இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பதிற்றுப் பத்து

Pathitruppathu, also known as Pattuppāṭṭu, is one of the classical Tamil literary works from the Sangam period. It is part of the Ettuthokai anthology, which includes eight major works of Sangam literature. Pathitruppathu is unique among these collections as it focuses primarily on the "Puram" (exterior) genre, which deals with themes of public life, including warfare, valor, ethics, and the exploits of kings and warriors..


பதிற்றுப் பத்து

(பகுதி-1)


எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றிய தொகை நூல்கள். பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இது பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை. நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவற்றைச் சார்ந்த சில பாடல்கள் தொல்காப்பிய உரைகளாலும், 'புறத்திரட்டு' என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன. இவை நூல் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர், என்பனவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப் பத்தைப் பாடியவர், பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள், புலவருக்கு அவர் அளித்த பரிசில், முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இந்நூற் செய்யுட்களில் இப்பொழுது கிடைப்பன 80; உரைகளால் தெரிய வருவன 6. ஒரு சில செய்யுட்களில் சில சீர்களும் அடிகளும் சிதைந்துள்ளன. நாலாம் பத்துச் செய்யுட்கள் மட்டும் அந்தாதியாக அமைந்துள்ளன.


கடவுள் வாழ்த்து

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!


இரண்டாம் பத்து


பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்


11. வெற்றிச் செல்வச் சிறப்பு

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி,
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு-
செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,
நார் அரி நறவின், ஆர மார்பின், 15
போர் அடு தானைச் சேரலாத!-
மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே 20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புண் உமிழ் குருதி


12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல், பிற மான் 5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது,
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்-
கேட்டற்கு இனிது-நின் செல்வம்: கேட்டொறும்
காண்டல் விருப்பொடு-கமழும் குளவி; 10
வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி-
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ, 15
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,
மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை, 20
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;
வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள்,
வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய;
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே! 25


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மறம் வீங்கு பல் புகழ்


13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்,
ஒலி தெங்கின், இமிழ் மருதின்,
புனல் வாயில், பூம் பொய்கை,
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்,
நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; 10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல,
நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்-
விரி பூங் கரும்பின் கழனி புல்லென,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி,
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, 15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து-
உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே.
காடே கடவுள் மேன; புறவே 20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன;
ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ,
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
நோயொடு பசி இகந்து ஒரீஇ,
பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பூத்த நெய்தல்


14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்

நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு 5
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; 10
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;
வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ 20
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சான்றோர் மெய்ம்மறை


15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்

யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு-
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப- 5
கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல், 10
சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே: 15
கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிலற் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் 20
வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின், 25
மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி, 30
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்-
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது 35
ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே. 40


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிரைய வெள்ளம்


16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, 5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:
ஆறிய கற்பின், அடங்கிய சாயல், 10
ஊடினும் இனிய கூறும் இன் நகை,
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;
பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் 15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும், கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே? 20


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துயிலின் பாயல்


17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே-
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்-
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 5 ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின், 10 அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம்படு வியன் பணை


18. கொடைச் சிறப்பு

உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், 5
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்-
மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,
மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி, 10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே!


துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கூந்தல் விறலியர்


19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின், 10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயற் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை- 15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, 20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, 25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!


துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வளன் அறு பைதிரம்


20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்

'நும் கோ யார்?' என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! 5
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;
கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, 10
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,
விரிஉளை மாவும், களிறும், தேரும், 15
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
நெடு மதில், நிலை ஞாயில்,
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; 20
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும், 25
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு இலீயர், அவன் ஈன்ற தாயே!


துறை : இயல் மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : அட்டு மலர் மார்பன்


பதிகம்

மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-
அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு,
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்-
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.


இரண்டாம் பத்து முற்றும்

(பகுதி-2)


மூன்றாம் பத்து

பாடினோர் : பாலைக் கௌதமனார்
பாடப்பட்டோ ர் : பல் யானைச் செல்கெழு குட்டுவன்


21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்று
ஐந்துடன் போற்றி அவை துணையாக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உரு கெழு மரபின் கடவுட் பேணியர், 5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி;
வருநர் வரையார் வார வேண்டி,
விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை 10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி;
இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி, 15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரிஅம் கள்ளின், போர் வல் யானை,
போர்ப்பு உறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து,
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் 20
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே!
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயம் தழீஇய, பயம் கெழு நெடுங் கோட்டு, 25
நீர் அறல் மருங்கு வழிப்படா, பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா,
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய,
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது, பய மழை சுரந்து 30
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்,
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண், 35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள், இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அடு நெய் ஆவுதி


22. வென்றிச் சிறப்பு

சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து, 5
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய; 10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்
சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த, 15
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு, 20
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி,
கடி மிளைக் குண்டு கிடங்கின்,
நெடு மதில் நிரைப் பதணத்து, 25
அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த,
பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,
ஒலித் தலை விழவின் மலியும் யாணர் 30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,
குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி,
பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின்,
ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து,
கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி, 35
கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக்
கருங் கட் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே!


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கயிறு குறு முகவை


23. வென்றிச் சிறப்பு

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும் 5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,
பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,
சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! 10
நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,
வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,
பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின-நின் 15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்-
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை, 20
நந்து நாரையொடு செவ் வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்,
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே. 25


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ததைந்த காஞ்சி


24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்

நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு,
புலி உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி,
ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின்
பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ! 5
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி,
ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று,
நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் 10
திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ!
குலை இழிபு அறியாச் சாபத்து வயவர்
அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை,
இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்!
நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும் 15
அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே!
உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது,
குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறு
அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின், 20
எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும்
கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப, 25
கலிழும் கருவியொடு கை உற வணங்கி,
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்-
பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே! 30


துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சீர் சால் வெள்ளி


25. வென்றிச் சிறப்பு

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி,
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா; 5
கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து,
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய-
உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை 10
வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க,
கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே.


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கான் உணங்கு கடு நெறி


26. வென்றிச் சிறப்பு

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா;
ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்-
நோகோ யானே-நோதக வருமே! 5
பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று,
'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என,
கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ,
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர,
பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் 10
காடுறு கடு நெறி ஆக மன்னிய-
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,
உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின்
திருந்து தொழில், வயவர் சீறிய நாடே.


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : காடுறு கடு நெறி


27. வென்றிச் சிறப்பு

சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்-
தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,
சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி
அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், 5
துறை நணி மருதம் ஏறி, தெறுமார்,
எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின்,
பழனக் காவில் பசு மயில் ஆலும்;
பொய்கை வாயிற் புனல் பொரு புதவின்,
நெய்தல் மரபின், நிரை கள், செறுவின் 10
வல் வாய் உருளி கதுமென மண்ட,
அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை அல்லது,
பூசல் அறியா நல் நாட்டு 15
யாணர் அறாஅக் காமரு கவினே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொடர்ந்த குவளை


28. நாடு காத்தற் சிறப்பு

திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர்
பைங் கண் யானைப் புணர் நிரை துமிய,
உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால்,
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,
இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, 5
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.
விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய-
கோடை நீட, குன்றம் புல்லென,
அருவி அற்ற பெரு வறற் காலையும்;
நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச் 10
சீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர்,
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச்
செந் நீர்ப் பூசல் அல்லது,
வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே.


துறை : நாடு வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து வரு மலிர் நிறை


29. வென்றிச் சிறப்பு

அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந் தாள் நாரை இரிய; அயிரைக்
கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், 5
வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,
அழியா விழவின், இழியாத் திவவின்,
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,
மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!- 10
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மாக் கண் கடிய கழற,
அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்
வரம்பு இல் தானை பரவா ஆங்கே. 15


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் கை மகளிர்


30. வென்றிச் சிறப்பு

இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,
மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை
வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்
அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, 5
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடற் படப்பை மென்பாலனவும்;
காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட 10
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,
அரி கால் அவித்து, பல பூ விழவின்- 15
தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,
வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் 20
செழும் பல் வைப்பின்-பழனப் பாலும்;
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; 25
பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;
பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து, 30
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,
முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,
கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து
அருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம் 35
கருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்,
கருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர;
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், 40
பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,
பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்-
கடுஞ் சின வேந்தே!-நின் தழங்கு குரல் முரசே.


துறை : பெருஞ்சோற்று நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புகன்ற ஆயம்


பதிகம்

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,
கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து, 5
கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல் இசை, உயர்ந்த கேள்வி,
நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த 10
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.

இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.


மூன்றாம் பத்து முற்றும்

(பகுதி-3)



நான்காம் பத்து


பாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்
பாடப்பட்டோ ர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்


31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்

குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து
நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,
தெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர- 10
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,
துளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,
கருவி வானம் தண் தளி தலைஇய, 15
வட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரையற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்; 20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே; வண்டு பட
ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒளி நுதல், பொன்னின் 25
இழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து, 30
அடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,
புறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;
நகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று, நின் தானை; 35
போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே.


துறை : செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கமழ் குரல் துழாய்


32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்

மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ
மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்;
முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற,
மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று,
துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப, 5
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்;
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்;
எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந.
கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!-
நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, 10
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து,
தடந் தாள் நாரை படிந்து இரை கவரும்,
முடந்தை நெல்லின் கழை அமல், கழனி,
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து,
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த 15
பகைவர் தேஎத்து ஆயினும்-
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கழை அமல் கழனி


33. வென்றிச் சிறப்பு

இறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்!-
வடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள்,
கடி மரத்தான், களிறு அணைத்து;
நெடு நீர துறை கலங்க,
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு 5
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்,
வாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து,
வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின்,
செவ் வாய் எஃகம் வளைஇய அகழின்,
கார் இடி உருமின் உரறு முரசின், 10
கால் வழங்கு ஆர் எயில் கருதின்-
போர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே.


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வரம்பு இல் வெள்ளம்


34. வென்றிச் சிறப்பு

ஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே!-
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடுங் கொடிய தேர் மிசையும், 5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த ... ... ...
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, 10
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த!-நீ ஓம்பல் மாறே.


துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : ஒண் பொறிக் கழற் கால்


35. வென்றிச் சிறப்பு

புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே,
உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!-
இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து,
அளகுடைச் சேவல் கிளை புகா ஆர, 5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை,
அந்தி மாலை விசும்பு கண்டன்ன
செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து,
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயினானே. 10


துறை : வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மெய் ஆடு பறந்தலை


36. வென்றிச் சிறப்பு

வீயா யாணர் நின்வயினானே
தாவாதாகும், மலி பெறு வயவே;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று,
பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் 5
யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார்,
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவைப் பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய; 10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட;
குருதிச் செம் புனல் ஒழுக;
செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே!


துறை : களவழி
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வாள் மயங்கு கடுந் தார்


37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்

வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை,
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!-
பகைவர் ஆரப் பழங்கண் அருளி,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,
ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்! 5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப,
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்;
மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து,
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ,
தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் 10
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்;
நன்று பெரிது உடையையால் நீயே,
வெந்திறல் வேந்தே!-இவ் உலகத்தோர்க்கே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம் படு வென்றி


38. கொடைச் சிறப்பு

உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே-
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், 5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை, 15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பரிசிலர் வெறுக்கை


39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே,
எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்-
துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை,
கறுத்த தெவ்வர் கடி முனை அலற,
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை 5
உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு,
அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும்,
காலன் அனைய, கடுஞ் சின முன்ப!
வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய-
பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10
புன் புறப் புறவின் கண நிரை அலற,
அலந்தலை வேலத்து உலவைஅம் சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்,
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் 15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே.


துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏவல் வியன் பணை


40. கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் 5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம் 10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த 15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே: 20
செல்லாயோதில், சில் வளை விறலி!-
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து, 25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின், 30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாடு காண் அவிர் சுடர்


பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன் படு வாகை முழுமுதல் தடிந்து,
குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப, 10
செருப் பல செய்து, செங்களம் வேட்டு,
துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: கமழ் குரற் துழாய், கழை அமல் கழனி, வரம்பு இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை, வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.


நான்காம் பத்து முற்றும்.

(பகுதி-4)



ஐந்தாம் பத்து


பாடினோர் : பரணர்
பாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்


41. வென்றிச் சிறப்பு

புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;
பண் அமை முழவும், பதலையும், பிறவும்,
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,
காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5
கை வல் இளையர் கடவுள் பழிச்ச;
மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்
பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்
மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, 10
சேஎர் உற்ற செல்படை மறவர்,
தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,
வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் 15
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:
தாவல் உய்யுமோ மற்றே-தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், 20
மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்
வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து
கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் 25
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,
படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே!


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர் வீ வேங்கை


42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்- 15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தசும்பு துளங்கு இருக்கை


43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி

கவரி முச்சி, கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ 5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த 10
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப,
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, 15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறி, 20
'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல், உரு கெழு சிறப்பின்,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! 25
மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு,
கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக, மாவே!' என்றும்,
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், 30
தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!-
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது,
நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35
வண் கை வேந்தே! நின் கலி மகிழானே.


துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏறா ஏணி


44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்

நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி,
கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், 5
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்-
காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,
புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி
வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை
கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, 20
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை


45. வென்றிச் சிறப்பு

பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி,
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்,
ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின்,
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்,
விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்!
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து,
பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணை எழு அன்ன, 10
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி,
பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி,
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடாப் பீடர் உள் வழி இறுத்து,
முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர் 15
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்,
அனைய பண்பின் தானை மன்னர்-
இனி யார் உளரோ, முன்னும் இல்லை-
மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது,
விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல், 20
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு,
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே?


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஊன் துவை அடிசில்


46. கொடைச் சிறப்பு

இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,
திறல் விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, 5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்-
சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி
ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, 10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்-
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பருதி


47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்

அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,
பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின், 5
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நல் நுதல் விறலியர்


48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்

பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் 5
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் 10
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்
பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ-
நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, 15
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம் புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!


துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பேர் எழில் வாழ்க்கை


49. மன்னவனது வரையா ஈகை

யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,
துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!-
களிறு பரந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; 5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் 10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக,
படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, 15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : செங் கை மறவர்


50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்

மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய;
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் 5
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை!
கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர,
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு 10
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும், கடலவும், பிறவும்,
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார் 15
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு,
வண்ணம் நீவி, வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து, 20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ,
எவன் பல கழியுமோ-பெரும!-பல் நாள்,
பகை வெம்மையின், பாசறை மரீஇ,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் 25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெருவரு புனல் தார்


பதிகம்

வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி, 5
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி;
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ, 10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, 20
கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுட்
பரணம் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.

கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.


ஐந்தாம் பத்து முற்றும்.

(பகுதி-5)



ஆறாம் பத்து


பாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
பாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்


51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்

துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானற் குட புலம் முன்னி,
கூவல் துழந்த தடந் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் 10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
சுடர் நுதல், மட நோக்கின்,
வாள் நகை, இலங்கு எயிற்று, 20
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து, 25
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; 30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வடு அடு நுண் அயிர்


52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,
அருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும்
பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் 5
மெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை 10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே,
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ 15
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;
உயலும் கோதை, ஊரல்அம் தித்தி,
ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஒளி இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, 20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,
'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; 'நீ எமக்கு
யாரையோ?' எனப் பெயர்வோள் கையதை:
கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ 25
பாஅல் வல்லாய் ஆயினை. பாஅல்
யாங்கு வல்லுநையோ-வாழ்க, நின் கண்ணி!-
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட 30
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?


துறை : குரவை நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சிறு செங் குவளை


53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்

வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப,
'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, 10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,
பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-
எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் 15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,
தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி,
மேம்படு வெல் கொடி நுடங்க, 20
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குண்டு கண் அகழி


54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி!
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை,
பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5
மின் இழை, விறலியர் நின் மறம் பாட;
இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே, எனையதூஉம்
உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, 10
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-
நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நில்லாத் தானை


55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்

ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்.
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்!
வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, 10
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,
பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் 15
சென்றாலியரோ-பெரும! அல்கலும்,
நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,
பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,
தாங்குநர்த் தகைத்த ஒளி வாள், 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துஞ்சும் பந்தர்


56. வென்றிச் சிறப்பு

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.


துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி


57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்:
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5
செல்லாமோதில்-சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த, 10
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே? 15


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சில் வளை விறலி


58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்

ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-
வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர்,
'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை 5
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;
பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, 10
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;
வானவரம்பன் என்ப-கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் 15
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏ விளங்கு தடக்கை


59. வென்றிச் சிறப்பு

பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,
மாசி நின்ற மா கூர் திங்கள்,
பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப,
புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல,
பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, 5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!- 10
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;
சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-
பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா கூர் திங்கள்


60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்

கொலை வினை மேவற்றுத் தானை; தானே
இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்:
செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி 5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்,
தொடை மடி களைந்த சிலையுடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, 10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே.


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மரம் படு தீம் கனி


பதிகம்

குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, 5
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,
மன்னரை ஓட்டி,
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.


அவை தாம்: வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.


ஆறாம் பத்து முற்றும்

(பகுதி-6)



ஏழாம் பத்து


பாடினோர் : கபிலர்
பாடப்பட்டோ ர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்


61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்

'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, 5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, 10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, 15
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி
முழவில் போக்கிய வெளி கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை


62. வென்றிச் சிறப்பு

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும்-பசும் பிசிர் ஒள் அழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே!
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி, 10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி, 15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வரைபோல் இஞ்சி


63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; 5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி, 10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால், 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி, ஆத! வாழிய, பலவே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அருவி ஆம்பல்


64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்

வலம் படு முரசின் வாய் வாட் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி,
அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு, 5
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,
களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,
புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவி,
அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என, 10
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,
காண்கு வந்திசின்-கழல் தொடி அண்ணல்! 15
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே. 20


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உரைசால் வேள்வி


65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்

எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்
பரியுடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! 5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்,
சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ! 10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே-
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு, 15
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே.


துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாள் மகிழ் இருக்கை


66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல் சூழ் பறவை


66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல் சூழ் பறவை


67. கொடைச் சிறப்பு

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,
கடன் அறி மரபின் கை வல் பாண!
தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை-
கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, 5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆர,
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு 10
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,
நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;
நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு 11
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்-
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், 12
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.


துறை : பாணாற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் போழ்க் கண்ணி


68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு

கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்,
கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர,
வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது 5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,
கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், 10
அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்-
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, 15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்
செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல்,
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? 20


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏம வாழ்க்கை


69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்

மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி,
வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க,
கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற,
எறிந்து சிதைந்த வாள், 5
இலை தெரிந்த வேல்,
பாய்ந்து ஆய்ந்த மா,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படுபிணம் பிறங்க நூறி, பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- 10
நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது
ஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்-
நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய,
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப,
விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர, 15
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே.


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : மண் கெழு ஞாலம்


70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்

களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து, 5
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து,
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் 15
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 20
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பறைக் குரல் அருவி


பதிகம்

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,
நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, 5
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி, 10
மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: புலா அம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி; இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.


ஏழாம் பத்து முற்றும்.

(பகுதி-7)



எட்டாம் பத்து


பாடினோர் : அரிசில்கிழார்
பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை


71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, 10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, 15
மத்துக் கயிறு ஆடா வைகற் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் 20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, 25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குறுந் தாள் ஞாயில்


72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்

இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்,
சூழாது துணிதல் அல்லது, வறிது உடன்
காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து,
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின்
பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்;
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி,
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் 10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து,
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து,
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை, 15
சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து எழு வெள்ளம்


73. வென்றிச் சிறப்பு

உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்,
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே!
....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
.... .... .... .... ... ... ...
மருதம் சான்ற மலர்தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார், 10
குறும் பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் 15
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என,
ஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் திகழ் பாசிழை


74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது,
வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப;
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்,
வேறு படு திருவின் நின் வழி வாழியர்,
கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்,
வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி,
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்,
புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் 10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற்
பருதி போகிய புடை கிளை கட்டி,
எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன்
சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, 15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்,
ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய 20
வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு-
அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!-
அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை,
'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25
தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என,
வேறு படு நனந் தலைப் பெயரக்
கூறினை, பெரும! நின் படிமையானே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நலம் பெறு திருமணி


75. வென்றிச் சிறப்பு

இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம்,
அரும் பொறி வய மான் அனையை-பல் வேல்,
பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!-
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர்,
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை,
வன் புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து,
கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10
வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தம்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தீம் சேற்று யாணர்


76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்

களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து,
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று,
முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி,
பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, 5
பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி,
இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென்-கால்கொண்டு,
கருவி வானம் தண் தளி சொரிந்தென, 10
பல் விதை உழவின் சில் ஏராளர்
பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்,
கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி,
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! 15


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா சிதறு இருக்கை


77. படைப் பெருமைச் சிறப்பு

'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?'
என்றனிர்ஆயின்-ஆறு செல் வம்பலிர்!-
மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய,
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், 5
பண் அமை தேரும், மாவும், மாக்களும்,
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே;
கந்து கோளீயாது, காழ் பல முருக்கி,
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் 10
ஆ பரந்தன்ன செலவின், பல்
யானை காண்பல், அவன் தானையானே.


துறை : உழிஞை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வென்று ஆடு துணங்கை


78. வென்றிச் சிறப்பு

வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ் வெளி அருவி உவ் வரையதுவே-
சில் வளை விறலி! செல்குவை ஆயின்,
வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, 5
கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல,
பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின்,
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின், தகடூர் நூறி,
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் 10
ஓடுறு கடு முரண் துமியச் சென்று,
வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு
யாடு பரந்தன்ன மாவின்,
ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பிறழ நோக்கு இயவர்


79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்

உயிர் போற்றலையே, செருவத்தானே;
கொடை போற்றலையே, இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி;
நின்வயிற் பிரிந்த நல் இசை கனவினும்
பிறர் நசை அறியா-வயங்கு செந் நாவின், 5
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!-
அனைய அளப்பு அருங்குரையை: அதனால்,
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து,
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென, 10
வில் குலை அறுத்து, கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து,
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து, 15
நிறம் படு குருதி புறம்படின் அல்லது,
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும! நின் புகழே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் படு குருதி


80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்

வால் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணம் கொண்டு, அவர்
எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்க;
சாந்து புலர்ந்த வியல் மார்பின், 5
தொடி சுடர் வரும் வலி முன் கை,
புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால்,
பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள்,
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ,
'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, 10
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ,
அனையை ஆகன்மாறே, பகைவர்
கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக்
கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி,
புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், 15
நிலவரை நிறீஇய நல் இசை,
தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே?


துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள்


பதிகம்

பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை,
பல் வேல் தானை அதிகமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, 5
முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,
துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை 10
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.

எட்டாம் பத்து முற்றும்.

(பகுதி-8)



ஒன்பதாம் பத்து


பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை


81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்

உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின்,
வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து,
கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, 5
களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து,
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்,
மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத் 10
தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும்
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ,
கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார்,
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப,
நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி; 15
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி,
கட்டளை வலிப்ப, நின் தானை உதவி,
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!-
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து,
சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த் 20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி,
காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர்,
கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும்,
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப்
பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து, 25
மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப்
பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து 30
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள்,
பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்!
முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது,
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு, 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக!
விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!


துறை : முல்லை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிழல் விடு கட்டி


82. வென்றிச் சிறப்பு

பகை பெருமையின், தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல;
மறவர் மறல; மாப் படை உறுப்ப;
தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப;
காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக- 10
பாடிக் காண்கு வந்திசின், பெரும!-
பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர்
வண்மையும், செம்மையும், சால்பும், மறனும்,
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வினை நவில் யானை


83. படைச் சிறப்பு

கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும்
வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப,
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு
நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து,
செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: 5
இன்னாது அம்ம அது தானே-பல் மா
நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின்
போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து,
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.


துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பல் தோல் தொழுதி


84. வென்றிச் சிறப்பு

எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு,
கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி,
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை,
பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், 5
பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய,
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா;
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது,
வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், 10
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல,
உய்தல் யாவது-நின் உடற்றியோரே,
வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ?
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, 15
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து,
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு,
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர,
காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின்
குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே- 20
காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி,
விண்டு முன்னிய புயல் நெடுங் காலை,
கல் சேர்பு மா மழை தலைஇ,
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே!


துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொழில் நவில் யானை


85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்

நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ,
'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண்,
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'-
இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என,
முன் திணை முதல்வர் போல நின்று, 5
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை,
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை,
அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின், 10
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல் இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாடு காண் நெடு வரை


86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்

'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர,
வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்:
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, 5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த 10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வரு வானி நீரினும்,
தீம் தண் சாயலன் மன்ற, தானே.


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெந் திறல் தடக்கை


87. மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை-
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே. 5


துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் தலைச் செம் புனல்


88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5
அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10
குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! 15
விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25
வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின் 35
சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!-
ஈங்குக் காண்கு வந்தனென், யானே-
உறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி 40
நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!


துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கல் கால் கவணை


89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்

வானம் பொழுதொடு சுரப்ப, கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல,
புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப,
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது,
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, 5
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர்க் கூலம் கெழும,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக-
பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின்,
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, 10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி,
நோய் இலைஆகியர், நீயே-நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் 15
தகரம் நீவிய துவராக் கூந்தல்,
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து
வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து,
மீனொடு புரையும் கற்பின்,
வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! 20


துறை : காவல் முல்லை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துவராக் கூந்தல்


90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா 5
ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, 10
வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!-
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை; 15
கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும், 20
உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30
உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினைச் சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில், 35
ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே! 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப, 45
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!- 50
'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக!' என உள்ளி,
காண்கு வந்திசின், யானே-செரு மிக்கு 55
உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!


துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வலி கெழு தடக் கை


பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, 5
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி, 10
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, 15
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.

ஒன்பதாம் பத்து முற்றும்.

(பகுதி-9)



பதிற்றுப் பத்துத் திரட்டு


1

இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே-
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்
கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, 5
கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை
எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
நீர்துனைந்தன்ன செலவின்,
நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? 10

[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]


2

இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு 5
ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, 10
நெடு மதில், நிரை ஞாயில்,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
ஒல்லா மன்னர் நடுங்க, 15
நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே!

[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]


3

வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-
களிறு கலிமான் தேரொடு சுரந்து,
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை,
மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை; 5
வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,
கடாஅ யானை முழங்கும்,
இடாஅ ஏணி நின் பாசறையானே. 10

[புறத்திரட்டு, பாசறை. 8]


4

பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநளல்லள்,
தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே.

[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]


5

'விசையம் தப்பிய .... ....
என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'

[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]




Overview of Pathitruppathu

1. Title Meaning:

- The name "Pathitruppathu" translates to "Ten Tens," indicating that the anthology consists of ten groups, each containing ten poems. Thus, the collection has a total of 100 poems.

2. Content:

- Structure: Pathitruppathu is divided into ten sets, with each set traditionally believed to be composed by a different poet. The poems predominantly praise the valor and virtues of the Chera kings, who ruled parts of ancient Tamil Nadu and Kerala.
- Themes: The poems primarily explore themes related to the heroism, generosity, and achievements of the Chera kings. They also provide insights into the social and political conditions of the time.

3. Historical and Cultural Context:

- Chera Dynasty: The anthology is notable for its focus on the Chera dynasty, one of the three major Tamil kingdoms of the Sangam period, along with the Chola and Pandya dynasties.
- Historical Documentation: The poems serve as important historical records, providing details about the genealogy, conquests, and governance of the Chera kings.

4. Poetic Style:

- Language and Form: The poems are written in classical Tamil and follow the poetic conventions of the Sangam period, including the use of specific meters and poetic devices.
- Imagery and Symbolism: The use of vivid imagery and symbolism is prominent, particularly in depicting battles, royal ceremonies, and the natural beauty of the Chera lands.

5. Literary and Cultural Significance:

- Historical Value: Pathitruppathu is a key source for historians studying the Sangam period, providing insights into the political and social life of ancient Tamil Nadu and Kerala.
- Cultural Heritage: The anthology is an important part of Tamil literary heritage, showcasing the richness of Tamil poetry and the cultural values of the time.

6. Unique Aspects:

- Royal Patronage: Unlike other Sangam works that cover a broad range of themes and subjects, Pathitruppathu is particularly focused on the praise of kings, reflecting the practice of royal patronage of the arts.
- Ethical Themes: The poems often highlight the ethical and moral qualities expected of rulers, such as justice, generosity, and protection of subjects.

Pathitruppathu is celebrated for its contribution to the Sangam literary corpus and its detailed portrayal of the Chera dynasty's history and culture. It provides a unique perspective on the values and societal norms of the time, particularly concerning kingship and governance.



Share



Was this helpful?