணர் என்று அழைப்பார்கள். பரந்தாமனுடன் நேரில் உரையாடுபவர் என்று மக்கள் இவரைக் கருதினர். அவர் வேளாளர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால், தன்னை விட உயர்ந்த அந்தணர்களுக்கு தான் என்றும் ஈடல்ல என்ற கருத்தைக் கொண்டவர். ஆனாலும், அவர் சொல்லும் வார்த்தைகளை பரந்தாமனின் வார்த்தையாகக் கருதிய அந்தணர்கள் கூட மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அவரது சொந்த ஊர் பூவிருந்தவல்லி (இன்றைய சென்னை பூந்தமல்லி). ஆனால், காஞ்சியில் குடியேறி விட்டவர். வரதராஜப் பெருமாளைத் தவிர அவருக்கு வேறு எந்த நினைவுமில்லை. தினமும் காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருக்கச்சிநம்பி பூவிருந்தவல்லியிலுள்ள பெருமாளை தரிசிக்கச் செல்வார். இதற்கு இடைப்பட்ட தூரம் 52 கி.மீ.,. தினமும் 104 கி.மீ., நடந்து சென்று வருவதென்றால், நம்பியிடமிருந்த பக்தியின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது ராமானுஜர் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரது முகத்தில் வீசிய தெய்வீகக்களை ராமானுஜரை மிகவும் கவர்ந்தது. அவருடன் பழகுவதைப் பெருமையாகக் கருதினார். நம்பிகளோ பரமசங்கோஜி.
குழந்தாய்! நீர் பிராமணர். நான் வேளாளன். தாங்கள் என்னோடு நட்பு பூணுவது எவ்வகையிலும் பொருந்தாததாய் அமையுமென்றே கருதுகிறேன்,என்றார். இவ்விடத்திலே ராமானுஜர் சொன்ன கருத்து எக்காலத்திற்கும் ஏற்புடைய ஒன்று. காஞ்சி பூர்ணரே! தாங்கள் பகவானிடம் நேரில் பேசும் ஆற்றல் பெற்றவர். எங்களால் அது முடிகிறதா? பூணூல் அணிந்த காரணத்தால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆக முடியாது. யார் ஒருவன் பகவானே சரணமென அவனோடு ஒன்றிப் போகிறானோ, அவனே நிஜமான பிராமணன். ஐயனே! திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவராயினும், அவரை பிராமணர்கள் போற்றி மகிழ்கிறார்களே, என்றார். அந்த செல்லக்குழந்தையின் அறிவாற்றலையும், ஜாதி துவேஷமற்ற தன்மையையும் எண்ணி வியந்தார் திருக்கச்சி நம்பிகள். அன்று கோயில் சென்று திரும்பும்போது ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் வீட்டிலேயே தங்கினார். அவருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்த ராமானுஜர், இரவில் அவர் படுத்ததும், கால்களைப் பிடித்து விட்டார். திடுக்கிட்டு எழுந்த நம்பிகள், ஐயா! நான் உங்கள் தொண்டன். எனது கால்களை தாங்கள் பிடித்து விடுவதா? என்றார் நெகிழ்ச்சியுடன். ராமானுஜர் வருத்தப்பட்டார். காஞ்சி பூர்ணரே! தங்களுக்கு சேவை செய்ய விடாமல் என்னை நீங்கள் தடுக்கிறீர்களே. இதை எனது துரதிர்ஷ்டமாகவே கருதுகிறேன், என்றார். இப்படி இவர்கள் கொண்ட அன்பின் எல்லை விரிந்து கொண்டே சென்றது. ராமானுஜர் வாலிப பருவத்தை அடைந்தார்.
பதினாறு வயதானது. ஆசூரிகேசவாச்சாரியாரும், காந்திமதி அம்மையாரும் மகனுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். ரக்ஷகாம்பாள் என்னும் அம்மையாரைத் திருமணம் முடிக்க ஏற்பாடாயிற்று. தஞ்சமாம்பபாள் என்றும் இவருக்கு பெயருண்டு. ராமானுஜரின் திருமணம் கி.பி. 1033ல் நிகழ்ந்தது. மாட்டுப்பெண்ணின் வரவு குடும்பத்தில் பெருமகிழ்ச்சியை வரவழைத்திருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரே மாதத்தில் அழிந்து போனது. திடீரென நோய்வாய்ப்பட்ட ஆசூரி கேசவாச்சாரியார் காலமாகி விட்டார். திருமணப் பந்தலிட்ட வாசலில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த இச்சோக சம்பவத்தால் காந்திமதி அம்மையார் நிலை குலைந்து போய்விட்டார். ராமானுஜரும் கடுமையான வருத்தத்தில் ஆழ்ந்தார். எனினும், அவரது ஆன்மபலத்தால் சற்றே தேறினார். இருப்பினும், மனச்சஞ்சலமடைந்த அவர்கள் ஊரைவிட்டே செல்வதென முடிவெடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆன்மிகநகராம் காஞ்சிபுரத்துக்கு இடம் பெயர்ந்தனர். ராமானுஜர் அங்கேயே ஒரு வீடு கட்டி விட்டார்.
காஞ்சிபுரம் வந்ததும் தான் ராமானுஜருக்கு சோதனைக்காலமும் ஆரம்பித்தது. அதுவும் தனக்கு அமைந்த குருவிடமிருந்து இப்படிப்பட்ட சோதனை வருமென ராமானுஜர் நினைத்திருக்க மாட்டார். காஞ்சியில் யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரின் மாணவரானார் ராமானுஜர். பரம பண்டிதரான அவரது புலமை பலரைக் கவர்ந்திழுத்தது. அத்வைதக் (கடவுளுக்கு உருவமில்லை எனச் சொல்லும் பிரிவு) கொள்கையில் நாட்டமுடையவர் அவர். ராமானுஜர் தனது மாணவரானதும் அவரது அறிவுத்திறன், தேஜஸ் ஆகியவற்றைக் கண்டு ஆனந்தம் கொண்டார். மிகக்கஷ்டமான பாடங்கள், மந்திரங்களைக் கூட ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே அதை உடனடியாகப் புரிந்து கொண்ட ராமானுஜர் பற்றி உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். ஆனால், ராமானுஜருக்கோ குருவின் அத்வைதக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. இருப்பினும், குருவின் சொல்லுக்கு மறுபேச்சு பேச அவர் விரும்பவில்லை. மொத்தத்தில் வகுப்பில் அதிகம் பேசாத மாணவராகவே ராமானுஜர் திகழ்ந்தார். அதேசமயம் நீண்டநாள் இந்த மவுனவிரதம் நீடிக்கவில்லை. ஒருநாள், மதியவேளையில் மாணவர்கள் உணவருந்தச் சென்றுவிட்டனர். யாதவப்பிரகாசர் ராமானுஜரை அழைத்து, ராமானுஜா, என் உடம்புக்கு இன்று நீ எண்ணெய் தேய்த்து விடு, என்றார். அக்காலத்தில் மாணவர்கள் தான் குருவின் சொந்தப்பணியைக் கூட கவனிக்க வேண்டும். அப்போது ஒரு மாணவன் அங்கு வந்தான்.
குருவே! தாங்கள் காலையில் நடத்திய பாடத்தில் ஒரு மந்திரத்தின் பொருள் எனக்கு புரியவில்லை. சாந்தோக்ய உபநிஷதத்தில் வரும் தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி என்பதற்குரிய விளக்கம் வேண்டும்,என்றான். யாதவப்பிரகாசர் அவனிடம், பொன்போன்று பிரகாசிக்கும் பரந்தமானின் கண்கள் குரங்கின் ஆஸனவாய் சிவப்பாக இருப்பது போன்ற நிறமுள்ள சிவந்த தாமரை போன்றவை, என்றார். இவ்விளக்கம் கேட்டு ராமானுஜர் கண்ணீர் வடித்து விட்டார். சூடான கண்ணீர் ஆசிரியரின் தொடையின் மீது விழுந்தது. அதன் உஷ்ணம் தாளாமல், ஆசிரியர் மேல்நோக்கி பார்த்தார். நின்று கொண்டிருந்த ராமானுஜர் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. ராமானுஜா! ஏன் அழுகிறாய்? குருவே! தங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். தாங்களே மகாத்மா. ஆனால், உலகத்தைக் காக்கும் எம்பெருமானின் திருக்கண்களை குரங்கின் பிருஷ்டபாகத்திற்கு ஒப்பிட்டதை எப்படி ஏற்பது? என்றார். குருவுக்கு கோபம் மிதமிஞ்சி விட்டது. அப்படியானால் நீ தான் இந்த உலகத்திற்கே குருவோ? குருவின் கருத்தை மறுப்பவன் நல்ல சீடனாக இருக்க முடியாது. சரி! நீதான் என்னையும் மிஞ்சிய அறிஞன் ஆகிவிட்டாயே, எங்கே, இப்பதத்திற்கு என்னை விட வித்வானாகி விட்ட நீ தான் பொருள் சொல்லேன், என்றார்.
குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! கப்யாஸம் என்ற சொல்லில் உள்ள அஸ் என்ற மறைவுச்சொல்லுக்கு மலர்தல் எனப் பொருள். இதனடிப்படையில், ஆஸ என்பதற்கு மலர்ந்தது என பொருள் கொள்ள வேண்டும். கப்யாஸம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய மந்திரத்தை முழுமையாகக் கேளுங்கள். தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக- மேவ மக்ஷீணி என்பதாகும். இதன் பொருள், சூரிய மண்டலத்திலுள்ள அந்த பரந்தாமனின் கண்கள் மலர்ந்த தாமரைப் பூப்போல் அழகாக இருக்கும், என்பதாகும். தாமரை சிவப்பை குரங்கின் ஆசனவாய் சிவப்பு என குறிப்பிட்டதைத் தான் மறுத்தேன், என்றார். இந்தப் பொருள் கேட்டு யாதவப்பிரகாசர் துள்ளிக்குதித்தார். ஏ ராமானுஜா! நான் சொன்ன விளக்கம் சங்கராச்சாரியார் சொன்னதின் அடிப்படையிலானது. நீ சொல்வது ஒரு வாக்கியத்தை பிரித்து வருவதால் ஆனது. இதை ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால், நீ இலக்கணத்தில் கெட்டிக்காரன் என்று வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம், என்றார் ஆவேசத்துடன். இந்த சம்பவம் யாதவப்பிரகாசரை மிகவும் பாதித்தது. பெரியவர்கள் சிறியவர்கள் சொல்லும் நற்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற உலக வாதத்திற்கு புறம்பாக அவர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டார். இதையடுத்து மற்றொரு நாளும் இதே போன்ற வாதம் எழுந்தது. யாதவப்பிரகாசர் அன்று வகுப்பெடுக்கும் போது, ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்திற்கு, பரப்பிரம்மம் (இறைவன்) சத்தியமும், அறிவுமயமானதும், முடிவில்லாததும் ஆகும், என பொருள் சொன்னார். அப்போது எழுந்த ராமானுஜர், குருவே! அம்மந்திரத்திற்கு அப்படி பொருளல்ல.
பரப்பிரம்மம் சத்தியம் என்ற பண்பை உடையது. ஞானமும் அதன் பண்பு தான். முடிவற்றதும் என்பதும் அதன் பண்பு தானே தவிர, அதுவே முடிவற்றதோ, சத்தியமானதோ, ஞானமோ என்று அறுதியிட்டு பொருள் கொள்ள முடியாது, என்றார் மிக்க அடக்கத்துடன். இதைக் கேட்டு பிரகாசர் கொதித்தே போய் விட்டார். ஏனடா! உனக்கு அகங்காரம் அதிகமாகி விட்டது. இங்கே நீ குருவா? நான் குருவா? நான் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் நீ இங்கே இரு. இல்லாவிட்டால், நீயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி, உன் சொந்தக் கருத்துக்களையெல்லாம் உன்னிடம் படிக்க வரும் மட சீடர்களிடம் திணி. சங்கரரின் கொள்கைக்கு எதிராக உன் கருத்துக்கள் உள்ளன. இனியும் நீ எழுந்து பேசினால், உன்னை குருகுலத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை, என எச்சரித்தார். ஏதோ ராமானுஜரை அடக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இப்படி சொல்லி விட்டாரே தவிர, அவரது உள்ளத்துக்குள் அச்சம் தோன்றலாயிற்று. யாதவப்பிரகாசர் அத்வைதக் கொள்கையில் ஊறிப்போனவர். அத்வைதம் என்றால், இரண்டாவது என்ற சொல்லுக்கே இடமில்லை எனக் கூறுவதாகும். அதாவது, உலகம் என்ற ஒன்றே கிடையாது. அது மாயை. அப்படியானால் நம் கண் முன்னால் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் எப்படி வந்தன என்றால், அதெல்லாம் வெறும் மனபிரமை தான். மனம் தான் இப்படியெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது என்று வாதம் செய்வதாகும். நாராயணனை தெய்வமாக ஏற்கும் இந்த வாதம், அவருக்கு உருவமில்லை என்கிறது. இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கும் யாதவப்பிரகாசர், ராமானுஜரை துவைதத்தில் ஊறிப்போனவரோ என சந்தேகித்தார். துவைதம் உருவ வழிபாட்டுக்கு ஒப்புக்கொள்கிறது. இவர்களும் நாராயணனே உயர்ந்தவர் எனக் கூறினாலும், சில காரியங்கள் வெற்றி பெற பிற கடவுள்களையும் வழிபடுவர். ஒன்றுக்கு மேற்பட்டது என்பது துவைதத்தின் சுருக்கமான பொருள்.
இந்நிலையில் அவர் மனதில் விபரீதமான எண்ணமும் தோன்றியது. எந்த ஆசிரியர் மாணவனுக்கு நல்வழி காட்ட வேண்டுமோ, அதே ஆசிரியர் தன் மாணவனைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். ஒரு மாணவன் தன்னை முந்துவதா என்ற பொறாமையா அல்லது தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்ற வேட்ககையா...எப்படியிருப்பினும் மனதில் கொலைத்திட்டம் உருவாயிற்று. காஞ்சிபுரத்திலுள்ள பல இளைஞர்கள் யாதவப்பிரகாசரை இரண்டாம் சங்கராச்சாரியார் என செல்லமாக அழைப்பார்கள். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தன் சீடர்களை ரகசியமாக அழைத்து, என் அன்புக் குழந்தைகளே! ராமானுஜன் என்னை எதிர்க்கிறான். என் உரைக்கு பதில் உரை கூறுகிறான். எனது புலமையில் குற்றம் கண்டுபிடிக்கிறான். அவன் இவ்வாறு சொல்வதற்கு காரணம் துவைதத்தின் மீது அவனுக்கு பிடிப்பிருப்பதால் தான். அவன் ஒரு நாத்திகன். அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறான். அவனை ஒழித்துக் கட்ட வேண்டும், என பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்தார். ஒரு மாணவன் எழுந்தான். குருவே! இதொன்றும் பிரமாதமான காரியமில்லை. உங்கள் கருத்துக்கு மறு கருத்து சொல்பவனை நம் குருகுலத்தை விட்டு விலக்கி விடுங்கள். அவ்வளவு தானே. இதற்காக கவலைப்படவே தேவையில்லையே, என்றான். உடனே மற்றொரு மாணவன் எழுந்தான். அட அசடே! உனக்கு ஆசிரியர் சொல்வது முழுமையாகப் புரியவில்லை. அவன் மகாபிரகஸ்தனாக இருக்கட்டும். நம் ஆசிரியரை எதிர்த்துப் பேசட்டும். அதுபற்றியா ஆசிரியர் கவலைப்படுகிறார். அத்வைதத்தை அழித்து, துவைதத்தை அவன் புகுத்தி விடுவானோ என்றல்லவா அஞ்சுகிறார். ஒருவேளை நம்மிடமிருந்து விலக்கப்படும் ராமானுஜன், வெளியே போய் தனியாக குருகுலம் துவங்கி, துவைதத்தை போதித்தால் நிலைமை என்னாவது? எனவே அவனைக் கொன்று விடுவது தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, என்றான். ஒரு பெரிய ஆசானின் தலைமையில், காஞ்சிமாநகரில் கொலைத்திட்ட சதி உருவாகிக் கொண்டிருந்தது.
நல்லவர்கள் பார்வையில் எல்லாமே நல்லதாகத்தான் தெரியும். ராமானுஜருக்கு இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாது. வழக்கம் போல், அவர் குருகுலம் வந்து சென்று கொண்டிருந்தார். ஒருநாள் சீடர்களை யாதவப்பிரகாசர் அழைத்தார். சீடர்களே! அத்வைதத்தை அழிக்க புறப்பட்டிருக்கும் ராமானுஜனை, கொல்வதற்குரிய திட்டம் ஏதாவது வைத்துள்ளீர்களா? என்றார் ரகசியமாக. யாரும் வாய் திறக்கவில்லை. பாவம்...ஏறத்தாழ 18 வயது நிரம்பிய வாலிபர்கள் அவர்கள். அந்த அன்பு நெஞ்சங்களில் கொலை வெறி ஏற்றப்பட்டது. யாதவப்பிரகாசரே தன் திட்டத்தைக் கூறினார். குழந்தைகளே! இவ்வுலகில் பாவம் தீர்ப்பது கங்கை நதி. நாமெல்லாம் காசி யாத்திரை புறப்படுவோம். செல்லும் வழியில், ராமானுஜனைத் தீர்த்துக் கட்டி விடுவோம். அந்தணனைக் கொன்ற பாவம் கங்கையில் மூழ்கினால் சரியாகி விடும் என்கின்றன சாஸ்திரங்கள். நாமும் கங்கையில் மூழ்கி பாவத்தை தொலைத்து விட்டு திரும்பி விடுவோம். ராமானுஜனும் தொலைந்து போவான். நம் பாவமும் தொலையும், என்றார். உல்லாசப்பயண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. ராமானுஜருடன் அவரது சித்தி மகன் கோவிந்தனும் படித்து வந்தார். அவரும் ராமானுஜர் வீட்டில் தங்கியிருந்தார். இருவரும் இணைந்தே பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் இந்த உல்லாசப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டினர். காசியும், காஞ்சியும் எட்டாத தூரத்தில் இருப்பவை. மிக நீண்ட இந்தப் பயணம் பல அனுபவங்களைத் தரும் என்பதால், இவர்கள் ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை. இவ்வளவு தூரத்துக்கு தன் ஒரே மகனை அனுப்ப காந்திமதி அம்மையாருக்கு மனமில்லை. இருப்பினும், குருகுலத்தில் எல்லாக்குழந்தைகளும் செல்வதால், தன் மகனையும் அனுப்ப சம்மதித்தார்.
உல்லாசப்பயணம் ராமானுஜரையும், கோவிந்தனையும் பொறுத்தவரை ஆனந்தமாகவும், மற்றவர்களைப் பொறுத்தவரை திகிலுடனும் துவங்கியது. பல நாட்கள் கடந்து அவர்கள் விந்தியமலை அடிவாரத்திலுள்ள கோதண்டாரண்யம் என்ற காட்டை அடைந்தனர். அங்கே ஆள்நடமாட்டம் என்பதே இல்லை. யாதவதீர்த்தர் என்ற ஆசிரிய வடிவில் இருந்த புலி, மான் போல் அப்பாவித்தனமாக காட்சி தரும் ராமானுஜர் மீது பாயத் தயாரானது. சீடர்களை அழைத்தார். ராமானுஜனை கொல்ல இதை விட சரியான இடம் ஏதுமில்லை. சாட்சியம் எதுவும் இல்லாமல் அவனை அழித்து விடலாம், என போதித்தார். இந்தப் பூவுலகில் கொலைக்கு சாட்சியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கும் பரந்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் கண்களை விட்டு எதையும் மறைக்க இயலுமா? ராமானுஜரின் சகோதரர் கோவிந்தனின் காதில் இந்தப் பேச்சு விழுந்து விட்டது. ஆஹா...சகோதரனைக் கொல்ல சதியல்லவா நடக்கிறது? அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார். அவர் ஒரு குளத்தில் கை, கால் கழுவிக் கொண்டிருந்தார். அவரை ஆரத்தழுவிக் கொண்டார். அண்ணா! அந்த நாராயணனின் அருளால் இன்று நீங்கள் உயிர் பிழைத்தாய். உடனே இங்கிருந்து ஊருக்குத் திரும்பி விடுங்கள். நீ காசிக்கு வர வேண்டாம், என்றார் அவரது காதில் ரகசியமாக. ராமானுஜருக்கு ஏதும் புரியவில்லை. கோவிந்தா! இன்று உனக்கு என்னாயிற்று? தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் ஏதோ சொல்கிறாயே. புரியும்படி சொல்,. கோவிந்தன் நடந்த சேதிகளை ஒன்றுவிடாமல் விளக்கமாகச் சொன்னார். ராமானுஜர் அதிர்ந்து விட்டார். சிறியவர்கள் பெரியவர்களின் கருத்தை மறுத்தால், புத்திமதி சொல்லி திருத்த வேண்டும். அல்லது வாதத்தால் வெல்ல வேண்டும். இரண்டும் இல்லாமல், உயிருக்கே உலை வைக்க துணிந்து விட்டாரென்றால்.... அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கோவிந்தனிடம் விடை பெற்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார் ராமானுஜர். நீண்ட நேரமாக ராமானுஜரைக் காணாததால், கோவிந்தன் அழுவது போல நடித்தார். அண்ணா! நீங்கள் எங்கே போய் விட்டீர்கள். இந்த அடர்ந்த காட்டில் எங்களை விட்டு பிரிந்து விளையாட்டுத்தனமாக எங்காவது போகலாமா? நான் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்? குருவே! வாருங்கள். அண்ணாவைத் தேடுவோம், என்றார் கண்களைக் கசக்கிக் கொண்டே. யாதவப்பிரகாசருக்கு மகிழ்ச்சி. ஒழிந்தான் அந்தப் பொடியன். நமக்கு இறைவன் எந்த வேலையும் வைக்கவில்லை. இந்தக் காட்டுக்குள் அதிகப்பிரசங்கித்தனமாக போயிருப்பான். காட்டு விலங்குகள் அவனை தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டிருக்கும், என்று தனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். மற்ற மாணவர்களும் இக்கருத்தை ஆமோதித்தனர். இருந்தாலும், கோவிந்தனிடம் நல்லவர்கள் போல் அவர்கள் நடித்தனர். கவலைப்படாதே கோவிந்தா! ராமானுஜன் வந்து விடுவான். அவன் ஒன்றும் குழந்தையல்ல, பதினெட்டு வயது வாலிபன். நாம் காத்திருப்போம். அவன் எவ்வளவு புத்திசாலி தெரியுமா? ஆசிரியரையே மடக்கும் அந்த புத்திசாலிக்கு, இந்த ஆரண்யமா ஒரு பெரிய விஷயம். வந்து விடுவான்...வந்து விடுவான், என்று ஆறுதல் சொன்னார்கள். மாலை வரை காத்திருந்தும் அவர் வராமல் போகவே, யாதவதீர்த்தர் அனைவரிடமும், சரி...இனி அவனுக்காக காத்திருந்து பயனில்லை. அவன் எப்படியும் நம்மைத் தேடிப்பிடித்து வந்து விடுவான். எல்லாரோடும் சேர்ந்து வராமல், என் அனுமதி பெறாமல் காட்டுக்குள் சென்றது அவனது தவறு தானே தவிர நம்முடையதல்ல, என்றவர் யாத்திரையை தொடர உத்தரவிட்டார். கோவிந்தனும் அவர்களுடன் வேறு வழியின்றி புறப்படுவது போல அழுவதுபோல் பாவனை செய்து கொண்டே சென்றார். மற்றவர்கள் அவரை சமாதானம் செய்வது போல் நடித்துக் கொண்டே சென்றனர். இவர்களிடமிருந்து தப்பிய ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்ட போது மாலை வேளையாகி விட்டது. சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் அஸ்தமிக்கும் நிலை. சற்று கூட திரும்பிப்பார்க்காமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்தார். கும்மிருட்டாகி விட்டது. பசி வாட்டியது. கால்கள் தள்ளாடி விட்டன. மயக்கம் வருவது போல் இருந்தது. ஒரு மரத்தடியில் அப்படியே சாய்ந்தார். தூங்கி விட்டார். மறுநாள் மதியத்திற்கு பிறகு தான் எழவே முடிந்தது. அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார். அப்போது கடா மீசையுடன் ஒரு உருவம் அவர் அருகே வந்தது.
ராமானுஜருக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம். ஏனெனில், எதிரே நின்றவரின் தோற்றம் அப்படி. ஆனால், அவரோடு ஒரு பெண்ணும் நின்றாள். வேடர்குல பெண்மணி. கண்ட நகைகளையும் உடலில் வாரி இறைத்திருந்தாள். ஆனால், முகத்தில் மட்டும் லட்சுமி களை. லட்சணமாக இருந்தாள். குரல் மட்டும் என்னவோ போல் இருந்தது. குழந்தே! இந்த காட்டுக்குள்ளே எப்படி வந்தே? இங்கே திருட்டு பயம் அதிகமாச்சே! நீ யாரு? எங்கே போய்கிட்டு இருக்கே, உன்னைப் பார்த்தா பிராமணர் போல் தெரியுதே, என்றாள் அப்பெண்மணி. மீசைக்காரரும் அவரிடம் இதையே திருப்பிக்கேட்டார். வரை ஆசுவாசமாக தடவிக் கொடுத்தார். ராமானுஜர் வேறெதுவும் சொல்லவில்லை. ஆனால், தான் காஞ்சிபுரம் போவதை மட்டும் கூறினார்.நல்லது...நல்லது...நாங்க இந்த விந்தியமலை அடிவாரத்தில் தான் வசிப்பவங்க தான். வயசும் ஆயிடுச்சு. எம்பெருமான் திருவடியை நல்லபடியா அடைய காஞ்சிபுரம் வழியாத்தான் ராமேஸ்வரம் யாத்திரை போறோம். எங்களோட வந்தா உன்னை காஞ்சிபுரத்திலே விட்டுட்டு கிளம்புறோம், என்றார் வேடன். ராமானுஜருக்கு மகிழ்ச்சி. நம்மை பாதுகாப்பாக காஞ்சியில் விட்டுச் செல்ல எம்பெருமானே இவர்களை அனுப்பியிருக்கிறார் போலும் என எண்ணியவராய் அவர்களுடன் புறப்பட்டார். இதற்குள் மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. தம்பி! கொஞ்சம் வேகமா நடந்தா இருட்டுறதுக்குள் பக்கத்தில் இருக்கிற ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்திடலாம். அங்கேயிருந்து காலையிலே புறப்படுவோம், என்றார் கடாமீசைக்காரர்.
அவர்கள் கிளம்பினர். ஆற்றங்கரையும் வந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து வேடன் தீ மூட்டினார். நடந்த களைப்பில் அப்பெண்ணுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. இருளில் ஆற்றில் இறங்குவது அபாயம். எனக்கு தண்ணீர் வேண்டுமே, என்றாள். அவர், பேசாம படு. இந்த பக்கத்துலே ஒரு கிணறு இருக்கு. காலையில் அங்கே போய் தண்ணீர் குடிச்சுக்கலாம், என்றார். எப்படியோ அவர்கள் உறங்கி விட்டனர். மறுநாள் வேடன் குறிப்பிட்ட கிணற்றின் பக்கமாகச் சென்றார் ராமானுஜர். படிக்கட்டின் வழியாக உள்ளே இறங்கினார். கை, கால்களை அலம்பி விட்டு, ஒரு குடுவையில் தண்ணீர் மொண்டு வந்தார். வேடன் மனைவிக்கு கொடுத்தார். அவளுக்கு தாகம் அடங்கவில்லை. திரும்பவும் கொண்டு வந்து கொடுத்தார். இப்போதும் தாகம் அடங்கியபாடில்லை. மீண்டும் கொண்டு வந்து கொடுத்தார். தம்பி! இன்னும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாயேன், என்றாள். ராமானுஜர் மீண்டும் தண்ணீர் எடுத்து வந்தார். வேடனையும், அவர் மனைவியையும் எங்கே? அவர்களைக் காணவில்லை. சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார். பக்கத்தில் அவர்கள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இடமே வித்தியாசமாக தெரிந்தது. தெருக்கள், மாடமாளிகைகள் தெரிந்தன. ஒரு பெரியவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம், ஐயா! இது எந்த ஊர்? என்றார் ராமானுஜர். ஓய்! சரியான ஆளைய்யா நீர். உம்முடைய ஊரையே யாருடைய ஊர் என்று கேட்கிறீர். உம்மை யாதவப்பிரகாசரின் மாணவர் என்று இந்த ஊரே சொல்லும். சரியான ஆள் தான். காஞ்சிபுரத்திற்குள் நின்றுகொண்டு காஞ்சிபுரம் அடையாளம் தெரியாமல் பேசுகிறீர். இது சாலக்கிணறு என்பதை நீர் அறியமாட்டீரோ?, என்றவாறு, ராமானுஜரின் விளக்கத்திற்கு காத்துக் கொண்டிராமல் அவர் போய்க் கொண்டே இருந்தார்.
ராமானுஜருக்கு ஆச்சரியம். ஆ... நேற்று விந்தியமலைச் சாரலில். இன்று காஞ்சி நகரில். இது எப்படி சாத்தியம்? அப்படியானால், என்னோடு வந்த அந்த தம்பதியர் ஸ்ரீமன் நாராயணனும், தாயார் லட்சுமிதேவியுமா? அவர்களால் மட்டும் தானே இது சாத்தியமாகும்? அந்த நபர் சொன்னது உண்மை தானா? அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், தூரத்தில் காஞ்சிபுரத்து பெண்கள் சிலர் குடத்துடன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வந்தனர். ராமானுஜர் அப்படியே பரவசித்துவிட்டார். ஸ்ரீமன் நாராயணனை துதித்தார். லோகநாயகா! உலக மக்களுக்கு இது போன்ற சோதனைகள் வந்து கொண்டே இருக்கட்டும். அப்படியானால் தான் உன் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். பிறவியென்ற தொல்லை நீங்கும், என்று மனதாரச் சொன்னார். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏ இறைவா! எனக்கு பணத்தை தா, சுகத்தை தா, வீடு வாசலைத்தா, அழகான மனைவியைத் தா, அந்த ஆணழகனை என் கணவனாக்கு, என்றெல்லாம் வேண்டினால், இறைவன் வரவும் மாட்டான். நாம் கேட்டதை தரவும் மாட்டான். ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவே பூலோகம் வந்துள்ளோம். அவன் தரும் துன்பத்தை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டால் இறைக்காட்சி நிச்சயம் கிடைக்கும். அப்படியே நடந்து வீட்டுக்கு வந்து விட்டார் ராமானுஜர்.
ராமானுஜர் தாயிடம் பொறுமையாக எல்லாவற்றையும் சொன்னார். அதைக்கேட்டு தாய் பதறிப் போனார். ராமானுஜா! என் செல்லமே! இத்தகைய சூழ்நிலையிலும் எம்பெருமான் பரந்தாமன் கைவிடவில்லையப்பா. அவனுடைய பேரருளால் நீ திரும்பி வந்தது கண்டு மகிழ்கிறேன், என்றவள் அவரை உச்சி முகந்தார். ராமானுஜர் சற்றே வெளியே போய் வருவதாகச் சொல்லி விட்டு கிளம்பினார். மகன் நீண்ட நாள் கழித்து வந்ததால், அன்று சிறப்பாக ஏதேனும் சமைக்க வேண்டும் என விரும்பினார் காந்திமதி அம்மையார். ராமானுஜரின் மனைவி ரக்ஷகாம்பாளும் பிறந்த வீட்டுக்கு போய் இருந்தார். வேலைக்காரிக்கும் விடுப்பு கொடுத்து விட்டார். இவர் பெருமாள் கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும் நைவேத்ய பழம், கிழங்கு என்று நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார். மகன் காசி சென்றதிலிருந்து வீட்டிற்கு விறகு கூட வாங்கவில்லை. வேலைக்காரியை அழைத்து வர ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். இந்நேரத்தில் அவரது மருமகள் ரக்ஷகாம்பாளும், தங்கை தீப்திமதியும் வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் காந்திமதி அம்மையார். தீப்தி! என்னடி ஆச்சரியமா இருக்கு! ராமானுஜன் இப்போ தான் வந்தான். நீயும் வரே, மருமகளும் வரா, ரொம்ப சந்தோஷமா இருக்குடி, என்றவரை அவர்கள் ஆச்சரியமாய் பார்த்தனர். அக்கா! நீ என்ன சொல்றே! காசிக்கு போன ராமானுஜனும், கோவிந்தனும் ஊருக்கு திரும்ப குறைஞ்சது ஆறுமாசமாவது ஆகுமே! அதற்குள் எப்படி அவன் வந்தான்? கோவிந்தனும் வந்துட்டானா? என்றார் பதைபதைப்புடனும் ஆச்சரியத்துடனும்.
ரக்ஷாகாம்பாளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, கணவர் ஊர் திரும்பிய செய்திகேட்டு. நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் காந்திமதி அம்மையார் சொல்ல, அவர்கள் வெலவெலத்து போனார்கள். அக்கா! நமக்கு பெருமாள் தான் துணை. குழந்தை இந்த அளவோட தப்பிச்சானே! அந்த பெருமாளும், லட்சுமிதாயாரும் தான் அவனை வேடர் உருவம் தாங்கி, நம்மகிட்டே சேத்துட்டாங்க, என சந்தோஷப்பட்டார். ரக்ஷாகாம்பாள் தன் மாங்கல்ய பலம் குறித்து பெருமைப்பட்டார். இதற்குள் வெளியே சென்ற ராமானுஜர் வீடு திரும்ப, ரக்ஷகாம்பாள் ஓடோடிச் சென்று தன் கணவரின் பாதத்தில் வீழ்ந்து ஆசி பெற்றார். பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்த அவரை கண்ணீர் மல்கவும், அதே நேரம் பெண்மைக்கே உரிய நாணத்துடனும் நோக்கினார். ராமானுஜர் அவரைத் தேற்றினார். சித்தியிடம் ஆசிர்வாதம் பெற்றார். ஒரு வழியாக வேலைக்காரி வந்து சேர பரந்தாமனுக்கு விசேஷ பூஜை நடத்த ஏற்பாடாயிற்று. அவருக்கு நைவேத்யம் செய்ய நெய் பட்சணங்கள் தயாராயின. வீடே களை கட்டியது. பூஜை முடிந்தது. அப்போது வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. ராமானுஜர் வாசலை எட்டிப் பார்த்தார். அங்கே திருக்கச்சி நம்பி நின்று கொண்டிருந்தார். அவரை அன்புடன் வரவேற்றார் ராமானுஜர். தங்களைப் போன்ற மகாத்மா இந்நேரத்தில் என் வீட்டிற்கு எழுந்தருளியது நான் பெற்ற பேறு, என நெக்குருகி கூறினார். திருக்கச்சி நம்பிகள் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். குறைந்த கல்வியறிவே உடையவராயினும் கூட, ஜாதி வேற்றுமை பாராமல், அவரது பரம பக்திக்கு உரிய மரியாதை அளித்தார் ராமானுஜர். அவரது இல்லத்திலேயே சாப்பிடும்படி திருக்கச்சி நம்பியை வேண்ட, அனைவருமாய் அமர்ந்து உணவருந்தினர்.
இங்கே இப்படியிருக்க, யாதவப் பிரகாசரும், மாணவர்களும் காசியை அடைந்தனர். கோவிந்தர் எதுவுமே தெரியாதவர் போல் அவர்களிடம் நடந்து கொண்டார். ராமானுஜருக்காக வருத்தப்படுவதை மட்டும் சற்றும் குறைக்கவில்லை. எல்லாரும் கங்கையில் நீராடச் சென்றனர். கோவிந்தர் நீராடிக் கொண்டிருந்த போது, அவரது கை தண்ணீருக்குள் இருந்த ஒரு பாறையில் பட்டது போல் இருந்தது. அவர் அவ்விடத்தில் துழாவிப் பார்த்தார். அழகிய லிங்கம் ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதன் அழகு அவரைக் கவர்ந்தது. உமை மணாளா, என தன் மார்போடு அணைத்துக் கொண்டார். தனக்கு லிங்கம் கிடைத்த விபரத்தை யாதவப்பிரகாசரிடமும், சக மாணவர்களிடமும் சொன்னார். யாதவப்பிரகாசர் அவரிடம், மகனே! உன் மிதமிஞ்சிய இறை பக்தியால் இது கிடைத்துள்ளது. இதை நீ தொடர்ந்து பூஜித்து வா, என்றார். குருவின் உத்தரவுபடி, கோவிந்தர் அதை பூஜிக்கலானார். காசி யாத்திரை முடிந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். லிங்கத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு கோவிந்தர் வந்தார். காஞ்சிப் பயணத்தின் நடுவே அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தனர். அத்தலம் தான் காளஹஸ்தி. அவ்விடத்தை பார்த்தவுடனேயே, கோவிந்தர் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. குடும்பப்பற்று, உலகப்பற்று எல்லாம் அறுந்தது. அவர் யாதவப்பிரகாசரிடம் ஓடினார். குருவே! இவ்விடத்தை விட்டு நகர என் மனம் ஏனோ மறுக்கிறது. நான் காஞ்சிபுரத்துக்கு வரவில்லை. இங்கேயே நான் தங்கப் போகிறேன். பாணலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இங்கேயே என் காலத்தைக் கழிக்கப் போகிறேன். நீங்கள் என் அன்னையிடமும், பெரியம்மாவிடமும் இந்த தகவலைச் சொல்லி விடுங்கள், என்றார்.மாணவனின் உறுதியான பக்தி, அவரை மிகவும் கவர்ந்தது. அவரது கோரிக்கையை ஏற்றார். கோவிந்தரை அங்கேயே விட்டுவிட்டு மாணவர் படை காஞ்சிபுரம் வந்தடைந்தது. யாதவப்பிரகாசர் தீப்திமதியிடம் நடந்ததைச் சொன்னார். மகன் சிவ வழிபாட்டில் இறங்கியது குறித்து தீப்திமதி மகிழ்ச்சியே அடைந்தார். இருப்பினும், பெற்ற பாசத்தால் மகனை ஒருமுறை சென்று பார்த்து வர முடிவெடுத்தார். அக்காவிடம் சொல்லிவிட்டு காளஹஸ்தி புறப்பட்டார். தாயைக் கண்டு மகனுக்கு பெரும் மகிழ்ச்சி. சில நாட்கள் அங்கு தங்கி விட்டு, ஊர் திரும்பினார் தீப்திமதி. ராமானுஜன் தொலைந்தான், இனி எவ்வித தொல்லையும் இல்லாமல் பாடம் எடுக்கலாம் என யாதவப்பிரகாசர் மகிழ்வுடன் பாடங்களை ஆரம்பித்தார். அப்போது வாசலில், ஐயா, நான் உள்ளே வரலாமா? என கேட்டு வாசலில் ஒரு வாலிபன் நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.
அங்கே ராமானுஜர் நின்றிருந்தார். முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவரை உற்று நோக்கினார். அவரை அழைத்துக் கொண்டு நல்லவர் போல் அவரது தாயிடமே சென்றார். அம்மா! ராமானுஜனை விந்திய மலைக்காட்டில் விட்டு வந்து விட்டேனே என நான் வருந்தாத நாள் கிடையாது. பொறுப்பில்லாமல் நடந்து விட்டேனோ என கவலைப்பட்டேன். இப்போது அவன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது, என குழைந்தார். தாயும், மகனும் அவர் சொல்வதை நம்புவது போல் நடித்துக் கொண்டார்கள். ராமானுஜா! நீ இனி நம் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம், என அவர் கூறவும், தன்னைக் கொல்லத் துணிந்தவர் என்றும் பாராமல், இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளின் அடிப்படையில் ராமானுஜர் அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். ராமானுஜரின் இச்செய்கையால், அந்த ஆசிரியர் கூனிக் குறுகிப் போனார். ராமானுஜரும் அதே பள்ளிக்கு படிக்கச் சென்றார். இந்நிலையில் தான் வைணவத்தலைவர் ஆளவந்தார் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். அவர் நூறுவயதை தாண்டிய பெரியவர். வரதராஜப் பெருமாளை சேவிக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு, வெளியே வந்தபோது, ஒரு இளைஞனின் தோள்பட்டையில் கையூன்றி, யாதவப்பிரகாசர் எதிரே வருவதைக் கண்டார்.
அந்த இளைஞர் ஒளிபொருந்தியவனாகக் காணப்பட்டார். அவரது தேஜஸ் கண்டு வியப்படைந்த அவர், ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்துக்கு அருமையான விளக்கமளித்தவர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டார்.
அத்வைதவாதியான யாதவப்பிரகாசரிடம் இவ்விளைஞனை சிக்க வைத்து விட்டாயே, என அவர் பெருமாளிடம் சொன்னார். இருப்பினும், ராமானுஜருடன் அவர் பேசவில்லை. பெருமாள் சித்தப்படி நடக்கட்டும் என அவர் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் போய்விட்டார். இந்நிலையில் காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல. மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார். ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு, என எச்சரித்தார்.அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர் பேயை விரட்ட பல மந்திரங்களைச் சொன்னார். எதற்கும் கட்டுப்படாத அந்தப் பேய் யாதவப்பிரகாசரிடம், நீர் என்னை விரட்ட முயன்றால் அது நடக்காது. உம் மந்திரத்தை விட நான் சக்திவாய்ந்தவன், என சவால் விடுத்தது. யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். அப்படி வாரும் வழிக்கு,என்ற அந்தப் பேய், பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவியே வசிக்கிறாள். அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான் போய்விடுவேன், என்றது. உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார்.
ராமானுஜரைக் கண்டு அகமகிழ்ந்த அந்த ராட்சஷன், ஐயனே! நான் இப்போதே விலகுகிறேன். ஆனால், தங்கள் திருவடியை என் மீது வைத்தருள வேண்டும்,என்றது. ராமானுஜர் அதன் ஆசையை நிறைவேற்றினார். ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன், என்றான் ராட்சஷன். நீ விலகியதற்கு என்ன சாட்சி? எனக் கேட்டார் ராமானுஜர். ஐயா! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்ந்து அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன், என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது. அவள் பழையநிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என மலங்க மலங்க விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடனும், மற்றவர்களை நாணத்துடனும் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜருக்கு புகழ் பெருகியது. ராமானுஜரின் பெருமையை உணர்ந்தாலும் கூட, யாதவப்பிரகாசருக்கும், அவருக்கும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. ஒருமுறை வகுப்பறையில், வேதத்தில் வரும் மந்திரம் பற்றி இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. தன் கருத்தை மறுத்துப் பேசிய ராமானுஜரை, இனி தனது பள்ளிக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என யாதவப்பிரகாசர் அனுப்பி விட்டார்.
அப்போதும் குருவின் மீது கோபம் கொள்ளாத அவர், தங்கள் சித்தம் அதுவானால் அதன்படியே நடக்கிறேன், என்ற ராமானுஜர், அதன்பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. இதன்பின் தனது குருவாக யாரை ஏற்பது என அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பரமதயாளனான வரதராஜப் பெருமாள் அந்தப் பெரியவரை அனுப்பி வைத்தார்.
அவர் வேறு யாருமல்ல. திருக்கச்சி நம்பி தான். அவரைக் கண்டதும், ராமானுஜரின் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரதராஜா! குருவின்றி தவித்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல குருவைக் காட்டி விட்டாய். இவரையே என் குருவாய் ஏற்பேன், என மனதிற்குள் சொல்லியபடியே, அவரை பணிவோடு வரவேற்றார். அவரை அமரச்சொன்னார். இவர் மரியாதை நிமித்தமாக நின்று கொண்டார். ஐயா! தாங்கள் என் வீடு தேடி வந்தது நான் செய்த பெரும்பாக்கியம். நான் அறிவில் மிகவும் குறைந்தவன். குழந்தையின் செயல்பாடுகளை ஒத்தே எனது செயல்களும் அமைந்திருக்கிறது, என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்தார் ராமானுஜர். ராமானுஜரே! நீயா இப்படி சொல்வது? நீ பிராமணன். கல்வியில் உன்னை விட வல்லவர் யார் இருக்க முடியும்? குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஆனதும், மன்னன் மகளிடம் ஒட்டியிருந்த தீய சக்தியை ஓட்டி, இம்மண்டலமெங்கும் உன் புகழ் விரிந்து கிடப்பதையும் தெரியாதவர் யார் இருக்கிறார்கள்? என்ன காரணத்தால் உன்னை நீயே குறைத்துப் பேச வேண்டும்? என்றார் திருக்கச்சி நம்பி. சுவாமி! தாங்கள் அப்படி சொல்லாதீர்கள். யாதவப்பிரகாச பண்டிதர் என்னை வகுப்பிலிருந்து நிறுத்தி விட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். குருவின்றி தனி மரமாய் நிற்கும் எனக்கு ஒரு குரு வேண்டும். அது தாங்களாக இருக்க வேண்டும் என்பது என் அவா, என்றார் ராமானுஜர். ராமானுஜா! என்ன பேச்சு இது. நான் ஜாதியில் வேளாளன். படிப்பு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அரிச்சுவடியே அறியாத ஒருவன் எப்படி மற்றொருவனுக்கு குருவாக முடியும்? வயதில் பெரியவன் என்ற தகுதியைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது? உன்னிடமிருக்கும் அறிவுக்கு நீயே பலருக்கு குருவாக இருக்கலாம். சாஸ்திர அறிவு எனக்கு இல்லவே இல்லை. பேரருள் புரியும் வரதராஜப்பெருமாளுக்கு தொண்டு செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன் நான்.
எம்பெருமான் கோடை காலத்தில் வெப்பத்தால் சிரமப்படுவார். அதற்காக வெட்டிவேர் பறித்து ஆலவட்டம் செய்து அவருக்கு விசிறுவேன். அன்று மலர்ந்த பூக்களை யாராவது வைத்திருந்தால், அதை பிச்சை எடுத்தோ, பணம் கொடுத்து பெற்றோ அவருக்கு அணிவிப்பேன். கனிவகைகளை வாங்கி அவருக்கு படைப்பேன். இதைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி நான். என்னைப் போய் உனக்கு குருவாக இருக்கச் சொல்கிறாயே. வேண்டுமானால் கல்வியில் உயர்ந்த உன்னிடம் நான் வேண்டுமானால் சிஷ்யனாக இருந்து கொள்கிறேன், என்றார் நம்பி உருக்கத்துடன். ராமானுஜர் அவ்வுரை கேட்டு நெகிழ்ந்தார். சுவாமி! இத்தகைய தகுதி போதாதா தங்களுக்கு. இறைவனிடம் யார் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறாரோ, அவரே குருவாக இருக்க தகுதி படைத்தவர். அவ்வகையில் நீங்கள் என்னை சீடனாக ஏற்கத்தான் வேண்டும், என சற்று அடம்பிடிப்பது போலவே பேசினார் ராமானுஜர். யோசித்த திருக்கச்சிநம்பியின் கால்களில் தடாலென விழுந்தார் ராமானுஜர். அவரது கண்களில் இருந்து ஆறாய் நீர் பெருகி ஓடியது. திருக்கச்சிநம்பி அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். ராமானுஜா! இறைவன் சித்தம் அதுவானால் அதைத் தடுக்க வல்லவர் யார்? இன்றுமுதல் நீ நம் ஊர் எல்லையிலுள்ள சாலக்கிணறுக்கு போ. அங்கிருந்து சுவாமியின் திருவாராதனத்துக்கு அபிஷேக நீர் கொண்டு வா. மற்றதை பின்னால் பார்ப்போம், என்றார். ராமானுஜரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். இங்கே நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீரங்கம் சென்றடைந்த வைணவ மகாதலைவர் ஆளவந்தாருக்கு நோய் ஏற்பட்டது. அவரைச் சுற்றி சீடர்கள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். நோய் முற்றிப்போய் இருந்தாலும், நாராயணனின் நாமம் மட்டும் அவரது வாயிலிருந்து அகலவில்லை.
ஆளவந்தாரின் சீடர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும். பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோரெல்லாம் அவரது சீடர்கள் தான். அவர்கள் ஆளவந்தார் தன் உடலை விட்டு நீங்கப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆளவந்தாரைப் போலவே நூறுக்கு மேற்பட்ட வயதுடைய திருவரங்கப்பெருமாளரையரை அங்கே அழைத்து வந்தனர். அவரைக் கொண்டு ஆளவந்தாரிடம் சில கேள்விகள் கேட்டனர். அரையர் தன் கேள்விகளை ஆரம்பித்தார். சுவாமி! நாராயணப் பெருமானை நாம் கண்ணால் காண முடியாது. அப்படியிருக்க, அவனுக்கு எப்படி ஒருவன் தொண்டு செய்வது? என்றார். ஆளவந்தார் புன்னகை பூத்தார். அரையரே! இது மிகவும் எளிது. பெருமாளின் அடியவர்களுக்கு செய்யும் தொண்டு, பெருமாளுக்கு செய்யும் தொண்டாகும். இதில் ஜாதி, பேதமெல்லாம் பார்க்கக்கூடாது. திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும் பெருமாளின் தீவிர தொண்டர். அந்த அடியவருக்கு நீங்கள் சேவை செய்யலாம். காஞ்சியில் திருக்கச்சி நம்பி வேளாளர் குலத்தவராயினும், பெருமாளே அவர் மூலம் தான் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். அவர்களைப் போன்ற தொண்டருக்கு தொண்டராய் இருப்பதே இறைவனுக்கு செய்யும் பணியாகும். என்னைப் பொறுத்தவரை திருப்பாணாழ்வாரே என்னை இந்த உலக வாழ்விலிருந்து மீட்டுச் செல்பவராக இருப்பார், என்றார். அப்படியானால், தாங்கள் இவ்வுலக வாழ்வை விரைவில் நீத்து விட முடிவு செய்து விட்டீர்களா? என உருக்கத்துடன் கேட்டார் அரையர். ஐயா! தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்த அற்பக் காரணத்துக்காக வருந்தக்கூடாது, என்றார் ஆளவந்தார். ஆளவந்தார் உடலை நீக்கப்போகிறார் என்பதை அறிந்து பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் துடித்துப் போனார்கள். அவர் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, ஆளவந்தாரின் உயிர் பிரிந்த அடுத்த கணமே தாங்களும் இறந்துவிடுவது என முடிவு செய்தார்கள். தற்கொலை செய்தாவது இறந்து விட வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.
பெரியநம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும் மட்டுமல்ல, இன்னும் சில சீடர்களும் ஆளவந்தாரின் மறைவுக்கு பிறகு தற்கொலை செய்து விடுவதென முடிவெடுத்திருந்தனர். சில சீடர்கள் அவரிடம், தாங்கள் மறைந்த பிறகு எங்களை வழிநடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு உபதேசம் செய்பவர் யார்? கலங்கரைவிளக்கை காணாத கப்பல் போல இவ்வுலகக் கடலில் நாங்கள் தத்தளிக்க இயலாதே, என புலம்பினர். ஆளவந்தார் அவர்களுக்கு அறிவுரை கூறினார். சீடர்களே! யாரும் மனம் உடையக்கூடாது. நம் ரங்கநாதன் எல்லாரையும் காப்பாற்றுவான். அவனுக்கு நீங்கள் தினமும் தொண்டு செய்யுங்கள். திருப்பதிக்கும், காஞ்சிபுரத்துக்கும் அவ்வப்போது சென்று வாருங்கள். ஸ்ரீரங்கம் அவனது சொந்தவீடு என்றால், திருப்பதி அவனது மலர்ப்பாதங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சிறந்த ஸ்லோகத்திற்கு ஈடானது. காஞ்சிபுரம் நமக்கு விடுதலையளிக்கும் மந்திரமாகும், என்றார். திருவரங்க பெருமாளரையர் வருத்தத்துடன் அவர் அருகில் சென்றார். சுவாமி! தங்கள் திருமேனியை அடக்கம் செய்ய வேண்டுமா, தகனம் செய்ய வேண்டுமா? என்றார். இதற்கு ஆளவந்தார் எந்தப்பதிலும் சொல்லவில்லை. மறுநாள் ரங்கநாதர் திருவீதி உலா வந்தார். ஆளவந்தாரின் சீடர்கள் ரங்கநாதனை தரிசிக்க சென்று விட்டனர். அப்போது ஒரு சீடருக்கு தெய்வ அருள் வந்தது. பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் எக்காரணம் கொண்டும் ஆளவந்தாருக்கு பின் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது, என அருள்வாக்கு தந்தார் அவர். இவ்விஷயம் ஆளவந்தாரின் காதுகளை எட்டியது. அவர் தன் சீடர்களிடம், தற்கொலை கொடிய பாவமல்லவா? இது இறைவனுக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் திருவீதி உலா வரும் போது, சீடன் மூலமாக பேசியிருக்கிறான். உங்கள் யார் வாயிலும் இனி தற்கொலை என்ற சொல்லே வரக்கூடாது. உங்கள் அகங்காரம் ஒழிய வேண்டும். பரமனின் அடியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். எம்பெருமான் ரங்கநாதனின் திருவடிகளில் மலர் சூட்டவேண்டும், என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.
சிலகாலம் இப்படியே நீடித்தது. உடல்நிலை சற்றே தேறிய நிலையில் ஒருநாள் இறைவனின் திருவீதி உலாவையும் ஆளவந்தார் பார்த்தார். தன் சீடர்களை எல்லாம் திருவரங்கப் பெருமாள் அரையரை கவனித்துக் கொள்ளும்படிச் செய்தார். இவர் சுகமில்லாமல் இருக்கும் செய்தி காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு அந்தணர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆளவந்தாரைப் பார்க்க வந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து இருவர் வந்திருக்கிறார்கள் எனத்தெரிந்தவுடனேயே ஆளவந்தார் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். ராமானுஜரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவர் முகத்தையே பிரகாசமாக்கியது. அவர்களை வரவேற்ற அவர், ராமானுஜர் பற்றி விசாரித்தார். ராமானுஜர் யாதவப்பிரகாசரின் பள்ளியிலிருந்து விலகியதும், பின்னர் திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்க கேட்டதும், சாலக்கிணற்றில் இருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருவதும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார். தன் சீடர் பெரியநம்பியை அழைத்தார். நம்பி! நீ உடனே காஞ்சிபுரம் போ. ராமானுஜனை அழைத்துக் கொண்டு விரைவில் வா,என்றார். குருவின் கட்டளைக்கு தலைவணங்கி பெரியநம்பி காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். ஆனால், என்ன செய்வது? அவர் திரும்புவதற்குள் ஆளவந்தாரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இம்முறை பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனாலும், மனம் கலங்காத அவர், ரங்கநாதனை தரிசிக்க தினமும் கோயிலுக்கு சென்றார். ஒருநாள் கோயிலுக்கு சென்று திரும்பியதும் சீடர்களை அழைத்தார். அன்புச் சீடர்களே! நான் இதுநாள் வரையில் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும், என்றார். சீடர்கள் உருகிப் போனார்கள். தெய்வம் தவறு செய்யுமென்றால், தாங்களும் செய்திருப்பீர்கள், என்றபடியே கண்ணீர் உகுத்தனர்.
திருவரங்கப்பெருமாள் அரையர் அழைக்கப்பட்டார். எல்லாரும் ரங்கநாதனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் குருவிடம் பக்தி கொள்ளுங்கள். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தொண்டு செய்யுங்கள், என்றார். பின்பு பத்மாசனத்தில் அமர்ந்தார். தன் மனத்தை அடக்கி பரமனிடம் நினைவைக் கொண்டு சென்றார். அவரது கபாலம் வழியே உயிரை செல்லவிட்டார். அவரைச் சுற்றிநின்று பாடிக் கொண்டிருந்த சீடர்கள் பாட்டை நிறுத்தினர். திருக்கோஷ்டியூர் நம்பியும், இன்னும் சில சீடர்களும் தங்கள் உயிருக்குயிரான குரு பரமனடி சேர்ந்தது கண்டு, மயங்கி விழுந்து விட்டனர். சிலர் ஆளவந்தார் துறவறத்துக்கு வரும் முன்பு அவரது மகனாக இருந்த பிள்ளைக்கரசு நம்பியை தேடிச் சென்றனர். அவரைக் கொண்டு அந்திமக்கிரியைகள் செய்ய முடிவெடுத்தனர். கொள்ளிடக்கரையில் அவரது அந்திமக்கிரியை நடந்தது. இதற்கிடையே, பெரியநம்பி காஞ்சிபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நான்கு நாட்கள் நடந்து காஞ்சிபுரத்தை அடைந்த நம்பி, முதலில் வரதராஜப் பெருமாளைத் தரிசித்தார். பின்னர் திருக்கச்சிநம்பியை தேடிச் சென்று அவரைப் பணிந்தார். அவரது ஆஸ்ரமத்தில் இரவில் தங்கினார். மறுநாள் காலையில், ராமானுஜரைப் பார்க்க புறப்பட்டார். திருக்கச்சிநம்பி கோயிலுக்கு போய் விட்டார். சாலக்கிணற்றில் இருந்து ராமானுஜர் பெருமானின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். அவர் தூரத்தில் வருவதைப் பார்த்த பெரியநம்பி, அயர்ந்து நின்று விட்டார். அவரைக் குறித்து சில சுலோகங்களைப் பாடினார். இதற்குள் அருகில் வந்து விட்ட ராமானுஜர், அந்த ஸ்லோகங்களைக் கவனித்துக் கேட்டார்.
பெரியநம்பிக்கு அந்த இளைஞரின் தேஜஸான முகத்தைப் பார்த்து உடலில் வித்தியாசமான உணர்வுகளெல்லாம் ஏற்பட்டது. ராமானுஜர் அந்தப் பெரியவரைக் கவனித்தார். யார் இவர்? என மனதில் கேள்வி. அருகில் வந்தார். தாங்கள் யார்? நான் பெரியநம்பி. ஆளவந்தார் என்னை அனுப்பி வைத்தார்,. ஆளவந்தாரால் அனுப்பப்பட்டவரா? ஆச்சரிய மிகுதியால் ராமானுஜர், அப்படியா? அந்த மகானுபாவருக்கு உடல்நலம் சரியில்லை என கேள்விப்பட்டேன். தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என பணிவோடு கேட்டார். நான் புறப்படும் போது உடல்நலம் பரவாயில்லை, என்ற நம்பியிடம், தாங்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? என்றார். ஐயனே! தங்களை அழைத்து வரும்படி ஆச்சாரியார் எனக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றவே யான் வந்தேன், என்றதும், ராமானுஜரின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. கை, கால்கள் விறைத்தன. என்ன சொல்கிறீர்கள்? அந்த மகாபிரபுவா என்னை சந்திக்க வேண்டுமென்றார்கள். நான் பிறவிப்பயனை அடைந்தேன். அவர்களே என்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றால்... இதற்கு மேல் ராமானுஜரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி விட்டன. ஐயனே! சற்று பொறுத்திருங்கள். நான் பேரருளாளனான வரதராஜனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தத்தை சமர்ப்பித்து விட்டு வந்து விடுகிறேன், என்றவர் அவசர அவசரமாய் ஓடினார். மிக விரைவில் திரும்பி வந்த அவர், புறப்படுங்கள். ஆளவந்தார் பெருமானைக் காணச் செல்லலாம், என்றார். நம்பிக்கு ஆச்சரியம். ராமானுஜரே! தாங்கள் வீட்டுக்கு கூட செல்லவில்லை. இங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று திரும்ப பத்துநாட்களாவது ஆகுமே. வீட்டில் தேட மாட்டார்களா! இல்லத்தை யார் கவனிப்பார்கள்? அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு வந்து விடுங்களேன், என்றார் நம்பி.
இதற்கிடையே ஒரு துயரச் சம்பவமும் ராமானுஜர் இல்லத்தில் நிகழ்ந்திருந்தது. ஆம்...ராமானுஜரின் அன்னை காந்திமதி அம்மையார் பரமபதம் சேர்ந்துவிட்டார். ராமானுஜர் இதற்காக வருத்தப்பட்டு மிகவும் சோர்ந்து போயிருந்தார். அன்னையின் பிரிவை எந்தக்குழந்தை தான் தாங்கும்? என்னதான் திருமணமாகி தாய்க்குப்பின் தாரமென அவளோடு வாழ்ந்தாலும், பெற்றவளின் பிரிவை மட்டும் ஒரு ஆண்மகனால் தாங்க முடிவதில்லை. தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஒரு ஆண்மகனை காலம் முழுவதும் துன்புறச் செய்கிறது. தஞ்சமாம்பாள் மட்டுமே வீட்டில் தனித்திருந்தார். எனினும், ராமானுஜர் அதை பொருட்படுத்தவில்லை. நம்பிகளே! மனிதனாய் பிறந்தவன் பரமனை பணிய வேண்டும், அவனது அடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். இதை முதலாவதாக முடித்து விட்டு, அடுத்ததாக இல்லறப் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். எனவே உடனே நாம் புறப்படுவோம், என்றார். அவர்கள் இருவரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழியில், ஆங்காங்கே பிøக்ஷ வாங்கி சாப்பிட்டனர். எங்காவது படுத்து உறங்கி விட்டு, நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள். காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரையில் ஸ்ரீரங்கநாதன் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கம் சென்றடைய நான்கு நாட்கள் பிடித்தது. அப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் செல்ல பாலம் ஏது? காவிரியை பரிசலில் கடந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து, திருமடத்துக்கு சென்றனர். திருமடத்தின் வாசலில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அனைவர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. பெரியநம்பிக்கு வயிற்றையே புரட்டியது. ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ? அப்படியானால் ஆளவந்தார்.... அவர் நினைத்தது சரிதான். ஆளவந்தார் ரங்கநாதனின் இருப்பிடத்தில் நிரந்தரமாய் துயில் கொள்ள சென்று விட்டார். சுவாமி! என்ன இது, இந்த பாவி வருவதற்கு கூட காத்திருக்காமல் போய் விட்டீர்களா? ஐயோ! இனி தங்களை என்று காண்பேன்? என பாதங்களில் விழுந்து கண்ணீரால் நீராட்டினார்.
ஆளவந்தாரை பார்க்க வேண்டுமென ஆவலுடன் ஓடிவந்த ராமானுஜரோ திக்பிரமை பிடித்தவர் போலானார். சுவாமி! இதைக்காணவா என்னை அவசர அவசரமாய் வரச் சொன்னீர்கள். ரங்கநாதா! இதென்ன கொடுமை. என் சுவாமியை என்னிடமிருந்து பிரித்து கொடுமை செய்த உன்னை சேவிக்காமலே ஊர் திரும்புவேன், என்றவராய் மயங்கி விழுந்து விட்டார். அழைத்து வந்தவர் மயங்கிக் கிடக்க, சுதாரித்துக் கொண்ட பெரியநம்பி, அவருக்கு மயக்கம் தெளிவித்தார். பின்பு ஆளவந்தாரின் அருகில் சென்ற ராமானுஜர், அவரது வலதுகையில் வித்தியாசத்தைக் கண்டார். அங்குள்ள சீடர்களை அழைத்து, ஆச்சாரியரின் கையைக் கவனித்தீர்களா? இவரது மூன்று விரல்கள் மடங்கியிருக்கிறதே. அவருக்கு எப்போதுமே இப்படித்தான் இருக்குமா? என்றார். சீடர்கள், இல்லையே, சாதாரணமாகத்தான் அவரது கை இருக்கும். இப்போது தான் விரல்கள் மடங்கியுள்ளன, என்றார். ராமானுஜர், ஆளவந்தாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அழுதுகொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்திவிட்டு, அவர் என்ன செய்யப் போகிறார் என கவனித்தனர். மடமே நிசப்தமாய் விட்டது. ஆளவந்தார் இறந்தவரைப் போன்றே தெரியவில்லை. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. ராமானுஜர் அந்த முகத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல, அனைவருக்கும் தோன்றியது. அப்போது ராமானுஜர் சத்தமாக பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச ஒரு பேரதிசயம் அங்கு நிகழ்ந்தது.
ராமானுஜர் அப்படி என்ன தான் பேசினார், அங்கு என்னதான் நிகழ்ந்தது? ராமானுஜர் பேச ஆரம்பிக்கிறார். நான் திருமாலின் நெறியில் வாழ்வேன். மக்களின் அறிவின்மையை போக்குவேன். அவர்களுக்கு, வலது தோளில் சக்கரத்தையும், இடதுதோளில் சங்கையும் வேதமந்திரம் கூறி முத்திரையாகப் பதிப்பேன். திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி திருமண் கொண்டு நாமம் இடுவேன். தொண்டர்களைக் கவுரவிக்க வைணவப் பெரியவர்களின் பெயர் வைப்பேன். சீடர்களுக்கு திருமாலை வழிபட வேண்டும் என ஆணையிடுவேன். மந்திர உபதேசம் செய்து வைப்பேன், என்றதும், ஆளவந்தாரின் மடங்கியிருந்த ஒரு கைவிரல் விரிந்து நேராக நின்றது. ஆ...இது என்ன பேரதிசயம். இந்த இளைஞர் பேச ஆரம்பித்ததும், இறந்து போனவரின் கைவிரல் விரிகிறதென்றால், இதை விட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என சீடர்களெல்லாம் விக்கித்து நின்றனர். மீண்டும் ராமானுஜர் பேசினார். மக்களைப் பாதுகாக்க தத்துவ ஞானத்தை தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன், என்றதும், மூடியிருந்த இன்னொரு விரல் நேரானது. விஷ்ணு புராணத்தை எழுதியருளிய பராசர முனிவரின் பெயரை, படித்த வைணவர் ஒருவருக்கு வைப்பேன், என்றதும் மூடியிருந்த மூன்றாவது விரலும் நேராக நின்றது. இந்த அதிசயம் நிகழ்ந்ததும், ஆளவந்தார் போல இவரே ஒரு காலத்தில் வைணவர்களின் தலைவர் ஆவார் என அங்கிருந்தோரெல்லாம் பேசிக் கொண்டனர். பின்னர் ராமானுஜர் ஊர் திரும்பி விட்டார். ஆனால், அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இளைஞருக்குரிய எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், ஏதோ முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார். பெரும்பாலான நேரத்தை திருக்கச்சி நம்பியுடன் கழித்தார். குடும்பத்தை கவனிக்காததால், அவரது மனைவி தஞ்சமாம்பாள் வருத்தமடைந்தார். அவருக்கு கோபம் பொங்கியது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். வீட்டுப் பொறுப்பை தனித்து ஒரு பெண்மணி கவனித்துக் கொள்வது என்பதும் சிரமம்தானே! ஆனாலும், ராமானுஜர் தன் போக்கில் சென்று கொண்டிருந்தார்.
தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி திருக்கச்சி நம்பியிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அவரும், நீர் பிராமணர், நான் வேளாளன், என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ராமானுஜர் அவரிடம், என்னைத் தாங்கள் சீடனாக ஏற்காததன் காரணம், நான் அதற்கு தகுதியற்றவன் என்பதால் தானே, என்றும் சொல்லிப் பார்த்தார். நம்பி அவருக்கு ஆறுதல் கூறினார். ராமானுஜரே! வருத்தம் வேண்டாம். நம் வரதராஜனிடம் பக்தி கொள்ளுங்கள். இப்போது போலவே, பெருமாளின் அபிஷேகத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள். ஆளவந்தாரிடம், நீங்கள் செய்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு தகுந்த குருவை இறைவன் வெகு விரைவில் தருவார், என்றார். ராமானுஜருக்கோ அவர் தன்னை சீடனாக ஏற்க மறுப்பதை பொறுத்துக் கொள்ளவே இல்லை. ஜாதியின் பெயரால் இவர் ஒதுங்கிக் கொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை. இறைவனிடம் நேரில் பேசும் ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தால் என்ன! இவரை என் குருவாக்கியே தீருவேன். அதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பேன்,எனக் கருதியவராய், ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வேளாளரான அவர் சாப்பிட்டு மீதம் வைப்பதை பிரசாதமாகக் கருதி, தான் உண்டுவிட்டால், அவர் நம்மைப் பாராட்டி, சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பது அவரது திட்டம். திருக்கச்சிநம்பி விருந்துக்கு வர மனமுவந்து ஒத்துக் கொண்டார். தங்களைப் போன்றவர்கள் வீட்டில் அமுதுண்ண அடியேன் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று ராமானுஜரிடம் சொன்ன அவர், குறித்தநாளில் வீட்டுக்கு வந்து விட்டார். தஞ்சமாம்பாளிடம் ராமானுஜர், திருக்கச்சிநம்பி தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரப்போகும் தகவலைச் சொன்னார். ஆனால், நம்பி சாப்பிட்ட பிறகு, அவர் மீதம் வைப்பதை சாப்பிடப் போகிறேன் என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் என்ற தங்கள் அந்தஸ்து இதன் மூலம் குறையக்கூடும் என மனைவி தடுத்து விட்டால் என்னாவது என்பது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
வருபவர் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக மிகச்சிறந்த உணவாக அமைய வேண்டும், பட்சணங்கள் சில இருக்க வேண்டும் என்றெல்லாம் மனைவிக்கு உத்தரவாயிற்று. மறுநாள் அதிகாலையே தஞ்சாம்பாள் கணவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பலவகை உணவு சமைத்தார். ராமானுஜர் நம்பியை அழைத்து வருவதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார். ராமானுஜர் தனது எச்சிலை சாப்பிடப் போகிறார் என்ற தகவல், பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிக்கு தெரிந்து விட்டது. பெருமாளுடன் பேசிக்கொள்பவராயிற்றே அவர்! அவரிடம் பெருமாள், நம்பி! உன் சீடனாக விரும்பும் ராமானுஜன், நீ வைக்கும் எச்சிலை சாப்பிட முடிவு செய்திருக்கிறான். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், என்று நமுட்டு சிரிப்புடன் கூறிவிட்டான், அந்த குறும்புக்காரன். விடுவாரா நம்பி! அடடா! இந்த சிறுவன் ராமானுஜனுக்கு தான் நம்மீது எவ்வளவு பக்தி, அந்த பிராமணன் நம் எச்சிலை சாப்பிட்டால், பாவத்தை அல்லவா சுமக்க வேண்டி வரும். வேண்டாமப்பா, வேண்டாம். ஏதாவது ஓர் உபாயம் செய்து, என் இலையில் இருக்கும் எச்சிலை சாப்பிட விடாமல் செய்து விட வேண்டும், என முடிவெடுத்தார். ராமானுஜர் தன்னை அழைக்க, ஆஸ்ரமத்துக்கு போய் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள், விருந்தை முடித்து விட வேண்டுமெனக் கருதி, வேறொரு வழியில் ராமானுஜரின் வீட்டுக்கு சென்றார். தஞ்சமாம்பாள் இருவரின் வரவுக்காகவும் காத்திருந்தார். நம்பிகள் ஒன்றும் தெரியாதவர் போல, அம்மா! தங்கள் கணவரை எங்கே? என்றார்.
சுவாமி! அவர் உங்களைத்தானே தேடி வந்தார், என்றார் தஞ்சமாம்பாள். சரியம்மா! எனக்கு உணவைக் கொடுங்கள். நான் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறேன். பெருமாள் கைங்கர்யத்துக்கு அவசரமாக செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் அது தாமதமாகக் கூடாது, என்றார். திருக்கச்சிநம்பி, எதற்காக அவசரப்படுகிறார் என்பது தஞ்சாம்பாளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் வேகமாக உணவைப் பரிமாறினார். திருக்கச்சிநம்பி, பெயருக்கு சாப்பிட்டு விட்டு, அவர் கையாலேயே இலையை எடுத்து வெளியே போட்டு விட்டு, ராமானுஜர் வீட்டுக்கு வருவதற்குள் வெளியேறி விட்டார். பிராமணர் அல்லாத ஒருவர் தன் வீட்டில் சாப்பிட்டதால், தஞ்சமாம்பாள் வழமை போல, அவர் சாப்பிட்ட இடத்தைக் கழுவிவிட்டு, மிச்சம் மீதியை வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை குளித்து, புதிதாக சமையலை தொடங்கி விட்டார். வெளியே சென்ற ராமானுஜர், அவசர அவசரமாய் வீடு திரும்பினார். தஞ்சா...தஞ்சா...நம்பி இங்கு வந்தாரா? அவசர அவசரமாகக் கேட்டார். ஆமாம் சுவாமி! அவர் உணவருந்தி விட்டு, அவசரமாக பெருமாள் கைங்கர்யம் இருப்பதாக சொல்லி சென்றுவிட்டார். அவர் சாப்பிட்ட இலையை அவர் கையாலேயே தூக்கி வீசிவிட்டார். வேளாளருக்கு போட்ட மிச்சத்தை உங்களுக்கு எப்படி பரிமாறுவது? அதை வேலைக்காரிக்கு கொடுத்து விட்டு, வீட்டைக்கழுவி, புதிதாக தங்களுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறேன், என்றார். ராமானுஜருக்கு கோபமே வந்து விட்டது.
அடிப்பாவி! என்ன காரியம் செய்தாய்? அவர் சாப்பிட்ட எச்சத்தை தின்றாவது, அவருக்கு சீடனாக முயன்றேனே! அத்தனையையும் கெடுத்து விட்டாயே! அவர் எவ்வளவு பெரிய மகான். ஜாதியில் வேளாளராயினும், பெருமாளிடமே நேரில் பேசுபவராயிற்றே. பெருமாளே ஒருவரிடம் பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதடி ஜாதி! அவர் அமர்ந்த இடத்தை கழுவிவிட்டதாகச் சொல்லி தீராத பழி தேடிக் கொண்டாயே! என திட்டித் தீர்த்தார் பின்னர் வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இங்கிருந்து தப்பிய திருக்கச்சிநம்பி, நேராக வரதராஜனிடம் சென்றார். பெருமாளே! பேரருளாளா! இதென்ன சோதனை! நான் காலமெல்லாம் உனக்கு ஆலவட்டம் வீசி சேவித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். நீயோ, என்னை ராமானுஜருக்கு குருவாக்க விரும்புகிறாயே! அவர் சாதாரணமானவரா? ராமபிரானின் தம்பியான லட்சுமணனின் அவதாரம் அல்லவா? அவருக்கு குருவாகும் தகுதி எனக்கேது? அவர் என்னை வீட்டுக்கு வரழைத்து, நான் உண்ட எச்சத்தை சாப்பிட்டு, என்னை குருவாக ஏற்று, பெரிய மனிதனாக்க பார்க்கிறார். உன் அடியவர்களுக்கு தொண்டு செய்ய விரும்பும் என்னை ஒரு அடியவனாக்கி, எனக்கு தொண்டு செய்ய ராமானுஜர் விரும்புகிறாரே! இனி கொஞ்சநாள் நான் இங்கிருக்கக்கூடாது. திருமலையில் வேங்கடாஜலபதியாய் காட்சி தரும் உன் திருமுகத்தை சேவித்தபடி, அங்கேயே சில காலம் தங்கி விடுகிறேன். அதற்கு அனுமதி கொடு, என்று பெருமாளிடம் பிடிவாதமாய்க் கேட்டார். பெருமாள் தான் இவரிடம் பேசுபவர் ஆயிற்றே. இவரது சொல் கேட்க மறுத்தால், பக்திக்கே களங்கமாகி விடும் என்பதை அவர் அறியாதவரா என்ன? அந்த மாயக்காரன் அனுமதி கொடுத்து விட்டான்.
சரி...நம்பி, எங்கிருந்தாலும், நீர் எனக்கு தான் சேவை செய்யப் போகிறீர். திருமலைக்கு வாருமே, என பச்சைக்கொடி காட்டிவிட்டார். திருக்கச்சிநம்பியும் திருமலைக்கு சென்றுவிட்டார். ராமானுஜர் நம்பி திருமலைக்கு சென்ற தகவல் அறிந்து, அவர் வருகைக்காக காத்திருந்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் கடும் வெயில், பேரருளாளன் வரதராஜனும் வெப்பத்திற்கு தப்பவில்லை. நம்பி திருமலைக்கு போய் ஆறுமாதம் கழிந்து விட்டது. ஒருநாள் வேங்கடவன் அவரிடம், நம்பி! நீ காஞ்சிபுரத்துக்கே வா. இங்கே நான் கடும் வெயிலால் அவதிப்படுகிறேன். இச்சமயத்தில், நீ என் அருகில் இருந்து ஆலவட்டம் வீசினால், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்புவேன் அல்லவா? என்றார். குளிர்ந்த மேனியைக் கொண்ட அந்த கள்வனின் நாடகத்தைத்தான் பாருங்களேன். பொறுக்குமா நம்பிக்கு...ஆ...வரதராஜா! இதோ, இந்தக் கணமே கிளம்பி விடுகிறேன். அவர் கிளம்பி விட்டார். ராமானுஜர் அவர் வந்ததை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்று சந்தித்து பேசினார். நீண்ட நேரமாக பரமனின் புகழ் பேசிக் கொண்டிருந்தனர். ராமானுஜர் அவரிடம் சில சந்தேகங்களைச் சொன்னார். அந்த ஆன்மிக சந்தேகங்களுக்குரிய பதிலை பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்களேன் என திருக்கச்சிநம்பியிடம் அவர் கூறினார். நம்பியும் கோயிலுக்குச் சென்று, பெருமாளிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராமானுஜர் கேட்ட கேள்விகளை அடுக்கினார். பெருமாளும் பதில் சொன்னார். நம்பி மறுநாள் ராமானுஜரை அழைத்து, ராமானுஜரே! தங்கள் கேள்விக்கு பேரருளாளன் பதில் சொன்னார். அது மட்டுமல்ல, இதை உடனடியாக உங்களிடம் சொல்லியாக வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார், என்றார். ராமானுஜர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன...பெருமாள் என் பெயரைச் சொல்லி, என்னிடமே சொல்லச் சொன்னாரா? நான் செய்த பாக்கியம் தான் என்னே! சொல்லுங்கள் சுவாமி! அதைக் கேட்க நான் ஆவலாயிருக்கிறேன், என்றார். திருக்கச்சி நம்பி, பெருமாள் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்ல, ராமானுஜர் பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார்.பேரருளாளா! என் சந்தேகம் தீர்ந்தது, சந்தேகம் தீர்ந்தது, என ஆவேசமாய் கத்தி னார். தன்னை மறந்து ஆடினார். அப்படி என்ன தான் சொல்லியனுப்பினார் பெருமாள்?
திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது. இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன். அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர். வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார். தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார். மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார். ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை. இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன். யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார்.
நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள். தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை. அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர். ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம். ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர். ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார். கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.
பெரியநம்பியின் காலில் விழுந்த இளைஞர் எழுந்தார். ஆஹா...தெய்வசித்தம் என்பது இதுதானோ? யாரைத் தேடிப் போகிறோமோ, அவர் எதிரே வந்து விட்டால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்போம். அந்நிலையில் தான் பெரியநம்பி இருந்தார். ராமானுஜா! உன்னைத் தேடித்தான் நான் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கிறேன். ஓய்வு எடுத்துவிட்டு செல்லலாமென மதுராந்தகத்தில் இறைவனின் இக்குளக்கரையில் சற்றுநேரம் தங்கினோம். நீ இங்கே வந்து விட்டாய். என்ன விஷயமாக இங்கு வந்தாய்? என்றார் பெரியநம்பி. சுவாமி! தங்களை குருவாக ஏற்கும்படி வரதராஜப் பெருமாள் திருக்கச்சிநம்பி மூலமாக திருவாய் மலர்ந்தருளினார். தங்கள் பாதங்களில் சரணடைந்து, என்னை சீடனாக ஏற்க வேண்டும் என்று வேண்டியே நான் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டேன். வரும் வழியில் உங்களைக் காண்கிறேன். நம்மை சந்திக்க வைத்ததும் அவனே, என்றார் நெகிழ்வுடன் ராமானுஜர். இதைக்கேட்டு மகிழ்வெய்திய பெரியநம்பி, சரி...இன்னும் இங்கு இருக்க வேண்டாம். தாமதிக்காமல், காஞ்சிபுரம் செல்வோம். அங்கே பேரருளாளளின் சன்னதியில் பஞ்ச சம்ஸ்காரம் (தீயில் வாட்டிய சங்கு, சக்கர சின்னங்களை கையில் முத்திரையிடுதல், பிரபந்தங்களை படித்தல் முதலானவை) செய்து, உன்னை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு வருடம் நாம் காஞ்சிபுரத்திலேயே தங்கியிருப்போம். அதன்பிறகு ஸ்ரீரங்கம் கிளம்பலாம், என்றார். ராமானுஜர் அதைப் பணிவுடன் ஏற்றார். அது மட்டுமல்ல, உடனே அவரது சீடராக வேண்டும் என்ற ஆர்வத்தில், சுவாமி, எமன் நேரம் காலம் பார்க்கமாட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், ஓடிக் கொண்டிருந்தாலும், நடந்து போனாலும்...அவன் எதையும் கண்டுகொள்ளாமல், ஆயுள் முடிந்தவர்களின் கதையை முடித்து விடுவான். அந்நிலை எப்போதும் யாருக்கும் வரலாம். எனவே, காலத்தை வீணாக்காமல் இப்போதே புறப்பட்டு விடுவோம், என்றார் ராமானுஜர்.
அவர்கள் காஞ்சிபுரத்தை அடைந்தனர். தன் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அங்கே பெரியநம்பியையும், அவரது மனைவியையும் தங்க வைத்தார் ராமானுஜர். மறுநாள் ராமானுஜருக்கும், அவரது மனைவி தஞ்சமாம்பாளுக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை பெரியநம்பி பதித்தார். அவர் சாப்பிட்ட மீதத்தை சாப்பிட்டனர். இவ்வாறாக தனக்கு ஆச்சாரியார் இல்லாத குறையைப் போக்கிக் கொண்டார் ராமானுஜர். பாடங்களும் துவங்கின. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்விய பிரபந்தப்பாடல்களை பொருளுடன் விளக்கினார் பெரியநம்பி. பயிற்சி வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது. இறைவன் எல்லாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏனெனில், தான் இருப்பது மனிதர்களுக்கு நினைவிருக்க வேண்டும் என்பதில் அவன் விட்டுக் கொடுக்கவே மாட்டான். இன்பத்தை மட்டும் தா இறைவா என யார் கேட்டாலும் அவன் கொடுக்க மாட்டான். எவ்வளவு புண்ணியம் செய்தவரும் அவனிடம் துன்பத்தை ஏற்றே தீர வேண்டும். இந்த துன்பம் மீண்டும் ஒருமுறை மனைவி ரூபத்தில் வந்தது ராமானுஜருக்கு. ஏற்கனவே திருக்கச்சிநம்பியை அழைத்து உபசரித்த விஷயத்தில் மனைவி அவசரப்பட்டு விட்டதாக ராமானுஜர் அதிருப்தியில் இருந்தார். இப்போது, மீண்டும் ஒரு துன்பம் அவளால் வந்தது. ஆனால், முன்பு வந்ததை விட பேரிடியாக இது அமைந்தது. அதேநேரம், காரண காரியமில்லாமல் இறைவன் இந்த துன்பத்தை அவருக்கு கொடுக்கவில்லை. ஒருநாள் கிணற்றடியில் தஞ்சமாம்பாள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே பெரியநம்பியின் மனைவியும் தண்ணீர் இறைக்க வந்தார்.
தஞ்சமாம்பாள் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் இறைத்து வைத்திருந்தார். பெரியநம்பியின் மனைவி தண்ணீர் இறைத்த போது, தாம்புக்கயிறிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் தஞ்சமாம்பாள் இறைத்து வைத்திருந்த தண்ணீரில் பட்டுவிட்டது. அவ்வளவு தான்! கிணற்றடி சண்டை துவங்கி விட்டது. பெண்கள் இப்போது தான் என்றில்லை. ராமானுஜர் காலத்திலேயே இச்சண்டையை நடத்தி புகழ் பெற்றிருக்கிறார்கள்! தஞ்சமாம்பாள் தான் சண்டையைத் துவக்கினார். ஏனம்மா! இங்கே நான் தண்ணீர் இறைத்து வைத்திருப்பது உங்கள் கண்ணில் படவில்லை! இப்போது கயிற்றுத் தண்ணீர் இதில் தெறித்து விழுந்ததே! இதை இனிமேல் நான் எப்படி பயன்படுத்துவேன்? நான் இறைத்த பிறகு நீங்கள் இறைக்க வேண்டியது தானே! இப்போது என்ன கொள்ளை போகிறதாம்! நீங்கள் என் கணவரின் ஆச்சாரியரின் மனைவி என்பதற்காக உங்கள் அதிகாரத்தை காட்டுகிறீர்களோ! அதற்காக, நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, என்று சூடாக வார்த்தைகளைக் கொட்டினார். சே...இதென்ன வெட்டி வேலை,என்றவளாய், தண்ணீரை கீழே கவிழ்த்தார். விறுவிறுவென வீட்டுக்குள் போய் விட்டார். பெரியநம்பியின் மனைவி அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அந்த அம்மையாரின் கண்களில் கண்ணீர். அவர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் விசும்பிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், ராமானுஜரும், பெரியநம்பியும் வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் அவர்கள் வந்தனர். பெரியநம்பி வீட்டுக்குள் சென்றார். மனைவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது இங்கே? எனவும், நடந்ததை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார் மனைவி. நம்பியின் முகம் அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிக் கொண்டிருந்தது.
பெரியநம்பி மனைவியிடம், என் பிரியமானவளே! ஆண்டவன் எதையும் காரணமின்றி செய்வதில்லை. ஸ்ரீரங்கநாதன் நம்மை இவ்வளவு நாள் தான் இங்கிருக்க வேண்டும் என விதித்திருக்கிறான். அதை யாரால் மாற்ற முடியும்? இறைவனுக்கு ஒரு குணம் உண்டு. அதாவது, அவன் ஒருவனை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என நினைத்தால், அவனுக்கு பிரியமில்லாத சொற்களை காதில் விழ வைத்து விடுவான். அதை அவனே மற்றவர்கள் மூலமாகப் பேசுவான். இதற்காக நாம் கோபம் கொள்வது முறையல்ல. எல்லாம் அவன் செயல். நாம், இங்கிருந்து புறப்பட்டுச் செல்வோம். ராமானுஜனுக்கு இது தெரிய வேண்டாம். பக்கத்து வீட்டில் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் கிளம்பு. தஞ்சமாம்பாள் சொன்ன வார்த்தைகளை மனதில் கொள்ளாதே, என்றார். அந்த அம்மையார் கணவர் பேச்சுக்கு மறுசொல் பேசாதவர். உடனே புறப்பட்டு விட்டார். இதற்கிடையே, ராமானுஜர் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் முழுமையாக பயிற்சி முடிந்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, குருவின் வீட்டிற்கு பழம், வெற்றிலை, புதுத்துணி உள்ளிட்ட 16 பொருட்களுடன் அவர் அங்கே சென்றார். அங்கே யாருமில்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தார். ராமானுஜா! அவர்கள் ஸ்ரீரங்கம் கிளம்பிப் போய்விட்டார்கள். என்னிடம் சொல்லி விட்டு சென்றார்கள், என்றார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. ஐயோ! என்ன பாவம் செய்தேன் நான்! ஆச்சாரியார் நம்மிடம் சொல்லாமல் கொள்ளாமல் போகுமளவு நான் செய்த தவறு கொடியதாக இருந்துள்ளதே! அவர் மனம் புண்படும்படி நான் நடந்து விட்டேனோ? எதற்கும் தஞ்சமாம்பாளிடம் கேட்பபோம். அவளிடமுமா சொல்லாமல் போயிருப்பார்கள்? என மனதில் நினைத்தவர், பதைபதைப்புடன் வீட்டுக்கு ஓடி வந்தார்.
தஞ்சா...தஞ்சா... அவசரமாக அழைத்த அவரிடம், என்ன...எதற்காக வாசலில் இருந்தே கத்திக் கொண்டு வருகிறீர்கள்? என்றாள் அந்த புண்ணியவதி. தஞ்சா...ஆச்சாரியாரும், அவரது மனைவியும் ஸ்ரீரங்கம் கிளம்பி போய் விட்டார்களாம். உன்னிடம் ஏதாவது சொன்னார்களா? என்றவரிடம், அடேங்கப்பா! உங்களுக்கு கிடைத்தவர் சரியான ஆச்சாரியர் தான்! இதற்கே அந்த பெரிய மனிதருக்கு கோபம் வந்து விட்டதா? குரு என்றால் கோபம் கொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பது கூட அந்த மகானுக்கு தெரியாதோ? என்றாள் மொட்டையாக. ராமானுஜருக்கு இப்போது புரிந்து விட்டது. தன் குரு இங்கிருந்து கிளம்பக் காரணம் தன் மனைவி தான் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் கோபத்துடன், அடியே! ஆச்சாரியருக்கு கோபம் வரும் வகையில் என்ன செய்து தொலைத்தாய்? என்றார். அவள் நடந்ததைச் சொன்னாள். அடிப்பாவி! ஒரு சொட்டு தண்ணீர்...அதுவும் கயிறில் இருந்து தெறித்து விழுந்தது...இதனால் என்னடி குடிமுழுகிவிடும்! இதற்காக பதிபக்தியில் சிறந்த அந்த அம்மையாரை இகழ்ந்திருக்கிறாயே. ஆச்சாரியர் அதனால் தானே கோபித்துக் கொண்டு போயுள்ளார். நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு ஒரு குருவை அந்த வரதராஜனே அமர்த்திக் கொடுத்தானடி. அவன் எனக்கு தந்த தங்கத்தினும் மேலான மேதாவியை என்னிடமிருந்து பிரித்து விட்டாயேடி. பிசாசினும் கொடியவளே! இனிமேல் உன் முகத்தில் விழிக்கமாட்டேன், என்று கத்தித் தீர்த்தவர், வேகமாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு நடந்தார்.
கோயிலுக்குள் சென்று, வரதராஜா! நீ இப்படி செய்யலாமா? வேண்டாமப்பா...வேண்டாம். இந்த சம்சார பந்தம் வேண்டாம். குடும்பம் வேண்டாம். இனி, உன் சேவை மட்டுமே எனக்குப் போதும், என்றவர், அந்தப் பெருமாளின் காலடியில் விழுந்து கண்ணீர் உகுத்தார். ராமானுஜர் வீட்டில் இருந்து வெளியேறிய சமயம் பார்த்து, அவரது வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். வீட்டுக்குள்ளிருந்த தஞ்சமாம்பாளிடம், அம்மா! பசிக்கிறது. ஏதாவது இருந்தால் கொடுங்கள் தாயே, என்றார். அவள் ஏற்கனவே கணவர் திட்டித்தீர்த்த கோபத்தில் இருந்தாள். யாரோ ஒருவருக்காக, தன்னை பேயே, பிசாசே என திட்டி விட்டாரே. தன்னை விட அவர்கள் தானே உசத்தியாக போய் விட்டார்கள் அந்த மனிதருக்கு...என்ற ஆத்திரத்தில் இருந்தவள், உள்ளிருந்தபடியே, ஓய்! வேறு எங்காவது போய் பிச்சை கேளும். இங்கே நீர் வருவீர் என தெரிந்து வடித்தா வைத்திருக்கிறேன். நேரம் காலம் தெரியாமல் இங்கு வந்து உயிரை வாங்குகிறீரே, என்றாள். அவர் வருத்தத்துடன் அங்கிருந்து அகன்று, வரதராஜப் பெருமாள் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தார். எதிரில் பிராமணர் வந்தார். சுவாமி! தாங்கள் வருத்தத்துடன் வருகிறீர்களே, பசியால் மிகவும் களைத்துள்ளது போல் தோன்றுகிறது. வீட்டில் ஏதாவது கேட்டு வாங்கியிருக்கலாமே, என்றார். நான் உமது வீட்டுக்குத்தான் போனேன். அம்மையார் ஒன்றுமில்லை என சொல்லி திட்டி அனுப்பி விட்டாள், என்றார். ராமானுஜரின் வருத்தம் இன்னும் அதிகமாயிற்று. சுவாமி! வருந்தாதீர்கள். நான் தங்களிடம் ஒரு கடிதம் தருகிறேன். அத்துடன் பழம், பூ, புதுத்துணியும் தருகிறேன். அவற்றை என் மனைவியிடம் கொடுங்கள். நான் சொல்வதைப் போல் அவளிடம் சொல்லுங்கள். அதைக்கேட்டு, அவள் உங்களுக்கு ராஜ உபசாரம் செய்வாள், என்றார். பிராமணருக்கு ஏதும் புரியவில்லை. கடிதத்தையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.
அந்த கடிதத்தில் ராமானுஜர் தன் மாமனார் தனக்கு எழுதியதைப் போல எழுதி அனுப்பியிருந்தார். சிரஞ்சீவி மாப்பிள்ளைக்கு, மாமா எழுதிக் கொண்டது. இங்கு நாங்கள் ÷க்ஷமமாய் இருக்கிறோம். அங்கு தாங்களும், தஞ்சாவும் நலமாய் இருக்க பெருமாளை வேண்டுகிறேன். என் இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளேன். தாங்கள் உடனே தஞ்சமாம்பாளை அனுப்பி வையுங்கள். உங்களுக்கு பணிகள் இடைஞ்சல் தராவிட்டால், நீங்களும் வாருங்கள். இங்கு உங்கள் அத்தை தனியாக திருமண வேலைகளைச் செய்ய கஷ்டப்படுகிறாள். தஞ்சாவை அனுப்பினால், வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். மீண்டும் ÷க்ஷமம் வேண்டுகிறேன்,. இந்த கடிதத்துடன், அந்தப் பெரியவர் ராமானுஜர் வீட்டுக்கு திரும்பவும் போனார். அய்யா! வீட்டில் யார் இருக்கிறீர்கள்? என்றார். தஞ்சாமாம்பாள் எட்டிப் பார்த்தாள். அம்மா! தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்கள் தகப்பனார் உங்கள் கணவருக்கு கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளார், என்றார். பிறந்த வீட்டில் இருந்து ஒருவர் பேசினாலோ, கடிதம் போட்டாலோ பெண்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தஞ்சமாம்பாளுக்கும் அதே நிலை. அவள் வானத்துக்கும், பூமிக்குமாய் குதிக்காத குறை தான். இப்போ பார்த்து இந்த மனுஷன் எங்கே போயிட்டார்? ஏற்கனவே கோபிச்சுண்டு போனார். எப்போ வருவாரோ? என்றவள், பிறந்த வீட்டில் இருந்து வந்தவரை உபசரிக்கத் தொடங்கினாள். அவரை குளிக்கச் சொன்னாள். அவளே தண்ணீர் மொண்டு வைத்தாள். சற்று முன்பு பிச்சை கேட்டவரை உதாசீனப்படுத்திய அதே கைகள் இப்போது பலகாரத்தட்டுடன் வந்தது. சங்கோஜமில்லாம சாப்பிடுங்கோ. அவர் இப்போ வந்துடுவார், என்று உபசரித்தாள். சமயம் பார்த்து ராமானுஜரும் வீட்டுக்கு வந்தார். அவள் அவசரமாக கடிதத்தை அவர் கையில் கொடுத்தாள். அவர் படிப்பது போல நடித்தார்.
தஞ்சா! உன் தங்கைக்கு கல்யாணமாம். மாமா கடிதம் எழுதியிருக்கார். உன்னை ஒத்தாசைக்கு வரச் சொல்லியிருக்கார். நீ போயிட்டு வா. எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு. இவர் கூடவே உன் வீட்டுக்கு போ. நான் வேலையை முடிச்சுட்டு வரேன். ஆத்துல மாமி, மாமாக்கு என் மரியாதையை தெரிவிச்சுடு, என்றார். அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மின்னல் வேகத்தில் ஜடை முடித்தாள். படபடவென புதுப்புடவை மாற்றினாள். கணவரின் காலில் விழுந்து ஆசிபெற்றாள். அதுதான் அவரிடமிருந்து கிடைக்கும் கடைசி ஆசி என்பதை அவள் உணரவில்லை அவள். கிளம்பி விட்டாள். ராமானுஜரும் வீட்டில் இருந்து வெளியேறினார். நேராக வரதராஜப் பெருமாள் கோயில் நோக்கி நடந்தார். பெருமாளே! இன்று முதல் நான் உனக்கு தொண்டன். இல்லறத்தை துறந்து விட்டேன். என்னை ஏற்றுக்கொள், என்றார். பின்பு வரதராஜரின் பாதத்தில் வைக்கப்பட்ட காவித்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு கோயில் குளத்தில் குளித்தார். யாக குண்டம் எழுப்பி தீ மூட்டினார். பணம் வேண்டாம். பெண் வேண்டாம். நீ மட்டுமே வேண்டும், என வேண்டினார். இவற்றை துறப்பதாக சத்தியமும் செய்தார். இதன்பிறகு கோயிலிலேயே தங்கிவிட்டார். ராமானுஜர் துறவியானது குறித்து ஊரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசினர். இந்தப் பையன் நல்ல அழகன். அவன் மனைவியும் அழகி. அப்படியிருக்க,, இவர் துறவறம் பூண்டுள்ளார். இவரால் கடைசிவரை துறவறத்தைக் கடைபிடித்து விட முடியுமா? என தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சிலர் அவர் துறவியான பிறகு முகத்தில் ஏற்பட்டுள்ள தேஜஸ் பற்றி பேசினர். அவரைப் பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. ராமானுஜரின் மருமகன் முதலியாண்டன் என்ற தாசரதி அவரது முதல் சீடன் ஆனான்.
அடுத்து ஞாபகசக்திக்கு சொந்தக்காரரான கூரநாதர் சீடர் ஆனார். இவரை கூரத்தாழ்வார் என்பர். ஒருமுறை ஒன்றைக் கேட்டால் போதும். அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி படைத்தவர் இவர். இவர்கள் ராமானுஜர் சொல்வதை சிரமேல் ஏற்று காரியங்களைச் செய்து வந்தனர். இப்படியிருக்க வரதராஜப் பெருமான் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். ஒரு காலத்தில், ராமானுஜரை காசிக்கு அழைத்துச் சென்று, அவரைக் கொலை செய்ய முயன்றவர் அவரது குருவான யாதவப் பிரகாசர். அவர் ராமானுஜருக்கு அவ்வாறு துரோகம் செய்த நாளில் இருந்து மனஅமைதியில்லாமல் இருந்தார். தன் மகனின் நிலையைப் புரிந்து கொண்ட அவரது தாய், ஒருநாள் கோயிலுக்கு வந்தார். ராமானுஜரின் ஒளி பொருந்திய முகம் அந்த அம்மையாரை ஈர்த்தது. தன் மகன் இவருக்கு சீடராகி விட்டால், மீண்டும் பழைய நிலையை அடைவான் எனக் கருதினார். வீட்டிற்கு வந்ததும் மகனிடம் தன் கருத்தை வலியுறுத்திச் சொன்னார். சீடனுக்கே சீடனாவது, யாதவப்பிரகாசருக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், தாயின் சொல்லில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தார். அந்த வரதராஜன் சித்தம் அதுதான் என்றால், யாரால் தடுக்க இயலும் என்பதைப் புரிந்து கொண்ட அவர், திருக்கச்சிநம்பியிடம் பேசிப் பார்ப்போம் என அவர் வீடு நோக்கி நடந்தார். நம்பி! தாங்கள் தான் என் பிரச்னைக்கு பேரருளாளனிடம் தீர்வு கேட்டு சொல்ல வேண்டும், என்றார். அன்றிரவில் பெருமாளிடம் நம்பி இந்த விஷயத்தைச் சொன்னார். பெருமாள், என்ன சொல்லியிருப்பார் என்று சொல்லாமலே தெரிந்திருக்குமே. அவர் அதுதான் சரி என சொல்லிவிட்டார். மறுநாள் பெருமாளின் விருப்பத்தை யாதவப்பிரகாசரிடம் சொல்லி விட்டார் திருக்கச்சிநம்பி. அன்றிரவில் அவர் கண்ட கனவிலும் ஒரு தெய்வ சக்தி அவ்வாறே கூறியது. இனியும், கவுரவம் பார்க்கக்கூடாது எனக் கருதிய அவர் ராமானுஜரைச் சந்திக்க முடிவெடுத்தார்.
மறுநாள் யாதவப்பிரகாசர் கோயிலுக்கு சென்றார். ராமானுஜர் அவரைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்தார். அவருக்கு இருக்கை கொடுத்தார். யாதவப்பிரகாசர் தன் முன்னாள் சீடனின் பணிவான தன்மையை மனதுக்குள் போற்றினார். இருப்பினும் தொட்டில் பழக்கம் கடைசி வரை வருமாமே! அவர் தன் வழக்கமான பாணியில், அதிமேதாவித்தனத்தன கேள்வி ஒன்றைக் கேட்டார். ராமானுஜா! உன் தோளில் சங்கு, சக்கரம் பொறித்துள்ளாய். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா? இதைப் பார்க்கும் போது நீ குணங்களுடன் கூடிய பிரம்மத்தை (உருவத்துடன் கூடியது) வணங்குவதையே சரியானதென நினைப்பதாக கருதுகிறேன். இதற்கு சாஸ்திரம் ஏதாவது ஆதாரம் வைத்துள்ளதா? சொல், என்றார். ராமானுஜர் கூரத்தாழ்வார் பக்கம் திரும்பி, இதோ! கூரத்தாழ்வார் இருக்கிறாரே. அவர் சாஸ்திர வல்லுநர். அவர் உங்களுக்கு தக்க விளக்கமளிப்பார், என்றார். கூரத்தாழ்வார் மடைதிறந்த வெள்ளமென தன் சாஸ்திர உரையைத் துவக்கினார். ஞாபகசக்தியில் சிறந்தவர் அல்லவா? அதனால், அவ்விடத்தில் பக்தி மழை பொழிந்தது என்று சொல்வதை விட கொட்டித் தீர்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். முன்னாள் ஆசிரியர் யாதவப்பிரகாசர் உட்பட. ஆசிரியர் கோமானே! எங்கள் ஆச்சாரியர் உத்தரவுப்படி உங்களிடம் பேசுகிறேன். சங்கு, சக்கர சின்னங்களை அக்னியில் அழுத்தி அதை உடலில் பதித்துக் கொண்டவன் பரமாத்மாவுடன் இணைகிறான். அவன், பிரம்மலோகத்தில் வாழத் தகுதியுள்ளவன் ஆகிறான். பூணூல் தரிப்பது எப்படியோ, அதுபோல வைணவர்கள் சங்கு, சக்கர பொறியை உடலில் தரித்துக் கொள்ள வேண்டும். இது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும். இவ்வுலகில் நாராயணனே முடிவான உண்மை. அவனே நமக்கு புகலிடம் தருபவன், என்று கூரத்தாழ்வார் பேசப் பேச யாதவப்பிரகாசர் பேச வாயே திறக்காமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.
தன்னால் கொடுமைக்கு ஆளான சீடனின் சீடனே இப்படி இருந்தால், ராமானுஜரிடம் எவ்வளவு விஷயம் இருக்கும் எனக் கருதிய அவர், அப்படியேச் எழுந்தார். ராமானுஜர் முன் போய் நின்றார். தடாலென காலில் விழுந்து விட்டார். அம்மாவின் விருப்பம், திருக்கச்சிநம்பி மூலமாக பெருமாளே சொல்லி அனுப்பியது எல்லாம் சரியானதே என்பதை உணர்ந்தார். ராமானுஜா! நீ சாதாரணமானவன் அல்ல. அந்த ராமபிரானின் தம்பி தான். கந்தை என் கண்களை மறைத்திருந்தது. இனி நீயே எனக்கு கதி. என்னை சீடனாக ஏற்றுக்கொள், என்றார். ராமானுஜர் அவரைத் தனது சீடராக ஏற்றார். தன்பிறகு அவரது போக்கே மாறிவிட்டது. முந்தைய கெட்ட எண்ணங்கள் அறவே அழிந்தன. ராமானுஜரின் உத்தரவுப்படி வைணவர்களின் கடமை குறித்து யதிகர்ம-சமுச்சயம் என்ற நூலையும் எழுதினார் யாதவப்பிரகாசர். அவரது எண்பதாவது வயதில் இந்நூல் முடிவுற்றது. இதன்பிறகும் சில காலம் வாழ்ந்த அவர் திருமாலின் திருவடிகளை எய்தினார். யாதவப்பிரகாசர் ராமானுஜருக்கு சீடரானது, அவரது பக்திமயமான தோற்றம், இறைவனிடம் தன்னை அர்ப்பணித்து விட்ட பாங்கு எல்லாமே சுற்றுப்புறத்திலுள்ள வைணவர்களிடையே பரவியது. எல்லாரும் கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்தனர். தண்ணீர் இறைத்து தஞ்சாம்பாளுடன் ஏற்பட்ட பிரச்னையில் ஸ்ரீரங்கம் திரும்பி விட்ட, பெரியநம்பி ஸ்ரீரங்க மடத்துக்கு தலைவர் இல்லையே என்ற கவலையில் இருந்தார். ஆளவந்தாருக்கு பிறகு, மடத்தில் திருமாலின் திருக்குணங்கள் பற்றி பேசுவதற்கு கூட சரியான ஆளில்லை. ஆளவந்தார் இருந்த போது, ராமானுஜரை ஒரு தெய்வீக புருஷர் என்று சொன்னது அவர் நினைவில் மாறி மாறி வந்தது.
அவரைக் காஞ்சிபுரத்தில் இருந்து கையோடு அழைத்து வந்து விடலாம் எனப் போனால், அந்த வரதராஜனின் சித்தம் எப்படியிருந்ததோ புரியவில்லை. அங்கே தன் மனைவிக்கும், ராமானுஜர் மனைவிக்கும் எப்படியோ ஒரு பிரச்னை ஏற்பட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. என்ன செய்வது என கலங்கிப் போயிருந்த அவர், அந்த ரங்கநாதனிடமே சென்றார். ரங்கநாதா! இது என்னப்பா சோதனை. ஸ்ரீரங்கமடத்தைக் காக்க ஆளில்லை. உன் பக்தர்களை வழி நடத்த சரியான ஒருவர் இல்லை. ராமானுஜன் ஒருவன் தான் அதற்கு தகுதியுடையவன் என உனக்கு தெரியும். இப்போது அவன் துறவியாகவும் மாறிவிட்டான் என அறிந்து சந்தோஷப்படுகிறேன். ஆனால், அந்தத்துறவி உனது தலத்துக்கு வர வேண்டும். இதற்கு நீ தான் அருள் செய்ய வேண்டும், என உருக்கத்தோடு கேட்டார். சயனத்தில் இருந்த அந்த ரங்கநாதன் பெரியநம்பியிடம் பேசினான். நம்பி! என் அன்புக் குழந்தையே! கவலைப்படாதே. ராமானுஜன் பேரருளாளன் வரதராஜன் உத்தரவின்றி அங்கிருந்து கிளம்ப மாட்டான். எனவே வரதராஜனைப் பாடிப்புகழ்ந்து, அவனிடம் அனுமதி பெற வேண்டியது உனது பொறுப்பு. பாடுவதற்கு தகுதியான ஆள் திருவரங்க பெருமாளரையர். அந்த சங்கீத கலாநிதியை காஞ்சிபுரத்துக்கு அனுப்பு. வரதராஜன் சங்கீதப்ரியன். அவன் சங்கீதத்துக்கு மகிழ்ந்து அவன் வரம் கொடுக்கும் வேளையில், ராமானுஜனை கேட்டு பெற்று விடச் சொல், என்று சொல்லி விட்டான். பெரியநம்பி உடனடியாக மடத்துக்கு வந்தார். திருவரங்க பெருமாள் அரையரை உடனடியாக காஞ்சிபுரத்துக்கு புறப்படச் சொன்னார். பெருமாளின் கட்டளையை விளக்கினார். பெருமாள் அரையரும் காஞ்சிபுரம் சென்றார். வரதராஜனைப் பற்றி உளமுருகிப் பாடினார். ஆனால், பேரருளாளன் வரதராஜனுக்கோ ராமானுஜரை அங்கிருந்து அனுப்ப மனமில்லை. அவன் பாட்டை ரசித்தானே ஒழிய, பதில் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. பெருமாள் அரையர் விடாப்பிடியாக பாடிக் கொண்டிருந்தார். தன் சக்தியனைத்தையும் திரட்டிப் பாடினார்.
ஒருவழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான். பெருமாள் அரையர் வரதராஜனிடம் ராமானுஜரை தன்னோடு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். பெருமாளுக்கு அதில் இஷ்டமே இல்லை. மிகுந்த பிரயாசையின் பேரில், பெருமாளிடம் அனுமதி பெற்றார் அரையர். ராமானுஜரும் அரையருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். உலகமே போற்றும் மாபெரும் சகாப்தத்தைப் படைப்பதற்காக ஸ்ரீரங்கத்துக்கு அந்த மகான் சென்று கொண்டிருந்தார். அங்கு சென்றதும் பெரியநம்பியையே தன் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியநம்பிக்கு ராமானுஜர் மடம் வந்து சேர்ந்ததில் அலாதி மகிழ்ச்சி. தன் மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடனாக்கினார் என்றால் அவர் மீது நம்பி கொண்டிருந்த பாசத்திற்கு எல்லை கூறுவதற்கில்லை. இப்படியிருக்க ராமானுஜருக்கு தன் தம்பி கோவிந்தரைப் பற்றிய நினைவு வந்தது. இவர் ராமானுஜரின் சித்தி மகன் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ராமானுஜர் யாதவப்பிரகாசருடன் காசி சென்ற போது, அவர் ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சித்த தகவலை சொல்லிக் காப்பாற்றி விட்டு, காளஹஸ்தியில் சிவ வழிபாட்டில் இறங்கி விட்டார். அக்காலத்தில் சைவர்கள், வைணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஒரு வைணவனை பார்த்தாலே போதும்! ஒரு சைவன் எங்காவது குளித்து விட்டுத்தான் வீட்டுக்கு போவான். அந்த அளவுக்கு இந்து மதத்திற்குள்ளேயே இரு பிரிவாக பிளவுபட்டிருந்த நேரம். ராமானுஜர் கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.
கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே, இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார். இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர். தம்பி! இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்? என்றார் பெரியவர். சுவாமி! சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன். நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?
கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே. நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனின் தான் என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது. கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா? ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம். இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன். இப்படியாக அவர்களின் உரையாடல் தினமும் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.
ஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனையே கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார். பெரிய நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ராமானுஜர் அவரிடம் பல நூல்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். கவனமுடன் அவற்றைப்படித்தார். சில சமயங்களில் தனது சீடரின் அபரிமிதமான அறிவைக்கண்ட பெரிய நம்பி, தனது மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடராக்கினார். ஒரு முறை ராமானுஜரிடம் பெரிய நம்பி,சீடனே! ஸ்ரீரங்கத்திலிருந்து நான் கற்றுத்தந்த விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டாய். உனது ஆன்மிக அறிவுக்கு இது மட்டும் போதாது. இங்கிருந்து சில மைல் தூரத்தில் திருக்கோஷ்டியூர் என்ற தலம் இருக்கிறது. அந்த தலத்தில் திருக்கோஷ்டியூர் நம்பி வசிக்கிறார். அவர் மிகப்பெரிய அறிஞர். தூய்மையானவர். அவரைப்போன்ற வைணவரை உலகில் வேறு எங்குமே காண இயலாது. திரு எட்டெழுத்து என்ற மந்திரத்தை அவர் அறிந்திருக்கிறார். அதற்குரிய பொருள் அவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் திரு எட்டெழுத்து மந்திரம் பற்றி தெரிந்திருந்தாலும் கூட அவரளவுக்கு கற்றுத்தருவார்களா என்பது சந்தேகமே. எனவே நீ அங்கு சென்று அவரிடம் திருமந்திரத்தை பொருளுடன் படித்து வா. இவ்விஷயத்தில் எவ்வித தாமதமும் வேண்டாம்,என்றார். ராமானுஜர் சற்றும் தாமதிக்கவில்லை. உடனடியாக திருக்கோஷ்டியூர் கிளம்பி விட்டார்.
நம்பியின் இல்லத்திற்கு சென்று அவரது பாதங்களில் பணிந்தார். திரு எட்டெழுத்து மந்திரத்தை பயில வேண்டும் என்ற தன் ஆர்வத்தை தெரிவித்தார். நம்பியோ அவரது கோரிக்கையை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இன்னொரு முறை இங்கு வா. அப்போது பார்த்து கொள்ளலாம், என சொல்லி விட்டார். ராமானுஜருக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பெரிய மகானை வற்புறுத்தும் சக்தியும் அவரிடம் இல்லை. ஆழ்ந்த வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். ரங்கநாதப்பெருமானை சேவித்தார். அப்போது பெருமான் நம்பியிடம்,நம்பியே! ராமானுஜன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு நீ திரு எட்டெழுத்து மந்திரத்தை கற்றுக்கொடுப்பாயாக, என்றார். நம்பி அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. ரங்கநாதா! திரு எட்டெழுத்து மந்திரம் என்பது சாதாரணமானதல்ல. நீயே ஒரு முறை தவம் செய்யாதவனுக்கும், சரியான வழிபாடு செய்யாதவனுக்கும் இந்த மந்திரத்தை கற்றுக்கொடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறாய். இப்போது, அந்த உத்தரவை நீயே மீறச் சொல்கிறாய். மனிதன் குறிப்பிட்ட காலமாவது தவம் செய்திருக்க வேண்டும். தவம் செய்யாதவனின் மனது சுத்தமாக இராது. அது மட்டுமல்ல! இந்த மந்திரத்தை யார் ஒருவன் கற்றுக்கொள்கிறானோ, அவன் மனத்தூய்மை இல்லாதவனாக இருந்தால், இம்மந்திரத்தின் சக்தியை தாங்கி கொள்ள மாட்டான். இதையெல்லாம் நீ அறியாதவனா என்ன? என சொன்னார். ரங்கநாதன் கலகலவென சிரித்தார். நம்பியே! ராமானுஜனுடைய மனசுத்தம் பற்றி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் சாதாரணமானவன் அல்ல. இந்த உலகத்தை பாதுகாக்க வந்தவன். நீயே இதை அறிவாய். அவ்வாறு அறியும் காலம் வந்த பிறகு நீயே கற்றுத்தருவாய், என கூறி விட்டார். அதன் பிறகு பெருமானும், நம்பியும் பேசிக்கொள்ள வில்லை. திருக்கோஷ்டியூர் நம்பிசேவையை முடித்து விட்டு ஊர் திரும்பி விட்டார்.
ராமானுஜருக்கு எப்படியேனும் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திரு எட்டெழுத்து மந்திரத்தை பயின்றாக வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அவர் திருக்கோஷ்டியூருக்கு வந்து போனார். ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து நம்பியை தரிசித்தும் கூட அவர் கண்டுகொள்ளவே இல்லை. நாராயணனே சிபாரிசு செய்தும் கேட்காத அவர், ராமானுஜர் சொல்லியா கேட்கப்போகிறார்? இப்படியே ஆண்டுகளும் புரண்டு கொண்டிருந்தன. திருக்கோஷ்டியூருக்கு பதினெட்டாவது முறையாக ராமானுஜர் வந்தார். அப்போதும் நம்பி அவரை தனது சீடனாக ஏற்கவில்லை. மந்திரத்தின் பொருளை கற்றுக்கொடுக்க மறுத்து விட்டார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. இறைவா! என் மனதில் உண்மையிலேயே ஏதோ மாசு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மந்திரத்தின் பொருளை கற்றுக் கொடுக்க நம்பி மறுக்கிறார். நாம் இத்தனை முறை இங்கு வந்தும் பலனேதும் இல்லை. என்று தான் நம்பியின் மனம் கனியப்போகிறதோ? என புலம்பி அழுதார். திருக்கோஷ்டியூர் வாசிகள் சிலர் ராமானுஜர் அழுவதை கவனித்தனர். அந்த இளைஞரின் மீது இரக்கம் கொண்டனர். நடந்த விஷயத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளின் காதுக்கு கொண்டு சென்றனர். ராமானுஜரை வரவழைத்தார். மனம் பதைக்க ராமானுஜர் நம்பியின் முன் நின்று கொண்டிருந்தார். என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆதங்கம் மனத் துடிப்பை அதிகமாக்கியது. சற்று நேரம் கழித்து, திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரைக்கண்டதும் வேகமாக எழுந்தார் ராமானுஜர். நம்பி என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும், அதே நேரம் கவலையுடனும் அவரது முகத்தையே ஏறிட்டு பார்த்துகொண்டிருந்தார்.
ராமானுஜரின் மனம் குளிரும் வண்ணம் திருக்கோஷ்டியூர் நம்பியின் பதில் அமைந்தது. அப்பா ராமானுஜா! நீ கேட்டு வந்துள்ள உயர்ந்த மந்திரத்தை உனக்கு நான் உபதேசிக்கிறேன். கலியுகத்தில் இம்மந்திரத்தை கேட்கும் தகுதி உனக்கு இருப்பதால் தான், பரந்தாமன் உன்னை என்னிடம் அனுப்பியுள்ளான். ஆனால், இந்த மந்திரத்தை நீ மட்டுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இம்மந்திரம் தெரிந்தவர் இறந்த பின் வைகுண்டத்தை அடைவார். பிறவாவாழ்வெனும் முக்தி பெறுவார். அந்த பரந்தாமனுடன் ஐக்கியமாவார். வேறு யாருக்கும் இம்மந்திரத்தைச் சொல்லக்கூடாது, என்றார். பின்னர் ராமானுஜருக்கு ரகசியமாக அந்த மந்திரத்தைக் கற்பித்தார். அந்த மாத்திரத்திலேயே ராமானுஜர் தெய்வீக சக்தி பெற்றார். உள்ளத்தில் அமைதி நிலவியது. உலகத்தையே தன் கைக்குள் அடக்கியவன் எப்படி மகிழ்வானோ, அப்படியே மகிழ்ந்தார் ராமானுஜர். குருவின் பாதத்தில் விழுந்து தம் நன்றியைத் தெரிவித்தார். மந்திரம் தெரிந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீரங்கத்துக்கு கிளம்பினார். புறப்பட இருந்த சமயத்தில் ராமானுஜரின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நாம் படித்த மந்திரம் வைகுண்டம் செல்ல உதவும் என்பது குருவின் வாக்கு. இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது அவரது கட்டளை. குருவின் கட்டளையை மீறக்கூடாது என்பது உண்மையே. அதே நேரம் இம்மந்திரம் தெரிந்த குருவும், நானும் மட்டுமே வைகுண்டம் செல்வதென்பது என்ன நியாயம்? ஊரில் எல்லாருக்கும் தெரியட்டுமே! எல்லாருமே இப்பிறவி துன்பத்தில் இருந்து நீங்கி, பரந்தாமனுடன் கலக்கட்டுமே! இதில் தவறென்ன இருக்கிறது? குருநாதர் ஏன் இப்படி சொல்கிறார்? என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். சிந்தித்தார் சில நிமிடங்கள். இதை எல்லாருக்கும் சொல்லி விட வேண்டும். குருவின் கட்டளையை மீறுவதற்குரிய பாவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். நாம் அழிந்தாலும், பிறர் வாழ வேண்டும், என்றவராய், திருக்கோஷ்டியூர் கோயில் வாசலுக்கு சென்றார்.
முதலில் தன் சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு இம்மந்திரத்தை போதித்தார். அடுத்து மக்கள் கூட்டத்தை அழைத்தார். அன்பர்களே! உங்களுக்கு நான் உயர்ந்த மந்திரம் ஒன்றைக் கற்றுத் தரப்போகிறேன். செல்வம், உலக இன்பம் இவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று உங்களுக்கு இதைக் கேட்பதால் கிடைக்கும், என்றார். எல்லாரும் ஒருமித்த குரலில் அம்மந்திரத்தைக் கூறுமாறு கேட்டனர். ஊருக்குள் இதற்குள் செய்தி பரவி விட்டது. நம் ஊருக்கு வந்துள்ள மகான் ஒருவர் ஒரு மந்திரத்தைச் சொல்லப் போகிறாராம். இதைச் சொன்னால், கிட்டாத பொருள் ஒன்று கிட்டுமாம். அது என்னவென தெரியவில்லை. நமக்கு இன்னும் பொருள், பொன், நினைத்த பெண்...இப்படியெல்லாம் கிடைத்தால், இன்னும் நல்லது தானே, என பாமரர்களும், ஏதோ ஒரு தெய்வீகப்பொருள் கிடைக்கப் போகிறதெனக் கருதி கற்றறிந்தவர்களும் அங்கு கூடினர். ராமானுஜர் என்ற கருணைக்கடல் மக்களுக்கு அம்மந்திரத்தை ஓதியது. அந்த மந்திரத்திற்கு எத்தனை எழுத்துக்கள் தெரியுமா? எட்டே எட்டு. இத்தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த மந்திரம் என்னவென்று அறியும் ஆவல் இருக்கும். அதுமட்டுமல்ல, அதை ஓதினால், எங்களுக்கும் பரந்தாமனுடன் கலக்கும் பாக்கியம் கிடைக்குமே என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள் அல்லவா? இதோ! பகவான் விஷ்ணு திருக்கோஷ்டியூர் நம்பிக்கு அறிவித்து, அவர் மூலம் ராமானுஜர் மக்களுக்கு அறிவித்த அந்த மந்திரம் இதுதான். உரக்க படியுங்கள். உங்கள் இல்லம் முழுவதும் இந்த மந்திரத்தின் ஒலி பரவட்டும். பக்தியுடன் படியுங்கள்.
அந்த பரந்தாமனை மனதுக்குள் கொண்டு வாருங்கள். சொல்லுங்கள்....உரக்கச் சொல்லுங்கள்...ஓம் நமோ நாராயணாய....ஓம் நமோ நாராயணாய...ஓம் நமோ நாராயணாய ராமானுஜர் சொன்ன இம்மந்திரத்தை அனைவரும் மும்முறை முழங்கினர். எல்லாருமே வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைந்தனர். அடுத்து எங்கிருந்து இடிவரும் என்பதை ராமானுஜர் அறிந்திருப்பாரே! திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க அவரே சென்று விட்டார். உள்ளே நுழைந்தது தான் தாமதம். அங்கே அதிகபட்ச வெப்பத்தில் பால் பொங்குவது போல, திருக்கோஷ்டியூர் நம்பி கொதித்து நின்றார். அடத்துரோகியே! குருவின் வார்த்தையை மீறிய உன்னிலும் பெரிய துஷ்டன் உலகில் யாருமில்லை. என் கண்முன்னால் வந்து, உன்னை பார்த்த பாவத்தை எனக்கு தராதே. குருவின் வார்த்தையை மீறிய நீயும் ஒரு மனிதனா? நீ பேயை விடக் கொடியவன். உன்னை நரகத்தில் சேர்க்கக்கூட யோசிப்பார்கள். அதையும் விட கொடிய இடத்திற்கு நீ செல்வாய், என்று உணர்ச்சியை வார்த்தைகளாக வடித்து கொட்டித் தீர்த்து விட்டார். குருவின் நிந்தனை கண்டு ராமானுஜர் சற்றும் கலங்கவில்லை. பலருக்கு நன்மை செய்த தனக்கு, குரு சொல்வது போல, கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் கருதியவர், குருவிடம், ஆச்சாரியாரே! தாங்கள் சொல்வது முழுவதும் நியாயமே. நான் செய்தது தவறென்பது எனக்கும் தெரியும். ஆயினும், இந்த தவறுக்காக எனக்கு கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த மந்திரத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வைகுண்டம் செல்வார்களே! அதைக்கண்டு நான் மகிழ்வேன். அவர்கள் பரந்தாமனுடன் கலக்கும் காட்சியை என் மனக்கண்ணால் காண்கிறேன். எனக்கு கிடைக்கப் போகும் துன்பத்தை விட, மக்கள் அடையும் நன்மையே பெரிதாகத் தெரிகிறது, என்றார் பணிவுடன். ராமானுஜர் பேசப்பேச, திருக்கோஷ்டியூர் நம்பியின் முகம் மாறியது.
திருக்கோஷ்டியூர் நம்பியின் முகமாற்றம் கண்டு, ராமானுஜர் மகிழ்ந்தார். ஏனெனில் சற்று முன்பு வரை தன் செயலால் கோபப்பட்டு, கடுகடுத்து நின்ற அவரது முகம் திருமாலின் பத்தினி அமர்ந்திருக்கும் செந்தாமரை போல் மலர்ந்தது. அது மட்டுமல்ல, ராமானுஜரை அதுவரை ஒருமையில் அழைத்த நம்பிகள், திடீரென மரியாதையாக பேசினார். ராமானுஜரே! தங்கள் பணிவு என்னைக் கவர்ந்தது. ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தங்களது பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்? என்றவர், அனைவரும் எதிர் பாராத வகையில், மற்றொரு ஏவுகணையையும் வீசினார். ராமானுஜரே! இனி தாங்கள் தான் என் குரு. உங்கள் விரிந்த இதயத்தைப் பார்த்தால், நீங்கள் நிச்சயமாக அந்த மாலவனின் அம்சம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் தோன்றவில்லை. தாங்கள் முன்னால், மிகவும் தாழ்ந்த நிலையில் நிற்கும், நான் செய்த தவறை மன்னித்தருளுங்கள், ? என்றார். ராமானுஜர் அப்படியே நம்பிகளின் காலடிகளில் விழுந்து விட்டார். அன்பிற்குரிய ஆசிரியரே! என்ன வார்த்தை சொன்னீர்கள். தங்களைப் போன்ற மகாத்மாக்கள் இந்த சிறியவனிடம் மன்னிப்பு கேட்பதா? தாங்கள் எவ்வளவு சக்தி மிக்கவர் என்பதை தங்களாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. உலகையே உய்விக்கும் ஓம் நமோ நாராயண என்ற மந்திரம் தங்கள் திருவாயிலிருந்து வந்ததால், அதன் சக்தி பலமடங்கு பெற்றதாக இருந்தது. என்னைத் தங்கள் சீடனாக மட்டுமல்ல, மகனாக நினையுங்கள். தங்கள் தொண்டனாகவே நான் என்றும் இருப்பேன், என்றார்,. அந்த அரியகாட்சி கண்டு மக்கள் சிலை போல் நின்றனர். திருக்கோஷ்டியூர் நம்பி விடுவதாக இல்லை. ராமானுஜரே! தாங்கள் என் மகன் பொய்கையாழ்வானை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார். குருவின் கட்டளையை ஏற்று, பொய்கையாழ்வானுடன் திருக்கோஷ்டியூரில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் ராமானுஜர்.
இச்சம்பவம் மூலம் வாசகர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்த அன்றே அது செடியாகி மரமாகி காய் காய்த்து பழம் கையில் கிடைத்து விட வேண்டும் என்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். எதையும் உடனே அடைந்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், இறைவன் என்ன செய்கிறான். செடி வளர ஒரு மாதம், மரமாக மாற இரண்டு மாதம், பூ பூத்து காயாக மாற இரண்டு மாதம், பின் கனியாக மாற ஒருமாதம் என நம்மைக் காக்க வைக்கிறான். அப்படியானால் தான் கனிக்கு மதிப்பு. நேற்று விதை, இன்று கனி என்றால் கனிக்கு எப்படி மரியாதை இருக்கும்? இதுபோல் தான், திருக்கோஷ்டியூர் நம்பி மூலமாக ஒரு விளையாடலை அந்த ரங்கநாதன் நிகழ்த்திக் காட்டியுள்ளான் என எண்ண வேண்டியுள்ளது. ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து) அஞ்ஞானிகளுக்கு மிகச் சாதாணமாக பட்டிருக்கலாம். ஆனால், இதன் மதிப்பு என்ன என்பதை இச்சம்பவம் நிகழ்ந்ததன் மூலம் தான் உணர முடிகிறது. அதாவது, கஷ்டப்பட்டால் தான் எதுவும் கிடைக்கும். அப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பொருளையே கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை இருக்கும். இதற்காகத்தான் குழந்தைகள் கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. அவர்களுக்கு அப்பொருளின் மதிப்பை உணர்த்த வேண்டும். அப்படியானால் தான் அதை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குள் வரும். எதிர்கால வாழ்க்கைக்கு இப்பழக்கம் பெரிதும் உதவும்.
சரி... மீண்டும் கதைக்கு திரும்புவோம். இதை இன்னும் சில சம்பவங்கள் மூலமும் ராமானுஜர் நிகழ்த்திக் காட்டினார். ஒருமுறை ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான், ஒரு ஸ்லோகத்திற்கு பொருள் விளக்கம் கேட்டார். எல்லாவற்றையும் துறந்து, நானே கதியென சரணடைந்தால், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெறலாம், என்ற பொருளில் வரும் ஸ்லோகத்திற்குரிய விளக்கமே அவர் கேட்டது. ராமானுஜர் இதற்கு உடனடியாக விளக்கம் தரவில்லை. கூரேசா! நீ கேட்ட இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்வதற்கு எனது குரு திருக்கோஷ்டியூர் நம்பி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதற்கு கட்டுப்படுபவர்களே இதை அறியமுடியும், என்றார் ராமானுஜர். கூரேசா! நீ கேட்ட இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்வதற்கு எனது குரு திருக்கோஷ்டியூர் நம்பி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதற்கு கட்டுப்படுபவர்களே இதை அறியமுடியும், என்றார் ராமானுஜர். கூரேசர் அந்த நிபந்தனையை ஆவலுடன் செவிமடுத்தார். கூரேசா! இதன் பொருள் அறிய விரும்புபவர் ஒரு வருடகாலம் ஐம்புலன்களையும் அடக்கி, சிறிதும் ஆணவமின்றி, குருவுக்கு தொண்டு செய்ய வேண்டும். அவரே இதன் பொருள் அறிய முடியும், என்றார். அதற்கு ஆழ்வான், குருவே! தாங்கள் சொல்வதில் சிறு சந்தேகம். இந்த வாழ்க்கை நிலையற்றது. இன்னும் ஓராண்டு நான் வாழ்வேன் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படியானால், நான் இதன் பொருளை அறிய முடியாமலே போய்விடுவேனே, என்றார். சரி... இதற்கு பதிலாக காலத்தைக் குறைக்கும் மாற்று ஏற்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு மாத காலம் பிச்சையெடுத்து வாழ வேண்டும். அப்படி செய்வது ஓராண்டு கால புலனடக்கத்திற்கு ஒப்பாகும், என்றார் ராமானுஜர். கூரத்தாழ்வார் குருவின் சொல்லை ஏற்றார். ஒருமாதம் பிச்சையெடுத்தார். பிச்சையெடுக்கும் இடங்களில் அவமானம் ஏற்படுமே! அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். பொறுமையாக இருப்பவனே நினைத்ததை அடைய முடியும் என்ற தத்துவம் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஒரு மாத கால பிச்சை வாழ்க்கைக்கு பிறகு, ராமானுஜர் அப்பொருளை உபதேசித்தார். இதன் பிறகு ராமானுஜரின் மற்றொரு சீடரும், உறவினருமான முதலியாண்டான் இதே ஸ்லோகத்தின் உட்பொருளை அறிய ராமானுஜரை அணுக வந்தார். ராமானுஜர் அவருக்கு வைத்த பரீட்சை கடுமையானதாக இருந்தது.
முதலி! நீ என் சொந்தக்காரன். எனவே, நான் உனக்கு இந்த ஸ்லோகத்திற்குரிய பொருளைக் கற்றுத்தருவது முறையாக இராது எனக் கருதுகிறேன். ஒருவேளை நீ குற்றம் செய்தவனாக இருந்தால், என் உறவினன் என்ற முறையில் அது என் கண்ணில் படாது. எனவே, நீ திருக்கோஷ்டியூர் செல். அங்கு நம்பியிடம் சென்று, இதன் பொருளை அறிந்து கொள், என்றார். குருவின் சொல்லை ஏற்று, முதலியாண்டானும் அங்கு சென்றார். நம்பி அவரை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளவில்லை. அவர் பல முறை அலைந்தது கண்டு இரக்கப்பட்டு இறுதியாக, ராமானுஜர் போன்ற உயர்ந்தவர்கள் உறவினர்களாயினும், அவர்களது குணம் தெரிந்தே சீடர்களைத் தெரிவு செய்வர். நீ அவரையே சரணடை. அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள், எனச் சொல்லி அனுப்பி விட்டார். முதலியாண்டான் ராமானுஜரிடம் வந்து நடந்ததைச் சொன்னார். அந்நேரத்தில் பெரியநம்பியின் திருமகள் அத்துழாய் அங்கு வந்தாள். அவள் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது. அண்ணா! தங்களைக் காண அப்பா என்னை அனுப்பி வைத்தார். என் பிரச்சனையைத் தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும், என்றாள். ராமானுஜர் அவளிடம் மிகவும் கனிவுடன், முதலில் இங்கே உட்கார். அமைதியாயிரு. உன் பிரச்சனையை தயங்காமல் சொல், என்றார். அண்ணா! வீட்டில் எனக்கு என் மாமியாரால் பிரச்னை. நான் தினமும் மிகவும் தூரத்திலுள்ள குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன். அது காட்டுப்பாதை. மிகவும் சிரமப்படுகிறேன். காலையும், மாலையும் புதுத்தண்ணீர் எடுத்து வந்து தான் சமையல் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கஷ்டமாக உள்ளது என என் மாமியாரிடம் வாய் தவறி சொல்லி விட்டேன். அவ்வளவு தான். அவளுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறிவிட்டது.
ஏ அத்துழாய், மனதில் பெரிய சீமான் வீட்டுப் பெண்ணென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு அலைந்து திரிந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை என்றால், உன் பிறந்த வீட்டிலிருந்து ஒரு வேலைக்காரனை அழைத்து வர வேண்டியது தானே என கத்தினாள். என் மனது மிகவும் கஷ்டப்பட்டது. அப்பாவிடம் வந்து, மாமியார் சத்தம் போட்டதை சொன்னேன். அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து, உன் அண்ணன் ராமானுஜனிடமே உன் பிரச்சனையைச் சொல். அவன் தீர்த்து வைப்பான் எனச் சொல்லி அனுப்பி வைத்தார். தாங்கள் தான் என் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும், என்றாள். ராமானுஜர் அவளைத் தேற்றினார். சகோதரி! கவலை கொள்ளாதே, இது சிறு விஷயம். இதோ! இந்த முதலியாண்டானை உன்னுடன் அழைத்துச் செல். அவன் உன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை, தண்ணீர் எடுக்கும் வேலையை எல்லாம் கவனித்துக் கொள்வான், என்றார். முதலியாண்டான் குருவின் சொல்லை சிரமேல் ஏற்றார். அத்துழாயுடன் அவளது ஊருக்குச் சென்றார். அவளது வீட்டில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து, அவள் இட்ட ஏவல்களை முகம் சுளிக்காமல் செய்து வந்தார். அவ்வூர் மக்கள் முதலியாண்டானை சாதாரண சமையல்காரனாகவே நினைத்தனர். ஒருநாள் அவ்வூருக்கு ஒரு பெரியவர் வந்தார். வேதத்திலுள்ள ஒரு மந்திரத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். முதலியாண்டான் அக்கூட்டத்திற்குச் சென்றார். அந்த பெரியவர், தப்பும் தவறுமாக பொருள் சொல்வதைக் கேட்ட முதலியாண்டான், அவரது பேச்சை இடைமறித்தார். பெரியவரே! தாங்கள் சொல்லும் பொருள் சரியானதல்ல, என்று கூறியதும், பெரியவருக்கு மட்டுமல்ல, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. நீ சாதாரண சமையல்காரன். உனக்கு வேதத்தைப் பற்றி என்ன தெரியும். பேசாமல் உட்கார், என்றனர்.
முதலியாண்டான் அவர்கள் சொன்னதற்காக உணர்ச்சிவசப்படவில்லை. மிகவும் அமைதியுடன், என்னை பேச அனுமதியுங்கள். நான் சொல்லும் பொருள் சரியில்லை என தாங்கள் முடிவெடுத்தால், இங்கிருந்து நான் வெளியேறி விடுகிறேன், என்றவர், அம்மந்திரத்துக்குரிய பொருளை மிகவும் எளிமையாகவும், விளக்கமாகவும் சொன்னார். கூட்டம் அசந்து விட்டது. அந்தப் பெரியவர் மேடையில் இருந்து இறங்கி, முதலியாண்டானின் கால்களிலேயே விழுந்து, தவறான பொருள் சொன்னதற்காக தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இம்மந்திரத்துக்கு பொருள் தெரிகிறதென்றால், நீங்கள் சாதாரணமானவராக இருக்க முடியாது. நீங்கள் சமையல்காரர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள் யார்? என்றார். ஒரு பெரியவர் அவரிடம், ஆஹா... எவ்வளவு பெரிய மகானின் சீடர் தாங்கள். நாங்கள் தினமும் காலையில் எழுந்ததும் அந்த மகான் இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தாங்களா அத்துழாய் வீட்டில் சமையல்காரராக இருந்தீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?என்றார். முதலியாண்டான் நடந்த விபரங்களை எல்லாம் சொன்னார். குருவின் கட்டளையை ஏற்று, அகந்தையை அழித்து, சாதாரண வேலை செய்த அவரைப் பாராட்டினர். உடனடியாக அவர்கள் ஸ்ரீரங்கம் புறப்பட்டனர். ராமானுஜரைச் சந்தித்து, முதலியாண்டானின் பெருமையை எடுத்துக் கூறினர். மகானே! தாங்கள் அவருக்கு வைத்த சோதனை போதும். தாங்கள் மீண்டும் அவரை ஸ்ரீரங்கம் அழைத்து, மந்திர உபதேசம் செய்யுங்கள், என்றனர். ராமானுஜர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் சீடனை பெருமைப்படுத்த எண்ணிய அவர், அத்துழாயின் வீட்டுக்கே வந்துவிட்டார். சீடனைப் பாராட்டி மந்திரத்தின் பொருளை உபதேசித்தார்.
இப்படியாக பல அற்புதங்களைச் செய்து சீடர்களை அதிசயிக்கச் செய்தார் ராமானுஜர். ஒருமுறை பெரியநம்பி கூட, ராமானுஜரின் கால்களில் விழுந்து வணங்கினார். சீடர்கள் அதிர்ந்தனர். குருவே! உங்கள் குரு உங்கள் கால்களில் விழுகிறார். நீங்கள் அதைத் தடுக்கவில்லையே, என்றனர் சற்றே கோபத்துடன். அப்போது பெரிய நம்பியே சொன்னார். சீடர்களே! வருந்த வேண்டாம். நான் இவரிடம் நம் குரு ஆளவந்தாரைக் கண்டேன்; அதனால் அவரைப் பணிந்தேன், என்றார். ராமானுஜர் சீடர்களிடம், ஒரு சீடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியநம்பி நமக்கு காட்டியருளினார். அதனால் தான் அதைத் தடுக்காமல் இருந்தேன், என்றார். இந்நிலையில் ராமானுஜருக்கு கடும் சோதனை வந்தது. காஞ்சிபுரத்தில் கிரிமிகண்டன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தீவிர சிவபக்தன். ஸ்ரீரங்கத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமானுஜர் வைணவநெறி வளர்ப்பது குறித்து கவலையடைந்த அவன், ராமானுஜரை அழைத்து வரும்படி சில பணியாளர்களை அனுப்பினான். பணியாளர்கள் எல்லாருமே பருமனான தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் வந்து ராமானுஜர் எங்கே? என விசாரித்தனர். மடத்தில் ராமானுஜர் இருப்பதை அறிந்து அங்கு சென்ற போது, விஷயம் அவரது உள்ளார்ந்த சீடரான கூரத்தாழ்வானுக்கு தெரிந்து விட்டது. அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார். குருவே! கிரிமிகண்டன் தன் ஆட்களை ஏவி, வைணவத்தை மட்டுமல்ல, உங்களையே அழிக்க ஆட்களை ஏவியுள்ளான். அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரியாது. எனவே நீங்கள் என் வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு இங்கிருந்து தப்பி விடுங்கள். நான் தங்கள் காவியாடையுடன் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். ஆனால், நீங்கள் இவ்வுலகுக்கு தேவை. உங்களால் உலக மக்கள் உய்வடைய வேண்டும். என்னை அனுப்புங்கள், என்றார்.
ராமானுஜர் சற்றே யோசித்தார். பின்னர் சரியென ஒப்புக்கொண்டார். உடனடியாக இருவரும் உடையை மாற்றிக் கொண்டனர். ராமானுஜர் அங்கிருந்து தப்பி விட்டார். கூரத்தாழ்வான் வெளியே வந்தார். அவரை ராமானுஜர் என நினைத்துக் கொண்ட அந்த குண்டர்கள் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். மன்னன் கிரிமிகண்டன் அவரை வரவேற்கவே செய்தான். ராமானுஜர் வைணவர் என்றாலும் கூட அவர் மீது மரியாதை வைத்திருந்தான். கொள்கையில் இருந்த கருத்து வேறுபாடு மட்டுமே அவனது கோபத்துக்கு காரணமாக இருந்தது. இதற்கெல்லாம் இன்னொரு காரணமும் உண்டு. ராமானுஜரின் ஆன்மிக வாழ்வின் துவக்கத்தில் அவர் ஒரு இளவரசியிடம் இருந்த பிரம்ம ராட்சஸை ஓட்டினார் அல்லவா? அந்த இளவரசியின் உடன்பிறந்த தம்பி தான் கிரிமிகண்டன். ஒரு காலத்தில், தன் சகோதரியைக் குணப்படுத்தியவர் ராமானுஜர் என்ற வகையில் அவன் இவர் மீது மதிப்பு வைத்திருந்தான். வந்தவரை ராமானுஜர் என்று நினைத்துக் கொண்ட அவன், ராமானுஜரே! தங்களுடன் வேறு எந்த விரோதமும் எனக்கில்லை. இவ்வுலகில் சைவம் மட்டுமே தழைக்க வேண்டும். சைவமே அனைத்துக்கும் அடிப்படை. சிவனே முழுமுதற் கடவுள். அவரையே தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் வழிபட வேண்டும், என்றான். கூரத்தாழ்வார் விடவில்லை. சிவனை விடவும் த்ரோணம் பெரிது என்றார் அவர். இவை அளவைகளைக் குறிக்கும். சிவன் என்றால் மரக்கால். த்ரோணம் என்றால் பதக்கு என்ற அளவை. மரக்காலை விட பதக்கு அளவில் கூடியது. திருமாலே உலகின் முதற்பொருள். அந்த பரந்தாமனின் திருவடிகளுக்கு மட்டுமே என் தலை வணங்கும், என்றார் ஆவேசமாக. அவ்வளவு தான். அங்கிருந்த சிவப்புலவர்கள் அவர் மீது பாய்ந்து விட்டனர். வாதப்பிரதிவாதம் வெகுநேரமாக நடந்தது.
மன்னனுக்கு ஆத்திரம். இப்போது மரியாதையை விடுத்து, யோவ் சாமியாரே! எங்கள் சிவனையா பழித்தீர். என் சகோதரியை குணப்படுத்திய நன்றிக்காக உம்மை உயிரோடு விடுகிறேன். சிவனை பெரியவர் என ஒப்புக் கொள்கிறீரா இல்லையா? என்றான் சிம்மாசனத்தில் இருந்து எழுந்தபடி. கூரத்தாழ்வார் அசையவில்லை. அவர் முற்றும் தெளிந்த ஞானி. ஞானிகள் உயிருக்கு அஞ்சுவதில்லை. என்ன நடந்தாலும் சரி, தூக்கு மேடைக்கே சென்றாலும் சரி...தன் வாதமே சரியென்பதில் அவர் தளர்ந்து கொடுக்கவே இல்லை. மன்னன் ஏவலர்களை அழைத்தான். இந்த திமிர் பிடித்தவனை இழுத்துச் செல்லுங்கள். இவன் தலையைக் கொய்தாலும் தவறில்லை. இருந்தாலும் செய்ந்நன்றி தடுக்கிறது. இவனது கண்களை பழுத்த கம்பி கொண்டு குத்தி குருடாக்கி விடுங்கள், என உத்தரவிட்டான். ஏவலர்கள் கூரத்தாழ்வரின் கண்களைக் குருடாக்கினர். அவர் அந்த ஏவலர்களிடம், என் சகோதரர்களே! கண்ணிருக்கும் போது தெரிந்த மாய உலகம் இப்போது மறைந்து முற்றிலும் பரந்தாமன் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறான். இதற்காக உங்களுக்கு நன்றி. நீவிர் பல்லாண்டு வாழ்க, என்றார். அவர் தங்களை வாழ்த்தியதைக் கண்ட அந்த காவலர்கள் அவர் மீது கருணை கொண்டு, ஒரு பிச்சைக்காரனை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து, இந்த பெரியவரை ஸ்ரீரங்கத்தில் கொண்டு விட்டுவிடு, என்றனர். அவர்கள் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். இதற்குள் இங்கிருந்து தப்பிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தின் மேற்கே இருந்த அடர்ந்த காட்டுக்குள் சீடர்களுடன் புகுந்தார். கால்களில் முள் தைத்தது. ஆங்காங்கே கற்குவயில் பதம் பார்த்தது. அவர்கள் களைத்து தாகம், பசியோடு காட்டில் சுற்றி, ஏதும் கிடைக்காமல் பாதி மயக்கத்தில் ஓரிடத்தில் அமர்ந்தனர். அப்போது காட்டுக்குள் இருந்து கும்பலாக ஒரு கூட்டத்தினர் கன்னங்கரேலென்ற நிறத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
கும்பலாக வந்தவர்கள் அந்த காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தினர். அவர்களது கையில் பழங்களும், விறகும் இருந்தன. அவற்றை ராமானுஜர் முன்பு அவர்கள் வைத்தனர். ஜாதியில் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது அன்பான காணிக்கையை ஏற்றுக்கொண்டார் ராமானுஜர். இதனிடையே ராமானுஜருக்குப் பதிலாக மன்னன் கிரிமிகண்டனிடம் சிக்கி கண்களை இழந்த கூரத்தாழ்வான், ராமானுஜரைத் தேடி வந்தார். இச்சம்பவத்துக்கு பிறகு கிரிமிகண்டன் இறந்து விட்டதாக அவர் அறிந்தார். ராமானுஜருக்கு இனி எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை உணர்ந்த அவர் ராமானுஜரை தரிசித்தார். தனக்காக கண் இழந்த கூரத்தாழ்வானை ராமானுஜர் அன்புடன் தழுவிக் ண்டார். கூரத்தாழ்வா! கலங்காதே, உனக்கு மீண்டும் கண் கிடைக்கும். நீ காஞ்சிபுரத்திற்கு சென்று வரதராஜப்பெருமாளிடம், கண்களை மீண்டும் தா எனக்கேள். அவன் உனக்கு கொடுப்பான்,என்றார். அதன்படியே கூரத்தாழ்வான் அங்கு சென்று கண்களைப்பெற்றார். இரண்டாண்டுகள் இப்படியே கழிந்தன. கூரத்தாழ்வான் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையான அவர் பெருமாளின் திருவடிகளை அடைந்தார். அவரது மறைவால் ராமானுஜர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். கண்களில் நீர் பெருக,கூரத்தாழ்வானின் மகன் பராசர பட்டர் இனி உங்களது தலைவராக இருப்பார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்,என்று கூறி தலையில் மலர்க்கிரீடம் சூட்டினார். அவரை அணைத்துக் கொண்டு தன் சக்தி முழுவதையும் அவருக்குள் செலுத்தினார். இந்த சம்பவம் நடந்த போது ராமானுஜருக்கு 60 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. 120 வயது வரை அங்கேயே இருந்தார். ஒருநாள் தன்னுடைய சீடர்களிடம் பல ஆன்மிக ரகசிய தத்துவார்த்தங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.
திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மவுனமானவர், ஜடம் போல அசைவற்று இருந்தார். சீடர்கள் கலங்கிப்போனார்கள். அவரை அசைத்துப்பார்த்தும் பலனில்லாமல் போனது. பதைபதைப்புடன், அவர் சுயநினைவுக்கு வரும் வரையில் பொறுத்திருந்தனர். சற்று நேரம் கழித்து அவர் கண் திறந்த பிறகே, அவர்களுக்கு சென்ற உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. திடீரென ஜடநிலைக்கு சென்றது குறித்து அவர்கள் அவரிடம் விசாரித்தனர். அன்பர்களே! என்னை யாரோ கட்டிப்போட்டது போல இருந்தது. கண்மூடி அதுபற்றி சிந்தித்தேன். என்னையே மறந்து விட்டேன். நான் பிறந்த ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்பர்கள் எனக்கு ஒரு விக்ரகம் செய்துள்ளனர். கல்லால் செய்யப்பட்ட அந்த விக்ரகத்தை சற்று முன் பிரதிஷ்டை செய்து, அவர்களது அன்பால் என்னைக்கட்டிப்போட்டு விட்டனர். அதனால் தான் அப்படி இருந்தேன்,என்றார். இப்படி 120 ஆண்டுகள் இந்த உலகத்தில் ராமராஜ்யத்தை நடத்திய ராமானுஜர் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்கு சித்தமானார். தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்து தன் கருத்தை சொன்னார். சீடர்களும் பக்தர்களும் அதைக்கேட்டு மனம் குலைந்தனர். கண்ணீர் விட்டு அழுதனர். ராமானுஜர் அவர்களை தேற்றினார். என் அன்புக்குரிய குழந்தைகளே! ஞானிகள் மரணம் கண்டு துன்பப்படுவதில்லை. ஆனால், நீங்கள் ஏதோ மயக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்கள். மரணத்திற்காக யாரும் அழக்கூடாது,என்றார். சீடர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. அழுது கொண்டே இருந்தனர். குருவே! உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. இன்னும் சில நாட்களாவது எங்களோடு இருந்து அருள் செய்ய வேண்டும். உங்கள் திருமேனி இவ்வுலகில் வாழும் காலத்தை நீட்டிக்க வேண்டும்,என்றனர்.
ராமானுஜர் அவர்களிடம்,உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால், இன்னும் 3 நாட்கள் மட்டுமே உங்களுடன் இருப்பேன்,என்றார். அந்த 3 நாட்களிலும் தன் சீடர்களுக்கு 74 போதனைகளை செய்தார். இந்த உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி நற்கதி அடைய வலியுறுத்தினார். இதைக்கேட்டபிறகு சீடர்களின் மனம் தெம்படைந்தது. மரணம் குறித்த பயம் நீங்கியது. அவர்கள் ராமானுஜரின் பாதங்களில் பணிந்து,குருவே! தங்கள் திருமேனி அழிந்தாலும் கூட அது அழியக்கூடாது. அத்திருமேனியைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும், என பணிவுடன் கேட்டனர். ராமானுஜர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்றே நாட்களில் அவரைப்போன்ற சிலை வடிக்கப்பட்டது. அந்த சிலையை காவிரியில் நீராட்டினர். அதை ஒரு பீடத்தில் நிலை நிறுத்தினர். தன் சீடர்களிடம்,அன்புக்குழந்தைகளே! இது எனது இரண்டாவது ஆத்மா. நானும் இந்த வடிவமும் ஒன்றே. எனது நிஜமான திருமேனி வயது காரணமாக மெலிந்து விட்டது. எனவே இந்த புதிய திருமேனியில் நான் குடியிருக்கப் போகிறேன்,என்றார். தனது தலையை தனது சீடர் கோவிந்தன் எனப்படும் எம்பாரின் மடியில் சாய்த்துக்கொண்டார். திருவடிகளை மற்றொரு சீடரான வடுகநம்பியின் மடியில் வைத்தார். தனது குருவான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் பார்த்தபடியே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே பரமபதத்தை அடைந்தார். அன்று சக ஆண்டு 1059 (கி.பி. 1137) மாசி மாதம் வளர்பிறை தசமி திதியாகும். இதன் பிறகு அவர் நியமித்த பராசர பட்டரின் தலைமையில் வைணவர்கள் ராமானுஜரின் நல்லாசியுடன் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து பேறு பெற்றனர்.
ஸ்ரீமத்ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்தார். அதில் கடைசி 60 வருடங்கள் ஸ்ரீரங்கத்திலே இருந்து விட்டார். இறுதியாக ஸ்ரீரங்கநாதனிடம் இந்த உடலில் இருந்து விடுதலை கேட்டார். ஸ்ரீரங்கநாதன் முதலில் மறுத்தாலும் பின்னர் சரி என்று பதிலளித்தார். அந்த நாள் சந்தோஷமாக மடத்திற்கு வந்து தன்னுடைய விருப்பத்தை சிஷ்யர்களுக்கு சொன்னார். அவர்களுக்கு அடக்க முடியாத துக்கம் வந்தது. ராமானுஜர் அவர்களை சமாதனப்படுத்தி அவர்களனைவரையும் இரவில் அழைத்து சந்தித்து தனது சரமச்செய்தியை இவ்விதமாகக் கூறினார்.
நீங்கள் மந்திரோபதேசம் செய்த குருவினை எவ்வாறு கவுரவிப்பீர்களோ அவ்வாறு ஸ்ரீவைஷ்ணவர் (விஷ்ணு பக்தர்)களை கவுரவிக்க வேண்டும். பூர்வாசிரியார்களின் உபதேசங்களை முழுமையாக நம்பவேண்டும். நீங்கள் எப்பொழுதும் இந்திரியங்களுக்கு அடிமையாகக் கூடாது. லோக ஞானத்தில் திருப்தி கொள்ளக்கூடாது. பகவானின் அனந்த கல்யாண குணங்கள், அவருடைய படைப்புகளில் உள்ள தொடர்புகளை குறிப்பிடும். கிரந்தங்களை தினமும் படித்தல் வேண்டும். உங்கள் குருவின் மூலம் ஞானோதயம் ஏற்பட்டால் உங்களிடமுள்ள தீயக்குணங்கள் தானாக குறைந்து விடும். உங்களுடைய விருப்பங்களை ஆலோசனைகளை அலட்சியம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
பகவான் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் எப்படி செய்கிறோமோ அதேபோல் பக்தர்கள் மீதும் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் செய்தல் வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்பவர்கள் துரிதமாக பகவான் பாதையை சேர்வார்கள். பகவானுக்கு, பக்தர்களுக்கு சேவைகள் செய்யாவிட்டால் மோட்சம் கிடைக்காது. ஸ்ரீவைஷ்ணவராக பிறத்தலால் மட்டும் எவ்விதமான நன்மைகள் இல்லை. குடும்ப பாசபந்தங்களிலிருந்து விடுபட்டு பகவான் நினைவாகவே இருத்தல் வேண்டும்.
உங்களுக்கு உபதேசம் செய்த குருவின் மகிமைகளை தினமும் ஒரு மணி நேரமாவது நினைத்தல் வேண்டும். தினந்தோறும் ஆசாரியர் மற்றும் ஆழ்வார்கள் திவ்ய கிரந்தங்களை படித்தல் வேண்டும். பிரபத்திமார்க்கத்தில் இருப்பவர்களை நண்பர்களாக செய்து கொள்ளுதல் வேண்டும். பிரபத்தி மார்க்கமல்லாத மார்க்கத்தில் செல்லுதல் கூடாது. செல்வம் சேர்க்கின்றவர்களுடனும், தீய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடனும் நட்பு கூடாது. பகவானிற்கு சேவையை செய்யும் பக்தர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். குலம் பிரிவினை பார்த்து ஒருவரை மதிப்பிடக்கூடாது. திவ்ய தேசங்களில் உள்ள விக்ரஹங்களை வெறும் சிலைகளாகவும், நமக்க மந்திரோபதேசம் கற்று கொடுத்த குருவினை வெறும் மனிதனாகவும், பக்தர்களின் பாபங்களை போக்குகின்ற ஸ்ரீபாத தீர்த்தத்தினை வெறும் நீராகவும், சர்வஜகத் நாராயணனை இதர தெய்வங்களுடன் ஒப்பிடுபவர்கள் நரகத்திற்கு செல்லுவார்கள் என்பதை உணர வேண்டும்.
எங்களுடைய இறுதி காலத்திற்கு முன்னர் வரை நாங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிஷ்யர்கள் கேட்க அதற்கு இராமாநுஜர் பதிலளித்தார்.
முழுமையாக தெய்வத்தை நினைப்பவர்கள் தம்முடைய வருங்காலத்தை நினைத்தல்கூடாது. நீங்கள் பகவானின் சொத்து. ஆகையால் அவரே உங்களுடைய நன்மை, தீமைக்கு முழுபொறுப்பாவார். உங்களுக்காக நீங்களே வருந்தினால் அது எதற்கும் உதவாமல் போய்விடும். அது உங்களிடம் உள்ள குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தும். உங்கள் வாழ்க்கை உங்களுடைய பூர்வ ஜென்ம கர்மத்தின் அடிப்படையில் அமைகிறது. அதில் அவனைப் பற்றி அறிய வேண்டிய அவசியமில்லை. உங்கள் பணிகளை உங்கள் கடமைகளுக்காக மட்டுமல்லாமல் பகவத் சேவையின் பகுதியாக நினைத்தல் வேண்டும்.
ஸ்ரீபாஷ்யம் படித்து மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும். இது மிகவும் பகவானுக்கு விருப்பமான ஒன்றாகும். இது சாத்தியமில்லாத போது சடகோப முனிவர் எழுதிய இதர கிரந்தங்களை படித்து, தகுந்த சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது. இது சாத்தியமில்லாதபோது புண்ணிய க்ஷேத்திரங்களில் பகவத்சேவை செய்தல் வேண்டும். இது சாத்தியமில்லையெனில் ஓர் குடில் அமைத்து அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். இதுவும் முடியவில்லையெனில் நீங்கள் இருக்குமிடத்தில் த்வய மந்திரத்தை ஜபித்து கொண்டிருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட எதுவும் சாத்தியமில்லையெனில் பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ள ஸ்ரீவைஷ்ணவரிடம் சென்று உங்களிடம் அவருடைய தயை இருக்கும்படி நடந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு துளி கோபம், அகந்தை கூட இல்லாமல் அவர்கள் சொல்லுவதை செய்தல் வேண்டும். இதுவே மோட்சத்தின் மார்க்கம்.
தொலைநோக்குப் பார்வையால் உங்களுடைய நண்பர்கள், பகைவர்கள், உதாசிணப்படுத்துபவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். விஷ்ணு பக்தர்கள் உங்களுடைய நண்பர்கள். பகவானை நினைக்காதவர்கள் உங்களுடைய பகைவர்கள் (அ) எதிரிகள். உலக வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்பவர்கள் உதாசிணப்படுத்துபவர்கள். உங்கள் நண்பர்களை பார்த்தால் நிறைந்த தாம்பூல தட்டினை பார்த்தது போல் மகிழ வேண்டும். பகைவர்களைப் பார்த்தால் அக்னி நல்லது திருடனைப் பார்த்ததுபோல் பயப்பட வேண்டும். ஸ்ரீவைஷ்ணவரோடு இருப்பது உங்களுக்கு ஆன்மீக உயர்நிலையை அளிக்கும். நீங்கள் பகைவர்களுடன் ஒரு பொழுதும் பழக வேண்டாம். அவர்களை கவுரவித்தலால் கிடைத்திடும் நன்மைக்காக அவர்களிடம் பழகத் தேவையில்லை. அவ்வாறு பழகினால் பகவானுக்கு எதிரியாவது உறுதி. எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நடவடிக்கைகள் தூய்மையாக இருக்கும். மற்றவர்களிடம் குறைகளைத் தேடாதீர்கள். குறையில்லா மனிதன் இல்லை. மற்றவர்களிடம் குறை தேடும் அதிகாரம் எவருக்கும் இல்லை. உங்களுக்கு தேவையானவை எல்லாம் இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இருத்தல் வேண்டும்.
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்கிற பகவான் வாக்கின்படி நம்பிக்கை கொள்ள வேண்டும்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |