இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பரிபாடல்

Paripadal, also spelled Paripāṭal, is one of the classical Tamil literary works from the Sangam period. It is part of the Pattuppāṭṭu (Ten Idylls) anthology, which, along with the Ettuthokai (Eight Anthologies), constitutes the body of Sangam literature. Paripadal is unique for its religious and devotional themes, which distinguish it from other predominantly secular works of the same period.

பரிபாடல்


கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புக்கலுமேயாகும். இவ்விருபத்திரண்டனுள், திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15), முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21), வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). இவற்றின் பின்னே உள்ள பகுதிகளுள் திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று; வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று; உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புகள் ஏழு; சில உறுப்புகள் இன்ன வகையைச் சார்ந்தனவென்று விளங்கவில்லை. எட்டுத்தொகை நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும். இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றித் தெரியவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14 முதல் 28ஆம் வரி வரை உள்ள பகுதி தெளிவின்றி உள்ளது.


1. திருமால்


ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை

தீ உமிழ் திறனொடு முடிமிசை அணவர,

மாவுடை மலர் மார்பின், மைஇல் வால் வளை மேனி,

சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய, 5


வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; (இது தரவு)

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
10 எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவலுட் பணிந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே. (இது கொச்சகம்)

இணைபிரி அணி துணி பிணி மணி எரி புரை
15 விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்

தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு

கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி

நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
20 எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்

றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்

இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
25 உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிரிய அமரரைப்

பொரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு அலம் தொடர அமர் வென்ற கணை. (இவை நான்கும் அராகம்)

"பொருவேம்" என்றவர் மதம் தபக் கடந்து,
30 செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்!

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!

தெருள நின் வரவு அறிதல்

மருள் அறு தேர்ச்சி முனிவர்க்கும் அரிதே; (இஃது ஆசிரியம்)

அன்ன மரபின் அனையோய்! நின்னை
35 இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? (இது பேரெண்)

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும். (இஃது ஆசிரியம்)
40 விறன்மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்

அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;

திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்

மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;

அம் கண் வானத்து அணி நிலாத் திகழ் தரும்
45 திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந்திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்

புலமும், பூவனும், நாற்றமும், நீ;
50 வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,

நிலனும், நீடிய இமயமும், நீ. (இவை ஆறும் பேரெண்)

அதனால்,

"இன்னோர் அனையை; இனையையால்" என,

அன்னோர் யாம் இவண் காணாமையின்,
55 பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே! (இது சுரீதகம்)

நின் ஒக்கும் புகழ் நிழலவை;

பொன் ஒக்கும் உடையவை;
60 புள்ளின் கொடியவை; புரி வளையினவை;

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;

மண்ணுறு மணி பாய் உருவினவை;

எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை. (இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)

ஆங்கு, (இது தனிச்சொல்)
65 காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை

யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,

ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-

வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே. (இது சுரீதகம்)


கடவுள் வாழ்த்து.


2. திருமால்


தொல்முறை இயற்கையின் மதியொ....

... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.

பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
5
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;

செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
10 உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;

நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,

மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
15 செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

ஊழி யாவரும் உணரா;

ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.
20 நீயே, "வளையொடு புரையும் வாலியோற்கு அவன்

இளையன்" என்போர்க்கு இளையை ஆதலும்,

"புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு

முதியை" என்போர்க்கு முதுமை தோன்றலும்,

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
25 கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை

நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்

பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
30 நித்தில மதாணி அத்தகு மதி மறுச்

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்

வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்

வை வான் மருப்பின் களிறு மணன் அயர்பு,

"புள்ளி நிலனும் புரைபடல் அரிது" என,
35 உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று.

ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,

இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்

கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,

முடிகள் அதிர, படிநிலை தளர,
40 நனி முரல் வளை முடி அழிபு, இழிபு,

தலை இறுபு தாரொடு புரள

நிலை தொலைபு, வேர், தூர், மடல்,

குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்

பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்
45 நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,

ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,

அளறு சொரிபு, நிலம் சோர,

சேரார் இன் உயிர் செகுக்கும்

போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே;
50 ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;

கண்ணே, புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்;

வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
55 நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,

சாயல் நினது, வான் நிறை என்னும்

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே;

அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்

எவ் வயினோயும் நீயே.
60 செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,

படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,

புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்

திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
65 நின் உருபுடன் உண்டி;

பிறர் உடம்படுவாரா

நின்னொடு புரைய

அந்தணர் காணும் வரவு.

வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
70 மூவா மரபும் ஓவா நோன்மையும்

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்

... ... ... ... ... ... ... மரபினோய் நின் அடி

தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;

கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
75 கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்

"கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!" எனவே.


கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


3. திருமால்


மாஅயோயே! மாஅயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மாஅயோயே!

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
5
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
10 மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்

மாயா வாய்மொழி உரைதர வலந்து;

"வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

நீ" என மொழியுமால், அந்தணர் அரு மறை.
15 "ஏஎர், வயங்கு பூண் அமரரை வெளவிய அமிழ்தின்,

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்

நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
20 கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;

தீ செங்கனலியும், கூற்றமும், ஞமனும்,

மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு

கேழ லாய் மருப்பின் உழுதோய்? எனவும்,
25 "மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்

சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்? எனவும்,

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து

நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்

பாடும் வகையே; எம் பாடல் தாம் அப்
30 பாடுவோர் பாடும் வகை.

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்

எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை.
35 இரு கை மாஅல்!

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!

ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!

எழு கையாள! எண் கை ஏந்தல்!

ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
40 பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!

பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!

நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
45 இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,

முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்
50 வனப்பு வரம்பு அறியா மரபினோயே!

அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி.

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
55 நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ

அதனால், "பகைவர் இவர்; இவர் நட்டோ ர்" என்னும்

வகையும் உண்டோ , நின்மரபு அறிவோர்க்கே?

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
60 சேவல் ஊர்தியும், "செங் கண் மாஅல்!

ஓ!" எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
65 அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் அமைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களும் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
70 மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;

முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே.

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,
75 இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும்

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
80 நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!

பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல! கோவல! காவல!

காணா மரப! நீயா நினைவ!
85 மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!

தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!

பருதி வலவ! பொரு திறன் மல்ல!
90 திருவின் கணவ! பெரு விறன் மள்ள!

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொடு மலர்ந்த

தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!


கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
பெட்டனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


5. செவ்வேள்


பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,

சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,

தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,

நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து.
5
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய

கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை

மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,

நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,

குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
10 மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!

"மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,

ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!

காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!

சால்வ! தலைவ!" எனப் பேஎ விழவினுள்,
15 வேலன் ஏத்தும் வெறியும் உளவே;

அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,

நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;

சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;

சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
20 பிறப்பினுள் இழிபு ஆகலும்,

ஏனோர் நின் வலத்தினதே;

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா, மலை வில்லாக,
25 மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

உமையொடு புணர்ந்த காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
30 இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,

"விலங்கு" என, வீண்ணோர் வேள்வி முதல்வன்

விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது

அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,

எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
35 திரித்திட்டோ ன், இவ் உலகு ஏழும் மருள;

கருப் பெற்றுக் கொண்டோ ர், கழிந்த சேய் யாக்கை

நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

"மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
40 சாலார்; தானே தரிக்க" என, அவர் அவி

உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்

தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,

வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45 அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்;

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;

நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்;
50 பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,

அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,

எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,

அறு வேறு துணியும்அறுவர் ஆகி,

ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
55 ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய

போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,

அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,

செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து

வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
60 திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,

இருங் கண் வெள் யாட்டு எழின் மறி கொடுத்தோன்;

ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த

மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
65 பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,

செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,

தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,

வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,

மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்
70 பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.

நின் குணம் எதிர்கொண்டோ ர் அறம் கொண்டோ ர் அல்லதை,

மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை

செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,

சேரா அறத்துச் சீர் இலோரும்,
75 அழி தவப் படிவத்து அயரியோரும்,

மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்

நின் நிழல்; அன்னோர் அல்லது இன்னோர்

சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
80 அருளும், அன்பும், அறனும், மூன்றும்

உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!


கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
கண்ணனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


6. வையை


நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்

பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;

நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,

மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
5
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை.

மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல

நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,

மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
10 தாயிற்றே தண் அம் புனல்;

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,

நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்

வகைசாலும், வையை வரவு;

தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
15 கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,

உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,

நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,

இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
20 முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,

விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,

வரைச் சிறை உடைத்ததை வையை: "வையைத்

திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக" எனும்

உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று;
25 அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,

நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;

ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்

ஈரணி அணியின், இகல் மிக நவின்று,

தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
30 துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்

அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,

அடு புனலது செல அவற்றை இழிவர்;

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,

நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
35 வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,

சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை

ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,

சேரி இளையர் செல அரு நிலையர்,

வலியர் அல்லோர் துறைதுறை அயர,
40 மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,

சாறும் சேறும் நெய்யும் மலரும்

நாறுபு நிகழும், யாறு வரலாறு;

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,

வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
45 புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு;

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,

வேரும் தூரும், காயும் கிழங்கும்,

பூரிய மாக்கள் உண்பது மண்டி

நார் அரி நறவம் உகுப்ப, "நலன் அழிந்து,
50 வேறாகின்று இவ் விரி புனல் வரவு" என,

சேறு ஆடு புனலது செலவு;

வரை அழி வால் அருவி வாதாலாட்ட,

கரை அழி வால் அருவி கால் பாராட்ட,

"இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55 புரைவது பூந் தாரான் குன்று" எனக் கூடார்க்கு

உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி,

சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்

புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்

தான் மலர்ந்தன்றே,
60 தமிழ் வையைத் தண்ணம் புனல்.

"விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்."

"தளிர் அறிந்தாய், தாம் இவை."

"பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து;

என்னோ துவள் கண்டீ?
65 எய்தும் களவு இனி; நின் மார்பின் தார் வாடக்

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்

செய்ததும் வாயாளோ? செப்பு."

"புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை

நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
70 பெருக்கு அன்றோ, வையை வரவு;"

"ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்

ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்

சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப்

பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
75 அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,

குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில்,

இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்

வையை வயமாக வை;

செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
80 வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;

என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;

வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்

பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்

அனற்றிய துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
85 பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்

கனற்றுபு காத்தி, வரவு!"

"நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,

நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்

அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான்
90 கொள்ளா அளவை, எழும் தேற்றாள்; கோதையின்

உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என

தேறித் தெரிய உணர் நீ; பிறிதும் ஓர்

யாறு உண்டோ ?" இவ் வையை யாறு.

"இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
95 தலை தொட்டேன், தண் பரங்குன்று;"

"சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்

துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி

கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்

அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
100 வல் இருள் நீயல்; அது பிழையாகும்" என,

இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,

வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்!

களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,

அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
105 ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்

வாடற்க, வையை! நினக்கு.


ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்


7. வையை


திரை இரும் பனிப் பெளவம் செவ்விதா அற முகந்து,

உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,

கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,

வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
5
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய

நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன

பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,

நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,
10 வந்தன்று, வையைப் புனல்.

நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,

ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,

துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்

வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
15 உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;

உழவர்களி தூங்க, முழவு பணை முரல,

ஆடல் அறியா அரிவை போலவும்,

ஊடல் அறியா உவகையள் போலவும்,

வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
20 விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்

பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்

செய்கின்றே, செம் பூம் புனல்;

"கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்

அவிழ்ந்த மலர் மீதுற்றென", ஒருசார்;
25 "மாதர் மடநல்லார், மணலின் எழுதிய

பாவை சிதைத்தது" என அழ, ஒருசார்;

"அகவயல் இள நெல் அரிகால் சூடு

தொகு புனல் பரந்தெ"னத் துடி பட, ஒருசார்;

"ஓதம் சுற்றியது ஊர்" என, ஒருசார்;
30 "கார் தூம்பு அற்றது வான்" என, ஒருசார்;

"பாடுவார் பாக்கம் கொண்டென,

ஆடுவார் சேரி அடைந்தென,

கழனி வந்து கால் கோத்தென,

பழன வாளை பாளை உண்டென,
35 வித்து இடு புலம் மேடு ஆயிற்றென",

உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்

புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,

சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,

பழன உழவர், பாய் புனல் பரத்தந்து;
40 இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,

வரை புரை உருவின் நுரை பல சுமந்து,

பூ வேய்ந்து, பொழில் பரந்து;

துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,

அலர் தண் தாரவர், காதில்
45 தளிர் செரீஇ, கண்ணி பறித்து;

கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,

மேகலை, காஞ்சி, வாகுவலயம்,

எல்லாம் கவரும் இயல்பிற்றாய்த் தென்னவன்

ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
50 தானையான் வையை வனப்பு;

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்

துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்

அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,

கை புதைஇய வளை
55 ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்

போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு

பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்

செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
60 வையைப் பெருக்கு வடிவு;

விரும்பிய வீரணி மெய் ஈரம் தீர,

சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;

பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,

கூர் நறா வளர்ந்தவள் கண்.
65 கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்

பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்

பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,

"என்னை வருவது எனக்கு?" என்று, இனையா,

நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
70 சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள்

பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,

யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்

சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
75 தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல்

ஊருடன் ஆடுங்கடை;

புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்

எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;

குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
80 மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;

பொருது இழி வார் புனல் பொற்பு அஃது

உரும் இடி சேர்ந்த முழக்கும் புரையும்

திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்

தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
85 நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க

நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.


மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்



8. செவ்வேள்


மண்மிசை அவிழ்துழாய் மலர்நரு செல்வத்துப்

புண்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,

மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி

உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்
5
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,

ஆதிரை முதல்வனின் கிளந்த

நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,

யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,

மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
10 பற்றாகின்று, நின் காரணமாக

பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்,

இமயக் குன்றினில் சிறந்து

நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை

மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
15 ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்

அருவி தாழ் மாலைச் சுனை;

முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட

கதியிற்றே காரின் குரல்;

குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
20 மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,

எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை

ஏழ் புழை ஐம்புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்

வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,

கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
25 மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,

நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,

தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின்

குன்றத்தான் கூடல் வரவு.

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
30 மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,

காலொடு மயங்கிய கலிழ் கடலென,

மால் கடல் குடிக்கும் மழை குரலென,

ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,

மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
35 குன்றம் குமுறிய உரை;

"தூது ஏய் வண்டின் தொழுதி முரல்வு அவர்

காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;

வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,

நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
40 ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,

வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;

முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,

அடியோர் மைந்தர் அகலத்து அகலா

அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
45 புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்

சிறப்பிற்றே தண் பரங்குன்று."

"இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்

பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர்

மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்
50 காலை போய் மாலை வரவு."

"இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்

பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;

துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்

கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
55 துனியல் நனி" "நீ நின் சூள்."

"என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்;

சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!

ஈன்றாட்கு ஒரு பெண், இவள்,

"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
60 அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;

வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்

தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;

கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?

ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ?
65 என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,

நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;

விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;

அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;

குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
70 ஐய! சூளின், அடி தொடு குன்றொடு

வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!"

யார் பிரய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?

"நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி," நேரிழாய்!

கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
75 நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;

முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண்

பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை

இடு துனி கை ஆறா வெற்றுயர் கூரச்

சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்
80 மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,

கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்

தாள் தொழு தண் பரங்குன்று!

"தெரி இழாய் செல்க!" என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,

ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வெளவல்;
85 பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை

எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை

செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,

அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,

நிரைவளை ஆற்று. இருஞ் சூள்.
90 வளி பொரு சேண் சிமை வரையகத்தால்

தளி பெருகும் தண் சினைய

பொழில் கொளக் குறையா மலர,

குளிர் பொய்கை அளறு நிறைய,

மருதம் நளி மணல் ஞெமர்ந்த
95 நனி மலர்ப் பெரு வழி,

சீறடியவர் சாறு கொள எழுந்து;

வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,

ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,

நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
100 மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,

பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;

அரு வரைச் சேராத் தொழுநர்,

"கனவின் தொட்டது கை பிழையாகாது

நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
105 வரு புனல் அணிக" என் வரம் கொள்வோரும்,

"கரு வயிறு உறுக" எனக் கடம்படுவோரும்,

"செய் பொருள் வாய்க்க" எனச் செவி சார்த்துவோரும்,

"ஐ அமர் அடுக" என அருச்சிப்போரும்,

பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
110 மஞ்சு ஆடு மலை முழக்கும்,

துஞ்சாக் கம்பலை

பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்

ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,

தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,
115 எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,

செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,

புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்

கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு,

மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
120 அரிவையர் அமிர்த பானம்

உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;

மைந்தர் மார்வம் வழி வந்த,

செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;

என ஆங்கு,
125 உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,

கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண

மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த

நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,

மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
130 தண் பரங்குன்றம்! நினக்கு.


கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்


9. செவ்வேள்


இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,

அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,

உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட

எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
5
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ

மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று

ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
10 மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,

தணி மழை தலையின்று, தண் பரங்குன்று;

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;

காதற் காமம், காமத்துச் சிறந்தது;
15 விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி;

புலத்தலின் சிற்ந்தது, கற்பே; அது தான்

இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்

பரத்தை உள்ளதுவே; பண்புறு கழறல்,

தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
20 நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;

கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;

சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே, அதனால்,

அகறல் அறியா அணி இழை நல்லார்

இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
25 தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்

கொள்ளார், இக் குன்று பயன்;

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த

காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,

கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
30 "வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்

கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார்

மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று?

வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்

பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!"
35 கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்

இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி

திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,

"வருந்தல்" என, அவற்கு மார்பு அளிப்பாளை,

"குறுகல்" என்று ஒள்ளிழை கோதை கோலாக
40 இறுகிறுக யாத்துப் புடைப்ப;

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,

இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,

செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,

வெறி கொண்டான் குன்றத்து வண்டு;
45 தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;

மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;

கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்

பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள;
50 கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;

தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்;

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
55 தோள் வளை ஆழி சுழற்றுவார்

மென் சீர் மயில் இயலவர்;

வாள் மிகு வய மொய்ம்பின்

வரை அகலத்தவனை வானவன் மகள்

மாண் எழில் மலர் உண்கண்
60 மட மொழியவர் உடன் சுற்றி,

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,

அறை அணிந்த அருஞ் சுனையான்

நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,

சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
65 கோகுலமாய்க் கூவுநரும்,

ஆகுலம் ஆகுநரும்

குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்

வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு

ஒத்தன்று, தண் பரங்குன்று;
70 கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்

அடும் போராள! நின் குன்றின்மிசை

ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,

பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,

வல்லாரை வல்லார் செறுப்பவும்,
75 அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,

செம்மைப் புதுப்புனல்

தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,

படாகை நின்றன்று;

மேஎ வெஃகினவை;
80 வென்று உயர்ந்த கொடி விறல் சான்றவை;

கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை

நயத் தகு மரபின் வியத் தகு குமர!

வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்

நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
85 பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்


10. வையை


மலைவரை மாலை அழி பெயல் காலை,

செல வரை காணாக் கடலறைக் கூட

நில வரை அல்லல் நிழத்த, விரிந்த

பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
5
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய

மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,

ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப்

போந்தது வையைப் புனல்;

புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
10 தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை

ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,

நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்

முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;

புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
15 மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,

அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்

சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;

வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;

முதியர், இளையர்; முகைப் பருவத்தர்,
20 வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்

இரு திற மாந்தரும் இன்னினியோரும்

விரவு நரையோரும் வெறு நரையோரும்

பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;

அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
25 விதி கூட்டிய இய மென் நடை போல,

பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி

நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;

பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;

மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
30 வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி,

தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,

யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;

காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,

சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர்;
35 தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட,

பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம

மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடைஇறந்து,

தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்

ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
40 யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்

மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,

நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி,

அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
45 செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக்

கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,

மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,

செய் தொழில் கொள்ளாது, மதி செத்து, சிதைதர;

கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
50 நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து

வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,

சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்

இதையும் கயிறும் பிணையும் இரியச்

சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
55 திசை அறி நீகானும் போன்ம்;

பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்

அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,

ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியிற்

பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர்
60 தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை

ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,

நின்ற நிகழ்ச்சியும் போன்ம்;

காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,

ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
65 கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி,

உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்

பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்

கரப்பார, களி மதரும் போன்ம்;

கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்
70 வெள்ளம் தரும், இப் புனல்;

புனல் பொருது மெலிந்தார் திமில் விட,

கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,

நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து

திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
75 உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்,

அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,

றி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,

மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;

மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
80 வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்;

செங் குங்குமச் செழுஞ் சேறு,

பங்கம் செய் அகில் பல பளிதம்,

மறுகுபட அறை புரை அறு குழவியின்

அவி அமர் அழலென அரைக்குநர்;
85 நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை,

வித்தி அலையில், "விளைக! பொலிக!" என்பார்;

இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,

நல்லது வெஃகி, வினை செய்வார்;

மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
90 தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்

எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,

கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்

உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
95 வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக்

கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை

ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி

அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்

பின்னும், மலர்க் கண் புனல்;
100 தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும்,

கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,

வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும்,

மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்

பைய விளையாடுவாரும், மென் பாவையர்
105 செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,

இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்

பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,

அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்

ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி,
110 களிறு போர் உற்ற களம்போல, நாளும்

தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்;

மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்

வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை

நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
115 தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;

பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,

ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,

நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,

பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
120 கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,

தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,

நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்

பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து

உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
125 கால் திரிய ஆர்க்கும் புகை;

இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்

பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,

செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க

வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
130 அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை

ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.


கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்


11. வையை


"விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,

எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,

தெரு இடைப்படுத்து மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
5
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
10 மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக" என இவ் ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ,
15 நெரிதரூஉம் வையைப் புனல்;

"வரையன புன்னாகமும்,

கரையன சுரபுன்னையும்,

வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்

மனைமாமரம் வாள்வீரம்,
20 சினைவளர் வேங்கை, கணவிரி காந்தள்,

தாய தோன்றி தீயென மலரா,

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,

வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்

பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
25 வயவர் அரி மலர்த் துறை என்கோ?

அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,

திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்

அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்

பருகு படி மிடறு என்கோ? பெரிய
30 திருமருத நீர்ப் பூந்துறை."

"ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,

நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,

நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,

உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
35 வழியது பக்கத்து அமரர் உண்டி

மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க

எண் மதி நிறை, உவா இருள் மதி போல

நாள் குறைபடுதல் காணுநர் யாரே?

சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
40 வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!

மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,

காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,

மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்

இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்;"
45 என ஆங்கு

கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை

படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றும்

இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை

ஆடற்கு நீர் அமைந்தது, யாறு;
50 ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்குந்தம் ஏந்துவோர்,

கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,

புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,

கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
55 வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,

மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்

துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,

தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்

உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
60 பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும்

பாய் தேரான் வையை அகம்;

நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்

தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை

ஒளி திகழ் தகை வகை செறி பொறி
65 புனை வினைப் பொலங் கோதையவரொடு,

பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,

நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,

காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,

சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
70 உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்

அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை

கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,

நீர் ஒவ்வா வையை! நினக்கு;

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
75 பனிப் படு பைதல் விதலைப் பருவத்து

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,

மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,

புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
80 "வெம்பாதாக, வியல் நில வரைப்பு!" என

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,

முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்

ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85 நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,

வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,

பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
90 தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்

நீ உரைத்தி, வையை நதி!

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி
95 சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;

பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;

"குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்" என்று

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
100 கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்;

பவள வளை செறத்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்

குவளைப் பசுந் தண்டு கொண்டு;

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,

"நில்லிகா!" என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
105 மல்லிகா மாலை வளாய்;

தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,

கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,

நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,

நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
110 தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன்பின் தொடரூஉ,

தாய் அத் திறம் அறியாள், தாங்கி, "தனிச் சேறல்;

ஆயத்தில் கூடு" என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே

சேய் உற்ற கார் நீர் வரவு;
115 "நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்" என்மாரும்,

"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,

விழுத் தகை பெறுக! என வேண்டுதும்" என்மாரும்,

"பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,

யாம் வீழ்வார், ஏமம் எய்துக!" என்மாரும்,
120 "கிழவர் கிழவியர் என்னாது, ஏழ்காறும்,

மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!" என்மாரும்

"கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்;

பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்;

நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
125 பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்;

கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட

கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்மின்;

பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,

கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
130 தண் தும்பியினம் காண்மின்; தான் வீழ் பூ நெரித்தாளை

முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்,

கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்

என ஆங்கு

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
135 மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட

கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம

இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;

மறு முறை அமையத்தும் இயைக!
140 நறு நீர் வையை நயத் தகு நிறையே!


ஆசிரயன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


12. வையை


வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,

விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,

தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;

ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
5
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய;

தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி,

நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்

வளி வரல் வையை வரவு;

"வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
10 அம் தண் புனல் வையை யாறு" எனக் கேட்டு,

மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்,

பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,

அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்

புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
15 கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,

வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,

புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,

கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;

வாச நறு நெய் ஆடி, வான் துகள்
20 மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும்

தேசும் ஒளியும் திகழ நோக்கி,

வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்

இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,

கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
25 ஓசனை கமழும் வாச மேனியர்,

மட மா மிசையோர்,

பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்

கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,

வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
30 விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,

ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்,

உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்

கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;

நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம்
35 கவர்ந்தது போலும், காண்பவர் காதல்

முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி

ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை

எல்லாம் தெரியக் கேட்குநர் யார்" அவை

கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
40 ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ்,

மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி,

ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;

நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்

அத் தக அரிவையர் அளத்தல் காண்மின்
45 "நாணாள்கொல் தோழி! 'நயன் இல் பரத்தையின்

தோள் நலம் உண்டு, துறந்தான்' என, ஒருத்தி

யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி

சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,

நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?" என்மரும்,
50 "கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்

ஓட்டை மனவன்; உரம் இலி" என்மரும்,

"சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;

நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை

அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?" என்மரும்,
55 "பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்

நாணாள் அவனை, இந் நாரிகை" என்மரும்

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,

கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்

இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
60 "பிழையினை" என்ன, பிழை ஒன்றும் காணான்,

தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்

"பார்த்தாள், ஒருத்தி நினை" என, "பார்த்தவளைப்

பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்" என்று இரந்து,

மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், "பொய்ச் சூள்" என்று,
65 ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்

புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்

பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,

வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
70 பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,

நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து

மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,

எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்

நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
75 வல்லதால், வையைப் புனல்,

என ஆங்கு

மல்லிகை, மெளவல், மணம் கமழ் சண்பகம்,

அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,

குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
80 நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,

எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;

தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாழை;

பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;

துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்;
85 கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே

போர் அடு தானையான் யாறு;

சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த

கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,

விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
90 அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்

காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,

நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.

துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று;

"புனல்" என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை;
95 உரையின் உயர்ந்தன்று, கவின்;

போர் ஏற்றன்று, நவின்று; தகரம்

மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;

துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று;

விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.
100 இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,

நன்பல நன்பல நன்பல வையை!

நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.


நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்


13. திருமால்


மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று

அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,

இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்

நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
5 விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்

தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,

நேமியும் வளையும் ஏந்திய கையான்
10 கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,

அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்

திரு வரை அகலம் தொழுவோர்க்கு

உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
15 அவையும் நீயே, அடு போர் அண்ணால்!

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;
20 மூன்றின் உணரும் தீயும் நீயே;

நான்கின் உணரும் நீரும் நீயே;

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே

அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
25 காலமும், விசும்பும், காற்றொடு கனலும்

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,

மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த

கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்
30 மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்,

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்

விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்

நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
35 பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி

இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி,

மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை
40 ஏவல் இன் முது மொழி கூறும்,

சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;

கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;

வலம்புரி, வாய்மொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
45 அவை நான்கும் உறழும் அருள், செறல், வயின் மொழி;

முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும் அவை மூன்றும்

கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;

இருமை வினையும் இல, ஏத்துமவை;

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
50 அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை

அடியும், கையும், கண்ணும், வாயும்;

தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,

தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;

மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை
55 கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை;

வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை

அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,

செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்

எரி நகை இடை இடுபு இழைந்த நறுந் தார்ப்
60 புரி மலர்த் துழாஅய் மேவல்மார்பினோய்!

அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்

முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்

இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!


கடவுள் வாழ்த்து
நல்லெழுநியார் பாட்டு
பண் நோதிறம்


14. செவ்வேள்


கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற

நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;

தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்

வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
5
அடியுறைமகளிர் ஆடும் தோளே,

நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;

வாகை ஒண் பூப் புரையும் முச்சிய

தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,

"நீடன்மின் வாரும்" என்பவர் சொல் போன்றனவே
10 நாண் மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன

மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,

அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப

நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்

வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
15 விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்

பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,

கார் மலிந்தன்று, நின் குன்று; போர் மலிந்து,

சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!

கறை இல் கார் மழை பொங்கி அன்ன
20 நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!

அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!

கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை

எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
25 பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்

சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!

இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,

ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
30 துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்

இன்னும் இன்னும் அவை ஆகுக

தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!


கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்


15. திருமால்


புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,

நில வரை தாங்கிய நிலைமையின் பெயராத்

தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்

புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
5
பல எனின், ஆங்கு அவை பலவே; பலவினும்

நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்

நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே

சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்

மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
10 குல வரை சிலவே; குல வரை சிலவினம்

சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்,

புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,

எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
15 நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை

ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்

அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்

எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
20 மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,

அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,

சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்

சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்

தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
25 நாமத் தன்மை நன்கனம் படி எழ,

யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து

மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,

பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே

நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!
30 சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்

சினை யெலாம் செயலை மலர, காய் கனி

உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,

மாயோன் ஒத்த இன் நிலைத்தே

சென்று தொழுகல் லீர்! கண்டு பணிமின்மே
35 இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே

பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது

கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்

மக முயங்கு மந்தி வரைவரை பாய,

முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
40 மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவ,

குருகு இலை உதிர, குயிலினம் கூவ,

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்

நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,

சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க்
45 கடந்து அட்டான் கேழ் இருங்குன்று;

தையலவரொடும், தந்தாரவரொடும்,

கைம் மகவொடும், காதலவரொடும்,

தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
50 வெளவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,

எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்

மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்

அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
55 ஒள் ஒளியவை, ஒரு குழையவை;

புள் அணி பொலங் கொடியவை;

வள் அணி வளை நாஞ்சிலவை,

சலம் புரி தண்டு ஏந்தினவே;

வலம்புரி வய நேமியவை;
60 வரி சிலை வய அம்பினவை;

புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;

என ஆங்கு

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி

இது என உரைத்த(லி)ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
65 "இருங்குன்றத்து அடி உறை இயைக!" என,

பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.


கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்



16. வையை


கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,

மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,

நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,

எவ் வயினானும் மீதுமீது அழியும்
5
துறையே, முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,

பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி

வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்

கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,

தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
10 தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே

செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,

படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,

களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்

காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
15 நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே

கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்,

கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன்

தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்

பூத்தன்று வையை வரவு
20 சுருங்கையின்ஆயத்தார் சுற்றும் எறிந்து,

குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,

பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,

இருந் துகில் தானையின் ஒற்றி, "பொருந்தலை;

பூத்தனற்; நீங்கு" எனப் பொய் ஆற்றால், தோழியர்
25 தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்

நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,

இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,

மகிழ, களிப்பட்ட தேன் தேறல் மாற்றி,

குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
30 "பூத்தனள் நங்கை; பொலிக!" என நாணுதல்

வாய்த்தன்றால் வையை வரவு

மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்

கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்

நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
35 மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய

வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,

தேன் இமிர் வையைக்கு இயல்பு;

கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
40 ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,

பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,

செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்

அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து

வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
45 எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்

தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்

கொடித் தேரான் வையைக்கு இயல்பு

வரை ஆர்க்கும் புயல்; கரை

திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
50 கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,

பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்

நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,

பூத்த புகையும், அவியும் புலராமை

மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
55 அறாஅற்க, வையை! நினக்கு.


நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்


17. செவ்வேள்


தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,

ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,

விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்

பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
5
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து

கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ

மாலை, மாலை, அடி உறை, இயைநர்,

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?

ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
10 ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,

ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,

ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,

ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,

ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
15 ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,

ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,

ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்

நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,

ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
20 மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்

மாறு அட்டான் குன்றம் உடைத்து;

பாடல் சான்று பல் புகழ் முற்றிய

கூடலொடு பரங்குன்றின் இடை,

கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப,
25 நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;

மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்

சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று

வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,

திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
30 ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை

வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;

தேயா மண்டிலம் காணுமாறு இன்று

வளை முன் கை வணங்கு இறையார்,

அணை மென் தோள் அசைபு ஒத்தார்
35 தார் மார்பின் தகை இயலார்,

ஈர மாலை இயல்அணியார்

மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,

சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா

அனைய, பரங்குன்றின் அணி;
40 கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ;

மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ,

தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,

அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,

தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
45 கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும்

கை ஊழ் தடுமாற்றம் நன்று;

என ஆங்கு,

மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,

பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
50 பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,

அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்;

அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்

ஏம வைகல் பெறுக, யாம் எனவே.


கடவுள் வாழ்த்து
நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிரம்


18. செவ்வேள்


போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,

கார் எதிரந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,

நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,

சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
5
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,

ஏறுமாறு ஏற்கும் இக் குன்று;

ஒள்ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்

உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:

"உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை
10 எள்ளுதல் மறைத்தல் ஓம்பு" என்பாளைப் பெயர்த்து அவன்

"காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்

பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை

ஏதிலா நோக்குதி" என்று, ஆங்கு உணர்ப்பித்தல்

ஆய் தேரான் குன்ற இயல்பு;
15 ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,

மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,

கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ?

மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்;

மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி
20 நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம்

பூத்தன பாணா! நின் பாட்டு;

தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,

மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,

கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
25 இருள், போழும் கொடி மின்னால்

வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின்

ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்;
30 ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி

சூர் ததும்பு வரைய காவால்,

கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,

ஏர் ததும்புவன பூ அணி செறிவு

போர் தோற்றுக் கண்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
35 காந்தள், செறிந்த கவின்,

கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்

புரி நெகிழ்ப்பார் போன்றன கை;

அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே,

வச்சிரத்தான் வான வில்லு;
40 வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின

வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்

வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்

சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,

போர் ததும்பும் அரவம் போல,
45 கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்.

அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;

குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;

எருவை கோப்ப, எழில் அணி திருவில்

வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
50 கூனி வளைத்த சுனை

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,

சுருதியும் பூவும் சுடரும் கூடி,

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,

செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
55 உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,

பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே!


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்


19. செவ்வேள்


நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,

புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,

"அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்

இரு நிலத்தோரும் இயைக!" என, ஈத்த நின்
5
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு

சாறு கொள் துறக்கத்தவளொடு

மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,

கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
10 அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,

சிறந்தோர் உலகம் படருநர் போல,

உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,

புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,

தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
15 குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு

நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய

தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்

ஆர் வேலை யாத்திரை செல் யாறு;

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
20 புடை வரு சூழல் புலம் மாண் வழுதி

மட மயில் ஓரும் மனையவரோடும்,

கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்

சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்

பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்
25 சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,

பாடிய நாவின், பரந்த உவகையின்,

நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,

படு மணி யானை நெடியாய்! நீ மேய

கடி நகர் சூழ் நுவலுங்கால்;
30 தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,

வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்

வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;

திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்

கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
35 பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,

குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற

இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,

கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
40 தெய்வப் பிரமம் செய்குவோரும்,

கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,

யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,

வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;

கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
45 ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;

என்று஡ழ் உற வரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,

"இரதி காமன், இவள் இவன்" எனாஅ,

விரகியர் வினவ, வினா இறுப்போரும்
50 "இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்

சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு

ஒன்றிய படி இது" என்று உரைசெய்வோரும்;

இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,

துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
55 நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்

சோபன நிலையது துணி பரங்குன்றத்து

மாஅல் மருகன் மாட மருங்கு;

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,

பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, "யான்
60 வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்

ஏஎ, ஓஒ!" என விளி ஏற்பிக்க,

"ஏஎ, ஓஒ!" என்று ஏலா அவ் விளி

அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்

செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
65 மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை;

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்

சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,

உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
70 அலர் முகிற் உற, அவை கிடப்ப,

"தெரி மலர், நனை, உறுவ,

ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த

மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு" என

ஆங்கு இள மகளிர் மருள பாங்கர்
75 பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கயம், பகை மலர் இலவம்;
80 நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க

மணந்தவை, போல, வரை மலை எல்லாம்

நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;

விடியல் வியல் வானம் போலப் பொலியும்

நெடியாய்! நின் குன்றின்மிசை;
85 நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்

புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,

பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,

மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,

பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
90 கன்னிமை கனிந்த காலத்தார், நின்

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்

குறுகிச் சிறப்பு உணாக்கால்;
95 குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்

சிறப்பு உணாக் கேட்டி செவி;

உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே

படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;

உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
100 விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,

தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,

அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்

கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
105 உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!


கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்


20. வையை


கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,

உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை

முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
5
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று

காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி

மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்

வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்

தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
10 கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;

தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை

தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று

வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,

ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்
15 நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,

திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,

வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,

வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,

கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
20 மகளிர் கோதை மைந்தர் புனையவும்,

மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,

முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,

ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்

கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
25 மாட மறுகின் மருவி மறுகுற,

கூடல் விழையும் தகைத்து தகை வையை

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,

தகை வகை தைஇயினார் தார்;

வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
30 சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்

இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்

அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,

கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
35 நொந்து, "அவள் மாற்றாள் இவள்" என நோக்க,

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;

செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன

நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,

ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்
40 என ஆங்கு,

ஒய்யப் போவாளை, "உறழ்ந்தோள் இவ் வாணுதல்"

வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய

நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,

"செறி நிரைப் பெண்" வல் உறழ்பு "யாது தொடர்பு?" என்ன
45 மறலினாள், மாற்றாள் மகள்;

வாய் வாளா நின்றாள்,

செறிநகை சித்தம் திகைத்து;

ஆயத்து ஒருத்தி, அவளை, "அமர் காமம்

மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
50 பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்

துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!

முற்றா நறு நறா மொய் புனல் அட்டி

காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,

மூரி தவிர முடுக்கு முது சாடி!
55 மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்

தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்

தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்

பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
60 வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து

மத்திகை மாலையா மோதி, அவையத்துத்

தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட

விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்,

தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
65 நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?" என்னாமுன்

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு

ஊடினார், வையையகத்து.

"சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;

மைந்து உற்றாய், வெஞ்சொல்; மட மயிற் சாயலை
70 வந்திக்க வார்" என "மனத் தக்க நோய் இது;

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;

போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,

மாற்றாளை மாற்றாள் வரவு"

"அ... சொல் நல்லவை நாணாமல்
75 தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;

எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்

வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,

தந்தானைத் தந்தே, தருக்கு"

மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
80 கால சிலம்பும் கழற்றுவான்; சால,

அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;

கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.?

என ஆங்கு

வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
85 நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்

காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;

தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்

இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
90 நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!

"மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்

அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்

முடி பொருள் அன்று முனியல் முனியல்!

கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!"
95 என ஆங்கு

இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,

தென்னவன் வையைச் சிறப்பு;

கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,

அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
100 குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,

சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,

சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,

அருவி சொரிந்த திரையின் துரந்து;

நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து
105 கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்

நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்

கடி மதில் பெய்யும் பொழுது;

நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,

காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
110 தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்

பூ மலி வையைக்கு இயல்பு.


ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்


21. செவ்வேள்


ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,

பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்

தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை

துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
5
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,

வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,

புரி மென் பீலிப் போழ் புனை அடையல்

கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து,

புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்
10 பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த

உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.

அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,

நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை

அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
15 தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்;

"குன்றத்து அடி உறை இயைக!" எனப் பரவுதும்

வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது;

சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,

துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
20 அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,

நுனை இலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு

துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்;

நிழல் காண் மண்டிலம் நோக்கி,

அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
25 பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்

உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;

பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்

ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந்

திட்டோ ய்! நின் குன்றின்மிசை;
30 மிசை படு சாந்தாற்றி போல, எழிலி

இசை படு பக்கம், இரு பாலும் கோலி,

விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,

முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
35 யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;

பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;

ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்

இரங்கு முரசினான் குன்று;

தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
40 மீ நீர் நிவந்த விறலிழை, "கேள்வனை

வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக" என,

பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது

அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,

கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
45 தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று;

வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய

தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,

கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த

புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
50 உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த

முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,

அசும்பின் அருவி அரு விடர்ப் பரந்த

பசும் பூண் சேஎய்! நின் குன்றம் நன்கு உடைத்து;

கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்
55 ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த

செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,

மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்

பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,

பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
60 சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,

கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்

ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்

வாடை உளர் கொம்பர் போன்ம்;

வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
65 தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்;

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;

ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை

நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, "நின் அடி உறை

இன்று போல் இயைக!" எனப் பரவுதும்
70 ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.


கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்


22. வையை


ஒளிறு வாட்பபொருப்பன் உடல் சமத்து இறுத்த

களிறு நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர,

அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்

முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
5
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை

விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,

கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி, அவன்

வண்மைபோல் வானம் பொழிந்த நீர் - மண்மிசை

ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
10 தானையின் ஊழி ......... தாவூக் கத்தின்,

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-

..... ..... ...... நீக்கிப் பு.......

கான மலைத்தரை கொன்று மணல பினறீ

வான மலைத்த ....... வ..........
15 ........... லைத்தவ மண முரசு எறிதர,

தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,

பொறிவி யாற்றுறி - துவர், புகை, சாந்தம்,

எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற

நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
20 பிற தொழின ...... ம் பின்பின் தொடர;

செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,

தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;

மாவும், களிறும், மணி அணி வேசரி,
25 காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;

வேல் ஆற்றும் மொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்-

போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,

தார் அணி மைந்தர் தவப் பயன் சான்மென-

கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
30 வார் அணி கொம்மை, வகை அமை மேகலை,

ஏர் அணி இலங்கு எயிற்று, இன் நகையவர்-

"சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்

நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்?" எனத்

தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
35 தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்;

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு

எதிர்வ பொருவி ........ மேறு மாறு இமிழ்ப்ப,

கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்

புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
40 ஊது சீர்த் தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்

தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,

...... துடிச் சீர் நடத்த வளி நடன்

மெல் இணர்ப் பூங் கொடி மேவர நுடங்க,

ஆங்க அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
45 தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால்

கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,

..... .... ..... புரை தீர் நெடு மென்

தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,

நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,
50 .... ..... ...... ...... ...... ..... ...... ...... ..... .....

பரிபாடல் - திரட்டு

1. திருமால்


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,

தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,

நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா

மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
5
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின்

திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது. (இது தரவு)

ஒருசார், அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,

பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,

மணி நிறம் கொண்ட மலை.
10 ஒருசார், தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை

வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,

விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்

கண் வீற்றிருக்கும் கயம்;

ஒருசார், சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று
15 உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து

திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி,

திரு நயத்தக்க வயல்;

ஒருசார், அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,

விறல்புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
20 திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,

அறத்தின் திரியா, பதி; (இவை நான்கும் கொச்சகம்)

ஆங்கு ஒரு சார், உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,

மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,

பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
25 புண்ணிய வணிகர் புனைமறு கொருசார்

விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்

களமர் உழவர் கடி மறுகு பிறசார்:

ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்

இயல் கொள நண்ணியவை; (இது கொண்டு நிலை)
30 வண்டு பொரேரென எழ,

வண்டு பொரேரென எழும்;

கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டி,

கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-

மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
35 ஊர் களிற்றன்ன செம்மலோரும்,

வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து

ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,

புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,

நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
40 விடையோடு இகலிய விறல் நடையோரும்,

நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,

கடல் நிரை திரையின் கரு நரையோரும்,

சுடர் மதிக் கதிரெனத் தூ நரையோரும்-

மடையர், குடையர், புகையர், பூ எந்தி,
45 இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி,

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்

துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-

இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்

வரை கெழு செல்வன் நகர்;
50 வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப,

விண்ட கட கரி மேகமொடு அதிர,

தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப,

அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்

புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
55 சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய,

சூடா நறவொடு காமம் விரும்ப,

இனைய பிறவும், இவை போல்வனவும்,

அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்

பூ முடி நாகர் நகர்;
60 மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி

அவிர் நிமிர் புகழ் கூந்தல்,

பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ்

தெரி அரி மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்-

மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
65 இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,

அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,

நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்

வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்

குளவாய் அமர்ந்தான் நகர். (இது முடுகியல்)
70 திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்

திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி,

மகர மறி கடல் வைத்து நிறுத்து,

புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்

அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
75 மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்

அறாஅது அணிந்தாரும் தாம்;

மிகாஅ மறலிய மே வலி எல்லாம்

புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
80 மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்

அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவு இல் சீர்ச்

செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,

கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்

தொல் புகழ் தந்தாரும் தாம்; (இவையும் கொச்சகம்)
85 அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த

கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,

நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. (என்பது ஆசிரியச் சுரிதகம்)


கடவுள் வாழ்த்து
இப்பாடல் தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ 121. பேராசிரியர் நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது.


2. வையை


மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ,

ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்,

நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ,

காமரு வையை கடுகின்றே, கூடல்.
5 "நீர் அணி கொண்டன்ற வையை" என விரும்பி,

தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி,

ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்

சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு

நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி,
10 ஏர் அணி கொண்டார், இயல்.

கை புனை தாரினர், கண்ணியர்,

ஐ எனும் ஆவியர், ஆடையர்,

நெய் அணி கூந்தலர், பித்தையர்,

மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத்
15 தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல;

பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர்

வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும்

பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர்

மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு
20 ஊடுவார்; ஊடல் ஒழிப்பார் உணர்குவார்;

ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு

ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத்

தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி-

கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
25 பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும்,

பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும்,

முற்றின்று வையைத் துறை.

துறை ஆடும் காதலர் தோள் புணையாக,

மறை ஆடுவாரை அறியார் மயக்கி,
30 பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்

நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே,

இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால்,

அகல் அல்கும் வையைத் துறை.

காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி,
35 ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, "மற்று அது

தா தா" என்றாளுக்கு, "தானே புறன் தந்து

வேய்தந்தது". "என்னை? விளைந்தமை மற்று அது

நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி

போதல் உண்டாம்கொல்" அறிந்து புனல் புணர்ந்தது!
40 ஓஒ! பெரிதும் வியப்பு;

கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை

நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும்

முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து

நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்!
45 நீயும் அவட்குத் துணை;

பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்,

மணி எழில், மா மேனி, முத்த முறுவல்,

அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர்

மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
50 தணிவின்று, வையைப் புனல்.

"புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று? என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
55 கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால்,

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

என ஆங்கு-

"ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு" எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு;
60 "மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று" என்று,

அந்தணர் தோயலர், ஆறு;

"வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென?

ஐயர், வாய்பூசுறார், ஆறு;

விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்,
65 கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை,

நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல்,

புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று, வெள்ள மிகை.

வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்

மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும்,
70 நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று,

குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன்

திருமருத முன்துறை முற்றம் குறுகி,

தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர்.

பாடிப் பாடி, பாய்புனல்
75 ஆடி ஆடி, அருளியவர்

ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று

கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு,

தேடித்தேடி, சிதைபு சிதைபு,

சூடிச் சூடி, தொழுது தொழுது,
80 மழுபொடு நின்ற மலி புனல் வையை

விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி,

இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்!

முழுவதும் மிச்சிலா உண்டு;

சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும்,
85 கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும், அல்லால்,

சிறிதானும் நீர் நிறம் தான் தோன்றாது-இவ் வையை ஆறு.

மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்

கழு நீர் மஞ்சனக் குங்குமக் கலங்கல்

வழி நீர்; விழு நீர அன்று-வையை.
90 வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்,

உரு கெழு கூடலவரோடு, வையை

வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்-

இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு

ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின்,
95 அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான்

இந்திரன் ஆடும் தகைத்து.


இப்பாடல் தொல்காப்பியம் செய்யுள் இயல். சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.


3. வையை


அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,

..... ..... ..... ..... ..... ..... ..... .....

செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை

மறு முறையானும் இயைக! நெறி மாண்ட
5
தண் வரல் வையை எமக்கு.


இப்பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல். சூ. 121. பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப்பகுதி "அறவோர் உள்ளார் அருமறை காப்ப" என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.


4. வையை


தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்

பரிமா நிரையின் பரந்தன்று வையை.


இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய "நுண் பொருள் மாலை" யால் தெரிய வருகின்றது.


5.


மண் ஆர்ந்து இசைக்கும் முழவொழு கொண்ட தோள்

கண்ணாது உடன் வீழும் காரிகை! கண்டோ ர்க்குத்

தம்மொடு நிற்குமோ, நெஞ்சு?


இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல். சூ. 120. பேராசிரியர் நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.


6.


முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை

இன்பு உற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்

நாண் எனும் தொல்லை அணி என்ன நல்நுதலை

.... ... ...னந்து


இப்பகுதி நாற்கவிராச நம்பியகப்பொருள் சூ. 129 உரையில் உள்ளது.


7. மதுரை


உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்

புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்

தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்.


இதுவும், இதனைத் தொடர்ந்து வரும் ஐந்தும் (7-12) புறத்திட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளன.


8.


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்

இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து

அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
5
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;

தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
10 வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.


9.


தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்

நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,

குன்றுதல் உண்டோ மதுரை-கொடித் தேரான்

குன்றம் உண்டாகும் அளவு?


10.


செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,

வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,

பொய்யாதல் உண்டோ மதுரை-புனை தேரான்

வையை உண்டாகும் அளவு?


11.


கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,

சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,

கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்

வார்த்தை உண்டாகும் அளவு?


12.


ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்-

சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்

போவார் ஆர், புத்தேள் உலகு?


13.


"வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?

செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?

வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக

எவ்வாறு செய்வாம்கொல், யாம்?" என, நாளும்,
5
வழி மயக்குற்று மருடல் நெடியான்

நெடு மாடக் கூடற்று இயல்பு.


இப்பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப் பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.


Overview of Paripadal

1. Title Meaning:

- The term "Paripadal" refers to a specific type of Tamil poetic meter. The name of the collection reflects the structure and rhythm used in the poems.

2. Content:

- Structure: Originally, Paripadal was believed to have contained 70 poems. However, only 22 complete poems and a few fragments have survived. The poems are notable for their elaborate lyrical quality.
- Themes: Unlike many other Sangam works, which primarily focus on secular themes such as love and war, Paripadal is distinguished by its devotional content. The poems are hymns dedicated to various deities, including Lord Vishnu, Lord Shiva, and the goddess Durga, as well as to the Vaigai River, which is personified and worshiped.

3. Religious and Devotional Themes:

- Praise of Deities: The poems in Paripadal are rich in devotional sentiment, extolling the virtues and divine attributes of the gods and goddesses they are dedicated to.
- Nature and Divinity: The work often intertwines descriptions of nature with religious devotion, reflecting the belief in the divinity inherent in natural elements like rivers and landscapes.
- Cultural and Ritual Practices: The hymns provide insights into the religious practices, rituals, and cultural values of ancient Tamil society, emphasizing devotion, worship, and moral conduct.

4. Poetic Style:

- Meter and Rhythm: The poems are composed in the "Paripadal" meter, which is characterized by a rhythmic and musical quality. This style enhances the hymnal and devotional nature of the poetry.
- Imagery and Symbolism: The use of vivid imagery and rich symbolism is a hallmark of Paripadal, often drawing on natural and mythological elements to convey spiritual themes.

5. Cultural and Historical Context:

- Religious Significance: Paripadal holds an important place in the Tamil literary canon for its focus on religious and spiritual themes. It reflects the syncretic religious landscape of the Sangam period, where indigenous Tamil beliefs coexisted with Vedic and Puranic traditions.
- Historical Insights: The poems provide valuable historical and cultural insights into the worship practices and religious life of ancient Tamil Nadu.

6. Literary Significance:

- Contribution to Sangam Literature: Paripadal is unique among Sangam literature for its religious content, offering a different perspective compared to the more secular themes prevalent in other works.
- Influence: The devotional and hymnal nature of Paripadal has influenced later Tamil religious literature, particularly in the development of Tamil devotional poetry and hymns.

Paripadal stands out as a distinctive and important work in the Sangam corpus, celebrated for its devotional fervor, poetic beauty, and cultural significance. Its hymns continue to be appreciated for their spiritual depth and literary merit.



Share



Was this helpful?