இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


நான்மணிக் கடிகை

Naanmanikadikai is a Tamil literary work belonging to the Patinenkilkanakku anthology, a collection of eighteen works from the post-Sangam period. The title "Naanmanikadikai" translates to "The Four Gems" or "The Four Precious Gems," indicating the work's structure or thematic divisions.

நான்மணிக்கடிகை

விளம்பி நாகனார்

கடவுள் வாழ்த்து

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.

பழனம் - வயல்
பூவைப்பூ - காயாம்பூ
நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும். வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.


படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்
அருமை அழித்த மகன்.

படி - உலகம்
மடி - வயிறு
உலகத்தைத் தன் வயிற்றுக்குள் அடக்கியவனான திருமால் தன் திருவடிகளால் மூவுலகத்தையும் அளந்தான். பசுக்களின் குளிரைப் போக்குவதற்காகக் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தான். பாணாசுரனது நெருப்பு மதிலை அழித்து அநிருத்தனை மீட்டான்.

நூல்

எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து! 1

எள்ளற்க - இகழாதே
எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.


பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு. 2

உரவோர் - அறிவுடையோர்
அசுணமா - கேகயப் பறவைகள்
கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துபடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.


மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன். 3

மண்ணி - கழுவி
மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.


கள்ளி வயிற்றி இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி? 4

கள்ளி - சதுரக் கள்ளி
கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.


கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம்
பொருளில் பிறந்துவிடும். 5

கதிர் மணி - ஒளியுள்ள மணிகள்
ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும். காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும், மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும். இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்.


திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 6

கண்மாறல் - புறங்கூறல்
நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.


'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள்
செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்
காப்பார்க்கும் இல்லை, துயில். 7

கள்வம் - திருடுதல்
திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.


கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும். 8

கழிவு - இரக்கம்
இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்பைத் தீயவர்கள் அறிய முடியாது. கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.


நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான் செல் உலகத்து அறம். 9

நாணம் - வெட்கம்
நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்.


கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,
மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,
இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்! 10

கந்து - கட்டுத்தறி
கதம் - சீற்றம்
யானையைக் கட்டுத் தறியினாலும், பாம்பை மந்திரத்தாலும், கீழ்மக்களைக் கொடிய இரும்பு விலங்காலும் வயப்படுத்துவர். சான்றோரை இன் சொற்களால் தன்வயப்படுத்துவர்.


கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம் சிதைக்கும் வினை. 11

அடல் - ஒழித்தல்
ஆக்கம் - சிறப்பு
ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்.


பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,
முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், நோய். 12

ஊடுதல் - பிணங்குதல்
கோடு - கொம்பு
பாம்பு தன்னுடைய பல்லினால் பிறருக்குத் துன்பம் தரும். கொல்லும் தன்மை கொண்ட காளை தன்னுடைய கொம்புகளால் பிறருக்குத் துன்பத்தைத் தரும். பெண்கள் தங்களின் ஊடலால் ஆண்களைத் துன்பப்படுத்துவர். தவ வலிமை கொண்ட முனிவர்கள் பிறரைச் சபிப்பதால் துன்பத்தைக் கொடுப்பர்.


பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று. 13

நிறை - கற்பு
தீர்தல் - பிரிந்து வாழல்
பண் அமையாத யாழிசையை விட பேரோசை கொண்ட பறையே மேலானது. பெருந்தன்மை இல்லாத ஆண்மகனைவிட கற்புடன் திகழும் பெண்கள் உயர்வானவர். பதங்கெட்டு சுவையற்ற உணவை உண்ணுவதைவிட பசியுடன் இருத்தல் நல்லது. தன்னை விரும்பிய கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கொடுமையை விட தீயில் விழுந்து உயிர் விடுதல் நன்று.


வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து. 14

இன் சொல் - நயவுரை
கண் - கண்ணோட்டம்
செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.


இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து
மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு
செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது
வேண்டின், வெகுளி விடல்! 15

இசை - புகழ்
மன்னுதல் - பொருந்துதல்
ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.


கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்
கற்றான் கடந்துவிடும். 16

கலவர் - மரக்கலமுடையார்
குட்டம் - ஆழம்
மரக்கலமுடையவர் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர். விரைந்து செல்லும் குதிரைப் படையை உடையவன் கடல் போன்று பகைவரது படையைப் பொருது உடைத்து விடுவான். தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் குற்றமில்லாத தவமென்னும் கடலை நீந்திச் செல்வான். தெளியக் கற்றவன் கற்றறிவுடையார் நிரம்பிய அவைக் கடலைக் கடந்து விடுவான்.


பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர். 17

இறுவாய் - முறிவு
நண்பர்கள் பொய் கூறும் இயல்பைப் பெறுவாராயின் அவர்களின் நட்புக் கெடும். மூப்பு தோன்றும் போது இளமை அழிந்துவிடும். மிகையான செயல்களைச் செய்யும் போது செல்வம் அழியும். வாழ்நாள் எல்லை கடந்ததும் உயிரும் அழியும்.


மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல். 18

ஆக்கம் - சிறப்பு
செவ்வியன் - கைதேர்ந்தவன்
நல்லியல்பு கொண்ட பெண்களால் குடும்பம் சிறப்படையும். படைப்பயிற்சி சிறப்பாகக் கொண்டவன் போரில் வெற்றியைப் பெறுவான் செங்கோல் அரசன் நாட்டை உயர்த்துவான். உறவினரை ஒதுக்கியவன் கேட்டினை அடைவான்.


பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும். 19

அதிர்தல் - நடுங்குதல்
கணவன் ஒழுக்கத்தில் கலங்கினால் அவன் மனைவி தன் கடமையில் கலங்குவாள். கற்ற புலவன் அறிவு கலங்கினால் அவனது கருத்துக்களும் கலங்கும். குடிமக்கள் நிலை கலங்கினால் மன்னனது ஆட்சி நடுங்கும். பண் அதிர்ந்தால் பாடலும் அதிர்ந்து விடும்.


மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ், நட்டோரை இன்மை; இருந்த
அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,
கற்று அறிவு இல்லா உடம்பு. 20

அவை - சபை
மனைவி இல்லாத வீடு பாழ். சார்ந்தொழுகும் நண்பர்கள் இல்லையெனில் தன் நிலை துன்பமாகும். கல்வி, கேள்விகளில் சிறந்த ஆன்றோரில்லாத அவை பாழானது. கற்றறிவில்லாத உடம்பு பாழானது.


மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின். 21

மொய் - வலிமை
ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.


புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு. 22

இகழ்ந்து - முறை கடந்து
பேணாமை - மதியாமை
பொய்யாமை புகழை ஏற்படுத்தும், அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும், கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும்.


மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல். 23

அலைத்தல் - அடித்து வருத்தல்
குழவி - குழந்தை
பாகன் தன்னைப் பொருதாலும் யானை அவனைச் சுமந்து செல்லும். தாய் தன்னை அடித்தாலும் குழந்தை அன்னையை நாடிச் செல்லும். தவறு கண்டு நண்பர் கடிந்துரைத்தாலும் நண்பர் நடுங்கும்படியான செயலைச் செய்யமாட்டார். ஆனால் பகைவரோ எப்போதும் ஒன்று பொருந்தி வாழ்வதில்லை.


நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும். 24

நட்டார் - பகைவர்
உள்ளப்படும் - மதிக்கப்படும்
முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும். அவைகளின் நன்மை அன்பினால் தோன்றும். விரைந்த செலவையுடைய தேரின் நன்மை அதைச் செலுத்தும் பாகனாற் பெருமை பெறும். ஊரின் நன்மை அரசனது நற்செயல்களால் மதிக்கப்படும்.


அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த
எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்
கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,
நட்டார்கண் விட்ட வினை! 25

கோடி - கொள்ளுவாம்
அஞ்சத் தகுந்த செயலைச் செய்ய அச்சப்பட வேண்டும். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கோடி பொருள் கொடுத்தாலும் மனமறிய நடுவு நிலைமையில் இருந்து மாறுபடக் கூடாது. நண்பர்களின் பொறுப்பில் விட்ட காரியங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது.


கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்
பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்
விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. 26

விளி - சாவு
குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.


கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 27

அஃதுதல் - சுருங்குதல்
இசை - புகழ்
ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.


குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்
செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு. 28

பல்லோர் - சான்றோர்
பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்த போது கற்றறிவு துணை நிற்கும்.


திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். 29

இன்னாதது - இன்பம் தருவது
செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.


புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த
நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்
இன்னா வித்து ஆகிவிடும். 30

அழல் - நெருப்பு
புகையின் காரணமாக (ஏது) நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மன மகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களால் பகைமை வெளிப்படும். பகைமையை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.


பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும்
புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர்,
வல்லென்ற நெஞ்சத்தவர். 31

பிணி - நோய்
அடுத்து வருவதையுணர்ந்து நடந்து கொள்ளாத பெண்டிர் நோய்க்கு ஒப்பாவர். அன்புடைய மக்கள் அணிகலனுக்கு நிகராவர். சிற்றறிவுடைய ஆடவர் புல்லுக்கு நேராவர். வன்மையான நெஞ்சம் உடையவர் கல்லுக்கு இணையாவர்.


அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும்,
தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,
இளமையோடு ஒப்பதூஉம் இல். 32

வனப்பு - அழகு
அருள் குணம் கொண்ட அந்தணரைப் போன்ற உயர்பிறப்பு இல்லை. தாயை விடச் சிறந்த உறவு வேறு இல்லை. செல்வ வளத்துடன் கூடிய வாழ்க்கைக்கு ஒப்பான அழகு வேறு இல்லை. இளமையைப் போன்று இன்பமானதும் வேறு இல்லை.


இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின்
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின்,
அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய
பெரியரான் எய்தப்படும். 33

பூசுதல் - கழுவுதல்
இரும்புக் கருவிகளைக் கொண்டே இரும்பை வெட்டுவர். பாயசம் முதலான சிறந்த நீருணவுகளை உண்டோர் நீரினாலேயே வாயைக் கழுவுவர். அரிய செயல்களை அரிய முயற்சியினாலேயே செய்து முடிப்பர். பெறற்கரிய பெரிய பேறுகளையும் பெரியோரே அடைவர்.


மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி
ஊரில் பிளிற்றிவிடும். 34

பிளிற்றுதல் - ஆரவாரித்தல்
அரசனுக்கு முன்னால் போரிடும் போது வீரர்களுக்கு வீரக்களிப்பு (மகிழ்ச்சி) உண்டாகும். வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம். ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு. கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து ஆரவாரம் செய்தலேயாகும்.


மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள்,
நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய
முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம், மேல். 35

பெய்யல் - மேகம்
குவளை மலர் போன்ற கண்கள் மையிடுதலால் விளங்கும். விளக்கு நெய்விடுதலால் நிமிர்ந்தெரியும். குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும். சான்றோர் பிறருக்குக் கொடுப்பதால் தளிர்ப்பர்.


நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின்
தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய
பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது
பாடல் உணர்வாரகத்து. 36

நட்டார் - நண்பர்
நண்பரிடத்தில் முகமலர்ச்சி தளும்பும். வறிஞர்களுக்கு (ஏழை) வழங்குவதால் செல்வக்குவியல் இன்பம் தரும். கணவனின் கருத்திற்கு ஏற்ப செயல்படுவதால் பெண்கள் இனியராவர். பாடலுணர்வாரிடத்துப் பண் இனிமை தரும்.


கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்
செய்யாமை, செல்சார் உயிர்க்கு. 37

கரப்பவர் - மறைப்பவர்
இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பவர்களைக் கண்டால் முகம் கவிழ்வார். இரப்பவர்களுக்கு ஈகைக் குணம் உடையவரே பற்றுக் கோடாவர். பரபரப்புள்ள சேனைகளுக்கு வீரமே ஒரு பற்றுக்கோடு. ஊன் உண்ணாமல் இருத்தல் அருளொழுக்கத்தோடிருக்கும் உயிர்களுக்குப் பற்றுக்கோடாகும்.


கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக்
கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட
இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார்
முன்னியவே செய்யும், திரு. 38

முனியாதார் - கோபப்படாதவர்
கம்மாளர் தாம் கண்ணால் கண்ட பொருள்களைப் போன்றே அணி செய்வர். அறிஞர் கல்வி கேள்விகளால் தெளிந்தவற்றையே செய்வர். சான்றோர் பிறர் விரும்புவதில் இனிமையானவற்றையே செய்வர். எளியவர்களையும் சினவாத பெரியோர்கள் கருதியவற்றைத் திருமகள் முடித்து வைப்பாள்.


திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக்
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற
மறைக்க மறையாதாம், காமம்; முறையும்
இறை வகையான் நின்றுவிடும். 39

திணை - குடிப்பிறப்பு
குடிவகைக்கு ஏற்ப செல்வம் நில்லாது. கூற்றுவான் (நமன்) தான் உண்ணப்படுகின்றவன் சொல்பவற்றைக் கேட்கமாட்டான். மறைத்தாலும் காமம் மறையாது. அரசனது போக்கிற்கு ஏற்ப ஆட்சி முறை அமையும்.


பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால்,
'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும். நல்லாள்
உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,
கண்டனவும் காணா கெடும். 40

பேர்தல் - தவிர்த்தல்
உயிர்கள் பிறக்கும் போது உடலை நீங்குக என்றால் நீங்காது. இறக்கும் போது உயிரை நில் என்றாலும் நிற்காது. திருமகள் அருள் கூடும் போது செல்வம் பெருகும். திருமகள் நம்மை விட்டு நீங்கும்போது செல்வம் தானே நீங்கிவிடும்.


போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த
வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்
மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்
மன்னர் சீர் வாடிவிடும். 41

பொருநர் - சண்டை வீரர்
போரில்லாவிடின் வீரர் சிறப்புக் கெடும். வேரற்றுவிடின் மரங்கள் பட்டுப் போகும். நீரற்றுவிடின் நெய்தல் உலரும். படை இல்லாவிடின் வேந்தனது புகழ் அழியும்.


ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை. 42

உவாத்தி - ஆசிரியர்
ஒருவனுக்கு, நல்லியல்பு இல்லாதவர்கள் அயலார். பிறரைப் பாதுகாக்கும் நல்லியல்புடையோர் அன்பர். மேலான தந்தை எனப்படுபவன் ஆசிரியன். தாயெனப் படுபவள் முன் செய்த நல்வினையாகும்.


பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட
ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா
நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,
நண்பினார் நண்பு கெடும். 43

பொறி - திருமகள்
பைங்கூழ் - பசுமையான பயிர்
ஒருவனுக்கு நாணம் நீங்கினால் செல்வம் கெடும். ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் தீவினை கெடும். நீரற்றால் பசும்பயிர்களின் விளைவு கெடும். நண்பனின் நல்லியல்பு மாறினால் நட்புக் கெடும்.


நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்
பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து. 44

சாம் - ஊடுதல்
பிறர் செய்யும் நன்மையை அறியார் மாட்டுச் செய்ந்நன்றி கெடும். அன்பில்லாதவரிடத்துச் செல்லும் விருந்தினர் வாடுவர். இசையளியார் மாட்டு அரிய இசைப் பொருத்தங்களுடன் பாடும் பாட்டுப் பயனின்றிப் போகும். புலவியுணரார் மாட்டுப் புலத்தல் கெடும்.


நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்
முகம் போல முன் உரைப்பது இல். 45

நாற்றம் - வாசனை
மலரிருக்கும் இடத்தை அதன் மணம் உணர்த்தும். ஒருவன் செயல்திறனை அவனது சொற்கள் உணர்த்திவிடும். ஆராய்ந்து பார்த்தால் மனதில் பொதிந்த தீமையை அவன் மனம் அறிவிக்கும் முன்பே முகம் அறிவிப்பது போல் வேறு எதுவும் அறிவிக்காது.


மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல் வாழ்வார் இல்வழி இல். 46

இல்வழி - இருப்பிடம்
மழையில்லா விட்டால் உலக மக்கட்கு நலமில்லை. அம் மழையும் தவமுடையவரில்லாதவிடத்துப் பெய்தலில்லை. அத்தவம் செய்தலும், முறையான அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை. அவ்வரசனும் குடிகளில்லாத இடத்தில் இருப்பதில்லை.


போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன்
தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல்
வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம்
நனையினான் நந்தும், நறா. 47

தண்தார் - குளிர் பூமாலை
சுரும்பு - வண்டு
மாலை பூவினால் விளங்கும். வண்டுகள் அப்பூவில் உள்ள தேனாற் பொலியும். நற்செயல்களால் மக்கள் பொலிவர். தேன் தாமிருக்கும் மலர் வகைக்கு ஏற்பப் பெருகி இனிக்கச் செய்யும்.


சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று
'இல்' என்றல் யார்க்கும் அரிது. 48

செறுதல் - சினத்தல்
சிறந்த நண்பர் தம்முள் ஒருவரையொருவர் சினந்து கொள்ளமாட்டார்கள். உயர் குடிப்பிறப்பினர் தன் இனத்தாரை நீங்கி வாழமாட்டார்கள். தமக்கே செலவு செய்து தன்னலம் கருதி வாழ்வோர் பிறர்க்குப் பகுத்துண்டு வாழும் பண்பறிய மாட்டார்கள். அருளுடையவர்கள் இரந்தவர்களுக்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.


இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்;
உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா
முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,
தன் அடைத்த சேனை சுடும். 49

ஒண்மை - அறிவு இன்மை
வரை - எல்லை
பிணியுள்ள (நோய்) உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும். அறிவில்லாரை அவர் வாய்ச் சொல்லே வருத்தும். முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும். நீதி வழியில் நடத்தப்படாத சேனைகள் அரசனையே கொல்வர்.


எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை
உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து
சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும்
தேர்தற்பொருள, பொருள். 50

உள் - உள்ளம்
பிறரை இகழுதல் என்பது இகழக்கூடிய செயலாகும். ஒருவனது உறுதியான சொல்லைக் கொண்டு அவனை நண்பனாகத் தேர்ந்தெடுக்கலாம். உண்மையறிந்து அறவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பல நூல்களையும் ஆராய்ந்து தேடுதற்குரிய பொருள்கள் மெய்ப் பொருள்களாம்.


யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்
மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்
வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள. 51

வீறு - சிறப்பு
ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன. வேதக் கருத்துக்களையுடைய பழைய தனிப் பாட்டுகளும் உள்ளன. வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.


எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,
ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி. 52

வேளாளன் - உழவன்
உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.


யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்
கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை
அல்லார் உவப்பது கேடு. 53

கதம் - சீற்றம்
யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள். அரசர்கள் விரைந்து செல்லும் குதிரையை விரும்புவார்கள். நல்லியல்புடைய ஆடவர்கள் நன்மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள். தீய ஆடவர்கள் தீய பெண்களின் தீதையே விரும்புவர்.


கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
என்ன கடவுளும் இல். 54

துன்னுதல் - நெருங்குதல்
ஒருவனுக்குக் கண்ணைப் போலச் சிறந்த உறுப்பில்லை. குலமகளுக்குக் கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவுமில்லை.


கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்
செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென
உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்
புற்ற அன்னர், புல்லறிவினார். 55

காதலர் - அன்பானவர்
கல்வியறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள், கல்வியறிவுடையவர்களுக்கு ஒப்பாவர். கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவர்கள் இடர் செய்வாருக்கு ஒப்பாவர். உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவர். சிற்றறிவுடையோர் பாம்புப் புற்றுக்கு ஒப்பாவர்.


மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;
துறப்பார், துறக்கத்தவர். 56

துறக்கம் - வீட்டுலகம்
அறிவாற் சிறந்தவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வர். அறிவிற்குறைந்தவர்கள் தீவினையே செய்வர். உயர்ந்த குடியில் பிறந்தோர் இருமையிலும் (இம்மை, மறுமை) அறத்தையே விரும்பிச் செய்வர். பற்றற்றத் துறவிகள் வீட்டின்பத்தையே (சொர்க்கம்) விரும்புவர்.


என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;
என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர். 57

இரு சுடர் - சூரியன், சந்திரன்
விண்மீன்களும், சந்திரனும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும், ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.


இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன். 58

முனிதக்கான் - வெறுக்கத்தக்கவன்
ஓருயிரையும் கொல்லாமல் காய்கறி உணவுகளை உண்பவன் இனிதாக உண்பவனாவான்; முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்; பிறர்க்கு உதவி செய்யாதவன் துணையில்லாதவன் ஆவான். எவராலும் வெறுக்கத்தகாத இயல்பை உடையவன் இனியவன் ஆவான்.


ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,
பாடு அறியாதானை இரவு. 59

இசை - புகழ்
காங்கி - பேராசைக்காரன்
பிறருக்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான். பிறருக்குக் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் பேராசைமிக்கவனாவான். தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கு இடமாகும்.


நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து
கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி
நன்று ஊட்ட, நந்தும், விருந்து. 60

விதிர்த்தல் - சிந்துதல்
யாகத்தில் நெய்யைச் சொரிய நெருப்பு வளர்ந்து எரியும். வணங்கினால் தேவர் நன்மை தருவர். கன்றுகளை உண்பிக்க பசுவிற்குப் பால் பெருகும். இனிமையாய் விருந்தளித்தால் விருந்தினர் மகிழ்வர்.


பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்
நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,
போற்றாதார் போற்றப்படும். 61

கெழி - நட்புரிமை
ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினால் பழிப்பிற்கு ஆளாவதில்லை. நட்பியல்பு உடையவனுக்குப் பொருள் கேடு ஏற்படாது. பொருள் வரவு அதிகரிக்க அவனுக்கு உயர்வு உண்டாகும். தான் பிறரால் போற்றப்படுவதால் அவன் பகைவராலும் வணங்கப்படும் தன்மையைப் பெறுவான்.


கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,
நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள. 62

காண்புழி - ஆராயுமிடத்து
கண்களிற்குள்ளும் விரும்பப்படும் கண்களும் உள்ளன. அழகில்லாத பெண்களுள்ளும் மாட்சிமைப்பட்ட நற்குணம் கொண்ட பெண்களும் இருக்கின்றனர். நாட்டினுள்ளும் ஒரு பகுதியில் வளமான ஊர்களும் உள்ளன. பாட்டுகளுள்ளும் சிறப்பான பாட்டுகள் உள்ளன.


திரி அழல் காணின், தொழுப; விறகின்
எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்
இளமை பாராட்டும், உலகு. 63

கற்றான் - படித்தான்
விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.


கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்
துன்புறுவாள் ஆகின், கெடும். 64

காமுற்றது - விரும்பிய சொல்
செல்வமுடையாருக்கு அவன் விரும்பிய பொருள் கிடைக்கும். நீருண்டானால் விதைகள் முளை கிளம்பும். திருமகள் கூடினால் செல்வம் பெருகும். அவள் நீங்கினால் செல்வம் அழியும்.


ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்
புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்
அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்
வரிசையான் இன்புறூஉம், மேல். 65

உழுவை - புலி
காலேயம் - பசுக்கூட்டம்
புலி ஊன் உண்டு இன்புறும். பசு புல்லுண்டு இன்புறும். கீழோர் சோறுண்டு இன்புறுவர். மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர்.


பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்
முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்
அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,
அவா இல்லார் செய்யும் வினை. 66

அதிர்க்கும் - நடுங்கச் செய்யும்
ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும். ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும். ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்குப் பொருளின் மீது மேலும் மேலும் அவா உண்டாகும். பற்றில்லாதவர்கள் செய்யும் அறச் செயல் ஒரு போதும் கெடாது.


கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து
வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்
நல்லர் சிதையாதவர். 67

பைத்தல் - சிதைத்தல்
செல்வமிருந்தும் அச் செல்வத்தால் பயனடையாதவர்களை விட செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள். செல்வத்தைச் சேர்த்துவைத்து இழப்பவரை விட வறியவர் மிக நல்லவர். சினந்து வைபவர்களை விட அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர். பிறருக்கு உதவியவரை விட செய்ந்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.


மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு
வானம் உரைத்துவிடும். 68

முகன் - புதல்வன்
தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவனது மனவிருப்பத்தை அவனது முகக்குறிப்பே அறிவித்துவிடும். வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்துவிடுவான். நிலத்துமக்கள் இயல்பை அந்நிலத்தில் பெய்யும் மழையின் நிலை அறிவித்துவிடும்.


பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்
மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும், குடி. 69

நுதி - கூர்மை
வீறு - சிறப்பு
பலரும் நிறைந்து ஒன்றுபட்டு வாழ்வாரானால் ஊர் நன்றாகும். ஐயந்திரிபறக் கற்பவனால் அவன் அறிவு நன்றாகும். ஆனிரைகள் (பசுக்கள்) கூர்மையான கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருத்தலால் சிறப்படையும். ஏழைகளுக்கு உணவளிப்பதால் ஒருவனது குடி மேலோங்கும்.


ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட
குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்
வளத்த அனைய, வாழ்வார் வழக்கு. 70

கலினம் - கடிவாளம்
தூம்பு - நீர்க்கால்
குதிரைகள் சவாரி செய்வானது திறத்துக்கு ஒத்தன. ஒருவனுடைய அறச்செயல்கள் அவனது ஆற்றலுக்கு ஏற்ப அமைவன. குளத்தின் அளவிற்கு ஏற்ப நீர்க்கால்கள் அமையும். அவரவர் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.


ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார். 71

வெட்கென்றார் - அறிவில்லார்
ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டு கழிந்தன. யாமம் நாழிகையால் வரையறுக்கப்பட்டு கழிந்தது. அறிஞர்கள் அறிந்தவர்களிடம் காலம் தாழாமல் ஐயம் திரிபறக் கேட்டுத் தெளிந்தனர். அறிவிலாதார் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்கின்றனர்.


கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்
பொய்யா வித்து ஆகிவிடும். 72

பேதையான் - அறிவில்லாதவன்
கல்வியறிவு உடையவன் தனக்குத் தளர்ச்சி ஏற்பட்டாலும் மேலும் முயன்று உயர்வான். கல்வியறிவு அற்றவன் தனக்கு ஏற்பட்டத் தளர்விலிருந்து மீளும் வழியறிய மாட்டான். யாருக்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாகும். மெய்யுணர்வே வீடு பேற்றிற்கு வழி வகுக்கும்.


தேவர் அனையர், புலவரும்; தேவர்
தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்,
கற்றாரைக் காதலவர். 73

அனையர் - போன்றவர்கள்
கல்வியறிவுடைய புலவர்களுக்கு தேவர்கள் ஒப்பாவர்; அப்புலவர் வாழும் ஊரில் வாழ்வோர் அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவர்; அவ்வுறவினருள்ளும் அவர் அருள் பெற்றோர் பெற்றோரை ஒப்பாவர்; அப்புலவரை விரும்புவோர் அவரையே ஒப்பர்.


தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,
'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார்,
'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,
'தா' எனின், தாயம் வகுத்து! 74

நல்லார் - பெரியார்
பொய் பிறந்தபோதே நட்புக் கெடும். மருத்துவன் சொல் என்ற போதே பிணியாளன் நோய் சொல்வான். பெரியோர் ஒரு செயலை விடு என்ற போழ்தே அதை அறவே விட்டுவிட வேண்டும். பொருளுக்குரியவன் தருக என்ற போழ்தே அவன் பங்கை வகுத்துத் தந்துவிட வேண்டும்.


நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து,
எண்ணினான் எண்ணப்படும். 75

அணி - அழகு
சுவைக்கு இனியதை நாவினாற் சுவைத்து அறிவர். மலரின் மணத்தை மூக்கினால் முகர்ந்து அறிவர். அழகிய பொருள்களைக் கண்களாற் கண்டு அறிவர். உணரக் கூடிய கருத்துக்களைப் புலவர்கள் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தறிவர்.


சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;
தாவாத இல்லை, வலிகளும்; மூவா
இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல். 76

தாவுதல் - கெடுதல்
பிறந்த உயிர்கள் எல்லாம் இறவாதன இல்லை. கெடாத வலிமைகளும் இல்லை. மூவாத இளமைகளும் இல்லை. குறையாத செல்வங்களும் இல்லை.


சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற
நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்
மகிழான் அறிப, நறா. 77

நறா - கட்குடியை
ஒருவனுடைய நன்மை தீமைகளை அவன் கூறுஞ் சொற்களாலேயே அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். மடுவின் மண் தன்மையை மென்மையான நீரால் அறிவர். பெருந்தன்மையை யார் மாட்டும் ஒப்ப நடக்கும் நடுநிலைமையால் அறிவர். கள் குடித்ததை அவனது உடம்பில் ஏற்படும் மாற்றத்தால் அறிவர்.


நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,
மாறு உள் நிறுக்கும் துணிபு? 78

தேற்றம் - தெளிவு
பதறிய நாக்கினால் நட்புக் கெடும். கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்களின் நற்செயல்கள் கெடும். நூல்களைப் பயில்வதால் மாணாக்கருக்கு அவாக்கெடும். பகைமைக் கண் ஒருவன் வைக்கும் தீராத பகைமையால் அவனே கெடுவான்.


கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,
உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,
கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,
வெகுளி கெடுத்துவிடல். 79

அசனம் - சோறு
இடையீடு - பற்று
ஒருவன் கொடுப்பதானால் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஒன்றை விடுவதானால் பற்றை விட வேண்டும். ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதானால் சுற்றத்தாருள் ஏழையாக உள்ளவரை மேல் உயர்த்த வேண்டும். கெடுப்பதானால் கோபத்தைக் கெடுக்க வேண்டும்.


நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;
வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு. 80

நல்குரவு - வறுமை
பகுடு - எருது
அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்துயர்வும், குலத்தொழுக்கமும் கல்லாமையால் கெடும். நீர் வருவாயற்ற ஏரியின் கீழ் விளையும் நெற்பயிர் கருகிப் போகும். சுமக்க முடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் இறக்கும்.


நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ் ஊரும் ஊர். 81

கைத்து - தமது கையால்
கற்றார்க்கு எவ்வூரும் தம்மூர்; தவத்தோருக்கும் எவ்வூரும் தம்மூர்; கீழ்மக்கட்கும் எவ்வூரும் தம்மூர்; தம் கையிற் பொருளுடையாருக்கும் எவ்வூரும் தம்மூர்.


கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். 82

கூற்றம் - எமன்
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு கணவனறியாது கற்புக்கேடாக ஒழுகுபவள் கணவனுக்குக் கூற்றுவனாவாள்.


நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும். 83

பாடு - பெருமை
விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும். துறைமுகப் பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமையடையும். மன்னர் தாம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர். கூத்து வல்லவனால் நாடகம் சிறப்படையும்.


ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்
அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,
கேளிர் ஒரீஇவிடல். 84

கேளீர் - சுற்றத்தார்
ஒரீஇவிடல் - நீக்கி விடல்
கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நல்ல செயல் ஆகும். அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருத்தலே அந்தணருள்ளத்திற்குச் சிறப்பு செயல் ஆகும். பிறர் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னருக்கு உரிய செயலாகும். சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டிற்கு முயலுதலாகும்.


கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை. 85

சிறியாரோடு - சிற்றினத்தாரோடு
கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாவதால் என்றும் திருடாமை வேண்டும். ஒழுக்கம் தவறாமை வேண்டும். சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும். பகைமை பாராட்டாமை வேண்டும்.


பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம். 86

அருக்குதல் - சுருங்குதல்
நண்பனை நன்மையின் பாற் செலுத்தி நல்வாழ்வில் உயர்த்துக; பகைவரைக் காலமறிந்து தாக்கி வெற்றிக் கொள்க; யாராயினும் அடுத்தடுத்து உண்ணுவதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். செல்லத் தகாத இடத்தில் சினத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.


மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும், களிறு. 87

மடிமை - முயற்சியின்மை
கெடுவானிடத்தில் சோம்பல் இருக்கும். சான்றோர் விரும்பாதவற்றைச் செய்பவர் தீமையை அடைவர். நல்லியல்புடைய மகளிர் 'நாணம்' என்னும் எல்லையில் நிற்பர். யானை தூண் வலுவில் நிலை பெறும்.


மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண். 88

வென்றி - வெற்றி
அணங்கு - தெய்வம்
அந்தணர்கள் மறை அறிவர். அரசர் முறையும், வெற்றியும் அறிவர். சான்றோர்க்கு அணிகலம், வணக்கமுடையவராய் இருத்தல். பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வம் தொழார்.


பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,
பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,
சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,
கொன்றான்மேல் நிற்கும், கொலை. 89

பட்டாங்கு - இயல்பு
பிணை - காதல்
நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டொழுகுவாள். அன்பில்லாதவள் (மனம் பொருந்தாதவள்) கணவன் காவல் செய்யினும் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித்து ஒழுகுவாள். காமவியல்புகள் எவ்வளவு இடையூறு ஏற்படினும் முன் நிகழ்ந்தவாறே நடக்கும். கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.


வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற
மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்
கயம் பெருகின், பாவம் பெரிது. 90

கயம் - கீழ்மை
அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும். மனையாள் மாட்டுக் கருணை மிகுந்தால் இனம் பெருகும். அருள் மிகுந்தால் அறம் மிகும். கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.


இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;
வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,
தமர் அல்லார் கையகத்து ஊண். 91

தமர் - சுற்றத்தார்
இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம். செல்வ வளம் இல்லாதபோழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போழ்து பிறரைச் சினத்தல் குற்றம். உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.


எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்
கல்லா வளரவிடல் தீது; நல்லார்
நலம் தீது, நாண் அற்று நிற்பின்; குலம் தீது,
கொள்கை அழிந்தக்கடை. 92

நாண் - நாணம்
எவ்வகையாலும் கொலை செய்தல் தீதாகும். குழந்தைகளைப் படிக்காமல் வளர்ப்பது தீதாகும். நாண் இல்லாத மகளிரின் அழகு தீதாகும். கொள்கை அழிந்து விட்டால் குலம் தீதாகும்.


ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல். 93

ஆசாரம் - நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன். அறம் செய்து செல்வத்தை நுகர்தல் செல்வத்தின் பயன் ஆகும். யாரிடத்தும் பாரபட்சம் பாராமல் நடுவு நிலைமையோடு நிற்றல் அரசாளும் முறையாகும். பிறரோடு கலந்து ஆராய்ந்து அரசாள்பவன் தனக்குத் தானே ஆராய்ந்து செயல்படுவான்.


கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை
பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை
கள்வன் அறிந்துவிடும். 94

இடும்பை - துன்பம்
ஓங்கல் - வானம்பாடிப்புள்
கள் பெறாமையால் உண்டாகும் துன்பத்தைக் கள் குடியன் அறிவான். நீர் பெறாமையால் உண்டாகும் துன்பத்தை வானம் பாடிப் பறவை அறியும். வறுமைத் துன்பத்தை (பொருள் இல்லாததால்) பல மனைவியரைப் பெற்றவன் அறிவான். ஒன்றை ஒளித்து வைப்பதில் உள்ள துன்பத்தைத் திருடன் அறிவான்.


வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்
சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். 95

வடுச்சொல் - பழமொழி
அன்பில்லாதவர் வாயில் பழிச் சொற்கள் தோன்றும். கற்றவர்கள் வாயில் வஞ்சனையான சொற்கள் தோன்றாது. சான்றோர்கள் வாயில் தீய சொற்கள் தோன்றாது. கீழ்மக்கள் வாயில் மறைக்கின்ற சொற்கள் வெளிப்படும்.


வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின். 96

இழை - நகை
பாடு - பெருமை
அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை. கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை. அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை.


மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும். 97

மாசு - அழுக்கு
அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.


எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை. 98

கழறல் - இடித்துரைத்தல்
சான்றோர்களைப் பிரியாமை அறிவுடைமையாகும். தம்மைப் போற்றி இணங்காதவரோடு வாழ்தல் புண்ணுக்கு நிகராகும். நண்பர்கள் இடித்துரைக்கும் சொல் வலியதாயினும் யாழோசைப்போல இனிமையுடையதாகும். மனைவி இல்லாத வீடு பாழ் மனையாகும்.


ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை. 99

வாரி - வருமானம்
உரன் - வலிமை
ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள். முன் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும். வலிமை குறைந்தால் பகைவர் வென்றிடுவர்.


அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம். 100

ஆக்கல் - வளர்த்தல்
ஊன் - இறைச்சி
பிற உயிரை அழிப்பதற்காக வளர்த்தலும் குற்றம். விலை கொடுத்து பிற உயிரை வாங்கி அதன் ஊனை உண்ணுதல் குற்றம். சொல்லத் தகாத சொற்களைப் பேசுவதும் குற்றம். கொலை புரிதலும் குற்றமேயாகும்.


மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு. 101

மடவாள் - மனைவி
வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

மிகைப்பாடல்கள்

வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 1

வசை - தூது
பிறரை வைதால் பகை உண்டாகும். வணங்கினால் உறவினர் மிகுவர். பொருளைக் கொடுத்தலால் இன்பம் உண்டாகும். இரக்கத்தினால் அருள் உண்டாகும்.


ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல். 2

கணன் - சிறுமை
எல்லாக் கலைகளையும் அறிந்தவன் ஒருவனும் இல்லை. எதனையும் தெரியாதவனும் இல்லை. நல்ல பண்பு இல்லாத குற்றமே உடையவன் ஒருவனும் இல்லை. எல்லாம் கற்றவனும் இல்லை.


இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். 3

கிழமை - உடமை - சொத்து
இன்சொல்லால் நட்பு உண்டாகும். கடுஞ்சொல்லால் கெடு நினைவு உண்டாகும். நயமான சொல்லால் அருள் நெஞ்சம் உண்டாகும். அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.


முனியார், அரிய முயல்வார்; அவரின்
முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார். 4

முனிதல் - கோபப்படுதல்
காமுறுவார் - ஆசைப்படுபவர்
கோபம் இல்லாதவர், உண்மைப் பொருளை அறிய முயல்பவர், அறத்தினை விரும்புவர், புகழ் வேண்டுபவர், பிறரிடம் இரந்து வாழாதவர், அன்பிற்கு கட்டுப்படுபவர் அறிவுடையவர் ஆவார்.


Overview of Naanmanikadikai

1. Title Meaning:

- Naanmanikadikai is derived from "Naan" (meaning "four" in Tamil) and "manikadikai" (meaning "gems" or "precious gems"), suggesting the work is composed of four sections or themes considered precious or valuable.

2. Structure:

- Content: The work consists of quatrains (four-line verses) that encapsulate moral, ethical, and philosophical teachings. It is structured around four main themes or topics, each considered a "gem" of wisdom.
- Themes: The themes often focus on practical wisdom, ethical living, virtues, and the transient nature of life.

3. Themes and Content:

- Ethics and Morality: The verses emphasize the importance of living an ethical life, highlighting virtues such as honesty, integrity, and compassion.
- Philosophical Insights: Naanmanikadikai reflects on the impermanence of life, the value of humility, and the importance of self-control and moderation.
- Practical Guidance: The text provides practical advice on daily conduct, relationships, and personal growth, encouraging readers to lead a balanced and virtuous life.

4. Poetic and Literary Style:

- Quatrains: The use of quatrains allows for concise expression of complex ideas, often using metaphor and allegory to convey deeper meanings.
- Didactic Tone: The work has a didactic tone, aimed at instructing and guiding readers toward a moral and philosophical understanding of life.

5. Cultural and Historical Context:

- Patinenkilkanakku Anthology: Naanmanikadikai is part of the Patinenkilkanakku collection, which is known for its focus on ethical and moral teachings. This anthology is significant in the post-Sangam period Tamil literature.
- Historical Significance: The work reflects the values and philosophical thoughts of its time, providing insights into the cultural and social norms of the period.

6. Literary Significance:

- Enduring Wisdom: Naanmanikadikai is valued for its timeless wisdom and ethical teachings. It continues to be read and studied for its moral and philosophical insights.
- Influence on Tamil Literature: The work has contributed to the rich tradition of Tamil ethical literature, influencing subsequent literary and philosophical works in Tamil culture.

Naanmanikadikai is celebrated for its succinct and insightful teachings on ethics, morality, and practical wisdom. It remains an important work in Tamil literature, offering valuable guidance on leading a virtuous and reflective life.



Share



Was this helpful?