Digital Library
Home Books
Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).
ஸ்திரிகளே! ஒருவருக்கு வாக்களித்த பின் அதைச்செய்யாமல் இருப்பது தர்மமல்ல! என்ற தர்மர், விதியின் வழியில் தன்னைச் செலுத்தினார். கஷ்டம் வரும் என்றே தெரிந்தும், அதில் போய் சிக்கிக் கொள்ளலமா என தர்மரைப் பற்றி எல்லாரும் எண்ணக்கூடும். ராமாயணமும், மகாபாரதமும் தர்மத்தை உரைப்பவை. ராமனை காட்டுக்கு அனுப்புவது உசிதமல்ல என்பது தெரிந்திருந்தும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற தர்மத்தின் கட்டளைக்கு தசரதர் கீழ்ப்படிந்தது போல, இங்கே தர்மன் கட்டுப்படுகிறார். வாகனங்கள் புறப்பட்டன. துரியோதனனுக்கு ஒற்றர்கள் மூலம், தர்மர் புறப்பட்டு விட்ட செய்தி பறந்தது. அவன் மகிழ்ச்சியுடன் பாண்டவர்களின் வரவை எதிர்பார்த்திருந்தான். பாண்டவர்கள் அரண்மனைக்கு வந்து பெரியப்பா திருதராஷ்டிரனை வணங்கினர். அவர்களைக் கட்டித் தழுவி மகிழ்ந்த திருதராஷ்டிரன், மைந்தர்களே! உங்களைப் போல் உலகில் யாருண்டு! நீங்கள் உலகத்தையே உங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். எல்லா நாட்டு மன்னர்களும் உங்கள் வீரத்துக்கு அடிபணிந்து திரையாகக் கொட்டிக் கொடுத்ததற்கு கணக்கே இல்லை எனக் கேள்விப்பட்டேன். தர்மனோ அவற்றை தானம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறான்.
நீதியின் காவலர்களே! உங்கள் அருமை பெருமையைக் காண என் தம்பி பாண்டு இப்போது இல்லையே என நினைத்து வருந்துகிறேன். சரி... விதி யாரை விட்டது! அதிருக்கட்டும், பெரியம்மா உங்களைக் காண காத்துக் கிடக்கிறாள் நீண்ட நேரமாய், போய் அவளிடம் ஆசிபெறுங்கள், என வஞ்சகத்தை மனதில் மறைத்து, நாவில் தேனொழுக பேசினான். அவர்கள் பெரியம்மாவிடம் ஆசி பெற்றனர். குந்திதேவி கொடுத்து வைத்தவள் என பெருமூச்சு விட்டாள் காந்தாரி. திரவுபதியை பெரிய மாமியார் அருகில் இருக்கச்சொல்லி விட்டு, பாண்டவர்கள் சபாமண்டபத்திற்கு சென்றனர். ஒரு வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போகிறோம். போனால், நம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். வீட்டுக்காரர் மிகுந்த பெருமையுடன், இந்த ÷ஷாகேஸ் எப்படியிருக்கு, இது மாதிரி இந்த ஊரிலேயே ஒரு வீட்டிலும் இல்லை, என பெருமையடிப்பார். நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஆமாம் சாமி போட்டு வைக்க வேண்டும். இல்லையே! இது இன்னார் வீட்டில் இருக்கிறதே என்றெல்லாம் சொல்லக்கூடாது.
தர்மர் இந்த விதியைக் கடைபிடித்தார். துரியோதனா! நீ கட்டியுள்ள இந்த மண்டபம் சுதன்மையைப் போல் உள்ளது, என்றார். சுதன்மை என்பது இந்திரலோகத்திலுள்ள சபாமண்டபமாகும். அதற்கு ஒப்பிட்டு பேசி, அவனை மகிழ வைத்தார் தர்மர். காரியத்தில் கண்ணாய் இருந்த துரியோதனன், அண்ணா! தந்தையார் அரண்மனையில் தான் இன்று மதிய விருந்து. அது தயாராகும் வரை பொழுதுபோக்கிற்காக பகடை ஆடுவோமே, என்றான். தர்மர் நேரடியாகவே சொல்லி விட்டார். தம்பி! வஞ்சக எண்ணத்துடன் கோபம் கொள்வது, சந்தர்ப்ப சூழலால் செய்த தவறுகளை குத்திக்காட்டி பேசுவது, நல்ல நண்பனை சந்தேகப்படுவது, சூதாடுவது ஆகியவை கொடிய பாவச் செயல்கள் என்று சாஸ்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதை மறந்து விட்டாயா? மேலும், சூது என்றால் அதற்கு பந்தயப் பொருள் வேண்டும். அப்படி என்னிடமுள்ள எந்தப் பொருளுக்காக நீ ஆசைப்படுகிறாயோ, அதை என்னிடம் கேள். அப்படியே தந்து விடுகிறேன். சூதாடித்தான் பெற வேண்டும் என்பதில்லை, என்று ஆணித்தரமாகவும், அதே நேரம் துரியோதனனை பிறர் பொருளுக்காக கை ஏந்தும் ஒரு யாசகனுக்கு ஒப்பிட்டும் பேசினார்.
சகுனிக்கு சுருக்கென்றது. தர்மனிடம் அவன், சூதாட்டத்தில் காய்கள் தான் பேசுகின்றன. அவரவர் அறிவைப் பயன்படுத்தி காய்களை உருட்டுகிறோம். ஜெயித்தவர் பந்தயப் பொருளை அடைகிறார். ஒருவேளை, நாங்கள் தோற்றால், பாண்டவர்களுக்கு தானே துரியோதனனின் பொருள் கிடைக்கப் போகிறது! பசுவைக் கொன்றவன் பாவத்திற்கு அஞ்சுவது போல ஏன் பகடையைக் கண்டு நடுங்குகிறாய்? ஒருவேளை, நீ வைத்திருக்கும் செல்வத்தின் மீது உனக்கு பேராசை அதிகமா? அல்லது கஞ்சத்தனத்தால் இப்படி பேசுகிறாயா? என்றான். நல்லவர்கள் பேசினால் பதில் பேசலாம். கெட்டவன் பேசினால் பதில் பேசக்கூடாது. தர்மர் இந்தக் கொள்கையில் உறுதியாய் இருந்தவர். அவர், சகுனிக்கு பதில் சொல்லவில்லை. அவரது அமைதியை அச்சமென கருதிய கர்ணன், தர்மா! ஒரு சாதாரண சூதாட்டத்துக்கு தகுதியில்லாத நீ வீரப்போருக்கு எப்படி தகுதியுள்ளவன் ஆவாய். பயந்தாங்கொள்ளியான நீ இங்கிருந்து இந்திரபிரஸ்தத்துக்கு ஓடிவிடு, என்றான். கெட்டவர்கள் மட்டுமல்ல! கெட்டவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஏதாவது பேசினாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும்.
தர்மர் இதற்கு பதில் சொல்லாவிட்டாலும், அர்ஜுனன் ஆத்திரப்பட்டு விட்டான். ஏ கர்ணா! யாரைப் பார்த்து என்ன சொன்னாய். என் சகோதரனைப் பழித்த உன் தலை இப்போதே மண்ணில் விழும், என வில்லைத் தூக்கவும், தர்மர் அவனை கையமர்த்தி அடக்கி வைத்தார். பிறகு அந்த சபையோரிடம், சபையோரே! நான் போரிடத் துவங்கினால், என்னோடு போட்டியிட எந்த வீரனும் உலகில் பிறக்கவில்லை. ஆனாலும், என்னைப் பற்றி நானே பேசினால் அது வீரத்துக்கு இழுக்கு என்பதால் அமைதியாக இருந்தேன், என்றவர் சகுனியே! உம் வஞ்சகம் நிறைந்த சூதாட்டத்துக்கு உடன்படுகிறேன்,என இருக்கையை விட்டு எழுந்தார். சூதாட்டம் துவங்கியது. முதலில் தர்மர் வைத்தது தனது முத்து மாலையை மட்டும் தான். பகடையை உருட்டினார். அவரே ஜெயித்தார். சகுனி இரண்டு முத்துமாலைகளை அவரிடம் கொடுத்து விட்டான். முதல் ஆட்டத்திலேயே ஜெயித்ததும், சூதாடும் வெறி அவரது மனதில் புகுந்து விட்டது. அந்தக் கொடிய நோய் பரப்பிய ஆசை என்ற விஷக்கிருமிகளின் பிடிக்குள் கண்ணபிரானையே மைத்துனனாகக் கொண்ட மாபெரும் ஞானியான தர்மனே சிக்கிக் கொண்டார் என்றால், சாதாரண மக்களான நாம் இன்று சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கெட்ட வழக்கங்களில் சிக்கிக் கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது!
தனக்கு கிருஷ்ணர் தந்த தேரை பந்தய பொருளாக வைத்தார் தர்மர். தோற்றுப் போனார். இப்படியே தன் சதுரங்க சேனை, தன் தேசம், அரசாளும் உரிமை, ஒட்டுமொத்த இந்திரபிரஸ்தம் என எல்லாவற்றையும் தோற்று விட்டார். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை எந்தளவுக்கு இருக்க வேண்டுமென ஒரு கேள்வி கேட்டால், அது ஒரு சூதாட்டக்காரனின் மனதில் இருக்குமளவுக்கு வேண்டும் என அழகாக பதில் சொல்வார்கள் சிலர். அதே நிலையில் தான் தர்மர் இருந்தார். எல்லாவற்றையும் தோற்றாயிற்று ! மானம் ஒன்றையாவது காப்பாற்றிக் கொண்டு எழுந்து போயிருக்கலாம் அல்லவா ! என்ன செய்வதென விழித்துக் கொண்டிருந்தார். சகுனி ஆரம்பித்தான். தர்மா ! எதற்காக வருந்துகிறாய். உன் அந்தப்புரத்தை அலங்கரிக்கும் ராஜ ஸ்திரீகளை பணயமாக வைக்கலாமே என்றான். தர்மர் அதற்கும் உடன்பட்டார்; பகடை உருண்டது தோல்வியை நோக்கி ! துரியோதனனுக்கு சந்தோஷம் மிகுதி. சகுனியின் காதில், மாமா ! தர்மனிடம் ஒன்றுமில்லை. தன் சகோதரர்களை பணயம் வைத்து ஆடச்சொல்லுங்கள். அவர்களை நாம் அடிமையாக்கி விடலாம், என்றான். சகுனிக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கவே, சகோதரர்களை பணயம் வைக்கும்படி சொல்ல, சூதாட்ட வெறியில் தன் கண்ணுக்கு கண்ணான சகோதரர்களை இழந்தார் தர்மர்.
இந்நேரத்தில் விதுரரும் திருதராஷ்டிரனும் அங்கே வந்தார்கள், சகுனி தர்மரிடம், தர்மா ! உன்னிடமுள்ள அத்தனையும் தோற்று விட்டாய். நீயும், உன் சகோதரர்களும் இனி எங்களது அடிமைகள். உம்.... உன் மனைவி திரவுபதியை பந்தயமாக வைக்கிறாயா ? என கேலி பேசினான். விதுரர் மிகுந்த வருத்தத்துடன், திருதராஷ்டிரனிடம், அண்ணா! இது என்ன முறைகெட்ட விளையாட்டு ! உங்கள் பிள்ளைகள் பாண்டவர்களுக்கு வஞ்சகம் செய்வது தெரிந்தும் நீங்கள் தடுக்காமல் இருப்பது எனக்கு சரியானதாகப் படவில்லை. குருவம்சத்திற்கு இது கெட்ட பெயரையே ஏற்படுத்தும். ஒரு பெண்ணை வைத்து சூதாடுவதை நீங்கள் அனுமதிக்ககூடாது. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேர்ந்தே கெட்ட காலம் நெருங்கி விட்டது என்பதையே இந்தச்சூது எடுத்துக் காட்டுகிறது. உடனே இந்த ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார். திருதராஷ்டிரன் இதற்கு மவுனம் சாதித்துவிட்டான் மவுனத்தை விட பெரிய ஆயுதம் ஏதுமில்லை என்று இதைத்தான் குறிப்பிடுவார்கள். வாய் திறந்து பிள்ளைகளுக்கு எதிராகப் பேசினால் அவர்கள் கோபிப்பார்கள். எதற்கு இந்த வம்பு.... என்பது மட்டுமல்ல. பிள்ளைப்பாசம் கண்ணை மறைக்கவே, திருதராஷ்டிரன் காது கேளாதவன் போல இருந்தான்.
அங்கே கூடிய பிறநாட்டு அரசர்கள், தர்மரின் நிலைக்கண்டு வருந்தினர். அதே நேரம், திரவுபதியை மட்டும் தர்மர் தோற்று விட்டால், அந்த பெண்ணரசியின் சாபமே துரியோதனாதிகளைக் கொன்றுவிடும் என்பதில் உறுதியாக இருந்தனர். இன்னும் சிலர், இது எதிர்காலத்தில் போருக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. அப்போது, துரியோதனாதியர் நிச்சயமாக பாண்டவர்களின் பிடியில், அதிலும் பீமனின் கையில் சிக்கி சின்னாபின்னமாவது உறுதி என்பதை உணர்ந்து கொண்டனர். ஆனால், கடைசி முயற்சியாக தர்மர் தன் மனைவியையும் வைத்து சூதாடி தோற்றார். எல்லாம் இழந்து அவமானப்பட்டு நின்றது கண்டு விதுரர் துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஏ துரியோதனா ! நம் குலம் அழிந்து விடுமடா ! பூமியில் அட்டூழியம் செய்த அரக்கர்களை அந்த பரந்தாமன் கிருஷ்ணாவதாரம் எடுத்து அழிக்க வந்துள்ளான். அவன் ஏற்கனவே கம்சன், காலநேமி ஆகியோரை அழித்து விட்டான். அவன் பிடியில் சிக்கியும், உன்னைச் சேர்ந்தவர்களும் உயிர் விடப்போவது உறுதி என்றார்.
தாத்தா பீஷ்மர் எவ்வளவோ எடுத்துச் சென்னார், அதுவும் காதில் ஏறவில்லை. பெரியவர்கள் சொல்லும் உண்மையான வார்த்தைகளைக் கேட்காத பிள்ளைகள் அழிவது உறுதி. துரியோதனன் தன் அழிவுக்கு அடிக்கல் நாட்டும் வித்ததில், தன் தேர்ச் சாரதியான பிரதிகாமியை அழைத்தான். பிரதி ! நீ உடனே மகாராணி காந்தாரியின் அறைக்குச் சென்று, அங்கே அமர்ந்திருக்கும் திரவுபதியை இழுத்து வா. அவள் இப்போது எனக்கு அடிமை என்றான். விதுரரிடம் சித்தப்பா ! நீங்கள் உடனே இந்திரபிரஸ்தத்து செல்வங்களையும் அஸ்தினாபுரத்துக் கொண்டு வாருங்கள், என்றான் கட்டளையிடும் குரலில். திரவுபதியை அழைத்து வருவதில் பிரதிகாமிக்கு உடன்பாடில்லை. சற்று தூரம் போவது போல் போக்கு காட்டிவிட்டு திரும்பிய அவன். எங்கள் மாமன்னரே! ராஜமாதா திரவுபதியாரை அழைக்கச் சென்றேன். அவர்கள் என்னிடம் தர்மர் தன்னையும், தன் சகோதரர்களையும் தோற்ற பிறகு தான் என்னை பணயம் வைத்திருக்கிறார். தோற்ற ஒருவருக்கு என்னை வைத்து சூதாட எந்த உரிமையும் இல்லை என்று சொல்லச் சொன்னார் என்றான். ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தன் மன்னனின் கட்டளையையே மீறினான் ஒரு தேர் சாரதி என்றால் அக்காலத்தில் பெண்மைக்கு எந்தளவுக்கு மதிப்பு தரப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
துரியோதனன் இது சரியெனக் கருதி திரவுபதியை விட்டு விடுவான் என்ற நோக்கத்தில் பிரதிகாமி இப்படி சொல்ல, தர்மமே இல்லாத துரியோதனன், துச்சாதனா !அவளை நீயே போய் இழுத்து வா என்றான். துச்சாதனன் ஆர்ப்பரிப்புடன் காந்தாரியின் அறைக்குச் சென்றான். உலக நடப்பில் இல்லாதபடி ஐந்து பேரை தழுவித்தழுவி கற்பிழந்தவளே ! வா என்னோடு ! அன்று என் அண்ணன் துரியோதனன், உன் அரண்மனைக்கு வந்த போது, தண்ணீர் போல் காட்சியளித்த தரையைக் கண்டு உடையை உயர்த்தி நடந்ததைப் பார்த்து பரிகசித்து சிரித்தாயே ! அப்படி சிரித்த உன் வாய் இப்போது அழப்போகிறது வா, என்று கையைப் பிடித்து இழுத்தான். மைத்துனன் தான் என்றாலும், இழுப்பது கெட்ட நோக்கத்தில் என்று தெரிந்த பிறகு உடம்பெல்லாம் குறுகிப் போன திரவுபதி, அவனது பிடியில் இருந்து விடுபட்டு, காந்தாரியின் பின்னால் போய் ஒளிந்து, அத்தை ! என்னைக் காப்பாற்றுங்கள் ! என்றாள் கணவன் கண்ணிழந்துவன் என்பதற்காக, தன் கண்களைக் கட்டிக் கொண்டு பதிவிரதா தன்மையை உலகுக்கு நிரூபித்த காந்தாரி, நிஜமாகவே கண்ணிழந்தவள் போல் பேசினாள். அவள் திரவுபதியை கண்டு கொள்ளவில்லை. ஏன் தயங்குகிறாய் ? உன்னை அழைப்பது வேறு யாரோ அல்ல, நாம் எல்லாரும் உறவு தான். தயங்காமல் செல், என்றாள் இரக்கமே இல்லாமல் இந்த வார்த்தைகள் துச்சாதனனை ஊக்கப்படுத்தவே, அவன் திரவுபதியின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.
>சபை நடுவே இழுத்துச் செல்லப்பட்டாள் திரவுபதி. கர்ணனும், துரியோதனனும், சகுனியும் கை கொட்டி சிரித்தனர். அந்த சபையில் பீஷ்மர் மற்றும் பலநாட்டு அரசர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள், இந்தக் காட்சியை கண்டு தலை குனிந்தனர். திரவுபதியின் கதறல் ஒலி சபையையே குலுக்கியது, இது காதில் விழுந்தும் கண்கெட்ட திருதராஷ்டிரன் மனமும் கெட்டு ஏதும் பேசாமல் இருந்தான். திரவுபதியின் கூந்தல் துச்சாதனன் இழுத்து வந்ததில் அவிழ்ந்து தாறுமாறாகக் கிடந்தது. அவள் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அது கசங்கியிருந்தது. திருதராஷ்டிரனையும், பீஷ்மரையும் நோக்கி, மாமா, தாத்தா ! இதுதான் உங்கள் நாட்டின் நீதியோ ? என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறீர்களே ! ஏன் கணவர் தர்மர் தன்னைத் தோற்ற பிறகு என்னைத் தோற்க என்ன உரிமையிருக்கிறது ? என்று நியாயம் கேட்டான்.
துரியோதனின் தேரோட்டி பிரதிகாமிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆஹா..நாம் கற்பனையாகச் சொன்னதை இவள் நிஜமாகச் சொல்கிறாளே. நியாயமுள்ளவர்கள் மனதில் ஒரே மாதிரியான எண்ணம் தான் எழும் போலும் ! என்று நினைத்துக் கொண்டான். பீஷ்மர் துரியோதனனிடம், துரியோதனா ! ஒரு பெண்னை சபை நடுவில் இழுத்து வந்து அவமானப் படுத்துவது முறையல்ல, என்று புத்தி சொன்னார். அவன் காதில் விழவில்லை. துச்சாதனன் அவளை நோக்கி, என்னடி அழுகிறாய் நீ வேசி. வேசிகள் தான் நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் சிந்துவார்கள் என்று அண்ணியாரை ஒருமையில் அவமானப்படுத்தி பேசினான். பாஞ்சாலி கொதித்து விட்டாள். பீமனும், அர்ஜுனனும் ஆயுதத்தில் கைவைத்து விட்டார்கள். தர்மர் அவர்களைப் பார்த்து கண்ஜாடை காட்டவே, கோபத்தை கட்டுப்படுத்தினார்கள்.
தர்மர் அவர்களிடம், நடப்பது நடக்கட்டும். வினைப்பயனை நாம் எல்லாருமே அனுபவித்தாக வேண்டும். இப்போது துரியோதனாதிகளுக்கு நல்ல காலம். ஆனால், இது நிரந்தரமானதல்ல. நம் நேரம் வரும்போது, நாம் தட்டிக் கேட்கலாம் என்றார். அப்போது துரியோதனாதிகளில் நல்லவனான விகர்ணன் என்பவன் எழுந்தான். அவன் நியாயம் பேசினான். அண்ணா ! நீ பாஞ்சாலி தேவியாரை இப்படி செய்தது சரியல்ல. அவர்கள் நம் அண்ணியார். மேலும், அதற்கு நமக்கு அதிகாரமும் இல்லை. ஏனெனில், அவர்கள் கேட்டது போல, தர்மர் முதலில் தன்னைத் தோற்றார். எனவே, அண்ணியாரை விடுவித்து விடுங்கள், என்றார். பாஞ்சாலியின் நிலைக்காக பரிந்து பேச நினைத்தாலும் துரியோதனனிடம் பயந்து போயிருந்த மற்ற நாட்டு அரசர்கள், விகர்ணனின் பேச்சை மெச்சி இது நியாயமான பேச்சு, விகர்ணனே யோக்கியன் என்று பேசினர்.
இந்த முணுமுணுப்பு கர்ணனின் காதில் விழவே ஏ விகர்ணா ! யோக்கியன் என்ற பட்டம் பெறுவதற்காக நீ செய்த தந்திரமே உனது பேச்சு. உன் பேச்சில் அர்த்தமே இல்லை. தர்மன் என்ன சொன்னான் தெரியுமா ? என்னையும் என் இல்லையும் பணயமாக வைக்கிறேன் என்றான். இல் என்றால் இல்லாள் என்று பொருள். அவ்வழியில் அவன் மனைவியை தோற்கவே செய்தான் என்றான். துரியோதனன் கர்ணனை பாராட்டு, இனியும் பேச்சு தேவை இல்லை. ஏ துச்சாதனா ! முதலில் பாண்டவ அடிமைகளின் ஆடையை அகற்று என்றான். துச்சாதனன் பாண்டவர்களை நெருங்கவே, அவர்கள் தாங்களாவே தங்கள் ஆடைகளை கொடுத்து விட்டு, கெவுபீனத்துடன் நின்றனர். அடுத்து, துச்சாதனா ! இந்த திரவுபதியின் ஆடையை அவிழ்த்துப் போடு. நாமும் ரசிப்போம். மற்றவர்களும் இவளது பேரழகை ரசிக்கட்டும், என்றான். இதைக்கேட்டு சபையே கலங்கி விட்டது. எல்லோர் கண்களிலும் கண்ணீர். கர்ணன், சகுனி நீங்கலாக மற்றவர்கள் தலை குனிந்தனர். அப்போது வெளியில் ரத்தமழை பொழிந்தது. சகுனக் குற்றங்கள் ஏற்பட்டன. பீமன் ஆயுதத்தை எடுத்தே விட்டான். அப்போதும் தர்மர் அவர்களை கண்களால் கடுமையாகப் பார்த்தார்.
துச்சாதனன் திரவுபதியின் அருகில் நெருங்கினான். அப்போது, பாஞ்சாலித் தாய் கைகுவித்து, கண்ணா, என் அண்ணா, நீயே கதி என கரங் குவித்து வணங்கினாள். கண்களில் வெள்ளம் பொங்கி வழிந்தது. அவன் நெருங்கவே, புடவைத் தலைப்பை இறுகப் பற்றிக்கொண்டு, என்னைக் காப்பாற்ற இங்குள்ள யாருமே தயாராயில்லை. என் கணவர்களும் செயலிழந்து நிற்கின்றனர். கட்டியவனும் கைவிட்ட பிறகு, கண்ணா, நீதானே துணை நிற்க முடியும். என்னைக் காக்க ஓடிவா, என்றாள்.
அப்போது, கண்ணன் ருக்மணியுடன் சொக்கட்டான். ஆடிக்கொண்டிருந்தார். மனதுக்குள் சிரித்தார். இப்போதும் இந்த திரவுபதி தன் புடவையை நம்புகிறாள் அது தன் மானத்தைக் காப்பாற்றும் என்று. என் மீது நம்பிக்கையிருந்தால், புடவை தலைப்பை விட்டுவிட்டு என்னை மட்டும் வண்ஙகி நிற்க வேண்டியது தானே என நினைத்துக் கொண்டார். துச்சாதனன் புடவைத் தலைப்பில் கை வைத்து அதை இழுக்க முயற்சிக்கவும் அதிர்ந்து போன பாஞ்சாலி, நிஜமாகவே கண்ணனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாள். புடவைத் தலைப்பை விட்டுவிட்டு, தலைகளின் மீது கரங்களைக் குவித்து, சங்குசக்ர கதாதாரீ! புண்டரீகாக்ஷ ! மதுசூதனா! கோவிந்தா ரக்ஷமாம் சரணாகதம் என கூவி அழுதாள். ஏ கோவிந்தனே ! உன்னை நான் முழுமையாக சரணடைந்து விட்டேன் எனக் கதறினாள். அவ்வளவு தான் ! கண்ணன் சொக்கட்டான் ஆட்டத்தில் இருந்து எழுந்து விட்டான். ருக்மணி, பாதியில் எங்கே செல்கிறீர்கள் ? என்றாள். ருக்மணி ! இங்கே நாம் பொழுதுபோக்கிற்காக சொக்கட்டான் ஆடுகிறோம். அங்கே என் பக்தை இதே ஆட்டத்தால் துகிலையே இழக்கப் போகிறாள். என்றவர், அக்ஷய (வளரட்டும்) என்றார்.
துச்சாதனன் புடவையை இழுத்தான். பாஞ்சாலி துடித்தாள். ஒரு பெண்ணின் புடவை இழுக்கப்பட்டதும் முதலில் தெரியப்போவது அவளது தனங்கள் தான். அவை எந்தக் கொடியவனின் பார்வையிலும் படவில்லை. துச்சாதனன் இழுக்க இழுக்க, அவளது அங்கத்தின் சிறுபகுதி கூட வெளியே தெரியாமல் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது.
ஏ துச்சாதனா ! அந்த அடிமை பேசிக்கொண்டிருக்கிறாள், நீ பார்த்து கொண்டிருக்கிறாயா ? அவளது புடவை வளர்ந்தால் என்ன ? நீ அவளை இழுத்து வந்து என் தொடையில் அமர வை, அப்போது பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று? இப்படி, தனது அண்ணியாரையே தகாத செயலுக்கு உட்படுத்த முயற்சித்ததைக் கண்டு கொதித்த பாஞ்சாலி, என்னை தகாத வார்த்தை சொன்ன இந்த துரியோதனின் தலை போரில் உருளும். இது சத்தியம் என சபதமிட்டாள். இதுவரை பொறுமை காத்த பீமன் அங்கு கூடியிருந்த அரசர்களின் நடுவில், அரசர்களே என் மனைவியின் மானத்திற்கு இழுக்கு வரும் வகையில் அவளை தனது தொடையில் அமர வைக்க முயற்சித்த அவனது தொடையை போரில் அடித்து நொறுக்குவேன். துச்சாதனன் மற்றும் கவுரவர் கூட்டத்தை தனியொருவனாக நின்றே அழிப்பேன். அதுவரை என் கையால் முகர்ந்து தண்ணீர் குடிக்க மாட்டேன். என் கதாயுதத்தை ஆற்றுநீரில் அடித்து மேலே எழும்பும் தண்ணீர் துளிகளை மட்டும் குடித்து உயிர்வாழ்வேன் என் சபதம் செய்தான்.
அர்ஜுனன் ஆவேசத்துடன் இங்கே சற்றும் நியாயமின்றி நடந்து கொண்ட கர்ணனை கொல்வது எனது வேலை. நகுலன் கோபத்துடன், சூது என்ற வஞ்சகத்தால் எங்குள் குடிகெடுத்த சகுனியின் குலம் அழியும் வகையில் அவனது மகன் உலூகனைக் கொல்வேன் என்றான். சகாதேவன் அனல்பறக்க, நகுலா, நீ அவன் குலத்தைக் கவனி. நான் இந்த சகுனியையே கொல்வேன். என உறுதியெடுத்தான். திருதராஷ்டிரனுக்கு பாஞ்சாலி மற்றும் பாண்டவர்கள் செய்த சபதம் அடிவயிற்றைக் கலக்கிவிட்டது. அவன் திரவுபதியின் பாதங்களை நோக்கி வணங்கினான். மருமகளே ! அம்மா பாஞ்சாலி ! என் பிள்ளைகள் உனக்கு தகாத தீய செயல்களைச் செய்து விட்டார்கள். உன் மைத்துனர்கள் என்பதால் அறியாமல் செய்த அவர்களின் பிழைகளை மன்னித்து விடு. பைத்தியக்காரர்களின் செயலை யாராவது பெரிதுபடுத்துவார்களா ? அப்படி உனக்கு நடந்ததை நினைத்து மறந்து விடு. அவர்களை மன்னித்து விடு, என்று புலம்பினான்.
பாண்டவர்களிடம், என் குழந்தைகளே ! எனக்கு நீங்கள் வேறு, கவுரவர்கள் வேறல்ல ! நீங்கள் நடத்திய சூதாட்டத்தை பொழுதுபோக்காக கருதி, அதில் தோற்ற நாட்டையும், செல்வத்தையும் மற்றுமுள்ள எல்லாவற்றையும் திருப்பி தர உத்தரவிடுகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். திரவுபதியுடன் நீங்கள் இந்திரபிரஸ்தத்துக்கு கிளம்புங்கள், என்றான் பயத்தில். தன் குலம் அழிந்துவிடும் என அவனுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. தான் சொன்னபடியே இழந்ததை எல்லாம் திரும்பக் கொடுத்தும் விட்டார் என்று சபையோரிடம் அறிவித்தான். இந்த நேரத்தில் சகுனி தன் திருவாயையைத் திறந்தான். மாமன்னரே ! தாங்கள் புலிகளின் வாலைப் பிடித்தீர்கள். இப்போது விட்டு விடப் பார்க்கிறீர்கள். ஆனால், ஆபத்து உங்களுக்கு தானே ! ஒன்றை செய்வதற்கு முன் நன்றாக யோசித்து செய்ய வேண்டும். செய்தபிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. தங்கள் செயலும் அப்படித்தான் தெரிகிறது. இப்போது பாண்டவர்களை நீங்கள் விடுவித்து விட்டால் அவர்கள் ஊரில் போய் சும்மாவா இருப்பார்கள் ? திரவுபதியை அவமானம் செய்தது உள்ளிட்டவை அவர்கள் மனதில் நிழலாடத்தானே செய்யும். விளைவு உங்கள் மக்கள் அழிவார்கள். இதெல்லாம் தேவையா ? என்றான்.
இதை கர்ணனும் தன்முகப்குறிப்பால், துரியோதனனை நோக்கி ஆமோதித்தான். உடனே துரியோதனன் நடுங்கிப் போய், மாமா சொல்வது சரிதான் ! என்றான். துச்சாதனனை அழைத்து, நான் சொல்வதை தர்மரிடம் சொல், என்று காதில் ஏதோ சொன்னான். துச்சாதனன் தர்மரிடம் சென்று, தர்மா ! நீயாக சம்மதித்து இழந்த பொருளை பெற உனக்கு தகுதியில்லை. எனவே, நீ உன் தம்பிகளுடன் காட்டிற்கு போய்விடு. நீ சத்தியவான் என்று பெயரெடுத்தவன். சத்தியவான்கள் வார்த்தை தவறுவதில்லை என்றான். இவர்கள் கொடுத்தாலும் தர்மர் வாங்கமாட்டார் என்பது உலகறிந்த ஒன்றுதான் ! தர்மர் அந்த துஷ்டனிடம் பதிலேதும் சொல்லவில்லை. இதனிடையே துரோணர் பீஷ்மர் முதலிய பெரியவர்கள் ஆலோசித்து, தர்மா ! ராமபிரான் தன் தந்தை சொல்லை மதித்து காட்டுக்குச் சென்றது போல, நீ 12 வருடங்கள் காட்டுவாசம் மேற்கொள்ள வேண்டும். ஓரு வருடம் நாட்டுக்குள் யார் கண்ணிலும் படமால் அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால், நீங்கள் இழந்ததைப் பெற தகுதியுடையவர்கள் ஆவீர்கள் என்றார்.
அப்போது திரவுபதி தர்மரிடம், அன்பரே ! தாங்கள் என்னை சூதில் இழந்து விட்டதாக இங்குள்வர்கள் சொல்கிறார்கள். நான் மட்டுமல்ல, நீங்களும், உங்கள் தம்பிகளும், என் ஐந்து பிள்ளைகளும் உங்களால் தோற்கடிக்கப்பட்டு நிற்கறோம். எங்களை மீண்டும் சூதில் வென்று மீட்க வேண்டும். எதையும் இறைசிந்தனையுடன் செய்பவர்களுக்கு தோல்வி ஏற்படுவதில்லை. நீங்கள் ஸ்ரீ நாராயணனின் துவாதச நாமங்களான 12 நாமங்களைச் சொல்லி விளையாடுங்கள். வெற்றி பெற்று எங்களை மீட்ட பிறகு நாம் சுதந்திர மனிதர்களாக காட்டுக்குள் புகுவோம். என்றாள் பகவான் கிருஷ்ணன் மீதான நம்பிக்கையில்! தர்மருக்கு இது சரியெனப்பட்டது. அவரும் சகுனியும் மீண்டும் ஆடினர்.
சகுனி இப்போதும் வஞ்சகத்துடன், தர்மா ! இப்போது உன்னிடம் ஏதுமே இல்லை. பந்தயப்பொருளாக வைப்பதற்கு ! ஒருவேளை இந்த அடிமைத்தளையில் இருந்து மீளாமல், உன் மனைவி மக்களும், நீங்களும் எங்களுக்கே சொந்தமாகி விட்டால் என்ன தருவாய் ? என்றான் ஏளனத்துடன். சகுனி ! என் புண்ணியங்கள் அனைத்தும் துரியோதனனுக்கு சொந்தமாகும் என்றார் தர்மர். தர்மர் பகடையை எடுத்தார். கேசவா! நாராயணா ! மாதவா ! கோவிந்தா ! ஸ்ரீவிஷ்ணு ! மதுசூதனா ! திரிவிக்ராமா ! வாமனா ! ஸ்ரீதரா ! ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா என்ற 24 திருமால் நாமங்களைச் சொன்னார். பகடை உருண்டது. சகுனி தோற்றான். இது கண்டு துரியோதனாதிகள் அதிர்ச்சியடைந்தனர். சகுனி முகத்தில் ஈயாடவில்லை.
தங்களையும், தங்கள் மனைவியையும் இக்கட்டில் இருந்து விடுவிப்பதே தர்மரின் நோக்கம். அதன் காரணாகவே சூதுக்கு அவர் சம்மதித்தார். சுதந்திரமான சூழ்நிலையில் அவர்கள், காட்டுக்குப் புறப்பட்டனர். தன் குருமார்களான துரோணர், கிருபாச்சாரியார் மற்றும் அஸ்வத்தாமனிடம் தர்மர் ஆசி பெற்றார். மக்கள் மனமுருகி அழுதனர். அவர்கள் காட்டுக்குச் சென்றபோது அவருடன் தவுமிய முனிவர் என்பவரும் சென்றார். அவர்கள் காட்டுக்குள் நுழையவும், 12 ஆயிரம் முனிவர்கள் அங்கிருந்தனர். மகரிஷி தவுமியருடன் அவர்களும் புறப்பட்டனர். காமியவனத்திற்கு அவர்கள் சென்றதை திரவுபதியின் தந்தை துருபதன் கேள்விப்பட்டான். மகளையும், மருமகன்களையும் பார்க்க அவன் காமியவனத்துக்கு வந்து விட்டான். துருபதனுடன் திரவுபதி மற்றும் சந்திரகுலத்து அரசர்கள், திரவுபதியின் சொந்தக்காரர்களான அரசர்கள் ஆகியோரும் வந்தனர்.
போதாக்குறைக்கு கண்ணபிரானும் வந்து சேர்ந்தார். இந்த தகவல் எங்களுக்கே இப்போது தான் தெரிந்தது. என் மகளை மானபங்கப்படுத்த முயன்ற அந்த துரியோதனனையும், அவன் வம்சத்தையும், இப்போதே ஒழித்து தீர வேண்டும், என்றான் துருபதன். இன்னும் சில அரசர்கள், திரவுபதியை ஏளனமாக பேசிய அந்த தேரோட்டி மகன் கர்ணனை வானுலுலகுக்கு அனுப்ப வேண்டும், என்றனர். இல்லை..... இல்லை....... இத்தனைக்கும் காரணம் அந்த கொடியவன் சகுனி தான். முதலில் அவனை வெட்டிச் சாய்ப்போம், என்றனர் சில உறவினர்கள். கண்ணபிரான் இவர்களின் உரையாடல் கேட்டு சிரித்தார். அரசர்களே ! கோபம் மனிதனுக்கு சத்ரு. உணர்ச்சிவசப்பட்ட செயல்கள் வெற்றி பெறாது. தர்மர் தர்மம் அறிந்தவர். அவர் சபையோர் முன்னிலையில் வனம் செல்வதாக உறுதியளித்தார். வாக்கு தவறுபவர்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. அமைதியாக இருங்கள். வனவாசம் முடிந்து போருக்கான ஆயத்தங்கள் செய்வோம். முதலில் குந்திதேவியாரை காந்தாரியின் அரண்மனையில் தங்கச்சொல்லுங்கள். திரவுபதியின் ஐந்து பிள்ளைகளும் தாத்தா துருபதன் மாளிகையில் தங்கி வளரட்டும். பாண்டவர்களும் திரவுபதியும் மட்டுமே காட்டில் இருக்க வேண்டும், என்றார்.
கண்ணன் சொன்னபிறகு அங்கே அப்பீலுக்கு இடமேது எல்லாரும் சம்மதித்து விட்டபின்னர் கண்ணன் உட்பட அனைத்து அரசர்களும் அவரவர் இடங்களுக்கு திரும்பினர். தர்மர் கண்ணன் சொன்ன ஏற்பாட்டை அப்படியே செய்தார். இந்நேரத்தில், வியாசர் காமிய வனத்துக்கு வந்தார். பாண்டவர்கள் அவரை வணங்கி வரவேற்றனர். தர்மரிடம் வியாசர், தர்மா ! நடந்ததையே நினைத்துக் கொண்டுடிருப்பதில் பயன் ஏதுமில்லை. ஓரு விஷயம் தெரியுமா ? நடந்து போனதைப் பற்றி பேசுவது பாவம் என்பதை தெரிந்து கொள். எனவே பழைய விஷயங்களை நாம் கிளர வேண்டாம். இனி நடக்க வேண்டியது கவுரவர்களை நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பது ! அதற்கு என்ன தேவை என்பதை இந்த வனவாச காலத்தில் நீ சிந்திக்க வேண்டும். உன் தம்பி அர்ஜுனன் மிகச் சிறந்த வில்லாளி. ஆனால் இப்போது அவனிடமிருக்கும் அஸ்திரங்களைக் கொண்டு, கவுரவர்களை ஜெயிக்க முடியாது. எனவே அவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்று வர வேண்டும். பாசுபதாஸ்திரமே கவுரவர்களை அழிக்கும் ஒரே சாதனம். நீ அர்ஜுனனை கைலாய மலைக்கு அனுப்பு அங்கே அவன் தவமிருந்து அதை பெற்று வரட்டும் என்றார்.
வியாசர் சொன்னபடியே அர்ஜுனன் கயிலாயமலைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அங்கே, அவன் தியானத்தில் ஆழ்ந்தான். சிவபெருமானோ அவனுக்கு பிரத்யட்சம் ஆகவில்லை. வருத்தப்பட்டான்; அங்கிருந்த முனிவர்கள் அர்ஜுனா ! சிவதரிசனம் என்பது அவ்வளவு எளிதல்ல. முற்றும் துறந்த முனிவர்களான நாங்களே அந்த பரமேஸ்வரனைக் காண்பதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கிரகஸ்தனான உன் கண்ணுக்கு அவர் தெரிய வேண்டுமானால், நீ பல விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லி தவவிதிமுறைகளை எடுத்துக் கூறினர். எதற்கும் கலங்காத அர்ஜுனன், அவர்கள் சொன்னபடி அக்னி வளர்த்து அதன் நடுவில் நின்றபடி தவம் செய்தான். சிவத்தியானத்தால் அக்னி அவனுக்கு குளிரவே செய்தது. சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் இதே போல அவன் தவமிருந்தான்.
அர்ஜுனன் குந்திதேவிக்கு இந்திரன் மூலம் பிறந்தவன் என்பது முன்கதை. குந்திதேவியார், துர்வாசர் கற்றுக்கொடுத்து சூரிய மந்திரத்தை விளையாட்டாக சொல்லி அவன் மூலமாக கர்ணனை பெற்றதும், பின்னர் சூரியனால் கன்னியாக்கப் பட்டு பாண்டுவை மணந்து அவன் மூலம் குழந்தைகள் இல்லாததால், தேவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி, அவர்கள் மூலமே குழந்தை பெற்றதும் தெரிந்த விஷயம். அவ்வகையில் அர்ஜுனனுக்கு உதவ இந்திரன் முன்வந்தார். அவனது தவசக்தியை சோதிப்பதற்காக ஊர்வசி, ரம்பை, மேனகையை அனுப்பி மன்மதக்கணையை ஏவ மன்மதனையும் அனுப்பினான். அர்ஜுனன் கண் விழிக்கவே இல்லை. அக்னி குண்டத்திலேயே அசையாமல் நின்றான். அவர்கள் தங்கள் திட்டம் பலிக்காமல் தோற்றனர். மகிழ்ந்த இந்திரன் அவன் முன்காட்சி தந்து பாசுபத அஸ்திரம் நிச்சயம் கிடைக்கும் என மகனுக்கு நம்பிக்கையூட்டினான்.
இந்த நேரத்தில் துரியோதனன் காட்டில் இருக்கும் அர்ச்சுனனைக் கொல்வதற்காக முகாசுரன் என்பவனை ஏவிவிட்டான். அவன் அர்ஜுனனைக் கொல்ல நெருங்கும் வேளையில் பார்வதிதேவியார் கருணை உள்ளத்துடன் பரமசிவனை அணுகினாள். அன்பரே ! தாங்கள், உங்கள் பக்தனின் கடும் தவத்திற்கு ஏன் இன்னும் இரங்கவில்லை ? என்றாள் தாயுள்ளத்தோடு.
பரமசிவன் சிரித்தார். தேவீ ! உன் கருணைக்கு தான் ஏது எல்லை. பக்தர்கள் துன்பப்படுவதை நீ சகிக்க மாட்டாய். அவர்கள் எந்தத் துன்பத்தையும் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்ற பக்குவ நிலையை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அர்ஜுனனை நான் கவனிக்காமல் இல்லை ! அவன் அக்னியின் மத்தியில் நின்று செய்யும் கொடிய தவம் என்னை ஈர்க்கத்தான் செய்திருக்கிறது. கவலை கொள்ளாதே. இனி அவனுக்கு துன்பமில்லை என்றவர் நந்தீஸ்வரனை திரும்பிப் பார்த்தார். இறைவனின் பார்வையிலேயே குறிப்பறிந்த நந்தீஸ்வரர் தன் கணங்களுடன் தயாராகி விட்டார். பார்வதியிடம், நான் வேடனாக வேடம் கொள்கிறேன். நீ வேடுவச்சியாக வேடம் தரித்து வா ! மற்றவர்களும் வேடர் கோலம் பூணுங்கள். வேதங்களே ! நீங்கள் நாய் வடிவில் என்னைத் தொடருங்கள், என உத்தரவிட்டார். கணநேரத்தில் எல்லாம் முடிந்தது. அவர்கள் முகாசுரனை அழிக்க புறப்பட்டனர். முகாசுரன் கெடிய முள்ளம்பன்றி வடிவம் கொண்டு அர்ஜுனனை அழிக்க காத்திருந்தான்.
சிவபெருமான் அவன் இருந்த இடத்தை அடைந்து, வில்லில் அம்பைப் பொருத்தி காத்திருந்தார். முகாசுரன் பயங்கர உறுமலுடன் அர்ஜுனனை நெருங்கினான். அதுகேட்டு, அர்ஜுனனின் நிஷ்டை கலைந்துவிட்டது. தனது வில்லில் அம்புதொடுத்து பன்றியின் மீது எய்தான். அதே நேரத்தில் மறைந்திருந்த சிவபெருமானும் ஒரு அம்பை பன்றியின் பின்பக்கமாக விட இரண்டும் ஒன்றாய் தைத்தன. முகாசுரன் இறந்தான். அப்போது சிவகணங்களாக வந்த வேடர்கள், அடேய் வாலிபனே ! இந்த மலையில் பல்லாண்டுகளாய் வசிக்கும் எங்கள் குலத்தலைவர் பன்றிக்கு குறி வைத்திருக்க, எங்கிருந்தோ வந்த நீயும் பன்றியை அடித்தாயே ! இது முறையா ? என வம்புச்சண்டைக்கு இழுத்தனர். அர்ஜுனன் அவர்களது தலைவனாய் வந்திருக்கும் சிவபெருமானை நோக்கிச்சென்று, அவர் சிவன் என்பதை அறியாமல், வேடர் தலைவா ! நீ விட்ட அம்பு பின்பக்கமாக விடப்பட்டது. ஆனால் நான் அதன் முகத்துக்கு நேராக அம்பெய்தி கொன்றேன். என் அம்பு துளைத்த பிறகு தான் உனது அம்பு அதன் மீது பாய்ந்தது. இதை தவறாகச் சொல்கின்றார்களே உன் வீரர்கள் ! போகட்டும். நான் கடும் தவம் மேற்கொண்டுள்ளேன். நான் காய்ந்த இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு விரதமிருக்கிறேன். இந்தப் பன்றி எனக்குத் தேவையில்லை. இதை நீங்களே எடுத்துச் சென்று சாப்பிடுங்கள். இதை விடுத்து, என்னிடம் வம்பு இழுத்தால் உனக்கும், உள்னோடு வந்துள்ளவர்களுக்கும் தலை இருக்காது. என் எச்சரித்தான்.
சிவன் அவனிடம் நீ தவம் செய்பவன் என்கிறாய், தவம் செய்பவன் ஆழ்ந்த நிஷ்டையில் ஆளாமல், பன்றியின் உறுமல் சத்தம் கேட்டு விழித்திருக்கிறாய் ? இதெல்லாம் ஒரு தவமா ? உனக்கு தவத்தில் சிரத்தையில்லை. மேலும், தவகாலத்தில் ஒரு மிருகத்தை கொன்றிருக்கறாய். அது போகட்டும். இப்படி தவம் செய்கிறாயே ! அதற்காக காரணத்தை தெரிந்து கொள்ளலாமா ! என்றார். அர்ஜுனன் பொறுமையுடன் தன் வரலாறையும், தன் குடும்பத்தாருக்கு துரியோதனனால் இழைக்கப்பட்ட கொடுமையையும் விளக்கினான். அதுகேட்ட சிவன் ஓ அந்த அர்ஜுனனா நீ ! ஒரு காலத்தில் அக்னியின் ஆசையை நிறைவேற்ற காண்டவ வனத்தை எரித்தவன் நீதானே ! அந்த நெருப்பில் சிக்கி எங்கள் வேடர் குலத்தவர் பலர் அழிந்தார்களே ! ஏகலைவனின் மீது பொறாமைப்பட்டு, அவனது விரல் பறிபோக காரணமாய் இருந்தவனும் நீ தானே ! உன்னை விட வில்வித்தையில் உயர்ந்தவர் யாருமில்லை என எண்ணியிருந்தாய். இதோ ! நீ உண்மையிலேயே வலிமை உள்ளவன் என்னை ஜெயித்துப் பார். வா சண்டைக்கு ! என்றார்.
அர்ஜுனன் சற்றும் யோசிக்காமல், ஒரு அம்பை சிவன் மீது விட்டான். இப்படியாக போர் துவங்க அர்ஜுனனின் கணைகளால் சிவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் ஆச்சரியமும் கோபமடைந்தான். சிறிது நேரம் தளர்ந்தும் தெம்பானான். அவனது கால்கள் நடுங்கின. அச்சமயத்தில் பார்வதிதேவி, சிவனிடம் மீண்டும் அர்ஜுனனுக்காக மன்றாடி, போதும் சோதித்தது எனச்சொல்ல, சிவபெருமான் கடைசியாக தனது அம்பு ஒன்றை வீசி, அர்ஜுனனின் வில் நாணையே அறுத்து விட்டார். கோபமடைந்த அர்ஜுனன் அவர் மீது பாய்ந்து, உடைந்த வில்லால் தலையில் தாக்க, அவரது தலையில், இருந்த அமிர்தம் சிந்தியது, கங்காதேவி நிலை குலைந்து விண்னைநோக்கி எழுந்தாள். அவரது தலையை அலங்கரித்த நாகங்கள், வலி தாளமல் துடித்தன. சிவபெருமான் அடிபட்டதும், விண்ணுலகில் பிரம்மாவுக்கு வலித்தது. திருமால் அடிபட்டார். உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் தலையில் சம்மட்டியால் அடித்தது போல வலி, மிருகங்கள் எல்லாம் வலி தாளாமல் அங்குமிங்கும் ஓடின. தாவரங்கள் அங்குமிங்கும் ஆடின. பின்னர் இருவரும் மல்யுத்தம் செய்தனர். அதிலும் இருவரும் விடாக்கண்டர்களாக இருந்தனர். சிவன் அர்ஜுனனை தூக்கி வானில் எறிந்தார். இது கண்ட தேவர்கள் வானில் இருந்து வந்து மலர் தூவ, சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் ரிஷபத்தின் மீது காட்சி தந்தார்.
எந்தையே ! தாங்களா இந்த சிறுவனுடன் போரிட்டது ! என்னால் நம்ப முடியவில்லை ! நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன், என்று பல நாமங்கள் சொல்லி அவரை பூஜித்தான். சிவபெருமான் மகிழ்ந்து, அர்ஜுனா ! நீ விரும்பியது போல பாசுபதாஸ்திரம் தருகிறேன் எனச் சொல்லி அதைக் கொடுத்தார். பின்னர் மறைந்து விட்டார். அப்போது அங்கு வந்த இந்திரன், மகனே ! உன்னைப் பெற்ற நான் மகிழ்கிறேன். பூலோகத்தில் வாழ்பவர்க்கு சிவதரிசனம் என்பது சாதாரணமான விஷயமா ? உன் தவத்தை மெச்சுகிறேன். வா, என்னுடன் தேவலோகத்துக்கு, என்று அழைத்துச் சென்றான். அங்கே இந்திராணியின் காலில் விழுந்து வணங்கினான். தங்கள் நண்பனான கண்ணனின் சகோதரியே இந்திராணி. தந்தையின் மனைவி என்பதால் அர்ஜுனனுக்கு தாயாகவும் ஆகிறாள். அவளது பாதத்தில் விழுந்து ஆசிபெற்றான் அர்ஜுனன். உனக்கு உன் தந்தையைப் போலவே சகல செல்வமும் கிடைக்கட்டும், என அவள் வாழ்த்தினாள்.
தனது சிம்மாசனத்தில் தன்னருகிலேயே மகனை அமர வைத்த இந்திரன், தேவலோக இன்பங்களையெல்லாம் அவனை அனுபவிக்கச் செய்தான். பின்னர் அவனை ஒரு தனிமாளிகையில் தங்க வைத்தான். அப்போது நாட்டியத்தாரகை ஊர்வசி அங்கு வந்தாள்.
அர்ஜுனனின் அறைக்குள் அவள் வந்ததும், அவன் அவளது பாதங்களில் விழுந்தான். அம்மா, தாங்களை வணங்குகிறேன். எங்கள் குலத்தில் முன்னவரான புரூரவ சக்ரவர்த்திக்கு தாங்கள் மனைவியாக இருந்திருக்கிறீர்கள். அவ்வகையில், எனக்கு தாயாகிறிர்கள், என்றாள். ஊர்வசிக்கு மகாகோபம். ஏ அர்ஜுனா ! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். தேவதாசிகளை உறவு கொண்டாடும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மறந்து விட்டாயா ? நாங்கள் யாரிடம் உறுவு கொள்ள விரும்புகிறோமோ, அவர்கள் எங்களை திருப்தி செய்ய வேண்டுமென்ற விதிக்கு புறம்பாக பேசினாய். உன் வீரம், உன் திறமைக்காக என்னை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன். நீயோ, என்னைத் தாயாகப் பார்த்தாய். நீ பேடியாக (ஆணும் பெண்ணும் மற்ற நிலை) போ, என் சாபம் கொடுத்தாள்.
அந்த மட்டிலேயே அர்ஜுனனின் வீரம் அனைத்தும் தொலைந்து. அவன் பேடியாகி விட்டான். தன் நிலைக்காக அவன் வருந்தினான். ஊர்வசி திரும்பிப் போய்விட்டாள். இந்த விஷயம் இந்திரனை எட்டியதும், அவன் வருத்தப்பட்டான். ஊர்வசியை வரச்சொன்னான். என் மகனுக்கே சாபம் கொடுக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளாகி விட்டாயா ? என அவளைக் கடிந்தான் அவள் நடுங்கி நின்றாள். இந்திராதி தேவா ! என்னை மன்னிக்க வேண்டும். என்னைத் திருப்தி செய்யத் தவறியதாலேயே அவ்வாறு செய்தேன், என அழாக் குறையாகச் சொன்னாள். தேவமாந்தர் சாபத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால், சாப விமோசனம் வேண்டுமானால் கேட்கலாம். அவர் ஊர்வசியுடன் அர்ஜுனன் இருக்குமிடம் வந்தான். மகனே ! எனது இடத்திற்கு வந்து இப்படியொரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். நீ சிவனுடன் போரிட்டு பாசுபதாஸ்திரம் பெற்ற தீரன். அவை அனைத்தும் வீணாய் போய் விட்டதை நினைத்து வருந்துகிறேன், என்றாள்.
தேவர்களும் அர்ஜுனனின் நிலைக்காக வருந்தினர். அவர்கள் ஊர்வசியிடம் தேவமங்கையே ! நீ நியாயமாகவே நடந்து கொண்டாய். இருப்பினும் அர்ஜுனன் வீரன். அவன் தர்மத்தைக் காப்பாற்றும் யுத்தம் செய்வதற்காகவே சிவனிடம் அஸ்திரம் பெற்றான். தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உனக்கு கருத்து வேறுபாடு இருக்காது எனவே, சாபத்தின் தீவிரத்தை குறைத்துக் கொள், என்றனர். ஊர்வசி அவர்களின் கோரிக்கையை ஏற்றாள். அர்ஜுனா ! நீ எப்போதெல்லாம் இந்த வடிவம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறாயோ, அப்போது மட்டும் அதனைப் பெறுவாய் என்றாள். அந்தக் கணமே அர்ஜுனன் தன்னிலை அடைந்து விட்டான். மனிதர்களுக்கு வரும் துன்பம் ஏதோ ஒரு நன்மையை மேற்கொண்டே நிகழ்கிறது. பிற்காலத்தில் இதே வடிவம் அர்ஜுனனுக்கு உதவப்போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. பின்னர் இந்திரன் அர்ஜுனனுக்கு தேவலோக இளவரசனாக பட்டம் சூட்டினான். இதை இந்திராணி ஆட்சேபித்தாள். என் மணவாளரே ! அர்ஜுனன் உமது பிள்ளை என்பதால், நானும் அவனை ஆசிர்வதித்தேன். ஆனால், மானிடனான அவனை தேவலோகத்து இளவரசனாக்குவதை எதிர்க்கிறேன். இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்றாள்.
அர்ஜுனனும் இந்திராணி சொன்னதை ஒப்புக்கொண்டான். அன்னை சொன்ன வார்த்தைகளில் பிசகிருப்பதாகத் தெரியவில்லை என தந்தையிடம் சொன்னான். தேவர்களுக்கும், ஒரு மானிடனை தேவலோக இளவரசனாக்கியதில் உடன்பாடில்லை. இந்திரன் அவர்களின் உள்ளக்கருத்தை உணர்ந்தவனாய், எல்லோரும் கேளுங்கள். இந்த அர்ஜுனன் சிவனிடம் அஸ்திரம் பெற்றவன். அக்னியிடம் குதிரை, தேர், காண்டீபம் பெற்றான். பல தேவர்கள் இவனுக்கு பல வரங்களை தந்துள்ளனர். எனவே இவன் தேவர்களுக்கு எந்த வகையிலும் குறையாதவன் என்று சமாதானம் சொல்லி, அர்ஜுனா ! நீ எனக்கொரு வரம் தர வேண்டும் என்றார். தந்தையே தேவர்களே மானிடர்களுக்கு வரமளிக்க முடியும். என்னால் உங்களுக்கு என்ன வரம் தரமுடியும் என்றதும் மகனே! கடலுக்கு நடுவே தோமாயபுரம் என்ற நாடு இருக்கிறது. அங்கே மூன்றுகோடி அசுரர்கள் உள்ளனர். அவர்கள் நிவாதகோடி அசுரர்கள் என்பர். திருமால், சுப்ரமணியர், எமன் ஆகியோரால் அழியாத வரம் பெற்றுள்ளனர். அவர்களை நீ அழிக்க வேண்டும், என்றான்
அர்ஜுனன் சற்றும் தயங்கவில்லை. யுத்தமா ! சரி... புறப்படுகிறேன். அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்றாலும், இந்த காண்டீபத்துக்கு பதில் சொல்லட்டும், என்று புறப்பட்டான். தேவர்கள் அதிர்ந்தனர். இந்திரரே ! இதென்ன விபரீதம் ! தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை... அதிலும் மூன்று கோடி கோடி பேரை இவன் தனித்து நின்று எப்படி வெல்வான், என்றனர். தேவமங்கையர்கள் அர்ஜுனனை பார்த்து, இதென்ன அறிவீனம் ! அத்தனை அசுரர்களையும் இவன் ஒருவன் ஜெயித்து விடுவானோ என்று சொல்லி ஏளனமாகச் சிரித்தனர். எதையும் பொருட்படுத்தாத அர்ஜுனனுக்கு, திருமால் ராமாவதாரம் எடுத்தபோது, அவர் பயன்படுத்திய தேரை கொடுத்தான். அதை மாதலி என்ற தேரோட்டி ஓட்டினான். அது ஆகாயத்தில் பறக்கக் கூடிய திறனுடையது. அந்த தேரில், சித்திரசேனன் என்ற கந்தர்வனும் வழிகாட்டியாக வந்தான். கடலை அடைந்ததும், சித்திரசேனா ! நீ போய் அசுரர்களை அர்ஜுனனிடம் போரிட வரச்சொல், என்று மாதலி அனுப்பி வைத்தான். அதற்குள் அர்ஜுனன் தனது வில் நாணை இழுக்க உலகத்தையே கிடுகிடுக்கச் செய்யும் பேரொலி உண்டானது. அசுரர்கள் அதிர்ந்து போய், இந்திரன் தான் தங்களுடன் போரிட வந்துள்ளதாக எண்ணினர். இதற்குள் சித்திரசேனன் அசுரர் உலகம் சென்று அவர்களை போருக்கு அழைத்தான்.
அசுரர்கள் கோபத்துடன் இங்கு வந்தனர். அவர்கள் அர்ஜுனனிடம், உன்னைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்த சாதாரண துரியோதனனை ஜெயிக்க முடியாத நீ எங்களை ஜெயிக்க வந்தாயோ ? என்று சொல்லி சிரித்தனர். இதைக் கேட்ட அர்ஜுனன் கோபமாகி அம்புகளை எய்ய அவர்கள் பதிலுக்கு அம்புவிட கடும் யுத்தம் நடந்தது. ஆனால், அர்ஜுனனின் வில்லாற்றலின் முன் அவர்களது அம்புகள் எடுபடவில்லை. பலமுறை அசுரர்கள் தோற்று விழுந்து இறந்தாலும், உடனே உயிர் பெற்று எழுந்தனர். அர்ஜுனனால் ஏதும் செய்யு முடியாத நிலையில் அசரீரி ஒலித்தது.
அர்ஜுனா! கவலையை விடு ! அந்த அசுரர்களிடம் நீ தோற்றோடுவது போல் பாவனை செய். அவர்கள் உன்னை எள்ளி நகையாடுவார்கள். யாரையாவது பரிகாசம் செய்தால், அவர்கள் இறந்து போவார்கள் என்ற சாபம் பெற்றவர்கள் இந்த அசுரர்கள். இவர்கள் உன்னைக் கேலி செய்யும் போது, பிரம்மாஸ்திரத்தை விடு. அனைவரும் அழிவர். என்றது அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ! அர்ஜுனன் அசரிரீயின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான். அசுரர்களின் அம்புகளை தாக்குபிடிக்க முடியாதவன் போல ரதத்தை திருப்பி ஓட்டினான். எதிர் பார்த்தது போலவே அசுரர்கள் அவனைக் கேலி செய்தனர். டேய் பயந்தாங்கொள்ளி என கத்தினர். ஆரவாரமாக சிரித்தனர். அவ்வளவு தான் ! அர்ஜுனன் தன் தேரை மின்னலென திருப்பச் சொன்னான். மாதலி திருப்பவே, அர்ஜுனன் பிரம்மாஸ்தரத்தை அவர்கள் மீது பாய்ச்ச, மூன்று கோடி அசுரர்களின் தலையும் வீழ்ந்தது. தேவர்கள் ஆனந்த பாட்டு பாடினர். அவனை புகழந்தனர்.
இதையடுத்து, அவர்கள் தேவலோகம் திரும்பினர். வழியில் இரணியநகரம் என்ற மிதக்கும் நகரைக் கண்டான் அர்ஜுனன். மிதக்கும் நகரம் எப்படி சாத்தியமாகும் என நீங்கள் கேட்கலாம். இப்போது கூட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் மிதந்து கொண்டிருப்பதை நாம் படிக்கிறோம், பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞானத்துக்கு அடிப்படையாக இருந்தது நம் நாட்டு புராணங்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் ஆன்மீகம் நமக்கு அறிமுகப்படுத்தியவையே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளாக வெளிநாட்டவரால் மார்தட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த மிதக்கும் நகரில், அசுரப் பெண்களான காலகை, புலோமை ஆகியோர் பெற்றெடுத்த 60 ஆயிரம் அசுரர்கள் வசித்தனர். அவர்களையும் வென்றான் அர்ஜுனன். பின்னர், தேவேந்திரனிடம் சென்று ஆசி பெற்று, சகோதரர்கள் தங்கியிருக்கும் காமிகவனத்திற்கு புறப்பட அவனை இந்திரன் தடுத்தான்.
மகனே ! நீ இன்னும் சிறிதுகாலம் இங்கே தங்கிவிட்டுச் செல். உனக்கு பொன் மாளிகைøயும் ஐயாயிரம் தேவ கன்னியரையும் தருகிறேன். அங்கே தங்கி, அவர்களுடன் ஆனந்தமாய் இரு, என்றான். அர்ஜுனனும் தந்தையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான். அர்ஜுனனின் ஆற்றலை, அங்கே வந்த உரோமச முனிவர் என்பவரிடம் சொன்ன இந்திரன், அவன் அங்கு சிறப்புடன் தங்கியுள்ள விபரத்தை தர்மர் மற்று சகோதரர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் மகிழ்வார்கள் என்றும் சொன்னான். உரோமசமுனிவர் அப்பணியை தானே செய்வதாக ஒப்புக்கொண்டார். இவர் உடலெங்கும் ரோமம் முறைத்துதிருக்கும். உலகம் ஒவ்வொருமுறையும் அழியும்போது மட்டும் ஒரே இவரது கையிலும் ஒரு ரோமம் உதிரும். அப்படி ஒரு ஜடாமுடி முனிவர் அவர்.
அவர், தர்மரிடம் விஷயத்தை சொல்ல காமீக வனத்துக்கு கிளம்பினார். தர்மரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். தம்பி பாசுபதாஸ்திரத்தை சிவனிடம் பெற்றதும், தேவர்களுக்கு எதிரான அரக்கர்களை அழித்ததையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த தர்ம சகோதரர்கள் திரவுபதியுடன் தாங்களும் அர்ஜுனனை பார்க்க விரும்பினர். உரோமச முனிவர் அவர்களை அழைத்துச் சென்று காந்தர்ப்பம் என்ற மலைப்பகுதியில் அவர்களை தங்க வைத்தார். தர்மருக்கு சகுனி என்ற கொடியவனால் விதியின் வலிமையால் கெட்டநேரம் வந்தது. அதே, நேரம், அவருக்கு நல்ல நேரம் பிறப்பதற்கான யோகம் இதுபோன்ற முனிவர்களால் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அந்த மலையில் ஒருவருடம் தங்கியிருக்கும் படியும், அதன் பிறகு அவர்களை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் சொல்லி விட்டார்.
பெரியவர்கள் எது சொன்னாலும் காரண காரியமிருக்கும். அய்யா முனிவரே ! எங்களை இந்திரலோகம் அழைத்துச்செல்வதாக சொல்லிவிட்டு, நடுகாட்டில் விட்டுச் செல்கிறீரே! இது உமக்கே நன்றாயிருக்கிறதா? என தர்மர் கேட்கவில்லை. ஏனெனில் அவருக்கு தெரியும். அந்தப் பெரியவர் தங்களை இங்கே தங்கச் சொல்வதில் ஏதோ அர்த்தமிருக்கும் என்று. அதனால் அவர்கள் அங்கேயே தங்கினர். அந்த நல்லநாளும் வந்தது, ஒருநாள், திரவுபதி குடிசைக்குள் இருந்தபோது, இதுவரை அனுபவித்திராத நறுமணத்தை அனுபவித்தாள். இப்படியொரு சுகந்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் பொருட்டு, வெளியே வந்தாள். வாசலில் ஒரு செந்தாமரை மலர் கிடந்தது. ஆஹா... இப்படியொரு அழகிய மலரா ? உலகிலுள்ள மற்ற தாமரைகளெல்லாம் இந்தப் பூவைக் கண்டால் தலை குனிந்து விடுமே ! இது பரந்தாமனின் நாபியிலுள்ள புஷ்பமோ! அதுதான் உதிர்ந்து பூமிக்கு வந்துவிட்டதோ. சூரிய பகவான் தன் கையில் ஒரு தாமரை வைத்திருப்பானே ! அதை தன் உலாவின் போது நழுவ விட்டுவிட்டானா ! இப்படி அதைப்பற்றி பலப்பல விதமான சிந்தனையுடன் நின்றபோது, பீமன் அங்கே வந்தான்.
சுந்தரி ! ஆஹா.... என்ன ஒரு நறுமணம் ! எடுத்த மலரை கூந்தலில் சூடாமல் ஏன் கையில் வைத்திருக்கிறாய் ? என்றதும், திரவுபதி அம்மலரை அவனிடம் காட்ட, அவனும் அதிசயித்தான். அவள் சிணுங்க ஆரம்பித்தாள். அன்பே ! எனக்கு கீழே கிடந்த இம்மலர் வேண்டாம். இதே போன்று காட்டில் எங்கோ இருக்கத்தானே செய்யும். உங்களை விட மிகவிரைவில் அவற்றைப் பறித்து வர யாரால் முடியும் ! தாங்கள் பறித்து வாருங்கள், என்று சீதாதேவி மானுக்காக ராமனிடம் கொஞ்சியது போல், திரவுபதி மலருக்காக கணவனிடம் கெஞ்சினாள். மாதர் ஒன்று உரைத்துவிட்டால் மன்மதர்க்கு தாங்குமோ ? பீமன் கிளம்பி விட்டான். ப்பூ ! இந்த சாதாரண பூவுக்காக என்னிடம் இப்படி கெஞ்ச வேண்டுமா ? மகாராணி கட்டளையிட்டால் உடனே பறித்து வருவேன், என அவளை பரிகாசம் செய்துவிட்டு, காட்டுக்குள் அந்த மலர்ச் செடியைத் தேடி புறப்பட்டான். எங்கும் காணவில்லை. அவன் உரோமச முனிவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, அவரிடம் மலரைக் காட்டி, சுவாமி ! இந்த மலர் எங்கிருக்கிறது ? என்றான். உரோமசர் அவனிடம், பீமா ! இது அபூர்வ மலராயிற்றே ! இது இந்தக்காட்டில் கிடையாது. இதை யட்சர்களுக்கு சொந்தமான அளகாபுரி பட்டணத்தில் அல்லவா இருக்கிறது. அந்த ஊர் குபேரனுக்கு சொந்தமானது. அங்கே போனால் தான் பறிக்கலாம். ஆனால், உன்னால் முடியாதது ஏதுமில்லை. மனைவியின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுவது கணவனின் கடமை. புறப்படு அளகாபுரிக்கு என்றார்.
ரவுபதியிடம் பீமன், அன்பே! நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் புறப்பட்டான். தலீவனம் என்ற காட்டின் வழி அவன் சென்ற போது, அவன் வேகம் தாளாமல், காடே அதிர்ந்து மிருகங்கள் அலறியடித்து ஓடின. ஆனால், வழியில் படுத்திருந்த ஒரு குரங்கு மட்டும் பாதையை மறித்துக் கொண்டிருந்தது. இது ஆச்சரியப்பட்ட தன் கதாயு ஏ குரங்கே! போய் படு. வருவது தெரியவில்லை என . அதன் மிக நீளமாக பல இருந்தது.
பீமனை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்த அந்தக் குரங்கு, மானிடனே! வேண்டுமானால் சுற்றிப்போ, அல்லது என் வாலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு போ, வீணே என்னையேன் எழுப்புகிறாய், என்றது. பீமன், அதன் வாலை அலட்சியமாக தூக்கி விடலாம் என கை வைத்தான். ஒரு சிறியவால், அந்த பலவா சக்திக்கு கட்டப்படவில்லை. கொண்ட மட்டும் தூக்கியும் அதை அசைக்கக் கூட முடியவில்லை. ரங்கு சிரித்தது.
என்ன மானிடா! முடியவில்லையா என்றது. ஏ குரங்கே! ஜாலம் காட்டாதே. என் சக்திக்கு முன்னால் நீ ஒரு தூசு. ராமபக்தனாகிய என் சகோதரன் அனுமானின் வாலைத் தவிர, இந்த உலகில் வேறு எந்த குரங்கிற்கும் சக்தி கிடையாது என்பதை அறிவேன். இப்போது பார், என மீண்டும் தூக்க இப்போதும் வால் அசையவில்லை. அனுமான் அப்போது தன் சுய ரூபம் காட்டினார். ராமாயண காலத்தில் பிறந்து ஒரு யுகத்தையே கடந்த சீரஞ்சிவியான அவர், இப்போது முதிர்ந்த கோலத்தில் இருந்தார்.
தம்பி! பீமா! நானே அனுமான், என்றதும், பீமன் அவரது பாதங்களில் விழுந்தான். அண்ணா! என் தெய்வமே! தங்களுடனா நான் வாதம் செய்து கொண்டிருந்தேன். மன்னியுங்கள், என்று நமஸ்காரம் செய்தான். அனுமானின் தாய் அஞ்சனா, வாயு பகவான் மூலம் பெற்ற பிள்ளை ஆஞ்சநேயர். குந்தி தேவியும் வாயு பகவான் மூலமே பீமனைப் பெற்றாள். தாய் வேறு, தந்தை ஒன்று என்ற முறையில் இவர்கள் சகோதரர்கள் ஆகிறார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ வேண்டும் வரத்தைக் கேள், என்றார். அண்ணா! நாங்கள் துரியோதனனால் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை தாங்கள் அறிவீர்கள். தர்மத்துக்காக நடக்கப்போகும் போரில் தாங்கள் என் தம்பி அர்ஜுனனின் தேரில் கட்டப்படும் கொடியில் வந்து அமர வேண்டும். நான் தங்கள் திருவடியை விரைவில் அடைய வேண்டும், என வேண்டினான்.
அர்ஜுனனின் கொடியில் வந்து அமர்வதாக ஒப்புக்கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ என் திருவடியை அடைய இன்னும் காலம் இருக்ககிறது. உன் தம்பிகளோடும், திரவுபதியோடும் வாழ வேண்டிய காலத்தை முடித்தபின் என்னை அடைவாய், என வரமருளினார். பின்னர் அளகாபுரிக்கு செல்லும் வழியை அனுமனிடம் கேட்டான் பீமன். தம்பி! அதற்கு இன்னும் பல யோஜனை தூரம் செல்ல வேண்டும். அங்கே நீ கேட்கும் மலர் இருக்கிறது. அந்த தோட்டத்தை பல ராட்சஷர்கள் பாதுகா த்து வருகிறார்கள். அவர்களைக் கொன்று அந்த மலரைப் பறிக்க வேண்டும். அல்லது குபேரன் தன் மனைவி சித்ராதே உதவியுடன் அந்த வனத்துக்கு அவ்வப்போது வருவான். நீ நட்பு கொண்டால் மலரை அவனே உனக்கு பரிசாகத்தருவான், என யோசனை சொன்னார். பீமன் அவரிடம் ஆசி பெற்று புறப்பட்டான். செல்லும் வழியில் சக்ரசாகர மலை வந்தது. அங்கே தேவர்கள் தவமிருப்பதுண்டு. புண்டரீகன் என்ற அசுரன் அப்பகுதிக்கு வந்த பிறகு, அவர்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. அவன் ஒரே நொடியில் இருநூறு யோஜனை தூரம் நடக்குமளவிலான கால்களைப் பெற்றவன். அந்த மலைக்கு பீமன் வந்ததும், அவன் வழி மறித்தான்.
ஏ மானிடனே! வழி தெரியாமல் வந்துவிட்டாயா? திரும்பி ஓடிவிடு, என்றான். கலங்காத பீமன், ஏ அசுரா! உன் அழிவுக் காலத்தை வரவழைத்துக் கொள்ளாதே. வழி விடு, என்று இடி போல் முழங்கினான். உடனே அசுரனுக்கு கோபம் ஏற்பட, இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அப்போது அசரீரி தோன்றி, பீமா! இவன் உன்னால் தான் அழிய வேண்டுமென்பது விதி. அவனது உயிர் அவனது தோளில் இருக்கிறது. உன் கதாயுதத்தால் அந்த இடத்தில் அடி, என்றதும், பீமனும் கணப்பொழுதில் அவ்வாறே செய்தான். அசுரன் சாய்ந்தான். தேவர்கள் மகிழ்ந்தனர். பின்னர் செந்தாமரை மலர்கள் பூத்துக்கிடக்கும் அளகாபுரி எல்லைக்குள் நுழைந்தான். அங்கே, அனுமான் சொன்னது போலவே ராட்சஷர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். ஒன்றிரண்டுல. வாமனன் என்பவன் தலைமையில் லட்சம் பேர் இருந்தார்கள். அவர்கள் பீமனை பார்த்துவிட்டனர். ஏ நரனே! நீ எப்படி பூலோகத்தில் இருந்து இந்த அளகாபுரிக்கு வந்தாய். உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு. இங்கே இந்திரன் கூட வருவதற்கு அஞ்சுவான், என்றதும் பீமன் ஏதும் பேசாமல் அரக்கர் இடத்தினரிடையே பாய்ந்தான்.
லட்சம் பேரையும் கணப்பொழுதில் மரங்களை பிடுங்கி அடித்துக் கொன்றான். அவர்களை அம்புகளால் அடித்து சாய்த்தான். ஆர்ப்பாட்டுடன் தோட்டத்தில் நுழைந்தான். இதைக் கண்டு அங்கு வசித்த யட்சர்கள் கலங்கி ஓடி தங்கள் தலைவர் குபேரனிடம் விபரத்தைக் கூறினர். குபேரனின் கண்கள் சிவந்தன.சங்கோடணன் என்ற படைத்தலைவனை அழைத்து, அந்த மானிடனை இழுத்து வர கட்டளையிட்டான். சங்கோடணன் பெரும்படையுடன் அங்கு செல்லவே, பீமன் தன் பலத்தாலும் கதாயுதத்தாலும் பல்லாயிரம் யட்சர்களைக் கொன்று விட்டான். சங்கோடணனுக்கு கொடுத்த அடியில் அவன் புறமுதுகிட்டு ஓடினான். குபேரப்பெருமானே! அவன் சாதாரண ஆளாகத் தெரியவில்லை. சிவபெருமானே இங்கு வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது எனவும் குபேரன் அதிர்ந்தான்.
அவன் தன் இளையமகன் ருத்ரசேனனை அழைத்து, மகனே! ஒரு மானிடன் நம் நந்தவனத்தில் புகுந்து பட்சர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறானாம். நீ சென்று அவன் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்பதை அறிந்து தகுந்த நிவாரணம் செய்துவா, என அனுப்பினான். ருத்ரசேனனும் அங்கு சென்று பீமனை சமாதானம் செய்து ,அவன் வந்த காரணத்தை தெரிந்து கொண்டான். பீமன் தன்னை கண்ணனின் மைத்துனன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மேலும், கோகுலத்தில் மரமாய் நின்ற குபேரனின் இரண்டு குமாரர்களை தங்கள் மைத்துனன் கண்ணன், உரலை இழுத்து வந்து சாபவிமோசனம் கொடுத்ததை நினைவுபடுத்தினான். (குபேரனின் பிள்ளைகள் தான் ஒரு சாபத்தால் மரமாக கோகுலத்தில் நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இது கேட்டு ருத்ரசேனன் மகிழ்ந்து, தங்கத்தாமரைகளைப் பறித்துக் கொடுத்தான்.
இதனிடையே தம்பியைக் காணாத தர்மர் வருத்தத்தில் இருந்தார். திரவுபதி மூலமாக அவன், குபேரபட்டினம் சென்றிருப்பதை அறிந்து, அவனுக்கு என்னாகுமோ என கலங்கவும் செய்தார். பீமனின் மகன் கடோத்கஜனை மனதால் நினைத்தார். அவன், அந்தக்கணமே அவர் முன்னால் தேருடன் வந்து நின்று பெரியப்பாவின் பாதம் பணிந்தான். மகனே! உன் தந்தைக்கு ஆபத்து. நாம் உடனே குபேரபட்டினம் சென்று அவனை மீட்டு வருவோம் என்றதும், தனது தேரில், நான்கே நாழிகையில் யட்சர்களின் இடத்தை அடைந்து விட்டான். அங்கு தம்பியைக் கண்ட தர்மர் அவனிடம் கோபித்துக் கொண்டார். தன்னிடம் தன்னிடம் அனுமதி பெறாமல் பீமன் வந்தது குறித்து கடிந்தார். பீமன் நல்லபிள்ளை போல் தலை குனிந்து நின்றான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு காமியவனம் சேர்ந்தார். பெண்கள் எதைப் பார்த்தாலும் ஆசைப்படுபவர்கள். ஒரு பூவுக்கு ஆசைப்பட்டு, கணவனை குபேரபட்டினம் வரை செல்வதற்கு காரணமான திரவுபதி ஒருநாள் கானகத்தை அர்ஜுனனுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஓரிடத்தில் ஒரு நெல்லிமரம் நின்றது. அதன் உச்சியில் ஒரு நெல்லிக்கனி பெரிய அளவில் பழுத்து அழகாகக் காணப்பட்டது. அது அமித்ரமுனிவர் என்பவருக்கு சொந்தமான மரம். அந்த பழம் 12 வருடங்களுக்கு ஒருமுறை தான் காய்க்கும். அதைச் சாப்பிட்டு தான் மகரிஷி உயிர் வாழ்கிறார்.
அந்த பழத்தின் தன்மை இன்னதென அறியாமல், அதன் அழகில் சொக்கிப்போன திரவுபதி, வில், வித்தையில் உலகிலேயே உயர்ந்த என் உத்தமரே! தாங்கள் எனக்கு அந்தப் பழத்தை பறித்து தாருங்கள், என்றாள். அர்ஜுனன் ஒரு சிறிய அம்பை எய்தான். அவ்வளவு தான். பழம் விழுந்தது. அது கீழே விழுந்தால் மணல் ஒட்டு விடக்கூடாது என்பதால், லாவகமாக கையில் பிடித்து மனைவியிடம் கொடுத்தான். அப்போது, அதைப் பார்த்து விட்ட அமித்ர முனிவரின் சீடர்கள் ஓடோடி வந்தனர். யார் நீங்கள்? இந்த பழம் அமித்ரமுனிவருக்குரியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுப்பது. இதைச் சாப்பிட்டே எங்கள் குருநாதர் உயிர் வாழ்கிறார். இப்போது இதைப் பறித்து விட்டனர். எங்கள் உங்களை சபிப் நீங்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவது உறுயாகி விடுகிறது என்றனர்.
திரவுபதி கலங்கி அழுதாள். உங்களுக்கு துன்பம் கொடுப்பதற்கென்றே இந்த பூமியில் பிறந்திருக்கி போலும், கணவர்கள் அவர்களில் ரையாவது சுக வாழவிட்டேனா? வருந்தினாள். பின்னர் தன் மற்ற கணவன்மாரை அழைத்து வந்தாள். அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் கலங்கி நின்ற வேளையில் சகாதேவன் சொன்னான். இக்கட்டான சமயங்களில் நமக்கு மைத்துனன் கண்ணனே உதவு. அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். கடந்த மாதம் துர்வாச முனிவர் இங்கு வந்திருந்த போது, அவருக்கு உணவளிக்க, திரவுபதியின் அட்சய பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரு பருக்கையை உண்டு, முனிவரின் வயிறு நிரம்பச்செய்த அதிசயத்தைக் கண்டோம். துர்வாசரை விட அமிர்த முனிவர் கோபக்காரர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவரிடம் இருந்து தப்ப வேண்டுமானால், கண்ணனைத் தான் அழைத்தாக வேண்டும் என்றான்.
தர்மர், அதுவே சரியென ஒப்புக்கொண்டு, இதயத்தால் கண்ணனை நினைத்தார். அந்த மாயவன் வந்து விட்டான். கண்ணனை ஏன் மாயவன் என்கிறோம் தெரியுமா? மாயவன் என்றால் எங்கும் வியாபித்திருப்வன் எனப் பொருள். அவன் நம் முன்னால் வர வேண்டுமானால், இதயத்தை அவனிடம் நிலைநிறுத்தி, வணங்கவேண்டும். நிச்சயம் அவன் வந்துவிடுவான். தர்மருக்கு அந்த சக்தி இருந்தது, அவன் வந்து விட்டான். சகாதேவனுக்கோ கண்ணன் தான் கதி. நடந்தாலும், உறங்கினாலும், சாப்பிட்டாலும் கண்ணனின் சிந்தனை தான்! சொல்லப்போனால் அவனை ஒரு ஆண் ராதை என்றே சொல்லலாம். பீமனும் அப்படிப்பட்டவனே. பீமன் கண்ணன் மீது கொண்டிருந்த அபாரபக்தியை யாரும் அறியமாட்டார்கள். தர்மர் கஷ்டத்தின் போது மட்டுமே அவனை சிந்திப்பார். கண்ணனை சிந்திக்காமல் அவரு பகடை உருட்டியதன் விளைவைத் தானே இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்! அர்ஜுனனும் நிலையும் ஏறத்தாழ அத்தகையதே! நகுலன் சிறந்த கிருஷ்ணன் பக்தனாயினும், அவரை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கும் அளவுக்கு சக்தியை அவன் பெறவில்லை.
தர்மர் மூலமே அவன் கண்ணனைத் தரிசிக்க இயலும். ஆனால் சகாதேவன் கிருஷ்ண பத்தியில் மிகமிக உயர்ந்தவன். கிருஷ்ணனோ சகாதேவனிடம் தான் யோசனை கேட்பார் பல விஷயங்களில். ஆனால், விடாக்கண்டனான சகாதேவன் அவரிடம் பிடி கொடுக்காமலே பேசுவான். பீமனுடைய பக்தி எப்படிப்பட்டது என்பதற்கு சிறு உதாரணம். பீமன் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யாமல் ஒருநாள் கூட சாப்பிட்டதில்லை. சாப்பிட உட்காரும் முன், உணவை இலையில் வைத்து, இரண்டு கைகளாலும் ஏந்தி, கிருஷ்ணா! வா, இதை ஏற்றுக் கொள் என்பான். கண்ணன் தினமும் கையேந்தி பெற்றுக் கொள்வார். ஒருநாள், அவனைச் சோதிப்பதற்காக அவர் வரவில்லை. பீமன் தன் கதாயுதத்தை எடுத்தான். வானில் நோக்கி வீசினான்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |