Digital Library
Home Books
Moorka Nayanar is one of the 63 revered Nayanmars, saints in Tamil Shaivism known for their deep devotion to Lord Shiva. His life story is particularly notable for its themes of transformation and redemption, showcasing how even a person with a troubled past can attain spiritual greatness through sincere devotion.
தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார். இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார்.
எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார்.
பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார். இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார்.
பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார். நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார்.
ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர். நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப்பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.
குருபூஜை: மூர்க்க நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |