Digital Library
Home Books
Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).
பின்னர், அர்ஜுனனிடம், பார்த்தா! இதுதான் சரியான சமயம். சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. உம்... கர்ணன் மீது அம்பை விடு, என்றார். அவன் தனது சகோதரன் என்பதை அதுவரை அறியாத அர்ஜுனனும், தன் எதிரி வீழப்போகிறான் என்ற மகிழ்ச்சியுடன் அஞ்சரீகம் என்ற அம்பை எய்தான். அது அர்ஜுனனின் மார்பில் பாய்ந்தது. தனக்கு துன்பம் செய்தவர்களுக்கு முனிவர் ஒருவர் விடும் சாபம் எப்படி உடனே பலிக்குமோ, அதுபோல் கர்ணன் மீது அர்ஜுனன் விட்ட அம்பும் உயிரையே எடுக்கும் விதத்தில் பாய்ந்தது. அவன் குற்றுயிராகக் கிடந்தான். அப்போது, அவனது கண்களில் தான் கண்ட நாராயணனின் விஸ்வரூபக்காட்சி நிழலாடியது. அது தெரிந்தவுடனேயே நாராயணா, கோவிந்தா, பத்மநாபா, புண்டரீகாக்ஷா, கேசவா, மாதவா, ஸ்ரீஹரி என்பது உள்ளிட்ட நாமங்களை அவனது நாக்கு ஜபித்தது.
மரண நேரத்தில் உயிர் துடிக்கும். உடல் என்னவோ போல் ஆகும், பயம் வாட்டி வதைக்கும். அத்தகைய நிலையில் இருந்து தப்ப வேண்டுமானால், ஸ்ரீமன் நாராயணனை மனதில் நினைத்து அவன் நாமங்களை மானசீகமாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம். கர்ணனும் அத்தகைய பிறப்பற்ற நிலைக்காகவே இவ்வாறு செய்தான். அவனிடம் இல்லாத பணமா? அவன் செய்யாத தர்மமா? சூரியனுக்கே பிள்ளையாகப் பிறந்ததால் எதையும் செய்யும் வல்லமையுள்ளவன், அவன் துரியோதனனை விட்டுப் பிரிந்திருந்தால் அவனுக்கு இப்போது இந்த உலகமே அடிமையாயிருக்கும்... அப்படி பட்ட சவுகரியங்களுக்கு சொந்தக்காரனும், மரணநேரத்தில் தவிக்கும் தவிப்பை பார்த்தீர்களா? கடைசியில் அவனுக்கு கை கொடுத்தது எது? நாராயணனின் திருநாமம் தான்.
கர்ணனின் மரணம், நம் ஒவ்வொருவருக்கும் பாடம். வாழும் காலத்திலேயே உங்களுக்கு பிடித்த இறை நாமங்களை தினமும் சொல்லுங்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றினாலும் பரவாயில்லை. அதைச் சொல்லுங்கள். காலப்போக்கில், உங்களுக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்வீர்கள். குந்திதேவிக்கு அசரீரியின் மூலம் கர்ணனின் இறுதிக்காலம் பற்றிய அறிவிப்பு கிடைத்தது. அவள் களத்துக்கு ஓடோடி வந்தாள்.
தன் மகனை எடுத்து மடியில் வைத்தாள். மகனே! நீயே என் மூத்தமகன். உனக்கு பாண்டவர்களாகிய ஐந்து தம்பிமார்களும், துரியோதனன் உள்ளிட்ட நுõறு தம்பிமார்களும் உண்டு. இந்தப் போர் வராமல், நான் உண்மையைச் சொல்லியிருந்தாலோ அல்லது தேவர்கள் சதிசெய்யாமல் இருந்திருந்தாலோ நீயே இந்த உலகத்தின் தலைவனாக இருந் திருப்பாய். மழை தரும் மேகமே வெட்கப்படும் அளவுக்கு தர்மம் செய்தவனே! விதிவசத்தால் நீ மறையப் போகிறாய். என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லையே, எனக் கதறினாள். அவளது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது.
அப்போது, அவளது தனங்களில் பால் சுரந்தது. அதைக் கர்ணனுக்குப் புகட்டினாள். இறப்பின் போது, மனிதர்களுக்கு பசும்பால் கொடுப்பது இன்றைக்கும் சம்பிரதாயம். இறப்பிற்கு பிறகு கூட சமாதியிலோ, சிதையிலோ அதை ஊற்றுகிறோம். அதனால் தான் கோமாதா என்று பசுவைத் தாயாகக் கருதி அழைக்கிறோம். ஆனால், இந்த உலகத்திலேயே தாய்ப்பால் குடித்து மரணத்தைச் சந்தித்த ஒரே ஜீவன் கர்ணன் மட்டுமே! எல்லாம் தர்மத்துக்கு கிடைத்த பலன்! அவனை போல் இல்லாவிட்டாலும், சராசரி தர்மவானாகவாவது இருக்கவேண்டும் என்பதே மகாபாரதம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து. தாய்ப்பால் குடித்த கர்ணனின் உயிர் ஒரு ஒளிப்பிழம்பாக மாறி, அவனது தந்தை சூரியனைச் சேர்ந்தது. அவனது இழப்பைத் தாங்க முடியாத சூரியன் மேற்குக் கடலில் மறைந்து விட்டான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டப்பதவிக்காகச் சென்றது. அவனை வரவேற்கும் வகையில் தேவர்கள் ஆரவாரம் செய்தனர். துந்துபி என்னும் இசைக்கருவி முழங்கியது. துரியோதனன் கலங்கிப் போய்விட்டான்.
கர்ணா! என் அன்பு நண்பனே! உன்னை இழந்த பிறகு இந்த ராஜ்யம் எதற்கு? இந்தப் போர் எதற்கு? யாருடைய துணையுடன் இந்த ராஜ்யத்தை நான் ஆள்வேன்? நீயும் போய்விட்டாய். 99 தம்பிமார்களும் போய்விட்டார்கள். பீமனுடன் போர் செய்ய வேண்டியது மட்டும் இல்லாவிட்டால், இப்போதே உன்னோடு வந்திருப்பேன். பீமனை ஒழித்து விட்டு இதோ நானும் வந்து விடுகிறேன், என்று கதறினான். கர்ணனை தங்கள் தாய் மடியில் கிடத்தி அழும் காரணத்தைத் தெரிந்து கொண்ட பாண்டவர்கள் நடுங்கி விட்டார்கள். சொந்த சகோதரனையே கொன்ற பாவிகளாகி விட்டோமே என்று கதறினார்கள். அண்ணனைக் கொன்று கிடைக்கும் இந்தப்பதவி தேவை தானா என்று கண்ணீர் வடித்தார்கள்.
சகோதர ஒற்றுமை குறைந்து விட்ட இக்காலத்தில், இந்தக் கட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும். ஒருவர் இருக்கும்போது அவரது அருமை தெரியாது. ஒரு கஷ்டம் வந்த பிறகு தான், ஐயோ, அண்ணனைப் பிரிந்தோமே, தம்பியைப் பிரிந்தோமோ என்று மனம் வலிக்கும். மகாபாரதம் சகோதர ஒற்றுமையை வலியுறுத்துகிறது. வீட்டுக்குள் மட்டுமல்ல, நாட்டிலும், உலகத்திலும் கூட இந்த ஒற்றுமை வேண்டும். ஒருவரை ஒருவர் சகோதரராக மதித்தால், உலகத்தில் கஷ்டமேது? அம்மாவிடம் சென்ற பாண்டவர்கள், தங்களிடம் கர்ணனைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காக வருந்தினார்கள்.உலகத்தில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு தெரியாமல் தவறு செய்தது இதுவே முதல் முறை. இப்படி ஒரு கொடுமையை எங்கும் நாங்கள் பார்த்ததில்லை, என்று பெற்றவளிடம் முதன்முறையாக சற்று கடுமையாகவே பேசினார்கள்.
பீமன் கர்ணனின் முகத்தைப் பார்த்து, அண்ணா! நாங்கள் ஐவரும் உமக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால், எங்களைத் தவிக்கவிட்டு எமலோகம் சென்றீரே! என வருந்தினான். அர்ஜுனன், என் கண்ணையே நான் குத்திக்கொண்டேனே! நான் எய்த அம்பு எனக்கே தீமை செய்கிறது என்று எண்ணிக்கூட பார்க்கவில்லையே, என்றான்.அர்ஜுனனின் இந்தப்புலம்பலில் ஒரு தத்துவம் புதைந்து கிடக்கிறது. அது என்ன?
ஒருவர் பிறருக்குத் துன்பம் செய்ய நினைக்கும்போது, அது தன்னையே தாக்கும் என்பதை உணர வேண்டும். அந்த நிலைமையில் தான் அர்ஜுனன் இருந்தான். இப்போது அனைத்து சகோதரர்களின் பார்வையும் கண்ணபிரான் மீது திரும்பின. அவர்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர். நகுலன் கிருஷ்ணரிடம், ஏ கண்ணா! கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி யிடம் பால் குடிப்பது போல் நாடகமாகி, அவளது உயிரைக் குடித்த பைத்தியக்காரன் தானே நீ! எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இப்படி செய்திருப்போமா! என்றான். சகாதேவன், இரண்யனையும் அவனது மகன் பிரகலாதனையும் விரோதியாக்கி மகன் மூலமே தந்தையைக் கொன்றாய். ராமனாக வந்து ராவணனுக்கும், அவன் தம்பி விபீஷணனுக்கும் பகையை உண்டாக்கி ராவணனை அழித்தாய்.
அதுபோல் எங்கள் விரலைக் கொண்டே எங்கள் கண்களைக் குத்தினாய். ஒரு வார்த்தை இவன் உங்களது அண்ணன் என்று சொல்லியிருந்தால் எங்கள் கர்ணன் அண்ணாவை இழந்திருப்போமாஎன்று கதறினான். இப்படியாக, பெரும் சோகத்துடன் அன்றையப் போர் முடிந்தது. துரியோதனன், கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்த சல்லியனை தனது படைத்தலைவனாக நியமித்தான். சல்லியனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்றோடு பாண்டவர்களை அழித்து போரை முடிப்பேன் என சபதம் செய்தான். பாண்டவர் தரப்பில் பீமன் களத்தில் புகுந்தான். துரியோதனனை கொன்றே தீர வேண்டும் என்பது அவனது அன்றைய சபதம். தர்மர் எதிர்தரப்பு அணிவகுப்பைக் கண்டு அதிசயித்து, இந்த வியூகத்தை அளவில் குறைந்த நமது சேனை எப்படி வெல்ல முடியும்? என்று கிருஷ்ணரிடம் கேட்டார்.
கிருஷ்ணர் சிரித்தார்.
தர்மரே! நல்ல கேள்வி கேட்டீர். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வீராதிவீரர் களை ஜெயித்த நீர், சல்லியனைப் பார்த்து பயப்படுகிறீரே! இந்தப் படையின் உதவியுடன் தானே அவர்களைக் கொன்றீர்! முதலில் உமது படை மீது நம்பிக்கை கொள்ளும். சல்லியன் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. உமது தம்பிகளை விட வலிமையானவன். அவனை ஜெயிக்க உங்களால் முடியாது என்பது நிஜம். ஆனால், நான் சொல்வதைப் போல செய்ய வேண்டும். மாவீரன் அஸ்வத்தாமனுடன் அர்ஜுனன் போர் செய்ய வேண்டும். சகாதேவன் சகுனியுடன் மோத வேண்டும். நகுலன் கர்ணனின் பிள்ளைகளுடன் போரிட வேண்டும். நீயும் பீமனும் இணைந்தால் சல்லியனைக் கொன்று விடலாம். இது நிச்சயம், என்றார்.
கண்ணபிரான் சொன்னால் அதற்கு மறுபேச்சு ஏது? அது அப்படியே நடந்து விடுமே.போர் தொடங்கியது. கிருஷ்ணர் வகுத்த வியூகப்படி அவரவருக்குரிய வீரர்களுடன் பாண்டவர்கள் மோதினர். கர்ணனின் புத்திரர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திரகீர்த்தி ஆகியோரை நகுலன் கொன்றான். சகுனியையும், அவனது புத்திரர்களான உலுõகன், சைந்தவனை சகாதேவன் விரட்டியடித்தான். இந்நேரத்தில் பீமனும், சல்லியனும் சமஅளவு பலத்துடன் மோதினர். நகுலனும், சகாதேவனும் பீமனுடன் சேர்ந்து சல்லியனைத் தாக்கினர். சல்லியனோ எதற்கும் அஞ்சவில்லை. மூவர் மீதும் பாணங்களை எய்தான். அவர்கள் தளர்ந்து போனது கண்டு ஏளனமாக சிரித்தான். இதுகண்டு ஆத்திரமடைந்த பீமன், சல்லியனைச் சுற்றி பாதுகாப்பாக நின்ற பலநாட்டு அரசர் களைக் கொன்று குவித்தான். சல்லியன் இப்போது பலமிழந்து நின்றான். இதற்குள் அஸ்வத்தாமனை புறமுதுகிட்டு ஓடச்செய்த அர்ஜுனனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
தர்மர் அவர் களையெல்லாம் விலக்கிவிட்டு, ஒருவனுக்கு ஒருவன் என்ற ரீதியில் சல்லியனுடன் போரிட்டார். கடும் கோபத்துடன் வேல் ஒன்றை எடுத்து வீசினார். அந்த வேல் சல்லியனின் தலையைத் துண்டித்தது. சல்லியன் இறந்ததும், வருத்தமடைந்த துரியோதனன் தன் படையுடன் தர்மருடன் மோதினான். அவனுடன் ஜயகந்தன், ஜயவர்மா, ஜயத்ரதன், ஜயவிந்து, ஜய விக்ரமன், ஜயசேனன், சேநாவிந்து ஆகியோர் வந்தனர். அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தான் பீமன். தம்பியரை தன் கண் முன்னாலேயே இழந்த துரியோதனன் அடைந்த சோகத்திற்கு அளவேயில்லை.பின்னர், ஜயசூரன், பலசேனன், சித்ரவாகு, சித்திரன், உத்தமவிந்து என்ற துரியோதனனின் தம்பிகள் அவனுடன் இணைந்தனர். அவர்களையும் மிக வேகமாக சொர்க்கத்தை தழுவ வைத்தான் பீமன். ஒரே நேரத்தில் 12 சகோதரர் களை பறிகொடுத்தால் என்னாகும்? துரியோதனன் மேலும் மனம் தளர்ந்தான். இதையடுத்து உத்தமன், உதயபானு, பலவர்மா, கீர்த்தி, பிரபலநாதன், சீலன், சுசீலன், விக்ரமபாகு, பலபீமன் என்ற ஒன்பது தம்பிமார்கள் களத்தில் புகுந்தனர். அவர்களை ஒரு வினாடி நேரத்தில் பீமன் விண்ணுலகம் அனுப்பிவிட்டான்.
இப்படி பீமனின் பராக்கிரமத்தை பார்த்து போர்க்களத்திலுள்ள இருதரப்பினருமே ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர் அவனை மனதுக்குள் வெகுவாகப் பாராட்டினார். இதுகண்டு எஞ்சிய மற்ற சகோதரர்கள் பீமனுடன் ஒன்றாக இணைந்து போருக்கு வர, அவர்களும் அழிக்கப்பட்டனர். கவுரவர் என்ற வம்சமே அன்று அழிந்தது துரியோதனனைத் தவிர! துரியோதனன் இதைப் பார்த்து அழுதே விட்டான். அழுதென்ன பலன்! வம்பு செய்பவனுக்கும், பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவனுக்கும், அண்ணி என்றும் பாராமல் பெற்றவளுக்கு சமமான பெண்ணை அவமானப்படுத்தியதற்கும் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்! அவன் சோர்ந்து நின்ற வேளையில். இத்தனைக்கும் மூல காரணமான பாழாய்ப் போன சகுனி,துரியோதனனிடம் வந்தான்.
மருமகனே! கவலை கொள்ளாதே. போர்க்களத்தில் இது சகஜம். நீ நீடுழி வாழ வேண்டுமானால், நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நம்மீடம் கிருதவர்மா, கிருபாச்சாரியார் போன்ற வீரர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் வலிமையில் குறைந்தவர்களா என்ன! நானும் வருகிறேன். நாம் எல்லாருமாக தர்மரைத் தாக்குவோம், என்றான்.அந்தக் கொடியவனின் பேச்சைக் கேட்டு, ஏற்கனவே சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டுக்கு சம்மதித்த துரியோதனன், இதற்கும் சம்மதித்தான்.
சகுனி இம்முறை பெரும் போராட்டத்தில் இறங்கினான். பீமனுக்கும் சகுனியைச் சுற்றி நின்ற படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பீமன் வழக்கம் போல் அவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனனுக்கு பயம் அதிகரித்தது. ஆனால், சகுனி சற்றும் தைரியம் குறையாமல், மருமகனே! கவலை கொள்ளாதே. ஒட்டுமொத்த சேனையையும் இங்கே திருப்பு. நாம் பீமனைக் கொன்று விடலாம், என்று கொக்கரித்தான். அப்போது சகாதேவன் வேகமாக வந்து, சகுனியின் மீது அம்பொன்றை எய்தான். ஆனால், துரியோதனன் சகாதேவன் மீது வேல் ஒன்றை எறியவே, அவன் மயங்கி விழுந்தான். இப்படியாக கடைசிநாள் போரும் விடாப்பிடியாக தொடர்ந்தது. ஒரு வழியாக பாண்டவர்களின் கை ஓங்க, கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் போன்ற மாவீரர்களெல்லாம் ஒடுங்கிப் போனார்கள். சகுனி மட்டும் மிகத்தீவிரமாக போரிட்டான். அவனை அழிப்பது தன் வேலை என சகாதேவன் சபதம் செய்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அவன், கண்ணபிரானால் தனக்கு தரப்பட்ட வேலை எடுத்து சகுனி மீது எறிந்தான்.
அது அவனது சபதத்தை நிறைவேற்றியது. அந்தக் கொடுமைக்காரனின் வாழ்வை அந்த வேலாயுதம் முடித்துவிட்டது. இவ்வளவு பெரிய போர்... வரலாற்றில் இன்றும் பேசப்படும் போர், லட்சக்கணக்கான உயிர்களைக் கொள்ளை கொண்ட போர் நடக்க காரணமானவனும், அண்ணன், தம்பிகளைப் பிரித்தவனுமான சகுனியின் வாழ்வு முடிந்தது பாண்டவர்களுக்கு பெரும் ஆனந்தத்தை இழந்தது. தாய்மாமனைப் பறிகொடுத்த துரியோதனன் வேரற்ற மரம் போல் ஆனான். இனி தன்னைக் காக்க வல்லவர் யாரும் இல்லை என்பது அவனுக்கே தெரிந்து விட்டது.
அப்போது அவனுக்குள் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அவன் முகம் மலர்ந்தான். ஆம்... ஆம்... சஞ்சிவினி மந்திரத்தைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம். இந்த மந்திரத்தின் துணையுடன் இறந்து போன என் படைகளை அனுப்பிவிட்டால் மீண்டும் முழுபலத்துடன் அவர்களுடன் மோதலாம். அசுரகுருவான சுக்ராச்சாரி யாருக்கு மட்டுமே தெரிந்த இந்த மந்திரத்தை கசன் என்ற சீடன் மூலம் தேவகுரு பிரகஸ்பதி கற்றார். அதை அவர் மற்ற முனிவர்களுக்கு சொல்லித் தந்தார். அதில் ஒரு முனிவர் மூலம் நான் கேட்டறிந்தேன். அதை இப்போது பயன்படுத்தினால் என்ன! அவன் தனக்குள் ளேயே சொல்லிக்கொண்டான். தன் கிரீடத்தை கழற்றிவிட்டு, கதாயுதத்துடன் மட்டும் ஒரு தடாகத்தை நோக்கி அவன் சன்றான். நீருக்குள் மூழ்கி, மூச்சையும் மனதையும் அடக்கி சஞ்சிவினி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது சஞ்சய முனிவர் அங்கு வந்தார். அவர் மூலமாக, துரியோதனன் நீருக்குள் மறைந் திருக்கும் விபரத்தை கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் ஆகியோர் அறிந்தனர். அவர்கள் துரியோதனனுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி வெளியே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அஸ்வத்தாமன் அவனிடம், இன்றே நான் நம் பகைவர்களை ஒழிப்பேன். அவ்வாறு செய்யாவிட்டால் இன்றுமுதல் நிச்சயம் நான் வில்லைத் தொடமாட்டேன், நான் துரோணரின் புத்திரனும் இல்லை, என்று ஆவேசமாகப் பேசினான். கிருபரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். துரியோதனன் வருவதாகத் தெரியவில்லை.
இந்த விஷயம் பீமன் மூலமாக கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் பாண்டவர்களிடம், துரியோதனனின் இந்த மந்திரம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும். பின்னர் அவன் தீவிரமாக போரிட சிந்தித்திருக் கிறான் என்று எண்ணுகிறேன், என்றார். இதுகேட்ட பீமன் ஆவேசமாக அந்தப் பொய்கைக்குச் சென்றான். அவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் குளக்கரையில் நின்று பேசினான். துரியோதனா! சுத்தவீரன் எவனாவது தண்ணீரில் போய் மறைந்து கொள்வானா? நீ கோழை என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்க முடியும்? நீ எங்கு போய் ஒழிந்தாலும் சரி...என் கையால் தான் உனக்கு அழிவு. உன் தலையை எடுப்பேன். தேவலோகத்துக்கு அனுப்புவேன். அங்கே உன் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல தேவமாதர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி ஒளிந்து கொள்ளும் நீயா, இந்த பூமியை அரசாள ஆசைப்படுகிறாய். கோழைகளுக்கு ஏனடா நாடு? இப்போது நான் ஆக்னேயாஸ்திரத்தை விடுவேன். அது இந்த தடாகத்திலுள்ள தண்ணீரை அப்படியே உறிஞ்சிவிடும். உன்னைக் கொல்வேன், என்றான். இதுகேட்டு உள்ளிருந்த துரியோதனனுக்கு உணர்ச்சி கிளர்ந்து ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.
அவன் மந்திரம் ஜெபிப்பதை விட்டுவிட்டு, தண்ணீருக்குள் இருந்து ஆவேசமாக வெளியே வந்தான். துரியோதனனின் கையில் இருந்த கதாயுதம் கண்ட பீமன், தானும் கதாயுதத்தால் மட்டும் போர் செய்ய முடிவெடுத்தனர். அந்நேரத்தில், தீர்த்த யாத்திரை சென்றிருந்த கிருஷ்ணரின் அண்ணன் பலராமனும், துரியோதனின் சித்தப்பா விதுரரும் அங்கே வந்தனர். இருதரப்பாரும் அவர்களை வரவேற்றனர்.அவர்கள் தங்கள் தீர்த்த யாத்திரை குறித்த விபரங்களை அங்கிருந்தோரிடம் எடுத்துக் கூறினர். அவர்கள் அதுகேட்டு மகிழ்ந்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர், கண்ணபரமாத்மா அவர்களிடம் 18 நாட்களாக நடந்து வந்த போரைப் பற்றி விவரித்தார். பின்னர், பீமனும், துரியோதனனும் போர் செய்ய தகுந்த இடம் ஒன்றைத் தேர்வு செய்து தரும்படி பலராமனிடம் கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரே இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என பலராமன் கூற, பரசுராமரால் கொல்லப் பட்ட அரசர்களின் ரத்தம் நிறைந்த இடமான ஸ்யமந்த பஞ்சகம் என்னும் இடத்தை கிருஷ்ணர் தேர்வு செய்தார்.
உடனடியாக தன் தம்பிமார் நால்வரும் புடைசூழ படையினருடன் தர்மர் ஸ்யமந்த பஞ்சகம் புறப்பட்டார். துரியோதனனோ, அத்தனை தம்பிகளையும் இழந்து விட்ட நிலையில் தனித்து கிளம்பினான். தம்பியரோடு செல்லும் தர்மரை ஏக்கத்துடன் பார்த்தான். தர்மர் அதைக் கவனித்து விட்டார். தன் தேரை விட்டு இறங்கி, துரியோதனனிடம் சென்றார். என் அன்புத்தம்பியே, என ஆரம்பித்தார்.
துரியோதனா! இந்தப் போர் தேவையில்லை. இந்த தேசத்தை நான் ஆண்டால் என்ன! அல்லது நீ ஆண்டால் என்ன! உன் தலைமையிலேயே ஆட்சி நடக்கட்டும். உனக்கு ஏவல் செய்யும் காவலர்களாக நாங்கள் ஐவரும் விளங்குகிறோம். இந்தச் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று எதிர்கால உலகம் பாராட்டட்டும். நீயே இந்த ஆட்சியை எடுத்துக் கொள்கிறாயா? என்று பெருந்தன்மையுடன் கேட்டார். தர்மர் என்று இவருக்கு பெயர் வந்ததன் காரணமே இதுதான். எவ்வளவு நல்ல குணம்! இவர்கள் ஐவரும் சேர்ந்தால் துரியோதனனை ஒரே நிமிடத்தில் பொடியாக்கி விட்டு, ஆட்சியை இப்போதே எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், தர்மர் துரியோதனனை பெரியப்பா மகன் என எண்ணாமல், உடன் பிறந்தவனாகவே கருதி சொன்னார். ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், யார் நல்லதைச் சொன்னாலும் கேட்கமாட்டான். துரியோதனனுக்கு விதி முடிய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. முடியவே முடியாது. என் தம்பிகளையும், உறவினர்களையும் போரில் இழந்தேன். இப்போது, நீ இடும் இந்த பிச்சையை வாங்கி உயிர் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அதை விட போரில் உயிர்விட்டு, காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் உணவான புண்ணியத்தையாவது பெறுவேன், என மறுத்து விட்டான் துரியோதனன். ஸ்யமந்தக பஞ்சகத்தை அடைந்ததும் பீமனுக்கும், துரியோதனக்கும் போர் ஆரம்பமானது. கதாயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். நீண்டநேரம் போர் தொடர்ந்ததே தவிர, யாருமே சளைத்ததாகத் தெரியவில்லை. அப்போது துரியோதனன், பீமா! உன் உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பதை மறைக்காமல் சொல், என்றான்.
தர்மரின் தம்பிக்கு சொல்லிக் கொடுத்தாலும் பொய் சொல்லத் தெரியுமா? துரியோதனனை என் உடன் பிறந்தவனே என பாசத்துடன் அழைத்து, என் தலையில் தான் உயிர் இருக்கிறது என்றான். அதைக் கேட்டது தான் தாமதம். துரியோதனன் பீமனின் தலையில் இடியென கதாயுதத்தால் தாக்கினான். பீமன் சுருண்டு விட்டான். சற்றுநேரம் கழித்து சுதாரித்து, துரியோதனா! நான் உள்ளதைச் சொன்னது போல், உன் உயிர்நிலை எங்கிருக்கிறது சொல், என்று கேட்டான். பண்பாடு என்றால் என்னதென்றே தெரியாத துரியோதனன், அது நெற்றியில் இருக்கிறது, என்று பொய் சொன்னான். பீமன் அதை நம்பி அவன் நெற்றியில் தாக்க ரத்தம் பெருகி மயங்கிச் சாய்ந்தான் துரியோதனன். ஆனாலும், அவனை பீமன் கொல்லவில்லை. அவன் இளைப்பாற நேரம் கொடுத்தான். சற்றுநேரம் கழித்து மீண்டும் போர் தொடங்கியது. பீமனுக்கு தொடர்ந்து தலையில் அடி விழுந்ததால் அவன் பலமிழந்து சோர்ந்தான். அப்போது அர்ஜுனன் கிருஷ்ணரிடம், கண்ணா! இதென்ன விபரீதம்! பீமன் இறந்து விடுவான் போலிருக்கிறதே! நீ அவனைக் காப்பாற்ற வழி செய், என்றான். கிருஷ்ணர் அவனிடம், அர்ஜுனா! இவர்கள் உயிரை இழந்துவிடுவார்களோ என பயப்படாதே. எத்தனை நாள் போர் நடந்தாலும் சரி... இவர்கள் சாகமாட்டார்கள். இருவருக்கும் போர் நடக்கும் இந் நேரத்தில் என்னால் எந்த உதவியும் உங்களுக்கு செய்ய இயலாது. ஆனால், ஒன்றை மட்டும் உன்னிடம் சொல்கிறேன். துரியோதனனின் தொடையில் தாக்கினால் அவன் இறந்து போவான், என்றார். உடனே அர்ஜுனன், தனது தொடையில் கை வைத்து பீமனுக்கு ஜாடை காட்டினான். பீமன் அதைப் புரிந்து கொண்டு, துரியோதனனின் தொடையில் கதாயுதத்தால் தாக்கினான். துரியோதனன் சுருண்டு விட்டான். அந்த நிலையிலும், பீமனைக் கடுமையாகத் தாக்கினான்.
கிருஷ்ணரை நோக்கி, ஏ கிருஷ்ணா! உன்னைப் போல் இழிந்தவன் எவனும் இந்த பூமியில் இல்லை. எனது உயிர்நிலையை அர்ஜுனன் மூலம் பீமனுக்கு சொன்னாய். அதனால், பீமன் என்னை குறிவைத்து தாக்குகிறான். பல துரோகங்களைச் செய்தே இந்தப் போரில் நீ பாண்டவர்களை வெற்றி பெற வைத்தாய், என்று பெருமூச்சுடன் கத்தினான். இச்சமயத்தில் பீமன் துரியோதனனின் தொடையில் ஓங்கி ஓங்கி மிதித்தான். இக்காட்சியைக் கண்ட கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் கொதித்துப் போனார்.கண்ணா! நீ செய்தது முறையல்ல! கதாயுதப் போர் விதிப்படி தொடைக்கு மேல் தான் அடிக்க வேண்டும், ஆனால், நீ அர்ஜுனன் மூலம் செய்த சைகையால் போர் விதிக்கு மாறாக பீமன் துரியோதனனை தொடைகளில் தாக்குகிறான். தலையில் மிதிக்கிறான். விதியை மீறிய பீமனை நான் கடுமையாகத் தாக்கி விரட்டியடிக்கப் போகிறேன், என்றார். கிருஷ்ணர் வேகமாகச் சென்று பலராமரைத் தடுத்தார்.அண்ணா! தாங்கள் கோபிக்க வேண்டாம். இந்த 18 நாள் போரில் துரியோதனன் செய்த வஞ்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. மேலும், வில்லாசிரியர் மைத்ரேயரும், திரவுபதியும் இட்ட கொடிய சாபங்களும் இப்போது அவனைத் துன்புறுத்துகின்றன. இத்தனை நாளும் பாண்டவர்கள் தவறு செய்யவில்லை. இன்று ஒருநாள் மட்டும் மாறுபட்டதை பெரிய பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள், என்றார்.
இதுகேட்டு பலராமன் அமைதியடைந்தார். இதற்குள் துரியோதனனை பீமன் துவம்சம் செய்து விடவே அவன் உயிர் போகும் நிலையில் கிடந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்து அழுதான். துரியோதனனை மார்புற அணைத்து, நீ என்னை ஆரம்பத்திலேயே படைத்தலைவனாக நியமித்திருந்தால் இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. பீஷ்மர், துரோணர், விதுரர் சொன்ன அறிவுரைகளையும் கேட்க மறுத்தாய். அதனால் இன்று இந்த நிலைக்கு ஆளானாய். இருந் தாலும், என் சபதத்தைக் கேள்! உனக்காக இன்னும் போராடுவேன். இன்று இரவுக்குள் பாண்டவர் களை அழிப்பேன், என சபதம் செய்தான். துரியோதனன் தனது மணிமுடியை அவனுக்குச் சூட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான். அஸ்வத்தாமன், கிருபாச்சாரியார், கவுரவர் படையின் தேர்ப்படை தளபதி கிருதவர்மா ஆகியோர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். அவர்கள் பாண்டவர்களின் பாசறையை அடைந்தனர். அவர்கள் உள்ளே நுழையவும், பாசறைக்குள் இருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அதன் தாக்குதலை அந்த மூவராலும் தாங்கமுடியவில்லை. யார் அந்த உருவம்?
கிருஷ்ணரால் பாண்டவர் பாசறையை பாதுகாக்க ஒரு பூதம் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தப் பூதம் தன் முன் வந்தவர்களை பாசறைக்குள் நுழையமுடியாதபடி தடுத்து விரட்டி விட்டது. ஒரு மரத்தடியில் தங்கிய அவர்கள், அதை மீறி பாசறைக்குள் எப்படி நுழைவதென ஆலோசித்தனர். அஸ்வத்தாமன் அவர்களிடம், துரியோதனனிடம் எப்படியாவது பாண்டவர்களை அழித்து விட்டே திரும்புவோமென சபதம் செய்து விட்டு வந்துள்ளோம். அவனும் நமக்காக ஆவலுடன் காத்திருப்பான். இந்தப் பூதத்தைக் கண்டு பயப்படுவதை விட, அதை அடக்கிவிட்டு உள்ளே நுழைய முயல்வோம். அந்த முயற்சியில் நாம் இறந்தாலும் சரியே, என்றான். இக்கட்டான நேரத்தில் இறைவனே தங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அனைவரும் சிவபூஜை நடத்த முடிவெடுத்தனர். இந்த பூஜை நமக்கு நன்மையைத் தந்தாலும் சரி, தராவிட்டாலும் பரவாயில்லை. சிவபூஜையால் மிகுந்த புண்ணியம் சேரும், என அஸ்வத்தாமன் கிருபாச்சாரியாரிடம் கூறினான். பின்னர், சிவபெருமானை முறைப்படி பூஜித்தான். அவனது பூஜையை ஏற்று சிவபெருமானே அவனுக்கு காட்சி தந்தார்.
அஸ்வத்தாமன் இழந்த பலத்தையெல்லாம் பெற்றவன் போல் உற்சாகமானான். அவரிடம், ஐயனே! எதிரிகளை அழிக்கும் ஆயுதம் ஒன்றைத் தந்தருளுங்கள், என அவரிடம் வேண்டினான். சிவபெருமானும் அவனுக்கு ஆயுதம் வழங்கி மறைந்தார்.தான் பெற்ற ஆயுதம் மிக உயர்ந்தது என்பதால், மிக்க தைரியத்துடன் அஸ்வத்தாமனும், மற்றவர்களும் பாசறைக்குள் நுழைந்தனர். கிருஷ்ணர் நியமித்த பூதம் அவர்களைத் தடுத்தது. அதன் முன்னால் சிவாயுதத்தை அஸ்வத்தாமன் துõக்கவே, பயந்து போன பூதம் அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் கிருபாச்சாரியாரையும், கிருதவர்மாவையும் பாசறை வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு, அஸ்வத்தாமன் பாசறைக்குள் புகுந்தான். தன் தந்தை துரோணரை கொன்றவனும், திரவுபதியின் சகோதரனுமான திருஷ்டத்யும்னன் ஓரிடத்தில் உறங்குவதைக் கண்டான். அஸ்வத்தாமனுக்கு ஆத்திரம் பொங்கியது. துõங்கிக் கொண்டிருந்தவனை ஆத்திரத்தில் வெட்டிக் கொன்றான்.
அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு, திருஷ்டத்யும்னனின் சகோதரன் சிகண்டி முதலானவர்கள் விழித்தனர். அவர்களை பெரும் சோகம் கவ்வியது. சோகம் கோபமாக மாற அவர்கள் அஸ்வத்தாமனுடன் போரிட்டனர். தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் அஸ்வத்தாமன் கொன்று குவித்தான். ஓரிடத்தில், பாண்டவர் களின் பிள்ளைகள் ஐந்துபேரும் படுத்திருந்தனர். அவர்கள் தோற்றத்தில் பாண்டவர்களை போலவே இருந்தனர். அஸ்வத்தாமன் ஏமாந்து விட்டான். அவர்கள் பாண்டவர்கள் தான் என நினைத்து, ஐந்து பிள்ளைகளின் தலையையும் துண்டித்து ஆர்ப்பரித்தான். பாசறை அல்லோகலப்பட்டது. பல தேசத்து மன்னர்களும் ஒன்று சேர்ந்து அஸ்வத்தாமனை எதிர்த்தனர். ஆனால், சிவாயுதத்தின் முன்னால் யாருடைய தலையும் பிழைக்கவில்லை. அஸ்வத்தாமன் வெற்றிக்களிப்புடன் ஆனந்தமாக இருந்தான். பாண்டவர்களின் தலைகள் என நினைத்து, பாண்டவர் பிள்ளைகளின் தலைகளை கையில் எடுத்துக் கொண்டு பாசறைக்கு வெளியே வந்தான். கிருபரையும், கிருதவர்மாவையும் அழைத்துக் கொண்டு, துரியோதனன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்குச் சென்றான்.
அந்த தலைகளை துரியோதனன் முன்னால் வத்தான். பாண்டவர்கள் இறந்தார்கள், அவர்களின் தலைகளைப் பாருங்கள் என்றான். துரியோதனன் ஆவலுடன் அவற்றைப் பார்த்து, அஸ்வத்தாமா! ஏமாந்து விட்டாய். இவர்கள் பாண்டவர்கள் அல்ல! அவர்களை போலவே இருக்கும் அவர்களது பிள்ளைகள், என்றான். அஸ்வத்தாமன் திர்ந்து போனான். துரியோதனன் அவனிடம், அஸ்வத்தாமா! நீ பிராமணன். அப்படியிருந்தும், சிறுவர்களை அழித்து உன் வீரத்துக்கு களங்கத்தை தேடிக்கொண்டாய். அதுமட்டுமல்ல! இப்போது என் பரம்பரையிலும், பாண்டவர் பரம்பரையிலும் வாரிசுகளே இல்லாமல் போயிற்று. இனி, நீ போர் செய்ய வேண்டாம். நான் மடிவது உறுதி. நீ கிருபருடன் சென்று தவம் மேற்கொள், என்று சொல்லி அனுப்பி விட்டான். பின்னர் சஞ்சயமுனிவரை அழைத்த துரியோதனன், தாங்கள் என் தந்தையிடம் சென்று, பாண்டவர்களுடன் இணைந்து ராஜ்யத்தை ஆளச் சொல்லுங்கள். பிள்ளைகளை இழந்த என் தாய்க்கு ஆறுதல் சொல்லுங்கள். பேச்சில் தங்களை விட வல்லவர் யாருமில்லை, என்றான். பின்னர் அவரது திருவடிகளை வணங்கி, தன் உயிரை நீத்தான்.
தவம் செய்யச் சென்ற அஸ்வத்தாமன் வியாசரைச் சந்தித்து, தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கேட்டுத் தெரிந்து அங்கு கிளம்பினான். சஞ்சயமுனிவர் துரியோதனன் இறந்த விபரத்தை திருதராஷ்டிரனிடம் தெரிவித்தார். அவனும், காந்தாரியும் புலம்பி அழுதனர். அன்றிரவில், காட்டில் பாண்டவர்களுடன் தங்கியிருந்த கிருஷ்ணர் மறுநாள் காலையில் பாசறைக்கு வந்தார். அங்கே தங்கள் பிள்ளைகள் தலையின்றியும், மன்னர்களும் இறந்து கிடப்பது கண்டு அவர்கள் கலங்கினர். திரவுபதி தலையற்ற அந்த உடல்களைக் கட்டியணைத்து கதறினாள்.ஐந்து பெற்றும் ஒன்றுமில்லாமல் போனேனே, என அவள் கதறுவதைக் கண்டு, அஸ்வத்தாமனை அழித்தே தீருவோம் என அர்ஜுனனும், பீமனும் சபதம் செய்துகிளம்பினர். கிருஷ்ணர் அவர்களைத் தடுத்தார்.அர்ஜுனா, பீமா! அபாண்டவம் என்னும் ஒரு அஸ்திரம் அஸ்வத்தாமனிடம் உள்ளது. சிவனருளால் அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் முன் யாராலும் நிற்க முடியாது. நீங்கள் அங்கு சென்றால் உயிர் விடுவது உறுதி, என்றவர், திரவுபதியிடம், தங்கையே! விதியை வெல்பவர் யாருமில்லை. நீ மனதைத் தேற்றிக் கொள், என்றார். பின்னர் தர்மர், கர்ணன், துரியோதனன் மற்றும் சகோதர்கள் அனைவருக்கும் ஈமச்சடங்குகளைச் செய்தார். அவர்கள் அனைவரும் அரண்மனைக்குப் புறப்பட்டனர்.
இதனிடையே உயிருக்குப் பயந்து ஓடிய அஸ்வத்தாமனை அர்ஜுனன் பின் தொடர்ந்தான். அவனிடமிருந்து தப்பிக்க கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு யோசனை சொன்னார். அர்ஜுனா! அந்த அஸ்திரம் உன்னை அழித்து விடும். பதிலுக்கு, நீயும் உன்னிடமுள்ள பிரம்மா ஸ்திரத்தை விடு, என்றார். அப்போது வேதவியாசர் அங்கு வந்தார். கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! என்ன இது விளையாட்டு! இரண்டு பிரம்மாஸ்திரங்கள் மோதினால் உலகமே அழிந்து விடும் என்பது உனக்குத் தெரியாதா! காக்கும் கடவுளே! நீயே இப்படி செய்யலாமா? என்றார். தாங்கள் சொல்வது சரிதான்! அர்ஜுனன் அழிந்தால் தர்மம் தோற்றதாக ஆகிவிடுமே! தர்மத்துக்குப் புறம்பாக பிராமணனாகிய அஸ்வத் தாமன் இந்த அஸ்திரத்தை எய்தான். பிராமணனே இப்படி செய்தால் உலகம் ஏது? சரி... இப்போது நீங்களே சொல்லுங்கள், உலகத்தைக் காக்கும் உபாயம் பற்றி... என்றார் கிருஷ்ணர். கிருஷ்ணா! நீ அறியாதது ஏதுமல்ல. அஸ்வத்தாமனுக்கு அஸ்திரத்தை விட மட்டும் தான் தெரியும். அர்ஜுனனுக்கோ விட்ட அஸ்திரத்தை திரும்பப்பெறும் மந்திரமும் தெரியும்.
எனவே அவன் விட்ட அஸ்திரத்தைத் திரும்பப் பெறச்சொல், என்றார் வியாசர். அப்படியானால், அஸ்வத் தாமனின் அஸ்திரம் அர்ஜுனனைக் கொன்று விடுமே, அதற்கென்ன தீர்வு, என்றதும் சிரித்த வியாசர், பரந்தாமா! உன் லீலைக்கு எல்லையே இல்லை, மாயவனே! எல்லாசக்தியும் படைத்த உனக்கா இதற்கான உபாயம் தெரியாது! இரண்டு அஸ்திரமும் அர்ஜுனனின் கைக்கே வந்து சேரும்படி மந்திரத்தைச் சொல்லி விட வேண்டியது தானே! அர்ஜுனனும் பிழைப்பான், உலகமும் பிழைக்கும், என்றார். வியாசரின் புத்திசாலித்தனம் கண்டு கிருஷ்ணருக்கு மிகுந்த ஆனந்தம். அதன்படியே, அர்ஜுனன் இரண்டு அஸ்திரங்களையும் திரும்பப் பெற்றான். இதுகண்டு, அதிர்ச்சியடைந்த அஸ்வத்தாமனை இழுத்து வந்தான் அர்ஜுனன்.அவனை திரவுபதியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான்.
பாஞ்சாலி! உன் ஐந்து புத்திரர்களையும் கொன்றவன் இதோ உன் முன்னால் நிற்கிறான். இவனுக்குரிய தண்டனையை நீயே வழங்கலாம், சொல், இவனைக் கொன்று விடலாமா? என்றான். கருணைக்கடலான பாஞ்சாலி, தலை குனிந்து நின்ற துரோண புத்திரனைப் பார்த்தாள். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கு மரணம் சரியான தண்டனை தான்! ஆனால், இவன் பிராமணன். இவனைக் கொல்வது தீராத பாவத்துக்கு ஆளாக்கும். அது மட்டுமல்ல! இவனது தந்தையிடம் வில்வித்தை பயின்றதால் தான், உங்களுக்கு உலகம் புகழும் சிறப்பு கிடைத்தது. குரு மைந்தனைக் கொல்லக்கூடாது. அது மட்டுமல்ல! துரோணரின் மனைவியும், இவனது தாயுமான கிருபி, கணவர் இறந்த பின்பும், இவனுக்காகத்தான் தன் உயிரை வைத்துக் கொண்டிருக் கிறாள். ஐந்து பிள்ளைகளை இழந்த எனக்குத்தான் குழந்தைகளை இழந்த அருமை தெரியும். என் நிலைமை, அவளுக்கும் வர வேண்டாம், என்று கருணையுடன் சொன்னாள். இதைக் கேட்ட தர்மர் ஆனந்தப் பட்டார். பழிவாங்கும் உணர்வு கூடாது என்பது மகாபாரதம் நமக்கு உணர்த்தும் பெரிய தத்துவம்.ஆனால், பீமன் விடவில்லை.
நம் பிள்ளைகளைக் கொன்ற இவனை விடுவதாவது! என்று ஆர்ப்பரித்தான். அவனுடைய கருத்துக்கு கிருஷ்ணரும் துõபம் போட்டார். ஒரு பிராமணனைக் கொல்லக் கூடாது என்று கட்டளையிட்டவன் நான் தான்! ஆனால், தீ வைப்பவன், பிறர் பொருளையும், மனைவியையும் கவர்பவன், ஆயுதமில்லாமல் நிற்பவனைக் கொல்பவன், விஷம் கொடுப்பவன் ஆகியோரைக் கொல்லலாம் என்று விதிவிலக்கும் தந்துள்ளேன். உறக்கத்தில் இருந்த பிள்ளைகளைக் கொன்ற இவன் பிராமணன் என்ற தகுதியை இழந்து விட்டான். பாஞ்சாலி கொல்லக் கூடாது என்கிறாள். பீமன் கொல்ல வேண்டும் என்கிறான். இதில் முடிவெடுக்க வேண்டியது அர்ஜுனன் தான், என்று அவன் தலையில் பொறுப்பைக் கட்டிவிட்டார். இதைப் புரிந்து கொண்ட அர்ஜுனன், கண்ணா! பிராமணர்களுக்கு குடுமி முக்கியம். அதை எடுத்து விட்டால் அவன் இறந்தவன் ஆவான். மேலும், இந்த அஸ்வத் தாமன் பிறக்கும் போதே தலையில் ரத்தினத்துடன் பிறந்தவன். அது இவனது புகழை பறைசாற்றிற்று. அதையும் நான் எடுத்துக் கொள்ள போகிறேன், என்றவனாய் குடுமியை அறுத்து, ரத்தினத்தை எடுத்துக் கொண்டு விரட்டி விட்டான். பின்னர் அனைவரும் அரண்மனைக்குச் சென்றனர்.திருதராஷ்டிரன் தன் தம்பி புதல்வர்களை வரவேற்றான். ஆனால், மனமெங்கும் வஞ்சகம் சூழ்ந்திருந்தது. குறிப்பாக, தன் மகன் துரியோதனன் அழிவுக்கு காரணமான பீமனைக் கொன்று விட வேண்டும் என்பது அவனது ஆதங்கம். அவனை தன்னருகில் வர வேண்டும் என்றும், அவனது வீரத்தைப் பாராட்டி கட்டியணைக்க வேண்டும் என்றும் கூறினான்.
திருதராஷ்டிரன் பத்தாயிரம் யானை பலமுடையவன். அவன் பீமனைக் கட்டியணைத்தால், பீமன் நொறுங்கி விடுவான் என்று கிருஷ்ணருக்குத் தெரியும். அவர், பீமனைத் தடுத்து விட்டு, ஒரு பெரிய இரும்புத்துõணை திருதராஷ்டிரன் முன்னால் வைத்தார். திருதராஷ்டிரன் அதை பீமன் என நினைத்து இறுக்கமாக அணைக்கவே, துõண் நொறுங்கிவிட்டது. அனைவரும் திருதராஷ்டிரனின் வஞ்சக எண்ணத்தைப் புரிந்து கொண்டாலும், ஏதும் சொல்லவில்லை. பின்னர் தர்மர் அரசாட்சியை ஏற்றார். அர்ஜுனன் மற்றும் சுபத்ரையின் மைந்தனான அபிமன்யு போரில் இறந்தான் அல்லவா! அவனது மனைவி உத்தரை கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு, ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு பரிட்சித்து என்று பெயரிட்ட தர்மர், பேரனிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பின்னர் பாண்டவர்கள் அனைவரும் ராஜ்யம் துறந்து, வைகுண்டப் பதவியை அடைந்தனர்.தர்மம் வாழ்க!
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |