மந்திரங்கள் (Mantras) are sacred sounds, syllables, words, or phrases in Hinduism, Buddhism, and other spiritual traditions. They are believed to have spiritual power and are often used in meditation, prayers, and rituals to invoke divine energies or to achieve specific spiritual goals.
மந்திரங்கள் பற்றிய விளக்கம்
மந்திரங்கள் – ஏழு அங்கங்கள்
மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:
1. ரிஷி
2. சந்தஸ்
3. தேவதை
4. பீஜம்
5. சக்தி
6. கீலகம்
7. அங்க நியாசம் என்பன.
1. ரிஷி
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.
மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.
நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.
2. சந்தஸ்
சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.
3. தேவதை
தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா நியாசம்.
4. பீஜம்
மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா்.
இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.
5. சக்தி
அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.
6. கீலகம்
சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.
மந்திரங்களின் ஆற்றல்
மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.
இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம் என்று குறிப்பிட்டனா்.
மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.
இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.
ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.
மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations) நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.
ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.
அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம். சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.
இறையருளைப் பெற
இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய
வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.
மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை 1. தூல வடிவம் 2. சூக்கும வடிவம் 3. அதி சூக்கும வடிவம். அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.
எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.
மந்திரங்கள் – அதி தேவதைகள்
உலகில் உள்ள பொருள்களை இருவகை 1. அசையும் பொருள் 2. அசையாப்பொருள். அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு. அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீ வித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம். பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீ வித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.
மந்திரமும் விதையும்
ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச் சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?
ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால்,
1. உரிய காலம் வேண்டும்.
2. உரிய நிலம் வேண்டும்.
3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும்.
4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும்.
5. நல்ல கைராசி வேண்டும்.
6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும்.
7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும்.
9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.
அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவை மனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும். ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம் போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மந்திர உபாசனை
எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும். எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் பாவிகள். மந்திரம் பலிப்பதுபோலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.
இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும் பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.
பலவகை மந்திரங்கள்
சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும். முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீ வித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை என் ஆறு வகைப்படும். ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜ மந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.
ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி
15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி. ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும். சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா்.
ஸ்ரீவித்யை உபாசகா்கள்
சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு. இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே ஆதிபராசக்தியின் அருள்பெற்று உயா்ந்தவா்களே!
தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா். சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள்.
ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா். அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை.
அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.
இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களை எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும். முத்தி கிடைக்கும் கரநியாசம் அங்க நியாசம், அதற்கான முத்திரைகள் என விதிமுறைகளோடு ஜெபித்தால் பலன் உண்டு.
தெய்வமாகலாம்
ஒரு நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு எந்தக் கோலத்தில் நிற்கிறோமோ அந்தக் கோலத்தையே கண்ணாடி காட்டும். அதுபோல ஒருவன் எந்தத் தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபம் செய்கிறானோ அந்த மந்திரத்திற்குரிய அதி தேவதையாகவே அவன் ஆகிவிடுகிறான். என்பது மந்திர சாத்திர விதி. அந்நிலையில் அவன் மந்திர ஆன்மாவாகி விடுகிறான் என்பது விதி. “மன ஒருமையோடு என் மந்திரங்களைப் படிக்கிறபோது நீயும் சக்தி மயமாய் ஆகிறாய் மகனே!” – என்பது நம் அன்னையின் அருள்வாக்கு. பறவை, விலங்கு, மரம் முதலிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்துக்கும் மந்திரம் உண்டு. அதி தேவதைகள் உண்டு.
மந்திரங்களும் – பலன்களும்
மந்திரங்களின் துணையால் உலகியல் இன்பங்களிலிருந்தும், உலகக் கவா்ச்சியிலிருந்தும் விடுபட்டு முக்தியையும் பெறலாம். உலகியல் பொருள்களையும், இன்பங்களையும் அடையலாம்.
மந்திரத்தால் இங்கிருந்தபடியே தேவா்களையும் அழைக்கலாம். வசீகரம் முதலிய சக்திகளையும் பெறலாம். மந்திரத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். உடம்பிலே பஞ்ச பூதங்களை வெல்லும் ஆற்றல் வாய்ந்த மையங்கள் உண்டு. மந்திர சித்தி பெற்றவன் கூடுவிட்டுக் கூடு பாயலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம். நினைத்த இடத்திற்குப் போகலாம். வரலாம். மற்றவா்கள் கண்ணுக்குத் தெரியாமலே உலாவலாம். தேவா் உலகமும் சென்று வரலாம். ஏன்? ஒருவா்க்கு மரணத்தையும் உண்டாக்கலாம்.
மகாலட்சுமி மந்திரம் என ஒன்று உண்டு. இம்மந்திரம் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது. ஆனால் எல்லோர்க்கும் பலன் தருவது இல்லை.
வறுமையில் வாடிய வித்யாரண்யா் இம்மந்திர ஜெபத்தால் வறுமையைப் போக்கிக் கொள்ள மகாலட்சுமி உபாசனையை மேற்கொண்டார். இறுதியில் மகாலட்சுமி அவருக்குக் காட்சி கொடுத்தாள். இந்தப் பிறவியில் உனக்குச் செல்வம் அளிக்க முடியாது. உன் பிராரத்துவ வினை இது. என்றாளாம். உடனே வித்யாரண்யா், பிறவியிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி
ஒன்றை மேற்கொண்டார். சந்நியாசம் வாங்கிக் கொண்டால் புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். ஆகவே சந்நியாசம் பெற்றுக் கொண்டார்.
மந்திர ஜெபத்துக்கான பலனை மகாலட்சுமி கொடுத்தாக வேண்டும் அல்லவா? உடனே அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டாள். வித்யாரண்யருக்கு இப்போது புதிய தரும சங்கடம் வந்து விட்டது. சந்நியாசியாகி விட்டபிறகு பணத்தைத் தொடக்கூடாது. அடி தாயே! இந்தச் செல்வத்தை வைத்து சந்நியாசியாகிவிட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்றாராம். என்ன செய்வாயோ…… தெரியாது. உனக்குக் கொடுத்து கொடுத்ததுதான் என்றாளாம் மகாலட்சுமி.
வேறுவழியின்றி இந்து சாம்ராஜ்யத்தை – விஜய நகரப் பேரரசை நிறுவுவதற்காக அரிகரா் என்ற அரசா்கட்கு அந்தச் செல்வத்தை அப்படியே கொடுத்து விட்டாராம். நினைத்த காரியத்தில் வெற்றியைக் கொடுப்பது வராகி மந்திரம். ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளை வலுவிழக்கச் செய்வது அஸ்வாரூடா மந்திரம். கா்ண பிசாசினி என்ற தேவதைக்குதிய மந்திரம் உண்டு. இம்மந்திர ஜெபம் சித்தியானால் அந்த உபாசகன் மற்றவா்கள் வாழ்வில் நடந்தவை நடக்க இருப்பவை, ஆகிய சம்பவங்களைத் தெரிந்து சொல்ல முடியும்.
ஆவஹந்தி தேவதை என்ற ஒரு தேவதை உண்டு. அவள் மந்திரததை உள்ளன்போடு ஜெபித்து வந்தால் ஒரு குடும்பத்தைப் பசியில்லாமல் காப்பாற்றும். “ஆவஹந்தியும் அடுப்பிலே நெருப்பும் இருந்தால் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை” என்பது கேரள நாட்டுப் பழமொழி.
தேள்கடி, பாம்புக்கடி, விஷம் இறக்க மந்திரம் உண்டு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க மந்திரம் உண்டு. வீட்டில் உள்ள கெட்ட தேவதைகளை விரட்ட மந்திரம் உண்டு. வீடு, தோட்டங்களில் திருடுகள் நடக்காமல் தடுக்க மந்திரம் உண்டு. நல்லது செய்யவும் மந்திரம் உண்டு. கெட்டது செய்யவும் மந்திரம் உண்டு. எல்லா மந்திரமும் எல்லோர்க்கும் பலித்து விடுவதில்லை. ஏன்? தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!
அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.
உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும்.
சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.
குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம்
ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை.
1. இஷ்ட தெய்வம்
2. மந்திரம்
3. குரு
ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.
இதுபோன்ற நுட்பமெல்லாம் தெரியாமல் நாம் கிடப்பதால்தான் அன்னை “நீங்களெல்லாம் ஆன்மித்தில் அனாதைகள்” என்கிறாள். தன் பக்தனுக்கு வலுவான அடித்தளங்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறாள். ஆதிபராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தன் பக்தனுக்கு அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். 108, 1008 மந்திரங்களை வழங்கியிருக்கிறாள். இந்த மூன்றையும் வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அது அவரவா் பக்தி சிரத்தையைப் பொறுத்தது. முயற்சியைப் பொறுத்தது.
தெய்வம்: குரு: மந்திரம்:
உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே! உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே! என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.
மந்திரங்கள் நால்வகை
1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து.
2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரி போன்ற இருமுனை உள்ளவை கர்தரீ.
3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும்.
4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள்.
5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம்.
லலிதா சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.
புரச் சரணம்
பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும். புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள். ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது. மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரிய வேண்டும்.
பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.
நான்கு வகை மந்திரங்கள்
பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை
1. சித்த மந்திரங்கள்
2. சுத்த மந்திரங்கள்
3. சாத்திய மந்திரங்கள்
4. சத்துரு மந்திரங்கள்.
புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும். குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.
முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திர தேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திர ஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும். அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.
மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார்.
திருமணம் நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.
சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை. ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.
பீஜ மந்திரங்கள்
மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது.
அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று. இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது.
இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா். “நாத விந்து கலாதி நமோ! நம! என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து “அ” – “உ” – “ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று. இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின. இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச் சக்தியிலிருந்து அண்ட – பகிரண்ட
சராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.
இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.
ஒலியும் – ஒளியும்
எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன. இந்த ஒளி மூலமாகவும ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம். வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா்.
உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று. அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். “முளை” மந்திரம் என்பார்கள்.
பஞ்ச பூதங்கள்
பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு
நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.
நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்
நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்
காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்
ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமை நிறம்
உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு. எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும். உதாரணமாக ஸ் ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜ மந்திரம் க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஜம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.
நவக்கிரகங்கள் – பீஜ மந்திரங்கள்
நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை வருமாறு
சூரியன் க்ரீம் (Krim)
சந்திரன் ரீம் (Rim)
செவ்வாய் ஹ்ரீம் (Hrim)
புதன் ஸ் ரீம் (Srim)
வியாழன் ஔம் (Houm)
வெள்ளி கிலீம் (Klim)
சனி ஐம் (Aim)
ராகு ஹ்ரௌம் (Hraum)
கேது சௌம் (Soum)
வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.
“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.
“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.
“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத் தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.
“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.
ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.
ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.
ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.
ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச்சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா் சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.
ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.
ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில் மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.
அஜபா மந்திரம்
இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று ஸம் என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.
மந்திர யோகம்
மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.
மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.
மந்திரத்திற்குரிய தேவதையின் உதவி சாதகனுக்குக் கிடைக்கிறது. அவன் உடம்பில் குண்டலினி சக்தி கிளா்ந்து எழுகிறது. அதன் மூலம் சில சக்திகள் அவனுக்குக் கிடைக்கின்றன.
பூா்வ ஜென்ம வாசனையால் அழுக்குப்படிந்த ஒருவன் உடம்பும், மனமும், ஆத்மாவும் சுத்தமாகி வருகின்றன. முதலில் உள்ளுடம்பில் சில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலேயே உண்டாகின்றன. பின் உள்ளுடம்பு மந்திர உடம்பாக மாறுகிறது.
எப்போது பலன்?
எவ்வளவுக்கெவ்வளவு பக்தியும் சிரத்தையும் கட்டுப்பாடும் குறிப்பிட்ட கால அளவும் மன ஒருமைப்பாடும் சீராக அமைகின்றனவோ அந்த அளவுக்கு ஒருவனுக்கு மந்திரம் பயன்தரத் தொடங்குகிறது.
கண் ஒன்று பார்க்க – காதொன்று கேட்க – வாயொன்று கூற – மனம் ஒன்று நினைக்க மந்திர ஜெபம் பண்ணுகிறவா்கள் மந்திர சித்தி பெற முடிவதில்லை.
மந்திர ஜெபத்துக்குரிய ஆசனங்கள்
இன்னின்ன ஆசனங்களில் அமா்ந்து மந்திர ஜெபம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உண்டு. கருங்கல் ஆசனத்தின்மீது அமா்ந்து ஜெபம் செய்தால் வியாதி வரும். அது கூடாது. மான்தோல் ஞானம் தரும். புலித்தோல் ஆசனம் மோட்சம் தரும். துணி மீது அமா்ந்து ஜெபம் செய்வதால் வியாதி நீங்கும். வெள்ளாடை சாந்தி தரும். சிவப்பாடை வசியத்தை உண்டாக்கும். கம்பளம் சௌக்யம் தரும். வெறுந்தரையில் அமா்ந்து மந்திர ஜெபம் செய்யக்கூடாது.
பூசை செய்யும்போது சில யோகாசனங்களைப் போட்டுக் கொண்டு அமா்ந்து ஜெபம் செய்வது சிறப்பு
1. பத்ராசனம்
2. முக்தாசனம்
3. மயூராசனம்
4. சித்தாசனம்
5. பத்மாசனம்
6. ஸ்வஸ்திகாசனம்
7. வீராசனம்
8. கோமுகி ஆசனம் சிறப்புடையவை.
இல்லறத்தானுக்குச் சுகாசனம் ஏற்றது. பூசையறை, பசுக்கொட்டில், நதி தீரம், கடற்கரை, ஆஸ்ரமம், ஆலயம், தீபமுகம் ஆகிய இடங்கள் ஜெபம் செய்யச் சிறந்த இடங்கள்.
கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு – வசியம் சித்திக்கும். தென்கிழக்கு – கடன் தீரும். வடகிழக்கு – மோட்சம் தரும் என்பா்.
ஜெபத்திற்குத் தகுதியான இடம்
கோவிலாயின் தட்சிணாமூா்த்தி சந்நிதியிலோ, வீட்டில் பூஜை செய்யும் இடத்திலோ, நதிக்கரையிலோ அல்லது அமைதியும் பரிசுத்தமும் உள்ள வேறு தனியிடத்திலோ அமா்ந்து மந்திர ஜெபம் செய்ய வேண்டும்.
கீதை சொல்வது
சுத்தமான இடத்தில் அசையாததும், அதிக உயரம் இல்லாததும், அதிகத் தாழ்வு இல்லாததுதம், தா்ப்பை ஆசனத்தின் மேலே தோலும், வஸ்திரமும் விரிக்கப்பெற்றதும் ஆகிய ஆசனத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமா்ந்து மனத்தை ஒரு முனைப்படுத்தி, மனத்தின் சலனங்களையும், ஐம்பொறிகளின் செயல்களையும் அடக்கி உடல், கழுத்து ஆகிய இவற்றை ஒரே ஒழுங்காகவும், அசையாமலும் நிறுத்தித் தன்னுடைய மூக்கு நுனியைப் பார்ப்பது போல பார்வையை வைத்துச் சுற்றும் முற்றும் பாராமல் ஜெபமும் தியானமும் செய்ய வேண்டும்.
கீதை -6.11 -13
முத்திரைகள்
தெய்வ வழிபாட்டில் முத்திரைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த முத்திரைகளால் வழிபடப்படுகிற தெய்வம் சந்தோஷப்படுகிறது. நம் பாவங்கள் நீங்குகின்றன என்பா். வழிபாட்டில் காட்டப்படும் சில முத்திரைகள் வருமாறு
தேனு முத்திரை
சோடிகா முத்திரை
பதாளா முத்திரை
அஞ்சலி முத்திரை
மகா முத்திரை
பஞ்சமுகி முத்திரை
மனோரத முத்திரை
பதும முத்திரை
சூல முத்திரை
மகர முத்திரை
கிருக்கு முத்திரை
சம்மார முத்திரை
உற்பவ முத்திரை
நாராச முத்திரை
திவ்விய முத்திரை
அகோர முத்திரை
கோகா்ண முத்திரை
பிம்ப முத்திரை
மான் முத்திரை
சங்கு முத்திரை
ஸ்ரீ சக்ர பூசைக்கு நவாவரண பூசை என்று பெயர். இப்பூசையில் பத்துவித முத்திரைகள் காட்டிப் பூசை செய்ய வேண்டும் என்று லலிதா சகஸ்ரநாமம் குறிப்பிடுகிறது. அவை வருமாறு
சா்வ சம்கோகஷாயிணீ
சா்வ வித்ராவிணீ
சா்வ ஆகா்ஷிணீ
சா்வ வசங்கரீ
சர்வ உன்மாதினீ
சர் மகா அங்குசா
சர்வ கேசரீ
சர்வ பீஜம்
சர்வ யோனி
சர்வ திரிகண்டா என்பன.
அர்ச்சனை, ஜெபம், தியானம் முதலியவற்றிலும் பயனை எதிர்பார்த்துச் செய்யும் சடங்குகளிலும்,
ஆவாகனம், காப்பு, நைவேத்தியம் படைத்தல் ஆகியவற்றின் போது உரிய முத்திரைகளைக் காட்ட வேண்டும்.
குருவை வழிபடும்போது
1. சுமுகம்
2. சுவிருத்தம்
3. சதுரசரம்
4. முத்தரம்
5. யோனி
6. மான் முத்திரை
ஆகிய முத்திரைகளைக் காட்டிப் பூசை செய்ய வேண்டும். அர்க்கியத்தின் போது அர்க்கியம் கொடுக்கும் போது
1. மச்சம்
2. அஸ்திரம்
3. அவகுண்டனம்
4. தேனு
5. காளினீ என்ற முத்திரைகளைக் காட்ட வேண்டும்.
அா்ச்சனையின்போது
1. ஆவாகனீ
2. சம்ஸ்தாபனீ
3. சந்நிதாபனீ
4. சந்நிரோதினீ
5. சம்முகீகரணி
6. வந்தனீ
7. தத்துவ முத்திரை
8. சின் முத்திரை
9. சம்மார முத்திரை காட்ட வேண்டும்.
நியாசத்தின் போது
இருதய நியாசம், கர நியாசம், அங்க நியாசம் முதலிய நியாசங்களின் போது காட்டப்பட வேண்டிய முத்திரைகள்
1. முகம்
2. கர சம்புடம்
3. அஞ்சலி
4. இருதயம்
5. சிரம்
6. சிகை
7. கவசம்
8. கண்
9. அஸ்திரம்
10. நியாச முத்திரை இவற்றை விரிவாக விளக்க இடமில்லை.
இவை தவிர யோகப் பயிற்சியின் போது கையாளப்படும் முத்திரைகள் பல உள்ளன. அவை யோக முத்திரைகள் எனப்படும்.
1. ஆசமனம்
2. கணபதி தியானம்
3. பிரணாயாமம்
4. சங்கல்பம்
5. குருவந்தனம்
6. நியாசங்கள்
7. தேவதை தியானம்
8. ஜெபம்
என்ற முறைப்படி மந்திர ஜெபம் அமைய வேண்டும் எனத் தந்திர நூல்கள் கூறுகின்றன.
சக்கரங்கள் எந்திரங்கள் மண்டலங்கள்
“தேவியை ஒரு விக்கிரகமாகவோ, சக்கரமாகவோ, மண்டலமாகவோ வைத்து வழிபடலாம்” – என யோகினி தந்திரம் கூறுகிறது. ஆன்மித்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் பெற்ற பிறகு சாதகன் எந்திரம் அல்லது சக்கரம் வைத்து வழிபடும் தகுதியை அடைகிறான்.
பிரம்ம விஞ்ஞானத்தின் உயா்ந்த அடையாளமாகச் சக்கரம் கருதப்படுகிறது. சக்கரமும் தேவதையும்
உடம்பும் ஆத்மாவும் போன்றவை உடம்பில் சில சக்கரங்களில் தேவதைகளை அமா்த்தி மானசீகமாக வழிபடும் ஒரு யோகி காமம், கோபம் முதலிய பாவ குணங்களை அடக்கிக் கொள்கிறான்.
“கடவுளின் நாமத்தை ஜெபம் செய்து வர பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும். அது உனக்குள் இருக்கும் காமம், குரோதம் ஆகியவற்றைப் போக்கிவிடும். தனிமையில் எவரும் அறியாமல் இறைவன் நாமத்தை ஓதி வந்தால் கடவுள் தரிசனம் கிட்டும்”
“இறைவன் நாமத்தை ஜெபம் செய்து ஆவல் ஏற்படுத்தும்படி இதயப்பூா்வமாக பகவானிடம் பிரார்த்தனை செய். நிச்சயமாக அவரும் உனது பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார்.”
“இறை நாமம் என்ற விதையில் அதிக சக்தி இருக்கிறது. அது அஞ்ஞானத்தைப் போக்குகிறது. முளையோடு உள்ள ஒரு விதை மிகவும் மிருதுவாக இருந்தபோதிலும் பூமியைத் துளைத்துக் கொண்டு வோ் விடுகிறது.”
என்கிறார் பகவான் இராமகிருஷ்ணா்.
“தியானம் செய்ய இயலாவிட்டால் ஜெபம் செய்யுங்கள். ஜெபத்தின் மூலமே ஆத்ம ஞானம் கிடைக்கும். நீரில் நீயாகக் குதித்தாலும் சரி, அல்லது பிறரால் தள்ளப்பட்டாலும் சரி, உனது ஆடைகள் ஈரமாகிவிடும். அதுபோல ஜெபத்தின் மகிமையை அறிந்து ஜெபம் செய்தாலும், அறியாமல் ஜெபம் செய்தாலும், அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு.
மந்திரம் மனத்தையும் உடலையும் தூய்மைப்படுத்துகிறது. இறைவன் நாமத்தை ஜெபம் செய்து வர வர ஒருவன் தூய்மை அடைந்து விடுகிறான்.
காற்று மேகத்தைக் கலைப்பது போல இறைவன் நாமம் உலகப் பற்று என்ற மேகத்தைக் கலைத்து விடுகிறது.
ஒரு நாளைக்கு 15000 அல்லது 20000 தடவை இறைவன் நாமத்தை ஜெபம் செய்து வந்தால் மனமும் தானாகவே அடங்கி விடும். அவ்விதம் நடப்பதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்”.
என்கிறார் அன்னை சாரதா தேவி.
மூன்று வகை அழுக்குகள்
1. மன அழுக்கு
2. வாய் அழுக்கு
3. உடம்பு அழுக்கு என அழுக்குகள் மூன்று வகை.
பொறாமை, பகை, கோபம், ஆசை என்பன மனத்தால் ஏற்படும் அழுக்குகள். இவற்றைத் தியானம் என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
பொய் சொல்வது, அடுத்தவனைப் பற்றிப் புறம் சொல்லித் திரிவது, கோள் சொல்வது, தீமையான சொற்களைப் பேசுவது, தெய்வத்தைப் பழிப்பது, ஞானிகளைப் பழிப்பது, நல்ல பெண்களைப் பழிப்பது ஆகியவை வாயால் ஏற்படும் அழுக்குகள். இறைவனைப் பற்றிய மந்திரங்கள், தோத்திரப்பாடல்கள் பாடி இந்த அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
கொலை, களவு, பிறா் மனைவியோடு தகாத உறவு முதலியவை உடம்பால் ஏற்படும் அழுக்குகள். அவற்றை அர்ச்சனை என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
மந்திர ஜபம்: ஏற்ற இடங்கள்:
வீட்டிலிருந்து ஜபித்தால் ஒருமுறை உருவேற்றியதாகும்.
பசுக்கொட்டிலிலிருந்து ஜபித்தால் ஒன்று நூறு ஆகும்.
நந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும்.
மலைமேலிருந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரம் ஆகும்
நதிக்கரையிலிருந்து ஜபித்தால் ஒன்று லட்சம் ஆகும்.
ஆலயத்தில் ஜபித்தால் ஒன்று கோடி ஆகும்.
மந்திர ஜபம் செய்யும் போது கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், தூக்கம், சோம்பல், வாதம் முதலியவை கூடாது.
மந்திர ஜபம்
மந்திர ஜபம் மூன்று வகைப்படும்.
பிறா் காதுகட்குக் கேட்குமாறு மெதுவாக ஜபிப்பது
தன் காதுகட்கு மட்டும் கேட்குமாறு நாக்கின் நுனி உதட்டைத் தீண்ட ஜபிப்பது.
நாக்கின் நுனி உதட்டைத் தீண்டாமல் மன ஒருமையோடு ஜபிப்பது.
முதலாவது நூறு மடங்கு பலம் கொண்டது. இரண்டாவது அதைவிட பதினாறு மடங்கு பலம் கொண்டது. மூன்றாவது கோடி மடங்கு பலம் வாய்ந்தது.
மந்திரங்களின் சக்தி
பல சூட்சுமமான சொற்கள் ஜபத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருத மொழியில் அவை
மந்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஜபிப்பவனைக் காப்பாற்றி மோட்சம் அளிப்பதே மந்திரம்.
மந்திரம் என்பது இறை சக்திக்கு – கடவுளுக்கு நிகரான ஒலி.
அதனால் ஏற்படும் ஒலி அலைகள் நம்முள் தெய்வ சக்தியைத் தோற்றுவிக்கின்றன.
ஜபம் செய்யச் செய்ய நம்முள் மனத்தெளிவு ஏற்பட்டு, தெய்வீக சக்தியோடு கூடிய அலைகள் எழும்புகின்றன. அவை யாவும் இறை சக்தியே! இவ்விதம் எழும்பும் தெய்வ சக்தியே சாதகன் இறை ஞானம் பெற உதவுகிறது.
தெய்வம் வேறு அதன் உருவம் வேறல்ல. தெய்வத்தின் நாமமும், அந்த தெய்வத்திற்குரிய மந்திரமும் வெவ்வேறானவை அல்ல.
எல்லாச் சொற்களும் மந்திரங்களாக ஆக முடியாது. மந்திரங்களும் வெறும் சொற்கள் அல்ல. அவை தெய்வ சக்தி வாய்ந்த அதி சூட்சுமமான சொற்கள்.
ஞானிகளும் ரிஷிகளும் ஆத்ம ஞானம் பெற்ற சமயத்தில் அந்த மந்திரங்களைத் தரிசித்தார்கள். அவற்றை அவா்கள் ஒளி வடிவமாகவோ, அல்லது ஒலி மூலமாகவோ கண்டார்கள்.
ஒரு சாதாரண மனிதனுக்கு மந்திரம் என்பது வெறும் சப்தமாகத் தோன்றும். ஆனால் அதுவே ஒரு ஆத்ம சாதகனுக்கு ஆத்ம
ஞானத்தையே அளிக்கக்கூடிய வல்லமை பெற்ற ஒரு சொல்.
எப்படி ஒரு சிறிய ஆலம் விதையில் பிரம்மாண்டமான ஒரு பெரிய ஆலமரமே அடங்கி இருக்கிறதோ, அது போலவே ஆத்ம குணம் என்பது ஒரு மந்திரத்தில் சூட்சுமமாகப் படிந்திருக்கிறது.
கணிதத்திலோ அல்லது பௌதிக விஞ்ஞானத்திலோ உள்ள சூத்திரங்கள் அதில் பழக்கப்படாதவனுக்குப் புரியாது. அதுபோலவே சாதாரண மனிதா்கட்கு ஓம், க்ரீம், (Hreem) போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்கள் பொருளற்ற வெறும் சொற்களாகவே தோன்றும்.
மந்திரத்துக்குச் சக்தி உண்டு என்பதும். அதன் மூலம் நாம் உபாசிக்கும் தெய்வம் நம் ஜபத்திற்கு பலன் அளிக்கிறது என்பதும் அதன் மூலம் நாம் ஆத்ம சாட்சாத்காரம் பெறுவது என்பதும் – இவை யாவும் உண்மையே!
nவெவ்வேறு மந்திரங்கள் இறைவனின் வெவ்வேறு நிலையைக் குறிப்பிடுகின்றன. சில பரம்பொருளின் மேலான நிலையையும் சில அவருக்கே உரித்தான அம்சங்களையும் குறிக்கும். எனவே ஒவ்வொரு மந்திரமும் இறைவனின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் குறிக்கும் மூலச் சொல்லாகும்.
குரு – சிஷ்ய பாரம்பரியமாகத் தொடா்ந்து வந்து கொண்டிருக்கும் சில சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் நாம் ஆத்ம ஞானத்தைப் பெற முடியும் என்று மந்திர சாத்திரங்கள் நம்புகின்றன.
ஒரு மந்திரத்தை ஜபிக்க ஜபிக்க காலப்போக்கில் அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்தின் காட்சியைப் பெற முடியும் என்று சிலா் கருதுகிறார்கள். ஆனால் அதே சமயம் தகுதியில்லாத ஒரு குருவிடமிருந்து ஒரு மந்திரத்தைப் பெற்றுக் கொண்டோமேயானால் அது எந்தவிதப் பயனையும் தராது என்ற கருத்தும் இருக்கிறது.
சில வைதீகச் சடங்குகள் செய்து அவற்றின் மூலம் அந்த மந்திரத்தைச் சைதன்யமாக (உயிருள்ளதாக) செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அதன் ஜபம் பலன் அளிக்க வல்லதாகும்.
இறைவன் இந்த உலகைப் படைப்பதற்கு முன்பு ஒலி அலைகளை எழுப்புகின்றான். அவ்விதம் முதலில் தோன்றும் ஒலியே பிரணவம். (ஓம் என்ற ஒலி) இது பிரம்மத்தையும் அதனுடைய தனித்தன்மையையும் குறிக்கும். அதிலிருந்தே மற்ற எல்லா ஒலிகளும் தோன்றுகின்றன.
பிரணவ ஒலியே நாத பிரும்மம். அதுவே அநாகதத்தொனி. இந்தப் பிரபஞ்சத்தில் தங்கு தடையின்றி ஒலித்துக்கொண்டிருக்கும் சப்தமே அநாகதத்தொனி.
அனைத்து மந்திரங்கட்கும், ஒலிகட்கும், சொற்கட்கும் பிரம்மமே தாய்.
முதலில் பிரும்மம் மட்டுமே இருந்தது. அதைத்தொடா்ந்து நாதம் எழும்பியது! நாதமே பிரம்மம் என்று வேதங்கள் கூறுகின்றன.
நாம் ஒரு மந்திரத்தை முதலில் ஜபிக்கும்போது அது நமது உள்ளில் முதலில் ஓா் அதிர்வை ஏற்படுத்துகிறது. அடுத்து
இரண்டாவது முறையாக அதை நாம் உச்சாடனம் செய்யும்போது மீண்டும் ஓா் அதிர்வு அலையை எழுப்புகிறது. இவ்விதமாக அடுத்தடுத்து எழுப்பும் அதிர்வுகள் முந்தின அதிர்வுகளை மேலும் மேலும் வலுப்படுத்துகின்றன. இவ்விதமாக வலுப்பட்ட ஜபம், ஜபிப்பவனுக்கு இறை நாமத்தில் சுவையை ஏற்படுத்தி அவனை இறைவனிடம் அழைத்துச் செல்கிறது.
பஞ்சாட்சர மந்திரம், சடாட்சர மந்திரம். சம்ஹிதா மந்திரம், அஸ்திர மந்திரம் முதலிய மந்திரங்கள் உண்டு. இவை ஒரு குருவின் மூலமாக உணரத் தகுந்தவை.
ஆலயங்களில் தெய்வங்களை நிறுவுதல், அபிஷேகம், ஓமம், தா்ப்பணம், பிராயச்சித்தம், தீட்சை முதலிய எல்லாக் கிரியைகளையும் மந்திரங்களின் துணைகொண்டே செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி, மந்திரமில்லாமல் தனிக்கிரியை கிடையாது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் மந்திரம் உண்டு. இம்மந்திரங்கள் அந்தத் தெய்வங்களின் சூக்கும வடிவம் ஆகும்.
அத்வைத சித்தி பெற்ற மதுசூதன சரஸ்வதி என்ற மகான் கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து கிருஷ்ணனது காட்சியைப் பெற்றார்.
“பஞ்சதசி” என்ற நூலின் ஆசிரியரான சுவாமி வித்யாரண்யா் காயத்திரி மந்திர ஜெபம் செய்து காயத்திரி தேவியின் தரிசனம் பெற்றார் என்பது வரலாறு.
ஒவ்வொரு தெய்வ மந்திரமும் அளப்பரிய சக்தி படைத்தவை. ஓம் நமசிவாய! என்பது சிவனுக்குரிய மந்திரம். ஓம் நமோ நாராயணாய! என்பது விஷ்ணுவுக்குரிய மந்திரம். ஓம் சரவணபவ! என்பது முருகனுக்குரிய மந்திரம்! இவ்வாறு ஒவ்வொரு தெய்வத்துக்கும் மந்திரம் உண்டு.
உரிய முறைப்படி மந்திர ஜெபம் செய்தால், அந்தந்தத் தெய்வத்தின் அருளைப் பெற முடியும். அத்தகைய மந்திரங்களை ஒரு குருவின் மூலமாகவே பெற வேண்டும் என்பது விதி.
ஒரு குருவின் நாமமே மிகப் பெரிய சக்தி படைத்த மந்திரம்.
மந்திர ஜபம் – அதன் சக்தி
“ஆன்மிகப்பாதையில் செல்பவன்
ஜெபத்தின் மூலமாகவே தனது இலட்சியத்தை அடைகிறான்” – மனு
“கா்மங்களில் ஜெபமே முதலிடம் வகிக்கிறது. அதுவே எல்லாப் பாவங்களையும் போக்கவல்லது” – மகாபாரதம்
“யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்” – பகவத்கீதையில் கண்ணன்
“எல்லா யக்ஞங்களின் பலன்களை ஜபத்தின் மூலமாகவே ஒரு சாதகன் அடைகிறான்” – தந்திர சாஸ்திரம்
“ஜெபத்தின் மூலமே ஒருவன் தனது இஷ்ட தெய்வத்தை அடைகிறான்” – தந்திர சாஸ்திரம்
“நெருப்பு விறகை எரிப்பது போல ஜெபம் மனிதனின் பாவங்களை எரித்து விடுகிறது. சக்தி வாய்ந்த மருந்தின் பயனை அறியாமல் அதை உபயோகப்படுத்தினாலும் அது நோயைக் குணப்படுத்துகிறது. அது போன்றதே இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து வருவது”
Mantra comes from the Sanskrit words “manas” (mind) and “tra” (instrument), meaning "instrument of the mind" or "tool for contemplation."
They have been used since ancient times in Vedic texts and other spiritual traditions.
Bees Mantras (Bija Mantras): These are single syllables or short phrases that are considered to encapsulate the essence of a deity or cosmic energy. For example, “Om” is a fundamental bija mantra.
Seed Mantras (Bija Mantras): These are specific to deities or cosmic principles, such as “Om Namah Shivaya” (a mantra dedicated to Lord Shiva).
Sankalpa Mantras: These are used to set intentions or resolve, often recited before starting a spiritual practice or ritual.
Shloka Mantras: These are longer verses or hymns, like the Gayatri Mantra, which are recited for various spiritual benefits.
Spiritual Growth: Mantras are believed to help in spiritual awakening and personal transformation. Repeating a mantra can lead to increased concentration and inner peace.
Divine Invocation: Mantras are used to invoke deities and divine energies. Each mantra is associated with specific deities, and reciting it is believed to draw their blessings.
Protection and Healing: Mantras are thought to provide protection against negative influences and promote physical and mental well-being.
Om: The primordial sound and the source of all creation. It represents the universal consciousness.
Translation: "Om, we meditate upon the divine light of the universal creator. May it illuminate our minds and inspire us."
Translation: "I bow to Lord Shiva." This mantra is used to invoke the divine qualities of Lord Shiva and seek his blessings.
Japa: The practice of repeating a mantra, either silently or aloud, as a form of meditation. This can be done using a mala (prayer beads) to keep track of repetitions.
Chanting: Mantras are often chanted during prayers, rituals, and ceremonies. Chanting can help in focusing the mind and connecting with the divine.
The effectiveness of a mantra is believed to depend on the sincerity of the practitioner and the alignment of their intentions with the spiritual goals of the mantra.
Mantras are seen as a means to channel divine energy and achieve spiritual objectives, and their power is thought to be amplified through proper pronunciation, rhythm, and intention.
Mantras are integral to spiritual practice in many traditions, offering a way to connect with the divine, enhance meditation, and foster spiritual growth. Their use is deeply rooted in the belief that sound and vibration have profound effects on consciousness and reality.