Digital Library
Home Books
Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).
காதயுதம் கீழே விழுந்தால் பீமனின் தலை நொறுங்கி விடும். அந்த சமயத்தில் பகவான் அங்கு வந்தார். கதாயுதத்தை கையில் தாங்கி பீமனைக் காப்பாற்றியதுடன், அவன் தந்த உணவையும் ஏற்றார். இப்போது, பழத்தை மரத்தில் ஒட்ட வைத்தாக வேண்டுமென்ற கட்டாய நிலையில், அவர்கள் கண்ணனையே நினைத்தனர். கண்ணனும் வந்துவிட்டான். கண்ணன் பாண்டவர்களின் மைத்துனர். அதாவது கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கையே குந்திதேவி. கண்ணனுக்கு அவள் அத்தை. அத்தையும், அத்தை பிள்ளைகளும் நாராயணனின் பக்தர்கள். உறவுக்காக அல்லாமல், தனது பக்தர்கள் என்ற முறையிலே, கண்ணன் அவர்களுக்கு உதவி செய்வான். கண்ணனை அவர்கள் வரவேற்றனர். திரவுபதி கண்ணனிடம், அண்ணா ! உன்னை அவசரமாக இங்கே அழைத்ததின் காரணம், அமித்ர மகரிஷிக்கு சொந்தமானது என அறியாமல், இதோ இந்த நெல்லிக்கனிக்கு நான் ஆசைப்பட்டேன். அர்ஜுனன் பறித்து தந்தார். ஏற்கனவே, கஷ்டத்தில் இருக்கும் நாங்கள், அவரது சாபத்தையும் பெற்றால் நிலைமை என்னாகுமோ என தெரியவில்லை. உன்னைச் சரணடைந்து விட்டோம். நீ தான் எங்களைக் காப்பாற்றவேண்டும் அனாதரட்சகனே! என்றாள்.
தங்கையே! என் கையில் என்ன இருக்கிறது! பறித்தவர்கள் யாரோ, அவர்கள் தான் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே, ஒருமுறை புடவை தந்து உதவியது போல், இப்போதும் இதை என்னால் ஒட்ட வைக்க முடியாது. இருந்தாலும், உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீங்கள் எந்த வழியைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை ஒளிக்காமல் சொல்ல வேண்டும். பதில் சரியாக இருந்தால், இந்தக் கனி மரத்தில் ஒட்டிக்கொள்ளும், என்றார் கண்ணன். தர்மர் கண்ணனிடம், கிருஷ்ணா! பாவமும், பொய்யும், கோபமும், அசுரர் குலமும் தோற்க வேண்டும். நீ மட்டுமே எதிலும் ஜெயிக்க வேண்டும் என்று கருதுபவன் நான், என்றார். பீமன் தன் பதிலாக, கண்ணா! என் உயிரே போனாலும் சரி... பிறர் மனைவியை பெற்ற தாயாக நான் நேசிக்கிறேன். பிறர் சொத்துக்கு ஆசைப்படமாட்டேன். பிறரை ஏளனமாகப் பேசமாட்டேன். பிறருக்கு ஏற்படும் துன்பத்தை எனக்கு ஏற்பட்டதாகக் கருதுவேன், என்றான். அர்ஜுனன் கண்ணனிடம், மைத்துனா! உயிரை விட மானமே பெரிதெனக் கருதுபவன் நான். அதுவே பூவுலகில் பிறந்தவனுக்கு பெருமை தரும் என்றான்.
நகுலன் கண்ணபிரானிடம், பாஞ்சஜன்யத்தை முழக்கி உலகையே அதிரச் செய்பவனே! செல்வம், நல் லகுலம், அழகு, தர்மம் ஆகியவற்றை விட இவ்வுலகில் கல்வியே சிறந்ததென கருதுபவன் நான். கல்வியறியற்றவனுக்கு எல்லா வசதியும் இருந்தாலும், அவன் மணமற்ற மலருக்கு ஒப்பாவான் என்றான். இத்தனை பேர் பதில் சொல்லியும் பழம் மரத்தில் ஒட்டவில்லை. மனம் திக்திககென அடிக்க திரவுபதி கண்ணோரம் கண்ணீர்முட்ட நின்று கொண்டிருந்தாள். சாந்த சொரூபியும், சகலகலா வல்லவனுமான சகாதேவனின் பக்கம் திரும்பினார் கண்ணன். சக்ரதாரியே! ஒரு மனிதனுக்கு சத்தியமே தாய். ஞானமே தந்தை. தர்மமே சகோதரன், கருணையே நண்பன், சாந்தமே மனைவி, பொறுமையே பிள்ளை, இந்த ஆறுபேரையும் தவிர அவனுக்கு வேறு எந்த உறவுகளும் உதவி செய்யாது. இதேயே நான் கடைபிடிக்கிறேன் என்றான். பழம் பட்டெனப் போய் ஒட்டிக்கொண்டது.
சகாதேவா உன்னிலும் உயர்ந்தவர் இந்த பூமியில் இல்லை. எனது கருத்துக்களை உலகம் பின்பற்றினால் மனிதர்கள் உய்வடைவார்கள் என ஆசியருளிய கண்ணன், அவர்களிடம் விடை பெற்று துவாரகையை அடைந்தான். இப்படி, பாண்டவர்கள் பல சோதனைகளை அனுபவித்த நிலையில் காட்டில் நாட்டை -- கயவர்களான துரியோதரன், துச்சாதனன், கர்ணன், சகுனி போன்றவர்கள் அஸ்தினாபுரத்திலே சதித்திட்டம் ஒன்றை தீட்டினர். காட்டில் -- பாண்டவர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதே அந்த திட்டம். இதை செயல்படுத்த காளமாமுனிவர் என்பவரை தங்கள் அவைக்கு வரவழைத்தனர். அவரிடம் தங்கள் திட்டத்தை சொன்னான் துரியோதரன். காளமாமுனிவர் அதிர்ந்து விட்டார். துரியோதனா! பாண்டவர்களைக் கொல்வதென்பது இயலாத காரியம். ஏனெனில், அவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் துணையாக இருக்கிறார். கிருஷ்ண பக்தர்களைக் கொல்வதென்பது நடக்கூடியதா? மேலும், இந்த விபரீத எண்ணம் உங்களுக்கு எதற்கு? வனவாசம் முடிந்து அவர்கள் வந்ததும், அவர்களுக்குரியதை அவர்களிடம் ஒப்படைப்பதே உங்களுக்கு உசிதமானது என்றார்.
அந்தக் கயவர்கள் முனிவரை விடவில்லை. முனிவரே! தாங்கள் பகைவரை அழிக்கும் அபிசாரயாகம் தெரிந்தவர். தங்களால் முடியாத செயலைத் நாங்கள் சொல்லவில்லை, என்று காலில் விழுந்து புலம்பினர். முனிவருக்கு புரிந்து விட்டது. இந்தக் கயவர்களால், தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று! நடப்பது நடக்கெட்டுமென யாகம் செய்ய ஒப்புக்கொண்டார். யாகம் துவங்கியது. அதிபயங்கரமான யாகம் அது. ஏராளமான உயிர்கள் யாக குண்டத்தில் பலியிடப்பட்டன. அப்போது, யாககுண்டத்தில் இருந்து ஒரு பயங்கர பூதம் கிளம்பியது. இந்த நேரத்தில், பாண்வர்களுக்கு காட்டில் ஒரு சோதனை நிகழ்ந்தது. நெல்லிக்கனி சமாச்சாரத்துக்கு பிறகு, அவர்கள் விஷ்ணுசித்தர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தனர். அங்கு வசித்த ஒரு முனிவரின் மகன் அணிந்திருந்த ஒரு புலித்தோலை, அவன் அருகில் வந்த மான் பறித்துச் சென்றது. அந்த காட்டுக்குள் பாய்ந்தோடியது.
புலித்தோலுடன் முனிபுத்திரனின் பூணூலும் சிக்கிக் கொண்டது. இதனால், அவன் அழுது புலம்பினான். தனது பூணூலையும், புலித்தோலையும் மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் ஓடி வந்து வேண்டினான். பாண்டவர்கள் மானைத்தேடி புறப்பட்டனர். ஓரிடத்தில், அந்த கபடமான், புலித்தோலுடன் நின்றது. அதன் மீது அர்ஜுனன் அம்பெய்தான். ஆனால், மான் மாயமாக மறைந்து விட்டது.
அப்படி மானாக வந்தது யார் தெரியுமா? தர்மரின் தந்தையான எமதர்ம ராஜா தான். குந்தி தேவிக்கு பாண்டுவால் குழந்தை இல்லாத நேரத்தில், அவள் தனக்கு தெரிந்த மந்திரத்தை எமதர்மராஜாவை நோக்கிக் கூற, அவரருளால் பிறந்தவர் தர்மர். அந்த வகையில், தன் மகனைக் காப்பாற்ற செய்த உபாயமே இது. எனவே, அதை பிடிக்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர். அப்போது மானாக வந்த எமதர்மராஜா, தன் வடிவத்தை விஷத் தண்ணீர் நிறைந்த குளமாக மாற்றிக் கொண்டார். பாண்டவர்கள் வெகுதூரம் ஓடி வந்ததால், அவர்களை தாகம் வாட்டியது. குளம் சற்று தள்ளியிருந்ததால், சகாதேவனை அனுப்பி தண்ணீர் எடுத்து வரும்படி கூறினர். ஆனால், அது ஒரு நச்சுக்குளம் என்பøதா சகாதேவன் அறிந்திருக்கவில்லை. அவன் வேகமாகச் சென்று களைப்பு நீங்க, நீரை அள்ளிக் குடித்தான். தண்ணீர் வாயில் பட்டதுமே, சுருண்டு விழுந்து இறந்தான்.
நீண்ட நேரமாக தம்பியைக் காணாததால் கலக்கமடைந்த தர்மர், நகுலனை அனுப்பினார். சகாதேவன் சுருண்டு விழுந்து கிடப்பதை கவனிக்காத நகுலன், தாக மிகுதியால் அவனும் தண்ணீரைக் குடித்து இறந்தான். இதையடுத்து அர்ஜுனன் சென்று முன்னவர்கள் போலவே இறந்தான். பின்னால் சென்ற பீமன், அவர்கள் இறந்து போனதற்கு, குளத்து நீர்தான் காரணம் என்பது அவனுக்கு புரிந்து விட்டது. கடும் தாகத்தையும் அடக்கிக் கொண்ட அவன், தம்பிமார்களை அணைத்துக் கொண்டபடியே அழுதான். இந்த தகவலை தர்மரிடம் போய் சொன்னால், நிச்சயமாக அவர் உயிர் விட்டுவிடுவார் என்பது அவனுக்கு புரிந்து விட்டது. எனவே மணலில், இந்த தண்ணீரில் விஷம் கலந்துள்ளது, ஜாக்கிரதை, என எழுதி வைத்துவிட்டு, அந்த விஷ நீரைக் குடித்தே இறந்து போனான். தம்பிகள் யாரும் வராததால், தாகம் தாளாத தர்மர் மயங்கி விழுந்து விட்டார்.
இந்த சமயத்தில் காளமுனிவரின் யாகம் தீவிரமாகியிருந்தது. யாக குண்டத்தில் இருந்து கிளம்பிய பூதம், முனிவரே! நான் உமக்காக என்ன செய்ய வேண்டும்? சொல்லும், என்றது. பூதமே! நீ சிறிதளவு நேரம்கூட தாமதிக்காமல் காட்டிற்குள் செல். அங்கே வசிக்கும் பாண்டவர்களை கொன்று விட்டு திரும்பி வா! என உத்தரவிட்டார். பூதம் அவரிடம், முனிவரே! நீ சொன்னபடி செய்கிறேன். ஒரு வேளை அந்த பாண்டவர்கள் காட்டில் இறந்து போயிருந்தாலோ எனது கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டலோ திரும்பவும் வந்து உம்மையே கொன்று விடுவேன்! சம்மதமா? என்றது. முனிவர் முக்காலமும் அறிந்தவர். கிருஷ்ண பக்தர்களான பாண்டவர்களுக்கு எதிராக யாகம் துவங்கும்போதே அவருக்கு தெரியும், தன் ஆயுள் முடியப் போகிறது என்று விதியின் பலனை அனுபவிக்க அவர் தயாராக இருந்தார். அப்படியே ஆகட்டும், போய் வா, என்றார். அவரிடம் விடை பெற்ற பூதம் பாண்டவர்களைத் தேடி காட்டுக்குள் சென்றது. விஷக்குளத்தின் அருகில் பாண்டவர்களில் நால்வர் இறந்து கிடப்பதைப் பார்த்தது. தர்மரைத் தேடியது. தர்மர் சற்று தூரத்தில், மயங்கி கிடப்பதைப் பார்த்து அவரும் இறந்துவிட்டதாகவே எண்ணிவிட்டது. தன்னால், கொல்லப்பட்ட வேண்டியவர் ஏற்கனவே இறந்து போனதால் முனிவரை கொன்றேயாக வேண்டிய நிர்பந்தம் பூதத்திற்கு ஏற்பட்டது.
முனிவரின் முன்னால் அது தோன்றியது. பூதமே! சென்ற காரியம் என்னாயிற்று என்று அதட்டினார் முனிவர். நல்லொழுக்கம் கவனமாக இருக்க வேண்டிய முனிவனே! என்னையா அதட்டுக்கிறாய்? துரியோதனனின் பேச்சைக் கேட்டு -- புறம்பாக யாகம் செய்து என்னை எழுப்பி பாண்டவர்களை கொல்ல அனுப்பினாய். ஆனால் ஒருமுறை இறந்தவர்களை மறுமுறையும் கொன்று என்னால், எப்படி சாகடிக்க முடியும்? அவர்கள் ஒரு விஷக்குளத்தின் நீரைப் பருகி இறந்து கிடக்கிறார்கள். ஆகவே செய்த வினை செய்தவனை நோக்கி வந்திருக்கிறது. ஒழிந்து போ, என்று கர்ஜித்த பூதம் காளமா முனிவரின் தலையைத் துண்டித்தது. பின்னர் யாக குண்டத்திற்குள் சென்று மறைந்து விட்டது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பில்லி, சூனியம், மந்திரம், மாயம் என அலைபவர்களெல்லாம், யாரையாவது கெடுக்கவோ, அழிக்கவோ நினைத்தால், அது எதிர்மறையான விளைவுகளையே தரும். காளமாமுனிவர் தவசீலர். எல்லாம் அறிந்தவர். அந்த தவசீலனுக்கே இந்தக்கதியென்றால், சாதாரண மனிதர்களின் கதி என்னவாகும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போன்ற தீய எண்ணங்கள், செய்கைகளை கைவிட்டு, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாரதம் இந்த இடத்திலே நமக்கு கற்றுத் தருகிறது.
காளமாமுனிவரின் வாழ்க்கை முடிந்து விட்ட நிலையில், காட்டில் மயங்கிக்கிடந்த தர்மர் தென்றல் காற்று முகத்தில் பட்டு விழித்தார். தம்பிகளைத் தேடி புறப்பட்டார். குளக்கரையில் அவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தார். ஓரிடத்தில் பீமன் எழுதி வைத்திருந்ததைப் படித்த அவர் அழுதார். தம்பிகள் இல்லாத உலகில் வாழ அவரும் விரும்பவில்லை. குளத்தில் இறங்கி, விஷநீரை கையில் அள்ளினார். அப்போது மகனே என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தார். வானில் இருந்து அசரீரி ஒலித்தது. தர்மபுத்திரனே! இந்த விஷநீரை குடிக்காதே. உன் தம்பிகள் நால்வரும் இங்கே வந்த போது, இந்த நீரைக் குடிக்காதீர்கள் என நான் சொன்னேன். அவர்கள் தாக மிகுதியால் அதைக் கேட்காமல் குடித்து இறந்தனர். நீயும் கேட்கமாட்டாய் என்பதை அறிவேன். இருப்பினும், நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு இதைக் குடி, என்றது. சரி... உன் ஆசையை நிறைவேற்றிக் கொள். கேள்விகளைக் கேள், என்றார் தர்மர். கேள்விக்கணைகள் பாய்ந்தன.
சாஸ்திரங்களில் சிறந்தது எது? என்றது அசரீரி. வேதமே மிகச் சிறந்தது என்றார் தர்மர். இப்படியே கேள்வி பதில் தொடர்ந்தது. மணம் மிகுந்த மலர் எது? ஜாதிப்பூ மிகப்பெரிய தவம் எது? தனது குலப்பெருமையை பேணிக்காக்கும் நல்லொழுக்கம் ரிஷிகளால் வணங்கப்படும் இறைவன் யார்? துளசிமாலைக்கு சொந்தக்காரரான பரமாத்மா கிருஷ்ணன் பெண்ணுக்கு இயற்கையாகவே அமைய வேண்டிய குணம் என்ன? வெட்கம் எதில் அதிக கவனம் வேண்டும்? தர்மம் பெறுபவர் தகுதியுள்ளவர் தானா என பார்ப்பதில் காதுகளுக்கு இனிமை தருவது எது? குழந்தைகளின் மழலை நிலையானது எது? புகழ் படிக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன? தவறே இல்லாமல் படிப்பது. உலகிலேயே கேவலமான தொழில் எது? பிச்சை எடுப்பது. இப்படி, எல்லா கேள்விகளுக்கும் தர்மர் சரியான பதிலளித்தார். அந்த பதிலால் திருப்தியடைந்த எமதர்மன் அவர் முன்பு தோன்றினார். மகனை அன்போடு அணைத்துக்கொண்டார். அவரது காதில், மகனே! இங்கே இறந்துகிடக்கும் உன் தம்பிமார்களில் மிகப் பிரியமான ஒருவனை நான் சொல்லித்தரும் மந்திரத்தைச் சொல்லி எழுப்பு என்றார்.
அதன்படியே அந்த மந்திரத்தை கேட்டு சகாதேவனை எழுப்பினார் தர்மர். மகனே! உன் உடன் பிறந்த அர்ஜுனனையோ, பீமனையோ எழுப்பாமல் இந்த சகாதேவனை நீ எழுப்பியதற்கு காரணம் என்ன? என்று கேட்டார் எமதர்மராஜா. இதற்கு பதிலளித்த தர்மர், தந்தையே! எனது தாயான குந்திக்கு நான் ஒருவன் பிழைத்திருக்கிறேன். ஆனால், என் தம்பியரை எழுப்பினால், என் சிற்றன்னை மாத்ரிக்கு யார் இருப்பார்கள்? மேலும், என் தம்பிகளை எழுப்பினால், குந்தியின் மைந்தர்களை மட்டும் பாதுகாத்தேன் என்ற அவச்சொல்லுக்கு ஆளாவேன். இது எவ்வகையிலும் நியாயமாகதே? என்ற தனது பெருத்தன்மையை வெளிப்படுத்தினார். இதைக்கேட்டு எமதர்மன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அங்கே இறந்து கிடந்த அனைத்து தம்பியரையும் உயிர்பெறச்செய்தார். தர்மர் கேட்ட வரத்தைக் கொடுத்ததுடன், பகைவர்களையும் வெல்லும் மந்திரங்களையும் கற்றுத் தந்தார். பல ஆயுதங்களையும் தந்து உதவினார். இந்த கலியுகத்தில், உடன் பிறந்த சகோதரர்களே அடித்துக் கொள்கிறார்கள். அவர்களெல்லாம் தர்மர் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாரதம் போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும் என்பது இதனால் தான். திரவுபதி எப்படி ஐந்து பேருக்கு மனைவியாக இருந்தாள் என்பது போன்ற விரச ஆராய்ச்சிகள், பட்டிமன்றங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரு நூலில் சொல்லப்பட்டுள்ள உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்படித்து திருந்த வேண்டும்.
பங்காளி சண்டையை விட்டொழிக்க வேண்டும். உடன்பிறந்தவன், சித்தப்பா மகன், பெரியப்பா மகன், அவனுக்கென சொத்து... என்பது போன்ற வார்த்தைகளே இதைப் படிப்பவர் வாயில் இனி வரக்கூடாது. இந்த சம்பவங்களெல்லாம் ஏன் நடந்தன என்பது பாண்டவர்களுக்கு புரியாமல் இருந்தது. எமதர்மன் அவர்களிடம் இதை விளக்கிச் சொன்னான். துரியோதனனால் -- முனிவர் மூலமாக நடத்தப்பட்ட யாகத்தையும், அதன் விளைவாக அவர்கள் அனுபவித்த --ன்பத்தையும், துன்பமே அவர்களுக்கு சாதகமாக அமைந்ததையும் எடுத்துச் சொன்னான். துன்பமும் இன்பத்தை தரவே வருகிறது என்ற தத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினான். பின்னர் பாண்டவர்கள் எமதர்மராஜாவின் பாதங்களில் பணிந்து விடை பெற்றனர். இப்படியாக, 12 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த வனவாசத்தில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் மூலம் பல படிப்பினைகளை சமர்ப்பித்தான் அர்ஜுனன். தர்மருக்கும் அதுவே சரியென்று பட்டது. மச்சநாட்டை விராடன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தர்மவான். நல்லவன். நீதி நெறியில் உயர்ந்தவன். அந்த நாட்டின் தலைநகரான விராநகரத்தின் எல்லைக்குள், இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நுழைந்தனர் பாண்டவர்களும், திரவுபதியும்.
ஊர் எல்லையில் இருந்த ஒரு மயானத்தில் காளிகோயில் ஒன்று இருந்தது. அம்பிகை காளியின் சிலை உக்ரமாக காட்சியளித்தது. அந்த கோயிலுக்குள் சென்ற அவர்கள் அங்கிருந்த வன்னிமரப் பொந்தில் தங்கள் ஆயுதங்கள், ஆடைகளை ஒளித்து வைத்தார்கள். தர்மர் ஒரு அந்தணரைப் போல வேடமிட்டுக் கொண்டார். கங்கன் என்று பெயர் சூட்டிக் கொண்டார். தம்பிகளையும், திரவுபதியையும் அங்கே விட்டுவிட்டு, விராடராஜனின் அவைக்குச் சென்றார். அந்தணர்களை வரவேற்று உபசரிப்பதில் அக்கால மன்னர்கள் மிகுந்த அக்கறை காட்டினர். அந்தணர்களை உபசரிப்பவர்கள் சொர்க்கம் பெறுவர். அவர்களைத் தூற்றுவோர் ஏழேழு ஜென்மமும் நரகத்தை அடைந்து மீளாத்துயரில் ஆழ்வர் என குருமார்கள் கற்றுத் தந்ததை கடைபிடித்தவர்கள் அவர்கள். அவ்வகையில் அந்தணராகிய கங்கனை வரவேற்ற விராடமன்னன், ஐயனே! தாங்கள் யார்? எந்த தேசத்தில் இருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு சேவை ஏதும் செய்ய உத்தரவு தருகிறீர்களா? என பணிவுடன் கேட்டான்.
அரசே! என்னை கங்கன் என்று அழைப்பார்கள். நான் தர்மருடன் வனவாசத்தில் இத்தனை நாட்களும் கழித்தேன். அவர் தற்போது அஞ்ஞான வாசம் செய்வதால், அவரை விட்டு பிரிய வேண்டியதாயிற்று. இவ்வுலகில் எது சிறந்த நாடு என விசாரித்த போது, உமது நாடே உயர்ந்ததென கேள்விபட்டு இங்கு வந்தேன், என்ற தர்மரிடம், ஆஹா! பாக்கியவான் ஆனேன். தாங்கள் எங்கள் நாட்டில், நீங்கள் விரும்பும் வரையில் தங்கலாம், என்றான் விராட மன்னன். சிலநாட்கள் கழித்து, ஆஜானுபாகுவான ஒருவன் அரண்மணைக்கு வந்தான். மகாராஜா! என் பெயர் பலாயனன். பீமராஜாவிடம் சமையல் காரனாக வேலை செய்தவன். சமையல் கலை எனக்கு கை வந்த கலை. எந்த காய்கறியாக இருந்தாலும், அதில் ஐந்து வகை சமைப்பேன். ஆனால், அதில் அறு சுவை இருக்கும். தேவலோகத்தில் கூட அப்படி ஒரு சாப்பாடு கிடைக்காது, என்று ஒரு போடு போட்டான்.
அங்கே வந்தது யார் தெரியுமா? நமது சாப்பாட்டு ராமன் பீமன் தான். ஆண்கள் சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் தான் சமையலுக்கு உரியவர்கள் என ஒதுக்கி அவர்களை அடுக்களை தவளைகளாக மாற்றி, அடக்கி வைத்து விட்டதாக சந்தோஷப்படக்கூடாது. ஒரு ஆபத்தான கட்டத்தில், அந்தப்பணி தான் பீமனுக்கு உதவியது. நமக்கும் கூட அவ்வகை கைத்தொழில்கள் சமயத்தில் கை கொடுக்கும். மனைவி ஊருக்குப் போய்விட்டால் கூட, சுத்தமான சாப்பாட்டை வீட்டிலேயே சமைத்துக் கொள்ளவும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும், உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவும்.
பீமன் சமைத்தும் காட்டினான். அப்படியொரு சாப்பாட்டை விராட ராஜா அதுவரை சாப்பிட்டதே கிடையாது. மகிழ்ச்சியில் பலாயனா! இனிமேல், நீ தான் இந்த அரண்மனையின் தலைமை தவசுப்பிள்ளை, (சமையல்காரர்) என சொல்லி விட்டான். நமது புராணகாலத்து சமையல்காரர்களில் நளனும், பீமனும் அரசகுடும்பத்தில் இருந்தாலும் சமைக்கத் தெரிந்தவர்கள். நளனின் கைபட்டால் சமையல் ருசிக்கும். பீமனின் பார்வை பட்டாலே சமையல் ருசித்து விடும். இதனால் தான் நளபாகம், பீமபாகம் என்று சமையலில் இருவகையாக சொல்லி வைத்தார்கள். மறுநாள், ஒரு பேடி அங்கு வந்தாள். பேடி என்றால் ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அரவாணி இனத்தைச் சேர்ந்தவர். அவள் விராடனிடம், மகாராஜா என் பெயர் பிருகந்நளை. நான் -- , சாஸ்திரமும் தெரிந்தவள். அர்ஜுனனின் அவையிலே இருந்த பெண்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்தேன். இப்போது, தங்கள் நாட்டுக்கு வந்துள்ளேன். தாங்கள் அனுமதித்தால் அதை செய்கிறேன், என்றாள்.
அவ்வாறு அரவாணி வேடமிட்டு வந்தது அர்ஜுனன். முன்பொரு முறை, ஊர்வசியை மகிழ்ச்சிப்படுத்த மறுத்த அர்ஜுனன் பேடியாகும்படி சாபம் பெற்றிருந்தான். இந்திரனின் சிபாரிசால், அவன் எப்போது நினைக்கிறானோ அப்போது இந்த வடிவை எடுக்கலாம் என்ற சாப விமோசனம் பெற்றிருந்தான். அந்த சாபத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். அங்கேயே, அவளுக்கு வேலை கொடுத்தான் விராடமன்னன். இன்னும் சில நாட்கள் கடந்து நகுலம் அரண்மனைக்குள் வந்தான். அவன் விராடமன்னனிடம், அரசே! என் பெயர் தாமக்கிரந்தி. நான் குதிரை ஓட்டுவதில் வல்லவன். ரதங்களில் பூட்டுகின்ற குதிரைகளை தரம் பார்த்து வாங்குவதில் கைதேர்ந்தவன். நமது அரண்மனைக்கு நல்ல நிறமும், மணமும், குரலும் கொண்ட குதிரைகளை வாங்கித்தருகிறேன். அவற்றை நன்றாக பராமரிக்கவும் செய்வேன். எங்கள் என்னை வலையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றான். அவருக்கு அங்கு வேலை கிடைத்தது.
அடுத்த சில நாட்களில் சகாதேவன் அங்கு வந்தான். அன்னா! என்னை திரிபாலன் என்று அழைப்பார்கள். நான் சகாதேவனிடம் பசுக்களை காப்பவனாக பணிபுரிந்தேன். அவர் காட்டிற்கு சென்ற போது பிழைப்பிற்கு வழியின்றி பல இடங்களுக்கு செல்வேன். ஆனால் உரிய வருமானம் கிடக்கவில்லை. எனவே தாங்கள் எனக்கு வேலை தர வேண்டும். அரண்மனை பசுக்கூட்டத்தை நான் பாதுகாக்கிறேன், என்றான். விராடன் அவனுக்கு ஏராளமான பசுக்களை கொடுத்து பணியில் சேர்த்துக்கொண்டான். இதையடுத்து விரதசாரிணி என்ற பெயரில்,திரவுபதி அங்கு வந்தாள். அவளுடைய அழகு அங்குள்ள பணிப்பெண்களைக் கவர்ந்தது. அவள் விராடராஜனின் மனைவி சுதேஷ்ணையை சந்தித்தாள். மகாராணி! நான் பாஞ்சாலிக்கு அலங்காரம் செய்யும் பணியில் இருந்தேன். அவன் காட்டிற்கு போய்விட்டதால் என்னால் தொடர்ந்து பணிசெய்ய இயலவில்லை. என்னிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. நான் எந்த மனிதருடைய முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். கந்தவர்கள் முதலானோர் கூட எனது கற்புக்கு தீங்கிழைக்க முடியாது. இந்த அரிய குணத்தைக் கொண்ட நான் தங்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். உங்களுக்குரிய எல்லாவித அலங்காரங்களையும் இன்று முதல் நானே செய்கிறேன். எனக்கு பணி தாருங்கள், என்றாள்.
இதைக் கேட்ட சுதேஷ்ணை மிகுந்த மகிழ்ச்சியுடன் பணியில் சேர்த்துக் கொண்டாள். இப்படியாக பாண்டவர்கள் ஐவருக்கும், திரவுபதிக்கும் விராடனின் அரண்மனையிலேயே வேலை கிடைத்துவிட்டது. ஒருநாள் வாசமல்லன் என்ற மற்போர் வீரன் விராடனின் அரசவைக்கு வந்தான். தன்னைவிட மற்போரில் சிறந்தவன் இந்த பூமியில் யாரும் இல்லை என்று தோள் தட்டினான். உங்கள் நாட்டில் அப்படி ஒரு வீரன் இருந்தால் என்னோடு போர் செய்யலாம் என்றும் சவால் விட்டான். விராடராஜன் தனது நாட்டிலுள்ள மல்லர்களை எல்லாம் வரவழைத்து வாசவமல்லனுடன் போரிடச் செய்தான். ஆனால் எல்லாருமே அவரிடம் தோற்றுவிட்டனர். அவமானப்பட்ட விராடராஜன் வேறு வழியின்றி வாசவமல்லனுக்கு பரிசுகளை வழங்கினான். அப்போது கங்கன் என்ற பெயரில் மாறுவேடம் தரித்திருந்த தர்மர், மன்னா! கவலை வேண்டாம். உன்னிடம் பணி செய்யும் சமையல் காரனான பலாயனனை இவனுடன் சண்டை செய்யச் சொல்லுங்கள். அவன் வாசவமல்லனை நிச்சயம் மற்போரில் ஜெயிப்பான் என்றார். பலாயனன் என்ற பெயரில் அங்கு வசித்த பீமன், இடுப்பில் தங்கக் கச்சை ஒன்றை கட்டிக்கொண்டு கதாயுதத்துடன் ராஜசபைக்கு வந்தான். வாசவமல்லனுக்கும் பீமனுக்கும் கடும் போர் நடந்தது. இரண்டு மலைகள் மோதியது போன்ற காட்சியைக் கண்டு மக்கள் திகைத்து நின்றனர். வெற்றி தோல்வி யாருக்கு என்று சொல்ல முடியாத நிலைமை. வாசவமல்லனின் கையே அவ்வப்போது ஓங்கியது.
ஆனால், இறுதியில் பீமன் அவனது தொடையை வளைத்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றான். விராட மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது சமையல் பணியாளன் உலகிலேயே சிறந்த மல்யுத்த வீரனும் கூட என பராட்டியத்துடன், அவனை அருகில் அழைத்து, தன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, மன்னனுக்குரிய அந்தஸ்தையும், செல்வத்தையும் வாரிக்கொடுத்தான். இங்கே, இப்படி பீமனுக்கு சகல மரியாதையும் நடக்க, திரவுபதிக்கு மற்றொரு சோதனை வந்தது. அவளது கற்புக்கு இரண்டாம் முறையாக ஏற்பட்ட சோதனை அது. ஏற்கனவே, துரியோதனின் அவையில், கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்ட அவள், இப்போது, கீசகன் என்ற காமப்புலியிடம் சிக்கிக் கொண்டாள். கீசகன் என்பவன், விராடமகாராஜாவின் மைத்துனன். அதாவது, மாகராஜா இவனது சகோதரி சுதேஷ்ணையைத் தான் மணந்திருந்தார். அவன் விராடநாட்டின் சேனாதிபதியும் கூட. அழகில் மன்மதன். பெண்கள் விஷயத்தில் பல வீனமானவன். அவன், தன் சகோதரியைப் பார்க்க அரண்மனைக்கு வந்தான். சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, நந்தவனம் வழியே திரும்பும்போது, ஒரு அழகு மங்கை பூப்பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
லோகத்தில் இப்படி ஒரு பேரழகியா? இதுவரை அவன் பல ரோஜாக்களை முகர்ந்திருக்கிறான். ஆனால், இப்படி ஒரு அகன்று விரிந்த தாமரையைப் பார்த்ததே இல்லை. அவளருகில் சென்றான். அழகின் வடிவமே! நீ பூலோகத்தில் பிறந்தவளா? தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளா? பெண் தெய்வமா? ஒரு வேளை மலை மகள் பார்வதியோ? தாமரையில் எழுந்தருளிய திருமகளோ? பாதாளத்தை உடைத்து கொண்டு வந்த மோகினியோ? சமுத்திரத்தில் இருந்து வந்த ஜலகன்னியோ? சித்திரம் ஏதேனும் உயிர் பெற்று வந்ததோ? என புகழ்ந்தான். திரவுபதி அவனது மோசமான பார்வையைக் கண்டு செடிகளுக்கிடையே சென்று ஒளிந்து தன்னை மறைத்துக் கொண்டாள். விடவில்லை அநதக் கொடியவன்! பின்னாலேயே வந்து அவளை நெருங்கினான். ஒதுங்கிக் கொண்ட திரவுபதி, வீரனே! நான் ஐந்து தேவர்களுக்கு என்னை தாரை வார்த்தவள். மாற்றான் மனைவியை ஏறெடுத்துப் பார்க்க கூடாது என்பதை நமது தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை நீ அறியமாட்டாயோ? ஒரு பெண்ணை அவள் சம்மதமின்றி விரும்புபவன், இப்பிறப்பில் மட்டுமல்ல, மறுபிறப்பிலும் கடும் விளைவுகளைச் சந்திப்பான். ஒருவேளை, உன்னை என் அழகு கவர்ந்து, மன்மதனின் வலைக்குள் சிக்கியிருந்தாலும் கூட, அதை உதறிவிட்டுப் போகும் பக்குவத்தை நீ வளர்த்துக் கொள். போய்விடு, என்றாள்.
கீசகன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. பெண்ணே! உன்னை விட்டுப் போவதா? அதை விட என் உயிரை போக்கிக் கொள்கிறேன். தாபம் என்னை வாட்டுகிறது. மறுகாதே, வா, என்றான். ஒரு கட்டத்தில் தாபம் தாங்காமல் அவள் காலிலும் விழுந்தான். அவனுக்கு பெண் பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட திரவுபதி, அவனிடமிருந்து தப்பி, சுதேஷ்ணையிடம் ஓடினாள். அம்மா! தங்கள் தம்பி என்னைப் பார்த்து சொல்லத்தகாத வார்த்தைகளை பேசினான். நான் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும் என் மீது காமப்பார்வை வீசுகிறான். நீங்கள் அவனைத் தடுக்க வேண்டும். நான், இங்கு பணியில் சேரும்போது நான் விரதம் இருக்கும் விஷயத்தைச் சொல்லியுள்ளேன். உங்கள் தம்பியின் ஆசை எல்லை மீறிவிட்டது. அதைத் தணிக்க வேசியருக்கு ஏற்பாடு செய்யுங்கள். என்னைத் தொடுவதற்கு தாங்களும் அவனுக்கு உதவி விடாதீர்கள். அப்படி செய்தால், அவன் எரிந்து போவான்.இது நிச்சயம் என்றாள், உறுதிபட. சுதேஷ்ணை கலங்கி விட்டாள். தம்பியைத் திட்டினாள். அக்காவின் தலையீட்டால் அவனால் ஏதும் செய்யமுடியவில்லை. அவன் தன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அங்கு சென்றதும், அவனது விரகதாபத்தைப் போக்க பணிப் பெண்கள் அவன் உடலில் பூசிய சந்தணம், பன்னீர் எல்லாம் காய்ந்து விட்டது. அந்தளவுக்கு திரவுபதியின் நினைவு என்னும் வெப்பம் அவனைத் தகித்தது.
அவன் கட்டிலில் புரள்வதைப் பார்த்த பணிப்பெண்கள் இந்த நோயால் அவன் இறந்து விடுவானோ எனக் கருதினர். அவர்கள் சுதேஷ்ணையிடம் ஓடிவந்து, தங்களால் கீசகனின் விரகத்தை தீர்க்க முடியவில்லை என்று கூறியதுடன் அவர் இறந்து விடுவாரோ என்று பயப்படுவதாகக் கூறினர். மகாராணி! தாங்கள் நம் சேனாதிபதியைப் பாதுகாக்க, அவர் விரும்பும் பணிப்பெண்ணை அனுப்பி வையுங்கள். அவளது கற்புக்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். அவள் வந்தால் போதும், அவள் முகம் பார்த்தாலே அவரது காமநோய் தீர்ந்து விடும் என நம்புகிறோம், என்றனர். சுதேஷ்ணை, தன் தம்பியின் உயிருக்காக வருந்தினாள். திரவுபதியிடம் கெஞ்சிக் கூத்தாடி,பெண்ணே! நீ கீசகனின் உயிரைக் காப்பாற்றும் பணியைச் செய். இதோ! ஒரு மாலை, இதை அவன் கையில் கொடு. அதைப் பெற்றுக் கொண்டதும் வந்து விடு. வேறு எதுவும் செய்ய வேண்டாம். உன்னைப் பார்த்தால், போக இருக்கும் அவனது உயிர் பிழைக்கும், என்றாள்.
மகாராணியின் உத்தரவை இம்முறையும் மீற முடியாத நிலையில், அவளது கெஞ்சலுக்காக திரவுபதி மாலையைப் பெற்றுக்கொண்டாள். சூரியபகவானை நோக்கி, பகவானே! என் கற்பு இந்த கீசகனால் அழிந்து விடுமோ என அஞ்சுகிறேன். நீ தான் பாதுகாக்க வேண்டும், என மனமுருக வேண்டினாள். கீசகனின் மாளிகைக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததும், வந்து விட்டாயா? என் பேரழகே? என்றபடி கீசகன் கட்டிலை விட்டு இறங்கி ஓடிவந்தான். பல பெண்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் முன்னிலையிலேயே அவளை அணைத்துக்கொள்ள அவன் முயன்றான். திரவுபதி அவன் பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நேரே, விராட மகாராஜானின் அரசவைக்கே சென்று விட்டாள். அங்கு பலநாட்டு மன்னர்களுடன் விராடராஜன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். அவன் முன்பாக போய் விழுந்த திரவுபதியை விரட்டி வந்த கீசகன், அது ஒரு அவை என்றும் பாராமல், அவளை அணைத்துக் கொள்ள நெருங்கினான்.
எல்லாரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கடும் காற்று அடித்தது. அந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாத கீசகன் தடுமாறினான். சற்று தூரத்தில் பெரும் சூராவளியான அந்தக் காற்று கீசகனை தூக்கி வீசியது. திரவுபதி, சூரியபகவானை வேண்டிக்கொண்டதால், கிங்கரர்களில் ஒருவனை அவன் பூமிக்கு அனுப்பினான். அந்த கிங்கரனே, சுழற்காற்றாக மாறி வந்து கீசகனை மட்டும் தூக்கி எறிந்தான் என்பதை யாரும் அறியவில்லை. அவையில் இருந்த மன்னனோ, இதையெல்லாம் கண்டும் காணாதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். திரவுபதிக்கோ கடும் ஆத்திரம். மன்னா! விரும்பாத ஒருத்தியை ஒரு காமுகன் சூறையாட வருகிறான். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். அநீதியைக் கண்முன் கண்டும், அதைத் தடுக்க இயலாத நீ அரசாங்கத்தை நடத்த தகுதியுள்ளவன் தானா? என்றாள். அதற்கும் மன்னன் பதிலளிக்கவில்லை. கீசகன், தன் மனைவியின் தம்பி என்பதுடன், அவனது பலத்தின் முன்னால் தன் ஜம்பம் பலிக்காது என்பதை அவன் அறிவான். மன்னனின் அருகில் இருந்த பீமனுக்கு ரத்தம் கொதித்தது. தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக, வெளியில் நின்ற ஒரு மரத்தை அவன் உற்றுப் பார்த்தான். மரத்தைப் பிடுங்கி, கீசகன் மேல் வீசிவிட அவன் கைகள் துடித்த வேளையில், தர்மர் குறுக்கிட்டார்.
கீசகன் கொல்லப்பட்டால் தாங்கள் யார் என்பது வெளியில் தெரிந்து விடும் என்பதால், தர்மர் பீமனை ஜாடை காட்டி கையமர்த்தினார். பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசத்தில் யார் என்பது வெளியே தெரியக்கூடாது என்பது துரியோதனனால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை. அப்படி, வெளியே தெரிந்தால் இவர்களுக்கு ராஜ்யம் நிரந்தரமாகக் கிடைக்காது. தர்மர் இதைச் சுட்டிக்காட்டியே பீமனை கையமர்த்தினார். திரவுபதி மீண்டும் மன்னனிடம், மன்னா! இவ்வளவு சொல்லியும் அமைதியாக இருக்கும் உன் போக்கு நல்லதற்கல்ல. உன் நாடு அழிந்து விடும், என சாபம் கொடுத்து விட்டு சுதேஷ்ணை இருக்கும் இடத்திற்கு போய்விட்டாள். கங்கமுனிவர் வேடத்தில் இருந்த தர்மர், இப்போது, மன்னனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார். யார் தவறு செய்தாலும், தட்டிக் கேட்பது மன்னனின் கடமை என உபதேசம் செய்தார். மன்னன் மனம் வருந்தி, அங்கிருந்து எழுந்து சென்றானே தவிர, வேறேதும் செய்ய இயலவில்லை. அன்று இரவில், திரவுபதி பீமனின் அறைக்குக் சென்றாள்.
அன்பரே! கீசகனால், என் கற்புக்கு எந்நேரமும் ஆபத்து என்பது உறுதியாகி விட்டது. தாங்கள் தான் இந்நிலையில் என்னைக் காப்பாற்றத்தக்கவர். கீசகன் கொல்லப்பட வேண்டும். அதே நேரத்தில் அது வெளியில் தெரியாமல் செய்யப்பட வேண்டும். தாங்கள் அவனைக் கொல்ல யோசனை செய்யுங்கள். அது இன்றே நடக்க வேண்டாம். இரண்டு நாள் விட்டு விடுவோம். பின்னர் அவனைக் கொன்றுவிட்டு, கந்தவர்கள் கொன்று விட்டதாக கதை கட்டி விடலாம். மன்னன் நீதி தவறி விட்டான். தவறிய விஷயம் இந்நாட்டு மக்களிடமும் பரவி விட்டது. அவர்களும் மன்னன் மீது வெறுப்புடனேயே உள்ளனர். இச்சமயத்தில் கீசகனின் கொலை பெரிய பாதிப்பை நாட்டில் உண்டாக்கிவிடாது, என்றாள். பீமன் அவளது புத்திசாலிதனத்தை மெச்சினான். கவலையின்றி உறங்கும்படி சொல்லி அவளை அனுப்பிவிட்டான். இரண்டு நாட்கள் கடந்தது. காற்றால் தூக்கி வீசப்பட்ட கீசகன் உடல் வலி தாங்காமல் அரண்மனையிலே முடங்கிக் கிடந்தான். வலி தீர்ந்ததும் மீண்டும் திரவுபதியின் நினைவு எழ, தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள அவள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான். அவனைக் கண்டதுமே அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
பெண்ணே! ஏன் இந்த தயக்கம். இந்த விராடமகாராஜனே என் வீரத்தால் தான் இந்தளவுக்கு பெருமையடைந்துள்ளான். உன்னைக் காக்க ஐந்து கந்தவர்கள் இருப்பதாக முன்பு சொன்னாய். இவ்வளவு நடந்தும் அவர்களும் உன்னைப் பாதுகாக்க வராததற்கு காரணமே என் வீரத்திற்கு பயந்துதான். எனவே இந்த மாவீரனை நீ அணைத்துக் கொள், என்றான். திரவுபதி அழுவதை நிறுத்தினாள். புத்தி வேகமாக வேலை செய்தது. கீசகா! நீ சொல்வது சரிதான். என்னை என் ஐந்து கந்தவர்களே பாதுகாக்க வராத போது, அவர்களை நம்பி என்ன பயன்? நீ சுத்தவீரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இன்றிரவில் நீ அரண்மனைத் தோட்டத்திலுள்ள பளிங்கு மண்டபத்துக்கு வா, என்றாள். அன்றிரவில் கீசகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கு சென்றான். அங்கே, அழகே வடிவாய் ஒரு கம்பத்தைக் கட்டிப்பிடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த திரவுபதியை வர்ணித்தான். அவள் காலில் விழுந்து, என் காம நோயை நீக்கு பெண்ணே! இனி பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன், என புலம்பினான்.
அவ்வளவு தான் நடந்திருக்கும்! அவனை நோக்கி திரும்பிய அந்தப் பெண், அவனை அலாக்காகத் தூக்கினாள். கரகரவென சுற்றி மேலே வீசி எறிந்தாள். கீசகன் சுதாரித்து விட்டான். வந்திருப்பது பெண் வேடத்தில் வந்த யாரோ ஒரு ஆண் என்பதை! ஆம்... சாட்சாத் நம் பீமன் தான் அங்கே ஆஜானுபாகுவாக நின்றான். விஷயத்தைப் புரிந்து கொண்ட கீசகனும் அவனுடன் கடுமையாக போரிட்டான். இருவரும் சமபலமுடைய வீரர்கள் என்றாலும், கீசகன் செய்த தீவினை அவனுக்கு எதிராக மாறி, அவனைக் கொன்றது. பலசாலிகள், தங்கள் பலத்தை நல்லவழியில் செலவிட்டால் அவர்களுக்கும் புண்ணியம். மற்றவர்களுக்கும் நன்மை கிடைக்கும். ஆனால், பலத்தைப் பயன்படுத்தி எளியவர்களைத் துன்புறுத்தினால், கீசகனின் கதிதான் ஏற்படும்.
திரவுபதி மகிழ்ந்தாள். அவள் பீமனின் காலில் விழுந்து ஆசி பெற்று விடை பெற்றாள். ஆனால், திரவுபதியை துன்பம் துரத்தியது. கீசகனின் தம்பிமார்களான உபகீசகர்கள் தங்கள் அண்ணன் கொல்லப்பட்டதை அறிந்து, சுதேஷ்ணையிடம் போய் சொல்லி அழுதனர். கோப வெறியுடன், தங்கள் அண்ணன் சாவுக்கு விரதசாரிணி என்ற பெண்ணைக் காப்பாற்றும் கந்தவர்கள் தான் காரணம் என்பதால், அண்ணனின் சிதை மூட்டும் போது, அந்தப் பெண்ணையும் நெருப்பில் தள்ளிவிட வேண்டுமென முடிவெடுத்து, திரவுபதியின் அறை நோக்கி விரைந்தனர்.
திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே! என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மரத்தையே பிடுங்கி அடிக்கும் அளவுக்கு ஒரு வீரனா என ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்டு தப்பி ஓடினர். அந்த நச்சுவேர்களை பீமன் விடவில்லை. எல்லாரையும் அடித்தே கொன்று விட்டான்.
ஊர் மக்களுக்கு இந்த விஷயம் பரவியது. திரவுபதி சொன்னது போல, இது நிச்சயமாக கந்தவர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். அரண்மனைக்கு வந்த புதியவர்கள் மீது அவர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. விராட மகாராஜாவும் இதையே நம்பி விட்டான். இதன்பிறகு, பாண்டவர்களும், திரவுபதியும் மீதி காலத்தையும் அங்கேயே கழிக்க எண்ணி தங்கிருந்தனர். இதனிடையே அஸ்தினாபுரத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல், 12 ஆண்டுகள் பதவியில் இருந்த துரியோதனின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவன் கர்ணனிடம், நண்பா! பாண்டவர்களின் வனவாசம் 12 ஆண்டுகள் முடிந்து, அஞ்ஞான வாசமும் தொடங்கி விட்டது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒற்றர்கள் பல தேசங்களுக்கும் சென்று, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டார்கள். அவர்களின் அஞ்ஞான வாசம் முடிந்து விட்டால், நாம் அவர்களுக்கு இந்திரபிரஸ்தத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிவரும். அதற்குள் அவர்களைக் கண்டுபிடித்து வெளியில் வரச் செய்தாலே, அவர்களுக்கு இனி நாடு கிடைக்காது. இதற்கொரு வழி சொல், என்றான்.
கர்ணனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது, அங்கு வந்த பீஷ்மா, துரியோதனனை மட்டம் தட்டும் வகையில் பேசினாலும், அந்தப் பேச்சில் இருந்தே ஒரு வழி கண்டுபிடித்து விட்டான் துரியோதனன். துரியோதனா! பாண்டவர்கள் எங்கியிருக்கிறார்களோ அந்த இடம் செழிப்பாக இருக்கும். காய்ந்த புல் கூட பசும்புல்லாகி விடும் எனச்சொல்லி சிரித்தார். தாத்தாவின் விஷமப்பேச்சு அவனுக்கு சுட்டாலும், மீண்டும் ஒற்றர்களை அழைத்து ஒற்றர்களே! நீங்கள் தற்போது சென்ற நாடுகளில் எந்த நாடு மிகச் செழிப்பாக இருந்தது? என்றான். ஒரு ஒற்றன் அவன் முன்னால் வந்து, மாமன்னரே! நான் விராட தேசத்துக்கு சென்றிருந்தேன். சில காலம் முன்பு வரை பஞ்சத்தில் தவித்த அந்த நாடு இப்போது செழித்திருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். பசுக்கள் ஏராளமாகப் பால் தருகின்றன. அது மட்டுமல்ல! விராட நாட்டு மன்னனின் மைத்துனனும், மாபெரும் மல்யுத்த வீரனுமான கீசகன் என்பவன் ஒரு பணிப்பெண்ணை விரும்பியிருக்கிறான். ஆனால், அவன் கொல்லப்பட்டான் என்ற அதிசய தகவலையும் கேள்விபட்டேன், என்றான்.
துரியோதனனுக்கு ஓரளவு புரிந்துவிட்டது. கர்ணன் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு, நண்பா! நாம் விராடதேசத்தின் மீது படையெடுப்போம். அங்குள்ள பசுக்களை கவர்ந்து வருவோம். பாண்டவர்கள் அங்கியிருந்தால் பசுக்களை காப்பாற்ற நிச்சயம் வருவார்கள். அப்போது, நம் எண்ணம் ஜெயிக்கும் என்றான். துரியோதனன், ஆதிக்கத்துக்கு உட்பட்ட திரிகர்த்த அரசின் மன்னனான ---விராட தேசத்துக்கு சென்று பசுக்களை கவர்ந்து வரும்படி அனுப்பினான். அவன் அங்கு சென்று, பசுக்களை கவர்ந்ததை கேள்விப்பட்ட விராடமன்னன் அவற்றை மீட்க பெரும்படையுடன் சென்றான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் சுசர்மன் தோற்கும் நிலையில் இருந்தான். ஆனால், எப்படியோ சுதாரித்து சிறப்புமிக்க தன் அம்புகளை எய்த்து, விராடனே வீழச்செய்தான். அவனை தன் தேர்க்கடியில் கட்டி இழுத்துச் செல்ல எண்ணியபோது, போரை வேடிக்கை பார்க்க வந்திருந்த கங்க முனிவராகிய தர்மர், தன் தம்பி பீமனை நோக்கி கண்ஜாடை காட்டவே, புரிந்து கொண்ட பீமன், போர்க்களத்தில் நின்ற தேரில் ஏறிச்சென்று, சுசர்மனின் தேரில் மோதி அதை உடைத்தான். மன்னனை விடுவித்து, சுசர்மனை அதே தேர்க்காலில் கட்டினான்.
விராட மன்னன் பாலாலயனான பீமனுக்கு நன்றி தெரிவித்தான். தாமக்கிரந்தி என்ற பெயருடன் மாறு வேடத்தில் இருந்த நகுலன் போர்க்களத்தில் நின்ற எதிரிகளின் ஆயிரம் குதிரைகளைக் கைப்பற்றிக் கொண்டான். தந்திரி பாலன் என்ற பெயரில் இருந்த சகாதேவன், களவாடப்பட்ட பசுக்களை மீட்டு ஆயர்களிடம் ஒப்படைத்தான். கைதான சுசர்மனை விடுதலை செய்து விடும்படி, விராடனிடம் கங்க முனிவர் கேட்டுக் கொள்ளவே, அவன் விடுவிக்கப்பட்டான். சுசர்மன் போரில் தோற்றதை அறிந்த துரியோதனன் அவமானம் அடைந்தான். தானே நேரில் போருக்குச் செல்வதென முடிவெடுத்து விராட தேசத்துக்கு விரைந்தான். அந்த தேசத்தில் இருந்த பயிர் பச்சைகளை நெருப்பு வைத்து அழித்தான். பசுக்களைக் கவர்ந்து கொண்டான். விராடராஜன் அப்போது நாட்டின் வேறொரு பகுதியில் இருந்தான். ராஜா இல்லாத இந்த நேரத்தில், விராடனின் மனைவி சுதேஷ்ணை பொறுப்புணர்வுடன், தன் பணிப்பெண்களை அழைத்து துரியோதனனின் படைகள் நம்மை முற்றுகையிட்டுள்ளன. நீங்கள் மதில்களின் மீது ஏறி நின்று நாட்டைக் காக்க வாளுடன் புறப்படுங்கள், எனக் கட்டளையிட்டாள்.
இதைப் பார்த்த விராடனின் மகன் உத்தரகுமாரன், அம்மா! நானிருக்க தாங்கள் பெண்களை அனுப்பலாமா? நான் தனிமையில் சென்று போரிட்டு பசுக்களை மீட்டு வருவேன், என்றான். அப்போது பணிப்பெண்ணாய் இருந்த திரவுபதி, இளவரசே! இவள் பெயர் பிருகந்நளை. தேரோட்டுவதில் வல்லவள். அர்ஜுனனுக்கு தேரோட்டிய அனுபவம் மிக்கவள், இவளை அழைத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும், என்று பேடியாக மாறியிருந்த அர்ஜுனனைச் சுட்டிக் காட்டினாள்.
உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா! இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே! நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும்? நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. பசுக்கூட்டத்தை வேண்டுமானால் அவன் கொண்டு போகட்டும். உடனே தேரைத் திருப்பு, என்றான். பிருகந்நளை அதற்கு இணங்கவில்லை. இளவரசே! மாவீரனான விராட மன்னரின் மகனான நீங்கள் இப்படி அஞ்சுவது முறையல்ல. மேலும், நம்மூர் பெண்கள் கோழைகளை விரும்புவதில்லை. நீங்கள் புறமுதுகிட்டு ஓடினால், அவர்கள் பரிகாசம் செய்வார்கள். இப்படிப்பட்ட பெரிய படைகளைக் கண்டு அஞ்சக்கூடாது. போர்க்களத்துக்குள் வந்து விட்டவன், வெற்றி அல்லது வீரமரணம் என்ற வார்த்தைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் அஞ்சாதீர்கள். நான் களத்துக்குள் செல்கிறேன். அம்புகளை மளமளவெனப் பொழியுங்கள், என்றாள்.
உத்தரகுமாரன் ஒரேபடியாக மறுத்து விட்டான். தேரில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தான். பிருகந்நளைக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது. அவள், விரட்டிச் சென்று அவனைப் பிடித்தாள். அவனை தேர்ச்சக்கரத்தில் வைத்துக்கட்டி, தேரை எங்கோ திருப்பினாள். பிருகந்நளை அர்ஜுனனாக இருந்த போது, விராட நாட்டு எல்லையில் தன்னுடைய ஆயுதங்களை ஒரு வன்னிமரப் பொந்தில் ஒளித்து வைத்திருந்தாள். அதை இப்போது எடுத்தாள். சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த உத்தரகுமாரனை விடுவித்து, இளவரசே! இந்த ஆயுதங்கள் சாதாரணமானவை அல்ல. இவை அர்ஜுனனுடையவை. இவற்றை எய்தால், எதிரிப்படைகள் தூள் தூளாகி விடும். சற்றுநேரம் எனக்கு நீங்கள் ரதசாரதியாக இருங்கள். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன், என்றாள். அர்ஜுனனை எங்கே? என்று உத்தரகுமாரன் அவளிடம் கேட்ட போது, அவர் இப்போது தன் சகோதர்களுடன் அஞ்ஞான வாசத்தில் இருக்கிறார். அந்தப்பொழுது கழிய இன்னும் 4 நாழிகை நேரமே இருக்கிறது. அது கழிந்ததும், அவர் உங்கள் முன்னாலேயே வெளிப்படுவார், என்றதும் உத்தரகுமாரனின் மூளையில் ஒரு பொறி தட்டியது.
நம் முன் நிற்பவள் நிச்சயமாக ஒரு அரவாணி அல்ல. இவள் அர்ஜுனனாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவ்வளவு எளிதில் இந்த ஆயுதங்களை எடுத்திருக்க முடியுமா? என சிந்தித்தபடியே அவளது காலில் விழுந்து ஆசி பெற்றான். தேர் மீண்டும் போர்க்களம் திரும்பியது. தேர் சக்கரத்தில் இளவரசனை வைத்துக் கட்டியதையும், புறமுதுகிட்டு ஓடுவது போல பாசாங்கு செய்து விட்டு, மீண்டும் களத்துக்குள் புகுந்திருப்பதையும் கண்ட விதுரர் குழப்பமடைந்தார். முதலில் இளவரசன் தேரில் வந்தான், இப்போது, தேரோட்டியாய் இருந்த அரவாணி தேரில் வருகிறாள். என்ன நடக்கிறது இங்கே என்று சிந்தித்தார். துரியோதனனின் படைத் தலைவர் துரோணாச்சாரியாரோ, வந்திருக்கும் அரவாணி நிச்சயமாக அர்ஜுனனே என்பதை உறுதி செய்து கொண்டார். இதற்குள் பிருகந்நளை யுத்த களத்தில் முனையில் நின்று, ஏய அம்பு அங்கியிருந்த பல தலையை ஒரே நேரத்தில் பறித்தனர். துரியோதனனுக்கு ஆதரவாக சண்டையிட வந்த ராஜாக்கள் ஓடிவிட்டனர்.
அப்போது விதுரர் துரியோதனனிடம், துரியோதனா! நீ அந்த அரவாணியின் செல்லாதே. அவள் இங்கே வரட்டும் இவள் அர்ஜுனனை விட பலசாலியாக இருக்கிறாள். சிவனிடம் அவன் பெற்ற பாசுபதிரத்தை விட மூன்று மடங்கு சக்தி கொண்ட அஸ்திரங்கள் இவளிடம் இருப்பதாக தோன்றுகிறது என்றார். துரோணரும், பீஷ்மரும் அவரது கருத்தை ஒப்புக்கொண்டனர். துரியோதனனும், கர்ணனனும் இதைக் கேட்டு ஆத்திரமடைந்தனர். என்ன பேசுகிறீர்கள்? ஒரு பேடியால் நம்மிடம் சண்டைக்கு வர முடியுமா? அதிலும் ஒற்றை ஆளாக! என்று எகத்தாளமாக பேசினான். இதற்குள் பிருகந்நளை விட்ட அம்பு பசுக்களை கவர்ந்து சென்ற வீரர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே, அவன் அவற்றை மீட்டு, போர்க்களத்தில் ஓரமாக நின்ற மேய்ப்பவர்களிடம் ஒப்படைத்தாள். அவர்கள் ஆரவாரத்துடன் திரும்பினர். இதோடு விடவில்லை பிருகந்நளை. துரியோதனனின் தேர் சாரதிக்கு குறி வைத்தான். அவன் சுருண்டு விழுந்து இறந்தான். பயந்து போன துரியோதனன், வேறு தேரில் ஏறி தப்பி ஓடினான்.
இதற்குள் நான்கு நாழிகை நேரம் கடந்து விடவே, பாண்டவர்களின் அஞ்ஞாத வாச காலம் முடிந்து விட்டது. பிருகந்நளை, தன் உருமாறி அர்ஜுனன் ஆகிவிட்டாள். இப்போது, வெகு வீரத்துடன் துரியோதனனை விரட்டிய அர்ஜுனன், ஏ துரியோதனா! பயந்தாங்கொள்ளியே! நீ தோற்றோடி வந்ததைப் பார்த்து உனக்கு சாமரம் வீசும் பெண்கள் கூட உன்னை மதிக்கமாட்டார்கள். நீ நிஜமான வீரன் என்றால், நின்று என்னுடன் போர் செய், என ஆரவாரம் எழுப்பினான். இதற்குள் பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோர் அர்ஜுனனைச் சூழ்ந்து அவனை போருக்கு அழைத்தனர். கர்ணனுடன் மோத அர்ஜுனன் ஆயத்தமானான். இருவரும் சமபலத்துடன் போரிட்டனர். வெற்றி தோல்வியின்றி யுத்தம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அர்ஜுனன் ஒரே சமயத்தில் மூன்று அம்புகளை விட்ட போது, அவை கர்ணனின் ரதசாரதியை அழித்தன. தேர் சாய்ந்தது. இதனால் கர்ணன் தலை குனிந்து போரில் இருந்து விலகி விட்டான். அர்ஜுனன் அவனை விரட்டவே, அவன் புறமுதுகிட்டு ஓடினான். ஓடுபவர்களைக் கொல்வது வீரர்களுக்கு அழகல்ல. அர்ஜுனன் அவனை விட்டுவிட்டான்.
அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன், ஏ கர்ணா! தோற்று ஓடி வந்தாயே! வெட்கமாக இல்லை உனக்கு! பெரிய வீரனைப் போல் பேசுவது பெரிதல்ல! ஜெயித்துக் காட்ட வேண்டும், என்று வெந்து போன கர்ணனின் மனதில் வேல் பாய்ச்சும் வார்த்தைகளை பேசினான். இதற்குள், அர்ஜுனன் சில அம்புகளை வணக்கம் செலுத்தும் வகையில், தன் குருவான துரோணரை நோக்கி எய்தான். அவை அவரது பாதத்தில் விழுந்து, அர்ஜுனனின் நமஸ்காரத்தை தெரிவித்தன. அதை மகிழ்ச்சியோடு ஏற்ற துரோணர், தன் மாணவனுடன் போர் புரிவதற்காக தேரை விரட்டினார்.
துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா! தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். அவனோ புறமுதுகிட்டு ஓடிவிட்டான். அவனது நண்பன் கர்ணனும் போய்விட்டான். ஆனால், தாங்கள் என் முன்னால் நிற்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. உங்களுடன் சண்டையிடும் தைரியமும் எனக்கில்லை. ஒரு குரு நாதனை மாணவன் ஒருவன் எதிர்க்கிறான் என்றால், உலகம் அவனை பழிக்கு மல்லவா? நான் தங்களுடனோ, தங்கள் மகன் அஸ்வத்தாமனுடனோ நிச்சயமாக போரிட மாட்டேன். தாங்கள் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும், என்றான்.
சீடனின் பணிவான வார்த்தைகளை கேட்டு துரோணாச்சாரியார் அகமகிழ்ந்தார். இருப்பினும் துரியோதனனுக்காக போரிடுவதின் அவசியத்தை உணர்ந்த அவர், அர்ஜுனா! உன் பணிவை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் நான் துரியோதனனிடம் பணி செய்பவன். அவன் தரும் உணவை உண்பவன். எனவே அவனைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது. மாணவன் குரு என்ற உறவு ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நீ என்னுடன் போராடு. அதற்குரிய அனுமதியை நானே உனக்கு தருகிறேன், என்றார். இதுகேட்ட அர்ஜுனன் குருவின் பெருந்தன்மையை மனதிற்குள் எண்ணி வியந்தான். உடனடியாக போருக்கு தயாரானான். மாணவனும் குருவும் மோதினர். ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சி விட்டான் மாணவன். அர்ஜுனனிடம் பாடம் படிக்க வேண்டிய அவசியம் குருநாதருக்கு ஏற்பட்டுவிட்டது. அந்தளவுக்கு அர்ஜுனன் மிகத்திறமையாக குருவுடன் போரிட்டான். எல்லா அம்புகளையும் இழந்து ஏதும் செய்ய இயலாமல் நின்றார் துரோணர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, அர்ஜுனன் அம்பு மழை பொழிந்தான். துரோணரின் தேர் சாரதி அம்பு பாய்ந்து இறந்தான். குதிரைகள் கொல்லப்பட்டன. தேரின் உச்சியில் கட்டப்பட்டிருந்த வேதக்கொடி சாய்ந்தது. துரோணர் தோற்று ஓடினார்.
இதைப்பார்த்த அவரது மகன் அஸ்வத்தாமன் கடும் கோபம் கொண்டான். அவன் அர்ஜுனனைப் போலவே மிகப்பெரிய வீரன். தனது பாணப்பிரயோகத்தால் அவனை கலங்க வைத்தான். அர்ஜுனனின் வில் நாண் அறுந்து போனது. உடனே அர்ஜுனன் அவன் மீது பாசுபதாஸ்திரத்தை எய்வதற்கு முயன்றான். அதைத்தடுக்கும் சக்தி அஸ்வத்தாமனுக்கு இல்லை. எனவே, அவனும் ஓடிவிட்டான். கிருபாச்சாரியாரால் அர்ஜுனன் முன்னால் நிற்கவே முடியவில்லை. இப்படியாக அனைவரையும் தோற்கடித்த பிறகு அவர்கள் விராட தேசம் திரும்பினர். விராடராஜன் மிகவும் மகிழ்ந்தான். தன் மகன் உத்தரகுமாரன் தனித்து நின்று கவுரவப் படைகளை வீழ்த்தியதாக அவன் நினைத்து கொண்டான். அப்போது கங்கமுனிவர் இடத்திலிருந்த தர்மர், விராடனா! நீ உன் மகனை நினைத்து சந்தோஷப்படாதே. இந்த வெற்றிக்கு காரணம் அவன் அல்ல. அவனோடு சென்ற பிருகந்நளை என்ற பேடிதான் அவன் ஜெயிக்க உதவி செய்தான் என்றார். இது கேட்ட விராடராஜனுக்கு கோபம் வந்து விட்டது.
முனிவரே! நீர் என்னை அவமானப்படுத்துகிறீர். என் மகனை இழிவுசெய்கிறீர். ஒரு அரவாணியால் எப்படி கவுரவ கூட்டத்தை அடக்க முடியும். நீர் சொல்வது சரியல்ல என்றான். முனிவரோ தன் -- வலுவாக நின்றார். இதைக் கண்டு ஆத்திரப்பட்ட விராடன் அவர் மீது பகடைக்காய் ஒன்றை தூக்கி வீசினான். அது முனிவரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. அப்போது விரதசாரிணி என்ற பெயரில் அங்கிருந்த திரவுபதி மனம் பொறுக்காமல் ஓடி வந்து, கணவனின் நெற்றியில் வடிந்த ரத்தத்தை துடைத்தாள். தர்மர் ஏதும் சொல்லாமல் பொறுமையாக இருந்தார். காயை தூக்கி எறிந்தும், கங்க முனிவர் பொறுமையாக இருந்தது கண்ட விராடராஜன் வெட்கி போனான். அலங்காரபெண்ணின் செய்கை அவன் மனதை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதற்குள் அரண்மனை திரும்பிய உத்தரகுமாரன், கங்க முனிவரின் நெற்றியில் ரத்தம் வழிவது கண்டு அதிர்ச்சியடைந்தான். போர் முடிந்து திரும்பும் வழியிலேயே தான் அர்ஜுனன் என்பதையும் கங்க முனிவர் தர்மர் என்பதையும் இன்னும் மற்றவர்களைப்பற்றியும் அர்ஜுனன் விபரமாக உத்தரகுமாரனுக்கு எடுத்து சொல்லி விட்டான்.
தந்தையின் செய்கையை கண்டித்தான். அங்கே வந்திருப்பவர்கள் பாண்டவர்கள் என்பதையும், அலங்காரப் பெண்ணாக தங்களிடம் பணிசெய்தது திரவுபதி என்பதையும் எடுத்து கூறினான். தன் தங்கை உத்தரையை அர்ஜுனனுக்கே மணமுடித்து கொடுப்பதென தான் முடிவு செய்திருப்பதாக எடுத்து சொன்னான். இது கேட்டு விராடராஜன் மகிழ்ந்தான். தர்மரிடம் தனது செய்கைக்காக மன்னிப்பு கேட்டான். உத்தரையை திருமணம் செய்து கொள்ளும்படி அர்ஜுனனிடம் வேண்டினான். அர்ஜுனன் விராடராஜனிடம், மன்னா! உமது மகள் வயதில் மிகவும் இளையவள். அவளை நான் மனைவியாக ஏற்க இயலாது. என் மகன் அபிமன்யுவுக்கு அவளை திருமணம் செய்து வைக்கிறேன், என்றான். விராடராஜனுக்கு எல்லையில்லா இன்பம் ஏற்பட்டது. பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தை முடித்த செய்தி பகவான் கிருஷ்ணரை எட்டியது. அவர் தனது சகோதரி சுபத்திரை, அவளது மகன் அபிமன்யு ஆகியோருடன் விராடநாடு வந்து சேர்ந்தார். அவர்களுடன் இன்னொரு இளைஞனும் வந்தான். அவனைப்பற்றி விராடராஜனிடம் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த தகவல் ஒன்றை சொன்னார் கிருஷ்ணபரமாத்மா. அந்த இளைஞனின் பெயர் ஸ்வேதன்.
அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா! இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா! இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே! நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே! இவன் எங்கிருந்தான்? எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்? என்றான். விராடனே! இவன் உலகை ஆளும் முயற்சியில் கடும் பிரயத்தனம் செய்து, ஒருமுறை தேவலோகத்துக்குள் நுழைந்து விட்டான். அஷ்டவசுக்கள் எனப்படும் எட்டுத்திசைகளின் காவலர்களிடம் சிக்கிக்கொண்டான். மானிடனான இவன், தேவலோகத்துக்குள் நுழைந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அவனை மயிலாகும்படி சபித்து விட்டனர். அவன் மீண்டும் உன் அரண் மனையை அடைந்தான். நீயோ, ஏதோ ஒரு மயில் வந்திருப்பதாக நினைத்து அசட்டை செய்து துரத்தி விட்டாய். பின்னர் இவன் பல இடங்களில் சுற்றித்திரிந்தான். பின்னர் தவம் செய்து, சிவபெருமானின் அருளால் பல அஸ்திரங்களையும், கவசங்களையும் பரிசாக பெற்றான். ஒரு கட்டத்தில் இவன் எனக்கு உதவி செய்தான். அவனை உன்னிடம் ஒப்படைக்கவே அழைத்து வந்தேன், என்றார்.
கண்ணனின் தரிசனம், காணாமல் போன மகன் திரும்பி வந்தது, தங்களுடைய அரண்மனையில் தங்கியிருந்தவர்களோ இந்திரபிரஸ்த தேவர்களான பாண்டவர்கள் என்ற மகிழ்ச்சிகணைகள் ஒரு சேர தாக்கியதால் விராடராஜன் அடைந்த ஆனந்தம் எல்லை மீறியது. பின்னர் அபிமன்யுவுக்கும், விராடனனின் மகள் உத்தரைக்கும் மிகச் சிறப்பாக திருமணம் நடந்தேறியது. பாண்டவர்கள் தங்கள் மகன் அபிமன்யு, மருமகள் உத்தரையுடன் விராட தேசத்தில் இருந்து விடை பெற்று, உபப்லாவ்யம் எனஊருக்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள், துரியோதனனிடம் இருந்து நாட்டை மீட்பது தொடர்பாக கிருஷ்ணரின் அண்ணன் பலராமன், கிருஷ்ணர் மற்றும் தங்கள் தோழமை நாட்டு அரசர்களிடம் விவாதம் நடத்தினர். பலராமன் ஒரு யோசனை சொன்னார். பாண்டவர்களே! நீங்கள் சூதாடித் தான் நாட்டைத் தோற்றீர்கள். அதுபோல் சூதாடித்தான் நாட்டை மீட்க வேண்டும். போரிட்டு தோற்றவர்களே, மீண்டும் போர் தொடுத்து தங்கள் நாட்டை மீட்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். எனவே, சூதாடுவது பற்றி சிந்தியுங்கள், என்றார்.
கிருஷ்ணர் அக்கருத்தை ஆமோதித்தார். இந்த பேச்சு வார்த்தையில் உலூக முனிவரும் பங்கேற்றார். அவரை திருதராஷ்டிரனிடம் தூது அனுப்புவது என முடிவாயிற்று. கிருஷ்ணர் அவரிடம், முனிவரே! ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் படி பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞான வாசம் இரண்டையும் வெற்றியுடன் முடித்துவிட்டதால், நாடு அவர்களுக்கு சொந்தம் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். சூதாடியே மீண்டும் நாட்டைப் பெற விரும்புகிறோம் என்பதையும் சொல்லுங்கள். மறுத்தால், போர் தவிர்க்க முடியாதது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி விடுங்கள். மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தர்மர் உலூகரிடம், மகரிஷியே! தாங்கள் என் பெரியப்பா திருதராஷ்டிர மகாராஜாவுக்கும், பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகிய பெரியோர்களுக்கும் என்னுடைய பாத நமஸ்காரத்தை தெரியுங்கள், எனச் சொல்லி அனுப்பினார்.
எதிரிகள் வரிசையில் இருந்தாலும், பெரியவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கருத்து இவ்விடத்தில் வலியுறுத்தப்படுகிறது. உலூகர் அஸ்தினாபுரத்தை அடைந்தார். அவரை துரியோதனன் பாதம் பணிந்து வரவேற்றான். திருதராஷ்டிரனும், இதர பெரியவர்களும் ஒரு நவரத்தின சிம்மா சனத்தில் அவரை அமர வைத்து பாதபூஜை செய்து மரியாதை செலுத்தினர். அவர் வந்த காரணம் பற்றி திருதராஷ்டிரன் கேட்ட போது, திருதா உனக்கு தெரியாதது ஏதுமில்லை. உன் தம்பி மக்கள் தங்கள் வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதால், முறைப்படி நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று சொன்னாரோ இல்லையோ, துரியோதன், கர்ணன், சகுனி ஆகியோர் கொதித்து விட்டனர். திருதராஷ்டிரன் வழக்கம் போல் மவுனமே காத்தான். விதுரர் துரியோதனனிடம் நீதியை போதித்தார். நாட்டை ஒப்படைத்து உயிரைக் காத்துக் கொள்ளும்படி சொன்னார். பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
பாண்டவர்களிடம் நாட்டை ஒப்படைக்கும்படியும், அர்ஜுனனுக்கு எதிராக விற்போர் செய்ய நம்நாட்டில் யாருமே இல்லையே என்றும் பீஷ்மர் சொன்னதும், பிதாமகரே! தாங்கள் ஒரு வீரனா? ராமபிரானால் தோற்கடிக்கப்பட்ட பரசுராமரிடம் வில் வித்தை படித்தீர். அவரையே ஜெயித்தீர். குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற ஒரே தகுதியைத் தவிர உம்மிடம் வேறென்ன தகுதி இருக்கிறது? என் நண்பனை தர்மரிடம் சரணடைந்து விடு என்று சொல்வதில் கோழைத்தனம் நிறைந்திருக்கிறது, என்றான். பீஷ்மர் கர்ணனைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார்., பார்த்தேன், பார்த்தேன், விராட நாட்டிப் போரில் நீ, அர்ஜுனனிடம் புறமுதுகிட்டு ஓடிய உன் வீரத்தை, என்றதும், கர்ணன் பதிலேதும் பேசவில்லை. துரியோதனனும் தாத்தாவின் கேலியான வார்த்தைகளை பொருட்படுத்த வில்லை. தூது வந்த உலூக முனிவரும், துரியோதனா! அர்ஜுனனின் வில் உன்னை புறமுதுகிட்டுச் செய்யும் என்றார்.
யார் சொன்னதையும் கேட்க மறுத்து விட்டான் துரியோதனன். திருதராஷ்டிரனும் பேசாமடந்தையாய் இருக்கவே, கர்ணனின் பேச்சையும், வீரத்தையும் நம்பிய துரியோதனன், தன் நண்பனைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என நினைத்து, உலூகாரைப் பார்த்து கைகொட்டி சிரித்து, முனிவரே! ஒரு பிடி மண்கூட பாண்டவர்களுக்கு கிடையாது, என்பதை தெளிவாகக் கூறிவிடும், எனச் சொல்லி அனுப்பி விட்டான். உலூகாரும் துவாரகை சென்று, அங்கிருந்த கிருஷ்ணரிடம் நடந்ததை சொன்னார்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |