இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை

Pavaththiram Marugena Paavai Nootra Kaathai likely explores the story of a young maiden who initially sets out on a divine or spiritual path but later turns away from it. The narrative examines her motivations, the circumstances leading to her decision, and the consequences of her choice.


முப்பதாவது பவத்திற மறுகெனப் பாவை நோற்ற பாட்டு


அஃதாவது-பிறப்பறுக என்று குறிக்கொண்டு மணிமேகலை நோன்பு செய்த வரலாறு கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்:- முன் காதையில் அறவணவடிகளார் மெய்யுணர்தற்கு ஒருதலையாக முற்பட அறிந்துகொள்ள வேண்டிய அளவைகளையும் அவற்றின் போலிகளையும் மணிமேகலைக்கு அறிவுறுத்தினராக; இந்தக் காதையில் அவ்வடிகளார் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய தத்துவங்களையும் அவற்றை மேற்கொண்டொழுகுமாற்றையும் செவியறிவுறுத்த அவற்றையெல்லாம் நன்குணர்ந்து கொண்ட மணிமேகலை அவ்வறநெறி நின்று பிறப்பற நோன்பு நோற்ற செய்திகளும் பிறவும் கூறப்படும்.

தானம் தாங்கிச் சீலம் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத் திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின்
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழியத் தோன்றி
போதி மூலம் பொருந்தியிருந்து 30-010

மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அணத் தொடர்தலின்
மண்டில வகையாய் அறியக் காட்டி
எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி 30-020

ஈங்கு இது இல்லாவழி இல்லாகி
ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பின் தோற்றம் எனச்
சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம் என நோக்க 30-030

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப்
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றி 30-040

போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 30-050

பேதைமை என்பது யாது? என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 30-060

கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாது? என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 30-070

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
நல்வினை என்பது யாது? என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 30-080

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயுங்காலை
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 30-090

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசைஇய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின்
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 30-100

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉருத் தன்மை
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அரூரு ஆகும்
அருஉருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 30-110

வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும் 30-120

உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் 30-130

சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடை இல் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின் 30-140

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 30-150

கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும்
உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதுங்காலை
இறந்த காலம் என்னல் வேண்டும் 30-160

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்றம் என்று இவை சொல்லுங்காலை
எதிர்காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்று இவை 30-170

புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே 30-180

அவலம் அரற்றுக் கவலை கையாறு என
நுவலப் படுவன நோய் ஆகும்மே
அந் நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 30-190

அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந் 30-200

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச்
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு
உள்ளது சார்ந்த உள் வழக்காகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 30-210

உள்ளது சார்ந்த இல் வழக்காகும்
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் 30-220

வீற்று வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன்
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் 30-230

செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத்
தோன்றியது கெடுமோ? கெடாதோ? என்றால்
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்
செத்தான் பிறப்பானோ? பிறவானோ? 30-240

என்று செப்பின்
பற்று இறந்தானோ? அல் மகனோ? எனல்
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்
என்றால் எம் முட்டைக்கு எப் பனை என்றல்
வாய் வாளாமை ஆகாயப் பூப்
பழைதோ, புதிதோ? என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது 30-250

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல்
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு! என்று 30-260

முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்டத்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத் திறம் அறுக! எனப் பாவை நோற்றனள் என் 30-264

உரை

மணிமேகலை புத்த தன்ம சங்கம் என்னும் முத்திறமணியையும் மும்முறை வணங்கிச் சரணாகதியடைதல்

1-5 : தானம்................அடைந்தபின்

(இதன்பொருள்) தானந் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பின் புகுந்ததை உணர்ந்தோள்-மணிமேகலை நல்லாள் பண்டும் பண்டும் பலப்பல பிறப்பிலே தான முதலிய நல்லறங்களை மேற்கொண்டு அவ்வந் நிலைக்கேற்ற நல்லொழுக்கத்திலே பிறழாது ஒழுகி அடிப்பட்டு வருதலாலே அவற்றின் பயனாக இப்பிறப்பிலே முற்பிறப்பையும் அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அறியும் பேறு பெற்றவள் அப்பயன் பின்னும் பெருகுதலாலே; புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கி-புத்தபெருமானும் அவன் திருவாய் மலர்ந்தருளிய அறங்களும் அவ்வறநெறி நின்றொழுகும் சங்கத்தாரும் ஆகிய மூவகைப்பட்ட மாணிக்கங்களையும் மூன்று முறை மனமொழி மெய் என்னும் மூன்று கருவிகளாலும் வணங்கி; சரணாகதியாய்ச் சரண்சென்று அடைந்தபின்-அச்சங்கத்தார்பால் தஞ்சம் புகுந்து அவர் திருவடிகளை எய்திய பின்னர் என்க.

(விளக்கம்)
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
அஃதிலார் மேற்கொள்வது (குறள்-243)

என்பது பற்றி தானந் தாங்கிச் சீலந் தலைநின்று என இவற்றை ஏதுவாக்கினார். போன பிறப்பிற் புகுந்ததை உணர்தற்கும் முத்திறமணியை வணங்குதற்கும் சரணாகதி புகுதற்கும் எல்லாம் பொதுவாதலின் ஏதுவை முற்பட விதந்தோதினர். தானம்-தானபாரமிதை. சீலம்-சீலபாரமிதை. இவை பாரமிதை பத்தனுள் முன்னிற்பவை. இவற்றை,

தானம் சீலமும் பொறை தக்கதாய வீரியம்
ஊனமில் தியானமே யுணர்ச்சியோடு பாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையும்
ஞானமீரைம் பாரமீதை (நீலகேசி-354)

என்பதனானும் உணர்க. இவற்றுள், தானபாரமிதை யாவது-தானம் நிறைப்பது. அது குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டான் அல்லனே என்பதனாற் பெறப்படும்.

சீலபாரமிதையாவது ஒழுக்கம் நிறைத்தல். அது விநயபிடகத்துச் சொன்னவா றெழுகுதல். சீலம் எனினும் ஒழுக்கம் எனினும் ஒக்கும். இவை-பஞ்சசீலம் அட்டாங்க சீலம் தசசீலம் என மூவகைப்படும். ஈண்டு-

தோடா ரிலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழன் மேயவரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளு முயல்வார்
வீடாத வின்ப நெறிசேர்வர் துன்ப வினைசேர்த னாளு மிலரே

எனவரும் பழம்பாடலு முணர்க. (வீர-யாப்பு-3. மேற்)

புத்த தன்ம சங்கம் என்பது பவுத்தருடைய சமயத்தின் தலைசிறந்த மூன்றுறுப்புகள்.

புத்தனும் தன்மமும் சங்கமும் என எண்ணும்மை விரித்தோதுக. பவுத்தர்கள் வழிபாடு தொடங்கும்போது புத்தம் சரணங் கச்சாமி தன்மம் சரணங் கச்சாமி. சங்கம் சரணங் கச்சாமி என மூன்றுமுறையோதுதல் மரபு. மூன்றனையும் மூன்றுமுறை மும்முறை வலம் வந்து மனத்தானினைந்து மொழியாலோதி மெய்யால் வணங்கி வழிபாடு செய்தாள் என்றற்கு மும்முறை வணங்கி என்னாது மும்மையின் வணங்கியென்றார். சரணாகதி-தஞ்சம் புகுதல். சங்கத்தில் முதன் முதலாகச் சேர்பவர் இவ்வாறு மும்மணியையும் மும்மையின் வணங்கிச் சரணாகதியடைதல் வேண்டும் என்பது அச்சமய விதியாகும்.

(அறவணவடிகள் மணிமேகலைக்கு 6ஆம் அடி முதலாக 44ஆம் அடியீறாக, புத்த தன்மங்களைத் தொகுத்துக் கூறுவதாய் ஒரு தொடர்.)

அறவணவடிகளார் கூற்று; புத்த சமய வரலாறு

6-9 : முரணா............தோன்றி

(இதன் பொருள்) முரணா மூர்த்தியை மொழிவோன்-மணிமேகலைக்கு அறங்கூறுதற் பொருட்டே அந்நகரத்திற்கு எழுந்தருளிய அறவணவடிகளார், அவட்கு அறங்கூறுதற்குத் தொடங்குபவர் முத்திறமணிகளுள் தலைசிறந்த மணியாகத் திகழ்பவனும்-அச்சமய முதல்வனும் முன்பின் முரண்படாத உயரிய அறங்களைத் திருவாய் மலர்ந்தருளிய அறவாழி அந்தணனுமாகிய புத்தபெருமானுடைய சிறப்பினைக் கூறத் தொடங்குபவர்; அறிவு வறிதா உயிர் நிறை காலத்து முடிதயங்கு அமரர் முறை இரப்ப-மணிமேகலாய்! கூர்ந்து கேட்பாயாக! பண்டொரு காலத்தே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள்களை நெறியறிந்துய்தற்குரிய மக்கட் பிறப்பினை எய்திய உயிர்கள் தாமும் அந்நன்னெறி காட்டி நல்லறங் கூறுதற்கியன்ற நல்லாசானைப் பெறமாட்டாமையாலே தமக்குரிய அறிவு சிறுமை எய்தி அஃறிணை யுயிர்போலப் பேதைமை நிறைந்திருந்த பொழுது முடிக்கலன்களாலே திகழ்கின்ற அமரர்கள் பிரபாபாலர் என்னும் தேவன்பாற் பன்முறையும் சென்று உயிர்கட்குற்ற அக்குறையைத் தீர்த்தருள வேண்டும் என்று இரந்தமையாலே இயல்பாகவே அருள் கெழுமிய அத்தேவனும் அக்குறை நேர்ந்து; துடித லோகம் ஒழியத் தோன்றி-துடிதலோகம் என்னும் தெய்வ உலகத்தினின்று இழிந்து இந்நிலவுலகத்திலே பிறந்தருளி என்க.

(விளக்கம்) முரணாத்திரு அறம்-முன்பின் மாறுபடாத உயரிய ஒழுக்கம். மூர்த்தி-புத்தர். மூர்த்தியின் வரலாறு மொழிவோள் என்க. மொழிவோன்: பெயர்: அறவணவடிகள் என்க. உயிர், ஈண்டு மக்கள் உயிர் என்பது பட நின்றது. என்னை? மெய்யுணர்தலும் வீடுபெறுதலும் அதற்கே யுரியவாதலின். வறிதாக என்பதன் ஈறுகெட்டது. வறிது-சிறிதின் மேற்று. நிறைதலின் என்றது, தொகை மேனின்றது. முறை முறை என்னும் அடுக்குப் பன்மை மேற்று.

துடிதலோகம்-பவுத்த சமயக் கணக்கர் கூறும் முப்பத்தோருலகத்துள் ஒன்று. இஃது ஒன்பதாவதுலகமாம். அவர் கூறும் ஆறுவானவருலகங்களுள் வைத்து இது நான்காவதுலகம் என்பர். பிரபாபாலன் என்னும் துடிதலோகத்துத் தேவனே புத்தனாக நிலவுலகத்திலே வந்து பிறந்தனன் என்பது வரலாறாகும்.

புத்தன் கோசல நாட்டின்கண் கபிலவாத்து என்னும் நகரத்திருந்து செங்கோலாச்சிய முடிமன்னன் மனைவியருள் மாயாதேவி என்பவள் வயிற்றிற் கருவாகி வளர்ந்து பிறக்குங் காலத்தே அவள் வலமருங்குல் வழியே பிறந்தருளினன் என்ப.

இனி, துடிதபுரம் என்பது இந்நிலவுலகத்தே புத்தருக்கியன்ற திருப்பதியாகிய ஒரு நகரம் என்பாருமுளர், எனவே துடிதலோகத்தின் நினைவுச் சின்னமாக அந்நகரம் மக்களால் உண்டாக்கப்பட்டது என்று கொள்ளலாம். இதனை,

தொழுமடிய ரிதயமல ரொருபொழுதும்
பிரிவரிய துணைவ னெனலாம்
எழுமிரவி கிரணநிக ரிலகுதுகில்
புனைசெய்தரு ளிறைவ னிடமாம்

குழுவு மறை யவருமுனி வரரும்
அரபிரம ருரகவனு மெவரும்
தொழு தகைய இமையவரு மறமருவு
துதிசெய்தெழு துடித புரமே

எனவரும் பழம் பாடலாலு முணர்க. (வீரசோ-யாப்பு-33. மேற்)

இனி, புத்தன் தாயின் வல மருங்கு வழியாகப் பிறந்தான் என்பதனை,

உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யாறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றின னாதலின்
ஈன்றேள் ஏழாநாள் இன்னுயிர் நீத்தாள்

எனவரும் பிம்பிசாரக் கதைச் செய்யுளானும்,

புத்தன்தாய் ஞெண்டிப்பி வாழை புனமூங்கில்
கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி-இத்தனையும்
வேலாலும் வாளாலு மன்றியே தாங்கொண்ட
சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு

எனவரும் உலகுரையானும் உணர்க. இவை நீலகேசியில் குண்டல-41 செய்யுளின் உரையிற் கண்டவை.

போதி மூலம்-அரைய மரத்தடி. புத்தர் பலகாலம் பல்வேறு நோன்புகளையும் ஆற்றியும் மெய்யுணர்வு பெறாராய் ஒருநாள் புத்தகயை என்னுமிடத்தே பல்குனி யாற்றின் கரைமேனின்ற ஓர் அரையமா நீழலில் அமர்ந்திருந்த பொழுது அவருக்கு மெய்யுணர்வு பிறந்ததென்பது அவர் வரலாறு. இக்காரணத்தால் புத்தகயை என்னும் இடமும் அரைய மரமும் பவுத்தரால் திசைநோக்கித் தொழப்படும் சிறப்புடையனவாயின என்க.

இதுவுமது

10-13 : மாரனை..........கட்டுரை

(இதன் பொருள்) மாரனை வென்று வீரன் ஆகி-காமவேள் தோற்றுவிக்கும் காமத்தைத் துவர நீத்தலாலே அவனை வென்று மாபெரும் வீரனாய்த் திகழ்ந்து; குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்-காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அவற்றின் நாமமும் நெடும்படி துவரத்ததுடைத்தற்குக் காரணமான; வாமன் வாய்மை ஏமக் கட்டுரை-பேரழகனாகிய அப்புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நால்வகை மெய்க்காட்சிகளாகிய மக்கள் உயிர்க்குப் பாதுகாவலும் இன்பமும் பயக்கும் மெய்ப்பொருள் பொதிந்த அறவுரைகளே என்க.

(விளக்கம்) மாரன்-ஈண்டு அவன் செயலாகிய காமுறுதன் மேனின்றது. மாரனை வென்றான் எனவே அவனை, மீண்டும் உலகியலில் ஈடுபடுத்தும் எல்லாத் தீக்குணங்களும் வென்றமை கூறாமலே அமைதலின் வீரன் ஆகி என்றார்.

குற்றம் மூன்று-காம வெகுளி மயக்கங்கள். இவற்றைத் துவரத்துடைத்தார்க்குப் பின்னர்ப் பிறவிப் பிணி இல்லாமையின் முற்ற அறுக்கும் என்றார்.

காம வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினைக்கற்பாற்று.

வாமன்-அழகன். அழகான் மிக்கவன் என்பது பற்றி அது புத்தரின் பெயருள் ஒன்றாகவே வழங்கப்படுகின்றது. குற்றம் அறுக்கும் கட்டுரை, வாமன் திருவாய் மலர்ந்தருளிய கட்டுரை, வாய்மைகளையுடைய கட்டுரை, ஏமமுடைய கட்டுரை என அனைத்தும் கட்டுரைக்கே தனித்தனி இயையும். திருவாய் மலர்ந்த கட்டுரை என ஒரு சொல் பெய்து கொள்க.

வாய்மை என்றது புத்தனது நால்வகை மெய்க்காட்சிகள்; அவை பின்னர் விளக்கப்படும். ஏமம்-பாதுகாவலும் இன்பமும் ஆம்; ஆக இருபொருளும் கொள்க. கட்டுரை-பொருள் பொதிந்த மொழி.

இதுவுமது

14-19 : இறந்த.........காட்டி

(இதன் பொருள்) இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்-மற்று அக்கட்டுரை தானும் அவ்வாதிப் புத்தருக்குப் பின்னர் அவ்வறநெறியைப் பின்பற்றி வழிவழியாகக் கடந்த காலத்திலே எண்ணிறந்த புத்தர்களும் பிறந்து; அருள் உளம் சிறந்து-அருள் கூர்ந்து மக்கட்குத் தம் அருளுடைமை காரணமாகத் திருவாய் மலர்ந்தருளி உலகெலாம் பரப்பப்பட்ட சிறப்பினையும் உடையதாம்; ஈர் அறுபொருளின் ஈந்த நெறி உடைத்தாய்-அவ்வறவுரை தானும் தன்பால் பன்னிரண்டு நிதானங்கள் என்னும் உள்ளுறுப்புகளாய்ப் பகுத்தோதும் முறைமையினை யுடைத்தாய்; சார்பின் தோன்றி தம் தமின் மீட்டும் இலக்கு அணத்தொடர்தலின்-அப்பன்னிரண்டு நிதானங்களும் தம்முள் ஒன்றிலிருந்து ஒன்று காரணகாரிய முறையாலே தாம்தாம் தோன்றுதற்குச் சார்பாகிய பண்புகளினின்றும் தோன்றித் தத்தமக்குரிய அச்சார்பு, மீண்டும் தரந்தாம் பிறத்தற்கேதுவாக அணுகி வரும் பொழுது அவ்வவற்றினின்றும் பிறந்து இவ்வாறே தொடர்ந்து தோன்றி வருதலாலே அவற்றின் தோற்றமுறையினை; மண்டில வகையா அறியக் காட்டி-வட்டமாகச் சுழன்று வருகின்ற முறைமையாக அறிவுறுத்து என்க.

(விளக்கம்) அமரர் இரந்து வேண்டுதலாலே துடிதலோகத்தினின்று நிலவுலகத்தே பிறந்தருளிய கவுதம புத்தரே ஆதிபுத்தர் எனவும், அவர் போதி மூலத்திலிருந்து கண்ட மெய்க்காட்சிகளே பவுத்த சமய தத்துவங்கள் ஆம் எனவும் கொள்க.

(விளக்கம்) அமரர் இரந்து வேண்டுதலாலே துடித லோகத்தினின்று நிலவுலகத்தே பிறந்தருளிய கவுதம புத்தரே ஆதிபுத்தர் எனவும், அவர் போதி மூலத்திருந்து கண்ட மெய்க்காட்சிகளே பவுத்த சமய தத்துவங்கள் ஆம் எனவும் கொள்க.

இனி, இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும்-என்பதற்கு. கவுதம புத்தர் தோன்றுமுன்பே எண்ணிறந்த புத்தர் காலந்தோறுந் தோன்றி உலகில் அறத்தை நிறுவினர் எனவும் அவ்வறநெறியையே கவுதம புத்தர் உறுதி பெறச் செய்தனர் என்றும் கூறுவாரும் உளர். கவுதம புத்தருக்குப்பின் இறந்த காலத்தே எண்ணிறந்த புத்தர் பிறந்தனர் என்பாருமுளர்.

இனிக் கவுத புத்தர் புத்த தத்தவம் நிரம்புதற்கு முன்னே எண்ணிறந்த புத்தப் பிறப்பினை எய்தி அந்நெறிப் பயின்றடிப்பட்டு வந்து கவுதம புத்தராய்ப் பிறந்தபொழுது புத்த தத்துவம் நிரப்பினர் என்பாரும் உளர்.

ஈர் அறு பொருள் என்றது பேதைமை முதலிய பன்னிரண்டு விதானங்களே. அவை 24 ஆம் காதையில் இவ்வறவண வடிகளாரே இராசமா தேவியார்க்கு,

பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

எனத் தொகுத்தோதி யுள்ளமையின் ஈண்டு ஈரறு பொருளின் ஈந்த நெறி என்று தொகைமட்டும் ஓதியொழிந்தார்.

இனி இக்காதையில் இவற்றினியல்பெலாம் விரிவகையால் விரித்தோதப்படும். இப்பன்னிரண்டு நிதானங்களும் காரண காரிய முறையாலே தொடர்ந்து தோன்றி ஒரு வட்டமாகி மீட்டும் அவ்வாறே தத்தம் இலக்கு அண்ணியவழித் தோன்றி இவ்வாறே முடிவின்றி, மண்டலமாகச் சுழன்ற வண்ணமே இருக்கும் என்பார், மண்டல வகையாற் காட்டி என்றார். இக்காரணத்தால் பிறப்பிற்கு எல்லையில்லையாயிற்று என்பது குறிப்பு. பேதைமை முதலாகக் காட்டினரேனும் இறுதயினின்ற வினைப்பயன் சார்பாகப் பேதைமை பிறத்தலின் இவ்வட்டத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்றாராயிற்று. சார்பு-இடம் என்னும் பொருட்டு; வழி என்னும் பொருட்டாகக் கோடலுமாம். இனி, பிறப்பிற்குப் பேதைமை முதற்காரணமும் துணைக் காரணமும் ஆகி எல்லா நிதானத்தினும் கலந்துள்ளமையின் அதனையே முதலாக எடுத்தோதிற்று எனினுமாம்.

இவற்றை, வடநூலோர் துவாதச நிதானம் என்றும் நிரலே அவற்றை அவித்யை கர்மம் (ஸம்ஸ்காரம்) விஞ்ஞானம் ரூபாரூபம் சடாயதனம் பரிசம் வேதனை திருட்டினை உபாதானம் பவம் சன்மம் கர்மபலம் என்றும் விரிப்பர்.

இதுவுமது

20-31 : எதிர்..........உறுதியாகி

(இதன் பொருள்) எதிர்முறை ஒப்ப மீட்சியும் ஆகி-தோன்றுதற்குரிய காரணத்தை எதிர்த்து நின்று விலக்குதலாலே காரியம் நிகழாமையுமாய்; ஈங்கு இது இல்லாவழி இல் ஆகி-இவ்வாறு காரணம் இல்லாத விடத்தே அதன் காரியமும் நிகழ்தலும் இல்லையாகி; ஈங்கு இது இல்லாவழி இல் ஆகி-இவ்வாறு காரணம் இல்லாத விடத்தே அதன் காரியமும் நிகழ்தலும் இல்லையாகி; ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகி-இவ்வாறாகிய காரணம் உளதாய விடத்தே காரிய நிகழ்ச்சியும் ஒரு தலையாக நிகழ்வ தாகலாலே; தக்க தக்க சார்பின் தோற்றம் என-அவ்வப் பிறப்பிற்குத் தகுந்த தகுந்த காரணங்கள் அமைந்தவழி அவ்வவற்றிற் கேற்பப் பிறப்பும் தோன்றும் என்று சொல்லப்பட்டு; இலக்கு அண் அத்தொடர்பால்-காரணமாகிய இலக்கு அணுகுவதாகிய தொடர்பினாலே; கருதப்பட்டு-ஆராய்ந்து கூறப்பட்டும்; கண்டம் நான்கு உடைத்தாய்-பகுதிகள் நான்குடைத்தாய்; மருவிய சந்திவகை மூன்று உடைத்தாய்-அப்பகுதிகள் கூடுகின்ற கூட்டவகை மூன்றுடைத்தாய்; பார்க்கின் தோற்றம் மூன்று வகையாய்-ஆராய்ந்து பார்க்குமிடத்துப் பிறப்பு மூன்று வகையாய்; தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்-பிறத்தற்குப் பொருந்திய காலங்கள் ஒரு மூன்றுடையதாய்; குற்றமும் வினையும் பயனும் விளைந்து-குற்றங்களும் வினைகளும் அவற்றின் பயன்களும் விளைந்து; நிலை இல வறிய துன்பம் என நோக்க-பிறப்புகள் நிலைத்தல் இல்லாதனவும் இன்பமில்லாதனவும் பெருகிய துன்பமே உடையனவும் ஆம் என்று மெய்யுணர்ந்த பொழுது; உலையா வீட்டிற்கு உறுதியாகி-அது தானே எஞ்ஞான்றும் அழியாத வீட்டின்பத்திற்கு உறுதி தருவதாகவும் ஆகி; என்க.

(விளக்கம்) எதிர்மறை ஒப்புதலாவது-இவ்வாறு ஒன்றிலிருந்து ஒன்று தோன்று முறைமையினை எதிர்த்து நின்று மாற்றிவிடுதல். அஃதாவது காரணத்தை இல்லையாம்படி செய்தல் என்றவாறு இங்ஙனம் காரணத்தை மாற்றிய வழி இல்லையாய், மாற்றாது விட்டவழி என்றென்றும் மண்டில வகையாய் உண்டாகும் என்று வற்புறுத்துவார். ஈங்கு இது இல்லாவழி இல்லாகி ஈங்கிதுள்ளவழி உண்டாகலின் என விதந்து ஏதுவை வலியுறுத்தினர். ஈங்கு என்றது இவ்வாறு என்றவாறு.

இனி (48) தொடர்தலின் என்பதனைச் சுட்டிற்றாகக் கருதி இத்தொடர்ச்சிக்குக் காரணமாகிய இலக்கு இல்வழி இல்லாகி உள்ளவழி உண்டாதலின் எனக் கோடலுமாம். நல்வினையும் தீவினையும் ஆகிய வினைவகைக்குத்தக உயர் பிறப்பும் இழிபிறப்பும் உண்டாம் என்பார் தக்க தக்க சார்பிற் றேற்றம் என்றார். என்னை?

அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றிரு வகையால்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி

என்றோதினமையும் நினைக. எனவே அவ்வற்றின் வினைவகைக்குத் தக்க தக்க சார்பில் தோற்றம், என்றார் என்க.

தோற்றம்-பிறப்பு; அவை மூன்று வகைப்படும். அவை பின்னர் விளக்கப்படும். தோற்றம் நிலையில வறிய துன்பம் என நோக்க. என இயைக்க. அங்ஙனம் நோக்கிய வழி பிறப்பே வீட்டிற்குக் கருவியாம் என்பார் வீட்டிற்கு உறுதியாகி என்றார்.

இதுவுமது

32-38 : நால்வகை.........கெடாதாய்

(இதன் பொருள்) நால்வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி-நான்கு வகைப்பட்ட மெய்க்காட்சிகளுந் தோன்றுதற்கியன்ற நிலைக்களன் ஆகி; ஐந்துவகைக் கந்தத்து அமைதியாகி-ஐந்து வகைப்பட்ட கந்தங்களும் கூடிய கூட்டத்தாலே அமைவதாய்; மெய்வகை ஆறு வழக்கு முகம் ஆகி-உண்மை வழக்கை உள்ளிட்ட ஆறுவகை வழக்கும் உளவாதற்கு நிலைக்களன் ஆகி; நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி-ஒற்றுமை நயம் முதலிய நயங்கள் நான்கினாலும் நால்வகைப் பயன்களையும் எய்தி; நால்வகையால் இயன்ற வினா விடை உடைத்தாய்-துணிந்து சொல்லல் முதலிய நான்கு வகையாலே நிகழ்கின்ற வினாக்களையும் விடைகளையும் உடையதாய்; நின்மிதி இன்றி-ஒருவரானும் உண்டாக்கப்படாது தானே தோன்றியதாய்; ஊழ்பாடு இன்றி-முடிவற்றதுமாய்; பின்போக்கு அல்லது பொன்றக் கெடாததாய்-தொடர்ந்து நிகழ்வதல்லது ஒரு பொழுதும் முற்றும் அழியாததாய் என்க.

(விளக்கம்) நால்வகை வாய்மையாவன:
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது (மணி-2-64-7)

என்பன. இவற்றை, நிரலே துக்கம், துக்கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரண மார்க்கம் என்று வடநூலோர் கூறுப. இவை நான்கிற்கும் சார்பிடன் உடம்பாதலுணர்க. வாய்மை-சத்தியம். இவை புத்தர் போதி மூலம் பொருந்தியிருந்த பொழுது அவர் உள்ளத்தே பிறந்த மெய்க்காட்சிகளாம் என்க.

ஐந்துவகைக் கந்தமாவன : உருவக்கந்தம், நுகர்ச்சிக் கந்தம், குறிப்புக் கந்தம், பாவனைக் கந்தம், அறிவுக் கந்தம் என்னும் ஐந்துமாம். இவற்றிற்கு இக்காதையின் 189-190 ஆம் அடிகளின் விளக்கம் தரப்படும்; ஆண்டுக் கண்டு கொள்க.

மெய்வகை-உண்மை முதலிய வழக்குவகை. முகம்-தோற்றுவாய். நயங்கள் ஒற்றுமை நயம், வேற்றுமை நயம், புரிவின்மை நயம், இயல்பு நயம் என்னும் நான்குமாம்.

நால்வகை வினாவிடையாவன: துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமை என்பன.

நின்மிதி-உண்டாக்குதல். ஊழ்பாடு-முடிதல். பின் போக்கு எனினும் தொடர்ச்சி எனினும் ஒக்கும். இத்தொடர்ச்சி நால்வகைப்படும் என்பர். அவையாவன-காற்றுப்போல் தொடர்வது, விளக்கின் சுடர்போல் தொடர்வது, நீர்வீழ்ச்சி போலத் தொடர்வது, எறும்புகள் போலத் தொடர்வது என்பன. வடநூலார் வாயுசந்தானம், தீபசந்தானம், தாராசந்தானம், பிபீலிகா சந்தானம் என்பனவும் இவையேயாம். பொன்றக் கெடுதல்-முழுவதும் அழிதல்.

இதுவுமது

39-48 : பண்ணுநர்...........ஈராறும்

(இதன் பொருள்) பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்-செய்வோரையில்லாமையால் செய்யப்படாததாய்; யானும் இன்றி எனது மின்றி-யான் என்னும் செருக்கும் எனது என்னும் செருக்குமாகிய இருவகைச் செருக்குமில்லாததாய்; போனதும் இன்றி வந்தது மின்றி-கழிந்தது என்று கருதப்படாததும் வருவது என்று கருதப்படாததும்; முடித்தலும் இன்றி முடிவுமின்றி-தான் ஒன்றனைச் செய்து முடித்தலில்லாததும், தானே முடிந்தொழிதலில்லாததும் ஆகி; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய-வினைகளும் அவற்றின் பயன்களும், பிறப்புகளும், வீடுபேறும் ஆகிய இன்னோரன்ன பிறவற்றிற்கெல்லாம் காரணம் தானேயாகி யமைந்த; பேதைமை செய்கை உணர்வு அரு உரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈர் ஆறும்-பேதைமை முதலாக வினைப்பயன் ஈறாக வகுத்துக் கூறப்பட்ட நிதானங்கள் பன்னிரண்டின் தன்மைகளையும் என்க.

(விளக்கம்) 13ஆம் அடி முதலாக 48 ஆம் அடியீறாக வாமன் வாய்மைக் கட்டுரையை ஒருவாறு தொகுத்தோதியபடியாம். பன்னிரண்டு வகை நிதானங்களில் பேதைமையே முதற்காரணமாம். அப்பேதைமையினின்று செய்கையும், அதனினின்று உணர்வும், அதனினின்று அருவுருவும், அதனினின்றும் வாயிலும், அதனீனின்று ஊறும், அதனினின்றும் நுகர்வும், அதனினின்றும் வேட்கையும், அதனினின்றும் பற்றும், அதனினின்றும் பவமும், அதனினின்றும் தோற்றமும், அதனினின்றும் வினைப்பயனும் ஆகப் பன்னிரண்டு நிதானங்களும் தோன்றும் என்க.

இனிப் பேதைமையினின்றும் ஒன்றினொன்றாகப் பிறந்து வரும் இவற்றும் இறுதியினின்ற வினைப்பயனினின்றும் மீண்டும் பேதைமை தோன்ற அதனினின்றும் செய்கை முதலியன தோன்ற இவ்வாறே இவை ஈறு முதலுமின்றிச் சுழன்ற வண்ணமே இருக்கும். ஆதலின் இவற்றை (16) மண்டில வகையாய் அறியக் காட்டி என்றார். பேதைமை அநாதியாயுளது ஆதலின் அதனைப் பண்ணுநர் இல்லாமையால் பண்ணப்படாததாய் என்றார். இன்றி-இல்லாமையால். மற்று இதற்கிவ்வாறுரை காணாமல், செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய் என்று உரை கூறுவாரு முளர். இவருரை பவுத்த தத்துவத்தோடு பெரிதும் மாறுபடுதலை அவர் நோக்கிற்றிலர்.

அநாதியாக இவை இங்ஙனமே மண்டில வகையாற் சுழல்வன. ஆயினும் இவற்றால் விளையும் பயன் துன்பமென மெய்யுணர்ந்து நோக்கினோர்க்கு, இவற்றிற் பற்றறுதலின் இவ்வாற்றால் இவையே வீடு பேற்றிற்கும் காரணமாதலின் வினையும் பயனும் பிறப்பும் வீடும் தானே ஆகிய பேதைமை என்றார்.

உணர்வு என்னும் மூன்றாவது நிதானம் முதலாவதாகிய பேதைமைக் கண்ணில்லை யாகலின் யானும் இன்றி எனது மின்றிப் போனதுமின்றி வந்ததுமின்றி என்றார், எனவே இருளே உலகத்தியற்கை என்றவாறாயிற்று.

பிறந்தோர் அறிதற்குரியன

49-50 : பிறந்தோர்...............அறிகுவர்

(இதன் பொருள்) பிறந்தோர் அறியின்-மணிமேகலையே கேள்! இங்ஙனம் ஆகிய வாமன் கட்டுரைகளாகிய இவற்றை உயரிய மக்களாகப் பிறந்தோர் ஆராய்ந்து அறிந்து இவற்றால் குற்றமும் வினையும் வினையின் பயனும் விளைந்து நிலையில் வறிய துன்பமெனக் கண்டு இவை மீளும் நெறியில் ஒழுகுவாராயின் இவையே உலையா வீட்டிற்கு உறுதியாக; பெரும் பேறு அறிகுவர்-பெரிய வீட்டின்பமாகிய பேற்றினை எய்தா நிற்பர்; அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்-அறியாரானால் தாங்கள் அழுந்தித் துன்புறுதற்கிடமான நகரத்தையே எய்தா நிற்பர் காண்! என்றார் என்க.

(விளக்கம்) அறியின் என்றது, அறிதல் இன்றியமையாது என்பதுபட நின்றது. பிறந்தோர் என்பது மக்களாகப் பிறந்தோர் என்பதுபட நின்றது; என்னை? அவர்களே அறிதற்கும் வீடு பெறுதற்கும் உரியர் ஆகலின்.

பேதைமையினியல்பு

51-54 : பேதைமை...........தெளிதல்

(இதன் பொருள்) பேதைமை என்பது யாது என வினவின்-நங்காய்! வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய அப்பேதைமையின் இயல்புதானே எத்தகையது என்று நீ வினவுவாயாயின் கூறுதும் கேட்பாயாக! ஓதிய இவற்றை உணராது-போதிமூலத்தே பொருந்தியிருந்துழியுணர்ந்தோதிய....வாமன் வாய்மை ஏறக் கட்டுரையின் பொருள் இவையென யாம் உனக்கு ஓதிய இவற்றையெல்லாம் ஆராய்ந்துணர்ந்து கொள்ளாமல்; மயங்கி-அவாவினாலே மயங்கி; இயல்படு பொருளால் கண்டது மறந்து-இயல்பாகவே பொறிகட்டுத் தோன்றுகின்ற பொருள்களையே மெய்ப்பொருள் என்று விரும்பி ஆராய்ந்து கண்ட வாய்மைகளை மறந்தொழிந்து; முயல்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்-மயக்கமுடையான் ஒருவன் முயலுக்குக் கொம்புண்டு என்று கூறியவழிச் சிறிதும் ஆராயாது அவன் கூறியபடி முயலுக்குக் கொம்புண்டென்றே தெளிந்து கோடற்குக் காரணமான மருட்கையே பேதைமையாம் என்றார் என்க.

(விளக்கம்) எனவே,

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல் (குறள்-831)

என்பதே இதன் கருத்துமாதலறிக. இதன்கண் முயற் கோடுண்டெனத் தெளிதல் ஏதங் கொண்டபடியாம். இயற்படு பொருளால் கண்டது மறத்தல் ஊதியம் போகவிட்டபடியாம் என்றுணர்க.

இனி இயற்படு பொருளால் காண்டலாவது,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள்-355)

என்பது பற்றி, பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்துநின்ற வுண்மைகளைக் காண்டலாம். அங்ஙனம் கண்டது மறந்து முயற்கோடுண்டெனத் தெளிவது மருட்கையாம். இதனை,

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானும் மாணாப் பிறப்பு (குறள்-351)

என்னும் திருக்குறளோடும் ஒருபுடை ஒப்பு நோக்குக. இனி,

பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுடனாய்க்
காமுற் றமுதன் பயத்தினிற் காமனைக் கடந்து
நாமரூஉம் புகழ் கெடுப்பதோர் நன்னெறி நண்ணும்
வாமன் வாய்மொழி மறந்திட்டு மறந்தொழி கின்றாம்

எனவரும் பழம் பாடலையும் (வீர-யாப்பு. 11.மேற்) நினைக.

பிறப்புவகை

55-58 : வினைப்பயன்.........என்றே

(இதன் பொருள்) உலகம் மூன்றினும் உயிராம்-மேலும் கீழும் நடுவுமாகிய இடம்பற்றி உலகங்கள் மூன்று வகைப்படும், அவற்றில் எல்லாம் உயிர்கள் நிரம்பியுள்ளனவாம்; உலகம் அலகு இல-இடம் பற்றி மூன்றாக வகுக்கப்பட்ட உலகங்களோ எண்ணிறந்தனவாகும்; பல் உயிர் அறுவகைத்தாகும்-அங்ஙனமே எண்ணால் அளவிடப்படாத உயிர்கள் தாம் பிறப்பினாலே ஆறுவகைப்படுவனவாம்; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்று-அவைதாம் மக்கட் பிறப்பும் தேவப் பிறப்பும் பிரமப் பிறப்பும் நரகப் பிறப்பும் பலவாய்த் தொகுக்கப்பட்ட விலங்குப் பிறப்பும் பேய்ப்பிறப்பும் என்று கூறப்படும் இவ்வாறு வகையுமாம்; என்றார் என்க.

(விளக்கம்) உலகம் மேல் கீழ் நடு என இடம்பற்றி மூவகைப்படும் ஆயினும் மேலுலகங்கட்கும் கீழுலகங்கட்கும் அளவில்லை என்பார். உலக மூன்றினும் எனவும், உலகம் அலகில எனவும் இருவகையானும் ஓதிக்காட்டினர். அனைத்துலகங்களினும் உயிர்கள் நிரம்பியுள்ளன என்பார் உலகம் மூன்றினும் உயிராகும் என்றார்.

இனி, உயிர்கள் தாமும் யோனி வகையானும் எண்வகையானும் பலவென்பார் பல்உயிர் என்றும், அவை பிறப்பு வகையால் அறுவகைப்படும் என்றுங் கூறினார். இனி, அஃறிணை யுயிர்கள் பறவையும் விலங்கும் நீர் வாழ்வனவும் எனப் பலவகைப்படுவன வாயினும் அவற்றில் சிறப்பின்மையின் அனைத்தும் விலங்குப் பிறப்பென்றே தொகுத்துக் கூறப்படும் என்பார் தொக்க விலங்கும் என்றார்.

(வினைவகை) (1) தீவினை

56-71 : நல்வினை..........மூன்றுமென

(இதன் பொருள்) நல்வினை தீவினை என்று இருவகையால்-மேலே கூறப்பட்ட உயிர்கள் தாம் செய்கின்ற அறச்செயலும் மறச்செயலும் என்று கூறப்படுகின்ற இருவேறுவகை வினைகளையும் செய்தல் காரணமாக; சொல்லப்பட்ட கருவில் சேர்தலும்-மேலே கூறப்பட்ட அறுவகைப் பிறப்புகளுள் வைத்துத் தத்தம் விளக்கேற்ற பிறப்பினுள் கருவாகிப் பிறத்தலும்; கருவினுள் பட்ட பொழுதினுள் தோற்றி-அவை இவ்வாறு கருவாகிப் பிறந்த பொழுதிலிருந்தே; வினைப்பயன் விளையுங்காலை-அவ்வவ்வுயிர்கள் முன்புசெய்த இருவினைப் பயன்களும் நுகர்ச்சிக்கு வந்துறும் பொழுது; மனப் பேரின்பமும் கவலையும் காட்டும்-அவற்றின் உள்ளத்தே பெரிய இன்பத்தையும் பெரிய துன்பத்தையும் தோற்றுவிக்கும்; தீவினை என்பது யாதென வினவின்-யாம் முன்பு நல்வினை தீவினை எனத் தொகுத்துக் கூறிய இருவகைவினைகளுள் வைத்து அஞ்சத்தக்கது தீவினையே ஆதலின் அத்தீவினைதான் எத்தகையது என்று வினவிற் கூறுதும்; ஆய்தொடி நல்லாய் ஆங்கு அதுகேளாய்! அழகிய தொடியணிதற் கியன்ற பெண்பாவாய் அதனியல்பைக் கேட்பாயாக! கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பின் தோன்றுவ மூன்றும்-கொலையும் களவும் காமமுமாகிய தீய அவாவும் என உடம்பினால் தோன்றுவனவாகிய மூன்றும்; பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்சொல் என-பொய்யும் குறளைச் சொல்லும் இன்னாச் சொல்லும் பயனில்லாதவறும் சொல்லும் என்று கூறப்படுகின்ற; சொல்லில் தோன்றுவ நான்கும்-சொல்லாலே தோன்றுகின்ற நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று-வெஃகுதலும் வெகுளுதலும் பிறவுயிர்கட்குத் துன்பந் தருவனவற்றை நினைத்தலும் என்றோதப்படுகின்ற; உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் என பத்து வகை-நெஞ்சத்தே தோன்றுவனவாகிய மூன்றும் ஆகிய இப்பத்துமாம்; என்றார் என்க.

(விளக்கம்) உடம்பிற்றேன்றும் தீவினைகளுள்: கொலை-உடம்பொடு கூடிவாழும் உயிர்களை அவ்வுடம்புகளினின்றும் அகற்றுதல். தீவினைகள் அனைத்தினும் கொடிய தீவினை கொலையே ஆதலின் அதனை முற்படவோதினா என்னை? ஒன்றாக நல்லது கொல்லாமை எனவும், நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை எனவும் எழுந்த திருக்குறள்களையும் நோக்குக. களவு-பிறருடைமையை வஞ்சித்துக் கவர்ந்து கோடல். காமமாகிய தீ விழைவு என்க. காமுறுவதில் நல்விழைவும் உண்டாகலின் அதனின் நீக்குதற்குக் காமம் என்றொழியாது காமத் தீ விழைவு என்றார். அஃதாவது பிறர் மனைவியைப் புணர்தலும் விலைமகளிரைப் புணர்தலும் பிறவுமாம்.

ஈண்டு விழைவு அதன் காரியமாகிய புணர்தலின் மேனின்றது. இங்ஙனம் கொள்ளாக்கால் இஃதுடம்பிற் றேன்றும் தீவினையாகாமையுணர்க.

சொல்லிற் றேன்றும் தீவினைகளுள்: பொய்-என்றது பிறவுயிர்கட்குத் தீமை தருகின்றவற்றைக் கூறுதலை.

குறளை-புறங்கூறுதல். கடுஞ்சொல்-கேள்வியாலும் பயனாலும் இன்னாமை பயக்கும் சொல். பயன் இல் சொல்-வறுஞ்சொல்; அஃதாவது தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லுதல். பயனில பல்லார்முற் சொல்லல் நயனில, நட்டார்கட் செய்தலில் தீது என்பதனால் இதுவும் தீவினையேயாதலறிக.

உள்ளத்தில் தோன்றும் தீவினைகள்: வெஃகல்-பிறர் பொருளை வெளவ நினைத்தல். வெகுளல்-சினத்தல். சினத்திற்குரிய காரணம் ஒருவன் மாட்டுளதாய விடத்தும் சிவனாமையே அறமாம். ஆதலின் சினம் தீவினையாயிற்று. என்னை? மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய பிறத்தல் அதனால் வரும் என்னும் திருக்குறள் ஏனைய கொலை முதலிய தீவினைகட்கும் இது காரணம் என்றறிவுறுத்துதலு முணர்க. பொல்லாக் காட்சி-பிறர்க்குக் கேடு சூழ்தல். காட்சி ஈண்டு மானதக் காட்சி.

தீவினையின் பயன்

72-75 : பத்து..........தோன்றுவர்

(இதன் பொருள்) பத்துவகையால் பயன் தெரிபுலவர்-இங்ஙனம் மனம் மொழிமெய்களாற்றேன்றுகின்ற தீவினைகளால் உண்டாகும் பயன்களை ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இத்தீவினைகள் தோன்றுமாறு ஒழுகுதலிலர்; படர்குவராயின்-அறிவின்றி இத்தீவினைகள் நிகழும் நெறியிலே ஒழுகுவாராயின்; விலங்கும் போயும் நரகரும் ஆகி-அறுவகைப் பிறப்புகளுள் வைத்து இழிந்த பிறப்பாகிய விலங்குப் பிறப்பினாதல் பேய்ப் பிறப்பினாதல் நரகப் பிறப்பினாதல் பிறப்புற்று; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்-துன்பத்தாலே கலக்கமெய்திய நெஞ்சத்தோடே அதனினின்று உய்ந்து கரையேற வழிகாணமாட்டாத கவலையோடே காணப்படுவர்காண்; என்றார் என்க.

(விளக்கம்) பயன்-தீவினையினாலுண்டாகும் பயன், மக்கட் பிறப்பின் பயனைத் தெரிந்த புலவர் எனினுமாம். இத்திறம்-இத்தீவினைகள் நிகழுதற்குரிய நெறி தோன்றுவர்-காணப்படுவர். நரகருமாகிப் பிறப்பர் என இயைப்பினுமாம்.

நல்வினைகளும் அவற்றின் பயன்களும்

76-81 : நல்வினை.........உண்குவ

(இதன் பொருள்) நல்வினை என்பது யாது என வினவின்-நங்காய்! இனி நல்வினை என்பதன் இயல்பு யாது என நீ வினவுவாயாயின் கூறுதும் கேட்பாயாக; சொல்லிய பத்தின் தொகுதியினீங்கிச் சீலந்தாங்கித் தானம் தலைநின்று-மேலே மனமொழி மெய்களாலே தோன்றும் எனக் கூறப்பட்ட கொலை முதலிய பத்துவகைத் தீவினைகளும் அவை தம்மிடத்தே நிகழாவண்ணம் அந்நெறியினின்றும் நீங்கி அவற்றிற்கு மறுதலையாகிய கொல்லாமை முதலிய நல்லொழுக்கங்களை மேற்கொண்டு தான முதலிய நல்வினைகளை ஒல்லும் வகையால் ஓவாதே செய்து பின்னர் அந்நல்வினைகளின் பயனாக வந்துறுகின்ற; மேல் என வகுத்த-உயர்ந்த பிறப்புகள் என்று வகுத்துக் கூறுகின்ற; தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-தேவராகவும் மக்களாகவும் பிரமராகவும் அவ்வவ்வுலகங்களிலே சென்று பிறந்து; வினைப் பயன் மேவிய மகிழ்ச்சி உண்குவ-அந்நல்வினையின் பயனாக வந்தெய்துகின்ற இன்பங்களை நுகராநிற்பர் காண்! என்றார் என்க.

(விளக்கம்) சொல்லிய பத்தின் தொகுதி-முற்கூறப்பட்ட கொலை முதலிய பத்துவகைத் தீவினைத் தொகுதி என்க. அவற்றின் நீங்கிச் சீலந்தாங்கி-எனவே அத்தீவினைகட்கு மறுதலையாகிய நல்வினைகளாகிய நல்லொழுக்கத் தொகுதிகளை எஞ்சாமல் மேற்கொண் டொழுகி என்றாராயிற்று.

இனி அவற்றின் மறுதலையாய நல்வினைகள் வருமாறு. 1: கொல்லாமையும் கள்ளாமையும், தீயநெறியிற் காமுறாமையும் ஆகிய இவை மூன்றும், உடம்பால் மேற்கொள்ளப்படும் நல்வினைகள் என்க. வாய்மையும், பிறர் புகழை பாராட்டலும், இன்சொற் சொல்லலும் பயனுடையவற்றை மொழிதலும் ஆகிய இந்நான்கும் சொல்லாற் செய்யும் நல்வினைகள் என்க.

இனி, பிறர்க்கு ஈதற் கெண்ணுதல், அன்புடையரா யிருத்தல், யாவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றெண்ணுதல் மூன்றும் உள்ளத்தில் உருப்பனவாகிய நல்வினைகள் என்க.

இனி, பள்ளி வலம்புரில், தவஞ்செய்தல், தானஞ்செய்தல் என்னும் மூன்றும் உடம்பிற் றோன்றும் நல்வினை, மெய்யுரை, நன்மொழி நவிலல், இன்சொல், பயன்மொழி பகர்தல் என்றும் நான்கும் சொல்லிற்றேன்றும் நல்வினைகள் என்றும் அருள்நினைவு, அவாவறுத்தல், தவப்பற்று என்னும் மூன்றும் உள்ளத்தில் உருப்பவாகிய நல்வினைகள் ஆக இப்பத்துமே நல்வினைத் தொகுதி என்பாருமுளர். மேல்-உயர்ந்தது, வினைப்பயனாக மேவிய மகிழ்ச்சியை உண்குவர் என மாறுக.

உணர்வு, அருவுரு, வாயில், ஊறு ஆகிய இவற்றின் இயல்புகள்

82-89 : உணர்வு..........என்ப

(இதன் பொருள்) உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்-உணர்வு என்று கூறப்படுகின்ற நிதானமாவது துயில்வோருடைய உணர்ச்சியைப் போன்று; புரிவின்றாகி-உள்ளதோ இல்லதோ என்னும்படி விளக்கமில்லாத உணர்ச்சியாய்; புலன் கொளாதது-பொறிகளின் வழியே சென்று ஐவகைப் புலன்களை ஏற்றுக் கொள்ளாததொரு நிலைமைத்து; அருவுரு என்பது-அருவுரு என்னும் நிதானமாவது; உணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப-அவ்வுணர்வாவது விழிப்பு நிலையில் இருப்போருடைய உணர்வு போன்று பொறிகளாலே புலன்களைக் கவருகின்ற அறிவும் அதற்குக் கருவியாகிய உடம்புமாகும் என்று கூறுவர்; வாயில் ஆறும் ஆயுங்காலை-இனி வாயில் என்கின்ற நிதானத்தை ஆராய்ந்து பார்க்குமிடத்து; உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்-நெஞ்சமானது சுவை முதலிய புலன்களை அறிவொடு புணர்த்துதற்கியன்ற வழிகள் என்று கூறுவர்; ஊறு என உரைப்பது-ஊறு என்று கூறப்படுகின்ற நிதானமாவது; உள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப-மனமும் அதற்குக் கருவியாகிய மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறிகளும் ஊறு முதலிய தம்மின் வேறாகிய புலன்களில் பொருந்துதல் என்பர்; என்றார் என்க.

(விளக்கம்) உறங்குவோர்பால் உணர்விருந்தும் காரியப்படாமல் தன்னிற்றனே அடங்கியிருப்பது போன்றதொரு நிலையில் இருக்கும் உணர்வையே ஈண்டு உணர்வு என்னும் நிதானமாகக் கூறப்படுகின்றது என அதனியல்பைத் தெரித்தோதியபடியாம். இங்ஙனம் இருக்கும் உணர்வு அறிவினும் உடம்பினும் பரவிக் காரியப்படுகின்ற நிலைமையில் அதனை அருவுரு என்னும் நிதானம் என்று குறியீடு செய்வர் என்றவாறு. இவ்வுணர்வு தன்னுண்மையின் மாத்திரையாகி அடங்கிய நிலையில் உணர்வு என்றும் அஃது உயிரினும் உடம்பினும் பரவிக் காரியப்படுமளவில் அருவுரு என்றும் பெயர் பெறுகின்றது என்றவாறு. எனவே உயிர் என்பது அறிவு என்பதே புத்தர் கோட்பாடாதல் அறிக. உணர்வுபலன் கொள்ளா நிலையில் இல்பொருள் போறலின் உயிரும் அறிதலைச் செய்யாவழி இல்பொருள் எனலாம் என்பதும் அவர்தம் கொள்கை யாதலுணர்க. அறிவு அருவமும் உடம்பு உருவமும் ஆதலின் இவை இரண்டும் கூடும் கூட்டமே அருவுரு என்னும் நிதானம் ஆயிற்று என்க. இனி உடம்பும் உள்ளமும் புலன்களைப் பொருந்தும் நிலைமையே ஊறு என்னும் நிதானம் ஆகும். புலன்கள் உள்ளத்திற்கும் வாயிலுக்கும் வேறாகிய பொருள் என்பது தோன்ற வேறு புலன்கள் என்றார். உறுதல்-ஊறு என முதனீண்டு விகுதி கெட்டு நின்றதொரு பண்புச் சொல் என்க. பொருந்துதல் என்பதே இதன் பொருள்.

நுகர்வும் வேட்கையும் பற்றும் பவம் பிறப்புகளும்

90-97 : நுகர்வ.........தோன்றல்

(இதன் பொருள்) நுகர்வு உணர்வு புலன்களை நுகர்தல்-நுகர்வு என்னும் நிதானமாவது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் காட்சிப் புலன்களையும் நகை முதலிய கருத்துப் புலன்களையும் நுகர்தலாம்; வேட்கை-வேட்கையாவது; விரும்பி நுகர்ச்சி ஆராமை-யாதானும் ஒரு பொருளே நுகர விரும்பி அந்நுகர்ச்சி நிரம்பாமையாலே அமைதி கொள்ள மாட்டாமையாம்; பற்று எனப்படுவது-பற்று என்னும் நிதானமாவது, பசைஇய அறிவு-நுகர் பொருளை விடாமல் நெஞ்சத்தாற் பற்றிக் கோடலாம்; பவம் எனப்படுவது-பவம் என்னும் நிதானமாவது, பழவினைகளின் கூட்டங்களுள் வைத்துப் பக்குவமடைந்த வினை தம் பயனையூட்டத் தகுந்த செவ்வி தேர்ந்து உருத்து வந்து அப்பயனை நுகருமாறு தொழிற்படுத்துதலாம்; பிறப்பெனப்படுவது அக்கருமப்பெற்றியின் உறப்புணர் உள்ளம் சார்பொடு-இனிப் பிறப்பென்னும் நிதானமாவது அப்பழவினையின்பாற்பட்ட நெஞ்சத்தோடு அவற்றின் பயனை நுகர்தற்கேற்ற உயிரானது அறுவகைப் பிறப்புகளிலே அதற்கியன்ற சூழ்நிலைகளோடு; காரண காரிய உருக்களின் தோன்றல் முன் கூறப்பட்ட இலக்கு அண் அத்தொடர்பினாலே உண்டாகும் உடம்புகளிலே பிறப்பெய்துதல் என்க.

(விளக்கம்) விரும்பியதனை நுகர்ந்து நுகர்ந்து அமையாமையால் வேட்கை விரும்பி ஆராமை என்றார். பசைஇய-ஒட்டிக் கொண்ட. பலம்-பழவினைத் தொகுதியில் பயன்றரும் பக்குவ மெய்திய வினைகள் உருத்து வந்துறுதல். பிறப்புத் தானும் அப்பழவினைக் கேற்பவும் அவ்வினைகளை முகந்து கொண்டுள்ள உள்ளத்தோடும் உயிர் உருக்களிற் றோன்றல் என்பது கருத்தாயினும் மனமே நுகர்ச்சிக்குத் தலைசிறந்த கருவியாகலின் உள்ளம் தோன்றல் என அதன் வினையாகக் கூறினர். பிறந்த பிறப்பில் தான் நுகர்தற்கேற்ற பயனை விளைவிக்கும் பழவினையை முகந்து கொண்டு வருகின்ற மனம் என்பார் கருமப் பெற்றியின் உறப்புணர் உள்ளம் என்றார். சார்பு என்றது அதற்கேற்ற இடம் தாய் தந்தை முதலிய சுற்றுச் சூழ்நிலைகளை என்க. இக்கருத்துச் சைவ சித்தாந்தத்தோடு ஒப்பு நோக்கி மகிழற் பாலதாம். கதி-பிறப்பு. காரண காரிய உரு-பழவினையாகிய காரணத்தின் காரியமாகிய உடம்பு எனக்கோடலுமாம். என்னை! கருமத்தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் எனப் பிறாண்டும் ஓதுதலும் (30-13-14) காண்க.

வினைப்பயன்

(பிணி, மூப்பு, சாக்காடுகள்)

97-103 : பிணி...........மறைந்திடுதல்

(இதன் பொருள்) பிணி எனப்படுவது இனி இறுதியினின்ற வினைப்பயனாகிய நிதானத்தின் விளைவாகிய பிணி என்பதன் இயல்பாவது; சார்பில் பிறிது ஆய் உடம்பு இயற்கையில் திரிந்து இடும்பை புரிதல்-உள்ளத்தைச் சார்ந்து நிற்கின்ற பழவினை காரணமாக ஒழுக்கத்தின் மாறுபட்டதாகி உடம்பானது தனக்கியன்ற இயற்கை மாறுபட்டு விளைக்கின்ற துன்பமேயாம்; மூப்பு என மொழிவது-மூப்பு என்பதாவது; அந்தத் தளவும் தாக்கு நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்-ஊழ்வினை வகுத்த இறுதிக்காலம் முடியும் துணையும் உருத்துவந் தூட்டுகின்ற துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் நிலைத்திராமையால் மேலும் மேலும் வந்துறும் துன்பத்திற்கு ஆற்றாமல் உடம்பினது ஆற்றல் சோர்வுறுதலாம்; சாக்காடு-இனிச் சாதல் என்று கூறப்படுவது யாதெனின்; அருவுருத்தன்மை யாக்கை வீழ்கதிரென வீழ்ந்து மறைந்திடுதல்-அருவுருத்தன்மையையுடைய பரு உடலானது கடலுள் வீழ்ந்து மறைந்தொழிகின்ற ஞாயிற்று மண்டிலம் போன்று வீழ்ந்து மறைந்தொழிதலேயாம் சான்றார் என்க.

(விளக்கம்) பிணி-நோய். அஃதாவது உடலிலமைந்த வளியும் பித்தமும் ஐயும் தம்முள் ஒத்திராமல் ஒன்றற் கொன்று மிக்காதல் குறைந்தாதல் மாறுபடுதலாலே உடம்பின்கண் நோய் செய்தல். இதனை,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள்-641)

எனவருந் திருக்குறளானும் உணர்க. வளி முதலிய மூன்றும் தம்முள் ஒத்தியங்குதலே உடம்பிற் கியற்கை யாகலின் இவற்றின் மிகையையும் குறைவையும் திரிதல் என்றார். இடும்பை-துன்பம். எடுத்துக்கொண்ட யாக்கைக்கு இறுதி நாள் இஃதென ஊழ் கருவினுட் பட்டபொழுதே வகுத்துளது என்பது தோன்ற அந்தத் தளவும் என்றார். அந்தம்-இறுதி; சாநாளனவும் என்றவாறு, வினைகள் தம் பயனை ஊட்டுவனவாக வந்து மோதுதலைத் தாங்கும் ஆற்றல் நிலையாமையின் என்க. தாக்கு-தாங்கும் ஆற்றல். தாக்குப் பிடிக்க முடியவில்லை என இக்காலத்தும் வழங்குதல் அறிக. சாக்காடு-சாவு. அருவுருத் தன்மையையுடைய யாக்கை என்க. யாக்கை என்றது பருவுடம்பை. எனவே பவுத்த சமயத்தார்க்கும் நுண்ணுடம்புண்மை உடம்பாடாதல் பெற்றாம்.

இந்தப் பருவுடம்பையே பிறப்பு என்றும் தோற்றம் என்றும் உருக்கள் என்றும் முன்பு கூறினர்.

பிறப்பெனப் படுவது அக்கருமப் பெற்றியின்
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்

என்றிலக்கணம் கூறலின் பழவினைத் தொகுதியோடு கூடிய உள்ளத்தை அருவென்றும் அது கருவாகி எடுத்த உடம்பைப் பருவுடம்பென்றும் இவை இரண்டுங் கூடியே இவ்வுலகில் நிலவுதலின் உடம்பினை அருவுரு என்று வழங்குவாராயினர் என்பது பெற்றாம். இவற்றுள் பருவுடம்பின் வீழ்ச்சி மட்டுமே சாக்காடு என்பது அவர் கொள்கை என்பதும் பெற்றாம். பெறவே, சாவு என்பது அருவவுடம்பு நிற்பப் பருவுடல் மட்டும் வீழ்வதேயாம் என்றாதலின் எஞ்சிய அவ்வருவுடம்பே தன்னோடெஞ்சிய கருமத் தொகுதியோடு மீண்டும் வழிமுறைத் தோற்றம் என்னும் மறுபிறப்பை எய்தும் என்பதும் அவர் கருத்தாத லறியலாம். கதிர் வீழ்வது போலத் தோன்றுந் துணையே அன்றி அது மீளவும் பிறத்தலுண்மை கருதியே அதனையே உவமையாக எடுத்தனர்.

பன்னிரு நிதானங்களின் தோற்றமுறை

104-114 : பேதைமை.............வரும்

(இதன் பொருள்) பேதைமை சார்வாச் செய்கையாகும்-பேதைமை நிலைக்களனாக வினைகள் தோன்றும்; செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்-செய்கை நிலைக்களனாக உணர்ச்சி தோன்றும்; உணர்ச்சி சார்வா அருவுருவாகும்-உணர்ச்சி நிலைக்களனாக அருவுரு நுண்ணுடம்போடு கூடிய பருவுடம்பு தோன்றும்; அருவுருச் சார்வா வாயில் தோன்றும்-உடம்பு நிலைக்களனாக மனமுதலிய வாயில்கள் பிறக்கும்; வாயில் சார்வா ஊறு ஆகும்-அவ்வாயில் வழியாக புலன்கள் வந்து பொருந்தும்; ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்-புலன்கள் பொருந்துமாற்றால் இன்பதுன்ப நுகர்ச்சி தோன்றும்; நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்-அந்நுகர்ச்சி நிலைக்களனாக அவாப் பிறக்கும்; வேட்கை சார்ந்து பற்றாகும்-அவ்வவா நிலைக்களனாக புலன்களின்பாற் பற்றுத் தோன்றும்; பற்றில் தோன்றும் கருமத் தொகுதி-அப்பற்றுக் காரணமாக வினைத் தொகுதியுண்டாகும்; கருமத் தொகுதி காரணமாக-அவ்வினைத் தொகுதி காரணமாக; ஏனை வழிமுறைத் தோற்றம் வரும்-சாக்காட்டின்பின் மீண்டும் அதனைத் தொடர்ந்து மறு பிறப்புண்டாகும் என்றார் என்க.

(விளக்கம்) இதனால் பன்னிரு நிதானங்களின் தோற்றமுறை நிரல்படுத்துக் கூறப்பட்டது.

தோற்றத்தாலாம் பயன்

115-118 : தோற்றம்........நுகர்ச்சி

(இதன் பொருள்) தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவல் இல்துன்பம் தலைவரும் என்க-பிறப்பினைச் சார்பாகக் கொண்டு முற்கூறப்பட்ட மூப்பும் நோயும் சாக்காடும் அழுகையும் கவலையும் செயலறவும் என்று சொல்லப்பட்ட ஒழிதல் இல்லாத துன்பம் மிக்கு வரும் என்று அறிஞர் கூறுப; இந்நுகர்ச்சி ஊழ் இல் மண்டிலமாச் சூழும-இங்ஙனங் கூறப்பட்ட நுகர்ச்சி முடிவில்லாத வட்டம் வட்டமாக வந்த வண்ணமே சுழலாநிற்கும் என்றார் என்க.

(விளக்கம்) 104-பேதைமை சார்பா வென்பது முதலாக 118-நுகர்ச்சி என்பதீறாக பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் எனத் துன்பமும், அதன் தோற்றமும் ஆகிய இரண்டு வாய்மைகளும் விளக்கிக் கூறியபடியாம். இனித் துன்பநீக்கம் கூறுகின்றார்.

துன்பத்தீனின்றும் மீளும் முறைமை

119-133 : பேதைமை...........மீட்சி

(இதன் பொருள்) பேதைமை மீளச் செய்கை மீளும்-அனைத்தும் தானேயாகிய பேதைமை நீங்குமாயின் அதுசார்பாகத் தோன்றும் வினைகளும் நீங்குவனவாம்; செய்கை மீள-வினைகள் நீங்கிய பொழுது; உணர்ச்சி மீளும்-அவற்றின் சார்பாய்த் தோன்றிய உணர்ச்சி நீங்கா நிற்கும். உணர்ச்சி மீள அருவுளு மீளும்-அவ்வுணர்ச்சி நீங்கியவழி அதன் சார்பாய்த் தோன்றிய அருவுருவாகிய உடம்பு நீங்குவதாம்; அருவுரு மீள வாயில் மீளும்-அவ்வருவுருவம் நீங்கியவிடத்து அதன் சார்பாய்த் தோன்றிய மன முதலிய கருவிகளாறும் நீங்குவனவாம்; வாயில் மீள ஊறு மீளும்-கருவி நீக்கத்தினால் அவற்றில் வந்து பொருந்தும் புலன்களின் சேர்க்கை இல்லையாம், ஊறு மீள நுகர்ச்சி மீளும்-புலன்களின் கூட்டரவு இல்லையாவிடத்தே அவற்றை நுகருகின்ற நுகர்ச்சியும் இல்லையாய் ஒழியும்; நுகர்ச்சி மீள வேட்கை மீளும்-புலன்களை நுகரும் நுகர்ச்சி இல்லையாயவிடத்தே அவற்றின்பால் எழுகின்ற அவா நீங்கிப்போம்; வேட்கை மீளப்பற்று மீளும்-அவாவற்ற காலத்தே புலன்களின் உண்டாகும் பற்றும் தொலைந்துபோம்; பற்று மீளக் கருமத் தொகுதி மீளும்-பற்றற்ற விடத்துப் (போக்கின்மையாலே) பழவினைத் தொகுதியும் கழிந்தொழிவதாம்; கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும்-பழவினைகள் இல்லையாய பொழுது அவற்றின் காரியமாகிய தோற்றம் இல்லையாய் ஒழிவதாம்; தோற்றம் மீளப் பிறப்பு மீளும் இத்தோற்றம் இல்லையாகிவிடின், வழிமுறைப் பிறப்புகளும் இல்லையாம்; பிறப்புப் பணி மூப்புச் சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு என்று இக்கடை இல் துன்பம் எல்லாம் மீளும் இவ்வகையான மீட்சி-பிறப்பும் நோயும் மூப்பும் சாவும் அழுகையும் புலம்பலும் கவலையும் செயலறவுமாகிய இந்த முடிவில்லாத துன்பம் எல்லாம் துவா நீங்கிப்போம் காண் என்றார் என்க.

(விளக்கம்) மீளுதல் துன்பத்தினின்றும் நீங்குதல், எனவே 119 ஆம் அடிமுதலாக 133ஆம் அடியீறாகத் துன்பநீக்கமாகிய மூன்றாம் வாய்மை கூறப்பட்டமை உணர்க. மீட்சி இவ்வகை என மாறுக.

நான்குவகைக் கண்டங்கள்

134-147 : ஆதி........கண்டம்

(இதன் பொருள்) பேதைமை செய்கை என்று இவை இரண்டும் காரணவகை ஆதலானே ஆதிக்கண்டம் என்ப-நிதானங்கள் பன்னிரண்டனுள் வைத்துப் பேதைமையும் செய்கையும் என்னும் இந்நிதானங்கள் இரண்டும் எஞ்சிய நிதானங்களுக்கெல்லாம் காரணங்கள் ஆகும் முறைமைப் பற்றி முதற்பகுதி என்று கூறப்படும்; உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சி என்று நோக்கப்படுவன-உணர்ச்சியும் அருவுருவாகிய வுடம்பும் அதன் கண்ணவாகிய மனம் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஆறு கருவிகளும் அவையிற்றை வந்தெய்தும் புலன்களும் அவற்றலாம் இன்ப துன்பமாகிய நுகர்ச்சிகளும் என்று ஆராயப்படும் நிதானங்கள் ஐந்தும்; முன்னவற்றின் இயல்பால் துன்னிய ஆதலின்-முற்கூறப்பட்ட காரணங்களின் காரியமாக வந்தவை ஆதலாலே; இரண்டாம் கண்டம் ஆகும் என்ப-இரண்டாம் பகுதி என்று அறிஞர்கள் கூறுவார்கள்; வேட்கை பற்று கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை-அவாவும் பற்றும் வினைத்தொகுதியும் எனக் கட்டுரைக்கப்படுகின்ற நிதானம் மூன்றும்; மற்று அப்பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் குற்றமும் வினையும் ஆகலான் மூன்றாம் கண்டம்-மேலே கூறிய அவ் அவா முதலிய தீய குணங்களும் அவற்றாலுண்டாகும் தீயவொழுக்கங்களுமாக அமைதலானே மூன்றாம் பகுதி என்று கூறப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடும் இவை துன்பம் எனப் பிறப்பில் உழக்கும் பயனாதலின் நான்காம் காண்டம்-இனி எஞ்சிய பிறப்பும் நோயும் மூப்பும் சாக்காடும் என்று கூறப்படுகின்ற இந்நான்கும் முன்னின்ற பிறப்பு என்னும் நிதானத்தினூடே நுகரப்படுகின்ற துன்பங்கள் எனப்பட்டு அவை பன்னிரண்டாம் நிதானமாகிய வினைப்பயனாக அமைதலின் இவையிற்றை நான்காம் பகுதி என்று நவில்வர் என்றார் என்க.

(விளக்கம்) ஆதிக்கண்டம்-முதற்பகுதி. பேதைமையும் செய்கையும் அனைத்திற்கும் காரணமாக அமையும் இயைபுபற்றி ஒரு பகுதியிற்பட்டன. இவையே முதற்பகுதி என்றவாறு. உணர்ச்சி......நோக்கப்படுவன பேதைமையும் செய்கையுமாகியவற்றின் காரியமாகலின் இரண்டாம் பகுதியாயின என்க. வேட்கையும் பற்றும்-குற்றக் குணமும், நுகர்ச்சி குற்றத்தின் காரியமும் ஆதலின் ஒருமையுற்று மூன்றாம் பகுதி ஆயின என்றவாறு. ஆகலானே மூன்றாம் கண்டம் என மாறுக. பிறப்பிலுழக்கும் வினைப்பயனாகலின் பிணி மூப்புச் சாக்காடு என்பன துன்பம் என ஒருமைப்பட்டு, பிறப்பும் வினைப்பயனுமாய் நான்காம் பகுதியிற்பட்டன.

சந்திகள்

(நான்கு பகுதிகளும் தம்முன் கூடுமிடங்கள்)

148-152 : பிறப்பின்...........சந்தி

(இதன் பொருள்) பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்குக் காரணமாகிய செய்கையும், உணர்ச்சியும் ஒன்று சேர்வது முதற்சந்தியாம்; நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சி இன்று அறிவது இரண்டாஞ்சந்தி-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடுஞ்சந்தி குற்றமில்லாமல் அறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தியாம்; கன்மக் கூட்டத்தொடு வருபிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வதாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் என்க.

(விளக்கம்) செய்கையும் உணர்வுஞ் சேர்தல் முதற் சந்தி; நுகர்வும் வேட்கையுஞ் சேர்தல் இரண்டாஞ் சந்தி; பிறப்புந் தோற்றமுஞ் சேர்தல் மூன்றாஞ் சந்தி. நான்கு பகுதிகளும் தம்முள் அந்தரதீயாய் மூன்று புணர்ச்சி எய்தி மண்டிலமாய்ச் சுழலும் என்றராயிற்று. முன்னரும் (118) ஊழின் மண்டில்மாச் சூழுமிந் நுகர்ச்சி என்றறிவுறுத்தமை நினைக.

மூன்றுவகைப் பிறப்பு

153-158 : மூன்று.......ஆகையும்

(இதன் பொருள்) மூன்றுவகைப் பிறப்பும் மொழியும் காலை-மூன்று வகைப்பட்ட பிறப்புகளின் இயல்பை ஆராய்ந்து கூறுமிடத்தே அவைதாம்; ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும்-அமைதியுற்ற துன்ப நீக்கமார்க்கம் ஆகிய நெறியிலே இயங்கும் உணர்வே தலைசிறந்து தோன்றுவதே வீடுபேறாகும் என்று துணிந்து பிறந்தம்; உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்-அவ்வுணர்வு உள்ளே அடங்குமாறு உருவமே தலைசிறந்து பிறந்தும்; உணர்வும் உருவும் உடங்கத் தோன்றியும்-உணர்வானும் உருவத்தானும் சிறப்பின்றி அவையிரண்டும் ஒருபடித்தாகப் பிறந்தும் புணர்தரு உடம்பொடு புணர்ந்து வருகின்ற; மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்-மக்களும் தெய்வமும் விலங்கும் ஆகின்ற இம்மூன்றுவகையும் ஆதலால் என்றார் என்க.

(விளக்கம்) ஞானநெறி நின்றியங்கி வீடு பெறுதற்கியன்ற நன்னர் நெஞ்சத்தோடு பிறக்கும் மக்கட் பிறப்பின்கண் உணர்வே தலைசிறத்தலின் அதுவே தலையாய பிறப்பென்னும் குறிப்புத் தோன்ற மக்கட் பிறப்பை இவ்வாறு விதந்தார். தெய்வப் பிறப்பில் வீட்டுணர்வு சிறவாமல் நுகர்ச்சியே சிறந்து நிற்றலின் அதனை உணர்வு அடங்கி உருவம் சிறந்த பிறப்பென்றார். விலங்குப் பிறப்பில் உணர்வும் உருவமும் மாகிய இரண்டும் சிறவாமை தோன்ற உணர்வும் உருவும் உடங்கத் தோன்றி என்றார். உடங்கு உடங்க என எச்சமாயிற்று. உடம்பொடு புணர்தரு மக்கள் முதலிய ஆகையும் என்க.

காலம்

159-168 : சாலம்........படுமே

(இதன் பொருள்) காலம் மூன்றும் கருதும் காலை-இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் காலம் மூன்றனையும் ஆராய்ந்து காணுமிடத்தே; மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை இறந்த காலம் என்னல் வேண்டும்-உறுதிப்பொருளை மறத்தற்குக் காரணமான பேதைமையும் செய்கையுமாகிய இரண்டனையும் இறந்த காலத்தன என்று கொள்ளல் வேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்று இவை சொல்லுங்காலை-உணர்வு முதலாகத் தோற்றம் ஈறாக நின்ற. இவ்வொன்பது நிதானங்களையும் காலத்தொடு படுத்துக் கூறுமிடத்தே; நிகழ்ந்தகாலம் என நேரப்படும்-நிகழ்ந்த காலத்தன என்று கூறப்படுவனவாம்; பிறப்பு பிணி மூப்பு சாவு அவலம் அரற்று கவலை கையாறுகள் எதிர்காலம் என இசைக்கப்படும்-பிறப்பும் பிணியும் மூப்பும் சாவும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறுகளும் ஆகிய இவை எல்லாம் எதிர்காலத்தன என்று கூறப்படும்; என்றார் என்க.

(விளக்கம்) பிறந்துழலும் உயிர் பற்றியது இக்கால வாராய்ச்சி. முற்பிறப்பிலே உண்டான பேதைமையும் செய்கையுமே இப்பிறப்பை உண்டாக்கின. ஆதலின் அவை இறந்த காலத்தன எனப்பட்டன. உணர்வு முதலாகத் தோற்றம் ஈறாக அமைந்த இந்நிதானங்கள் ஒன்பதும் பிறந்தவனுக்கு யாண்டும் நிகழ் காலத்தனவேயாக இருத்தலுணர்க. இனிப் பிறப்பு என்றது வழிமுறைப் பிறப்பினை. அப்பிறப்பும் பிணியும் அதற்குரிய மூப்பும் சாவும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறுகளும் எதிர்காலத்தனவே ஆதலும் அறிக. இத்தகைய துன்பங்களை மறந்தமையாலே நிகழ்காலத்தனவாகிய இவை வருகின்றன, எதிர்காலத்தும் வரவிருக்கின்றன என்னும் வாய்மையை மறந்த பேதைமையும் செய்கையும் என்று பேதைமையின் இழிவு தோன்ற விதந்தோதினர் எனக் கோடலுமாம்.

குற்றமும் வினையும் பயனும்

169-174 : அவலம்.......காலை

(இதன் பொருள்) அவாவே பற்றே பேதைமை என்று இவை-வேட்கையும் பற்றும் அறியாமையும் என்று கூறப்படுகின்ற இம்மூன்று நிதானங்களும்; குலவிய குற்றம் எனக்கூறப்படும்-தம்முட் கூடிய குற்றம் என்று அறிஞர்களால் கூறப்படும்; புனையும் அடைபவமும் செயல் வினையாகும்-இவற்றோடு சேர்த்துக் கூறப்படுகின்ற தம்முள் தொகுதியாய்ச் சேர்கின்ற கன்மக் கூட்டமும் அவற்றிற்குக் காரணமான செயல்களும் வினையாகும்; நிகழ்ச்சி உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சி நேரும் காலை ஆங்கே பயன்-உணர்ச்சியும் உடம்பும் மனமுதலிய கருவிகளும் ஊறும் நுகர்ச்சியும் வழிமுறைப் பிறப்பும் மூப்பும் பிணியும் சாவும் ஆகிய இவை நிகழ்ச்சிகளாம் இவ்வேது நிகழ்ச்சிகள் எதிரும் அவ்விடத்தே வினையின் பயன் எய்துமாதலால் இவை ஏழுமே பயன் என்று கூறுவர் என்றார் என்க.

(விளக்கம்) அவாவும் பற்றும் பேதைமையுமாகிய இம்மூன்றுமே துன்பங்களுக்கெல்லாம் காரணமாகின்ற குற்றமான குணங்களாம் என்றவாறு.

கன்ம வீட்டமும் மேலும் செய்யும் செய்கைகளுமே வினை என்று கூறப்படுவன என்றவாறு.

வினைப்பயன் உண்ணுங்காலை உணர்ச்சி முதலிய ஆறும் ஏதுவும் நிகழ்ச்சியுமாக எதிர்வனவாம். அவ்வழி வரும் நுகர்ச்சி பயன் ஆகவே இவை ஏழுமே வினைப்பயன் என்று கூறப்படும் என்றவாறு.

வீட்டியல்பு

175-178 : குற்றமும்...........இயல்பாம்

(இதன் பொருள்) குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்ற பண்புகளும் வினையும் பயனும் ஆகிய இவை அனைத்துமே துன்பம் என்னும் வாய்மையின்பாற் படுவனவாம்; பெற்ற தோற்றம் பெற்றிகள் நிலையா-பெற்றுள்ள பிறப்பும் அதன் குணங்களும் ஆகிய இவையெல்லாம் நிலையுதலுடையன அல்ல எனவும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலையென-காட்சிப் பொருளும் கருத்துப் பொருளுமாகிய இவையிற்றுள் யாதொரு பொருளுக்கும் உயிர் இல்லை எனவும்; இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்-இவ்வாறு திட்பமாக உணர்ந்து கொள்ளும் இவ்வுணர்ச்சிகளே வீடுபேற்றிற்கு உறுதியாகிய பண்புகளாம்;

(விளக்கம்) (30-29: மணி) குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில் வறிய துன்பம் என நோக்க, உலையா வீட்டிற் குறுதியாகி என முன்பு தொகுத்துக் கூறியவர் ஈண்டு (167) பிறப்பே என்பது முதலாக (174) வீட்டியல்பாம் என அவற்றை விரிவகையால் விளக்குகின்றார் ஆதலின் நிலையில் வறிய துன்பம் என நோக்க வுலையா வீட்டிற்கு உறுதியாம் என்னாது, வாளாது இப்படி உணரும் இவை வீட்டியல்பாம் என்றார். இப்படியுணரும் உணர்ச்சிகளே வீடுபேற்றை நல்குதலின் அவற்றையே வீட்டியல்பு எனக் காரணத்தைக் காரியமாகவோதினர் என்க.

நால்வகை வாய்மைகள்

179-188 : உணர்வு..........நான்காவது

(இதன் பொருள்) உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலை கையாறு என நுவலப்படுவன நோய் ஆகும்-உணர்ச்சி முதலாகக் கையாறு ஈறாகக் கூறப்பட்டனவாகிய பதின்மூன்றனையும் தன்னகத்தே கொண்ட பிறப்பே துன்பம் ஆகும் என்பது ஒரு மெய்க்காட்சியாம்; அ நோய் தனக்கு-அப்பிறப்பாகிய துன்பத்திற்கு; பேதைமை செய்கை அவாவே பற்றுக் கருமவீட்டம் காரணம் ஆகும்-அறியாமையும் செய்கையும் வேட்கையும் புலன்களின் பாற் செல்லும் பற்றுள்ளமும் பழ்வினைத் தொகுதியும் காரணமாகும்; தோற்றம் துன்பம் காரணம் பற்று-இவ்வாற்றால் பிறப்பே துன்பம் என்பதும் அதற்குக் காரணம் பற்றுள்ளமே என்பதும் ஆகிய இரண்டுண்மைகள் தெளியப்பட்டன இனி; வீடே இன்பம்-இனி இத்துன்பநீக்கமாகிய இன்பம் இவற்றிற் பசைஇய அறிவாகிய பற்றினின்றும் விடுதலை பெறுதலேயாம். என்னை? காரணம் பற்று-இலி. அவ்வீட்டின்பத்திற்குக் காரணம் பற்றில்லாவுள்ளமே ஆகலின், ஒன்றிய உரையே நான்கு வாய்மையாவது-ஈண்டு மாறுபாடின்றிப் பொருந்திய இந்நான்கு மொழிகளும் நான்கு வாய்மைகள் ஆதலறிக என்றார் என்க.

(விளக்கம்) இப்பகுதியால் (32) நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி என்றுமுன்னர்த் தொகுத்தோதப்பட்ட நான்குவாய்மைகளும் விரிவகையால் விளக்கினமை அறிக. இதன்கண்-உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் அதன் வழித்தாகிய வழிமுறைத் தோற்றமும் பிணி மூப்புச் சாவு அவலம் கையாறு என்னும் அனைத்தும் பிறந்தோர் பால் உள்ளன. ஆதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்பது ஒரு மெய்க் காட்சியாம்; அப்பிறப்பிற்குக் காரணம் பேதைமை முதலியன ஆம் என்பது ஒரு மெய்க்காட்சி என்பார். தோற்றம் துன்பம் (1) பற்றுக் காரணம் (2) எனச் சுருங்கக் கூறியும் விளங்கவைத்தனர். (3) துன்ப வீக்கமே வீடு என்பார் வீடு இன்பம் என்றார். அதற்குக் காரணம் பற்றறுதியே என்பார். காரணம் (4) பற்றிலி என்றார். இங்ஙனம் கூறப்படும் இந்நான்கு உரைகளுமே நான்கு மெய்க்காட்சிகளுமாம் என்பார் ஒன்றிய உரையே நான்கு வாய்மை ஆவதென்று ஓதினர். இந்நான்கு வாய்மைகளும்,

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றேர் உறுவது (ஊரலர்-64-67)

எனவரும் மாதவி கூற்றிலமைந்துள்ளமை நுண்ணிதின் உணர்க.

இனி இவற்றோடு

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும் (குறள்-349)

எனவரும் இவ்வருமைத் திருக்குறளையும் நினைக.

இனி, துன்பம், துன்பவருவாய், துன்பநீக்கம், துன்ப நீக்கநெறி என இந்நான்கு வாய்மைகளையும் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்க.

இனி, துன்பநீக்கநெறி எட்டுவகைப்படும் என்பர். அவை வருமாறு: நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்பன.

கந்தங்கள்

189-190 : உருவு........ஆவன

(இதன் பொருள்) உருவு நுகர்ச்சி குறிப்பு பாவனை உள்ள அறிவு இவை-உருவக்கந்தமும் நுகர்ச்சிக்கந்தமும் குறிக்கந்தமும் செயற்கந்தமும் அறிவுக்கந்தமும் என்று கூறப்படும் இவையே; ஐங்கந்தம் ஆவன-ஐவகைக் கந்தங்கள் எனப்படும் என்றார் என்க.

(விளக்கம்) (33) இனி ஐந்துவகைக் கந்தத் தமைதியாகி என்று முன் தொகுத்து நிறுத்த முறையானே ஈண்டு அவற்றை விரித்து விளம்புகின்றார் என்க.

உருவக்கந்தமும் நுகர்ச்சிக்கந்தமும் குறிக்கந்தமும் செயற்கந்தமும் அறிவுக்கந்தமும் என்னும் இவற்றை ரூபஸ்கந்தம் விஞ்ஞானஸ்கந்தம் ஞானஸ்கந்தம் பாவனாஸ்கந்தம் சம்ஸகாரஸ்கந்தம் என்றும் கூறுவர். இதனை

உருவம்வே தனைகுறிப்புப் பாவனைவிஞ்
ஞானம்என உரைத்த ஐந்தும்
மருவியே சந்தானத் தால்கெடுதல்
பந்ததுக்கம் மற்றிவ் வைந்தும்
பொருவிலா வகைமுற்றக் கெடுதல்முத்தி
யின்பம்முன்பு புகன்ற வைந்தின்
விரிவெலாம் தொகுத்துரைத்த மெய்ந்நூலிற்
றெரித்திர்இவை மெய்ம்மை என்றான் (மெய்ஞ்ஞான விளக்கம் : சருக்கம் 32)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இனி, இந்த ஐந்து கந்தங்களின் கூட்டமே உயிர் என்பது பவுத்தர் கொள்கை, அதனை

கவையொப் பனகை விரலைந் துகளும்,
இவையிப் படிகைப் பிடியென் றதுபோல்
அவையப் படிகந் தங்களைந் துகளும்
நவையைப் படுநல் லுயிரா மெனவும்

எனவரும் நீலகேசிச் (462) செய்யுளானும் அதற்கு யாமெழுதிய ஐந்து விரல்களையும் கூட்டிப் பிடித்வழி கைப்பிடி என்றொரு வழக்குண்டானற் போல ஐங்கந்தமும் கூடிய கூட்டத்திற்கே உயிர் என்று பெயர் கூறப்படுகின்றது என்றவாறு; எனவே உயிர் என்பது வாய்மை வகையான் இல் பொருளாம். வழக்கு வகையான் உள் பொருளாம் என்றவாறாயிற்று எனவரும் விளக்கவுரையானும் இனிதின் உணர்க.

இனி ஐங்கந்தங்களுள் உருவக்கந்தம், பூதவுரு உபாதான உரு என இரண்டாம் என்பர். அதனை உருவினியல் பூதமுடன் உபாதான மெனவிரண்டாம் எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தால் (சருக்கம் 32:7) உணர்க.

அறுவகை வழக்கு

191-198 : அறுவகை..........வழக்குமென

(இதன் பொருள்) அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்-இனி ஆறுவகையான வழக்குகளையும் குற்றமின்றி விரித்து விளம்புமிடத்தே அவைதாம்; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த-தொகையும் தொடர்ச்சியும் தன்மை மிகுத்துரையும் இயைந்துரையும் என்னும் நான்கு வகை வழக்கோடு கூடிய; உண்மை வழக்கும் இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என-உண்மை வழக்கு முதலியன என இந்த ஆறுவகை வழக்குமாம் என்றார் என்க.

(விளக்கம்) அறுவகை வழக்கும் தொகை முதலிய நான்கோடும் கூடி ஒவ்வொன்றும் நான்கு வகைத்தாய் ஆறாம் என்றவாறு. இவற்றுள் பிற்காலத்தே தொகை முதலிய நான்கனுள் இயைந்துரை என்பதனைத் தொகையிலடக்கித் தொகையும் தொடர்ச்சி தன்மை மிகுத்துரை என்ற மூன்றே கொள்வர். இம்மூன்றும் உள்வழக்கும் இல்வழக்கும் ஆகிய இரண்டனோடும் கூடி ஒவ்வொன்றும் மூன்றுவகைத்தாய் வழக்கு அறுவகைப்படும் என்று கூறுவாருமுளர். இதனை,

வழக்கு இரண்டாய்ப் பொருவும் இயல் உள்ளதுடன்
இல்லதும் என்றிரண்டாப் புகல்வர்

எனவும்,

மருவு தொகை தொடர்ச்சி மிகுத்துரை என
ஒன்று ஒரு மூவகைத்தாய் ஆறாம்
தெளிவுறு மாறவ்வாறும் இவ்வாறாம் என
வகுத்துச் செப்பக் கேண்மோ

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (புத்த-10) அறிக.

தொகை தொடர்ச்சி முதலியவற்றினியல்பு

199-207 : சொல்லிய...........வழங்குதல்

(இதன் பொருள்) சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு-முன் கூறப்பட்ட தொகை வழக்கின் இயல்பாவது, உடம்பு என்றும் வெள்ளம் என்றும் நாடு என்றும் பல பொருளின் கூட்டத்தைத் தொகுத்து ஒரு பொருள்போல ஒரு பெயரால் வழங்குவதாம்; தொடர்ச்சி-இனித் தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்-வித்தினின்றும் முளையும் முறையினின்று தாளும் என இங்ஙனம் காரணகாரிய முறையால் நிகழும் நிகழ்ச்சியில் வித்து நெல்லாதல் பற்றி அவற்றை நெல் என்று வழங்குதல் போன்ற வழக்காம்; இயல்பு மிகுத்துரை-இனி, தன்மை மிகுத்துரை என்னும் வழக்காவது; ஈறுடைத்து என்றும் தோன்றிற்று என்றும் முத்தது என்றும் மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து வைத்தல்-ஒரு பொருளின் இறுதியுறுதல் தோற்றமுறுதல் மூத்தல் என்னும் இயல்புகளுள் வைத்து இஃதழிபொருள் என்றாதல் இது தோன்றிய பொருள் என்றாதல் முதிர்ந்தது என்றாதல் அம்மூன்றனுள் ஒன்றனை மட்டும் கிளர்ந்தெடுத்து வழங்குதல் போல்வதாம்; இயைந்துரை என்பது-இனி இயைந்துரை என்னும் வழக்காவது; எழுத்துப் பலகூடச் சொல்லெனத் தோற்றும் பலநாள் கூடிய எல்லையத் திங்களென்று வழங்குதல்-பல எழுத்தாலியைந்த தொடரைச் சொல்லென வழங்குமாறு போலப் பலநாள் கூடிய ஒரு கால எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் போல்வது ஆம் என்றார் என்க.

(விளக்கம்) தொகை வழக்காவது பல பொருட்குவையாகிய ஒன்றிற்கு ஒரு பெயரிட்டு வழங்குதலாம் எனவும் தொடர்ச்சியாவது-வித்துமுதல் தாள் ஈறாகப் பரிணமித்து வருவனவற்றைக் காரணமாகிய நெல் என்றே வழங்குதலாம் எனவும் ஒரு பொருளின் தன்மை பலவற்றுள் ஒன்றனை மட்டு விதந்து வழங்குதல் எனவும் நுண்ணிதிற் கண்டுகொள்க. தொகை வழக்கும் என்பதற்கு இயைந்துரைக்கும் வேறுபாடு தெரிந்தோதுவார் பல எழுத்துக் கூடி இறந்தொழியவும் அவ்வியைபிற்குச் சொல் என்று ஒரு பெயரிட்டாற் போல இறந்தொழிந்த பலநாளின் இயைபின் எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் என்றார். தொகைப் பொருளில் தொக்க பொருள் எல்லாம் உளவாதலும் இயைந்துரையில் இயைந்த எழுத்தும் நாளும் இல்லையாதலும் வேற்றுமை இதற்கிவ்வாறு பொருள் கூறாது வேறு கூறுவார் உரை பொருந்தாமை நுண்ணுணர்வால் தெளிந்து கொள்க.

இனிப் பவுத்தர்கள் கணபங்க வாதியாதலின் தொகைப்பொருளும் கணந்தோறும் கெட்டே பிறத்தலின் தொகைப் பொருட் கேட்டிற்கும் இயைந்துரையில் எழுத்தும் நாளும் அங்ஙனமே கெடுதலின் இவற்றுள் வேற்றுமையின்றாம் பிறவெனின் அற்றன்று. தொகைப் பொருள் சந்தானத்தால் தொடர்ச்சியால் கெட்ட பொருளே மீண்டும் பிறக்கும் இயைந்துரைக்கண் எழுத்துக்களும் நாள்களும் கெடுங்கால் பொன்றக் கெடுவன ஆதலின் இவ்வேற்றுமை சாலப்பெரிது, இதனை அறியும் நுணுக்கமின்மையால் பிற்றைநாளில் இயைந்துரையைத் துவரக் கைவிட்டனர் என்று விடுக்க.

இனி இவற்றை-

கந்தமைந்தின் செறிவொருவ னென்பனபன்
மரச்செறிவு காடென் றாற்போன்
மைந்தவென்றல் தொகையுள்வழக் கயலொருவன்
அவையைந்தும் அடுப்பான் என்றல்
எந்தையியம் பியதொகையில் வழக்காகுங்
காரணகா ரியத்தாற் றோன்றி
அந்தமடைந் திடுவனென்றல் தொடர்ச்சியுண்மை
வழக்கென நூ லறையு மன்றே

எனவும்,

மாண்டவழி யேயுதிப்பன் என்னாமல்
ஒருவ னென்றும் வைகுவானென்
றீண்டவுரைப் பதுதொடர்ச்சி யில்வழக்காம்
உதித்தவெல்லா மிறக்கு மென்றல்
வேண்டுமிகுத் துரையுள்வழக் காம்விழிக்குப்
போன துபோல் வேறால் என்றல்
பூண்டமிகுத் துரையில்வழக் காகும்
இன்னுமவற் றினியல் புகலக்கேண்மே

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களானும் (சருக்கம் 32.செய்-10-11) நன்குணர்க.

ஈண்டுக் காட்டிய இச்செய்யுளிலும் மணிமேகலை யாசிரியர் கூறிய இயைந்துரை வழக்குக் கைவிடப்பட்டிருத்தலு மறிதற் பாலதாம்.

உள்வழக்கும் இல்வழக்கும்

208-216 : உள்வழக்கு..........இல்லென

(இதன் பொருள்) உள்வழக்கு உணர்வு இல்வழக்கு முயற்கோடு-உள் வழக்காவது உள்பொருளாகிய உணர்வு உண்டு என்றாற் போல்வதாம், இல்வழக்காவது இல்பொருளாகிய முயற் கொம்பு இல்லை என்பது; உள்ளது சார்ந்த உள்வழக்கு சித்தத்துடனே நுகர்ச்சி ஒத்தது ஆகும்-உள்பொருளைச் சார்ந்து வருகின்ற உள்வழக்காவது உணர்ச்சிக்குப் பொருந்தியது நுகர்பொருள் என்பது போல்வன ஆம்; உள்ளது சார்ந்த இல்வழக்கு சித்தம் மின்போல் உற்பவித்தது என்கை-உள் பொருள் சார்ந்த இல் வழக்காவது உள் பொருளாகிய அறிவினை மின்னல் போன்று முன்னரில்லாமல் ஞெரேலென உண்டாயிற்று என்பது போல்வனவாம்; இல்லது சார்ந்த உண்மை வழக்கு-இல்பொருளைச் சார்ந்து பிறக்கும் பொருளாக உள்பொருளைக் கூறும் வழக்காவது; காரணம் இன்றிக் காரியம் நேர்தல் ஆகும்-காரணமில்லாமலே காரியம் நிகழ்ந்ததாகக் கட்டுரைத்தலாகும்; இல்லது சார்ந்த காரியம் இல்வழக்கு ஆகும்-இல்பொருளைச் சார்ந்த இல்வழக்காவது; முயல் கோடு இன்மையின்-முயலுக்குக் கொம்பின்மையாலே; தோற்றமும் இல் எனல்-முயலுக்குக் கொம்பு முளைத்தலில்லே என்று கூறுதல் என்பதாம்; என்றார் என்க.

(விளக்கம்) அறுவகை வழக்கத்திற்கும் எடுத்துக்காட்டோடு மறுவின்றி விளக்கங் கூறியவாறாம். இனி இவற்றிற்கு இங்ஙனமே-

ஓதியிடின் உள்வழக்கில் வழக்குண்மை
சார்ந்தவுண்மை உண்மை சார்ந்த
ஏதமுறு மில்வழக்கில் லதுசார்ந்த
உண்மையின்மை சார்ந்த இன்மை
பேதமிவை யாறாமுள் வழக்குளதை
யுளதென்று பேசல் ஆகும்;
மூதுலகி னில்வழக்குச் சொலின்முயற் கோ
டில்லையென மொழிவ தாமால்

எனவும்,

அறிவினைச்சார்ந் தறிவுதிக்கு மென்பதுண்மை
சார்ந்தவுன்மை அறிவைச் சார்ந்தே
அறிவுபின்ன ருதியாதென் றுரைப்பதுண்மை
சார்ந்தவின்மை அறிவில்லாமல்
அறிவுபின்ன ருதிக்குமென்ப தில்லதுசார்
புண்மையின்மை யதுசார் இன்மை
அறிவினைக்கொண்ட டறிந்திடல் உள்ளங்கை
மயிர்க்கயி றென்பதாரு மென்றான் (32ஆம் சருக்கம்-புத்த-12-13)

எனவும், எடுத்துக் காட்டோடு மெய்ஞ்ஞான விளக்க நூலுடையாரும் இனிதின் விளக்குதலுணர்க.

217-228 : நான்கு...........இயல்பு நயம்

(இதன் பொருள்) நான்கு நயம் எனத் தோன்றப்படுவன-நான்கு நயங்கள் என்று நுண்ணறிவுடையோர்க்குத் தோன்றப்படுவன யாவை எனின்; ஒற்றுமை வேற்றுமை புரிவு இன்மை இயல்பு என்க-ஒற்றுமை நயமும் வேற்றுமை நயமும் புரிவின்மை நயமும் இயல்பு நயமும் என்று கூறுக; ஒற்றுமை நயம்-அவற்றுள் ஒற்றுமை நயமாவது; காரண காரியப் பொருள்களை-காரணமும் காரியமுமாகிய பொருள்களை ஆராய்ச்சி வகையாற் பிரித்து நோக்காமல்; ஒன்றாக உணர்தல் ஆம்-ஒன்றாகவே அறிவதாம்; வீற்று வீற்றாக வேதனை கொள்வது வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்-அவ்வாறன்றிக் காரணத்தையும் காரியத்தையும் வேறு வேறு பொருளாகக் கொள்வதனை வேற்றுமை நயம் என்று கோடல் வேண்டும்; பொன்றக்கெடா அப்பொருள் வழிப் பொருள்களுக்கு ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்கு உள்ளந்தான் இலை என்றல்-முழுதும் கெடாமல் தொடர்ச்சி வகையால் கெட்டகணத்திலேயே தோன்றுமியல்புடைய பொருள்வழிப் பொருள்களுக்குப் பொருந்திய காரணமும் அக்காரணம் தோற்றுவிக்கின்ற காரியத்தைச் செய்து தருதற்கு வினைமுதலாகிய ஆன்மா என்று ஒன்று இல்லை என்று கூறுதல்; புரிவின்மை என்னும் நயமாகும்-புரிவின்மை நயம் எனப்படும்; நெல் வித்தகத்து நெல்முளை தோன்றுமெனல்-நெல்லாகிய வித்தினுள்ளிருந்து நெல்லின் முளையே தோன்றும் (பிறிதொன்றன் முளை தோன்றாது) என்று கூறுதல்; நல்ல இயல்பு நயம்-நன்மையுடைய இயல்பு நயம் ஆகும்; என்றார் என்க.

(விளக்கம்) காரண காரியத்தைப் பிரித்து நோக்காது ஒன்றாகக் காண்பது ஒற்றுமை நயம். அஃதாவது புகையையும் நெருப்பையும் நெருப்பென்று ஒன்றாகவே கூறுவது. புகை வேறு நெருப்பு வேறு என இரண்டாகக் கொள்வது வேற்றுமை நயம். அறிவு கணந்தோறும் கெட்டுப் பிறக்கும் என்பது போன்றக் கெடாப் பொருள்வழிப் பொருளாம். இவற்றில் முதற்கணக்கே கெட்ட அறிவு காரணம், அதன் வழிப்பொருள் அக்கணத்தின் பிற்பகுதியிலே பிறந்து அறிவு காரியம் ஆம். காரணம் ஆகிய அறிவு பிறப்பித்த காரியமாகிய அறிவு இயல்பாகவே நிகழ்வதன்றி இக்காரணத்தினின்றும் காரியத்தைத் தோற்றுவிக்கும் ஆன்மா என்று ஒரு வினைமுதல் இல்லை என்பது புரிவின்மை நயம் என்றவாறு. இனி நெல் விதையிலிருந்து நென் முளை தோன்றும் என்றது பிறமுளை தோன்றா என்று அறுதிச் செய்தவாறாம். புரிவு இன்மை-செய்கை யில்லாமை. அஃதாவது ஒருவனால் செய்யப்படாமல் காரணத்தினின்றும் காரியம் பிறப்பது என்றவாறு. இந்நயங்கள் நான்கும் பவுத்தருடைய தத்துவங்கட்கு இன்றியமையாதன ஆகும் என்றுணர்க.

நயங்களால் எய்தும் பயன்கள்

228-234 : இவற்றின்..........நான்கும்

(இதன் பொருள்) இவற்றின் நாம் கொள் பயன்-இனி இந்த நான்குவகை நயங்களானும் பவுத்தர்களாகிய நம்மனோர் எய்தும் பயன்களைக் கூறுவல் கேட்பாயாக; தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்-பேதைமை முதலிய பன்னிரண்டு பொருள்களின் வேறாகப் பிறிதொரு பொருள் இல்லை என்றும்; அப்பொருளிடைப் பற்று ஆகாதென்றும்-மண்டில வகையாற் சூழும் இப்பொருள்களிடத்தே வழிமுறைத் தோற்றத்திற்குக் காரணமான பற்றினைச் செய்தல் அறிவாகா தென்றும்; செய்வானொடு கோட்பாடு இலை என்றும்-இப்பொருள்களை இவ்வாறு மண்டில வகையாற் சுழற்றுதற்கு ஒருவினை முதல்வனும் இங்ஙனம் சுழற்றுதற்கு அவனுக்கொரு நிமித்தமும் இல்லை என்றுணர்ந்து கோடலும்; எய்தும் காரணம் தாம் காரியம் என்றும்-அநாதியாயுள்ள காரணங்களே காரியங்களாய்ச் சார்பிற்றோன்றும் என்றும்; அதுவும் அன்று அலாததும் அன்று என்றும்-அக்காரியங்கள் காரியமாந் துணையுமன்று அஃதல்லாததும் அன்று என்றும்; விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்-பிடக நூல் விதிமுறையினாலே தொகுக்கப்பட்டமையால் ஈண்டு விரிக்கப்பட்ட நான்கினையும்; நாம் எய்தும் பயன்-இந்நயங்களாலே யாம் அடையும் பயன் என்றார்; என்க.

(விளக்கம்) நயங்கள் நான்கனுள் நிறுத்த முறையானே தொகுத்த பன்னிரண்டு மன்றிப் பிறிதொரு பொருளும் இல்லை என்று மெய்யுணர்வு பெறுதல். ஒற்றுமை நயத்தால் எய்தும் பயன். அவற்றைப் பிரித்து ஆராயுமாற்றால் இவற்றால் எய்துவது துன்பமே அன்றித் தொழுதகவில்லை என்றுணர்ந்து பற்றறுத்தல் வேற்றுமை நயத்தால் உண்டாகும் பயன் என்க. புரிவின்மை நயத்தால் தீதும் நன்றும் பிறர்தர வாரா, நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்றுணர்தலாம். உலகம் அநாதியாகவுளது, அதற்குச் செய்வோனும் அங்ஙனம் செய்தற்கு ஒரு நிமித்தமும் இல்லை என்றுணர்தலாம். இயல்பு நயத்தால் நம்முள்ளத்தின் வழி நமது கட்டும் வீடும் உள்ளன என்றுணர்தல் பயனாம், என்றவாறு.

வினாவிடை

235-237 : வினாவிடை.......என

(இதன் பொருள்) வினாவிடை நான்கு உள-இனி மணிமேகலையே கேள்! நந்தம் திருவற மூர்த்தியாகிய புத்தபெருமான் பொதி மூலம் பொருந்தி இருந்து திருவாய் மலர்ந்தருளிய அறவுரைகளை அறிந்து மேற்கோடற் கெண்ணியாதல் மறுத்துத் தங்கோளை நிலைநிறுத்துதற்காதல் ஏனையோர் நம்மை வினவும் வினாக்கள் நான்குள்ளன, அவற்றிற்கு நாம் இறுக்க வேண்டிய விடைகளும் நான்குள்ளன, அவற்றையும் அறிவுறுத்துவல் கேட்பாயாக! துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல்-ஏனையோர் வினவிய பொருளை ஆராய்ந்து இதற்கிதுவே விடையாம் என்று தெளிந்து விடை கூறுதலும், வினவிய பொருளைப் பகுத்து வினவி அவற்றிற்கேற்ப விடையையும் பகுத்துப் பலவாக விடை கூறுதலும்; வினாவின் விடுத்தல்-வினவியோர்க்கு எதிர்வினா வெழுப்பு மாற்றால் விடையிறுத்தலும்; வாய்வாளாமை என-வினாவிற்கு விடை கூறுதலின்றி வாய்வாளா திருக்கு மாற்றால் குறிப்பாக விடைபெறுமாறு செய்தலும் என்னும் இவை நான்குமே வினாவிற்குரிய விடைகளாம் என்றால் என்க.

(விளக்கம்) அறவொழுக்கத்தை மேற்கொண்டொழுகுவோர்க்கும் அவ்வறங்களை அறிய விரும்பி வந்து வினவும் பிறர்க்கும் அவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமையின் அறம் பரப்பவும் நிலைநிறுத்தவும் வேண்டி அதற்கியன்ற வினாக்களையும் அவ்வினாவிற்குரிய விடைகளையும் அறிவுறுத்தல் வேண்டிற்று. இதனாலாம் பயன் அறம் வளர்த்தலாம் என்க. அறமறிய அவாவியோ அல்லது மறுத்தற் கெண்ணியோ வினாவும் வினாக்கள் இவை நான்குமே, இவற்றிற்கு விடையும் நான்கேயாம். பிறரால் ஏனைய வழியில் வினாவப்படினும் வாய்வாளா திருத்தல் வேண்டும் என இதனானும் அறமே அறிவுறுத்தபடியாம்.

விடைகளை விரித்தறிவுறுத்தல்

238-249 : தோன்றியது............இருத்தல்

(இதன் பொருள்) தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்-தோன்றிய பொருள் அழியுமோ? அழியாதோ என்று ஒருவன் வினவினால்; கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்-யாதொரு பொருள் தோன்றிற்று அப்பொருட்கு ஒரு தலையாக அக்கணத்தினுள்ளேயே அழிவும் உண்டாம் என்றிறுத்தல், ஒரு தலையாகத் துணிந்து சொல்லுதல் என்னும் விடையாகும்; செத்தான் பிறப்பானோ பிறவானோ என்று செப்பின்-ஒருவன் இறந்தவன் மீண்டும் பிறப்பானோ பிறவா தொழிவானோ என்று வினவியக்கால்; பற்று இறந்தானோ அல் மகனோ எனல்-நின்னால் செத்தான் என்று குறிக்கப்பட்டவன் பற்றற்றுச் செத்தவனோ அல்லது பற்றுடையனாகவே செத்தவனோ என்று வினவிப் பற்றற்றவன் எனின் பிறவான் என்றும் பற்றுடையோன் எனின் பிறப்பான் என்றும் ஏற்றபெற்றி விடையிறுத்தலே; மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்-பெரிதும் வினாவினைப் பகுத்து வினவி அவன் விடைக்குத் தக விடையிறுத்தல் என்று சான்றோர் கூறுவர்; வினவின் விடுத்தல்-இனி வினவியவனே அவ்வினவிற் கியன்ற விடையுமையுமாற்றால் எதிர்வினா வெழுப்பி விடைபெற வைத்தல் என்னும் விடை வருமாறு; முட்டை முந்திற்றே பனை முந்திற்றே என கட்டுரை செய் என்றால்-ஒருவன் விதை முந்தியதோ பனை முந்தியதோ என வினவி இதற்கு விடை கூறுதி என்றக்கால்; எம் முட்டைக் கெப்பனை என்றல்-அங்ஙனம் வினவியவனை நோக்கி நீ வினவியது எந்த விதத்திற்கு எந்தப்பனையைக் குறித்து அதனைக் கூறுதி என்று எதிர்வினாவெழுப்புதலேயாம்; இனி, வாய்வாளாமை-வாய்வாளா திருத்தல் வாயிலாக விடையறிவித்து விடுதல் என்பது; ஆகாயப் பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு-ஆகாயத்திற் பூத்த மலர் பழம்பூவோ புதிய பூவோ என்று வினவுவான் ஒருவனுடைய வினாவிற்கு; மாற்றம் உரையாது இருத்தல்-மறுமொழி கூறாமலே வாய்வாளாதிருக்குமாற்றால் அவனைத் தகுந்த விடைபெற வைத்தலாம் என்றார் என்க.

(விளக்கம்) தோற்றப் பெற்றிகள் நிலையா (30-176)

என்பது வாமன் கூறிய ஏமக்கட்டுரையாதலின் அதற்கேற்பத் துணிந்து கேடுண்டு என்றிறுத்தல் துணிந்து சொலல் என்பதன்பாற் பட்டவிடை என்பது கருத்து.

துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்

என்பது நம் கோட்பாடுகள் ஆகலின், செத்தான் பிறப்பானோ பிறவானோ என்றெழுந்த வினாவிற்குச் செத்தவனுடைய இயல்பறிந்து விடையிறுத்தல் வேண்டும் என்பார் கூறிட்டு வினவி அவன்தரும் விடைக்குத்தக நீ விடை கூறுக என்பார் கூறிட்டு மொழிதல் என்றார்.

இனி, முட்டை முந்திற்றே பனை முந்திற்றே என்று வினவுவான் விடைபெற விரும்பி வினவியவன் அல்லன் ஆகலின், அவ்வினா விதண்டாவாதத்தின் பாற்படும். அத்தகையவனுக்கு அவ்விதண்டைக் கேற்ப விடையும் விதண்டையாக விருப்பின் அவன் வாயடங்குவன் என்பார் அங்ஙனம் வினவியவனை நோக்கி எம்முட்டைக்கு எப்பனை என்று எதிர்வினா வெழுப்பி வாயடங்கும்படி செய்தல் வேண்டும் என்பதே இவ்வினாவின் குறிக்கோள் என்றறிக.

இவ்வாறன்றி ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகாரத்திற் கூறுகின்ற வினாவும் செப்பே வினாவெதிர் வரினே எனக் காட்டிய இலக்கணத்திற்கும் இதற்கும் இயை பொன்றுமில்லை. என்னை முட்டை முந்திற்றே பனை முந்திற்றே என்னும் வினா அறியான் வினாவும் அன்று, ஐயவினாவும் அன்று. அறிபொருள் வினாவும் அன்று. ஒரு புடையானும் அறியப்படாத பொருள் பற்றிச் செருக்கினலாதல் அறியாமையினானாதல் மாற்றாராகிய சமயக் கணக்கர்களால் வினவப்படுவதாம். எனவே இஃதொரு வினாப்போலியே ஆம். ஆகவே இதற்கு விடையும் போலியேயாகக் கூறி விடுத்து மாற்றார் மீண்டும் வினவாவகை அடக்குதற் பொருட்டென்றுணர்க. இஃதறியாது இதனை அந்நூற்பாவிற்கு எடுத்துக்காட்டிய தெய்வச் சிலையாரை உள்ளிட்டார் உரை போலி என்றொழிக. என்னை? இவ்வினா வெதிர் எம்முட்டைக்கு எப்பனை என்றெழுப்பும் எதிர்வினா, விடையிறுத்தற் பொருட்டாகாமையும் அங்ஙனம் வினவப்பட்டான் அதற்கு விடையிறுக்க முன்வாராதடங்குதலே இயல்பாதலும் நுண்ணிதினுணர்க.

வாய்வாளாமை என்றதும் தம் சமய நூலுணர்ச்சியில்லாத மடவோர் வினாவிற்கு வாய்வாளாமையே தக்க விடை என்றறிவுறுத்தபடியாம். ஈண்டுக் கூறும் வினா விடைகள் தத்துவம் பற்றிப் பிறப்பன ஆதலின் தாம் இல்பொருள் என்று கொள்ளும் ஆன்மா முதலியவற்றின் இயல்பு வீனாவுவார்க்கு விடை வாய்வாளாமையேயாம் என்றறிவுறுத்தவாறாயிற்று. அங்ஙனம் இல்பொருள் பற்றிய வினாவென்றற்கே ஆகாயப்பூப் பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு மாற்றம் உரையாதிருத்தல் என்று எடுத்துக்காட்டினர். இனி இங்ஙனமே-

சம்யுத்த நிகாயம் என்னும் பவுத்த நூலில் வச்சகோத்திரன் என்ற ஒரு துறவி கவுதமபுத்தரிடம் சென்று ஆன்மா என்று ஒன்று உண்டோ என்று கேட்ட பொழுது புத்தர் மாற்றம் உரையாதிருந்தனர் என்றும், ஆனால் அங்ஙனம் ஒன்று இல்லையோ என்று அவன் மீண்டும் வினவிய போதும் அதற்கும் புத்தர் மாற்றமேதும் கூறாமல் வாய்வாளாதிருந்தார் என்றும் கூறப்பட்டிருத்தல் ஈண்டு நினைவு கூரற்பாற்று.

இவ்வாற்றல் ஈண்டு வினா விடை நான்குள என்றது தத்துவ ஆராய்ச்சி பற்றிய வினா விடை என்றுணர மாட்டாது, சொல்லாராய்ச்சியின் பாற்பட்ட வினா விடைகளோடு படுத்துக் கூறும் உரைகள் போலியாம் என்றறிக.

கட்டும் வீடும்

250-253 : கட்டும்........காரணம்

(இதன் பொருள்) கட்டும் வீடும் அதன் காரணத்தது-கட்டாதல் வீடு ஆதல் அஃததற்கியன்ற காரணத்தினாலுண்டாகும் காரியமேயாம்; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை-பிறந்தோன் ஒருவனைச் சார்ந்து அக்கட்டினைச் செய்தற் குரியோராதல் அக்கட்டினின்றும் விடுதலை உண்டாக்கித் தருதற்குரியோராதல் பிறர் யாருமில்லை; யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்-யாம் முன்பு கூறிய பன்னிருவகைப் பொருள்கட்கு எல்லாம்; காமம் வெகுளி மயக்கம் காரணம்-காமமும் சினமும் மயக்கமும் ஆகிய மூன்றுமே காரணங்களாம் என்றார் என்க.

(விளக்கம்) கட்டு-பிறப்பினிற் கட்டுண்டு மண்டில வகையாற் சுழலுதல். வீடு-பிறப்பின் சுழற்சியினின்றும் விடுதலை யடைதல். ஒருவனைப் பிறப்புச் சுழலிற்படுமாறு கட்டி வைத்தற் குரியாரும், அதனினின்றும் வீடு செய்தற்குரியாரும் பிறர் இல்லை என்றவாறு. எனவே அவ்விரண்டிற்கும் உரியவன் அவனே என்றவாறாயிற்று. காமம்-வேட்கை. வெகுளி-சினம். மயக்கம்-பேதைமை. காமம் உடம்பிற்றேன்றும் தீவினை எனவும், வெகுளல் உள்ளத்திற் பிறக்கும் தீவினை எனவும் மயக்கத்தைப் பொல்லாக் காட்சி என்று கூறி இதுவும் மனத்தின்கட் பிறக்கும் தீவினை என்றும் இக்காதையில் 94ஆம் அடி முதலாக 72ஆம் அடியீறாக வருகின்ற தீவினை வகையிற் கூறப்பட்டிருத்தலறிக. அங்ஙனம் கூறினும் எல்லாத் தீவினைகளும் இம்மூன்றனுள் அடங்கு மென்பார் காமம் வெகுளி மயக்கம் காரணம் என்றார்.

காம வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய் (குறள்.360)

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினைக்கப்படும்.

துன்பம் துடைக்கும் நெறி

254-264 : அநித்தம்...........நோற்றனளென்

(இதன் பொருள்) அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத் தனித்துப் பார்த்து-மணிமேகலையே இனி வாமனார் மெய்க்காட்சிகளுள் நான்காவதாகிய துன்பம் துடைக்கும் நெறிகூறுவல் கேட்பாயாக! யாம் முன்பு தொகைவகையானும் விரிவகையானும் கூறப்பட்ட பேதைமை முதலிய பன்னிருவகைப் பொருள்களும் ஒருகணப் பொழுதும் நிலையாதனவும் துன்பந் தருவனவும் ஆன்மா இல்லாதனவும் தூய்மை யில்லாதனவும் ஆகும் என்று அவற்றின் இயல்புகளை வீற்று வீற்றாய் வேதனை செய்யுமாற்றால் தனித்தனியே ஆராய்ந்து பார்த்து; பற்று அறுத்திடுதல்-காமங் காரணமாக வுண்டாகிய பற்றினைத் துவர அறுத்தொழிக; மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து-இதற்குச் சிறந்த கருவி மைத்திரி பாவனையும் கருணைப் பாவனையும் முதிதைப் பாவனையும் ஆகிய இப்பாவனைகளேயாம் என்று அவற்றின் இயல்பறிந்து அவற்றை மேற்கொள்ளுமாற்றல்; திருந்தும் நல்உணர்வால் செற்றம் அற்றிடுக-திருந்திய நன்மையுடைய மெய்யுணர்வினாலே இரண்டாவதாகிய சினந் தவிர்ந்திடுக; சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி உய்த்து-மெய்ந்நூல் கேட்டலும் கேட்டவற்றை ஆராய்ந்து தெளிதலும் தெளிந்தவாறே பாவித்தலும் மெய்யுணர்தலும் ஆகியவற்றை ஆராய்ந்து வாழ்க்கையின் பால் அவற்றைக் கடைப்பிடியாக மேற்கொண்டு செலுத்தியும்; மயக்கம் கடிக-இவற்றிற் கெல்லாம் முதலாயமைந்த பேதைமையாகிய மயக்கத்தைப் போக்குக! இந்நால்வகையான-இந்த நான்குவகையுபாயங்களாலே; மனத்திருள் நீங்கு என்று-உள்ளத்தின் கண்ணதாகிய அறியாமை யிருளினின்றும் நீங்கி உய்வாயாக! என்று; முன்பின் மலையா மங்கல மொழியின்-வாமன் திருவாய் மலர்ந்தருளிய முன்னுக்குப்பின் முரண்படாத ஆக்கந்தரும் மெய் மொழியினாலே; ஞானதீபம் நன்கனம் காட்ட-அறவண அடிகளார் அம்மணிமேகலை யுள்ளத்திலே அறிவுச்சுடர் கொளுவி ஐயந் திரிபறுமாறு நன்றாகக் காட்டா நிற்றலாலே; பாவை-திருமகள் போல்வாளாகிய அம்மணிமேகலை தானும்; தருமம் கேட்டு-அந்த அறவுரைகளை விழிப்புடன் கேட்டு; பவத்திறம் அறுக என-அநாதியாக மண்டில வகையாற் சுழன்று வருகின்ற தன் பிறப்பினது தன்மை அவ்றொழிவதாக வேன்றுறுதி கொண்டு; தவத்திறம் பூண்டு-தவத்திற்கியன்ற பண்புகளை மேற்கொண்டு; நோற்றனள்-அதற்கியன்ற நோன்புகளை நோற்கலுற்றனள்; என்பதாம்.

(விளக்கம்) அநித்தம்-பொருள்கள் நிலையாமை யுடையன. ஈண்டு ஆசிரியர் பரிமேலழகர் திருக்குறளின்கண் (அதி-34) நிலையாமை என்பதற்கு-அவற்றுள் நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல் போலத் தோன்றி, மெய்யுணர்ந்தவழிக் கயிற்றில் அரவு போலக் கெடுதலிற் பொய்யென்பாரும் நிலை வேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும் என்பாரும் ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கே உடைய வென்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பல திறத்தராவார்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றனர். இஃதுணர்ந்துழியல்லது பொருள்களிற் பற்று விடாதாகலின் இது முன் வைக்கப்பட்டது என்றறிவுறுத்துவதும்,

ஆசிரியர் தொல்காப்பியனார்

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே

என அறிவுறுத்தும் பண்டைத் தமிழர் நூனெறி வழக்கமாகிய காஞ்சித் திணையியல்பும் நினைவிற் கொள்ளற் பாலனவாம்.

துக்கம்-துன்பம். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்றும், குற்றமும் பயனும் விளைந்து நிலையிலவறிய துன்பம் என நோக்க எனவும், பிணியெனப்படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற் றிரிந்து உடம்பு இடும்பை புரிதல் என்றும், தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலக் கவலை கையாறெனத் தவலில் துன்பம் தலைவரும் என்றும், நான்காம் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவென மொழிந்திடும் துன்பம் என்றும், துன்பந் தோற்றம் என்றும் இவ்வாறு இந்நூலின் பற்பல விடங்களிலே பன்னிப்பன்னி அறிவுறுத்தலாலும் உணர்க.

அநான்மா-உயிரற்ற பொருள். எப்பொருளுக்கும் ஆன்மா இலை என இப்படி யுணரும் இவை வீட்டியல்பாம் எனவும், வைசேடிகன் பவுத்தனைக் குறித்துச் சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் தாம் இசையாமையில் அப்பிரசித்தோபயம் என்றும் இந்நூலிற் கூறப்படுதலானும் பவுத்தர்கள் அநான்மவாதிகள் எனப்படுவர். இதனை,

இன்னவகை பகர்ந்தவிவை நான் கல்லாற் பொருள் இலவாயிருக்க ஆன்மா, மன்னிய விண் காலந்திக்கு இறையும் உளவெனச் சிலர்தாம் வகுத்தல் என்னே! எனவரும் மெய்ஞ்ஞானவிளக்கத்தானும் (புத்த....செய்-15) உணர்க.

அசுசி-தூயன அல்லாதன. இதனை, புலைவன நீங்கிற் புலால் புறத்திடுவது....மக்கள் யாக்கை எனவும், என்பும் தடியும் உதிரமுமியாக்கையென்று அன்புறு மாக்கட்கு அறிய வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து எனவும், கழுநீர்க் கண்கள் வழுநீர் சுமந்தன குமிழ் மூக்கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ எனவும் வருவனவற்றாலுணர்க.

யாக்கையின் நிலையாமை முதலிய இந்த நான்கு இயல்பினையும் சிறப்பாக ஆராய்ந்து நோக்குவார்க்கு அதன்கண் பற்றுவைத்தற்குரிய பெருந்தகைமை சிறிதும் தோன்றாமையின் பற்றறுதி யுண்டாகும் என்பார், தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல் என்றார். அறுத்திடுதல் என்றது அல்லீற்று உடம்பாட்டு வியங்கோள், மக்கட்பதடி எனல் என்புழிப்போல.

அசுசி என்பதனை அசுப பாவனை என்பர். மைத்திரி-மித்திரத் தன்மை; அஃதாவது: எவ்வுயிர்க்கும் கேண்மை பூண் டொழுகுதல். இதனை

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

என்பதனானும்,

மன்னுயி ரோம்பி அருள் ஆள்வார்க்கு இல்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை (குறள் 244)

என்பதனானும் உணர்க.

கருணா-கருணை. அஃதாவது-எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையராதல். முதிதை-இன்ப துன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்பொழுதும் மகிழ்ந்திருத்தல். மைத்திரி முதலிய இம்மூன்றனோடு பொருள் நிலையில் துன்பமுடையன உயிரில்லாதன தூயவல்லாதன என்னும் நான்குணர்வானும் உண்டாகின்ற இகழ்ச்சியானும், காம வெகுளி மயக்கங்களைக் கடிந்து இவற்றின்பாற் பற்றறுத்திடுக. மேலும் திருவற மூர்த்தியாகிய புத்தர் அருளிய பிடக நூல்களைக் கேட்டும் ஆராய்ந்தும் தெளிந்த வழி மெய்யுணர்வு தோன்றும். அதுதோன்றவே அனைத்தும் தானே ஆகிய பேதைமையும் அகலும். இவ்வுபாயங்களாலே அதனைக் கடிக என்று அறவண அடிகளார் மெய்யுணர்வு கொளுவினார் என்க. அதுகேட்ட மணிமேகலையும் அவர் காட்டிய நன்னெறி நின்று பிறப்பொழிக! என்னும் மேற்கோளோடு நோற்றனள் என்க.

இனி, இதனை உணர்ந்தோள் சென்று அடைந்தபின் காட்டக்கேட்டு பூண்டு நோற்றனள் என்று இயைத்துக் கொள்க.

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை முற்றிற்று.

மணிமேகலை முற்றிற்று.


Key Elements

The Maiden (Paavai): The central character of the story, a young woman who is initially committed to a divine or spiritual path. The narrative provides details about her background, her initial devotion, and her eventual decision to turn away.

The Divine Path (Pavaththiram): The spiritual or divine path that the maiden follows or is expected to follow. The story explores the nature of this path, its significance, and the reasons it is important in the narrative.

Motivations for Turning Back: The reasons behind the maiden's decision to reject or deviate from the divine path. This may include personal struggles, external pressures, or changes in her beliefs and values.

Consequences: The impact of the maiden’s decision on herself and those around her. The narrative examines how her choice affects her life, her spiritual journey, and her relationships with others.

Themes: Key themes might include spiritual devotion, personal choice, moral dilemmas, and the consequences of deviating from a chosen path. The story addresses broader themes related to faith, personal integrity, and the challenges of maintaining spiritual commitments.

Resolution: The resolution might reflect on the outcomes of the maiden’s decision, including any changes in her life or understanding. It may also consider any lessons learned or repercussions for her and the spiritual community.

Significance

Exploration of Spiritual Commitment: Pavaththiram Marugena Paavai Nootra Kaathai explores themes of spiritual commitment and the challenges of adhering to a divine path. It provides insights into the struggles and decisions involved in spiritual journeys.

Themes of Personal Choice and Consequences: The story emphasizes the impact of personal choice on spiritual and personal life. It reflects on how deviations from a chosen path affect individuals and their broader context.

Cultural and Ethical Reflections: The narrative may offer cultural and ethical reflections on the nature of spiritual devotion and the challenges of maintaining faith. It provides a view of how spiritual commitments are valued and the difficulties of upholding them.

Conclusion

Pavaththiram Marugena Paavai Nootra Kaathai is a narrative focused on a maiden who turns away from a divine or spiritual path. Through its exploration of her motivations, the consequences of her decision, and the broader implications, the story highlights themes of spiritual devotion, personal choice, and moral dilemmas. It offers insights into the challenges of maintaining spiritual commitments and the impact of deviating from a chosen path.



Share



Was this helpful?