இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மகாபாரதம் - 7

Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).


இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார்! உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். பரமாத்மாவிடம் தானே நேரில் சென்று ஆதரவு கேட்பதென முடிவெடுத்து, துவாரகைக்கு சென்றான். துரியோதனன் தன்னை நோக்கி வருவதை ஞானதிருஷ்டியால் அறிந்த கிருஷ்ணர், ஏவலர்களிடம், துரியோதனன் என்னைச் சந்திக்க வருகிறான். அவன் வந்திருப்பது குறித்து எனக்கு எந்த முன்னறிவிப்பும் தரவேண்டாம். நேரடியாக அவன் உள்ளே வந்து விடட்டும். யாரும் தடுக்கக்கூடாது, என உத்தரவிட்டார்.

கண்ணன் மாயக்காரன். துரியோதனன் மீது அளவற்ற பிரியம் கொண்டிருப்பது போலவும், தன்னிடத்திற்குள் வந்து செல்ல மிகுந்த உரிமையை அவனுக்கு தந்திருப்பது போலவும் காட்டிக் கொள்ளவே இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார். துரியோதனனனும் வந்து விட்டான். அவன் தன்னருகில் வருவதற்குள் தூங்குவது போல நடித்தார் கிருஷ்ணர். அயர்ந்து தூங்குபவர்களை காரணமின்றி எழுப்புவது எவ்வகையிலும் தகாத விஷயம். துரியோதனன், சில விஷயங்களில் நாணயமாக நடந்து கொள்வான். தன் நண்பன் கர்ணன், தனது மனைவி சாவித்திரியின் புடவையைப் பிடித்து இழுத்தபோது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது போல, இவ்விஷயத்திலும் மிகுந்த நாணயத்துடன் நடந்து கொண்டான்.

கிருஷ்ணர் விழிக்கும் வரை காத்திருக்கலாம் எனக்கருதி, அவரது தலைமாட்டின் அருகே போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து விட்டான். அர்ஜுனன் வரட்டுமே என்பதற்காக கிருஷ்ணர் காத்திருந்தார். எல்லாரும் பகவானுக்காக காத்திருப்போம். இங்கே, பகவான் ஒரு மானிடனுக்காக காத்திருக்கிறார். ஏனென்றால், அந்த பக்தன் கடமையே கண்ணானவன், நியாயஸ்தன், தைரியசாலி, கடமை, நியாயம், தைரியம் உள்ளவர்களுக்காக ஆண்டவன் காத்திருப்பான். நியாயமின்மை, பேராசை, பொறாமை ஆகிய குணமுள்ளவர்களைக் கண்டால் பகவான் கண்ணைப் பொத்திக் கொள்வார். துரியோதனன் விஷயத்தில் இதைத்தான் பகவான் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அர்ஜுனன் வந்துவிட்டான். பகவானின் காலடியில் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். நம்ம கண்ணன் சரியான கள்ளன். அர்ஜுனன் வந்தது தெரிந்தும், விழிக்கவில்லலை. துரியோதனன் தவறாக நினைப்பானே! எனவே, சிறிதுநேரம் கழித்தே விழித்தார். எதிரே இருந்த அர்ஜுனனும், தலைமாட்டில் இருந்த துரியோதனனும் ஒருசேர எழுந்து அவரை வணங்கினர். அவரை முன்னால் அர்ஜுனனும், பின்னால் திரும்பிப் பார்த்தபோது துரியோதனனும் நின்றனர்.

நீங்கள் இருவரும் எப்போது வந்தீர்கள்? அடடா உங்களைக் காக்க விட்டேனே, என நாடகமாடிய அந்த நாராயணன், துரியோதனனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பொதுவாக, நாம் பேசிக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு. பாவிகள் பக்கமே பகவான் துணை நிற்கிறார். நாம் எவ்வளவு நல்லது செய்தாலும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. நமக்கு நல்லதும் செய்வதில்லை என்று. பகவான் ஒரு கெட்டவனைக் அணைத்துக் கொள்கிறார் என்றால், அவன் திருந்துவதற்காக நாள் கொடுத்து பார்க்கிறார். திருந்தாதபோது அப்படியே அந்த அணைப்பே அவனுக்கு எமனாகி விடுகிறது. ஆம்... அப்படியே தண்டித்துக் கொன்று விடுகிறார். துரியோதனன் விஷயத்திலும் அதுதான் நடக்கப்போகிறது. அவர்களிடம் என்ன விஷயமாக அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்? என்று தெரியாதவர் போல் கேட்டார். கண்ணா! நாங்கள் நடத்தப் போகும் போரில் உன் ஆதரவு எங்களுக்கு வேண்டும், என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்டனர். இருவரும் கேட்கிறீர்கள். யாராவது ஒருவருக்குத்தானே என்னால் ஆதரவளிக்க முடியும். நீங்கள் இருவருமே எனக்கு வேண்டப்பட்டவர்கள். அதனால்... என இழுத்த கண்ணனை இடைமறித்த துரியோதனன், கிருஷ்ணா! நான் தான் முதலில் வந்து காத்திருந்தேன். அதனால் எனக்குத்தான் ஆதரவு தர வேண்டும். அதுவே முறையானது, என்றான்.

கிருஷ்ணர் சிரித்தார்.

நீ சொல்வது சரிதான் என்றாலும், முதலில் என் கண்ணில் பட்டவன் அர்ஜுனன் தான். அதனால், அவனுக்கு ஆதரவளிப்பது தான் முறையாக இருக்கும், என்றார் புன்னகை ததும்ப. துரியோதனன் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும் அவரது ஆதரவைப் பெற முடியவில்லை. போகட்டும் கண்ணா! நீ பாண்டவர்களையே ஆதரித்து விட்டுப் போ! ஆனால், எனக்கும் நீ நான் கேட்பதைத் தர வேண்டும், என்றான். என்ன? என்ற கிருஷ்ணரிடம்! நீ அர்ஜுனனுக்கு ஆதரவாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. இதுவே எனக்குப் போதும், என்றதும், சரி அப்படியானால் நான் போர்க்களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனனே முடிவு செய்யட்டும், என்றார். அர்ஜுனன் அவரிடம், பரந்தாமா! நீ ஆயுதம் எடுக்க வேண்டாம். அதை உன்னருளால் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், ஆயுதம் எடுக்கும் எனக்கு நீ சாரதியாக (தேரோட்டுபவர்) இருக்க வேண்டும். அதுபோதும், என்றதும், கிருஷ்ணர் சம்மதித்தார். கடவுளின் நிலை இதுதான். கெட்டவன் கேட்டாலும் கொடுப்பவர், நல்லவன் கேட்டாலும் கொடுப்பார். ஆனால், பலன்கள் எப்படியிருக்கும் என்பது கேட்பவனின் மனநிலையைப் பொறுத்தது. அத்துடன் துரியோதனனிடம், உன்னை வெறுங்கையுடன் நான் அனுப்பமாட்டேன். என் அண்ணா பலராமர் உன் பக்கம் தான் இருப்பார். நீ சென்று அவரைப் பார், என்றார்.

துரியோதனனுக்கு கோபம்... தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே! போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய முனிவரை திருதராஷ்டிரன் பாண்டவர்களிடம் தூது அனுப்பி, போர் வேண்டாம் என்றும், நாட்டை துரியோதனாதிகளிடமே ஒப்படைத்து விடும்படியும் அறிவுரை சொல்லி வரச் சொன்னான். சஞ்சய முனிவர் அங்கு சென்று அவ்வாறே சொல்ல, பாண்டவர்கள் அதை ஏற்கவில்லை.

பின்னர் கிருஷ்ணரை தூது அனுப்பி கவுரவர்களுக்கு எச்சரிக்கை விட தர்மரின் தம்பிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், தர்மருக்கு இதில் உடன்பாடு இல்லை. அவர் கிருஷ்ணனிடம், கவுரவர்கள் வேறு யாருமல்ல! அவர்களும் என் தம்பிகள்தான். சாதாரண மண்ணைப் பெறுவதற்காக, என் தம்பிகளை கொல்ல வேண்டுமென நான் விரும்பவில்லை. நாங்கள் மீண்டும் காட்டிற்கே போய்விடுகிறோம். உயிரை வாங்கும் இந்த போரில் எனக்கு விருப்பமில்லை. எனவே நாங்களே சமாதானமாக போய்விடுவதாக திருதராஷ்டிரனிடம் போய் சொல்லிவிடு, என்றார். தர்மா! நீ சொல்வது சற்றும் சரியல்ல. பழைய விஷயங்களை நீ மறந்து விட்டாய். யுத்தத்தை நீ கைவிட்டால் பூலோகத்தில் உள்ள அனைவரும் உங்களை இகழ்வார்கள். அதுமட்டுமின்றி திரவுபதியை, துச்சாதனன் துகிலுறிந்த விஷயத்தை நீ மறந்துவிட்டாய். அப்போது நீங்கள் அனைவருமே அந்த ராஜசபையில் வீராவேசமாக கவுரவர்களை கொல்வதாக உறுதியெடுத்தீர்கள். அந்த சபதம் பொய்யாக வேண்டுமென நினைத்தால் நீ உன் தம்பிகளுடன் காட்டிற்கு போகலாம், என்றார்.

பரமாத்மாவின் வார்த்தைகள் தர்மரின் இதயத்தை தெளிவித்தது. கிருஷ்ணா! நீர் துரியோதனனிடம் சென்று எங்களுக்குரிய பாகத்தைக் கேள். தரமறுத்தால் ஆளுக்கொரு ஊர் வீதம் ஐந்து ஊர்களையாவது தரச்சொல். அதற்கும் அவன் தர மறுத்தால் ஆளுக்கொரு வீடாவது கேள். அதையும் மறுத்தால் யுத்தம் செய்வதைத்தவிர வேறு வழியில்லை என சொல்லிவிடு, என்றார். பீமனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவன் சத்தமாக பேச ஆரம்பித்தான். அண்ணா! திரவுபதியின் கூந்தலை பிடித்து இழுத்த துச்சாதனனின் கையை வெட்ட நான் முயன்ற போது நீங்கள் என்னை தடுத்து விட்டீர்கள். அப்படிச்செய்த தன் மூலம் நம் குலத்திற்கு இந்த உலகம் உள்ளவரை தீராத களங்கத்தை உண்டாக்கி விட்டீர்கள். நமக்கு நாடு முழுமையும் வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த துரியோதனனின் பங்கையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பெரியப்பாவுக்கு புத்திவரும். அதே நேரம் துரியோதனனுக்கும் நான் ஒரு பெரிய நாட்டை பரிசாக அளிப்பேன். அது எது என்றால், இந்திரனுடைய அமராவதி பட்டணம், (துரியோதனனைக் கொன்று சொர்க்கத்திற்கு அனுப்புவேன்) என்றான் கேலியுடன்.

பின்னர் அவன் கண்ணனிடம், கண்ணா! உனது சொல்லைக்கூட கேட்க என் தமையனார் விரும்பவில்லை. அவரது பேச்சு சரியில்லை என்பதை நீயே அறிவாய். பாஞ்சாலி கூந்தலை முடிக்காமல் இருக்கிறாள். காலம் முழுவதும் அவள் அதே நிலையில் இருக்கட்டுமென எனது சகோதரர் விரும்பினால், என்னால் என்ன செய்ய முடியும்? எனவே, தூது சென்று அவர் சொன்னதை செய்து வா, என சொல்லி விட்டு வெளியேற முயன்றான் கிருஷ்ணர். அவனை தடுத்தார். பீமா! சகோதர்களிடம் கோபம் கொள்ளக்கூடாது. மூத்த சகோதரர் நமது நன்மையைக் கருதி ஏதேனும் சொன்னால் இளைய சகோதரர்கள் அதை ஏற்க வேண்டும். முதலில் கோபத்தை விட்டுவிடு. சண்டைக்கு செல்பவனுக்கு சாந்தமே முதல் ஆயுதம். பதட்டமின்றி செயல்பட்டால் தான் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறும் என அறிவுரை சொன்னார். கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று பீமன் அமைதியானான். இப்படியாக அர்ஜுனன் , நகுலன் ஆகியோர் தங்கள் பங்கு கருத்தை கூறிமுடித்தனர். இப்போது இளைய தம்பியான சகாதேவனிடம் கண்ணன் வந்தார்.

சகாதேவா! எல்லோரும் அதை சாதிப்போம், இதை சாதிப்போம், துரியோதனனை கொன்று விடுவோம், உன் பெரியப்பாவின் ராஜ்யத்தையும் சேர்த்து கைப்பற்றுவோம், திரவுபதியின் கூந்தலை முடிக்க வைப்போம் என்றெல் லாம் சபதம் செய்திருக்கிறார்களே! நீ எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதின் ரகசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்றார். சகாதேவன் இப்போது பலமாக சிரித்தான். மைத்துனா! உன் நாடகத்தை நான் அறிவேன். உலகம் என்ற சக்கரமே உன் கையில் இருக்கிறது. அந்த நாடக மேடையில் நாங்கள் பாத்திரங்களாக நடிக்க வந்திருக்கிறோம். எங்களை நடிக்க வைக்கும் சூத்ரதாரி நீ! என்ன செய்ய வேண்டும்? என்ன நடக்கும்? என் பதையெல்லாம் அறிந்த நீ எங்களிடம் கருத்து கேட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறாய். எதை நடத்த வேண்டுமென நீ முடிவு செய்திருக்கிறாயோ அதுதான் நிச்சயமாக நடக்கப் போகிறது. எனவே, இந்த பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கப்போகிறேன், என சொல்லிவிட்டு ஒதுங்கி கொண்டான். மாயக்கண்ணன் சகாதேவனை விட்டபாடில்லை. அவனை தனியாக அழைத்துக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் சென்றார். சகாதேவா! நீ ஜோதிடத்திற்கு அதிபதி என்ன நடக்கப்போகிறது என்பதை நீ அறிவாய். எனவே, போரை, நிறுத்துவதற்கு ஒரு வழி சொல், எனக்கேட்டார்.

சகாதேவன் விடாக்கண்டனாக இருந்தான். நான் ஜோதிடன்தான். ஆனால், அந்த ஜோதிடத்தையே மாற்றும் சக்தி உன்னிடம் இருக்கும்போது, என்னால் என்ன செய்ய முடியும்? என்ன நடத்தவேண்டுமென நீ எண்ணியிருக்கிறாயோ அதையே நடத்து, என மீண்டும் ஆணித்தரமாக சொன்னான். கண்ணன் அதற்கு மறுத்தார்.

போர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற போது, விதுரர் கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து வரவேற்றார். கண்ணா! அஸ்தினா புரத்துக்கு எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின் அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்தி ஏற்பானே ஒழிய வராமல் இருக்க மாட்டேன். பகவான் கிருஷ்ணர் அந்த அழைப்பே ஏற்றார். செல்லலாம் விதுரரே! தங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது, போகலாம் என்றார். கிருஷ்ணர் தன்னுடன் ஐம்பது லட்சம் ராஜாக்கள் புடைசூழ வந்திருந்தார். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து விதுரரின் மாளிகைக்குள் சென்றனர். எல்லோரையும் வரவேற்ற விதுரர், கண்ணா! நீ இந்த ஏழையின் குடிசைக்கு எழுந்தருளியது நான் செய்த பாக்கியம். ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே! உன் திருவடியை பணிகிறேன், என்றவர், கண்ணனின் கால்களைத் தூக்கி தன் தலை மேல் வைத்தாரோ இல்லையோ! நல்வினை, தீவினை ஆகியவற்றால் ஏற்பட்ட ஜனன, மரண துன்பங்கள் விதுரரை விட்டு அகன்றன. இனி பிறவியில்லை என்ற மகிழ்ச்சி ஏற்பட்டதும், கண்ணா! இந்த ஏழை தரும் விருந்தையும் ஏற்றருள வேண்டும், என்றார்.

கிருஷ்ணர் புன்னகையுடன் அதை ஏற்று, நல்லவர்களின் இல்லத்தில் தரப்படுவது சிற்றுண்டியே ஆயினும், அதை பேருண்டியாக நினைத்து ஏற்பேன், என்றார். விதுரர் மகிழ்ச்சியுடன், கண்களை சற்றே திருப்ப அங்கே நின்ற ஆறு லட்சம் சமையல்காரர்கள், விதுரரின் கட்டளையைப் புரிந்து கொண்டு படபடவென வேலைகளைத் துவங்கினர். சில மணி நேரங்களில் உணவு தயாராகி விட்டது. ஐம்பது லட்சம் பேர் வந்திருக்கிறார்களே! அத்தனை பேருக்கும் சாப்பாடு தயார், அறுசுவை உண்ட அவர்களுக்கு விதுரர் சந்தனமும், தாம்பூலமும் தந்து உபசரித்தார். விதுரரின் இல்லத்திலேயே கிருஷ்ணர் சற்றுநேரம் ஓய்வும் எடுத்தார். பின்னர் சம்பாஷணை துவங்கியது. கிருஷ்ணா! நீ இங்கே வந்த காரணத்தை நான் அறியலாமா? என விதுரர் கேட்டதும், விதுரரே! பாண்டவர்கள் வனவாசத்தை முடித்து விட்டு வந்து விட்டார்கள். அவர்களுக்குரிய இடத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மறுத்தால், அவர்கள் துரியோதனனுடன் போரிடுவார்கள். கவுரவர்கள் அந்தப் போரில் அழிவது உறுதி என்றதும், விதுரர் அவரிடம். கண்ணா! அது நடப்பது போல் எனக்குத் தெரியவில்லை. கவுரவர்கள் இவ்விஷயத்தில் வாதமாக உள்ளனர், என்றார்.

விதுரரே! ஏழை ஒருவன் தன் எஜமானனிடம் வயிற்றுப்பசி நீங்க பொருள் கேட்பான். எஜமானனே மறுப்பான். அதே ஏழை, உணர்ச்சிவசப்பட்டு தன் மேல் அம்புகளை எய்ய வருகிறான் என்றால், உயிருக்கு பயந்து எதை வேண்டுமானாலும் கொடுத்து விடுவான். இதுதான் உலக நியதி. துரியோதனனும் அந்த எஜமானனைப் போன்றவன் தான். அவன் அடிப்பட்டுத்தான், ராஜ்யத்தை திருப்பித்தர வேண்டும் போல் தெரிகிறது, என்ற கிருஷ்ணர், விதுரரே! உம்மைப் போன்ற நல்லவர் இல்லத்தில் சாப்பிட்டதும், உறங்கியதும், பேசியதும் மனதிற்கு இனிமையைத் தருகிறது. இதே உணர்வுடன் போய், துரியோதனனிடம் நான் பேச வேண்டும், என்று புறப்பட்டார். துரியோதனன் மூன்றரை லட்சம் அரசர்கள் புடைசூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். சிற்றரசர்களே! நீங்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது இங்கே கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆதரவாக தூதனாக வரப்போகிறான். அவன் வரும்போது, மரியாதையாக யாரும் எழுந்து நிற்கக்கூடாது. அவனை அலட்சியம் செய்ய வேண்டும், என உத்தரவிட்டான்.

மன்னர்கள் தலையை ஆட்டி வைத்தனர். இந்நேரத்தில் கண்ணபிரான் துரியோதனனின் அவைக்கு வந்தார். அவர் வந்தாரோ இல்லையோ! அந்த சுயரூபத்தை பார்த்தவுடனேயே அவர்களையும் அறியாமல் எழுந்து நின்றனர் குறுநில மன்னர்கள். மகாத்மா விதுரர், பீஷ்மர், துரோணர் அவர் மகன் அஸ்வத்தாமன் எல்லாருமே எழுந்து நின்று அவரை வரவேற்றனர். அவர்கள் கண்ணனின் திருவடியை தரிசித்தார்கள். துரியோதனனின் நண்பன் கர்ணன் என்ன செய்வதென தெரியாமல் மன அலைக் கழிக்கப்பட்டு அமர்ந்திருந்தான். துரியோதனன் முகத்தைத் திருப்பி கொண்டான். சகுனிக்கோ அவமானம் பிடுங்கித் தின்றது. தன் மருமகனைத் தூண்டி விட்டு, சிற்றரசர்களையும், மற்றவர்களையும் ஒடுக்கி வைத்தும் பயனில்லாமல் போய்விட்டதே என மனம் வெதும்பினான். மூன்றரை லட்சம் பேரையும் ஒரே நாளில் விரட்டியடித்து விட்டால் போரிட ஆள் வேண்டுமா? என்ன செய்வதென தெரியாமல் துரியோதனன் கையைப் பிசைந்தான்.

எல்லாவற்றையும் ஓரக் கண்ணால் நோட்டமிட்டபடியே வந்த மாயக்கண்ணன், தன் சேஷ்டையைத் துவங்கினார். கால்விரலை பூமியில் பதித்து அழுத்தினார். உலகமே ஒரு நிமிடம் ஆடியது போன்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டது. இறைவனுக்கு மதிப்பு தராத நாடு பூகம்பத்தில் சிக்கி அழியும் என்பதை இதன் மூலம் கிருஷ்ணர் உலகத்துக்கு உணர்த்தினார். எல்லாரும் சற்றே திகைத்தாலும், துரியோதனின் சிம்மாசனம் மட்டும் கவிழ்ந்தே விட்டது. அவன் படிக்கட்டுகளில் தவறிவிழுந்து, கண்ணனின் திருப்பாதத்தில் கிடந்தான். இறைவனுக்கு நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடில்லை. எல்லாருக்குமே தன் திருவடியைத் தர அவர் காத்திருக்கிறார். ஆனால், சில பாழும் மனிதர்கள், அதை அலட்சியம் செய்கிறார்கள். துரியோதனா! எழுந்திரு! வணக்கம் செய்யும் அவசரத்தில் இப்படியா தவறி விழுவது! எந்த ஒரு சூழ்நிலையிலும், மனிதர்கள் நிலை தடுமாறவே கூடாது, என்று அறிவுரை சொல்பவர் போல நடித்தார். துரியோதனன் வெட்கம் மேலிட சமாளித்து எழுந்தான். கோபத்துடன் ஆசனத்தில் போய் அமர்ந்தான். துரியோதனா! நான் உன் வீடு தேடி வந்திருக்கிறேன். நீ என்னிடம் எதுவுமே பேசவில்லையே! என பீடிகையைப் போட்டார் பரந்தாமன் கிருஷ்ணன்.

கிருஷ்ணா ! நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் ? என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் ? நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா ! எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். நான் வரும் வழியில் விதுரர் என்னை எதிர்கொண்டு வரவேற்று அழைத்தார். அதனால், அவர்வீட்டுக்கு போனேன். இதையெல்லாம் விட, நான் உன் வீட்டிற்கு வராததற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. நான் பஞ்ச பாண்டவர்களின் தூதனாக உனது ஊருக்கு வந்திருக்கிறேன். உன் வீட்டிற்கு வந்தால் நீ விருந்து உபசாரம் செய்வாய். யார் வீட்டிலாவது சாப்பிட்ட பிறகு அவர்களுடன் சண்டை போட்டாலோ, அந்த வீட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லும் உபதேசங்களை அலட்சியம் செய்தாலோ, பிறர் செய்த உபகாரத்தை மறந்தாலோ அவர்களுக்கு சூரியனும் சந்திரனும் உள்ள வரை நரகம்தான் கதி. இதை புரிந்துகொள், என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் அந்த பதிலை பொருட்படுத்தாத துரியோதனன், சரி, நீ வந்த விபரத்தை என்னிடம் விளக்கமாகச் சொல், என் கேட்டான். பகவான் கிருஷ்ணர், துரியோதனா ! பாண்டவர்களுக்கு நீ நியாயமாக கொடுக்க வேண்டியதை தந்து விடு. அது அவர்களுடைய பூமி தான். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி வனவாசம் முடித்து விட்டார்கள். இனியும் நீ அவர்களுக்கு அவர்களது ராஜ்ஜியத்தை ஒப்படைக்காவிட்டால் எவ்வகையிலும் தர்மம் இல்லை. மேலும் அது உன் வீரத்திற்கும் புகழுக்கும் இழுக்கைத்தரும், என்றார். துரியோதனன் அது கேட்டு சிரித்தான். கண்ணா ! நீ மிகவும் தந்திரமாக எனது நாட்டை பிரித்து பாண்டவர்களிடம் ஒப்படைக்க நினைத்து வந்திருக்கிறாய். அவர்கள் சூதாட்டத்தில் நாட்டை விட்டது விட்டதுதான். தொடர்ந்து அவர்களை வனத்திலேயே இருக்கச் சொல். எக்காரணம் கொண்டும் ஒரு ஊரைக்கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன், என சொல்லிவிட்டான்.

பகவான் கிருஷ்ணருக்கு போர் அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. துரியோதனா! பாண்டவர்களுக்குரிய பூமியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் குரு÷க்ஷத்திர யுத்தத்திற்கு நீ தயாராகிவிடு. யுத்தம் செய்வதற்கு தயார் என என் கையில் அடித்து சத்தியம் செய் என்றார். துரியோதனன் இது கேட்டு மிகுந்த ஆத்திரம் அடைந்தான். கண்ணா ! உனது பிறப்பே கேவலமானது. நீ பசுக்களை மேய்க்கின்றவன். நெய்யும், வெண்ணெயும் திருடியதற்காக இடையர்குல பெண்கள் உன்னை உரலோடு சேர்ந்து கட்டி வைத்தார்கள். அதை எல்லாம் மறந்துவிட்டு, குருவம்சத்து அரசனிடம் இப்படி தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறாய். பஞ்ச பாண்டவர்கள் என்னை எதிர்த்தால் மதயானை போல் அவர்கள் முன்னால் நிற்பேன். பாண்டவர்கள் மானங்கெட்டவர்கள். அவர்களது மனைவியை இந்த சபையிலே கூந்தலை பிடித்து இழுத்துவந்து தான் அவமானப்படுத்தியபோது கையைக் கட்டிக்கொண்டு இருந்த வீரர்கள். அப்படிப்பட்டவர்களுக்காக நீ தூது வந்திருக்கிறாய். அந்த பாண்டவர்களிடம்தான் என்ன ஒழுக்கம் இருக்கிறது ? ஒரே பெண்ணை அவர்கள் ஐந்து பேரும் மணந்து கொள்வார்களாம் ! ஆனால் அவளது கற்பு எவ்வகையிலும் கெட்டுப் போகாதாம். அப்படிப்பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்காக நீ தூது வந்திருக்கிறாய். இது ஆச்சரியமாக இல்லையா ? அவர்களுக்காக நீ தூது வந்ததில் என்ன நியாயம் இருக்கிறது, எனக்கேட்டான்.

அவனது ஆணவத்தை எண்ணி கிருஷ்ணபரமாத்மா சிரித்தார். ஆணவம் மிக்கவர்கள் தோல்வியை தழுவுவது உறுதி என்பது கண்ணபிரானின் சித்தாந்தம். இனிமேல் நிச்சயமாக பாண்டவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என கிருஷ்ணருக்குப் புரிந்துவிட்டது. துரியோதனனிடம் சொல்லிக் கொள்ளாமல் கண்ணன் கிளம்பிவிட்டார். அவர் சென்றபிறகு விதுரரிடம் துரியோதனன் கோபத்துடன், சித்தப்பா ! நீங்கள் என்ன காரணத்திற்காக கண்ணனுக்கு விருந்து கொடுத்தீர்கள் ? நீங்கள் நான் கொடுக்கும் உணவில் வாழ்கிறீர்கள். ஆனாலும் பாண்டவர்களுக்காக தூது வந்தவனுக்கு விருந்து கொடுத்திருக்கிறீர்கள். ஒரு தாசியின் மகனான உங்களுக்கு இப்படிப்பட்ட புத்தி தானே இருக்கும், என்று கேட்டான். இதைக்கேட்டு விதுரர் மிகுந்த வருத்தமடைந்தார். பெற்ற தாயைப்பற்றி பேசிய துரியோதனன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. துரியோதனா ! என் தாயையப்பற்றி பேசிய உன்னை இப்போதே வெட்டி வீழ்த்தியிருப்பேன். ஆனால் அது குருவம்சத்திற்கு இழுக்கு. குருவம்சத்தில் பிறந்த ஒருவன் தனது சகோதரனின் புதல்வனை கொன்றான் என்ற பழிசொல் காலம் காலமாக என்மீது நிலைத்திருக்கும். இனியும் இப்படி பேசாதே. பேசினால் நாக்கு இருக்காது. நான் கண்ணனுக்கு மட்டுமல்ல. அந்த பாண்டவர்களுக்கே கூட உதவி செய்தாலும்கூட உலகத்திலுள்ள அரசர்கள் என்னை பழிக்கமாட்டார்கள். எனது குணம் அவர்களுக்கு தெரியும். இனியும் உனக்காக நான் போரில் இறங்கினால் அது என் தாயை அவமதித்தது போல் ஆகும். எனவே என்னிடம் உள்ள யாரையும் அழிக்கும் சக்தி வாய்ந்த விஷ்ணு தனுசை வெட்டி எறிகிறேன். இது இனிமேல் யாருக்கும் பயன்படாது. என சொல்லிவிட்டு விஷ்ணுதனுசை ஒடித்து எறிந்தார்.

அர்ச்சுனனின் கையில் உள்ள காண்டீப வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை முறிக்கம் சக்தி விஷ்ணுதனுசுவிற்கு இருந்தது. இப்போது அது இல்லாமல் போனதால் துரியோதனனுக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டதை அந்த சபையில் வீற்றிருந்த அரசர்களெல்லாம் கண்டார்கள். ஆனாலும் துரியேதனனை எதிர்த்து பேச முடியாததால் அவர்கள் அமைதியாக இருந்தனர். அப்போதும் துரியோதனனின் ஆணவம் அடங்கவில்லை. விதுரரின் வில் போனால் போகட்டும். என் நண்பன் கர்ணனிடம் இருக்கும் வில்லுக்கு அந்த அர்ஜுனனால் பதில் சொல்ல முடியுமா ? அவன் என்னுடன் இருக்கும் வரை என்னை யாராலும் வெல்ல முடியாது என சொல்லிவிட்டு அதிபயங்கரமாக சிரித்தான்.

துரியோதனனின் வார்த்தையால் மகிழ்ச்சியடைந்த கர்ணன், அன்பு நண்பனே! நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா? இந்த கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாலும்கூட எனது வில்லாற்றலின் முன் அவனால் எதுவும் செய்யமுடியாது. நீ கவலைப்படாதே. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களே என்னோடு போரிட வந்தாலும் அவர்களை என்னுடைய ஒரே பாணத்தால் அழித்துவிடுவேன். அது மட்டுமின்றி எனது நாகாஸ்திரத்தின் முன்னால் யாராலும் தப்ப முடியாது. அதற்கு அர்ஜுனனும் விதிவிலக்கல்ல, என மிகுந்த ஆணவத்துடன் சொன்னான். இதுகேட்ட பீஷ்மருக்கு கடும் கோபம் உண்டாயிற்று.அவர் கர்ணனிடம், கர்ணா! அர்ஜுனனைப் பற்றி மிகவும் குறைத்து மதிப்பிடுகிறாய். அவன் தேவலோகத்திற்கே சென்று இந்திரனின் அரசாட்சியை காப்பாற்றியவன். அர்ஜுனனின் முன்னால் நீ எந்த அஸ்திரத்தை வீசினாலும் அதனால் பயன் ஏதும் இருக்காது என்பதை புரிந்துகொள், என்றார்.

தாத்தா பீஷ்மருக்கு எப்போதுமே பாண்டவர்கள் மீதுதான் கரிசனை. நீங்கள் துரியோதனனின் அன்னத்தை சாப்பிடுகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்கள். பகைவர்களின் வீரத்தைப் பற்றியே புகழ்ந்து பேசுகிறீர்கள். இவ்வுலகம் மட்டுமல்ல, எல்லா உலகத்தவர்களும் ஒருசேர திரண்டு வந்தாலும் சரி. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நான் என் நண்பனுக்காக போரிடுவேன். அந்த சிவபெருமானே எனது அம்புக்கு பயப்படுவான், என கர்ண கொடூரமான வார்த்தைகளை பேசினான். பெரியவர்கள் புத்திமதி சொன்னால் சிறியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சிறியவர்கள் ஏற்க மறுத்தால் பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். பட்டால்தான் சிலருக்கு புத்தி வரும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பீஷ்மர் மேற்கொண்டு பேசாமல் சபையை விட்டு எழுந்துசென்றுவிட்டார். இந்த சமயத்தில் சபையிலிருந்து புறப்பட்டு சென்ற கிருஷ்ணர் விதுரரின் மாளிகையிலேயே தங்கினார். அவர் விதுரரிடம், விதுரரே! இந்த உலகத்திலேயே இரண்டு சிறந்த வில்கள் உள்ளன. அதில் ஒன்று உமது கையில் இருந்தது. அதை நீர் முறித்துப் போடும்படியான நிலைமை உண்டாகிவிட்டது. அந்த அளவுக்கு உங்களுக்கு கோபம் ஏற் படுவதற் கான காரணத்தை உங்களால் கூறமுடியுமா? என கேட்டார்.

விதுரர் அதற்கு, எம்பெருமானே! ஒருவனுக்கு அழிவு வருமானால் அவன் யார் நல்லதைச் சொன்னாலும் கேட்கமாட்டான். தனக்கும் பிறருக்கும் நன்மை விளையும் காரியங்களை சிந்திக்காதவனும், அமைச்சர்களின் வார்த்தையை கேட்காதவனும், நாக்கை அடக்கி வைக்காதவனும் நிச்சயமாக அழிந்து போவார்கள். மனிதர்களுக்கு பொருள் வந்துவிட்டால் அந்தப் பொருள் இறைவனால் தரப்பட்டது என்பதை மறந்துபோகிறார்கள். தாங்களே முயற்சி எடுத்து சம்பாதித்தது என மார்தட்டிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உறவினர்களையும் நண்பர்களையும் மதிக்கமாட்டார்கள். துரியோதனனும் இப்போது பணக்காரர். பணம் அவன் கண்களை மறைக்கிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் கடவுளான தாங்களே நேரில் வந்து அவனுக்கு நல்ல உபதேசம் செய்தீர்கள். பணக் காரன் கடவுளையும் மதிக்கமாட்டான். அதுதான் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் முன்னிலையிலேயே என்னை நிந்தித்தும் பேசினான். குறிப்பாக எனது தாயைப்பழித்துப் பேசினான். எனது பிறப்பின்மீது குறை கண்டான், இந்த சூழ்நிலையில் அவனுக்கு உதவ இருந்த வில்லை முறித்துவிட்டேன். இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள்தான் எனக்கு தக்கவழி காட்ட வேண்டும், எனச்சொல்லி அவரது பாதங்களில் பணிந்தான்.

கிருஷ்ணர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். விதுரரே! கவலைப்பட வேண்டாம். கவுரவர்களிடம் இப்போது நிறைய செல்வம் இருக்கிறது. படைபலம் இருக்கிறது. ஆயுதங்கள் இருக்கின்றன. ஒரு யாகசாலையில் ஏராளமான விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். நெய்யும் குடம் குடமாக இருக்கிறது. நெருப்பும் பற்ற வைத்தாயிற்று. ஆனால் காற்று வீசினால்தான் நெருப்பு தொடர்ந்து எரியும். துரியோதனனிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவனுக்கு கடவுளின் அருள் இல்லை. அவன் அழியப்போவது நிச்சயமாகிவிட்டது. அவன் சொன்ன வார்த்தைகளை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். அமைதியாக இருங்கள், என சொல்லிவிட்டு குந்திதேவியின் அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மருமகனின் வருகை கண்டு குந்திதேவி மகிழ்ச்சியடைந்தாள். கண்ணபரமாத்மா அவளது சொந்த அண்ணன் மகன். கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் உடன்பிறந்த தங்கையே குந்திதேவி. அந்த வகையில் தனது பக்தர்களான மைத்துனர்களுக்கு உதவிசெய்யவே அவரது அவதாரமே ஏற்பட்டது. தர்மத்தைக் காக்கவே கிருஷ்ணர் இந்த உலகிற்கு வந்தார்.

குந்திதேவி கண்ணிடம், கண்ணா! நீ என் வீட்டுக்கு வந்தது நான் செய்த தவத்தின் பயனால் என உணருகிறேன். உன்னை அடிக்கடி பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். நீ இன்று வந்ததுபோல் என்றும் என் இல்லத்திற்கு வரவேண்டும் என மகிழ்ச்சி ததும்ப கூறினாள். அந்த மாயக்கண்ணன் தனது இல்லத்திற்கு வந்திருக்கிறான் என்றால், காரணம் இல்லாமல் இருக்காது என்பது குந்திதேவிக்கு தெரியும். அவன் வந்த காரணத்தையும் கேட்டாள். மாயக்கண்ணன் அவளிடம், அத்தை! துரியோதனனின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவே நான் அஸ்தினாபுரம் வந்தேன். நான் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் துரியோதனன் ஏற்க மறுத்துவிட்டான். எனவே பாண்டவர்களும் கவுரவர்களும் போர் செய்வது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது, என்றார். குந்திதேவி மனம் வருந்தி, கண்ணா, இந்த யுத்தத்தில் யார் ஜெயிப்பார்களோ, யார் இறப்பார் களோ என கவலையாக இருக்கிறது. வினையை நிர்ணயிப்பவன் நீ. நீதான் இதற்குரிய விடையை எனக்குச் சொல்லவேண்டும், என்றாள். கிருஷ்ணர் சிரித்தார். அத்தை! இப்போது உனது பிள்ளைகளின் விதியை நிர்ணயிப்பது உனது கையில்தான் இருக்கிறது. நான் சொன்னதை நீ செய்வாயா? என கேட்டார். குந்திதேவி ஏதும் புரியாமல் அவரது முகத்தை நோக்கினாள்.

அவ்வாறு ஏக்கப்பார்வை பார்த்த குந்தியிடம், அத்தை! உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். முன்னொரு காலத்தில், நீ துர்வாச முனிவரிடம் சகல தேவர்களையும் அழைக்கும் வரம் ஒன்றைப் பெற்றது நினைவிருக்கிறதா? என்றார் கிருஷ்ணர். குந்திதேவி அதிர்ந்தாள். இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? அவ்வாறு சிந்தித்த அடுத்தகணமே, அந்த அதிர்ச்சி நியாயமற்றது என்பதையும், லோக நாயகனான இந்த திருமாலுக்கு எது தான் தெரியாது என்பதையும் தெரிந்து கொண்டு, கண்ணா! இப்போது அதற்கென்ன! என்றாள். நீ சூரிய பகவானை நினைத்த போது என்ன நடந்தது? என அடுத்த கேள்வியை கிருஷ்ணர் வீச, குந்திதேவி அவமானத்தால் தலைகுனிந்தாள். கிருஷ்ணர் அவளைத் தேற்றினார். அத்தை! இதில் வருத்தப் படுவதற்கு ஏதுமில்லை. நடந்தவற்றையும், முடிந்தவற் றையும் நினைத்து வருத்தப்படுபவர்கள், உலகில் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள். அப்போது, உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும், அவனை நீங்கள் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதும் தெரிந்த விஷயங்கள். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? என்றதும், அவமானமாக இருந்தாலும், தன் குழந்தையை பற்றி இந்த வெண்ணெய் திருடன் ஏதோ சொல்ல வருகிறான் என்பது மட்டும் அவளுக்கு புரிந்து விட்டது.

அவள் ஆர்வத்துடன், கிருஷ்ணா! அவன் இருக்குமிடம் உனக்குத் தெரியும். அவன் நிச்சயமாக உயிருடன் தான் இருக்கிறான். சொல், என் செல்வத்தை நீ பார்த்தாயா? என்றதும், கிருஷ்ணர் மீண்டும் சிரித்தார். அத்தை! உனக்கு அன்றைக்கு அந்த சூரியன் விஷயத்திலும் அவசரம்தான். இப்போது, அந்த சூரிய மைந்தனின் விஷயத்திலும் அவசரம் தான். ரகசி யம் பேசும் போது அவசரம் கூடாது. ஏனெனில், சுவர்கள் கூட அதை ஒட்டுக்கேட்டு, தெரியக்கூடாதவர்களுக்கு தெரிய வைத்து விடும், என்ற கண்ணன், அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாக, கர்ணன்... கர்ணன்... கர்ணன் என்றதும், குந்திதேவி அகம் மகிழ்ந்தாள். யார்...கொடை வள்ளல் கர்ணனா? வந்தவர்க்கு இல்லை என சொல்லாத அந்த தெய்வ மகனா? ஐயோ! அவன் இப்போது, துரியோதனனிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறான்? அவனா, என் பிள்ளைகளை எதிர்த்து போரிடப் போகிறான்? அர்ஜுனன் தன் தம்பி என்பது தெரிந்தால் அவன் நிச்சயம் போர்க் களத்துக்கு வரமாட்டான், என்று அவசரப்பட்டு சொன்னாள் குந்தி. அதையே தான் நானும் சொல்கிறேன், அத்தை. நீ கர்ணனிடம் போ. நீயே அவனது தாய் என்பதைச் சொல். அண்ணன், தம்பிகள் சண்டை போட்டால், உலகம் பழி தூற்றும் என எடுத்துச் சொல். பாசத்துக்கு கட்டுப்பட்டு அவன் நம் பக்கம் வந்து விடுவான். ஒருவேளை, அவன் மறுத்தால், நீ அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது எய்யக் கூடாது என உறுதி வாங்கி விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணா! நீ வெண்ணெயையும், பக்தர்களின் உள்ளங்களையும் மட்டும் தான் திருடுவாய் என நினைத்திருந்தேன். ஆனால், கர்ணன் துரியோதனனிடம் போய் சேருவதற்கு முன்பே, அவன் இந்த இடத்தில் இருக்கிறான் என்பதை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்ட பெரும் திருடனாகி விட்டாய். இதை முன்பே, என்னிடம் சொல்லியிருந்தால், அவன் துரியோதனன் பக்கம் செல்லாமல் தடுத்திருப்பேன். தெய்வமே! நீ என்ன நினைத்து இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாய்! ஒரு தாயின் உணர்வை நீ புரிந்து கொண்டாயா? நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் பிரயோகித் தால் அர்ஜுனன் மடிவான். அப்படி பயன்படுத்தாவிட்டால், கர்ணன் அழிவான். எப்படி பார்த்தாலும், என் பிள்ளைகளில் ஒருவரை நான் இழக்க வேண்டி இருக்கிறது, எனச்சொல்லி அழுதாள். கிருஷ்ணர் இப்போதும் சிரித்தார். எல்லோருமே தனக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்றே என்னிடம் கேட்கிறார்கள். நான் என்ன செய்வேன்? துரியோதனனுக்கு கூட அவன் பக்கம் நான் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஒன்றை யோசித்துப் பார் அத்தை. கர்ணனிடம், நீ இந்த வரத்தைக் கேட்பதால், அவன் ஒருவன் மட்டுமே அழிவான். அதற்கு நீ விரும்பாவிட்டால், ஐந்து பிள்ளைகளை இழப்பாய். ஒன்று பெரிதா... ஐந்து பெரிதா என்பது உனக்குத் தெரியும் என்ற கிருஷ்ணர், அழுது புலம்பிய அவளைத் தேற்றி விட்டு விடைபெற்றார். அவசரமும், பெரியவர்களைச் சோதித்துப் பார்ப்பதும் வாழ்க்கையில் பல துன்பங் களுக்கு காரணமாக அமைகிறது.

குந்திதேவிக்கு துர்வாச முனிவர், தேவர்களை அழைத்தால் அவர்கள் அவள் முன் வந்து நிற்பார்கள் என்ற வரத்தைக் கொடுத்தார். திருமணத்துக்கு முன்னமே அவசரப்பட்டு, அவள் அதைச் சோதித்துப் பார்த்ததன் விளைவாக கர்ணன் பிறந்து விட்டான். இதனால் இப்போது அவஸ்தைப்படுகிறாள். தீ சுடும் என்று தெரிந்தும், அதைக் கையால் தொட்டுப்பார்த்தால் எப்படியோ? அப்படித்தான், மூத்தவர் சொல் உண்மை தானா என்று சோதித்துப் பார்ப்பதும். மூத்தோர் தங்கள் அனுபவங்களையே இளைய தலைமுறைக்கு கற்றுத்தரு கிறார்கள். அது உண்மையென நம்ப வேண்டும். அதைச் சோதித்துப் பார்க்க நினைத்தால், கடவுள் கூட கைவிட்டு விடுவார் என்பதை பாரதத்தின் இப்பகுதி உணர்த்துகிறது. கிருஷ்ணர் அவளை கர்ணன் இல்லத்துக்கு புறப்படும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இந்த சமயத்தில், அதிபயங்கர சதித்திட்டம் ஒன்று திருதராஷ்டிரனால் வகுக்கப்பட்டது. அவன், தன் மகன் துரியோதனன், துச்சாதனன் மற்றும் மைத்துனன் சகுனி, மந்திரி பிரதானிகளை வரவழைத்தான். போர் பற்றி ஆலோசித்தான். அப்போது துரியோதனன், தந்தையே! காட்டில் இருந்த பாண்டவர்களை வலுக் கட்டாயமாக வரவழைத்து, நாட்டைத் திருப்பிக் கேட்கச் சொல்பவன் இந்த கிருஷ்ணன் தான். அவன் தன் மாயாவித் தனத்தை நம்மிடம் காட்டுகிறான். அவனை என்ன செய்யலாம்? என்றான். அதற்கு திருதராஷ்டிரன், மகனே! ஒரு புலி தானாகவே வந்து வலையில் மாட்டிக் கொண்டால், வேடன் அதை விட்டு வைப்பானா? அதுபோல், நம் ஊருக்கு வந்து, விதுரனின் மாளிகையில் தங்கியிருக்கும் கண்ணனையும் கொன்று விட வேண்டியது தான், என்றான். இதுகேட்டு, கவுரவர்களில் நியாயஸ்தனான விகர்ணன் கொதித்துப் போனான்.

அவன் திருதராஷ்டிரனிடம், தந்தையே! தங்கள் ஆட்சியில் புதிய புதிய நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது. தூதனாக வந்தவர்களைக் கொன்ற அரசர்கள் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நல்ல யோசனைகள் எல்லாம் தங்கள் மனதில் எப்படித்தான் உதிக்கிறதோ தெரியவில்லை. பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், புலவர்கள் ஆகியோரைக் கொல்வது பெரும்பாவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் தூதர்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர்கள்? இதனால், கொடிய நரகமல்லவா நமக்கு கிடைக்கும். அது மட்டுமா? நம்மைத் தேடி வந்தவர்களை கொல்வது பாவம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கிருக்கிற வீராதி வீரர்களும், சூராதி சூரர் களும் கண்ணபிரானை சூழ்ந்து நின்று தாக்கினாலும், அவன் உங்கள் வலைக்குள் சிக்குவான் என்றா நினைக்கிறீர்கள். அவன் மாயவன். அவனைப் பிடிக்க யாரால் முடிகிறது பார்ப்போம், எனச் சொல்லி ஏளனமாக சிரித்தான். இதைக் கேட்ட துச்சாதனனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

நல்ல விஷயங்கள் பேசும்போது, இதுபோன்ற சிறுவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஒருவன் போதாதா? அந்தக் கண்ணனை அழிக்க. விதுரனுடன் அவன் தங்கியிருக்கிறான். அந்த மாளிகைக்கு தீ வைப்போம். அந்த விதுரனும் சேர்ந்து அழிந்து போகட்டும், என்று சொல்லி எக்காளச் சிரிப்பை உதிர்த்தான். கர்ணன் இன்னும் அதிகமாக துள்ளிக் குதித்தான். அவனைக் கொல்வதற்காக ஒரு மாளிகையையே எரித்து வீணாக்க வேண்டுமா? தேவையில்லை. எனது ஒரு பாணம் போதும், அவனது உயிர் பறந்து விடும், என்று தற்பெருமை வெளிப்பட பேசினான். அப்போது சகுனி எழுந்தான். சிறுவர்களே! அனுபவஸ்தனான நான் சொல்வதைக் கேளுங்கள். தூதனைக் கொல்வது சரியல்ல என்ற விகர்ணனின் வாதம் சரிதான். இருந்தாலும், அவனைப் பிடித்துக் கட்டி வைத்தாக வேண்டும். நாளையே கண்ணன் பாண்டவர்களைச் சந்திக்க புறப்படுகிறான். அவன் புறப்படுவதற்குள் அவனை வஞ்சகமாக நம் மாளிகைக்கு வரச் செய்ய வேண்டும். வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி வைத்து, அதற்குள் வீரர்களை மறைந்திருக்கச் செய்வோம். கண்ணன் பள்ளத்திற்குள் விழுவான். அப்போது, நம் வீரர்கள் அவனைக் கட்டித் தூக்கிச் சென்று பாதாளச் சிறையிலே அடைத்து விட வேண்டும். சரிதானே, என்றதும், துரியோதனன் எழுந்தான்.

மாமா! நீங்கள் சொல்வது தான் சரியான யோசனை, என்றான். அத்துடன் அவன் நிற்கவில்லை. ஒரு நாழிகை நேரத்துக்குள் பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டி, நான்கு லட்சம் வில்லேந்திய வீரர்களையும், இரண்டு லட்சம் மற்போர் வீரர்களையும், ஒரு லட்சம் ராட்சதர்களையும் இறங்கி நிற்கச்சொன்னான். பள்ளத்தின் மேல் மூங்கில் கட்டைகளை அடுக்கி, அதன் மேல் ரத்தினக் கம்பளம் ஒன்றை விரித்து, சிம்மாசனம் ஒன்றை வைத்து விட்டான். மறுநாள் காலையில் கிருஷ்ணரை அழைத்து வர ஆட்கள் சென்றனர். கிருஷ்ணரும் தன் படைகளுடன் துரியோதனனின் அரண்மனைக்கு வந்தார். அவர் மட்டுமே உள்ளே வர வேண்டும். மற்றவர்கள் வெளியில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டான் துரியோதனன். அதன்படி கிருஷ்ணர் மட்டும் உள்ளே சென்றார். அவரை ஆசனத்தில் அமரும்படி முகமலர்ச்சியுடன் சொன்னான் துரியோதனன். கண்ணனும் அமர்ந்தார். அமர்ந்த வேகத்தில் மூங்கில் கட்டைகள் சரிய பாதாளத்தில் விழுந்து விட்டார். துரியோதனன் கைகொட்டி சிரித்தான்.

ஆனால், அவன் சிரிப்பு அடங்கும் வகையில் கிருஷ்ணர் வேகமாக வளர்ந்தார். விஸ்வரூபம் எடுத்தார். கோபம் பொங்க, துரியோதனா! ஒரு தூதனை எப்படி நடத்த வேண்டும் என்பது கூட உனக்குத் தெரியவில்லை. பாரதப்போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று நான் உனக்கு செய்து கொடுத்த சத்தியத்தாலும், உன்னை பாண்டவர்கள் அழிக்க வேண்டும் என்று எடுத்துள்ள சபதத்தாலும் பிழைத்தாய். இல்லாவிட்டால், இக்கணமே உன்னைக் கொன்றிருப்பேன், என்றவர், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் சங்கு சக்ரதாரியாக ஆயிரம் கைகளுடன் வளர்ந்தார். அவரது கைகளில் இருந்த ஆயுதங்கள் பறந்தன. அங்கிருந்த அரசர்கள் நடுங்கினர். ஏராளமானோர் அந்த விஸ்வரூபனை வணங்கினர். வானத்து தேவர்கள், பகவானே! அமைதியடையுங்கள். தாங்கள் மானிடப் பிறவி எடுத்துள்ளதை நினைவுபடுத்துகிறோம். ஆயுதங்களை அடக்கி வையுங்கள். உலகத்தை அழித்து விடாதீர்கள், என கெஞ்சினார் கள். பூலோக ரிஷிகளும் இந்த ரூபத்தைக் கண்டு, ஆதிமூலமே! கருணைக் கடலே, உலக நன்மை கருதி தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும், என பிரார்த்தித்தனர். பகவானின் திருவடியில் சிக்கி பள்ளத்தில் இருந்த ஏழு லட்சம் வீரர்களும் இறந்தனர். ஆனால், இந்த ரூபம் கண்டு துரியோதனன் சற்றும் கலங்கவில்லை. மற்ற அரசர்கள் அவரி டம் மன்னிப்பு கேட்டனர். நிலையில்லாத புத்தியை உடைய மானிடர்களான எங்களை மன்னிக்க வேண்டும் பெருமாளே! என கெஞ்சினர்.

இதுகேட்டு, கிருஷ்ணர் அமைதியாகி தன் வடிவத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்படும் சமயத்தில் கர்ணனை தனியாக அழைத்தார். கர்ணா! துரியோதனனுடன் நீயும் சேர்ந்திருக்கிறாயே. பாண்டவர்கள் யாரென்று தெரிந்து தான் அவர்களுடன் நீயும் போரிடப் போகிறாயா? என்றார். பாண்டவர்கள் என் நண்பனின் எதிரிகள். அதனால், அவர்களைக் கொல்லப் போகிறேன். இதிலென்ன தவறு கிருஷ்ணா, என்ற கர்ணனைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர், கர்ணா! தவறு செய்கிறாய். உன் தாய் யாரென்று உனக்கு தெரியுமா? உன் பிறப்பின் ரகசியத்தை நீ அறிவாயா? நீ தேரோட்டி அதிரதனின் பிள்ளை இல்லை என்பதை அறிவாயா? என்றதும் கர்ணன் அதிர்ந்தான். கிருஷ்ணா! நீ என்ன சொல்கிறாய்? நான் அதிரதனின் பிள்ளை இல்லையா? அப்படியானால், நான் யார் என்பதைச் சொல். என்னைக் குழப்பாதே, என்றான். மனதில் குழப்பம் வந்து விட்டால் எவ்வளவு பெரிய வீரனாயினும், அறிஞனாயினும் அவனால் செயல்களைச் சரிவர முடியாது. மாவீரன் கர்ணனை அடக்கிவிட்டால், துரியோதனின் பலம் பாதி குறைந்து போகும் என்பதை இந்த மாயக்கண்ணன் அறியமாட்டாரா என்ன? சமயம் பார்த்து உண்மையை உடைத்தார்.

கர்ணா! உன் பிறப்பு அதிசயமானது என்று துவங்கிய கிருஷ்ணர், அவன் பிறந்த கதை, வளர்ந்த கதையை எடுத்துச் சொன்னதும், கர்ணனின் முகம் வாடித்தான் போனது, ராஜமாதா குந்திதேவியா தன்னைப் பெற்றெடுத்தவள், பாண்டவர்கள் என் உடன் பிறந்த சகோதரர்களா! என் தந்தை சூரிய பகவானா? இப்படி பல சிந்தனைகளுக்கு மத்தியில், தான் ஏன் பிறந்தோம்? என்று உணர்வுப் பிழம்பானான். உணர்வுகளும், கவலைகளும் தாக்கினாலும் கூட மனிதன் தன்னிலையில் இருந்து மாறிவிடக் கூடாது என்பதற்கு கர்ணன் நல்ல உதாரணம். ஒரு சாதாரண மனநிலையுள்ளவன் இந்நேரம் என்ன செய்திருப்பான்? நண்பா! என் தாய் குந்தி. தம்பிகள் பாண்டவர்கள். அவர்களை நான் என்ன செய்ய முடியும்? இனி, உன் கூட இருந்தால் உலகம் ஒப்புமா? நம் நட்பு நீடிக்க வேண்டுமானால், என் தம்பிகளின் ராஜ்யத்தைக் கொடுத்து விடு என்று தானே கேட்டிருப்பான். கர்ணன் குழம்பினான், தளர்ந்தான். ஆனாலும், நிலை தடுமாறவில்லை. கண்ணா! நீ சொன்னதால், என் பிறப்பின் தன்மையை அறிந்தேன். ஆனால், அதற்காக துரியோதனனை விட்டு எப்படி நான் விலக முடியும்? அப்படி செய்தால், இன்று புதுஉறவு கிடைத்து விட்டது என்பதற்காக, நான் அவனை விட்டு விலகி விட்டதாக உலகம் பழிதூற்றுமே! நான் யார் என்றே கண்டுகொள்ளாமல், அங்கதேசத்தை எனக்கு தந்து அதற்கு என்னை ராஜாவாக்கினானே! அந்த உத்தம நண்பனுக்கு நான் துரோகம் செய்யலாமா? குறிப்பாக, இப்போது இருதரப்புக்கும் போர் உறுதியாகி விட்ட நிலையில் பிரியலாமா? கஷ்டம் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் தானே நண்பன்? சொல் பரந்தாமா!.

கிருஷ்ணர் கர்ணனை உற்றுப் பார்த்தார். எவ்வளவு உத்தமமானவன் இந்த கர்ணன். பாண்டவர்களுடன் இணைந்தால், துரியோதனனை அந்த சமயமே கொன்று, அவனது நாட்டையும் சேர்த்து சொந்தமாக்கிக் கொள் ளலாம். மூத்தவன் என்ற முறையில் தானே பட்டம் சூட்டிக் கொள்ளலாம். இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும், அதை ஒதுக்கித் தள்ளி நட்புக்கு முக்கியத்துவம் தருகிறானே இந்த கொடை வள்ளல். இந்த உயர்ந்த மனப்பான்மை யாருக்கு வரும்? ஐயோ! கர்ணா! ஆனால், உன் விதி இப்படியா இருக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தவன் ஆயினும், அவன் தீயவர்களுடன் பழக்கம் கொண்டால், தன்னையே காவு கொடுக்கும் நிலை வந்து விடுகிறதே! கர்ணா! உன் கதை உலகுக்கு ஒரு பாடம். நல்லவர்கள் தீயவர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது, என மனதில் நினைத்தவராய், அந்த மாமனிதனிடம் எதுவுமே பதில் சொல்லாமல், கர்ணனைக் குழப்ப வேண்டுமென்ற தன் கடமை முடிந்து விட்ட நிலையில் புறப்பட்டு விட்டார். நேரே அவர் துரியோதனனின் அரசவைக்குச் சென்றார். அங்கே, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இருந்தான். துரியோதனின் படையில் கர்ணன் வலது கை என்றால், அஸ்வத் தாமன் இடது கை. அவன் மாவீரன். எந்தக் கை இல்லாவிட்டாலும் மனிதனுக்கு சிரமம்தான். அஸ்வத் தாமனை வைத்து ஒரு குழப்பத்தை நடத்த கண்ணன் திட்டமிட்டார்.

அவர் ராஜசபையில் இருந்த அஸ்வத்தாமனை தனியே அழைத்தார். அஸ்வத்தாமா! நீ பரிசுத்தமானவன். உன் வாயில் உண்மை ஒன்றே வரும். பாண்டவர்கள் என்னிடம் சொல்லி அனுப்பியபடி, துரியோதனனிடம், அவர்களின் நாட்டைக் கேட்டேன். மறுத்துவிட்டான். ஆளுக்கு ஒன்றாக ஐந்து ஊர்களையாவது கேட்டேன். அதற்கும் மறுத்தான். இதற்கு நீயே சாட்சி. அது மட்டுமல்ல! என் வேண்டுகோள் ஒன்றைக் கேள். துரியோதனன், உன்னை அவனது படைக்கு சேனாதிபதியாக்கும் எண்ணம் கொண்டுள்ளான். அதற்கு நீ மறுத்து விடு. ஏனெனில், பாண்டவர்கள் மீது நீயும் அன்பு கொண்டவன் என்பதை நான் அறிவேன். நீ சேனாதிபதியாக இருந்தால் பாண்டவர்கள் உன்னை வெல்வது சிரமமே! என்றவர், தற்செயலாக தன் மோதிரத்தை நழுவ விட்டார். அஸ்வத்தாமன் குனிந்து அதை எடுத்து, அவரிடம் நீட்டிய சமயத்தில், அஸ்வத்தாமா! இதென்ன அதிசயம்! வானத்தைப் பார். சூரி யனை திடீரென ஏதோ இருள் சூழ்ந்தது போல் தெரிகிறதே என்றார். அப்போது, ராஜ சபையில் இருந்த எல்லாருக்கும் எல்லாமே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்நேரத்தில், மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட கண்ணன், அஸ்வத்தாமா! நீ போகலாம், என்றார். இதைப் பார்த்த துரியோதனனுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

அவையறிய அவன், இந்த அஸ்வத்தாமன், கண்ணன் கொடுத்த மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு, ஏதோ சத்தியம் செய்து கொடுத்து விட்டான். என்னிடமிருந்து இவனை கண்ணன் பிரித்து விட்டான். அதற்கு இவனும் துணை போய்விட்டான், என்றான். அஸ்வத்தாமன் மிகுந்த வருத்தமடைந்தான். இதை அவையில் இருந்த மற்றவர் களும் ஒப்புக்கொள்ள வேண்டியே இருந்தது. ஏனெனில், நடந்த சூழ்நிலை அப்படி. அவன் விளக்கம் சொல்ல வாயெடுத்தான். இதற்குள், சூரியனைப் பிடித்திருந்த இருள் அகல, ஒளிவெள்ளம் பாய்ந்தது. அஸ்வத்தாமா! நாம் தனித்துப் பேசுவதைப் பார்த்து அவையில் இருப்பவர்கள் சந்தேகப்படுவது போல் தெரிகிறது. நீ போய்விடு, என்ற கண்ணன், காரியம் முடிந்த சந்தோஷத்தில் கிளம்பி விட்டார். இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஒருவனின் சொந்த இடத்தை நாடாள்பவனே பறித்துக் கொள்கிறான். அவளது மனைவியைத் துன்புறுத்துகிறான். ஊரை விட்டே விரட்டுகிறான். இது தர்மத்துக்கு புறம்பானது. இதுபற்றி பாதிக்கப்பட்டவன் கடவுளிடம் முறையிடுகிறான். கடவுள் அவனுக்கு மனமிறங்கி உதவி செய்ய வருகிறார். தர்மத்தைக் காப்பாற்ற சில தகிடு தத்தங்களைச் செய்கிறார். பாண்டவர்கள் விஷயமும் இப்படியே. அவர்கள் நாடிழந்தார்கள். பாஞ்சாலி துயிலுரியப்பட்டாள். காட்டுக்கு விரட்டப்பட்டார்கள். பரமாத்மா, கண்ணனாக வேறொரு காரியத்துக்காக பூமிக்கு வந்தவர், இவர்களின் வேண்டுதலைக் கேட்கிறார். தர்மத்தைக் காக்க இந்த தகிடுதத்த வேலைகளைச் செய்கிறார். மனிதனுக்கு மனிதன் துரோகம் செய்வது இயற்கையே. துரியோதனனும், பாண்டவர்களும் மனிதர்கள். அவர்களுக்குள் பிரச்னை எழுந்தது இயற்கையே. கடவுளாகிய கண்ணன், இப்படி செய்யலாமா என்ற கேள்வி தான் உங்களுக்குள் எழுந்திருப்பது. சரி...அவர் ஏன் இப்படி செய்தார்?

தெய்வத்தால் இத்தகைய தகிடுதத்தங்களை செய்ய இயலாது. அதனால் தான் அது மனித வடிவை எடுக்கிறது. கண்ணனை நாராயணனின் அவதாரம் என்பதால், நமக்கு தெய்வமாய் தெரிகிறது. அவன் செய்யும் அற்புதங்கள் தெய்வத்தைப் போல் காட்டுகின்றன. மனிதர்களிலும் அற்புதம் செய்யும் தெய்வப்பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அது கண்ணனின் அளவுக்கு இல்லை; இருக்க முடியாது. ஏனெனில், கண்ணன் நிஜமாகவே தெய்வம். மனிதன் எதைச் செய்கிறானோ அதையே அடைவான். இதை உணர்த்தவே, அநியாயம் செய்த கவுரவர்களை அநியாயத்தாலேயே அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தெய்வத்திற்கு ஏற்படுகிறது. தெய்வநிலையில் அதை செய்ய முடியாது என்பதால் மானிடப் பிறவியை எடுத்து அதனுள் மறைந்து கொள்கிறது. இப்படி அஸ்வத்தாமன் மீதும் சந்தேகத்தை உண்டாக்கி விட்ட நிலையில், கண்ணன் அங்கிருந்து அகன்றார். அஸ்வத்தாமனை சபையிலுள்ள அனைவரும் குற்றம் சாட்டினர். நீ கண்ணன் கொடுத்த சாதாரண பரிசுக்கு விலை போய்விட்டாய், என்றெல்லாம் திட்டினார்கள். அஸ்வத்தாமனால் மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், நடந்த சூழ்நிலை அப்படி. அவன் வருத்தத்துடன் அவையை விட்டு வெளியேறினான்.

அரண்மனையை விட்டு வெளியேறிய கிருஷ்ணர், தேவேந்திரனை மனதால் நினைத்தார். அந்தக்கணமே இந்திரன் அவர் முன்னால் வந்து நின்றான். தேவேந்திரா! உன் மகன் அர்ச்சுனனுக்கு, துரியோதனன் என்ற கொடியவனால் ஆபத்து. அதனால், நான் உன்னை அழைக்க வேண்டியதாயிற்று. அவனது நண்பன் கர்ணனால் மட்டுமே அர்ச்சுனனை அழிக்க முடியும். ஆனால், தேவர் உள்ளிட்ட யாராலும் கர்ணனைக் கொல்ல முடியாது. அத்தகைய பேராண்மை மிக்கவன். சூரியனின் மகனான அவன், அத்தகைய வரம் பெற்று பூமிக்கு வந்தவன். இந்நிலையில், அர்ச்சுனனைக் காப்பாற்றுவது அவன் உனது மகன் என்ற முறையில் உனக்கு கடமையாகிறது. மைத்துனன் என்ற முறையிலும், தர்மம் ஜெயிக்க வேண்டும் என்ற முறையிலும் எனக்கு கடமையாகிறது. எனவே, அர்ச்சுனனைக் கொல்லும் கர்ணன் என்ற கொடிய ஆயுதத்தை நீ கட்டுப்படுத்தியாக வேண்டும். அவன் பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறந்தவன். அவை அவனது உடலில் இருக்கும்வரை அவனை யாராலும் கொல்ல முடியாது. எனவே, நீ கர்ணனிடம் செல். அவற்றை அவனிடம் இருந்து யாசித்துப் பெற்று விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். இந்திரன் உடனே கர்ணனின் மாளிகைக்கு புறப்பட்டான். ஒரு முதிய அந்தணன் போல் தன்னை மாற்றிக்கொண்டான். அவன் அரண்மனைக்குச் செல்லும் போது இரவாகி விட்டது. காவலர்கள் தடுத்தனர்.

முதியவரே! எங்கள் கர்ணமகாராஜா கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் வலியெடுத்ததால், எண்ணெய் பூசி இப்போது தான் ஓய்வெடுக்கச் சென்றார். நீர் நாளை வந்து உமக்கு வேண்டியதைப் பெற்றுச்செல்லும், என்றனர். இந்திரன் பதில் ஏதும் பேசாமல், அமைதியாக வாசலிலேயே நின்றான். இதை ஒரு காவலன் ஓடிப்போய் கர்ணனிடம் சொன்னான். அந்த முதியவரை உடனே அனுப்பும்படி சொன்னான் கர்ணன். இந்திரன் உள்ளே வந்தான். கர்ணன் அவனது காலடியில் விழுந்து ஆசிபெற்றான். முதியவரே! காவலர்கள் தங்களை தடுத்தமைக்காக அடியேனை மன்னிக்க வேண்டும். தர்மத்திற்கு ஏது நேரமும் காலமும். எந்த நேரமும் தர்மம் செய்யலாம். தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள், என்றான். முதிய இந்திரன் விரக்தியுடன் சிரித்தான். கர்ணா! உன்னால், நான் கேட்பதைத் தர முடியாது. ஏன்...தேவலோகத்திலுள்ள எதையும் தரும் கற்பக விருட்சத்தால் கூட தர முடியாது, என்றான். கர்ணன் அவனிடம், முதியவரே! தாங்கள் இருப்பது தேவலோகத்தில் அல்ல. அங்கு ஏதாவது பொருள் கிடைக்காமல் போகலாம். ஆனால், கர்ணனிடம் இல்லாத ஒன்றே கிடையாது. என் உயிர் வேண்டுமா? சொல்லுங்கள்...உடனே தந்து விடுகிறேன், என்றான். கர்ணனின் கொடைத் தன்மையையும், அவனது தர்ம உணர்வையும் கண்டு இந்திரன் நெகிழ்ந்தான். கண்களில் நீர் வழிந்தது. இந்த நல்லவனையா நாம் அநியாயமாகக் கொல்லப் போகிறோம். இவன் இல்லாவிட்டால், உலகில் தர்மம் அழிந்துவிடுமே என வேதனை கொண்டான்.

இருப்பினும், கிருஷ்ணனின் கட்டளையாலும், தன் மகன் மீது கொண்ட பாசத்தாலும், கர்ணா! உன் உடலோடு ஒட்டியிருக்கும் இந்த கவச குண்டலங் களைத் தருவாயா? என்றதும், கர்ணன், பெரியவரே! இவ்வளவுதானா! இது ஒன்றும் கொடுக்க முடியாத ஒன்றல்லவே! உடனே தருகிறேன், என்றவன், தன் மார்பில் கத்தியை எடுத்து குத்தி அறுக்க ஆரம்பித்த வேளையில், வானில் இருந்து சூரிய பகவான் பேசினார். கர்ணா! என் அன்பு மகனே! வேண்டாம். தகாத இந்த தர்மத்தைச் செய்யாதே. அவை உன் உடலில் இருக்கும்வரை எந்த தேவனாலும் உன்னை அழிக்க முடியாது. அவற்றை இழந்தால், நீ இறப்பாய். வந்திருப்பவன் இந்திரன். கண்ணனின் தூண்டுதலால் வந்திருக்கிறான், என்றார். கர்ணன், சூரியனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை. சொன்ன சொல் காப்பாற்றுவனே மனிதரில் உயர்ந்தவன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவற்றை அறுத்து ஒரு பொன்தட்டில் வைத்து இந்திரனிடம் நீட்டினான். இந்திரனின் உள்ளம் நொறுங்கிப்போனது. கர்ணா! உத்தமனே! நீ நீடுழி வாழ்க, என சொல்லியபடியே தன் சுயரூபத்தைக் காட்டினான். தேவேந்திரா! உனக்கே தர்மம் செய்யும் பாக்கியத்தை எனக்கு தந்திருக்கிறாய் என்றால், நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன். இந்த மகிழ்ச்சியை விட உயிர் ஒரு பொருட்டா? நீ இந்த பொருட்களுடன் செல்வாயாக என்றான். தேவேந்திரன், கர்ணனின் உடலில் இருந்து கொட்டிய உதிரத்தை நிறுத்தி, மார்பை பளபளவென மின்னச்செய்தான். அவனுக்கு ஒரு வேலாயுதத்தை வழங்கினான். கர்ணா! இந்த வேல் மிகவும் சக்தி வாய்ந்தது. உன் தர்மத்திற்கு பரிசாக இதை நான் அளிக்கிறேன். யார் மீது இதை வீசினாலும் அது அவனைக் கொன்றுவிட்டு உன்னிடமே திரும்பும். ஆனால்...

ஆனால்... என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா... இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களில் ஒருவனாக இருப்பான். கவுரவப்படையில் பெரும்பகுதியை அழிப்பான். அவனைக் கொல்ல நீ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் கவுரவ சேனைக்கு நீ அதிகத் தொண்டு செய்தவன் ஆவாய். மேலும், பீமனின் மகனைக் கொன்றால், உன் நண்பன் துரியோதனன் மகிழ்ச்சியின் எல்லையை அடைவான். உன்னை இன்னும் அன்புடன் நடத்துவான், என்றான். கர்ணன் தேவேந்திரனை வணங்கி அந்த வேலாயுதத்தை வாங்கிக் கொண்டான். பின்னர் தேவேந்திரன் வந்த வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷத்துடன் புறப்பட்டுச் சென்று, கிருஷ்ணரிடம் தகவல் சொன்னான். இதுகேட்ட கிருஷ்ணர், அடுத்த கட்ட வேலையை உடனடியாக ஆரம்பித்தார். குந்திதேவியை அணுகி, அத்தை! நீ உடனே கர்ணனைச் சந்தித்து, முன்பு நான் உன்னிடம் சொன்னது போல் வரங்களைப் பெற்று வா. நினைவில் வைத்துக் கொள். நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது பிரயோகிக்க கூடாது என்பது முக்கிய வரம் என்பதை மறந்து விடாதே, என்று சொல்லி அனுப்பினார்.

குந்திதேவி கர்ணனின் மாளிகையை அடைந்தாள். ஏற்கனவே கிருஷ்ணர் கர்ணனிடம், குந்தி தான் அவனது தாய் எனச் சொல்லியிருந்தாலும், அவர் ஒரு மாயக்காரர் என்பதால், கர்ணன் அவரது வார்த்தையை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். இப்போது, அந்தத்தாயே திடீரென வந்தது குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது. ஆனாலும், எதிரியையும் வரவேற்கும் கர்ணன், அந்தத்தாயை வரவேற்றான். அம்மா! தாங்கள் எனது அரண்மனைக்கு எழுந்தருள என்ன தவம் செய்தேனோ? என மனதார அவளை உபசார வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்தான். தாயே! தாங்கள் இங்கு வந்ததன் காரணத்தை இந்தச் சிறுவன் அறிந்து கொள்ளலாமா? என அவளது பாதத்தின் அருகே அமர்ந்து கொண்டு குழந்தை போல கேட்டான். மகனே! என ஆரம்பித்த குந்திதேவி ஏங்கி ஏங்கி அழுதாள்.

எப்படி சொல்வேனடா... என் செல்வமே! நான் ஒரு கொடுமைக்காரி. கொடுமையின் சின்னமாக உன் முன்னால் வந்து நிற்கிறேன். குற்றவாளியான எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, என புடவைத்தலைப்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். கர்ணன் கலங்கி விட்டான். தாயே! அன்பு, அரவணைப்பு, கருணை, சாந்தம் ஆகிய வார்த்தைகளே உங்களைப் பார்த்து தான் அம்மா... இவ்வுலகிலேயே பிறந்தன. அப்படிப்பட்ட குணவதியான தாங்களா கொடுமைக்காரி... குற்றவாளி... ஐயோ! இதைக் கேட்கவே காது கூசுகிறதே. மற்றும் ஒருமுறை அப்படி சொல்லாதீர்கள். என் பிராணன் போய்விடும், என்று கண்ணீர் மல்கச் சொன்னான் கர்ணன். இல்லையப்பா... நிஜத்தைத் தான் சொல்கிறேன். கர்ணா... நடந்ததைக் கேள், என்றவள், அவனைப் பெற்றது, ஆற்றில் விட்டதையெல்லாம் விபரமாகச் சொல்லி முடித்தாள்.

கர்ணன் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டான். அம்மா! இதென்ன புதுக்கதை. பாண்டவர்களை அழிக்கும் ஒரே சக்தி நான் மட்டுமே என்பதால், அவர்களைக் காப்பாற்ற இப்படி சொல்கிறீர்களா? இதை என்னால் நம்ப முடியவில்லை. தாயே! என் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மாளிகைக்கு ஆசைப்பட்டு, பல பெண்கள் இங்கே வந்தனர். அவர்கள், நான் தான் உன் தாய் என்றனர். இதுபற்றி நான் தேவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் ஒரு வஸ்திரத்தைக் கொடுத்து, உன்னைத் தேடி வரும் பெண்களிடம் இதைக் கொடு. உன்னிடம் பொய் சொல்பவர்கள், இதை அணிந்தால் எரிந்து சாம்பலாவார்கள் என்றனர். அப்படி பல பெண்கள் இறந்து போனார்கள். தாங்களோ ராஜமாதா. எங்கள் தலைவி. உங்களை பரீட்சிக்கும் தைரியம் எனக்கில்லை என்றாலும், சூழ்நிலை என்னை தங்கள் முன் கைதியாக்கி நிறுத்தி விட்டிருக்கிறது, என்று கர்ணன் சொன்னதும், அகம் மகிழ்ந்து போனாள் குந்தி. கர்ணா! இதை விட நிரூபணம் என்ன வேண்டும்? தேவ சாட்சியாக, நானே உன் தாய் என்பதை நிரூபிக்கிறேன். கொடு அந்த வஸ்திரத்தை, என்றாள். கைகள் நடுங்க, என்னாகப் போகிறதோ என்ற அச்சத்துடன் கலங்காத கர்ணன் அவளிடம் வஸ்திரத்தை எடுத்து வந்து நீட்டினான். அதை தன்மேல் வெகு லாவகமாக அணிந்து கொண்டாள் குந்தி.

அவளுக்கு ஏதும் ஆகவில்லை. தாயே! என அவளை அப்படியே அணைத்துக் கொண்ட கர்ணன், குழந்தையிலும் சிறியவனாகி அழுது தீர்த்தான்.என்னை ஏன் தாயே வெறுத்தீர்கள்! நான் என்ன பாவம் செய்தேன் அம்மா.. தர்மனைப் போல, பீமனைப் போல, மாவீரன் அர்ஜுனனை போல, நானும் உன் வீரப்பிள்ளை தானே தாயே! அப்படியிருந்தும், ஊர் சொல்லுக்கு அஞ்சி என்னை ஆற்றில் விட்டு விட்டீர்களே! நான் பாவி...நான் பிறந்திருக்கவே கூடாது. என் முன்வினைப் பயனே என்னை அன்பு வடிவான தங்களிடமிருந்து பிரித்தது, என புலம்பி அழவும், தாய் குந்தியின் மார்பில் இருந்து பால் சுரந்தது.மகனே! அழாதே. அன் றைய சூழ்நிலை அப்படி... இன்று நிலைமை மாறிவிட்டது. என்னைத் தாயென்று அறிந்த பின்பும், நீ இனி இங்கிருப்பது தவறு. வா... என்னோடு! நம் இருப்பிடத்திற்கு போய் விடலாம். உன் தம்பிமார், நீயே அவர்களது சகோதரன் என தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவர். நீயும் பாண்டவர் குலத்தவன் என தெரிந்து விட்டால், இந்த உலகமே உனக்கு தலைவணங்கும். உன்னிலும் உயர்ந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது, என பாசத்தோடு சொன்னாள்.
கர்ணன் சிரித்தான்.



Share



Was this helpful?