இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


நற்றிணை

Nattrinai is one of the classical Tamil literary works from the Sangam period, known for its poetic and cultural significance. It is part of the "Ettuthokai" anthology, which is a collection of Sangam literature.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் திணை என்னும் பெயரும் சேர்ந்து நற்றிணை என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன.

மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

நற்றிணை - 1. குறிஞ்சி

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை; 5


நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்;

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. - கபிலர்


நற்றிணை - 2. பாலை

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, 5


மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! 10

சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது;

உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார்

நற்றிணை - 3. பாலை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் 5

சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்;

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - இளங்கீரனார்

நற்றிணை - 4. நெய்தல்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை 5

அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் 10
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

தோழீ ! கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்; நீலநிறத்தையுடைய புன்னையின் கொழுவிய நிழலிலே தங்கி; தண்ணிய பெரிய கடற் பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம் பார்த்து; அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்துப் புலர்த்தா நிற்கும் துறையையுடைய நம் தலைவர்பாற் சென்று; நமக்குண்டாகிய பழிச் சொல்லை அன்னை அறிந்தால்; இனி இங்குத் தங்கிந்க் களவொழுக்கத்து வாழ்தல் அரியவாகும் என்று கூறினால்; உப்பு வாணிகர் வெளிய கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற; நெடிய நெறியிற் செலுத்தும் பண்டிகள் மணலின் மடுத்து முழங்கும் ஓசையைக் கேட்டு; வயலிலுள்ள கரிய காலையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும்; கரிய கழி சூழ்ந்த நெய்தனிலத்தின்கணுள்ள தம் உறைவிடமாகிய ஊருக்கு; நம்மை யழைத்துக் கொண்டும் போவரோ?

தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. - அம்மூவனார்

நற்றிணை - 5. குறிஞ்சி

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 5

தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

தோழீ! இன்று பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீட்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய இமைகளையுடைய மழைபோல நீர்வடிக்கின்ற நின்கண்கள்தாம்; அவர் செல்லாதவாறு ஒரு குறிப்பாகிய தூதைத் தோற்றுவித்து விடுத்தன, அங்ஙனம் விடுத்த தூதின் காரணமாக; இனி மிக்க மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்பப் பெற்று நிறையவும், மலைமேலுள்ள மர முதலாயின தழைப்பவும், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்தெழுந்த குளநெல் முதலிய பயிர்கள் நெருங்கி வளரவும்; கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலானே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிரமுற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்; பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது; தென்றிசையின் கண்ணே யெழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக்காலத்தும்; நீ நின் காதலரைப் பிரிந்து உறைதல் அரியதாகும்;

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. - பெருங்குன்றூர்கிழார்

நற்றிணை - 6. குறிஞ்சி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 5

இவர் யார்? என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; அழகு குறைந்த மாமையையும்; குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்;

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 7. பாலை

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் 5

இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

தோழீ ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் !

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது. - நல்வெள்ளியார்

நற்றிணை - 8. குறிஞ்சி

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5

அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! 10

மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யாவர் புதல்வியோ?; அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவளை ஈன்ற தாயும்; அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!;

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.

நற்றிணை - 9. பாலை

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி 5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் 10
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

வெள்ளிய பற்களையுடையோய!ந்; யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; யாம் நெடுங்காலம் நின்னைப்பெற முயன்றதனானாகிய சுழற்சியையுடைய வருத்தமெல்லாந் தீரும்படியாக; நின் அழகிய மெத்தென்ற பருத்த தோள்களை அடைந்தனம் ஆதலினால்; இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய புன்கினது அழகுமிக்க ஒள்ளிய தளிரை; சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம் சிறப்போடிருக்குமாறு அப்பி; நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது ஆண்டுத் தங்கி; மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடி; நெறிவந்த வருத்தத்தைப் போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக;

உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 10. பாலை

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 5

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்ப்படையை உடைய வலிமிகு சோழப் பெருவந்தர்களே, கொங்கரைப் பணியவைக்கப் பழையனின் வேலைத்தான் நம்பியிருந்தனராம். இந்தப் பழையன், போர் எனும் ஊரின் தலைவர். யானைப்படை கொண்டவர். ஊர்க்கிழவர்கள் துணையின்றி நடுவணரசுகள் வாழ்ந்ததில்லை போலும்.

உடன்போக்கும் தோழி கையடுத்தது.

நற்றிணை - 11. நெய்தல்

பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; 5

புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே; சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய் வாடினையாகி; அயலில் எழுதலையுடைய பழிச் சொல்லைக் கருதி; இனித் திண்ணமாக அவர் நம் பால் வருவாரல்லர் என்னும் புலவியை உட்கொள்ளாது; நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக! புணரி பொருத பூ மணல் அடைகரை அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே; தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியிடத்துப் படாதவாறு ஞெண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு, கானலான் நிலவு விரிந்தன்று கானலிடத்து நிலவு விரிந்தது காண்!

காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 12. பாலை

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் 5

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்! என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10

முடை தீர விளம்பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த்தாழியில; கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினையுடைய மத்திட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால்; தறியடியில் ஓசை முழங்குகின்ற; தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில்; தன்மெய் பிறர்க்குத் தோன்றாதபடி மறைத்துத் தன் காலிலணியும் பருக்கைக்கற் போகடப்பட்ட சிலம்பைக் கழற்றி; பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்பவள்; என் தோழிமார் இவற்றைக் காணுந்தோறும் நோவாநிற்பர், அவர் இரங்கத் தக்காரல்லரோ என்று கருதி; நும்மோடு தான் வருதலை மேற்கொண்டொழுகா நிற்பவும்; அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்காமல் அழா நின்றன; ஆதலின் நுமக்கு ஏற்றவாறு செய்ம்மின்;

தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது. - கயமனார்

நற்றிணை - 13. குறிஞ்சி

எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் 5

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

தினைப் புனங்காவலையுடைய மழவர் ஆண்டுத் தின்றழிக்க வந்த பன்றி முதலாய விலங்குகளை யெய்து கொன்று மீட்டும் அவற்றினின்று பறித்தெடுத்த அம்புபோன்ற செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்ணையும், நல்ல பெரிய தோளையும் உடையாய்!; கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்கின்ற; உயர்ந்த மலையினுள்ள கூட்டிலிருக்கும்; மயில்கள் தாம் அறிதலைப் பசிய புறத்தினையுடைய கிளிகள் அறியாவாய்; நெருங்கிய தினைக் கதிர்களைக் கவர்ந்து போகா நின்றன. அதனால் அக்கதிர்களும் அழிந்துபோகின்றன காண்; எழா அய்! அவற்றை ஓட்டவேண்டிய நீ இவ்விடத்திருந்தும் எழுந்தாயல்லை! ஆகலின் எழில் நலந்தொலைய நொதுமலர் தலை அழா. அங்ஙனம் எழாதிருப்பினும் நின் அழகிய நலமெல்லாங் கெடும்படியாக அயலாரிருக்கும் இவ்விடத்து அழாதிருத்தலையேனுஞ் செய்வாயாக!;

இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 14. பாலை

தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது 5

அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும் 10
கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

தோழீ! மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். புல்லி என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை!; அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக!;

இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. - மாமூலனார்

நற்றிணை - 15. நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு,
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே 5

நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! 10

முழங்குகின்ற அலைகொணர்ந்து கொழித்த பெரிய எக்கர் மணலை நுணங்கிய துகிலின் நுடக்கத்தைப் போலாக; மிகுதி படக் காற்றுத் தூற்றாநிற்கும்; நீர்மிக்க வலிய கடற்கரைத் தலைவனே! ; பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் நீ அறிந்தனையல்லையாகலின்; யாம் நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில் வருத்தமுற அதனையேற்று; குற்றமற்ற கற்பினையுடைய மடவாளொருத்தி; தன் குழவியைப் பலிகொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற்போல; முன்னாளின் முதற்கொண்டு எம்முடன் வளர்ந்துவந்த நாணும் விட்டேம். இவ்வூர் அலர்க இனி இவ்வூர் அலர் எழுவதாக;

வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது. - அறிவுடைநம்பி

நற்றிணை - 16. பாலை

புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5

ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; 10
எனைய ஆகுக! வாழிய பொருளே!

என் நெஞ்சமே ! நெடுங்காலம் வாழ்வாயாக!; நீ இப்பொழுது கருதிய பொருளோ யாம் தலைவியைப் புணர்ந்து இல்லத்துத் தங்கிய வழி அடையப் பெறுவதொன்றன்று; இதனைவிட்டுப் பொருள்வயிற் பிரிந்தாலோ இவளைப் புணரும் புணர்ச்சி இனி அடையப்பெறுவதொன்றன்று; ஆதலின் இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள்வயிற் பிரிந்தாயானாலும் பிரியாதிவ்வழி யிருந்தாயானாலும் இவற்றுள் நல்லதொரு காரியத்தைச் செய்தற்குரியை ஆவாய்; ஆயினும் யான் அறிந்த அளவில் பொருள்கள் வாடாத மலரையுடைய பொய்கையிடத்து ஓடுகின்ற மீன் செல்லும் நெறியே போலத் தாமிருந்த விடமும் தெரியாமற் கெடுவனகாண்; யானோவெனில் பெரிய கடல் சூழ்ந்த அகன்ற நிலனே அளக்கு மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் மாட்சிமைப்பட அளக்கத்தக்க பெரிய நிதியைப் பெறுவதாயினும், அந்நிதியை விரும்பேனாகி; இக் கனவிய குழையையுடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் பொருந்தி இனிதாக நோக்கும் நோக்கத்தாற் செகுக்கப்பட்டேனாதலின் நின்னொடு மோதற்கு வாரேன்காண்!; இனி அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அவை போற்றுவார்மாட்டு வாழ்வனவாகுக!

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது. - சிறைக்குடி ஆந்தையார்

நற்றிணை - 17. குறிஞ்சி

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, 5

எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி 10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

தோழீ ! விடியற்காலையில் மழைபெய்துவிட்ட நல்ல நெடிய மலையினின்று; கரிய கடலின் அலைபோல இழிகின்ற அருவி; அகன்ற பெரிய காட்டினிடத்துச் சென்று தங்கியோடும் அழகை நோக்கி; அஃது அவரை எதிர்ப்பட்ட இடமாதலின் அடக்கவும் தகைக்கு மளவின் நில்லாமல் பெரிய அழகினையுடைய குளிர்ந்த கண்கள் நீரைப் பெருக்கி அழுதலானே; அதனைக் கண்ட அன்னை என்னை நோக்கி நீ ஏன் அழுதலைச் செய்கின்றனையோ ? அழாதே கொள்! நின் விளங்கிய எயிற்றினை முத்தங் கொள்வனென்று; மென்மையாகிய இனிய மொழிகளைக் கூறுதலானே; யான் விரைந்து உயிரினுங் காட்டிற் சிறந்த நாணினையும் மிக மறந்துவிட்டு; சாரலின்கணுள்ள காந்தளின் தேனையுண்ட நீலமணிபோலும் நிறத்தையுடைய வண்டு யாழிற் கட்டிய இனிய நரம்பு ஒலித்தல்போல ஒலிக்கா நிற்கும் விசும்பி லோங்கிய வெற்பினையுடைய தலைவனது மார்பைப் பிரிந்தமையால் வந்த வருத்தத்திற்கு அழா நின்றேன் என்று; கூறத் தொடங்கி அப்பால் நினைவுவரத் தவிர்ந்துய்ந்தேன்;

முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நொச்சிநியமங்கிழார்

நற்றிணை - 18. பாலை

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி- தோழி!- மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, 5

நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. 10

தோழீ ! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவனென்பவனைப் போரில் வென்று அவனது நிரம்பிய வலியையுடைய முட்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்துவைத் திழைத்த வாயிற் கதவினையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனாகிய; வெல்லும் வேற்படையையுடைய பகைவராற் கடத்தற்கரிய சேனையையுடைய சேரலன்கணைக்காலிரும் பொறையானது; பாசறையின் கண்ணேயுள்ள நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறங்காத வீரர் யாவரும்; அலையோய்ந்த கடல்போல இனி தாகக் கண்ணுறங்குமாறு; மதநீரொழிந்த சினந்தணிந்த யானையின் பெரிதாய் நிலைத்துள்ள ஒரு மருப்புப்போன்ற; ஒன்றாகி விளங்கிய அருவியையுடைய மலைநெறியிற் சென்ற தலைவர்; நீ வருத்தமுற்ற வுள்ளத்தோடு கொண்ட பலவாகிய கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்;

பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. - பொய்கையார்

நற்றிணை - 19. நெய்தல்

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! 5

இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

இறாமீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடைய சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழையானது, பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!; மிக்க மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்தலாலே நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போகாநின்றனை யாதலால், வருவையாகிய சின்னாள் பின்பு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சிலநாளளவும்; இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக!

புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது. - நக்கண்ணையார்

நற்றிணை - 20. மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில், 5
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக் 10
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்ந்விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்து அசையா நிற்ப; இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப; நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது மறுகின்கட் சென்றனள்; நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; முன்பு நின் மார்பினுற்ற முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும்; துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம் நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; அத்தகைய இளம் பிராயத்தளாகிய பரத்தையை யாம் கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக;

பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், யாரையும் அறியேன் என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம். - ஓரம்போகியார்

நற்றிணை - 21. முல்லை

விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- 5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

பாகனே ! விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை நன்றாகப் பறித்து; நாட்காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்!; ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!;

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மருதன் இளநாகனார்

நற்றிணை - 22. குறிஞ்சி

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, 5
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி- தோழி!- உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு 10
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

தோழீ! மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில்; முதலிலே பறிந்து முற்றிய பெருங் கதிர்களைக் கொய்துகொண்ட மந்தி; பாயுந் தொழிலன்றிந்ப் பிற கல்லாத கடுவனொடு நல்லவரை மீதேறி அகங்கை நிறையக் கயக்கித் தூய்மை செய்து; தன் திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறைய வுண்டு; வம்பமாரி பெய்தலாலே நனைந்த புறத்தனவாய் நோன்புடையார் தைத்திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலைநாடன்; உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றி ஈரமற்றகாலை; சூலொடு வாடிய நெற்பயிருக்கு நடுயாமத்து மழைபெய்தாற்போல; வந்தான்; இனி விரைவிலே வதுவை யயர்ந்து நெடுங்காலம் வாழக்கடவதாக!;

வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.

நற்றிணை - 23. குறிஞ்சி

தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் 5

முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னைப் பிறர் கூறும் பழிச்சொற்கஞ்சி வளைகளைக் கழலாதவாறு செறித்து மறைத்தலாலே தோள்கள் வாட்டந் தோன்றாவாயின!; அன்றியும் தன் ஆயத்தாரோடு விளையாட் டயர்தலால் உடம்பிற் களைப்பும் அவ் விளையாட்டினா லுண்டாகியதென நினைப்பதற் குரியதாயிரா நின்றது; காவன் மிகுதிப்பட அன்னையானவள் பாதுகாக்கும் இவளின் பழைய நலமெல்லாம் சிதையும்படி காணுந்தோறும் அழுதலல்லாமலும்; நெருங்கிய நீர்மிக்க முத்துக்கள் விளைகின்ற கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறையிலிருக்கும், சிறுபசு அடைய செப்பு ஊர் நெய்தல் தௌந்நீர் மலரின்கண் தொலைந்த சிறிய பசிய இலைகளையுடைய அழகமைந்த நெய்தலின் தௌபிந்த நீரிலுள்ள மலர் போலக் கண்களே அழகு குலைந்தன; அவை தாம் காமத்தைக் கரத்தலரியவாய் இராநின்றன; ஆதலின் நினக்கேற்றதொன்று செய்வாயாக!;

தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது. - கணக்காயனார்

நற்றிணை - 24. பாலை

பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 5

சேறும், நாம் எனச் சொல்ல- சேயிழை!-
நன்று எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

சேயிழாய்!; நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும் பெரிய கிளைகளும்; அடியில் உடும்புகள் செறிந்தாற்போன்ற பொரிந்த செதில்களும் உடைய நெடிய விளாமரத்தின்; கிளையில் மூக்கு ஊழ்த்து விழுந்து கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின் கண்ணே ஆடுதலொழிந்த பந்து கிடப்பது போலப் பரவியிருக்கும்; அவ்விளாம்பழங்களையே உணவாகவுடைய அயனாட்டிலே செல்லுதற்கரிய பாலைவழியில்; யாம் செல்லா நிற்பேமென்று தலைவர் கூறலும்; அது நல்லதொரு காரியமென்று விருப்பத்தோடு கூறினை! ஆதலின் நீ நல்லதொன்றனைச் செய்தனைகாண்!; ஆடவர் வினைமேற்கொண்ட உள்ளத்தராய்ப் பொருளீட்டுதற்கு அகலா நிற்பர்; அங்ஙனம் அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.

பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. - கணக்காயனார்

நற்றிணை - 25. குறிஞ்சி

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு 5

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது- காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

காதலையுடைய தோழி !; அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற்போன்ற சிவந்த வரிபொருந்திய இதழையுடைய நெடுந்தூரம் மணங்கமழும் நறவம்பூவின், நறும்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்பொன் உரைகல்லின் நல் நிறம் பெறூஉம் வளமலை நாடன் நறிய தாதை யளைந்த வண்டு பசிய நிறமுள்ள பொன்னை யுரைக்கும் கட்டளைக் கற்போல நல்ல நிறத்தைப் பெறாநிற்கும் வளம் பொருந்திய மலைநாடன்; நேற்றைப் பொழுது நம்மோடு கிளைத்தல் மிக்க சிறிய தினையில் வீழுங் கிளிகளைக் கடிந்து அங்குத் தங்கியிருந்தும்; தன்குறையைக் கூறுமிடம் பெறானாகிப் பெயர்ந்து போயினான்; யான் கருதுகின்றது அங்ஙனம் அவன் பெயர்ந்ததாகிய ஓரல்லலுடைமையைக் குறித்ததன்று காண் !; தேனையுண்ணும் வேட்கையாலே நறுமலர் இன்னதென ஆராயாது யாண்டும் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை யொத்த அவனது; கெடாத தோற்றப் பொலிவினைக் கண்டு வைத்தும்; கழன்ற தொடியை மீண்டு செறித்த எனது பண்பில்லாத செய்கையைக் கருதா நின்றது என்னுள்ளம்; இஃதென்ன வியப்பு !;

தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 26. பாலை

நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் 5
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ?- வை எயிற்று,
பொன் பொதிந்தன்ன சுணங்கின்,
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே.

அழகமைந்த புள்ளிகளையுடைய வெறுமையாகிய அடியையுடைய மலையை யொத்த அடுக்கிய நிலையமைந்த நெடிய நெற்கூட்டில்; நிரம்பக் கொட்டிய நெல்லையுடைய தன் தாய்வீட்டைக் கைவிட்டு; ஆதித்த மண்டிலம் முற்றும் தன் வெயிலை வீசுதலானே செழுங்காய்கள் திரங்கப் பெற்று முடம்பட்ட முதிர்ந்த பலா மரங்கள் நிரம்பிய கொடிய காட்டில்; நீயிர் தமியராய்ச் சென்று வருந்தாது நுமக்குத் துணையாக வந்த தவற்றினாலே தானோ?; கூரிய பற்களையும் பொன்னைப் பொதிந்து வைத்தாற் போன்ற சுணங்கையும் நெருங்கிய கரிய கூந்தலையும் பெரிய தோள்களையும் உடையாளுக்கு; இஞ்ஞான்று நீயிர் பிரிவேனென்றமையின் உடனே மெய் சோர்தலாலே கைவளைகள் கழன்று விழுந்தன; இப்பொழுதே இப்படியாயின் இனி மீண்டு வருந்துணையும் எங்ஙனம் ஆற்றியிருப்பள்?; இதற்கு யான் நோவா நின்றேன்;

தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது. - சாத்தந்தையார்

நற்றிணை - 27.

நெய்தநீயும் யானும், நெருநல், பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், 5

பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்
எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,
கண் போல் பூத்தமை கண்டு, நுண் பல 10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ, சென்று எனக் கூறாதோளே.

தோழீ ! நேற்றைப் பொழுதில் நீயும் யானும் சென்று மலரின் நுண்ணிய தாதிற் பாய்ந்து விழுகின்ற வண்டினங்களைப் போக்கி; ஒழிந்த திரை கொழித்த வெளிய மணலடுத்த கழிக்கரை சூழ்ந்த சோலையிடத்து விளையாடியதன்றி; மறைத்து நாம் செய்த செயல் பிறிதொன்றுமில்லை; அங்ஙனம் யாதேனும் செய்ததுண்டென்றால் அது பரவா நிற்கும், நிற்க. அதனைப் பிறர் அறிந்து வைத்தாருமிலர்; அப்படியாக, அன்னை நம்மை நோக்கிப் பொய்கைதோறும் இறாமீனைத் தின்னும் குருகினம் ஒலிப்பச் சுறாவேறு மிக்க கழிசேர்ந்த இடத்து, கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு திரண்ட தண்டு நீண்டு நம்முடைய கண்களைப் போலப் பூத்தமை நோக்கியும்; நுண்ணிய பலவாகிய பசிய இலைகளையுடைய சிறிய நெய்தன் மலரைப் (போய்ப்) பறித்துச் சூடிக்கொண்மின் எனக் கூறினாள் அல்லள்; ஆதலின் அவள்தான் பெரிதும் என்ன கருதி யிருக்கின்றனள் போலும்;

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - குடவாயிற் கீரத்தனார்

நற்றிணை - 28. பாலை

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
மணி என இழிதரும் அருவி, பொன் என 5

வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

நீலமணிபோலத் தௌபிந்து இழியும் அருவியையுடைய, பொன்போல வேங்கை மலர் உதிர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில்; அசைகின்ற தண்டுயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில்; விசும்பின்கண் ஓடுகின்ற முகிலைக் கீழும் உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரிமையுடைய நம் தலைவன்; முன்பு தலைப்பெய்த நாளிலே என் கைகளைத் தானெடுத்துத் தன் கண்களில் ஒற்றியும் தன் கைகளால் எனது நல்ல நெற்றியைத் தைவந்தும், அன்னைபோல இனிய பலவற்றைக் கூறியும் தலையளி செய்து இஞ்ஞான்று; கள்வரைப் போலக் கொடியனாயிரா நின்றான்; அவன் இயல்பு கொடியதாவது காண்;

பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம். - முதுகூற்றனார்

நற்றிணை - 29. பாலை


நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி 5
யாங்கு வல்லுநள்கொல்தானே- யான், தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்! என
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,
வெய்ய உயிர்க்கும் சாயல், 10
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே?

அவளுடைய தொய்யில் வனைந்து பருத்த இளைய கொங்கைகள் நோவனவோ என்று; யான் நினைந்து அணைத்திருந்த கையை நெகிழ்த்த அதனைப் பொறாளாய்; தான் தன்னுடைய பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்கள் நீர் வடிவனவாய்க் கலுழ வெம்மையாக உயிர்க்கின்ற; மென்மையையும் கரிய ஈரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையும் உடைய தகுதிப்பாடுடைய என் புதல்வி; ஏனைய பருவம் எய்தாமல் வேனிற் பருவமொன்றுமே நிலை பெற்று நின்ற காய்ந்து வாடிய காந்தளையுடைய அழல் வீசுகின்ற நீண்ட கடத்திலே; நிற்குமாறு நிழலிடமும் பெறாது குட்டிகளையீன்று காட்டில் காவல் செய்திருந்த பெண்புலி; மிகவும் பசியுடையதென்று அதன் பசியைப் போக்கக் கருதி மயங்கிய மாலைப் பொழுதில் நெறியிற் செல்லுபவரைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி அந்நெறியை நோக்கியிருக்கும்; புல்லிய அதராகிய சிறியநெறியில்; யாங்ஙனம் நடக்க வல்லுநளோ?

மகள்போக்கிய தாய்சொல்லியது. - பூதனார்

நற்றிணை - 30. மருதம்

கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்,
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் 5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-
கால் ஏமுற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,
பலர் கொள் பலகை போல-
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. 10

மகிழ்ந ! பாணன் கையிடத்ததாகிய பண்பமைந்த சிறிய யாழ் அழகிய வண்டுபோல இம்மென ஒலியாநின்ற நீ எழுந்து வருகின்ற தெருவிலே; நீ வருதலை எதிர்பார்த்து நின்மார்பை முன்பு தமக்குடையராய்ப் பற்றிக்கொண்டிருந்த மாட்சிமைப் பட்ட இழையை யணிந்த பரத்தையர் பலரும்: கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப்பனி நீ பிரிந்ததனாலுண்டாகிய கவற்சி மிகுதலாலே கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே; கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்ற காலத்துக் கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட்டதாக, அங்ஙனம் கவிழ்தலும்; கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து அவ்வழி விழுந்த பலரும் ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையைப் பற்றிக்கொண்டு தாம் தாம் தனித்தனி இழுப்பதுபோல; நின் கைகளைப் பற்றி அவரவர் தம் தம் கருத்து முற்றுமாறு இழுத்தலாலே நீ அவரிடைப்பட்டு மிக வருந்துகின்ற நிலைமையை; யான் கண்கூடாகக் கண்டேன், கண்டும் நின்னை யாது செய்யற்பாலேன் காண்? ஆதலின் நீ யாரையும் அறியேனென்றதெவ்வண்ணங் கொல்?

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், யாரையும் அறியேன் என்றாற்குத் தோழி சொல்லியது. - கொற்றனார்

நற்றிணை - 31. நெய்தல்

மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; 5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்- ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு 10
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

தோழீ ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும் வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; கரிய பெரிய நீர்பரந்த கழியிடந் தௌபிதலானே அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை அதிலுள்ள செய்ய இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பரவிய பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும் இனிதேயாயிருந்தது; அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால் ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்;

தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது. - நக்கீரனார்

நற்றிணை - 32. குறிஞ்சி

மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய- வாழி, தோழி!- பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.

தோழீ ! வாழி ! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய வெண்மையான அருவிகளையுடைய; அழகிய மலைக்குரிய தலைவன் நாள்தோறும் நம் புனத்து அயல் வந்து நம்மை விரும்பி வருந்தாநின்றான் என்று கூறுகின்ற எனது ஒப்பற்ற வாய்மொழியைத் தௌபிந்தாயல்லை; என்னோடு உசாவுவதை யொழித்து நீயும் அவனை நோக்கி நின்மாட்டு அன்புடைய தோழியரோடும் ஆராய்ந்து அறிவினால் இது தக்கது இது தகாததென்பதையும் அறிந்து பின்னர் அளவளாவுதல் வேண்டும்; அவன் கூற்று மறுத்தற்கரியன காண் !; அறிவுடைய சான்றோர் தம்பாலடைந்து நட்புக் கொள்ள விரும்பினார் திறத்து; முன்னர் அவருடைய குணம் செயல்களின் நன்மையை ஆராய்ந்து நட்புக்கொள்ளுவதல்லது நட்புச் செய்து பின்பு ஆராய்ந்து பாரார்; நீ அங்ஙன் ஆராய்ந்து மலைகிழவோனை நட்புக்கொண்டாயல்லை; முன்பு நட்டு இப்பொழுது வெறுத்தல் தகாது கண்டாய் !

தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது. - கபிலர்

நற்றிணை - 33. பாலை

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,
கல்லுடைப் படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், 5
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்? என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, 10
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

எம்பெருமானே ! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால் ! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து; நல்ல மார்பின்கணுள்ள அழகிய முலைமுகட்டில் விழுந்து பரக்கும்படி மல்கிய கண்ணீர்ந் பரந்தன; ஆதலின் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருக்குந் தன்மையள்?

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - இளவேட்டனார்

நற்றிணை - 34. குறிஞ்சி

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன் 5

மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக, 10
மடவை மன்ற, வாழிய முருகே!

முருகவேளே ! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக !; கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; திண்ணமாக நீ அறியாமையுடையை காண் !

தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது. - பிரமசாரி

நற்றிணை - 35. நெய்தல்

பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5

இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் 10
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!

பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக !; இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே;

மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, நன்கு ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 36. குறிஞ்சி

குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, 5

அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

குறிய முன்னங்காலையுடைய கொல்லவல்ல பெரிய ஆண்புலி; பொலிவுபெற்ற நெற்றியையுடைய கரிய பிடியானை புலம்புமாறு நீரற்ற அகன்ற காட்டினிடத்துப் பெரிய களிற்று யானையைத் தாக்கிந்க் கொல்லா நிற்கும் மலையிடத்தையுடைய சிலம்பன்; நின்னிற் பிரியேன் என்று கூறிய பொய்ம்மொழியை மெய்யெனத் தௌபிந்து; யாம் எம் நலத்தை இழந்தேவிட்டேம், ஆதலின் இந்நடுயாமத்துக் கண் துயிலாதொழிந்தனம்; பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே;

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - சீத்தலைச்சாத்தனார்

நற்றிணை - 37. பாலை

பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, 5
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
ஆர்கலி நல் ஏறு திரிதரும் 10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.

ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தௌபிந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்;

வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 38. நெய்தல்

வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் 5

புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. 10

தோழீ ! கலங்கிய நீரையுடைய கடற்கழி சூழ்ந்த தோட்டங்களையுடைய காண்ட வாயில்என்னும் ஊரிலுள்ள; தழைந்த முற்றிய பனையோலையோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியகத்து; பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல்மேட்டினையுடைய பக்கஞ் சூழ்ந்த ஒலிமிக்க எம்மூரானது; கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி மழைபொய்யாது பெய்தலானே வலைவளம் சிறப்ப; அவ்வலை வளத்தால் வந்தபொருளைப் பிற நாட்டிற்சென்று பரதமாக்கள் விலைக்குவிற்றுவர, இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் அப்பொருளை ஈந்து கரிய பனையின் இனிய கள்ளைப் பெற்றுண்பவராய் மகிழ்ந்திருக்கும், ஆர் கலி யாணர்த்து ஆயினும் நிரம்பிய ஒலியையுடைய புதுவருவாயினையுடைய தாயினும்; தொகுதி விளங்கிய நமது மெல்லிய கடற் சேர்ப்பன் நம்மைவிட்டுப் பிரிந்தகாலத்தில் நம்மூரானது பொலிவழிந்தாற் போல வருத்தமுடையதா யிராநின்றது; ஆதலின் யான் எங்ஙனம் வருந்தாது ஆற்றியிருப்பேன் ?;

தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 39. குறிஞ்சி

சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5

தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல; நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்குமாறு அதன் வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண் !;

இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது. - மருதன் இளநாகனார்

நற்றிணை - 40. மருதம்

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல, 10
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; முன்பு பரத்தையிற் சென்ற வழிந்ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்;

தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - கோண்மா நெடுங்கோட்டனார்

நற்றிணை - 41. பாலை

பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- 5
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. 10

விளங்கிய கலன் அணிந்த அரிவையே; இரவின்கண் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர் உண்ணவேண்டி; நீ நெய்யை அளாவவிட்டுக் கொழுவிய தசையைச் சமைத்ததனாலாகிய புகைபடிந்த நெற்றியின்கண் சிறிய நுண்ணிய பலவாய வியர்வை நீர் தோன்றப் பெற்ற; குறுகிய நடையொடு சென்ற நின் புணர்ச்சியை அக்காலத்து விரும்பினவர்; பசிய கண்களையுடைய யானை தன் பருத்த காலால் உதைத்தலிற் பொடிபட்ட வெளிய மேலிடத்தையுடைய பாழ்நிலத்திலுள்ள விடு புழுதி மூழ்கப்பெற்று; சுரத்தின்கண் வந்து வருந்திய வருத்தமெல்லாம்; மெல்ல நடந்து பருத்திகள் சூழ முளைத்திருக்கின்ற சிறிய கிணற்றிற் சென்று தணித்துக் கொள்ளா நிற்கும்; நெடிய மிக்க சேணிடத்தேகி வருந்தாநிற்பர் போலும்; அங்ஙனம் போய் வருந்துவதும் பின்னர் நின்னொடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டு அன்றோ? இதனை ஆராயாது வருந்துவது என்னை ?

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது. - இளந்தேவனார்

நற்றிணை - 42. முல்லை

மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், 5
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ 10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

பாகனே ! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடம் மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை மறத்தற்கு அரிது மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக !

வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - கீரத்தனார்

நற்றிணை - 43. பாலை

துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5

வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,
அஞ்சல் என்ற இறை கைவிட்டென,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் 10
ஓர் எயின் மன்னன் போல,
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.

வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; தின்றொழிந்த மிச்சில்; நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கோவென்றால் நீயிர் பிரிந்து போதலைக் கேட்டவுடன் அஞ்சாதே கொள் என்ற துணைவயின் வந்த அரசன் கைவிட்டானாக; அப்பொழுது பைங்கண்ணையுடைய யானைப் படையையுடைய பகைவேந்தன் தன் மதிற்புறத்து வந்து தங்கலும்; தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கமுற்ற உறுப்புக்கள் அமைந்த உடைந்த ஒரு மதிலையுடைய அரசனைப் போல; அழிவு வராநின்றது; ஆதலின் ஏற்றதொன்றனைச் செய்ம்மின்;

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது. - எயினந்தையார்

நற்றிணை - 44. குறிஞ்சி

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த 5

நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, 10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே?

நெஞ்சே ! கொல்லையிலுள்ள நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்கமாட்டாமே சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்துநிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போதலைக் கருதி; செழுவிய மிக்க பல கூட்டமுடைய குறவர்கள் சிறார் கூடித் தங்கி விளையாட்டு அயர்கின்ற முன்றிலின்கண் இருந்து; குடம் போன்ற காயையுடைய ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களினுயர்ந்த கிளைகளிலுள்ள மின்மினியை விளக்கமாகக் கொண்டு விசும்பு செல்லுகின்ற மழை முகிலினியக்கத்தை அறியாநிற்கும்; நல்ல மலைநாடன் அன்புள்ள புதல்வி, ஒப்பில்லாத தோழியர் கூட்டத்துடன் அருவியினீராடி; அங்கு நீரான் அலைக்கப்படுதலாலே சிவந்த பெரிய அமர்த்த குளிர்ச்சிந்யையுடைய கண்களின் குறிக்கப்படாத பார்வையையும், புன்னகையையும் நமக்குத் தந்து; தனது மனையிடத்துச் சென்றுவிட்ட பிற்பாடு; கருதிவந்த நின்னாலோ அவள் அறியத் தக்காள் ! முன்னரேயன்றோ கைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும் !

இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது. - பெருங்கௌசிகனார்

நற்றிணை - 45. நெய்தல்

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: 5

நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே; 10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

நின்னாற் காதலிக்கப்படும் இவள்தான், கடற்கரைச் சோலையிற் பொருந்திய அழகிய சிறுகுடியின்கண்ணே இருக்கின்ற, நீலநிறத்தையுடைய பெரிய கடலுங் கலங்குமாறு அதன்மேற்சென்று வலைவீசி மீனைப் பிடிக்கின்ற பரதவர் புதல்விகண்டாய்; நீதானும் நெடிய கொடிகள் காற்றாலசைந்து நுடங்குங் கடைத் தெருக்களையுடைய பழைய ஊரின்கணுள்ள கடிய செலவினையுடைய தேரையுடைய செல்வ மன்னன் காதலிற் பெற்றுவளர்த்த புதல்வனாயிராநின்றனை, ஆதலிற் குலத்திற்கே பொருத்தமில்லை; அங்ஙனம் மணப்பதாயினும், நிணத்தையுடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி வெயிலிற் போகட்டு அத்தசைகளைக் கூட்டமாகிய காக்கைகள் கவராதவாறு அவற்றை ஓட்டிப் பாதுகாக்கின்ற எமக்கு நின் சிறந்த நலந்தான் யாது வேண்டிக் கிடந்தது ? ஒன்றும் வேண்டா !; சுறா நிணத்தைத் தடிந்து பரப்புதலானே யாம் புலவு நாற்றம் நாறுகின்றேம்; இந்நாற்றம் நீ பொறாயாகலின், எம்மருகில் வராதேகொள் ! அகன்றுபோய் நிற்பாய்மன்; கடனீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது நும்மோடு ஒக்க வுயர் வுடைத்தன்று; எம்போன்ற பரதவரில் நின் போன்ற செல்வமாக்களையும் எங்கள் மரபுடைத்தாயிராநின்றது;

குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.

நற்றிணை - 46. பாலை

வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் 5

அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
நன் வாய் அல்லா வாழ்க்கை 10
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.

ஐயனே ! என் தோழியின் கலன்களணிந்த மார்பகம் தனியே கிடந்து வருந்தாநிற்ப கொன்றை அம தீம்கனி பாணர் அயிர்ப்புக் கொண்டு அன்ன பறை அறை கடிப்பின அறை அறையாத் துயல்வரகொன்றையின் இனிய சுவையையுடைய கனிகள் பாணர் ஐயங் கொள்ளும் படியவாய் அவர் தமது பறையை முழக்குங் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு கிளைகள் மிகவும் துவண்டாட வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்துகொடிய காற்று வீசாநின்ற மூங்கில் மிக்க இடத்தையுடைய துன்பமிக்குள்ள செல்லுதற்கரிய சுரத்திற்போய்; நன்மை வாய்த்தலில்லாத வாழ்விற்குரிய நிலையற்ற பொருளீட்டுதலிற் பிணித்தவுள்ளத்தோடு யாம பிரிதும் என்று நீயிர் கூறுதலானே; இவ்வுலகத்து நாள்தோறும் வில்லினின்று எய்யப்படும் கணை சென்று குறியிலே தைக்கப்படு மளவையின் அக்கணை செல்லும் நிழல் எவ்வண்ணம் விரைவிற் சென்று அழியுமோ அவ்வண்ணம் இன்பமும் இளமையும் கழியாநிற்கும், அவற்றைக் கண்டிலீரோ என்றல் அரிதேயாகும், அவை யாவர்க்கும் தெரிந்திருத்தலாலே; ஆதலின் அந் நிலையாமை யொன்றனையே விரும்பி ஆராய்ந்து அவ்வின்பமும் இளமையுங் கழியுந் துணை இவளைப் பிரியீராய் உறைவீராக !;

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 47. குறிஞ்சி

பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் 5

கானக நாடற்கு, இது என யான் அது
கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
அன்னை அயரும் முருகு நின் 10
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த வுள்ளத்துடனே, மறி அறுத்து அன்னை அயரும் முருகு யாட்டை அறுத்து அன்னையால் வணங்கப் படாநின்ற முருகவேள்; நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று அதன் கரிய பிடி யானை; வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் (அழகிய) கன்றினை அணைத்துக்கொண்டு; விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடனை நெருங்கி; நீ தலையளி செய்யாமை காரணமாக இப் பசலை தோன்றிற்றுக் கண்டாய் என்று யான் அதனைக் கூறின் அதனால் ஏதேனும் குற்றப்பாடுளதாமோ? உளதாயிற் கூறிக்காண்;

சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்வெள்ளியார்

நற்றிணை - 48. பாலை

அன்றை அனைய ஆகி, இன்றும், எம்
கண் உளபோலச் சுழலும்மாதோ-
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, 5
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.

புல்லிய புறவிதழ்களையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ்மிக்க குடைபோன்ற மலர்கள் எல்லாம் வைகறைப் பொழுதிலே விளங்குகின்ற மீன்களாமெனக் கருதும்படி தோன்றா நின்று; காடெங்கும் அழகமைந்த மலர் மணம் வீசும் கன்னெறியிலே கிடின் என்னும் ஓசையுண்டாக மோதாநின்ற அழகிய வீரவளையணிந்த மறவர்; கூர்மை பயின்ற அம்பினாற் செய்யுங் கொடுந்தொழிலையுடையராய் அஞ்சாது நும்பால் அமர் செய்ய வந்த பொழுது; அவரை வென்று போக்கி, அப்பால் எம் ஐயன்மார் எங்களைத் தேடிப் பின் தொடர்ந்து வருதலும் அதனை நோக்கிய நீயிர் எம்மைக் கைவிட்டுத் தமியராய்ச் சென்று மறைந்துகொண்ட காடு; அற்றைநாளில் அத்தன்மையவாய்த் தோன்றிய அன்றி இற்றைநாளினும் எம் கண்ணெதிரிருத்தல் போலச் சுழலாநிற்கும்; அக்காட்டின்கண் எங்ஙனம் ஏகற்பாலீர் ?

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 49. நெய்தல்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, 5

எமரும் அல்கினர்; ஏமார்ந்தனம் எனச்
சென்று நாம் அறியின், எவனோ- தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? 10

தோழீ ! பரதவர் முனறிலின்கணுள்ள பலர் கூடுகின்ற மன்றம் போல் அமைந்த புன்னையின் கரிய கிளைகளிலுள்ள நறிய மலர் அயலிலுள்ள தாழை மடலோடு கூடி நறுமணம் வீசாநிற்கும் தௌபிந்த கடற்றுறைவன; வாழ்கின்ற சிறிய நல்ல ஊரின்கட் சென்று; அவன்பால் கடலிலுள்ள பெரிய அலைகளாலே கொழிக்கப்பட்ட பால் போலும் வெளிய நிறத்தையுடைய எக்கராகிய மணல் மேட்டில் விளையாட்டயரும் வளையுடைக் கையராய பரத்தியர் யாவரும் தத்தம் மனையகத்துத் துயில்கின்றமையாலே துறை தனிமையுடையதாயிராநின்றது; முடியிட்ட வலையால் முகக்கப்பட்ட முடங்குதலையுடைய பாவை போன்ற இறாமீன்களைக் காயவிட்டு அவற்றில் வந்து விழுகின்ற காக்கைகளை ஓப்புதலானே பகற்பொழுது கழிந்துவிட்டது; எம்முடைய ஐயன்மாரும் திரண்ட கோடுகளையுடைய சுறா முதலிய மீன்களைப் பிடித்தலானாகிய உவகையராய்ப் பின்னும் வேட்டைமேற் செல்லாதொழித்துத் தம்தம் மனையகத்தே தங்கிவிட்டனர்காண்; யாமும் நீ இல்லாமையால் மயக்கமுடையேமாய் இராநின்றேம் என்று கூறி அவன் கருத்தை ஆராய்ந்தறியின்; அதனா லேதேனும் குற்றப்பாடுளதோ? உளதாயிற் கூறிக்காண்;

தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம். - நெய்தல் தத்தனார்

நற்றிணை - 50. மருதம்

அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், 5

கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று என,
யாணது பசலை என்றனன்; அதன் எதிர்,
நாண் இலை, எலுவ! என்று வந்திசினே-
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறு நுதல் அரிவை! போற்றேன், 10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

அன்னாய் ! நறிய நுதலையுடைய தலைவி ! என் அறியாமையாலே நின்னை அஞ்சி; குழை பெய்து மாலைசூடிக் குறிய பசிய தொடியணிந்தவனாகி விழாக் களத்து அவன் துணங்கையாடுதலைக் கையகப்படுப்பேமாகி யாங்கள் செல்லா நிற்கையில், நொதுமலாளன் நெடு நிமிர் தெருவின் கைபுகு கொடு மிடை கதுமெனத் தாக்கலின் நமக்கு அயலானாகிய அவன்தான் அவ்வணிகளையுடையனாய் நெடிய நிமிர்ந்த தெருமுடிந்த வேறொரு வழி வந்து புகுந்த வளைந்த விடத்தே விரைவின் வந்து எதிர்ப்பட்டானாக; இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்பார் உண்டோ? இல்லையோ? அறிந்துகொள் என்று யான் கூற; அவனும் அவ்வறியாமையுடையான் போல என்கட்பசலை அழகுடையது என்றனன்; அதனுக் கெதிர்மொழி கொடுத்தற்காக அவன் பகைவராலும் விரும்பப்படும் செம்மாப்புடையான் எனக் கொண்டு; வணங்கிச் செல்லாது, சிறுமை பெருமையின் என் சிறுமை பெரிதாகலான்; ஆராயாதே துணிந்து எலுவ நீ நாணுடையை அல்லை என்று கூறிவந்தேன்;

தோழி பாணற்கு வாயில்மறுத்தது. - மருதம் பாடிய இளங்கடுங்கோ.

நற்றிணை - 51. குறிஞ்சி

யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு 5
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த 10
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?

தோழீ ! மேகமானது உயர்ந்த அடித்தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி யெடுப்ப; பாம்புகள் வருத்தமுற்று உயர்ந்த துறுகல்மீது புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமிக்க இடியேற்றுடனே மிக்க துளியைப் பெய்யத் தொடங்கி அப் பெயலை நிறுத்துகின்றிலது. பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்னவேலன் வந்தென அத்தகைய பெயலைக் கண்டு ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்ட என்னை உற்றதறியாது நற்றிறம் படர்ந்த அன்னை வெறியெடுத்தலும் அதற்காக மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையிலுடைய படிமத்தான் வந்தானாதலின்; இனிப் பின்னி விடுத்தற்குரிய கொண்டையிற் பூவைக் குலையாது காத்தலும் அரியதாயிரா நின்றது; ஆதலாற் பெரிய குளிர்ச்சியையுடைய பச்சிலை மரத்தை முரித்துழக்கின பரந்த அடிகளையுடைய கரிய சேற்றை யப்பிய நெற்றியையுடைய கொல்ல வல்ல களிற்றியானை; அறியாமையால் ஆசினியை முரித்து மலருதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின்கீழே தங்காநிற்கும் மலைகிழவோனுக்கு; என்ன செய்ய மாட்டுவேம்; கூறாய்,

ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது. - பேராலவாயர்

நற்றிணை - 52. பாலை

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; 5

நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும், 10
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.

எமது நெஞ்சமே ! கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே தூய பொற்றகடு போன்ற பாதிரி மலரையும் சேர எதிர் எதிர் வைத்துத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்; மணங்கமழும் நாற்றத்தைப் பெற்று, யாம் அவளுடைய சுணங்கமைந்த மார்பிற் கொங்கையை ஒருசேர அணைத்துக்கொண்டு மிக்க இன்சுவையையுடைய இவள் கையால் அணைத்திருத்தலினின்றும் நீங்க மாட்டுகிலேம், நீயே ஆள்வினை சிறப்ப எண்ணிநாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை நீ தானும் முயற்சியை மேம்படக் கருதி நாள்தோறும் (எம்மை) இவளைப் பிரிந்து தனித்து உறைகின்ற வாழ்வினை விரும்பிச் சிறிது பொழுதும் ஓய்கின்றனையல்லை; ஆதலின் நீ என்மாட்டு அன்பினையுடையையல்லைமன் இங்ஙனமே நெடுங்காலம் வாழ்வாயாக !; நீ உட்கொண்டு உடன்பட்டு ஈட்டும் பொருள்தான்; வெய்ய போர் செய்ய வல்ல போர்வீரர் தலைவனாகிய சிறந்த கொடையையுடைய ஓரி யென்பவனது கைவண்மைக்குப் பொருந்திய செல்வமே நீ ஈட்டும் பொருளாக நினக்குக் கிடைக்கப் பெறினும் அப்பொருள் இவளது முயக்கத்தினும்காட்டிற் சிறந்ததன்று கண்டாய் !; அது மிக மென்மையுடையதன்றோ அதனால் வேண்டுமெனில் நீயே ஏகுவாய் யாம் வாரகில்லேம்;

தலைமகன் செலவு அழுங்கியது. - பாலத்தனார்

நற்றிணை - 53. குறிஞ்சி

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-
வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் 5
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியாது ஆடப் பெறின், இவள் 10
பனியும் தீர்குவள், செல்க! என்றோளே!

தோழீ ! தலைமகன் வைவிடுதலானே நீ துன்புற்றிருந்தனை இன்ன காரணத்தால் நீதான் இங்ஙனமாயினை என்று கூறாமல் யான் அஞ்சி அதனை மறைத்திருப்பவும். அன்னை வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்மிந்தன. அன்னை என்னை நோக்கி ஆகாயத்தில் மிகவுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தில் மிக்க இடியோசையையுடைய மேகம் மழைபெய்யத் தொடங்கி நள்ளிருளில் மிக்க மழை பொழிந்ததனாலே; கற்கள் நிரம்பிய காட்டின் கண் ஓடும் யாற்றிலே மரங்கள்காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்த்த பூங்கொத்துக்களையும் அடித்துக்கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது; இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் மருந்துமாகும்; அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி ஆண்டுள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி நீராட்டத்து வெறுப்பின்றி ஆடப்பெற்றால்; இவள் மெய்யின் நடுக்கமுந் தீர்குவள், ஆதலால் ஆங்குச் செல்வீர்களாக என்று கூறினள்; ஆதலின் அவள் தான் நமது ஒழுகலாற்றை முன்னமே அறிந்து வைத்தனள் கொல் ? அன்றி அருளினாற் கூறினள் கொல் ? நம் அன்னை கருதியது யாது கொல்? ஆராய்ந்து காண் !:

வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது. - நல்வேட்டனார்

நற்றிணை - 54. நெய்தல்

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!- எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; 5
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி- தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும் 10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!

கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பிந்னையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தௌபிந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக !

காமம் மிக்க கழிபடர்கிளவி. - சேந்தங் கண்ணனார்

நற்றிணை - 55. குறிஞ்சி

ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், 5

கண் கோள் ஆக நோக்கி, பண்டும்
இனையையோ? என வினவினள், யாயே;
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: அன்னாய்!-
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த 10
சாந்த ஞெகிழி காட்டி-
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே.

ஓங்கிய மலைநாடனே ! நீ கூறும்வாய்மைகள் எல்லாம் இப்படியே பொய்த்தொழிவனவாகுக !; மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறிய வழியில் இரைதேடியுழலுகின்ற வேங்கை முதலாயமிக்க பகையைப் பொருட்படுத்தாது; இரவிடைவந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ, அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே; எம் அன்னை தன் கண்களாலே கொல்லுபவள் போல் நோக்கி நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பெற்ற தோளினையுடையையோ? என்று வினவினள்; அங்ஙனம் வினவலும், இவள் அதற்கு எதிர்மொழி சொல்ல அறியாளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்; அதனை அறிந்த யான் இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறி யுய்குவள் என்றெண்ணி அன்னையை நோக்கி; அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டி; அன்னாய் ! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண் ! என மறைத்துக் கூறினேன்; இங்ஙனம் எத்துணை நாள் நீ வரைந்து கொள்ளுதல் காரணமாகப் பொய்கூறி யுய்விப்பது ?

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது. - பெருவழுதி

நற்றிணை - 56. பாலை

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, 5

ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
ஏதிலாட்டி இவள் எனப்
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே 10

குறிதாக நிற்றலையுடைய குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறியமலரில் வண்டு விழுதலா னெழுந்த மணத்தைத் தென்றற் காற்றுப் புகுந்து கலந்துவீச; கண்கள் அவற்றைநோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில்; ஒளி பொருந்திய வளையை நெகிழ்வித்தோரைக் கருதித் துன்பமுறுதலின் அவர்பாற் சென்ற என் நெஞ்சமானது; ஆண்டு அவர் செய்யும் வினைக்குச் சூழ்ச்சி சொல்லும் துணையாயிருந்து முற்றுவித்து அவருடன் ஒருசேர வருதற்கு விருப்பமுற்று வருந்தியிருக்கின்றதோ ?; அன்றி அவர் அருள் செய்யாமையாலே; கலங்கி இங்கு வந்து அஃது என்னைப் பிரியுமுன்னிருந்த நலன் இழந்துவிட்டதனாலாகிய எனது பொன்னிறமான பசலையை நோக்கி; இவள் அயலிலாட்டியாகும் என்னை விடுத்தவளைக் காண்கிலேன்மன் ! என்றெண்ணி நோய்மிகக் கொண்டு என்னைத் தேடிச் சென்றொழிந்ததோ? அறிகிலேன்; ஆதலின், யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன்;

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது. - பெருவழுதி

நற்றிணை - 57. குறிஞ்சி

தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் 5

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! 10

சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; அவை துயில்வதனைக் கண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; பெரிய மலை நாடனே !; சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக !

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - பொதும்பில் கிழார்

நற்றிணை - 58. நெய்தல்

பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ-
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 5

முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் 10
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!

உறையூரின் கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச்ந் செல்லுகின்ற குதிரைகள் தாம்; முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !;

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது. - முதுகூற்றனார்

நற்றிணை - 59. முல்லை

உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 5

வன் புலக் காட்டு நாட்டதுவே- அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. 10

அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையும் காதலியின் ஊர; பகற் பொழுதெல்லாம் சூழ ஆடைபரப்பி நின்று கலைத்தவழி வெளிவந்த உடும்பை ஈட்டியாலே குத்தி; மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து; நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளிவந்த ஈயலைத் தாழியிலே பெய்து கொண்டு; வளைதடியாலே முயலை எறிந்து பற்றிய வேட்டுவன்; இரவிடை அழகிய தோளிலே சுமந்து வந்த பல்வேறு வகையாகிய அப்பண்டங்களைப் பொதிந்த மூடையுடனே ஏனைய கருவிகளையும் மனையகத்தே போகட்டு மறந்து; ஆங்கு மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு கிடவா நிற்கும்; வன்புலத்ததாகிய காடு சூழ்ந்த நாட்டின்கண் உளதாயிரா நின்றது; அங்ஙனம் முல்லையின் நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின் கண்ணதாகிய ஊரிலிருந்தாலும் அவள் உள்ளம் பொறுமையுடையதாயிரா நின்றது; இன்று செல்லாவிடில் நனி வருந்தா நிற்கும்;

வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 60. மருதம்

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு 5

கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறிஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை 10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

மலையைச் செய்து வைத்தாற் போன்ற நிலை பொருந்திய உயர்ச்சியையுடைய மிக்க நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமையைப் பூட்டி உழுகின்ற உழவனே !; நீ இரவிலே தூங்காது குளிர்ச்சியையுடைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதிலே கரிய கண்களையுடைய வரால் மீனைப் பெரியனவாகத் தடிந்த தசையாகிய ஆணத்திலே பிறழவிட்ட மிளிர்வையுடனே உணவுக்குரிய அரிசியாலாக்கிய மிக்க சோற்றுத்திரளையை; விருப்பமிக்க கையையுடையையாய் நிறைய மயக்கமேறவுண்டு நீர்மிக்க சேற்றிலே நாற்றுமுடிகளை நடுதற்கு நின் உழத்தியரோடு உடன் செல்லுவையாயின்; நீ உழுகின்ற வயலிலுள்ள வளமிக்க கோரைகளையும் நெய்தல்களையும் களையெனக் களையாது பாதுகாப்பாய்; அங்ஙனம் பாதுகாத்து வைப்பது தான் எற்றிற்கோ எனக் கேட்டியாயின், எங்களுடைய மிக்க கரிய கூந்தலையுடைய தலைவி இப்பொழுது இற்செறிக்கப்பட்டாள், மற்றொரு பொழுது காப்புச்சிறை நீக்கப் பெறுவளேல் அவள் அவற்றுள் அழகிய கோரையை வளையமாகப் பூண்டுகொள்ளுவாள், நெய்தலந்தழையை உடையாக அணிந்து கொள்ளுவள் காண்;

சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - தூங்கலோரியார்

நற்றிணை - 61. குறிஞ்சி

கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
துஞ்சாயோ, என் குறுமகள்? என்றலின், 5

சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ? என்றிசின், யானே. 10

ஏடி தோழீ ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக ! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி என்னிள மகளே ! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ ? என்றேன் காண்;

தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - சிறுமோலிகனார்

நற்றிணை - 62. பாலை

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே- முள் எயிற்று, 5

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே? 10

வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புண்ட மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஒலிக்கின்ற ஓசையானது; தறியிலே கட்டப்பட்ட யானை வருந்தி நெட்டுயிர்ப்பெறிந்தாற் போன்றது; கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரத்து நெறியில்; மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி; முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு; அத்திங்கள் இப்பொழுது யாண்டையதோ வெனில் முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளதாயிரா நின்றது என்று; யான் நினைத்திருந்தேன் அல்லனோ ?

முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது. - இளங்கீரனார்

நற்றிணை - 63. நெய்தல்

உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், 5

அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவதுகொல்லோ-
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம் 10
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

வலிமையுடைய கடலிலே சென்று மீன் பிடித்தலில் வருந்திய பெரிய வலைகளையுடைய பரதவர்; மிக்க மீன்களைக் காயப் போகட்ட புதிய மணற் பரப்பாகிய அவ்விடத்து; கல்லென வொலிக்குஞ் சேரியை யடுத்த புலவு நாற்றத்திடத்துள்ள புன்னையின்; விழாவுக்குரிய மணமுடைய விளங்கிய பூங்கொத்து ஒருசேர விரிந்து மணங் கமழா நிற்கும் அலரெடுக்கின்ற பேரொலியையுடைய இவ்வூரோவெனில்; அறமுடையதில்லை; அதனால் புட்கள் வந்திருத்தலா லுதிர்ந்த பூக்கலந்த சேற்றினையுடைய கழியாகிய இடத்தின் மீதோடும் தேரிற் பூட்டிய பெரிய பிணிப்பையுடைய குதிரைகள்; அலையெழுந்து வரும் கடனீராலே கழுவப்படுகின்ற மிக்க கடற் சேர்ப்பனொடு பொருந்திய நமது தொடர்ச்சியானது; அறனில்லாத அன்னை இற்செறித்து அரிய காவலிற் படுத்தலாலே இங்ஙனம் பசலையாகி விளிந்தொழியக் கடவதுதானோ?

அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - உலோச்சனார்

நற்றிணை - 64. குறிஞ்சி

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்- தோழி!- யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் 5
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது 10
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

தோழீ ! நம் காதலர் எவ்வளவு சிறப்புடையராயினும் அவர்பால் தூதுவிடக் கருதுவதனை இனி நீ ஒழிப்பாயாக!; நம்மைக் கைவிட்டாரென்று அத்தன்மையாக வருந்தாதே கொள்!; நாம் இத்தன்மையேமாகி வருந்தும் வண்ணம் நம்மைத் துறந்த அவர் நட்புத்தான் நமக்கு யாது பயன்படும் ?; மரற்பட்டையின் நாராலே பின்னிய உடையினையுடைய மலையிலிருக்கிற குறவர் தாம் அறியாமையினாலே மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில்; வற்றல் தொடங்கி மிகக் கெடுத்து மெல்லென அந்த மரம் வறிதாமாறு அதன்கண் உள்ள நீர் அறுபட்ட வாயின் வழியே சோர்ந்து வடிந்தாற் போல; என் அறிவும் உளமும் அவரிடத்துச் சென்றொழிந்தன வாதலின் இகுளாய் ! என் உடம்பு உள்ளில் யாதும் இல்லையாய் நின்றது காண்!; இனி அவர் இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாகார் ஆதலின்; காதலர் வாராது அங்கேயே உறைவாராக; இங்குக் காமமும் அதனாலுண்டாகிய நினைவும் நம்மை யொறுத்தலாலே வருந்திய நோய் மிக்க ஏதப்பாட்டினை நம் சுற்றத்தார் காணாதொழிவாராக!

பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 65. குறிஞ்சி

அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை 5

நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே.

விட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியுடனே போர்செய்தலானாகிய புண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் அவன் இன்னே வருகுவன் எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் !; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக !;

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 66. பாலை

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், 5

நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என் 10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

மிளகினை யிட்டுவைத்தாற் போன்ற சுவையுடைய காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தினுள்ள புல்லிய காயை; சிதர் சிதர்த்து உண்ட புலம்பு கொள் புன் புறா வண்டுகள் நெருங்காதபடி போக்கி உண்டதனாலாகிய வருத்தமிக்க புல்லிய புறா; நெடிய கிளை மேலேறித் தான் தின்ற தவற்றைக் கருதி வரைகள் விளங்கிய தன் பிடரி சிலிர்த்துத் தின்ற வெறிப்பினால் மறுக்கமுற்று வருந்தாநிற்கும்; வெப்பங்கொண்ட புழுதிமிக்க நெறியின் கண்ணே தன்னை விரும்பிய காதலனைக் கூடிச் சென்றனளாயினும்; சூடிய பூமாலை சிக்குண்டாலும் குறிய வளை கையினின்று நழுவினாலும் காஞ்சியணிந்த அல்குலின் மேல் நாலுகின்ற பொற்காசு இனம் முறை பிறழ்ந்து கிடந்தாலும்; அவற்றைத் திருத்துதற்குத் தெரிந்திலளாய்த் தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் என் அழகிய இளம் புதல்வியின் மலர்போன்ற கண்கள்; வெய்ய சுரத்திற் செல்லுங் கடுமையாலே சிவந்து ஒளி மழுங்கிந்க் கலக்க மடைந்தனவோ ? இவ்வொன்றற்கே வருந்தா நிற்பேன்;

மனை மருட்சி. - இனிசந்த நாகனார்

நற்றிணை - 67. நெய்தல்

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய, துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; 5

கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
தங்கின் எவனோதெய்ய- பொங்கு பிசிர் 10
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

சேய்மைக் கண்ணே ஆகாயத்திலேறி வந்த செழுவிய கிரணங்களையுடைய ஆதித்த மண்டிலம் பெரிய அத்தம் என்னும் சிலம்பினூடு சென்று மறைதலானே யாருமின்றி நமது கடற்றுறை தனிமையா யிராநின்றது; இறா மீனைத் தின்றெழுந்த கரிய காலையுடைய வெளிய நாரைகள்; வெளிய உப்புக் குவட்டின் மேலாக அரிய சிறகை வீசிப் பறந்துசென்று கரையிலுள்ள கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களிலே தங்குதல் கொண்டன; திரண்ட தண்டினையுடைய நெய்தல் (கரிய) மலர் மறையும் படியாக நீர் பெருகுங்கழியின் கண்ணே துணையோடு சுறாமீன் இயங்குதலுஞ் செய்யும்; அவ்விடத்தில் இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியையுடைய கடலில் மிக்க விளக்கங்களைக் கொண்டு; எம் சுற்றத்தாரும் மீன்வேட்டையாடச் சென்றுவிட்டனர்; ஆதலால் பொங்குகின்ற பிசிரையும் முழவு போல ஒலித்தலையுமுடைய அலையெழுந்து உடைந்து விழுகின்ற கடற்கரையிலுள்ள நெய்தனிலத்தில்; யாங்கள் உறைதலையுடைய எம் மூரின்கண் இன்றிரவிலே தங்கிச் செல்லின் என்ன குறைபாடுண்டாகுமோ?

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 68. குறிஞ்சி

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம் என-
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், 5

வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
செல்க என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. 10

அவரது சிகரம் உயர்ந்த குன்றம் ஒளியை எங்கும் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இரவிருளில் நடுயாமத்திலே; கொடி நுடங்கினாற் போன்றிலங்கினவாய் மின்னி இயங்குகின்ற முகில் தங்கி மழையைப் பெய்யாநின்றது; இப்பொழுது இளமங்கையர் தாம் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு ஓரையாடாமல் வீட்டில் இற்செறிக்கப்பட்டிருத்தலான அற நெறியன்று அன்றிச் செல்வமுந் தேய்ந்துவிடும் என்று; விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரை நாம் பெறுவேமாயின், அவ்வன்னை நம்மை நோக்கி நீயிர் செல்வீந்ராக என்று விடுப்பாளோ ?; அங்ஙனம் விடுப்பின் அவர் மலையிற் பெய்யுமழை குறிய நுரைகளைச் சுமந்து கொண்டு நறிய மலர்களுடனே யாற்றிற் பொங்கி வருகின்ற புதுநீரை உள்ளம் மகிழ யாம் ஆடாநிற்போம்; அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலே மாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது;

சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது. - பிரான் சாத்தனார்

நற்றிணை - 69. முல்லை

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் 5

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!

பல கதிர்களையுடைய ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மிகவுயர்ந்த பெரிய அத்தமயமலையிற்சென்று அங்கே மறையவும்; பறவைகள் தம் பிள்ளைகளிருக்கும் கூட்டிற் சென்று தங்கியிருப்பவும்; காட்டின் கண்ணே கரிய பிடரியையுடைய கலைமான் இளைமையையுடைய தன் பெண்மானைத் தழுவியிருப்பவும்; முல்லையரும்புகள் மலரவும்; பலவிடங்களிலுள்ள புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்பவும்; செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தௌபிந்த ஓசை வளைந்த கோலையுடைய ஆயர்தங் குழலோசையோடு சேர்ந்து மெல்லிதாக வந்து ஒலியாநிற்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது; பொருளீட்டுந் முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும் இத்தன்மையாகத் தோன்றுமாயின்; அவர் தாம் ஏறட்டுக் கொண்ட செயலின் கண்ணே உறுதிகொண்டு தங்கியிருப்பாரல்லர்; அப்படி இல்லாமற் கழிகின்றது;

வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது. - சேகம்பூதனார்

நற்றிணை - 70. மருதம்

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கௌற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, 5

அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

சிறிய வெளிய குருகே ! சிறிய வெளிய குருகே ! நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற மடிபோன்ற நன்னிறம் விளங்கிய சிறகினையுடைய சிறிய வெளிய குருகே !; அவ்விடத்துள்ள இனிய புனல் இவ்வூரின்கண்ணே வந்து பரக்கின்ற கழனியையுடைய நல்ல ஊரினையுடைய என் காதலர் பாலேகி; என்னுடைய கலன்கள் கழலுகின்ற துன்பத்தை இதுகாறுஞ் சொல்லாதோய்; நீ எம்மூரினையடைந்து எமது ஒள்ளிய பொய்கையினது துறையிலே புகுந்து துழாவிச் சினையுள்ள கௌபிற்றுமீனைத் தின்றனையாகி அப்பால் அவருடைய ஊர்க்குச் செல்வாயாக; எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத்தக்க அனைய அன்பினையுடையையோ ? அன்றேல் பெருமறதியையோ ? ஒன்றினை ஆராய்ந்து கூறிக்காண் !;

காமம் மிக்க கழிபடர்கிளவி. - வெள்ளி வீதியார்

நற்றிணை - 71. பாலை

மன்னாப் பொருட் பிணி முன்னி, இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனப்
பல் மாண் இரத்திர்ஆயின், சென்ம் என,
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, 5

பிரிதல் வல்லிரோ- ஐய! செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும் 10
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?

ஐயனே ! நிலையில்லாத பொருளைத் தேட ஆசை பிணித்தலானே அதன்கண்ணே கருத்தைச் செலுத்தி இக்காரியத்தை வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்குக் கூறுவாயாக என்று; பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள். பலவாக மாட்சிமைப்பட இரந்து கூறுகின்றனிராதலால், யான் சென்று கூறின் நீயிர் செல்லுவீராக என்று உம்மை விடுத்தலும் செய்வாள்; அங்ஙனம் அவள் நும்மை விடுப்பினும்; செல்வருடைய பலகட்டுக்கள் அமைந்த வீட்டின்கண்ணே உள் இறப்பிலிருக்கும் அழகிய சிவந்த கால்களையுடைய சேவற்புறா; தான் விரும்பிய பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் காமத்தால், செயலறவு கொண்டு ஒலிக்கின்ற அக்குரலோசையை; நும்மைப் பிரிந்து தனிமையாயிருந்து கேட்குந்தோறும்; எம் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி பேரவாவால் நடுங்கி வருந்துமாறு; அவளுக்கு முன்பு நின்று நீயிர் அவளுடைய கண்ணையும் நெற்றியையும் தைவந்து பிரிந்து போதற்கு வன்¬யுடையீரோ ? உடையீராயின் சென்று சொல்லுவேன்;

தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்

நற்றிணை - 72. நெய்தல்

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே; கொண்கன், 5

யான் யாய் அஞ்சுவல் எனினும், தான் எற்
பிரிதல் சூழான்மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ஆனாது,
அலர் வந்தன்றுகொல்? என்னும்; அதனால்,
புலர்வதுகொல், அவன் நட்பு! எனா 10
அஞ்சுவல்- தோழி!- என் நெஞ்சத்தானே!

தோழீ பெரியோர்தாம் விரும்பி ஒழுகவேண்டுவனவற்றில் அங்ஙனம் விரும்பி யொழுகாரென்று கூறுவதுதான், அதனை ஆராய்ந்து நோக்குமிடத்து எனக்கே வெட்கம் உடைத்தாயிராநின்றது; உயிர் ஒன்றாயிருந்தாலொத்த குற்றமற்ற நட்பினையுடைய நினக்கு யான் மறைப்பதானது எவ்வளவு பெரிய மானக் கேடாயிராநின்றது; முன்பு, யான் அன்னைக்கு அஞ்சுவேனாகலின் நீ அகன்று போவாய் என்றாலும் அக்காலத்து நம் கொண்கன் நம்மைவிட்டுப் பிரியக் கருதுபவனல்லன், அது கழிந்தது; இப்பொழுதோ எனின் இக்களவொழுக்கம் கானலின்கண் விளையாட்டயர்கின்ற தோழியர் கூட்டம் அறிவதாயினும் அடங்காமல் எங்கே வெளிப்படுமோ? என்று அஞ்சிக் கூறாநிற்பன்; ஆதலின் அவனது நட்பு இல்லையாய் விடுமோவென்று என்னெஞ்சத்தில் அஞ்சாநிற்பேன்;

தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளம்போதியார்

நற்றிணை - 73. பாலை

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் 5
செல்ப என்ப தாமே- செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும், 10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்து முற்றிய நெற்றுப்போன்ற மாண்பில்லாத விரல்களையுடைய பூசலிடுகின்ற வலிய வாயையுடைய பேய்; வளப்பத்தையுடைய பழைமையாகிய ஊரின்கண்ணே தெய்வத்தின்முன் னிடப்படும். அருச்சனையுடனாகிய ஊன்மிடைந்த பலிச் சோற்றையுண்ண வேண்டித் தான் நிலைபெற்றிருக்கின்ற பாழ்மன்றத்தை மோதியெழுகின்ற பிரிந்தாரைத் துன்புறுத்து மாலைப் பொழுதிலே; நம் தலைவரொடு முயங்கிக் கிடப்பினும் அஞ்சுகின்ற நாம் தனியே இங்குத் தங்குமாறு நம்மைக் கைவிட்டு; செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற நீண்ட திரட்சியையுடையனவாய் வளைந்த செந்நெற் கதிர்களையுடைய வயல்களில் அன்னப் பறவை துஞ்சா நிற்கும் பொலிவு பெற்ற விளங்கிய கொல்லைகளையுடைய திருசாய்க் கானத்தைப் போன்ற; எனது நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அதனை நோக்கி அயலிலாட்டியர் தூற்றும் பழிச் சொல்லையும் எனக்குக் கொடுத்து; தாம் செல்ப என்ப தாம் செல்கிற்பத்தேரன்று உழையர் கூறாநிற்பர்;

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது. - மூலங்கீரனார்

நற்றிணை - 74. நெய்தல்

வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, 5

ஏதிலாளனும் என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண்டல் வேலிய ஊர், அவன் 10
பெண்டு என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!

திருத்தமாகச் செய்யப்பட்டகதிரிட்டுமுறுக்கிய வலியகயிற்றாற் பின்னிய பெரியவலையை இடிபோல முழங்குகின்ற அலைகளையுடைய கடலிலிடும்பொருட்டு; நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்கு அரிய களிற்றியானையைப் போலப் பரதவர் செலுத்தாநிற்கும்; சிறிய மலரையுடைய ஞாழல் மரங்களையுடைய பெரிய கடற்கரைக்குத் தலைவனைக் குறித்து; அவன் நுமக்கு நட்புடையனல்லன் ஏதிலாளனுமாயினான் என்று பலருங் கூறாநிற்பர். போது அவிழ் புது மணல் கானல் புன்னை நுண் தாது அசை கொண்டல் வளி தூக்கு தொறும் அதற் கேற்ப மலர் விரிகின்ற புதிய மணற்பரப்பையுடைய சோலையிலுள்ள புன்னையின் நுண்ணிய மகரந்தப்பொடி ஓடுகின்ற கீழ்க்காற்று வந்து மோதுந்தோறும்; குருகின் வெளிய முதுகில் நெருங்கத் தூர்க்கா நிற்கும்; தௌபிந்த கடற்கரையிலுள்ள கண்டல் மரம் நிரம்பிய வேலியையுடைய இவ்வூரானது, அவன் பெண்டு என அறிந்தன்று ஆர்க்கும் பெயர்த்தல் அரிது அவனால் விரும்பப்படும் பரத்தையானவள் அச்சேர்ப்பனுக்கு மனைக்கிழத்தி யாயினன் என்று கூறாநின்றது. அங்ஙனம் உண்டாகிய வார்த்தையை பெயர்த்தொழித்தல் இனி யாவர்க்கும் அரியதொன்றாகும்; ஆதலிற் பாண ஈண்டு வாராதே கொள்!

தலைவி பாணற்கு வாயில்மறுத்தது. - உலோச்சனார்

நற்றிணை - 75. குறிஞ்சி

நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது- வாழியோ, குறுமகள்!- நகாஅது
உரைமதி; உடையும் என் உள்ளம்- சாரல் 5

கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல,
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. 10

இளமகளே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக !; உன்னிடத்திற் சிறிதும் நன்மை யில்லாமையால் இதுதான் பயன் என்று கருதாமல்; பொலிவு பெற்ற புள்ளிகள் அமைந்த அழல் போன்ற நஞ்சை உமிழ்கின்ற அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்லும் பொருட்டுக் கடித்து வருத்தினாற்போலும்; ஈங்கு இது தகாஅது இங்கு நகைத்துரைப்பதாகிய இது தகுதியுடையதொன்றன்று சாரல் கொடுவில் கானவன் கோட்டு மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த ஆயிழை மழைக் கண் மலைச் சாரலின்கண்ணே வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று, அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த ஆராய்ந்த இழையை அணிந்த தலைவியின் குளிர்ச்சியுற்ற கண்களினுடைய; பொருந்தாப் பார்வையுற்ற எனது வருந்திய நெஞ்சம்; உய்யும் வண்ணம் இங்ஙனம் நகை செய்யாது உரைப்பாயாக !; நகைத்துக் கூறின் என் உள்ளம் கலங்காநிற்கும்;

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது. - மாமூலனார்

நற்றிணை - 76. பாலை

வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்!- 5

இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக !;

புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது. - அம்மூவனார்

நற்றிணை - 77. குறிஞ்சி

மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் 5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், 10
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !;

பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது. - கபிலர்

நற்றிணை - 78. நெய்தல்

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, 5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா, 10
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

தோழீ ! வாழி ! தௌபிந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !;

வரைவு மலிந்தது. - கீரங்கீரனார்

நற்றிணை - 79. பாலை

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் 5
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-
அம்ம! வாழி, தோழி!-
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? 10

தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !;

பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கண்ணகனார்

நற்றிணை - 80. மருதம்

மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன் என, 5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ் சிறுவர்கள் அவ் வெருமைகளின் மீதேறிக்கொண்டு தனியே மேய்த்து வருதற் கேகாநிற்கும் பெரிய இருள் நீங்கும் விடியற் காலத்து, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் இவன் தந்தனன் என விருப்பத்தோடு வந்து உடுக்குந் தழையும் சூடுமாலையும் இவன் தந்தான் என்று; கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் !;

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது. - பூதன்தேவனார்

நற்றிணை - 81. முல்லை

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்கதில்- பாக!- நின் தேரே: பூண் தாழ் 5

ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்!-
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. 10

பாகனே வலிய வாளையுடைய நம்மரசன் மிக்க பகையைத் தணித்து விட்டனன் இங்கு இனிக் காரியமில்லை; (அகன்ற) பெரிய நிலம் குழியும்படி தங்காலாலே கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற களைப்பில்லாத வலிய கால்களையுடைய அரசரால் நன்கு மதிக்கப்படுகின்ற மாட்சிமைப்பட்ட நடைத் தொழிலையுடைய குதிரையை; கொய்யு மயிரையுடைய பிடரியிற் கட்டிய மணிகள் ஒலிப்ப நின் தேரிலே பூட்டிச் செலுத்துவாயாக !; பூண்கள் தாழ்ந்த மார்பிலுள்ள அழகிய கொங்கை முகட்டிலே கண்ணீர் தெறித்து விழும்படியாக அழதனளாகியுறையும்; அழகிய மாமை நிறத்தை யுடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டிற் சாலை புகுந்து விருந்துணவை வருந்தி யமைத்துக் களைப்படைந்துடைய மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் கண்டு மகிழ்வோமாக !;

வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது. - அகம்பல்மால் ஆதனார்

நற்றிணை - 82. குறிஞ்சி

நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- 5

போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள் நாய் கொண்ட கொள்ளைக் 10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்;

தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது. - அம்மூவனார்

நற்றிணை - 83. குறிஞ்சி

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், 5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.

எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தௌந் கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தௌபிந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே !; யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள் !

இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது. - பெருந்தேவனார்

நற்றிணை - 84. பாலை

கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், 5
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப, தாமே- தம்வயின் 10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.

தம்பால் வந்திரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கரிய இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நந் தலைவர்; என் கண்ணையும் தோளையும் தண்ணிய நறிய கூந்தலையும் திதலை பரந்த அல்குலையும் பலபடியாகச் சிறப்பித்துக் கூறி; நேற்றைப் பொழுதிலும் இங்குள்ளவராயிருந்தார், அது கழிந்தது; இற்றைப்பொழுது பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெளிய பேய்த்தேரை, மரங்கள் இல்லாத நீண்டவிடத்தில் மான்கூட்டம் நீரென விரும்பிச் செல்லாநிற்கும்; மண்ணாற் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில் மத்தாற் கலக்கப்பட்டபோது வெப்பம் மிக்குழி நன்கு திரளாது சிதறிக்கிடந்த வெண்ணெய் போன்ற உப்புப் பூத்த களரையுடைய; ஓமை மரங்கள் நெருங்கிய காட்டகத்து வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கரிய பாலையிலே; தாம் தமியராய்ச் செல்லுவர் என உழையர் கூறாநிற்பர்; யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன்,

பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.

நற்றிணை - 85. குறிஞ்சி

ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், 5
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல- தோழி!- சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் 10
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!

தோழீ ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தௌபிந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக;

தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது. - நல்விளக்கனார்

நற்றிணை - 86. பாலை

அறவர், வாழி- தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த 5
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!

தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !;

குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - நக்கீரர்

நற்றிணை - 87. நெய்தல்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் பராகம் கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து மிக விழாநிற்கும்; சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; ஊரின் உள்ளதாய மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அவ்வின்பமெல்லாம் விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் !

வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது. - நக்கண்ணையார்

நற்றிணை - 88. குறிஞ்சி

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?
வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- 5
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,
கண்ணீர் அருவியாக
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. 10

தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; இத்துன்பத்தை அவர்பால் நாம்ந் சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்;

சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்லந்துவனார்

நற்றிணை - 89. முல்லை

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே- தோழி!- வாரா
வன்கணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!

தோழீ ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண் !;

பொருள் முற்றி மறுத்தந்தான் எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - இளம் புல்லூர்க் காவிதி

நற்றிணை - 90. மருதம்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடி, 5
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா 10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே!

கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள்; இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய், அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !;

தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது. - அஞ்சில் அஞ்சியார்

நற்றிணை - 91. நெய்தல்

நீ உணர்ந்தனையே- தோழி!- வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், 5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் 10
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன் போலும்;

தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. - பிசிராந்தையார்

நற்றிணை - 92. பாலை

உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

தோழீ ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறட்சியுற்ற குன்றத்துச்சியின் பக்கத்திலுள்ள வேட்டுவச்சேரியை அடுத்த அகன்ற வாயையுடைய கிணற்றினின்று; பயனைத் தருகின்ற ஆனிரை யுண்ணுமாறு எடுத்து வைத்த தௌபிந்த நீர்ப்பத்தரைப் புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றுடனே நீர் உண்ண வேண்டி; அப்பத்தரின் வாயை மூடிய விற்பொறியை முறித்துப் போகட்டு அவற்றை உண்பித்துச் செல்லாநிற்கும் கொல்லுந் தொழிலையுடைய களிற்றொருத்தலையுடைய சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்; தாம் சென்றிறுத்த விடத்தும் நம்மைக் கருதினாரில்லைபோலும்; அவர் திறத்து வருந்தியாவதென் ?

பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 93. குறிஞ்சி

பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு! எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! 5
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள்ந் மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்;

வரைவு கடாயது. - மலையனார்

நற்றிணை - 94. நெய்தல்

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் 5

புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!

தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ?

தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளந்திரையனார்

நற்றிணை - 95. குறிஞ்சி

கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 5

குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. 10

பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்;

தலைமகன் பாங்கற்கு, இவ்விடத்து இத்தன்மைத்து என உரைத்தது. - கோட்டம்பலவனார்

நற்றிணை - 96. நெய்தல்

இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, 10
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?;

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது. - கோக்குளமுற்றனார்

நற்றிணை - 97. முல்லை

அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, மதனின் 5
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தௌபிந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ?

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. - மாறன் வழுதி

நற்றிணை - 98. குறிஞ்சி

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !;

இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது. - உக்கிரப் பெருவழுதி

நற்றிணை - 99. முல்லை

நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தௌத்த பருவம் காண்வர
இதுவோ? என்றிசின்- மடந்தை!- மதி இன்று, 5
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. 10

மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தௌபியக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !;

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, பருவம் அன்று என்று வற்புறுத்தியது. - இளந்திரையனார்

நற்றிணை - 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5

சினவிய முகத்து, சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !;

பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது. - பரணர்

நற்றிணை - 101. நெய்தல்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி 5

இனிதுமன்; அளிதோ தானே- துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.

வருத்தமின்றி, அகன்ற அல்குலையும் மெல்லிதாயமைந்த இடையையுமுடைய மீன் பிடிக்கின்ற பரதவர்தம் இள மகளின் மான்போலும் ஒன்றோடொன்று மாறுபட்ட பார்வையைக் காணப்பெறாதமுன் உவ்விடத்தே: முற்றா மஞ்சள் பசும் புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்முற்றாத இளமஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றியிருக்கின்ற சருச்சரையையுடைய சூழ்ந்த கழியிடத்துள்ள இறாமீனின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிகூட்டங் கொண்ட குவியல் காயும் வகையை ஆராய்ந்து; புன்னையினது அழகிய கொழுவிய நிழலின் எதிரே போகட்டுப் பரப்புந் துறைக்கு அணித்தாயிருந்த பாக்கமும; முறையே மிக இனிமையுடையதாயிருந்தது; அஃது இற்றைநாளால் அப்பரதவர் மகளின் நோக்கங் காணப்பெற்றமையாலே கழிந்து போகியதாகலின்; இரங்கத் தக்கதாயிராநின்றது;

பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது. - வெள்ளியந்தின்னனார்

நற்றிணை - 102. குறிஞ்சி

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, 5
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி- இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக !

காமம் மிக்க கழிபடர்கிளவி. - செம்பியனார்

நற்றிணை - 103. பாலை

ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் 5

பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், 10
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.

என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக !;

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது. - மருதன் இள நாகனார்

நற்றிணை - 104. குறிஞ்சி

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது 5
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்- பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் 10
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?

அழகிய வரியையும் அகன்ற வாயையுமுடைய புலியேற்றை இடமகன்ற மலையின் கண்ணே களிற்றியானையோடு போர் செய்கையில்; அவற்றாலுண்டாகும் துன்பத்துக் கஞ்சாத குறவரின் இளமைந்தர்கள் ஆண்டுள்ள பெரும் பாறையினுச்சியிலே மனச்செருக்கோடு ஏறித் தமது கையிலுள்ள சிறிய தொண்டகப் பறையை ஒலிப்பிக்கும் ஓசையானது; பக்கத்திலுள்ள பசிய அடித்தண்டினையுடைய செவ்விய தினைக் கதிர்களைக் கொய்ய வந்திறங்குகின்ற கிளிகளை அச்சுறுத்தி யோட்டாநிற்கும் நிரம்பிய ஒலியையுடைய மலைநாடனது; மார்பை விரும்பித் தனித்துறைகின்ற யான் ஒருத்தியே யல்லாமல்; இரவு நடுயாமத்திலே பாம்பு உறையும் பிளப்புக்களையுடைய உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழும்படியாகச் சினந்து இடிமுழங்கி மோதுகின்ற இருட்பொழுதையும்; நடந்து செல்லக் கூடாதவாறு பெரு வெள்ளங் குறுக்கிட்டு ஓடுகின்ற சாரலின்கண்ணே நோக்குதற்கரிய சிறிய நெறியையும்; கருதுகின்றவர் பிறர் யாவரேனும் உளரோ?; உளராயின் நம் காதலரை இரவுக் குறிமறுத்து வரைவிடைப் படுத்தாநிற்பர்;

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 105. பாலை

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் 5
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய- நெஞ்சே!- குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே. 10

நெஞ்சே ! காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியையுடைய இலவமரத்தின் விளங்கிய கிளைகள் நடுங்கும்படி வீசி; அவை முறியுமாறு கொடிய காற்று மோதியடிக்கின்ற மூங்கிற்புதர் நெருங்கிய இடங்களிலே; கடிய செலவினையுடைய பிடிகள் தத்தங் கன்றுகளுடனே சேர வருந்தாநிற்ப நெடிய நெறி முழுதும் நீரில்லாதொழிந்த நிழல் அற்ற செல்லுதற்கரிய சுரத்தின்கணுள்ள கவர்த்த நெறிகளையுடைய அவ்விடமென் றெண்ணாயாய்; குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழையுடைய குவளையின் வண்டு மொய்க்கும் பெரிய மலரைச் சூடுதலானே மணங்கமழ்கின்ற அழகிய சிலவாய கூந்தலையுடைய நங் காதலி நீங்குதற்கரிய துன்பத்தாலே வருந்தவிட்டு; நீதான் நெடுந்தூரம் வந்துற்றனை; இங்குப் போந்த பின்பு கருதி மீளலுறாநின்றனையாயின் நின் முயற்சி நனி நன்றாயிரா நின்றது, இத்தகைய முயற்சிகளோடு நீ நீடு வாழ்வாயாக !;

இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது. - முடத்திருமாறன்

நற்றிணை - 106. நெய்தல்

அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, 5

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?

பாகனே ! பெரிய கடலின் மோதுகின்ற திரையாலே கொழிக்கப்பட்ட மணன் மேட்டில் நறுமணம் வீசாநிற்ப; விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஞெண்டைப் பிடிக்குமாறு சென்றவழி அஞ்ஞெண்டு ஓடுமிடத்தே பின் தொடர்ந்து செல்ல ஆற்றாது களைப்புற்று அதன்மீது சென்ற விருப்பம் நீங்கியிருந்த குற்றமற்ற இளமையுடையாளிடத்து; இப்பொழுது வருந்துகின்றேனாகிய யான் சென்று என் உள்ளத்தின்கண்ணே யுள்ள வினைவயிற் செல்ல வேண்டிய கவற்சியைக் கூறிய அளவிலே; மறுமொழி கூறுதற்கு நாவெழாமையால் ஆற்றாளாய்; நறிய மலரையுடைய ஞாழலினது தாழ்ந்த அழகிய கிளையிலுள்ள பூங்கொத்தைச் கொய்து அதனோடு இளந்தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையையுடையளாகி; அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தினிலையை நீ; அறிந்திருத்தலையும் உடையையோ? உடையையாயின் அதற்கேற்றபடி கடவுவாயாக!;

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது. - தொண்டைமான் இளந்திரையன்

நற்றிணை - 107. பாலை

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், 5

புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
யானே, தோழி! நோய்ப்பாலேனே. 10

தோழீ! பெரிய உகிரையுடைய பிடியானை தின்னுதற் பொருட்டு மேலுள்ள தோலைப் பறித்துக் கொண்டதனால் நாரில்லாத வெளிய கிளைகளையும் பற்றுக்குறடு போன்ற காய்களையுமுடைய வெளிய பூங்கொத்துக்களையுடைய வெட்பாலையினுடைய; ஓடுகின்ற காற்று அசைத்தலினால் இலை யுதிர்ந்த கிளையிலுள்ள நெற்றுக்கள் மலையினின்று விழும் அருவியைப் போல ஒல்லென்னும்படி ஒலியாநிற்கும்; புல்லிய இலையையுடைய ஓமையையுடைய புலி இயங்குகின்ற சுரத்து நெறியிலே சென்ற என் காதலர்பால்; அவரை வழிபட்டுப் பின்னே சென்றொழிந்த என்னெஞ்சம் முன்பு செய்த நல்வினையின் பயனை இப்பொழுது துய்ப்பதாயிராநின்றது; அந்த நெஞ்சுபோல நல்வினை செய்திலாதேனாகலின் இங்கே தங்கி ஊரார் தூற்றும் அடங்காத பழிச்சொல்லைச் சூடப்பெற்ற யானே தோழீ ! தீவினையின் பாலேனாகி அதன் பயனை நுகராநின்றேன்; இங்ஙனம் இருவினைப் பயனையும் நுகருமாறு பெற்றதனை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே யானே என்னை நகுவது செய்யா நிற்பேன்காண்!;

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

நற்றிணை - 108. குறிஞ்சி

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! 5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

மலைப்பக்கத்து முளைத்துத் தழைத்த கரிய நிறமுடைய தினைப்புனத்தைத் தின்னக் கருதித் தன் பிடியை விட்டு நீங்கிய கொடிய களிற்று யானை வந்து புகுந்ததை நோக்கிய; அழகிய குடியிலுள்ள குறவர் கணையுடையவரும் கிணைப்பறையுடையவரும் கை விரலிலே கோத்த கவணுடையவரும் கூவிப் பேரிரைச்சலிடுபவருமாகிக் குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரித்துச் சூழும் மலைநாடனே! பழகிய பகையும் பிரிவு இன்னாது பழகியிருந்த பகைவராயினாரும் அருகிலிருந்து பிரிவரென்றால் அப்பிரிவுதான் முன்பு பழகினார்க்கு இன்னாமையைத் தருவதொன்றாகுமன்றோ!; அங்ஙனமாக நின்னை யின்றியமையாத முல்லை யரும்பு போன்ற இலங்கிய எயிற்றையும் இனிய நகையையுமுடைய மடந்தையினது சுடர்போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியிலே பசலையூருமாறு; நீ அவளது தொடர்ச்சியை எவ்வண்ணம் கைவிட்டனை ? இதனைக் கருதியே யான் வருந்தாநின்றேன் காண்;

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

நற்றிணை - 109. பாலை

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
அன்னவோ, இந் நன்னுதல் நிலை? என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென 5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! 10

நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்ந்தும் என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்;

பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது. - மீளிப் பெரும்பதுமனார்

நற்றிணை - 110. பாலை

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
உண் என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, 5
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, 10
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; தௌபிந்த ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி நீ உண்ணுவாய் என்றதன் விடையாக; யான் உண்ணேன் காண்! என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; நல்ல அறிவும் ஆசாரமும் எப்படி உணர்ந்தனளோ? கொண்டகொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் தன்கை பற்றிய கொழுநன் குடி வறுமையுற்றதாகத் தன்னை ஈன்றுதவிய தந்தையினது செல்வமிக்க உணவை நினைகிலளாகி; ஓடுகின்ற நீரிலே இடையீடுற்றுக் கிடக்கும் நுண்ணிய மணல் போல ஒரு பொழுதின்றி யொருபொழுதுண்ணும் சிறிய வன்மையுடையளாயினாளே, இஃதென்ன வியப்பு; ம்.) அரி பருக்கைக்கல். அரிநரை மெல்லியநரை. பரிதல் ஓடுதல். உவகைக் கலுழ்ச்சி. பயன் ஆற்றாமை நீங்குதல். இஃது உரிப் பொருளாற் பாலை. உவகை. பயன் மகிழ்தல்.(பெரு ரை.) பிரசம் தேன். தேன் கலந்த சுவைமிக்க வெளிய இனிய பால் எனலே சாலும். தேன் கலந்தா லொத்த எனல் வேண்டா கூறலாம். புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்பதற்குப் புடைத்துழிப் புடைக்கப்படுவோரைச் சுற்றிக்கொள்ளும் இயல்பு;

மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம். - போதனார்

நற்றிணை - 111. நெய்தல்

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்,
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, 5
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி,
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே- தோழி!- கொண்கன் தேரே. 10

தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் !

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.

நற்றிணை - 112. குறிஞ்சி

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, 5
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

தோழீ ! மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கையின்கண்ணே சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ள வெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் இயங்கா நிற்கும் பெரிய மலைநாடன்; கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று; கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; யான் யாது கைம்மாறு செய்ய மாட்டுவேன் ?

பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார்

நற்றிணை - 113. பாலை

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே 5
சேறும், மடந்தை! என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர,
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் 10
ஆம்பல்அம் குழலின் ஏங்கி,
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!

மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; அவள் தான் தன்னுடைய நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்கள் வருத்தம் மிகப்பின்னுகின்ற (கரிய) கூந்தலை விரித்து அதனுள்ளே மறைந்து நின்று பெரிதும் கலக்கமடைந்து; உதியஞ் சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தின்கண்ணே; களம்பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல; வாய்விட்டழுது கலங்கிய வருத்தமுறுகின்றவளினுடைய துன்பங்கொண்ட பார்வைகள் தாம்; மானினம் நிமிர்ந்து தழையுண்ணுதலினாலே சிறிது வளைந்த உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தை மரங்களின் மேலே களியையுடைய பசிய காய்; பரல் பொருந்திய சிறிய நெறியின்கண் உதிர்ந்து நிறையப் பரவாநிற்கும்; பெரிய சுரத்தைக் கடந்தும் ஈங்கு எம்முன்னே அடைய வந்தன; இஃதென்ன வியப்பு !;

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது. - இளங்கீரனார்

நற்றிணை - 114. குறிஞ்சி

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
அளிதோ தானே- தோழி!- அல்கல் 5
வந்தோன்மன்ற குன்ற நாடன்;
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்;
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, 10
மையல் மடப் பிடி இனைய,
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

தோழீ! ஈரிய குரலின் மிக்க ஓசையையுடைய இடியேறு பாம்பின் அழகைக் கெடுக்கின்றதாகி உயர்ந்த மலைமேல் மோதி; கரிய நிறத்தையுடைய இளம்பிடி வருந்துமாறு தனது துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றின் மேலே பாய்ந்து அதனைக் கொன்றொழிந்தது; அங்ஙனம் இறந்த யானையை நம் ஐயன்மார் பிளந்து அதன் வெளிய கோடுகளையெடுத்து அகன்ற பாறையின்கண்ணே ஊன்காயுமாறு போகடுவதாகவும் அதன் பசிய ஊனை அழித்து மிகப் பெரிய உகிர்களைப் புதைப்பதாகவும் பேசிக் கொள்ளுகின்ற இவற்றாலே; புலவு மணங் கமழ்கின்ற சிறுகுடியிலுள்ள தெருவுதோறும் உண்டாகும் ஆரவாரத்தை இரவு முழுதும் துயிலாதிருந்து கேட்டு வருந்தினேன்; அத்தகைய இரவிலே குன்ற நாடனும் திண்ணமாக இரவுக்குறி கூடும்படி கருதி வந்தனன்காண் !; அவன் வருநெறியில் மழையின் துளி பெய்தலாலே பொறிக்கப்பட்ட புள்ளிகளையுடைய பழைமையாகிய கரையை மோதுகின்ற உயர்வையுடைய அலைகளோடு வருகின்ற கான்யாற்றினைக் கருதி யான் அஞ்சா நின்றேன்; ஆதலின் அவன் இரவுக்குறி வருதல் இரங்குவதற்குரிய தொன்றாயிரா நின்றது;

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது. - தொல்கபிலர்

நற்றிணை - 115. முல்லை

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர் என,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி 5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்
அன்பினர்- வாழி, தோழி!- நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; 10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

தோழீ! வாழி அகன்று விரிந்த பொய்கையின் கண்ணுள்ள மலர்களைக் கொய்து வந்த துவட்சியால் வருந்திய தோழியர் குழாமெல்லாம் தம் மெய்ந்நோவொழிந்து இனிதாக வுறங்கவேண்டி; அன்னையும் நம்மீதுகொண்ட சினம் சிறிது தணிந்து உயிர்ப்புடையளாயினாள்; அவள் அங்ஙனமாகிய பொழுது முகிலும் இனிய நீரையுடைய பெரிய கடலின் நீர் சில என்னும் படியாக வாயினாலுண்டு; மயிலின் அடிபோன்ற கரிய கதிராகிய பூந்துணரையுடைய நொச்சி வேலியின்மீது இல்லின் நடுமுற்றத்தில் முளைகொண்டெழுந்த முல்லை கூரை மேலாலே சென்று படர்ந்து அவ்விரண்டும் முறையே அரும்பவிழ்ந்து மலருமாறு இன்று நாட்காலை எதிர்போந்து கார்ப்பருவம் செய்யலாகியது கண்டாய், அஃது அங்ஙனமாக; இப்பொழுது நங்காதலர் மிக்க சேய்மையின் கண்ணதாகிய நாட்டில் உறைபவராயினும்; நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலின் அங்கே தாங்கொண்ட வினை முடித்தலால் அளவில்லாத புகழையடைவதாயினும் குறித்த பருவவரவின்கண் வாராது ஆண்டுறைபவரல்லர், அவர் வருமளவும் நீ வருந்தாதே கொள்!; இன்றுதான் பருவந் தொடங்குகின்ற தென்பதன் குறியாக அம்மேக முழங்கு மிடியோசையை யான் கேளாநின்றேனல்லனோ?

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

நற்றிணை - 116. குறிஞ்சி

தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்பமாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் 5

மலை கெழு நாடன் கேண்மை, பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த 10
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே!

கொடிய தீத்தொழிலைச் செய்பவரிடத்து அச்செயலை நேரிலே கண்டு வைத்தும் உள்ளத்தாலாராய்ந்து அத்தொழில் செய்வோர் இனி அதனைச் செய்யா தொழிவாராக என்று பலபடியாக நுவன்று பெரியோர் பொறுத்திருப்பர்; அங்ஙனமுமாகாது சூல் முதிர்ந்த இளம்பிடியானை அறியாமையாலே தன் வயிற்றிலுள்ள சூல் அழிந்து புறம் போந்து விழுமாறு பெரிய மூங்கிலில் முளைத்தெழுந்த இலையில்லாத கொழுவிய முளையை விடியலிலே சென்று தின்னாநிற்கும்; மலைவிளங்கிய நாடன் என்னைக் கை விட்டமை(யால)ந் அவனுடைய கேண்மையானது; பலாவின் கரிய கிளையினின்று கனிந்து கீழே விழுகின்ற காய் முதிர்ந்த பெரிய பழம் பிறர் உண்ணாதபடி மலையின் பிளப்பாகிய அளையினுள் விழுந்தொழிந்தாற்போல தொடர்ச்சியறப் பன்னாளின் முன்னே சென்றொழிந்தது; அதனை அறியாது பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டிலிருந்த குறிஞ்சியிலுள்ள நல்ல ஊரின்கணிருக்கும் பெண்டிர்தாம்; என்னிமித்தமாக இன்னும் பழிகூறுதலை ஒழிந்தாரிலர்; இனி யான் அதனை எவ்வண்ணம் ஆற்றுவேன் ?

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது. - கந்தரத்தனார்

நற்றிணை - 117. நெய்தல்

பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் 5

கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்- வாழி, தோழி!- என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்; 10
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.

தோழீ ! நீ வாழி; பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; காக்கைகள் ஒருசேர மணம்வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; வளைந்த ஆதித்த மண்டிலம் சிவந்து தோன்றி அத்தமனக் குன்றைச் சென்றடைந்து எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி அதனையுடன் கொண்டுவந்த புன்கண் செய்யும் மாலைப்பொழுதில்; அத்தலைவர் தாம் என்னை நினையாராகி அகன்றொழிந்தால்; அதனா லென்பாலுண்டாய காமநோயாலாய வேறுபாடு முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டுந் அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; இனி யான் நெடுநாள்காறும் உயிரேடு வாழ்ந்திரேன் காண் !

வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம். - குன்றியனார்

நற்றிணை - 118. பாலை

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர் என, 5

இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
புது மலர் தெருவுதொறு நுவலும் 10
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

யாற்றை அடுத்த கரையின்கணுள்ள மாமரங்கள் நெருங்கிய கிளையெல்லாம் தழையும்படி தளிர் ஈன்று அழகமைந்த தண்ணிய நறிய சோலையின்கண்ணே; சேவலுடனே பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில் ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்; பூங்கொத்தினையுற்று மலர்கள் மலரும் இளவேனிற்காலத்தும்; முன்பு பிரிந்தகன்ற காதலர் திண்ணமாக நம்மை மறந்தனர் என வருத்தமுறுவதன் மேலும்; தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒள்ளிய அரக்கினையூட்டிய எழுதுகோல்போன்ற தலையில் நுண்ணிய ப
ஞ்சினையுடைய பாதிரியின் வெளிய இதழையுடைய மலர்களை; வண்டுகள் மொய்க்கும்படி வட்டியிலேந்தி அப்புதிய மலரைத் தெருவுகள் தோறும் விலைகூறிச் செல்லாநின்ற ஏதிலாட்டியாகிய பூவிலைமடந்தையை நோக்குந்தோறும் என்னெஞ்சு நோவாநின்றது; ஆதலின் யான் இனி எவ்வண்ணம் ஆற்றியுளேனாவேன் ?

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 119. குறிஞ்சி

தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் 5

பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்; 10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; அவன் குளவியுடனே கூவிளமலரிடையிட்டுக் கட்டிய நெருங்கிய மாலையுடைவனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்? தலைவியின் முயக்கத்தை இனி எவ்வளவேனும் அடைபவனல்லன்; அது காரணமாகத் தன் மலையினுங்காட்டிற் பெரிதாகப் புலந்து கொள்ளினும் புலந்துகொள்வானாக!;

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - பெருங்குன்றூர்கிழார்


நற்றிணை - 120. மருதம்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, 5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, 10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

வளைந்த கொம்பினையுடைய எருமையின் இளநடையையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காட்சி மிகுதியால் யாவரும் காணத்தக்க நல்ல மனையின்கண்; வளைந்த குண்டலத்தைக் காதிலணிந்த செழுவிய செய்ய பேதைமையையுடைய காதலி சிறிய மோதிரஞ் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக; வாழையிலையைக் கொய்துவந்து அடிக்காம்பு பருத்திருத்தலின் அதனை வகிர்ந்து பரிகலமமைத்து அடிசிலாக்குதலாலே புகைபடிந்து அமர்த்த கண்களையுடையளாய்; அழகுபெறப் பிறை போன்ற நுதலினுண்டாகிய சிறிய நுணுகிய பலவாய வியர்வை நீரை அழகிய முன்றானையினுனியாலே துடைத்துக்கொண்டு; நம்மீது புலவி மிக்கு அடிசிற்சாலையிடத்திராநின்றாள்; இப்பொழுது விருந்தினராய் வருபவர் எம்முடன் வருவாராக! அங்ஙனம் வரின்; இந்த அழகிய மாமைநிறத்தையுடைய அரிவை சினங்கொண்டு ஒருபொழுதும் கண் சிவப்பதில்லை, அன்றியும் குறுமுறுவல் கொண்ட முகத்தினளாய் இருப்பள்; ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற எயிறு சிறிது தோன்றுமாறு நகை கொண்ட முகத்தையாம் காண்பேமாகி யிராநிற்போம்;

விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது. - மாங்குடி கிழார்

நற்றிணை - 121. முல்லை

விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: 5
எல்லி விட்டன்று, வேந்து எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!- காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, 10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!

அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க; எழுந்து தண்ணிய மழை பெய்தலாலே பெருகிய கான் யாற்றினருகில் இடப்பட்ட மணலானாகிய கரைபின்னே செல்லும்படி போந்து; நின் புதிய வரவை விரும்பி ஏற்று மகிழும் மனைவியினுடைய மென்மையாயுயர்ந்து பருத்த தோளின் கண்ணவாகிய துயிலை விரும்புகின்ற இறைவனே !; நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே கொள் !; நின் மாலை வாடாது நீடு வாழ்வதாக; நீ விரும்பிச் செல்லும் காதலியின் ஊர்; விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணை மான்; மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாநிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது கண்டனையாதலின் விரையச் சென்று இன்னே காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்துகிற்பேன் காண்!;

வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது. - ஒரு சிறைப்பெரியனார்

நற்றிணை - 122. குறிஞ்சி

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென;
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின;
நரை உரும் உரறும் நாம நள் இருள் 5

வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று? என
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்- 10
பூ வேய் கண்ணி!- அது பொருந்துமாறே.

நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!;

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது. - செங்கண்ணனார்

நற்றிணை - 123. நெய்தல்

உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
கானல் ஆயமொடு காலைக் குற்ற 5
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் 10
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.

தோழீ வாழி!; கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்!

தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - காஞ்சிப் புலவனார்

நற்றிணை - 124. நெய்தல்

ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-
நீங்கல்; வாழியர்; ஐய!- ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், 5
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தௌபிந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது. - மோசி கண்ணத்தனார்

நற்றிணை - 125.குறிஞ்சி

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என, 5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்- தோழி!- மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, 10
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.

தோழீ! தனக்கு வேண்டும் இரையை நாடுகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடி வளைந்த வரிகளையுடைய புற்றுக் கிடைத்தலும்; அதனைப் பெயர்த்து அதன்கண்ணே உறைகின்ற நல்லபாம்பு நடுங்குமாறு முழங்கி இரும்புசெய் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்கே போல உள்ளே பெருமூச்செறிந்து பறிக்காநிற்கும்; இரவு நடுயாமத்தில் நீயிர் வருதலையறிந்து யாம் அஞ்சுகின்றோமென்று கூறி இனி வரைந்து எய்தும்படி இரந்து கேட்போமாயின்; நமது மலையின்கண்ணே நாள்நீட்டியாது நல்ல நாளில் நம்மை மணம் புரிந்துகொண்டு; வேங்கை மலர் மாலை சூடுகின்ற குறவர் எருதையோட்டிக் கதிர்ப் போரடிக்கும் மருதநில மாந்தர் களம் செப்பஞ் செய்தாற் போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய கற்பாறையிலே; மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும் பொருட்டு; வைகறையிலெழுமாறு துஞ்சுகின்ற களிறு முழங்கி எழுப்பாநிற்கும்; தமது பெரிய மலை நாட்டகத்தே நம்மொடு மெல்லச் செல்வார்காண்!;

வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

நற்றிணை - 126. பாலை

பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் 5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால், 10
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே!

நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!;

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.

நற்றிணை - 127. நெய்தல்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?- பாண!- பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், 5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம் என்னும், கானலானே.

பாணனே! எம் பேதையானவள் கொழுவிய மீனை யுண்ணுதலையுடைய செழுமையுற்ற மாளிகையில் நிறைந்த தன் ஐயன்மார் தமது தொழிலன்றி ஏனைய ஒன்றுங் கல்லாத சினமுடையராயிருப்பவும்; பண்டு தோழியரோடு தான் வண்டல் விளையாட்டு அயர்தற்குத் தான் ஈனாது வைத்த பாவை தலைக்கீடாகக் கொண்டு; அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனை அல்லாமலும் கழிக்கரைச் சோலையின்கண் விளையாடச் செல்வோமாக என்று கூறாநிற்பாள்; அதனால் கரிய கழியிலே இரை தேடித் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரை தன் சிறகை உதறுகின்ற திவலையாலே குளிர்ந்து நடுங்குகின்ற நமது பாக்கத்தில்; அந்த மெல்லம்புலம்பன் வருதலால் யாது பயனோ? ஆதலின் அவன் இனி வரற்பாலன் அல்லன்காண்!

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - சீத்தலைச் சாத்தனார்

நற்றிணை - 128. குறிஞ்சி

பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே என்று, நனி 5

அழுதல் ஆன்றிசின்- ஆயிழை!- ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு 10
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து கொள்ளப்பட்ட திங்களின் ஒளி கெடுதல் போல நெற்றியின் ஒளி மறைபடவும் அக்காரணத்தை நீ எனக்கு உரைத்தாயல்லை; நினக்கு யான் ஓருயிரை இரண்டுடம்பின் கண்ணே பகுத்துவைத்தாற் போன்ற நின்னோடு தொடர்ச்சியுற்ற மாட்சிமையுடையேனாதலால் நீ இப்பொழுது மறைத்தொழுகு மதனை யான் அறிந்துளேன் என்று நீ கருதி; யான் நினக்கு அதனை உரையாததன் காரணமாக மிக அழுது வருந்தாநின்றனை; இனி இங்ஙனம் அழாதேகொள்!; தலை சாய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தே காவல் செய்யுமிடத்துக் கண்ணி சூடிக் கழல் அணிந்து மாலை வேய்ந்துளனாகி ஒருவன் வந்துற்று உள்ளங் குளிர்பூறும்படி என் முதுகை அணைத்துப் புல்லினனாக; அது முதற்கொண்டு அதனையே கருதிய உள்ளத்துடனே இப்பொழுது யான் உற்ற நோய் இத்தன்மையதாய் இராநின்றது;

குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம். - நற்சேந்தனார்

நற்றிணை - 129. குறிஞ்சி

பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை 5
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.

தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் யாவரும் பெரிதும் நகைக்க வல்ல ஒரு செய்கையைக் கேட்பாயாக!; நம்மை அவர் இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தமியராய் வினைவயிற் செல்லக் கருதியுள்ளார் என்று உழையர் கூறாநிற்பர்; அவர் தனியே சென்று தமது வினை முடித்து வருமளவும்; நிறம் விளங்கிய படப்பொறியையுடைய அரவினது தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது முழங்குகின்ற முழக்கத்தை; இரவு நடுயாமத்துந் தமியமாய் இருந்து கேட்டு நாம் நமது மனையின்கண்ணே அதன் மேலும் உயிர் வாழந்திருக்ககடவே மென்றுங் கூறாநிற்பர்; இஃதென்ன கொடுமை காண்!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது. - அவ்வையார்

நற்றிணை - 130. நெய்தல்

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? 5
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி? என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் 10
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.

தோழீ ! தௌபிந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எவ்வளவு விருப்புடையவராயினும்; இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது நிறமும் பார்த்து; பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்?

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது. - நெய்தல்தத்தனார்

நற்றிணை - 131. நெய்தல்

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, 5
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?

உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள்ளின் மணங் கமழும் பொறையாறு என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?;

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண் என்றாற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 132. நெய்தல்

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் 5
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
காப்புடை வாயில் போற்று, ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்; 10
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன் மேலும் காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ! என்று கூறாநின்ற; யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ?

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 133. குறிஞ்சி

தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று- திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று, 5

வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!- காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌத்த
தோய் மடற் சில் நீர் போல, 10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

என்பால் விருப்ப மிக்க தோழீ! தித்தியின் சிலவாய புள்ளிகளமைந்த பலவாய வடங்களையுடைய காஞ்சி யணிந்த அல்குலையும் நீலமணி போன்ற கூந்தலையும் உடைய இம் மாமை நிறம் உடையாட்கு; தோள்கள் தாம் அணியப் பெற்ற வளை சுழன்று கழலுதலை நீங்கிற்றில, கண்களும் வாளாற் பிளந்த மாவடுப் போன்ற வடிவை இழந்தன நெற்றியும் பசலை பரவியது என்று; கொடிய வாயையுடைய ஏதிலாட்டியர் பழிச்சொல் எடுத்துத் தூற்றாநிற்கும்படி; நங் காதலர் அச்சமிகுகின்ற துன்பத்தை நமக்குச் செய்குபவர் அல்லர் ஆதலால் அவர் விரைய வருகுவர் என்று நீ என்னைத் தேற்றிக் கூறுகின்ற என்பால் அன்பு மிக்க இச் சொல்லானது; இரும்பு வேலை செய்கின்ற கொல்லன் தான் வெய்ய உலையிலே தௌபித்த பனைமடலாலே தோய்த்தலையுடைய சிலவாய நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல; காமநோய் மிக்க என் நெஞ்சில் அந் நோயைச் சிறிது தணித்து எனக்குப்ந் பாதுகாவலராயிராநின்றது காண் !

வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது. - நற்றமனார்

நற்றிணை - 134. குறிஞ்சி

இனிதின் இனிது தலைப்படும் என்பது
இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், கொடிச்சி!
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக! என, 5
ஏயள்மன் யாயும்; நுந்தை, வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே! 10

தோழீ! வாழ்வாயாக!; நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; என்னை நோக்கிக் கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக! என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; அன்றியம் நுந்தை என்னைக் கூவி அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல், என்று; மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம்ந் காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது;

இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.

நற்றிணை - 135. நெய்தல்

தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே- பனி படு 5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய நிலத்து வருந்தி வருதலாலுண்டாகிய குறைந்த செலவினையுடையவாய் ஒலிக்கின்ற அலைமோதிக் கொழிப்பக் கிடந்த புதிய மணலிலே தேருருள் அழுந்துதலானே செல்லமாட்டாது சுழலாநிற்கும்; வெளிய பிடரிமயிர் பொலிவு பெற்ற புரவிபூட்டிய தேரினையுடைய தலைவரொடு மகிழ்ந்து ஊடாடாத முன் உவ்விடத்தே; தொங்குகின்ற ஓலையையும் நீண்ட மடலையும் உடைய பனையினது கரிய அடி மரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின்கணிருந்து; அளவுபடாத உணவுப் பொருளை வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்துக்கொடா நிற்கும்; மெல்லிய குடிவாழ்க்கை யுடையராயிராநின்ற அழகிய குடியிருப்பையுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது; அவரொடு மகிழ்ந்து ஊடாடிய பின் அவர் நமது அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது;

வரைவு நீட்டிப்ப அலர்ஆம் எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது. - கதப்பிள்ளையார்

நற்றிணை - 136. குறிஞ்சி

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை- வாழிய, பலவே!- பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய 5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. 10

திருந்திய கோற்றெழில் அமைந்த ஒளி பொருந்திய தோள்வளையை விரும்பி அது பெறாமையாலே யான் அழுதலும்; என் தந்தை தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர்க்கு அவர் விரும்பியதைக் கொடாது ஆராய்ந்து அந் நோய்க்குத் தக்க மருந்துகொடுத்த அறவாளன் போல; யாவராலும் புகழப்படுகின்ற மலையையுடைய நாட்டையுடைய நங் காதலனும் நாமும் ஒருவரையொருவர் இடையிடை விட்டுப் பிரிகின்றதன் உண்மை சிறிதளவுதானும் அறிந்தவன் போல; யான் வேண்டாமென்று கழற்றினாலும் கழன்று நீங்காது ஒருபொழுது கழன்றாலும் தன்னெல்லை கடவாமே தங்கி எனக்குண்டாகிய தோளின் பழியை மறைக்கின்ற; உதவியையுடைய கெடாத பொன்னாலாகிய தோள்வளை செய்து தந்து செறிக்கச் செய்தனன்; ஆதலின் அவன் நெடுநாள்காறும் வாழ்வானாக;

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது. - நற்றங் கொற்றனார்

நற்றிணை - 137. பாலை

தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய- நெஞ்சே!- செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, 5
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! 10

நெஞ்சே! செவ்விய மலையருவியின்கண்ணே அமைந்த நீர் இல்லாத நீண்ட நெறியிடத்தில்; மெல்லிய தலையையுடைய இளைய பிடியானையின் வருந்திய பசியைப் போக்குமாறு; பெரிய களிற்று யானை முறித்துத் தள்ளிய வளைந்த அடியையுடைய ஓமைமரம் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லுபவருக்குத் தங்கும் நிழல் ஆகாநிற்கும்; குன்றங்களை இடையிடையே கொண்ட கானத்துட் புகுந்து நெடுந்தூரம் அகன்று போதலைக் கருதிய நீ; மெல்லியவாய்க் கமழ்கின்ற பிடரியிலே தாழ்ந்த கரிய கூந்தலையும் அகன்ற மென்மையாகிய பருத்த தோளையும் மடப்பத்தையும் உடைய நல்ல நங் காதலியை; கைவிட்டுப் பிரிதற்கு எண்ணா நின்றனை, அதனை ஆராயுமிடத்து; இதுகாறும் அடைதற்கு அரியதும் இவளினுங்காட்டிற் சிறந்ததுமாகிய ஒருபொருளை அடைந்து விட்டனைமன்; நீ அங்ஙனம் அடைந்த பொருளோடு நீடு வாழ்வாயாக! யான் இவளொழிய வாரலேன்காண்!

தலைவன் செலவு அழுங்கியது. - பெருங்கண்ணனார்

நற்றிணை - 138. நெய்தல்

உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு 5
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும் 10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்; தண்ணிய கடலினது துறையையுடைய தலைமகன்; முன்னை நாளிலே பசிய இலையிடைநின்றும் வெளியில் வந்த திரண்ட தண்டினையுடைய நெய்தன் மலருடன்; நெறிக்கின்ற இலையை இடையிடையிட்டுத் தொடுத்த மாலையை நினக்குச்சூட்ட; அதனைக் கண்ணால் அறியக் கிடந்த தொன்றன்றி; நுண்ணிய கம்மத் தொழிலான் ஆக்கிய கலனையணிந்த அல்குலையுடைய விழாக் களத்துத் துணங்கையாடு மகளிரினுடைய; இனிய தாள அறுதி முழங்கும் கடல் ஓசை போலே பரவா நிற்கும்; ஒலியையுடைய இவ்வூர் பிறிது ஒன்றனையும் அறிந்ததில்லை; அங்ஙனமாக நீ ஆற்றாது வருந்துகின்ற தென்னையோ?

அலர் ஆயிற்று என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 139. முல்லை

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின் 5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! 10

பெரிய ஓசையையுடைய மேகமே!; மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று படுமலை என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; இவ்வுலகத்துக்கோர் ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; பொருந்தி உலாவுவாயாக;

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது. - பெருங்கௌசிகனார்

நற்றிணை - 140. குறிஞ்சி

கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை 5
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!- என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும் 10
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்!

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது. - பூதங்கண்ணனார்

நற்றிணை - 141. பாலை

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல, பல உடன் 5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த 10
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

நெஞ்சமே! பெரிய செவ்விய மத்தகத்தையுடைய வளைந்த கவுளையும் அகன்ற வாயையுமுடைய கரிய மேகம் போன்ற யானையின்; விலா வுரிஞ்சுதலானே பொரிந்துள்ள அடிபரந்த உள்ளே துளைபொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள்; குன்றின்கண்ணே யுறைகின்ற நீண்ட சடையையும் அசையாத மெய்யையுமுடைய தவஞ்செய்பவர் போலே பலவும் வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகுபெறத் தோன்றாநிற்கும்; செல்லுதற்கரிய சுரம் நினக்கு மிக எளிய ஆகும் ஆதலின் நீயே சென்றுகாண்; கொல்லும் பிணங்களிலே பருந்து விழுந்து அலைக்குமாறு பகைவருடைய தேர்ப்படையோடு போர் செய்து வென்ற பலவாய சருச்சரையுடைய நீண்ட கையையும் தலையேந்திய கோட்டினையுமுடைய யானைப்படையையுடைய புகழ்விரும்பிய கிள்ளி வயளவனது; புதுவதாக அலங்கரித்த உயர்ந்த கொடி கட்டிய அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் தௌபிந்த கருமணல் போன்ற; இவளுடைய விரிந்த தழைந்த கூந்தலின்கண்ணே துயிலுவதனைக் கைவிட்டுச் சிறிது பொழுதேனும் அமைகுவேன் அல்லேன்;

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது. - சல்லியங்குமரனார்

நற்றிணை - 142. முல்லை

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, 5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே- பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின், 10
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.

இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின்ந் இறுதி நாளிலே; கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் வீளை எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்;

வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

நற்றிணை - 143. பாலை

ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
கிள்ளையும், கிளை எனக் கூஉம்; இளையோள் 5
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே. 10

உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; அவள் வளர்த்த கிளியும் அன்னாய்! துயிலுணர்தி எனக் கூவா நிற்கும்; இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்;

மனை மருட்சி. - கண்ணகாரன் கொற்றனார்

நற்றிணை - 144. குறிஞ்சி

பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப் 5
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே. 10

தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்!

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

நற்றிணை - 145. நெய்தல்

இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு 5
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
தான் யாங்கு? என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
நள்ளென் கங்குலும், வருமரோ- 10
அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே!

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; கரிய கழியின் கண்ணுள்ள நீர் அலையினால் மோதுதலானே ஈரமாகிய வெளிய மணலிலே படர்ந்த வலிய கொடி அடும்பின் பெரிய இதழையுடைய மலர்; மகளிரின் கூந்தலிலிடுகின்ற மாலைக்குக் கூட்டாநிற்கும்; கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; அச்சந்தரும் வெய்ய நட்பானது; பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாதிருந்தும்; நம் அறன் இல்லாத அன்னையானவள்; நம்மொடு அவன் புணர்ந்தனன் போல வெளிப்படையாகச் சொல்லி; அவன் தான் இப்பொழுது யாங்குளன் என்று கூறாநிற்கும்; அன்றி நீயும் நின் எழுச்சி முதலியன என்னால் அறிதற்கும் உரியள்; நம்முடைய பருத்த அடியையுடைய புன்னை மரங்களையுடைய சேரியின்கண்; இரவில் நடுயாமத்திடையிருளிலும் அவர் தேரிலுள்ள மணியினோசை மெல்லவந்தொலியாநிற்கும்; இதற்கு யான் யாது செய்ய வல்லேன்? யாதாகி முடியுமோ;

இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது. - நம்பி குட்டுவன்

நற்றிணை - 146. குறிஞ்சி

வில்லாப் பூவின் கண்ணி சூடி,
நல் ஏமுறுவல் என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, 5
இருந்தனை சென்மோ- வழங்குக சுடர்! என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய 10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!

அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மயக்கத்தையுடைய நெஞ்சமே!; விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடிய கரிய பனைமடலாலே கட்டிய குதிரையையுடையாய்; நீ என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவையாயின்; ஞாயிறுதான் வெயில் வீசி ஒடுங்குவதாக என்று அவ்வெயிலின் வெம்மை அடங்குமளவும்; முறை தெரிந்து உலகைப் பாதுகாக்கும் அரசரின் குடைநிழல் குளிர்ச்சியுறுமாறுபோலே பெரிய தண்ணென்ற மரத்தின் நிழலின்கண்ணே; குதிரையினின்றிழிந்து சிறிது பொழுது தங்கியிருந்து பின்பு செல்வாயாக!

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - கந்தரத்தனார்

நற்றிணை - 147. குறிஞ்சி

யாங்கு ஆகுவமோ- அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்? எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, 5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, 10
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?

தோழீ! அன்னையானவள் என்னை நோக்கி அழகிய நெற்றியையுடைய இளமகளே! இடமகன்ற மலைச் சாரலின்கணுள்ள சிறிய தினையின் பெரிய கதிரை; சிவந்த வாயையுடைய பசிய கிளி கொய்துகொண்டு போகின்ற அளவும் நீ அதனைக் காவாது ஆங்குநின்று எவ்விடத்திற்குச் சென்றனை? என்று கூறி; அமையாளாகிப் பலபடியாக வினாவுதலும் நீ அச்சமுற்று, அவள்முன் நின்று மூங்கிற் பிளவாற் செய்த கிளிகடி கருவியாகிய தட்டையையுடைய யான் அருவி யொலிக்கும் பெரிய மலைநாடனைக் காதாலே கேட்டறிதலுஞ் செய்திலேன்; கண்ணாலே காண்டலுஞ் செய்திலேன்; மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையிலே பாய்ந்து ஆடியதுஞ் செய்திலேன் என்று; நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாயாய் ஐயோ! உண்மையை யுரைத்துவிட்டனையே!; அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள் கண்டாய்!; ஆதலின் நீ தினைப்புனத்தின் கண்ணே செல்லுதலைப் போக்கிக்கொண்டனை மன்!; இவ்வளவு அறியாமையையுடைய நீ இனி எங்ஙனம் குடிமை பூண்டொழுகவல்லாய் என்று எவரும் இரங்கத் தக்கனையாயினை; அவளது முனிவினுள்ளே படிதலால் இனி யாம் எவ்வண்ணம் உய்யவல்லேமோ?

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது. - கொள்ளம்பக்கனார்

நற்றிணை - 148. பாலை

வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை,
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, 5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது,
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து,
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் 10
அருஞ் சுரம் இறப்ப என்ப;
வருந்தேன்- தோழி!- வாய்க்க, அவர் செலவே!

தோழீ ! நின்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும் மெல்லிய இனிய சொல்லால் யாம் சென்று வினைமுடிக்கும் சுரத்தின்கண் நீ வருவதற்கு ஆற்றாய் எனப் பலபடக் கூறியும்; தாம் தொடங்கிப் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டு அதனிற் பொருந்தியொழுகுபவர்; இற்றை நாளால் நெடிய பொய்கையின்கண்ணே பொருந்திய நீரில்லாத நீண்ட வழியிலே; சிவந்த அடியினையுடைய மரா மரத்தின்அழகிய பக்கத்திலே பொருந்தி வளைந்த வில்லையுடைய வீரர் மிக்கிருக்கின்ற நிலைமையைநோக்கியும் அச்சங்கொள்ளாது; மலைமுழையிலே கிடந்த பெரிய உகிரையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்றதனாலாகிய நோயும் பசியும் தீரும்படியாக; சினமிகுத்துச் சிவந்த கண்ணையுடைய கொல்லவல்ல பெரிய புலியேற்றை; ஓங்கிய கொம்பினையுடைய களிற்றியானையின் புள்ளி யமைந்த முகத்திலே சென்று பாயாநிற்கும் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லாநிற்பர்; அவர் செல்லுவதனை அறிந்த யான் சிறிதும் வருந்துவேனல்லேன், நீயும் அவ்வண்ணம் வருந்தாதே கொள்; அவர் செல்லுங் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!

பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது. - கள்ளம்பாளனார்

நற்றிணை - 149. நெய்தல்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
அலந்தனென் வாழி- தோழி!- கானல் 5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால், யானே;
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! 10

தோழீ! வாழி! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரோ வோரிடத்திற் சிற்சிலரும் ஒரோ வோரிடத்திற் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி; வியப்புடையார்போலத் தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றாநிற்கவும்; அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து மெய்ம்மையாகுமெனக் கொண்டு சிறிய கோல் ஒன்றனை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இவையிற்றால் யான் மிக்க துன்பமுடையேன் ஆயினேன் காண்; ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி கழியருகின் கண்ணதாகிய சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு இரவு நடு யாமம் நள்ளிருளில் வருகின்ற இயன்ற தேரையுடைய கொண்கனொடு; நீ செல்லுமாறு யான் உடன்படாநின்றேன் நீ எழுவாயாக!; அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் யாதுதான் செய்யற்பாலது? வேண்டுமேல் அலர் தூற்றிக் கொண்டு போகக் கடவதாக!;

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்

நற்றிணை - 150. மருதம்

நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்:
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் 5
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் 10
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.

பாணனே ! நும் பெருமகனாவான் பலராலும் நகுதற்படுதலை நன்றாகவுடையனாயிராநின்றான; காவலரண் சிதையும்படி பலவாய யானைப் படைகளைப் பரக்கவிட்டுச் சென்று பலபல அரணங்களை வென்று கொண்ட வலிமைமிக்க சேனைகளையுடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடு நாள் வாழ்வானாக! என்று வணங்கி; அடைகின்ற நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர்களைப்போல அதற்காக யாம் சிறிதேனும் வருந்துதலைச் செய்யோம் என்று கூறி; மென்மையான நடையையுடைய கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி எமது சேரியின்கண் வந்து; கொண்டை மாலையையும் அழகுக் கிடுங் கண்ணியையுங் காட்டி; ஒருமைப்பாட்டையுடைய எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி விடுவதமையுமோ? அமையாது காண்!; நீ அஞ்சுமாறு எம் அன்னை நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கிற்கோலைக் கையிலேந்தி வெகுளி பெரிதும் உடையளாயிராநின்றாள்; சிறிதும் வருந்துகிலள், அவளால் ஒறுக்கப்படுவதுண்டு போலும்; ஆதலின் நீ இங்கே வாராதே கொள்!;

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது. - கடுவன் இளமள்ளனார்

நற்றிணை - 151. குறிஞ்சி

நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல- தோழி!- கடுவன், 5
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் 10
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால் முயங்கப்பட்ட சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; தனக்குப் புணர்ச்சி வேறுபாட்டானுண்டாகிய குறியைத் தளிர்களைத் தின்னுகின்ற தன் பெரிய சுற்றம் அறியுமே என்று அஞ்சி; கரிய அடியையும் பொன் போல்கின்ற பூங்கொத்தினையுமுடைய வேங்கை மரத்தின் அழகிய கிளைமீது சென்று; ஆழமாகிய சுனைநீரை நோக்கித் தலைகவிழ்ந்திருந்து; தன் மெல்லிய தலையில் முன்பு புணர்ச்சியாலே குலைந்த முச்சிமயிரை அக்குலைவு தோன்றாதபடி திருத்தாநிற்கும் மலைநாடன்; நினது நல்ல நெற்றி பசலையூர்ந்து பசந்து காட்டினும் பெரிய தோளின்வளை நெகிழந்தவாயினும்; கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கரிய முழையகிருல் மோதிக் கொன்றுபோகட்டு அதனிரத்தம் பூசுதலானே சிவந்த மறுவைக்கொண்ட வெளிய கோட்டினையுடைய களிற்றியானை; மலைமேனின்று வருகின்ற அருவியின் கண்ணே சென்று கழுவாநிற்குஞ் சாரல் நெறியில்; இரவில் எஞ்ஞான்றும் வாரா தொழிவானாக;

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - இளநாகனார்

நற்றிணை - 152. நெய்தல்

மடலே காமம் தந்தது; அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன்தலையும் பையென 5
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?

யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது; ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது; எல்லாம் விரும்புதலைச் செய்கின்ற ஆதித்த மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு; இராப் பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது; கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய யான்; இவ்வளவு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ?

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 153. பாலை

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, 5
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,
உண்டல் அளித்து என் உடம்பே- விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. 10

கீழ் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு; அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு; கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி; எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம்; அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல; என் நெஞ்சம் இங்கு வைகுவதொழிந்து அவரிடஞ் சென்று அங்கு வைகி அவ்வண்ணமே ஒழிந்து போனதனாலே; வலிய போர் செய்யவல்ல வெய்ய சினத்தையுடைய பகைவேந்தனது படை அலைத்தலாலே கலங்கி; ஊரில் வாழுங் குடிமக்கள் எல்லாம் குடியோடி அகன்றுவிட்ட பெரிய பாழ் நகரத்தை; காவல் செய்திருந்த ஒரு தனி மகனைப் போன்று உண்ணுதலாலே என்னுடம்பு இங்குக் காக்கப்படுந் தன்மையதாயிராநின்றது;

பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது. - தனிமகனார்

நற்றிணை - 154. குறிஞ்சி

கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை 5
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல் 10
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?

ஏடீ! வலியிலாதாய்!; காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்?

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது. - நல்லாவூர் கிழார்

நற்றிணை - 155. நெய்தல்

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப் 5
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை! என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. 10

ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயமகளிருடன் கூடிப் பாவையைக்கொண்டு விளையாடும் விளையாட்டையும் ஆடாது; பெரிய இதழையுடைய நெய்தன் மலர் மாலையையும் புனையாது; விரிந்த பூவையுடைய கடலருகுள்ள சோலையின்கண்ணே ஒரு பானின்ற மாதே!; நோக்கினோராலே கெடாத நலத்தினையுடையாய்!, மடந்தை நின் தொழுதனம் வினவுதும் மடந்தாய்! நின்னை வணங்கி வினவுகின்றேம்; தௌபிந்த அலையையுடைய பெரிய கடற் பரப்பின்கண் விரும்பியுறைகின்ற நீரரமகளோ?; கரிய கழியருகிலுள்ள இங்கு நிலைமைகெண்டுறைகின்ற வொருமாதோ?; வேறியாவளோ இப்பொழுது சொல்லுவாயாக! என்று கூறினேன், அங்ஙனம் கூறுதலும்; அதற்கு விடையாக முட்போன்ற கூரிய பற்களினின்று நகையுமுண்டாயின; ஈரிமைகளையுடைய மையுண்ட கண்களும் பனி பரந்தன; ஆதலின் யாம் முன்பு முயங்கிய இவளே இப்பொழுதும் அம் முயங்கற் குறிப்புடையள்காண்;

இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம். - பராயனார்

நற்றிணை - 156. குறிஞ்சி

நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே- பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், 5
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. 10

பெரிய மலை நாடனே! நீ தானும் இரவில் வருநெறி தவறின் அந் நெறியை மெல்ல அடி வைத்து அறிந்து ஒதுங்கிச் செல்லுதற்குங் கூடாத நிரம்பிய இருட்பொழுதினில் வந்து; காவலையுடைய எமது அகன்ற மாளிகையின் உள்ளின்கண்ணதாகிய காவலையுங் கடந்து வந்து கூடி; பெரிய அன்பினையுடையையாயிராநின்றனை; கொறுக்கச்சி முளைத்தடர்ந்த பெரிய மலைப்பக்கத்துள்ள சிறுகுடியின்கண் எமர் கள்ளை மிகுதியாகவே பருகி மயங்கினவராயினும் அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிராநின்றார்; அன்றியும் இயங்குகின்ற மேகம் தான் முழங்குகின்ற இடியினொலி பிளவுபட்ட மலைமுழையின்கண்ணும் எதிரொலி முழங்கும்படி எமது கொடுமுடியுயர்ந்த குன்றின்கண்ணே வந்து தங்கியிராநின்றது; மற்றும் யாம் நின்னையும் நின்மலையையும் பாடிப் பற்பல நாளளவும் சிறிய தினைப்புனத்தைக் காக்கும் பொருட்டு நாளையே செல்லாநிற்பேம்; அதனால்எம்முடைய பலவாய துன்பமெல்லாம் தீரும்படியாக நீ பகற்பொழுதிலே ஆங்கு வந்து முயங்குவாயாக !

இரவுக்குறி மறுத்தது. - கண்ணங் கொற்றனார்

நற்றிணை - 157. பாலை

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், 5
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே- காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே. 10

பெரிய இடமகன்ற இவ்வுலகின்கண் உயிர்களுக்குரிய நெருங்கிய தொழிலைக் கொடுத்துப் பெருமழை பெய்துவிட்ட பிற்றைநாட் காலையிலே; பல புள்ளிகளமைந்த பாம்பு ஓடும்போது அதன் முதுகு நௌபியுமாறு போல யாற்றுநீர் நுணுகியோடா நின்ற செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே; பூங்கொத்துக்கள் நிரம்பிய மாமரத்தின்கண்ணவாகிய பெடையொடு புணர்கின்ற குயில் கூவும்பொழுதெல்லாம்; காட்டின் கணுள்ள சிறிய மலையின்பக்கத்தவாகிய நீண்ட அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய பூந்தாது உதிர்ந்தாற்போன்ற; நுண்ணிய பலவாய சுணங்கு பரந்த மாமைநிறத்தையுடையாள்; நம்பால் நினைந்து விடுத்த நெஞ்சுடனே அக்குயில் ஒன்றனையொன்று அழைக்கின்ற ஓசையைக் கேட்டுகுந்தோறும் காமமானது தன்வரம்பு கடந்து மிக அதனாலே பெரிதும் அழுது துன்பமுழவாநிற்குமே!

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது. - இள வேட்டனார்

நற்றிணை - 158. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! நம்வயின்,
யானோ காணேன்- அதுதான் கரந்தே,
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே;
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே-
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி 5
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.

தோழீ! வாழி! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக!; மலையின்கண்ணுள்ள பிளந்த முழையிலே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய கரிய புலியானது புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய யானை வருந்தும்படி மோதி; அதன் இரத்தத்தைப் பருகிய கொழுவிய கவுளையுடைய பெரிய வாயை வேங்கையின் அடி மரத்தில் உரிஞ்சித் துடைக்கின்ற; உயர்ந்த மலைநாடன் வருகிற நெறியை இன்றளவும் நான் கண்டதேயில்லை; அங்ஙனமிருந்தும் அந் நெறியானது மறைவாக என்பால் வந்து மலைவழியிலே பொருந்தியிருக்கின்ற காட்டின் வடிவங்கொண்டு என்முன் நின்று இதுதான் அவன் வருகின்ற காடென்பதனை நீ காண் என்று என்னைக் கொல்லாநிற்கும்; மிக்க இருள் வடிவமாய் நின்று இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுதென்று என் கண்களைக் கொல்லா நிற்கும்; இத்தகைய காட்டின்கண் இருட்பொழுதில் அவன் வருவதனைக் குறித்து யான் யாது செய்யமாட்டுவேன் ?

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்

நற்றிணை - 159. நெய்தல்

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல 5
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
எழு எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
ஒழி என அல்லம் ஆயினம்; யாமத்து,
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் 10
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

நீலமணி களங்கமறத் தௌபிந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக!

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது. - கண்ணம்புல்லனார்

நற்றிணை - 160. குறிஞ்சி

நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், 5
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. 10

மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தௌபித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினுங்காட்டில் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்;

கழற்று எதிர்மறை.

நற்றிணை - 161. முல்லை

இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,
கண் போல் நீலம் சுனைதொறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்,
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, 5
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப,
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயினகொல்லோ- தௌளிதின்
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் 10
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே?

நம்முடைய அரசனுஞ் செய்தற்கரிய போர்த் தொழிலை முற்றுவித்ததனாலே; மலையிலுள்ள சுனைகள் தோறும் மாதர்கண்போலும் குவளைமலரா நிற்ப; மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கை மரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின் கண்ணே; இம்மென ஒலிக்கின்ற வண்டுகளின் நெருங்கிய கூட்டம் இரிந்தோடாநிற்ப; சோணாட்டின்கணுள்ள நெடுந்தெரு என்னும் ஊர்போன்ற அழகு பொருந்திய நெடிய வழியிலே நம்முடைய வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லாநிற்ப; வெண்காந்தளின் வளவிய இதழ்கள் சங்கு உடைந்து கிடந்தாற் போலக் கிடக்குமாறு குதிரையின் கவிந்த குளம்பு மிதித்து அறுக்காநிற்ப; தோள்களிலே வலி பிணித்து நின்றாற் போல மிக நெருங்கி வருகின்ற நம்முடைய வருகையை; நம்பால் ஆசைமிக்க நலத்தையுடையளாய் யாதுமில்லாத வேறொன்றனைத் தன் புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறி ஆற்றுவித்து மகிழாநிற்கும்; தித்தி பரந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய நங் காதலிக்கு; நிமித்தங் காட்டும் காக்கையாகிய புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? இங்ஙனம் மகிழ்ந்திருப்பதற்கு வேறு காரணமில்லையே?

வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.

நற்றிணை - 162. பாலை

மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன் என்று, நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ, 5
நும்மொடு வருவல் என்றி; எம்மொடு-
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை!- முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், 10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

பெரிய சீர்த்தியையுடைய தந்தையினது நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையின்கண்ணே; ஈன்ற தாயொடு பிரியாது வைகும் மிக்க இளமையுடையாய்!; முன்பு மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேடையாகிய அழகிய தன் துணையொடு அதன் ஆண்புறாவாகிய சேவல் கூடி மகிழாநிற்ப; அவற்றை நோக்கி வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பஞ் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே இருப்பதற்கு ஆற்றேனாவேன் என்று; நின் நீர் வடிகின்ற மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலுழா நிற்ப எம்மை நோக்கி; யான் நும்முடனே நீயிர் செல்லுமிடத்து வருகிற்பேன் என்று கூறாநின்றனை; வேற்படை போலும் இலையையுடைய இத்தி மரத்தினுடைய நிலத்திலே படாது தொங்குகின்ற நெடிய விழுது; வைகறையில் மேல் காற்று வீசுந்தோறும்; ஊசலாடுதல் போன்று கீழே துயிலுகின்ற பிடியானைமீது புரளா நிற்கும்; பாலையின் கண்ணே செல்லுதல் நினக்குப் பொருந்துவ தொன்றாகுமோ? ஆகாதன்றே! ஆதலின் நீ வரற்பாலை அல்லைகாண்;

உடன் போதுவல் என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.

நற்றிணை - 163. நெய்தல்

உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, 5
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று 10
வைகுறு வனப்பின், தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!

பெரிய கடலருகிலுள்ள கரிய நிறத்தையுடைய புன்னையின் பக்கத்தவாகிய தனிமையினிருக்கின்ற தாழையின் ஒள்ளிய மடல்; நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப்போக்கி யெழுந்து உள்ளே கொதித்து ஆகாயத்திலே சென்று விளங்கிய ஒளியையுடைய ஆதித்தனது பாடுசாய்கின்ற அலகுபோலத் தோன்றா நிற்கும்; அத்தகைய தாழஞ்சோலை சூழ்ந்த துறைவனுடைய குதிரைகள்; நாள்தோறும் நுண்மணலாகிய துகளை முகந்தெழுந்த அமையாது வீசும் ஊதைக்காற்றின் கண்ணே; இது பகலென்றும் இஃது இரவென்றும் கருதாமல் ஒலிக்கின்ற இனிய ஒலியையுடைய ஒரு நிகரவாகிய மணிகள்; ஒருசேரக் கோத்துக் கழுத்திலே பூட்டப்பட்டுக் கல்லென வொலிக்கும்படியாகத் தன் வெண்மை நிறத்தினால் நிலவு பரந்தாற்போன்ற மணற் குன்றுகளிலே ஏறிச் செல்லுதலானே; என்னெஞ்சம் இப்பொழுதுபோல முன்பே மிகவும் வருந்தியதாயிருந்தது; அந் நெஞ்சின் தன்மையைக் காணின் மிக இரங்கத் தக்கதாகும்; இன்று துறைவன் வரைவொடு புகுந்ததன் காரணமாக அவனுடைய குதிரைகள் தாம் இனி நாள்தோறும் வருந்துவனவல்ல; ஆதலின் இரங்கத் தக்கனவாகிய அவைகள் இப்பொழுது களைப்பாறுவனவாக !

வரைவு மலிந்து சொல்லியது.

நற்றிணை - 164. பாலை

உறை துறந்திருந்த புறவில், தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர் எனச்
சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்- 5
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம், 10
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.

தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித் ன்புற்ற காலத்து; தலைவர் பொருள்வயிற் பிரிந்து அந்நிலத்துள்ள நெறியின்கண்ணே சென்றனராயினும் அவர் பொருள்மேற் சென்றாராதலின்; நல்லதொரு காரியத்தையே செய்தனரென்று என்னுடைய சொற்களால் நின்னைத் தௌபிவித்தகாலையும்; வளைந்த வில்லையுடைய ஆறலைகள்வர் செம்மையுற்ற கோல்வடிவாகிய அம்பினாலே நெறியின்கண்ணே செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே; இறந்து கிடந்த பிணங்கள் கொடிய மலைநெறியின் மருங்கே இலைகளால் மூடப்பட்டு முடைநாற்ற மிகுதலும்; அவற்றைத் தின்ன வந்த மிக்க பசியையுடைய குறிய நரி அம் முடை நாற்றம் பொறாமையால் அவ்விடத்து நெருங்காது பின்னே மீண்டு செல்லாநிற்கும்; சுரத்தின்கண் யாதுமோர் ஊறுபாடிலராய் வருதலை நினையாமையாலே நீ; யான் கூறிய வார்த்தைகளினாலே தௌபிவடைந்தாயில்லை; அவ்வண்ணம் நீ வருந்தியிருப்பது அறிந்தனர் போலும், அவர் குறித்த இப் பருவத்து இற்றைநாளால் இங்கு வந்தனர்காண்;

பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.

நற்றிணை - 165. குறிஞ்சி

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
கிளையொடு மகிழும் குன்ற நாடன் 5
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.

தோழீ! அமர்த்த கண்ணையுடைய ஆமானின் அரிய நெஞ்சிலே பாய்ந்து தங்காது குறிதவறி யொழிந்துபோன அம்பின் போக்கைக் கருதி; கானவன் தன்னுள்ளத்து இம் மலையில் தெய்வம் வெளிப்போந்து நின்றது, மழை பெய்தாலோ அதன் வீறு தணியுமாதலின் மலையை மழைவந்து சூழ்க என்று; அக் கடவுளை உயர்ந்த அம் மலைமேலே சென்று வழிபடும் பொருட்டு விரும்பி யெழுந்து தன் சுற்றத்தாரொடும் போய்; அதற்குப் பலியிட்டு நீர்வளாவிய பின்னர் அப் பலியை உண்ணாநிற்கும் மலைநாட்டினையுடைய நந்தலைவன்; இங்கு வரும்பொழுதெல்லாம் நினது அருமையை அவனுக்கு உரைத்தலால்; நம்மைப் புணர்தலில்லாத அன்பற்றவரது நட்பு அப்படியே அன்பில்லாமல் ஒழிவதாக என்று நீ வெறுத்துக் கூறுவதுபோல அவன் கூறுகின்றிலன்; ஆதலின் நின்பால் மிக்க அன்புடைமையின் இன்னே வரையுமாறு விரைய வாராநிற்பன்; அதன்முன் அன்னையர் என்னை வினவும் பொழுது நீ வருந்தாது என்பால் அறத்தொடு நிற்பாய் காண் !; அயலார் நின்னை மணஞ் செய்து கொள்ளுமாறு விடுக்கின்ற தூது மிகப் பலவாயின; வேற்று வரைவு நமக்குத் தகுதியன்று கண்டாய்;

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.

நற்றிணை - 166. பாலை

பொன்னும் மணியும் போலும், யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்;
போதும் பணையும் போலும், யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்:
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் 5
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்;
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின்,
யாதனின் பிரிகோ?- மடந்தை!-
காதல் தானும் கடலினும் பெரிதே! 10

மடந்தாய்! பொன்னைப் போலும் ஒளிவீசுகின்ற நினது நல்ல வடிவும், நீலமணியைப் போலும் (நிறமமைந்த) மணங்கமழ்கின்ற நின் கரிய கூந்தலும்; குவளை மலரைப் போலும் அழகிய மையுண்ட நின்கண்களும்; மூங்கிற் போத்தினைப்போலும் அழகையுடைய நின் தோள்களும்; ஆகிய இவற்றைக் காணும் பொழுதெல்லாம் யானும் உள்ளம் மகிழ்ந்து அறத்தின்கண்ணே நிலைபெற்றோர் அடையும் பயனை அடைந்தேன் ஆகின்றேன்; அதன்மேலும் பொன்னாலாகிய தொடியணிந்த புதல்வனும் விளையாட்டயர்தல் கற்றிருக்கின்றனன்; நுங்களைக் கண்டு மகிழ்வதினுங் காட்டிற் சிறந்ததொன்றும் இல்லாமையால் வேற்றிடஞ் சென்று செய்யும் செயல் யாதுமில்லாதேனாகியிராநின்றேன்; நின்பால் எனக்குண்டாகிய ஆசையோ கடலினும் பெரிதாயிராநின்றது; இவற்றை ஆராயின் எக்காரணத்தை முன்னிட்டு நாம் ஒருவரையொருவர் பிரிகிற்பம்; பிரியகில்லமாதலின் நீ வேறுபட்டுக் காட்டி என்னை வருத்தாதே கொள்!;

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

நற்றிணை - 167. நெய்தல்

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த 5
பயன் தெரி பனுவற் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா- பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள் 10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.

புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல; கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே !; நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய பசலையை; நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக!

தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

நற்றிணை - 168. குறிஞ்சி

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் 5
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை, 10
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

வண்டுகள் உண்ணுமாறு மலர் விரிந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையிலே; தேனீக்கள் மொய்த்தலாலே கசிந்து கல்லின் குழிகளில் வடிந்த இனிய தேன்; குறவரின் இளமகாஅர் வழித்துண்டெஞ்சியதை; மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனே!; நின்னை விரும்பியுறையும் இவளது இனிய உயிர் படுகின்ற துன்பமின்னதென்று கருதாமல்; வருத்துந் தன்மையுடைய பாம்புகள் இயங்குகின்ற வருதற்கரிய இரவின் நடுயாமத்தில் மயக்கந்தருகின்ற சிறிய வழியின் கண்ணே; நின் கையிலேந்திய வேற்படையையே நினக்குரிய துணையாகக் கொண்டு சந்தனம் பூசுதலால் அதன் நறிய மணங்கமழ்கின்ற மார்பினையுடையையாய்; சாரலின்கணுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்து நீ தனியே வருதல் தகுதிப்பாடுடையதாமோ? ஆதலின் இனி இங்கு இரவில் வரற்பாலை அல்லைமன்!

தோழி இரவுக்குறி மறுத்தது.

நற்றிணை - 169. முல்லை

முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம் என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை 5
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. 10

நெஞ்சமே! வினைவயிற் பிரிந்து செல்லும்பொழுது என்று வருவீர்கொலாமென வருந்தி வினவிய தலைவியை நெருங்கி நல்ல நுதலையுடையாய்! யாம் சென்று கருதியதை முடித்தனமாயின் அன்றே வருகின்றோம். என்று கூறியவுடன் உண்டாகிய அவளுடைய துன்பமெல்லாந் தீரும்படி இன்று நாம் வருகின்ற வருகையை; பரல்மிக்க பாலை நிலத்தின்கண் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவைபோன்ற தலையையுடைய கள்ளியின் மேலே படர்ந்த தழைந்த முல்லையின் நறுமலரை; ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையையுடைய இடையன்; இரவிலே கொய்து வெளிய பனங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற நறிய மாலையின் நறுமணம் தெருவில் ஒருங்கு கமழாநிற்கும்; இன்று மாலையம் பொழுதிலே சிறிய குடிகளையுடைய பாக்கத்தின்கண் உள்ள எமது பெரிய மாளிகையிடத்து; நெடிய சுவரின்கணிருக்கின்ற பல்லி அறிகுறியாக அடித்துத் தெரிவிக்குங் கொல்லோ?

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

நற்றிணை - 170. மருதம்

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; 5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

மடப்பத்தையுடைய கண்பார்வையையும் மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையும் பருத்த தோளையும்; நேர்மையாகிய வெளிய பற்களையும் திரண்டு நெருங்கிய துடைகளையுமுடைய; ஒப்பில்லாத இவ் விறலி பிணைத்த அழகிய தழையுடையையுடுத்துத் திருவிழாச் செய்யும் இவ்விடனெங்கும் பொலிவெய்துமாறு வந்து நிற்றலாயினள் காணுங்கோள்!; நம் காதலனை இன்னும் வேறொரு பரத்தைபால் இவள் தூது சென்று செலுத்தாதபடி நாம் பாதுகாக்கற் பாலம்; எழுங்கோள்! எழுங்கோள்!, இவள் நன்மை தலைப்படின் இவள் கொண்ட காரியம் கைகூடுமாயினோ!; ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல; பலர் கூடிய நம்முடைய கூட்டமும் ஒழியவேண்டியதன்றி வேறுயாது பயன்படுங்கண்டீர்?

தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.

நற்றிணை - 171. பாலை

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் 5
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு,
யாங்கு வல்லுந மற்றே- ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்,
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, 10
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே?

நீருண்ணும் நசையை மேற்கொண்ட வருத்தத்தையுடைய பிடியானை; வெப்பமிக்க சிறுகுன்றுகளைச் சூழவுடைய வெவ்விய மலைப்பக்கத்திலுள்ள நிலத்தின்கண்ணே செல்லுதலும்; அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலையையுடைய யானைக் கன்று; சேரியிலுள்ள மாதர் தம்முள்ளத்தே துண்ணெனும்படி ஊரிலுள்ள பசுவின் கன்றொடு சேர்ந்து அச் சேரியின் கண்ணே புகுதாநிற்கும்; மலைநாடன் நம்மைக் கைவிட்டுப் பலவாகிய மலைகளிடைப்பட்ட கடத்தற்கரிய சுரநெறியிலே செல்லின்; கட்டிய கம்மத் தொழிலையுடைய தௌபிந்த ஓசையையுடைய மணிகளைக் களையப்பட்ட வேற்படையையொப்ப; பேய்கள் நிலைகொண்டு உலாவுகின்ற பொழுது அமைந்த நடுயாமத்தில்; ஆசையோடு நெஞ்சுகலந்து அவனுடைய மார்பின் மேல் நெருங்கப் படுத்தலைப் பொருந்தின கண்கள்; இனி எவ்வாறு துயிலல் வல்லனவாகும்?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.

நற்றிணை - 172. நெய்தல்

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே- 5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. 10

புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!; யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி முளைத்து முளைதோன்றுதலானே; மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு வளர்க்கு நாளில்; எம் அன்னை எம்மை நோக்கி நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர் என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எந் தங்கையாகிய இப் புன்னையின் எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மவோ? நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.

நற்றிணை - 173. குறிஞ்சி

சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
கண்ணினும் கனவினும் காட்டி, இந் நோய் 5
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. 10

தொடியினையுடையாய் யான் நின்னையொரு செயலை வினவுகின்றேன்; அதுதான் யாதெனிலோ?; கேள்! சுனையின்கணுள்ள மலர் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர்கொய்து அம்முருகவேள் போர்க்குச் சூடும் கண்ணியாக அமைத்தும் சார்த்தி; அவனை வழிபாடுசெய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பியருளிந்; நாம் இப்பொழுது கொண்டிருக்கிற காமநோய் முருகு அணங்கியது காரணமாக வந்த இவள் மேனியின் வேறுபாடுதான் வெறியயர்ந்தால் நீங்கும் என மாறாக நினைந்துடைய அம் மாறுபாடு எவ்வழியினாலும் நீங்கரிய நம் அன்னைக்கு; கண்ணாலே குறிப்பாகக் காட்டுவதனோடு உறங்கும்பொழுது அவளது கனவின்கண்ணும் வந்து தோன்றித் தன்வடிவு புலப்படக்காட்டி; இக் காமநோய் என்னாலும் வேறுபிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்றுகண்டாய்; வேறு யாவன் இதனைத் தோற்றுவித்தனன்கொல் என வினவின் நோக்குவோர்க்கு நீலமணி போலத் தோன்றாநிற்கும் அழகிய மலையையுடைய ஒருதோன்றலே இதனைச் செய்தனன் என்று கூறுவானெனின்; அதனாலே பொருந்திய வண்டுக ளாரவாரிக்கும் பசிய மாலையையணிந்த மார்பையுடைய அந் நெடிய முருகவேளுக்கு ஒரு குற்றமுமுண்டாகுமோ?; அதனை ஆராய்ந்து கூறிக்காண்;

தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.

நற்றிணை - 174. பாலை

கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, 5
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை! என்றி- தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன் 10
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?

தோழீ! ஈந்தினது திரட்சியையுடைய முற்றிய குலைபோன்ற மக்களியங்காத நெறியின்கண்ணமைந்த தாளிப்பனையினது; குலைகளையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பெண்பறவையைக் கூவின்; அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழங்காநிற்கும்; கோடைக்காற்று வீசுகின்ற அரிய நெறியிலே சென்ற காதலர்; மீண்டு வந்து இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்களிருவரும் ஓரிடத்தே உறையுங்காலையும்; நீ பெரிதும் நெஞ்சழிந்து மடந்தையே ஏன் வருந்துகின்றனை? என்று கூறாநின்றனை; அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டையுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான், இங்ஙனம் பிறள் ஒருத்திபால் அன்பு வைத்தால் என்மாட்டு அவனுக்கு எவ்வண்ணம் அன்பு தோன்றும்?; அன்பென்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக் கொள்வதனாலும் யாது பயன்படும்?;

வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

நற்றிணை - 175. நெய்தல்

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை 5
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

நெடிய கடலிலே சென்று வலைவீசி ஆங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன்படகுகளையுடைய பரதமாக்கள்; தாம் பிடித்துக்கொண்டுவந்த கொழுவிய மீன்களை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பிலே குவித்து; மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கினொளியிலே துயிலுகின்ற; நறிய மலரையுடைய புன்னை மரங்கள் உயர்ந்த துறைவனுடனே நாம் களவிலே புணர்ந்ததனை; நம் அன்னைதான் முன்னரே அறிந்துவைத்தாளும் அல்லள்; அங்ஙனமாக இரவு நடு யாமத்தில் நம்முடைய சேரியின்கணுள்ள அயலுறை மாதர் கூறுங் குறிப்புரையாகிய இழிந்த சில சொற்களை விரும்பிக் கேட்டு; கொதிக்கின்ற பால்போன்ற பசலைபரந்த என் மேனியை; சுடுவது போல நோக்கா நிற்கும்; இதனால் இனி இல்வயிற் செறிக்கும் போலும்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

நற்றிணை - 176. குறிஞ்சி

எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, அவட்கு அவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின்- தோழி!-
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் 5
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
மென்மெல இசைக்கும் சாரல், 10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

விறலீ! தலைமகளானவள் எம்மை விரும்பி உறைபவளாயிருக்கையில் யாமாக அவளை விரும்பி அவள் விரும்பியவாறு நல்கிவிட்டதுதான் என்னவிருக்கின்றது?; நம் நலத்திற்குக் காரணமாயிருக்கும் தலைமகனை அத் தலைவி பால் யாம் சால்பினாலே கொடுத்தது அறியாது; நிரைத்திருக்கின்ற யானையின் முகத்திலுள்ள கோடு போல அரும்புகள் பொதிந்தனவெல்லாம் மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள்; வாழையையுடைய சிலம்பின்கண் மணங்கமழாநிற்ப; யாழோசையைக் கேட்டாலொத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள்; திரண்டு புகுந்து அருவியாகிய முழவொலியோடு ஒருதன்மைப்பட மெல்ல மெல்ல ஒலியாநிற்கும் சாரலிலே; குன்று சூழ்ந்து வேலியாகயுடைய அவர்கள் இருக்கின்ற ஊரிலுள்ளார்; தலைவிபால் அப் பரத்தை மிக்க காதலையுடையளாதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள் என்று கூறாநிற்பரோ? ஆராய்ந்து ஒன்றனைக் கூறாய்; அங்ஙனம் ஆயின் மீட்டும் அவனை ஈங்கு நமது ஆற்றலானே கைக்கொண்டு போதுவாங்காண்!.

பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

நற்றிணை - 177. பாலை

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் 5
பீலி சூட்டி மணி அணிபவ்வே;
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே
வந்தன்று போலும்- தோழி!- நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. 10

தோழீ! நம் காதலர் பரந்து பட்ட மிக்க தீ காடு முழுதும் எரிந்து அழித்தலினால் அதனிடையிருந்த மரங்களெல்லாம் தீந்து மகிழ்ச்சி நீங்கலாகிய காட்டகத்து; ஒதுங்கியிருத்தற்கும் நிழலில்லாத கொடிய சுரத்தின்கண்ணே சென்று விட்டனர் என்பது திண்ணம்; அவர் செய்யுஞ் செய்கையின் குறிப்பினால் யான் கண்டறிந்தேன்மன்; யாங்ஙனம் அறிந்தனையென நீ வினவுதியேல் இயம்புவன்கேள் ! ஒழுங்குபட வேலின் இலங்கிய இலையையும் மாசுபோகத் துடையா நிற்பர்; அன்றிக் கிடுகினையும் மயிற்பீலி சூட்டி மணியை அணியாநிற்பர்; மற்றும் முன்போலன்றி என்னையும் பலபடியாகப் பாராட்டி அன்புசெய்யாநிற்பர்; ஆதலின் யான் வருந்தி வருந்தி ஒவியர் எழுதுதற்குத் தகுந்த அழகமைந்த மையுண்ட கண்ணிலே பாவைதோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ் வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி யுழலும் நாள்; இன்னே வந்து இறுத்ததுபோலும்; இனி எவ்வாறு ஆற்றுகிற்பேன்;

செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

நற்றிணை - 178. நெய்தல்

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் 5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்;
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப,
விளிந்தன்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே. 10

அசைகின்ற மூங்கிலினுள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்துவைத்தாலொத்த; தொகுதியமைந்த சிறகுகளையும் நீண்ட கால்களையும் உடைய நாரையினால்; இன்பம் நுகரப் பெற்ற செயலற்ற பேடை; கழிக்கரையிலே பெயருமிடங்களில் பெயர்ந்து சென்று சிறிய மீனையும் உண்ணாது, கைதை படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தாழையின் பெரிய கிளையின்கண்ணே வருத்தத்துடன் உறையாநிற்கும் மெல்லிய துறைகளையுடைய நம் காதலன்; ஊர்ந்துவரும் தேரானது முன்பு நம்முடைய கண்ணாலேனும் காணுதற்குப் பொருந்தியிருந்தது, இப்பொழுது அது கழிந்தது; ஏதில் மாதரார் ந்கூறுஞ் சிறு சொல்லை நம்பி நம் அன்னை இற்செறித்தலானே நாணமுற்று இரவு நடுயாமத்திலும் கண் துயில்கொளப் பெற்றிலேன்; அயலிலே பறவைகள் ஒலித்தல் அவர் தேரின் மணியொலிபோலிருத்தலால்; அவ்வொலியைக் கேட்டு முன்பு மிகத் தௌபிந்திருந்த பெருமையுடைய என்னெஞ்சமானது; இப்பொழுது அழிவு பொருந்தியதாயிற்று;

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

நற்றிணை - 179. பாலை

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
யானும் தாயும் மடுப்ப, தேனொடு 5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. 10

மனை யகத்து முளைத்துப் படர்ந்த வயலைக் கொடியை ஆங்குக் கன்றையீன்ற பசுவானது சென்று தின்றதினாலே; அதுகண்டவுடன் தான் விளையாட்டயர்ந்துகொண்டிருந்த பந்தை நிலத்தெறிந்து போகட்டு ஒரையாடும் பாவையையும் அவ்வயின் வைத்துத் தனது அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட செய்யுங் காரியங்கள் வல்ல என் இளம்புதல்வி; மானின்பொருந்திய நோக்கம்போன்ற மையலைச் செய்யும் பார்வையுடனே; யானுஞ் செவிலித்தாயும் தேனொடு கலந்த இனிய பாலையருந்துகவென்று ஊட்டவும் உண்ணாது; விம்மி அழுபவளாகி நேற்றும் அத் தன்மையளாயிருந்தனள். அங்ஙனம் செய்வதெல்லாம் கழிந்தது; இன்று கறுத்த அணலையுடைய காளையாவானது பொய்ம் மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு; முருந்துபோன்ற தன் வெளிய எயிறுகளிலே தோன்று நகையைத் தோற்றுவித்து உடன்பட்டுச் செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றொழிந்தனள் (என்று கூறுவர்); இத்தகைய இளமையுடையாள் எங்ஙனம் சென்று மனையறம் பூண்டு ஒழுகா நிற்குமென்று அஞ்சுகின்றேன்? எவ்வண்ணம் ஆற்றுவேன்;

மனை மருட்சி

நற்றிணை - 180. மருதம்

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே 5
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும்- இவ் இருவரது இகலே.

வயலருகிலிருக்கின்ற பலாமரத்திலுள்ள இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற அக் கூடுகளை; கழனி நாரை உரைத்தலின் கழனியின்கண்ணே இரையுண்ணுமாறு போந்த நாரை சென்றிருந்து உரிஞ்சுதலானே; அம் முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் மழுக்கியபடியுள்ள சிவந்த நெல்லொடு கலந்த அரிசியுதிர்ந்து பரவினாற்போல உதிர்ந்து பரவாநிற்கும் வயல்சூழ்ந்த ஊரையுடைய தலைவன்; பரத்தை மகளிர் பலரைத் தான் பெற்று முயங்குதலை விரும்பி அதனால் நம்மனையகத்து வருகின்றானலன்; ஒருகால் அவன் வரினும் அப் பொழுது மாமை நிறத்தையுடையளாய தலைவி அவனது நலத்தையுடைய பெருந்தகைமையை விரும்பித் தான் அதன் முன் ஏறட்டுக் கொண்டுடைய துனிவிட் டொழிவாளுமல்லள்; ஆகலின் அன்னிகுடியிலிருந்த அன்னி என்பவனும்; தேரழுந்தூரிலுள்ள பெரிய திதியன் என்பவனும் ஆகிய; சிறப்புற்ற இரண்டு பெரிய அரசர்கள் போர்செய்த குறுக்கையின்கணுள்ள போர்க்களத்தில்; அன்னி வெட்டிச் சாய்த்தலாலே பூவும் மலரும் மிக்க துன்புற்ற புன்னை மரம் விழுதலும் அவ்விருவருடைய பகைமையும் முடிந்தொழிந்தாற்போல; இத் தலைவனும் தலைவியுமாகிய இருவருடைய பகைமையும்; இடையிலுள்ள யான் இறந்துபோனால் என்னொருத்தியொடு நீங்கும் போலும்;

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

நற்றிணை - 181. முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், 5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த 10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.

மனையகத்துக் கூரையினுள்ளே உறைகின்ற கரிய தாழ்வாயையுடைய குருவியின் சேவல்; வேற்றுப்புலத்துச்சென்று ஆண்டுள்ள ஒரு குருவிப் பெடையொடு மற்றொரு சார்பிலே புகுந்து புணர்ந்து அங்கே சிறிதுபொழுது தாழ்த்திருந்து வருதலும் வந்ததனுடைய; மெய்யிலே புணர்குறி வாய்த்திருப்பதை நோக்கி அதற்குரிய பேடையானது நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற சிறிய பலவாகிய பிள்ளைகளுந் தானும் சேரநின்று; குடம்பையினுள்ளே புகுதாதபடி தடுத்தலினால்; மழையிலே நனைந்த புறத்தினதாகிப் பக்கத்தில் நடுங்கியிருப்பதை நோக்கி நெடும்பொழுது ஆராய்ந்து; அருள் கூர்ந்து இரக்கமுற்ற நெஞ்சத்தோடு தன்பால் வருமாறு அழைப்பக் குருவிச் சேவல் செயலற்று வாராநிற்கும்; மயக்கத்தையுடைய மாலைப்பொழுது வந்திறுத்ததாகலின்; இனிய ஒலியிழந்த மாலை அணிந்த புரவி மெல்லிய பயிர்களை மிதியாநிற்ப; பெரிய வெற்றியையுடைய தலைவரது தேர் வந்திறுத்தது; இனி இவளது சிறிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது உய்ந்ததாகும்;

வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.

நற்றிணை - 182. குறிஞ்சி

நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, 5
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,
கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!-
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல,
தமியன் வந்தோன், பனியலை நீயே! 10

தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக !

வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.

நற்றிணை - 183. நெய்தல்

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,
உமணர் போகலும் இன்னாதாகும்- 5
மடவை மன்ற- கொண்க!- வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல, 10
வாழாள் ஆதல் சூழாதோயே.

கொண்கனே ! மருத நிலத்தின்கணுள்ள உப்பு வாணிகர் தமது நாட்டில் விளைந்த வெளிய நெல்லைப் பண்டிகளிலேற்றிச் சென்று கொடுத்து அந்நெல் விலையாக அயனாடாகிய நெய்தனிலத்திலே விளைந்த உப்பைப் பெற்றுக்கொண்டுபோய் விலைகூறி; நீண்டநெறியிலே பண்டிகளுடனே நிலாப்போன்ற மணற்பரப்பைக் கடந்து பிரிந்து போதலாலே; தனியே அவ்விடத்திலிருப்பதை வெறுத்த சுற்றத்துடனே அங்குநின்றும் போந்து அவ்வுப்பு வாணிகர் செல்லுதலும்; அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றொழிந்தமை அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதொன்றாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதொன்றாகும்; அங்ஙனம் துன்பந்தருதற்கு இடங்கள்தோறும் துன்புறுத்தி வருகின்ற கூதிரின் ஊதைக்காற்றுடனே; நீ இல்லாது தமியேமாகிய காலத்துப் போதருகின்ற மாலைப்பொழுதும் ஏதுவாகவுடைத்தாயிராநின்றது; அதனை அறிந்து வைத்தும் நீ பிரியின் மீன் இனத்தை மிகத்தின்ற வெளிய நாரை மிதித்த நீர்வற்றிய குளத்து நெற்தன் மலர்போல; இவள் ஒருநொடிப் பொழுதும் உயிர் வைத்திருப்பவள் அல்லள், அங்ஙனம் இறந்துபடும் இவளது செயலை நினையாத நீ அம்மவோ ! திண்ணமாக அறியாமையுடையையாவாய்;

வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 184. பாலை

ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;
இனியே, தாங்கு நின் அவலம் என்றிர்; அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே- உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்; அவளும் போரின் மிக்க வலிமையும் கூரிய வேற்படையையுமுடைய காளையாவான் ஒருவனொடு நெருநலிரவு பெரிய மலையின்கணுள்ள சென்று சேர்தல் அரிதாகிய சுரநெறியே சென்றொழிந்தனள் கண்டீர்; அங்ஙனம் அவள் போயொழிதலானே அவள் பால் யான் கொண்டிருந்த அவாவும் நீங்கியது ஆயினும்; வேறு புதல்வியரோடு மகிழ்ந்துறையும் பயனெய்திலேனாகலின் அவளொடு பழகியதே காரணமாக இன்று வருந்தும் என்னை நீயிர் இனி நின் அவலத்தை அடக்கிகொள்ளெனக் கூறாநின்றீர்; அதனை அடக்கிக்கொள்ளுதல் எவ்வாறியலும்கொல்?; மையுண்ட கண்ணின் மணியூடு வாழும் பாவை வெளிவந்து நடைபயின்று நடந்தாலன்ன என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடிய; நீல மணிபோன்ற பூவையுடைய நொச்சியையும் திண்ணையையும் நோக்கி நினைந்தால்; அவ்வண்ணம் கருதும் உள்ளமும் வெந்தழியுமன்றே, இனி யான் எவ்வாறு உய்குவேன்?

மனை மருட்சி

நற்றிணை - 185. குறிஞ்சி

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்- பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, 5
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய 10
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்- நோகோ யானே.

பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; என்னைக் கொலைசெய்யும் வண்ணம் ஆராய்ந்து நன்றாக அறிந்து கொண்டனள்; அங்ஙனம் சூழ்ந்தவளது சூழ்ச்சியிலே பட்டு இன்னும் இறவேனாகி அடங்காத நோயுடனே பலபலவாக எண்ணிக் கழிக்கின்ற துன்ப மிகுதலானே கலக்கமெய்தி; காமமானது அளவுகடந்து பெருகுதலானே என் செயலொருங் கழிந்து வருந்துகின்றேன், இங்ஙனம் வருந்தி அழிந்தொழிவதனை நீ கண்ணாலே கண்டுவைத்தும்; அவளுடன் கூட்டுவிக்கு முயற்சியை நீயே செய்யாதொழியின்; அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்ததென அவ்வூழினை யான் நோவா நிற்பேன்;

பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

நற்றிணை - 186. பாலை

கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு,
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, 5
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில-
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. 10

கல்லின்கண்ணே ஊறுகின்ற ஊற்றிற் சேர்தலையுடைய நீரைப் பெரிய சருச்சரையுடைய நீண்ட துதிக்கையை நீட்டி; அவ் வூற்றுக் குழியில் அற வாங்கி முகந்து கொண்டு; பெரிய கையையுடைய களிற்றியானை தன் பிடியானையினெதிரே ஓடாநிற்கும்; காடு முற்றும் வெப்பமடைந்த வறன் மிக்க கற்சுரத்திலே; தன் வாழ்நாளும் பொருளும் இன்னோரன்ன எல்லாம் பிறர் பொருட்டேயென்று முயன்று முடிக்கும் பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; அழகிய பொருளாசை பிணித்தலால்; எம் காதலர் சென்ற அச்சமுடைய நெறி; வேனிலின்கண் மாறி மாறித் தன்னிறம் வேறுபடுகின்ற முதிய ஓந்திப்போத்துத்தான்; ஏற இயலாது வருந்தியவிடத்து ஆண்டுச் செல்லும் பாணர் தம் அசைவு தீரச் சிறிது பொழுது யாழ் வாசிப்ப அதனைக் கேட்டலும் தன் வருத்தந்தீர்ந்து; பக்கத்தில் நீண்டு நிற்றலையுடைய யாமரத்தின் மீது ஏறுந்தொழிலையுடையனவென்பர்; அத்தகைய கொடிய காட்டில் அவர் செல்லுவதனை நினைத்தலான் இனி எவ்வண்ணம் யான் ஆற்றியுளேனாவேன்?

பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

நற்றிணை - 187. நெய்தல்

நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, 5
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே- தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? 10

நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஆதலால் இவ்வூருடனே; தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்;

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 188. குறிஞ்சி

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! 5
நன்றி விளைவும் தீதொடு வரும் என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.

ஆழ்ந்த சுனையில் நீரையுடைய மலைப்பக்கத்தில் முளைத்த வாழையின் வளைந்த மடலினின்று போந்த கூபபிய நுனியையுடைய குவிந்த முகையானது; ஒள்ளிய கலனையுடைய மாதர்களின் விளங்கிய வளையோடு பிணிப்புற்ற மெல்லிய விரலிலணிந்த விரலணிபோல; செங்காந்தளின் வளவிய இதழிலே தோயாநிற்கும் விசும்பில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!; எம் தலைவி ஒரு காலத்து நன்றாக முடிவதொரு காரியமும் மற்றொரு காலத்துத் தீதாக வரும் என்று நின் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின்கண்ணே இரந்து பின்னிலை நின்ற அக் காலத்து நன்றாக அறிந்தனளாயிருப்பின்; குன்றத்ததாகிய தேன்முற்றிய பக்கமலையில் முளைத்து வளைந்த அடியையுடைய மூங்கில் போலும் பருத்ததோள் இக் காலத்து நெகிழ்வாளல்லள்; அது கழிந்த செயலாகி முடிந்ததாகலின் இனிக் கூறி என்ன பயனாம்?

பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

நற்றிணை - 189. பாலை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- 5
எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்,
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? 10

கொடிய கொலைத் தொழிலில் வல்ல வேட்டுவனது வலையை அறுத்துவிட்டோடிய காட்டின்கணுள்ள சேவற்புறாவானது; தன் வாயில் உண்டாகும் நூலாலே கட்டிய சிலம்பியின் கோட்டையைக் கண்டு அஞ்சாநிற்கும்; சுழன்றடிக்கின்ற சூறைக்காற்றையுடைய சுரத்தின் கண்ணே சென்ற தலைவர்; அவரையன்றிச் சிறிதும் பொருந்தியிராத நம்மை விரும்பி அருள்செய்ய இன்னும் வந்திலர்; அங்ஙனம் வாராராயினும் வேறியாண்டைச் சென்றிருப்பர்?; பாணர் தெறுகின்ற சினம் தணிதற்கரிய தெய்வத்தின் முன்பு சென்று அதன் சினமடங்குமாறு சிறிய யாழின் நரம்பினோசையை யெழுப்பிப் பாடினாலொத்த இனிய குரலையுடைய குருகுகளிருக்கின்ற; கங்கையாற்றின்கண் ஓடுகின்ற மரக்கலத்தேறி யாண்டேனுஞ் செல்லுகிற்பர் கொல்?; அவர் பிற எந்தச் செயலைச் செய்கிற்பர் கொல்? ஓரிடத்தும் போகலர் ; ஒரு செயலுஞ் செய்கலர்; ஆதலின் இன்னே வருகுவர் காண்; நீ வருந்தாதே கொள்?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

நற்றிணை - 190. குறிஞ்சி

நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் 5
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,
வலை மான் மழைக் கண், குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!

நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த ஆர்க்காடு என்னும் ஊரையொத்த; விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக;

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

நற்றிணை - 191. நெய்தல்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, 5
எல்லி வந்தன்றோ தேர்? எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி 10
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்;

தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 192. குறிஞ்சி

குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, 5
நீ நயந்து வருதல் எவன்? எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் 10
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!;

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

நற்றிணை - 193. பாலை

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; 5
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக,
யாரும் இல் ஒரு சிறை இருந்து,
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே!

உருக்கிய அரக்குப் போன்ற சிவந்த வட்டமாகிய முகையையுடைய ஈங்கையினது பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி நின்பாற் கலப்ப; அத் தேன் துளியுடனே புதுவதாக மழை பெய்து நிறைந்த நீர்ததும்பும் புலங்களுட் புகுந்து அவற்றை அளைந்தும்; அங்குத் தங்காமல்; எமது பெரிய அயற்பக்கமெங்கும் சூழ்ந்து வந்து மோதுகின்ற பெரிய குளிர்ச்சியையுடைய வாடையே!; யாம் ஒருபொழுதும் எம் நெஞ்சினுள்ளே நினக்குத் தீதாகிய செயலைக் கருதி யறிந்ததுமில்லையே! அங்ஙனமாக; எம்முடைய பருத்த தோளிலேற்றிய ஒளியையுடைய வளை நெகிழும்படி செய்த எம் காதலர் தாம் ஈட்டுதற்கரிய பொருளீட்டுமாறு உள்ளம் பிணித்தல் காரணமாக அகன்றனராதலினால்; உசாவுந்துணை யாருமில்லாது ஒருபுறத்திருந்து பெரிய துன்பமுறுவேமாகிய எம்மை வருத்தாதே கொள்!;

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

நற்றிணை - 194. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் 5
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
இரும்பு கவர்கொண்ட ஏனற்
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? 10

தோழீ! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் ஒன்றோடொன்று செறிந்திருப்பதால் ஏறியறியாத மரங்கள் நெருங்கிய ஓரிடத்திலே; குன்றுகளையுடைய மலைகிழவனுடன் நாம் முயங்கி விளையாட்டயராநிற்கவும்; அப்பொழுது மிக விருப்பங்கொண்ட புனத்திலுள்ள தினையின பெரிய கதிர்களைத் தின்றழித்துவிடாத; பெரிய வாயையுடைய கன்றினை, மருங்கிலுடைய பிடியானையோடு புணர்ந்து இயங்குகின்ற வலிமை மிக்க மருப்பினையும் நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய நெடிய துதிக்கையையும் பெருமையையுமுடைய களிற்றியானைக்கு; நாம் யாது கைம்மாறு செய்யக்கடவாநிற்போம்?; அன்றியும் மிக விருப்பங்கொண்ட பெரிய தினைக் கதிரைக்கொண்டு போகாதொழிந்த சிறிய பசிய கிள்ளைக்கு; யாது கைம்மாறு செய்யக் கடவா நிற்போம்; இப்பொழுது நம்மை இல்வயின் செறித்தலானே அவை புனம் புகுந்து அழிக்கலாயின;

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 195. நெய்தல்

அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, 5
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.

கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல்லென ஒலிக்கின்ற புள்ளினங்களையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த தொண்டியின் கண்ணதாகிய வயலிலே; நெற்கதிர் அறுக்கும் உழவரினுடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனாலே; பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தன் மலர்; நீரில் முங்கி அலைகின்ற தோற்றத்தைப்போல; நீ விரும்பிய காதலியின் கண்கள் ஈரியவாய்க் கலுழாநிற்கும் ; அதனை யான் கண்டிருக்கின்றேன்; ஆதலின் நீயும் அவள் கலுழாதிருக்குமாறு வரைந்தருள செய்கின்றாயில்லை; இங்ஙனம் அருளாதிருப்பது ஓஒ கொடிதுகாண்!

களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

நற்றிணை - 196. நெய்தல்

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், 5
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும்ந் அதனை நோக்கித்ந் திங்களே!; நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; நீ காட்டுவதுதான் இயலுமோ ? இயலாதன்றே; என்றாள்,

நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்

நற்றிணை - 197. பாலை

தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர் என,
ஆழல், வாழி- தோழி!- நீ; நின் 5
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் 10
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்களும் தண்ணிய நீர் பெருகின; இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தௌபிந்துகொண்டோம் என்று; அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்;

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - நக்கீரர்

நற்றிணை - 198. பாலை

சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்,
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் 5
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர்,
சில் வளை, பல் கூந்தலளே, அவளே;
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் 10
தந்தைதன் ஊர் இதுவே;
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே!

சேய்மைக் கண்ணிருந்து வாராநின்ற அரசகுமாரனே!; யாமரம் உயர்ந்து ஓமை மரம் நீடிய காடிடையிட்ட சுரத்திலே; நேற்று நெடுந்தூரஞ் சென்ற என் மகள் போல இவள் என்கண் எதிரே படுதலால் என்கண் நீர் நிரம்பப் பெருகாநின்றது; அவள்தான் நுண்ணிய பலவாய வரி பொருந்திய அல்குலும் தோன்றிய சுணங்கும் நேர்மையுற்று விளங்கிய வெள்ளிய பற்களும் பொருந்திய பாதிரி மலர்ப் பிணையலும் சிலவாய வளையும் பலவாய கூந்தலும் உடையாள்; நிற்க, நும்மை அவள் தந்தையினூர் இடத்தில் விருந்தேற்று உபசரித்துத் தொழுகிற்பேன்; அவ்வண்ணம் நும்மை எதிர்கோடற்கு ஏற்ற மைபோன்ற கரிய அணலையும் பிடரியையும் வலிய நெடிய கையையும் வலிய வில்லினையும் அம்பையும் அளந்தறியா வண்மையையும் கள்ளுணவையுமுடைய தந்தையினது ஊர் இதுவே கண்டீர்; யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்; எனது ஆற்றாமையைக் கண்ட நீயிர் அவளை எதிர்கண்டு பேசிய வகையை நுவலுவீராயின் நுமக்கு அறத்தாலாய புகழ் உண்டாகுக!

பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. - கயமனார்

நற்றிணை - 199. நெய்தல்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் 5
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
பைபய இமைக்கும் துறைவன் 10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!

தோழீ! வாழி! சூழ்ந்த கடனீரில் விரைந்து செல்லும் சுறாமீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைந்த மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்; இழுக்கும் விசையையுடைய தூண்டிலின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலானே; எரிகின்ற கற்றை சாய்ந்து பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே ஒளிரும் மீன்களைப் போல; சிறுகி மெல்ல மெல்ல ஒளி வீசாநிற்கும் துறையையுடைய தலைவனது; உடம்பை அணைந்து முயங்கும் முயக்கத்தை யான் அடையப் பெறாத விடத்து; உயர்ந்த மணல் மிக்க திடாந் சூழ்ந்த நீண்ட கரிய பனையினது; நெருங்கிய மடலிற் கட்டிய குடம்பையின் கண்ணே யிருக்கின்ற பிரிவுற்று வருந்துதலையுடைய வெளிய நாரை ; இரவு நடுயாமத்தே நரலுந்தோறும் உருகி ; அள்ளலாகிய குழம்பு போன்ற என்னுள்ளத்தொடு என் மனமும் உடைந்து இன்னும் உயிர் உடையேனாயிரா நின்றேன்; என் உயிர்தான் எவ்வளவு வன்¬மையுடையது காண் !

வன்புறை எதிரழிந்தது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 200. மருதம்

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
சாறு என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- 5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் 10
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே.

அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்ந்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக!

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, இங்ஙனம் சொல்லாயோ? என்று குயவற்குச் சொல்லியது. - கூடலூர்ப் பல் கண்ணனார்

நற்றிணை - 201. குறிஞ்சி

மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் 5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் 10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

மலையின்கண்ணே உறைகின்ற குறவனின் காதலையுடைய இளமகள் அரிய காவலையுடையவள்; அதனால் நின்னாலே பெறுதற்கரியள் கண்டாய்; நீ கூறிய மொழிகளை ஏற்றுக் கொள்ளும் இயல்புடையள் அல்லள்; அவள் இத்தன்மையளாதலின் அவளை நினைத்தலும் கூடாது என்ற நண்பனே!; சிவந்த வேரையுடைய பலா மரங்களின் பழங்கள் பொருந்திய தெய்வத்தாலே பாதுகாக்கப்பட்டு வருகின்ற; தீது தீர்ந்த நெடிய கொடு முடியையும் அழகிய வெளிய அருவியையுமுடைய கொல்லி மலைச் சாரலிலே; காற்று மோதி யடித்தாலும் வலிய மழை விரைந்து வீசினாலும் சினங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும்; இவையேயன்றி வேறுபல ஊறுபாடுகள் தோன்றினாலும் பெரிய இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும்; தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினையுடைய பாவைபோல; என்னெஞ்சினின்றும் நீங்கி ஒழிபவள் அல்லளாயிராநின்றாள்; ஆதலின் அவளை யான் எவ்வாறு மறந்துய்வேன்?

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 202. பாலை

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் 5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்- வாழியோ, குறுமகள்!- நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல, 10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

இளமடந்தையே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; புலியொடு போர் செய்தலாலே இரத்தந் தோய்ந்து சிவந்த புலவு நாற்றத்தையுடைய செவ்விய மருப்பின் அடியிலே தழைத்த பலவாய முத்துகள் ஒலியாநிற்ப; வலிமிக்கு வலிய மேட்டு நிலத்தின்கணுள்ள வேங்கை மரத்தின் பருத்த அடியை முறித்து; தன் கன்றுடனே இளம்பிடியை அணைத்த நீண்ட கையையுடைய களிற்றியானை; தேனைத் தொகுக்கின்ற ஈக்களெல்லாம் ஓடுமாறு அவ் வேங்கையின் பொன் போன்ற பூங்கொத்தாலாகிய உணவைப் பாதுகாத்து நின்று ஊட்டா நிற்கும்; கரிய மலைப் பிளப்பிடங்களைச் சூழ்ந்து அழகுமிக; கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல பூக்கள் நிரம்பிய கோங்கங்கள் அழகு செய்யப்பட்ட நின் தந்தைக்குரிய இக் காட்டினை நீ காண்பாயாக!

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நற்றிணை - 203. நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, 5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும், 10
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும்ந் மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!;

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது. - உலோச்சனார்

நற்றிணை - 204. குறிஞ்சி

தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் 5
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் 10
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

மடந்தாய்! தளிர் சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் நீ பின்னர் என்னை முயங்குதி என இனிய மொழிகளைக் கூறி; கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே!

பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மள்ளனார்

நற்றிணை - 205. பாலை

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய், நீயே 5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே- படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய 10
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; பிறர் நெருங்குதற்கரிய காடென்று நினையாய்; நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக!

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம். - இளநாகனார்

நற்றிணை - 206. குறிஞ்சி

துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும் என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க என 5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!-
செல்வாள் என்றுகொல்? செறிப்பல் என்றுகொல்?
கல் கெழு நாடன் கேண்மை 10
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - ஐயூர் முடவனார்

நற்றிணை - 207. நெய்தல்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி 5
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் 10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.

அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய ; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்ந்காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம்ந் வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம்ந் உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்?

நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

நற்றிணை - 208. பாலை

விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?- சுடர் நுதற் குறுமகள்!-
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், 5
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, 10
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?

விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்!

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. - நொச்சி நியமங் கிழார்

நற்றிணை - 209. குறிஞ்சி

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் 5
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!

மலைச்சார்பிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையாகிய மழை பெய்யும் பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர்; சிலவாய விதைகளைக் கலப்பாக விதைத்து ஒருசேரப் பலவாக விளைந்து சாய்ந்து கதிர் விளங்கிய தினைக்கொல்லையின்கண்; உள்ளாளாகிய மழலை மாறாத இளமடந்தை பேசுகின்ற இனிய குரலைக் கிளிகளும் அறிந்திருப்பனவே; அவ்வினியகுரல் என் அருகிருந்து மிழற்றின் அன்றே எனது காமநோய் தீரும்; அங்ஙனம் அருகிருந்து மிழற்றப்படாது என்னினின்று நீங்கி அகல்வதாயின்; என் அறிவு முதலாய குணங்களுடன் என் உயிரையும் சேர எல்லாவற்றையும் கைக்கொண்டு அகலா நிற்கும்; இப்படியாயின் அவள் இன்றி யான் எவ்வாறு உய்ய மாட்டுவேன்?

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். - நொச்சி நியமங்கிழார்

நற்றிணை - 210. மருதம்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!; அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்; இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்; அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்?

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்

நற்றிணை - 211. நெய்தல்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிப்பரந்த உப்புப் படுதலையுடைய சேற்றினையுடைய; வளைந்த கழியிடத்து இரையை விரும்பி யெழுந்த கரிய காலையுடைய குருகின்; குத்துக்குத் தப்பிப்ந் பிழைத்தோடிய; வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறவின் ஏற்றை; மோதுகின்ற அலை கொழித்திடப்பட்ட மணல் மேடாகிய நெடிய கரையின் கண்ணே நெருங்கிய கடலின் புறத்திலே தலைசாய்ந்துடைய இலைகள் பொதிந்த தாழையினுடைய; வண்டுகள் வந்து மொய்க்காநின்ற வெளிய பூவை நோக்கி இதுவுமொரு குருகு கோலுமென்றஞ்சா நிற்கும் துறைபொருந்திய கடற்கரைக்குத் தலைவனாகிய நங்காதலன்; என்னைத் துறந்து சென்றொழிந்தனனென்று யாரிடத்தில் யான்படுந் துன்பத்தையெல்லாம் புலப்படுத்து வருந்தி உரையாநிற்பேன்!

வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. - கோட்டியூர் நல்லந்தையார்

நற்றிணை - 212. பாலை

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் 5
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி- தோழி!- கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. 10

தோழீ! பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலையைக் கண்டு வெருவி நெடிய காலையுடைய கணந்துள் என்னும் பறவை தான் தனிமையினிருந்து கத்தாநின்ற தௌபிந்த ஓசை; அச்சுரத்தின் கண்ணே செல்லுகின்ற கூத்தாடிகள் தம் வழிவருத்தம் நீங்குமாறு தங்கி விரைவில் ஒலியெழுப்பி இசைபாடுகின்ற யாழோசையோடு சேர்ந்து ஒத்து ஒலியாநிற்கும் அரிய நெறியிலே; கடிய ஒலியையுடைய பம்பையையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருக்கின்ற நெடிய பெரிய குன்றங் கடந்து; நம்முடைய கையிலுள்ளதாகிய செம்பொன்னாற் செய்து பூட்டப்பட்டு இப்பொழுது கழன்று விழுகின்ற தொடியை நோக்கி; நம் (அரிய) சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுகின்ற இனிய குரலைக் கேட்குந் தோறும்; ஆசைகொள்ளுகின்ற மனத்தை யுடையேமாகிய நமக்கு மனமகிழச்சி உண்டாகும்படி; நம்மிடத்து வந்தெய்தினர் கண்டாய்! ஆதலின், இனி நீங்கள் இருவீரும் மனையறஞ் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்வீராக!

பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

நற்றிணை - 213. குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் 5
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது? என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?- 10
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!

பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்;

மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

நற்றிணை - 214. பாலை

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு என, 5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ- தோழி!- தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி 10
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?

தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; என்னை நோக்கி நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்ந்காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும்ந் இல்லாத நங்காதலர்; என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?;

உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கோசனார்

நற்றிணை - 215. நெய்தல்

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் 5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோதெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய 10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்;

பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர் எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம். - மதுரைச் சுள்ளம் போதனார்

நற்றிணை - 216. மருதம்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; 5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும், 10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும்ந் முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்?, கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவரில்லாத வூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர்

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 217. குறிஞ்சி

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் 5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்- தோழி!- நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.

தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய நம் காதலன்; பலகாலும் நம்பால் நிகழ்த்தும் புணர்ச்சியானும் பெருநயப்பு முதலியவற்றானும் மிகப்பெரிதும் இனியனாயிருப்பினும் பிரிவினாலுண்டாகிய நீடிய வருத்த மெல்லாம் தூரத்தே அகன்றுபோகும்படி வந்துகூடி யான் கொண்ட புலவியைப் போக்குமாறு என்னைப் பணிந்துணர்த்தல் முதலாகிய வண்மையைச் செய்தலானே; யான் வருத்தமேற்கொண்டேன் போல ஊடாநிற்பேன்காண்!

தலைமகள் வாயில் மறுத்தது. - கபிலர்.

நற்றிணை - 218. நெய்தல்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர் 5
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ, 10
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; இடங்கள் தோறும் வெளவாலும் பறந்து உலவாநிற்கும்; ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்?

வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில். - காவிதிக் கீரங்கண்ணனார்

நற்றிணை - 219. நெய்தல்

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி- தோழி!- சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் 5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
தானே யானே புணர்ந்தமாறே. 10

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! ; என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டு; பசலைபாய இனிய என்னுயிர் இறந்து படுவதாயினும்; சிறிய காலையுடைய ஞெண்டுகளோடு பெயர்ந்தேகும் புலவு நாற்றத்தையுடைய அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின்கணுள்ள பரதமாக்கள்; மரக்கலங்களுக்குத் தெரியுமாறு இரவிலிடப்பட்ட நெருங்கிய கதிர்களையுடைய ஒள்ளிய விளக்கம்; முதிராத இளஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும்; கழிக்கரைச் சோலையையும் பெரிய கடலின் துறையையும் உடைய நங்காதலன்; தமியனாய் வந்து யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து தலையளி செய்ததனால் இனியும் அங்ஙனம் வருவான் என்னுங் கருத்தோடு; சிறிதும் அவன்மீது புலப்பேனல்லேன்காண்;

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - தாயங்கண்ணனார்

நற்றிணை - 220. குறிஞ்சி

சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர்மன்ற- விசிபிணி 5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே! 10

பனைமடலால் உண்ணாத ஒரு நல்ல குதிரையைச் செய்து அதற்குச் சிறிய மணிகளைக் கட்டிப் பெரிய கச்சையைப் பூட்டிக் குறிய எருக்கம்பூமாலையைச் சூடி ஒரு தோன்றல் அதில் ஏறியிருப்ப; அக் குதிரையை ஈர்த்துக் கொண்டு யாம் வருகிற தெருவில் எம் பின்னே வந்து திரிகின்ற சிறிய குறிய பிள்ளைகளாகிய; நன்றாய் இறுகக் கட்டிய குட முழாவின்கண் ஓயாது முழங்குகின்ற திருவிழாவையுடைய அந்த வூரினே மென்று கூறும் இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்; உலகநடை அறிந்திருப்பாரேயாயின்; எம்மைச் சுட்டித் தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர் என்று; எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?; இங்ஙனம் கூறுதலால் இவர் பெரிதும் சால்புடையர் போலும்;

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம். - குண்டுகட்பாலியாதனார்

நற்றிணை - 221. முல்லை

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், 5
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் 10
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
வந்தீக, எந்தை! என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; எந்தாய்! வருக என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக;

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

நற்றிணை - 222. குறிஞ்சி

கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் 5
செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? 10

தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்!

தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - கபிலர்

நற்றிணை - 223. நெய்தல்

இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் 5
எல்லி வம்மோ!- மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்; இவளைத் தலையளி செய்யவேண்டி நீ பகற்பொழுதின் கண்ணும் பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையில் அன்று கொண்ட குறிவயின் வாராநின்றனை; இங்ஙனம் நீயிர் இருவீரும் களவின் ஒழுகுதல் இனிதேயா மென்றாலோ; ஊரார் கூறும் பழி மொழியே காரணமாக இவள் மீள்வதற்கரிய சிறையின்கண்ணே படுத்தப் படா நிற்பள்காண்!; ஆதலின் இனி நீ இராப் பொழுதையில் இங்கு வருகுவாயாக!; நீ அங்ஙனம் இரவின் வருவையாயினும் பழிச்சொல்லை மேலேறட்டுக் கூறா நிற்கும் இவ்வூர்; சுறாமீனினம் மிக்க நிறைந்த கடற்பரப்பிலுள்ள துறையிடத்தும்; துயிலாத கண்ணினராகிய கொடிய மாதரையும் உடையராயிராநின்றது; ஆதலின் இரவின் வருதலினும் இடும்பை எய்தும் போலும்;

பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - உலோச்சனார்

நற்றிணை - 224. பாலை

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
பின்பனி அமையம் வரும் என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
புணர்ந்தீர் புணர்மினோ என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் 5
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
பிரியலம் என்று, தௌத்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே- கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய 10
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

நங் காதலர்; நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குராமரம் அரும்பு கட்டின; மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்! என்று; தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; இனி நம் வயிற் பிரியகில்லோம். என்று என்னைத் தௌபிவித்தனர், அங்ஙனம் தௌபிவித்தவராய்ப் பின்பு; குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்?

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ? என்று சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 225. குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல்- தோழி!- திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின்கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை ; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்!

வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

நற்றிணை - 226. பாலை

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!-
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, 5
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

அழகிய நுதலையுடையாய்! இவ்ந்வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்;

பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - கணி புன்குன்றனார்

நற்றிணை - 227. நெய்தல்

அறிந்தோர் அறன் இலர் என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர் 5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது- ஐய!- நின் அருளே.

ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்!

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. - தேவனார்

நற்றிணை - 228. குறிஞ்சி

என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே- கானவன் 5
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ?

தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - முடத்திருமாறனார்

நற்றிணை - 229. பாலை

சேறும், சேறும் என்றலின், பல புலந்து,
சென்மின் என்றல் யான் அஞ்சுவலே;
செல்லாதீம் எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, 5
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை, 10
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?

நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; நீர் செல்லாது இங்கே இருமின் என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக!; இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள்ந் கண்டீர்!; அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!;

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.

நற்றிணை - 230. மருதம்

முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! 5
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. 10

நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்!

தோழி வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 231. நெய்தல்

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே- தோழி!- பண்டும், 5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.

தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது;

சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது. - இளநாகனார்

நற்றிணை - 232. குறிஞ்சி

சிறு கண் யானைப் பெருங் கை ஈர்- இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் 5
மா மலை நாட!- காமம் நல்கென
வேண்டுதும்- வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்!

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது. - முதுவெங்கண்ணனார்

நற்றிணை - 233. குறிஞ்சி

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று 5
கூறுவென் வாழி- தோழி!- முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.

தோழீ! வாழ்வாயாக!; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்!

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்

நற்றிணை - 234. குறிஞ்சி

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 5
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

நமரங்காள்!; நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று நன்றாகும்; அங்ஙனமின்றி; நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம்.

செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

நற்றிணை - 235. நெய்தல்

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், 5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ- தோழி!-
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. 10

தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்;

வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

நற்றிணை - 236. குறிஞ்சி

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு 5
உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. 10

தோழீ! நீ வாழ்வாயாக!; எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள் என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!;

தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நம்பி குட்டுவன்

நற்றிணை - 237. பாலை

நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!- 5
உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! 10

மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி ஆய்அண்டிரன் சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்ந் வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு;

தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்

நற்றிணை - 238. முல்லை

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை! 5
அவர் நிலை அறியுமோ, ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும், 10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; நீ அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள் என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல;

தலைமகள் பருவம் கண்டு அழிந்தது. - கந்தரத்தனார்

நற்றிணை - 239. நெய்தல்

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10
முயங்கு எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்ந் வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்ந் வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக! என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?

தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்

நற்றிணை - 240. பாலை

ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே-
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், 5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே. 10

கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக!

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம். - நப்பாலத்தனார்

நற்றிணை - 241. பாலை

உள்ளார்கொல்லோ- தோழி!- கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன், 5
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, 10
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ?

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரைப் பெருமருதனார்

நற்றிணை - 242. முல்லை

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து 5
செல்க- பாக!- நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே. 10

பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக!

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

நற்றிணை - 243. பாலை

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு 5
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்! என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், 10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தௌபிந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!; என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தௌபிவாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு;

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - காமக்கணிப் பசலையார்

நற்றிணை - 244. குறிஞ்சி

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- 5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை- தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என் 10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!;

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. - கூற்றங்குமரனார்

நற்றிணை - 245. நெய்தல்

நகையாகின்றே- தோழி!- தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், 5
தௌ தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ? என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல் 10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தௌபிந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தௌபிந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்!

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. - அல்லங்கீரனார்

நற்றிணை - 246. பாலை

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, 5
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி- தோழி!- புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
வருதும் என்ற பருவமோ இதுவே? 10

தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்ந்டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தௌபிவியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - காப்பியஞ் சேந்தனார்

நற்றிணை - 247. குறிஞ்சி

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ 5
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக!

நீட்டியாமை வரை எனத் தோழி சொல்லியது. - பரணர்

நற்றிணை - 248. முல்லை

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்மன்- இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், 5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! 10

மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம் என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!;

பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது. - காசிபன் கீரனார்

நற்றிணை - 249. நெய்தல்

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் 5
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ, 10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும்ந் பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கனது தேர்ந் முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?;

வரைவிடை மெலிந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 250. மருதம்

நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் 5
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
யாரையோ? என்று இகந்து நின்றதுவே! 10

பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்!

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்.

நற்றிணை - 251. குறிஞ்சி

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, 5
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, 10
நீடினை விளைமோ! வாழிய, தினையே!

தினையே! நெடிதாம் நீர்மையுடைய அருவியினது ஒலிமிக்க அவ்விடத்திலே; பிணிப்புண்ட அடியையுடைய பெரிய மலையிடத்துண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை; மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனை விரும்பி; யாம் அவனது கருணைமிக்க அன்பினால் நின்னுடைய கதிர்களைக் கிளிகள் கொய்யாதபடி ஓப்பி நின்னைப் பாதுகாத்திருப்பதையும் நீ கண்டிருக்கின்றாயன்றே? ; தளிர் போன்ற என்னுடம்பில் உள்ள பழைய அழகு கெடும்படி; அன்னையானவள், யான் வெளிப்படாதவாறு இல்வயிற் செறித்து ஆடு முதலிய பலியைப் பெற இருக்கின்ற முருகவேளை வழிபட்டு; மாதர்குழாத்தொடு கூடி ஒலிமிக்கு வெறியெடுக்குங்காலை; யான் நின்னைக் காப்பதில்லாது கைவிட்டு விடுதலானே கிள்ளை முதலாய பறவைகள் ஒருசேர வந்து உன்னுடைய கதிர்களைக் கொய்துகொண்டு போகாநிற்கும், ஆதலின் இப்பொழுது நின்கதிர்த்தோட்டினிடம் தலைசாயாது நிமிர்ந்து நின்று நெடுநாட் கழித்துக் கதிரீன்று விளைவாயாக! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - மதுரைப் பெருமருதிள நாகனார்

நற்றிணை - 252. பாலை

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த 5
வினை இடை விலங்கல போலும்- புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் 10
நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே!

சுவரில் அலங்கரித்து எழுதிய பிரதிமை போன்ற குற்றந்தீர்ந்த காட்சியையும் மெல்லியதாய்ப் பொருந்தியகன்ற அல்குலையும்; மையெழுதப்பட்டு நீலமலரை எதிரிட்டுப் பிணைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ச்சியுற்ற கண்ணையும்; முயலைப் பிடிக்க வெழுந்த விரைந்த செலவும் சினமுமுடைய நாயினது நல்ல நாவினை யொத்த சிறிய அடிகளையும்; செறிந்த கூந்தலையும் புனைந்த கலன்களையுமுடைய இவளுடைய குணங்கள்; கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டகிளைகளுள் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலியாநிற்கும் வேற்றுநாட்டின்கண்ணே; செல்லுகின்ற நெறியில் இன்னவாறு செல்வோமென்னுங் கோட்பாட்டினோடு சென்றிருந்து பொருள் சேர்த்தாலல்லாமல்; வீட்டின்கண் கவலையுடன் மனமடிந்து இருந்தவர்க்கு அரிய பொருளின் சேர்க்கை ஒருபொழுதும் சேர்வதில்லை யென்று; இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால்; தலைவர் ஆராய்ந்து தொடங்கிய காரியத்தின்கண்ணே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்தில போலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பால தன்றி வேறு செய்யக்கடவது யாதுமில்லை;

பொருள்வயிற் பிரியும் எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - அம்மெய்யன் நாகனார்

நற்றிணை - 253. குறிஞ்சி

புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய், நினையினை, நீ நனி:
உள்ளினும் பனிக்கும்- ஒள் இழைக் குறுமகள், 5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,
பலவு உறு குன்றம் போல,
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.

ஒள்ளிய இழையை யணிந்த இளமகளாகிய தலைவி பெரிய முழக்கமுற்ற இடியுடனே மழை மாறாது சூழ்ந்து பெய்தலையுடைய பலவாகிய பனங்குடையிலிட்டுண்ணும் கள்ளினாலாகிய பேருணவையுடைய பாரியினது; பலாமரமிக்க பறம்புமலை போல; பெரிய அழகு அமைதலாலே இல்வயிற் செறிக்கப் பெற்று அரிய காவலுட்பட்டவளாயினாள்; அங்ஙனம் காவலுட்படுதலானே இக் களவொழுக்கத்தைக் கருதினாலும் நடுங்குந் தன்மையளாயிராநின்றாள்; நீதானும் புள்ளினம் தம்தம் கூட்டின்கண்ணே சென்று கூடியின்புற்றாலும் தலைவனுந் தலைவியுமாகக் கூடிப் புணர்ந்தாரைக் கண்ணாலே கண்டாலும்; படுக்கையிலே கிடந்த யானைபோல வெய்ய பெருமூச்சினையுடையையாய்; மிகுதிப்பட வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் அழிந்து யான் கூறுவனவற்றையுங் கேளாது; மிகக் கருதுந் தன்மையுடையையாயினை; இங்ஙனம் வருந்தியாவதென்னோ? இன்னே சென்று வரைவொடு வந்து புகுதுவாய்; வரைந்து கொள்வாய்; யான் கூறுவன இவைகளேயாகும்;

செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது. - கபிலர்

நற்றிணை - 254. நெய்தல்

வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! 5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை-
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, 10
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே

பகற்பொழுதெல்லாம் எம்முடன் வண்டல்மண்ணை வீடுபோலச் சமைத்துக் கோலஞ் செய்தும் கரைமேல் ஏறுகின்ற அலையை எற்றியும்; மலைபோல் உயர்ந்த வெளிய மணல் மேட்டிலே படர்ந்த கொடி யடும்பின் பூவைப் பறித்தும்; வருத்தந் தீர்ந்த நல்ல வார்த்தை இனியவற்றைக் கூறியும்; அங்ஙனம் நீ கூறியவற்றிற்கு விடையும் பெறாயாகி; மெல்ல நின்னூர்க்குப் போகும் பொருட்டுச் செல்லாநின்ற ஒலிக்கின்ற பெரிய கடற் பரப்பினையுடைய தலைவனே!; நேர்மையான இடத்தையுடைய உப்புப் பாத்தியிலே கடலின் நீரைக் கொணர்ந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்வதன்றி மழையை விரும்பாத வேளாண்மையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த எமது சிறுகுடியின்கண்ணே வந்து சேர்ந்து இராப்பொழுதில் அங்கே தங்கியிருந்து செல்வாயாயின்; உப்பு வாணிகராலே கொண்டுவரப்பட்ட உப்பு விலையினால் பெற்ற நெல்லைக் குற்றி ஆக்கிய அரிசிக்காணத்தை நின் குதிரை இன்று உண்ணாநிற்ப; நீயும் மலரின் கூட்டம் நன் மணங்கமழும் பெரிய பூமாலை புரளுகின்ற மார்பில் அணைக்குந் துணையின்றித் தமியே தங்குவாயல்லை; அத்தகைய துணையாகிய தலைவியை அணைத்து உறங்கப் பெறுவாய்;

தோழி படைத்து மொழிந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 255. குறிஞ்சி

கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- 5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல-
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல, 10
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

பேயினங்கள் விளக்கமுற இயங்காநிற்ப, இவ் விராப்பொழுதெல்லாம் ஊர்முழுதுந் துயில் கொள்ளாநின்றது; கேட்போர் அச்சம் பொருந்துதற்குரிய தன்மையுடனே குறிஞ்சியென்னும் பண்ணைப் பாடிக்கொண்டு அகன்ற இவ்வூரைக் காத்தலையுடைய கானவர் யாரும் துயில்வாரல்லர்; வலிய களிற்றியானையொடு பொருத வாள்போலுங் கோடுகளையுடைய புலி துறுகல் மிக்க மலையடியினின்று முழங்கா நிற்கும்; ஐயோ! ஓங்கிய மலைவழியில் உயர்ந்த மலைப்பக்கத்தில் விளங்கி மின்னி மழை பெய்தலை மயங்கி நிற்கின்ற காலம் நீட்டித்த இரவு நடுயாமத்து; பாம்பு தன்செவியிற் படுதலும் தன்னிடத்துள்ள அழகிய நீலமணியைக் கக்கி வருந்தி உழலுமாறு சினங்கொண்டு இடி முழங்கி மோதாநிற்கும்; இப்பொழுது மெல்லிய தோள் தளர்வுற்று நாம் வருந்துவதாயினும் அவர் இங்கு வாராராயிருத்தலே மிக நல்லதாகும்;

ஆறு பார்த்து உற்றது. - ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 256. பாலை

நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் 5
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும் 10
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.

நீதான் புலவராலே பாடுதற்கமைந்த குற்றமற்ற அழகிய சிறிய அடிகளுடனே பல்கிய பெரிய அழகு அமைந்த அமர்த்த கண்ணையுடையையாயிரா நின்றனை; காடுகளோ தீப்பற்றிய மரங்களையுடையனவாதலின் நிழலும் அழகும் நீங்கி ஒழிந்தன; அவ் வண்ணம் ஒழிதலும் தனிமை நிலைபெற்றிருத்தலினால் நன்மைகளெல்லாம் ஒருங்கே சிதைவுற்றன; இத் தன்மையாகிய நிலைமையினால் நின்னை உடன்கொண்டு சேறல் இயையாமையின் நின்னுடன் செல்லுதலைத் தவிர்ந்தனம்; அன்றிக் கூரிய நுனியையுடைய களாவின்மலர் ஒருங்கே மலர்ந்து மணங்கமழாநிற்பப் பிடாமலர் முறுக்குவாய் நெகிழ்ந்து மலர மேகந் தான் செய்ய வேண்டிய மழை பெய்தலைச் செய்யத் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில்; இளையபிணைமானைப் புணர்ந்த கரிய பிடரினை யுடைய கலைமான்; உள்ளே வயிர முற்றிய வேல மரத்தின் தாழ்ந்த கிளையினாற் பல்கிய காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் வரி பொருந்திய நிழலிலே தங்கியிருக்கும்; குளிர்ச்சியுற்ற காட்டின் கண்ணே செல்லுவதனையும் தவிர்ந்தனம், ஆக இருவகைக் காலத்தும் நின்னைப் பிரியாதிருக்க நீ வருந்துவதென்னை? வருந்தாதே கொள்!

பொருள்வயிற் பிரிந்தான் என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 257. குறிஞ்சி

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்-
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் 5
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட!- நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
நடு நாள் வருதி; நோகோ யானே. 10

அரும்புகள் முக மலர்ந்த கரிய காம்பையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய மலர் பாறைமேலுதிர்ந்து பரவாநிற்கும் நல்ல மலைநாடனே!; எம்பால் விரும்பி அருள் செய்யாயாகி; ஓயாத முழக்கமொடு மழை மிகுத்து இடியிடித்து மேகம் ஓங்கிச் சென்று பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலையிலே; மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரத்தின் கண்ணே; விளங்கிய வெளிய அருவியையுடைய அகன்ற மலைப்பக்கத்தில்; வழிப் போகுவார் யாருமில்லாத நீர் விளங்கிய சிறிய நெறியிலே; கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்குவதனை அறிந்துவைத்தும்; இரவு நடுயாமத்தில் நீ வாராநின்றனை; இதற்கு யான் நோகா நின்றேன் அல்லேனோ?;

தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது. - வண்ணக்கன் சோருமருங்குமரனார்

நற்றிணை - 258. நெய்தல்

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல்- கொண்க!- செறித்தனள் யாயே-
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் 10
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.

கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோர் கால்கள் வெம்பும்படி கீழைத்திசைமலையிலே தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றினுடைய இயக்கம் பொருந்திய பகற் பொழுதிலே; செல்வம் உடைய அகன்ற நகரின் கண்ணே வருகின்ற விருந்துகளைப் பாதுகாக்கும்படி; பொன்னாலாகிய தொடியையுடைய மகளிர் சமைத்து நிவேதித்து முற்றத்திலே பலியாகப் போட்ட கொக்கினது உகிர்போன்ற சோற்றைத் தின்று; பொழுதுபடும் அளவில் அகன்ற மீன்கடையில் அசைகின்ற நிழலிலே குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்துண்ட பசுமையாகிய கண்ணையுடைய காக்கை; ஆங்கு வினையின்றிக் காற்றாலசைகின்ற தோணியிலே பிணித்த பாய்மரத்திற் சென்று தங்காநிற்கும் மருங்கூர்ப்பட்டினம் போன்ற இவளுடைய; நெருங்கிய அழகும் ஒளியும் பொருந்திய வளைகள் கழல்வனவற்றைக் கண்டு; அன்னை இவ் வேறுபாடு முருகு அணங்கால் ஆகியது போலுமென உட்கொண்டு, இல்லின்கண்ணே செறித்துப் புறத்தேகவிடாது காவல் செய்வாளாயினள்; ஆதலின் இவள் வருதற்கியலாமையால் இல்வயிற் செறிப்பை நினக்கு உரைசெய்யும்படி கருதிய யான் இன்று பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையிலே பகற் பொழுதின்கண்ணே குறியிடத்து வந்து போகாநின்றேன்;

தோழி செறிப்பு அறிவுறீஇயது. - நக்கீரர்

நற்றிணை - 259. குறிஞ்சி

யாங்குச் செய்வாம்கொல்- தோழி!- பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, 5
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்- விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? 10

தோழீ! தினையின் கதிரெல்லாம் விரிந்த அலையையுடைய கடல்தான் வற்றினாற்போலக் காயும் பருவம் எய்தினகண்டாய்! இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பது திண்ணம; பொன்போன்ற மலரையுடைய வேங்கைமரங்கள் உயர்ந்த மணங்கமழ்கின்ற சாரலின் கண்ணே; பெரிய மலைநாடனொடு கரிய தினைப்புனத்திலே தங்கிச் சிவந்த வாயையுடைய பசிய கிளியை ஓப்பி; அங்குள்ள கரிய பக்க மலையின்கணுள்ள அருவியில் நீர்விளையாட்டயர்ந்து; மலைச்சாரலி லெழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச் சந்தனத்தேய்வையைப் பூசி; பெரிதும் விரும்பி இயைந்த நட்பு மிகச் சிறுகி இனி அது தானும் இல்லையாகும் போல யான் காண்பேன்!; ஆதலால் நாம் என்ன செய்ய மாட்டுவேம்;

தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - கொற்றங் கொற்றனார்

நற்றிணை - 260. மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! 10

கழுநீர் மலரை மேய்ந்த பெரிய (கரிய) காலையுடைய எருமை அயலிலுள்ள வயலிலே படர்ந்த தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்துவிட்டு; கையிலே தடிகொண்ட வீரரைப்போலச் செருக்கி நடந்து அதன் பக்கத்துள்ள குன்று போலக் குவிந்த வெளிய மணலின்மீது துயிலாநிற்கும் ஊரனே!; நீ இப்பொழுது விருப்பமுடையாய் போலப் பலகாலும் என்னைத் தழுவிக் கொள்கின்றனை; பகை மிகுதலாலே ஆண்டு வந்த பகைவரை யழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய விராஅன் என்பவனது நிறைந்த புனல்வாயிலை அடுத்த இருப்பையூர் போன்ற என்னை விட்டொழிதலானே; என்னுடைய தழைத்த பலவாகிய கூந்தல் அழகு பெற அலங்கரித்த அரும்பு மலர்ந்த பூமாலை வாடும்படி செய்த மிக்க பகைவனல்லையோ?; யான் நின் செய்கையை மறந்திருப்பேனல்லேன் காண்; ஆதலின் என்னைத் தொடாதே கொள்;

ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 261. குறிஞ்சி

அருளிலர்வாழி- தோழி!- மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, 5
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. 10

தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னல் பிளந்து எழுந்து இருள் நிறைந்த ஆகாயத்தில் அதிர்கின்ற இடிமுழக்கத்துடனே; வெய்ய ஆதித்தன் வெளியிலே தோன்றாதபடி மறையச் செய்த நிறைந்த சூலையுடைய மேகம்; நெடிய பெரிய மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி; வருத்தமில்லாத பெரிய மழையைப் பெய்துவிட்ட நடுயாமத்திலே; களிற்றியானைபைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெரிய சினத்தையுடைய பெரும்பாம்பு; வெண்மையில்லாது முற்றிய வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப்பிணித்து மிகப் புரட்டாநிற்கும்; சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப் பிளப்பினையுடைய துறுகல்லின் அயலிலே; கொறுக்கச்சியின் நல்ல பூ நீடி மலர்ந்த; பெரிய மலையின்கணுள்ள சிறிய நெறியில் வருதலான்; நம் தலைவர்தாம் நம்பாற் சிறிதும் அருள் உடையார் அல்லர்; இனி அங்ஙனம் வாராதிருக்குமாறு கூறாய்;

சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம். - சேந்தன் பூதனார்

நற்றிணை - 262. பாலை

தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் 5
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
பிரிவல் நெஞ்சு, என்னும்ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. 10

ஈரிய புனத்திலுள்ள கருங்காக்கணத்தின் கண்போன்ற கரிய மலர; வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலிபோல ஆடாநிற்ப; விடாது மழைத்தூவல் பொருந்திய ஊர் முழுதும் உறங்கும் நடுயாமத்து; நடுங்குகின்ற காமநோய் வருத்தஞ் செய்தலாலே நல்ல அழகு குறைந்து; துன்பமிக்க மனத்தளாய்த் தன்னை முனிந்தொறுக்கும் காமநோயால் உழக்(கப்படு)கின்ற; பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய தேமலையும் திரண்ட தண்டையுடைய குவளைமலர் மணம் வீசுங்கூந்தலையும் இனிய சொல்லையுமுடைய இவளை; கைவிட்டும் பொருளின் முயற்சி என்னெஞ்சினை இழுத்தலால்; என்னெஞ்சு யான் இவளைப் பிரிகிற்பேன் என்று கூறாநிற்கும்; அங்ஙனம் கூறுமானால் வறுமையான் வரும் இளிவரவு அம்ம திண்ணமாக மிகக் கொடியதேயாம்;

தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது. - பெருந்தலைச் சாத்தனார்

நற்றிணை - 263. நெய்தல்

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, 5
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த- தோழி!- உண்கண் நீரே. 10

தோழீ! பிறைபோன்ற அழகெல்லாம் இழந்த நினது நெற்றியையும் முன்கையளவினில்லாது கழலும் வளையையும்; மறைந்தேனுங் கூறாது நேராக வந்து ஊரார் அலர் தூற்றும் பழிச்சொல்லையும்; சொல்லவேண்டிய நங்காதலனுக்கு நாம் நாணமேலீட்டினால் சொல்லாதொழிந்தோ மெனினும்; இரையை விரும்பி நிறைந்த சூலுடைமையின் இயங்கமாட்டா வருத்தத்தினாலே நெய்தனிலத்தின்கண்ணதாகிய கழியை அடையாமல் மருதநிலத்தின்கண்ணதாகிய கழனியிலே தங்கியிருந்த வளைந்த வாயையுடைய பேடைநாரைக்கு, முடம் முதிந்ர் நாரை கடல் மீன் ஒய்யும் முடம் முதிர்ந்த நாரைப் போத்துக் கடலின் மீனைக் கொண்டுபோய்க் கொடாநிற்கும்; மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு; பலகால் நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவு கடந்து; மையுண்ட நம்முடைய கண்களின் நீரே வெளிவந்து உரை செய்துவிட்டன; யாம் யாது செய்யவல்லேம்!

சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது. - இளவெயினனார்

நற்றிணை - 264. பாலை

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர 5
ஏகுதி- மடந்தை!- எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

மடந்தாய்! ஞாயிறு மேலைத்திசையிலே சென்று ஒளி மழுங்கியது: வேய்பயில் இறும்பின் ஆ பூண் கோவலர் யாத்த தௌந்மணி இயம்பும் மூங்கில் நிறைந்த சிறிய மலையின் கண்ணே பசுவினிரை பூண்ட கோவலராலே கட்டப்பட்ட தௌபிந்த ஓசையையுடைய மணி ஒலியா நிற்கும்; எமது சிறிய நல்லவூர் தோன்றாநின்றது, உவ்விடத்தே பாராய்!: பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பின் காலை பாம்பு அளையினுள்ளே செறிந்திருக்குமாறு முழங்கி வலமாக எழுந்து மேகம் மழை பொழிந்த காட்சியையுடைய காலைப் பொழுதிலே; அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற நீலமணி போன்ற பிடரியை உடைய மயில்போல; மலர் சூடிய நின் கூந்தல் வீசுகின்ற காற்று உளரி விரித்துவிடச் சிறிது விரைந்து செல்வாயாக!

உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம். - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

நற்றிணை - 265. குறிஞ்சி

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
பாரத்து அன்ன- ஆர மார்பின் 5
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன-
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

காய்ந்த புல்லை மேய்கின்ற உதிர்ந்த கொம்பினையுடைய முதிர்ச்சியையுடைய சேற்றில் ஓட்டி வருந்தச் செய்த புள்ளியையும் வரியையும் உடைய கலைமானை; எய்யும் ஒலியையுடைய அம்பினையும் வில்லினையுமுடைய வீரர் தலைவனாகிய பொலிவு பொருந்திய தோளிலே கவசம் பூட்டிய மிஞிலி என்பவனாலே காவல் செய்து வருகின்ற; பாரம் என்னும் ஊரைப்போன்ற ஆத்திமாலையையுடைய மார்பையுடைய சிலவாகிய ஊர்களை ஆட்சிகொண்ட செங்கோலையுடைய சோழனுடைய; ஆரேற்றைப் போன்ற இவளுடைய தலைவியாகிய மழை போன்ற கொடையும் கள்ளுணவுமுடைய ஓரியென்பவனது கொல்லி மலையிலிருக்கின்ற; செருக்கிய மயிலைப் போன்ற நம் காதலியாவாள்; அம் மயிலின் கலாபம் போன்ற தழைந்த மெல்லிய கூந்தலையுடையாள்; நம்பாலள் அல்லளோ?; ஆதலின் நெஞ்சமே கவலை கொள்ளாதே; நின்செயல் விரைய முடிவு பெறுங்காண்!

பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது. - பரணர்

நற்றிணை - 266. முல்லை

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும், 5
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல்- வாழியர், ஐய!- வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? 10

ஐயனே! வாழ்வீராக!; நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ?

தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி நும்மாலே ஆயிற்று என்று சொல்லியதூஉம் ஆம். - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

நற்றிணை - 267. நெய்தல்

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- 5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தௌ இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், 10
இவை மகன் என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.

நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய மணலால் ஆகிய எக்கரின்கண் உள்ள பெரிய சுற்றத்தையுடைய ஞெண்டின் கூட்டம; விளங்கிய பற்களின் அழகிய இனிய நகையையுடைய மாதர்கள் வெயிலிலே காயுந் தினையைக் கைவிரலாலே துழாவி வருதல் போல மணம் வீசும் ஞாழலின் உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்யுந் துறையையுடைய தலைவனொடு; கூட்டிய இனிய விருப்பத்தையுடைய கழிச் சோலையிலே அவளின்றித் தனியே நான் வருதல்; மிக வருத்தமுடையதாய் இராநின்றது எனக் கருதி அதனால் பெரும்பாலும் வாராதிருந்த யான்; முன்பு ஒருநாள் வந்துளேனாகி, சிறுநா ஒள் மணித் தௌந் இசை கடுப்ப இனம் மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியின் தௌபிந்த ஓசையைப் போலக் கூட்டமாகிய மீனைத் தின்னுகிறதற்கு வந்து கூடுகின்ற புள் ஒலிக்குங் குரலைக் கேட்டு; இவ்வொலி தலைமகனது தேர் மணியோசை போலுமென்றுட்கொண்டு இவ்வோசை தலைமகன் என்று சொல்லெடுக்கு முன்; வலிய குதிரையையுடைய தோன்றலாவான் ஆங்கு வந்து நின்றனன்; இப்பொழுது அங்ஙனமும் காணாதபடி காவல் செய்தாயிற்று;

தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம். - கபிலர்

நற்றிணை - 268. குறிஞ்சி

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் 5
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.

தோழீ! மணலைப் பரப்பிய முற்றத்தைச் சிறப்புச் செய்து; மெய்ம்மையைக் கூறுகின்ற கழங்கிட்டுக் குறிபார்த்தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டில் அழைத்து வந்திருத்தலானே; அச்சஞ் செய்தலையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக; மேகம் மழை பெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண்ணே; கரிய காம்பையுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூ; ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற்போன்ற வேட்டுவர் இல்லங்களிலே இழைக்கப்பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்கு; யாம் பலபடியாகக் காதலுண்டாக்கியிருந்தும் அவனாலே காதலிக்கப்படுந் தன்மையே மல்லாதிருத்தல் எக்காரணத்தினாலோ? இவ்வொரு காரியத்தை அந்த வேலன்பாற் கேட்போமாக;

தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான் என்றதூஉம் ஆம். - வெறி பாடிய காமக்கண்ணியார்

நற்றிணை - 269. பாலை

குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி 5
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்,
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்;
அறிவார் யார், அவர் முன்னியவ்வே?

குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும்; பாலுண்ணுஞ் சிவந்த வாயையும் மற்றும் பல பசிய கலன்களையுமுடைய புதல்வன்; மாலையணிதலையுடைய இன்பத்திற்குக் காரணமாகிய மார்பிலூர்ந்து இறங்குதலால்; அழகிய எயிற்றினின்றொழுகிய விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட நகையையும் குற்றமற்ற கோட்பாட்டினையுமுடைய நம்முயிர் போன்ற விருப்பமிக்க காதலியினது; அழகிய முகத்திலே உலாவுகின்ற கண்கள் துன்பமெய்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடியைப் போல நம்மைப் பிணிக்குமே என்று கருதாராய், சிறு பல் குன்றம் இறப்போர் எப்பொழுதும் சிறிய பலவாய குன்றங்கடந்து சுரஞ்செல்வாராயினர், அத்தகையார் பின்பு எதனைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிந்து செல்லுதலோ அவர்க்கு அரியது, அஃதியல்புதானே; இன்னும் அவர் கருதி உள்ளவை யாவர்தாம் அறியவல்லார்?

தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம். - எயினந்தை மகன் இளங்கீரனார்.

நற்றிணை - 270. நெய்தல்

தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் 5
பெருந் தோட் செல்வத்து இவளினும்- எல்லா!-
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே; 10
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.

ஏட! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண்ணே! நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள புன்னை முதலாகியவற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில்; மிக்க துகள்படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற் போலாக எம்முன்னே வருந்துதலையுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது; நின்னை வசமாக்குதலைத் தௌபியாத பெரிய தோளையுடைய செல்வமகளாகிய இவளினுங்காட்டில்; என்னைப் பெரிதும் நீ அன்பு செய்தொழுகா நின்றனை அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது; அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பிண்டன் முதலாயினோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன்; தான் அப் பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றாலே அப் பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும் கொடியதாயிராநின்றது; ஆதலால் நினது வலிய தகுதிப்பாட்டினை யான் மறந்தே விடுகின்றேன்காண்;

தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால். - பரணர்

நற்றிணை - 271. பாலை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் 5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, 10
மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

அணித்தாக ஈனப்பட்ட கரிய எருமையின் பெரிய செவியையுடைய கன்று; பசிய மலரில் உள்ள பராகங்கள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவத்திடத்துத் தங்கப்பெற்ற துயிலை மேற்கொண்டு செழுமையுடைய குளிர்ச்சியுற்ற மாளிகையுடனே; எம்மை இங்கே ஒழியவிட்டுத் தன்னுடனே வருகின்ற பெரிய காளையாவான் கூறும் அளவு கடந்த பொய்ம்மொழியாலே மயங்கி; நெடுந்தூரத்திலுள்ள அவனது நாட்டை அடைய விரும்பி இளமரஞ் செறிந்த சுவையையுடைய நெல்லியஞ் சோலையில்; உதிர்ந்த கடையிலே திரண்ட காயை ஒருசேரத்தின்று; வறந்த சுனையில் உள்ள மிகச் சிலவாகிய நீரைப்பருகி; சென்றுவிட்ட நெய்தன் மலர்போன்ற மையுண்ட கண்ணையுடைய என் மகளை; ஒருதன்மையாகிய சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய மாலைப்பொழுதில்; விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு; முன்னாலேயே என்னைப் பெரிய தாழியிலிட்டுக் கவிக்கும்படி என் உயிரைக் கொண்டுபோகாத கூற்றமானது; தான் வலியழிந்து தன்னை அந்தத் தாழியிலிட்டுக் கவிக்கும்படி இறந்தொழியக் கடவதாக!;

மனை மருண்டு சொல்லியது.

நற்றிணை - 272. நெய்தல்

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் 5
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. 10

கடலிலியங்கும் நீர்க்காக்கையிலே சிவந்த வாயையுடைய ஆண் காக்கையானது; நோன்பினையுடைய மாதர்கள் வைகுதல்வேண்டி ஆண்டுப் படர்ந்துள்ள கொடிகளைக் கொய்தலால் அழிபட்ட நெருங்கிய அவ்வடும்பின் கொடியையுடைய வெளிய மணற்பரப்பின் ஒருபால்; நிரம்பிய சூலுடனே தங்கிய தன்னால் விரும்பப்படுகிற பேடைக்கு; கரிய சேற்றின்கண்ணவாகிய அயிரை மீனைத் தேர்ந்தெடுக்க வேண்டி; தௌபிந்த கழியிடத்துப் பூவுதிரப்பெற்ற ஆழமான இடத்தினைத் தன் மூக்காலும் காலாலும் துழாவா நிற்கும் துறையையுடைய கொண்கன், நல்காமையின் நசை பழுதுஆக குறித்தபொழுது வந்து கூடித் தலையளி செய்யாமையால் யான் கொண்ட விருப்பம் வீணாகிவிட அதனாலே; செயலழிந்த என் பெரிய நோயானது; பழிமொழி கூறுகின்ற அம்பலையுடைய பழைய நமது ஊராரால் அறியப்பட்டு; முன்பு நான் கொண்டிருந்த நோயினுங் காட்டில் மிக்க நோயுடையதாகாநின்றது;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

நற்றிணை - 273. குறிஞ்சி

இஃது எவன்கொல்லோ- தோழி!- மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, வெறி என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், 5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? 10

தோழீ! நின் உடம்பெங்கும் பரந்து துன்பமிக்கு மயங்கிய துயரத்தை நோக்கி; நம்பாலுள்ள விருப்பத்தாலே தானும் வருத்தமுற்று நம்மிடத்தில் நிகழ்ந்தது அறியாது முருகவேளுக்கு வெறியெடுத்த நம் அன்னையை நோக்கி; இது முருகணங்கு என்று வேலன் கூறாநிற்கும் என்பர்; ஆதலின் நிறமிக்க பெரிய யானை நீர்முகந்து கொள்கின்ற நெடிய சுனையின் கண்ணே அமைந்து; நீண்டுற்று என் கண்போல்கின்ற நீலமலர்; தண்ணியவாய் மணமிகும் மலைநாடனை நினைக்குந்தோறும்; அவன் இயல்பாகத் தந்த கவலையானது எனது நெஞ்சை நடுங்கச் செய்யாநின்றது; இஃது இனி எப்படியாகி முடியுமோ?

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும் என்பது படச் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்


நற்றிணை - 274. பாலை

நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், 5
எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி? எனக்
கூறின்றும் உடையரோ மற்றே- வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?

கரிய புலி சினங்கொண்டு மாறுபட்டு உலவாநிற்குஞ் சோலையையுடைய பெரிய மலையிடத்துளதாகிய சுரத்தின்கண்ணே சென்ற காதலர்; நெடிய மேகங்கள் மின்னிச் சிறிய துளிகளாகப் பெய்யத் தொடங்கி மிக்க மழை பெய்த பிளப்புக்களையுடைய மலைச்சாரலிலே; உழையாகிய அழகிய பிணைமான் உராய்ந்து கொள்ளுதலாலே; கலன் அணிந்த மடந்தை ஒருத்தியின் பொன்னாற் செய்த கலன்களைப் பரப்பினாற்போல ஒள்ளிய பழங்கள் உதிரப்பெற்ற; குமிழ் மரங்கள் நிரம்பிய குறிய பல வழியையுடைய சுரத்து நெறியிலே; செறிந்த கூந்தலையுடையாய் நீ எம்முடன் வருகின்றனையோ? என்று கூறிய சொல்லையும் உடையர் காண்; ஆதலின் அந்நெறி மழைபெய்தலான் நலனுடையதா யிராநின்றது; அது காரணமாக நீ வருந்தாதே கொள்.

தோழி பருவம் மாறுபட்டது. - காவன் முல்லைப் பூதனார்

நற்றிணை - 275. நெய்தல்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் 5
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
அறனிலாளன் புகழ, எற்
பெறினும், வல்லேன்மன்- தோழி!- யானே.

தோழீ! சிவந்த நெற்கதிரை யறுக்கும் மள்ளர் தம் கூரிய அரிவாளினாலே புண்படக் காணாராகக் கதிர்த்தூரொடும் போந்ததனாலே; அம்மலர் அரிவாளொடும் கதிரொடும் கலந்தனவாகிய அரிக்கிடையிலே படுக்கையாகக் கிடந்து; தான் உற்ற துன்பத்தை ஆராயாமல்; மெல்ல மெல்லக் கொடிய ஆதித்தனைக் காண்டலும் இனிய துயிலிடத்துப் பசிய வாயைத் திறவாநிற்கும் பேதைமையுற்ற நெய்தன்மிக்க பெரிய கடற்கரைத் தலைவனுக்காக; யான் படுகின்ற துன்பத்தையும் கடந்து அவனை நினைந்து இரக்கம் உறுவேன் அல்லேன் ஆதலால், அவனை வெறுத்தேனுமல்லேன்; யான் அவ்வறனிலாளன் தன்னை அயலார் புகழும்படி என்னை மீட்டும் பெறுவதாயினும் அதற்கும் இயைகின்றேன்; அங்ஙனம் வெறாது விடப்பட்டதனால் அதுவும் இல்லையாயிற்று;

சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது. - அம்மூவனார்

நற்றிணை - 276. குறிஞ்சி

கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர் என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் 5

கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே- பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே. 10

தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக.

பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது. - தொல் கபிலர்

நற்றிணை - 277. பாலை

கொடியை; வாழி- தும்பி!- இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ- அறனிலோய்!- நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை 5
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், 10
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும் அல்லை; சிறிய குறிய நின் பேடு விரும்புதலும் நீ விரைவாக வோடிச் சென்று அதன் மனம் நெகிழப் புணர்ந்து தலையளி செய்ததன் பயனாகவோ?; என்னிடத்து அன்பிலராகிக் கொடிய மலையிலே செல்லுதற்கரிய சுரத்திற் சென்ற தலைவர்பால் ஆங்குச்சென்று அவர் விரைவில் வருமாறு ஈங்கு யானுற்ற நிலைமையை யுரைத்தாயுமில்லை; நினக்கு நின்னுடம்பே கரியததாலன்றியும் அறிவும் (நன்கு) கரிய நிறமுடையதோ? அதனையேனுங் கூறிக்காண்; இங்ஙனம் கொடியையாகிய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதனாலேயே இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக; நீ நீண்டகாலம் வாழ்ந்திருப்பாயாக!;

பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது. - தும்பி சேர் கீரனார்

நற்றிணை - 278. நெய்தல்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை 5
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்-
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.

அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; கடற்றுறையுடைய தலைவனை; கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள்ந் ஒடுங்கப்பட்டு அழிந்தன; அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின ; ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்;

தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 279. பாலை

வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு 5
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ- ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம் 10
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

தலைவனைச் சார்ந்து மணமுடிக்கும் பொழுது காலிலணிந்திருந்த செறிந்த வாயினையுடைய சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் விழாச்சிறப்பை யான் கண்டு மகிழாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த அழகிய கலன் அணிந்த என் புதல்வியின் அடிகள்; வேம்பின் ஒள்ளிய பழத்தைத் தின்னுதல் வெறுத்து இருப்பையின் தேன்போலும் பால்வற்றிய இனிய பழத்தை விரும்பி; வைகிய பனியிலே உழந்த வெளவால் கிளைகள்தோறும் செல்லுதலால் அவற்றின்மேல் நெய் தோயந்ந்த திரிசுடர் விழுதல் போலத் தண்ணிய பனித்துளிகள் மிகவிழ; விடியற் காலையிலே சுரத்திற் சென்று வருந்திய வாள்போலும் நிறமுற்ற வரிபொருந்திய ஆண்புலியொடு போர் செய்த யானையின்; புண்ணையுடைய கால்போலப் பொளிந்தெடுத்துத் தின்ன வேண்டிப் பசிமிக்க பிடியானை உதைத்து மேற்பட்டையைப் பெயர்த்த ஓமையின்; சிவந்த அடிமரம்; ஞாயிறெழுந்து வெயில் வீசும்போது விளங்கித் தோன்றா நிற்கும் பாலையின் அருஞ்சுரநெறியிலே சென்று; வருந்துகின்றனவோ? ஓ ஐயோ !

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

நற்றிணை - 280. மருதம்

கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி- தோழி!- புலவேன்- 5
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே. 10

தோழீ! கொக்கு வந்திருந்ததனால் கிளை அசைதலின் உதிர்ந்த இனிய மாங்கனியானது; கொக்கினது குவிந்திருந்த நிலைபோன்ற அரும்புகளையுடைய ஆம்பல் மிக்க நிறைந்த ஆழமுள்ள நீரிலே துடும் என வீழாநிற்கும்; தண்ணிய துறைகளையுடைய ஊரனது; அமையாத அயலாந்தன்ந்மை ஆகிய செய்கையைக் கண்டு வைத்தும் நீ புலவாதே கொள்! என்று என்னை ஆற்றுகின்றனை; வயலிலுள்ள யாமையின் பசிய கற்போன்ற முதுகிலே அவ்வயலைக் காவல் செய்யும் மள்ளர் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்னாநின்ற; பழைமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர்போன்ற; எனது நல்ல மனையின் கண்ணே வருகின்ற மிக்க விருந்தினரை உபசரித்தலிற் கையொழியாமையால்; அவனை எதிர்ப் படப் பெற்றிலேன்; அதனாலே புலவாது வைகினேன்; அன்றேல் புலவி கூர்தலின் இங்கு வர ஒல்லேன் கண்டாய்!

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்

நற்றிணை - 281. பாலை

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர் 10
அன்பிலர்- தோழி!- நம் காதலோரே.

தோழீ! நம் காதலர்; மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடுபலியை உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வெல்லுகின்ற போரையுடைய சோழரது கழாஅர் என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற; நல்ல பலவகையாக மிகுந்த பலிக்கொடையொடு போகடப்படுகின்ற சொல்லிலடங்காத சோற்றுத் திரளுடனே; அழகிய பலவாகிய புதிய ஊனொடு கலந்து இடப்படுகின்ற பெரிய சோற்றைத் தின்னக் கருதியனவாயிருக்குமாறு; மழைபொருந்திப் பெய்தலையுற்ற மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்தில்; அவர்தாம் நம்மிடத்து முயங்கியிருப்பாராகவும்; நாம் நமக்குண்டாகிய குளிரின் கடுமையால் மிகப்பெரிதும் வருத்தமுற்று; தூங்காதிருந்தனமாதலையும் அறிந்தவர் இப்பொழுது நம்மைக் கைவிட்டு அகன்றனர் கண்டாய்; ஆதலின் அவர் நம்மீது சிறிதும் அன்பே இல்லாதவர் அல்லரோ?

வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம். - கழார்க் கீரன் எயிற்றியார்

நற்றிணை - 282. குறிஞ்சி

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் 5
கிளவியின் தணியின், நன்றுமன்- சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

தொகுதியாக அமைத்துச் செறித்தலையுடைய இலங்குகின்ற வளைகள் நெகிழ்ச்சியுறப் பக்கம் உயர்ந்த அல்குலினுடைய அழகிய வரிகள் வாட்டமடைய நல்ல நுதலின்கண்ணே பசலைபாயக் கவலைமிக்க நீங்குதல் அரிய நோயானது; நங் காதலனாலே தரப்பட்டதென்பதை அறியாது நம் அன்னை படிமத்தானுக்கு இவள் படும் நோயின் காரணம் தெரியவேண்டும் என்றறிவிப்ப; அந்த அறிவு வாய்ந்த வேலன் வெறிக்களத்து முருகவேளின் முன்பு இடப்பட்ட சுழற்சிக் கொட்டையைக் கொண்டு ஆராய்ந்து; முருகணங்கென்று அம் முருகவேளைத் துதித்தலாலே தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்; அங்ஙனம் வெறியுமெடுக்காது இல்வயிற் செறிக்கப்பட்டமையால்; இனிச் சாரலின்கண்ணே அகிலைத் தீயிட்டுக் கொளுத்துங் கானவன் ஆங்குள்ள சருகில் முதலிலே தீயிடுதலானே நறுமணம் வீசுகின்ற புகையானது இயங்குகின்ற மழைமேகம்போல் மறைக்கப்பட்ட நாடுவிளங்கிய சிலம்பனுடன்; விரும்பிப் பொருந்திய நமது தொடர்ச்சி கழிந்துவிட்டதுபோலும்;

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - நல்லூர்ச் சிறு மேதாவியார்

நற்றிணை - 283. நெய்தல்

ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!-
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
இன்னை ஆகுதல் தகுமோ- ஓங்கு திரை 5
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

ஒள்ளிய நெற்றியையுடைய நுளைச்சியர் அகன்ற கழியின்கண்ணே பறித்துவந்த மகளிர் கண்ணை நேராக ஒத்தலையுடைய மணங்கமழ்கின்ற நறிய நெய்தன் மலர்; அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறிய மனையை அலங்கரிக்குந் துறையையுடைய தலைவனே!; உயர்ந்து வரும் அலையையுடைய கடலின்மீது பலருந் தொழுமாறு தோன்றி யாவரும் மகிழ விளங்கிய ஞாயிற்றினுங் காட்டில் வாய்மை விளங்கிய; நினது சொல்லை விரும்பிய எம்மிடத்துள்ள; அறிவுடையோரால் ஆராய்ந்து கண்ட பழைய அழகு கெடும்படியாக; நீ இத் தன்மையை உடையையாயிருத்தல் தகுதியுடையதொரு காரியமாகுமோ? ஆதலின் ஆராய்ந்து ஒன்றனைச் செய்வாயாக!;

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 284. பாலை

புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின், நெஞ்சம்,
செல்லல் தீர்கம்; செல்வாம் என்னும்:
செய்வினை முடியாது எவ்வம் செய்தல் 5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
சிறிது நனி விரையல் என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல, 10
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதிப்பாட்டை ஆராய்கையாலே ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள் என்று கூறாநிற்கும்; அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!;

பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது. - தேய்புரிப் பழங்கயிற்றினார்

நற்றிணை - 285. குறிஞ்சி

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும்- உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, 5
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி- தோழி!- என்றும்,
அயலோர் அம்பலின் அகலான், 10
பகலின் வரூஉம், எறி புனத்தானே.

தோழீ! வாழ்வாயாக!; திண்ணிய கையையுடைய கானவன் தனது வெய்ய வில்லை வளைத்து வலிய கணையை எய்து நெஞ்சிலே பாய்த்திக் கொன்ற முட்பன்றியேற்றையைக் கைக்கொண்டு; வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி; மனையகத்துள்ள நாய்கள் எல்லாம் ஒரு சேரப் பக்கத்திலே வந்து குரைத்து விளையாட; காட்டகத்துள்ள நட்டகாலிலே கை சேர்த்துப் பிணித்த தானிருக்கும் குடிசையையுடைய சேரியின்கண்ணே செல்லாநிற்குங் குன்ற நாடன்; பாம்புகள் தமக்கு வேண்டிய இரையைத் தேடி உழலாநின்ற இயங்குதற்கரிய இருள்மிக்க இரவு நடுயாமத்தில்; நம்பால் வருவதல்லாமலும்; எப்பொழுதும் அயலவர் கூறும் பழிச்சொல்லைக் கேட்டும் அகன்றுபோகானாகி; வெட்டியுழுது விதைத்த தினைப்புனத்தின் கண்ணே பகற் பொழுதினும் வாராநின்றான்; ஆதலின் அவனுடைய நட்பானது நமக்கு நல்லதோ? நல்லதன்றாயிற்றுக் காண்;

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, அம்ப லும் அலரும் ஆயிற்று என்று சொல்லியது. - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

நற்றிணை - 286. பாலை

ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர் என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து 5
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை!- நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ- தோழி!- அவர் சென்ற திறமே?

ஆராய்ந்தணிந்த இழையையுடையாய்! தோழீ, உடைமரங்கள் மிக்க நெறியின்கண்ணே மகளிரின் ஒள்ளிய குண்டலத்திற்கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர் கல்லென்னும் ஒலியோடு கோலஞ்செய்தாற்போல உதிராநிற்கும்; பொலிவழிந்த குன்றத்து எங்காதலர் சென்றனர் ஆதலால் திண்ணமாக இனி என்னுயிர் சென்றொழிவதாக என்று; நீ அணிந்த கலன்கள் கழன்று விழும்படி விம்மியழுது மிகநொந்து வருந்துகின்றதனைச் சிறிது பொறுப்பாயாக!; கருதுங்காலைத் தம்மை நட்புக் கொண்டவர் தாம் செல்வமடைய வேண்டியதற்காகவும் அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள் நல்ல கலன்களை அணியப் பெறுவதற்காகவும் அன்றோ; அவர் சென்ற தன்மையாகும்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்

நற்றிணை - 287. நெய்தல்

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந் தகை மறவன் போல- கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், 5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
தேர் மணித் தௌ இசைகொல்? என, 10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

வளைந்த கழியின் கண்ணே பசிய இலைகளையுடைய நெய்தன்மிக்க குளிர்ந்த நீரையுடைய கொண்கன்; அச்சஞ் செய்கின்ற முதலையின் நடுக்க முறுத்தும் பகைமைக்கும் அஞ்சானாகிக் காம மிகுதியால் இங்கு வந்தபொழுது; விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகை செய்து பசிய கண்ணையுடைய யானைப் படையொடு பகையரசன் அதன் புறத்தே தங்கப் பெற்றதனால்; அப் பகையரசனை உள்ளே புகுதவிடாதபடி நல்ல மதில்காவலுடையாரை யாம் பெற்றுடையோமென்று கருதியிருக்கின்ற பெருந்தன்மையுடைய உள்ளடைப்பட்டிருந்த வீரனைப்போல; கெடாத வன்கண்மையுடைய என்னெஞ்சமானது இப்பொழுது; செறிந்த இருளையுடைய நடுயாமத்திலே பறவையொலிப்பதைக் கேட்குந்தோறும்; நங்காதலன் ஊர்ந்து வருகின்ற தேரிலே கட்டிய மணியின் தௌபிந்த ஓசையோ? என்று; ஊராரெல்லாரும் உறங்குகின்ற இராப்பொழுதினும் துயில் கொள்வதனை மறந்துளதாயிரா நின்றது;

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 288. குறிஞ்சி

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை 5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், இந்
நெடு வேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே? 10

உயர்ந்த மரக்கிளையிலுள்ள பீலியையுடைய மயில் காலையில் விரிந்த இளவெயில் காயவேண்டி அருவியொலிக்கின்ற அச்சமுடைய நெடிய கொடுமுடியின் பக்கத்திலே; தன் பெடையோடு விளையாடாநிற்கும் மலைநாடன் நம்மைப் பிரிதலினாலே சென்று; நல்ல நினது நுதலிலே பரந்த பசலையை நோக்கி நம் அன்னை சேரியிலுள்ள செம்மையாகிய முதுமையுடைய கட்டுவிச்சி முதலாயினோருடனே இல்லகம் புகுந்து; முன்னர் முறத்தில் நெல்லைப் பரப்பிக் கட்டுவைத்து நம்மை எதிரில் நிறுத்திக் குறிகேட்குமாயின்; அக்கட்டுக் குறியானது இப்பொழுது மலையிடத்தில் உள்ள ஏனலாகிய சிவந்த தினையின் பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போகுங் கிளிகளை வெருட்டுவேமாகிச் சென்றிருந்தும் அதனையறியாது; இவள் இந்நெடிய முருகவே ளிருக்குமிடத்து அருகு சென்றதனால் முருகவேள் அணங்கியதென்று கூறாநிற்குமோ?

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது. - குளம்பனார்

நற்றிணை - 289. முல்லை

அம்ம வாழி, தோழி!- காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, 5
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.

தோழீ ! வாழி ! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் நம் காதலர் தாங்கூறிய சொல்லை அதனிலைமையினின்றும் பெயர்த்துக் கூறுபவரல்லர்; ஆதலின் குறித்த பருவத்து வருவர் அதன்முன் மேகமானது நெருங்கிய கடனீரை முகந்து செறிவு பொருந்த இருண்டு மிக்க மழையைப் பெய்து; கடிய குரலைக் காட்டி இடித்துக் கார்காலத்தைச் செய்து துன்புறுத்துதற்கு என்மாட்டு அமைந்திராநின்றது; இப்பொழுது அளிக்கத்தக்க தகுதியுடையேனாகிய யான்; அங்கே கொல்லையில் கோவலர்கள் இரவில் எரி கொளுத்திய வெட்டுண்ட பெரு மரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோய் கனற்றலானே அவரான் அருள் செய்யப் பெறேனாயிராநின்றேன்;

பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது. - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

நற்றிணை - 290. மருதம்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! 5
நீயே பெரு நலத்தையே; அவனே,
நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப; மகன் என்னாரே.

முட்போன்ற கூரிய பற்களையுடையோய்!; வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; உழுது விட்ட ஓய்ந்த நடையையுடைய பகடு தின்னா நிற்கும் ஊரனுடன்; கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் அவள் அவனோடு கட்டில் வரை யெய்தினாள் என்று ஊரார் கூறுகின்ற சொல்லைக்கொண்டு என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே. இனி என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ?; விருப்பமாயின் யான் கூறுகின்றதனைக் கொள்வாயாக!; அதுதான் யாதோவெனில் பெரிய இளைமையும் தகுதிப்பாடும் உடையையாதலால் நீ வேறுபட்டுக் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதது காண்; அவனை நெடிய நீரையுடைய பொய்கையில் நடுயாமத்திலே தண்ணிதாய் நறுமணங் கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டு எனச் சொல்லுவனரல்லாமல்; நல்ல ஆண்மகன் என யாருங்கூறார்; ஆதலின் அவனைப் புலவாதே கொள்!;

பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 291. நெய்தல்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், 5
கண்டாங்கு உரையாய்; கொண்மோ- பாண!-
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?

பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரிந் பரியேறிச் சென்று; இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குவிந்த வெளிய மணல்மேட்டில் ஏறியிருந்து; அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்ணிய பெரிய கடனீர்த்துறையை உடைய காதலனுக்கு; உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!;

வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது. - கபிலர்

நற்றிணை - 292. குறிஞ்சி

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை 5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்- ஐய!- மை கூர் பனியே!

ஐயனே! நெடிய கணுக்களையுடைய சந்தன மரத்தின் அசைகின்ற கிளையிலே சுற்றிய பசிய நிறம் பொருந்திய இலையையுடைய நறிய தமாலக் கொடியை; இனிய தேனெடுக்கும் வேடர் வளைத்து அறுத்துக்கொண்டு செல்லாநிற்கும் புதுவருவாய் மிக்க இடத்தினையுடைய கானமென்று கருதாயாகி; யானைகள் ஒன்றோடொன்று போர் செய்தலாலே இடிந்தொழிந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழ்ந்த கரையிடமெல்லாம் வெள்ளிய பளிங்குக் கற்களும் சிவந்த பொன்னும் மின்னாநிற்கும்; கரிய கற்பாறையில் ஓடுகின்ற கான்யாற்றில் நீந்துதற்கரிய நீர்ச் சுழியையுடைய இடந்தோறும்; முதலைகள் இயங்காநிற்கும்; இத்தகைய ஏதங்களை நினையாயாகி இரவின்கண்ணே நீ இங்கு வரின் யான் இனி உயிர் வாழ்ந்திரேன்; இந்த இருள் நிரம்பிய பனிக்காலத்திலே தனித்தும் உயிர் வாழ்ந்திரேன்: ஆதலின் இதனை ஆராய்ந்து ஒன்றனை இன்னே செய்வாயாக!

இரவுக்குறி மறுத்தது. - நல்வேட்டனார்

நற்றிணை - 293. பாலை

மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், 5
பெரு விதுப்புறுகமாதோ- எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!;

தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம். - கயமனார்

நற்றிணை - 294. குறிஞ்சி

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று- தோழி!- வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் 5
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!

தோழீ! மூங்கில் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவிய மலையிடமெல்லாம்; பழைமையாயுற்ற அறிவுடனே வலிமையும் மிகுதலாலே சினங்கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற்போன்ற; செவ்விய புறத்தையுடைய கொழுவிய அரும்பவிழ்ந்த காந்தள்; சிலம்பிடம்ந் எல்லாம் மணங்கமழும் சாரலையுடைய இலங்குகின்ற மலைநாடனது; அகன்ற மார்பானது; ஆற்றற்கரிய தீயையும் ஆற்றுதற்கினிய காற்றையும் ஆகாயந்தான் பெற்றது போலக் களவுக்காலத்து அணித்தாகி எப்பொழுதும் இல்லாமையால்; நோய் செய்யும் தன்மையும்; இப்பொழுது வரைந்து கொண்டு களவுக் கை நெகிழாது அணைத்து முயங்கியிருத்தலானே இன்பமாந் தன்மையுமாகி யிராநின்றது; இது பொய்ம்மை யெனப் படுவதன்று; மெய்ம்மையே யாகும்;

மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது. - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

நற்றிணை - 295. நெய்தல்

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,
அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, 5
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே.

தலைசரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக் கொடிபோல; மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்கா நின்றது; அக் களவொழுக்கத்தை அன்னையும் அறிந்தனளாகி இல்வயிற் செறித்து அரிய காவல் செய்வாளாயினள்!; ஆதலின் வேறாகிய பலபல தேயங்களினின்றுங் காற்றுச் செலுத்துதலால் வந்த எந்தையினுடைய பலவாய தொழிலின் பொலிவு பெற்ற கலங்கள் ஓங்கித் தோன்றும் பெரிய துறையின் கண்ணே; வைத்துடைய உண்ணுதலால் செருக்குமிகுகின்ற கள்ளின் சாடி போன்ற எம்முடைய இளமையும் அழகும்; இல்லின் கண்ணே வைகிக் கெடும்படியாக; யாங்கள் எம் மனையகத்துச் செல்லாநிற்பேம்; அம் மனைவயினிருந்தே முதிர்ந்து முடிவேம்; இன்ன தீங்கினை உறுவித்த நீ நெடுங்காலம் வாழ்வாயாக!

தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; சிறைப்புறமும் ஆம். - அவ்வையார்

நற்றிணை - 296. பாலை

என் ஆவதுகொல்? தோழி!- மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும், 5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப, காதலர்:
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.

தோழீ! அரசருடைய போர்த்தொழில்வல்ல யானையின் புள்ளியையுடைய முகத்திலணிந்த பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தில் அலங்கரித்த அழகிய தோற்றம்போல; உள்ளே புழலமைந்த காயையுடைய சரக்கொன்றையின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துகள் பெரிய மலையின் மிகவுயர்ந்த இடத்தில் மேம்பட மலராநிற்கும்; பிரிந்தோர் வருந்துகின்ற பெறுதற்கரிய கார்காலத்திலும்; தாம் செய்ய வேண்டிய காரியத்தையே கருதிய வுள்ளத்துடனே நங் காதலர் விரைந்து செல்வாராயினர்; அங்ஙனம் செல்லுகின்றவருடன் சேரவுஞ் செல்லாமல் நாம் வருந்துகின்ற துன்பத்திலுழன்று இங்கேயே தங்கியிருக்கக் கடவேமாயினோம்; இஃதென்ன கொடுமை? இவ்வண்ணம் பிரிதலால்; இனி யாதாய் முடியுமோ? ஒன்று சூழ்ந்து கூறாய்;

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது. - குதிரைத் தறியனார்

நற்றிணை - 297. குறிஞ்சி

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
எவன்கொல்? என்று நினைக்கலும் நினைத்திலை; 5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள், அன்னை; 10
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே.

தோழீ! பொன்னாற் செய்த கிண்ணத்துள் வைத்த பால் நின்னால் உண்ணப்படாமல் கீழே வைத்திருக்கின்றமை காணாய; நின் மேனியின் ஒளிமிக்கு வேறு வண்ணமாகத் தோன்றுவ; அன்றி மெல்ல நின் சிவந்த அடிகளால் நடந்து இயங்கினாயுமல்லை; பல மாட்சிமைப்பட்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு; மகிழா நோக்கம் கட்குடியான் மயங்கினாற்போல் ஆயினை; நாம் இப்படியிருப்பது என்ன காரணம் என்று நினைக்கலுஞ் செய்திலை; ஆகலின் நின்னுள்ளே தோன்றும் குறிப்பானது மிகப் பெரிதாயிராநின்றது; வண்டுகள் மொய்க்கின்ற மலரும் பருவத்தினையுடைய பூவினை வெறுத்த மெல்லிய காலையுடைய கோழி; முதிர்ந்த மிளகுக்கொடி ஒன்றோடொன்று பின்னியிருப்பதன்கண்ணே துயிலாநிற்கும் மலை நாடன்; மெல்ல வந்து நின்மார்பினை அடையப்பெற்றதனால் ஆகிய சில குறிகளை நோக்கிய; அன்னை இவளுக்கு இக் குறிப்புகள் உண்டாயதன் காரணம் யாதென்று மயக்கமுறாநிற்கும் உவ்விடத்தே கேளாய்; ஐயப்பாடின்றி அவ்வன்னை கடுமையான குரலையெடுத்து நின்னைக் கூவுகின்றனள் காண்;

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம். - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

நற்றிணை - 298. பாலை

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் 5
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று- இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய்- வாழி, எம் நெஞ்சே!- நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை, வான் முகை 10
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே?

எமது நெஞ்சமே!; அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; அவரைக் கொள்ளை கொள்ளும்பொருட்டுச் சிவந்த அம்பைச் செலுத்திய சினத்தொடு நோக்குகின்ற மறவருடைய; தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை முழக்கி எழுப்பும் ஓசையைக்கேட்ட பருந்தின் சேவல்; அச்சமுற்றுத் தன் சுற்றத்திடத்துச் செல்லாநிற்கும் சென்று சேர்தற்கரிய பாலைநிலத்தின்கணுள்ள கவர்த்த வழிகளையுடைய; கருதினவர்க்கு அச்சந்தோன்றுகின்ற அகன்ற இடத்தையுடைய பெரிய பலவாய குன்றுகளைப் பொருள்தேடும் விருப்பினாலே செல்ல நினைந்தும்; இவளுடைய கரும்பு எழுதப்பெற்ற பருத்த தோளைப் பிரிய வேண்டியிருத்தலினால் அதனுக்கஞ்சிந்ப் பலமுறை நோக்கியும்; நீ ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவாயல்லை; நல்ல மாலை அணிந்த பொன்னாலாகிய தேரையுடைய பாண்டியனது மதுரையம்பதியிலே; இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையாகிய மொழியினால்; யாம் பெரிய மலைநெறியைத் தழுவிய பின்னும்; வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம்வீசும் கூந்தலையுடையாளைப் பார்ப்பதற்கு இயையுமோ? இயையு மாயின் பொருள்வயிற் பிரிந்து சென்று காண்;

தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

நற்றிணை - 299. நெய்தல்

உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: 5
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ-
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

அச்சத்தைச் செய்கின்ற யானை நல்ல ஆடையை அணிந்து கொண்டாற் போன்ற; நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதரில்; இயங்குகின்ற கடிய மேல் காற்று மோதுதலாலே நுண்ணிய மலரில் உள்ள தாதுக்கள் வயங்கிய கலன் அணிந்த மகளிருடைய வளைகள் உடைந்து உதிர்ந்தாற்போல உதிர்ந்து பரவாநிற்கும்; அழகிய கடற்கரையிலுள்ள சிறிய நம்மூர் வருத்தமுறுவதாயினும்; அச் சேர்ப்பரே நந் தலைவர் காண்; வில்லால் அடிபட்ட பஞ்சுபோல நிரம்பிய அலைகளிலே காற்று மோதுதலால் வயங்கிய பிசிர்கள் மிகுகின்ற நெருங்கிய கடற்கரையின் தலைவராகிய அச் சேர்ப்பரொடு; மகிழ்ந்து கூடாத நாளில் நாம் இருந்தும் இல்லாதேம் போல ஆதலை அறியா நின்றோமன்றே? அங்ஙனம் ஆகியும் இப்பொழுது அவர் தொடர்பு கழிந்தது கண்டாய்; இஃதென்ன இன்னாமையுடையது?

தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

நற்றிணை - 300. மருதம்

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்-
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் 5
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், 10
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற தழும்பன் என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை;

வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு. - பரணர்


நற்றிணை - 301. குறிஞ்சி

நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5
பாவை அன்ன வனப்பினள் இவள் என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்;

சேட்படுத்து, பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான் என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது. - பாண்டியன் மாறன் வழுதி

நற்றிணை - 302. பாலை

இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ 5
தாஅம் தேரலர்கொல்லோ- சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? 10

வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே;

பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 303. நெய்தல்

ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், 5
துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல் என்பது
உண்டுகொல்?- வாழி, தோழி!- தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, 10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தௌபிந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய்,

வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம். - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 304. குறிஞ்சி

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின், 5
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. 10

கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; அவன் என்னைப் பிரிந்தாலோ; நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது. - மாறோக்கத்து நப்பசலையார்

நற்றிணை - 305. பாலை

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
நோய் ஆகின்றே- மகளை!- நின் தோழி, 5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. 10

மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தௌபிந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது;

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம். - கயமனார்

நற்றிணை - 306. குறிஞ்சி

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக! என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம். - உரோடோகத்துக் கந்தரத்தனார்

நற்றிணை - 307. நெய்தல்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே- தோழி!- வார் மணற் சேர்ப்பன்: 5
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி- பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. 10

தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங்ந் கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக!

குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - அம்மூவனார்

நற்றிணை - 308. பாலை

செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, 5
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் 10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்?

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

நற்றிணை - 309. குறிஞ்சி

நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
யான் செய்தன்று இவள் துயர் என, அன்பின்
ஆழல்; வாழி!- தோழி!- வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், 5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.

தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌபிந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்!

வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - கபிலர்

நற்றிணை - 310. மருதம்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! 5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே- வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல, 10
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?

விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ?

வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம். - பரணர்

நற்றிணை - 311. நெய்தல்

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- 5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!- நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்;

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சனார்

நற்றிணை - 312. பாலை

நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்- 5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்? எனவே.

பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று;

பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியார்

நற்றிணை - 313. குறிஞ்சி

கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு 5
யாங்கு ஆகுவம்கொல்?- தோழி!- காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்- தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா, 10
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.

தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்?

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது. - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

நற்றிணை - 314. பாலை

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் 5
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் 10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்ந்ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்ந்; ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; கங்குல் கழியக்கடவதாக என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக;

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - முப்பேர் நாகனார்

நற்றிணை - 315. நெய்தல்

ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, 5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், 10
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.

நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்;

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 316. முல்லை

மடவது அம்ம, மணி நிற எழிலி-
மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என,
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் 5
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. 10

தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - இடைக்காடனார்

நற்றிணை - 317. குறிஞ்சி

நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை 5
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே- எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? 10

நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ?

தோழி, தலைமகனை வரைவு கடாயது. - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

நற்றிணை - 318. பாலை

நினைத்தலும் நினைதிரோ- ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை 5
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?

ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்;

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நற்றிணை - 319. நெய்தல்

ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், 5

அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும், 10
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?

கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் தௌ என்றன்று ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்;

காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது. - வினைத்தொழில் சோகீரனார்

நற்றிணை - 320. மருதம்

விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்? என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10

ஊரிலே செய்யப்படுந்ந் திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று;

பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 321. முல்லை

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, 5
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. 10

திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தௌபிந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!;

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

நற்றிணை - 322. குறிஞ்சி

ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி- தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், 5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன் 10
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

தோழீ! வாழ்வாயாக!; மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசி¬யைப் போக்க வேண்டி; மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பலவாய பூக்களைத் தூவித் துதித்து இவ் யாட்டினை ஏற்றுக்கொள் ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம். - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

நற்றிணை - 323. நெய்தல்

ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய- மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை 5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே; 10
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.

நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக!

தோழி இரவுக்குறி நேர்ந்தது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

நற்றிணை - 324. குறிஞ்சி

அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?-
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் 5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!

பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே!

தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம். - கயமனார்

நற்றிணை - 325. பாலை

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.

பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!;

தோழி செலவு அழுங்குவித்தது. - மதுரைக் காருலவியங் கூத்தனார்

நற்றிணை - 326. குறிஞ்சி

கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. 10

கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக;

தோழி, தலைமகனை வரைவுகடாயது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 327. நெய்தல்

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே- காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும், சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று, உடன் அமர்ந்து, 5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே- போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.

என்பால் அன்பு மிக்க தோழீ!; நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ?

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது. - அம்மூவனார்

நற்றிணை - 328. குறிஞ்சி

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
அது இனி வாழி- தோழி!- ஒரு நாள், 5
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே!- இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
விலங்கு மலை அடுக்கத்தானும், 10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்!

தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது. - தொல் கபிலர்

நற்றிணை - 329. பாலை

வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி 5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி, 10
கருவி மா மழை கடல் முகந்தனவே!

தோழீ! வாழ்வாயாக!; அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

நற்றிணை - 330. மருதம்

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் 5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு 10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே துடும் என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; புது வருவாயினையுடைய ஊரனே!; நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்;

தோழி, தலைமகனை வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 331. நெய்தல்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, 5
எந்தை திமில், இது, நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் 10
பிறர் பிறர் அறிதல் யாவது-
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கிந்க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக!

தோழி இரவுக்குறி நேர்ந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 332. குறிஞ்சி

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, 5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? 10

இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம். - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

நற்றிணை - 333. பாலை

மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, 5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குகமாதோ நின் அவலம்- ஓங்குமிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி 10
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.

தோழீ!; உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; இனிமையான குரலையுடைய பல்லி; ஒள்ளிய சுவரிலே பொருந்தி நின்றுநன்மையான சொற்களைக் குறிப்பாற் கூறாநின்றது; ஆதலின் மேகம் தான் செய்ய வேண்டிய பெய்தற் றொழிலை இன்மையாக்கிக் கரிய ஆகாயத்திலே சென்றொழிந்ததனால்; வெப்பமிக்கு மூங்கில் எல்லாம் வாடி அழகழிந்த மலை வழியின் சிறிய நெறியிலே; பருக்கைக் கற்கள் நிரம்பிய பள்ளத்தில் ஊறுகின்ற மிகக் குறைவுபட்ட சிறிய நீரிடத்தில்; பொலிவு பெற்ற நெற்றியையுடைய யானையொடு புலி போர் செய்து அந் நீரையுண்ணுகின்ற சுரநெறியிலே சென்று; ஈட்டப்படும் பொருள் நமக்கு அரியவாம் என்று நினையாமல் நல்லறிவிழந்து, உள்ளே மகிழ்ச்சியுற்ற வன்மைமிக்க நெஞ்சுடனே தாம் வண்மைமிக்குடையராயிருத்தலை விரும்பி; அரிய பொருள் காரணமாக அகன்ற நங் காதலர்; நின்னை முயங்குவதை எதிர் நோக்கித் திருத்தமாகிய கலன்களை அணிந்த நின் பருத்த தோளை இன்றுவந்து கூடுவார் போலத் தோன்றாநின்றது காண்!; இனி நின் அவலம் நீங்குவாயாக!

பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

நற்றிணை - 334. குறிஞ்சி

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- 5
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ- தோழி!- நம் இன் உயிர் நிலையே?

தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்;

தோழி இரவுக்குறி முகம் புக்கது.

நற்றிணை - 335. நெய்தல்

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, 5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று; 10
காமம் பெரிதே; களைஞரோ இலரே!

திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்?

காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

நற்றிணை - 336. குறிஞ்சி

பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, 5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்- அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
இரை தேர் எண்கினம் அகழும் 10
வரை சேர் சிறு நெறி வாராதீமே!

சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே!; மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின்ந் கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!;

ஆறு பார்த்துற்றுச்சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 337. பாலை

உலகம் படைத்த காலை- தலைவ!-
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே-
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய 5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. 10

தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடை


யோர் சிறந்தோரேயாவார்;

தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 338. நெய்தல்

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
நிறுத்தல் வேண்டும் என்றி; நிலைப்ப 5
யாங்ஙனம் விடுமோ மற்றே!- மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, 10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற காபிய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும் என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ?

ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 339. குறிஞ்சி

தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது? என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும், அன்னை- சிறந்த 5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் 10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?

தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து (நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது? என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இந்வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தௌபிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்ந்ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்;

சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்

நற்றிணை - 340. மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, 5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! 10

மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள சிறுகுடி என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்!

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. - நக்கீரர்

நற்றிணை - 341. குறிஞ்சி

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் 5
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே. 10

இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தௌபிவை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தௌபிவைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்;

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 342. நெய்தல்

மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும், அன்பு உடையோய்! என, 5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:
யானே- எல்வளை!- யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என் எனப் படுமோ? என்றலும் உண்டே. 10

அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; அத் தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்;

குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது.

நற்றிணை - 343. பாலை

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை 5
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? 10

தோழீ! வாழ்வாயாக!; முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே;

தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

நற்றிணை - 344. குறிஞ்சி

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின்- ஆயிழை!-
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை 5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே- உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, 10
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ?

தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

நற்றிணை - 345. நெய்தல்

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
வெளிய விரியும் துறைவ! என்றும், 5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே! 10

மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தௌபியாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; நீ இங்கு நயந்து தௌபிவிக்கும் தௌபிவு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக!

தௌவிடை விலங்கியது. - நம்பி குட்டுவனார்

நற்றிணை - 346. பாலை

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, 5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா- என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல் 10
மட மா அரிவை தட மென் தோளே?

நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

நற்றிணை - 347. குறிஞ்சி

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் 5
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
நீர் அன நிலையன்; பேர் அன்பினன் எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய, 10
காண வீடுமோ- தோழி!- என் நலனே?

தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அவை இரங்கத்தக்கன;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது. - பெருங்குன்றூர் கிழார்

நற்றிணை - 348. நெய்தல்

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? 10

நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே?

வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. - வெள்ளி வீதியார்

நற்றிணை - 349. நெய்தல்

கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் 5
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
என் என நினையும்கொல், பரதவர் மகளே? 10

விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?;

தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. - மிளை கிழான் நல்வேட்டனார்

நற்றிணை - 350. மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார 5
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு இல் கலம் தழீஇயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! 10

வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் இருப்பையூர் போன்ற; எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக!

தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 351. குறிஞ்சி

இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி- வேண்டு, அன்னை!- கருந் தாள் 5
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.

அன்னாய்! வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இவள் பெதும்பைப் பருவம் நீங்கப் பெற்றவளென்று; வளம் பொருந்திய மாளிகையிலே பெயர்ந்து போதற்கரிய காவலுட்படுத்தினையாயினும்; சிறந்த இவள் பசப்படைந்தனள் என்பதனை உணர்ந்தனை யல்லையாய்; பல நாளும் துன்பம் பொருந்திய நெஞ்சத்துடனே முருகவேளை விரும்பி இல்லகத் தழைத்து வெறிக்களந் திருத்தி வெறியெடுத்து வருந்தாதே கொள்; கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய சிறிய குன்றினிடத்திலே; சந்தனமரத்தாற் செய்த களிற்றியானையின் வலிமைக்கு அஞ்சாத புலித் தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து; சிறிய தினைகளையுடைய அகன்ற புனத்தை மறுபடியுஞ் சென்று பாதுகாத்திருப்பாளாயின்; என் தோழி தன் அழகை மீண்டும் பெறாநிற்பள், அது வீணே கழிகின்றது!;

தோழி அருகு அடுத்தது. - மதுரைக் கண்ணத்தனார்

நற்றிணை - 352. பாலை

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி 5
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் 10
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

இலைவடிவாகிய மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புபட இருத்திய உயிர்களிடத்து அன்பில்லாத மறவர்; கொன்று அலைத்தலாலே; அயல் நாட்டினர் பலரும் அவ்விடத்தில் இறந்து கிடந்த செல்லுதற்கரிய சுரத்திலுள்ள கவர்த்த நெறியில் அங்ஙனம் கிடந்த பிணங்களை; அழல் போலுகின்ற சிவந்த செவியையுடைய கழுகின் சேவல் தின்னாவாறு அதனை வெருட்டி அலைத்து; தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற ஊனைத் தின்னுதலில் விருப்ப மிக்க முதிய நரி; பசிய தசையை நிரம்பத் தின்று வாய் வறந்து நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற வறும் புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; நீர் ஆங்குக் கிடைக்காமையாலே வருந்திக் கற்குவியலின் நிழலிலேதான் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கவும் இடம்பெறாது வருந்துகின்ற அஞ்சத்தக்க பலவாய வழி; வருதலானே வருந்திய நமக்கும் கடத்தற்கு அரிய வாயின; இத்தன்மையவாகிய வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாட்சிமைப்பட்ட இளமடந்தையாகிய நம் காதலி தானிருக்கும் மாளிகையினின்று நீங்கி எவ்வாறு வந்தனளோ?: அளியள் இவள் இரங்கத் தக்காள் காண்;

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது. - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

நற்றிணை - 353. குறிஞ்சி

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள் 5
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை- எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும் 10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

தேட்டத்திற்குரிய காதலன் இல்லாத தாபதமகளிர் தாம் தேடி உண்ணுமாறு முயன்று நூற்கின்ற நுணங்கிய நுண்ணிய பஞ்சுபோல; கூட்டமாகக் காற்றால் அலையப்படும் மேகந் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த நெடிய மலையிடத்து; முடப்பட்டு முதிர்ந்த பலாமரத்திலுள்ள குடம் போன்ற பெரிய பழத்தின் சுளையை; மலைச்சாரலில் உழுதுண்டு வாழுங் குறவர் தாம் அன்போடு பெற்று வளர்த்து வருகின்ற இளமகள்; கரிய விரலையுடைய மந்தியை வருவிருந்தாக ஏற்றுக்கொண்டு கொடுத்து ஓம்பாநிற்கும்; விசும்பில் நீண்ட மலைநாடனே!; எம்பால் நீ காமம் மிகுதியாகக் கொண்டிருப்பினும்; இரவு நடுயாமத்துக் கரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல முழங்கா நிற்கும்; யாவரும் அஞ்சுகின்ற சிறிய கொடிய வழியின் வருதலானே; நீ சால்புடையையல்லை; ஆதலின் இங்ஙனம் நீ வருதலை நீக்கி வேறு தக்கதொன்றனைச் செய்வாயாக!

தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 354. நெய்தல்

தான் அது பொறுத்தல் யாவது- கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை 5
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப, 10
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?

ஐயனே! கழிச்ந்சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின்கண்ணே; இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக்கிடமாயிராநின்றது; அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக!

தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்

நற்றிணை - 355. குறிஞ்சி

புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட! 5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி- 10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!

புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே!; நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து இதனை நீயிர் உண்பீராக! என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்;

தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.

நற்றிணை - 356. குறிஞ்சி

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் 5
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை- வாழி, என் உள்ளம்!- ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?

என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தௌபிந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய; ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னப்பறவைகள்; பொன்பொருந்திய நெடிய கொடுமுடிகளையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற தேவருலகின்கண் வாழும்; தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய; சிறகு முளைத்து வளராத தம் இளம் பார்ப்புகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லுகின்றபொழுது; அவற்றின் வருந்துதலில்லாத வலிய சிறகு வருந்தினாற்போல; பலகாலும் என்பால் நின்றும் அவள்பால் ஏகுதலாலே நீ வருந்தாநின்றனை; அதனை யான் நன்கு அறிவேன் காண்! இங்ஙனம் வருந்தியதன் பயனாக இனி மற்றொரு பொழுதிலாயினும் கீழ்பாற்கண் விடியலிலே தோன்றுகின்ற வெள்ளிபோல; நங் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?; அதனையேனும் ஆராய்ந்து கூறுவாயாக!

வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

நற்றிணை - 357. குறிஞ்சி

நின் குறிப்பு எவனோ?- தோழி!- என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் 5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே. 10

தோழீ! என் கருத்தானது என்னோடு பொருந்தாதாயினும:ந் சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் ஆகாயத்தில் உயர்ந்து நன்றாகத் தோன்றுகின்ற மலையின் பக்கத்தில்; மழைபெய்யுமளவில் அம் மழையிலே நனைந்து மயிர் சிலிர்த்த நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய குடுமியையும் பீலியையுமுடைய மயில் சென்று; உலாவி வருகின்ற சோலை சூழ்ந்த அழகிய இடமகன்ற கற்பாறையில் உற்ற அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையிடத்துள்ள; மையுண்ட கண்ணையொத்த குவளைமலர்களைக் கொய்து; நீராடும்பொழுது அந்நீர் அலைத்தலானே குலைந்த மாலையையுடைய சாரல் நாடனுடனே; அருவியில் ஆடிய நாளினை நினைந்து; எக்காலத்தும் நெஞ்சைப் புண்படுத்திக் கொண்டு கெட்டொழிய அறியாததாயிராநின்றது; அது காரணமாக நின் கருத்துத்தான் எவ்வாறுளதோ? அதனைக் கூறிக்காண்

தலைமகன் வரைவு நீடிய இடத்து, ஆற்றுவல் என்பது படச் சொல்லியது; மனை மருண்டு வேறுபாடாயினாய் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - குறமகள் குறியெயினி

நற்றிணை - 358. நெய்தல்

பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம்,
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ! என, 5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ- தோழி!-
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் 10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறிய வெளிய காக்கை நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற; எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; என்னைப்பிரிந்து அங்கே தங்குதற்கு வல்ல தலைவர்; முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; நாம் இத் தன்மையேமாதலும் அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று; தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; எவ்வளவேனும் அவரை வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணங்களையுடைய அக் கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப் பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்!

பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன் எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

நற்றிணை - 359. குறிஞ்சி

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், 5
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே- அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?

மலையின் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசு; அசைகின்ற குலையையுடைய காந்தளைத் தீண்டி அக் காந்தண் மலரிலுள்ள தாதுக்கள் தன்மேல் உதிரப் பெற்றதனாலே நிறம் வேறுபாடுடைமை நோக்கி; அதன் கன்று தன் தாயென் றறியாமல் மயங்காநிற்கும் மலைநாடன், உடுக்கும் தழை தந்தனன் அவை உடுத்திக் கொள்ளுந் தழையைக் கையுறையாகக் கொடுத்தனன், அவற்றை எம் நாட்டினர் உடாராதலின், யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் யாங்கள் மட்டும் உடுத்திக்கொள்ளின் அன்னை கேட்டற்கு யாது விடை சொல்ல வல்லேமென்று அஞ்சாநிற்பேம்; அத் தழையுடையை மீட்டும் தலைவன்பாற் கொடுத்துவிடின் அதனால் அவன்படும் ஆற்றாமைக்கு அஞ்சாநிற்பேம்; ஆகிய அவற்றிடையே அவனது மலையிலுள்ள போரைச் செய்தலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத; தெய்வம் இருக்கின்ற மலைப் பக்கத்தின்கண்ணே உள்ள கொய்தற்கரிய தழைதாம்; வாடுதலுடைய ஆகலாமோ?

தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது. - கபிலர்

நற்றிணை - 360. மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,
சென்றீ- பெரும!- சிறக்க, நின் பரத்தை! 5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்; 10
மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பெருமானே! பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது வெள்கி விரைவாக; வருந்திய பாகர் இருப்பு முள்ளாலே குத்தி அலைத்தலாலே; துன்புற்றுத் தன் துதிக்கையிடை வைத்ததனை மெய்யின்மேல் வாரி இறைத்துக் கொள்ளுகின்ற யானைக்கன்றுக்கு இட்ட கவளம்போல; மிகப் பெரிதாக நீ யுற்ற நின் சீர்மையை யான் கண்டு மகிழா நிற்பேன்; நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயிலானது பிறிதொரு பொழுதினுங் கூடும்; ஆதலால் மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து போமாறு முறையே கூத்துக்களை ஆடிய; திருவிழா வொழிந்த களத்திலுள்ள கூத்தியைப்போல; அழகுடைய நேற்றைப் பொழுதிலே வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனை யெல்லாங் கொள்ளை கொண்டு; இற்றை நாளால் பாணனாலே கொணர்ந்து தரப்படுகின்ற பரத்தையருடைய மெல்லிய தோளை அணையும் வண்ணம்; விரைந்து செல்வாயாக!; நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக!

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம். - ஓரம்போகியார்

நற்றிணை - 361. முல்லை

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, 5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.

சிறிய மலரையுடைய முல்லையினது பெரிதும் மணம் வீசுகின்ற மலரை; நெடிய புகழையுடைய இறைவன் தானுஞ் சூடினன் உடன் வந்த இளைஞரும் சூடினர்; விசும்பைக் கடந்தாலொத்த பொன்னால் ஆகிய கலனை அணிந்த கனைக்கின்ற குதிரைகள்; மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்; ஆதலின் அவள் துனிகூருமென்று நீயிர் கவல வேண்டா?

வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது. - மதுரைப் பேராலவாயர்

நற்றிணை - 362. பாலை

வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், 5
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென்- மாஅயோளே! 10

கரிய மாமைநிறமுடைய காதலியே!; இயந்திரமமைந்த கொல்லிப் பாவைபோல இயங்கா நின்று; நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து யான் கூறுகின்ற சொற்களை மேற்கொண்டு என்னொடு போந்தனை; ஆதலால்; முதற் பெயலைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சியான மழையையுடைய மேகம் பெய்தலாலே அழகு மிக்க காட்டில்; அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ விளையாடுவாயாக!; யானோவெனில், இளைய களிற்றியானை யுரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து; ஆறலைகள்வர் முதலாயினோர் சூழ்ந்து போர் செய்ய வரின் அஞ்சாது போர் புரிந்து அவர் ஓடுமாறு பெயர்க்குவேன்; அவ்வண்ணம் நின் சுற்றத்தார் தேடி நின்பின்னே தொடர்ந்துவரின் மறைந்துகொள்ளா நிற்பேன்காண்!

உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இள நாகனார்

நற்றிணை - 363. நெய்தல்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு 5
வம்மோ- தோழி!- மலி நீர்ச் சேர்ப்ப-
பைந் தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. 10

நிரம்பிய கடல் நீர் பரவிய நெய்தனிலத் தலைவனே!; உடுத்திருந்த பசிய தழையுடை சிதைய மலர்மாலை வாடச் சிலவாகிய விளங்கிய ஒளி பொருந்திய வளைகள் கழல; நன்றாக நேற்று மாலைப்பொழுது நின்னொடு அலவனைப் பிடித்தாட்டிய என் தோழியினுடைய; சிலம்பு உடைபட்டதனாலே; கண்டல் மரங்களை வேலியாகவுடைய புறத்தே கழி சூழ்ந்த கொல்லைகளையுடைய தௌபிந்த நல்ல கடல் நாட்டுத் தலைவன் யானென; நெறிகொண்டு போயினையாயின்; எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; கலன் பொறியற்றுப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண் கட்டவேண்டியதன்றே; அங்ஙனம் கட்டுதற்குத் துறையிலுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்வாயாக!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்தது

நற்றிணை - 364. முல்லை

சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் 5
வாழலென் வாழி- தோழி!- ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இவ்வாறாகிய நாள் சில கழிவன வாயினும்; முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருசேர வந்து கூடினால்; அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்;

தலைமகள் பிரிவிடை மெலிந்தது. - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்

நற்றிணை - 365. குறிஞ்சி

அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
சென்மோ வாழி- தோழி!- பல் நாள் 5
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே.

தோழீ! வாழ்வாயாக! பல்நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நெடுநாள் காறும் மின்னல் முதலாகிய தொகுதியையுடைய மேகம் மழை பெய்யா தொழிந்தாலும் அருவியொலி மாறாது பெருகி வருகின்ற நீர் விளங்கிய பக்கமலைகளையுடைய; ஆகாயத்தின் மீதுயர்ந்த பெரிய மலைநாடனை; நெருங்கி நின்னையடைந்த எம்மை நீ கைவிடுதலானே சால்புடையையல்லை என்று கூறினேமாகி மீண்டு வருதற்கு; அருமையாகிய காவலைச் செய்துடைய அன்னையினது காவல் கடந்து; பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கிந் ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தினை யடைந்து; பகற் பொழுதிலே பலருங் காணுமாறு யாங் கொண்டிருந்த நாணினை விடுத்து அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவனது ஊர்; எவ்விடத்து உளதென்று வாயால் வினவியறிந்து சென்று வருவோமோ? ஒன்று கூறுவாயாக!

தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,இன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது. - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

நற்றிணை - 366. பாலை

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் 10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!

நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; நீலமணி போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார்,

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

நற்றிணை - 367. முல்லை

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் 5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர்: நமரும் 10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர், இப் பனி படு நாளே.

வட்டமாகிய கண்களையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை; நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு; சுற்றத்தையும் விளித்து; கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளையைத் தெய்வத்துக்கிடும் பலியுடனே கவர்ந்து கொள்ளுமாறு; குறிய கால் நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய நல்ல மனையின்கண்ணே கூடினவாயிருக்கும்; பழைமையான வீடுகளையுடைய அருமன் என்பவனது பெரிய புகழ் பொருந்திய சிறுகுடி என்னும் ஊரிலிராநின்ற; மெத்தென்ற சாயலையுடைய அரிவையே!; நினது பலவாகிய கரிய கூந்தலிற் சூடிய மாலை போலக் குவளை மலரொடு இடையிட்டுத் தொடுத்த நறிய பூவையுடைய முல்லையின் மூட்டுவாய் அவிழ்ந்த மலராகிய; தண்ணிய நன்மணமுடைய பூமாலையை; உடன் சென்றிருந்த வீரரெல்லாருஞ் சூடி வந்தனர்; அதனால் இப் பனி மிக்க பருவத்திலேதானே நங்காதலரும் ஆண்டுத் தங்கி வருந்தாது; விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக் கொண்டு இன்னே வருகுவர்; ஆதலின் வருந்தாதே கொள்!

வரவு மலிந்தது. - நக்கீரர்

நற்றிணை - 368. குறிஞ்சி

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த 5
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே-
ஐய!- அஞ்சினம், அளியம் யாமே! 10

ஐயனே! பெரிய புனத்திலுள்ள தினைக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லுகின்ற சிறிய கிளிகளை வெருட்டி; கரிய அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்த கயிற்றூசலில் ஏறி ஆடிப் பக்கம் உயர்ந்த அல்குலுக்குத் தழையுடை அணிந்து; நும்முடனே அருவியாடி விளையாட்டு அயர்ந்தேமாய் வருதலினுங்காட்டில்; இனியதொரு காரியமுளதாகுமோ?; நெறிப்பமைந்த கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக்கொண்ட நல்ல புது நாற்றத்தையும்; பசலை பரவிய சிறிய நெற்றியையும் நோக்கி; பயனின்றிச் சிதைந்த உள்ளத்தையுடையளாய் எம் அன்னை; பிறிதொன்றனைச் சுட்டி நின்றாள் போல வெய்யவாகப் பெருமூச்செறிந்து வெகுளா நின்றனள்; அதனால் யாம் இல்வயிற் செறிக்கப்பட்டுப் பிறரால் இரங்கத்தக்க தன்மையேமாய் அஞ்சாநின்றேம்;

தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 369. நெய்தல்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும் 5
அறியேன் வாழி- தோழி!- அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என் 10
நிறை அடு காமம் நீந்துமாறே.

தோழீ! வாழி; ஆதித்த மண்டிலம் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அத்தமனக் குன்றைச் சென்றுபுக; நிறைந்த சிறையையுடைய நாரையின் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் செல்லாநிற்ப; பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி முல்லையரும்பு வாய்திறந்து மலராநிற்கும் பெரிய புல்லிய மாலைப் பொழுதானது; நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருவதாயினோ; பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியின்கண்ணே; வானிடத்தினின்று இழிதரும் வயங்கிய வெளிய அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை; கரை கடந்து இழியாநின்ற அணையை உடைத்துச் செல்லுங் கடிய செலவினையுடைய நீர் வெள்ளம் போன்ற; எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்துமாறு நன்றாகத் தெரிந்தேனு மில்லையே! எவ்வாறு உய்குவேன்?

பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

நற்றிணை - 370. மருதம்

வாராய், பாண! நகுகம்- நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் 5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி? என,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,
முகை நாண் முறுவல் தோற்றி, 10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

பாணனே! என்னருகு வருவாயாக!; நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்!; நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்!

ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம். - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

நற்றிணை - 371. முல்லை

காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: 5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்-
தழங்கு குரல் உருமின் கங்குலானே.

பாகனே! இதுகாறும் மழைபெய்யாதிருந்த மேகங்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற காயா மரங்களையுடைய மலையின்கண்ணே இடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல; பெரிய மலைப் பிளப்பிடங்கள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி; என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருந்த இடம் நோக்கிச் சென்று; அகன்ற கரிய ஆகாயத்தினிடம் எல்லாம் மறைபடும்படி பரந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டன; ஆதலால் ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் கழன்றுவிழத் திண்ணமாக ஏக்கமுற்று அழத் தொடங்கினளேயாம்; அவள் அழுமிடத்துக்கு எதிரே இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போலக் கோவலர் புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினவராவார்;

வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 372. நெய்தல்

அழிதக்கன்றே- தோழி!- கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு 5
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப- மனை இருந்து, 10
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.

தோழீ! கடற்கரைச் சோலையிலுள்ள பனையின் தேனையுடைய அழிந்த பழம்; மூக்கு இற்றுக் கழியை அடைந்து பெரிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு அள்ளுதலமைந்த கரிய சேற்றிலே புதையும்படி விழுந்ததனால்; அவ்வோசைக்கு அஞ்சிந்ச் சுற்றத்தையுடைய நாரைகள் இனத்தோடு இரிந்தோடாநிற்கும் நீர்த்துறையையுடைய நின் காதலன்; வளையாகிய சங்கு போன்ற வெளிய மணலையுடையதாகிய இடத்தில்; முயங்க விரும்பிய நினது பெருந்தகை கொண்ட உள்ளத்தொடு பொருந்துமாறு; மகளிர் இல்லின்கண் இருந்து வருவிருந்தோம்பும் இயற்கையாலே; கரிய கழியிடத்து மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்கும் பரதவருடைய; திண்ணிய மீன் படகிலிருக்கும் விளக்குகளை எண்ணுகின்ற; கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழி சூழ்ந்த நம்முடைய நல்ல ஊரானது; இனிதாக நோக்கி அன்னை நினக்குக் கொடுத்த அசைகின்ற குழையுடைய பெரிய கோடு குலைதலாலே நீ வருந்துவது போலக் கருதி அஞ்சி நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே கொள் என்று கூறாநிற்கும்; இங்ஙனம் கூறுவதனால் இல்வயிற் செறியார்; ஆதலின் நீ மனம் அழிவது தகுதியுடையதன்று காண்!

மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 373. குறிஞ்சி

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, 5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?

தோழீ! இன்று அன்னை நம்மை நோக்கி ஐயப்பாடெய்தி இல்வயிற் செறிப்பக் கருதியதனால் மெல்லிய தலையையுடைய மந்தி இல்லின்முன்புள்ள பலாமரத்திலிருந்து அதன் பழத்தைக் கீண்டு நிறைந்த சுளைகளை யுண்டு அவற்றின் வித்தினைக் கீழே யுதிர்ப்ப; அயலிலே நின்ற கொடிச்சி தன் தந்தையினது மேகந்தவழும் கரிய மலைவளம் பாடி வெளிய ஐவன நெல்லைக் குத்துகின்ற மலைநாடனாகிய நம் காதலனொடு; அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பரப்பமைந்த பரண்மீது ஏறி; வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்;

செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 374. முல்லை

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே- பிற்றை 5
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?

பரல் நிரம்ப மேலே பொருந்திய சென்று சேர்தற் கியலாத நெறியில் உயர்ந்து தோன்றும் உப்பு வாணிப மக்கள் நிறைந்திருக்கின்ற சிறிய குடிகளையுடைய; களர்நிலத்தில் விளைந்த புளியின் கனியைச் சுவைத்து உண்டு நும்மை வருத்துகின்ற பசியைப் போக்குதலானே; மீட்டும் நெறியிலே செல்லும் வன்மை மிக்குடையீராய் உச்சி மேற் கொண்ட உயர்ந்த குடையையுடைய புதிய மாந்தர்காள்; இது காறும் பிரிந்ததனால் பிரியும் பொழுதின்றி அதன்பின்பு வருந்திக் கண்ணீர் வடிந்து விழுதலாலாகிய புள்ளி கொங்கையை நனையா நிற்ப; யாம் புதியேமாகி வருதலின் எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய்; அட்டிற்சாலை புகுந்து உணவு அமைக்குந் தொழிலில் வருந்துகின்ற விரும்பிய கரிய மணியின் தன்மையுடைய அலங்கரித்த நெடிய கூந்தலையும் திருந்திய கலன்களையும்; இனிய மொழியையுமுடைய மடந்தையினிலையை இதன்முன்பும் இவ்வாறிருக்க முழுதும் பெற்றுடையேமோ? இல்லைகண்டீர்! இப்பொழுதுதான் பெறலாகியதே! இஃதென்ன வியப்பு;

வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. - வன் பரணர்

நற்றிணை - 375. நெய்தல்

நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, 5
வருவைஆயினோ நன்றே- பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.

நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே!; நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட வலிய அலைகள் மோதுவனபோல எழுந்து வாராநிற்கும் உயர்ந்த மணல் நிரம்பிய கொல்லைகளையுடைய; யாம் உறைகின்ற எம்மூரிடத்து நீ அவளை மணஞ்செய்து கொள்ளுமாறு வரல் வேண்டும்! அவ்வாறு வருவையாயின் அது மிக நல்லதொரு காரியமாகும்;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது. - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நற்றிணை - 376. குறிஞ்சி

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,
வரையோன் வண்மை போல, பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!
குல்லை, குளவி, கூதளம், குவளை, 5
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, 10
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே?

முறம்போலுஞ் செவியையுடைய யானையினது வளைந்த கைபோல வளைந்து தலைசாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டினையும் உடைய செவ்விய தினையை; வரையாது கொடுப்பவனது கைவண்மைக்கு ஈண்டும் பரிசிலர்போலப் பலவாகிய சுற்றத்தொடு நெருங்கிவந்து உண்ணாநின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டமே!; தலைவனை முன்பு முயங்கி அவனை நீங்கிய பின்னர் அறநெறியிலே நில்லாத எம் அன்னை எம்மை வருத்தி; காவலின்றி அழிகின்ற தினைப்புனத்தினை யாங் காவல்செய்யவிடாது இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே; இதன்பின்பு வெறியெடுத்தலாலே முருகவேளும் எம்மை வருத்தும் போலும்; ஆதலின் குல்லை மலைப்பச்சை கூதாளி குவளை தேற்றா என்பனவற்றின் மலராற் புனைந்த மிகக் குளிர்ந்த பூமாலையை யுடையவனும்; வரிந்து கட்டிய அமைந்த வில்லையுடையவனுமாகி அசோகமரத்தின்கீழ் வந்துநிற்கும் நல்ல மாலையணிந்த மார்புடைய அவனை நீயிர் காண்பீராயின்; இங்கு நிகழ்ந்த எல்லாவற்றினையும் கூறாது விடினும் சிறிய சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுமாறு நன்றாக அவனுக்கு உரையுங்கோள்!

தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்

நற்றிணை - 377. குறிஞ்சி

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- 5
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ?

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது. - மடல் பாடிய மாதங்கீரனார்

நற்றிணை - 378. நெய்தல்

யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், 5
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால்- தோழி!- ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, 10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே

தோழீ! இரவு நடுயாமமும் நெடும்பொழுதுடையவாகிக் கழியாநிற்கும்; எமக்குளதாகிய காமமும் கண்ணுறங்கவொட்டாது பெருகாநிற்கும்; தௌபிந்த கடலின்கண்ணே முழங்குகின்ற அலைகளும் முழவோசை போல மெல்லமெல்ல ஒலித்து நெடுநாட் புண்ணுற்றாரைப் போலப் புரண்டு புரண்டு அக் கடலிடத்து அசைந்து இயங்காநிற்கும்; அவை அவ்வண்ணம் நம்மை வருத்தாநிற்கவும் நீங்கி இராப்பொழுதைக் கடந்து ஞாயிறு தோன்றினபாடில்லை; உயர்ந்த மணற் பரப்பிலே புனைந்து கோலமிட்ட சிறிய மணற் சிற்றிலைச் சிதைத்து நம்பால் வந்து; அன்பு மிகும்படி கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு; பக்கத்தில் ஒலிக்கும் குளிர்ச்சியையுடைய கடற்கரைத் தலைவனுடனே முன்பு இவன் இத்தன்மையன் என்று ஆராய்ந்து பாராது உடன் பட்டதனாலாகிய நட்பின் அளவானது; பழிச்சொற் கூறும் வாயையுடையஅயல் வீட்டு மாதர்கள் எம்முடைய நெற்றியிலுண்டாகிய பசலையைக் குறித்துப் பலவாய இழிந்த பாடல்களைக் குறிப்பாக எவ்விடத்தும் பாட; இவ்வாறு இழிதகவெய்தப் பண்ணியது கண்டாய்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

நற்றிணை - 379. குறிஞ்சி

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி 5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,
பெயல் உறு நீலம் போன்றன விரலே,
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, 10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே.

ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய குடவாயில் என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக!

தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்

நற்றிணை - 380. மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் 5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல்- பாண!- நின் தண் துறை ஊரனை,
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் 10
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வதற்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்குப் படிந்திரா நின்றுது; சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்; இங்ஙனம் ஆகையில் தூய இழையணிந்த பரத்தையர் சேரிக்கண்ணே தோன்றுகின்ற தேரையுடைய காதலன் கூடுதற்குரிய தகுதிப்பாடுடையேமல்லேம்; ஆதலின் நின் தண்ணிய துறையையுடைய அவ்வூரனை இப்பொழுதே கொண்டு சென்று பரத்தையர் பால் விலைகொண்டு ஈடாக உய்ப்பாயாக!; பொன்போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழையெடுத்துப் பாடுதலில் நீ வல்லனே யாயினும்; ஈண்டு எம்மைத் தொழுது படாதேகொள்; சிறந்த எமது மனையின்கண்ணே நீ நின்று பாடுதலைச் செய்யாதபடி நெடும் பொழுது நிற்றலையுடைய தேரிலே பூட்டிய குதிரைகளும் தம்மைப் பிணித்திருத்தலை வெறுக்கின்றன கண்டாய்; யாம் விரும்பியது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களை எம்பால் மொழிய வேண்டா!

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - கூடலூர்ப் பல்கண்ணனார்

நற்றிணை - 381. முல்லை

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை 5
யாங்கனம் தாங்குவென் மற்றே?- ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. 10

தலையெடுத்து நடக்கும் உயர்ந்த விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையும் விரைந்து செல்லும் குதிரைப் படையுமுடைய அஞ்சியென்பான் குளிர்ந்த உள்ளத்தால் ஆராய்ந்து நீண்டகாலம் தன்பெயர் விளங்கி நிற்குமாறு இரவலர்க்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல; மேகம் மழை பெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது; என் காதலர் வருவேமென்ற இப்பருவத்தில் அவர் வாராமையாலே தாங்குதற்கரிய துன்பத்தை நுகர்தலின் அறிகுறியாக இதுகாறும் யான் இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும்; அவ்வாறு இறந்தொழியாமையின் அன்பிலேன் அல்லேனோ?; அவ்வண்ணம் அன்பில்லாதேனை அவர் அருளாராயினும் கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அலசப்பட்டுத் தோன்றிக் காற்றாலலையும் மாமரத்தின் அழகிய தளிர்போல; நடுங்குதல் நீங்காத நெஞ்சுடனே இத்துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 382. நெய்தல்

கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, 5
ஆர் உயிர் அழிவதுஆயினும்- நேரிழை!-
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.

நேர்மையான கலன்களையுடைய தோழீ! பரவுதல் கொண்ட கடல்நீரின் தண்ணிய துறைக்குத் தலைவராகிய நங்காதலர்; களவொழுக்கம் மேற்கொண்டு பலகாலும் இங்கு வருதலால் அவரும் நாணமெய்தி இனி இவ்விடத்தை நோக்காதபடி நமக்குப் பகைவராயுள்ள ஏதிலாட்டியரும் சேரியம் பெண்டிரும் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுத்தான் மிகுதியாக உண்டன்றே!; ஆதலின் மாலைப் பொழுதிலே கடற்கரைச் சோலை சூழ்ந்த கழியிடத்து நீர் (உவா) வெள்ளமாகிப் பெருக; நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிய; அமைந்திராது அலையெழுந்துலாவுங் கடலகத்து மீன்களைத் தின்னுகின்ற பறவையின் கூட்டம் கானலின் கண்ணேயிருக்கின்ற தம்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று புகுதா நிற்றலையுடைய மாலையம் பொழுதை நினையாராய்; நம்மைக் கைவிட்டு அகன்ற அவர் முன்பு தங்கியிருந்த விடத்து; நாம் இருந்து பிரிவுக்கு மிக வருந்திப் பெறுதற்கு அரிய வுயிர் அழிந்துபோவதாயிருப்பினும்; அந் நோய் புறத்தார்க்குப் புலனாகாதபடி மறைத்துக்கொள்ளுதல் வேண்டும்; ஆதலால் யான் புலம்பாது ஆற்றியிருப்பேன்காண்!; அது காரணமாக நீ வருந்தாதேகொள்!

ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது. - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

நற்றிணை - 383. குறிஞ்சி

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள், 5
அருளினை போலினும், அருளாய் அன்றே-
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

உயர்ந்த மலை நாடனே! நீ எம் தலைமகள்பால் மிக்க அருளுடையை போலுகின்றனை யாயினும்; மலையின் தாள்வரையிலே தழைந்த கரிய அடியையுடைய வேங்கை மலராலே தொடுக்கப்பட்ட அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை; அணித்தாக ஈன்ற வயாநோய் பொருந்திய கரிய பெண்புலி பசியுழந்ததாக ; அதனை அறிந்த வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் பிளவுபடுமாறு மோதிக் களிற்றியானையைக் கொன்று; இடியினுங் காட்டில் மேலாக முழங்காநிற்கும் அச்சமிக்க நடுயாமத்திலே; செறிந்த இருளான் மூடப்பட்ட கருதினார்க்கு நடுக்கம் வருகின்ற நெறியின்கண்ணே; பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லுகின்ற இடி இடிக்கும் பொழுது நீ எங்களை நினைத்து வருதலானே; அருளுடையை அல்லை காண்!

தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது. - கோளியூர்கிழார் மகனார் செழியனார்

நற்றிணை - 384. பாலை

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் 5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி- என் நெஞ்சே!- நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை 10
மருந்து எனப்படூஉம் மடவோளையே.

எமது உள்ளமே நீ வாழ்வாயாக!; நாணமென்பது குறுக்கே தடுப்பின் அப்பொழுது காம நோயைத் தீர்க்கும் நெறியின்றி அரிய துன்பம் எய்தி யாம் வருந்தியவழி அத் துன்பநோய்க்கு மருந்தெனப்படாது நாணம் விட்டு நெருங்கிய காலத்து அக் காம நோய்க்கு மருந்தெனப்படுகின்ற; மடப்பத்தையுடைய இவளை; வளவிய புறத்தையும் சிவந்த காலையுடைய புறவின் சேவல் களரியில் உயர்ந்து வளர்ந்து கவையாகிய முள்ளையுடைய கள்ளியின் தலையிலே சுள்ளிகளையடுக்கி அமைத்த குடம்பையின்கண்ணே; பிள்ளைகளை யீன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய வருந்திய நடையுடைய பேடையாகிய புறவு; உண்ணும் பொருட்டு; வேற்றரசர் படையொடு வந்து பொருது பகைமுனையிலே சென்று எல்லாவற்றையும் கவர்ந்து சென்றொழிந்ததனாலே மாந்தர் யாருமின்றி முதிர்ந்த பாழ் நிலத்திலே தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்றுக் கொணர்ந்து கொடுக்காநின்ற மாண்பு சிறிதும் இல்லாத நெடுங்தூரத்திற்கு அப்பாலுள்ள நாட்டுக்குச் செல்லும் நெறியின்கண்; நல்ல நாட்காலையின் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன்போன்ற புதிய பூக்கள்; உதிர்ந்து பரவிக்கிடப்ப அப் பரப்பின்மீது அன்னப்பறவை நடப்பது போல நடக்க அதனை நாம் நேரே கண்டு மகிழ்ந்தோம்; அவ்வாறே இனி நீயுங் காண்பாயாக!

உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 385. நெய்தல்

எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், 5
பொழுதன்றுஆதலின், தமியை வருதி:
எழுது எழில் மழைக்க..............

கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ; இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.

நற்றிணை - 386. குறிஞ்சி

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். 5
அணங்குடை அருஞ் சூள் தருகுவென் என நீ,
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என,
தெரிந்து அது வியந்தனென்- தோழி!- பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. 10


தோழீ! சிறிய கண்ணும் பெரிய சினமுமுடைய ஆண்பன்றிகள் நிரம்பிய, மாலையணிந்த கானவர் உழுது விளைத்த; வளைந்த தினைக்கதிரைத் தின்று பக்கத்திலுள்ள மலைப்பிளப்பினைத் தனக்குத் தங்குமிடமாக உடைய புலிக்கு அஞ்சாது; மூங்கில் வளர்ந்த மலைச்சாரலில் உறங்காநிற்கும் மலைநாடன; ஒரு பொழுது நின்பாற் போந்து இன்னதொரு நாளில் வந்து நின்னை வரைந்து கொள்வேன் அதற்குச் சான்றாக முருகவேள் முதலாயினாரைச் சுட்டியுந் தொட்டும் யாருங் கருதலரிய சூள் செய்து தருவேன் என்றலும்; அதனைக் கேட்ட நீ அவரை நோக்கி, நின்னோடொத்த ஒருதன்மையோர் இத்தகைய சூள் புகலார் பெருந்தகைமை யென்பது நின் மாட்டில்லையாகலின் நீ சூளுறத் துணிந்தனை என்று கூற; அஃது உண்மையெனக் கொண்டிருந்த யான் பின்பு ஒருபொழுது நமது மலையகத்து விளங்கிய சிறுகுடி பெருகிப் பொலிவடைய அவர் அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வதுவை யயர்தும் என்றும் வந்தநாளில்; அதனையறிந்து இவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர் என வியந்தனென்காண்!

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புகுவலென முற்பட்டாள் தலைமகள்மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்தும் பிறிதொன்றன்மேல் வைத்துப் பாவியேன் இன்று பேதைமை செய்தேன் எம்பெருமாட்டி குறிப்பு உணர்ந்து ஆவேன்மன்னோ வழிப்படுவேன் எனச் சொல்லியது.

நற்றிணை - 387. பாலை

நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் 5
வருவர் வாழி- தோழி!- செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும் பெருங் குன்றம் முற்றி, 10
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறையினின்று நீக்கிய வாள் போலமின்னி; உவ்விடத்தே பாராய்; நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்கம் மிக்க மேகம்; விரைந்து மழையைப் பெய்யாநின்றது; இப் பருவத்தினை நோக்கியவுடன் வெறுத்தொழிந்த மாலையையுடைய தந்தொழிலன்றிப் பிற கல்லாத வீரர் பயிலாது ஏந்திய செவ்விய அம்பினை வில்லினின்றும் விடுதலானே அஞ்சி யாரும் நெருங்குதற்கரிய குறுக்கிட்ட கவர்த்த வழியையுடைய; சென்று சேர்தற்கியலாத சுரத்தின்கண்ணே முன்பு சென்ற காதலர்; விரைவில் வாராநிற்பர்; அங்ஙனம் அவர் வருதற்குள்ளாக நீ வருத்தமுற்று நெறித்த கரிய கூந்தலினும் நெடிய தோளினும் நாள்தோறும் பழமையாயுள்ள அழகெல்லாவற்றையுங் கெடுத்துக்கொள்ளாதொழிவாய்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது. - பொதும்பில் கிழார் மகனார்

நற்றிணை - 388. நெய்தல்

அம்ம வாழி, தோழி!- நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே- நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் 5
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? 10

தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேன் மணம் வீசும் தௌபிந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்!

வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

நற்றிணை - 389. குறிஞ்சி

வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, 5
சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு 10
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தௌபிவடைந்தன; தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்!

பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

நற்றிணை - 390. மருதம்

வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, 5

விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
10
அளிய- தோழி!- தொலையுந பலவே.

தோழீ! வாளைமீன்கள் வாள்போலப் பிறழாநிற்ப அவற்றை இரையாக உண்ணக் கருதாது நாள்தோறும் பொய்கையிலுள்ள நீர்நாய் தங்கிய துயிலை ஏற்றுப் பொருந்தாநிற்கும்; கை வண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்த வயலிலுள்ள வெளிய ஆம்பலின் அழகிய நெறிப்பையுடைய தழையை; மெல்லிதா யகன்ற அல்குலின் மேலே அழகுபெற உடுத்து யானும் இங்கு நடக்கின்ற விழாக் களத்தின்கண்ணே செல்ல வேண்டும் முன்னமே கருதாமையின் அது வீணே கழிந்தது; இப்பொழுது இவ்விளமகள் தோற்றப் பொலிவோடு செல்லுதலைப் புதுவருவாயினையுடைய ஊரன் காண்பானாயின் ஏனையோரை ஏறட்டுப் பாராது இவளையே கொண்டுசெல்லாநிற்கும், அங்ஙனம் கொள்ளாது விடுதலரிதேயாம்; கொண்டு சென்றொழிந்தாலோ வரைபோல்கின்ற யானையும் வாய்மையுமுடைய முடியனது மலையிலுள்ள மூங்கில்போன்ற இவனுக்குரிய இல்லுறை மாதாந்களின் நல்ல தோள்கள்; பல தம் நலனிழப்பனவாகும்! கருதின் அவை இரங்கத்தக்கன:

பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம். - அவ்வையார்

நற்றிணை - 391. பாலை

ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே-
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், 5
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே- குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? 10

மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தௌபிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்ந்த தலையையுமுடைய எருமைமாடு; அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; நின்னைவிட்டுப் பிரிபவர் யார்?

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 392. நெய்தல்

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், 5
பெண்ணை வேலி, உழை கண் சீறூர்
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல;
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம்- பானாள்,
முனி படர் களையினும் களைப; 10
நனி பேர் அன்பினர் காதலோரே.

கொடிய சுறாமீனை வலையிட்டுப் பிடிக்கின்ற கடிய முயற்சியுடைய தந்தை; நீர்க்காக்கைகள் ஒலிக்கின்ற பெரிய கடலின்கண் வேட்டைக்குச் செல்கின்றவன் உடன்கொண்டு செல்லானாய் நிறுத்திவிட்டுச் சென்றதனாலே; மனையின்கண் இருந்தபடி தந்தையுடன் செல்ல விரும்பி அழுதுநின்ற மெல்லிய தலையையுடைய சிறுவர்; ஆங்கு விரைய முயற்சியாலே கிடைத்த இனிய கண்ணையுடைய பனைநுங்காகிய பருத்தமைந்த விருப்பம் வரும் கொங்கையின் பயனைப்பெற்று மகிழாநிற்கும்; பனையோலையிட்டு விசித்த வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரிலுள்ள நல்ல நமது மனையகத்தை நங்காதலர் அறியின்; நல்லதேயாம், அஃது அனைவேமும் விரும்பத் தக்கதொன்றாம்; எவ்வாறெனின் அத்தகைய காதலர் நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலால்; இரவு நடு யாமத்தில் நம்மை வருந்துந் துன்பத்தைப் போக்கவேண்டுமெனினும் அவ் வண்ணமே செய்யவல்லவர்காண்; அவர் தாம் செம்மாப்புற்ற உள்ளத்துடனே முன்பு வந்து நின்னை முயங்கி அகன்ற கடற்கரைச் சோலையிடத்துள்ள குறியை இப்பொழுது வந்து கண்டு நின்று அழிகின்றனர் போலும்;

இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 393. குறிஞ்சி

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி 5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், 10
நேர்வர்கொல் வாழி- தோழி!- நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

தோழீ! வாழ்வாயாக!; நீண்ட மூங்கிலுயர்ந்த நிழல் மிக்க மலையில்; முதிர்ந்த சூலினையுடைய வலிய பிடியானை தான் கன்றையீன்று வருந்தாநிற்ப; பால் மடி சுரந்த பசிய ஈன்ற அணிமையினாலுண்டாகிய பசிநோயைத் தீர்க்க வேண்டி; மகிழ்ச்சி மிக்குக் கரிய களிற்றியானை வளைந்த தினைக்கதிரைக்கொய்து கொண்டு போதலாலே; கானவன் கண்டு எறிந்த விரைந்த செலவினையுடைய எரி கொள்ளி; மூங்கில் நிரம்பிய மலைப்பக்கமெங்கும் விளங்கும்படி மின்னி; விசும்பினிடத்தில் நிலை பெற்றிராது தோன்றி மறைகின்ற மின்னலைப்போலத் தோன்றாநிற்கும் மலை நாட்டினராகிய நம் காதலர்; இரவில் வருதலாலாகிய துன்பத்தினின்று நாம் பிழைக்கவேண்டி; அவர் புதியராய் வரும் வருகையும் நின் வதுவைக்காக நீ நாணி ஒடுங்கியிருக்கும் ஒடுக்கமுங் கண்டக்கால்; அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வரைவதற்கு வந்த வாய்மொழிக்கு ஏற்குமாறு; நம் சுற்றத்தார் மகட்கொடைக்கு உடன்படுவர் போலும், அங்ஙனம் உடன்படுவாராயின்; அவர்தாம் நம் காதலரொடு மகிழ்ந்து பேசுவரோ?; நேர்ந்து பேசுவரெனின் அது மிக்க நன்மையாகுங் காண்;

வரைவு மலிந்தது. - கோவூர் கிழார்

நற்றிணை - 394. முல்லை

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
வன் பரல் முரம்பின், நேமி அதிர, 5
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? 10

மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டின்கண்ணே வாடிய ஞெமையின் மீதிருந்த பேராந்தை; பொற் கொல்லன் தொழில் செய்வதினெழுகின்ற ஒலிபோல இனியவாய் ஒலியாநிற்ப; பூட்டிய மணிகளொலிக்கும் அருங்கலம் விளங்கிய தேரினுருள்; சுரத்தினுள்ள மேட்டு நிலத்தின்கண் அதிர்ந்து செல்லாநிற்ப; முன்பு இத் தோன்றல் முன்பனி நாளிலே சென்றனன்; இப்பொழுது சுரத்திடையே மேகம் எழுந்து உலாயதெனக்கொண்டு கார்ப்பருவம் வந்திறுத்ததென; தன் காதலியை ஆற்றுமாறு மீள்வானாகித் தன் மார்பிற் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தினுங் காட்டில் நறிய குளிர்ச்சியுடையனாய் வாரா நின்றான்கண்டீர்!; இவன் வாழ்வானாக! யான் இதற்கு நோவேனோ? நோவேனல்லேன்! மகிழ்வேன் மன்;

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம். - அவ்வையார்

நற்றிணை - 395. நெய்தல்

யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு
யாரையும் அல்லை; நொதுமலாளனை;
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, 5
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. 10

நண்பனே! யாரை நட்பாகவுடையை? நீ எமக்கு யாராந் தன்மையுடையை?; ஆராயின் நட்புடையாரையும் போல்வாயல்லை! அயலானாயினை!; எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் இயலை ஆராயப் புகின் அஃது அத் தன்மையதேயாகும்; கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரையுமுடைய குட்டுவன்; பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்ந்தாற்போன்ற ஒலியையுடைய; அலையுயர்ந்து வருகின்ற கடலிலே பாய்ந்து விளையாட்டயர்ந்து நீராடுமகளிர்; அணிந்து கழித்தெறிந்த பலவாய மலர்களைப் பொருந்தித் தின்ற முதிர்ந்த பசு; மீண்டு தான் உறைகின்ற புலத்துட் புகாநின்ற பெரிய இசையையுடைய மாலைப்பொழுதை எதிர் கொள்ளுகின்ற; கடற்கரையின்கண் விளங்கிய மாந்தை நகர்போன்ற எம்மை; விரும்பி யொழுகுவாயல்லையாதலின்; நின்னாலிழந்த எமது நலனைக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுவாயாக!

நலம் தொலைந்தது எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது. - அம்மூவனார்

நற்றிணை - 396. குறிஞ்சி

பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை 5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி, 10
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?

மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே!; நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்?; நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்;

தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

நற்றிணை - 397. பாலை

தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; 5
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன் எனவே.

காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; என் தோளும் வாட்டமடையும்; நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; அவ்வாறு இறந்துழி; எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்;

பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 398. நெய்தல்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; 5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் முன்,
சென்மோ, சேயிழை? என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே- நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. 10

அச்சஞ் செய்கின்ற அணங்கும் மறைத்துறையாதபடி இயங்கா நிற்கும்; விரிந்த கதிர்களையுடைய ஆதித்த மண்டிலமும் மேலைத்திசையிலே சென்று மறையாநிற்கும்; ஓரையாடிய மகளிர் தாமும் நீர் அலைத்தலாலே கலைந்த கூந்தலைப் பிழிந்து வடித்துத் துவட்சியுற்று அழகிய வயிற்றில் அறைந்துகொண்டு ஒருசேரக்கூடித் தம்மூர் புகுவாராயினர்; அன்னதொரு பொழுதில் யாம் பலவாய மலர்களையுடைய நறிய சோலையிடத்தே நின் காதலியைப் பாராட்டிச் சேயிழாய்! யாம் முன்னே செல்லா நிற்போம் வாராய்! என்று கூறினேமாக; அங்ஙனம் கூறுதலும் மெல்லிய சாயலையுடைய அவள்; தன் நல்ல மார்பின்கண்ணே காணுந்தோறும் புதியனவாகத் தோன்றுகின்ற இளைய கொங்கைமுகடு நனையும்படி; மாட்சிமைப்பட்ட குளிர்ந்த கண்கள் தௌபிந்த நீர்கொண்டு வடியாநிற்ப; யாம் கூறியதற்கு எதிர்; சிலவாய மொழியுங் கூறினாளில்லை ஆதலின்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயாக!

முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 399. குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி 5
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ- தோழி!- நின் திரு நுதல் கவினே? 10

தோழீ! நின் சிறப்புடைய நெற்றியின் அழகானது; அருவியொலிக்கின்ற பெரிய மூங்கில் மிக்க சாரலில்; இரத்தம் போன்ற கமழ்கின்ற காந்தளம்பூ வரிகள் பொருந்திய அழகிய சிறகையுடைய வண்டுகள் உண்ணும்படி மலராநின்ற; அழகிய சிலம்பின் கண்ணே; பன்றி பறித்தலானே நிலத்திலே கிடந்து வெளியிற்போந்து விளங்கிய பலவாய மிக்க அழகிய மணிகளின் ஒளிவிடுகின்ற விளக்கத்திலே; கன்றையீன்ற இளைய பிடியானை தன்னைக் களிற்றியானை அயலிலே காத்துநிற்பத் தன் கன்றொடு வதியா நிற்கும்; கரிய மலை நாடன்; தானே விரும்பினனாகி வருகின்ற பெருமையுடையள் என்பதைத் தராநிற்குமன்றோ? அங்ஙனந் தருமாதலின் அதனை வேறுபடுத்துக் கொள்ளாது விரைய வரையுங்காண்;

நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, எம்பெருமான் இதற்காய நல்லது புரியும் என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டு மென்றாற்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

நற்றிணை - 400. மருதம்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, 5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. 10

?வாழையின் மெல்லிய தாற்றின் நுனியில் நாலும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற; நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில்; கதிரறுக்கும் மள்ளர் அறுத்துப் போகட்ட அரிச்சூட்டின் பக்கத்தில்; பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே!; நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின்; இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை!; ஆதலின் மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து; அறம் கெடவறியாது நின்று நிலைபெற்றாற் போன்று; நீதான் சிறந்த நட்புடனே அளாவி என்னெஞ்சினின்று நீங்குந் தன்மையைக் கற்றறிந்தா யல்லை! அதனால் நீ உளனாயிருப்பின் யான் உளனாவேன் காண்!;

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், நின் இன்று அமையாம் என்று சொன்னமையான் என்பது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 401. கடவுள் வாழ்த்து

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய 5
வேத முதல்வன் - என்ப-
தீது அற விளங்கிய திகிரியோனே.

பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; ஆகாயம் மெய்யாகவும்; திசை கைகளாகவும்; தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு.

பாரதம் பாடிய பெருந்தேவனார்.


Overview of Nattrinai

1. Author: The exact author of "Nattrinai" is not definitively known, but it is attributed to poets of the Sangam era.

2. Content:

- "Nattrinai" is composed of 60 poems, which describe various aspects of ancient Tamil life, including love, ethics, and the environment.
- The poems are characterized by their exploration of themes such as love, heroism, and the natural world.
- It uses classical Tamil poetic forms and meters, reflecting the social and cultural milieu of the time.

3. Themes:

- Nature and Landscape: The poems vividly depict the Tamil landscape, including forests, rivers, and mountains.
- Love and Relationships: The anthology explores different facets of human relationships and emotions.
- Social Life: Insights into the social norms, values, and traditions of ancient Tamil society are presented.

4. Significance:

- "Nattrinai" is valuable for its contribution to Tamil literature and its role in preserving the cultural heritage of the Sangam period.
- It offers a glimpse into the lives, beliefs, and artistic expressions of ancient Tamil people.

5. Language and Style:

- The work is written in classical Tamil, known for its rich poetic tradition and complex imagery.
- The style is reflective of the Sangam literary tradition, which emphasizes brevity, beauty, and emotional depth.

In summary, "Nattrinai" is a key literary work from the Sangam period of Tamil literature, providing important insights into the cultural and poetic traditions of ancient Tamil Nadu.



Share



Was this helpful?