Digital Library
Home Books
Perumizhalai Kurumba Nayanar is one of the 63 revered Nayanmars, the devoted saints of Tamil Shaivism. He is celebrated for his deep devotion to Lord Shiva and his significant contributions to the Shaivite tradition.
பெருமிழலை, பாண்டிய நாட்டின் ஓர் உள்நாடாக அமைந்துள்ளது. இஃது மிழலை நாட்டின் தலைநகரம். இப்பதியிலே, குறும்பர் மரபிலே அவதரித்த பெருமிழலைக்குறும்பனார் எனனும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவனிடத்தும், அடியார்களிடத்தும் இடையறாத அன்பும், பக்தியும் கொணடிருந்தார். சிவனடியார்களின் முன்பு, தம்மை மிக்க எளியோனாகவே எண்ணிக் கொள்வார். அடியார்களை வணங்கி வரவேற்று விருந்தோம்பல் அறம் அறிந்து போற்றுவதோடு அவர்களிடும் எல்லா ஏவல்களையும் சிரமேற் கொண்டு பணிவோடு செய்தார்.
அதனால் இவ்வடியாரது இல்லத்தில் எப்பொழுதும் சிவ அன்பர்கள் வந்து போன வண்ணமாகவே இருப்பர். இத்திருத்தொண்டருக்கு, சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று. இறைவன் திருநாமத்தினைப் போற்றி வந்ததோடல்லாமல், சுந்தரரின் புகழைப்பற்றியும் பேசி வந்தார். சுந்தரரின் நாமத்தை மனத்தாலும், காயங்களாலும், வாக்காலும், துதித்து வழிபட்டார். நாளடைவில் சுந்தர மூர்த்தி நாயனாரின் அன்பிற்குரிய தொண்டராகவும் மாறிவிட்டார். இறைவனின் திருவருளைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிவணங்கிப் போற்றுதலால் பரமன் அருளையே பெறலாம் என்ற உறுதி வழியே வாழ்ந்த இப்பெரியார் உபாசனையைத் தொடங்கினார். உபாசனையின் சக்தியால் குறும்பனாருக்கு அஷ்டமாசித்திகளும் கைக்கு வந்தன.
சித்தத்தால் எதையும் உணரும் அரும்பெரும் சக்தியைப் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சித்தத்தால் கண்டு களித்து பெருமகிழ்ச்சி கொண்டார். இவ்வாறு சுந்தரரைத்தியானம் செய்து வந்த பெருமிழலைக் குறும்பனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொடுங்கோளூரில் இருந்தபடியே வெள்ளானை மீதமர்ந்த கயிலைமலை போகிறார் என்ற நிலையைத் தம் சித்தத்தின் மகிமையால் தெரிந்து கொண்டார். அவர் மனம் துடித்தது.
மேற்கொண்டு உலகில் வாழ அவர் விரும்பவில்லை. கண்ணில் கருவிழி போன்ற சிறந்த சிவத்தொண்டரை விட்டுப் பிரிந்து நான் மட்டும் இந்த மண்ணில் உயிர் வாழ்வதா? அத்தொண்டர் திருக்கயிலைமலையை அடையும் முன்பே யாம் எம் யோக நெறியால் கைலாயம் சென்றே தீருவோம் என்று தமக்குள் உறுதி பூண்டார். எம்பெருமான் திருவடியை அடையத் துணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் மீது தாம் கொண்டுள்ள பக்தியின் வன்மையால் தமது சித்தயோக முயற்சியினால் சுந்தரர் கயிலை செல்வதற்கு முதல் நாளே தம் உயிரை, சடலத்தை விட்டு நீங்கும் வண்ணம் செய்தார். கயிலையை அடைந்து அரனார் அடிமலர் நீழலில் வைகினார்.
குருபூஜை: பெருமிழலைக் குறும்ப நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பெருமிழலை குறும்பர்க்கு அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |