இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


எண் கணிதம்

எண் கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு அடிப்படைப் பகுதி ஆகும். இது எண்களைப் பயன்படுத்தி கணக்கிடுவதற்கான விதிகளையும் முறைகளையும் குறிக்கிறது. எண்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை விளக்கும் கணிதத்தின் மூலவியல் துறை எண் கணிதம் எனப்படுகிறது.



எண் கணிதம்

மனித வாழ்க்கை, கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் தங்கள் தீர்க்கமான ஆய்வின் பயனாகக் கண்டறிந்துள்ளார்கள். புவியின் இயக்கத்திற்கும், மனித வாழ்வுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விண்ணுலகே உலவும் கிரகங்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பல வகையிலும் மனித வாழ்வுடன் தொடர்பு கொண்டிருப்பது உணரப்பட்டது. பொதுவாக நமது பாரத நாட்டைவிட மேலை நாடுகளில் இந்த எண் கணித சாஸ்திரமானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.

எண் கணித சாஸ்திரம் பிரதானமான பலன்களுக்கு காரணமாக அமைகிறது. என்று கூறிவிட முடியாது. அதாவது ஜெனன கால ஜாதகம் சரியாக இல்லாமல், எண் கணிதத்தைக் கொண்டு பெயரைத் நன்கு வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக அமைந்துவிடுமா?.. அமைவதற்கு வாய்ப்பில்லை! அதாவது மழை பெய்யும் பொழுது குடை பிடிப்பதைப் போன்றும், வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதைப் போன்றும் இந்த எண் கணித சாஸ்திரமானது மனித சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.

அறிமுகம்

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" என்பது பழமொழி.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு"

இது குறள் நெறி கூறும் அறிவுரை.

எண்ணும் எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். அதை மனிதன் அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம். எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நமது புலன் உணர்வுகளை ஐம்புலன்கள் என எண்ணிக்கைக்குள் முன்னோர்கள் அடக்கினர்.

மேலும் பஞ்ச பூதம், பஞ்சலோகம், பஞ்சநதி, ஸப்த ஸ்வரங்கள்,ஸப்த நாடி என்றெல்லாம் எண்களின் அடிப்படையில் சிறப்பாகப் பேசப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் என்று அறிந்துள்ளோம். அதேபோல் ஒன்பது கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள், 108 நட்சத்திர பாதங்கள் என்ற கணித அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரமே இயங்குகிறது. இதேபோன்று ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் எண்கள் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமது தேசத்திலிருந்து இந்த கலைச் செல்வங்களைக் கற்று சென்ற மேல்நாட்டு அறிஞர்கள் சிரம்மெடுத்து அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சிகள் பல நடத்தி பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.

இத்தகைய அறிஞர்களில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

எண்ணும் எழுத்தும்

எழுத்துக்களுக்கான எண்களை நிர்ணயிக்கும்போது ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்துவது இன்று வழக்கத்தில் இருக்கிறது. ஏனெனில் ஆங்கில மொழி உலகளாவிய மொழியாதலால் ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆங்கில எழுத்துக்களுக்கு என்னென்ன எண்கள்?


எழுத்துக்கள் மதிப்பு எண்கள்
A - I - J - Q - Y 1
B - K - R 2
C -G - L - S 3
D - M - T 4
E - H - N - X 5
U - V - W 6
O - Z 7
F - P 8


எந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எந்த எண் என்பதை நன்றாக அறிந்து கொண்டால்தான், ஒரு ஜாதகருக்குப் பெயர் வைக்க முடியும். மேற்கண்ட அட்டவணையில் உள்ளபடி அந்தந்த ஆங்கில எழுத்துக்கள் அதற்குரிய எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது, இதில் எண் 9- ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எண்களும் கிரகங்களும்
சூரியன் முதலான கிரகங்கள் எந்த எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டது?

எண் ஆட்சிக்கிரகம்
1 சூரியன்
2 சந்திரன்
3 குரு
4 இராகு
5 புதன்
6 சுக்கிரன்
7 கேது
8 சனி
9 செவ்வாய்

மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு, பகை எண்களை அறிந்துகொள்வோம்.

எண் ஆட்சிக்கிரகம் நட்புஎண் நட்புக்கிரகம் பகை எண்
1 சூரியன் 4 இராகு 8
2 சந்திரன் 7 கேது 8
3 குரு 9 செவ்வாய் 6
4 இராகு 1 சூரியன் 8
5 புதன் 9 செவ்வாய் 6
6 சுக்கிரன் 9 செவ்வாய் 3, 5
7 கேது 2 சந்திரன் 8
8 சனி 5 புதன் 8
9 செவ்வாய் 5, 6 புதன், சுக்கிரன் 2

ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும், சந்திரனுக்குக் கேதுவும் பகை எனப்படித்துள்ளோம். எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம். சூரிய சந்திரர்களின் நிழலே இராகு, கேதுக்களாகும். எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள்.

எண்கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது. அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத் தேதியில் தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் மொத்த கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின் எண்ணாகும். உதாரணமாக ஒருவர் 29-12-1976 என்ற தேதியில் பிறந்திருக்கிறார்.

எனில் 2+9+1+2+1+9+7+6= 37, 3+7=10, 1+0=1 ஆக ஒன்றாம் எண்ணே இவரின் எண்ணாகும். இந்த எண்ணையே விதியெண் என்று கூறுகிறோம். அதாவது ஒரு ஜாதகரின் விதியெண் அறிய அவர் பிறந்த தேதியில் தேதி, மாதம் மற்றும் நாள் ஆகிய மூன்று எண்களின் மொத்தமே அந்த ஜாதகரின் விதியெண்ணாகும்.

ஒரு ஜாதகருக்கான பெயரின் எண்ணே பெயரெண்ணாகும். உதாரணமாக ஒருவருடைய பெயர் R.KANNAN என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெயருக்கு கீழ்க்கண்டவாறு எண்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

R. K A N N A N
2 2 1 5 5 1 5 = 21

அவருடைய பெயரெண் 2+1 = 3 ஆகும். இவ்வாறே ஒவ்வொரு ஜாதகருக்கும் பெயரெண்ணைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெயருக்கான எண்ணைக் கணக்கிடும்போது வழக்கமாகப் பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படியே எழுத வேண்டியது முக்கியம். மிஸ்டர், மாஸ்டர், திரு. திருமதி, ஸ்ரீ, ஸ்ரீமதி போன்ற மரியாதை அடைமொழிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல பெயரின் இறுதியில் குறிக்கப்படும் B.A., M.A., மற்றும் இதுபோன்ற கல்வித் தகுதியைக் குறிக்கும் எழுத்து, அல்லது சொல்லையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடாது.

மாணவர்கள் ஒரு விபரத்தை நன்கு புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒருவரின் விதயெண்ணிலேயே, பெயரெண் அமைவது உத்தமம், அல்லது விதியெண்ணின் நட்பு எண்களிலும் பெயரெண் அமையலாம்.

பிரமிடு மூலம் பெயரெண் காணல்

ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக் கொண்டு பெயரெண் அமைக்கும்போது, அந்த எண்களில் இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும். ஒரு ஜாதகி 11-08-2005 என்ற தேதியில் பிறந்துள்ளார் என வைத்துக் கொள்வோம்.

அந்த ஜாதகிக்கு விதியெண்ணைக் காணும் பொழுது 1+1+0+8+2+0+0+5=17, 1+7 =8 வருகிறது. அதாவது விதியெண் 8 வந்தால் 8 ம் எண்ணில் பெயர் வைக்க முடியாது. எனவே 8ம் எண்ணின் நட்பு எண்ணான 5ம் எண்ணில் பெயர் வைப்பதே உத்தமம். எனவே இந்த ஜாதிக்கு M. RAGHAVI என்ற பெயரைத் தேர்வு செய்து அதற்குப் பிரமிடு முறையில் பெயரெண் அமைப்போம்.

M. R A G H A V I
4 2 1 3 5 1 6 1 = 23. 2 + 3 = 5

11-08-2005 என்ற தேதியில் பிறந்த பெண்குழந்தைக்கு M. R A G H A V I என்று 5 – ஆம் எண்ணில் பெயர் வைத்துள்ளோம். இந்தப் பெயருக்கு பிரமிடு அமைக்கும் பொழுது கீழ்க்கண்ட முறையில் அமையும்.

M. R A G H A V I
4 2 1 3 5 1 6 1 =
6 3 4 8 6 7 7
9 7 3 5 4 5
7 1 8 9 9
8 9 8 9
8 8 8
7 7

ஜாதகருக்கான பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அதற்கான இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி முடிவாக ஒரே ஒரு எண் வரும்வரை கூட்டிக்கொண்டு வரவும். ஜாதகரின் விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது விதியெண்ணுக்கு நட்பு எண்ணாகவோ அமைவது மிக உத்தமம். பிரிமிடின் முடிவாக வரும் எண்ணும், விதியெண்ணும் பெயரெண்ணும் ஒரே எண்ணாகவோ அல்லது ஒன்றுக்கொன்று நட்பு எண்ணாகவோ அமையும்பொழுது மிக உன்னதமான பலன்களைத் தரும்.

மேற்கூறிய ஜாதகியின் விதியெண் எட்டு, எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம். ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும். அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் ஐந்தாக வருவதால் நிச்சயம் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து, அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும்.

மேலும் ஒரு ஜாதகருக்கு அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும். நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்கள் வாசன் பஞ்சாங்கப்பக்கம் 78 ல் உள்ள அட்டவணையில் உள்ளது.
ஒரு ஜாதகருக்குப்பிறந்த தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு. அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு. மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும். அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும். மேற்கூறிய விபரங்களை நன்றாகப் படித்துக்கொண்டு ஒரு ஜாதகரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை அறிந்து கொண்டு, இனி எண்களின் சிறப்புகளை அறிந்து கொள்வோம்.

எண் -1 – சூரியன்

உஷ்ணமான சரீரம் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர், எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர், மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறுவார். சுய கவுரவம் அதிகம் பாராட்டுவார். உயர்ந்த பதவி, நிர்வாகத் திறமை சாஸ்திரத்தில் ஈடுபாடு சிலரையே நண்பர்களாகக் கொண்டவர். நாகரீகமாக நடந்து கொள்ளுதல், சுத்தமான உடை அணிவது, பணத்தில் பேராசை கொண்டவர். கம்பீரமான உடல் தோற்றம், சாஸ்திரங்களில் ஈடுபாடு அரசியலில் ஆர்வமும், அதனால் லாபமும் பெறுபவர். இவர்கள் ஜாதகத்தில் சூரியன் வலிமையுடன் இருப்பது நன்று.

நிறமும்- இரத்தினமும்

சிவப்பு, மஞ்சள் இவர்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும். மாணிக்கம் மற்றும் மஞ்சள் புஷ்பராகம் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.

ஒன்று வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

1 ம் தேதி

பிறர் அபிப்ராயங்களைக் கேட்பதில் பொறுமையிருக்காது. உரத்த குரலில் மறுத்துப் பேசுதல், மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துதல், தன் இஷ்டப்படி நடத்தல், தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

10 ம் தேதி

சாதுவாக நடந்து கொள்வர். மனதில் உள்ளதை வெளிப்படுத்தமாட்டார். பண்பும் நேசமும் உண்டு. பழகுவதற்கு இனிமையானவர். யாரையும் விரோதித்துக் கொள்ள மாட்டார். அன்பிற்கும், நேசத்திற்கும் எளிதில் அடிமைப்பட்டுவிடுவார். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார்.

19 – ம் தேதி

மிகுந்த மனோசக்தி, கொள்கையில் மாறாதவர், புலமை பெற்றவர்கள், பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி, தங்களுக்கென சில கருத்துக்களைப் பிடிவாதமாகக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய பேச்சு, பாவனை எல்லாமே எளிதில் யாருக்கும் விளங்காது.

28-ம் தேதி

பார்வைக்குஅழகானவர், சிரித்துப் பேசுவார், ஸ்திரீ தன்மை காணப்படும். கண்டிப்பாக கண்ணாடி அணிந்திருப்பவர், சுலபமாக நம்பிவிடுவர், யார்மனதும் நோகாமல் பேசுபவர். கபடு, சூது தெரியாத நபராக இருப்பார், யாரும் மிகவும் எளிதாக இவர்களை ஏமாற்றிவிடலாம்.

பெயர் எண் ஒன்று வரும் எண்களின் பலன்கள்

பெயரெண் -10

புகழ் பெறக்கூடியவர், தன்னம்பிக்கை கொண்டவர், பொருளாதார நிலை சகடயோக அமைப்பாகஇருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைஉண்டு. நிதானமாக நடந்துகொள்பவர். நேர்மை, நாணயம், ஒழுக்கம் போன்ற பண்புகளில் இவர்கள் சிறந்து விளங்குவர்.

பெயரெண் -19

பதவி கௌரவம், சந்தோஷம் வெற்றி, பொருளாதாரம் மேம்பாடு நேர்மையாக நடந்து கொள்ளுதல் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைப்பது இவர்களின் தனித்துவமாகும். இவர்களின் வாழ்க்கை துவக்க காலத்தைவிட வயோதிக காலத்தில்தான் சிறப்பாகக் காணப்படும்.

பெயரெண் -28

வாழ்க்கையில் பாதகமான பலனும், எக்காரியத்தில் ஈடுபட்டாலும் போட்டியும், தடைகளும், ஏற்படும். வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தொடங்குதல் ஏற்படும். இவர் வெற்றிகளைப் பெற கடினமான முயற்சி வேண்டும். பொதுவாக இந்த எண் துரதிஷ்ட வசமானதாகும்.

பெயரெண் -37

மகா உன்னத பலன், மிகுந்த வசீகரம், காதல் ஜெயம், தம் அந்தஸ்துக்கு மேம்பட்டவர்களால் விரும்பப்படுதல் நண்பர்கள் உண்டு. இவர்கள் வாழ்வில் தாராளமாகப் பணப்புழக்கம் உண்டு. உயர்பதவிகள் தானாக வந்தடையும். நண்பர்களால் பெரும் ஆதாயம் உண்டு.

பெயரெண் –46

சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும் அரசாளும் பலன் தரும். வயது ஏற ஏற செல்வமும், அந்தஸ்தும் ஏற்படும், நேர்மையாக நடந்து கொள்ளக் கூடியவர். விவேகம், புத்திசாலித்தனம் அறிவு இவைகளை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி காண்பர்.

பெயரெண்- 55

அறிவினால் பிரமித்தல், எதிரிகளை வெல்வார். அறிஞர் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். அறிவு மின்னல் போன்று ஒளி வீசும். இந்த எண் மிகுந்த மனோ பலத்தையும் சூட்சும அறிவையும் கொடுக்கும்.

பெயரெண்- 64

நண்பர்களும், எதிரிகளும், உண்டு. வாழ்க்கையில் எதிர்ப்பு உண்டு. செயற்கரிய செயலைச் செய்து கீர்த்தி பெறுதல், அரசாங்கப் பதவி கிட்டும், மித மிஞ்சிய மனோ வலிமையையும் சாமர்த்தியத்தையும் அறிவையும் இவ்வெண் தரும், வாக்கு வன்மையை உண்டாக்கும்.

பெயரெண்- 73

பிறர் அறியாமல் காரியங்களைச் செய்து சாதித்தல், அரசாங்க ஆதரவு உண்டு. தெய்வ பக்தி உண்டு. நிம்மதியுடன் வாழக்கூடியவர். நல்ல கல்வித் தகுதி உண்டு. வாழ்நாள் முழுவதும் கவலையற்ற மகிழ்ச்சிகரமான வாழ்வே இவர்களுக்கு அமைந்திருக்கும்.

பெயரெண்- 82

சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்குதல், கடின உழைப்பில் முன்னேற்றம், உன்னதமான புகழ் பிடிவாதம் அதிகம், தொழில், வாணிபம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பெயரெண்- 91

யாத்திரையில் பிரியத்தை ஏற்படுத்தும் படகு, கப்பல் வியாபாரத்தால் செல்வம் சேரும், சுகமான வாழ்க்கை அமையும். ஆன்மீகத் துறையில் புகழும், பெருமையும் பெறக்கூடிய அம்சத்தைப் பெற்றிருப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபம் தரும்.

பெயரெண்-100

வெற்றிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தாது. விஷேச சம்பவங்கள் இல்லாத நீண்ட வாழ்க்கை அமையும். வாழ்க்கை உப்பு சப்பற்றதாக இருக்கும். மன நிறைவற்ற வாழ்க்கை அமையும்.
பொதுவான பெயரெண் ஒன்று வரும்படி பெயர் வைக்கும்பொழுது 28,100 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது.

அதிர்ஷ்ட தினம்
1,10,19,28,4,13,22,31 தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் ஆகும்.

8,17,26 தேதிகள் துரதிஷ்டவசமானவை.

மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.

தொழில்கள்

மதம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். நேர்மையான தொழில்கள் அனைத்தும் இவர்கள் செய்யலாம். வைத்தியத் தொழில், IAS, IPS, IFS போன்ற துறைகளில் முன்னேற்றமுண்டு. கவிஞராகலாம். எழுத்துத்துறை, சித்திரம், சிற்பம், சங்கீதம், ஜோதிடம் இந்த தொழில்களில் ஈடுபடலாம். 1,3,4,5 எண்காரர்களைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம். 2,7,8 எண்காரர்களைச் சேர்க்கக்கூடாது.

எண்-2 சந்திரன்

பொதுவான குணநலன்கள்

கற்பனை, சக்தி, சாத்வீக, குணம், எதிர்காலத்தைப் பற்றிய சம்பவங்களை நினைத்துக் கொண்டிருத்தல், புதிய புதிய யுக்திகளும், நூதனமான யோசனைகளும் தோன்றி வண்ணமிருக்கும். தெய்வபக்தி, குரு பக்தி கொண்டவர்கள். தன்னையும் நம்பாமல், பிறர்க்கும் நம்பகத்தன்மை இருக்காது. எதையும் மிகைப்படுத்திக் கூறுதல், யாராவது எதிர்த்தால் அமைதியாவார். கெஞ்சினால் மிஞ்சுபவர். மிஞ்சினால் கெஞ்சுபவர், புக்தி ஒரே மாதிரி இருக்காது. பிரமாதமான யோசனை தோன்றும். இவர்கள் திட நம்பிக்கை உடையவராயிருந்தால் நன்று இவர்களுக்குண்டான கற்பனை சக்தியை வசமாக்கிக்கொண்டு கதையாசிரியராகிறார். கற்பனை சக்திக்கு தன்னை வசமாக்கினால் பைத்தியம், மேலான தத்துவங்களையோ தெய்வத்தையோ குருவையோ நினைத்தால் சரீரம் முழுவதும் சக்தி பரவும் ஜனக் கூட்டத்தையும் புகழையும் விரும்பமாட்டார். உண்மையான நண்பர்கள் அமைதில்லை. இவர்களைச் சேர்ந்தவர்கள் சமயத்தில் கைவிட்டுவிடுவர். விளைவைப்பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் இவர்களிடம் உண்டு. வாழ்க்கையில் காரணமற்ற கவலைகளுக்கு இவர்கள் மனம் உள்ளாகும்.

நிறமும்- இரத்தினமும்

வெள்ளையும், மஞ்சளும் கலந்த வர்ணம், இளம் பச்சை நிறமும் அதிர்ஷ்டமானது. முத்து, சந்திரகாந்தக்கல். அதிர்ஷ்டகரமானது.

இரண்டு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்

2-ம் தேதி

உயர்ந்த லட்சியங்கள் உண்டு. கற்பனை சக்தி அதிகம். சமூகத்தைத் திருத்தியமைக்கும் புரட்சிகரமான எண்ணம், பேனா வீரர், ஏமாற்றப்பட்ட போதும் கோபம் அதிகமாக உண்டாகாது. தீவிரமான ஆராய்ச்சியில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். இசை வல்லுநர்களாகவும இருப்பார்கள்.

11- ம் தேதி

தெய்வ அனுக்கிரகம் உண்டு, எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்து விடுவர். மற்றவருக்கு தீங்குபுரிய நினைக்க மாட்டார். சமாதானத்தில் விருப்பம், சினேகத்திற்குக் கட்டுப்பட்டவர். வாக்கு பலிதம் உண்டு. ஜோதிடம், மருத்துவம் போன்ற சாஸ்திரங்களில் அதிக நாட்டம் உண்டு. ஆனால் இதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முயலமாட்டார்கள்.

20- ம் தேதி

மனிதருள் தேவராவார், உயர்ந்த எண்ணம், மேதையாக, பேரறிஞராக, மகனாக, தேசத் தலைவராகவும் இருக்க வாய்ப்புண்டு. பொதுநலத்துடன் பெருமையும் புகழும் பெற்று உயர்வார்கள். சுயநல நோக்குடன் செயல்பட்டால் அவதூறுக்கும், மக்கள் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.

29- ம் தேதி

சாந்தத்தையும், சமாதானத்தையும், விரும்பாதவர், மற்றவரையும், சிரமப்படுத்துவர், சதுர சண்டை போட்ட வண்ணம் இருப்பர். நண்பர்கள் தன்னை ஏமாற்றுவதாய்க் கூறுவர், சுய காரியப்புலி மிகவும் நல்லவர்போல் நடிப்பர், வீராப்பு அதிகம் பேசுவார். நண்பர்களால் பலனில்லை. பஞ்சாயத்துத் தலைவராக இருப்பார்.

பெயரெண் இரண்டு வரும் எண்களின் பலன்கள்

பெயரெண் -2

தெய்வ நம்பிக்கையால், வாழ்க்கையில் முன்னேறுவார். பலவித லாபங்களைச் சுலபமாக அடைவார். திடீரென்று ஆபத்துகள் வரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் சீரான- படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பெயரெண்-20

உலகம் முழுவதும் இவர்கள் வசமாகிக் கிடக்கும். மனோ வலிமையும், செயல்திறனும் கொண்ட உழைப்பாளிகளாகத் திகழ்வார்கள், இவர் உயர்ந்த கல்வித்திகுதியையும் சிறந்த பண்பினைப் பெறும்போது, இராணுவம், போலீஸ் துறையில் மிகவும் உயர்ந்த பதவியைப் பெறுவார்கள். இதனால் தாமும் உயர்ந்து, தேசத்திற்கும், மக்களுக்கும் சேவை செய்ய முடியும்.

பெயரெண்- 29

குடும்ப வாழ்க்கையில் பலவித சிக்கல். நல்ல நண்பர்கள் இல்லை. பந்து விரோதம், நேற்று போற்றியவர் இன்று தூற்றுவார். இல்லற வாழ்க்கை சிறப்பிருக்காது. இவர்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதை எப்போதும் பார்க்கவே முடியாது. பிறர் கஷ்டங்களைக் கேட்டால் உடனே மனமுருகி விடுவார்கள்.

பெயரெண்- 38

சாந்தமான குணம், நேர்மையான நடப்பவர், படிப்படியாக புகழும் செல்வமும் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் ஆதாயங்களும், நஷ்டங்களும் ஏற்படும். தொடக்க காலத்தில் மிகவும் சாமானிய நிலையில் இருக்கும் இவர்கள், சிறுகச்சிறுக உயர்வு நிலை பெற்றுப் பின்னர் உரிய அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள்.

பெயரெண்- 47

மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறக்கூடியவர். அதிர்ஷ்டசாலிகள். மாமிசத்தில் நாட்டமில்லாதவர். கண்டிப்பாகக் கண் நோய் உண்டு. திடீரெனக் குருட்டு அதிர்ஷ்டம் ஏற்படும். தானுண்டு. தன் வேலையுண்டு என்றிருப்பார். மற்றவர்களுக்கு உதவியும் செய்ய மாட்டார். அதே சமயம் உபத்திரவமும் இருக்காது.

பெயரெண்- 56

எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடியது. இவர்கள் வாழ்க்கை ஒருவிதச் சிரமம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதாரச் சூழ்நிலை ஏற்ற இறக்கமாகக் காணப்படும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்பு உடையவர்.

பெயரெண்- 65

ஆன்மீக வாழ்வைத் தரும். செல்வாக்குள்ளவர். பூரண ஆதரவும் உண்டாகும். நடுத்தர வாழ்வு வாழ்பவர்களாக இருப்பார்கள். அடிக்கடி பொருளாதாரக் கஷ்டம் ஏற்படும். தெய்வ பக்தியும், பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர்கள் ஆவார்கள்.

பெயரெண்- 74

தீராத மதப்பற்றும், சீர்திருத்த நோக்கமும் இருக்கும், பொருளாதாரப் பிரச்சினை உண்டு. சதா வருந்திக்கொண்டே இருப்பார்கள். சற்றுச் சிரமமான வாழ்க்கை வாழவேண்டியிருக்கும், பெரிய மனிதர்களின் தொடர்பும், அரசியல்வாதிகளின் பழக்கமும் இவர்களுக்கிருந்தாலும் அதைத் தன் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள்.

பெயரெண்- 83

மேன்மையான பதவி, அனைவரும் வணங்கும்படியான அந்தஸ்து, இராஜயோக வாழ்க்கை, வெற்றி வீரர், உயர்ந்த பதவிக்கான அம்சத்தைக் குறிக்கும். ஓர் அரசருக்குரிய உயர்ந்த அந்தஸ்துடன் இவர்கள் வாழ்க்கை நடத்துவார்கள்.

பெயரெண்- 92

பொன், பொருள், பூமி லாபங்கள் ஏற்படும். ஆன்மீக சிந்தனை உண்டு. திரண்ட சொத்துக்களுக்கான அம்சமாகும். பரம்பரைச் சொத்துக்களைப் பராமரிப்பார்கள். பெரிய மாளிகை, எடுபிடி ஏவல் ஆட்கள், வாகன வசதிகள் போன்ற சுகபோக வசதிகள் இந்த எண்ணுக்குரிய அம்சமாகும்.

பெயரெண்- 101

தொழில் மந்தம், அடிக்கடி நேரும் பொருளாதாரப்பிரச்சினையும் மனக்கஷ்டமும் ஏற்படும். சிறந்த பலனைத் தரக்கூடியது அல்ல. இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் அலைச்சல்தான் மிச்சமாக இருக்கும். இவர்கள் சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில்தான் அதிக அக்கறை இருக்கும்.

பொதுவாக பெயர் எண் இரண்டு வரும்படி பெயர் வைக்கும் பொழுது 29,56,65,74,101 ஆகிய எண்களில் பெயர் அமைவது சிறப்பான வாழ்க்கையைத் தராது.

அதிர்ஷ்ட காலம் 2,11,20,29,7,16,25 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமானவை.

8,17,26 ஆகிய தேதிகள் துரதிஷ்டமானவை.
மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.

தொழில்கள்

வக்கீல், காவியம், ஓவியம், சங்கீதம், சிற்பம், விவசாயம், ஜவுளி வியாபாரம், பால்பண்ணை, காபி, டீ, நகைகள், முத்துக்கள், அழகு சாதனங்கள் தைலங்கள் திரவ மருந்துகள், வர்ணச் சாயங்கள் , கதையெழுதுதல், விளையாட்டுச் சாமான்கள், குளிர்பானங்கள் மதம், கடவுள், சாஸ்திரத் தொழில், துணி துவைத்தல், தைத்தல், பழங்கள், காய்கறிகள், புஷ்பங்கள், வாசனைத் திரவியம், காகிதம், புத்தகம், எழுதுபொருட்கள் ஆகிய தொழில்களில் ஈடுபடலாம்.

இவர்கள் 1,3,4,7 எண்காரர்களை கூட்டாகத் தொழிலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்- 3- குரு

பொதுவான குணநலங்கள்

இவர்களுக்கு இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் முதலிய குணங்கள் அமைந்திருக்கும். நம்பத்தகுந்தவர் கௌரவத்தையும் நற்பெயரையும் உயிருக்கும் மேலாக மதிப்பவர். உழைப்பாளி, பிறர் கஷ்டம் கண்டு உருகுவார். ஆழ்ந்த மதப்பற்றுடையவர். பழைய கொள்கைகளில் நம்பிக்கையுடையவர். முன்னோர்களைப் பின்பற்றி நடப்பவர். பிறரிடம் எதையும் யாசிக்கும் விருப்பம் இல்லாதவர், பொதுக் காரியங்களை நேசிப்பவர், உயர்ந்த பதவியடைவர்,தன்னம்பிக்கை உடையவர். தெளிவான அறிவு, ஆன்மீகநாட்டம் கொண்டவர். நாணயம், நேர்மை, பண்புடைமை நல்லொழுக்கம் ஆகிய உயர் பண்புகள் கொண்டவர். செய்வன திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப நடப்பவர். நேர்மையாக முன்னேறுவதையே விரும்புவார்.

நிறமும்- இரத்தினமும்

சிவப்பு- மஞ்சள் அதிர்ஷ்ட நிறமாகும். புஷ்பராகம் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.

மூன்று வரும் தேதிகளில் பிறந்தவர் பலன்

3,12,21,30 தேதிகளில் பிறந்தோரெல்லாம் இவ்வெண்ணின் குணங்களுடன் தோன்றுகின்றனர்.

3-ம் தேதி

நல்ல சிந்தனை சக்தியுடையவர். தெய்வபக்தி, சரீர பலம், உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிடுதல், கணிதத்தில் திறமை பெற்றிருப்பார்கள். வாழ்க்கை உயர்வாகவும், கௌரவமாகவும், அமையும். 32 வயதிற்குமேல் புகழ் உண்டாகும்.

12- ம் தேதி

தன்னலமில்லா உழைப்பாலும், தியாகத்தாலும், உயர்வார். வாழ்க்கையே பிறருக்காக என எண்ணுவார். பொதுக் காரியங்களில் ஈடுபடுவார். தியாகிக்கான குணம், கவலையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவார். பிரமிக்கத்தக்க பேச்சாளராவார்.

21- ம் தேதி

சுயநலக்காரராக இருப்பார். தியாகம் செய்து விட்டுக் கூலி எதிர்ப்பார்ப்பார். உலக அறிவு உண்டு. காரிய வாதி, செய்தி நிருபராகவும் இருப்பார். அறிவே வெற்றி தரும். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறி வெற்றியைப் பூரணமாக அனுபவிப்பார்.

30- ம் தேதி

தீர்க்க சிந்தனை கொண்டவர். கம்பீரமாக வாழ்வார். தன் இஷ்டப்படி நடப்பார். நுண்ணிய அறிவும், மிகுந்த துணிச்சலும், நெஞ்சழுத்தமும், தோல்வியைக் கண்டும் கலங்காதவர், கலைகளில் தேர்ச்சி உண்டாகும். சிக்கனம் என்பது இவர்களுக்கு ஒத்துவராத விஷயம்.

பெயரெண் மூன்று வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்- 3

உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியான வாழ்க்கைக் கல்வியையும், சிறந்த கல்வியால் பெரிய பட்டங்களையும் பெற்றிருப்பார்கள். வாழ்க்கையின் பிற்பாதி மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிப்பதாக இருக்கும்.

பெயரெண்- 12

பேச்சுத்திறமை உண்டு. பிறருக்காகப் பல கஷ்டங்களையும் சந்தோஷத்துடன் ஏற்பார். பிறர் பிரயோஜனம் அடையவே உழைப்பார். இவர்களின் திறமையான பேச்சாற்றலே இவர்கள் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமாக அமையும்.

பெயரெண்- 21

தன் சந்தோஷத்திலும், லாபத்திலுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். சாமர்த்தியத்தால் எதையும் சமாளிப்பார். இருந்தாலும் வாழ்க்கையில் முதல்பாதி சோதனை நிறைந்ததாகவும் பிற்பாதி, வெற்றியும், சந்தோஷமும் உடையதாக இருக்கும்.

பெயரெண்- 30

நுண்ணிய அறிவு, தீர்க்கமான யோசனை, இஷ்டம்போல் செயல்படுவார். மனதைச் சுலபமாக அறிந்து வெற்றி கொள்ளக் கூடியவர். உயிர் பயம் ஏற்படும். சாகசங்கள் புரிந்து, புகழ் பெறுபவர். இவர்களுடையப் பொருளாதார நிலை சீராக அமையாது.

பெயரெண்- 39

தீவிர உழைப்பாளி, புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெறமாட்டார். ஆரோக்யம் குறைவுபடும். தோல் வியாதி வரும். "கரைப்பான் புற்றெடுக்க கருநாகம் குடியிருக்க" என்று பழமொழி கூறுவார்களே. அது இவர்கள் வாழ்விற்கு ஒத்திருக்கும். இவரின் உழைப்பு பிறருக்குப் பயன்படும்.

பெயரெண்- 48

மத விஷயங்களில் அதிக சிரத்தை ஏற்படும். பொதுக் காரியங்களில் எதிர்ப்பு ஏற்படும். பொது நலத்திற்காக அனேகக் காரியங்களைச சாதிப்பார். சோதனை அதிகம் ஏற்படும். சக்திக்கு மிஞ்சிய காரியத்தைச் செய்வார். நல்லதுக்குக் காலமில்லை என்பார்களே அது இவர்கள் வாழ்க்கைக்குப் பொருந்தும், நல்லதைச் செய்தாலும் சிரமப்படுவார்கள்.

பெயரெண்- 57

ஆரம்பத்திலேயே வெற்றி முடிவில் பின் வாங்கச் செய்யும். வேகமாக முன்னேறிய வாழ்க்கை திடீரென அப்படியே நின்றுவிடும். சாதாரணமானவராக இருப்பர். வாழ்க்கையில் அடிக்கடி ஏமாறுபவர் ஆவார்கள்.

பெயரெண்- 66

பேச்சாற்றல் மிக்கவர், கலைகளில் தேர்ச்சி அரசாங்க ஆதரவு சுகபோக வாழ்க்கை ஏற்படும். இனிமையாகப் பேசி எதிரிகளை வசப்படுத்திவிடுவார்கள்.

பெயரெண்- 75

திடீரென புகழ் ஏற்படும். வெகுவிரைவில் அனேக நண்பர்களை அடைவர். திடீரென தலைவராகும் வாய்ப்பு, கவிதை வளம், நூல் ஆசிரியராக இருப்பார். கவிஞர்களாகவும் நடிகர்களாகவும், இசை விற்பன்னர்களாகவும் இருப்பார்கள், வாழ்வில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைபவர்கள்.

பெயரெண்- 84

பால்யத்தில் கஷ்டமான வாழ்க்கை வீண் விரோதமுண்டாகும். கவலை அதிகம், முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றமில்லை. தீவிரவாதியாவார். காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும், எதிர்ப்பும் ஏற்படும்.

பெயரெண்- 93

காரியங்களைச் சாதிக்கும் வல்லமை மிக்கவர். உலக அறிவு மிகும். ஆசைகள் நிறைவேறும். கலைஞராக்கும். பல தொழில்களால் இலாபமுண்டு. இருந்தாலும் வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும் இவர்கள் பல அரிய காரியங்களைச் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

பெயரெண்- 102

ஆரம்பத்தில் வெற்றியும், நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும். இது விசேஷமான எண் இல்லை. பொதுவான இந்த எண் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.
பொதுவாகப் பெயர் எண் மூன்று வரும்படி பெயர்வைக்கும்பொழுது 39,48,57,84,102 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட தினம்

3,9,12,18,21,27,30 தேதிகள் மிக நன்மை பயப்பன. பொதுவாக 3,9 வரும் எண்கள் அதிர்ஷ்ட தினங்களாகும்.
6,15,24 தேதிகள் துரதிஷ்டமான தினமாகும்.

மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.

தொழில்கள்

பள்ளிக்கூட ஆசிரியர், வங்கிகளின் குமாஸ்தா, மந்திரி பதவி, கௌரவமான தொழில், அரசுத் தொழில், தர்ம ஸ்தாபனம், பேச்சினால் செய்யும் தொழில்கள், விஞ்ஞானி, தத்துவ ஆராய்ச்சி, மதபோதகர், அர்ச்சகர், கணக்கர், ஆலோசனைத் தொழில் ஓவியர், கதை எழுதுதல், கவிதை, எழுதுதல், வழக்கறிஞர், நீதிபதி, ஒற்றர், துப்பறிபவர், சினிமாத்துறை இவையாவும் மூன்றாம் எண் கீழ் பிறந்தவர்களின் தொழில் ஆகும்.

9,18,27 எண்காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

எண் – 4- இராகு

பொதுவான குணங்கள்

வாக்கு வன்மை மிகுதி, பேசுதல், எழுதுதல், தான் வாழும் சமூகத்தைச் சீர்திருத்தும் எண்ணங்கள் இருக்கும்.
துடுக்காக எண்ணங்களை வெளியிடுவார். தன் பேச்சினால் பிறர் மனம் புண்படுமென்று நினைக்காமல் பேசக்கூடியவர். யார் எதுபேசினாலும் அதற்கு மாறான விஷயங்களையே பேசுவார். எதிர்வாதம் செய்யக்கூடியவர். பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர். எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு. விரோதிகளே அதிகம் கொண்டவர். இளகிய மனம் கொண்டவர். யார்மேலும் ஆழ்ந்த நட்பு இல்லாதவர், இளமையிலேயே வாழ்க்கையைத் தீவிரமாக ஆராய முற்படுவர், கதைகள், சாஸ்திரங்கள், வேதாந்தம், மதம் சம்பந்தப்பட்ட நூல்கள் இவர்களைக் கவரும். எல்லாம் எமக்குத்தெரியும் என்ற எண்ணம் உண்டு. அதற்காக பல விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பார். புகழ் மீது ஆசை இருக்காது. திருப்தியாக வாழ விரும்புவார். உணவு விஷயத்தில் தீவிர ஆர்வர். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதிக உழைப்பைச் செலவழித்து பொருளீட்டக் கூடியவர். செலவாளி, விளையாட்டில் ஆர்வம், ஆன்மீக ஈடுபாடு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தீர்மானிக்கும் காரியங்களில்தான் இறங்குவார். இரட்டைநாடி கொண்டவர், நடுத்தர உயரம், கண்கள் சிறிது உள்ளடங்கி இருக்கும். சிரிக்கும்போது கண்களை மூடிக் கொள்வர். சிறிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. யோகப்பயிற்சிக்கு உரித்தானவர்.

நிறமும்- இரத்தினமும்: வெளில் நீளம் உத்தமம், கோமேதகம் அதிர்ஷட இரத்தினம்.

நான்கு வரும் தேதியில் பிறந்தவர் பலன்

4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணின் தன்மையுடையவராகிறார்.

4- ம் தேதி

கண்டிப்புடையவர் நல்ல துணிச்சலும், பலமும் இருக்கும், போர்வீரர் போன்று இருப்பர். போகங்களில் மிதமாக இருக்கப்பழகிக் கொள்வர். கவர்ச்சியாகவும், இனிமையாகவும் பேசத் தெரிந்தவர். தற்செயலாக வாழ்க்கையில் விரும்பத்தகாத நிகழ்ச்சி ஏதாவது நடைபெறும்.

13- ம் தேதி

எதிர்பாராத சாதகமான பலன்கள் நடக்கும். சிறு வயதிலேயே குடும்பத்தினரால் பாதிப்புக்குள்ளாக நேரிடும், நேர்மையாக நடந்து கொள்ள மாட்டார். எதிரிகளால் அநேக சிரமங்கள் ஏற்படக்கூடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும் விரோதத்தையும் தேடிக்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்களே விரோதிகளாவார்.

22- ம் தேதி

நன்மையை விடத் தீமையே இவர்களை மிகுதியாகக் கவரும். விதி இவர்கள் வாழ்க்கையை தீய பாதையில் செலுத்தப் பல சந்தர்ப்பங்களை அளிக்கும். ஆனால் மிதமிஞ்சிய நிர்வாக சக்தியும், சாமர்த்தியமும் உண்டு. எதிரிகளுக்கு மத்தியில் தொழில் செய்வார். தீய காரியங்களால் செல்வம் சேரும், இவர்களுக்குப் பல ஜனங்களின் தொடர்பு ஏற்படும்.

31-ம் தேதி

தைரியசாலியாகவும், சூட்சும அறிவும் உடையவர். புதிதாகப் பழகுபவர்களைக் கூட மிக எளிதாகப் புரிந்து கொள்வர். சாதாரண மனிதரல்ல. லாப நஷ்டங்களை பொருட்படுத்தாமல் தன் இச்சைப்படி நடப்பார். எப்பேர்ப்பட்ட எதிரிகளையும் மடக்கி விடுவார். தீவிரவாதி, அதிகபோக எண்ணங்களைக் கொண்டவர்.

பெயரெண் நான்கு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்

பெயரெண்-4

வீண் பயம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர். எல்லாம் தெரிந்திருந்தும் பிறர் சொல்படியே நடப்பவர், சுதந்திரமாகத் தொழில் செய்யமாட்டார். அற்ப காரியங்களுக்கெல்லாம் அச்சப்படுவது இவர்களின் அம்சமாக இருக்கும். குறுகிய காலத்தில் செல்வச் சிறப்படைய முடியாது.

பெயரெண்- 13

பயப்படாதவர், எதிர்பாரத சம்பவங்கள் அடிக்கடி நிகழும், ஸ்திரீகளால் கவலையும், கஷ்டமும் ஏற்படும். சதா கவலையும், சஞ்சலமும் கொண்டவர். பொதுவாகத் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய எண்.

பெயரெண் -22

உணர்ச்சிவசப்படக்கூடியவர்,விளையாட்டு, குடி, போகம் இவைகளில் தீவிர நாட்டம், சூதாட்டத்தில் ஈடுபாடுடையவர், பொருளை இழக்கக் கூடிய தொழிலைச் செய்வர். கெட்ட நண்பர்களைக் கொண்டவர், எந்தக் கஷ்டம் சமாளித்துக் கொள்வர்.

பெயரெண்- 31

சுதந்திரமாக இருக்கக்கூடியவர், மனத்திற்குப்பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடமாட்டார். மனோவசியம், ஜோதிடம் வேதாந்த சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டு. எதையும் லட்சியம் செய்யமாட்டார். வெற்றியடைந்தாலும் மகிழ்ச்சியடையமாட்டார். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். சந்தர்ப்பங்களைச் சரியாக உணர்ந்து செயல்படக்கூடியவர்.

பெயரெண்- 44

நண்பர்களால்பெரிய அந்தஸ்தும், உத்தியோகமும் பெறுவர், புகழ், பட்டம் உண்டு, ஆபரணச் சேர்க்கை, சொத்துக்கள் ஏற்படும். ஆனால் இவரின் தீய குணம் அனைவரும் அறிவார்கள். சமூகம் என்னைப்புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவர். வாழ்க்கையில் கிடைத்த ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்.

பெயரெண்- 49

செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும். பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்பவர். புயல்போல் புகழ், வித்தியாசமான அனுபவம் உண்டு. பிரயாணம் அதிகம், திடீரென அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. சிறிய, சிறிய விபத்துக்கள் ஏற்படும். கற்பனையைத் தூண்டிவிடும் எண்.

பெயரெண்- 58

வசீகரத்தைத் தரும். காரிய சித்தி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றமுண்டு. ஆச்சார சீலராவார். மனதில் ஏதாவது பயம் இருக்கும். பிரபல்ய யோகம் குறைவு. சுயநலமிக்க வாழ்க்கையைத் தரும்.

பெயரெண்- 67

சிறந்த கலைஞர், சரியான உழைப்பாளி, மேல் நிலையில் உள்ளவர். ஆதரவு கிட்டும். கற்பனைவாதி, அன்பும், தூய்மையும் கொண்டவர். வசீகரத்தைக் தரக்கூடிய எண், ஏதாவது ஒரு சாஸ்திர ரீதியாக கலையில் நல்ல புகழும் செல்வமும் பெறக்கூடும்.

பெயரெண்- 76

திடீரென எல்லாப் பொருளையும் இழக்க நேரும். பொதுக்காரியங்களில் வெற்றி ஏற்படும். அதிசயப்படும்படியாக புது முறையில் செல்வம் சேரும். அருளைப் பொருளாக்குவர். பின்வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் உண்டு உறங்கி வாழ்வைக் கழிப்பர். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண்ணல்ல.

பெயரெண்- 85

கஷ்டப்பட்டு முன்னேற்றமடைவர், பிறர் சங்கடங்களை நீக்குவர். மத ஈடுபாடு, வைத்தியத் தொழிலில் பிரகாசிப்பார். எல்லோராலும் வணங்கப்படும் பதவி ஏற்படும். எந்த்க் காலத்திலும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார். பொதுவாக சிறப்பான எண்ணாகும்.

பெயரெண்- 94

உலகிற்கு அனேக நன்மை செய்வர். சமூக சீர்திருத்தங்களைச் செய்வர். சுக வாழ்க்கையும், புகழும் அடிக்கடி ஏற்படும். நற்செயல்களைச் செய்யக் கூடியவர், அதிர்ஷ்டகரமான எண் ஆகும். இது பெயரெண்ணாக வருமானால் மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.

பெயரெண்- 103

அதிர்ஷ்டமான எண் முதலில் செல்வநிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு முடிவு மங்களகரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் போட்டா போட்டி ஏற்படும். இது வாழ்நாள் முழுவதும் ஏற்படும். ஆனால் அதுவே வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்.

பொதுவாகப் பெயரெண் நான்கு வரும்படி பெயர் வைக்கும்பொழுது 4,13,22,44,76 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட தேதிகள்

1,10,19,28 மற்றும் 4,13,22,31 இந்தத் தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.
8,17,26,மற்றும் 7,16,25 இந்தத் தேதிகள் துரதிர்ஷ்டமானவை.
மற்றவை மத்திமமான பலன் தருபவையாகும்.

தொழில்கள்

தீவிரமான கருத்துக்களை வெளியிடுவதாலும், பிரசங்கம் கட்டுரை வாழ்க்கைக்குத் தேவையான முறையில் கலைகளை உபயோகித்தல், தத்துவ ஆராய்ச்சி, சர்க்கஸ், வைத்தியம், ஜோதிடம், சங்கீதம், நாட்டியம் தொடர்புடைய தொழில்கள், கல்வி, கணிதம், சம்பந்தப்பட்ட துறை, ஓட்டல், சினிமாத்துறை, வாகனத்துறை, வாசக சாலை நடத்துதல், பத்திரிக்கைதொழில், கால்நடை வியாபாரம், மேஜை நாற்காலி, பஸ், லாரி,சைக்கிள் வியாபாரம், புகைப்படத்தொழில், புத்தகம் பிரசுரித்தல், வீடு கட்டுதல், போட்டிப்பந்தயங்கள் நடத்துதல் இவைகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பொதுவாகமேற்கூறப்பட்ட தொழில்களில் கடின உழைப்பிற்குப் பின்னரே பணம் ஈட்ட முடியும், இவர் 1,2,4,6 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்- 5- புதன்

பொதுவான குணநலன்கள்

ஜனவசியத்தைத் தரவல்லது, மந்திர சாஸ்திரம் வியாபாரம், போன்றவற்றை குறிக்கும். இந்த எண்ணில் பிறந்தவர். தான் மட்டுமே அறிவாளி என்று நினைக்க்க் கூடியவர். எந்த விஷயத்தையும் சீக்கிரம் கிரகித்தல் வேகமாகப் பேசுதல், யோசனையும், புத்தியும், மின்னல் போன்ற வேகமுடையவை. குழந்தையைப் போல் எவரிடமும் சுலபமாகப் பழகுபவர். மனதில் தோன்றியதை முழுவதுமாக வெளியிடுவர். தன்னம்பிக்கையோடு பிறரால் முடியாததையும் முடியும் என்பவர். பழமையை வெறுப்பவர். புதுமையை நோக்கி விரைவார். நாகரீகமான மனிதர். மேன்மையானவர்களால் போற்றப்படுபவர். பொய் பேச அஞ்சாதவர், அதிர்ஷ்டசாலி, நல்ல நண்பர்களைப் பெற்றவர். சதா மாறுதல்களை விரும்புபவர். தனிமை விரும்பி எப்போதும் உற்சாகமாகக் காணக்கூடியவர். இவர்களைப்புகழ்ந்தால் உண்மையென எண்ணிவிடுவர். மனோதிடம் உடையவர். மனம் எண்ணுவதை அப்படியே செய்வார். பிரயாணங்களில் ஆரவம், வருமானத்திற்காக கஷ்டப்படமாட்டார். செலவாளி, எந்த்த் தொழில் செய்தாலும் செல்வந்தர். பொதுவாக வசீகரத்தையும் திடீர் தனலாபத்தையும் உடைய எண், சபல சித்தம் உடையவர். கண்டதும் நேசிப்பார், திருமண விஷயத்தில் அவசரப்படக்கூடியவர்.

நிறமும்- இரத்தினமும்

சாம்பல் வர்ணமும், பச்சை வர்ணமும், சிறப்புடையதாகும், வெள்ளை, ஜர்க்கான், மரகதப்பச்சை அதிர்ஷ்ட இரத்தினமாகும்.


ஐந்து வரும் தேதியில் பிறந்தவர் பலன்

5,14,23 தேதிகளில் பிறந்தோர்கள் இந்த எண் ஆதிபத்தியத்திற்கு உட்படுகிறார்கள.

5-ம் தேதி

இத்தேதியில் பிறந்திருப்போர் சிறுவயதிலேயே பெரிய லட்சியங்களால் கவரப்படுவர், வசீகர குணம், பிறரை மதித்தல், எல்லா மேலான குணங்களும் நிரம்பியராவார். பிறருக்குப் போதிப்பவராக, தெய்வீகமான வாழ்க்கை வாழ்வார்.

14-ம் தேதி

பிரயாணத்தில் ஆர்வம் உண்டு. பொருட்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம், வியாபாரம் லாபம், பணப்புழக்கம் அதிகம், எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜனக் கூட்டம் இருக்கும். உதவிக்கு நண்பாகள் அதிகமிருப்பர். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண் ஆகும்.

23-ம் தேதி

சாதிக்க முடியாதது இல்லை என்று எண்ணுபவர். மித மிஞ்சிய ராஜ வசீகரம், ஜன வசியம் இருக்கும். இவர்களைவிட மேலானவர்களிடம் புகழ் பெறுவர். உலகை ஒரு குடையில் ஆளலாம் என்று எண்ணக் கூடியவர். சரித்திரம் போற்றும் எண்ணங்களை எண்ணக் கூடியவர்.

பெயரெண் ஐந்து வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்- 5

சுக வாழ்க்கை, புகழ், உயர்ந்த அந்தஸ்து, மிகக் கம்பீரமான வாழ்க்கை, விடாமுயற்சி, மன உறுதி கொண்டவர். ஊர்ப் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள். நகராட்சி, ஊராட்சி மாநகராட்சி போன்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்.

பெயரெண்- 14

இப்பெயர் வியாபாரத்திற்கு ஏற்றது. பிறரால் சூழப்படுவர். ஜனக்கூட்டம், பலவித சாமான்கள் சூழ்ந்திருக்கும் எல்லாவித வியாபாரமும் பலிதமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். தினசரி பல மனிதர்களைச் சந்திப்பார். காதல், திருமணம் போன்றவற்றில் அவசரப்படுவர். இல்லையேல் ஏமாற்றமடையவர்.

பெயரெண்- 23

அதிர்ஷ்டகரமான எண், எடுத்த காரியமெல்லாம் ஜெயம் இவர்கள் போடுகின்ற திட்டம் எல்லாம் வெற்றியடைவர். பிறர் செய்யக்கூடாத காரியங்களைச் செய்து சாதிப்பார். மித மிஞ்சின அதிர்ஷ்டசாலி, மனிதர்கள் ஆதரவும், ஆட்சியிலிருப்பவர் ஆதரவும் உண்டு. இது இராஜ வசியம் கொண்ட எண்.

பெயரெண்- 32

விதவிதமான மனிதர்கள் தன்னிடம் இருத்தல், பொதுஜன ஆதரவு, புதுப்புதுக் கருத்துக்களைத் தன்னை அறியாமல் வெளிப்படுத்துவர். பிறர் யோசனைப்படி நடக்கமாட்டார். சமயோசிதபுத்தி வேடிக்கையாகப் பேசும் திறன், மேதாவியாவார். முதுமையிலும் இளமையாக இருப்பர்.

பெயரெண்- 41

பிறரை அடக்கியாளும் எண்ணம், வெற்றிவீர்ர், இலட்சியவாதி, முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம், சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைவர். எத்துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியைப்போல் செயல்படுவார்கள். துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகம், காணப்படும் ஸ்திரிமான சுகவாழ்வு வாழ்வார்கள்.

பெயரெண்- 50

மித மிஞ்சின புத்திசாலி, கல்வி, தேர்வில் புலமை பிரசித்திபெற்ற ஆசிரியர், 50 வயதிற்கு மேல் திடீர் தனலாபம் ஆயுள் அதிகமாகும். சிலர் மதபோதகர்களையும் செயல்படுவார்கள். அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனபோக்கு ஆகிய குணங்கள் காணப்படும்.

பெயரெண்- 59

ஆராய்ச்சியுடையவர், நகைச்சுவை உணர்வோடு கூடிய எழுத்தாளர், பத்திரிகையாளர், பொதுஜன ஆதரவு, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாயிருப்பர். நல்ல பழக்க வழக்கங்கள் குறைவு, கதை, கட்டுரை எழுதுதல், கவிதை இயற்றுதல், நடிப்பு போன்ற கலைத்துறையில் நாட்டம் ஏற்படும்.

பெயரெண்- 68

அதிர்ஷ்டமான எண்ணல்ல. திடீரென தனலாபம் குறைவு ஏற்படும். பெரிய காரியங்களில் இறங்கித் துன்பப்படுவர். பேராசையே இவர்களது வாழ்க்கையைக்கெடுக்கும். நடுத்தரமான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத்தும்.

பெயரெண்- 77

சுய முயற்சி, தன்னம்பிக்கை ஜனவசிய லாபம், பெரும் புகழ் உண்டாகும். தெய்வ பக்தி ஏற்படும். அயல்நாட்டுப் பிரயாணங்கள் ஏற்படும். செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்று கூற முடியாவிட்டாலும் பொருளாதாரக் கஷ்டம் இல்லாமல் தேவைக்கேற்ப சம்பாதித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.

பெயரெண்- 86

சிரமப்பட்டு படிப்படியாக முன்னேற்றம். செல்வந்தர் பொருள் கொடுத்து உதவுவர். மிகவும் சாமானிய சூழ்நிலையிலிருந்து ஏராளமான இடையூறுகளைம் தொல்லைகளையும் சகித்து, சமாளித்து இவர்கள் நிலையாக முன்னேறுவார்கள்.

பெயரெண்- 95

கட்டுப்பாடான வாழ்க்கை, வீரதீரச் செயலினால் புகழ், நூதனமான சாமான்களை வியாபாரம் செய்தால் பொருள் சேரும் தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிகவும் சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.

பெயரெண்- 104

விசேஷமாகத் தொடங்கிய வாழ்க்கை போகப்போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும், பொருளாதார முன்னேற்றமில்லை. தங்களின் அறிவாற்றல் சாதனைகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். இவர்களது வாழ்வில் புகழ் பெருகும் அளவிற்குப் பொருளாதாரம் பெருகாது.

பொதுவாக ஐந்து வரும்படி பெயர் வைக்கும்பொழுது 68,86 ஆகிய எண்களில் பெயர் பொதுவாக துரதிர்ஷ்டமான தேதிகள் என்று இல்லை.

தொழில்கள்

எது செய்தாலும் பொதுஜன ஆதரவு உண்டு. வியாபாரமே இவர்களுக்குச் சிறந்தது. ஏஜெண்ட் தொழில். கமிஷன் ஏஜெண்ட் மற்றவருக்கு வியாபாரத்தில் உதவுதல், I.F.S. உத்தியோகம் கணக்கு வாத்தியார், C.Aதொழில், பைனான்ஸ்,கதை கட்டுரை எழுதுதல் கவிதை இயற்றுதல், நடிப்பு, கலைத்துறையில் ஈடுபடுதல், ஜோதிடர் போன்ற தொழில்களில் ஈடுபடலாம்.
பொதுவாக 1,4,5,9 எண்காரர்களைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா எண்காரர்களும் உதவுவர்.

எண்-6- சுக்கிரன்

பொதுவான குணநலன்கள்

தைரியசாலி, காந்தசக்தி நிறைந்த கண்கள், கவிதை, சங்கீதம் நடனம் இவைகளில் ஈடுபாடு, சந்தோஷமாக வாழ்வதே இவரது லட்சியம், போகங்கள் இவரது மனதை, இழுக்கும், ஆன்மீக நாட்டம் கொண்டவர். யோசித்து முடிவுக்கு வராமல் எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார். முயற்சியில் அசுரத்தன்மை வசீகரத் தோற்றம், காரியத்திலேயே கண்ணாயிருப்பர். மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர், காவியம், ஓவியம், கலைகள் இவற்றில் ஈடுபாடு, ஏவல் ஆட்கள் இல்லாத வேலை இவருக்கு ஒவ்வாது. அணிக்கலன்களை விரும்புவர். எப்பொழுதும் சிரித்த முகமுடையவர். தாராள மனப்பான்மை புகழுக்கு ஆசைப்பட்டு செலவு செய்வார். கலை ஆர்வம் உடையவர். பிரியமுடையவரிடம் மட்டும் பிரியம் காண்பிப்பார். இவருக்கு உணவு, உடை உறக்கம் குறைவிருக்காது. படிப்பதில் அதிக ஆர்வம் இருக்காது. ஜீவசக்தி மிஞ்சியர். சமாதானத்தை விரும்புவார். பெண்களால் அதிக லாபம் கொண்டவர். விருந்து, கேளிக்கை, சினிமா, இவற்றில் நாட்டம் ஏற்படும்.

நிறமும்- இரத்தினமும்

வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறம் சிறந்ததாகும். வைரம் இவர்களின் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.
ஆறு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணின் ஆதிக்கம்.

6- ம் தேதி

மிக்க கண்ணியமும், ஊக்கமும், உடையவராகவும், அடக்க சுபாவமும், ஆழ்ந்த கருத்துக்களுமுண்டு, கலைகளில் சுலபாகத் தேர்ச்சி பெறுவர். பொருள் சேர்ப்பதில் ஆர்வம் ஸ்திரீத் தன்மை ஓரளவு காணப்படும். யாரால் என்ன நன்மை விளையும் என்பதை உணர்ந்து அவர்களைச் சரிக்கட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள்.

15-ம் தேதி

மிக வசீகரமான தோற்றமுடையவர், ஆதாயம் வந்துகொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சாற்றல் கொண்டவர். கலைகளில் தேர்ச்சி, நகைச்சுவையுடன் பேசுதலில் சாமர்த்தியம், எவரையும், பார்த்தவுடன் புரியும் தன்மை உண்டு.

24-ம் தேதி

அடக்கமான தன்மை நிரம்பியவர். அதிர்ஷ்டகரமான விவாகமும், பதவியும் தேடிவரும், மேல் அதிகாரிகளால் பெரிதும் விரும்பப்படுவர். கருணையுள்ளம் படைத்த யாராவது ஒருவரின் உதவியால் கல்வியைப் பெறுவார்கள். அமைதியான இயல்புக்குரியவர்களாக இருப்பார்கள்.

பெயரெண் ஆறு வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்- 6

சாந்தமான வாழ்க்கை, திருப்திகரமான மனம், வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நிலை, பொதுவாக அதிகலாபம் இல்லாத எண்,காமமும், குரோதமும், வஞ்சகத்தன்மைகளாலும் மன அமைதி கெட நேரிடும். சுயநலவாதி, வாக்கு சாதுர்யம் உண்டு. போகம் மிகுந்த வாழ்க்கை, புகழ் அடையும் எண்.

பெயரெண்-24

அரசாங்கத்தால் ஆதரவு, அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைதுணை அமையும். போலீஸ் ராணுவம், போன்ற அதிகாரத் திறமை, தொழில் மேன்மை உண்டு. மிகவும் பகட்டான வாழ்வு வாழ்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பொதுவாக ராஜவாழ்க்கை வாழ்வது இவ்வெண்ணின் சுபாவமாகும்.

பெயரெண்- 33

அருளும், பொருளும் ஒருங்கே வளரும், லட்சுமி கடாட்சத்திற்கு ஆளானவர். தான்ய விருத்தி, குறைவற்ற செல்வம், ஐஸ்வர்யம் குன்றாது. ஆலயத் திருப்பணி, புண்ணிய காரியங்கள் செய்தல் மற்றும் திருப்திகரமான வாழ்க்கையைப் பெற்று இன்பமயமாக வாழ்வார்கள்.

பெயரெண்- 42

ஏழையானால் பெரிய அதிகாரப் பதவியை அடைவர். சிக்கனத்தில் புத்தி செல்லும். சுக வாழ்க்கைக்குப் பணம் செலவு செய்வர். மனோதிடம் உண்டு. இருந்த போதிலும் பேராசை மனப்பான் படைத்தவர்கள், ஏதேதோ செய்து சிறுகச்சிறுகப் பொருள் சேர்ப்பது இவர்கள் இயல்பாக இருக்கும்.

பெயரெண்- 51

6- ம் எண்களில் இதுவே அதிர்ஷ்டகரமான எண், திடீர் முன்னேற்றம். நேற்றுவரை சாமானியராக இருந்தவர். இன்று பிரபல்யமாவார். எதிர்பாரத வகையில் பெரிய பொறுப்புகள் வரும். சோர்வையே அறியாத உழைப்பு உண்டாகும். உடலும், மனமும் நிலைகொள்ளாது. மிதமிஞ்சின சரீர வலிமை கொண்டவர்.

பெயரெண்- 60

அமைதியும், செல்வமும், ஆழ்ந்த அறிவும், சாந்த குணத்தையும் தரக்கூடியது. வாக்கு வன்மை, வாதத்திறமை நிறைந்திருக்கும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் சிக்கலற்றவர்களாகவும், கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள்.

பெயரெண்- 69

எந்தத் தொழில் செய்தாலும் முடிசூடா மன்னராகத் திகழ்வார். தம் முயற்சியால் அனைத்தையும் வெல்வர். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ராஜ குணங்கள் உடம்போடு ஒட்டிக்கொள்ளும். மிகமிகச் சௌகரியமான வாழ்க்கை நடத்துவார்.

பெயரெண்- 78

சமயப் பற்றும், ஆச்சார நம்பிக்கையும் இருக்கும். கவிஞர், பேச்சுத்திறன், தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும், சமூகசேவை செய்வதிலும் நாட்டமிருக்கும். மந்திர சித்தி உண்டு. எல்லோராலும் மதிக்கப்படுபவராவார்.

பெயரெண்- 87

ரகசியமான சக்தி, தீய வழிகளில் பணம் சேரும். நடுநிசியில் திருடுதல், சர்ப்பங்களையும் மற்ற மிருகங்களையும் வசப்படுத்துதல், வாழ்க்கையில் கத்தி முனையில் நடப்பது போன்றவை அமையும். நல்ல துணிச்சலும் விடா முயற்சியும், சலியாது உழைக்கும் பண்பும் இயல்பாக இருந்தாலும் நல்வழியில் செயல்படமாட்டார்.

பெயரெண்- 96

கல்வியில் வல்லவர், நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கலைகளில் சுலபமான தேர்ச்சி, ஸ்திரீ வசியம், அதிர்ஷ்டகரமான எண், பொதுவாகச் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள், கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

பெயரெண்- 105

அதிர்ஷ்ட வாழ்க்கை,திருப்தியான சூழ்நிலையையும், பெரும் புகழையும் தரும், நல்ல சந்ததி உண்டு. நுண்ணிய நினைவாற்றலும், நுணுக்கமான சிந்தனை வளமும் இருக்கும். கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் இவர்கள் பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்வார்கள்.

பொதுவாகப் பெயரெண் 6 வரும்படி பெயர்வைக்க 42,87 ஆகிய எண்களில் பெயர் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம்

6,15,24-9,18,27 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.
3,12,21,30 ஆகிய தேதிகள் துரதிஷ்டமானவை. மற்ற தேதிகள் மத்திமமான பலன்களைத் தரும்.

தொழில்கள்

விலையுயர்ந்த பட்டு, துணிமணிகள், ரத்தினங்கள், நவநாகரீகமான விலையுயர்ந்த பொருட்கள் தயாரித்தல், விற்றல், மாளிகைகள், கட்டுதல், உல்லாசப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தல் விற்றல், கண்ணாடி வாசனாதி திரவியங்கள், சந்தனம், அணிகலன்கள், நூல், தெய்வீகம் தொடர்புடைய நூல்கள் எழுதுதல், ஆன்மீக உபந்யாசம் செய்தல், பேச்சாளர் ஆகிய துறைகளின் மூலம் பொருள் சம்பாதிக்கலாம்.

6- எண் காரர்கள் 6,9 எண்காரர்களைத் தொழில் கூட்டாளிகளாகச் சேர்க்கலாம்.

எண்-7-கேது

பொதுவான குணநலன்கள்

7ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்திருப்போர் கண்ணியமானவர். சுத்தமான ஆடை எப்பொழுதும் அணிபவர். அலங்காரப்பிரியர் அல்லர். உயரமான தோற்றம் உண்டு. கலகலப்பாகப் பழகமாட்டார். வார்த்தையை நிதானித்துப் பேசுவர். உண்மையான சிநேகிதர் அமைவது அரிது. சட்டென்று ஆத்திரம் அடைவர். இவருடைய லாப, நஷ்டங்களைப் பிறரிடம்சொல்லி ஆற்றிக் கொள்ள மாட்டார். கலைகளில் விருப்பம். எழுத்தாளர், உண்மையான தேசப்பற்றுக் கொண்டவர். எதிர்ப்பே இவருக்கு உற்சாகமூட்டும். மனதுக்கு இசைந்த களத்திரம் வாய்ப்பதில்லை. திருமண வாழ்வில் அவ்வளவாகப் பற்றில்லாதவர். நல்ல உழைப்பாளி இவர் செய்யும் தொழிலை முழுவதுமாக நேசிப்பர். சூழ்நிலை சரியாக இருந்தால் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிப்பர். சரீர பலத்தைவிட மனபலம் அதிகம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.

நிறமும்- இரத்தினமும்

வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் போன்ற நிறம் அதிர்ஷ்டகரமானது. கோமேதகம் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.
ஏழு வரும் தேதியில் பிறப்பவர் பலன்கள்
7,16,25 ஆகிய தேதிகளில் பிறப்போர் இவ்வெண்ணின் ஆதிக்கம் உடையவர்.

7- ம் தேதி

அமைதியான மனப்பான்மை சுலபமாகப் பிறருக்கு விட்டுக்கொடுத்து அடங்கியிருப்பார். புத்திசாலி, தெய்வ வழிபாடு உண்டு. குழந்தை போன்ற சுபாவம், காதலிலும் கலை ஆர்வத்திலும் பிடிவாதம்.

16-ம் தேதி

மனோசக்தி உடையவர், குழந்தைப் பருவத்திலேயே பல திறமைகளையும் பொதுமக்கள் திடுக்கிடும்படி அலாதியான திறமைகளையும் பெற்றிருப்பர். துணிச்சலும், அறிவாற்றலும். இவர்களிடம் அமைந்திருக்கும்.

25- ம் தேதி

மதப்பிடிவாதம், வணங்கத்தக்க மனிதராவார். அதிகாரப் பதவி உண்டு. மகரிஷிகளாக இருப்பார்கள். பொதுநல சேவை செய்வோர். தியாகிகள், நீதிபதிகள், எம்.எல்.ஏ., எம்.பி போன்ற பொறுப்புகளை வகிப்பவர்.

பெயரெண் 7 வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்- 7

உயர்ந்த லட்சியம், மேன்மையான சுபாவம், எதிர்பாராத மாறுதல், ஆன்மீக எண்ணங்கள் உண்டு. உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பெயரெண்- 16

வேகமாக முன்னேறித் திடீரென தலைகீழே விழுவதைக் குறிக்கும். அவ்வளவாக சிறப்பான எண் இல்லை. புரட்சிக்காரர்களாகவும் அமைய இடமுண்டு. சமூகத்தில் பிரச்சனைக்குரியவர்களாக இருப்பார்கள்.

பெயரெண்- 25

பலவித சோதனைகளுக்கு உட்படுவார். வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். ஆன்ம வளர்ச்சி, ஜன ஆதரவு, உலக அறிவு, ஒழுக்கம் ஆகியவை நன்கு உண்டு. இவர்கள் வாழ்க்கையில் சோதனைக்குரிய புகழை அடைவர்.

பெயரெண்- 34

மேன்மையான சுபாவம், மத்திமமான அதிர்ஷ்டத்தை அளிக்கும். மது மாதரிடம் மனதைப் பறிகொடுக்க நேரும். அச்சம் தரக்கூடிய எண். குடும்ப வாழ்க்கையில் சில சலசலப்புக்கள் தோன்றும். எளிய முயற்சிகள் மூலம் ஏராளமாகப் பணம் சம்பாதிப்பார்கள்.

பெயரெண்- 43

இவர்கள் வாழ்க்கையே புரட்சியாகத் தோன்றும். அதிக விரோதிகளை உண்டாக்கும். வேலையை ராஜினாமா செய்வதையே தொழிலாகக் கொண்டவர். தீவிரமான அபிப்ராயம் கொண்டவர். சிரமப்பட்டாவது எண்ணங்களைச் சாதிப்பார். லட்சியங்களில் வெற்றியும் உண்டு. முடிவில் வெற்றி.

பெயரெண் -52

உலகப் பிரசித்தி ஏற்படும். எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் முடிவு கூறுபவர். ஆன்மீக வாழ்க்கை உடையவர். இவர்களின் சொந்த வாழ்க்கை சிரமத்திற்குள்ளாகும். பலவித சோதனைகளுக்கு உட்படுவர். மத்திம வயதுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவு பலன் நடக்கும்.

பெயரெண்- 61

சுகமாக அமைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு தன் இஷ்டப்படி புதுமுயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடையவர். சரீர சுகம் நிறைவிருக்காது. வெளிப்பார்வைக்கு விசேஷமாகத் தோன்றினாலும் சிறப்பான எண் இல்லை. வாழ்க்கையின் பிற்பாதியில் பணமும், பொருளும் சேரும்.

பெயரெண் -70

தீவிரவாதி, தோல்விகளும், ஏமாற்றங்களும் உண்டு. வாழ்க்கையின் பிற்பாதியில் சுப பலன் நடக்கும். வாழ்நாள் முழுவதும் மாறிமாறி வெற்றி தோல்வியைச் சந்திப்பவர். பெருமளவு பணம் சேருவதற்கு வழியில்லை.

பெயரெண்- 79

தன் திறமையினால் வேகமாக முன்னேறுவர். ஜனவசியர், வெற்றிகளைப் பெறக்கூடியவர், நல்ல மனிதராவார், இருந்தபோதிலும் சிறப்பான நிலையை அடைவது கடினமாகும்.

பெயரெண்- 88

மனதில் தயை, கருணை மேன்மையாக இருக்கும்.ஆன்மீக வாதி, மிகுந்த கீர்த்தி உண்டு. உயர்ந்த கல்விமான்களாக, சிறந்த விஞ்ஞானிகளாகத் திகழ இவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். வாழ்வில் சீரான பொருளாதார நிலை நிலவும்.

பெயரெண்- 97

சாஸ்திரங்கள், கலைஞானங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி, விசேஷமான ஆன்மீக உணர்வு உண்டு. லஷ்மிகரமும், பிரமிக்கத்தக்க செய்கைகளும் அமையும். சிறந்த கல்வியறிவு பெற்றிருப்பார்கள். பொருளாதார முன்னேற்றமுண்டு.

பெயரெண்- 106

வாழ்க்கையில் விசேஷ மாறுதல் உண்டு. நடு வயதில் சிக்கல்களும் உண்டு. அவ்வளவாக அதிர்ஷ்டகரமான எண் இல்லை. பலவிதமான நோய்களால் துன்புற நேரிடும். இவர்களுக்கு ஏற்படும் நோய்களை மனித முயற்சியால் அகற்றிட இயலாது.
பொதுவாக 7 ம் எண்ணில் பெயர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டமான காலம்

2,11,20,29-7,16,25 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.

மற்றவை மத்திமமான பலனைத்தரும்.

தொழில்

மதத்தைப் பரப்பும் தொழில், இரசாயண ஆராய்ச்சி எழுத்து. அயல்நாட்டுடன் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம், எலக்ட்ரிக் சாமான்கள், சினிமாத் தொழில், போட்டோ தொழில், கடிகாரம், தயார் செய்தல், விற்றல், சித்திரம், சிற்பம், சங்கீதம், நாட்டியம் இவைகளின் மூலமாகவோ இவைகளுக்குத் தேவையான பொருட்கள் மூலமாகவோ வருமானம் ஈட்டலாம். மேலும் மருந்து வியாபாரம் அல்லது அரசியலில் இவர்கள் 2,5,7 எண்காரர்களை தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களின் அபாயக் காலங்களில் 1,2,4,7 எண்காரர்களை உதவிக்கரம் நீட்டுவார்கள்.

எண் -8- சனி


பொதுவான குணநலன்கள்

அளவுக்கு மிஞ்சின மனோசக்திகளும், தெளிந்த அறிவும், சதா யோசனையிலும் ஆழ்ந்திருப்பார். மனதில் உற்சாகம் இருக்காது. எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பர். சுகங்களை அனுபவிக்க மாட்டார். தன்னம்பிக்கை குறைவு. கஷ்டங்களை விரும்பக் கூடியவர். பிறரை எளிதில் நம்பமாட்டார். தனிமையை விரும்புவார். எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பர். கஞ்சத்தனம் உண்டு. தம்மை உலகிலேயே ஒரு தனி மனிதராகவே கருதுவர். மிகச்சில நண்பர்களையே பெற்றிருப்பர். நண்பர்களால் ஆதாயமில்லை. வாழ்வதற்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணுவர். சிறு வயதிலேயே வியாதி உண்டு. இவர் வாழ்க்கையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 8,17,26,35,44,53,62 ஆகிய வயதுகளில் சரும வியாதியால் அவதியுறுவர். அடிக்கடி விபத்துக்குள்ளாவார். பிறர்புரியும் குற்றத்திற்குக்கூட இவர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடியவர். மிக்க நல்லவராகவும், மேதாவியாகவும் இருந்தாலும், இவருக்கு அருகிலிருப்போர் இவரைப் புரிந்துகொள்வதில்லை. பிறர் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார். எதிர்பாராமல் பழகுவார். பொதுவாக மிதமான மஞ்சள் நிறத்துடைய சரீரத்தைப் பெற்றிருப்பர். கை நகங்கள் சிவந்திருக்கும்.

நிறமும்-இரத்தினமும்

கருநீல வர்ணமும், அடர்ந்த பச்சை ஆகிய வர்ணங்கள் அதிர்ஷ்டகராமானது. நீலக்கல்லும், இந்திர நீலமும் அதிர்ஷ்ட இரத்தினங்கள் ஆகும்.

எட்டு வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்

இவ்வெண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டகரமாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருள் வேண்டும்.
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்.

8- ம் தேதி

அமைதியான வாழ்க்கையை விரும்பவர். பலகாரியங்களைச் சாதிக்க முயற்சி செய்வார்கள். வேதாந்தம் இவர் மனதைப் பிடித்து இழுக்கும். பல அரிய காரியங்களைச் சாதிக்கப் பலர் துணையைத் தேடுபவராவார். பொதுநலச் சேவை செய்வதில் விருப்பம் இருக்கும். உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஆழ்ந்த அக்கறை இருக்காது.

17- ம் தேதி

செல்வந்தராவதற்குக் கடின முயற்சி செய்வர். சரீர சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மோசமான வழியில் பணம் சேர்ப்பர். செலவாளி, எந்தக கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார். வாழ்க்கையின் பிற்பாதி யோகம், சிக்கனமாக வாழத் தெரியாது. தம்மால் இயன்றளவு பிறருக்கு உதவ முயற்சி செய்வார்கள்.

26- ம் தேதி

துரதிஷ்டசாலி, இளம் வயதிலேயே பெற்றோர்களை இழப்பர். சிறு வயதிலேயே கஷ்டங்களும். முன்னேற்றத் தடையும் ஏற்படும். முன்னேற்ற எண் இல்லை. சிறப்பான கல்வி வசதி அமைவதற்கில்லை.ஆனால் அனுபவத்தில் கல்விமான் போல் இருப்பார்கள்.

பெயரெண் எட்டு வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்-8

ஆன்மீக வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தையடையவர், வெற்றி தாமதமாகக் கிடைக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் உண்டு. அதிர்ஷ்டக் குறைவான பலன்களே ஏற்படும், பல இடையூறுகளைத் தாண்டினாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. வாழ்வின் பிற்பாதி ஓரளவு நன்மை பயக்கும்.

பெயரெண்- 17

அசுரத்தன்மை உண்டாக்கும். பல்வேறு கஷ்டம், சோகம் உண்டு. தோல்வியைக் கண்டு கலங்காதவர், பிற்கூறு வாழ்க்கையில் புகழ் கிடைக்கும். உடல் வலிமையும் மன உறுதியும், படைத்தவர், போர்ப்படை, போலீஸ் போன்ற துறைகளில் இருப்பவர்.

பெயரெண் – 26

வயோதிகத்தில் வறுமையும், நோயும் உண்டு. நண்பர்களால் பெருத்த கஷ்டம், தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். கொலை செய்யக்கூடிய விரோதிகள் உள்ளவர். பணம், பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். ஆனால் இளம் வயதில் சற்று சாதகமான வாழ்க்கை அமையும்.

பெயரெண்- 35

நண்பர்களால் நஷ்டம், எதிர்பாராத விபத்து ஏற்படும். தீய வழியில் பொருளீட்டுவர். தீராத வயிற்றுவலி உண்டாகும். அநாவசிய ஆடம்பரச் செலவு செய்பவர்கள். வாழ்வும், தாழ்வும், இவர்களுக்கு மாறிமாறி ஏற்படும். இவர்கள் ஒரு சமமான வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ முடியாது.

பெயரெண்-44

சுலபமாக பணம் சம்பாதிக்க உதவுபுரியும். அரசாங்க விரோதமும், சிறைவாசமும் நிச்சய ஏற்படும். சிறைக்கு வெளியே சுக வாழ்க்கை உண்டு. சிறைப்படாவிடில் உடலில் நோய் ஏற்படும். தொழில் முயற்சிகளின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அல்லது வியாபாரத்தின் மூலம் செல்வம் சேரும். அதிகச் செலவாளி.

பெயரெண்- 53

ஆரம்பத்திலேயே வெற்றி, தோல்வி உண்டு. பிரபலமான வாழ்க்கை, நன்மையான காரியங்களைச் செய்து புகழடையவர். விருந்து உண்பதில் பிரியப்படுவர், நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும். அவசரமும், ஆத்திரமும் இவர்களின் விரோதியாகும்.

பெயரெண்- 62

புகழும் வெற்றியும் சுக வாழ்க்கை தரும். வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுகமிராது. ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து புகழ் பெறுவார்கள். இவர்களுக்குப் புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது.

பெயரெண்- 71

வாழ்க்கையில் பிற்பாதி வெற்றியும், செல்வமும் தரும். பலருக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவார். இயந்திரங்களின் மூலமாகவோ, வெளிநாட்டுத் தொடர்பு மூலமாகவோ சிறப்படைய முடியும். குடும்ப வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும்.

பெயரெண்- 80

தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். வாழ்க்கையே ஆபத்துக்களால் சூழப்பட்டு பயம் நிறைந்தது போல் எண்ணி வாழ்க்கை நடத்துவர். பரபரப்பூட்டும் சாகஸங்கள் செய்து புகழ் பெறுவர். விளையாட்டுத் துறையில் இருக்க வாய்ப்புண்டு. துணிச்சல் அதிகமாக காணப்படும்.

பெயரெண்- 89

ஆரம்பத்தில் சிரமங்கொடுக்கும். சொத்துக்கள் ஆபரணங்கள் உண்டு. பெண்கள் இவர்களை விரும்புவர். அழகும், ஐஸ்வர்யமும் உண்டு. பயமற்ற வாழ்க்கை உண்டு. வாழ்க்கையின் ஆரம்பத்தில் நோயினால் சிரமப்படுவர். கல்வியின் மூலம் பெரிய பட்டங்களைப் பெறுவார். மருத்துவத்துறையில் இருப்பவர்கள் ஆவார்.

பெயரெண்- 98

கஷ்டங்களும், தீராத நோயும் உண்டு, சிரமப்பட்டாவது வாழ்க்கையின் பிற்பாதி புகழ்பெறுவர். சிறந்த நூல்களை எழுதுவதன் மூலம் பிரசித்தி பெறுவர். கல்வித் துறையில் சாதனைகள் புரிந்து புகழ் பெறக்கூடும்.

பெயரெண்- 107

பிரசித்தியும், வெற்றியும் தரும். ஸ்திரீகளால் சிக்கல் ஏற்படும். செல்வம் ஏற்பட்டாலும் சுகம் இல்லை. கீர்த்தி உண்டு. செல்வாக்கு ஏற்படும். உலகப் பிரசித்திப் பெறும் அளவிற்கு உயர்த்தக்கூடும். அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவிகளில் இருப்பார்கள்.

பொதுவாக எட்டாம் எண்ணில் பெயர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட காலம் 5,14,23 ஆகிய தேதிகள் நன்மை தரும்.

8,17,26 ஆகிய தேதிகள் துரதிஷ்டமானவை.

தொழில்

உயர்வான விஷயங்களைப் போதிப்பது, பஸ் போக்குவரத்து, லாரிகள், சுரங்கப்பொருட்கள், கம்பளித்துணி, இரும்புச் சாமான்கள், ஆயுதங்கள், சோப்பு, எண்ணெய் தயாரிக்கும் மில், அச்சுக்கூடம், போலிஸ் இராணுவம், அலுவலக உதவியாளர், எடுபிடி, ஏவலாளர் விளையாட்டுத்துறை, நகைப்பட்டறை, இரும்புப் பட்டறை, மீன், இறைச்சி, வியாபாரம், மதுக்கடை நடத்துதல், வாகனங்களைப் பழுது பார்த்தல், தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றின் மூலம் பொருளீட்டலாம்.
பொதுவாக 1,4,5,6 எண்காரர்களைத்தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம், 1,4,8 எண்காரர்கள் உதவுவார்கள்.
எண்-9- செவ்வாய்

பொதுவான குணநலன்கள்

போராடவே பிறந்தவர், இவர் அறிவு மிகுந்தவர். மனப்போராட்டம் உண்டு. சாகசம், வீரச்செயல்கள், சூழ்ச்சி செய்வதில் பிரியம் இருக்கும். உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவர். வாயச்சண்டை உடையவர். ரணங்களும், தழும்புகளும் இவரைக் கவரும். சாந்தி, சமாதானத்தில் ஈடுபாடில்லை. தன் இஷ்டப்படி நடப்பவர். அறிவுடையவர், எதிரிகள் அதிகம் கொண்டவர். இராஜதந்திரி, கோபம் அதிகமிருக்கும். முரட்டுத்தனம் அடக்கி ஆளுதல், வளைந்து கொடுக்காத தன்மை ஏற்படும். சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம், வைப்பர். மனோ தைரியம் மிக்கவர். தனது எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவர். தளராத உறுதி கொண்டவர். இராசயனம், வைத்தியம், முதலிய சாஸ்திரங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். நற்பலன்களை அரிதாகச் செய்யக்கூடியவர். பிறர் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று எண்ணுவர். பணம் சம்பாதிப்பதைவிடச் சண்டை போடுவதிலேயே ஆர்வம் இருக்கும். பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைவர். இவர் தீராத ஸ்திரீ மோகமுடையவர். மிருக சுபாவங்களே மனதில் குடிகொண்டிருக்கும். அபூர்வமான கனவுகள் மூலம் திருவருள் கிட்டும். ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யும் கடவுளை வழிபடுவர். இவர் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளாதது நல்லது. பெருத்த தேகம், பலசாலி, தொடைகள், மார்பு, வயிறு முதலிய பாகங்களில் வலிமை பெற்றிருப்பர் பொதுவாகப் பராக்கிரமசாலிகளாவார். தேகப்பற்று உண்டு.

நிறமும்- இரத்தினமும்

சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் அதிர்ஷ்டகரமானது. பவளம் இவர்களின் அதிர்ஷ்ட இரத்தினமாகும்.
ஒன்பது வரும் தேதியில் பிறந்தவர் பலன்கள்
9,18,27 தேதியில் பிறந்தவர்கள் இந்த எண் ஆதிக்கம உடையவர்கள். .

9- ம் தேதி

செயற்கரிய காரியங்களைச்செய்வர். மோசமான லட்சியங்களுடையவர். எல்லா எதிர்ப்புகளையும் தனது சாமர்த்தியத்தால் வென்று வெற்றியடைவர். இவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளைப் பராக்கிரமத்தால் சமாளித்துத் தங்கு தடையின்றி வாழ்வில் முன்னேறுவார்.

18- ம் தேதி

சுயநலவாதி, அவசரப்பட்டுப் பிறர் விவகாரங்களில் சிக்கிக்கொள்வர். எல்லோருடனும் மனக்கசப்பை உண்டுபண்ணும், கோபம், பிடிவாதமுண்டு, காதலில்கட்டாயம் தோல்வி, இவர்களின் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் ஆவார்கள்.

27-ம் தேதி

நற்காரியங்களில் ஈடுபட்டுக் புகழ்பெறுவர். யோசனை எல்லாம் வெற்றி தரும். இவர்களின் அறிவே வெற்றி தரும். ஆனால் சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்பும் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்வர்.

பெயரெண் ஒன்பது வரும் எண்களின் பலன்கள்

பெயரெண்-9

அறிவையும், ஆற்றலையும் குறிக்கும். நீண்ட பிரயாணத்தில் ஆர்வம், எதிர்ப்புகளைத் தகர்த்து வெற்றியடைவர். ஈடு இணையற்ற ஆற்றலைக் கொண்டு உயர்ந்த பதவிகளை இவர்கள் வகிப்பவர்கள்.

பெயரெண்-18

கஷ்டங்களையும் தாமத்தையும், சூழச்சியையும் ஆபத்தான எதிரிகளையும் உண்டு பண்ணும், சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுவர். சுயநலம், பொறாமை, வஞ்சகம் உண்டு. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெயரெண்- 27

தெளிவான அறிவையும், ஓய்வில்லாத உழைப்பையும் செல்வ விருத்திகயையும் அதிகாரப் பதவிகளையும் குறிக்கும். போலீஸ், இராணுவம் போன்ற துறையில் இருப்பர். அதிர்ஷ்டமான எண், உழைப்பு என்ற சாதனத்தை வைத்தே இவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிலையை எட்டுவார்.

பெயரெண்- 36

சாமானியரையும், பிரசித்தராக்கிவிடும், தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல நேரிடும். பொருளாதார மேம்பாடு உண்டு. விசுவாசமில்லாதவரால் சூழ்ந்திருப்பர். குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும். எதிர்பாராத நிலையில், திடீரென்று வாழ்வில் உயர்வு நிலையைப் பெறுவர்.

பெயரெண்- 45

பெரிய பதவி கிடைக்கும். வாக்கு சாதுர்யம், எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்வர். தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைவர். நோய்கள் அடிக்கடி வரும். மிகுந்த சகிப்புத் தன்மையுடன், சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர்.

பெயரெண்- 54

படிப்படியான வெற்றியும், முன்னேற்றத்தையும் தரும். வாழ்க்கையின் முற்பாதியில் புகழும், செல்வமும் தரும். பேராசை உண்டு. சுதந்திரமில்லா வாழ்க்கை தரும். இவர்கள் வாழ்வில் வெற்றியும், தோல்வியும் கலந்த கலப்படமான சூழ்நிலையே ஏற்படும்.

பெயரெண்- 63

புத்தி நல்ல விஷயங்களில் செல்லாது. திருடர்களாவர். அதிர்ஷ்டகரமான எண் இல்லை. வாழ்க்கையில் செல்வமும், சிறப்பான அந்தஸ்தும் கெட்ட நண்பர்களால் கிட்டும். தீய குணங்களும் தீய நண்பர்களும் அமைவார்கள்.

பெயரெண்- 72

சிறப்பான எண் ஆகும். சிரமப்பட்டுப் பெரிய பதவி அடைவர். புகழ் நிலையான ஐஸ்வர்யம் உண்டு. நிலையான செல்வத்தைச் சிரமப்பட்டு அடைந்து விடுவார். ஓய்வு ஒழிச்சலற் உழைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவார்.

பெயரெண்- 81

எதிர்ப்புகள் அதிகம் காணப்படும் உள் மனப் போராட்டங்களும், குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண்ணாகும். பலவிதக் கஷ்டங்களை அளிக்கவல்லது. எதிரிகளாலும், வழக்குகளாலும் சிரமத்தை கொடுக்கும் எண்ணாகும்.

பெயரெண்- 90

தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளக் கடைசி வரைப் போராடுவர். புகழ் உண்டு. அருள் நாட்டம் உடையவருக்கு இந்த எண் சிறப்பில்லை. இவர்களைச் சுற்றிக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கட்டிடத் தொழிலிலோ, அரசாங்கத் தொழிலிலோ மிகவும் சிறப்பாக முன்னேறுவார்கள்.

பெயரெண்- 99

புத்தி தவறான வழியில் செல்லும், எதிரிகளால் தாக்கப்படுவர். வாழ்க்கைப் போக்கு மாறிய வண்ணம் இருக்கும். நிலையான வாழ்க்கை அமையாது. கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்க வேண்டி இருக்கும்.

பெயரெண்- 108

பெரிய பதவியும், காரிய சித்தியும் எண்ணியபடியே எல்லாம் முடியும். நல்ல முயற்சிகளையும்,அதற்கு ஒத்த பலன்களையும் தருவதால் இது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண் ஆகும். மந்திரி பதவி போன்ற அரசுத் தொடர்புடைய மகிமைமிக்கப் பதவிகளில் அமரக்கூடிய அம்சம் இவர்களுக்கு உண்டு. பொதுவாகப் பெயரெண் ஒன்பது வரும்படி பெயர் வைக்கும்பொழுது 18,54,63,81,99 ஆகிய எண்களில் பெயர் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட காலம் 5,14,23,9,18,6,15,24,30 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டகரமானவை.

2,11,20,29,19 ம் தேதிகளும் துரதிஷ்டமான தேதிகள் ஆகும்.
மற்ற தேதிகள் மத்திமமான பலன் தருபவையாகும்.

தொழில்

கட்டிடங்கள் கட்டுதல், இஞ்சினியரிங் தொழில்கள், இரும்புச் சாமான்கள் உற்பத்தி செய்தல், இயந்திர வியாபாரம், யுத்தம், அதிக சாகசம், விளையாட்டுத்துறை, அரசியல் பதவிகள், பொறியியல், தொடர்பான துறைகள், போலீஸ், இராணுவம், அரசு உத்யோகம், இராசயனம், சுரங்கத்தொழில், வேதியியல் கூடம், இரத்தப் பரிசோதனை நிலையம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஆயுதங்கள் தயாரித்தல், விற்றல், இயந்திரங்களைப் பழுது பார்த்தல், விவசாயம், ரியல் எஸ்டேட்,கமிஷன் ஏஜெண்ட், அச்சுக்கூடம், டிராவல்ஸ், விஞ்ஞானம், பொதுநலச்சேவை அறக்கட்டளை நடத்துதல், கட்டுமானப்பணிகள், ஸ்தபதி, சிற்பங்கள் செய்பவர். வெளிநாட்டு அனுகூலம் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டலாம். இவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும் போட்டி ஏற்பட்டால் தான் இவர்களின் திறமை வெளிப்படும். இந்த எண் காரர்கள் 3,5,6,8,9 எண் காரர்களைத் தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம். 2-ம் எண் தீமையுண்டாக்கும்.

In conclusion, Arithmetic is the foundation of mathematics, dealing with the basic operations of numbers, including addition, subtraction, multiplication, and division, and plays a critical role in various aspects of daily life and advanced mathematical studies.



Share



Was this helpful?