இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மெய்ப்பொருள் நாயனார்

Meiporul Nayanar is one of the 63 Nayanmars, the revered saints in Tamil Shaivism, who are celebrated for their unwavering devotion to Lord Shiva. His life exemplifies loyalty, selflessness, and the spirit of forgiveness, making him a significant figure in Shaivite tradition.


திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நடு நாட்டிற்குச் சேதி நாடு என்றும் மற்றொரு பெயர் உண்டு. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்ற இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது.

இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து நிற்போரும், அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் சுற்றமும் பெற்ற இம்மரபில் தான் மெய்ப்பொருள் நாயனார் தோன்றினார். அம்மன்னர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றார். இவர் திருக்கோவிலுரைத் தமது ராஜதானியாகக் கொண்டு அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்தார். மெய்ப்பொருளார் அரசியல் நெறி பிறழா அரும்காவலன்.

மக்களுக்காக, நன்னெறியில் வாழ்ந்து காட்டும் குடிமன்னன்! வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட அஞ்சாநெஞ்சன். இம்மன்னன் அடியார்களை அல்லும் பகலும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வன் ! ஞானத்தவக் கொழுந்து. இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் தோற்றப் பொலிவு, கல் மேல் எழுத்துப் போல் நிலைத்திருந்தது. மன்னவரின் செல்வக் குவியல் கோவில் திருப்பணிக்கும் பயன்பட்டு வந்தது ! இவ்வாறு பண்போடும் பக்தியோடும் வாழ்ந்து வரும் புரவலனுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது ! இம்மன்னனின் பகை அரசனான முத்தநாதன், பன்முறை போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓடியவன் ! இவன் சூழ்ச்சியால் மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான்.

முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை விதிமுறைகளோடு, எந்தெந்த அங்கங்களில் எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்பதை அறியாத அந்நாத்திகன், திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான்.

மன்னவனைப் போலவே, பக்தி மிகுந்த குடிமக்கள், இக் கபட வேடதாரியை, உண்மையான சைவ சன்மார்க்கத் தவசி என்று எண்ணிக் கைகூப்பி வணங்கினர். காண்போர் அனைவரும் உள்ளெழுந்தருள்க என்று வாழ்த்தி வழி காட்டியதால், தங்குதடை ஏதுமின்றி முத்தநாதன் மன்னரின் மாளிகையை அடைந்தான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தான்.

முத்தநாதன், மன்னனை உடனே பார்க்க வேண்டும் ! என்ற எண்ணம் முகத்திலே பிரதிபலிக்க, தத்தனை ஏற இறங்கப் பார்த்தான், குறிப்பால் அப்பொருளை உணர்ந்த தத்தன், முத்தநாதனை நோக்கி, என் தலைவர் அகத்தே துயில்கின்றார். காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளுதல் வேண்டும் என்றான். தத்தன் வார்த்தைகளை அம்மூடன் செவிமடுப்பதாக இல்லை.

அவன் தடையையும் மீறி மன்னவர்க்குத் தருமத்தை அருளிப் போகவே இங்கு எழுந்தருளியுள்ளோம் என்று கூறியவாறே கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான். மலர் மஞ்சத்திலே மன்னவன் அருகே அமர்ந்திருந்த அரசியார், சப்தம் கேட்டுத் திரும்பி, சிவனடியார் ஒருவர் வருகிறாரே என்று அஞ்சியவராய், சட்டென்று மஞ்சத்தினின்றும், துணுக்குற்று எழுந்தாள். தம் தலைவரையும் எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார் மன்னர்.

சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல்கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்தார். தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் கண்டார் ! கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அரசர், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை, முக்கண்ணன் அடியார் என்றெண்ணி, தமது முடிபட அவனது கால்களிலே விழுந்து வணங்கினார். ஐயனே தாங்கள் எழுந்தருளியது யாது கருதியோ ? என்று மலையமநாட்டு மன்னர் பணிவுடன் வினவினார். முத்தநாதன் நா கூசாமல் சிவபெருமான் பண்டைகாலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது.

அதனை உனக்கியம்பி உமக்கு மோட்ச பதவியை அளிக்கவே யான் வந்துள்ளேன் என்று கூறியபடியே தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். முத்தநாதனின் கபட வார்த்ததைகளை உண்மை என்று நம்பி மோசம் போன மன்னர் முகம், பகைதனை வென்ற வீரனின் முகம்போல் மலர்ந்தது. அரசியாரின் முகமும் கதிரவனைக் கண்ட கமலம் போல் பூரித்தது. அரசர், இரு கை கூப்பி வணங்கியபடியே, இம்மையில் இவ்வடியேனுக்கு இதனினும் உயர்ந்த பேறு வேறு எதுவுமே இல்லை, தேவரீர் அம்பலவாணர் அருளிச் செய்த ஆகம நூலை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளையும் அருளிச் செய்தல் வேண்டும் என்று கூறினார்.

முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து, அரசியுடன் தாம் தரையில் அமர்ந்து கொண்டார் மன்னர். உயர்ந்த ஆசனத்தில், தாழ்ந்த உள்ளத்தோடு அமர்ந்திருந்த முத்தநாதன் வஞ்சகப் புன்னகையை உதட்டிலே நெளியவிட்ட வண்ணம், மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான். எதைப்பற்றியோ சிந்திப்பவன் போல் பாசாங்கு செய்தான். முத்தநாதனின் செயலைக் குறிப்பால் உணர்ந்த மெய்ப்பொருளார், தேவரீர் ! யாது சொல்லத் தயங்குகிறீர் ! என்று கேட்டார் மன்னர் !

பக்தா ! இவ்வாகம நூலைப் போதிக்கும் போது, மலர் மாலை சூடிய கூந்தலையுடைய தங்கள் அரசியார் பக்கத்தில் இருக்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. ஆகம நெறிதான் இவ்வாறு எடுத்து இயம்புகிறது. என்று முத்தநாதன் சொன்னான். உடனே மன்னர். திருமகளைப் போல் அருகே நின்று கொண்டிருந்த அரசியாரைப் பார்த்தார். கணவரின் கட்டளையைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் தொழுதுவிட்டு, அந்தப்புரம் நோக்கிச் சென்றாள்.

முத்தநாதன் சங்கரா சிவ ! சிவா! என்று பலமாக இறைவனின் திருநாமத்தை ஓதியபடியே, திருவெண்ணீற்றை எடுத்த உடம்பிலும் நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். திருவெண்ணீற்றை வாங்கி, பயபக்தியோடு நெற்றியிலும், மேனியிலும், முறையோடு விதிப்படி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடியே அணிந்து கொண்டார் மன்னர் ! ஐயனே ! இவ்வடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றார் மன்னர். மன்னவர் சிரம் தாழ்த்தி முத்தநாதனை வணங்கிய போது அப்பகையரசன் ஏட்டுச் சுவடியைப் பிரிப்பது போல் அதனுள் இருந்த உடைவாளை வெளியே எடுத்தான். மன்னர் தலைவணங்கி நின்ற தருணம் பார்த்து அந்த வஞ்சகன் தான் நினைத்தபடியே செய்தான்.

அந்நிலையிலும், மன்னர் மனம் அவன் மீது சற்றுகூட வெறுப்போ, வேதனையே, கோபமோ, கொள்ளவில்லை. மெய்ப்பொருளார், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார். முத்தநாதன் வாளெடுத்து மன்னரைத் தாக்கியதை மறைந்திருந்து பார்த்து மெய்க் காப்பாளன் தத்தன் நொடிப் பொழுதில், உள்ளே நுழைந்து, முத்தநாதனைக் கொல்லத் தன் உடைவாளை உருவினான். குருதி கொட்ட, தரையில் சாய்ந்து வீழ்கின்ற மெய்பொருளார் அந்த நிலையிலும் தமது வீரக்கரங்களை உயர்த்தி அவனைத் தடுத்து தத்தா நமர் என்று கூறிச் சாய்ந்தார்.

தத்தா ! இவர் நம்மைச் சேர்ந்தவர் என்ற பொருளை உணர்ந்த தத்தா நமர் என்று பகர்ந்து, நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்தான் தத்தன், தலை வணங்கினான். அவன் உள்ளம் கோபத்தால் துடிதுடித்த போதும், தாபத்தால் உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரியத்தான் செய்தன. கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன். மன்னர் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு, தத்தனிடம், தத்தா ! இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவாயாக ! என்று ஆணையிட்டார்.

மறுமொழி பேசாது, அப்படியே ஆகட்டும் வேந்தே ! என்றவாறே அரசரை வணங்கிவிட்டு அந்த அரக்கமனம் கொண்ட பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். மன்னர்க்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீபோல் நாடு நகரமெங்கும் பரவியது. அரசியார் செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்து உள்ளம் பதைபதைக்க ஓடோடி வந்தாள். ஐயனை மடிமீது தாங்கி பலவாறு புலம்பி அழுதாள். முத்தநாதனின் கொடிய செயலைக் கேள்வியுற்றுக் கொதித்தெழுந்தனர் மக்கள். தத்தன் மக்களிடம் மன்னர் ஆணையை எடுத்துக் கூறினான். அனைவரும் வேதனையோடு மன்னரைக் காண அரண்மனைக்கு வெள்ளம் போல் திரண்டு சென்றனர். தத்தனும் முத்தநாதனை நகரின் எல்லையைக் தாண்டி கொண்டு போய் சேர்த்தான்.

காற்றிலும் கடுகி அரண்மனை விரைந்தான். தத்தன் வரும்வரை மன்னர் உயிர் துடித்துக் கொண்டேதான் இருந்தது. மன்னரது கவலை எல்லாம் முத்தநாதனுக்கு எவ்வித பேராபத்தும் நேரக்கூடாதே என்பதுதான் ! தத்தன், விரைந்து வந்து, மன்னரை வணங்கி, அரசே ! தங்கள் ஆணைப்படி அத்தவசியை நல்ல முறையில் ஆபத்து எதுவுமின்றி எல்லையைக் கடந்து அனுப்பி வைத்தேன் என்றான். மன்னர் நாக்குழற, இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே தலையைச் சாய்த்தார். அவரது ஆவியும் பிரிந்தது. அப்பொழுது அவ்வறையிலே பேரொளி பிறந்தது. இடபத்தின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார்.

எம்பெருமான் திருவருளால் மெய்பொருளார் புதுப்பொலிவுடனும், இளமையுடனும் உயிர் பெற்று எழுந்தார். அரசியார் அகம் மகிழ்ந்தார்கள். தத்தன் ஆனந்தத்தால் தத்திக் களித்தான். மக்கள் மனம் மகிழ்ந்தனர். மெய்ப்பொருளார்க்கு ஆனந்தக் காட்சி அளித்த அம்பலத்தாண்டவன் அச்சிவனருட் செல்வர்க்கும், அவரது அருமை மனைவியர்க்கும் எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார். உயிர் போகின்ற சமயத்திலும் கூட, சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடையவராய் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டி, உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் என்றால் அவரது பக்தி எத்துணைச் சிறப்பு மிக்கது என்பதனை அளவிடயாரேவல்லார்!

குருபூஜை: மெய்ப்பொருளார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்.


Key Aspects of Meiporul Nayanar
Background and Early Life:

Origin: Meiporul Nayanar was born in a region called Thirukkoyilur, located in present-day Tamil Nadu. The place is known for its rich cultural and spiritual heritage, particularly in Shaivism.

Social Standing: He was a king belonging to the Chola dynasty, ruling over the region. His name "Meiporul" suggests "the one who understands the true essence," indicating his spiritual insight and dedication to truth and righteousness.

Life and Devotion:

Righteous Ruler: As a king, Meiporul Nayanar was known for his just and benevolent rule. He governed with a deep sense of dharma (righteousness) and was committed to the welfare of his subjects.

Devotion to Shiva: Meiporul Nayanar was a devout follower of Lord Shiva. He regularly engaged in worship, meditation, and other devotional practices. His court was also a place where Shaivite scholars and devotees were welcome, and he actively supported the promotion of Shaivism.

Significant Incidents:

The Betrayal and Forgiveness: One of the most notable stories of Meiporul Nayanar involves a deceitful plot by a rival king named Muthanathan. Disguised as a Shaivite sage, Muthanathan gained entry into the king's palace, seeking to kill Meiporul Nayanar while he was worshiping. Despite realizing the deception, Meiporul Nayanar chose to forgive Muthanathan, prioritizing the respect due to a person appearing as a devotee of Shiva over his own safety.

Martyrdom: Meiporul Nayanar's act of forgiveness led to his martyrdom. He died as a result of the attack but remained steadfast in his devotion, forgiving his attacker even in his final moments.

Role in Shaivism:

Embodiment of Forgiveness and Devotion: Meiporul Nayanar's life is celebrated as an embodiment of the principles of forgiveness, compassion, and unwavering devotion. His decision to forgive his attacker, despite knowing the danger, is seen as an act of great spiritual significance, showcasing the depth of his faith.

Inspiration for Devotees: His story serves as a powerful inspiration for devotees, teaching the values of compassion, forgiveness, and the prioritization of spiritual principles over personal safety or gain.

Iconography and Commemoration:

Depictions: Meiporul Nayanar is often depicted in art and iconography in the garb of a king, sometimes shown with an expression of forgiveness, symbolizing his compassionate nature and his royal background.

Festivals and Rituals: He is honored during Nayanmar festivals, where his story is recounted to inspire devotion and highlight the virtues of forgiveness and righteousness.

Conclusion

Meiporul Nayanar is revered as a saint who exemplified the highest virtues of Shaivism—devotion, righteousness, and forgiveness. His life story, particularly the incident of forgiving his would-be assassin, teaches that true spiritual practice involves deep compassion and adherence to dharma. Through his life and actions, Meiporul Nayanar continues to inspire Shaivite devotees to uphold the principles of kindness, forgiveness, and unwavering devotion to Lord Shiva.



Share



Was this helpful?